Everything posted by ஏராளன்
-
யாழில் புற்றுநோய் அதிகரிப்பு! கடந்த வருடத்தில் 776 பேர் பாதிப்பு: 71 பேர் இறப்பு - வைத்திய கலாநிதி யமுனானந்தா
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 09:37 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும். புற்றுநோயைப் பொறுத்தவரையில் நிற மூர்த்தம் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் சமூகத்தில் வயதானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போது புற்றுநோயின் தாக்கம் வேகமாக உணரப்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் சூலகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்று நோய்கள் இனம் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தமட்டில் புற்று நோய்களை இனம் காணுவதற்கான ஆய்வு கூட வசதிகள் காணப்படுகின்ற நிலையில் மேலதிக ஆய்வுகளுக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் தை மாதம் 60 பேரும் பெப்ரவரி மாதம் 49 பேரும் மார்ச் மாதம் 60 பேரும் ஏப்ரல் மாதம் 52 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும். 40-60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை கண்டறியும் மனோ கிராம் சிகிச்சை மூலம் கண்டறியலாம். குறித்த சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் பெண்கள் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் புகைத்தல் வெற்றிலை போடுதலால் மற்றும் மதுபானம் அருந்துவதால் வாய் மற்றும் ஈரல் புற்று நோய் ஏற்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் இறந்துள்ளனர். இரைப்பை புற்று நோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளதுடன் ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எட்டு பேர் இறந்துள்ளனர். சுவாசாப் புற்றுநோயினால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 08 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்று நோயினால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 04 பேர் இறந்துள்ளனர். கருப்பைப் புற்றுநோயினால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். கருப்பை கழுத்து புற்று நோயினால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பை புற்று நோயினால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயினால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்று நோய்களினால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். தைரொய்ட் சிறப்பு கழலையில் ஏற்பட்ட புற்றுநோயினால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையை பொருத்தவரையில் நரம்பியல் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பில் வைத்திய பரிசோதனைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. உடலில் இயல்பு நிலைக்கு மாறாக ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் கண்காணித்து வருவதோடு சந்தேகங்கள் இருந்தால் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும். ஆகவே புற்றுநோய் தொடர்பில் ஆண், பெண் இருபாலரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாக காணப்படுவதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180779
-
வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
வீட்டுத்திட்ட பணிகளை பூரணப்படுத்த இரண்டாவது கட்ட நிதி உதவி வழங்கப்பட்டது. 08/04/2024 வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் பூரணப்படுத்த வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் 11/03/2023 இல் வைப்பிட்டுள்ளனர். 1) சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த அமரர் இராமநாதன் உதயசங்கரன் நினைவாக மகன் திரு உ.சிவசங்கரன்(கனடா) 30000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த வழங்கியுள்ளார். 2) திரு துரைசிங்கம் துர்க்கைநாதன்(கனடா) 20000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த வழங்கியுள்ளார். இரண்டாவது தடவையாக 03/04/2024 இல் 50000ரூபாவை மூவர் இணைந்து வழங்கி இருந்தனர். 3) தெய்வேந்திரம் குவைத் 20000(லண்டன்) ரூபாவை வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த நன்கொடை அளித்துள்ளார். 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் நவரத்தினம் கருணைதாசன்(கரன்) நினைவாக சகோதரன் திரு.ந.நவறஞ்சன் 15000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த நன்கொடை அளித்துள்ளார். 5) திரு.சி.தேவகுமாரன் (சுழிபுரம்) வீடுகட்டும் பணியை பூரணப்படுத்த 15000 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரை மொத்தமாக 1 லட்ச ரூபா சி.ரஜிந்தனின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. பங்களித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வீட்டுத்திட்ட பணிகளை பூர்த்திசெய்ய மேலும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா தேவைப்படுகிறது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்கள் உங்களால் இயன்ற நன்கொடையை திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிற்கு வழங்கி ஒரு குடும்பத்தை புதுமனையில் வாழ உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்காணொளியை பார்த்து சி.ரஜிந்தன் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்பு கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448 +94779591047
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
பகல் நேரத்தை இருளாக்கிய மிகப்பெரிய சூரிய கிரகணம் Published By: DIGITAL DESK 3 09 APR, 2024 | 10:17 AM இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நேற்று திங்கட்கிழமை (08) நிகழ்ந்தது. இந்த முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (இலங்கையில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர். இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது. இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது. இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 9.12 மணிக்கு ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இலங்கை நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்கு ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால் இலங்கையில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. https://www.virakesari.lk/article/180786
