Everything posted by ஏராளன்
-
கௌதம் கம்பீர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ
கௌதம் கம்பீர்: தோனியின் 'நிழலில்' 2 உலகக் கோப்பைகளை வெல்ல பங்களித்தவர் பயிற்சியாளராக சாதிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஜூலை 2024, 03:26 GMT “கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. தனிப்பட்ட முறையில் நீங்கள் புகழ்பெற விரும்பினால், தனியாக ஆடும் விளையாட்டில்தான் விளையாட வேண்டும்” கிரிக்கெட் விளையாட்டுக்கு கெளதம் கம்பீர் அளித்த விளக்கம் இது. சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் என ஏராளமான ஜாம்பவான்களுடன் சேர்ந்து தனது முத்திரையை பதித்து, தாக்கத்தை ஏற்படுத்தியவர் கம்பீர். 2008 முதல் 2011ம் ஆண்டுவரை கிரிக்கெட்டின் 3 விதமான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமை பெற்ற கிரிக்கெட் வீரராக் இருந்தார். டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 விதமான ஃபார்மெட்டிலும் தொடக்க வீரராகக் களமிறங்கினார். இந்திய அணியில் தொடக்க வீரராக சேவாக் ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர் என்று சொல்லப்பட்டாலும், தேவைப்படும் நேரத்தில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் போல சுவர்போன்று பேட் செய்து வலுவான இன்னிங்ஸை விளையாட முடியும் என டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்தவர் கம்பீர்தான். சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஃபார்மெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரு இன்னிங்ஸ்கள் என்றென்றும் போற்றப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்களை கம்பீர் சேர்த்ததும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக கம்பீர் 97 ரன்கள் சேர்த்ததும் இந்திய அணி இரு கோப்பைகளை வெல்ல முக்கியமானதாக இருந்தது. ஆனால், கம்பீர் சொல்வதைப் போல் “பெரிய பங்களிப்பை கொண்டாடிவிட்டு பல சமயங்களில் அணிக்கு உபயோகமான சிறிய பங்களிப்பை கொண்டாட மறந்துவிடுவோம்” என தெரிவித்திருந்தார். இருமுறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல கம்பீரின் பங்களிப்பு இருந்தபோதிலும் புகழப்படாத ஹீரோவாகவே கம்பீர் கடைசிவரை இருந்தார். குறிப்பாக 2011 உலகக் கோப்பைத் தொடரில் கம்பீர் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்களில் ஆட்டமிழந்து மிக முக்கிய இன்னிங்ஸை ஆடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால், அதிகமாகக் கொண்டாடப்பட்டது என்னமோ மகேந்திர சிங் தோனிதான். இதை கம்பீரே பலமுறை ஆதங்கத்துடன் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் இட்ட பதிவில், “சிறந்த கேப்டனாக வர வேண்டிய கெளதம் கம்பீருக்கு அந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்கவில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்குப்பின் கெளதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ.” எனத் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கம்பீர் இளமைப் பருவம் கடந்த 1981ம் ஆண்டு பஞ்சாபி இந்து காத்ரி குடும்பத்தில் டெல்லியில் பிறந்தவர் கெளதம் கம்பீர். கம்பீர் தந்தை தீபக் கம்பீர் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் செய்தார். தாய் சீமா கம்பீர். கம்பீருக்கு ஒரு இளைய சகோதரி உண்டு. தாய்வழி பாட்டனார் கடந்த 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரிலிருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தார். கம்பீர் பிறந்து 18 நாட்கள் ஆனவுடனே அவரை தாய்வழிப் தாத்தா, பாட்டி தத்தெடுத்து வளர்த்தனர். அது முதல் இப்போதுவரை கம்பீர் தனது தாத்தா, பாட்டியுடனே டெல்லியில் வசித்து வருகிறார். டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்த கம்பீர் பட்டப்படிப்பு கூட முடிக்கவில்லை. 10 வயதிலிருந்தே கம்பீர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் அகாடெமியைச் சேர்ந்த சஞ்சய் பரத்வாஜ்ஜிடம் கிரிக்கெட் பயிற்சியையும், குலாத்தி என்பவரிடமும் கிரிக்கெட் பயிற்சியை கம்பீர் எடுத்தார். முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ தரப்போட்டிகளிலும் கெளதம் கம்பீர் நீண்டகாலம் ஆடியபின்புதான் அவருக்கு இந்திய் அணியில் இடம் கிடைத்தது. முதல் தரப்போட்டிகளில் 198 ஆட்டங்களில் 15,153 ரன்களும், 43 சதங்கள், 68 அரைசதங்களையும் கம்பீர் விளாசியுள்ளார். அதேபோல லிஸ்ட் ஏ தரப்போட்டிகளில் கம்பீர் 299 போட்டிகளில் 10077 ரன்களும், 21சதங்களும, 60 அரைசதங்களையும் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதன்பின்புதான் 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கம்பீர் அறிமும் செய்யப்பட்டார். 2005 முதல் 2007ம் ஆண்டுவரை ஏராளமான ஒருநாள் போட்டிகளில் கம்பீர் விளையாடி, சதங்கள், அரைசதங்கள் அடித்த போதும் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு கம்பீர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது கம்பீரை கடுமையாகப் பாதித்தது, வேதனையுடன் பேட்டிகளையும் அளித்திருந்தார். 2007-இல் மேற்கிந்திய்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி மோசமான தோல்விகளோடு வெளியேறியது. இதன் பிறகு 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கம்பீர் இடம்பிடித்தார். இந்தத் தொடரில் கலக்கிய கம்பீர், 3 அரைசதங்கள் உள்பட 227 ரன்களை குவித்தார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 54 பந்துகளி்ல் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். 2008 முதல் 2013ம் ஆண்டுவரையிலான காலம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் பொற்காலம் எனலாம். 2008ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சீரிஸ் முத்தரப்பு தொடரில் கம்பீர் சிறப்பாக ஆடி, 440 ரன்கள் குவித்தார். சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் 113 ரன்கள் குவித்தார். 2008ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சேவாக்குடன் கம்பீர் சேர்ந்து தொடக்க வீரராகக் களமிறங்கினார். இந்தத் தொடரில் கம்பீர் இரட்டை சதம் உள்பட 463 ரன்களைக் குவித்தார். 