Everything posted by ஏராளன்
-
இலங்கை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா? தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏன்?
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக அரசியல் யாப்பில் மாற்றம்! ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/305671
-
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் மருத்துவர் உட்பட 7 பேர் கைது
10 JUL, 2024 | 11:31 AM புதுடெல்லி: சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக போலீஸார் இது தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் அமித் கோயல் கூறும்போது, “சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மூளையாக செயல்பட்டுள்ளார். உடல் உறுப்பு தானம்செய்தவர்களும் தானம் பெற்றவர்களும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 மருத்துவமனைகளுடன் தொடர்பு: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் 2 அல்லது 3 மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். உறுப்பு தானம் செய்தவரும் பெற்றவரும் ரத்த சொந்தங்கள் இல்லை என தெரிந்திருந்தும் அந்த மருத்துவர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால், இந்த மோசடியில் அவருக்கும் தொடர்பு உள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார். இந்தியாவின் மனித உடல் உறுப்பு மாற்று சட்டத்தின்படி, பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே உடல் உறுப்புகளை தானம் வழங்கவோ, பெறவோ முடியும். இந்தியாவில் வசிப்போர் தனதுரத்த சொந்தம் அல்லாத வெளிநாட்டவருக்கு உறுப்பு தானம் வழங்கமுடியாது. இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பாக டெல்லியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188107
-
பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 10 ஜூலை 2024, 05:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியின் மேற்பகுதி மற்றும் விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட, பூமியின் மையப்பகுதியை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது என்பது அறிவியலின் நீங்காத மர்மமாகவே இருக்கிறது. காரணம் இந்த பூமியின் மையப்பகுதி என்பது சுமார் 5000 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இருப்பது. இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலிஃபோர்னியா பல்கலைகழகம் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு, பூமியின் மையப்பகுதியானது பூமியின் மேற்பகுதியுடன் ஒப்பிடும்போது மெதுவாக அல்லது எதிர்திசையில் சுழல்கிறது எனக் கண்டறிந்துள்ளனர். கடந்த 2010 முதல், 14 ஆண்டுகளாக மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என விஞ்ஞானிகள் குழு கூறுகின்றது. ஆனால் பூமியில் 5000 கிமீ துளையிட்டு, நேரடியாக மையப்பகுதியை அணுகாமல் இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தது எப்படி? பூமியின் மையப்பகுதி எதிர்திசையில் சுழல்வதால் பூமியின் மேற்பகுதியில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? பூமியின் மூன்று அடுக்குகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளை கருவாகவும் மற்றும் மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் நாம் புரிந்துகொள்ளலாம் பூமியின் அமைப்பு என்பது பூமியின் மேற்பரப்பு பகுதி (Crust), மேண்டில் (Mantle - மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட குளிர்ந்த பாறைகளினால் ஆன திடப்பகுதி) மற்றும் மையப்பகுதி (core) என்னும் மூன்று வெவ்வேறு அடுக்குகளினால் அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த Core எனும் மையப்பகுதி குறித்து இதுவரை பல்வேறு அனுமானங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பல்வேறு கற்பனை கதைகளும் உலாவுகின்றன. 1864இல் வெளியான 'ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்' என்ற நாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களும் மிகவும் பிரபலமானவை. இதை இன்னும் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால் பூமியை நாம் முட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளை கருவாகவும் மற்றும் மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் நாம் புரிந்துகொள்ளலாம். பூமியின் உள் மையப்பகுதியானது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருண்டையான வடிவில் காணப்படுகிறது. அதனுடைய ஆரம் (radius) சுமார் 1221 கிமீ தொலைவிற்கு இருக்கிறது. இதன் வெப்பநிலை 5400 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளது. இது கிட்டதட்ட சூரியனுக்கு நிகரான வெப்பநிலை (5700 டிகிரி) என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் இந்த மையப்பகுதியானது பூமியின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கிறது என்றும், ஒருவகையான உலோக திரவங்களால் இது பூமியில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது எனவும் கூறப்பட்டது. அதாவது பூமிக்கு உள்ளே இது தனித்து சுற்றுகிறது எனவும் இதற்கும் பூமியின் மற்ற பகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வு முடிவுகளின் மூலம், ஏறக்குறைய 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேண்டிலை விட சற்று மெதுவாக மையப்பகுதி நகர்வதால், கிரகத்தின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது மையப்பகுதி எதிர்திசையில் சுழல்வதாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பூமியைத் துளையிடாமலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது எப்படி? நிலநடுக்கத்தின் போது ஏற்படும் நில அதிர்வு அலைகள் (seismic waves) மூலமாக பூமியை துளையிடாமலேயே பூமியின் மையப்பகுதி குறித்து அறிந்துகொள்ள முடியும். பூமியின் மேற்பரப்பில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது இந்த நில அதிர்ச்சி அலைகளின் ஆற்றல்கள் பூமியின் உள் மையப்பகுதி வரை கடத்தப்பட்டு மீண்டும் மேற்பரப்பிற்கு பாய்ந்து வருகிறது. அப்படி பூமியின் உட்பகுதி வரை சென்று மேற்பரப்பிற்கு திரும்ப வரும் இந்த நில அதிர்ச்சி அலைகளுடைய ஆற்றல்களின் வழித் தடங்களை விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்தது. இதற்காக, 1991 மற்றும் 2023க்கு இடையில், தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி (அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகள்) பதிவு செய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களில் இருந்து கிடைத்த நில அதிர்வுத் தரவுகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்தனர். அது மட்டுமல்லாது, 1971 மற்றும் 1974க்கு இடையில் நடந்த சோவியத் அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் பயன்படுத்தினர். மையப்பகுதி எதிர்திசையில் சுழல்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உண்மையில் எதிர்த்திசையில் பூமியின் மையப்பகுதி சுழல்கிறது என்று சொல்லிவிட முடியாது என்கிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER- மொஹாலி) பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன், "உண்மையில் எதிர்த்திசையில் பூமியின் மையப்பகுதி சுழல்கிறது என்று சொல்லிவிட முடியாது. இதை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்" என்று கூறியவர் தொடர்ந்து பேசினார். "நீங்கள் ஒரு காரில் 100 கிமீ வேகத்தில் செல்கிறீர்கள், அருகில் உங்கள் நண்பர் ஒருவர் அவரது காரில் அதே 100 கிமீ வேகத்தில் செல்கிறார், இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போலத் தோன்றும். இப்போது திடீரென அந்த நண்பர் 20 கிமீ வேகத்தைக் குறைத்து 80 கிமீ வேகத்தில் பயணித்தால், உங்கள் இடத்திலிருந்து பார்க்கும்போது அவர் சாலையில் பின்னோக்கி செல்வது போலத் தோன்றும். காரணம் நீங்கள் அதே 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறீர்கள் அல்லவா? இதேபோல தான் பூமியின் மேற்பரப்பு சுற்று வேகத்துடன் ஒப்பிடும்போது மையப்பகுதியின் வேகம் குறைவதால், அது எதிர்திசையில் பயணிப்பது போல கருதப்படுகிறது." என்கிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன். படக்குறிப்பு,இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER- மொஹாலி) பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன் இந்த ஆய்வு முடிவுகள் கூட அனுமானிக்கப்பட்டவை தான் என்கிறார் அவர். "பூமியின் மையப்பகுதி குறித்து இன்னும் நாம் முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை. ஆய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்த 'core' எனப்படும் மையப்பகுதியின் வடிவம் கூட தரவுகளின் மூலம் அனுமானிக்கப்பட்டது தான். காரணம் 5000 கிமீ என்ற ஆழத்தை நம்மால் அடைய முடியாது. நில அதிர்வுத் தரவுகள் மூலம் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இது எதிர்காலத்தில் மாறவும் கூடும்" என்று கூறினார். விளைவுகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நில அதிர்வுத் தரவுகள் மூலம் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். பூமியின் மையப்பகுதியின் சுற்றுவேகம் குறைவதால் காந்த மண்டலத்தில் மாற்றம் ஏற்படும் என்கிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன். "இந்த மையப்பகுதி (Core) என்பது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருவானது. எனவே அதன் சுற்றுவேகத்தில் பாதிப்பு ஏற்படும் போது, அது பூமியின் மேற்பரப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன." என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாற்றங்களுக்கு காந்த மண்டலம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அண்டத்தில் பூமி தனது பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும்போது, பூமிக்குள் உலோகங்களால் ஆன அதன் மையப்பகுதியும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இயக்கங்களினால் பூமியை சுற்றி ஒரு காந்த சக்தி உருவாகிறது. இதுவே காந்த மண்டலம்" என்று கூறினார். இந்த காந்த மண்டலத்தின் கதிர்வீச்சுகள் சூரியனிலிருந்து பூமியை காக்கும் அரணாக திகழ்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த காந்த மண்டலமானது பூமி தனது பாதையில் சுற்றி வரும் நேர அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நமது நாளின் நீளங்களை தீர்மானிப்பதிலும் காந்தமண்டலம் பங்கு வகிக்கிறது. "ஆனால், இது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆயிரத்தில் ஒரு பங்கு பாதிப்பு என்று கூட சொல்லலாம். ஒருநாளின் காலநேரத்தில் மைக்ரோ நொடி மாற்றத்தை இது ஏற்படுத்தக்கூடும். இது இப்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தான். ஒருவேளை இந்த மையப்பகுதியின் சுற்றுவேகம் என்பது மேலும் பலவற்றுக்கு காரணமாக இருக்கலாம். இன்னும் பல வருங்கால ஆராய்ச்சிகள் மூலம் தான் நாம் அதைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று கூறுகிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன். https://www.bbc.com/tamil/articles/cxw2epy47w4o
-
வடக்கு, கிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? - சஜித் பிரேமதாச கேள்வி
Published By: VISHNU 10 JUL, 2024 | 02:58 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தேன். அங்கே வடக்கு மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதுடன் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இந்த வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? அவர்கள் தொடர்பான வேலைத்திட்டம் என்ன? அரசாங்கத்தின் கொள்கை என்ன? அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுமா? அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏன் எங்களை நியமிக்க முடியவில்லை என்று கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை அறிக்கையை சபையில் முன்வைக்கின்றேன். இதேவேளை நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. எமது இலவச கல்வியை பெற்று பின்னர் வேலையில்லா வரிசைக்குள்ளா அவர்கள் செல்லப் போகின்றனர்?. இதனால் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்வு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/188092
-
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 10 JUL, 2024 | 09:32 AM 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்திற்கு பின்னர் எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான காலம் பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/188096
-
குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
எங்கட பக்கம் இறந்தவர் சாப்பிட்ட, குடித்த அனைத்தையும் இரவில் படைப்பார்கள். சைவம் உண்டவர் என்றால் சைவ உணவுகள், அசைவம் உண்டவர் என்றால் அசைவ உணவுகள்.
