Everything posted by ஏராளன்
-
மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
நிவாரணப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய கேணல், மேஜர் பணி நீக்கம் Published By: SETHU 08 APR, 2024 | 10:06 AM காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்ட தனது படை அதிகாரிகள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த, 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' எனும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது கடந்த திங்கட்கிழமை (01) இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 7 பேர் உயிரிழந்தமை கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இத்தாக்குதல் தவறுதலாக இடம்பெற்றது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறினார். அதேவேளை இத்தாக்குதலுக்கு தான் மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸாக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இச்சம்பவத்தில் பல்வேறு தவறுகளும் விதிமுறை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைப்பதாக தாம் நம்பியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. மேற்படி ட்ரோன் தாக்குதலுக்கு உத்தரவிட்ட கேணல் ஒருவரும் மேஜர் ஒருவரும் பணியிலிருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர் எனவும் தென் பிராந்திய தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் முறையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துவது குறித்து ஆராயும் பொறுப்பு இராணுவ அட்வகேட் ஜெனரலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 3 பிரித்தானியர்கள், ஒரு அவுஸ்திரேலியர், போலந்து பிரஜையொருவர், பலஸ்தீனர் ஒருவர், அமெரிக்க–- கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இன்றுடன் 6 மாதங்கள் பூர்த்தியாகும் காஸா யுத்தத்தில் தனது தவறுகள் தொடர்பாக இஸ்ரேல் மன்னிப்பு கோரியமை அரிதாகும். இந்த யுத்தத்தினால் காஸாவில் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். அமெரிக்கா வரவேற்பு இதேவேளை, தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேல் முழுமையாக பொறுப்பேற்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பெல்ஜியத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இஸ்ரேல் இச்சம்பவத்துக்கு முழுமையாக பொறுப்பேற்கின்றமை முக்கியமானது. இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை பொறுப்பாளிகளாக்குவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்வதாக தென்படுவதும் முக்கியமானது' என்றார். விசாரணைக்கு வலியுறுத்தல் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பில் இஸ்ரேல் வழங்கிய தகவல்கள் போதுமானவையாக இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிப்படையான, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் தொண்டர்களின் பாதுகாப்புக்கும் இஸ்ரேல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கடந்த வியாழக்கிழமை பிரதமர் நெதன்யாஹுவுடன் தொலைபேசி மூலம் உரையாடியபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார். காஸாவுக்கு மேலும் அதிக நிவாரணங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதன்பின், காஸாவுக்கு தனது எல்லைகள் ஊடான விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக அனுமதிப்பதாக இஸ்ரேல் நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதேவேளை, காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெறவுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் இதற்காக கெய்ரோ செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180665
-
உலகின் இளைய கோடீஸ்வரர் பட்டியலில் 19 வயது மாணவி!
பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதான லிவியா வோய்க்ட் 2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவரது வருமானம் $1.1 பில்லியன் ஆகும். லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் இந்த பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பு. https://thinakkural.lk/article/298403
-
பூநகரியில் 10 கிலோ வெடி மருந்துடன் ஒருவர் கைது
Published By: DIGITAL DESK 7 08 APR, 2024 | 09:34 AM கிளிநொச்சி - பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை, மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை பொலிஸார் மீட்டனர். அதனை அடுத்து குறித்த நபரை கைதுசெய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180661
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
சூரிய கிரகண நேரத்தில் சில விலங்குகள் பதற்றமடையும்போது, ஆமைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரிய கிரகணம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சூரிய கிரகணம் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியமூட்டும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால், விலங்குகளின் உலகத்தில் ஒரு பகலின் குறிப்பிட்ட பகுதி இரவாக மாறும் நேரத்தில் அவை என்ன மாதிரியான உணர்வை எதிர்கொள்கின்றன? இந்த நாளில் சந்திரன் சூரியனை மறைப்பதன் காரணமாக ஒட்டுமொத்த வானமும் இருளால் சூழப்படுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும்போது குறிப்பிட்ட நேரமே அது நீடிக்கும் என்றாலும், மனிதர்களிடம் உணர்ச்சிபூர்வமான ஆச்சரிய உணர்வை அது உண்டாக்குகிறது. ஆனால், இதே நிகழ்வு விலங்குகள் மத்தியில் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கணிப்பது கடினம். தூக்கம், உணவு தேடுதல் மற்றும் வேட்டையாடுதல் என விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளும் 24 மணிநேர உயிரியல் நேரத்தின்படியே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கிரகணம் ஏற்படும் நேரத்தில் இந்த செயல்பாட்டு முறை எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து பெரிய அளவில் எந்த ஆய்வும் செய்யப்பட்டதில்லை. காரணம் இந்த நிகழ்வுகள் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நிகழும் ஒன்று. அதே சமயம் அனைத்து விதமான விலங்குகளும் ஒரே மாதியான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார். “ஒளி என்பது தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஒன்று. உயிரியலாளர்களாக நம்மால் எப்போதும் சூரியனை ஒளி தராமல் நிறுத்த முடியாது, ஆனால் இயற்கை அதுவாகவே அந்த பணியை செய்கிறது” என்கிறார் ஸ்வீடனை சேர்ந்த லண்ட் பல்கலைக்கழக நடத்தை சூழலியல் நிபுணர் சிசிலியன் நில்சன். 