2008 டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரன்குவிப்பில் முன்னணி வீரராக கம்பீர் இருந்தார், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கம்பீரின் அற்புதமான பேட்டிங் தொடர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு வெளியே நியூசிலாந்தில் 2009ம் ஆண்டு முதல்முறையாக கம்பீர் டெஸ்ட் தொடர் விளையாடினார். இதில் 2-ஆவது டெஸ்ட்டில் கம்பீர் அடித்த 137 ரன்கள் இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது. 11 மணிநேரம் கம்பீரின் பேட்டிங்கைப் பார்த்த கேப்டனாக இருந்த சேவாக், “டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் இந்திய அணியின் 2-ஆவது சுவர் கம்பீர்” என்று புகழாரம் சூட்டினார். ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல கம்பீரின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது. 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்களை விளாசிய இந்தியாவின் முதல் பேட்டரும், உலகளவில் பிராட்மேனுக்கு அடுத்ததாகபோல் 2-ஆவது பேட்டராக கம்பீர் பெயரெடுத்தார். 2009ம் ஆண்டு ஐசிசி சார்பில் சிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணிக்கு கேப்டனாக சில போட்டிகளில் மட்டுமே பிசிசிஐ கம்பீருக்கு வாய்ப்பு வழங்கியது. 2010ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடருக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டு 5-0 என ஒருநாள் தொடரையும் வென்று நிரூபித்து தொடர் நாயகன் விருதையும் கம்பீர் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2 உலகக் கோப்பைகளில் முக்கியப் பங்களிப்பு 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் கம்பீர் தேர்வாகினார். இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் சேவாக், சச்சின் ஆட்டமிழந்தபின் ஆங்கர் ரோல் செய்த கம்பீர், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தும், தோனியுடன் 109ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் பேட் செய்தார். ஆனால், உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின் தோனியின் பங்களிப்புதான், கடைசியில் அவர் அடித்த சிக்ஸர்தான் அதிகமாகப் பேசப்பட்டது. 2013ம் ஆண்டுக்குப்பின் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டு, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2018ம் ஆண்டு டிசம்பரில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்தநிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கம்பீர் அறிவித்தார். 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 9 சதங்கள் உள்பட 4,154ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உள்பட 5,238 ரன்களையும் கம்பீர் குவித்துள்ளார். 37 டி20 போட்டிகளில் 932 ரன்களையும் கம்பீர் சேர்த்துள்ளார். கம்பீர் எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். அதிரடிக் கருத்துக்களை தெரிவிப்பவர். 2007, 2011 உலகக் கோப்பைத் தொடரில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும், தோனியை விமர்சித்தும் கம்பீர் பேசியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கம்பீருக்கு காத்திருக்கும் சவால்கள் இந்திய அணிக்கு கேப்டன் பதவியை வழங்காத நிலையில், தற்போது தலைமைப் பயிற்சியாளர் பதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் காலத்தில் இந்திய அணி 2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026ல் டி20 உலகக் கோப்பை, 2027ல் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது. கம்பீர் பதவிக்காலத்தில்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு புதிய கேப்டனும் பணியாற்றப் போகிறார்கள். இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு இருக்கிறது. அணிக்குள் சாதகமான சூழலை ஏற்படுத்துவதும், வீரர்களின் திறமையை மேம்படுத்துவதும் கம்பீருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடும். மூத்த வீரர்களான ரோகித், விராட் கோலி போன்றவர்களை சமாளித்து, அணியை சமநிலைப்படுத்துவதும் கம்பீருக்கு பெரிய பணியாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/cgl71pkgd71o
-
ஆசிரியர் சேவையில் இருக்கும் பிரச்சினையே அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணம் - சுசில்
10 JUL, 2024 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல், இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அதிபர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையிலான குழு அமைத்து, அதில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, அந்த குழு அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது. என்றாலும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணமாக இருப்பது ஆசிரியர் சேவையில் இருக்கும் முரண்பாடாகும். ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் தரம் ஒன்றுக்கு வரும்போது, அதிபர் ஒருவர் ஆசிரியர் சேவையில் இருந்து தரம் 3 சேவையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் இதனையும் விட குறைவு. இந்த முரண்பாடு ஆரம்பத்தில் இருந்து வரும் பிரச்சினையாகும். அதனால் இந்த இரண்டுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதிபர்களை பணியாளர் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்போது அவர்களுக்கு அதில் கிடைக்கும் கொடுப்பனவுகள் மூலம் ஆசிரியர் சேவையை விட சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் அதிபர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தால், அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சேவை சங்கம் அதனை தங்களுக்கும் வழங்குமாறு கோருவார்கள். அவர்களுக்கு வழங்கும்போது, அதற்கு அடுத்தபடியாக இருக்கும் ஆசிரியர் கல்வி சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை என தொடர்ந்து இந்த முரண்பாடு சுற்றிக்கொண்டிருக்கும். அதனால் இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. எனவே, அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரங்களின் முரண்பாடுகளையும் ஒரே தடவையில் தீர்க்கவேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன். அதற்கு, அதிபர்களுக்கு தொடர்பாடல் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு வழங்குவதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அது தொடர்பில் எமது அமைச்சின் செயலாளரும் திறைசேரியும் கலந்துரையாடி தீர்வு காணவே இருக்கிறது. என்றாலும் இந்த நடவடிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிபர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் பிரேரணையையும் நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அதனை இந்த குழுவின் ஊடாக வழங்குவதற்கு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/188121
