Everything posted by ஏராளன்
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
க.பொ.த (சா/த) விஞ்ஞான தாள் : பரிட்சார்த்திகள் அனைவருக்கும் இரண்டு இலவச புள்ளிகள்! க.பொ.த (சா/த) விஞ்ஞான தாள் 1 இன் கேள்விகள் 09 மற்றும் 39 தொடர்பான முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளார். இந்த குறிப்பிட்ட கேள்விகளின் தெளிவு மற்றும் நியாயத்தன்மை குறித்து மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எழுப்பிய முறைப்பாடுகளை கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301699
-
யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது
யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர்? - வெளியான அதிர்ச்சி தகவல் Published By: DIGITAL DESK 7 15 MAY, 2024 | 02:39 PM யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார். அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் . அதேவேளை கணவன் - மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183610
-
சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங் பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூரிலிருந்து 19 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து வலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார். இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. 1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர். லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். "மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார். அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார். லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார். அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது. ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை. 2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார். "ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர். அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார். சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும். இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்? லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர். இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார். "சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும். ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார். மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார். அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார். சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார். அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார். "தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார். அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். . https://www.bbc.com/tamil/articles/cd131z29zvko
-
யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா மோசடி!
Published By: DIGITAL DESK 7 15 MAY, 2024 | 09:34 AM யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார். இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர், பொருளாளர் தாமாகவே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாக செலுத்தியுள்ளனர் . இம்மோசடி தொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரச முத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா ? குறித்த விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது போலி இறப்பர் முத்திரை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183570
-
அனுராதபுரத்தில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் - உடனடியாக விசாரணைகளை கோரியது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 11:27 AM அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனுராதபுரம் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த கபிலகுமார டிசில்வா கடத்தப்பட்டு இரகசியமறைவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையை மிக நீண்டகாலமாக பாதித்துவரும் பலவந்த காணாமல் போகச்செய்தல் மீண்டும் தலைதூக்குகின்றது என்ற அச்சத்தின் மத்தியில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. கபிலடிசில்வா என்பவர் காணாமல்போனதன் பின்னணியில்உள்ள அச்சத்தை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல்டிபி தெகிதெனிய கடிதமொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளார். மார்ச் 27 ம் திகதி முதல் கபில டிசில்வா என்பவர் காணாமல்போயுள்ளார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் கபில டி சில்வாவை கைதுசெய்தனர் என அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 29 ம் திகதி விசேட அதிரடிப்படையினர் கபில டி சில்வாவின் வீட்டிற்கு சென்றனர் அவர் எங்கு என விசாரித்தனர் என தாயார் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக காணப்படுகின்றார், எனினும் அவரை தாங்கள் கைதுசெய்யவில்லை என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சில்வா பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் காலி சிறைச்சாலையில்உள்ளதாகவும் தகவல் கிடைத்தது எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலைக்கான விஜயத்தின் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் சில்வாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். மார்ச்26ம் திகதி சீருடை அணியாத தங்களை பொலிஸார் என தெரிவித்த நபர்கள் தன்னை கைதுசெய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கண்ணைக்கட்டி வெள்ளை வானில் இரகசிய இடத்திற்கு கொண்டுசென்றனர், தாக்கினர், விசாரணை செய்தனர் என சில்வா தெரிவித்துள்ளார். இறுதியில் தான் சந்தேகநபர் இல்லை என உறுதி செய்து பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183587