100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார். 1932இல் நடந்த சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதற்காக வில்லியம் வீலர் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து பொதுமக்களை பணியமர்த்தினார். அதில் அவர் 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்தார். அவர்கள் ஆந்தைகள் கூச்சலிடத் தொடங்குவது மற்றும் தேனீக்கள் தங்கள் கூட்டிற்குத் திரும்புவது உள்ளிட்ட பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் 2017 இல், இரண்டு நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளுக்கு சூரியனின் கதிர்களை மறைக்கும் ஒரு கிரகணம் நிகழ்ந்த போது விஞ்ஞானிகள் மீண்டும் இந்த பரிசோதனையை செய்தனர். இந்த முறை, மேலும் ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. இருள் நெருங்க நெருங்க, ஒட்டகச் சிவிங்கிகள் பதற்றத்துடன் ஓடின. தெற்கு கரோலினா உயிரியல் பூங்காவில் ஆமைகள் இனச்சேர்க்கை செய்தன. மேலும் ஓரிகான், இடாஹோ மற்றும் மிசோரி மாநிலங்களில் வண்டுத்தேனீக்கள் (Bumble bee) ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டன. இந்நிலையில் அடுத்த சூரிய கிரகணம் திங்கள்கிழமை (ஏப்ரல் 😎 அன்று நிகழவிருக்கும் நிலையில், அது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மெக்ஸிகோவிலிருந்து மெய்னே வரையிலான ஒரு குறுகிய நிலப்பரப்பில், விஞ்ஞானிகள் முழுமையான கிரகணப் பாதையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது ஒவ்வொரு விலங்குகளும் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றின. 'மிருகக்காட்சிசாலையே அன்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது’ தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,“ஆரம்பத்தில் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு 2017இல் ஏற்பட்ட கிரகணத்தால் தாக்கம் ஏற்படாது என்றே கருதினோம்” என்று கூறினார். அன்று கிரகணத்திற்கு முன்பும், பின்பும் 17 உயிரினங்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆய்வாளர்களும், மக்களும் அங்கு கூடியிருந்தனர். “ஆனால், கிரகணத்தின் போது மிருகங்கங்களின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளால் அன்றைய நாள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறிவிட்டது. அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரமாக இருந்தனர்.” அங்கிருந்த முக்கால்வாசி விலங்குகள் ஏதோ அற்புதமான மற்றும் வாழ்க்கையையே மாற்றப்போகும் நிகழ்வை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்தின என்று கூறுகிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இந்த கலவையான எதிர்வினைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அதில் சாதாரணமாக இருந்த விலங்குகள், தங்கள் மாலை நேர நடைமுறைகளைச் வழக்கமாக செய்தவை, கவலை அல்லது புதுமையான நடத்தைகளைக் காட்டியவை என பிரிக்கப்பட்டன. கிரிஸ்லி கரடிகள் போன்ற சில விலங்குகள் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வை அனுபவிப்பதில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருந்தன. "கிரகணம் முழுமையாக நிகழும் போது போது அவை உண்மையில் தூங்கிக்கொண்டும், இயல்பாகவும் இருந்தன," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். "ஒட்டுமொத்தத்தில் அவற்றில் ஒன்று தலையை குனிந்துகொண்டு என்ன நடந்தால் எனக்கென்ன கவலை என்பது போல இருந்ததாக," அவர் கூறுகிறார். "மறுபுறம் இரவுநேரப் பறவைகள் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டன. தவளைகளின் தோற்றம் அழுகிய மரத்தின் பட்டைகளை போல இருந்தது” என்று கூறினார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இரவு நேரங்களில் உணவுகளை தேடுவதற்காக பறவைகள் தங்களது உடலை மறைத்துக் கொள்வது போல, கிரகணத்தின் உச்சத்திலும் அதையே செய்தன. கிரகணம் முடிந்த பிறகு மரக்கிளையில் தங்களது வழக்கமான இடங்களுக்கு அவை நகர்ந்து விட்டன என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "நிதானமான விலங்குகளான ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன." இனச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆமைகள் இதில் சோகம் என்னவெனில், கிரகணத்தின் போது சில விலங்குகள் கவலை மற்றும் துன்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டின. "பொதுவாகவே நிதானமான விலங்குகளாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன. இது டென்னசியில் உள்ள நாஷ்வில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் நடவடிக்கையை பிரதிபலித்தது. ஆனால் இவற்றில் கலாபகோஸ் ராட்சத ஆமைகளே விசித்திரமான நடத்தையைக் கொண்டிருந்தன. "பொதுவாக, ஆமைகள் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும். அவை மிகவும் உற்சாகமாக இருக்கும் விலங்குகள் அல்ல," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இருப்பினும், கிரகணம் உச்சமடையும் வேளையில் அவை வேகமாக ஒன்றுக்கொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார் அவர். கிரகணத்தை பார்த்து விலங்குகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை உற்றுநோக்க மிருகக்காட்சிசாலை ஒரு தனித்துவமான சூழலாக இருந்தபோதிலும், அதில் குறைபாடுகளும் இருந்தன. "கிரகணம் உற்சாகத்தை தரக்கூடியது என்பதால், அன்று மக்கள் மிகவும் பரபரப்பாகவும் சத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர்" என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது சிலந்திகள் தங்களது வலையை அழித்துக் கொண்டன. விரிவான தரவு சோதனை அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை பரவியுள்ள சுமார் 143 வானிலை நிலையங்களில் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்துவதே தரவு சார்ந்த அணுகுமுறை. "எங்களிடம் எப்போதும் வானத்தை கண்காணிக்கும் இந்த நெட்வொர்க் உள்ளது, இது இந்த அரிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஆராய ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று அந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நில்சன் கூறுகிறார். சூரியன் மறையும் போது ஒளியின் மாற்றத்தை தவறாக நினைத்துக் கொண்டு, பறவைகள் மற்றும் பூச்சிகள் வானத்திற்கு திரண்டு வருமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், கிரகணத்தின் இருளில் பறவைகளைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே அங்கு தான் வானிலை நிலையங்கள் உதவி செய்கின்றன. நில்ஸன் கூறுகையில், "தனிப்பட்ட பறவைகளைக் கண்காணிப்பதற்குப் பதிலாக, காற்றில் உள்ள உயிரியல் பொருட்களின் அளவை ஒட்டுமொத்தமாக அளவிடுகிறோம்" என்கிறார். ஒரு எளிய ரேடாரின் உதவியோடு பறவைகள் மற்றும் மேகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மதிப்பிடுகிறோம். சூரியன் மறையும் போது, வானத்தில் செயல்பாடு பொதுவாக உச்சத்தை அடைகிறது. பறவைகள் தங்கள் இரவு நேர இடம்பெயர்வுகளைத் தொடங்குகின்றன. ஆனால் நடுப்பகலில் ஒரு அசாதாரணமான இருள் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அறிகுறியாக செயல்படுமா? "உண்மையில் வானில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கண்டோம். பெரும்பாலான பறவைகள் கிரகணம் முடியும் வரை தரைக்கு சென்றுவிட்டன அல்லது பறப்பதை நிறுத்தி விட்டன. இதில் ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒரு புயல் நெருங்கி வரும் போது அவை என்னை செய்யுமோ, அதையே தான் கிரகணத்தின் போதும் அவை செய்தன" என்று நில்ஸன் கூறுகிறார். இரண்டாம் கட்ட விளைவுகள் பறவைகளின் முக்கியமான கூடு கட்டும் தளமாகவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு இடைநிறுத்தப் புள்ளியாகவும் உள்ள நெப்ராஸ்காவின் பிளாட் நதி பள்ளத்தாக்கில், 2017 கிரகணத்தில் ஏற்பட்ட நடத்தை போக்குகளை தனிமைப்படுத்திப் பார்ப்பது எளிதாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று இயற்கை பாதைகளில் டைம்-லேப்ஸ் கேமராக்கள் மற்றும் ஒலிக் கருவிகளை பொருத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% தெளிவற்ற நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. இருப்பினும், பறவைகள் பல்வேறு வழிகளில் எதிர்வினையாற்றின என்று கீர்னியில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எம்மா பிரின்லி பக்லி கூறுகிறார். வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% கிரகணத்தின்போது மழுங்கடிக்கப்பட்ட நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. மறுபுறம், அமெரிக்க கோல்ட்ஃபின்ச் மற்றும் சாங் ஸ்பாரோஸ் சிட்டுக்குருவிகள் கிரகண உச்சத்தின்போது சத்தமிடுவதை அதிகரித்தன என்று அவர் கூறுகிறார். மனிதர்களைப் போலவே, விலங்குகளும் கிரகணங்களின் போது வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. சில ஆய்வுகளில், மீன்கள் அடைக்கலம் தேடி ஓடின, சிலந்திகள் தங்களது வலைகளை அழித்தன. மிகச் சமீபத்திய பரிசோதனையில், கிரகணத்தின் போது தேனீக்கள் ஒலியெழுப்புவதை நிறுத்தி விடுகின்றன. ஆனால் அனைத்து மாற்றங்களுக்கும் நாம் ஒளியை காரணமாக கூற முடியாது, முழு கிரகணத்தால் ஏற்படும் இரண்டாம் நிலை விளைவுகளும் இருக்கின்றன என்று கூர்கிறார் பிரின்லி பக்லி. நெப்ராஸ்காவில், வெப்பநிலை சுமார் 6.7 டிகிரி செல்சியஸ் (12 எஃப்) குறைந்து, ஈரப்பதம் 12% உயர்ந்தது. இது ஒரு குறுகிய காலத்திற்குள்ளான கடுமையான மாற்றமாகும். "அங்கு குறைந்த சூரிய ஒளி உள்ளது, இதன் விளைவாக சுற்றுப்புற வெப்பநிலை குறைகிறது, மேலும் இது காற்றில் ஏற்படும் மாற்றங்களால் அதிகரிக்கிறது" என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், மாற்றத்திற்கான துல்லியமான காரணத்தை கூறுவது கடினம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முறை சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க அதிக மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மக்களின் பங்கேற்பு இந்த ஏப்ரல் மாதத்தில், வட கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க் மிருகக்காட்சிசாலை அதிக பொது மக்களுடன் கிரகணம் குறித்த தங்கள் கண்காணிப்பை விரிவுப்படுத்தியுள்ளது. "சிலர் இதை மிகவும் அமைதியாக, தனியாக செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கள் நண்பர்களுடன் இதைச் செய்ய விரும்பலாம் அல்லது சிலர் ஏதாவது ஒருவகையில் பங்களிக்க விரும்பலாம்" என்று ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகிறார். சூரிய கிரகண சஃபாரி திட்டம் ஆயிரக்கணக்கான மக்களை விலங்குகளின் நடத்தையைக் கவனிக்க ஊக்குவிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிரியல் பூங்காக்களையும் தாண்டி, இதில் பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை இணைக்க விரும்புகிறார்கள். அக்டோபர் 2023 வருடாந்திர கிரகணத்திலிருந்து ஆரம்பக்கட்ட தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்த சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், வருடாந்திர கிரகணம் என்பது சந்திரன் சூரியனை ஓரளவு மட்டுமே மறைக்கும். இதையே சிலர் ஒரு ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கின்றனர். நாசா எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் திட்டத்தை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1,000 தரவு சேகரிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பங்கேற்பாளர்கள் ஆடியோமோத்ஸ் எனப்படும் சிறிய தரவு ரெக்கார்டர்களைப் பயன்படுத்தலாம், அவை மூன்று ஏஏ பேட்டரிகளின் அளவு கொண்டவை. இந்த ஆடியோ தரவு ரெக்கார்டர்கள் கிரகணத்தின் போது வனவிலங்குகளிடமிருந்து வரும் ஒலிகளை பதிவு செய்யும். "குறிப்பாக ஒலிகள் விலங்குகள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று கூறுகிறார் ஹென்றி ட்ரே விண்டர். இவர் ஒரு சோலார் இயற்பியலாளர். அசாதாரண தூண்டுதல்களுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றும் விதம், மனிதனால் தூண்டப்படும் இடையூறுகளைப் பற்றிய புரிதலை வழங்கக்கூடும் என்று விண்டர் கூறுகிறார். "மரம் வெட்டுதல் அல்லது இரவு முழுவதும் விளக்குகள் ஒளிரும் கட்டுமான தளங்கள் காரணமாக ஒரு பகுதியில் எழும் உரத்த ஒலிகளின் விளைவை நீங்கள் கேட்கலாம்". 2044க்கு முன்பாக அமெரிக்காவில் தெரியும் கடைசி முழு சூரிய கிரகணம் இதுவாகும். எனவே பல மக்கள் விலங்குகள் மீதும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c3g50d876d8o
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
Published By: VISHNU 08 APR, 2024 | 01:39 AM வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாகத் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார். காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன. இந்நிலையில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/180657
-
காஸாவில் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு: ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?
