Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒழித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொல்லப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது. ஆபிரகாம் லிங்கன் 1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார். வில்லியம் மெக்கின்லே 1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தியோடர் ரூஸ்வெல்ட் 1912 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார். பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் 1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது. ஜான் எப்.கென்னடி 1963 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்ட் என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. ரொபர்ட் எப்.கென்னடி ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ரொபர்ட் கென்னடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது. ஜார்ஜ் வாலஸ் 1972 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜோர்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார். ஜோர்ஜ் போர்ட் 1975 இல் ஜனாதிபதியாக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார். ரொனால்டீ ரீகன் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார். https://thinakkural.lk/article/306059
  2. விம்பிள்டன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா! விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா மற்றும் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார். அத்துடன் கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305989
  3. மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள் இதோ! Published By: VISHNU 15 JUL, 2024 | 08:32 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணத் திருத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்துமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. மின்கட்டணம் குறைவடைந்துள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை தவிர்த்துக் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு ஆணைக்குழு மின்பாவனையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் மின்கட்டணம் திருத்தம் குறித்து பொது மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் 22. 5 சதவீதத்தால் கட்டணத்தை திருத்தம் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வீட்டு பாவனைக்கான மின்கட்டணத்தை 27 சதவீதத்தாலும், மத தலங்களுக்கான கட்டணத்தை 30 சதவீதத்தாலும், ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த மின்கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாக தமது தொழிற்றுறையை உரிய அரச நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிவாரணம் மின்கட்டண குறைப்பு ஊடாக கிடைக்கப் பெறும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ மின்கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானத்தை அறிவித்தார். இதற்கமைய வீட்டு பாவனை, மததலங்கள், ஹோட்டல், கைத்தொழிற்சாலைகள், பொது பணிகள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சகல நுகர்வு தொகுதிகளுக்குமான கட்டணங்கள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) குறைக்கப்படும். இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவில் முழுமையான மின்கட்டணத்தை 10 சதவீதத்தால் குறைக்க பரிந்துரைத்துள்ள போதும் தரவுகளை ஆராய்ந்து மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்மைய வீட்டு மின்பாவனைக்கான மின்கட்டணம் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத தலங்களில் குறைவான மின்பாவனையுடனான தொகுதிகளுக்கு இதுவரை அறவிடப்பட்ட 8 மற்றும் 9 ரூபாய் என்ற அடிப்படையிலான ஒரு அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவாக குறைப்பதற்கும், 18 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 10 ரூபாவாகவும், 32 ருபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 20 ரூபாவாகவும், 43 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 30 ரூபாவாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத தலங்களுக்காக அறவிடப்பட்ட மாத நிலையான கட்டணத்துக்கான அனைத்து தொகுதிகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள் மற்றும் பொது பணிகளுக்கு ஒரு அலகுக்காக இதுவரை அறவிடப்பட்ட 55 ரூபா, 45 ரூபா, 37 ரூபா முறையே 46.75 ரூபா, 38.25 ரூபா, 31.45 ரூபா என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்த்தத்துடன் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது. மின்பாவனையாளர்கள் கோரினால் அவர்களுக்கு மின் கட்டண பற்றுச்சீட்டினை விநியோகிக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மின்னுற்பத்திக்காக எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறும், 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டின் செலவுகள் குறித்து விரிவான சுயாதீன கணக்காய்வினை மேற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மின்சார சபைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை மின்பாவனையாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மத தலங்களில் மின்சாரம் எவ்வித சிக்கனமும் இல்லாமல் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே மின்னுற்பத்தியை வரையறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/188547
  4. நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ; இதுவரை 52 மனித எச்சங்கள் அகழ்வு! Published By: VISHNU 15 JUL, 2024 | 08:59 PM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் திங்கட்கிழமை (15.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான இன்று ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது இன்றுடன் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக விஷேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ கருத்து தெரிவிக்கும் பாேது, திங்கட்கிழமை (15) மூன்றாம் கட்டமாக தொடர்ந்த கொக்குதாெடுவாய் மனிதபுதைகுழி அகழ்வானது பத்தாவது நாளாவதாக இன்றைய தினம் நடைபெற்றது. இன்றுடன் அநேகமாக மனித புதைகுழியில் கிடந்த எலும்பு தொகுதிகள் முழுக்க மீட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்றையதினம் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வைகள் என்பன மேலதிக சான்றாதார பொருட்களாக பெறப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இப்புதைகுழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீண்டும் 04.07.2024 மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் பத்தாம் நாள் அகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188553
  5. ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/306031
  6. மனைவி, 2 மகள்களை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த நபர் - டிரம்ப் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைக் வெண்ட்லிங் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின் போது, பார்வையாளர்களில் ஒருவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முயன்றபோது இறந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 50 வயதான கோரே கம்பெரடோர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டபோது, தனது குடும்ப உறுப்பினர்களைக் காக்க அவர்கள் மீது பாய்ந்தார். அப்போது அவர் மீது குண்டு பாய்ந்ததில் இறந்தார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ‘ஹீரோவாக இறந்தார்’ "கோரே ஒரு ஹீரோவாக இறந்தார்," என்று பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். பார்வையாளர் கூட்டத்தில் மேலும் இருவர் சுடப்பட்டனர். அவர்கள் 57 வயதான டேவிட் டச்சு, மற்றும் 74 வயதான ஜேம்ஸ் கோபன்ஹேவர் என்று பென்சில்வேனியா மாகாண போலீசார் தெரிவித்தனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ, உயிரிழந்த கோரே கம்பெரடோரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் தான் பேசியதாகக் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கோரே கம்பெரடோர் "கோரே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்வார்," என்று அவர் கூறினார். "கோரே தனது சமூகத்தை நேசித்தார். குறிப்பாக, அவர் தனது குடும்பத்தை நேசித்தார்,” என்றார் அவர். கோரே கம்பெரடோர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்றும், அவர் சனிக்கிழமை நடந்த பேரணியில் கலந்துகொள்வதில் உற்சாகமாக இருந்ததார் என்றும் கவர்னர் ஷாபிரோ கூறினார். “கோரே நம்மில் மிகச் சிறந்த ஒருவர். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்,” என்று கவர்னர் ஷாபிரோ கூறினார். "நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசியல் கருத்து வேறுபாடுகளை வன்முறை மூலம் ஒருபோதும் தீர்க்க முடியாது," என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ‘உதவும் குணம் படைத்தவர்’ பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பட்லர் நகரில் டிரம்பின் பேரணி நடைபெற்றது. அந்த இடத்திலிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள சார்வர் என்ற பகுதியில் கம்பெரடோர் வசித்து வந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. தன்னார்வலராக தீயணைப்புப் பணியில் ஈடுபடுவதுடன், பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தில் திட்டப்பணி மற்றும் கருவி பொறியாளராகவும் பணிபுரிந்தார் என்று அவரது சமூக ஊடக சுயவிவரங்கள் தெரிவிக்கின்றன. "அவர் ஒரு நல்ல மனிதர்," என்று அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மாட் அகிலிஸ் என்பவர் பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூ என்ற பத்திரிகையிடம் கூறினார். "நாங்கள் அரசியல் கருத்துகளில் ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதையும் மீறி அவர் ஒரு நல்ல நண்பராகவும், சிறந்த அண்டை வீட்டுக்காரரகவும் இருந்தார்," என்றார் அகிலிஸ். "நான் மருத்துவமனையில் இருந்தபோது அவர் மருத்துவச் செலவுகளுக்காகப் பணத்தை நன்கொடையாக வழங்கினார். எங்கள் வீட்டு முற்றத்தில் நாங்கள் ஏற்பாடு செய்யும் சந்தைக்கு அவர் எப்போதும் வருவார். நான் அவரது வீட்டைக் கடந்து செல்லும் போது அவர் எப்போதும் ஹலோ சொல்வார்,” என்று அகிலிஸ் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முன்னாள் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது சுடப்பட்ட எட்டு குண்டுகள் காயமடைந்த மற்ற இருவரது குடும்பங்களில் ஒருவரது குடும்பத்தினரிடம் பேசியதாகவும் கவர்னர் ஷாபிரோ கூறினார். ஆனால் அந்த உரையாடல் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். பேரணியில் சுடப்பட்ட ஆறு முதல் எட்டு துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று, முன்னாள் அதிபர் டிரம்பின் காதில் பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர், சம்பவம் நடந்த இடத்திலேயே டிரம்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cv2g0q8yynpo
  7. கனடாவில் துப்பாக்கிச் சூடு – இலங்கை இளைஞன் பலி கனடாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரென்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து கனடா சென்று அங்கு வியாபாரம் செய்து வந்த 29 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனடா சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததாகவும் பின்னர் அவரது மகன் அங்கு கல்வி கற்கும் வேளையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் இரு வியாபார பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஒரு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் இந்த இளைஞன் பலியாகியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா டொரென்டோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/188553
  8. யாரையும் ஏமாற்றியதில்லை. நானும் பெரியளவில் யாரிடமும் ஏமாறவில்லை. சங்கானையில் கடை வைத்திருக்கும்போது 2/3 தடவை கடைக்கு வந்த தம்பி ஒருவன் 500 ரூபாவிற்கு றீசார்ச் செய்துவிட்டு கொண்டுவந்து தருகிறேன் என்று போனவன் தான்! றீசார்ச் செய்த இலக்கத்திற்கு எடுத்தால் பதில் இல்லை. கொழும்பில் கடை வைத்திருந்த போது றீசார்ச் செய்யும் சிறிய நொக்கியா போன்களை காகம் தூக்கிச் செல்வது போல் இரண்டு மூன்று தடவை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். எம்மால் துரத்தி வர முடியாதென நன்கு தெரிந்தே செய்வார்கள்.