-
இஸ்ரேலிய, டெல் ஹாஷோமர் இராணுவ தளத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து
Published By: VISHNU 15 MAY, 2024 | 04:18 AM இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் கூறுகின்றன. தீக்கு இரையான கிடங்குகள் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183566
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
டெல்லியின் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி ரசிகர்கள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தியதால், “நானும் போகக்கூடாது, நீயும் முன்னேற முடியாது” என்ற ரீதியில் முடிவு இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு அணிகளின் முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகி ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் டெல்லிக்கு பயன் உண்டா? லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தி 14 புள்ளிகளுடன் முடித்தாலும், அதன் நிகர ரன்ரேட் ஆர்சிபி அணியைவிட மோசமாகச் சரிந்துள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணியை ஆர்சிபி வென்றால் நல்ல ரன்ரேட் பெறும்போது டெல்லி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், கணித ரீதியாக வெளியேறிவிட்டது, ஆனால், அதிகாரபூர்வமாக வெளியேற்றப்படவில்லை. சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய வேண்டும். இதெல்லாம் நடந்தால் சன்ரைசர்ஸ் நிக ரன்ரேட்டைவிட டெல்லி அணி நிகர ரன்ரேட் உயர்ந்து, ப்ளே ஆப் செல்லலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் நிலைமை என்ன? அதேபோல லக்னெள அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது. 7-வது இடத்தில் இருக்கும் லக்னெள அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று, நிக ரன்ரேட் ரேட் மைனஸ் 0.787 எனச் சரிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னெள அணி கடைசி லீக்கில் வென்றாலும் அந்த அணிக்கு எந்த விதத்திலும் உதவாது. 14 புள்ளிகளுடன் லக்னெள முடித்தாலும், நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறும். ராஜஸ்தானுக்கு ‘ஆடாமலேயே கிடைத்த’ பிளேஆப் வாய்ப்பு லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆர்சிபி அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. சிஎஸ்கே தற்போது 14 புள்ளிகளோடு இருப்பதால், கடைசி லீக்கில் ஆர்சிபியை வென்றால் 16 புள்ளிகள் பெறும், தோல்வி அடைந்தால் 14 புள்ளிகளோடு முடிக்கும். ஆதலால், 16 புள்ளிகள் பெறுவதற்கு வாய்ப்புள்ள அணிகளில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மட்டுமே உள்ளன. ஏற்கெனவே கொல்கத்தா அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டநிலையில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணியும் ப்ளே ஆஃப் சுற்றை நேற்றைய டெல்லியின் வெற்றியால் உறுதி செய்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 2-ஆவது இடத்துக்கு இடத்துக்கு கடும் போட்டி சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகளும், சிஎஸ்கே வெற்றியையும் பொருத்து, ராஜஸ்தான் அணியின் இடம் உறுதியாகும். ஆனால், ராஜஸ்தான் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாது. ஆதலால், அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் அணி “மிகுந்த ரிலாக்ஸாக டென்ஷன்” இன்றி விளையாடலாம். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகள் பெறும், ராஜஸ்தான் அணியும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் வென்றால் 20 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடிக்கும், ஒரு ஆட்டத்தில் வென்றால், சன்ரைசர்ஸ் அணியோடு 2-வது இடத்துக்கு மல்லுகட்டும். எந்த அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 2வது இடத்தையும், அடுத்த அணி 3வது இடத்தைப் பிடிக்கும். சிஎஸ்கேவுக்கு வாழ்வா-சாவா போட்டி சிஎஸ்கே அணி 16 புள்ளிகள் பெற்றால் 4-ஆவது இடத்தை சிக்கலின்றி உறுதி செய்யும். ஒருவேளை ஆர்சிபியிடம் தோல்வி அடைந்தாலும், பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்காமல் அதன் ரன்ரேட்டை பாதிக்காமல் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல வழிவகுத்துவிடும். தற்போது டெல்லி அணி லக்னௌவை வீழ்த்தியிருப்பதன் மூலம், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் நன்மை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஆர்சிபி ரசிகர்கள் டெல்லியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், பிளேஆப்பின் மீதமிருக்கும் இரு இடங்ளுக்கு அதிக வாய்ப்பு கொண்ட பட்டியலில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுடன் ஆர்சிபியும் இப்போது சேர்ந்து கொண்டது. கடைசி போட்டியில் வெல்லும்பட்சத்தில் ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்புக் கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது எப்படி? டெல்லி அணி 2024 ஐபிஎல் சீசனை முடிக்கும்போது ஆறுதலான வெற்றியோடு முடித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையாமல், நடுவரிசை பேட்டர்கள் அமையாமல் பல தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், அனைத்தும் ஒன்றுகூடி வரும்போது, வாய்ப்புகள் போதுமான அளவில் டெல்லி