கட்டுரை தகவல் எழுதியவர், மெரிலின் தாமஸ் மற்றும் ஜேக் ஹார்ட்டன் பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன. இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்? அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது. ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை. கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது. அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார். அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது. எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர். “ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார். "ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,REUTERS காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்? இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர். மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது. பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது. ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது. ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது? ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது. ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார். காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை. இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது. இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன. இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது. காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது. நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார். இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன. பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது. ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/articles/c19x999dmlzo
-
கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
Published By: VISHNU 07 APR, 2024 | 10:33 PM கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர். 30அடி ஆழத்திலிருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர். https://www.virakesari.lk/article/180651
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
இன்று முழுமையான சூரிய கிரகணம் 08 APR, 2024 | 10:14 AM முழுமையான சூரிய கிரகணம் இன்று (8) திங்கட்கிழமை தோன்றவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. அரிதாகவே இந்த முழுமையான சூரியகிரகணம் தோன்றும். இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இல்லை. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வசிக்கும் மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்க முடியும். இலங்கை நேரப்படி இந்த முழு சூரிய கிரகணமானது இன்று (8) இரவு 9.12 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் 2.22 மணி வரை தோன்றும். இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180668
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
காற்றில் பறந்தபடி லக்னோ வீரர் பிடித்த மாயாஜால கேட்ச்; குஜராத் அணி செய்த தவறுகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோவின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி, லக்னோ அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இரண்டாவது வது வெற்றியைப் பெற்றுள்ளது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் எனும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் வெற்றி ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அறிமுகமானபின், குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ அணி ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வென்று லக்னோ அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை 160 ரன்களுக்கு மேல் அடித்து அந்த ஆட்டத்தில் தோற்றதில்லை என்ற சாதனையை வைத்திருந்தது. அதை நேற்றைய ஆட்டத்திலும் அந்த சாதனையைத் தக்கவைத்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை முதலில் பேட் செய்த போட்டிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது, எதிரணியை இலக்கை எட்டவிடாமல் செய்து வெற்றி பெறுவதை சவாலாக வைத்திருக்கிறது. அந்த சவால் நேற்றும் தொடர்ந்து லக்னோ அணி தனது சாதனையைதக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.நிகர ரன்ரேட்டும் 0.775 என்று ஏற்றத்துடன் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 797 ஆகச் வீழ்ந்துள்ளது. லக்னோ ஆடுகளம் பேட்டர்களுக்கு உகந்த விக்கெட்டைக் கொண்டது. இந்த மைதானத்தில் 163 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், அந்த ஸ்கோரை அடித்து, குஜராத் அணியை டிபெண்ட் செய்துள்ளனர் லக்னோ பந்துவீச்சாளர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? அதிரடியான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 54 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 48 ரன்களுக்குள் சீட்டுக்கட்டு சரிவதுபோல் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் குழிக்குள் விழுந்தது. குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில்(19), சுதர்சன்(31) ஆகியோர் தவிர நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைக்கவில்லை. நடுவரிசை பேட்டர்களின் ‘ஷாட்கள்’ தேர்வு நேற்றைய ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது, விக்கெட்டுகளை எளிதாக லக்னோ அணிபந்துவீச்சாளர்களுக்கு தூக்கிக் கொடுத்து பெவிலியன் சென்றனர். திவேட்டியா(30) வெற்றிக்காக தனி ஒருவனாகப் போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களின் தோல்விதான் குஜராத் அணியை வீழ்ச்சியில் தள்ளியது. அது மட்டுமல்ல டேவிட் மில்லர் காயத்தால் அணியில் இடம் பெறாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு, நடுவரிசையிலும் பள்ளத்தை ஏற்படுத்தி ஆங்கர் ரோல் இல்லாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. குஜராத் அணியின் திறமையான பல வீரர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களை இதுபோன்ற நேரத்தில் களமிறக்கி பரிசோதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவரிசைக்கு ஆங்கர் ரோல் செய்யக்கூடிய அனுபவமான பேட்டர் வில்லியம்சனைத் தவிர யாரும் இல்லை. ஆல்ரவுண்டரான அபினவ் மனோகர் இதுவரை வாய்ப்புத் தரவில்லை, ஆஸ்திரேலியாவின் “சிறந்த ஃபினிஷர்” எனக் கூறப்படும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடை, பரத்துக்குப் பதிலாகச் சேர்த்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல ஆல்ரவுண்டர் ஓமர்சாய்க்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்புத் தரப்பட்டது. குஜராத் அணியில் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்ஸனுக்குப்பின், களத்தில் நிலைத்து ஆடுவதற்கு அனுபவமான பேட்டர், சர்வதேச அனுபவம் கொண்ட பேட்டர் யாருமில்லை. பேட்டர்கள் இல்லாமல் பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்தது அந்த அணிக்கு எதிராகவே அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நல்ல ஆடுகளம், பேட்டிங் மோசம்’ குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ லக்னோ மைதானம் பேட்டர்களுக்கு உகந்த நல்ல விக்கெட். ஆனால், எங்களின் மோசமான பேட்டிங்தான் தோல்விக்கு காரணம். நன்றாகத் தொடங்கி, நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம், அதிலிருந்துஎங்களால் மீள முடியவில்லை. எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, 163 ரன்களில் கட்டுப்படுத்தினர்.” “180 வரை எதிர்பார்த்தோம் ஆனால், அதற்குள் சுருட்டிவிட்டனர். எந்த நேரத்திலும்ஆட்டத்தை திருப்பக்கூடிய மில்லர் காயத்தால் இல்லாதது பெரிய பின்னடைவு. இந்த இலக்கு அடைந்துவிடக்கூடியதுதான், ஆனால், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில்நான் ஆட்டமிழந்திருக்கக் கூடாது. உமேஷ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், நல்கன்டேயின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார் கட்டுக்கோப்பான பந்துவீச்சு லக்னோ அணி 160 ரன்களுக்கு மேல் குவித்து இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்ற வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் லக்னோவின் “வேகப்புயல்” மயங்க் யாதவ் ஒரு ஓவர் வீசியநிலையில் காயத்தால் போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை சமாளித்து மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து கேப்டன் ராகுல் வெற்றியை நோக்கி வழிநடத்தினார். அதிலும் குறிப்பாக யாஷ் தாக்கூர், குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், நவீன் உல்ஹக் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிஎடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டநாயகன் தாக்கூர் குறிப்பாக யாஷ் தாக்கூர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அற்புதமாகப் பந்துவீசிய தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் 30 ரன்கள், 14 டாட்பந்துகள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வெற்றிக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பேட்டர்கள் கில், திவேட்டியா, விஜய் சங்கர் என பேட்டர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப்பாதை அமைத்தது யாஷ் தாக்கூர் பந்துவீச்சுதான். குருணல் பாண்டியாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போட்டது என்று கூறலாம். 