-
நியாண்டர்தால் மனிதர்களுக்கு இரக்க குணம் இருந்ததா? 40,000 ஆண்டுகள் முன் வாழ்ந்த சிறுமியின் காது எலும்பு சொல்வது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜூலை 2024, 12:51 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு சமூகத்தில் வாழ்வதும், மற்றவர்களைப் பராமரிப்பதும் நம் இனம் வாழ்வதற்கு மட்டும் வழிவகை செய்யவில்லை. பல நூறு கோடி ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையவும் உதவியுள்ளன. பல ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு அளவில் இதை நம்பிவந்திருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் அரிய புதைபடிவமான ஒரு சிறிய எலும்பு மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன. 1989-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வேலன்சியா நகரில் அமைந்திருக்கும் கோவா நேக்ரா குகையில், புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் 5 செ.மீ அளவு நீளமான ஓர் எலும்புத் துண்டைக் கண்டெடுத்தனர். நியாண்டர்தால் காலத்தைச் சேர்ந்த 6 வயது மிக்க நபர் ஒருவரின் காது எலும்பு அது. இந்த எலும்பு ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது நிரூபிக்கப்பட முடியாத சூழலில், ஆய்வுக்குழுவினர் அது 'டீனா’-வின் எலும்பு என்று குறிப்பிடுகின்றனர். நியாண்டர்தால் மனிதர்களின் காது எலும்பு கிடைப்பது அரிய நிகழ்வாகும். பொதுவாக மண்டையோடு, பல் அல்லது கால் எலும்புகள் மட்டுமே கிடைக்கும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் மனித படிமங்கள் தொல்லியல்சார் முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தாலும், இந்தக் காது பகுதி மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,MERCEDES CONDE VALVERDE/UNIVERSITY OF ALCALÁ படக்குறிப்பு,இந்த எலும்பு வழக்கத்திற்கு மாறான அடர்த்தியைக் கொண்டுள்ளது. காது எலும்பில் இருந்தது என்ன? சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிவைச் சந்தித்த நியாண்டர்தால் என்ற மனித இனம் சில நூறாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் வாழ்ந்தது. இவர்கள் நவீன மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். ஹோமோ சேப்பியன்ஸ் (நவீன மனிதர்கள்) மற்றும் நியாண்டர்தால்கள் (ஹோமோ நியாண்டர்தலென்சிஸ்) மனித இனத்தின் தனித்துவமான இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்களாகப் பிறந்து நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். குகையில் கண்டெடுக்கப்பட்ட எலும்பானது அப்பர் ப்ளீஸ்டோசீன் (Upper Pleistocene) காலத்தைச் சேர்ந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அதன் காலம் 1.2 லட்சம் ஆண்டுகள் முதல் 40,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது. "இந்த எலும்பில் நடத்தப்பட்ட சி.டி.ஸ்கேன் முடிவுகள் ஆச்சரியமான பல தகவல்களை வழங்கியுள்ளது. நியாண்டர்தால் காலத்து காது எலும்பில் ஏற்பட்ட பிறப்புக் காயங்கள் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) நோயுடன் ஒத்துப்போகின்றன. வாழ்நாள் முழுவதும் உடல் நிலை சரியில்லாத நபராக வாழ்ந்திருப்பார் அவர்," என்று பேராசிரியர் எமெரிடஸ் வலேண்டின் வில்லவெர்டே போனில்லா கூறுகிறார். இவர் வேலன்சியா பல்கலைக்கழத்தில் வரலாற்றுக்கு முந்தைய, தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்றுத் துறையில் பணியாற்றி வருகிறார். கோவா நேக்ரா அகழ்வாராய்ச்சியை வழி நடத்தியவர் அவர். பட மூலாதாரம்,BBC STUDIOS/JAMIE SIMONDS படக்குறிப்பு,நியாண்டர்தால் மனிதர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவர்கள், ஆனால், பல வழிகளில் நம்மை ஒத்திருக்கின்றனர். டீனாவின் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் டீனாவின் காது எலும்பில் காணப்படும் காயங்கள், அவருக்கு ஓடிடிஸ் (otitis -காது வீக்கம்), காது கேளாமை, நடப்பது மற்றும் அவரை சீராக வைப்பதில் பிரச்னை இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் வில்லவெர்டே. டீனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் பிரச்னைகளைச் சந்தித்தார். அவரால் அவற்றைச் சரி செய்ய இயன்றிருக்காது என்றும் அவர் கூறுகிறார். டவுன் சிண்ட்ரோம் என்பது மரபணு தொடர்பான பிரச்னையாகும். பொதுவாக, இந்தப் பிரச்னைக்கு ஆளாகும் நபர்கள் கூடுதலாக ஒரு குரோமோசோம்-ம்-ஐ கொண்டிருப்பார்கள். அது அவர்களின் சிந்திக்கும் திறனை பல்வேறு வகையில் பாதிப்பதோடு, இதயம், மற்றும் மற்ற உடல் உறுப்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்னைகளை உண்டாக்கும். இருப்பினும், 6 வயது வரை டீனா உயிருடன் இருந்திருக்கிறார். 6 வயது என்பது, வரலாற்றுக்கு முந்தைய மக்கள் தொகையில் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் ஆயுட்காலத்தைக் காட்டிலும் மிக அதிகம். ஒப்பீட்டளவில், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1920-40-களுக்கு இடைப்பட்டக் காலத்தில், இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக 9 முதல் 12 வயது வரை தான் உயிர் வாழ்ந்தனர். பட மூலாதாரம்,VALENTIN VILLAVERDE BONILLA/UNIVERSITY OF VALENCIA படக்குறிப்பு,அந்த எலும்பு 5 செ.மீ. நீளமுடையது. டீனாவின் சிறிய எலும்பை ஆய்வுக்கு உட்படுத்திய அல்கலா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு, "டீனா உயிர்வாழத் தேவையான கவனிப்பை, ஒரு தாயால் மட்டும் வழங்கியிருக்க இயலாது. அவர் குழுவின் மற்ற உறுப்பினர்களின் உதவியை குழந்தையின் பராமரிப்புக்காக அவரது தாய் நாடியிருக்கலாம்," என்று குறிப்பிடுகின்றனர் வில்லவெர்டே. நியாண்டர்தால்கள், வேட்டையாடி உணவு சேகரிக்கும் குழுவினர். அவர்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். "அந்த குழந்தைக்கு அத்தகைய சிறப்பு பராமரிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், ஆறு வயது வரை உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை," என்று வில்லவெர்டே குறிப்பிடுகிறார். 'சயின்ஸ் அட்வான்ஸ்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்பட்டன. நடத்தையுடன் தொடர்புடையதா? மாற்றுத்திறனாளிகளுக்கு நியாண்டர்தால்கள் சிறப்பு கவனம் செலுத்துவது பலகாலமாக அறிந்த ஒன்றே. ஆனால் அது அவர்கள் நடத்தையுடன் தொடர்புடையதா? சில ஆய்வாளர்கள் "கவனிப்பைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்ட தனி நபர்கள் இடையே இது இயல்பாக நிகழ்ந்தது," என்று நம்புகின்றனர். மற்றவர்கள், பராமரிப்பு இரக்க உணர்வால் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். இது உயர்ந்த தகவமைப்பு கொண்ட சமூக நடத்தையுடன் தொடர்புடையது என்று மற்றவர்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,VALENTIN VILLAVERDE BONILLA/UNIVERSITY OF VALENCIA படக்குறிப்பு,கோவா நேக்ராவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஐபேரிய கடற்கரையில் நியாண்டர்தால்களின் வாழ்வியல் குறித்து புரிந்துகொள்வதில் முக்கியமானவையாக உள்ளன. ஹெச்.எம் மருத்துவமனையின் எவல்யூஷனரி ஓட்டோஅகவுஸ்டிக்ஸ் (Evolutionary Otoacoustics) துறை மற்றும் அல்கலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மெர்சிடிஸ் கான்டே வால்வெர்டே அடாபுர்காவிலிருந்து பிபிசி முண்டோவிடம் பேசினார். இவர் டீனாவின் சிறிய எலும்பைப் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்களின் குழுவை வழிநடத்தினார். "பல ஆரோக்கியக் குறைபாடுகளைக் கொண்ட நியாண்டர்தால்களின் புதைபடிவங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இளைஞர்களுடையது. இந்தக் குறைபாடுகள், காயங்கள், உடல்நலக்கோளாறு, உடைந்த எலும்புகள் மற்றும் இதர பிரச்னைகள் அவர்கள் வளரும் போது ஏற்பட்டது. பிறக்கும் போதே அவர்களுக்கு இந்த பிரச்னைகள் இல்லை," என்று கூறுகிறார் அவர். "உனக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது என்ற தன்னலமற்ற நடத்தைகளை (altruistic behavior) இந்தக் குழுவினர் கொண்டிருந்தனரா அல்லது, 'நீ எனக்கு உதவினாய் அல்லது வருங்காலத்தில் உதவுவாய் என்பதால் நான் உனக்கு உதவுகிறேன்' என்று உதவினார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது," என்று அவர் கூறுகிறார். நம்மைப் போன்றே தன்னலமற்றவர்கள் டீனாவின் கதை