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
துடுப்பாட்டத்தில் கொல்கத்தா பிரகாசிக்கத் தவறியது; சென்னைக்கு இலகுவான 7 விக்கெட் வெற்றி Published By: VISHNU 09 APR, 2024 | 12:15 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 22ஆவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களைப் போன்று கவனக்குறைவாக துடுப்பெடுத்தாடாமல் நிதனாத்தைக் கடைப்பிடித்தவாறு வெற்றியை மாத்திரம் குறிவைத்து சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்களைப் துடுப்பெடுத்தாடி அதனை நிறைவேற்றிக்கொண்டனர். ரச்சின் ரவிந்த்ரா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோதிலும் டெரில் மிச்செல், ஷிவம் டுபே ஆகியோருடன் சிறப்பான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியின் வெற்றியை அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் உறுதிசெய்தார். இரண்டாவது விக்கெட்டில் டெரில் மிச்செலுடன் 55 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த ருத்துராஜ் கய்க்வாட், 3ஆவது விக்கெட்டில் ஷவம் டுபேயுடன் மேலும் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தார். டெரில் மிச்செல் 27 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 28 ஓட்டங்களையும் பெற்றனர். ருத்துராஜ் கய்க்வாட் 67 ஓட்டங்களுடனும் எம்.எஸ். தோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் வைபாவ் அரோரா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. பவர் ப்ளே நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையிலிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் சமயோசிதமாக பந்துவீசி கொல்கத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தனர். பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தவறான அடி தெரிவுகளால் பிடிகளைக் கொடுத்து ஆட்டம் இழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் சுனில் நரேன் 27 ஓட்டங்களையும் அங்கரிஷ் ரகுவான்ஷி 24 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 33 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தனது 100ஆவது பிடியை எடுத்த ரவிந்த்ர ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் அரிய மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். ஐபிஎல் வரலாற்றில் 1000 ஓட்டங்கள், 100 விக்கெட்கள், 100 பிடிகள் என்ற அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டிய வீரர் என்ற பெருமையை ரவிந்த்ர ஜடேஜா இன்று பெற்றுக்கொண்டார். இத்தகைய சாதனையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஜடேஜா இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/180771
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை 09 APR, 2024 | 09:53 AM சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் எனப் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி - NCB) போலீஸார் சம்மன் வழங்கினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. மேலும், ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/180783
-
முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 10:23 AM மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார். பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார். அக்கரைப்பற்று மற்றும் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியிருந்தார். https://www.virakesari.lk/article/180780
-
மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றம் ஏற்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்
Published By: VISHNU 09 APR, 2024 | 02:43 AM இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன "அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்" என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளிலும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், “இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம். நுகர்வோருக்குக் கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதன்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. "முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்" என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, "அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்" என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். https://www.virakesari.lk/article/180774
-
இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை பாரிய அச்சுறுத்தல் - யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
Published By: VISHNU 09 APR, 2024 | 02:49 AM தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (8) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை (NEPF 2023-2033) நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இது நமது நாட்டின் நீண்டகால இலவசக் கல்வி பாரம்பரியத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. கல்வியில் அரசின் பொறுப்பைத் திரும்பப் பெறுதல், அரச கல்விக்கான ஒதுக்கீடுகளைக் கைவிடுதல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) ஒழித்தல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி NEPF திட்டம் கல்வி முறையை முழுவதுமாக லாபம் ஈட்டும் வணிகமாக மாற்றுகிறது. இந்த சீர்திருத்தங்கள் கல்வியின் தரம் மற்றும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நலனை விட லாபத்தை முதன்மைப்படுத்துகின்றன. பல்கலைக்கழக மட்டத்தில் கட்டண விதிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், உயர்கல்விக்கான அரச