Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வைத்தியசாலையில் கடமையில் முப்படையினர் Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 04:36 PM நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை முதல் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக சுமார் 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 48 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக 900க்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார். அத்துடன், 200க்கும் மேற்பட்ட வான்படை மற்றும் கடற்படை சிப்பாய்களும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேவைக்கு ஏற்றவாறு மேலதிக படையினரை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/176282
  2. Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 03:21 PM நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து அதிகளவு நீர் அருந்த வேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலும் ஏப்ரல் மாதம் வரையில் வறட்சியான வானிலையே நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176274
  3. காசாவின் ரபா பகுதியில் இருந்து இரண்டு பிணைக்கைதிகளை மீட்டது இஸ்ரேல் இராணுவம் இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கும் மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. நேற்று தெற்கு காசா எல்லையில் அமைந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். வான் வழியாக சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 7 பேர் இறந்து விட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. ரபா நகரில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய சோதனையில் அங்குள்ள ஒரு வீட்டில் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 2 பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதில் ஒருவரது பெயர் பெர்ணாண்டோ சைமன் (வயது 60) மற்றொருவர் பெயர் லூயிஸ்ஹர்க் (70). தற்போது 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். https://thinakkural.lk/article/291409
  4. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் : பொதுத்தேர்தலுக்கான நிதி 2025 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 01:01 PM ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176273
  5. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் - நிபந்தனைகளை விதிக்கின்றது பொதுஜனபெரமுன Published By: RAJEEBAN 13 FEB, 2024 | 12:26 PM பிரதமர் தலைமையிலான அரசியல் கட்சியொன்;று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் வரை நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. தற்போதைய தேர்தல் முறையின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்க கட்சியாலும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நாட்டின் தலைவரான பிரதமர் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாகர காரியவசம் அவ்வாறான அரசாங்கம் தனக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆட்சி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜன பெரமுன எப்போதும் கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைகாரணமாக மாகாணசபைகள் முறைகள் போன்றவற்றினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் அவைகள் ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176267
  6. 8 ஆம் வகுப்பு முதல் முன்னோடி திட்டமாக பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஒக்டோபர் 2 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாடசாலைகளில் AI இன் அறிமுகத்திற்கான முன்மொழிவு கல்வி முறையில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும், மேலும் குழந்தைகளை எதிர்காலத்தில் விடுவிக்க உதவும். AI தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி முன்மொழியப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது. மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுக் கல்வியில் AI படிப்புகளை அறிமுகப்படுத்த ஒரு பைலட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்ரோசாப்டின் ஆதரவுடன் மேற்படி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டத்தை திருத்தியமைத்து, தேவையான அடிப்படை மனித வளங்கள் உள்ள பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடி திட்டத்திற்கு பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தெரிவு செய்யப்பட்டால், 100 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்களை பயிற்றுவிப்பாளர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/291558
  7. 13 FEB, 2024 | 02:58 PM ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக் கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே வேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176281
  8. வடமாகாண கல்வி திணைக்களத்தால், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் ,அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது. “ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும். https://thinakkural.lk/article/291569