வித்தியாசமானது. ஏனெனில் அவர் ஒரு பெண். அவர் இந்தப் பிரச்னைகளுடன் பிறந்தார். இருப்பினும் அவர் 6 வயது வரை உயிர்வாழ்ந்தார். "அவருக்கு நிறைய உதவிகள் செய்து நன்றாக கவனித்துக் கொண்டனர் என்பதையே இது காட்டுகிறது. இருப்பினும், அவர் ஒரு பெண். அவரிடம் இருந்து எந்த விதமான பிரதிபலனையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்," என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார். உதவிக்குப் பதிலுதவி செய்ய மிகவும் குறைவான வாய்ப்புகளை மட்டுமே குழந்தைகள் கொண்டிருப்பதால், தீவிரமான நோய்களுடன் கூடிய குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சியானது மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. பட மூலாதாரம்,A. EIXEA படக்குறிப்பு,இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்டபோது கோவா நேக்ரா அகழாய்வு மையத்தின் இயக்குநராக இருந்தார் வலேண்டின் வில்லவெர்டே நியாண்டர்தால்கள் தன்னலம் அற்றவர்களா? நம் இனத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், நியாண்டர்தால்கள் தன்னலமற்றவர்கள் அல்லது நவீன மனிதர்கள் போன்று தன்னலமற்றவர்கள். டவுன் சிண்ட்ரோமுடன் பிறந்த மனிதக்குரங்கு ஒன்று 23 மாதங்கள் உயிர்வாழ்ந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்தக் குரங்குக்குத் தேவையான உதவிகளை அதன் அம்மா மற்றும் ஒரு மூத்த பெண் குரங்கும் செய்து வந்தன. தன்னுடைய குட்டிகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் அம்மாவுக்கு பெண் குரங்கு உதவுவதை நிறுத்த, அந்த 23 மாத மனிதக் குரங்கு இறந்து போனது. நம்மைப் போன்றே நியாண்டர்தால்களும் இரக்கம் மிக்கவர்கள். ஆனால் நம்மிரு இனங்களும் இருவேறு பரிணாம வளர்ச்சிக் கோடுகளைக் கொண்டிருக்கின்றோம். "நம்முடைய மூதாதையர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். அதனால் தான் அவர்களிடம் இருந்து பிரிந்த இரண்டு இனங்களிடமும் இந்தப் பண்பு காணப்படுகிறது," என்று கான்டே வால்வெர்டே குறிப்பிடுகிறார். நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களாகப் பிரிந்த மூததை மனித இனம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்துள்ளனர். பட மூலாதாரம்,MERCEDES CONDE VALVERDE/UNIVERSITY OF ALCALÁ படக்குறிப்பு,புதைபடிமத்தின் இரண்டு விதமான முப்பரிமாண மாதிரி டீனா வாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் டீனாவுக்கு நேரடியாக உதவியிருக்கலாம், அல்லது அவரது அம்மாவுக்கு உதவி செய்து டீனாவுக்கு அளிக்கும் பராமரிப்புப் பணியில் இருந்து சிறிது நேரம் விடுவித்திருக்கலாம். நியாண்டர்தால்கள் நம்மைப் போன்றவர்கள், என்கின்றனர் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள். நியாண்டர்தால்களிடையே இருந்த பராமரிப்பு குணமானது பரந்த, அதே சமயம் சிக்கலான சமூகப் பின்னணியை கொண்டது. கவனிப்பு என்பது கூட்டாக குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதைப் போன்ற சிக்கலான சமூக யுத்தியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பினை குழந்தைகள் மீதான ஆராய்ச்சி வழங்கியுள்ளது. புதைபடிவப் பொருட்களை வைத்துமட்டுமே, நியாண்டர்தால்கள் இதர நபர்களை கவனித்துக் கொண்டனர் என்று யூகிக்க முடியாது என்றும், வெறும் யூகங்கள் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எட்டப்பட்டதாகவும் விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், சமீப காலங்களில் புதைபடிவ ஆதாரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் மனிதர்களிடையே ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் குணம் இருப்பதை நிரூபிப்பதற்கான மூலமாக இருப்பது அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ உடல் நலப் பிரச்னைகளைச் சந்திக்கும் குழு உறுப்பினரை கவனித்துக் கொள்ள மனிதர்கள் ஏன் நேரம் செலவிடுகின்றனர், அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தீர்மானிக்கிறது ஹோமினிட்ஸ் எனும் ஆதி மனிதர்கள் மீதான உயிர் தொல்லியல் ஆராய்ச்சி. பட மூலாதாரம்,UNIVERSITY OF ALCALA படக்குறிப்பு,ஏஞ்செல்ஸ் சான்ஷெஸ், ஜூலியா டியஸ், மெர்சிடிஸ் கான்டே வால்வெர்டே, அமரா குய்ரோஸ் மற்றும் ஜோஸ் இக்னாசியோ மார்டினெஸ் மென்டிஸபெல் ஆகியோர் புதைபடிம எலும்பை ஆய்வு செய்தனர். எவல்யூஷனரி ஓட்டோ அகவுஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் புதைப்படிம தொல்லியல் துறை இணை இயக்குநர் இக்னாசியோ மார்டினெஸ் மெண்டிஸாபால், "இந்தக் கண்டுபிடிப்பு அழகானது. ஏனெனில் 'டவுன் சிண்ட்ரோம்' கொண்ட மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. நாங்கள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்காற்றியுள்ளோம். எங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது. எங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள முடியும். நாங்கள் எப்போதும் இருந்தோம். நாங்கள் எப்போதும் பயணித்துக் கொண்டிருந்தோம், என்று இந்தப் புதைபடிவங்கள் சொல்கின்றன," என்று அவர் கூறுகிறார். நுட்பமான, ஆழமான, அறிவார்ந்த, பரிணாம உயிரியல் பிரச்னை ஒன்று இருக்கிறது: சமூகக் குழுவில் விளிம்பு நிலையில் உள்ள நபர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனித நடத்தை எங்கே, எப்போது தோன்றியது என்ற கேள்வி. https://www.bbc.com/tamil/articles/cmj2yy3m4r1o
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஐந்தாம்நாள் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்; சர்வதேச கண்கணிப்பு தொடரவேண்டுமென தமிழ்தரப்புக்கள் வலியுறுத்து Published By: VISHNU 09 JUL, 2024 | 09:12 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் ஜூலை.09 செவ்வாய்கிழமை செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றது. இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த அகழ்வாய்வு நிலைமைகள் தொடர்பில் பேராசியர் ராஜ்சோமதேவ, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன் ஆகியோரிடம் கேட்டறிந்துகொண்டார். இந்நிலையில் இவ்வாறான சர்வதேச அமைப்புப் பிரதிநிதிகளின் கண்காணிப்பு விஜயத்தால் தமக்கு இந்த அகழ்வாய்வின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அகழ்வாய்வின்மீது தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பு அவசியமெனவும் தமிழ்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்கட்ட, ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு ஐ.நாவின் இலங்கை அலுவலக மனிதஉரிமை அலுவர் லுடியானா ஷெல்ரின் அகிலன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினரின் கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் இந்த அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஐந்தாம் நாள் அகழ்வாய்வுப்பணிகளில் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் ஐந்தாவது மண்படை அகழப்பட்டு அகழ்வாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் குறித்த ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் சில மர்மப்பொருட்கள் பகுதியளவில் வெளிப்பட்டுத் தென்படுவதாக இந்த அகழ்வாய்வு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஆறாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் பின்னரே குறித்த மர்மப்பொருட்கள் என்ன என்பதை முழுமையாக இனங்காணமுடியும் எனவும் தெரிவித்தார். அதேவேளை இந்த மனிதப்புதைகுழி இனங்காணப்பட்டதிலிருந்து, இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வு விவகாரத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். இந் நிலையில் மனிதப்புதைகுழியின் முன்றாம் கட்ட, ஐந்தாம் நாள் அகழ்வாய்வுப்பணி இடம்பெறும்போது குறித்த இடத்திற்கு ஐ.நா இலங்கை அலுவலக மனித உரிமை அலுவலரின் கண்காணிப்பு விஜயம் குறித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான சர்வதேச பிரதிநிதிகள் கண்காணிப்பது இந்த அகழ்வாய்வின்மீது தமக்கு நம்பிக்கை ஏற்படுவதாக அமைவதாகவும், தொடர்ந்தும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு தொடர்ந்தும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188084
-
பைடனுக்கு பார்கின்சன் நோய் பாதிப்பா? கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆக முடியுமா?
பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் 8 தடவை வெள்ளை மாளிகை சென்றுள்ளார்? நியுயோர்க் டைம்ஸ் தகவல் Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 04:05 PM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்படவில்லை அந்த நோய்க்காக சிகிச்சைபெறவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெள்ளை மாளிகைக்கு ஆகஸ்ட்மாதம் முதல் மார்ச்வரையில் எட்டு தடவைகள் சென்றுள்ளார் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டவர்களின் பட்டியலை அடிப்படையாக வைத்து நியுயோர்க் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. இது குறித்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகையின் மருத்துவர் கெவின் ஓ கோனர் பைடன் தனது வருடாந்த மருத்துவசோதனைகளிற்கு அப்பால் நரம்பியல் நிபுணர் எவரையும் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார். நரம்பியல் நிபுணரான கெவின்கனார்ட் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வருடம் மார்ச் மாதம் வரை எட்டு தடவை வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதை வெள்ளை மாளிகையின் விருந்தினர் ஆவணம் காண்பித்துள்ளது என ரொய்ட்டரும் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செயற்பாடுகளிற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்களிற்கு ஆதரவளிப்பதற்கான அவரது நரம்பியல் மருத்துவ கிளினிக்குகளிற்காகவே கெவின் கர்னாட் வெள்ளை மாளிகைக்கு சென்றார் ஜனாதிபதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்லவில்லை என வெள்ளை மாளிகையின் மருத்துவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான முதலாவது விவாதத்தின்போது பைடன் மிகவும் பலவீனமானவராக தடுமாறுபவராக காணப்பட்டதை தொடர்ந்து அவர் நோய் பாதிப்பிற்குட்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் அமெரிக்காவில் வலுவடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/188051
-
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: மோடி கோரிக்கையை ஏற்ற புடின் 09 JUL, 2024 | 01:07 PM இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில்இ ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் புடினுடன் புதினுடன் பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்படும் இந்தியர்களை மீண்டும் தாயகம் திரும்ப தேவையான அனைத்து நடைமுறைகளையும் ரஷ்யா உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் உக்ரைன் உடனான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறையின் தரவுகளின்படி சுமார் 30 முதல் 40 இந்தியர்கள் வரையில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தெரிகிறது. அவர்கள் நாடு திரும்ப விரும்பினாலும் அது நடக்கவில்லை என்ற தகவல் இதற்கு முன்பு வெளியானது. ஏற்கெனவே ரஷ்ய ராணுவ பணியில் இருந்த இந்தியர்கள் 10 பேர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கேள்வி? - முன்னதாகஇ ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்ப இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி உறுதி செய்வாரா என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சி எழுப்பி இருந்தது. “இரண்டு இந்தியர்கள் போரில் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை காரணமாக நம் இளைஞர்களுக்கு இந்த நிலை வந்துள்ளது. வெளிநாட்டு வேலை எனச் சொல்லி ராணுவ பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு திரும்புவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அதிர்ச்சித் தகவல் வெளியானது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்ய தரப்பில் போரிட்டு வரும் இந்தியர்கள் உத்தரபிரதேசம் குஜராத் பஞ்சாப் ஜம்மு காஷ்மீர் கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்கி உக்ரைன் நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியான சுழளவழஎ-ழn-னுழn பகுதியில் உள்ள முகாமில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணியமர்த்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். 2023 நவம்பரில் ரஷ்யா சென்ற இந்தியர்கள் ராணுவ உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாதம் ரூ.1.95 லட்சம் ஊதியம் மற்றும் ரூ.50000 போனஸ் என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான வேலைவாய்ப்பு தகவலை நம்பி அங்கு சென்று இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சிலர் தப்பியும் உள்ளனர். https://www.virakesari.lk/article/188025
-
சோழர், பாண்டியர் ஆட்சியில் 'சாதி கலப்பால்' உருவான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?
படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அனுலோமா மற்றும் பிரிதிலோமா என கலப்பு சமூக மக்கள் அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஜூலை 2024, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மனிதர்கள் உருவான காலம் முதல் தற்காலம் வரையிலும் உள்ள சமூகம் பல மாறுதல்களை தாண்டி வந்திருக்கிறது. அக்கால மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்தின் அமைப்பை மையமாகக் கொண்டு வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டனர். அதன்படி குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் மற்றும் பாலை என்ற பெயரில் ஐந்து வகையான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தாம் செய்கின்ற தொழில்களின் பெயர்களை சொல்லி அழைக்கின்ற பழக்கம் அம்மக்களிடம் உருவாகியது. உதாரணமாக கடல் சார்ந்த பகுதியில் மீன் பிடிக்கும் மக்கள் மீனவர் வலைஞர், உம்பளவர் என்றும், மருத நிலத்தில் வயல் வேலை செய்தவர்கள் கடைஞர், குடும்பர்கள் என்றும், காடு சார்ந்த பகுதியான முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்தமக்கள் இடையர்கள், ஆயர்கள் எனவும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் தேன் எடுத்தும், வேட்டையாடி வாழ்ந்த மக்கள் வேட்டுவர் மற்றும் குறவர் என்றும் தொழிற்சார்ந்துள்ள பெயர்களில் அழைத்துக் கொண்டதை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சங்க காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்த களப்பிரர்கள் தமிழ் மக்கள் இடையே தங்களது பண்பாட்டை பரப்பியபோது தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. தொடர்ந்து பல்லவர்கள், சேர, சோழ,பாண்டியர் காலத்திலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டது. அதிலும் இரு பிரிவுகளுக்கு இடையே மண உறவு ஏற்பட்டு அதனால் புதிய சமூகப் பிரிவுகள் உருவாகத் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி உருவான மக்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அனுலோமா மற்றும் பிரிதிலோமா இனத்தவர்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுலோமா பிரிவினர் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களில் யார், யார் கலப்பு சமூகப் பிரிவு மக்கள் என்பதை கல்வெட்டுக்கள் காட்டுவதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார். அனுலோமா, பிரிதிலோமா என்று இரு கலப்பு சமூகப் பிரிவு மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இவற்றில் அனுலோமா என்பதற்கு உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்துள்ள மக்கள்" என்று அறிந்து கொள்ள முடிகிறது என்றார் பன்னீர்செல்வம். "அனுலோமா சமூகத்தைச் சேர்ந்த மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள். இவர்கள் பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருக்கோயில்களில் பூசை செய்வதற்கு பணியமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அவர். படக்குறிப்பு,அனுலோமா சமூகத்தைச் உள்ள மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள் என கல்வெட்டுகள் கூறுகின்றன. பாரசிவர்களின் பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ள சிவன் கோயிலில் ஜடவரும சுந்தரபாண்டியரின் 16-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1312) வெட்டப்பட்ட கல்வெட்டின் மூலம் பாரசிவர்கள் திருக்கோயிலில் பணியாற்றியுள்ளதை அறியலாம். "ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடையம்பன் மாரன திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு 13-வது உடையார் ஊர் பாகம் கொண்ட அருளிய நாயனார் கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவர்க்கு விவாஸ்த்த பத்திரம் பண்ணிக் கொடுத்த பரிசாவது..." என தொடங்கும் கல்வெட்டில் பாரசிவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளதை அறிய முடிவதாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம். "பாண்டிய மண்டலம், சோழமண்டலம், மகதை மண்டலம், நடுவில் மண்டலம் ஆகிய பகுதியில் உள்ள திருக்கோயில்களில் பூசை செய்து வருகின்ற பாரசிவர்களுக்கு உரிமைகள் மற்றும் மரியாதை உண்டு என்று சொல்லியுள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது." படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் மேலும் பாரசிவர்கள் பற்றி போளூர் வட்டம் கப்பலூர் மற்றும் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோயில்களிலும் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பாண்டியர்களின் கல்வெட்டுகளில் சிலவற்றில் பாரசிவர்கள் சிவபெருமானுக்கு பூசை செய்பவர்கள் என்ற ஒரே விதமான செய்திகள் மட்டும் அறிய முடிகின்றது. அதே நேரத்தில் பாரசிவர்கள் பிராமணர்களை விட சமூக அமைப்பில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தவர்கள் என்பதும் புலப்படுவதாகவும் முனைவர் பன்னீர்செல்வம் கூறினார். பிரிதிலோமா பிரிவினர் "பிரிதிலோமா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள்" என்று பன்னீர்செல்வம் விளக்கினார். பிரிதிலோமா பிரிவினரின் பணிகள், உரிமைகள் புதுச்சேரி திருபுவனையில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உள்ள விக்ரமச்சோழனின் 9-ம் ஆட்சியாண்டு (கி.பி 1127) கல்வெட்டின் மூலம் உத்கிரிஸ்ட் - ஆயோகவர் என்ற கலப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் வாழ்ந்துள்ளது அறிய முடிகிறது. இதில் அவர்களுடைய உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதே போல் பிரிதிலோமா பிரிவைச் சேர்ந்த சிவன் படவர்கள் பற்றி கரூர் அருகே திருமுக்கூடல் என்ற ஊரில் உள்ள கோவிலில் மாறவருமன் ராஜகேசரி வீரபாண்டிய தேவரின் 11-ம் ஆட்சியாண்டு (கி.பி .1344) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அமுது படைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பிரிதிலோமா பிரிவை சேர்ந்தவர்கள் பணம் 20 தருவதாக ஒத்துக் கொண்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது" என்கிறார் பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/ce4qr88gdg3o
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
பணி புறக்கணிப்புச் செய்யாமல் கடமைக்கு சமூமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்! Published By: DIGITAL DESK 3 09 JUL, 2024 | 05:17 PM நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (09) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அரச சேவையின் நிறைவேற்றுத் தரம் அல்லாத சில சேவைகளில் உள்ள ஒரு சில தொழிற்சங்கங்கள் 2024 ஜூலை 08 மற்றும் 09 திகதிகளில் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தன. கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்நோக்கியிருந்த நாடு கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான பொருளாதார கொள்கை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கியது. தற்போதைய நிதி நிலைமையின் கீழ், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போது வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பையோ கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு சாத்தியமில்லை எனவும் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்த மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. மறுபுறம், சில அரச ஊழியர்கள் மேலதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் அனைவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எவ்வாறாயினும், இதுபோன்ற நியாயமற்ற பணிப் புறக்கணிப்புக்களைச் செய்யாமல், 2024 ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அரச உத்தியோகத்தர்களைப் பாராட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். https://www.virakesari.lk/article/188064