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து எழுப்பாத கேள்வி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதா, அவருக்கு நியாயமான முறையில் அடக்கம் பண்ண விடாமல் திமுக பாகுபாடாக நடந்துகொண்டதா, ஆம்ஸ்ட்ராங் உண்மையில் ஒரு போராளியா, அரசியல் தலைவரா அல்லது தாதாவா, இது ஆருத்திரா மோசடிப் பண கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தின் போதான மோதலின் விளைவாக நடந்ததா போன்ற கேள்விகள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சூத்திரர்கள் vs தலித்துகள் எனும் முரணும் கூர்தீட்டப்பட்டு மக்களிடம் பிரிவினையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இதை வேறெவரையும் விட பாஜக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது - அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தலித்துகள் திமுக - அதிமுக என வாக்களிப்பது பாஜகவை மிகவும் சோர்வடைய வைக்கிறது (அண்மையில் நடந்த மக்களைத் தேர்தலிலும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடியினரைத் தவிர தலித்துகள் இவ்வாறே பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.). இந்த களேபரத்தில் நாம் கேட்காத ஒரு முக்கிய கேள்வி உண்டு: இந்த படுகொலை காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படுகொலை என்றல்ல எல்லா முக்கிய பிரமுகர்களின் கொலையும் ஏற்கனவே தெரிந்துதான் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்ததும் காவல் துறை வந்து நிமிஷ நேரத்தில் லபக்கென்று குற்றவாளிகளைப் பிடிக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலையின் போதும் இது நடந்தது. இந்த துரிதமும் சுலபத்தன்மையும் இயல்புமீறியவை, சந்தேகத்துரியவை. அதுவும் குற்றவாளிகள் உடனே சரணடைவது எல்லாம் எதார்த்தத்தை மீறியது. ஏதோ போன் பண்ணி வரச்சொல்வதைப் போல இது நடக்கிறது. சரி, தெரிந்தே நடந்தது எனில் ஏன்? எப்போதுமே இதற்கான பதில் பணம் மற்றும் அதிகாரத்துக்காக என்பதே. இதை குற்றவாளிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்தது - அதாவது குற்றத்திற்கு நிதியளித்தது - யார்? ஆனால் இந்த கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் (திருமா லேசாக இதை எழுப்பினார், ஆனால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.). எந்த பத்திரிகையாளரும் சற்று விசாரித்து இதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஸ்வாதி படுகொலையைப் போன்றே இந்த கொலையும் பல ஊகங்களுடன் முடிந்துபோகும். இதற்குப் பின்னிருக்கும் அந்த பெரிய கை இந்நேரம் இங்கு நடக்கும் விவாதங்களைப் பார்த்து கால் மேல் காலிட்டு சிரித்துக் கொண்டிருப்பார். பெரும் பணமும் அதிகாரமும் படைத்தவராக இருப்பது ரொம்ப ஜாலியானது தான் - நீங்கள் மனிதர்களின் சிந்தனையை, நடத்தையை கட்டுப்படுத்த முடியும். கிட்டத்தட்ட ஒரு கடவுளைப் போல. அந்த கிட்டத்தட்ட கடளுக்காக நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் ஏன் வீணடித்து முட்டாளாகிறோம்? Posted 21 hours ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/07/blog-post_9.html
-
வேலைநிறுத்தங்கள் மற்றொரு ‘அரகலய’வின் தொடக்கமாக இருக்கலாம்: பந்துல
நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மற்றுமொரு ‘அறகலய’வின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், பாராளுமன்ற வளாகத்தை எரிப்பதில் முடிவடையக்கூடிய நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் தொடக்கமாக இருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார். “வேலைநிறுத்தம் செய்பவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் ஊதிய உயர்வைச் சந்திக்க நிதியை உருவாக்க, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தயவு செய்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபடாதீர்கள், நாளின் முடிவில் நீங்கள் சபிக்கப்படுவீர்கள், ”என்று அவர் மேலும் கூறினார். “ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைக்குத் திரும்பத் தவறினால் அவர்கள் வேலையை விட்டு சென்று விட்டார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அவர்கள் பயங்கரவாதத்தை ஏற்று இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டுள்ளனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார். https://thinakkural.lk/article/305730
-
பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து
10 JUL, 2024 | 04:02 PM காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐ.நா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா-வின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹமாஸை காக்கும் நோக்கில் இப்படி தன்னிச்சையாக மைக்கேல் ஃபக்ரி உள்ளிட்ட ஐ.நா அதிகாரிகள் அறிக்கை வெளியிடுவதாக இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு மாத குழந்தை, 9 மற்றும் 13 வயது சிறுவர்கள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மே 30, ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் மருத்துவமனையிலும், ஒருவர் முகாமிலும் உயிரிழந்துள்ளார். மேலும், காசா விவகாரத்தில் உலக நாடுகள் முன்பே தலையிட்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்திருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டு இருக்கும் என கூறியுள்ளனர். தெற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று ஹமாஸ் தீவிரவாத படையின் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,195 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவை சேர்ந்த சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/188135
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம்
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
பொருத்து வீடு வந்து சேர்ந்துவிட்டது அண்ணை.
