Everything posted by ஏராளன்
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை ஈரான் கைவிடவேண்டும் - அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 12 APR, 2024 | 11:07 AM இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடக பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்குஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் அறிகுறிகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் கரிசணை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181027
-
கண்களே இல்லாத, தங்கநிறமான இந்த அரிய விலங்கு எங்கு தென்பட்டது தெரியுமா?
பட மூலாதாரம்,KANYIRNINPA JUKURRPA MARTU RANGERS கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 11 ஏப்ரல் 2024 உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது. இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் உள்ளது. இதற்குச் சிறிய வாலும், துடுப்பு போன்ற கைகளும் உள்ளன. இது மறைந்து வாழும் தன்மை கொண்டதால், மிக அரிதாகவே தென்படுகிறது. இந்த விலங்கினத்தில் மொத்தம் எத்தனை இருக்கின்றன என்று அதிகாரிகளுக்கே தெரியாது. கடினமான பாலைவனத்தில் இருப்பதாலும், மறைந்து வாழ்வதாலும், இவ்விலங்கு ஒரு தசாப்தத்தில் வெகு சில தடவைகளே மக்களுக்குத் தென்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் பெரும் மணல் பாலைவனம் எங்கு தென்பட்டது? தற்போது இவ்விலங்கு, ஆஸ்திரேலியாவின் பெரும் மணல் பாலைவனம் (கிரேட் சாண்டி டெஸர்ட் - Great Sandy Desert) எனும் பகுதியின் உரிமையாளர்களான கன்யிர்னின்பா, ஜுகுர்பா மர்து பழங்குடி மக்கள் கண்டிருக்கின்றனர். இவர்கள் இந்நிலத்தின் உரிமையாளர்கள். தங்கள் கலாசார அறிவைக்கொண்டு இப்பகுதியைக் கண்காணித்துக்கொள்ளும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாஇவ்ன் பெர்த் நகரிலிருந்து 1,500கி.மீ தொலைவில் இருக்கும் இந்தப் பாலைவனத்தில் இப்பழங்குடியினர் வேலை செய்துகொண்டிருந்த போது இவ்விலங்கினைக் கண்டனர். வன உயிரி நிபுணரான காரெத் கேட், இவ்விலங்குகளைப் பார்ப்பது மிக அரிதானதனால், இவற்றின் இருப்பே பல மக்களுக்கு மர்மமாக இருக்கிறது என்றார். “இந்த விலங்கைக் கண்ட ஒருவருக்கு இது என்னவென்றே தெரியவில்லை. அவர் இதனை ஒரு கினி பன்றியின் குட்டி என்று நினைத்துவிட்டார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தார்னி டெவில் (thorny devil) எனப்படும் தோலில் முட்கள் நிறைந்த பல்லியினம் பாலைவனத்தின் வினோத விலங்குகள் நிலத்தில் வளைபறித்து வாழும் இந்த விலங்குகள் மணற்குன்றுகளுக்குள் வசிக்கின்றன. மிகக்குறைவான நேரத்தையே தரையின்மீது செலவிடுகின்றன. “இவை மணலில் கிட்டத்தட்ட நீந்திச் செல்கின்றன. குழிகள் மற்றும் அகழிகளைத் தோண்டி இவை தங்கள் வளைகளுக்குச் சென்றடைகின்றன,” என்றார் காரெத் கேட். இந்த விலங்கைப் பற்றி இதுவரை மிகச் சொற்பமாகவே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிரது. அதனால்தான் ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக இவ்விலங்கு தென்படுவது ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலைவனத்தில் அதிகளவில் உயிரினங்கள் இல்லை என்று பலரும் நினைக்கின்றனர், என்கிறார் கேட். “ஆனால் பாலைவனங்கள் பல விசித்திரமான விலங்குகளால் நிறைந்துள்ளன,” என்கிறார் அவர். உதாரணமாக, பில்பி (bilby) எனப்படும் பெரிட காதுகளுடைய முயல்போன்ற விலங்கு. இது தனது காதுகள் வழியே வெப்பத்தை வெளியிடுகிறது. மற்றொன்று, தார்னி டெவில் (thorny devil) எனப்படும் தோலில் முட்கள் நிறைந்த பல்லியினம். இது தனது மேனி முட்களின் உதவியோடு தண்ணீரை தனது வாய்வரை இழுத்து அருந்துகிறது. இப்படி, பாலைவனத்தில் வாழும் விலங்குகள் தங்கள் விசித்திர குணங்களின்மூலம் கடினமான சூழ்நிலையில் வாழப் பழகிக்கொண்டன. “பாலைவனத்தின் உயிரினங்களை வேறு ஓரிடத்தில் பார்த்தால், அவை என்னவென்று ஹெரியாதவர்களுக்கு அவை மிகவும் வினோதமாகத் தெரியும்,” என்கிறார் கேட். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cjq53k21898o
-
வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்த அலன் கீனன் - பரந்துபட்ட அறிக்கையொன்றை வெளியிடவும் உத்தேசம்
Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 05:11 PM (நா.தனுஜா) அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (மார்ச் 8 ஆம் திகதி) பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்கள் கடந்ததன் பின்னர், நாட்டில் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் கள நிலைவரம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை பகுதிகளுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டதாகவும், அங்குள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது. அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் விவகாரம் பற்றியும் அலன் கீனன் பரந்துபட்ட ரீதியில் ஆராய்ந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேற்பட்ட காலம் இலங்கையில் தங்கியிருந்த அலன் கீனன், அக்காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரசியல் தலைமைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்துக் கள நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதன்படி வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரங்களின் பின்னணி, அப்பகுதியில் வாழும் மக்களின் மனநிலை, இக்குழப்பங்களின் பின்னணியிலுள்ள நோக்கம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் வெகுவிரைவில் அவர் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/180987
-
சென்னையின் முக்கிய ஏரிகளில் குறைந்துவரும் நீர் – ஒரு கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்குமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 11 ஏப்ரல் 2024 தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாகி வருகிறது, ஹைதராபாத்-இல் அடுத்த சில வாரங்களில் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை பார்க்கும் போது, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெங்களூரூவுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்று நீரை பெற்று வரும் நீர் நிலைகளில் 39% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குடிநீர் வழங்கல் குறைக்கப்பட்டதற்காக சாலைகளில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர். நகரமயமாக்கல் அதிகரித்து வரும் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தும் பெங்களூரூ போன்ற நிலையை நோக்கிச் செல்லலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள 185 நீர் நிலைகளில் 150-க்கும் மேற்பட்டவை ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது மாசுபட்டு உள்ளன என்று தெலங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. பெங்களூரூவில் 1973-ஆம் ஆண்டு 8% நிலத்தில் மட்டுமே கட்டிடங்கள் இருந்தன, ஆனால் 2023-ஆம் ஆண்டு 93.3% ஆக உயர்ந்துள்ளது என இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் தரவுகள் கூறுகின்றன, இது போன்ற நகரமயமாக்கலுக்கு சென்னை விதிவிலக்கு அல்ல. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து நடத்திய ஆய்வில், சென்னையில் கட்டிடங்கள் இருக்கும் நிலபரப்பு 1,488 சதுர கி.மீ-லிருந்து நூறு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் ஏரி நீர் இருப்பு தரவுகள் இந்த கவலையை அதிகரிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக விளங்கக் கூடியவை ஐந்து ஏரிகள் சென்னை ஏரிகளில் எவ்வளவு நீர் உள்ளது? சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில், அவற்றின் முழு கொள்ளளவில் தற்போது 57% மட்டுமே நீர் உள்ளது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி-யாக உள்ளது. (டி.எம்.சி – ஆயிரம் மில்லியன் கன அடி) அவற்றில் ஏப்ரல் 10-ஆம் தேதி நிலவரப்படி 7.53 டி.எம்.சி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் இந்த ஏரிகளில் 8.99 டி.எம்.சி நீர் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஏரிகளில் மொத்தம் 11.03 டி.எம்.சி நீர் இருந்தது. நான்கு மாதங்களில் 3.5 டி.எம்.சி நீர் குறைந்துள்ளது. கோடைக்காலம் உச்சத்தை தொடாத நிலையில், வெப்ப அலைகளும் தீவிரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்படும் வேளையில், வரும் வாரங்களில் நிலைமை மோசமாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஏழில் ஒரு பங்கு சென்னையில் உள்ளது. சமீபத்திய தரவுகள் படி, சென்னை சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்டது. மாநிலத்திலேயே அதிக மக்கள் அடத்திக் கொண்டதும் சென்னை நகரமே. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,000 முதல் 27,00000 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இந்த நகரத்தின் ஒரு நாளுக்கான குடிநீர் தேவை சுமார் ஒரு டி.எம்.சி ஆகும். இதில் 850 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கும். மீதமுள்ள தேவை நிலத்தடி நீர் உள்ளிட்ட பிற ஆதாரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படும். சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக விளங்கக் கூடியவை ஐந்து ஏரிகள். செம்பரம்பாக்கம், பூண்டி சோழவரம், புழல் மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட தேர்வாய் கண்டிகை. செம்பரம்பாக்கத்தின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி, பூண்டியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். புழல் 3,300 மில்லியன் கன அடி நீரையும், சோழவரம் 1,081 மில்லியன் கன அடி நீரையும், தேர்வாய் கண்டிகை 500 மில்லியன் கன அடி நீரையும் இருப்பு வைத்துக் கொள்ள முடியும். படக்குறிப்பு,வீராணம் ஏரி வற்றிய வீராணம் ஏரி இவை தவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கடலூரில் இருக்கும் வீராணம் ஏரியிலிருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டுவரக்கூடும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றி விட்டது. மேலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தின் வட எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்ட ஊத்துக்கோட்டையை வந்தடையும் கிருஷ்ணா நீர், அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும். இந்த திட்டத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை 12 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததில்லை. ஆந்திராவில் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் ஏற்படும் போது, தானாக வரும் நீர், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தேவைப்படும் போது இரு மாநிலங்களுக்கு இடையே பல கடிதப் போக்குவரத்துகளுக்குப் பிறகே கிடைக்கிறது. படக்குறிப்பு,ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர் தேக்கத்தை வந்தடையும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளே தீர்வா? சென்னையின் ஏரிகளில் வரும் நாட்களில் நீர் இருப்பு மேலும் குறையும் என்று கூறும் நீர் வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறுகிறார். “சென்னையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும். இந்த ஆலைகளிலிருந்து ஒரு நாளுக்கு 350 எம்.எல்.டி (எம்.எல்.டி - ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர்கள்) நீர் கிடைக்கும். ஜூன் மாதத்துக்கு பிறகு தெலுங்கு கங்கை திட்டத்திலிருந்து சென்னைக்கு நீர் கிடைக்கும். வீராணம் வறண்டு இருப்பதால், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தான், அந்த ஏரியிலிருந்து நீர் கிடைக்கும்,” என்கிறார். கடல்நீரை குடிநீராக்கும் ஆலை 2010-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது. சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலையும் 100 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது. நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் வழங்கும் திறன் கொண்டது. தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதிகளில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது. இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடல்நீரை குடிநீராக்கும் ஆலை 2010-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக அமைக்கப்பட்டது பிற குடிநீர் ஆதாரங்களிலிருந்து நீர் எடுப்பதற்கான செலவை விட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் செலவுகள் மூன்று மடங்கு அதிகமாகும். எஸ். ஜனகராஜன், “குடிநீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஏற்படாது என்றாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை பயன்படுத்தும் சிறந்த தீர்வு அல்ல. சென்னையில் ஒரு ஆண்டுக்கு 1,400 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இந்த மழை நீரானது சென்னையின் குநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானது. சென்னையை சுற்றி பல நீர் நிலைகளும் உள்ளன. மழைநீர் சேமிப்பு திட்டங்கள் என்னவாயின?” என்கிறார். மேலும், "மழைநீரைச் சேமித்து வைக்க நம்மிடம் திட்டங்களும் வசதிகளும் இருக்க வேண்டும். இப்போதும் 19-ஆம் நூற்றாண்டில் இருப்பது போல் இருக்க முடியாது. காலநிலை மாற்றம் காரணமாக மழை பொழியும் விதங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் மழையைச் சேமிக்கக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பிரச்னை உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது. சாலைகளுக்கு அடியில் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்கள் அமைத்து சில நாடுகளில் நீர் சேமிக்கின்றனர். பேரிடர்களை ஆக்கபூர்வமான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்,” என்கிறார். படக்குறிப்பு,நீர்வள மேலாண்மை நிபுணர் எஸ். ஜனகராஜன் சென்னையை உலுக்கிய 2019 தண்ணீர் தட்டுப்பாடு சென்னையில் கடந்த 2019-ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் விடுதிகள் மூடப்பட்டு, உணவக நேரங்கள் குறைக்கப்பட்டத்தையும், குடியிருப்புப் பகுதிகளில் கைகலப்புகளையும் கூட சென்னை எதிர்கொண்டது. அப்போது பிற மாவட்டங்களில் இருந்த விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது. அதே போன்று அதற்குமுன்னர் 2003-ஆம் ஆண்டு மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. அதன் பிறகே அனைத்து கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வழங்கப்பட்டது. அது போன்ற நிலை இந்த ஆண்டு ஏற்படாது என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், மாறி வரும் பருவநிலைகள் காரணமாக எதிர்காலத்தில் மற்றொரு வறண்ட கோடைக்காலத்தை சென்னை மட்டுமல்லாமல் எந்த பெரிய நகரமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒரு கோடிக்கும் மேலான மக்கள் வசிக்கும் சென்னை நகரத்தின் முக்கிய பலம் இங்கு பெய்யும் மழை ஆகும். ஒரு ஆண்டுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் அளவு சென்னையில் மழை பெய்கிறது. அதை முறையாகச் சேமித்து வைத்துக் கொள்வதே எல்லா வகையிலும் சிறந்த தீர்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3gelz3lpdpo