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனித உடலின் உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் அமைந்திருக்கும். எனவே, குறிப்பிட்ட நோய்களைக் கண்டறிவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, குடல்வால் அழற்சி (Appendicitis) அல்லது பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னை உள்ளவர்கள், துல்லியமாக அந்த உறுப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், சில சமயங்களில் உறுப்புகள் தவறான இடங்களில் அமைந்திருக்கும். இதற்குச் சிறந்த உதாரணம், 'டெக்ஸ்ட்ரோகார்டியா' (dextrocardia). இது இதயம் ஒரு அசாதாரண (வலது பக்க) நிலையில் அமைந்திருக்கும் நிலையாகும். இதில் இதயம் இடதுபுறமாக (லெவோகார்டியா நிலை) இருப்பதற்குப் பதிலாகச் சற்று வலது பக்கம் அமைந்திருக்கும். இந்த நிலை மிகவும் அரிதானது. தோராயமாக 12,000 பேரில் ஒருவர் இந்த நிலையுடன் பிறக்கிறார். 'டெக்ஸ்ட்ரோகார்டியா’ இருப்பவர்கள் வேறேதேனும் உடல்நலப் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த நிலை இருப்பதற்கான ஒரே அறிகுறி அவர்களின் எக்கோ கார்டியோகிராமில் (ECG) வித்தியாசமான ரீடிங் (reading) பதிவாகும். சிலருக்கு முக்கிய உள்ளுறுப்புகள், அதாவது முழு வயிற்றுப் பகுதி மற்றும் மார்பு பகுதி தலைகீழாக அமைந்திருக்கும். இது 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ (situs inversus totalis) நிலை என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க நடிகை கேத்தரின் ஓ'ஹாரா, பாடகர்கள் டோனி ஆஸ்மண்ட், மற்றும் என்ரிக் இக்லேசியாஸ் ஆகியோர் இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பாடகர் ஆஸ்மண்ட் தனக்கு சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் நிலை இருப்பதை மிகவும் தாமதமாகத் தான் கண்டறிந்தார். அவருக்குத் திடீரென இடது பக்க வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு குடல்வால் அழற்சி பிரச்னை இருப்பது தெரிய வந்தது. ஆனால் பொதுவாக குடல்வால் அமைந்திருப்பது வலது பக்கத்தில். அப்போது தான் அவருக்கு 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ நிலை இருப்பது தெரிய வந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாடகர் என்ரிக் இக்லேசியாஸ் 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ நிலையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதயமும் நுரையீரலும் தலைகீழாக இருந்தால் என்னவாகும்? சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் நிலை ஒப்பீட்டளவில் அரிதானது, இது 10,000 பேரில் ஒருவரை பாதிக்கிறது, அதுவும் அதிகமாக ஆண்களை பாதிக்கிறது. சிலருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மட்டும் தலைகீழாக இருக்கும். இது 'சிட்டஸ் இன்வெர்சஸ்’ என்று அழைக்கப்படுகிறது . மனித உறுப்புகளின் இயல்பான வளர்ச்சியை உறுதி செய்வதில் பங்கு வகிக்கும் 100-க்கும் மேற்பட்ட மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெற்றோர்கள் இருவரும் ஒரே மரபணுவின் தவறான நகலை (faulty copy of the same gene) குழந்தைக்கு கடத்தும்போது 'சிட்டஸ் இன்வெர்சஸ்’ நிலையுடன் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையுடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் எந்த அறிகுறிகளையும் கவனிக்க மாட்டார்கள். இன்வெர்ஸ் நிலையுடன் வாழ்ந்த சிலர் சராசரி ஆயுட்காலத்தை தாண்டி நன்றாக வாழ்ந்ததாகவும், அவர்கள் இறந்த பிறகு தான் அவர்களுக்கு சிட்டஸ் இன்வெர்சஸ் நிலை இருந்தது கண்டறியப்பட்டதாகவும் சில அறிக்கைகள் உள்ளன. மிகவும் அரிதான சூழ்நிலைகளில், சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் உள்ளவர்களுக்கு 'லெவோகார்டியா’ (Levocardia) இருக்கலாம், இதனால் இதயம் மற்றும் நுரையீரல்கள் இடது பக்கத்தில் 'சாதாரண' நிலையில் அமைந்திருக்கும். 'டெக்ஸ்ட்ரோகார்டியா’ மற்றும் 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ ஆகிய உடல் நிலை கொண்டவர்களுக்கு இதயக் குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட் காலத்தை அது பாதிக்கும். மற்றபடி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பொதுவாக பற்களின் அமைப்புகள் பலருக்கு மாறியிருக்கும். சிலருக்கு மூக்கில் பற்கள் வளர்ந்து, மூக்கில் ரத்தக்கசிவு மற்றும் தொற்று போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு கண்களை சுற்றியுள்ள விழிக்குழியில் (eye socket) பற்கள் கண்டறியப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவை கண்களைச் சுற்றியிருக்கும் எலும்பில் உறுதியாக வளர்ந்திருந்தால் அவற்றைப் பிரித்தெடுப்பது கடினம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெண்கள் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் `ஹைடல் ஹெர்னியா’ பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். குடலிறக்கம் எப்படி ஏற்படுகிறது? சில சமயங்களில், கட்டமைப்புப் பிரச்னையால் உடல் உறுப்புகள் தவறான இடத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியின் உள்ளே அமைந்திருக்கும் குடல் அல்லது அதனுடைய கொழுப்புச் சத்துகள் வலுவிழந்த வயிற்றுத் தசைகளில் துவாரம் ஏற்பட்டு, குடல் கீழே இறங்கிவிடும். இது குடலிறக்கம் எனப்படும். உதரவிதானத்தில் (diaphragm) சாதாரண துவாரங்கள் இருக்கும். இவை நாம் சுவாசிக்க உதவுகின்றன. இவை ரத்த நாளங்கள் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கின்றன. உதரவிதானம் மார்புப் பகுதியில் உள்ள உறுப்புகளையும் அடிவயிற்றில் உள்ள உறுப்புகளையும் ஒழுங்கமைப்புடன் வைத்திருக்கிறது. இருப்பினும், சில சூழ்நிலைகளில், இந்தத் துவாரங்கள் பலவீனமடையும் போது அல்லது இந்தப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது (இருமல், தும்மல் அல்லது சுளுக்கு) துவாரங்களைக் கடந்து உறுப்புகள் சற்றுக் கீழிறங்கும். கல்லீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகள் மார்பில் முடிவடையும். பொதுவாக, இரைப்பையின் ஒரு பகுதி உணவுக்குழாய் திறப்பின் மூலம் கீழிறங்கி 'குடலிறக்கம்’ ஏற்படுகிறது. இந்த 'ஹயாடல் ஹெர்னியா' (hiatal hernia) நிலை மிகவும் பொதுவானது, 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவருக்கு இது ஏற்படுகிறது. மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55% முதல் 60% வரை அதிகமாக ஏற்படுகிறது, ஆனால் ஹயாடல் ஹெர்னியா பிரச்னை ஏற்படும் பலருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. பெண்கள் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் மத்தியில் இந்த நிலை ஏற்படும். அதே சமயம் இந்த ஹயாடல் குடலிறக்கங்களில் ஒரு வகை மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. 'பாராசோபேஜியல்’ குடலிறக்கங்கள் (paraesophageal hernias) வயிற்றை நெரித்து, முக்கியமான ரத்த விநியோகத்தைத் துண்டித்துவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும். குடலிறக்கத்தின் மற்றொரு வகை 'இன்குயினல் குடலிறக்கம்’ (inguinal hernia) ஆகும். இந்த நிலையில், திசுக்கள் அல்லது குடல் பகுதி இன்குயினல் பாதை அல்லது இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தசைச் சுவரில் பலவீனமான துவாரங்களின் வழியே கீழிறங்கும் நிலையை குறிக்கிறது. இன்குயினல் குடலிறக்கம் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களின் வாழ்நாளில் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட 3% வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு 27% வாய்ப்பு உள்ளது. சிலருக்கு, தீவிரமான குடலிறக்கம் ஏற்பட்டு, குடல் முழங்கால் வரை கீழிறங்கலாம். வயதான ஆண் நோயாளிகளுக்கு இது அரிதாக ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். கர்ப்பப்பை இறக்கம் 'ப்ரோலாப்ஸ்’ என்பது பிற உறுப்புகளின் இறக்கம் காரணமாக பிற உறுப்புகளை பாதிக்கும் நிலை. உதாரணமாக பெண்களில் கருப்பை பிறப்புறுப்புப் பகுதி (vagina) வரை கீழிறங்கும். மிகவும் தீவிரமான நிலையில், இது பிறப்புறுப்பின் வெளிப்புறம் வரை கீழிறங்கும். இந்த நிலை கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படலாம். மேலும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தலாம். வயது, உடல் பருமன், அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது மற்றும் முந்தைய பிரசவங்கள் ஆகியவை கருப்பை இறக்கத்திற்கான ஆபத்து காரணிகளாகும். உறுப்புகள் மற்றும் உடலின் கட்டமைப்புகள் தவறான இடத்தில் இருப்பது பெரிய பிரச்னை போன்று தோன்றினாலும், இந்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர், இந்த நிலைமைகளில் பலவற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுள்ளனர். தற்போதைய மருத்துவ முறைகளில் இதுபோன்ற பிரச்னைகள் எளிதில் குணமாக்கப்படுகின்றன. https://www.bbc.com/tamil/articles/ceqd52n8qljo