நிதியை திரும்பப் பெறுவதன் மூலமும், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் சமூக கட்டமைப்பில் மையமாக இருந்த கல்விக்கான சம அணுகல் கொள்கையை NEPF குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், NEPF இன் பொருளாதாரம் சார்ந்த பாடங்கள் மற்றும் டிஜிட்டல் மீது கவனம் செலுத்துகிறது, கல்வியறிவு விமர்சன சிந்தனை மற்றும் குடியுரிமை போன்ற கல்வியின் பரந்த இலக்குகளைப் புறக்கணிக்கிறது. மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துகிறது. இந்த குறுகிய அணுகுமுறை தற்போதுள்ள வர்க்கப்பிளவுகளை ஆழப்படுத்தவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்த கூடிய வகையிலும் அச்சுறுத்துகிறது. முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, கல்விக்கான நியாயமான அணுகல் மற்றும் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் பேணுதல் ஆகியவற்றிற்கான பொறுப்பை வழங்குவதற்கான பல்வேறு உடன்படிக்கைகளுக்கு இலங்கையின் சர்வதேச கடமைகளை மீறுகிறது. மாறாக, முன்மொழியப்பட்ட கொள்கையானது இலவச கல்வியின் முற்றுப்புள்ளியாக செயற்படும். மக்களின் செலுத்தும் திறனை பொருட்படுத்தாமல் குடிமக்கள் என்ற வகையில் பெறுவதற்கான உரிமையை பறிக்கிறது. NEPF நிர்வாகம், நிதி, தர உத்தரவாதம் ஆகியவற்றில் அரசின் பங்கை கடுமையாக மாற்றுகிறது. இந்த சவால்களுக்கு விடையிருக்கும் வகையில் FUTA, NEPF க்கான எதிர்ப்பைத் திரட்டி, இலங்கையில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும். அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களைத் திரும்பப் பெறவும், சந்தை சக்திகளை விட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். FUTA, சமூகத்தின் அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட பிரிவுகளுடன் சேர்ந்து, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கும். இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகையில், இந்த முக்கியமான போராட்டத்தில் எங்களுடன் சேருமாறு அனைத்து குடிமக்களையும் அழைக்கிறோம். அனைத்து இலங்கையர்களும் அவர்களின் பின்னணி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கடந்து, எல்லோரும் சேர்ந்து கல்வி அடிப்படை உரிமையாக இருப்பதை உறுதி செய்யலாம். இறுதியாக, கல்வி போன்ற இன்றியமையாத விடையங்களின் கொள்கை வகுப்பதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக மாறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று FUTA கடுமையாகக் கோருகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/180772
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்த கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது. இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்குத் தொடங்கியது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த தவறான கற்பிதங்கள் உள்ளிட்டவை குறித்து, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இந்த முழு சூரிய கிரகணத்திற்கு உலகம் முழுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது எதனால்? பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம். சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது. மேலும், நிலப்பகுதியில் சூரிய கிரகணம் தெரிவதென்பது மேலும் அரிதான ஒன்று. கடல் பகுதியில் கூட சூரிய கிரகணம் தென்படலாம். குறிப்பிட்ட இந்த முழு சூரிய கிரகணம் தென்பட்ட மிகப் பெரும்பான்மையான பகுதி நிலப்பகுதியாக இருந்தது. இது, அமெரிக்கா கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தைப் மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அம்மக்களுக்குக் கிடைத்தது. இந்த முழு சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததற்கான காரணம் என்ன? நிலா பூமியை சுற்றி வரும்போது, கோழி முட்டை போன்று நீள்வட்டப் பாதையில் சுற்றும். எனவே, ஒரு சமயத்தில் நிலா பூமிக்கு அருகிலும் மற்றொரு சமயத்தில் பூமியிலிருந்து தொலைவிலும் இருக்கும். ஒரு பொருள் அருகிலிருக்கும் போது பெரிதாகவும் தொலைவிலிருந்தால் சிறியதாகவும் தெரியும் என்பது நமக்குத் தெரியும். அதனால், நிலா பூமியை சுற்றிவரும்போது குறிப்பிட்ட சமயத்தில் நிலா அளவில் பெரிதாகத் தெரியும். மற்றொரு சமயத்தில் சிறியதாகத் தோன்றும். சிறியதாக தோன்றும் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சிறிது நேரத்திற்குத்தான் கிரகணம் நீடிக்கும். ஏனென்றால் அளவில் சிறியதாக தோன்றும் நிலாவால் சூரியனை சிறிது நேரத்திற்குத்தான் மறைக்க முடியும். ஆனால், அதுவே நிலா பெரிதாக இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முழு சூரிய கிரகணம், நிலா பெரிதாக இருப்பதற்கு சற்றேறக்குறைய அருகாமையில் இருந்ததால் இவ்வளவு நேரம் நீடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்? கோள வடிவிலான பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால், அமெரிக்காவில் சூரியன் தெரிந்தால் இந்தியாவில் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணம், அமெரிக்காவுக்கு நேராக நிலவு, அதற்கு நேர்கோட்டில் சூரியன் இருக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் தெரியவில்லை. சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது ஏற்கனவே இந்தியாவில் இரவுதான். அதனால், அதனை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த சூரிய கிரகணத்தின்போது நாசா ராக்கெட்டுகள், விமானங்கள் மூலம் பல ஆய்வுகள் செய்துள்ளன. இந்தியா சார்பில் ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா? பள்ளியில் எல்லோரும் இந்த சோதனையை செய்திருப்போம். ஒரு காந்தத்தை காகிதத்தின் அடியில் வைத்துவிட்டு, காகிதத்தின் மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தப்புலக் கோடுககளை கண்டறிந்திருப்போம். அம்மாதிரி சூரியனுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனை சுற்றியும் அதேபோன்று காந்தப்புலக் கோடுகள் தோன்றும். ஆனால், சூரியனின் காந்தப்புலக் கோடுகள் ‘இடியாப்பம்' போன்று இருக்கும். ஆனால், பூமியை