-
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஏன்? எப்படிக் கட்டுப்படுத்துவது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி பதவி, பிபிசி செய்திகள், பிரேசில் 11 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிலருக்குப் பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்பட்டாலும், ஆண்களுக்கும் இது ஏற்படக்கூடும். இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பெயர் கேன்டிடியாஸிஸ் (Candidiasis). கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை, பொதுவாக மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு இணைந்து வாழும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும். ஆனால் இந்த உயிரினம் ‘சந்தர்ப்பவாதியாகக்’ கருதப்படுகிறது. அதாவது, தனக்கு நிலைமை சாதகமாக இருக்கும்போது அது தொற்றுநோய்களை ஏற்படுத்தும். ஏதாவது ஒரு காரணத்தால் இந்தப் பூஞ்சையின்களின் அளவு அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை சீர்குலைந்து கேன்டிடியாஸிஸ் தொற்று ஏற்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது ஆண்களுக்கு இந்தத் தொற்று ஏன் ஏற்படுகிறது? பெண்களுக்கு இந்தப் பூஞ்சையின் அளவு அதிகரிப்பதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி, கருத்தரித்தல், கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல், ஹார்மோன் மாற்று சிகிச்சை ஆகியவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பெண்களின் பிறப்புறுப்பின் யோனி pH-ஐ பாதிக்கலாம். இது பூஞ்சையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது. கூடுதலாக, பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுவும் கேன்டிடா பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. ஆனால், ஆண்கள், தங்கள் பிறப்புறுப்பை நீண்ட நேரம் குளியல் உடைகள், டயப்பர்கள் போன்ற ஈரமான ஆடைகளால் மூடிவைத்திருந்தால் இந்தத் தொற்று ஏற்படுகிறது, என்கிறார் பிராசிலின் சிறுநீரியல் சங்கத்தின் நோய்த்தொற்றுத் துறை உறுப்பினர் பியான்கா மாசிடோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலுறவு மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை. பிறப்புறுப்பு அரிப்பு ஏற்படுவதன் காரணங்கள் இந்தத் தொற்று ஏற்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. மாசிடோ பின்வருபவற்றைக் கூறுகிறார்: ஆண்களுக்கு: சரியான பிறப்புறுப்பு சுகாதாரம் இல்லாதது ஆணுறுப்பின் நுனியில் அதிகப்படியான தோல் இருப்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு: நீரிழிவு நோய் (குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பின் பூஞ்சை அதிகமாக வளரும்) அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துதல் (இது கேன்டிடா பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிற நல்ல நுண்ணுயிரிகளைக் கொல்லும்) நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் நோய்கள். அத்துடன் கீமோதெரபி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலியல் மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை. ஏனெனில் அது மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. "இருந்தாலும், தொடர்ச்சியாக தோலோடு தோல் தொடர்புகொள்ளும்போது, குறிப்பாக நெருக்கமான சூழ்நிலைகளில், இந்தத் தொற்று ஏற்படலாம்," என்கிறார் மாசிடோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது இந்தத் தொற்றின் அறிகுறிகள் என்ன? மாசிடோவின் கூற்றுப்படி கீழ்கண்டவை இந்தத் தொற்றின் அறிகுறிகள். பெண்களுக்கு: பிறப்புறுப்பிலிருந்து பால் நிறத்தில், கெட்டியான ஒரு வகை வெள்ளை பொருள் வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும் உடலுறவின் போது வலி ஏற்படலாம் ஆண்களுக்கு: ஆண்குறியில் சிறிய சிவப்பு புள்ளிகள், லேசான தடிப்பு மற்றும் புள்ளி வடிவ புண்கள் மேலும் இரு பாலினரும் கடுமையான அரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு ஏற்படும் தொற்றை எப்படிக் கண்டறிவது? இந்தத் தொற்று பொதுவாக மருத்துவமனைகளில் கண்டறியப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கான அவசியமின்றி, பார்வையின் மூலமே இந்தத் தொற்றைக் கண்டறிந்து விடுவார்கள். இருப்பினும், சந்தேகத்திற்கிடமான சந்தர்ப்பங்களில், அல்லது சிகிச்சையளிக்கக் கடினமாக இருக்கும் புண்கள் இருந்தால், நுண்ணுயிரிகளை ஆராய்தல் அல்லது பயாப்ஸி போன்ற சோதனைகள் செய்வதன்மூலம் இந்த நோய் கண்டறியப்படலாம். தொற்று ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தசை அல்லது திரவங்களைச் சேகரித்து அவற்றைச் சோதிப்பதன்மூலம் பூஞ்சைகளின் இருப்பைக் கண்டறியலாம், என்கிறார் பிராசிலில் உள்ள சான்டா பவுலா மருத்துவமனையின் சிறிநீரியல் நிபுணர் அலெக்ஸ் மெல்லர். “இருப்பினும், பொதுவாக, இந்தப் பரிசோதனைகளுக்கு அவசியமிருப்பதில்லை. சிகிச்சை உடனே தொடங்கப்படுகிறது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்ன சிகிச்சை? "கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை மிக வேகமாகப் பரவும். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நோய்த்தொற்று தானாகவே மறைந்துவிடும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்," என்கிறார் அவர். ஆண்கள், சுகாதாரமாக இருப்பதுடன், கேன்டிடியாசிஸைக் குணப்படுத்த ஆயின்ட்மென்ட்கள் மற்றும் மாத்திரைகள் ஆகியவறைப் பயன்படுத்தப்படலாம், என்கிறார் அவர். ஆண்களுக்கான சிகிச்சை, பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு கிரீம்கள், மற்றும் மாத்திரைகளை உள்ளடக்கியது. இந்தத் தொற்றினால் அரிதாகவே சிக்கல்கள் ஏற்படுகிறது என்கிறார் மெல்லர். ஆனால் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் இத்தொற்று ஆண்களுக்கு இரண்டாம் நிலை முன்தோல் குறுக்கத்தை உருவாக்கலாம். தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் குணமடைவதில் உள்ள சிரமங்கள் முன்தோலின் நெகிழ்ச்சித்தன்மையைக் குறைக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் போது இது நிகழ்கிறது, என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேன்டிடியாசிஸ் தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது கேன்டிடியாசிஸின் பிற வகைகள் பூஞ்சை வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையைப் பொறுத்து, கேன்டிடியாஸிஸ் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படலாம். வாய்: கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில், பொதுவாக வாயில் கேன்டிடியாசிஸ் ஏற்படும். இது ‘த்ரஷ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உதடுகள், வாய் மற்றும் தொண்டையில் ஏற்படுகிறது. இது நாக்கில், கன்னங்களின் உட்புறத்தில், மற்றும் தொண்டையில் வெள்ளைப் புள்ளிகள் போல் தோன்றும். விழுங்கும்போது அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். தோல்: மேலும், உடலில் பொதுவாக ஈரமான, சூடான பகுதிகளான அக்குள், இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழே கேன்டிடியாசிஸ் ஏற்படலாம். இது தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. குடல்: ஆன்டிபயாடிக் மருந்துகளின் நீண்டகால பயன்பாடு, குடல் நுண்ணியிரிகளின் ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றின் காரணமாக உடலில் பூஞ்சைகள் பெருகும்போது, குடலிலும் கேன்டிடியாஸிஸ் ஏற்படலாம். இது வயிற்று வலி, வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மற்றும் மலத்தில் சிறிய வெள்ளை எச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும். தீவிரமான கேன்டிடியாசிஸ்: இது ‘சிஸ்டமிக் கேன்டிடியாசிஸ்’ எனப்படுகிறது. இது நோய்த்தொற்றின் மிகவும் தீவிரமான வடிவமாகும். இதில் பூஞ்சை ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றவர்களை இது பொதுவாக பாதிக்கிறது. இதன் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், தசை மற்றும் மூட்டு வலி. சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தும். அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன -ஆயின்ட்மென்ட்கள், மாத்திரைகள், திரவங்கள் ஆகியவை. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cmm3nr34lygo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பையின் தவறுகள் திருத்தப்பட்டனவா? பும்ராவை ஹர்திக் கச்சிதமாகப் பயன்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சொந்த மைதானம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அணிக்குத் திரும்பியது, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என பல சாதகமான அம்சங்களை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி ஐபிஎல் தொடரில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 27 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை ஒருவெற்றி மட்டும்தான் வெற்றுள்ளது, அதன்பின் தொடர்ந்து 5 தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஆர்சிபி பின்தங்கி இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.124 ஆகக் குறைந்துள்ளது. மும்பை வான்கடே மைதானம் மிகச்சிறியது, அதிலும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஆர்சிபி அணி சேர்த்த 196 ரன்கள் என்பது பேட்டிங் பலமுள்ள மும்பை அணிக்கு எதிராக நிச்சயமாகப் போதாது. 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால்தான், வான்கடே மைதானத்தில் சவாலான இலக்காக இருந்திருக்கும். 197 ரன்கள் சேஸிங் என்பது வான்கடே மைதானத்தில் அதிலும்மும்பை அணி சேஸிங் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பட மூலாதாரம்,SPORTZPICS பும்ராவும், மற்ற பந்துவீச்சாளர்களும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரு மாதங்களே இருக்கும் நிலையில் பும்ராவின் பந்துவீச்சு மெருகேறுவது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். இந்த ஆட்டத்தில் கிங் கோலி, டூப்பிளசிஸ் உள்பட 5 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி, ஆர்சிபி பேட்டிங் சரிவுக்கு காரணமாகினார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா 13 டாட்பந்துகளுடன், 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். பும்ரா வீசிய 19வது ஓவரில் 3-ஆவது பந்தில் சவுகானும், 4வது பந்தில் வியாசக்கும், 17-வது ஓவரை வீசும்போது 4வது பந்தில் டூப்பிளசிஸும், 5வது பந்தில் லாம்ரோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவுடன் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவரை மேலே தூக்கி கொண்டாடினார். டெல்லி அணிக்கு எதிராக கடந்த ஞாயின்று நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 439 ரன்கள் குவித்தாலும், பும்ராவின் பந்துவீச்சு மட்டும் தனித்து நின்றது. அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் பேட்டர்களால் பந்தாடப்பட்டநிலையில் பும்ராவின் பந்துவீச்சை பேட்டர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்திலும் பும்ரா 4 ஓவர்கள் வீசி 22ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்து காணப்பட்டார். ஆர்சிபி அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 2வது முறையாகவும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 21 முறை 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 4வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி, மும்பை பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 31.3 ஓவர்கள் வீசி,6 விக்கெட்டுகளை வீழ்த்தி, 32 பவுண்டரி, 25 சிக்ஸர்களை வழங்கினர். இவர்களின் எக்னாமி ரேட்டும்11.80 ஆகவும், சராசரியும் 62 ஆக இருந்தது, டாட்பால் சதவீதம் 32.28 ஆக இருந்தது. ஆனால், பும்ரா மட்டும் இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி ஒரு பவுண்டரி,ஒரு சிக்ஸர், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் எக்னாமி 5.25 என மிகக்குறைவாகவும், சாரசரி4.20 என்றும், டாட்பால் சதவீதம் 54.17 என அதிகமாகவும் இருக்கிறது. 