4ஓவர்கள் வீசிய குர்னல் பாண்டியா 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 13 டாட்பந்துகள் உள்பட ஒரு பவுண்டரி,சிக்ஸர்கூட அடிக்கவிடாமல் பந்துவீசியது சிறப்பாகும். அதிலும் குஜராத்தின் ஆபத்தான பேட்டர் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி குர்னல் பாண்டியா ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் பிஆர் சரத், நல்கன்டே இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும், அவர் விக்கெட் எடுத்தவிதம், கேட்ச் பிடித்தவிதம் அணிக்கு வலுவாக அமைந்துவிட்டது. வில்லியம்ஸன் அடித்த ஷாட்டை ஸ்பைடர் போல் காற்றில் பறந்து, அந்தரத்தில் 52மைக்ரோ வினாடிகள் இருந்து ஆகச்சிறந்த கேட்சைப் பிடித்தார். வில்லியம்ஸன் விக்கெட்டை எடுத்தது குஜராத் அணியின் முதுகெலும்பை உடைத்தது போன்றதாகிவிட்டது, லக்னோ அணியும் பாதி வெற்றியை அடைந்த மனநிறைவை பிஸ்னோய் ஏற்படுத்திக் கொடுத்தார். 163 ரன்கள் என்பது வலுவான பேட்டர்கள் இருந்திருந்தால் லக்னோ போன்ற அருமையான விக்கெட்டில் எளிதாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த குறைவான ஸ்கோரை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்து லக்னோ வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் உழைப்பு முக்கியக் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்,ஸ்டாய்னிஷ் பொறுப்பான பேட்டிங் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீகாக்கிற்கு நேற்று 100-வது ஐபிஎல் ஆட்டமாகும். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியாகத் தொடங்கி, அடுத்த ஓவரில் பேட்டில் எட்ஜ் எடுத்து உமேஷ் யாதவ் ஓவரில் டீகாக்(6) விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த படிக்கல்(7) தொடர்ந்து 4வதுமுறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து லக்னோ அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஷ் சேர்ந்து அணியை மெல்லச் சரிவிலிருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 73ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பெரிதாக கவலைப்படாமல் நிதானமாக ஆடி 31 பந்துகளில் 33 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நீண்டகாலத்துக்குப்பின் ஸ்டாய்னிஷ் அற்புதமான இன்னிங்ஸை நேற்று ஆடினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ஸ்டாய்னிஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 58 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பூரன், பதோனி பங்களிப்பு கடைசி நேரத்தில் நிகோலஸ் பூரன்(32), பதோனி(20) அருமையான கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். பூரன் டெத் ஓவர்களில் அடித்த 3 சிக்ஸர்களும், பதோனி அடித்த 3 பவுண்டரிகளும் லக்னோ அணியை பெரிய சரிவிலிருந்து மீட்டது. இருவரும் கடைசி நேரத்தில் சேர்த்த 52 ரன்கள் லக்னோ அணியை 163 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோருக்கு கொண்டு செல்ல உதவியது. ஒருவேளை பூரன், பதோனி நிலைக்காமல் இருந்திருந்தால், லக்னோ அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் வாய்ப்பிருந்தது. https://www.bbc.com/tamil/articles/ce9780z7m21o
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
டெல்ஹியை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்தது மும்பை Published By: VISHNU 07 APR, 2024 | 09:07 PM (நெவில் அன்தனி) டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 20ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 26 ஓட்டங்களால் வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் இந்த வருடம் முதலாவது வெற்றி புள்ளிகளை சம்பாதித்தது. ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களும் ஜெரால்ட் கொயெட்ஸி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் மும்பையின் முதலாவது வெற்றிக்கு வழிவகுத்தன. அதேவேளை, உபாதையிலிருந்து மீண்டுவந்து மும்பை அணியில் தனது முதலாவது போட்டியில் இம்ப்பெக்ட் வீரராக விளையாடிய சூரியகுமார் யாதவ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது. ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரோஹித் ஷர்மா 27 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் ஓட்டம் பெறாமல் வந்தவழியே திரும்பிச் சென்றார். மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் 23 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். திலக் வர்மா 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (121 - 4 விக்.) இந் நிலையில் ஹார்திக் பாண்டியாவும் டிம் டேவிடும் 5அவது விக்கெட்டில் 31 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து டிம் டேவிடும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 45 ஓட்டங்களுடனும் ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நோக்யா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 235 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க டெல்ஹியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், ப்ரித்வி ஷா, அபிஷேக் பொரெல் ஆகிய இருவரும் 2 ஆவது விக்கெட்டில் 49 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபிஷேக் பொரெல், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 29 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பைக்கு சிறு திகிலைக் கொடுத்தனர். அபிஷேக் பொரெல் 31 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சீரான இடைவேளியில் விழ, மறுபக்கத்தில் தனி ஒருவராக ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் சரமாரியாக ஓட்டங்களைக் குவித்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜெரால்ட் கொயெட்ஸி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரொமாரியோ ஷெப்பர்ட். https://www.virakesari.lk/article/180650
-
விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ் விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298383
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்இறுதி மங்கள சடங்கான மரக்கன்றுகள் நடும் தினம் ஏப்ரல் 18 ஆம் திகதியாகும். இதனை சுதேச மருத்துவ அமைச்சு ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.. நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 4 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது… ” சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்கள சடங்குகளான மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 18 அன்று ஆகும் . சுதேச மருத்துவ அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/298385
-
எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ
Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 06:31 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார். இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார். கேள்வி – உங்களின் தாய் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்த கட்சியின் இருந்து ஆரம்பமானது. ஆகவே கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும். கேள்வி - உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே... அது உங்களுக்கு சவாலாக அமையாதா? பதில் - சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே. கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே? பதில் - அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போகின்றீர்களா? பதில் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது. கேள்வி – புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா? பதில் - அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். https://www.virakesari.lk/article/180641