சுற்றியிருக்கும் காந்தப்புலத்தைப் பார்த்தால், அழகாக வாரிய கூந்தல் போன்றிருக்கும். சூரியனின் காந்தப்புலத்தின் வடிவம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து சூரியனிலிருந்து சூரியப்புயல் உண்டாகும். எனவே, சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால், சூரியப்புயலை நாம் முன்கூட்டியே கணிக்கலாம். சூரியனின் காந்தப்புலங்களை முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே நம்மிடம் உள்ள தகவல்களை வைத்து காந்தப்புலம் இப்படி இருக்கும் என, கணினிவழி உருவாக்கி வைத்துள்ளோம். இது சரியா, இல்லையா என்பதை முழு சூரிய கிரகணத்தின்போது தான் பார்க்க முடியும். அந்த ஆராய்ச்சியைத்தான் இந்தியா நேற்று செய்தது. நம்முடைய கணிப்பில் ஏதேனும் பிழை இருந்தாலும் அடுத்த சூரிய கிரகணத்தில் தான் அதை சரிசெய்ய முடியும். கொல்கத்தாவில் உள்ள ஐசர் (IISER) நிறுவனத்தின் சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. முனைவர் நந்தி என்பவர் இந்த ஆய்வை வழிநடத்தினார். உலகளவில் இந்த சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முதன்மை இலக்கு, சூரியனின் காந்தப்புலங்களை ஆராய்வதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் சூரியப்புயல் என்பது என்ன? அதனை நாம் ஏன் முன்கூட்டியே அறிய வேண்டும்? சூரியப்புயல் பூமியை தாக்கினால், பூமியை சுற்றிவரக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். கடலில் ஏற்படும் புயலை முன்கூட்டியே அறிவது எப்படி முக்கியமோ, அதேபோன்று செயற்கைக்கோள்களை காப்பாற்ற சூரியப்புயல்களை கவனிப்பதும் முக்கியம். இந்தியாவுக்கு மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விண்வெளியில் இருக்கிறது. அதற்கு சேதம் ஏற்படாமல் இருக்க சூரியப் புயல்களை கண்காணிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையை ஆராய்வதற்கான தேவை என்ன? விலங்குகளை பொறுத்தவரைக்கும் ஒரு நாளில் திரும்பி எப்போது தன் கூடடைய வேண்டும் என்று தோன்றும்? உயரப் போகும் ஒளி மங்கும்போதுதான் தோன்றும். அதாவது சூரியன் மறையும்போது தோன்றும். அதற்கு எந்த சைரன் ஒலியும் கிடையாதே. இயற்கை ஒளிதான் அதற்கான சமிக்ஞை. சூரிய கிரகணத்தின் போது ஒளி மங்குவதால், இரவாகிவிட்டது என விலங்குகளெல்லாம் தன் கூடடைகிறது. ஒளியை வைத்துக்கொண்டு விலங்குகள் எப்படி காலத்தைக் கணிக்கின்றன என்பதற்காகத்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் விலங்குகளின் மீது நடத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாசா ஏன் விமானங்களில் சூரிய கிரகணத்தைத் துரத்திச் சென்றது? நிலப்பரப்பிலிருந்து அந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது? சாதாரணமாக நிலப்பரப்பில் இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். ஆனால், சூரிய கிரகணத்தின் பாதை தொடங்கும் இடத்தில் நான் விமானத்தில் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வோம். சூரியன் செல்லும் அதே வேகத்தில், பாதையில் நான் விமானத்தை ஓட்டிச்சென்றால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல், சூரியனை முழு கிரகணமாக பார்க்க முடியும். அரை மணிநேரத்தில் காந்தப்புலக் கோடுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் பார்க்க முடியும். அதற்காகத்தான் விமானத்தில் சென்று ஆய்வு செய்தனர். இந்தியாவிலும் 1996-ம் ஆண்டில் ஏற்கனவே விமானத்தில் சென்று முயற்சி செய்தோம். ஆனால், அந்த சமயத்தில் அம்முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை. அதன்பின், 2004-ம் ஆண்டிலும் முயற்சி செய்தோம். அப்போதும் வெற்றியடையவில்லை. விமானம் சீராக செலுத்தப்பட வேண்டும். அதனால், வானிலை நிகழ்வுகளும் அதன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாகும். கடந்த காலத்தில் சூரிய கிரகணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குறித்தும் த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு “ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்ன சொல்கிறதென்றால், ஒளி நேர்க்கோட்டில் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்வோம். இடையில் அதிக நிறையுள்ள ஒரு பொருள் இருந்தால், அந்த ஒளியின் பாதையை லேசாக மாற்றிவிடும். அந்த பாதை மாற்றத்தால், பூமிக்கு ஒளி வந்து சேரும்போது, அந்த ஒளி ஏற்பட்ட இடம் வேறு இடம் என நினைத்துக்கொள்வோம். அதனால், சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனிலிருந்து ஓர் ஒளிக்கதிர் வருகிறதென்றால், எவ்வளவு வளைந்து வரும்? அந்த பார்வைத் தோற்றம் குறிப்பிட்ட விண்மீன் எங்கு இருப்பதாகக் காட்டும் என கணக்கிட்டனர்? சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனை நம்மால் பார்க்க முடியாது. ஏனெனில், சூரியனின் வெளிச்சம் அதை மறைத்துவிடும். ஆனால், முழு சூரிய கிரகணத்தின்போது வானம் இருட்டாகிவிடும் என்பதால், அந்த விண்மீன்கள் தெரியும். அதனைப் புகைப்படம் எடுக்க முடியும். அப்படித்தான் ஒளி வளைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார்" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன். ஹீலியம் கண்டுபிடிப்பு சூரிய கிரகணத்தின்போது நிகழ்ந்த மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஹீலியம். சூரியனுக்கு கிரேக்க மொழியில் ஹீலியோஸ் என்று பெயர். “சூரிய ஒளியை கிரகணத்தின்போது ஆராய்ந்த போதுதான் அதுவரை நாம் பார்க்காத தனிமம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அந்த தனிமத்தை சூரியனில் மட்டும் பார்த்ததால் ஹீலியம் என்று பெயர் வைத்தனர். அதன்பிறகுதான் ஹீலியம் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பு 1868 ஆம் ஆண்டு இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத்தின்போதுதான் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார் வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் சார்ந்து மதம், கலாசாரம் ரீதியாக கூறப்படும் வழக்கங்கள் குறித்த உண்மையை விளக்கினார் த.