12 பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 372 ரன்கள் வழங்கிய நிலையில் பும்ரா மட்டும் 21 ரன்கள் வழங்கிசிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES “என்னுடைய அதிர்ஷ்டமே இவர்தான்” வெற்றிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ அற்புதமான வெற்றி, இதைதான் விரும்புகிறோம். நாங்கள் வென்றவிதமும் சிறப்பு. இம்பாக்ட் வீரரால் எங்களுக்கு கூடுதலாக பந்துவீச்சாளரை பயன்படுத்த முடிந்தது இது இன்னும் உதவியாக இருந்தது. ரோஹித், கிஷன் சிறப்பான தொடக்கத்தை அளித்து எளிதாக முடிக்க உதவினர். இலக்கு குறைவானது அல்ல, ரன்ரேட் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். பும்ரா என்னுடன் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். ஒவருக்கு ஓவர் அற்புதம் செய்கிறார். ஒவ்வொரு ஓவரிலும் நான் அவரிடம் விக்கெட் கேட்பேன்.” “அதிகமான அனுபவம், நம்பிக்கை கொண்டவர் பும்ரா. சூர்யாவின் வருகையும், அரைசதமும் வரவேற்கக்கூடியது. சூர்யாவுக்கு எதிரான அணியிலும் கேப்டனாக நான் இருந்திருக்கிறேன், எந்த பேட்டரையும் இதுபோன்று ஷாட்கள் அடித்து நான் பார்த்தது இல்லை” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS வான்கடேவும் மும்பையும் 50வது வெற்றியும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம், வான்ஹடே மைதானத்தில் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.(இதில் சூப்பர் ஓவர் வெற்றி சேர்க்கப்படவில்லை) ஆர்சிபி அணி 11-வது முறையாக ஆர்சிபி அணிக்கு 190 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை டிபெண்ட் செய்ய தவறியுள்ளது. அது மட்டுமல்லாமல் 9-வது முறையாக 190 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் அணி 190 ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பவர்ப்ளே ஓவருக்குள் 4 பேட்டர்கள் இதுவரை அரைசதம் அடித்துள்ளனர். அதில் 2 முறை இஷான் கிஷன் (ஆர்சிபி, சன்ரைசர்ஸ்) அடித்துள்ளார், 2008ல் ஜெயசூர்யாவும், 2014ல் லின்டல் சிம்மன்ஸும் அடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் கூட்டணி முதல்விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் தொடக்க ஜோடி 100ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும். ரோஹித் சர்மா இதுவரை 92 இன்னிங்ஸ்களில் தொடக்க வீரராகக் களமிறங்கியும் ஒருமுறைகூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இல்லை, அதிகபட்சமாக குயின்டன் டீ காக்குடன் சேர்ந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது. ஆனால் 100 ரன்கள் எனும் மைல்கல் நேற்றுதான் அடைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களின் அதிரடி மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 3 பேட்டர்கள், ஒரு பந்துவீச்சாளர்தான் முக்கியக் காரணம். இஷான் கிஷன்69(34பந்துகள்), ரோஹித் சர்மா38, சூர்யகுமார் யாதவ்52(19பந்துகள்), பும்ரா(5 விக்கெட்) ஆகியோரின் பிரதான பங்களிப்புதான். இஷான், ரோஹித்சர்மா இருவரும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திச் செல்லும் பயணத்தில் 8 ஓவர்களில் 100 ரன்கள் எனும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துப் பிரிந்தனர். ரோஹித் சர்மா 38 ரன்கள் சேர்த்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதிலும் இஷான் கிஷன் முதல் இரு ஓவர்களக்குப்பின் ஆர்சிபி வீரர்கள் வீசிய பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டு 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு வந்த 360 டிகிரிவீர் சூர்யகுமார் காயத்தால் நீண்ட காலத்துக்குப்பின் களமிறங்கினார். முதல் போட்டியில் டக்அவுட்டான சூர்யகுமார், அனைத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்து, 17 பந்துகளில் அதிரடியான அரைசதத்தை அடித்து இலக்கை துரத்தும் பணியை எளிதாக்கினார். இந்த ஐபிஎல் சீசனில் குறைந்தபட்ச பந்துகளில் அரைசதம் அடித்த 2வது வீரராக சூர்யகுமார் இடம் பெற்றார். சன்ரைசர்ஸ் பேட்டர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில், சூர்யகுமார் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் டாப்ளேயின் 13-வது ஓவரில் 4,6,4,4 என விளாசி ஸ்கை அரைசதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக ஸ்கை கணக்கில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம். சூர்யகுமார் 15 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் மேக்ஸ்வெல் கேட்சை நழுவவிட்டதற்கு ஆர்சிபி விலை கொடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 சிக்ஸர்கள் உள்பட 6 பந்துகளி்ல் 21 ரன்களும், திலக் வர்மா 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மும்பை போன்ற தட்டையான, பேட்டர்களுக்கு மட்டும் ஒத்துழைக்கும் மைதானத்தில் 250 ரன்கள் சேர்த்தாலும், சிஎஸ்கே, ஆர்சிபி, கொல்கத்தா போன்ற வலுவான பேட்டர்களை வைத்திருக்கும் அணிகளுக்கு சவாலான ஸ்கோராக இருக்கப் போவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES தினேஷ் கார்த்திக்கின் ‘மாஸ்டர் கிளாஸ்’ 2018ம் ஆண்டு இலங்கையில் நடந்த நிடாஸ் கோப்பைக்குப்பின் தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ஆட்டத்தை நேற்று காணமுடிந்தது. ஆர்சிபி பேட்டர்கள் அனைவருக்கும் சிம்மசொப்னமாக பந்துவீசிய பும்ராவின் பந்துவீச்சை எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர் அடித்தபோது ரசிகர்களின் ஆரவாரக்குரல் அரங்கை அதிரச் செய்தது. ஒருகாலத்தில் மும்பை அணிக்கு டிகே விளையாடிய நினைவு வந்து ரசிக்கர்கள் டிகே, டிகே என்று உச்சரித்தனர். டிகே இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணிக்காக ஆகச்சிறந்த பங்களிப்பை பேட்டிங்கில் டிகே அளித்து வருகிறார். ஆர்சிபி அணி முதல் வெற்றி பெற்றதே டிகேயின் அற்புதமான பேட்டிங்கான். டிகே அடித்த ஷாட்கள் அனைத்தும் அற்புதமானவை, யாருடைய பந்துவீச்சு எனப் பார்க்காமல் வெளுத்துவாங்கினார். ஒரு கட்டத்தில் டிகேவுக்கு எப்படி பந்துவீசுவது என்பது குறித்து கேப்டன் பாண்டியா களத்தில் சிறிய ஆலோசனை நடத்தும் நிலை ஏற்பட்டது. அதிலும் மத்வால் வீசிய 16-வது ஓவரில் ஸ்கூப்பில் 2 பவுண்டர்களிள் அடித்து 19 ரன்களைச் சேர்த்தார். மத்வால்வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 17 ரன்களை டிகே சேர்த்து, 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். டிகே தான் சந்தித்த கடைசி 9 பந்துகளில் மட்டும் 1,1,6,6,0,6,6,4,1 என்று ரன்களை விளாசினார். 2023ம் ஆண்டு சீசனில் ஆர்சிபிக்காக ஆடி ரன்கள் சேர்த்ததைவிட, டிகே இந்த சீசனில் அதிகமாக ரன்கள் சேர்த்துவிட்டார். இந்தப் போட்டியிலும் டிகேயின் பங்களிப்பு முக்கியத்துவமானது என்றாலும், எதுவுமே ஆர்சிபிக்குப் போதவில்லை, அதை தக்கவைக்கும் திறனுள்ள பந்துவீச்சுஇல்லை. ஆர்சிபி தோல்விக்கு காரணம் என்ன? ஆர்சிபி அணியில் நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் டூப்பிளசிஸ்(61), பட்டிதார்(50) டிகே(53) ஆகியோரின் பங்களிப்புதான் பிரதானமாகும். தொடக்க ஆட்டக்காரர்களான கோலி(8), வில் ஜேக்ஸ்(8), மேக்ஸ்வெல்(0), லாம்ரோர்(0), சவுகான்(9) ஆகியோர் ஏமாற்றினர். அதிலும் மேக்ஸ்வெல் இந்த சீசனில் 5வது போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதே வான்ஹடே மைதானத்தில்தான் உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றை பேட்டராக ஆட்டத்தை மேக்ஸ்வெல் வென்று கொடுத்தார், ஆனால், இந்த சீசனில் இதுவரை மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘கேஜிஎப்’ தோல்வி கேஜிஎப் எனப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ் ஆகியோர்தான் ஆர்சிபியின் தூண்கள் என்று ரசிகர்களால் நம்பப்பட்டு வருகிறது, இவர்கள்தான் நட்சத்திர பேட்டர்கள் இவர்கள் சொதப்பும்போது அணிக்கு பெரிதாக ஸ்கோர் வராது. இந்த 3 பேரில் யாரேனும் ஒருவர்தான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடுகறார்களேத் தவிர 3 பேரும் ஒரே நேரத்தில் சிறப்பாக பேட் செய்வதில்லை. இதனால் ஆர்சிபி அணியால் பெரிய ஸ்கோருக்கு செல்ல வேண்டிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் அந்த வாய்ப்பு நழுவிப்போகிறது. இதுவரை விராட் கோலி ஒரு சதம், அரைசதம், டூப்பிளசிஸ் அரைசதம் என்று கணக்கை தொடங்கினாலும் மேக்ஸ்வெல் களத்தில் நின்று பேட் செய்த நிமிடங்களை எண்ணிவிடலாம். 5 போட்டிகளில் மேக்ஸ்வெல் 2 முறை டக்அவுட் ஆகியுள்ளார். பந்துவீச்சிலும் மேக்ஸ்வெல் பெரிதாகப் பங்களிப்பும் செய்யவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியில் மேக்ஸ்வெல் இருந்தபோது ‘என்ன செய்தாரோ அதே பணியை’ தற்போது ஆர்சிபி அணிக்கு செய்து வருகிறார். பந்துவீச்சு ஒட்டுமொத்த தோல்வி ஆர்சிபி அணி அடுத்துவரும் போட்டிகளில் எத்தனை பெரிய ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அதற்குத் தகுதியான பந்துவீச்சாளர்கள் இல்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் விமர்சிக்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு சுழற்பந்துவீச்சாளர்கூட இல்லை, வேகப்பந்துவீச்சில் சிராஜ் பந்துவீச்சை எளிதாக அடிக்கிறார்கள், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அனைவரும் 12 ரன்ரேட்டுக்கு அதிகமாகத்தான் ஓவருக்கு வாரி வழங்கினர். வான்கடே விக்கெட்டில் எந்த அளவுக்கு வேகத்தை அதிகப்படுத்தி பேட்டருக்கு ஒரு பந்துவீச்சாளர் வீசுகிறாரோ அதைவிட பன்மடங்கு வேகத்தில் பந்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் செல்லும். இது ஆடுகளத்தின் ரிப்போர்டாகும். அதனால்தான் பும்ரா தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தைக் குறைத்தும் வீசினார். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் வேரியேஷன்களை தேடும்நிலைதான் இருந்தது. பேட்டர்களுக்கு எந்தச் சிரமும் இல்லாமல் பேட்டுக்கே பந்தை வீசி, பவுண்டரி, சிக்ஸர்களை வாரி வழங்கினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3gl9yx5p9yo
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் அதிகரிக்கின்றது – தடுத்து நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி Published By: RAJEEBAN 12 APR, 2024 | 08:39 AM இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களை வழங்கிவரும் அதேவேளை அமெரிக்கா ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என வோசிங்டனில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை மத்தியகிழக்கில் பாரிய போர்வெடிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் ஆளில்லா விமான தாக்குதலை அல்லது ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். சிரியதலைநகரில் உள்ள தனது துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் ஏப்பிரல் முதலாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் கோடிட்டுக்காட்டியுள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள டெல்நொவ் விமானதளத்தில் அமெரிக்க எவ்15 போர் விமானங்களின் முன்னாள் நின்றபடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு யார் எங்களுக்கு தீங்கிழைத்தாலும் நாங்கள் அவர்களிற்கு தீங்குவிழைவிப்போம் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் அனைத்து பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் தயார் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் இதனை உறுதி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இராஜாங்க செயலாளரின் இஸ்ரேலிற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் செய்திகள் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை தடுக்ககூடும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. ஈரான் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கினால் அது மிக நீண்டகால யுத்தமொன்றை ஆரம்பித்துவைக்கும், இதுவரை இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல்கள் ஒரு மறைமுக யுத்தமாகவே காணப்பட்டன. மோதல்கள் தீவிரமடைவது எவரினது நலனிற்கும் உகந்த விடயமல்ல ஈரான் தாக்குதலை மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என அன்டனி பிளிங்கென் துருக்கி சீன, சவுதிஅரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்காவின் மிகவும் உறுதியான ஆதரவு இஸ்ரேலிற்கு கிடைக்கும் என ஜோபைடன் உறுதியளித்துள்ள அதேவேளை இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அன்டனி பிளிங்கென் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டுள்ளார். ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும். எனினும் ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டால் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்வதற்கான உரிமை இஸ்ரேலிற்கு உள்ளது என பைடன் நிர்வாகம் கருதுகின்றது. https://www.virakesari.lk/article/181017
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
11 APR, 2024 | 12:20 PM தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180972
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் இனி பரிசுத்தொகை: உலக தடகள அமைப்பு அறிவிப்பு! உலக தடகள விளையாட்டு அமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியாக வெகுமதி அளிக்கப்பட உள்ளது. பாரிஸில் நடைபெறும் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு $50,000 (46,000 யூரோக்கள்) வழங்கப்படும். அதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக தடகளப் போட்டிகளுக்கும் ஒட்டுமொத்த தடகள விளையாட்டுக்கும் ஒரு முக்கிய தருணமாகும், இது விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. லொஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மூன்று வீரர்களுக்கும் வெகுமதி அளிக்க உறுதியாக இருக்கிறோம். பாரிஸில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கப் பதக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கும் நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/298777
-
கேப்பாப்புலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!
Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 04:29 PM முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் (6 பேர்) கலந்து கொண்டனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றையதினம் இவ்வாறு ஆளுநரைச் சந்தித்தனர். தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/180990
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
2024 தேர்தல்: தமிழ்நாட்டில் ரூ.300 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - விமர்சனம் ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ரூ.303.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.143.05 கோடி பணமாகவும், ரூ.5.01 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.93 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.121.65 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்றவை, ரூ.32. 97 கோடி மதிப்பிலான இலவசங்கள் இது வரை பிடிபட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பிடிப்பட்டுள்ளன. கடந்த வாரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போன்று, இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள காங்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திடமிருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகளையும், வீட்டினுள் இருந்த ரூ.5 லட்சத்துக்கும் மேலான தொகையும் பிடிப்பட்டது. வேலூரில் வல்லம் சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.75 லட்சம் பிடிப்பட்டது. சென்னை நீலாங்கரையில், மினி வேனில் சென்றுக் கொண்டிருந்த நான்கு பேரிடமிருந்து ரூ.1.63 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். டாஸ்மாக் கடைகளிலிருந்து வசூல் செய்த பணம் என்று அவர்கள் கூறினாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை எப்படி செயல்படுகிறது? வாக்குகளுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த பிரச்னையை கையாள மாநில அரசு அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் சார்ந்திருக்க வேண்டும். ரூ.50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் அல்லது தங்கம் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை மொத்தமாக கொண்டு செல்பவர்கள் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் (எஸ்.எஸ்.டி) ஆய்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த பொருட்களுக்கான ஆதார ஆவணங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் ஆய்வு செய்யப்படுவர். புகார் பெறப்பட்டவுடன் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். அதே நேரம் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பதற்றம் என்று கண்டறியப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு நகராட்சியின் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இந்த குழுக்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான புகார்களை கவனித்து, சமூக விரோத சக்திகளின் நடமாட்டம், மதுபானம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகையை கண்காணிக்கும். பணப்பறிமுதல் எப்படி செய்யப்படுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், கட்டுப்பாட்டு அறை அந்தத் தகவலை பறக்கும் படை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறது. பறக்கும் படை சம்பவ இடத்திற்கு வந்து, 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அளிக்கிறது. பறக்கும் படையினர், பறக்கும் படையினர், 'பறிமுதல்' மேலாண்மை அமைப்பு எனப்படும் மொபைல் அப்ளிகேஷனில் பறிமுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். சோதனைகளுக்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றனவா? இருப்பினும், இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறன. தங்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சியினர் விடுவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் சோதனைகள் ஒருபுறமிருக்க வருமானவரித்துறையினரும் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதே போன்று தேர்தல் அறிவித்து ஐந்து நாட்களில் மார்ச் மூன்றாவது வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது ஏவுவதாக திமுக குற்றம்சாட்டுகிறது. அதே நேரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை திமுக திசை திருப்புகிறது என பாஜக குற்றம் சாட்டுகிறது. வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான 57 வயதாகும் செம்மலர், “கடந்த 1990-களுக்கு பிறகு தான் வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகம் ஆனது. கட்சிகள் எப்போது தொழிலாக மாறினவோ, அப்போது இதுவும் தீவிரமாகியது. முதலில், அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக தான் இருந்தது. பணம், புடவை கொடுப்பார்கள், மற்றவர்கள் கண்ணை உறுத்தும் மாதிரியாக இருக்காது. ஆனால், 2000-க்கு பிறகு வெளிப்படையாகவே தெரிகிறது. வழங்கப்படும் தொகை அதிகரித்தது, அரசியல் கட்சிகளுக்கு இடையே யார் எவ்வளவு கொடுப்பது என்ற போட்டியும் உண்டானது. கடந்த 20 ஆண்டுகளில் கட்சிகளிடம் மக்கள் கேட்டு வாங்குற நிலைமையும் வந்துவிட்டது,” என்கிறார். பட மூலாதாரம்,X/TNELECTIONSCEO பிடிப்பட்ட பணத்தை எப்படி திரும்ப பெறுவது? தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரொக்கப் பணத்தை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவர் ரூ.50,000-க்கு கீழ் கொண்டு செல்பவர்களிடம் எந்த விசாரணையும் செய்யப்படாது. ரூ.10 லட்சத்துக்கும் கீழ் பிடிப்பட்டால் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரி பார்த்த பின்,பிடிப்பட்ட பணம் திருப்பி தரப்படும். பாதிக்கப்படும் தொழில்கள் பணம் எடுத்துச் செல்வதற்கு கட்டுபாடுகள் இருப்பதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஜெயந்திலால் சலானி கூறுகையில், “வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு சவரன் தங்க நகையின் விலை தொரோயமாக ரூ.62,000 ஆகும். எனவே தற்போது யாரும் நகைகள் வாங்க விரும்புவதில்லை. குறிப்பாக ஆரம், செயின், நெக்லஸ், வளையல் போன்றவைகள் கடந்த சில நாட்களாக விற்பனையாகவே இல்லை,” என்றார். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலேயே பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர் கிடுக்குப்பிடி அதிகமாக இருக்கிறது. “தமிழ்நாடு முழுவதும் சிறியது பெரியது என 35 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இவர்களில் சிறிய நகரங்களில் இருக்கும் கடைகளில் வியாபாரம் மிக கடுமையாக பாதித்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்கள் கிடையாது,” என்றார் அவர். அதே போன்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அன்றாடம் சில லட்சங்கள் பணத்தைக் கொடுத்து தான் பொருள் வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டு பின் மீட்டெடுப்பது சிரமமாக இருப்பதாகவும் சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இருந்தாலும் பணத்தை பிடித்து விடுகின்றனர் என்றும் புலம்புகின்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துணைத் தலைவர் தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 50% வியாபாரம் குறைந்துவிட்டது. தேர்தலுக்கு பின்பும் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும். பறக்கும் படைகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மாடு வாங்க செல்லும் விவசாயிகள், தொழிலுக்கு செல்லும் சாதாரண வியாபாரிகளை தான் பிடிப்பார்கள்,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c97z57mpdp9o
-
இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்கத் தயார்!
இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு, நவீன ஆயுதங்களை வழங்க புதுடில்லி தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய, இலங்கை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டைய நாடு என்ற அடிப்படையில், இந்த ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298808
-
எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணை
11 APR, 2024 | 03:53 PM எழுத்தாளர் தீபச்செல்வனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று விசாரணைக்குஉட்படுத்தியுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவல் வெளியீட்டு நிகழ்வை நடாத்தியமைக்காகவே இவ்வாறு விசாரணை இடம்பெற்றது. புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டது. இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்று கேட்டார்கள். கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாக கூறினேன். இன்று காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டறை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதுஎன தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180988
-
சீனாவுடன் இணைந்து இலங்கை ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம்
பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு சீனாவுடன் இணைந்து இலங்கை, ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் மூலம், தேயிலை பயிர்ச்செய்கையில் சிறந்த விளைச்சளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/298791
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
பொன்னாவெளியில் குடியேற விரும்பினால் வீட்டுத்திட்டம் வழங்கத் தயார் - அமைச்சர் டக்ளஸ் Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 03:36 PM பூநகரி பொன்னாவெளிப் பகுதியில் மக்கள் குடியேற விரும்பினால் மக்களுக்கான வீட்டுத்திட்டகளை வழங்கத் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பொன்னியில் மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுப் பணிக்காக இரண்டு துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றேன் போதையில் நின்றவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி செல்ல விடாமல் தடுத்தனர். நான் அங்கு சென்றது துறைசார்ந்த அதிகாரிகளிடம் மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக சென்றிருந்தேன் சிலர் அதனை அரசியல் நோக்கத்திற்காக தடுத்து விட்டார்கள். பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மக்களுக்கு சாதகமானது என கருதினால் மட்டுமே அகழ்வு பணி மேற்கொள்ளப்படும். சிலர் ஒரு ஊடக சந்திப்பில் பொன்னாவெளியில் இருந்த மக்களை வீட்டு திட்டம் தர முடியாது வெளியிடங்களுக்கு வந்தால் மட்டுமே பெற முடியும் என கூறியதாக தெரிவித்தனர். நான் அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் பொன்னாவெளியில் மக்கள் வசிக்கப் போகிறார்கள் என்றால் அவர்களுக்கான வீட்டு திட்டத்தை வழங்க தயாராக இருக்கிறேன். மக்களின் வாழ்வாதாரம் நாட்டின் அபிவிருத்தி, இந்த அபிவிருத்தியை அரசியல் நோக்கங்களுக்காக மதுபானங்களை வழங்கி தடுக்க முடியாது. ஆகவே பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கான ஆய்வுப் பணி உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதோடு அப் பகுதியில் மக்கள் குடியேற விரும்பினால் அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தை வழங்க தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180986
-
ஸ்கேன் இயந்திரங்களை வழங்கியது ஜப்பான்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. வெளிநாட்டவர்கள் மூலமாக இலங்கையில் பரவும் வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இவற்றை கையளித்துள்ளார். இதனை தவிர, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு ஸ்கேனர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 150 அலகுகளைக் கொண்ட மலசலகூட அமைப்பும் நிறுவப்படவுள்ளது. https://thinakkural.lk/article/298825
-
ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
Published By: RAJEEBAN 11 APR, 2024 | 11:37 AM விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது. பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி;க்கு பதில் அளித்துள்ள ஜோ பைடன் அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். பைடன் நிர்வாகம் ஜூலியன் அசஞ்சேயை விசாரணைக்கு உட்படுத்துவதை கைவிட தயாராகின்றது என்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன எனினும் இது ஜனாதிபதி தேர்தலில் பைடனிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜூலியன் அசஞ்சே இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதை ஏற்றுக்கொண்டால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் சில நாட்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. ஜூலியன் அசஞ்சே பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180968
-
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன? - ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் எழுத்தில் தெரிவியுங்கள் - பெரும்பான்மையின ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள் Published By: RAJEEBAN 11 APR, 2024 | 12:04 PM பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தங்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு உள்ள தீர்வு என்னவென்பதை தெரிவிக்கவேண்டும் என வி;க்னேஸ்வரன் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். தாங்;கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்வார்கள் என்பதை தெரிவிக்கின்ற துணிவு எவருக்காவது இருந்தால் நாங்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து சிந்திப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் மேடையில் எதனையாவது தெரிவித்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதியை கைவிடலாம் என்பதால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை எழுத்துமூலம் தெரிவிக்கவேண்டும் அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எழுத்துமூலம்தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை கடந்தகாலங்களில் வழங்கியிருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு அவர்கள் எவரும் முற்போக்கான தீர்வை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 2000 ம் ஆண்டு அரசமைப்பு மாற்றங்கள் ஊடாக தீர்வை முன்வைப்பதற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார். அவர்கள் அதனை செய்வோம் இதனை செய்வோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இறுதியில் ஒன்றும் செய்யமாட்;டார்கள் என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒரு தலைவர் எதனையாவது வழங்க முயற்சித்தால் ஏனையவர்கள் அதற்கு எதிராக செயற்படுவார்கள் அதனை சீர் குலைப்பதற்கு அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அதிகமாக எதனையும் கேட்கவில்லை தற்போதும் யாராவது அனுராதபுரத்தை கடந்து வவுனியா சென்றால் தமிழில் பேசுவார்கள் அவர்களே உண்மையான தமிழர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் தமிழ்பேசும் பகுதிகளை அங்கீகரிக்குமாறே கேட்டுக்கொள்கின்றோம் இதன் மூலம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180971
-
நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற விசேட நிதி - அமைச்சர் டக்ளஸ்
11 APR, 2024 | 01:12 PM நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம் உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொண்டதாகவும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நெடுந்தீவுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/180967
-
புதுவருட காலத்தில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு!
Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 12:29 PM இந்த வருடத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸாரினால் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு சிலர். முற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.. மேலும் பணக் கையாள்கையின் போது நாணயத்தாள்களில் மாற்றம் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180970
-
வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் செம்பெருமீன் (Red Giant) ஆகிய இரட்டை நட்சத்திரங்கள் நோவா வெடிப்பை உருவாக்குகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மியா டைலர் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற சூரிய கிரகணத்தின் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ள நிலையில், ஒரு இறந்த வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் ஒரு வயதான செம்பெருமீன் (Red Giant) ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு (இரும விண்மீன் - இரட்டை நட்சத்திர அமைப்பு) வெடித்து சிதறுவதற்காக விண்வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் அமைப்பானது, டி கொரோனே பொரியாலிஸ் (T Coronae Borealis) அல்லது T CrB என்று சுருக்கமாக அழைக்கப்படும் வெண் குறுமீனின் இருப்பிடமாக உள்ளது. இதன் வெடிப்பு நிகழ்வை, 'வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஏற்படும் வெண் குறுமீன் வெடிப்பு (நோவா)' என்று நாசா கூறுகிறது. இந்த அரிய பிரபஞ்ச நிகழ்வு வரும் செப்டம்பர் 2024-க்கு முன்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அது நடக்கும்போது அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். இதை காண விலையுர்ந்த தொலைநோக்கி எதுவும் தேவை இல்லை என்றும் நாசா கூறியுள்ளது. T CrB வெடிப்புகள் 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன, அப்படி கடைசியாக 1946-இல் இதுபோன்ற வெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து பேசிய நாசாவின் விண்கல் சுற்றுச்சூழல் திட்ட மேலாளர் வில்லியம் ஜே குக், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது ஹாலி வால் நட்சத்திரம் போன்றது. இந்த வெடிப்பு 75 முதல் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது. ஆனால் ஹாலி வால் நட்சத்திரம் பெறும் கவனத்தை, நோவாக்கள் பெறுவதில்லை" என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த நட்சத்திர வெடிப்பு வானில் சில நாட்களுக்கு ஒளிர்வதை நம்மால் பார்க்க முடியும். விஞ்ஞானிகளுக்கு எப்படி தெரியும்? பெரும்பாலான சமயங்களில் , வெண் குறுமீன் வெடிப்பு (நோவா) எப்போது நிகழும் என்று நாசா நிபுணர்களுக்கு தெரியாது என்று கூறுகிறார் குக். ஆனால் "தொடர் நோவாக்கள்"(recurrent novas) என்று அறியப்படும் 10 நோவாக்கள் உள்ளதாக விளக்குகிறார் அவர். "தொடர் நோவா என்பது அவ்வப்போது வெடிக்கும் நிகழ்வுகளாகும்," என்று கூறும் குக்," டி கொரோனே பொரியாலிஸ் அதற்கு ஒரு முக்கிய உதாரணம்" என்கிறார். ஆனால் T CrB குறிப்பாக அடுத்த சில மாதங்களில் வெடிக்கப் போகிறது என்று நாசாவுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்? இது கணித கணக்கீடுகள் மற்றும் கண்ணுக்கு எட்டிய சான்றுகள் குறித்த விஷயம். உதாரணமாக, T CrB கடைசியாக ஒரு நோவா வெடிப்பை 1946-இல் எதிர்கொண்டது. இது நடந்து 78 ஆண்டுகள் ஆகிறது. T CrB வெடிப்பதற்கு தயாராகி வருகிறது என்பதற்கு மற்றொரு அறிகுறி இருக்கிறது என்றும் கூறுகிறார் குக். "நோவாவாக மாறுவதற்கு முன்பு குறிப்பிட்ட நட்சத்திரம் சுமார் ஓராண்டுக்கு மங்கிவிடும். டி கொரோனே பொரியாலிஸ் மார்ச் 2023 இல் மீண்டும் மங்கத் தொடங்கியது. அதனால்தான் இது இப்போதிலிருந்து செப்டம்பர் இறுதி வரை நோவாவாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்." படக்குறிப்பு, வானில் டி கொரோனே பொரியாலிஸ் ஒளிர்வதை எங்கு பார்க்க வேண்டும் என்பதை விளக்கும் படம் T CrB விண்மீன் நோவா மறுநிகழ்வு விகிதம் இதுவரை பல ஆண்டுகளாக அடையாளம் காணப்பட்ட பல நோவாக்களிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. மேலும் இதுவே இந்த நட்சத்திர வெடிப்பை மிகவும் சிறப்பானதாகவும் ஆக்குகிறது. "இதுவரை ஏராளமான நோவாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் நிகழுமா என்று தெரியாது. அவை மீண்டும் எப்போது வரும் என்றும் எங்களுக்குத் தெரியாது," என்று கூறுகிறார் மெரிடித் மேக்ரிகோர். இவர் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் வில்லியம் எச். மில்லர் III இயற்பியல் மற்றும் வானியல் துறையின் பேராசிரியர். மேலும் ஸ்டெல்லர் செயல்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர். விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரான ரிச்சர்ட் டவுன்சென்ட் கூறுகையில், ஒரு நோவாவின் தொடர் செயல்திறனுக்கான கால அளவு ஒரு ஆண்டு முதல் கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை இருக்கலாம் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES நோவா என்பது என்ன? அதைத் தூண்டுவது எது? T CrB போன்ற சில கணிக்கக்கூடிய நோவா நிகழ்வுகள் எப்போது நிகழும் என்பதை அறிவதுடன், அவை ஏன் நிகழ்கின்றன என்பதையும் நாசா நிபுணர்கள் அறிவார்கள். உதாரணமாக, டி கொரோனா பொரியாலிஸ் வெண்குறுமீன் ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பில் உள்ளது. அதாவது இது ஒன்றையொன்று சுற்றி வரும் இரண்டு நட்சத்திரங்களில் (இரண்டு சூரியனைப் போல) ஒன்றாகும். இதில் மற்றொன்று சிவப்பு மற்றும் பெரிய நட்சத்திரம். வெண் குறுமீன்கள் சூரியனைப் போன்ற நிறையை கொண்டுள்ளது. ஆனால் அதன் நூறு மடங்கு சிறிய விட்டம் பூமியுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும் என்று கூறுகிறார் ரிச்சர்ட். அந்த அதிக நிறை ஆனால் ஒப்பீட்டளவில் சிறிய அளவு ஆகியவை இந்த சிறிய வெள்ளை நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையை வலிமையாக்குகின்றன. T CrBஇன் இரட்டை நட்சத்திர அமைப்பில் உள்ள செம்பெருமீன் (Red Giant) ஹைட்ரஜன் உள்ளிட்ட தனது கூறுகளை வெளியேற்றுவதால், T CrB இன் ஈர்ப்பு விசை அதை ஈர்த்துக்கொள்கிறது அல்லது சேகரிக்கிறது. அவற்றை தனது வரம்பை அடையும் வரை பல ஆண்டுகளாக அது செய்து கொண்டிருக்கிறது. "இரட்டை நட்சத்திர அமைப்பில் செம்பெருமீன் அதன் கூறுகள் அனைத்தையும் வெண் குறுமீனின் மேற்பரப்பில் வெளியிடுகிறது" என்று கூறுகிறார் குக். "மேலும், வெண்குறுமீனின் (T CrB) மேற்பரப்பில் அந்த கூறுகள் அதிகமாகும் போது, வெடிகுண்டில் நடப்பது போன்ற ஒரு தெர்மோநியூக்ளியர் வினை நிகழ்கிறது. அப்போது வெண்குறுமீன் பெரும் வெடிப்பை நிகழ்த்துகிறது.” இதைத்தான் நோவா என்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "வழக்கமாக ஒரு நோவாவைப் பார்க்கும் அளவிற்கு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் டி கொரோனா பொரியாலிஸ் அதை மிக வேகமாகச் செய்வதாகத் தெரிகிறது." பூமியில் இருந்து நோவாவை எப்படிப் பார்க்க முடிகிறது? T CrB இல் போதுமான அளவு கூறுகள் குவிந்து அதன் வெப்பநிலை சில மில்லியன் டிகிரி செல்சியஸை எட்டியதும், அணுக்கரு இணைவு எதிர்வினை நிகழத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நோவா நிகழ்வை உருவாக்குகிறது என்று டவுன்சென்ட் கூறுகிறார். "இவை சூரியனின் மையப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும் அதே எதிர்வினை தான். மேலும் இந்த எதிர்வினை வெண்குறுமீனின் (White Dwarf) மேற்பரப்பு அடுக்குகளில் மிகப்பெரும் அளவிலான ஆற்றலை வெளியிடுகின்றன" என்று டவுன்சென்ட் தெரிவிக்கிறார். "இந்த ஆற்றல் வெளியீடு தற்காலிகமாக வெண்குறுமீனை அதன் துணையாக இருக்கும் செம்பெருமீனவிட அதிகமாக மிளிரச் செய்கிறது. மேலும் இந்த இரண்டு நட்சத்திரங்களிலிருந்தும் வெளியாகும் ஒட்டுமொத்த ஒளி இங்கே பூமியில் இருந்து காணும் போது 1000 மற்றும் 100,000 காரணிகளால் அதிகரிக்கிறது." இந்த வகையான வெடிப்பு நிகழ்வுகள், இரட்டை நட்சத்திர அமைப்புகளில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே நிகழும் நிறை பரிமாற்றம் மற்றும் வெண்குறுமீன் நோவாவாக மாறும் போது ஏற்படும் தெர்மோநியூக்ளியர் வெடிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நாசா நிபுணர்களுக்கு உதவுகிறது. இது T CrB விஷயத்தில் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு செயல்முறையாகும். "இது மீண்டும் மீண்டும் பெரிய நட்சத்திரத்திலிருந்து கூறுகளை சேர்க்கும் இந்த சுழற்சியை செய்துக் கொண்டிருக்கிறது," என்கிறார் மேக்ரிகோர். "வழக்கமாக ஒரு நோவாவைப் பார்க்கும் அளவிற்கு அது உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் டி கொரோனா பொரியாலிஸ் அதை மிக வேகமாகச் செய்வதாகத் தெரிகிறது, இதுவே அதை அரிதான ஒன்றாக மாற்றுகிறது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "டி கொரோனா பொரியாலிஸ் நட்சத்திரம் மிகவும் சிறியவை, அவற்றை நாம் வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அணுசக்தி எதிர்வினைகள் மூலம் தற்காலிகமாக பார்க்க முடியும்." T CrB நோவா வெடிப்பு நிகழும் போது நீங்கள் என்ன காண்பீர்கள்? நாசாவின் கூற்றுப்படி, பொதுவாக T CrB நட்சத்திர அமைப்பின் ஒளிரும் தன்மையின் அளவு (visibility magnitude) +10 ஆகும். ஆனால் வரவிருக்கும் T CrB நோவா வெடிப்பு நிகழும்போது, இந்த அளவு கணிசமாக +2 வரை உயரும் என மதிப்பிடப்படுகிறது. இது +10 ஐ விட மிகவும் பிரகாசமானது. இந்த +2 அளவு என்பது வடக்கு நட்சத்திரமான போலரிஸின் ஒளிரும் அளவைப் போன்றது. அந்த நேரத்தில், T CrB வெற்று கண்களுக்கேத் தெரியும். நோவா நிகழ்வை பார்க்க விரும்புவோர், பூட்டெஸ் மற்றும் ஹெர்குலிஸுக்கு அருகிலுள்ள சிறிய, அரைவட்ட வளைவான கொரோனா பொரியாலிஸ் அல்லது வடக்கு கிரவுன் விண்மீன் கூட்டத்தை வானில் பார்க்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது. "இங்குதான் இந்த நோவா வெடிப்பு ஒரு 'புதிய' பிரகாசமான நட்சத்திரமாக தோன்றும்" என்று அது விளக்கமளித்துள்ளது. ஆனால் நடப்பது ஒன்றும் உண்மையில் ஒரு புதிய நட்சத்திரத்தின் உருவாக்கம் அல்ல. மாறாக, T CrB வெறுமனே நம் கண்களுக்கு தெரிவதற்கு அங்கு தொலைவில் நடக்கும் அணுசக்தி எதிர்வினைகளுக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். "இது ஏற்கனவே அங்கு இருக்கும் ஒரு நட்சத்திரம் தான். ஆனால் அதை நம்மால் எப்போதும் பார்க்க முடியாது. அதனால்தான், இது ஏதோ புதிய நட்சத்திரம் உருவாவது போல் நமக்கு தெரிகிறது ," என்று விளக்குகிறார் மேக்ரிகோர். "டி கொரோனா பொரியாலிஸ் நட்சத்திரம் மிகவும் சிறியது, அதை நாம் வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அதில் ஏற்படும் இணைவு எதிர்வினை(fusion reaction) காரணமாக, நம்மால் தற்காலிகமாக பார்க்க முடிகிறது. நீங்கள் இரவில் உங்கள் வாகனத்தில் சென்றுக்கொண்டே கூட இதைப் பார்க்கலாம்." T CrB இன் ஒளிர்வுத்தன்மை அதன் உச்சத்தை அடைந்தவுடன், அது செவ்வாய் கிரகத்தைப் போல பிரகாசமாக இருக்கும் என்று கூறுகிறார் குக். மேலும் இது குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வெற்றுக் கண்களுக்கு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் வெடிப்பு நிகழ்வு ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும். சிறிய வெள்ளை நட்சத்திரம், பெரிய சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து ஈர்த்த அனைத்து கூறுகளையும் வெளியேற்றியபிறகு, T CrB மீண்டும் ஒருமுறை தெளிவற்றதாக மாறி விடும். அதன் பின் பல ஆண்டுகளுக்கு அதை பார்க்க முடியாது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglx9xjl8eno