-
பொருளாதாரம் உறுதியாக இருந்தாலும் இலங்கையில் வறுமைநிலை உயர்வாகவே காணப்படுகின்றது - உலக வங்கி
இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த நடுத்தர வருமானம் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதேவேளை, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சத்தாலும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சத்தாலும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298397
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
நாளை சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும். இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும். முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அரிய முழு சூரிய கிரகணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம். சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம். சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும். நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும். நாசாவின் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும். எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும். மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கி.மீ. மேலிருந்து தொடங்கும் வளிமண்டலத்தின் அடுக்கு அயனோஸ்ஃபியர் எனப்படும். இந்த அடுக்கில் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் உள்ளன. இது விண்வெளி மற்றும் வளிமண்டலத்திற்கு இடையில் பூமியின் ஒரு வகையான பாதுகாப்பு அடுக்கு ஆகும். இது ரேடியோ அலைகளை வெளியிடும் ஓர் அடுக்காகும். ராக்கெட் உதவியுடன், கிரகணத்தின் போது இந்த அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்படும். பொதுவாக, அயனி மண்டல ஏற்ற இறக்கங்கள் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைப் பாதிக்கின்றன. சூரிய கிரகணம் இந்த மாற்றத்தை விரிவாக ஆய்வு செய்ய ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், நமது தகவல் தொடர்பு அமைப்பை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புகைப்படங்கள் சேகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் எக்லிப்ஸ் மெகா மூவியில், நாசாவின் உதவியுடன் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையின் படி, சூரிய கிரகணத்தைப் பார்க்கும் நபர்கள் அதை புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எடுக்கும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம், சூரிய வட்டத்திற்கு வெளியே வெவ்வேறு வாயுக்களால் ஆன வளிமண்டலத்தின் வெவ்வேறு படங்கள் கிரகணத்தின் போது பெறப்படும். சூரியனின் மேற்பரப்பில் உள்ள அதீத ஒளியின் காரணமாக, அதைச் சுற்றியுள்ள உறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவை. இந்த கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றி ஒரு வளையம் தெரியும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களும் தெரியும். அவற்றை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது. சூரிய கிரகணத்தைப் படம் எடுக்கும் நாசா விமானம் பட மூலாதாரம்,GETTY IMAGES நாசாவின் அதிக உயரத்தில் பறக்கும் ஆய்வு விமானம் 50,000 அடி உயரத்தில் இருந்து கிரகணத்தைப் புகைப்படம் எடுக்கும். பல உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை பதிவு செய்ய எக்லிப்ஸ் பலூன் (Eclipse Balloon) திட்டமும் செயல்படுத்தப்படும். சுமார் 600 பலூன்கள் வளிமண்டலத்தில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பலூன்களில் உள்ள பல்வேறு கருவிகள் கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும். இது தவிர, பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள். சூரிய கிரகணத்தைக் காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் போது செய்யப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடந்த காலங்களிலும், கிரகணத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வுகள் வரலாற்றில் சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மே 19, 1919 அன்று முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. 1866 இல் சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான் அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்தார். நாளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது. https://www.bbc.com/tamil/articles/cjmx9lkj2ndo
-
வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் - வட மாகாண ஆளுநர்
2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் - பிரசன்ன ரணதுங்க 07 APR, 2024 | 07:01 PM 2028ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக நாங்கள் மாற்றுவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சுமார் 23 கிலோமீற்றர் கண்ணிவெடிகளே அகற்றப்பட உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். கண்ணிவெடிகள் இருந்த முழு நிலத்திலிருந்து 1,340.87 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் நேற்று (06) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உலக கண்ணிவெடிகள் தினம் ஏப்ரல் 4ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுவதோடு, அந்த நிகழ்வில் "தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்" மூலம் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கண்ணிவெடி அகற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நட்புறவை வளர்க்கும் வகையில் கிரிக்கெட் போட்டியும் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும் இடம்பெற்றது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்களின் விஷேட செயல்விளக்கம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் அவதானிக்கப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் விசேட வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். 2002ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டுக்குள் இயங்கி வந்ததுடன், 2010ஆம் ஆண்டு 'தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்' ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் இயங்குகிறது. இது கண்ணிவெடி அகற்றும் முகவர் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி மற்றும் மேற்பார்வை செய்கிறது. இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது மற்றும் அது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவின் ஊடாக செய்யப்படுகிறது. மேலும், HaloTrust மற்றும் Mag ஆகிய இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் Dash மற்றும் SHAF ஆகிய இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான தரைத்தள அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் நிம்மதியாக இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும், அதனை சீர்குலைக்க முயற்சிக்கும் வடக்கு அல்லது தெற்கில் உள்ள இனவாத மதவாத அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180648