  10. 15 JUL, 2024 | 12:23 PM நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தார். இதன்போது சஜித் பிரேமதாச மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் மேலும் தெரிவிக்கையில், மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது. முக்கியமாக, நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து, அவர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன். வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் உள்ளது. அதற்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள் போன்று தீர்வு பெற்றுக்கொள்வது அவசியம். மன்னார் மாவட்டமின்றி வடக்கு, கிழக்கில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன. அக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சிறந்த திட்டங்கள், இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டங்களை கொண்டுவரவிருக்கிறேன். நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன். மீனவர்களின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதோடு அதை வடக்கு கிழக்கை மையப்படுத்தி தீர்வு பெற்றுத் தருவேன். மாகாண சபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அத்தோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும். மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள் மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதேபோன்று மாகாண சபை கட்டமைப்பை பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார். https://www.virakesari.lk/article/188490
  11. யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன் சுவீகரித்தது 15 JUL, 2024 | 12:57 PM (நெவில் அன்தனி) பேர்லின் ஒலிம்பியா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஸ்பெய்ன் நான்காவது தடவையாக ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய வருடங்களில் ஸ்பெய்ன் சம்பியனாகியிருந்தது. இறுதிப் போட்டியில் போடப்பட்ட 3 கோல்களில் கடைசி இரண்டு கோல்களை மாற்று வீரர்கள் போட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வருட யூரோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்பெய்ன் தோல்வி அடையாத அணியாக சம்பியன் ஆனது. மேலும் சகல போட்டிகளிலும் முழு ஆட்டநேரத்தின்போது ஸ்பெய்ன் வெற்றியீட்டியது ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் ஒரு சாதனையாகும். பீபா உலகக் கிண்ணத்தில் சம்பியனான ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, 2018இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா ஆகியவற்றை வெற்றிகொண்டே ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை ஸ்பெய்ன் சுவீகரித்தது. குழுநிலையில் குரோஏஷியாவை 3 - 0 எனவும், இத்தாலியை 1 - 0 எனவும், அல்பேனியாவை 1 - 0 எனவும், 16 அணிகளுக்கான இரண்டாம் சுற்றில் ஜோர்ஜியாவை 4 - 1 எனவும் கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 எனவும் அரை இறுதியில் பிரான்ஸை 2 - 1 எனவும் கடைசியில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் இறுக்கமாக அமைந்தது. போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுடன் விளையாடியபோதிலும் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை. எனினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் (போட்டியில் 47ஆவது நிமிடம்) 17 வயதான இளம் வீரர் லெமின் யமால் பரிமாறிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் கோலாக்கி ஸ்பெய்னை 1 - 0 என முன்னிலையில் இட்டார். வில்லியம் தனது 22ஆவது பிறந்த தினத்தை கடந்த வெள்ளிக்கிழமையும் லெமின் யமால் தனது 17ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமையும் கொண்டாடினர். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பெய்ன் வீரர் ஒல்மோ இரண்டாவது கோலைப் போட எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது. அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தது. போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாக்கா, பெலிங்ஹாம் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை இறுதியாகப் பெற்றுக்கொண்ட கோல் (Cole) பாமர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். கோல் பாமர் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அடுத்த நிமிடத்திலேயே கோல் போட்டமை விசேட அம்சமாகும். தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் மற்றொரு மாற்றுவீரரான மிக்கேல் ஒயாஸ்பாபல் மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை 2 - 1 என முன்னிலையில் இட்டார். அதுவே ஸ்பெய்னின் வெற்றிகோலாக அமைந்தது. இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட லெமின் யமால், டெனி ஒல்மோ ஆகிய இருவரும் தங்கப் பந்து விருதை பகிர்ந்துகொண்டனர். ஐரோப்பியன் சம்பியன்ஷிப்பில் மிக குறைந்த வயதில் விளையாடி தங்கப் பந்தை வென்ற வீரர் என்ற பெருமையை லெமின் யமால் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/188496
  12. நான் இறந்திருக்கவேண்டும் - துப்பாக்கி; பிரயோகத்தின் பின்னர் வழங்கிய முதல்பேட்டியில் டிரம்ப் Published By: RAJEEBAN 15 JUL, 2024 | 12:50 PM படுகொலை முயற்சியிலிருந்து உயிர்தப்பியமை குறித்து தனது மன உணர்வை பகிர்ந்துகொண்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான் இறந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது முழங்கையில் ஏற்பட்டுள்ள பெரிய காயத்தை செய்தியாளருக்கு காண்பித்துள்ளதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தன்னை பாதுகாக்க முயன்றவேளை இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். வலதுகாதை சுற்றி தளர்வான பெரும் பான்டேஜ் உடன் டிரம்ப் காணப்பட்டார் அவரை படம்பிடிக்க முடியாது என அவரது பணியாளர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. நான் இறந்திருக்க வேண்டும் நான் இங்கே இருக்ககூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் மீண்டும் எழுந்து தனது கைமுஷ்டியை உயர்த்தி முகத்தில் இரத்தக்காயத்துடன் போராடுவோம் என தான் கோசமிடுவதை காண்பிக்கும் புகைப்படம்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் இது தாங்கள் பார்த்ததிலேயே மிகச்சிறந்த புகைப்படம் என தெரிவிக்கின்றார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தின் பின்னரும் நான் தொடர்ந்து உரையாற்ற விரும்பினேன் ஆனால் இரகசிய சேவை பிரிவினர் நான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188497
  13. 15 JUL, 2024 | 11:36 AM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188483
  14. 15 JUL, 2024 | 10:57 AM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஆதரவாகவே நான் செயற்பட்டுள்ளேன். பொதுஜன பெரமுனவின் ஆதரவினால் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் கைகோர்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சி உறுப்புரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவேன். மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்க நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயார் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்தார். கண்டி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்ற தொனிப்பொருளிளான அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதால் மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடையவர்களுடன் ஒன்றிணைந்துள்ளோம். அரசியல் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாடு அதள பாதாளத்துக்குள் விழும் போது கட்சி பேதமின்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 1963 ஆம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரது குடியுரிமை பிரச்சினையின் போது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், டட்லி சேனாநாயக்கவும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இவர்கள் முரண்பட்டுக் கொள்ளவில்லை. குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது பிரதான இலக்காக காணப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கலவரத்தின் போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் கலவரத்தை அடக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குறிப்பிட்டார். பண்டாரநாயக்கர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசியல் கொள்கை