-
737 மெக்ஸ் ரக விமானங்கள் தொடர்பில் ஏமாற்றுவதற்கு சதி செய்த குற்றச்சாட்டு : குற்றவாளி என போயிங் நிறுவனம் ஒப்புதல்
10 JUL, 2024 | 01:06 PM (ஆர்.சேதுராமன்) 737 மெக்ஸ் ரக விமானங்கள் தொடர்பில் அமெரிக்க அரசை ஏமாற்றுவதற்கு சதி செய்தமை தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டு ஒன்றில், தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வதற்கு போயிங் நிறுவனம் சம்மதித்துள்ளது என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. டெக்ஸாஸ் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்த மனுவில் நீதித் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. விமான அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 487 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. போயிங் நிறுவனம் தயாரித்த 737 மெக்ஸ் ரக விமானங்கள் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 5 மாத இடைவெளியில் வீழ்ந்ததால் 346 பேர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2018 ஒக்டோபர் 29ஆம் திகதி இந்தோனேஷியாவின் லயன் எயார் நிறுவனத்தின் போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் வீழ்ந்ததால் 189 பேர் இறந்தனர். 2019 மார்ச் 10ஆம் திகதி எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வீழ்ந்ததால் 157 பேர் இறந்தனர். இதையடுத்து, 2019 மார்ச் முதல் 2020 டிசெம்பர் வரை உலகெங்கும் போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின் கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று பறந்துகொண்டிருந்தபோது, நடுவானில் அதன் கதவு கழன்று வீழ்ந்தமை போயிங் நிறுவனத்தின் புகழுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் தனது வர்த்தக விமானங்களின் தரம் மற்றும் பாதுகாப்புக்காக புகழ் பெற்றிருந்த நிறுவனம் போயிங். தற்போது மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் தான் குற்றவாளி என ஒப்புக்கொண்டமை அந்நிறுவனத்தின் புகழுக்கு பாரிய இழுக்காக கருதப்படுகிறது. மேற்படி விபத்துகளின் பின்னர், அந்நிறுவனம் தயாரித்த விமானங்களின் தரம், பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக போயிங் நிறுவனம் விடுத்த அறிக்கையில், தீர்வொன்றுக்காக நீதித் திணைக்களத்துடன் தான் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், 737 மெக்ஸ் ரக விமானங்களுக்கான சான்றிதழ்களை பெறுவதற்கான செயற்பாட்டின்போது, அமெரிக்க அரசை ஏமாற்றுவதற்கு சதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் குற்றவாளி என போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டின் மூலம் கிரிமினல் வழக்கு விசாரணையை போயிங் தவிர்த்துக்கொண்டுள்ளது. அதேவேளை, இணக்கம் மற்றும் பாதுகாப்பு செயற்றிட்டங்களுக்காக 455 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவும் அந்நிறுவனம் இணங்கியுள்ளது. போயிங் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய மாற்றங்களை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று 3 வருடங்களுக்கு மேற்பார்வை செய்யும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை போயிங் நிறுவன பணிப்பாளர்கள் சபையினர் சந்திக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், மேற்படி விமான அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த உடன்படிக்கையை நிராகரித்துள்ளன. எதிர்வரும் வழக்கு விசாரணையின்போது, இந்த உடன்படிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என அவர்கள் கோரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188119
-
“வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?” - திமுகவை திணறடிக்கும் தலித் குரல்கள்
ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் இவர்கள் கொஞ்சம் பரவாயில்லை என எண்ணித்தான் வாக்களித்திருப்பார்கள் அண்ணை.
-
உணவு பட்டியலில் 16 வகை புழு, பூச்சியினங்களை சேர்ந்த சிங்கப்பூர்!