-
மத்திய வங்கி பிணை முறிமோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தி - சஜித் ரணிலுக்கு பதிலடி
11 APR, 2024 | 02:54 PM ஐக்கிய மக்கள் சக்தி என்பது மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்ட கட்சி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை கட்சி தவிர்த்துக்கொண்டது அவர்களை உள்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி சூத்திரதாரிகளை வெளியேற்றிய பின்னரே எங்கள் கட்சி தனது பயணத்தை ஆரம்பித்தது என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச எங்கள் கட்சியின் பயணம் ஜனாதிபதி பதவிக்கானதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கானதோ இல்லை இலங்கை மக்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்தைய குற்றச்சாட்டுகளிற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180981
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ரஷித்கான் பேட்டாலும் பந்தாலும் நிகழ்த்திய அற்புதம் - குஜராத் அணி தோல்வியை வெற்றியாக மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்று இன்னும் தொடங்கவே இல்லை, ஆனால், அதற்குள் ஒவ்வொரு லீக் ஆட்டமும் பல ட்விட்ஸ்ட்கள் நிறைந்தும், ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்யும் போட்டியாகவும் அமைந்து வருகிறது. சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் நேற்றுமுன்தினம் பரபரப்பாக அமைந்தநிலையில் அதைவிட பல மடங்கு ரத்தக்கொதிப்பை எகிறச் செய்யும் ஆட்டமாக நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்திருந்தது. 16-வது ஓவருக்குப்பின் ஆட்டத்தின் முடிவில் “ஜிக்ஜாக்” ஏற்படத் தொடங்கியது. ஒரு ஓவர் ராஜஸ்தானுக்கு சாதகமாகவும், மற்றொரு ஓவர் குஜராத்துக்கு சாதகதமாகவும் என யாருமே கணிக்க முடியாதவகையில், இருக்கையைவிட்டும், தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றவிடாமலும் ஆட்டம் அமைந்தது. ராஜஸ்தான் அணி தனது அனைத்துவிதமான “சிலிண்டர்களை ஃபயர்” செய்தும், இறுதியில் வெற்றியை குஜராத்திடம் கோட்டைவிட்டது. கடைசிப்பந்தில் குஜராத் அணி வெற்றியைச் சுவைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி, பெருமூச்சுவிட்டுக்கொண்டது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 24-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாச்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் முதல் தோல்வியை அதிலும் சொந்த மைதானத்தில் அடைந்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகளில் ஒரு தோல்வி, 4 வெற்றி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்தாலும், நிகர ரன்ரேட் 0.871ஆகக் குறைந்துவிட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்தநிலையில் இந்த போராட்டமான சேஸிங் அந்த அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். 6 போட்டிகளில் 3 தோல்வி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது, நிகரரன்ரேட் மைனஸ் 0.637 என்ற ரீதியில் இருக்கிறது. குஜராத் அணியின் வெற்றிக்கு கேப்டன் சுப்மான் கில் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலும் நடுவரிசை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து தோல்வியை நோக்கி கொண்டு சென்றனர். ஆனால், 7வது விக்கெட்டுக்கு ராகுல் திவேட்டியா, ரஷித்கான் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷித்கான் எனும் பிரமாஸ்திரம் ரஷித்கான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தன்னுள் மறைந்திருக்கும் பேட்டிங் திறனை வெளிப்படுத்தி, அணியை கரைசேர்த்துவிடுகிறார். இதற்கு முன்பும் பல ஆட்டங்கள் அதற்கு உதாரணமாக அமைந்ந்திருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் கூடுதல் சிறப்பு சேர்த்தது. பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒரு விக்கெட் 10 டாட் பந்துகள் என ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர்களை ரஷித்கான் கட்டிப்போட்டார். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 11 பந்துகளில் 24ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். ரஷித்கான் தனது கணக்கில் அடித்த 4 பவுண்டரிகளும், சாதாரண பவுண்டரிகள் அல்ல “கோல்டன் பவுண்டரிகள்” என்றுதான் சொல்ல வேண்டும். ரஷித்கான் அந்த பவுண்டரிகளை அடிக்காமல் இருந்தால், எதுவுமே சாத்தியமாக இருந்திருக்காது. ரஷித் பற்றி சுப்மான் கில் கூறியது என்ன? குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ கடைசிப்பந்தில் வெற்றி என்பது அற்புதமான தருணம். ரஷித் அருமையான வீரர், இவரைப் போன்றவர் அணிக்குத் தேவை. கடந்த போட்டியிலும் திவேட்டியா, ரஷித் கான் முக்கியப் பங்களிப்பு செய்தனர், இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு உதவியுள்ளனர். இருவரும் விளையாடியவிதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசிவரை போராடிய அந்த மனநிலைதான் வெற்றி கொடுத்தது” எனத் தெரிவித்தார். ‘சஞ்சுமல் பாய்ஸ்’ ஆட்டத்தை தவறவிட்டது எங்கே? 15-ஆவது ஓவர்கள்வரை வெற்றி என்னமோ ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம்தான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அடுத்த 5 ஓவர்களில் வெற்றியை ஒருவர் மாற்றி, ஒருவர் பிடுங்குவதும், தக்கவைப்பதுமாக இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. கில் 64 ரன்களுடனும், திவேட்டியாவும் களத்தில் இருந்தனர். சஹல் வீசிய 16வது ஓவரில் கில் இரு பவுண்டரிகளை விளாசிய நிலையில் 3வது பவுண்டரிக்கு ஆசைப்பட்டு வைடு பந்தை அடிக்கமுயன்று விக்கெட்கீப்பர் சாம்ஸனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். சுப்மான் கில் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தான் வெற்றி ஒளிமயமானது. அடுத்துவந்த ஷாருக்கான், திவேட்டியாவுடன் இணைந்தார். அஸ்வின் நேற்றைய ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவில்லை, அவரின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், திவேட்டியா ஒருபவுண்டரியும் என 17 ரன்கள் எடுத்தனர். கடைசி 3 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஆவேஷ்கான், முதல் இருபந்துகளி்ல் 2 ரன்களையும், 3வது பந்தில் ஷாருக்கானை யார்கர்மூலம் கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்து ட்விஸ்டை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் குஜராத் அணி 7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியைத் தீர்மானித்த கடைசி 2 ஓவர் கடைசி 12 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. திவேட்டியா, ரஷித்கான் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை குல்தீப் சென் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன்னை விட்டுக்கொடுத்த சென், 2வது பந்தைவைடாக வீசினார். அடுத்தபந்தில் திவேட்டியா ஒரு பவுண்டரி விளாசினார். 4வது பந்தை நோபாலாக வீசி 5 ரன்களை குல்தீப் வழங்கினார். 5-வது பந்தை மீண்டும் வைடாக வீசி, கடைசிப்பந்தில் திவேட்டியா ஒரு பவுண்டரி விளாசினார். குல்தீப் சென் 2 வைடுகள், ஒரு நோபால் என 6 பந்துகளுக்கு கூடுதலாக 3 பந்துகள் வீசியது, குஜாரத் அணிக்கு சாதகமாக மாறி ரன்சேர்க்க உதவியது. இந்த ஓவரில் 20 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. 2 வைடுகளையும், நோபாலையும் குல்தீப் தவிர்த்திருந்தால் 7 ரன்களை குறைத்திருக்கலாம். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15ரன்கள் தேவைப்பட்டது. போட்டி நேரத்தைவிட கூடுதலாக ராஜஸ்தான் எடுத்துக்கொண்டதால், 30யார்ட் வட்டத்துக்குள் கூடுதலாக ஒருபீல்டரை நிறுத்தும் வகையில் அபராதம் விதிக்கப்பட்டது. பவுண்டரி எல்லையில் 4 பீல்டர்கள் மட்டுமே வைத்து பின்னடைவைச் சந்தித்தது. கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசினார். முதல் பந்தில் ரஷித்கான் பேட்டை கிராஸ்ச செய்து லெக்திசையில் பவுண்டரி விளாசினார். 2-வது பந்தில் 2 ரன்களைச் சேர்த்த ரஷித்கான் 3-வது பந்தில் ரஷித்கான் பேட்டின் நுனியில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரி சென்றது. 3 பந்துகளில் குஜராத் அணி 10 ரன்கள் சேர்த்துவிட்டது. 3 பந்துகளையும் ரஷித்கான் ஸ்ட்ரைக்கில் தக்கவைத்துக்கொண்டார். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை. 4-வது பந்தைதட்டிவிட்டு ரஷித்கான் ஒரு ரன் சேர்த்தார். 5-வது பந்தில் திவேட்டியா பந்தை தட்டிவிட எல்லைக்கோடுவரை சென்ற பந்தை பட்லர் விரட்டிப்பிடித்து பீல்டிங் செய்து எறிந்தார். திவேட்டியா (22) 3வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்அவுட் ஆகி வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி ஒரு பந்தில் குஜராத் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார். ஆவேஷ்கான் வீசிய பந்தை பவுண்டரி அடித்து ரஷித்கான் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டனின் கடின பணி எது தெரியுமா? - சாம்சஸின் கருத்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ போட்டியின் கடைசிப் பந்தை நினைத்தாலே சிரிப்பு வருகிறது, நேர்மையாகக் கூறினால் அந்த தருணத்தை பற்றி பேசவதே கடினமானது. கேப்டனின் கடினமான பணி என்பது, தோல்விஅடைந்தபின் எங்கு தோற்றோம் என்று விவரிப்பதுதான். சில மணிநேரத்துப்பின் அதைப்பற்றி கூறு முடியும். குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நன்றாக பேட் செய்தனர், பந்துவீச்சும், பீல்டிங்கும் அருமை. நான் பேட் செய்தபோது 180ரன்கள்தான் வரும் என நினைத்தேன், 197 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்குதான். விக்கெட் நன்கு வறண்டு, பந்து தாழ்வாக வந்தது. பந்துவீச்சு இன்னும் மேம்பட வேண்டும், தொடக்கம் சிறப்பாக இன்னும் அமைய வேண்டும், நாங்கள் இன்னிங்ஸை இழுத்துவந்தது எளிதானது அல்ல. 197 ரன்கள் ஜெய்ப்பூரில் பனிப்பொழிவு இல்லாமல் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான்” எனத் தெரிவித்தார் டெத்ஓவரில் ஏன் போல்ட் பந்துவீசவில்லை? ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் 15 ஓவர்கள்வரை வெற்றி இருந்தது. இதில் அஸ்வினுக்கும், குல்தீப் சென்னுக்கும் ஓவர்கள் வழக்காமல் டிரன்ட் போல்ட்டுக்கு ஓவர் வழங்கி இருக்கலாம். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் 2 ஓவர்கள் வீசிய போல்ட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவருக்கு 2 ஓவர்கள் இருந்தது. மிகச்சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளரான டிரன்ட் போல்ட்டுக்கு 2 ஓவர்கள் இருந்தும், அவரைப் பந்துவீசச் செய்யாமல், ஏன் அஸ்வினுக்கும், அனுபவம் இல்லாத குல்தீப் சென்னுக்கும் பந்துவீச கேப்டன் சாம்ஸன் கூறினார் என்பது சமூக வலைத்தளங்களில் விவாதமாகியுள்ளது. அது மட்டுமல்ல டிரன்ட் போல்டுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாத நிலையில், அவரும் களத்தில் இருந்தபோது அவரை பந்துவீச அழைக்காதது ஏன் என்றும் கேள்விகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கில், சுதர்ஷன் வலுவான அடித்தளம் 197 ரன்கள் இலக்கு அடைவதற்கு கடினமானதுதான் என்றபோதிலும், கில், சாய் சுதர்ஷன் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் ஆவேஷ்கான் வீசிய முதல் ஓவரிலேயே சுதர்ஷன் அப்பர்கட் ஷாட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இம்பாக்ட் வீரராக கேசவ் மகராஜ் விரைவாக வந்தாலும் 2 பவுண்டரிகளை கில் விளாசி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 44ரன்கள் சேர்த்தனர். சஹல் வீசிய 8-வது ஓவரில் சுதர்ஷன் 2 பவுண்டரிகளை விளாசினார். இந்த சீசனுக்கு அறிமுகமாக குல்தீப் சென் பந்துவீச அழைக்கப்பட்டார். குல்தீப் வீசிய 8-வது ஓவரில் சுதர்ஷன் 35 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், அடுத்து குல்தீப் வீசிய 11வது ஓவரில் மேத்யூ வேட் போல்டாகி ஆட்டமிழக்க, அடுத்துவந்த அபினவ் மனோகரும் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 10 பந்துகளில் குஜராத் அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து நிதானமாக பேட் செய்த கில் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடுவரிசையில் களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்து சஹல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் சுப்மான் கில் ரன்சேர்க்கும் கியரை மாற்றி அஸ்வின் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டர்கள் உள்பட 13 ரன்களையும், சஹல் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டர்கள் 3வது பவுண்டரிக்கு வைடுபந்தை ஆசைப்பட்டபோது ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 72 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த கில் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தால்தான் கடைசிவரிசையில் வந்த திவேட்டியா, ரஷித்கான், ஷாருக்கானால் ஓரளவுக்கு பதற்றம் இல்லாமல் பேட் செய்ய முடிந்தது. சுப்மான் கில்லும் தொடக்கத்திலேயே ஆட்டிழந்திருந்தால், குஜராத் அணியின் தோல்வி உறுதியாகி இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்ஸன், பராக் பொறுப்பான ஆட்டம் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(24), பட்லர்(8) இருவரும் விரைவாகவே ஆட்டமிழந்ததால், அணியை காக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் சாம்ஸனுக்கும், ரியான் பராக் ஏற்பட்டது. இந்த சீசனில் 5வது போட்டியில்விளையாடும் ஜெய்ஷ்வால் இதுவரை ஒரு போட்டியில்கூட சிறப்பாக பேட் செய்யவில்லை, ஒருஅரைசதம்கூட அடிக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த பட்லர் இந்த ஆட்டத்தில் ரஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. 6வது ஓவரிலிருந்து சாம்ஸன், பராக் கூட்டணி சேர்ந்து அணியை இழுத்து வந்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 130 ரன்கள் சேர்த்தனர். ரஷித்கான் பந்துவீச்சை மட்டும்தான் இருவராலும் அடித்து ஆடமுடியவில்லை. மற்றவகையில் மோகித் ஷர்மா, நூர்அகமது, உமேஷ் யாதவ், பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். சாம்ஸன் நிதானமாக பேட் செய்ய பராக் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி 34 பந்துகளி்ல் அரைசதம் அடித்தார். நூர் அகமதுவின் 17 பந்துகளில் ரியான் பராக் 33 ரன்கள் சேர்த்தார். சாம்ஸனுக்கு பெரிதாக ஸ்ட்ரைக் கிடைக்காதால் தொடக்கத்தில் 20 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். அதன்பின் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து சாம்ஸன் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரியான் பராக் 76 ரன்கள்(48பந்து, 5சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து மோகித் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஹெட்மயரும் சிறிய கேமியோ ஆடி 13 ரன்கள் சேர்த்தார், சாம்ஸன்68 ரன்களுடனும்,ஹெட்மயர் 13 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு சாம்ஸன், பராக் சேர்த்த ரன்கள்தான் பிரதானமாகும். ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், சஹல், குல்தீப் சென், ஆவேஷ் கான் ஆகிய 4 பேருமே ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். அதிலும் அஸ்வின் பந்துவீச்சு ஏன் நேற்று மோசமாக இருந்தது எனத் தெரியவில்லை. 2 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்த டிரன்ட் போல்டுக்கு ஏன் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பும் கேள்வியாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce96znwxv5po
-
தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து 9 ஏப்ரல் 2024 பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது. இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை. இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான். ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன. பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக்கோடா கி.பி. 1025 முதலே உள்ளது. அவை முதலில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பக்கோடா சாப்பிடும் பழக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES பருப்புகளை அரைத்து, அதனை காய்கறிகளுடன் கலந்து பக்கோடா தயாரிக்கப்பட்டது. அதை மக்கள் பொறித்து சாப்பிட்டனர். மக்கள் இதை பக்கவாடா (Pakavata) என்று அழைத்தனர். அதாவது, சமைத்த உருண்டை அல்லது கட்டி என்பது இதன் பொருள். இது பல இடங்களில் பாஜியா என்றும் அழைக்கப்படுகிறது. 1130 இல் வெளியான மானசொல்லாசம் (Manasollas) மற்றும் 1025 இல் வெளியிடப்பட்ட லோகோபகாரம் (Lokapakara) ஆகிய வரலாற்று உணவு நூல்களில், பாஜியா அல்லது பக்கோடா செய்ய, காய்கறிகளை கடலை மாவில் கலந்து, மீன் வடிவ அச்சில் பொறித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம், பச்சை மிளகாயுடன் காய்ந்த மசாலாப் பொருட்களைக் கலந்து பக்கோடாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ரவை மற்றும் அரிசி மாவு இதில் பயன்படுத்தப்படுகின்றன. பக்கோடா அல்லது பாஜியாவில் ஊருக்கு ஏற்ப சில வித்தியாசங்கள் இருப்பதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பக்கோடா பரவியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கடல் மார்க்கமாக இந்தியக் கடற்கரைக்கு வந்த போது, நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பண்டங்களைத் தேடினர் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துகீசியர்கள் பொதுவாக இந்திய சமையல்காரர்களை பயணத்தின் போது தங்களுடன் வைத்திருப்பார்கள். அந்த சமையல்காரர்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் பச்சரிசி மாவு மற்றும் மசாலா சேர்ந்து வறுத்த காய்கறிகளை போர்ச்சுகீசியர்களுக்கு உணவாக வழங்குவர். வறுத்த பிறகு அவற்றின் ஈரப்பதம் நீக்கப்பட்டதால், அவை நீண்ட காலத்திற்கு கெட்டுப்போவதில்லை. போர்ச்சுகீசியர்களால்தான் பக்கோடாக்கள் ஜப்பானை சென்றடைந்தன. ஜப்பானில் பருப்பு பயிரிடப்படாததால், அங்குள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களுடன் பருப்பால் ஆன மாவுக்குப் பதிலாக மைதா மாவைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜப்பானிய டெம்புரா பிறந்தது இப்படித்தான். இன்றும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேருந்தில் பயணம் செய்தாலும், ரயிலில் பயணம் செய்தாலும், பக்கோடா, பாஜியா, போண்டா போன்றவற்றை சட்னியுடன் சேர்த்து எடுத்துச் செல்வதுதான் வழக்கம். இந்திய-பாகிஸ்தானிய பக்கோடாக்கள், ஜப்பானிய மற்றும் பிரிட்டிஷ் ஃபிரிட்டர்ஸ் வகை உணவு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளின் ஃபாலாஃபெல், அனைத்து உணவுகளும் ஒன்றுக்கொன்று உறவினர்கள் போல் தெரிகிறது. பக்கோடாக்களுக்கான மாவு பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஃபிரிட்டர்ஸ் உணவுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ஃபாலாஃபெலுக்கு வேகவைத்த பயிரை அரைத்து மாவு தயாரிக்கப்படுகிறது. ரமலானுக்கும் பக்கோடாவுக்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES உணவு மற்றும் பானங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்த புஷ்பேஷ் பந்த், பக்கோடாவின் வரலாறு பற்றி கூறுகையில், "பக்கோடாவின் வரலாறு உணவு வரலாற்றில் இல்லை, ஆனால் உணவுகள் வறுத்த உணவுகளின் வரலாற்றில் உள்ளது. ரமலான் மாதத்தில் இதன் பயன்பாடு பெரிது. இவ்வகை உணவுகள் எண்ணெயில் பொறித்தது என்பதால், சீக்கிரம் கெட்டுப்போகாது. கடலை மாவு என்பதால் சத்தானது. மேலும், இதை உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் மற்றும் சட்னிகளுடன் சாப்பிடலாம்” என்றார். நோன்பு திறப்பின்போது நமக்குப் பிடித்தமான காரமான மற்றும் இனிப்பு உணவுகளை உண்ண நம் இதயம் விரும்புகிறது. பக்கோடா என்பது ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் உணவு. அதன் தயாரிப்புக்கான அனைத்து பொருட்களும் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும். பக்கோடாக்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். இதற்கு ஒரு காரணம், அவை இரண்டு நாடுகளின் வானிலைக்கும் ஏற்றது. இதுவே காலப்போக்கில் பக்கோடா தயாரிப்பதில் பல வகைகள் தோன்றியதற்குக் காரணம். உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டுமின்றி, தாமரை, வெள்ளரிக்காய், மீன் போன்றவற்றையும் கடலை மாவில் கலந்து பக்கோடாவாக செய்வார்கள். புஷ்பேஷ் பந்த் கூறுகையில், "முஸ்லிம்கள் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர்களின் இஃப்தார் உணவு அட்டவணை இது தவறு என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், ரமலானின் போது, உணவு மேசையில் உருளைக்கிழங்கு சாட் மற்றும் சாட் பக்கோடாக்கள் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு-வெங்காயம் பக்கோடாவும் கிடைக்கும். ஒருபுறம், அது காரமான சுவையை அளிக்கிறது. மறுபுறம், இது நோன்பு இருப்பவர்களின் உடலில் சோடியம் மற்றும் புரதத்தின் அளவையும் சமநிலையில் வைத்திருக்கிறது" என்றார். பாகிஸ்தான் பக்கோடாக்கள் பட மூலாதாரம்,UROOJ JAFRI படக்குறிப்பு, உருஜ் ஜாஃப்ரி பாகிஸ்தானின் பிரபல சமையல் கலைஞரான ஜுபைதா அபா இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய சமையல் கலை தந்திரங்கள் மற்றும் உணவு வகைகளை இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சமையலறைகளில் பயன்படுத்துகின்றனர். அவரது மகள் ஷாஷா ஜாம்ஷெட் கூறுகையில், "அம்மா பக்கோடாவில் இனிப்பு சோடாவைப் பயன்படுத்துவார். அதனால் பக்கோடா மென்மையாகவும், லேசாகவும் இருந்தது. அது ரமலான் மாதமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, ஒருவர் தேநீர் மற்றும் பக்கோடாவுடன் அரட்டையடிக்கலாம், நோன்பு திறக்கலாம்” என்றார். பாகிஸ்தானில், ரமலான் மாதத்தில் ஒவ்வோர் இனிப்பு கடையிலும் பக்கோடா மற்றும் ஜிலேபி கிடைக்கும். உருளைக்கிழங்கு பக்கோடா பல தசாப்தங்களாக மக்களின் விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பெஷாவரில், கீமா அல்லது சிக்கன் பக்கோடாக்களும் கிடைக்கின்றன. அதேபோல், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் கோழி மற்றும் கடல் உணவுகளுடன் கூடிய பக்கோடாவும் கிடைக்கும். பட மூலாதாரம்,UROOJ JAFRI படக்குறிப்பு, ஆயிஷா அலி பட் லாகூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஆயிஷா அலி பட் கூறுகையில், "பருப்பு மாவின் சுவை வித்தியாசமானது. ஆனால், மற்ற நாடுகளில் பக்கோடா மாவு மற்றும் அரிசி மாவு கலவையில் செய்யப்படுகிறது" என்றார். “பிரிவினை மூலம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியவர்களுக்கு அவமானம். அசாம் முதல் பஞ்சாப் சிந்து வரை, கேரளா முதல் காஷ்மீர் வரை எங்கு முஸ்லிம்கள் இருந்தார்களோ, அங்கெல்லாம் பக்கோடாக்களும் இருந்தன” என்கிறார் புஷ்பேஷ் பந்த். "ஒடிசாவிலும் வெங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படும் பியாஜி உள்ளது. அதேசமயம் வங்காளத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கலந்து பைகுனி எனும் உணவு கிடைக்கும். தென்னிந்தியாவில் காய்கறிகளை பொடியாக நறுக்கி பாஜியா செய்யப்படுகிறது. பிகாரில் நிறுபருப்பை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் வேகவைக்கப்பட்ட தாமரை, வெள்ளரி பக்கோடாக்கள் நாதிர் மோஞ்சி என்று அழைக்கப்படுகின்றன." பிரிட்டனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே பிரிட்டனிலும் பக்கோடாக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. லண்டனில் மழை பெய்யும் போதெல்லாம், பிபிசி உருது சேவையின் மூத்த சக ஊழியரான ராசா அலி அபிதி சாப், மத்திய லண்டனில் உள்ள டிரம்மண்ட் தெருவில் இருந்து கலவையான பக்கோடாக்களையும் ஜிலேபிகளையும் கொண்டு வருவார். பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உலகில் எங்கிருந்தாலும் பக்கோடா விருந்து இல்லாமல் ரமலான் அல்லது மழைக்காலத்தைக் கொண்டாடுவதில்லை. https://www.bbc.com/tamil/articles/crg3kv4r872o