அணிக்கு இல்லை. டெல்லியில் மீண்டும் ஒருமுறை 200 ரன்களுக்கு மேல் டெல்லி கேபிடல்ஸ் அணி குவித்தது. முதல் 4 பேட்டர்களின் அருமையான பங்களிப்பால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அதிரடிபேட்டர் மெக்ருக் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அபிஷேக் போரெல் (58) டிரிஸ்டென் ஸ்டெப்ஸ்(57) ஆகியோரின் அரைசதம் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. பந்துவீச்சில் இம்பாக்ட் ப்ளேயராக வந்த இசாந்த் சர்மா தொடக்கத்திலேயே லக்னெள அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்து பாதி தோற்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய இசாந்த் சர்மா 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னெள அணியை நிகோலஸ் பூரன்(61), அர்ஷத் கான்(58நாட்அவுட்) இருவரும் மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏமாற்றிய பிரேசர்ஸ் மெக்ரூக் டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்ருக் 2வது முறையாக நேற்றைய ஆட்டத்தில் அர்ஷத் கான் ஓவரில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், அபிஷேக் போரெல் இருவரும் பவர்ப்ளேயில் ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக மோசின் கான் ஓவரில் அபிஷேக் 3 பவுண்டரிகளையும், அர்ஷத் கான் ஓவரில் சிக்ஸரும் விளாசினார். யுத்விர் சிங் ஓவரை குறிவைத்த ஹோப் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்களை எட்டியது. நவீன் உல் ஹக் முதல் ஓவரை வெளுத்த ஹோப், போரெல் 17 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 16 பந்துகளில் 43 ரன்களை அதிரடியாகச் சேர்த்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுழற்பந்துவீச்சாளர்களால் திணறிய டெல்லி ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் லக்னெள அணியின் பிஸ்னோய், க்ருணல் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் டெல்லி அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுக்கிப்பிடித்தனர். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-ஹோப் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிஸ்னோய் உடைத்து, ஹோப்பை 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். நவீன் உல்ஹக் மெதுவான பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று அபிஷேக் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 7-ஆவது ஓவரிலிருந்து 12 ஓவர்கள் வரை 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பவர்ப்ளேயில் 73 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 5 ஓவர்களில் டெல்லி ரன் சேர்ப்பு குறைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அதிரடி கேப்டன் ரிஷப் பந்த் கேமியோ ஆடி 33 ரன்களில் நவீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர்கள்வரை டெல்லி அணி 200 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் வந்தபின் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. அர்ஷத் வீசிய 16-ஆவது ஓவரில் ஸ்டெப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரையும்,நவீன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி ஸ்டெப்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 72 ரன்கள் சேர்த்து 200 ரன்களைக் கடந்தது. டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள்சேர்த்ததுதான் டெல்லி அணி 208 ரன்களை எட்ட காரணமாக அமைந்தது. அதிர்ச்சி அளித்த இசாந்த் 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் லக்னெளவின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். முதல் 3 ஓவர்களில் குயின்டன் டீ காக்(12), கேஎல் ராகுல்(5), தீபக் ஹூடா(0) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. ஆனால், நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தது முதல் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்ததால், பவர்ப்ளேயில் லக்ளென 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி 6 ரன்களில் ஸ்டெப்ஸ் வெளியேற்றினார். இதனால் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெளவை மீட்ட பூரன், அர்ஷத் கான் ஆனால், நிகோலஸ் பூரனின் அற்புதமான ஆட்டம் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. அக்ஸர் படேலின் ஓவரில் பூரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 20 ரன்கள் விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரையும் விட்டுவைக்காத பூரன் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு 20 பந்துகளில் பூரன் அரைசதம் அடித்தார். முகேஷ் குமார் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து லக்னெள மோசமானநிலைக்கு சென்றது. ஆனால் “அன்கேப்டு” வீரர் அர்ஷத் கான் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தில் சூடு பிடித்தது. டெல்லி பந்துவீச்சை பறக்கவிட்ட அர்ஷத் கான் 5 சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு லக்னெள அணி வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது. அர்ஷத் கான் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷத் கான் இருந்தவரை லக்னெள வெற்றி பெற்றுவிடும் என எண்ணப்பட்டது. ஆனால், முகேஷ் குமார், ரசிக் சலாம் இருவரும் டெத் ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியதால், 19 ரன்களில் டெல்லி வென்றது. அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c98z8g8xv51o
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
இந்தக் கருத்து சரிதான். யாரைப்பராட்டத் தவறிவிட்டோம் என சொன்னால் பாராட்டலாமே அண்ணை.