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய மெனுக்கள் உதவும் என உணவு விடுதிகள் மற்றும் கபேக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஒரு சில உணவு விடுதிகள் 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களையும் மெனுவில் சுட்டி காட்டியுள்ளன . அவற்றை சமைத்து, கடல்உணவுகளுடன் சேர்த்து புதிய டிஷ்ஷாகவும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த சூழலில், உணவு விடுதிகளிடம் தினமும் 5 முதல் 6 முறை தொலைபேசி வழியே வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள், பூச்சிகளின் டிஷ்கள் பற்றியும், எப்போது அவற்றை ஓடர் செய்யலாம் என்பன விசயங்களை கேட்க தொடங்கி விட்டனர் என கடல்உணவுக்கான விடுதியின் தலைமை செயல் அதிகாரியான பிரான்சிஸ் கூறுகிறார். அவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்திருக்கின்றனர். அவர்கள், தங்களுடைய ஒரே டிஷ்ஷில் எல்லா பூச்சிகளும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்றும் பிரான்சிஸ் கூறுகிறார். https://thinakkural.lk/article/305591
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் : கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Published By: DIGITAL DESK 7 10 JUL, 2024 | 04:26 PM ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் அவசியம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை வியாழக்கிழமை (11 ) நடத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188137
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
8,9ஆம் திகதிகளில் சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்களின் பதவி உயர்வுகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும். இதற்கமைய 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1,335 ரூபாவும், முதலாம் தர ஆசிரியருக்கு 1,630 ரூபா வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/article/305722
-
50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கும் திட்டம் ஆரம்பம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார். ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா அல்லது அதற்கும் குறைவான வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து வீடுகளுக்காகவும் 150,000 ரூபாவினை செலுத்தி முடித்திருப்போர் மற்றும் இதுவரையில் அந்த தொகையினை செலுத்தாமல் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையை செலுத்தி முடிப்போர் உள்ளடங்களாக 50,000 பயனாளி குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் முழுமையான வீட்டு உரிமை வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1070 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. உறுமய திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமையும், 50,000 பேருக்கு வீடுகளுக்கான முழு உரிமையும் கிடைக்கும். காணியும் வீட்டு உரிமையும் கிடைப்பதென்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு இயன்றளவு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மக்களுக்கு அந்த வீட்டின் முழு உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்று நாங்கள் கூடியுள்ளோம். இந்நாட்டு மக்கள் அவதியுறும் வேளையில் ‘உறுமய’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். அந்த மக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் முடிந்த உதவிகளை செய்தோம். மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தினோம். காணியின் உரிமை அல்லது வீட்டின் உரிமை மிகவும் முக்கியமானது. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். இரண்டு வருடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிந்தது. இவற்றையெல்லாம் செய்வதற்கு முன், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவரும் அச்சத்துடன் இருந்தனர். இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருக்காவிட்டால், நமது நாடு மற்றொரு லெபனானாகவும், கென்யாவாகவும் மாறியிருக்கும். இன்று நாட்டில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அனுகூலத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். இரண்டே ஆண்டுகளில் இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடிந்தது. இந்நாட்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என நான் நீண்டகாலமாக கூறி வருகின்றேன். அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது வீடு எரித்து நாசமாக்கப்பட்ட போது வீட்டின் மதிப்பை நன்கு உணர்ந்தேன். அந்த இடத்திற்கு யாரையும் வரக்கூட அந்த குழுவினர் அனுமதிக்கவில்லை. விமானப்படை தீயை அணைக்க வந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டிருக்கும். தீவைக்க வந்தவர்களை சுட்டுக் கொல்வதை நான் விரும்பவில்லை. அந்த வீட்டில் இருந்த எனது புத்தகங்கள் உட்பட அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அந்த நேரத்தில், ஒரு வீட்டின் மதிப்பை மிகக் கடுமையாக உணர்ந்தோம், எனவே மக்களுக்கு சொந்த வீட்டு உரிமையை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தொடங்கினோம். எனவே உறுமய திட்டத்தை கிராமத்திற்கு மட்டுப்படுத்தாமல் நகரத்திற்கு கொண்டு வர முடிந்தது. கிராமங்களில் 20 இலட்சம் பேருக்கு உறுமய திட்டத்தின் கீழ் காணி உரிமை கிடைக்கும். கொழும்பில் இரண்டரை இலட்சம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும். இந்த வீடுகளை நீங்கள் பாதூக்கக வேண்டும். மேலும் அதை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். அதில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எனவே, இது உங்கள் வாழ்வில் கிடைத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகக் கருதுகிறேன். மக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்க அரசு என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நாம் அனைவரும் அறிவோம். நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாற்றம் கோஷம் எழுப்பியோ, தெருவில் கூச்சலிடுவதோ அல்ல. மனுக்களில் கையெழுத்திட்டு அந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு குறிக்கோள் இருந்தால், அந்த இலக்கின் படி செயற்பட வேண்டும். நம் நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. சமுர்த்தி நிவாரணம் போன்று அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்களுக்கு மூன்று மடங்கு நன்மைகளை வழங்கினோம். அத்துடன் நாட்டின் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 02 