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
யாழுக்கு மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் கொண்டு செல்லபட்டுள்ளன! 09 JUL, 2024 | 05:42 PM யாழ் மாவட்ட மீனவர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் கொண்டு செல்லபட்டுள்ளன. வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சீன அரசாங்கம் 500 வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் யாழ் மாவட்டத்துக்கு 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் யாழ்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 116 பொருத்து வீடுகள் பாரவூர்த்திகள் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லபட்ட வீடுகள் அனைத்தும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பொறுப்பில் நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188061
-
இந்திய சீன உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கு இலங்கை முயற்சி - ரொய்ட்டர் மாநாட்டில் அலிசப்ரி
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 03:39 PM ரொய்ட்டர்ஸ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணைமுறிபத்திர உரிமையாளர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளை அடுத்த சில வாரங்களில் இலங்கை பூர்த்தி செய்யும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளான இந்தியா, சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவில் தங்களுக்குள் போட்டியிடும் இரு பெரும் நாடுகளும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளதுடன் முக்கிய முதலீட்டாளர்களாக காணப்படுகின்றநிலையில், இலங்கையில் புவிசார் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்காக போட்டியிடுகின்ற சூழ்நிலையிலேயே, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் இடம்பெறும் ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டில் இலங்கைக்கு கடன்வழங்கியவர்களுடனான மறுசீரமைப்பு முயற்சிகள் எப்போதும் முடிவடையும் என்ற கேள்விக்கு அடுத்த சில வாரங்களில் என எதிர்பார்க்கின்றோம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்துவிடுவோம் என தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் அதனடிப்படையில் நாங்கள் பணம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இலங்கை தனது பிணைமுறிகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் முன்னோக்கி செல்வதற்கு அதன் பிணைமுறி உரிமையாளர்கள் சிலருடன் தற்காலிக உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது. தற்போது ஏனைய தனியார் கடன்வழங்குநர்களும் சர்வதேச நாணயநிதியமும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இலங்கை 37பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜூன் மாத இறுதியில் 10 மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை எட்டியது. இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலை காணுதல் 22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டை பெருமளவில் நம்பியுள்ள அதேவேளை இந்தியாவின் தென்பகுதிக்கு அருகே பிரதான கிழக்கு மேற்கு கடற்பாதையில் இலங்கை அமைந்துள்ளமை அதனை முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாற்றியுள்ளது. இலங்கையுடன் வலுவான கலாச்சார உறவுகளை கொண்டுள்ள இலங்கையும் சீனாவும் பலவருடங்களாக கொழும்பின் செல்வாக்கை பெறுவதற்காக போட்டிபோட்டுள்ளன. இதன் காரணமாக அந்த நாடுகளின்; மோதல்களின் நடுவில் இலங்கை சிக்குண்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை, துறைமுக அபிவிருத்தி மீள்சக்திதுறை அபிவிருத்தி போன்றவற்றிற்கு இந்தியா மிக முக்கியமானதாக காணப்படுகின்றது, இரு நாடுகளும் தங்கள் மின் கட்டங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக அலிசப்ரி தெரிவித்துள்ளார். சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நிற்பது குறித்து கடந்த சில வருடங்களில் கரிசனை வெளியிட்டுள்ள புதுடில்லி தனது கடற்பகுதிக்கு அருகில் சீன கப்பல்கள் தரித்து நிற்பதன் நோக்கம் மற்றும் அதன் திறமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தனது துறைமுகங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. இலங்கை, சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவதற்கு எண்ணியுள்ளது என தெரிவித்துள்ள அலிசப்ரி அதேவேளை அண்டை நாடுகளிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எதனையும் அனுமதிக்கமாட்டோம் என்பதை அதன் சகாக்களிற்கு தெளிவுபடுத்தும் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏனைய அனைவருக்கும் பொருந்தும் சீனாவிற்கு பொருந்தாத அமைப்புமுறையை நாங்கள் கொண்டிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்த அமைப்புகள் அனைத்து உலகளாவியதாக காணப்படும், நடுநிலை நாடு என்ற அடிப்படையில் நாங்கள் அதனை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188045
-
பைடனுக்கு பார்கின்சன் நோய் பாதிப்பா? கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆக முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் இடையே ஜூன் 27-ஆம் தேதி நடந்த நேருக்கு நேர் விவாதம், அமெரிக்க அரசியல் களத்தில் பல கேள்விகளையும், குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பைடன் செயல்பட்ட விதம் அவரது கட்சிக்குள் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளதுடன், அவரது உடல்நிலை குறித்தும், மாற்று அதிபர் வேட்பாளர் குறித்தும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பைடனுக்கு எதிர்ப்பு ஏன்? ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாகக் கடந்த மாத இறுதியில் நேருக்கு நேர் விவாதித்தனர். டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. பார்கின்சன் நோய்க்கு 81 வயதான பைடன் சிகிச்சை பெறுகிறார் எனவும், இதனால்தான் அவர் கம்மிய குரலில், மந்தமாகப் பேசினார் எனவும் கூறப்பட்டன. பார்கின்சன் நோய் நிபுணர் ஒருவர் கடந்த ஆண்டு முதல் எட்டு முறை வெள்ளை மாளிகைக்கு வருகை தந்ததாக 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரைன் ஜீன்-பியர், "பார்கின்சன் நோய்க்கு அதிபர் சிகிச்சை பெற்றாரா? இல்லை" என பதிலளித்தார். டொனால்ட் டிரம்ப் உடனான பைடனின் மோசமான விவாதத்திற்குப் பிறகு, அவரது மனக் கூர்மை பற்றிய கேள்விகள் தீவிரமடைந்துள்ளன. "81 வயதான பைடன் இந்தத் தேர்தலில் ஒரு இளம் போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,” என்ற கருத்தை பல ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர். டிரம்ப் உடனான விவாதத்தில் தான் சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பைடன், அதே சமயம் 'சர்வவல்லமை படைத்த இறைவன் மட்டுமே தன்னை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும்' என்று கூறியுள்ளார். இந்நிலையில், தன் மீது சந்தேகம் கொண்டுள்ள கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ள பைடன், "ஒன்று எனக்கு எதிராக நில்லுங்கள், அல்லது என் பின்னால் நில்லுங்கள்," எனக் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் உடனான பைடனின் மோசமான விவாதத்திற்குப் பிறகு, அவரது மனக் கூர்மை பற்றிய கேள்விகள் தீவிரமடைந்துள்ளன கமலா ஹாரிஸுக்கு ஆதரவு ஏன்? 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு துணை அதிபராகப் பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் என்ற சாதனைகளைப் படைத்தார். இதற்கிடையே, தேர்தலில் அதிபர் பைடனின் வயது அவருக்கு எதிராக இருக்கலாம், எனவே 59 வயதான துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பளராக நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன. குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், "துணை அதிபர் கமலா ஹாரிஸ் பைடனை விடச் 'சிறந்தவர்', ஆனால் அவரைவிடப் 'பரிதாபமானவர்'," என்று விமர்சித்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி நடந்த விவாதத்தில் பைடனின் செயல்திறன் குறைவாக இருந்தபோதிலும், கமலா ஹாரிஸ் தனது தலைவருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். 90 நிமிடங்கள் நடந்த மேடை விவாதத்தை வைத்து பைடனின் ஆளுமையை அளவிடக்கூடாது என கமலா ஹாரிஸ் கூறினார். சில கருத்துக்கணிப்பு முடிவுகளைச் சுட்டிக்காட்டி, டிரம்பிற்கு எதிரான போட்டியில் கமலா ஹாரிஸ் பைடனை விடச் சிறப்பாகச் செயல்படுவார் என அவரை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால் 45% பேர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது கமலாவைக் குறித்த விவாதங்கள் தேசிய அளவில் கமலா ஹாரிஸுக்கு இருக்கும் நற்பெயர், பிரசார உள்கட்டமைப்பு, இளம் வாக்காளர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அவர்கள், தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக அதிபர் வேட்பாளரை மாற்ற கமலா ஹாரிஸ் சிறந்த தேர்வாக இருப்பார் என வாதிடுகின்றனர். ஆனால், இது பைடனின் கூட்டாளிகள் உட்பட சில ஜனநாயகக் கட்சியினருக்குச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முதல் வாக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே தனது முயற்சியில் தோல்வியுற்ற, துணை அதிபர் பதவியில் குறைந்த ஆதரவை (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாகப் பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) கொண்டிருக்கும் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்துவது சரியாக இருக்காது என அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இதற்கு எதிராக, ஜனநாயகக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷிஃப், ஜிம் க்ளைபர்ன் போன்றவர்கள் ஹாரிஸை வெளிப்படையாக முன்னிறுத்துகின்றனர். "அவர் அதிபரின் கூட்டாளியாக இருந்தாலும் சரி, அல்லது அதிபர் வேட்பாளராக இருந்தாலும் சரி அவர் குடியரசுக் கட்சியினரும், டிரம்பும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒருவர்," என்று ஹாரிஸின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநர் சிம்மன்ஸ் பிபிசி-யிடம் கூறினார். பைடனால் போட்டியில் இருந்து விலக முடியுமா? ஆம், முடியும். பைடனே போட்டியில் இருந்து விலகினால் அது பெரிய செய்தியாக மாறும். ஜனநாயகக் கட்சியினர் நேரடியாக அடுத்த வேட்பாளரைத் தேடிப் போவார்கள். ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டில் (DNC) கட்சியின் அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்படுவார். இந்தக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளராக பைடனையும், துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸையும் அறிவிக்க ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அங்கு, ஒரு வேட்பாளர் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையான 'பிரதிநிதிகளின்' ஆதரவைப் பெற வேண்டும். ஒருவேளை பைடன் போட்டியில் இருந்து விலகினால், அது மற்றவர்கள் களத்தில் இறங்க வழிவகுக்கும். பெரும்பான்மையான பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறும் நபர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், போட்டியில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியையும் தற்போது வரை பைடன் வெளிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தன் மீது சந்தேகம் கொண்டுள்ள கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ளார் பைடன் பைடனை வலுகட்டாயமாக மாற்ற முடியுமா? நவீன அரசியல் சகாப்தத்தில், ஒரு பெரிய தேசியக் கட்சி வலுகட்டாயமாக ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் வாங்க வைக்க வற்புறுத்தியதில்லை. இருப்பினும், ஜனநாயக தேசிய மாநாட்டின் விதிமுறைகளில் சில சிக்கல்கள் உள்ளன, அவை பைடனைப் போட்டியில் இருந்து வெளியேற்றுவதைச் சாத்தியமாக்குகின்றன. தேசிய மாநாட்டின் விதிமுறைகள், "பிரதிநிதிகள் அனைவரும் மனசாட்சிப்படி தங்களைத் தேர்ந்தெடுத்தவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க" அனுமதிக்கின்றன. அதாவது, அவர்கள் விருப்பப்பட்டால் வேறொரு வேட்பாளரைத் தேர்ந்தேடுக்க முடியும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பைடன் அதிபராக இருக்கவேண்டும் என்று 43% வாக்காளர்கள் விரும்புவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது கமலா ஹாரிஸால் பைடனுக்கு மாற்றாக இருக்க முடியுமா? அதிபர் பைடன் தனது பதவிக் காலத்திலேயே பதவி விலகியிருந்தால், கமலா ஹாரிஸ் தானாகவே அந்த இடத்தைப் பிடித்திருப்பார். ஆனால், வேட்பாளர் போட்டியிலிருந்து பைடன் விலகினால் இதே விதிகள் பொருந்தாது. துணை அதிபர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த வழிமுறையும் இல்லை. அதற்குப் பதிலாக, கமலா ஹாரிஸ் மற்ற வேட்பாளர்களைப் போலவே பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஓட்டுக்களைப் பெற வேண்டும். போட்டியில் இருந்து விலகினால், அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸை பைடன் ஆதரிக்கலாம். அவர் ஏற்கனவே ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இருப்பதால் தற்போது அதிபரிடம் இருக்கும் அனைத்துப் பிரசார நிதிகளையும் கமலா ஹாரிஸ் அணுகலாம். மேலும் தேசிய அளவில் அறிமுகமான நபராகவும் அவர் உள்ளார். ஆனால், அமெரிக்க மக்களிடையே அவருக்கு இருக்கும் குறைந்த ஆதரவு பாதகமாக அமையலாம். பைடன் அதிபராக இருக்கவேண்டும் என்று 43% வாக்காளர்கள் விரும்புவதாகவும், 49% பேர் டிரம்பிற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட CNN கருத்துக்கணிப்பு, தெரிவிக்கிறது. கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால் 45% பேர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் 47% பேர் டிரம்பை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2020-ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கான போட்டியில், கமலா ஹாரிஸ் ஜோ பைடனை விமர்சிக்கவும் செய்தார் 2020-இல் பைடனுக்கு எதிராக நின்ற கமலா ஹாரிஸ் 2020-இல் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் அதிபர் வேட்பாளர் இடத்துக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். பின்னர், ஜனநாயகக் கட்சி சார்பாகத் துணை அதிபர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். சுமார் ஓராண்டிற்கு முன்பு அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட கமலா ஹாரிஸ், பல இடங்களிலும் பிரசாரங்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டு, ஜோ பைடனுக்கு எதிராகக்கூட பேசி விமர்சித்தார். எனினும், 2019-ஆம் ஆண்டின் இறுதியில் அந்தப் பிரசாரம் முற்றுப்பெற்றது. 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரசாரத்தை உற்சாகமாகத் தொடங்கினார். ஆனால், அவரால் தெளிவான திட்டங்களை விளக்க முடியவில்லை. சுகாதாரம் போன்ற துறைகளில் முக்கியக் கொள்கைகளைக் குறித்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கத் தவறினார். பின்னர் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். போட்டியில் உள்ள மற்றவர்கள் யார்? கலிஃபோர்னியா ஆளுனர் கவின் நியூசோம், மிஷிகன் ஆளுனர் க்ரெட்சென் விட்மர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிகீக் ஆகியோர் ஜோ பைடனின் மாற்று வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cd1j9yv0zy2o
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்
மட்டு. மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் 09 JUL, 2024 | 03:41 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் இன்று (9) செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தித் தொடர்ந்து போராடிவரும் கால்நடை பண்ணையாளர்கள் தாங்கள் போராட்டம் ஆரம்பித்து 300வது நாளான இன்று இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமது மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டு தமது வாழ்வாதாரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்குப் பணிப்புரைகளை வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் வெளியேற்றப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மயிலத்தமடு மாதவனை பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளைக் கூட அமுல்படுத்தமுடியாத வகையில் பொலிஸார் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் ஒரு கம்பு வெட்டினாலும் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரிகள் அங்கு அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுப்போர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் தரை காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக காணிகளை வழங்கவும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் குளங்களைப் புனரமைக்கவும் வீதிகளை புனரமைக்கவும் நடவடிக்கையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தனி நாட்டுக் கோரிக்கைக்காகப் போராடவில்லை எமது கால்நடைகள் மூலம் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காகவே 300வது நாளாகப் போராடுகின்றோம். எமது போராட்டத்திற்கான நியாயத்தினை ஜனாதிபதி மற்றும் மகாவலி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தபோதிலும் இதுவரையில் எங்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லையெனக் கால்நடை பண்ணையாளர் அமைப்பின் தலைவர் நிமலன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188039
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 02:16 PM சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவளி காற்றினால் இந்த வீடு அழிய கூடும் இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டுதிட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம். எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து இழுவை மடியாலும் பாதிக்கபட்டுள்ளோம். பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும் மீனவ தொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டுவருகின்றோம். எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் வழங்கவேண்டும். உண்மையில் எமக்கு சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும். வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். இன்றுவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் சீன அரசினால் கிடைக்கப்பெறவில்லை. அரிசி தருவதாக கூறினார்கள் அதிலும் தர பிரச்சினை, அரசியல் ரீதியாக தங்களுடைய காரியாலயங்களில் வைத்து அரிசியினை வழங்கினார்கள். அரசியல் வாதிகள் பொதுமக்களை கவனிக்க வேண்டும் எனவே என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188030
-
இலவச இணைய வசதி தொடர்பான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
09 JUL, 2024 | 12:34 PM இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கிடைக்கப் பெறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கூறி வாட்ஸ் அப் , முகநூல் மெசன்ஜர் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கு பல குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறான குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் எமது சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் தரவுகளை வேறு தரப்பினர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான குறுஞ்செய்திகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188019
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
எங்கள் ஊரில் பறாளாய் முருகன் கோவில் கேணி பல்லாயிரம் பேர் நீந்தப்பழக உதவியது.
-
'என் மனச திருப்பிக் கொடு'
ஐயா அவரைத் தில்லை என அழைக்கப்போவதாக யாழ் கள உறவு ஒருவர் எழுதி இருந்தவர்!
-
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு.. வெளியான சி.என்.என் கருத்துக்கணிப்பு
பைடனுக்கு பதிலாக முன்னிறுத்தப்படும் கமலா ஹாரிஸ்; அமெரிக்க அதிபராக என்ன வாய்ப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,59 வயதான கமலா ஹாரிஸை முன்னிறுத்துவது சிறந்தது என்று ஜனநாயகக் கட்சிக்குள் சிலர் கூறுகிறார்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜோ பைடனை மாற்ற வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும் அவருக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தேர்தலில் அதிபர் பைடனின் வயது அவருக்கு எதிராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 59 வயதான கமலா ஹாரிஸை முன்னிறுத்துவது சிறந்தது என்று கட்சிக்குள் சிலர் கூறுகிறார்கள். இருப்பினும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே உள்ளன. அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு துணை அதிபர் பதவி காலத்தில் அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கமலா ஹாரிஸ் அரசியலுக்கு வந்தது எப்படி? 2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் போன்ற சாதனைகளை படைத்தார். 2021 நவம்பரில் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது அவர் 75 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை வகித்தார். பட மூலாதாரம்,KAMALA HARRIS படக்குறிப்பு,சிறுமி கமலா தன் தாய் மற்றும் தங்கை மாயாவுடன் கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில், இந்தியாவில் பிறந்த தாய் மற்றும் ஜமைக்காவில் பிறந்த தந்தை ஆகிய இரு புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு கமலா முக்கியமாக அவரது தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார். ஷியாமளா, புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். ஓக்லாண்டின் கறுப்பின சமூகத்தில் தன்னையும் தனது தங்கை மாயாவையும் தன் தாய் முழுமையாக இணைத்ததாக கமலா ஹாரிஸ் கூறுகிறார். "இரண்டு கறுப்பின மகள்களை தான் வளர்த்து வருவதை என் அம்மா நன்றாக புரிந்து கொண்டார்" என்று அவர் தனது சுயசரிதையான ’தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்’ புத்தகத்தில் எழுதினார். "தாய்நாடாக தான் தேர்ந்தெடுத்த நாடு, மாயாவையும் என்னையும் கறுப்பினப் பெண்களாகப் பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் நாங்கள் தன்னம்பிக்கையுள்ள, பெருமைமிக்க கறுப்பினப் பெண்களாக வளர்வதை உறுதி செய்தார்,” என்று கமலா குறிப்பிட்டுள்ளார். கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இது நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றாகும். அங்கு அவர் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மற்றும் அமெரிக்காவில் இன உறவுகள் போன்ற அரசியல் பிரச்சனைகளில் ஈடுபட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது சட்டப்பணி வாழ்க்கையைத் தொடங்கினார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான அவர், கலிஃபோர்னியாவில் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்களில் பணிபுரிந்தார். 2010 இல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். 