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
வாய்ப்பிருக்கு!
-
நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
Published By: VISHNU 14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின் இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின் இன்றைய நிலையை நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
-
33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் சிகிச்சை குறிப்பை திருடி உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி?
பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார். படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர். பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் சாப்டர் வழக்கின் அடுத்த நகர்வு பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, 2024 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெகுனாவெல முன்னிலையில் இடம்பெற்றது இதன்போது, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்பில் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர். இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் படங்கள் போன்ற இரகசிய தகவல்கள் உள்ளன. எனவே குறித்த கையடக்கத் தொலைபேசிகளை மீட்டெடுக்க அவரின் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை இது தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டறிந்த மேலதிக நீதவான், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவித்தார். இந்தநிலையில் வழக்கு விசாரணை 2024 ஜூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி பிஎல்சி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் சாஃப்டர், 2022 டிசம்பர் 15 அன்று பொரளை பொது மயானத்தில், அவரது காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர், கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருநாளில் உயிரிழந்தார். https://tamilwin.com/article/dinesh-schaffter-s-family-appeals-to-court-1715683616
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் பின்னரே இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் இதன் ஒரு நடவடிக்கையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்த அமைப்பு மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/india-s-ban-against-sri-lankan-issue-1715683197
-
கிண்டலுக்கு உள்ளான 56 அடி உயர முருகன் சிலை!
இந்தியாவின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட முருகன் சிலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ’குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான்’ என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை கொழுகொழு கன்னங்களோடு சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையோ உடல் வற்றி, முகம் ஒட்டி, புன்னகையற்ற தோற்றத்தில் காணப்படுகிறது. கடவுள் சிலைகள் செய்வதற்கென்றே காலம்காலமாக பல விதிமுறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அழகாக சிலை செய்யும் பல ஸ்தபதிகளும் உள்ளனர். ஆனால் இந்த சிலை அமைப்பு எதுவுமின்றி கார்ட்டூன் பொம்மை போல இருக்கும் இந்த முருகன் சிலை தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. https://thinakkural.lk/article/301590
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் அகதிமுகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் 13 பேர் பலி - பல உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட நிலையில் Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 04:08 PM காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 100பேருக்கு அடைக்கலம் அளித்திருந்த காஜா குடும்பத்தின் நான்குமாடி வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை டெய்ர் அல் பலாலில் உள்ள அக்அக்சா தியாகிகள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள சிஎன்என்னின் ஊடகவியலாளர் ஒருவர் குண்டுவீச்சில் சிக்கியவர்களுடன் தான் உரையாடியவேளை நால்வர் தங்கள் குடும்பங்களை சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன என தெரிவித்தனர் என குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்கள் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருப்பதையும் மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்க முயல்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/183532
-
ஆப்கானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை - அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு கரிநாள் என விமர்சனம்
Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 12:48 PM ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இராணுவஇரகசியங்களை திருடி அம்பலப்படுத்தியதை மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது. யுத்த குற்றங்கள்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை தண்டிக்க நினைக்கின்றது குற்றவாளிகளை தண்டிக்க முயலவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஆப்கான்யுத்த குற்றங்கள் தொடர்பில் முதலில் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் யுத்தகுற்றவாளியல்ல மாறாக அதனை அம்பலப்படுத்தியவர் என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் என சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ரவான் அராவ் தெரிவித்துள்ளார். இது அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என மெல்பேர்னை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட நிலையத்தின் பதில் சட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். மக்பிரைட்டின் சிறைத்தண்டனை உண்மையை அம்பலப்படுத்தும் ஆர்வம் கொண்டுள்ளவர்களிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் ஆவணங்களை பகிர்ந்துகொண்டதை தான் ஒருபோதும் இரகசியமாக வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/183498