வேறுபாடுகள் காணப்பட்டது. இருப்பினும் தீர்மானமிக்க தருணங்களில் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளனர். அதிகாரத்தை வழங்கும் போது அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன எமக்கு கற்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவ்வாறே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலின் போது எனக்கு அதிகாரம் கிடைத்தது. நான் அதனை பெற்றுக் கொண்டு நாட்டை பாதுகாத்தேன். நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோரை நினைத்துக் கொண்டு சவால்களை பொறுப்பேற்றேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் எதனையும் செய்திருக்க முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதேபோல் ஏனைய அரசியல் கட்சியினரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு பலமுறை ஆலோசனை வழங்கினேன். எனது ஆலோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் நெருக்கடியின் பின்னர் பொதுஜன பெரமுன பிளவடைந்தது. கட்சியின் ஒரு தரப்பினர் கட்சியின் அரசரான மஹிந்த ராஜபக்ஷவை பழித்து விட்டு வெளியேறினார்கள். பெரும்பாலானோர் அரசருடன் இருந்து விட்டார்கள். அரசர் மோசமானவர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தான் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ் ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ நல்லவர், சிறந்தவர் என்று மேளம் அடித்தார். ஒருபோதும் தவறு என்று இவர் குறிப்பிடவில்லை. இன்று விமர்சிக்கிறார். ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. நான் ரணசிங்க பிரேமதாசவை தவிர்த்து எந்த ஜனாதிபதிகளையும் பாதுகாக்கவில்லை. ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக கட்சியில் குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நானே முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை பாதுகாக்க எம்முடன் ஒன்றிணைய வேண்டும். பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாத்து விட்டேன். ஊழலுக்கு எதிராக நான் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகின்றனர். பாடசலைகளுக்கு பேரூந்து வழங்குவதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்று குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் நான் ஒன்றிணைய தயார். நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்துக் கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சியின் உறுப்புரிமையை மீண்டும் வழங்குவேன். நான் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டில் ஏதும் இருக்கவில்லை. தற்போது எரிபொருள் தாராளமாக கிடைக்கிறது. இவர் இதனை கொண்டு பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டும். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தால் இலக்குகள் இடைநிறுத்தப்படும். மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும். மீண்டும் வீழ்ந்தால் எவரும் ஆதரவு வழங்கமாட்டார்கள். ஆகவே நாட்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியினர் எம்முடன் கைகோர்க்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் இதனை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் குறிப்பிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/188471
  15. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற அந்த பகுதி இஸ்ரேலிய ராணுவத்தால் மனிதாபிமான மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. வான் தாக்குதல் நடந்த இடம் 'பூகம்பம்' தாக்கியது போல் தெரிகிறது என்று அல்-மவாசியில் நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் கூறினார். தாக்குதல் நடத்தப்பட்டது எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிதைவுகள் மற்றும் ரத்தம் தோய்ந்த உடல்கள் ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றப்படுவதை அப்பகுதியில் இருந்து வெளியான வீடியோக்கள் காட்டுகின்றன. ஒரு பெரிய பள்ளத்தில் இடிபாடுகளை தங்கள் கைகளால் அகற்ற மக்கள் தீவிரமாக முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது. வான் தாக்குதலின் பின்விளைவுகளின் காட்சிகளை பிபிசி ஆய்வு செய்தது. இது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) இணையதளத்தில் மனிதாபிமான மண்டலமாக காட்டப்பட்ட பகுதிக்குள் நடந்ததை ஆய்வு உறுதிப்படுத்துகிறது. பாதுகாப்புப் படையினரால் விளக்கப்பட்ட பின்னர் நடவடிக்கையை தொடர உத்தரவு பிறப்பித்ததாக நெதன்யாகு கூறினார். அருகில் பிணைக்கைதிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், சேதத்தின் அளவு மற்றும் என்ன வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் தான் அறிய விரும்பியதாக அவர் கூறினார். ஹமாஸ் குழுவின் மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒழிக்கப் போவதாக செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீண்டும் உறுதிபடக் கூறினார். 'போர் நிறுத்த முயற்சிகளை சீர்குலைக்க முயற்சி' படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இருந்து உயிர் தப்ப ஓடும் மக்கள் காஸா போர் நிறுத்த முயற்சிகளை 'கொடூரமான படுகொலைகள்' மூலம் நெதன்யாகு சீர்குலைக்க முயல்வதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. தங்கள் தலைவர்கள் குறி வைக்கப்பட்டனர் என்ற கூற்று 'தவறானது' என்று ஹமாஸ் கூறியது. "பாலத்தீன தலைவர்களை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுவது இது முதல் முறையல்ல. அது பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. "பொதுமக்கள் யாரும் இல்லாத திறந்த வெளியில் இந்த தாக்குதல் நடந்தது”, என இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் தாக்குதல் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்துவிட்டார். ஆனால் ஹமாஸ் தலைவர்கள் பொதுமக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு தங்கியுள்ளனர் என்று அவர் கூறினார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் எவரும் அந்தப் பகுதியில் இருக்கிறார்களா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த அதிகாரி கூறினார். துல்லியமான வான் தாக்குதலுக்கு முன்னர் துல்லியமான உளவுத்தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் இது எங்களின் கருப்பு நாட்களில் ஒன்று என்று கூறினார். பிபிசி உலக சேவையில் ’நியூஸ் அவர்’ நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் முகமது அபு ரய்யா, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெரும்பாலானவர்கள் இறந்திருந்ததாகவும், மற்றவர்கள் வெடிகுண்டுகளில் இருந்து தெறிக்கும் உலோக துண்டுகளால் தாக்கப்பட்டு காயமுற்றிருந்ததாகவும் கூறினார். நரகத்தில் இருப்பது போல அது இருந்தது என்று கூறிய அவர் உயிரிழந்தவர்களில் பலர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் குறிப்பிட்டார். அருகிலுள்ள குவைத் கள மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது. "கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகம் செயல்பட முடியாத அளவிற்கு மக்களால் நிரம்பி வழிகிறது" என்று பாலத்தீனர்களுக்கான பிரிட்டிஷ் மருத்துவ உதவி அமைப்பு தெரிவித்துள்ளது. யார் இந்த முகமது டெயிஃப்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,முகமது டெயிஃப் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் தலைவரான முகமது டெய்ஃப், இஸ்ரேலால் தேடப்படும் நபர்களில் ஒருவர். பல படுகொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். 2002இல் நடந்த அத்தகைய ஒரு முயற்சியில் அவர் ஒரு கண்ணை இழந்தார். அவர் 1989இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த அவர், இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் நோக்கத்துடன் படைப்பிரிவுகளை உருவாக்கினார். 1996இல் பெரும் எண்ணிக்கையில் இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளை திட்டமிட்டதுடன், அதனை மேற்பார்வையிட்டதாகவும், 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து, கொலை செய்ததாகவும் அவர் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்று கருதப்படுகிறது. அந்த தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். 251 பேர் பிணைக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இது காஸாவில் மாபெரும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக 38,400 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை தாக்குதலை ஒரு 'கடுமையான விஸ்தரிப்பு' என்று அழைத்த ஒரு ஹமாஸ் அதிகாரி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் இஸ்ரேல் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. கத்தார் மற்றும் எகிப்தில் நடத்தப்பட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மற்றொரு சம்பவத்தில் காஸாவின் மேற்கில் இஸ்ரேலிய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்று காஸாவில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காஸா நகரின் மேற்கில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பிரார்த்தனை கூடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/c72v1d6m2nmo