வி. வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் சூரிய கிரகணம் குறித்து மதம், கலாசாரம் சார்ந்து சொல்லப்படுபவை குறித்து… சூரிய கிரகணத்தின்போது உணவு கெட்டுப்போகும் என்றெல்லாம் கூட சொல்வார்கள். தர்ப்பை புல்லை உணவில் போட்டால் உணவு நன்றாக இருக்கும், இல்லையென்றால் உணவு கெட்டுப்போய்விடும் என இன்றும் சொல்வார்கள். இதுகுறித்தெல்லாம் 1981-ல் இந்தியா ஆராய்ச்சி செய்துள்ளது. கிரகணத்தின்போது உணவில் நுண்ணுயிரிகள் ஏதேனும் வளருகிறதா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் வளரவில்லை. இவையெல்லாம் கட்டுக்கதை. கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாதா? அது இந்தியாவில் இருக்கக்கூடிய நம்பிக்கை. அமெரிக்காவில் கர்ப்பிணிகள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கின்றனர். அங்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இந்தியாவில் தோன்றிய ஓர் சூரிய கிரகணத்தின்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்தோம். என் மனைவிக்கும் ஒன்றும் ஆகவில்லை. என் குழந்தையும் நன்றாகத்தான் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நியூஜெர்சியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சூரிய கிரகணத்துடன் ஒப்பிடுகிறார்களே, சூரிய கிரகணத்தின்போது திடீர் வெள்ளம் ஏற்படும் என்ற தகவல்களும் இதையொட்டி டிரெண்டானதே? இது தேவையற்ற அச்சம் காரணமாக பரப்பப்படும் போலிச் செய்தி. தினமும் உலகளவில் சிறிதும் பெரிதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படும். ஆனால், சூரிய கிரகணத்திற்கும் நிலநடுக்கத்திற்கோ, வெள்ளத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ‘இயற்கை நிகழ்வுகளெல்லாம் கடவுளின் சாபம்’ என குழப்புகின்றனர். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், நாகசாகி, மஸ்கட், திமூர், ஜம்மு-காஷ்மீர் (அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் மேல்) உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டன. இந்தியாவில் பண்டைய காலத்திலும் சூரிய கிரகணம் குறித்து இத்தகைய நம்பிக்கைகள் இருந்தனவா? கிரகணம் குறித்த இத்தகைய நம்பிக்கைகள் பண்டைய இந்தியாவில் இல்லை. இந்தியாவில் 8, 9-ம் நூற்றாண்டுகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்த அடிப்படைவாதத்தின்போதுதான் அறிவியல் கருத்துக்களுக்கு சவால் ஏற்பட்டது. அதேமாதிரி, ஐரோப்பாவில் 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் இத்தகைய கண்ணோட்டம் உருவானது. அரேபிய பகுதிகளிலும் 13, 14-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய கருத்துக்கள் தோன்றின. எல்லா பகுதிகளிலும் மத அடிப்படைவாதம் எழுந்தபோதுதான் இத்தகைய மூடநம்பிக்கைகளும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களும் தோன்றின. அமெரிக்காவிலும் இத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்க்கும் குழுக்கள் உள்ளன. https://www.bbc.com/tamil/articles/ceke957d4yvo
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்ச தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு - ராஜ்நாத் சிங் விமர்சனம் 09 APR, 2024 | 10:07 AM இலங்கைக்கு கச்சதீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என இந்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும், பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறியுள்ளது. பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி, இன்று ரூ.26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் 6ஜி-க்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில்தான் கிடைக்கிறது. இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனே காரணம். இதன் காரணமாக நாட்டில் சாமானிய குடிமகன்கள் கூட சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் செய்து பயனடைந்து வருகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்திலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமே 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு. இந்த 2 கட்சிகளும் சேர்ந்துதான் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்தன. இதனால் அவர்கள் தமிழர்கள், மீனவர்கள் உரிமை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தேசம் தான் முதன்மையானது என்பது எங்கள் நோக்கம். ஆனால், குடும்பம் தான் முதன்மையானது என்பது எதிர்க்கட்சியினரின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமாகா மாவட்டத் தலைவர் தினகரன், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து ராஜ்நாத் சிங் நேற்று மாலை ராஜபாளையத்தில் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையம் சொக்கர் கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். https://www.virakesari.lk/article/180784
-
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களையும் மூட நடவடிக்கை - பிரசன்ன ரணதுங்க
08 APR, 2024 | 05:49 PM புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குத் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்குக் காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர். அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கையளிக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தார். வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள் குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 212 குடும்பங்களுக்குக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடம் கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 2550 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும், கண்ணிவெடி அகற்றலுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், மலசலக்கூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் வழங்கப்படும். இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 50 புதிய நனோ நீர் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180729
-
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!