-
இன்றைய வானிலை
வாட்டிவதைக்கும் வெப்பநிலை குறையும்: வானிலை ஆய்வு மையம் தென்மேற்குப் பருவமழை மே 20க்குப் பிறகு எதிர்பார்க்கப் படுவதால் ‘எச்சரிக்கை நிலைக்கு’ உயர்ந்துள்ள வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பெய்யும் என அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பிற்பகல் 1 மணிக்குப் பிறகு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். இதன்படி, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதிக அபாய மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://thinakkural.lk/article/301574
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
டிரம்ப் தனது பாலியல் உறவுகள் குறித்த தகவல்கள் வெளிவருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் - அவரின் முன்னாள் சட்டத்தரணி 14 MAY, 2024 | 11:39 AM 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை தனது பாலியல் தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார் என அவரது முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹென் தெரிவித்துள்ளார் டிரம்ப் ஆபாசபட நடிகைகள் உட்பட பல பெண்களுடன் தனக்கிருந்த தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்காக அந்த பெண்களை மௌமாக்குவதற்காக பணம் வழங்கியது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போதே மைக்கல் கோஹேன் இதனை தெரிவித்துள்ளார். ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் தனக்கிருந்த தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியில் வருவதை தடுக்கவேண்டும் என டிரம்ப் தெரிவித்தார் என அவரின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்த கதை வெளியில் தெரியவந்தால் பெண்வாக்காளர்களின் வாக்குகளை தான் இழக்கவேண்டியிருக்கும் என டிரம்ப் கவலையுடன் காணப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரென்மக்டொகெல் என்ற பிளேபோய் சஞ்சிகை மொடல் தனக்கும் டிரம்பிற்கும் இடையில் திருமணத்திற்கும் அப்பாற்பட்ட உறவு காணப்பட்டது என தெரிவிக்கின்றார் இது வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யுங்கள் என டிரம்ப் அவ்வேளை தனது சட்டத்தரணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரென்மக்டொகெலிற்கு அவர் டிரம்ப் குறித்த இரகசியங்களை அம்பலப்படுத்துவதை தடுப்பதற்காக 150,000 வழங்கப்பட்டதாக டிரம்பின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நான் டிரம்பின் வழிகாட்டலின் கீழ் அவரின் நன்மைக்காக செயற்பட்டேன் என கொஹென் தெரிவித்துள்ளார். டிரம்ப் இதுவரை இந்த தகவல்களை நிராகரிக்காதமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183484
-
34,000 முன்பள்ளி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள்: சுசில்
இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக முக்கியமான கட்டமாக இருப்பதால், குழந்தை பருவ வளர்ச்சிக்கு கல்வியில் முதலிடம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். முன்பள்ளிக் கல்வியைப் பெற வேண்டிய குழந்தைகளில் 20 வீதமானோர் கல்வி கற்க வாய்ப்பில்ல்லாமல் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/301570
-
காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு அமெரிக்காவின் உதவி தார்மீக காயங்களை ஏற்படுத்தியது - பதவியை இராஜினாமா செய்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அதிகாரி
Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 11:06 AM காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான் இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார். எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது, நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183480
-
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மக்கள் அவதி
எதிர்வரும் 3 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு – கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு! இன்று (14) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சுகவீன விடுமுறையை அறிவித்து சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களின் சேவையை அரசியலமைப்பில் அங்கீகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 2 நாட்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301519
-
திருகோணமலையில் மாணவி உயிர்மாய்ப்பு
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:44 PM திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இன்றையதினம் (14) கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதான சிறுமி ஒருவரும் உயிர்மாய்த்த சம்பவமும், கடந்த 12ஆம் திகதி மூதூர் - பாரதிபுரத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/183540
-
அரசு வழங்கிய இலவச அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் மரணம்? விசாரணைக்கு உத்தரவு!
ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509
-
சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர கற்கையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:34 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த உயர்தர பாடவிதானங்களை உள்ளடக்குவதற்காக ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2024ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183537