  16. இந்தியா vs ஜிம்பாப்வே: எந்த இந்திய கேப்டனாலும் முடியாத சாதனையை படைத்த சுப்மான் கில் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக வெளிநாட்டில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை எந்த இந்தியக் கேப்டன் தலைமையிலும் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லாத நிலையில் முதல்முறையாக கில் தலைமையில் இந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. ஹராரேவில் நடந்த கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 42ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டிங்கில் கேமியோ ஆடி 26 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ஷிவம் துபே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சரிவிலிருந்து மீட்ட சாம்ஸன் இந்திய அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையில் அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டது சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங். சாம்ஸன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும், கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்களை வெளுத்து அரைசதத்துடன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்ஸனின் முக்கியமான பங்களிப்புதான் இந்திய அணி வெல்ல காரணமாக அமைந்தது. சாம்ஸனின் பங்களிப்பை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இந்திய அணி முதல் ஆட்டத்தைப்போன்று 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். அதேபோல பந்துவீச்சில் முகேஷ் குமார், சுந்தர், துபே ஆகியோரும் 13வது ஓவருக்குப்பின் சீராக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி அளித்து வீழ்த்த உதவினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பந்தில் 13 ரன்கள் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நேற்று ஒரே பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவர் முதல்பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பந்து நோபாலாக மாறவே 7 ரன்கள் கிடைத்தது, அடுத்த ப்ரீஹிட் பந்திலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசவே ஒரு லீகல் பந்தில் 13 ரன்களை விளாசி, ஒரே பந்தில் அதிக ரன் விளாசிய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஆனால், அதே ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன் போல்டாகி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அபிஷேக் ஷர்மா 14 ரன்கள் சேர்த்தநிலையில் முசாராபானி வீசிய 4வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து நகரவா வீசிய 5வது ஓவரில் ஷார்ட் பாலில் கேப்டன் கில் 13 ரன்கள் சேர்த்தநிலையில் கேப்டன் சிக்கந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்ஸன் அரைசதம் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ரியான் பராக், சாம்ஸன் ஜோடி 56 பந்துகளைச் சந்தித்து 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரின் ஆட்டத்தால், இந்திய அணி பெரிய சரிவுக்குச் செல்வது தவிர்க்கப்பட்டது. ரியான் பராக் 22 பந்துகளில் 24 ரன்களில் பிரன்டன் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில்நிதானமாக ஆடிய சாம்ஸன் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் 4 சிக்ஸர்களை விளாசி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் முசாராபானி ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று சாம்ஸன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி இரு ஓவர்களில் ஷிவம் துபே கேமியோ ஆடிய இந்திய அணியின் ஸ்கோரை 150 ரன்களுக்கு மேல் உயர்த்த உதவினார். காரவா சுழற்பந்துவீச்சில் 2 பவுண்டரி, 2 சிக்ஸரும் விளாசி 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸரும் இந்திய அணி 160 ரன்களைக் கடக்க உதவியது. ரிங்கு சிங் 11 ரன்களிலும், சுந்தர் ஒரு ரன்னிலும்இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசாராபானி மட்டும் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES தடுமாறிய ஜிம்பாப்வே 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட் வீழ்த்தி வரும் முகேஷ்குமார் இந்த முறையும் அதை சரியாகச் செய்தார். முதல் ஓவரின் 3-ஆவது பந்திலேயே வெஸ்லேவை க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் முகேஷ் வெளியேற்றினார். அடுத்துவந்த பென்னட் 10 ரன்களில் முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. டியான் மேயர்ஸ், மருமனி இருவரும் சேர்ந்து சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர். தேஷ்பாண்டே, பிஷ்னாய் ஓவர்களில் பவுண்டரிகளாக வெளுத்த மேயர்ஸ், மருமனி ஸ்கோரை உயர்த்தினர். வாஷிங்டன் வீசிய 9-வது ஓவரில் மருமனி கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் விக்கெட் வீழ்த்தி ஜிம்பாப்வே சரிவைத் தொடங்கி வைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES விக்கெட் சரிவு அதன்பின் சீரான இடைவெளியில் ஜிம்பாப்பே பேட்டர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். ஷிவம்துபே தான் வீசிய 13வது ஓவரில் மேயர்ஸ்(34) விக்கெட்டையும், 15-வது ஓவரில் கேம்பெல்(4) விக்கெட்டையும் வீழ்த்தினார். சிக்கந்தர் ராசா 4 ரன்னில் துபேயால் ரன் அவுட் செய்யப்பட, ஜிம்பாப்வே அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கடைசி நேரத்தில் பராஸ் அக்ரம், 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை அடித்து உள்நாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, 27 ரன்களில் முகேஷ் வீசிய 19-வது ஓவரில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நகரவா டக்அவுட்டில் ஆட்டமிழக்கவே ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகேஷ் குமார் 3.3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES சாதித்த இளம் இந்திய அணி டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில், பல வீரர்களுக்கு இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தத் தொடரில் முற்றிலும் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் கொண்ட இந்திய அணியை களமிறங்கியது. கேப்டன் கில் 14 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்திய அணியில் 2 வீரர்கள் மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள் மற்ற அனைத்து வீரர்களும் 30 வயதுக்குள்ளாக இருக்கும் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தபின் கடும் விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீண்டு தங்களை தயார் செய்து தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவியது டி20 தொடரை வென்றது குறித்து கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “இந்த கேப்டன் பொறுப்பு என்னிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொணர்ந்தது. இந்த கேப்டன் பதவியை ரசித்துச் செய்தேன். முதல் போட்டியில் தோற்றவுடன் எனக்கு அழுத்தம் இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை கணிக்காமல் விளையாடிவிட்டோம். ஆனால், அதன்பின் அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேறிய அடுத்தடுத்த வெற்றிகள் உதவியது.” என்றார். மேலும், “இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். இதனால் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு எளிதாக அவர்களை அணுக எனக்கு பெரிதும் உதவியது. இதுபோன்ற பலதிறமையைான வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் அனுபவம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ரோஹித், பாண்டியா, கோலி ஆகியோர் திறமையானவர்கள். இவர்களிடம் இருந்து ஏராளமான திறமைகளை, அனுபவங்களைப் நான் பெற்றுள்ளேன். குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் அதிக போட்டிகளை விளையாடிய அனுபவம் எனக்கு உதவியது” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckrgyljd7j0o