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தோம். விவசாயம் முன்னேற்றமடைந்தது. உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கான உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுதுள்ளோம். எங்களின் அர்ப்பணிப்பினால்தான் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது. ஏன் ஏனைய அரசாங்கங்களால் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை? எனவே இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டும். இந்த செயற்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர வேண்டும். நாங்கள் பெற்ற வெளிநாட்டுக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து எங்களுக்குக் கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், சீனாவின் எக்சிம் வங்கி மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் நாம் உடன்பாட்டை எட்டியுள்ளோம். அதன்படி நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து 08 பில்லியன் ரூபாவை குறைந்துள்ளது. அதேபோன்று, கடனை திருப்பிச் செலுத்த 2042 வரை கால அவகாசம் கிடைத்ள்ளது. எனவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாரும் பழைய நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த ஒப்பந்தத்தை நாம் பாதுகாக்காவிட்டால், எதிர்காலத்தில் ஒரு நாடு என்ற வகையில் மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், நாம் எப்போதும் கடன் பெற முடியாது. எனவே, நாம் வருமானம் ஈட்டக்கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். எவருக்கும் இதனை மாற்ற இடமளிக்க வேண்டாம். உங்களின் எதிர்காலம் இன்று உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. மேலும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மேலும், அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை நியமித்துள்ளோம். ஓய்வு பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் நிதி ஒதுக்க வேண்டும். எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தை பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வர்த்தகத்தை மேம்படுத்துவற்கு வங்கி வட்டியை குறைந்த அளவில் பேண வேண்டும். ஆனால் வட்டி விகிதங்கள் குறையும் போது, ஓய்வூதியம் பெறுவோருக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். உங்களை விட உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். இன்று மக்களுக்கான உரிமைகளை வழங்குவதன் மூலம் நாம் அதற்காக செய்யக்கூடிய சிறந்த செயற்பாடை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/305718
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
5 தேர்தல்களுக்கு போதுமான எழுதுபொருட்கள் கைவசம் உள்ளது – அரச அச்சகர் ஐந்து தேர்தல்களுக்கு போதுமான எழுதுபொருட்கள் அரச அச்சகத்தின் வசமிருப்பதாக அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று(09) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் மற்றும் தபால்மா அதிபர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்களை விட இம்முறை அச்சிடும் செலவு 4 மடங்கு அதிகரிக்கும் என அரசாங்க அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் முடியும் வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் உட்பட ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்வதாக தபால்மா அதிபர் உறுதியளித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் உள்ளிட்ட ஆவணங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும். அதற்கமைய, இம்மாத இறுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305710
-
ஜனாதிபதி திறந்துவைத்த கிளிநொச்சி வைத்தியசாலையின் பெண் நோயியல் வைத்திய நிலையம் தொடர்ச்சியாக பூட்டு!
10 JUL, 2024 | 04:03 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்மொழிவுக்கு அமைய நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய இந்த பெண்நோயியல் வைத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை கட்டட தொகுதியானது போதிய ஆளணி வளம் இன்மையால் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, நவீன வசதி கொண்ட இரு சத்திர சிகிச்சை கூடங்கள் இயங்காத நிலையில் உள்ளன. அதாவது மயக்க மருந்து வைத்திய ஆளணியின்மை காரணமாகவே இயக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கதிரியக்க வைத்திய நிபுணர் இன்மையால் அவற்றின் செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை. வைத்திய சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்ட போதிலும் போதிய ஆளணி வளங்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கான ஆளனி வளங்களை நியமிப்பதற்கோ அல்லது ஏற்கனவே வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணி வளங்களைக் கொண்டோ அதனை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவு இவ்வாறு நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால், ஏனைய வைத்தியசாலைகளில் இடம்பெறுவது போன்று இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் கூட எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188133
-
தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தைச் செலுத்தாத கம்பனிகளுடன் குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்ய அரசு தீர்மானம்
10 JUL, 2024 | 03:40 PM தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தைச் செலுத்தாத கம்பனிகளுடன் அரசு செய்துள்ள குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188131
-
திருகோணமலை - மூதூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
10 JUL, 2024 | 03:35 PM திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்டார். இதனை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/188130
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
10 JUL, 2024 | 02:59 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து இருந்தேன். அதன் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது, நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188125
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
10 JUL, 2024 | 01:00 PM கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்திலுள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188116
-
அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழர்களிற்கான சுயநிர்ணய உரிமை குறித்த தீர்மானம் - 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வரவேற்பு