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் 12 வயது மருத்துவ உதவியாளர் : மருத்துவமனையில் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்த சிறுவனின் மனிதாபிமான செயல் ! Published By: RAJEEBAN 05 APR, 2024 | 01:02 PM இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்த 12 வயது சிறுவன் அந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவ உதவியாளராக பணிபுரிகின்றான் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. 12 வயது ஜகாரியாஸ் சர்சாக் காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் மருத்துவ தொண்டராக பணியாற்றுகின்றான். காசாவில் காயமடைபவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த மருத்துவமனையின் மருத்துவர்களிற்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். நான் மருத்துவர்களிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டேன் மனப்பாடம் செய்துகொண்டேன் என சேர்செக் தெரிவிக்கின்றான். நான் கனுலாசை பொருத்துவேன் ஐஎவ திரவங்களை பொருத்துவேன் அகற்றுவேன் ஊசிகளையும் கையாள்வேன் என அந்த சிறுவன் தெரிவிக்கின்றான். மருத்துவ குழுக்களிடம் ஸ்கான் அறிக்கைகளை கொண்டு சென்று கொடுத்தல் தாதிமார்களிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுகின்றான். என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் இயாட் அபு ஜஹெர் தெரிவிக்கின்றார். அல்அக்ஷா மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் தொடர்ச்சியாக 170 நாட்களிற்கு மேல் பணியாற்றிவருகின்றனர். காசாவின் உயிரிழப்புகள் காயங்கள் காரணமாக அவர்கள் அதிகளவு சுமையை சுமக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். இந்த சிறுவன் இடம்பெயர்ந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அவன் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாதிமார் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பணியாற்றுவதை பார்த்தான் என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார். வெளிப்படையாக தெரிவிப்பதென்றால் இந்த குழந்தை மிகவும் உயர்குணம் படைத்தது என அவர் தெரிவிக்கின்றார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக 364 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது. நான் வளர்ந்ததும் மருத்துவனாவேன் என்கின்றான் 12 வயது ஜகாரியாஸ் சர்சாக் யுத்தம முடிந்ததும் என நம்பிக்கை வெளியிடும் அவன் நாங்கள் சிறுவர்கள் குறித்து அச்சமடைந்துள்ளோம் அவர்கள் அச்சத்தினால் நடுங்குவதை பார்ப்பது மனக்கவலையை அளிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றான். கடவுள் அருள்புரிந்தால் நாங்கள் விரைவில் வீடு திரும்பலாம் என அவன் தெரிவிக்கின்றான். நீங்கள் ஒரு நாயகன் என 12 வயது சிறுவனின் கரங்களை பிடித்து அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோவில் காணமுடிகின்றது. நீங்கள் ஆற்றுகின்ற தொண்டர் பணியை உலகின் சில நாடுகள் புரிவதில்லை என அந்த சிறுவனிடம் தெரிவிக்கும் அவர் அந்த சிறுவனை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுகின்றார். இதேவேளை இந்த சிறுவன் குறித்து ஏபிசி நியுஸ் விபரங்களை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நான் வழமையாக எனது சகோதரர்களுடன் விளையாடுவேன் அல்லது பள்ளிப்பாடங்களை படிப்பேன் என தெரிவிக்கும் 12வயது ஜகாரியா சர்சாக் எனக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்கின்றான் அதற்கு பதில் அவன் காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனையின் ஒரு அவசரசேவை பிரிவிலிருந்து மற்றுமொரு அவசரசேவை பிரிவி;ற்கு ஒடிக்கொண்டிருக்கி;ன்றான். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றவும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவன் அம்புலன்ஸ் பணியாளர்களுடன் இணைந்து தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளிற்கு விரைகின்றான். யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசாவின் நம்பமுடியாத இளம் மருத்து தொண்டரான ஜகாரியா சர்சாக் ஒக்டோர் ஏழாம் திகதிக்கு பின்னர் தான் நாளாந்தம் சந்திக்கும் அனுபவங்கள் தனது வயதுக்கு சற்று அதிகமானவை என தெரிவித்தான். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஏவுகணை மற்றும் தரை தாக்குதல் காரணமாக ஜகாரியாவின் தாயகம் தலைகீழாக புரட்டிப்போட்டது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் தற்போது 32000 உயிர்களை பலியெடுத்துள்ளதுஇஎன ஹமாசின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.74000 பேர் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளனர். தனது உதவியை ஏனைய அம்புலன்ஸ் பணியாளர்கள் வரவேற்கின்றனர் என அவர் தெரிவிக்கின்றார். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் ஜகாரியாவின் வயதை உடையவர்கள் அல்லது குறைவான வயதினர். அதிகரிக்கும் மந்தபோசனை மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 13000 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. காசா சிறுவர்களிற்கான பிரேதப்பெட்டி போல மாறிவிட்டது என யுனிசெவ் அதிகாரியொருவர் கடந்த வாரம் தெரிவித்தார். தியாகிகளின் உடல்களை நாங்கள் பொறுப்பேற்போம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் மீண்டும் காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை கொண்டு செல்வதற்காக அந்த இடத்திற்கு செல்வோம் என்கின்றான் ஜகாரியா. ஒருநாள் ஜகாரியா டெய்ர் அல் பலாவில் உள்ள அக்அக்ஸா மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்குள் கையுறைகளை அணிந்தவாறு சென்றான் மருத்துவர்களிடம் உரையாடினான்இ அம்புலன்ஸில் தேவையான பொருட்களை வைத்திருப்பது குறித்து ஆராய்ந்தான் அதன் பின்னர் பான்டேஜ்கள் உட்பட தேவையான பொருட்களுடன் வந்த அவன் அவற்றை அம்புலன்சில் வைத்தான். தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்ததும் அவன் அம்புலன்சில் முன் ஆசனத்தில் அமர்ந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்தான். மீண்டும் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தவேளை அவன் ஸ்டிரெச்சரில் இருந்து காயமடைந்தவரை அகற்ற உதவினான்.காயமடைந்தவரை உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டுசென்றான். நான் சிறிது அச்சமடைகின்றேன் காயமடைந்த எவரையாவது பார்க்கும்போது இதயம் கனக்கின்றது என அவன் தெரிவித்தான். ஏனையவர்களிற்கு உதவுவது யுத்தத்தினால் தனது குடும்பம் இடம்பெயர்ந்த வேதனையை சமாளிக்க உதவுகின்றது என அவன் தெரிவித்தான். தனது வீட்டிற்கு வெளியே டாங்கியொன்று காணப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடி அல்அக்சா மருத்துவமனையில்தஞ்சமடைந்ததாகவும் ஜகாரியா தெரிவித்தான். நான் மருத்துவர்களுடன் பழகத்தொடங்கினேன் என தான் மருத்துவ தொண்டராக மாறியது குறித்து அவன் தெரிவித்தான். https://www.virakesari.lk/article/180500
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் : நெடுந்தீவிலும் பூமி பூஜை! Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 01:56 PM தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் மற்றுமோர் அம்சமாக இன்று (07) காலை நெடுந்தீவிலும் பூமி பூஜை நடத்தப்பட்டது. இலங்கை, இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய, இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த பாரிய மின் உற்பத்தித் திட்ட செயற்பாடுகள் கடந்த வாரம் அனலை தீவில் இடம்பெற்றது. இந்நிலையில், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான காற்றாலை அமையவுள்ள நெடுந்தீவில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இந்த "பூமி பூஜை" நிகழ்வு இன்று இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/180630
-
நாட்டில் எரிபொருள் பாவனை 50% குறைந்துவிட்டது - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்
Published By: NANTHINI 07 APR, 2024 | 12:59 PM நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமளவு குறைந்துவிட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைய நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலையே காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். எவ்வாறாயினும், தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். https://www.virakesari.lk/article/180628
-
வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் - வட மாகாண ஆளுநர்
Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 02:18 PM கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) விசேட நிகழ்வும் கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது 2030ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இதன்போது நன்றி தெரிவித்த ஆளுநர், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாகவும் கூறினார். அத்தோடு, பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக்கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்காகவும் ஆளுநர் நன்றி தெரிவித்ததோடு, மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. அந்த வகையில், இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையை நினைவுபடுத்திய ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விசேடமாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறினார். https://www.virakesari.lk/article/180611
-
மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
அண்ணை ஒரு போர்வையும் ஏசியும் போதும் தானே?!😜 எதுக்கு போ(பொ)ண்டாட்டி?!!!😂 சோழியபுரம் எனும் சுழிபுரம்.
-
கச்சத்தீவை திரும்பப் பெற இந்தியா பேச்சுவார்த்தையா? இலங்கை அமைச்சர் என்ன சொல்கிறார்?