கொலரா அச்சம்: மீன்பிடி படகில் தப்பிக்க நினைத்த மக்கள்… நீரில் மூழ்கி 91 பேர் பலி! கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டின் நம்புலா மாநிலத்தில் கொலரா பற்றிய தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியின் காரணமாக, மக்கள் அந்த நிலப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றுவருகின்றனர். அதன் ஒருபகுதியாகவே ஒரு கோரசம்பவம் நடந்திருக்கிறது. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரை மாநிலமான நம்புலாவிலிருந்து சுமார் 130 பேரை ஏற்றிக்கொண்டு மீன்பிடிப் படகு ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்தப் படகில் அளவுக்கு மீறிய நபர்களை ஏற்றியிருக்கவே கூடாது. ஆனால், அளவுக்கு மீறிய பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 91 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக பேசிய நம்புலா மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ, “படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் படகு மூழ்கியதாக அறிகிறோம். பல குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர். பலரைத் தேடி வருகிறோம். ஆனால் கடல் நிலைமைகள் மீட்புப்பணியைக் கடினமாக்குகிறது. படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். https://thinakkural.lk/article/298458
-
பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்
Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 04:36 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/180742
-
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்
மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Published By: VISHNU 08 APR, 2024 | 07:34 PM திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (08) ஒப்புதல் அளித்துள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180767
-
‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்
6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்..! ஜனாதிபதி நிதியம் அறிவிப்பு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபாய் வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk இல், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். https://thinakkural.lk/article/298463
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
ஓமண்ணை, முருங்கக்காய் கிலோ 800 போகுது. முதல் நாள் 2.5 கிலோ 1500 ரூபாவிற்கு விற்றது, இரண்டாவது 4.5 கிலோவில் அரை கிலோ கழித்து 4கிலோ 2400ரூபாவிற்கு விற்றது.
-
கணிதப் புரட்சிக்கு வித்திட்ட பூஜ்ஜியத்தை இந்தியர்கள் கண்டுபிடித்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாகஸ் டு சௌடோய் பதவி, பிபிசி "தி ஸ்டோரி ஆஃப் மேக்ஸ்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் கேள்வி: கணித உலகில் புரட்சியை ஏற்படுத்திய பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: பூமியின் சுற்றளவை முதலில் கணக்கிட்டவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: கணக்கீடுகளில் 'முடிவிலி'யை(infinity) அறிமுகப்படுத்தியவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கணிதத்தில் மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்னிலையில் உள்ளனர். தசம பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கை அரசுக்கோ அல்லது மத வழிபாட்டுத் தலத்திற்கோ வரியாக அளித்தல்) கொடுப்பதன் பலன்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அங்கீகரித்துள்ளது. இது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் தசமத்திலிருந்து இது வேறுபட்டதல்ல. இந்தியர்கள் இதை எவ்வாறு முதலில் கண்டுபிடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கணித முறையை உருவாக்கினர். இது 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு நிறுவப்பட்டது. அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின்னர் புதிய பூஜ்ஜியம் (0) கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கணித உலகம் தலைகீழாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எண்களில் தேதிகளை கூறுவது 9 ஆம் நூற்றாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்ததற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும், இந்த முறை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்திருக்கலாம். மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் முதன்முறையாக 'பூஜ்ஜியம்' குறித்த அடையாளம் பதிவானதற்கான ஆதாரம் உள்ளது. பூஜ்ஜியத்தை இந்தியா கண்டுபிடிப்பதற்கு முன் உலகில் வேறு எங்கும் பூஜ்ஜியம் என்ற கருத்தை யாரும் உருவாக்கவில்லை. பண்டைய எகிப்து, மெசபடோமியா, சீனா ஆகிய நாடுகளும் ‘மதிப்பில்லாதது' என்பது குறித்த கருத்தைக் கொண்டிருந்தன. ஆனால், அதற்கு எந்த சிறப்புச் சின்னத்தையும் பயன்படுத்தவில்லை. பூஜ்ஜியம் தேவைப்படும் இடத்தில் அந்த இடம் வெற்றிடமாகவே விடப்பட்டது. பூஜ்ஜியம் என்ற கருத்துக்கு இலக்கத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். அதன் பிறகு கணிதத்தில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியர்கள் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது எப்படி? பூஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை என்றாலும், தரையில் கற்களைக் கொண்டு கணக்கீடு செய்த போது இந்த பூஜ்ஜியம் உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஜ்ஜிய வடிவம் கற்களை தரையில் வைக்கும்போது விழும் உருண்டையான அச்சுகளில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், கல்லின் ஒரு பகுதியை அகற்றும் போது கணக்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. வெறுமை மற்றும் நித்தியம் குறித்த கருத்துகள் பண்டைய இந்திய நம்பிக்கைகளில் அவற்றின் வேர்களைக் கொண்டுள்ளன. இந்து மற்றும் பௌத்த மத போதனைகளில் ‘இல்லாமை’ என்ற கருத்துக்கு இடம் உண்டு. கணிதத்திலும் பூஜ்ஜியத்தை எடுத்துவிட்டால் அதன் முடிவுகள் மாறாது. இந்திய தத்துவம் மற்றும் போதனைகளில் வெறுமை என்ற கருத்து உள்ளது. படக்குறிப்பு, பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்திய பிறகு வானியல் கணக்கீடுகள் மிகவும் துல்லியமானது. பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலி வரை பிரபல இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தா 7 ஆம் நூற்றாண்டிலேயே பூஜ்ஜியத்தின் முக்கிய பண்புகளை விளக்கினார். பிரம்மகுப்தாவின் பூஜ்ஜிய எழுத்துக் கணிதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்னும் உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. 