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் ஆமோஸ், எர்வோன் ரிவால்ட், கேட் கேனர் பதவி, பிபிசி நியூஸ் 31 நிமிடங்களுக்கு முன்னர் சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளைக் காட்டிலும் அதிக பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை அன்டார்டிகாவை விட்டு வெளியேறி கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பாறை நகர்வது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது? அது நகர்ந்து செல்வதன் விளைவு என்ன? A23a என அந்த பனிப்பாறை அறியப்படும் 1986இல் அண்டார்டிக்கில் இருந்து பிரிந்தது. அப்போதிருந்து மிகச் சிறிய அளவில் நகர்ந்துகொண்டிருந்த இந்தப் பனிப்பாறை, சமீபத்தில் ஒரு பெரும் இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான ‘பனித்தீவு’ போல வெட்டெல் கடலின் அடிமட்டத்தில் சிக்கியிருந்தது. சுமார் 350மீட்டர் ஆழமுள்ள அதன் அடிப்பாகம் அதை அந்த இடத்தில் நங்கூரமிட வைத்திருந்தது. ஆனால், அந்த அடிப்பகுதி 2020ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாக உருகியதன் விளைவாக, அந்த பனிப்பாறை மீண்டும் கடல்நீரில் மெல்ல மிதக்கத் தொடங்கியது. பின்னர் காற்றோட்டம், காற்று ஆகியவை அந்தப் பனிப்பாறையை வெப்பமான காற்று மற்றும் நீர் இருக்கும் வடக்கு நோக்கி நகர வைத்தது. இப்போது அண்டார்டிகாவின் மிதக்கும் பனியில் பெருமளவைச் சுமந்து செல்லும் A23a தற்போது அந்தப் பாதையைப் பின்பற்றிப் பயணித்து வருகிறது. இது அழிவின் பாதை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பெரும் பனிப்பாறை துண்டுதுண்டாக உடைந்து உருகப் போகிறது. ஈஃபிள் டவர் உயரத்தைவிட அதிக சுற்றளவு இன்று, அண்டார்டிக் முனையிலிருந்து வடகிழக்கே சுமார் 700கி.மீ தொலைவில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகிலுள்ள 60வது பேரலல் என்ற பகுதியை ஒட்டிய பாதையில் நகர்ந்து செல்கிறது. அது சிறிது சிறிதாக சிதைவதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதை, செயற்கைக்கோள் படங்களும் அதை நெருக்கமாகக் கண்காணிக்கும் கப்பல்களில் இருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலிருந்து தினமும் பெரியளவிலான பனித் துண்டுகள் கடலில் விழுகின்றன. இப்போதே அப்படி உடைந்து விழுந்த கால்பந்து அளவிலான மற்றும் லாரி அளவிலான பனிக்கட்டிகள் A23a-ஐ சூழ்ந்துள்ளன. காற்று, கடல்நீரோட்டம், சுழல் ஆகியவை வரவிருக்கும் வாரங்களில் A23a பனிப்பாறையின் போக்கைத் துல்லியமாகத் தீர்மானிக்கும். ஆனால், அதைச் சூழ்ந்திருக்கும் ராட்சத பனிப்பாறைகள், அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து தோராயமாக, 650கி.மீ தொலைவில் வடகிழக்கே தெற்கு ஜார்ஜியாவை கடக்கும்போதே உருகிவிடும். பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி என்ற பகுதி நிறைய பனிப்பாறைகள் இருக்கும் இடமாகத் தெரிகிறது. A23aஇன் அளவை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கிரையோசாட்-2 (துருவப் பனிக்கட்டிகளின் அடர்த்தி மற்றும் அவற்றில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டம்) திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்தப் பெரும் பனிப்பாறையின் சுற்றளவை மதிப்பிடுவதற்கு விண்கலத்தில் ரேடார் அல்டிமீட்டரை பயன்படுத்தினர். அப்போது அதன் சுற்றளவு சராசரியாக 280மீட்டர் தடிமன் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் பார்த்தால், இது பிரான்சில் உள்ள ஈஃபில் டவரின் (330மீட்டர்) உயரத்தைவிட இதன் சுற்றளவு அதிகம். பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS பிரமிக்க வைக்கும் ராட்சத அளவு இந்த பிரமாண்ட பனிப்பாறையின் 30மீ உயரமான குன்றின் செங்குத்தான பகுதிக்கு அருகே பயணம் செய்தாலும்கூட அதன் மொத்த அளவைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். அப்படிச் செய்வது பக்கிங்ஹாம் அரண்மனையின் முகப்பில் நின்று லண்டனின் மொத்த பரப்பளவை அளவிடுவதைப் போல் இருக்கும். அதன் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தாலும், லக்சம்பர்க், பஹ்ரைன், சிங்கப்பூர் உட்பட இவற்றைப் போன்ற சுமார் 29 நாடுகளின் அளவைவிட அது மிகப் பெரியது. ஆற்றல் மிக்க அலைகள் பெரும் மலையாகத் திகழும் இந்த பனிப்பாறையின் சுவர்களில் மோதுகின்றன. அதன் மகத்தான் குகைகள் மற்றும் வளைவுகளைச் செதுக்குகின்றன. அந்தப் பனிப்பாறையில் நீரில் மூழ்கியிருக்கும் பகுதியான பரந்த சம தளத்தை, பாறையை அரிப்பதன் மூலம் மேற்புறத்திற்கு அழுத்துகின்றன. இதன் விளைவாக பனிப்பாறையின் அந்தப் பகுதிகள் இடிந்து கடலில் விழுகின்றன. இந்தச் செயல்முறையில், கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறையின் சமதளம் மேற்பரப்புக்கு அலைகளால் வலிய மேற்பரப்புக்கு வரவைக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில் பாறையின் மேற்பரப்பு விளிம்புகள் உடைந்து விழுகின்றன. இது மட்டுமின்றி வெப்பமான காற்றும் அதன் பங்குக்கு பனிப்பாறையைப் பாதிக்கின்றது. உருகும் பனியால் விழும் விரிசல்கள் ஏற்படுத்தும் அபாயம் காற்றிலுள்ள வெப்பத்தின் காரணமாக பனி உருகுதலால் உருவாகும் நீர், பாறையின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்டு, விரிசல்களில் வடிந்து அந்தப் பிளவுகளை இன்னும் ஆழமாகக் கீழே வரை கொண்டு செல்கிறது. இதனாலும் பாறையில் உடைப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தப் பேரழிவுக்கான பாதையில் A23aஇல் எஞ்சியிருப்பது வேறு எதுவுமே இல்லை என்ற நிலை வரலாம். A23a பனிப்பாறை, அனைத்து பெரிய பாறைகளையும் போலவே, அது உருகும்போது அந்தப் பனியில் சிக்கியிருக்கும் கனிம தூசுகளைச் சிதறடிக்கும். கடல்பரப்பில், இந்தத் தூசு கடல் உணவுச் சங்கிலிக்கான அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக உள்ளது. பிளாங்டன் முதல் பெரிய திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் இந்தப் பெரும் பனிப்பாறையின் அழிவிலிருந்து பயனடையும். இந்தப் பெரும் பனிப்பாறை குறித்து மக்கள் கேட்கும்போதெல்லாம், இதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகத்தான் இருக்க வேண்டும், இது வெப்பமயமாதலின் விளைவு என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது. A23a அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தது. அங்கு நிலைமை இன்னும் குளிராக உள்ளது. அந்த தோற்றப்புள்ளியான, ஃபில்ஷ்னர் பனிப்படலம், பனிப்பாறைகளால் உருவாக்கப்பட்ட மிதக்கும் பனிக்கட்டி ஆகும். அவை அந்த கண்டத்த்திலிருந்த வெட்டல் கடலுக்குள் பாய்ந்தன. அங்கு நீருக்குள் நுழையும்போது பனிப்பாறைகளின் மிதக்கும் பரப்பு மேலே உயர்ந்து ஒன்றாக இணைகின்றன. இந்தப் பனிப்படலத்தின் முன் விளிம்பில் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உதிர்வது ஓர் இயற்கையான செயல்முறை. விஞ்ஞானிகள் இதை “கன்று ஈன்ற” எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு பசு தனது குட்டிகளைப் பெற்றெடுப்பதைப் போல, பனிப்பாறை பனிக்கட்டிகளை உதிர்க்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறையைப் பின்னால் இருந்து உருவாக்கும் பனிக்கட்டிகளின் வெளியேற்றம் சமநிலையில் இருந்தால் பனிப்படலம் சமநிலையில் இருக்கும். பனிப்படலத்தின் முன்புறம் வெதுவெதுப்பான நீரால் தாக்கப்பட்டால், அது சமநிலையை இழக்கக்கூடும். ஆனால், இது ஃபில்ஷ்னரில் நடப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் பற்றிய புரிதல் பட மூலாதாரம்,ASHLEY BENNISON/BAS எப்படியிருப்பினும், கண்டத்தின் பிற பகுதிகளில் வெப்பமான நிலைமைகள் முழு பனிப்படலத்தின் சரிவைத் தூண்டுவதையும், பெருங்கடல்களின் மட்டத்தை உயர்த்துவதையும் நாம் கண்டுள்ளோம் என்பது வியக்கத்தக்க வகையில் உண்மை. மேலும், இத்தகைய பனி ராட்சதர்கள் எங்கு, எவ்வளவு அதிகமாக கன்று ஈன்றார்கள் (பனிப்பாறைகளை வெளியேற்றின) என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து, சமநிலை மாறுகிறதா என்பதற்கான ஏதேனுமொரு மாற்றத்தைக் கண்டறிய முயல்கின்றனர். அவர்கள் ஆழமான வரலாற்று சூழலையும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். செயற்கைக்கோள்கள் சுமார் 50 ஆண்டுக்கால அவதானிப்புகளை மட்டுமே அளித்துள்ளன. இதுவொரு ஒரு சிறிய பதிவு மட்டுமே. நீண்ட முன்னோக்கைப் பெற, ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பனிப்பாறை ஆலியில் உள்ள கடல் தளத்தில் துளையிட்டனர். அவர்களால் அந்த மண் பகுதியின் கால அளவைக் கணக்கிட்டு, அதில் இருந்த டெட்ரிடஸ் எனப்படும் பனிப்பாறைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலில் கொட்டப்பட்ட கற்களை ஆய்வு செய்ய முடிந்தது. இந்த ஆய்வு கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய புரிதலை உருவாக்கியது. எடுத்துக்காட்டாக, அந்தப் பகுதி சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகளின் பெரும் பாய்ச்சலைக் கண்டதாக ஆய்வு முடிவுகள் பரிந்துரைத்தன. மேற்கு அண்டார்டிகாவின் பல பனிப் படலங்களை உடைத்த, முன்பு நிகழ்ந்த அங்கீகரிக்கப்படாத வெப்பமயமாதல் கட்டத்தின் ஆதாரமாக இது இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,CHRIS WALTON/BAS பூமியில் பனிப்பாறைகளின் கடந்த காலச் செயல்பாடுகளை நேரடியாக நிகழ் காலத்தில் தொட்டுணரக்கூடிய பகுதிகள் உள்ளன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில், 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலப்பகுதி நீருக்கு அடியில், தென் துருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்த போது, அவை கடல்தரையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, பனிக்கட்டிகள் விட்டுச்சென்ற தடயங்களின் மீது இன்று நம்மால் நடக்க முடியும். அதோடு, வெட்டெல் கடலின் அடிப்பகுதியில், A23a இதேபோன்ற விஷயங்கள் இருக்கும். இவையும் ஆயிரக்கணக்கில், ஒருவேளை லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்புள்ளது. இறுதியாக “A23a என்றொரு பனிப்பாறை இருந்தது” எனச் சொல்வதற்கான அடையாளமாக அது இருக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crgyny2z4v2o