Published By: RAJEEBAN 10 JUL, 2024 | 05:43 PM ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன. 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு தீர்வுகாணக்கூடிய அதன் சாத்தியப்பட்டாமையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடையும் தருணத்தில் இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. நல்லிணக்கம் பற்றி இலங்கை அரசாங்கம் பேசுகின்ற போதிலும் தமிழர் இனப்படுகொலையின் 15 வருட நினைவேந்தல் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இராணுவமயமாக்கல், நிலஅபகரிப்பு, சித்திரவதைகள், தடுத்துவைத்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களிற்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/188161
-
காஸா: பள்ளி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், 16 பேர் பலி
காசாவின் பாடசாலை மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் – 29 பேர் பலி! காசாவில் நேற்றையதினம் (09) மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் – அவ்டா பாடசாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4ஆவது பாடசாலை இதுவாகும். இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/305648
-
“வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?” - திமுகவை திணறடிக்கும் தலித் குரல்கள்
பட மூலாதாரம்,FACEBOOK/பா ரஞ்சித் படக்குறிப்பு,தலித்துகளின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும்தான் திமுக சமூகநீதி பேசுமா என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சினிமாவில் தனது அரசியலை வெளிப்படுத்த தயங்காத இயக்குனர் பா.ரஞ்சித் இப்போது திமுகவுக்கு எதிரான தனது முகநூல் பதிவில் “உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?” என்று காத்திரமாகவே கேட்டுள்ளார். பட்டியல் சாதி இயக்கங்களின் அதிகாரத்திற்கான குரலாக எழுந்திருக்கும் அவரின் கேள்வி, 2026 சட்டமன்ற தேர்தல் களத்திலும் எதிரொலிக்குமா? மங்கி மறையுமா? தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள பட்டியல் சாதியினர், பிரதானமாக 3 சாதிகளில் உள்ளனர். இந்த சாதிகளில் இருந்து உருவான தலைவர்களால் ஆங்காங்கே சிறு தலித் குழுக்கள் மற்றும் கட்சிகள் உருவானாலும், தேர்தல் கூட்டணிகளால் பெற்ற ஒரு சில இடங்களைத் தாண்டி, அதிகாரத்தை நோக்கி அவர்களால் நெருங்க முடிந்ததில்லை. பட மூலாதாரம்,FACEBOOK/பா ரஞ்சித் குமுறும் தலித் மக்கள் தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்கள் முன்னெடுத்துள்ள சமூக நீதி முழக்கங்களால் தலித் மக்களும் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் அதையே பேசி ஆட்சியை பிடித்த இயக்கங்களில் குறிப்பிடத்தக்க தலித் தலைவர்கள் வெகு சிலரே உள்ளனர். நாடு தழுவிய தலித் தலைவராக அம்பேத்கர் அறியப்பட்டாலும், உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியும், ஆட்சியும்தான் அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அதை ஒட்டிய தலித் தலைவர்களின் குமுறல்களும் தலித் மக்களின் அரசியல் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வியை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி சென்னைக்கு வந்த போது வலியுறுத்தினார். அதே மேடையில் அதற்கான நியாயத்தை வழிமொழிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் பேசினார். பட மூலாதாரம்,FACEBOOK/திருமாவளவன் படக்குறிப்பு,தலித் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டுகிறார். திமுக மீது விரக்தி ? ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்காக நடைபெற்ற போராட்டத்தை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ள அவர், தலித் அரசியலுக்கே அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக குறிப்பிடுகிறார். அவர் தனது பதிவில், “தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியுள்ளார். சாதிகளாகவும், கட்சிகளாகவும் தங்களுக்குள் நிலவும் வேறுபாடுகளை தாண்டி தலித் இயக்கங்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின் வெளிப்பாடாகவே இந்த அதிருப்திக் குரல்கள் எழுவதாக பார்க்கப்படுகின்றன. இதையேதான் ‘தலித் தலைவர்கள் சிறிய அளவில் இருந்தாலும் தாக்கப்படுகிறார்கள்’ என்று திருமாவளவன் குறிப்பிட்டு பேசினார். பட மூலாதாரம்,TN DIPR படக்குறிப்பு,கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். முதல்வரின் அஞ்சலியும் விளக்கமும் பாஜகவின் தலித் தலைவராகவும், மத்திய இணை அமைச்சராகவும் உள்ள எல்.முருகன், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாளுக்கு நாள் பட்டியலின தலைவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர். தமிழ்நாட்டில் உள்ள 22 ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் பணியாற்ற முடியவில்லை" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார். காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை பாஜகவை கடுமையாக விமர்சித்தாலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இப்படியான விமர்சனங்களின் பின்னணியிலேயே ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி பொற்கொடியை சந்தித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது அவர் “இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்” என்று தெரிவித்தார். திமுகவை வீழ்த்துமா தலித் வாக்குகள்? ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் மட்டுமே திமுக மீதான தலித் தலைவர்களின் கேள்விக்கு முதல் காரணம் அல்ல. சட்டமன்றத்தில் ஆணவக் கொலை தடுப்புக்கு தனிச் சட்டம் கேட்ட கோரிக்கைக்கு பதில் கொடுத்த முதலமைச்சர், அப்படியொரு சட்டம் தேவையில்லை என்று மறுத்தார். இதனால் திமுக அரசு கூட்டணிக் கட்சிகளாலேயே விமர்சிக்கப்பட்டது. வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்றுவரையிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. விரக்தியில் அந்த மக்கள் தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்தும் வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை. இத்தனை நாட்களாக ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என்று இந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. பல்வேறு நேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் தனது செல்வாக்கு சரிந்துவிடக் கூடாது என்று அச்சப்படும் திமுகவிற்கு தலித் வாக்கு வங்கி பற்றிய கவலை இல்லையா என்று கேட்கிறார் பேராசிரியர் லக்ஷ்மணன். “கள்ளக்குறிச்சியில் இறந்த 70 பேரில் 60 பேர் தலித்துகள், வன்னியர் இறந்த போது மரக்காணத்திற்கு சென்ற முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை? வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது ஏன்? கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் வேண்டும் என்று கதறிய திமுக ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்கு ஏன் 30 கி.