1+0=1 1-0=1 1x0=0 இருப்பினும், பிரம்மகுப்தாவின் சோதனைகளில் பூஜ்ஜியத்தை வகுத்தால் கிடைக்கும் முடிவுகள், மற்றொரு புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. அவர் 1-ஐ பூஜ்ஜியத்தால் வகுத்தபோது, முடிவைக் குறிக்க 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. பின்னர் முடிவிலி என்ற கருத்து பிறந்தது. ஆனால், அது பிரம்ம குப்தாவால் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் மற்றொரு இந்திய கணிதவியலாளர் பாஸ்கரா முடிவிலியைக் கண்டுபிடித்தார். எந்த எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால், கிடைப்பது முடிவிலி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன நடக்கும் என்ற குழப்பத்திற்கு 'முடிவிலி' முற்றுப்புள்ளி வைக்கிறது. முடிவிலி உருவானது எப்படி? பாதியாக வெட்டப்பட்ட ஒரு பழம் இரண்டு துண்டுகளாகிறது. மூன்று பாகங்களாக்கினால், மூன்று துண்டுகள் உள்ளன. நீங்கள் நான்கு பகுதிகளை உருவாக்கினால், உங்களுக்கு நான்கு துண்டுகள் கிடைக்கும். நீங்கள் அதை துண்டுகளாக உடைத்துக் கொண்டே இருந்தால், அது எண்ணற்ற துண்டுகளாக இருக்கும். இதன் அடிப்படையில் பாஸ்கரா 1-ஐ பூஜ்ஜியத்தால் வகுத்தால் கிடைப்பது முடிவிலி என்று முடித்தார். ஆனால் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தி கணக்கீடுகள் மேலும் சென்றன. 3 - 3 = 0. ஆனால், 3-4=? இந்த கணக்கீட்டில், முடிவு பூஜ்ஜியமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், ஆராய்ச்சிகள் மேலும் சென்று, கடன் வாங்கி கழிப்பது என்ற கருத்து பிறந்தது. எனவே 3-4= -1 என்று கண்டறியப்பட்டது. பூஜ்ஜியம் மற்றும் தசம எண்கள் போன்றவற்றுக்கு வடிவம் மற்றும் கணக்கீடுகள் கொடுக்கப்பட்டதிலிருந்து கணித அறிவியல் பெரிதும் முன்னேறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எக்ஸ், ஒய் இந்திய கணிதவியலாளர்கள் கணக்கீட்டின் சுருக்கமான அம்சங்களைக் கூட உடைக்கத் தொடங்கிய போது அவர்களுக்கு பல முடிவுகள் கிடைத்தன. பிரம்மகுப்தா, கடன் எண்களைக் கணக்கீடுகளுக்குள் கொண்டு வந்த பிறகு, இருபடிச் சமன்பாடுகளில் ஒவ்வொரு கணக்கீடுகளுக்கும் இரண்டு முடிவுகள் இருப்பதைக் கண்டறிந்தார். பிரம்மகுப்தாவும் இரண்டு முடிவுகளுடன் (X, Y) சமன்பாடுகளை அடையத் தொடங்கினார். மேற்கத்திய நாடுகளில் இந்த செயல்முறை 1657 வரை தொடங்கவில்லை. பிரெஞ்சுக் கணிதவியலாளரான பியரே டி பெர்மா என்பவர் மேற்கத்திய நாடுகளில் முதன் முதலில் இத்தகைய கணக்கீட்டைச் செய்தார். ஆனால், பிரம்மகுப்தா இந்தியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறையைப் பயன்படுத்தினார் என்பது அவருக்குத் தெரியாது. இந்தியக் கணிதவியலாளர்களின் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் இதோடு நின்றுவிடவில்லை. இந்திய கணிதவியலாளர்கள் முக்கோணவியல் மூலம் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். இந்தியர்கள் முக்கோணவியல் உதவியுடன் பயணத்தின் போது தூரத்தையும் வான தூரத்தையும் அளந்தனர். இந்தியக் கணிதவியலாளர்களால் பூமி, சூரியன், பூமி மற்றும் சந்திரனுக்கு இடையே உள்ள தூரத்தை முக்கோணவியல் உதவியுடன் அளவிட முடிந்தது. படக்குறிப்பு, முக்கோணவியல் அடிப்படையில் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இடையே உள்ள தூரத்தை விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். பை உதவியுடன் பூமியின் சுற்றளவை கணக்கிட்ட ஆர்யப்பட்டர் இந்தியக் கணிதவியலாளர்கள் கணிதத்தில் மிக முக்கியமான 'பை' (π)க்குப் பின்னால் உள்ள ரகசியங்களைத் தேடிச் சாதித்திருக்கிறார்கள். ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் இடையிலான விகிதம் 'பை' எனப்படும். ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆர்யபட்டர் 'பை' இன் மதிப்புக்கு நெருக்கமான எண்ணாக 3.1416 என வரையறுத்தார். இதன் உதவியுடன் பூமியின் சுற்றளவை 39,968 கி.மீ. என நிர்ணயித்தார். நவீன வானியலாளர்களின் கணக்கீட்டின்படி கூட, பூமியின் தற்போதைய சுற்றளவு 40,075 கி.மீ. ஆர்யபட்டாவின் அளவீட்டுக்கும் இதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிகவும் சிறியதாக இருப்பதால் அவர் பூமியின் சுற்றளவை துல்லியமாக அளந்தவர் என்று கூறப்படுகிறார். https://www.bbc.com/tamil/articles/cld4d0gep0ro
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி 08 APR, 2024 | 02:16 PM தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாட்டாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்த பாஜகவுக்கு தேர்தல் வந்துவிட்டதாலும், சீன எல்லைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாலும் கச்சத்தீவு பிரச்சினை நினைவுக்கு வந்துவிட்டது” என்று சாடியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. “கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அதை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை” என எதிர்க்கட்சிகள் கச்சத்தீவு மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இந்நிலையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180712
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகுகிறது Published By: SETHU 08 APR, 2024 | 01:20 PM காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர். காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180704
-
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்