கச்சதீவு இந்தியாவின் உள்ளகப் பிரச்சினை - அலி சப்ரி Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 11:13 AM ஆர்.ராம் கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும். இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது. எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார். https://www.virakesari.lk/article/180619
-
உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் ஒருவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல், தொடர் இருமல், ஜலதோஷம்” என்றால் உடனே ஒரு மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டுக் கொண்டால் சரியாகிவிடும் என்று சொல்வோம். ஆனால் அதே நபர் “எனக்கு மனநிலை சரியில்லை” என்று கூறினால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்? உடல்நிலை சார்ந்த பிரச்னைகள், அவை உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட இயல்பாகக் கடந்து செல்லும் சமூகம், ஒருவருக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று சொன்னால் அவரை பல அடிகள் தள்ளியே வைக்கிறது. இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி என்னும் மருத்துவ இதழ் (Indian Journal of Psychiatry) மனநலப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 47% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என நம்புகின்றனர், மேலும் 60% பேர் மனநோயைத் தனிப்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மன அழுத்தம் (stress) அல்லது மனச்சோர்வு (Depression) போன்ற வார்த்தைகள் இப்போது பொதுவான வார்த்தைகளாக மாறிவிட்டன. ஆனால் அவற்றைத் தீவிர மனநலப் பிரச்னைகளாக யாரும் கருதுவதில்லை. பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சுற்றுலா சென்றால் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் அல்லது நல்ல பிரியாணி சாப்பிட்டால் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் மன அழுத்தம் சரியாகிவிடும் எனப் பலரும் மருத்துவர்களாக மாறி கருத்து கூறுகின்றனர். இதில் எந்தளவு உண்மையுள்ளது? உண்மையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்றால் என்ன? எப்போது ஒருவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்? மன அழுத்தம் (Stress) Vs மனச்சோர்வு (Depression) பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் (International Journal of Mental Health Systems) ஆய்வின்படி, 13-17 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 7.3% பேர் குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். “இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக் கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கத் திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். ஆனால் மனச்சோர்வு நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடியது,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “தூக்கமின்மை, எப்போதும் ஒரு சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், தனது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவது ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள். இவை ஒருவருக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவர் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சில பரிசோதனைகள் மூலம் ஒருவர் மனச்சோர்வின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்,” என்கிறார் ராஜலக்ஷ்மி. ‘மது, புகை, சுற்றுலா, மனச்சோர்வுக்கு தீர்வல்ல’ பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகமானோர் மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் ஒன்று என நினைக்கிறார்கள், ஆனால் நாள்பட்ட மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்றும், அத்தகைய மனச்சோர்வு உடையவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்றும் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பிரச்னைகள் குறித்து இருந்த விழிப்புணர்வைவிட இப்போது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வும் புரிதலும் இருக்கிறது. ஏனென்றால் மனச்சோர்வு என்ற வார்த்தையை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல பலரும் தயங்குகிறார்கள். ஏதோ பெரிய பிரச்னை வந்தால் மட்டும்தான் மருத்துவரிடம் செல்வது பலரின் வழக்கம், அதுவும் மனநலம் சார்ந்த பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம். அன்றாட வாழ்வில் மன அழுத்தம் அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இதற்கு ஒரு பிரியாணி சாப்பிட்டால், புகைப் பிடித்தால் அல்லது மது அருந்தினால் சரியாகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள். சிலர் தனியாக அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தீர்வுகள். சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதே மன அழுத்தம் நாளடைவில் மனச்சோர்வாக மாறும்போது, இந்த தற்காலிக தீர்வுகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அப்போதும் மருத்துவ உதவியை நாடாமல் இருப்பது மிகவும் ஆபத்து. எனவே எப்படி உடல்நலப் பிரச்னைகள் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோமோ, அது போல நாள்பட்ட மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. ‘மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்’ படக்குறிப்பு, உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “மன அழுத்தத்தை மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தொடர் மன அழுத்தத்தால் பல உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். செரிமானக் கோளாறுகள் முதல் இதய நோய், பக்கவாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. தொடர்ந்து பேசிய அவர், “மனச்சோர்வை எடுத்துக்கொண்டால், அது நேரடியாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் மனச்சோர்வு பிரச்னை உடையவர்கள் எப்போதும் ஒரு சோக உணர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எதிலும் ஆர்வமிருக்காது, உணவைக்கூட பெரிதாக விரும்பி உண்ண மாட்டார்கள், எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள். இது குற்ற உணர்விற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட இதற்குக் காரணம் நான்தான் எனப் பழி போட்டுக்கொள்வார்கள். இறுதியில் தற்கொலை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருநாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. பல நாட்கள் அவர்கள் மனச்சோர்வால் அவதிப்பட்டிருப்பார்கள். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் அல்லது சொல்ல யாரும் இல்லாமல், அந்த முடிவை எடுத்திருப்பார்கள். எனவே மன அழுத்தம், மனச்சோர்வு இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கான உதவியை நாட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மனநல மருத்துவரை அணுகுவதில் உள்ள தயக்கம். படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. “இப்போது பிரபலங்கள்கூட தங்களது மனநலப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பணம் இருந்தால் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு வராது என்பது பொய், யாருக்கு வேண்டுமானாலும் அது வரலாம். எனவே சமூகம் என்ன சொல்லும் எனத் தயங்காமல் மனநல சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது சாதாரண ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மத நம்பிக்கைகளும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர். “ஒருவருக்கு மனநலப் பிரச்னை என்றால் அவரை ஏதேனும் கோவிலுக்கோ அல்லது தர்காவுக்கோ அழைத்துச் செல்வது இன்னும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. கல்வி மற்றும் தொடர் விழிப்புணர்வு மூலமாகத்தான் இதை மாற்ற முடியும்.” யோகா, தியானம் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குப் பலரும் யோகா மற்றும் தியான முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து உளவியலாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டபோது, “யோகா மற்றும் தியானம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனச்சோர்விற்கு அது தீர்வா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை," என்கிறார். "முன்பு சொன்னது போல, இதுவும் ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும். இதுபோல மருத்துவ உதவியை நாடாமல், தற்காலிக தீர்வுகளையே நாடிக்கொண்டிருந்தால் அது மனச்சோர்வை தீவிரமாக்கும்." நாள்பட்ட மனச்சோர்வு இருப்பவர்கள், மனநல மருத்துவரை அணுகவில்லை என்றால் தங்கள் இயல்பான குணத்தை நிரந்தரமாக இழந்து விடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார். "ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் எழுவதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இத்தகைய தற்காலிக தீர்வுகள் உதவாது எனப் புரிந்துகொண்டு அவர்கள் தவறான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள்,” என எச்சரிக்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. மனநல சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநல சிகிச்சை என்றால் அதற்கு அதிகம் செலவாகும் அல்லது மேல்தட்டு மக்களுக்கான ஒன்று என்ற பிம்பம் உள்ளது. ஆனால், மாவட்ட மனநலத் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் தமிழக அரசு பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக இத்தகைய வசதிகளை தாலுகா வாரியாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா. அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவத்திற்கு எனத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது, மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “என்னைச் சுற்றி எதுவும் சரியில்லை, உலகமே என்னை மட்டும் ஏமாற்றுகிறது, எனக்கு எதிர்காலம் கிடையாது, இதெல்லாம் மனச் சோர்வு இருப்பவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்கள். இவ்வாறு இருப்பவர்கள் பல நல்ல வாய்ப்புகளை, மனிதர்களை வாழ்வில் இழந்து விடுவார்கள். நாம் நினைப்பதைவிடப் பல மோசமான விளைவுகள் மனநலப் பிரச்னைகளால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் நெருங்கியவர்களுக்கோ அத்தகைய பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள். அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைக் கண்டிப்பாக உணர்வீர்கள்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. https://www.bbc.com/tamil/articles/c4njn530j54o
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது - பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் சமத்துவக் கட்சி கண்டனம் Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 11:22 AM தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்துக்குள் அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். பொன்னாவெளியில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும். 100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும். இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும். எனவே தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு நடவடிக்கையினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அந்த மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றார்கள். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180614
-
இன்றைய வானிலை
இன்றைய வானிலை 07 APR, 2024 | 06:35 AM வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் கடவத்த, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, வக்மிட்டியாவ மற்றும் கொத்மலே போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/180608