மீ தள்ளி இடம் கொடுக்கிறது” என்று திமுக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் அவர் “2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தலித் வாக்கு வங்கி கண்டிப்பாக சரிய போகிறது. திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்றார். விசிகவுக்கு என்ன சிக்கல்? ஆனால் இதை முற்றிலும் மறுக்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியர் புனித பாண்டியன். “கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் தலித்துகள் மட்டுமா? வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறிய அவர். “ஆணவக் கொலைக்கான தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்பவர்கள் சில தன்னார்வலர்கள்தான்” என்றும் கூறினார். ஆனால் திமுகவின் நடவடிக்கைகளால் அவர்களின் கூட்டணிக் கட்சியான வி.சி.கவிற்கும் பின்னடைவு ஏற்படும் என்கிறார் பேராசிரியர் லக்ஷ்மணன். “திருமாவளவன், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கூறுவது கண் துடைப்பு. ஆம்ஸ்ட்ராங்கிற்கான இடத்தை சென்னையில் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், விசிகவும், காங்கிரஸும். திமுக மீதும், விசிக மீதும் தலித் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலித் வாக்குகள் சீமானுக்கும் பாஜகவுக்கும் என பிரிய தொடங்கி விட்டன.” என்றார். பாஜகவின் விருப்பம் பட மூலாதாரம்,FACEBOOK/க.அண்ணாமலை தலித் அரசியல் எழுச்சியை சாத்தியமாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி உத்திர பிரதேச மாநிலத்தில் தனது பகுஜன் அரசியல் மூலம் பட்டியல் சாதி வாக்குகளை தன் பக்கம் ஈர்த்ததுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுத்தளமான பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்குகள் தவிர உயர் சாதி வாக்குகளை குறிவைத்து ஈர்த்தது. அதன் மூலமே அரசியல் வெற்றியை சாத்தியமாக்கியது. அதே மாநிலத்தில், பல்வேறு சாதிகளிடம் ‘சமூக பொறியியல்’ (சோசியல் எஞ்சினியரிங்) நடவடிக்கைகளை முன்னெடுத்த பாஜக, மாயாவதியின் சாதியை சேர்ந்த மக்களை விடுத்து மற்ற பிரிவு பட்டியல் சாதியினரை தனியே திரட்டியதுடன், பிற சாதி இந்துக்களையும் சேர்த்து வியூகம் அமைத்து ஆட்சியை பிடித்தது. தமிழ்நாட்டிலோ, பிராமணரல்லாதார் இயக்கத்தின் வழியாக உருவான இரு பெரும் திராவிட கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் வாக்குகளை ஒரே தொகுப்பாக குவித்துள்ளன. பல பத்தாண்டுகளாக தொடரும் திமுக எதிர் அதிமுக என்ற களத்தில் தனியாக குறிப்பிட்ட சாதி வாக்கு வங்கிகள் உருவாகவில்லை. ஆனால், இங்கும் சமூக பொறியியல் நடவடிக்கைகள் சாத்தியமே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ஒருவர். மேலும் அவர் கூறுகையில், “தலித் வாக்குகள் இப்போதும் மொத்தமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான் செல்கின்றன. ஆனால் அந்த வாக்குகளை கவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வாக்குகளை முழுவதுமாக பாஜகவுக்கு மாற்றுவது முடியாது எனினும், அந்த வாக்கு வங்கியை சிதறடிக்க முடியும். தலித்துகளில் சில பிரிவினரை தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம் அதை பாஜக செய்து வருகிறது” என்றார். தேவை சமூக மாற்றம் பட மூலாதாரம்,புனித பாண்டியன் படக்குறிப்பு,சமூகத்தில் மாற்றம் ஏற்படாமல் அரசின் மீது பொறுப்பை செலுத்துவது தவறான பார்வை என்கிறார் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில், தலித் அரசியல் எழுச்சியை எதிர்பார்க்க முடியாது என்கிறார் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன். “தனித் தொகுதிகளில் தேர்வாகி, நாடாளுமன்றத்தில் 125 உறுப்பினர்களும், தமிழக சட்டமன்றத்தில் 40 உறுப்பினர்களும் ஏற்கனவே உள்ளார்கள். ஆனால் அவர்களால் என்ன சாதிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் தொல். திருமாவளவன் ஒரு முக்கிய அரசியல் தலைவராக அங்கீகரிக்கப்படுவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.’’ ‘’ எனவே மாற்றம் சமூகத்தில் ஏற்பட வேண்டும். ஒரு சாதி குடுவைக்குள் இருந்துக் கொண்டு தலித்துகளால் எப்படி மேம்பட முடியும்? தலித்துகள் மதம் மாறினாலும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு உண்டு என்று சட்டம் சொல்கிறது. அப்போதும் கூட ஏன் 9450 பேர் மட்டுமே பௌதத்துக்கு மாறியுள்ளனர்? சமூக மாற்றம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், அரசின் மீது அனைத்துப் பொறுப்பையும் சுமத்துவது தவறான பார்வை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c06k3nezz55o
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
வடக்கு, கிழக்கில் பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் நேற்று முல்லைத்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. குறித்த திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 64 வீடுகள் அமைப்பதற்கு தேவையான பொருட்களே இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/305675
-
சுவசெரிய சேவைக்கு 95 புதிய ஆம்புலன்ஸ்கள்
1990 சுவசெரிய அறக்கட்டளை 95 புதிய ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் TATA Sons (Pvt) Ltd இலிருந்து பெறப்பட்ட 297 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி “1990 Suva Sariya Foundation” தொடங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது இச்செவைக்கு 450 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 பேக்-அப் ஆம்புலன்ஸ்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் TATA Sons (Pvt) Ltd நிறுவனம் 50 ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகவும், Asia Development Bank 45 ஆம்புலன்ஸ்களை மானியமாகவும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேற்படி அம்புலன்ஸ் வண்டிகளை ‘1990 சுவசெரிய அறக்கட்டளைக்கு’ பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியது. https://thinakkural.lk/article/305666
-
முறையான அடையாளங்கள் இல்லாமல் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன: அமைச்சர்
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும் முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளும் போது தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். https://thinakkural.lk/article/305620