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்டன் டிரெனான் பதவி, பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லூசியானாவில் காணாமல் போன ஒரு வயது குழந்தை, பரபரப்பான நெடுஞ்சாலையோர புல்வெளியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. “இரண்டு நாட்கள் தன்னந்தனியாக இருந்த அக்குழந்தை தண்ணீர், உணவு இன்றி உயிர் பிழைத்திருப்பது ஓர் அதிசயம்” என, சட்ட அமலாக்க அதிகாரி கேரி கெலரி பிபிசியிடம் தெரிவித்தார். கடந்த 8ஆம் தேதி அக்குழந்தையின் நான்கு வயது சகோதரன் அருகிலுள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதிலிருந்து காவல்துறை அக்குழந்தையை தேடிவந்தது. அதேநாளில், காவல்துறையால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை, உள்ளூர் ஊடகங்களில் புயலை கிளப்பியது. இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மைல் தொலைவில் மிசிசிப்பி மாகாணத்தில் அக்குழந்தையின் தாய் ஆலியா ஜாக் கைது செய்யப்பட்டார். மிசிசிப்பியில் உள்ள மெரிடியனில் சிறையில் உள்ள ஆலியா ஜாக், தன் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்காதது தொடர்பான குற்றச்சாட்டுக்காக லூசியானாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். இதுதொடர்பாக கூடுதல் வழக்குகள் சேர்க்கப்படலாம் என, சட்ட அமலாக்க அதிகாரி கேரி கெலரி தெரிவித்தார். நெடுஞ்சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த புதன் கிழமை குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூசியானாவின் பேட்டன் ரூஜில் உள்ள இண்டர்ஸ்டேட் 10-ன் தோற்றம். "உடல் முழுவதும் காயங்கள்" “நாங்கள் அக்குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கிறோம்,” என கேரி கெலரி கூறுகிறார். “குழந்தையின் உடல் முழுவதும் பூச்சி கடித்த காயங்கள் இருந்தன, ஆனால் அக்குழந்தை நல்ல மனநிலையில் இருந்தது.” குழந்தையை உயிருடன் மீட்பதில் தங்களுக்கு வானிலையும் சாதகமாக இருந்ததாக அவர் கூறுகிறார். லூசியானாவில் அடிக்கடி மோசமான கோடை வெயில் நிலவுவதை குறிப்பிடும் அவர், அன்றைய தினம் “பெரிதளவில் வெயில் இல்லை,” என்கிறார். பட மூலாதாரம்,POLICE படக்குறிப்பு,கைதான குழந்தைகளின் தாய் “பெரில் சூறாவளியின் தாக்கம் காரணமாக, மேகக் கூட்டம் எஞ்சியிருந்ததால், அது குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்திருந்திருக்கலாம். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.” என்று அவர் கூறினார். கடந்த திங்கட்கிழமை, கால்கேசியு சட்ட அமலாக்க அலுவலகத்திற்கு, விண்டன் வெல்கம் மையத்திற்கு அருகேயுள்ள குளத்தில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக அழைப்பு வந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள், அந்த ஒரு வயது குழந்தை மீட்கப்படுவதற்கு வழிவகுத்தது. “இந்த செய்தியை ஊடகங்களிடம் கொண்டு சென்று அதுகுறித்த தகவல்களை பெறுவதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளித்தோம்,” என கெலரி கூறுகிறார். “அதுதான் உண்மையில் நடந்தது.” குழந்தையை கண்டுபிடித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் திங்கட்கிழமை மாலை, ஊடகங்களில் இந்த செய்தியை பார்த்து தன் பேரக்குழந்தைகள் குறித்து கவலை கொண்ட அவர்களுடைய பாட்டி சட்ட முகமை அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தார். இறந்த அந்த நான்கு வயது சிறுவனுக்கு ஒரு தம்பி இருப்பதாக அவர் கூறியதையடுத்து, காணாமல் போன ஒரு வயது குழந்தையை தேடுவதற்கான அறிவிப்புகளை காவல்துறை வெளியிட்டது. அதன்பின் சில மணிநேரம் கழித்து மிசிசிப்பியில் உள்ள ரயில் நிலையத்தில் குழந்தைகளின் தாய் ஜேக்சன் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை காலை, சட்ட அமலாக்க அலுவலகத்தின் கடல்சார் பிரிவு குளத்தில் படகுகள் மூலம் தேடி, அக்குழந்தையின் சகோதரரின் சடலத்தைக் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க நேரப்படி காலை 9 மணியளவில் டிரக் ஓட்டுநர் ஒருவர், டெக்சாஸ்-லூய்ஸியானா எல்லை அருகே, வாய்க்கால் பக்கத்தில் ‘ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருப்பதாக’ தகவல் தெரிவித்தார். நான்கு வயது சிறுவனின் மரணத்திற்கான காரணம் தற்போதைக்கு தெரியவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கெலரி கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கையும் இன்னும் வழங்கப்படவில்லை. https://www.bbc.com/tamil/articles/cn4v7npeq2vo
  18. 14 JUL, 2024 | 09:25 PM (இராஜதுரை ஹஷான்) எவருக்கும் பயமில்லை, கடனில்லை என்று அரசியல் மேடைகளில் குறிப்பிடுபவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை மறந்து விட்டார்கள். தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முயற்சிப்பது பிறிதொரு விளைவுக்கான ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பதுளை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற புதிய கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, தவறான அரசியல் தீர்மானங்களினால் பலவீனமடைந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்றுள்ளது.பாரம்பரியமான சுதந்திரக் கட்சியின் மீது பெரும்பாலான மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.ஆகவே இந்த புதிய கூட்டணியின் இரண்டாவது மாநாட்டின் ஊடாக சகல சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.அனைவரும் புதிய கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும். அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் மீண்டும் உறுதியற்ற அரசாங்கம் தோற்றம் பெற கூடாது என்பதை கருத்திற் கொண்டு சிரேஷ்ட அரசியல்வாதிகளை உள்ளடக்கிய வகையில் பலமான அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டணியை பலப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் குறித்து எமது தீர்மானத்தை அறிவிப்போம். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு மீண்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன.இதுவே ஜனநாயகம்.இதனை வரவேற்கிறேன்.ஆனால் 2022 ஆம் ஆண்டு இவ்வாறான ஜனநாயக சூழல் நாட்டில் காணப்படவில்லை. அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று தற்போது குரல் எழுப்புபவர்வர்கள் 2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.தனி மனிதனாக இருந்து ரணில் விக்கிரமசிங்க நாட்டையும்இநாட்டு மக்களையும் பொறுப்பேற்றார்.நெருக்கடியான சூழலில் நாங்கள் எமது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.எமது தீர்மானம் இன்று வெற்றிப் பெற்றுள்ளது. எவருக்கும் கடனில்லைஇபயமில்லை என்று நாட்டை கடனாளியாக்கியவர்கள் அரசியல் மேடைகளில் குறிப்பிடுகிறார்கள்.இவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடியதை மறந்து விட்டார்கள்.யார் அச்சமடைந்து தப்பிச் சென்றதுஇயார் நாட்டை கடனாளியாக்கியது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். பலம்வாய்ந்த அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.2019 ஆம் ஆண்டு அரசியல் அனுபவமற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கியதால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடப்படுகிறது.இவ்வாறான நிலையில் இந்த கட்சி மீண்டும் அதே தவறை செய்ய முயற்சிக்கிறது. தேசிய பட்டியல் உறுப்பினராக வியாபாரியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறானவர்களினால் ஒருபோதும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.ஆகவே எமது அரசியல் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/188459
  19. வைத்தியர் அர்ச்சுனாவிற்கு இருபது வருடங்கள் சிறை என்று மிரட்டல்! வெளிவராத மேலும் பல உண்மைகள் கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சிற்கு நான் சென்றபோது அங்கு என்னுடைய தொலைபேசிகள் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. இவை மீண்டும் எனக்கு போராட்ட வரலாற்றையே நினைவுப்படுத்துகின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்தார். சிலநேரம் நான் இவை அனைத்தையும் பதிவு செய்கின்றேன் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கூறினார். லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் நான் இருந்து அங்கிருக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது இருந்த சூழ்நிலைக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார் மேலும், மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வது குறித்தும் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் வைத்தியர் அர்ச்சுனா இதன்போது தெளிவுபடுத்தினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், மீண்டும் சாவகச்சேரிக்கு விரையும் வைத்தியர் Archchuna - மக்கள் ஆதரவு கிடைக்குமா?