2016 இல் அம்மாகாணத்தின் அமெரிக்க செனட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். இருப்பினும் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார். "கமலா புத்திசாலி, உறுதியானவர், அனுபவம் வாய்ந்தவர், கடுமையாக போராடக்கூடியவர்,” என்று பைடன் கமலா பற்றிக் குறிப்பிட்டார். இருவரும் இணைந்து அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை தோற்கடித்தனர். பிரசாரத்தின்போது கமலா ஹாரிஸ் பைடனின் பின்னணியில் இருந்தாலும் கூட, அவர் ஒரு பெண் மற்றும் கறுப்பினத்தவர் என்ற அடையாளம் அவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு கறுப்பின பெண்களால் அளிக்கப்பட்ட 90% வாக்குகள் கிடைத்தன. துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ன செய்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க துணை அதிபர் என்ற நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டின் தலைவராகவும் உள்ளார். மசோதாக்களில் வாக்குகள் சமமாக இருக்கும்போது அவர் தன் வாக்கை அளிக்க முடியும். அமெரிக்காவின் வரலாற்றில் வேறு எந்த துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறை அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சாதனை படைத்துள்ளார். "அறையின் கடைசி குரலாக ஒலிக்கும் கமலா, அனுமானங்களை சவால் செய்வார் மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்பார்," என்று பைடன் தனது துணை அதிபர் பற்றிக் கூறினார். கருக்கலைப்பை அமெரிக்காவின் முழு உரிமையாக்கிய ‘ஜேன் ரோ vs ஹென்றி வேட்’ தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்காக 2022 முதல் நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கமலா ஹாரிஸ், மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை எவ்வாறாயினும் ஹாரிஸ் துணை அதிபராக இருந்த காலம் முழுவதும் அவருக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே இருந்தது. 51% அமெரிக்கர்கள் அவரது செயல்திறனை ஏற்கவில்லை எனவும் 37% பேர் மட்டுமே அவரது பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் எனவும் 'ஃபைவ் தெர்டி எயிட்' தொகுத்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தெற்கு எல்லையில் குடியேற்றத்தை குறைப்பதே அதிபர் பைடன் துணை அதிபருக்கு வழங்கிய முக்கிய பணி என்றும், அந்த சிக்கலை சரிசெய்ய அவர் பெரும்பாலும் தவறிவிட்டார் என்றும் பிபிசியின் அமெரிக்க சிறப்பு செய்தியாளர் கேட்டி கே கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜோ பைடனின் இடத்தில் நிற்பது குறித்து கமலா ஹாரிஸ் என்ன சொல்கிறார்? ஜூன் மாதம் டொனால்ட் டிரம்புடன் நடந்த விவாதத்தில் பைடனின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் சபையின் ஐந்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், 81 வயதான ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக தொடரக்கூடாது என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளனர். ஓஹியோவின் பிரதிநிதியான டிம் ரியான், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். "நாம் முன்னோக்கி செல்லும் சிறந்த பாதை கமலா ஹாரிஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் நியூஸ் வீக் இதழில் எழுதினார். "அன்றைய இரவு நாம் பார்த்த ஜோ பைடனை விட ஹாரிஸை நிறுத்துவது பெரிய ஆபத்து என்று கூறுபவர்கள்... உண்மையில் யதார்த்த சூழலில் வாழவில்லை." என்றார் அவர். ஹாரிஸ் ஒரு "அற்புதமான அதிபராக" இருப்பார் என்றும், டிரம்பிற்கு எதிராக "மாபெரும்" வெற்றி பெறுவார் என்றும் கலிஃபோர்னியாவின் பிரதிநிதி ஆடம் ஷிஃப்ஸ் கூறியுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்பிற்கு எதிராக பைடனை விட ஹாரிஸ் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் கடுமையான போட்டியை சந்திக்கக்கூடும். பைடன் அதிபராக இருக்கவேண்டும் என்று 43% வாக்காளர்கள் விரும்புவதாகவும், 49% பேர் டிரம்பிற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட CNN க்கான கருத்துக்கணிப்பு, தெரிவிக்கிறது. கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் 45% பேர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் 47% பேர் டிரம்பை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது. கலிஃபோர்னியா ஆளுனர் கவின் நியூசோம், மிஷிகன் ஆளுனர் க்ரெட்சென் விட்மர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிகீக் ஆகியோர் ஜோ பைடனின் மாற்று வேட்பாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆயினும் அதிபரை தான் தொடர்ந்து ஆதரிப்பதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்."ஜோ பைடன் எங்கள் வேட்பாளர். நாங்கள் டிரம்பை ஒரு முறை தோற்கடித்தோம். மீண்டும் அவரை தோற்கடிக்கப் போகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c7253w0npkro
-
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் மொஸ்கோவின் குற்றவாளியை சந்தித்த தருணத்தில் உக்ரைன் மீது கடும் குண்டு வீச்சு - 37 பேர் பலி -சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி விசனம்
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 11:19 AM உக்ரைனின் சிறுவர் மருத்துவமனை உட்பட பல பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் மேற்கொண்ட தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதை காண்பது கடும் ஏமாற்றமளித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ரஸ்ய ஜனாதிபதியை மொஸ்கோவிற்கு வெளியே உள்ள நோவோ ஓகாரியோவோ என்ற இடத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை உக்ரைன் நகரங்களை காலைவேளையில் ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதல்கள் காரணமாக 37 கொல்லப்பட்டுள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். ரஸ்யா உக்ரைனின் மீது இரண்டு வருடங்களிற்கு முன்னர் போர் தொடுத்த பின்னர் இந்திய பிரதமர் ரஸ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரு தலைவர்களும் கட்டித்தழுவுவதை தேநீர் அருந்துவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் மொஸ்கோவின் இரத்தக்கறை படிந்த குற்றவாளியை இவ்வாறானதொரு நாளில் கட்டித்தழுவுவது கடும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரில் உள்ள சிறுவர் வைத்தியசாலை உட்பட பல நகரங்களின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து வழமைக்கு மாறான பகல்நேர தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது உக்ரைன் தலைநகரில் உள்ள பிரதான சிறுவர் மருத்துவமனையான ஒக்மாடிட் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து புகைமண்டலம் வெளியாவதையும் இடிபாடுகளிற்குள் தேடுதல்கள் இடம்பெறுவதையும் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை சிறுவர்களை எவ்வாறு காப்பாற்ற முயன்றனர் என்பதை மருத்துவமனையின் பணியாளர்கள் விபரிப்பதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/188014
-
“கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை” - ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவிடம் கடுமை காட்டுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?
பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநிலக் கட்சி அந்தஸ்தை சாதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கட்சி மேற்கொள்ளும் அரசியல் நிலைப்பாடுகள், திமுகவை சங்கடத்தில் தள்ளி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கின. இதில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடுமையான நிலையெடுத்து பேச தொடங்கியது. கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அதனை உடனடியாக மறுத்தார். "கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறை விளக்கம் கூறும்போது சாட்சியங்களை திரட்டியே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை மறுப்பவர்கள் தங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தது. பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL தலித் தலைவர்களுக்கு குறி? இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் இறுதி நிகழ்வில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியுடன் பங்கேற்று பேசிய திருமாவளவன், “இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் முன் வைக்கும் கோரிக்கை. அதனாலேயே மாயாவதி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவதற்கான கட்டாயம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும், இதற்கு பின்னால் உள்ள கூலிப்படையினர் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தலித் தலைவர்கள், சிறிய அளவில் இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது” என்று பேசினார். சிபிஐ போன்ற மத்திய விசாரணை முகமைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக, இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் அதிமுகவும், பாஜகவும் சிபிஐ விசாரணை கேட்டு போராடுகின்றன. இப்போது அந்த வரிசையில் விசிகவும் இணைந்துள்ளது. மதுவிலக்கு பிரச்னையிலும் விமர்சனம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராய மரணங்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்திலும் திருமாவளவன் திமுகவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார். “முழு மதுவிலக்கு தேசிய அளவில் கடைப்பிடிக்க வேண்டும்” என்ற திருமாவளவன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை வைத்து கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றார். “தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே, புதுச்சேரியில் அரசு மது பானக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு அரசு மதுபானக் கடைகளுக்கு இணையாக கள்ளச்சாராயக் கடைகள் இருக்கின்றன. அரசு கடைகள் இருப்பதால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகக் கூறியே 2003-ம் ஆண்டு அதிமுக காலத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது தற்போது , 45ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது” என்று திமுக ஆட்சியில் மது விற்பனை அதிகரித்திருப்பதை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். “கூட்டணி என்றால் அடிமைகளா?” பட மூலாதாரம்,X/@WRITERRAVIKUMAR படக்குறிப்பு,“கூட்டணி கட்சிகள் என்றால் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது” என்று கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். இது தொடர்பாக கேட்டபோது, ‘வெவ்வேறு கட்சிகள் என்றால் வெவ்வேறு கருத்துகள் இருக்க தானே செய்யும்’ என்று விளக்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். மேலும் அவர் “கூட்டணி கட்சிகள் என்றால் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. அது மிக தவறான பார்வை” என்று கூறினார். திமுக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை என்று மறுக்கும் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விமர்சனங்களை ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடும் அவர், “இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்கிறது” என்றார். பூரண மதுவிலக்கு தொடர்பாக கேட்டபோது, அது சாத்தியமற்றது என்று மறுத்த அவர், “குடிக்காதவர்கள் மட்டும் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்று கூற முடியுமா? அப்படி கூறினால் எத்தனை பேர் கட்சியில் இருப்பார்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்திலும் மது குடித்து உயிரிழப்பவர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK “எதுவும் நடக்கலாம்!” - ஜெயக்குமார் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுகவின் அணிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் செல்ல வாய்ப்புள்ளதுதானே என்று கேட்டபோது, ‘அதிமுக பலவீனமாக உள்ளதால் யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை’ என்றார் டி கே எஸ் இளங்கோவன். மேலும், “அதிமுக தலைவர் இல்லாத கட்சி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களால் வலுப்பெற முடியாது” என்று கூறினார். பட்டியல் சமுதாய மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால் திருமாவளவன் தனிமைப்படுத்தப்படுவார் என்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “திருமாவளன், தனது உளக் குமுறல்களை இப்போது வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க முடியாதல்லவா? விசிக எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவும் பாஜகவும் தான் எங்கள் எதிரி. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார். திமுகவுக்கு சவாலாகுமா 2026? திமுக, அதிமுக அல்லாத வேறொரு அணியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்விக்கு, “இந்த நிமிடம் வரை விசிக வேறு அணியை நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை. இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக விரும்பினால் அதனால் விசிக அணியை விட்டு வெளியேற நிர்பந்தம் ஏற்படும்” என்கிறார் பேராசிரியர் வீ.அரசு. திமுகவை வீழ்த்துவதற்காக எந்த அணியும் இணையக் கூடும் என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், “கூட்டணியே வேண்டாம் என்ற சீமான், தம்பி விஜய்யுடன் சேர விருப்பம் என்கிறார். அதிமுக உண்ணாவிரதத்துக்கு நான்கு பிரதிநிதிகளை நேரில் அனுப்பி வைத்து ஆதரவு தெரிவிக்கிறார். சீமானும் விஜய்யும் இணைவார்களா, இணைந்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்களா என்பது இப்போது தெரியாது” என்றார். அதே சமயம், ஆட்சியை தக்க வைப்பதற்கான தேர்தல் என்பதால் 2026 தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியம், வி.சி.க தன்னுடைய கூட்டணி முடிவை இப்போது எடுக்காது என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன். மேலும் அவர் “தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சுயநலன், கட்சி நலன் கருதி எடுக்கப்படும் முடிவு. தேர்தல் நேரத்தில் பேசாமல் மௌனம் காத்த விசயங்களைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவார்கள். மாயாவதி சி பி ஐ விசாரணை வேண்டும் என்று கூறும் போது, அதே மேடையில் திருமாவளவன் வேண்டாம் என்றா கூற முடியும்?” என்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் கூட விரும்பும் என்கிறார் அவர், “உத்தர பிரதேசத்தில் செய்தது போல தலித்துகளை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயன்று வருகிறது. அதற்கு விசிகவினர் இணங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு வேளை அதிமுக, பாஜக என எல்லோரும் இணைந்து ஒரு அணி அமைத்தால் திமுகவுக்கு அது சவாலாக இருக்கும்” என்றார் வீ.அரசு. https://www.bbc.com/tamil/articles/c2j3050nzrno