சாம்பல் மேடாக காணப்படுகின்றது காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை - அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்களை பார்க்க முடிகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: RAJEEBAN 08 APR, 2024 | 12:04 PM காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை இஸ்ரேலின் சமீபத்தைய முற்றுகை மற்றும் தாக்குதல் காரணமாக சாம்பல்மேடாகியுள்ளது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் மருத்துவமனை பல உடல்களுடன் வெறும் இடிபாடாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முற்றிலும் அழிவுண்ட நிலையில் காணப்படும் மருத்துவமனைக்கு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்கள் கைகால்கள் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுவதை பார்த்துள்ளனர். அழுகிய உடல்களின் துர்நாற்றத்தையும் அவர்கள் அவதானித்துள்ளனர். மருத்துவமனையில் பாரிய அழிவையும் பார்வையிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் முற்றுகையின் போது இஸ்ரேலிய படையினர் மிக மோசமான நிலையில் நோயாளிகளை தடுத்துவைத்திருந்தமை அவர்களில் சிலர் உயிரிழந்தமை குறித்து அறிந்துள்ளனர். இரண்டு வாரகால நடவடிக்கையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறியிருந்தனர். இரண்டு வாரங்களாக தாங்கள் மருத்துவமனையின் உள்ளே பாலஸ்தீன தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். மருத்துவமனைக்குள் செல்வதற்கு பல தடவைகள் முயற்சிகளை மேற்கொணட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குள் சென்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னர் காசாவின் சுகாதார துறையின் முதுகெலும்பாக காணப்பட்ட அல்ஸிபதா மருத்துவமனைக்குள் நாங்கள் சென்றோம். அது தற்போது மனித உடல்களுடன் வெறும் கோதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அதனம் கெப்ரயோசிஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நோயாளிகள் எவரும் இல்லை பல ஆழமற்ற மனித புதைகுழிகள் காணப்படுகின்றன தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே அவசரஅவசரமாக அவற்றை தோண்டியுள்ளனர் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு சென்றவேளை ஆகக்குறைந்தது ஐந்து உடல்களாவது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானித்தோம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை முற்றாக அழிந்த நிலையில் காணப்படுகின்றது உடல்களின் துர்வாசனை வீசுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சூழ்நிலைகளிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180686
-
வடக்கில் ஒரு வருடத்தில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Published By: DIGITAL DESK 7 08 APR, 2024 | 01:50 PM வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 2 பேரும், மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 6 பேரும், வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 8 பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். "நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 - 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180705
-
உணவு ஒவ்வாமையால் 100 பேர் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி!
08 APR, 2024 | 01:33 PM ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (7) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட பின் இவர்கள் அனைவரும் மயக்க நிலைக்குள்ளானதாகவும் இதனையடுத்து இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180690
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது - முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன்..! Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 12:56 PM டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் கடந்த (05)ம் திகதி மக்களின் நியாயமான போராட்டத்தை முறியடிக்க 06 பஸ்களில் மக்கள் அழைத்துவரப்பட்டனர். குறித்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது முதலில் நாம் 06 பஸ்களில் வந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு காசு ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா தருவதாகவும், அட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் பல பொய்களை கூறி பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கிலேயே அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் 06 பஸ்களில் வந்திருந்த வேறு பிரதேச மக்கள் பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்திருந்தார். அமைச்சர் இந்த நாட்டில் வடக்கில் நம்பி ஒரு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சரின் அடாவடித்தனமான செயலாக இச் செயல் அமைந்துள்ளது. மீண்டும் பல விசேட பாதுகாப்புகளுடன் பொன்னாவெளி கிராமத்திற்கு செல்ல உள்ளதாகவும் மக்களின் உரிமைபோராட்டத்தை அடக்கு முறை மூலம் நடத்திச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது இவ்வாறான செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே பாதிக்கும் வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணந்தோன்றுகிறது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/180689
-
கனடா தேர்தலில் இந்திய தலையீடா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
08 APR, 2024 | 09:55 AM புதுடெல்லி: கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது. கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்தது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. சீனா தலையீடு: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது சுமார் 11-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக சீன உளவுத் துறை பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலின்போது சீன தூதரகங்கள் சார்பில் பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கனடா தேர்தலில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யாவின் தலையீடும் இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கனடா பொதுத்தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது கிடையாது. இந்த கொள்கையை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம். உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கனடா அரசு நியமித்த சிறப்பு ஆணையம் வரும் மே 3-ம் தேதி தனது முதல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விரிவான அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180663
-
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!
மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 90 பேர் பலி ! 08 APR, 2024 | 08:28 AM மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளனர். படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு வித்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் இருந்ததாக பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180660