  20. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் பத்தே நாளில் என்கவுன்ட்டர் - கேள்விகளும் சந்தேகங்களும் பட மூலாதாரம்,POLICE படக்குறிப்பு,திருவேங்கடம் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 47 நிமிடங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரை அழைத்துச் சென்ற போது, தப்ப முயன்ற அவர் தாக்கியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையான பத்தே நாட்களில் அந்த வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. அதிகாலையில் அழைத்துச் சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அவரை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனரா என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. அதேசமயம், “குற்றமே செய்திருந்தாலும் மனித உயிரை பறிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இல்லை” என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல்களை எழுப்புகின்றனர். என்ன நடந்தது? சுடப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB படக்குறிப்பு,ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி தலைநகர் சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இக்கொலைக்குக் கண்டனத்தை பதிவு செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆற்காடு சுரேஷ் என்பவர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளது என ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தேகித்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய, மணலியில் திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அதிகாலையில் அவரை அழைத்துச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். அப்போது திருவேங்கடம் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் திருவேங்கடம் போலீசாரை சுட முயன்றதாகவும் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். காவல்துறை கூறுவது என்ன? பட மூலாதாரம்,POLICE இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். பாதுகாவலராக சென்ற காவலர்கள் உடனடியாக அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை.” புழல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்த போது தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி படக்குறிப்பு,திருவேங்கடம் தப்பியோட முயற்சித்ததாக போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “சரணடைந்த திருவேங்கடத்தை வேகவேகமாக அதிகாலையில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அவரை அழைத்து சென்றபோது கைவிலங்கிட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது" என தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் வலைதளத்தில், “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது” என தெரிவித்துள்ளார். அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சியா? “இதுபோல் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் தான் அதனை பறிமுதல் செய்வார்கள். தற்காப்புக்காக முதலில் அவருடைய முட்டிக்குக் கீழ் சுடப்பட்டதா என்பதும் தெரியவில்லை” என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிசெல்வன். சட்டம் - ஒழுங்கு குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்த இந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறுகிறார். படக்குறிப்பு,அதிகாலையில் திருவேங்கடம் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர். அதிகாலையில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? திருவேங்கடத்தை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அதிகாலையில் அழைத்து சென்றதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. “குற்றம்சாட்டப்பட்டவர்களை போதிய வெளிச்சம் உள்ள நேரத்தில் அழைத்து செல்லவேண்டும். இதற்கான நேர வரையறை இல்லை என்றாலும் அதிகாலையில் செல்ல வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுகிறது” என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன். போலீஸ் காவலில் உள்ளவர்களின் உயிருக்கும் உடமைக்கும் முழுமையான பொறுப்பு காவல்துறை தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். போலீஸ் காவலில் உள்ளவரை சுட்டது ஏன்? படக்குறிப்பு,"சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும்?" இந்த கொலை வழக்கில் தானாக சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதாக, ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம் கூறுகிறார். போலீஸ் காவலில் உள்ளவரை சுடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அவர் குறிப்பிடுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட போது, ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் கூறியிருந்தார். காவல்துறை உயரதிகாரிகளின் இத்தகைய பேச்சுகளை சுட்டிக்காட்டுகிறார் மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம். போதிய தகவல்களை வழங்காதது ஏன்? “என்கவுன்ட்டர்” நடந்ததிலிருந்து திருவேங்கடத்தின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள தான் முயற்சிப்பதாக ஆசீர்வாதம் கூறுகிறார். “இதுவரை அவர்களை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை, இப்போதுவரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை” என்கிறார் அவர். திருவேங்கடத்திடம் ஆயுதம் வந்தது எப்படி, போலீசார் சரியாக பரிசோதிக்கவில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுவதாக, ஆசீர்வாதம் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகங்களை முன்வைக்கின்றனர். திருவேங்கடம் சுட்டதாக கூறப்படும் காவலர் யார், திருவேங்கடத்தை சுட்ட காவல் ஆய்வாளர் யார் என்பதில் வெளிப்படையான தகவல்கள் செய்திக்குறிப்பில் இல்லை என்றும் ஆசீர்வாதம் கூறுகிறார். இனி என்ன செய்ய வேண்டும்? படக்குறிப்பு,"கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்" இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து அரசு சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, குடும்பத்தார் திருவேங்கடத்தின் உடலை அடையாளம் காண்பதற்கு அனுமதிக்க வேண்டும். இரு மருத்துவர்களின் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உடலை புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதுகுறித்த புகைப்படம், வீடியோக்களை குடும்பத்திடம் வழங்க வேண்டும். “நடுநிலையான குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ். “முழு விஷயமும் தெரியாத வரையில் இது கொலையா அல்லது தற்காப்புக்காக செய்யப்பட்டதா என்பதை சொல்ல முடியாது. குற்றம் செய்திருந்தால் கைது செய்வதற்கும் அவர்களுக்கு கூடுதல் தண்டனைகள் பெற்று தருவதற்கும் சட்டத்தில் வாய்ப்புண்டு. ஆனால், இப்படி என்கவுன்ட்டர் செய்வது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அவர். இந்த வழக்கை சந்தேக மரணம் என்று பதிவு செய்யாமல், பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது போன்று கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன். காவல்துறை மீது எழும் கேள்விகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “காவலர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதையை கழிக்க செல்கிறோம் என்று கூறினால், கைவிலங்கை அகற்ற வேண்டிய நிலைதான் ஏற்படும். என்கவுன்ட்டர் தவறு என இப்போது சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையில் இதற்கான காரணத்தை சொல்லும்போதுதான் அதை ஏற்பதா, இல்லையா என்பது தெரியவரும்” என்கிறார். தற்காப்புக்காக முதலில் முட்டிக்குக் கீழ் சுடுவதற்கான வாய்ப்பு இருக்காது, தப்பி செல்வதற்காக ஒருவர் ஓடும்போது, குறி தப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c80xrg272dro
  21. 14 JUL, 2024 | 04:44 PM (ஆர்.ராம்) கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பதற்கு அவகாசமில்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அதாவது, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ள நிலையில் அவரால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது குறித்து சிந்திப்பதற்கான அவகாசமற்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் நாடு பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த பின்னரே தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சூழல்கள் ஏற்படும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் நாட்டின் அரசியலமைப்பில் பொருளாதாரத்தினை மீட்டதன் பின்னர் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தினை காரணம் காண்பித்து தன்னுடைய அரசியல் அதிகாரத்தினை வலுப்படுத்திக்கொள்வதற்கு முனைந்து வந்தார். தற்போதும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தார். முன்னதாக தன்னுடைய கட்சியின் செயலாளரைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊடாகவும் முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது நீதித்துறையும் சட்டவாக்கத்துறையும் (எதிர்க்கட்சிகள்) மிகவும் உறுதியாக இருப்பதன் காரணத்தினால் அவருக்கு அடுத்தகட்டம் சிந்திப்பதற்கு இக்கட்டானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதாவது, கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் எவ்வாறு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிந்திப்பதற்கு கால அவகாசம் இருக்கவில்லையோ அதேபோன்று தான் இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து நகர்வுகளைச் செய்வதற்கு சிந்திப்பதற்கான கால அவகாசம் போதாதுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி ரணில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காரணம், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையீனமும் கள யதார்த்தமுமே ஆகும். சஜித்துக்கும் அநுரவுக்கும் இடையிலான போட்டிதான் இம்முறை தேர்தலில் காணப்படப்போகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித், அநுர ஆகியோருக்கும் இடையில் பரம்பரை ரீதியாக இடைவெளியும் செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே அவரின் நகர்வுகள் அடுத்தகட்டமாக நேர்மறையான விளைவுகளை தரப்போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/188446
  22. 2024இல் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப் பரிசில்” திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. க.பொ.த. உயர்தரம் கற்கும் 6,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6,000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்துக்காக ரூ.824 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்று முதல் 11 வரையான 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.3,000 வீதம் 12 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கவிருப்பதோடு இதற்காக ரூ.3,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரிவெனா மற்றும் பிக்கு கல்வி நிறுவனங்களில் சாதாரண தரம் கற்கும் மாணவருக்கான புலமைப் பரிசில் திட்டத்துக்காக ரூ.288 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பிரிவில் கற்கும் பிக்கு மாணவருக்கான புலமைப்பரிசில் திட்டத்துக்காக ரூ.720 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் ஜனாதிபதி நிதியமும் இணைந்து இந்த புலமைப் பரிசில்களை வழங்குகின்றன. அதன்படி தற்போது செயற்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக இந்தத் திட்டத்தில் ரூ.5,000 மில்லியனுக்கும் அதிகமான தொகை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி, தற்பொழுது க.பொ.த உயர்தர மாணவர் மற்றும் தரம் ஒன்று முதல் 11 வரையான மாணவருக்காக இரு புலமைப்பரிசில் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மட்டத்தில் புலமைப் பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. புலமைப் பரிசில் குறித்த விபரங்களை வலயக் கல்வி அலுவலகங்களில் பெற முடியும். எனவே, இதுவரை புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் இருக்குமானால் விரைவாக விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது. https://thinakkural.lk/article/306027