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
அதிபர்கள், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு! Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 11:16 AM நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. சில பாடசாலைகளில் இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிபர்கள், ஆசிரியர்கள் வருகை தந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது. பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது. தமக்கான நிலுவை சம்பளத்தினை வழங்க கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட சுகயீன விடுமுறை காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். நீர்கொழும்பு நீர்கொழும்பு கல்வி வலயத்தில் கட்டானை, நீர்கொழும்பு, ஜா-எல ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறு கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. சில பாடசாலைகளில் மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வருகை தந்த போதிலும் ஆசிரியர்கள், அதிபர் வருகை தராததன் காரணமாக அவர்கள் வீடு திரும்புவதை காணக் கூடியதாக இருந்தது. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, கடற்கரை தெரு சாந்த செபஸ்தியார் வித்தியாலயம், புனித பீற்றர் கல்லூரி ஆகியவற்றில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/188006
-
ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் “ரோம் நகரம் ஓர் இரவில் எழுப்பப்பட்டது அல்ல. அபிஷேக் சர்மா அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட் ஆனது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் அவரால் 2-ஆவது ஆட்டத்தில் சதம் அடிக்க முடிந்தது. இந்த சதம் எனக்குப் பெருமையாக இருக்கிறது, இதைவிட சிறந்த இன்னிங்ஸ் காத்திருக்கிறது” அபிஷேக் சர்மாவின் சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிலாகித்துக் கூறியது இது. அபிஷேக் சர்மா குறித்து பெருமையாக யுவராஜ் சிங் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். உண்மையில் அபிஷேக் சர்மாவை கடந்த சில ஆண்டுகளாக செதுக்கி, அவரின் பேட்டிங்கை முறைப்படுத்தி, ஆட்டத்தை செம்மைப்படுத்தி வழிகாட்டியாக இருந்தது யுவராஜ் சிங்தான். கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார். அபிஷேக் சர்மாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்தது அவரின் தந்தைதான் என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் பேட்டிங்கை செதுக்கி, பவர் ஹிட்டராக மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது யுவராஜ் சிங்தான். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டக் அவுட் அறிமுகம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகிய அபிஷேக் சர்மா 4 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆகினார். 2-ஆவது டி20 போட்டியில் தான்சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது ஆட்டத்தின் பாணியை அறிமுகம் செய்தார். அபிஷேக் சர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அடுத்த 23 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் அதிவேக அரைசதத்தை விளாசினார். தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் வெளுத்தார். இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அபிஷேக் தனது அதிரடியால் தனது குருநாதர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரிலும் அதிரடி அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியில் 2-ஆவது போட்டியிலேயே ஆகச்சிறந்த அறிமுகம் கிடைத்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரிலும் 2018-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.55 லட்சத்துக்கு அபிஷேக் வாங்கப்பட்டார். ஒரு போட்டியில் மட்டும் ஆடிய அபிஷேக் 19 பந்துகளில் 45 ரன்களை ஆர்சிபிக்கு எதிராக விளாசினார். அதன்பின் 2022ம் ஆண்டு ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கடந்த ஐபிஎல் டி20 சீசனில் வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார். 23 வயதான அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் சிறந்த அறிமுகம் கிடைத்து, தனது இடத்தை தக்கவைத்துள்ளார். அபிஷேக் சர்மாவின் குடும்பம் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, இந்து குடும்பத்தில் பிறந்தவர் அபிஷேக் சர்மா. இவரின் தந்தை ராஜ் குமார் சர்மா முன்னாள் கிரிக்கெட் வீரர், வங்கி ஊழியராக இருந்தார். தாய் மஞ்சு சர்மா. அபிஷேக் சர்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகள், 3வதாக அபிஷேக் சர்மா பிறந்தார். அபிஷேக் சர்மா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார். தனது 12வயதிலிருந்தே சுப்மான் கில்லுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பஞ்சாப் அணிக்காக 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சுப்மான் கில், அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அறிமுகப் போட்டியில் சதம் 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் கோப்பை 2015-16ம் ஆண்டு நடந்தது. இதில் அபிஷேக் சர்மா தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து, அந்தத் தொடரில் 1,200 ரன்களைக் குவித்து, 109 சராசரி வைத்திருந்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். 2016-17ம் ஆண்டு வினு மன்கட் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அறிமுகமாகினார். 2017ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் அணிக்காக முதல் முறையாக அபிஷேக் சர்மா அறிமுகமாகினார். ரஞ்சிக் கோப்பை அறிமுகப் போட்டியில் பஞ்சாப் அணியில் 8-வது வீரராக அபிஷேக் களமிறங்கி 94 ரன்களை விளாசி தனது பேட்டிங்கை நிரூபித்தார். 2023ம் ஆண்டில் நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அபிஷேக் சர்மா சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். இந்தத் தொடரில் 10 இன்னிங்ஸில் அபிஷேக் 485 ரன்கள் குவித்தார். இதில் 3 சதங்கள், 2 அரைசதங்களை அபிஷேக் விளாசினார். அது மட்டுமல்லாமல் முதல்தரப் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக 53 போட்டிகளில் அபிஷேக் சர்மா விளையாடியுள்ளார். இதில் 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 42 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை அபிஷேக் பதிவு செய்தார். 2022ம் ஆண்டு முதல் தரப்போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தையும் அபிஷேக் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2016-இல் நடந்த ஆசியக் கோப்பையின்போது, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு கேப்டனாகவும் அபிஷேக் செயல்பட்டு சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தார். 2017ம் ஆண்டு உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் அபிஷேக் தலைமையிலான இந்திய அணி 3-1 என்று கைப்பற்றியது. 2018ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் அபிஷேக் சர்மா இடம் பெற்றிருந்தார். காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம் அடித்தும், 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES யுவராஜ் சிங்கின் பங்களிப்பு என்ன? கொரோனா காலத்துக்கு முன்புவரை அபிஷேக் சர்மாவின் பேட்டிங் நடுவரிசை வீரராகவே அடையாளப்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இருந்து யுவராஜ் சிங்கின் வழிகாட்டலில்தீவிரமாக அபிஷேக் சர்மா பயிற்சி எடுத்தார். இதன் விளைவாக டாப்-3 பேட்டராக அபிஷேக் சர்மா தன்னை உயர்த்தி, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் வீரராக மாறினார். அபிஷேக் சர்மாவை கடந்த 4 ஆண்டுகளில் செதுக்கி, தேர்ந்த பேட்டராகவும், ஆல்ரவுண்டராகவும் ஒளிரச் செய்ததில் யுவராஜ் சிங்கிற்கும் பங்குண்டு. “என்னுடைய பேட்டிங் திறமையை, சிக்ஸர் அடிக்கும் திறனை மேம்படுத்தியது யுவராஜ் சிங்தான். எனக்கு சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்த என் தந்தை என்னை சுதந்திரமாக விளையாடவே அனுமதித்தார். எனக்கு பயிற்சியாளராக இருந்த என் தந்தை பெரிய ஷாட்களை அடிக்க ஊக்கப்படுத்தினார், பொதுவாக பயிற்சியாளர்கள் பெரிய ஷாட்களை ஆட அறிவுறுத்தமாட்டார்கள் ஆனால், என் தந்தை வேறுபட்டு நின்று என்னை ஊக்கப்படுத்தினார். அதையே களத்திலும் பிரதிபலித்தேன். நான் அச்சமில்லாமல் அழுத்தமின்றி பேட் செய்ய என் தந்தையும், யுவராஜ் சிங்கும் முக்கியக் காரணம் ” என அபிஷேக் கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES அபிஷேக் சர்மாவின் சதத்தின் ரகசியம் அபிஷேக் சர்மா 2-ஆவது போட்டியில் சதம் அடித்தில் சுப்மான் கில்லின் பங்களிப்பும் இருக்கிறது. சுப்மான் கில் பேட்டை கடனாக பெற்று விளையாடித்தான் அபிஷேக் 2வது ஆட்டத்தில் களமிறங்கி ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். சுப்மான் கில் பேட்டில் விளையாடியது குறித்து அபிஷேக் சர்மா தனது பேட்டியில் கூறுகையில் “ ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் சுப்மான் கில்லின் பேட்டை கடனாக வாங்கித்தான் விளையாடினேன். எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடியான, அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். நான் இந்திய அணியில் தேர்வானதும் எனக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது சுப்மான் கில்தான்.” “சுப்மான் கில் பேட்டை வாங்கி விளையாடுவது இப்போது வந்த பழக்கம் அல்ல. நான் 12வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடும்போதிலிருந்து வந்தது. எப்போதெல்லாம் அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது சுப்மான் கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். ஐபிஎல் தொடரிலும் இதுபோல்தான் நடந்துள்ளது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் அப்படித்தான் சுப்மான் கில் பேட்டில் விளையாடினேன்” எனத் தெரிவித்தார். அழுத்தத்தை தாங்கி விளையாடும் போக்கு குறித்து அபிஷேக் கூறுகையில் “அழுத்தத்தை தாங்கி விளையாட எனக்குக் கற்றுக்கொடுத்தது ஐபிஎல் தொடர்தான். முதல் போட்டி என்றபோதிலும்கூட பெரிதாக அழுத்தத்தோடு விளையாடவில்லை. ஆனால், டக்அவுட் ஆகியது எனக்கு நெருக்கடியளித்தது. ஆனால் என் மனநிலை, பேட்டிங் ஆகியவை சரியான நிலையில்தான் இருந்தது.” என்றார். https://www.bbc.com/tamil/articles/cgl71r9g4yro