  23. டிரம்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயது இளைஞரா? என்ன காரணம்? அமெரிக்க புலனாய்வு அமைப்பு புதிய தகவல் பட மூலாதாரம்,CBS NEWS படக்குறிப்பு,தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி செய்தி 14 ஜூலை 2024, 15:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ என்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டிஎன்ஏவைப் பயன்படுத்தி அடையாளத்தை கண்டுபிடித்த அதிகாரிகள் எஃப்.பி.ஐ. அமைப்பின் அறிக்கையில், முன்னாள் அதிபர் மீதான படுகொலை முயற்சியில் `சம்பந்தப்பட்ட’ நபரின் பெயர் க்ரூக்ஸ் என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது. அந்த நபர் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை என்பதால் புலனாய்வு அதிகாரிகள் அவரை அடையாளம் காண டி.என்.ஏ.வைப் பயன்படுத்தினர் என்றும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவ்யூ செய்தித்தாள் கூற்றின்படி, அவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி, டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70கிமீ (43 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. க்ரூக்ஸ் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகத் தெரிகிறது. அமெரிக்க ஊடகங்களின்படி, க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை மாநில வாக்காளர் பதிவுகள் காட்டுகின்றன. அவர் 2021 இல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ActBlue’ அமைப்புக்கு $15 நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,DOUG MILLSTHE NEW YORK TIMESREDUXEYEVINE படக்குறிப்பு,டிரம்பின் காதுகளை உரசிச் சென்ற தோட்டா அவரின் நோக்கம் என்ன? க்ரூக்ஸின் நோக்கம் குறித்தும், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். "அவரின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை" என்று சனிக்கிழமை இரவு ஒரு மாநாட்டில் எஃப்.பி.ஐ பிட்ஸ்பர்க் சிறப்பு முகவரான கெவின் ரோஜெக் கூறினார். என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணையை முழுமையாக முடிக்க பல மாதங்கள் வரை ஆகலாம், மேலும் க்ரூக்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய புலனாய்வு அதிகாரிகள் அயராது உழைப்பார்கள் என்றும் ரோஜெக் கூறினார். சிஎன்என் ஊடகத்திடம் பேசிய க்ரூக்ஸின் தந்தை, மேத்யூ க்ரூக்ஸ், "என்ன நடக்கிறது" என்பதை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதாக அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். தனது மகனைப் பற்றி பேசுவதற்கு முன் "நான் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேசும் வரை காத்திருப்பேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். க்ரூக்ஸ் வசித்த வீட்டிற்கு செல்லும் சாலையை போலீஸார் சீல் வைத்துவிட்டதடாக சிபிஎஸ் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் தங்களை வெளியேற்றியதாக பக்கத்து வீட்டுக்காரர் சிபிஎஸ்ஸிடம் கூறியுள்ளார். க்ரூக்ஸின் வீட்டைச் சுற்றிலும் விசாரணை நடைபெற்று வருவதாக பெத்தேல் பார்க் போலீசார் தெரிவித்தனர். க்ரூக்ஸ் வேறு யாரையாவது தாக்கினாரா? பட மூலாதாரம்,TMZ இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மூன்று பேரும் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த ஆண்கள் என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் "என் மீது சுடப்பட்ட தோட்டா என் வலது காதின் மேல் பகுதியை துளைத்தது" என்று பதிவிட்டிந்தார். “ஏதோ தவறு நடப்பதாக நான் உடனடியாக உணர்ந்தேன். அப்போது என் காதருகில் உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் ரத்தம் வடிவது தெளிவாகத் தெரிந்தது. குடியரசுக் கட்சியின் தேசியக் குழு (RNC) இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, டிரம்ப் நலமாக இருக்கிறார், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. ட்ரம்பை 200 மீட்டர் அளவுக்கு நெருங்கி துப்பாக்கியால் சுட்ட நபர் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்5 மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்பிடம் இருந்து எவ்வளவு தூரத்தில் க்ரூக்ஸ் நின்றிருந்தார்? டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு, ஒரு கட்டிடத்தின் கூரை (க்ரூக்ஸ் என்று கூறப்படும் நபர்) மீது ஒரு நபர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். பிபிசி வெரிஃபை, சம்பவம் நடந்த இடத்தின் காட்சிகளை ஆய்வு செய்து, டிரம்புக்கு 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி (flat warehouse) கட்டடத்தின் மேல் இருந்து துப்பாக்கி வைத்திருந்த நபர் தூப்பாக்கிச்சூடு நடத்தியதை உறுதி செய்தது. `TMZ’ வெளியிட்ட வீடியோ காட்சிகள், துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தைக் காட்டுகின்றன. டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர் "ஏஆர்-ஸ்டைல் துப்பாக்கி" (AR-style rifle) பயன்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான `சிபிஎஸ் நியூஸ்’ ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நபர் எந்த வகையான துப்பாக்கியைப் பயன்படுத்தினார், எத்தனை முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதை பற்றி உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று எஃப்.பி.ஐ. கூறுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயுதமேந்திய அதிகாரிகள் கட்டடத்தின் மேற்கூரையில் ஒரு சடலத்தை நோக்கி செல்வதை வீடியோ காட்டுகிறது. எஃப்.பி.ஐ. கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS தேர்தல் பிரசார கூட்டத்தின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. (FBI) தெரிவித்துள்ளது. பென்சில்வேனியாவில் பட்லர் என்ற இடத்தில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இறந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். 20 வயது இளைஞன், ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், முன்னாள் அதிபரின் படுகொலை முயற்சியில் க்ரூக்ஸ் "சம்பந்தப்பட்டவர்" என்றும் அதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c51yqxyw741o
  24. 14 JUL, 2024 | 12:24 PM ஆர்.ராம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் உங்களுடைய நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை மையப்படுத்தி இனப்பிரச்சினைக்காள தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினை இந்தியா அழுத்தமளிக்க வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரியுள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில், இந்த சந்திப்பில் ஜனநாய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், வேந்தன், சிவநேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ் பொதுவேட்பாளர் இதன்போது சமகாலத்தில் நிகழ்கின்ற விடயங்கள் பற்றிய உயர்ஸ்தானிகரின் கேள்வியோடு கலந்துரையாடல் ஆரம்பமானது. அவ்வினாவுக்கு பதிலளித்த கூட்டணியின் அங்கத்தவர்கள், தென்னிலங்கையின் வேட்பாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் இம்முறை தமிழ் மக்களின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போகின்றோம். மூன்று பேர் தென்னிலங்கையில் போட்டியிடுகின்றபோது, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். அதனை தென்னிலங்கையில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ள ரணில், சஜித், அநுர ஆகியோர் புரிந்துகொண்டுள்ளார்கள். அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அவர்களுக்கு தமிழ்த் தரப்பு நோக்கி தற்போது வருகை தரவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றனர். மூவருடன் பேசுங்கள் அதன்போது, உயர்ஸ்தானிகர், தென்னிலங்கையில் மூன்று வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதால் நீங்கள் (ஜ.த.தே.கூ) அவர்களுடன் உங்களது நிபந்தனைகளை முன்வைத்து பேசுங்கள் என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த கூட்டணியினர், அநுரகுமார இப்போது மாகாண சபைகள் பற்றிப் பேசினாலும் அவர்கள் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் கூட தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஏலவே அவர்கள்தான் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். ஆகவே அவர்களை ஆதரிப்பது முரணான நிலைப்பாடாகவே காணப்படும். அடுத்து சஜித் பிரேமதாச இதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக கரிசனைகளைக் கொள்ளாதிருந்த நிலையில் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறுகின்றார். அது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத வகையில் மாகாண சபை முறைமையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு தயாரில்லை. மறைந்த சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உங்கள் முன்னிலையில் கூட அவர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபை முறைமை அமுலாக்கம் குறித்தே உரையாற்றியிருந்தார். ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை. அதேநேரம், அவர்களும் தென்னிலங்கையில் தங்களது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலைமையிலேயே உள்ளனர். மேலும், தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தர் மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் தான் பங்கேற்பது பொருத்தமானது. ஆனால் அதற்குரிய நிலைமைகளும் பூரணமான அளவில் சாதகமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவுக்கு சந்தர்ப்பம் அத்துடன், எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அவ்விதமான சூழலில் இந்தியாவும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களின் தீர்வு விடயத்தில் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் எதனையும் முன்னெடுத்ததாக இல்லை. ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களை இந்தியாவினால் வழங்க முடியும். ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமானது இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்றும் கூட்டணியினர் குறிப்பிட்டனர். முதலீடுகள் மற்றும் இதர திட்டங்கள் இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு, கிழக்கில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார். விசேடமாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக ஆழப்படுத்தல் மற்றும் நிர்மாணங்கள், பருத்தித்துறை மீன்பிடி துறைமுக நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சம்பந்தமாகவும் வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். மேற்படி தகவல்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188411
  25. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது. ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க அதிகாரம் உள்ளது. https://thinakkural.lk/article/306007

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.