  9. 19 வயதின் கீழ் உலகக் கிண்ண போட்டியில்; இனங்காணப்பட்ட எதிர்கால நட்சத்திரங்கள் (பகுதி 1 - பந்துவீச்சாளர்கள்) Published By: VISHNU 12 FEB, 2024 | 09:55 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எதிர்கால நட்சத்திரங்களுக்கான ஒரு பரீட்சைக் களமாக அமைந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சில வீரர்களின் ஆற்றல்கள் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. பந்துவீசசில் 6 வீரர்களும் துடுப்பாட்டத்தில் 5 வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுதல்களைப் பெற்றனர். அவர்களில் தென் ஆபிரிக்காவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மஃபாக்கா மற்றெல்லா வீரர்களையும் விட உயர்ந்து நின்றார். க்வேனா மஃபாக்கா 21 விக்கெட்கள் இந்த வருடத்தில் 6 போட்டிகளில் விளையாடிய க்வேனா மஃபாக்கா, மூன்று 5 விக்கெட் குவியல்கள் அடங்கலாக 21 விக்கெட்களைக் கைப்பற்றி 15ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் சுற்றுப் போட்டி நாயகன் விருதை வென்றெடுத்தார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய 22 விக்கெட்களை வீழ்த்தியவர் பங்களாதேஷின் எனாமுல் ஹக் ஜூனியர் ஆவார். எவ்வாறாயினும் மூன்று 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த முதலாவது வீரர் என்ற சாதனைக்கு 17 வயதான மஃபாக்கா சொந்தக்காரரானார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கரிபியன் தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் 15 வயது வீரராக அறிமுகமான மஃபாக்கா, 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இதற்கு அமைய 2 உலகக் கிண்ண அத்தியாங்களில் மொத்தமாக 28 விக்கெட்களை வீழ்த்தி ஸிம்பாப்வேயின் வெஸ்லி மதேவியருடன் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் சமநிலையில் இருக்கிறார். உபைத் ஷா, சௌமி பாண்டே (தலா 18 விக்கெட்கள்) க்வேனா மஃபாவுக்கு அடுத்த படியாக 2024 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பாகிஸ்தானின் உபைத் ஷாவும் இந்தியாவின் சௌமி பாண்டேயும் ஆவர். உபைத் ஷா பாகிஸ்தான் வீரர் நயீம் ஷாவின் இளைய சகோதரர் ஆவார். அவர்கள் இருவரும் தலா 18 விக்கெட்களை வீழ்த்தினர். உபைத் ஷா வேகப்பந்துவீச்சாளர் ஆவார். ஆனால் சௌமி பாண்டே சுழல்பந்துவீச்சாளர் ஆவார். உபைத் ஷா ஒரு 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் பாண்டே மூன்று 4 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்தார். தசீம் சௌத்ரி அலி, கெலம் விட்லர் (தலா 14 விக்கெட்கள்) இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சாளர் தசீம் சௌத்ரி அலி 4 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். அவர் ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதுவே இம்முறை பந்துவீச்சாளர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆகும். அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கெலம் விட்லர் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தி திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தான் விளையாடிய 6 போட்டிகளிலும் எதிரணிகளுக்கு விட்லர் சிம்ம சொப்பணமாக திகழ்ந்தார். டொம் ஸ்ட்ரேக்கர் 13 விக்கெட்கள் அவுஸ்திரேலியாவின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் டொம் ஸ்ட்ரேக்கர் 13 விக்கெட்களை வீழ்த்தியதுட்ன கெலம் விட்லருக்கு பக்கபலமாக இருந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 6 போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை டொம் ஸ்ட்ரேக்கர் வீழ்த்தினார். அதுவே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அத்துடன் உலகக் கிண்ணப் போட்டியில் மூன்றாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக அது பதிவானது. (அடுத்து பகுதி 2 துடுப்பாட்டம்) https://www.virakesari.lk/article/176229 19 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டியில்; இனங்காணப்பட்ட எதிர்கால நட்சத்திரங்கள் (பகுதி 2 - துடுப்பாட்ட வீரர்கள்) Published By: VISHNU 12 FEB, 2024 | 10:02 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பல வீரர்கள் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர். அவர்களில் ஐந்து வீரர்களே 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். இறுதிப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளைச் சேர்ந்த ஐவரே இந்த மைல்கல்லை எட்டினர். அவரக்ளில் மூவர் இந்தியர்கள், மற்றைய இருவரும் அவுஸ்திரேலியார்கள். உதய் சஹாரன் 397 ஓட்டங்கள் இந்திய அணித் தலைவர் உதய் சஹாரன் இம்முறை 7 போட்டிகளில் மொத்தமாக 397 ஓட்டங்களைப் பெற்று முன்னணியில் உள்ளார். அவர் ஒரு சதம் உட்பட 3 அரைச் சதங்களைக் குவித்து அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அணியையும் சிறப்பாக வழிநடத்தியிருந்தார். முஷீர் கான் 360 ஓட்டங்கள் இந்தியாவின் மற்றொரு சிறந்த துடுப்பாட்டக்காரரான முஷீர் கான் 360 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவர் ஒருவரே இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 2 சதங்களைக் குவித்தவர் ஆவார். அத்துடன் ஒரு அரைச் சதத்தையும் அவர் பெற்றார். பந்துவீச்சிலும் 7 விக்கெட்களை வீழ்த்தி சகல துறை ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருந்தார். ஹெரி டிக்சன் 309 ஓட்டங்கள் அவுஸ்திரேலி வீரர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்தனர். 7 போட்டிகளிலும் விளையாடிய அவர் 3 அரைச் சதங்களுடன் 309 ஓட்டங்களைப் பெற்றார். இதற்கு அமைய அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார். ஹியூ வெய்ஜென் 304 ஓட்டங்கள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியதுடன் அணியையும் சிறப்பாக வழிநடத்தி தோல்வி அடையாத அணியாக உலக சம்பியனாக்கிய பெருமைக்கு உரித்தானார். அவர் 7 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 304 ஓட்டங்களைப் பெற்றார். சச்சின் தாஸ் 303 ஓட்டங்கள் இந்தியா சார்பாக சதம் குவித்த மற்றொரு வீரர் சச்சின் தாஸ் ஆவார். சச்சின் தாஸ் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 303 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். https://www.virakesari.lk/article/176230
  10. இன்று உலக வானொலி தினமாகும். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் முதன் முதலில் 2011 இல் வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதற்குத் தங்களின் ஒப்புதல் முத்திரையைக் கொடுத்து, சர்வதேச தினமாக அங்கீகரித்தது. வானொலியானது மனிதகுலத்தை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் கொண்டாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகம் மற்றும் ஜனநாயக சொற்பொழிவுக்கான ஒரு தளமாக அமைகிறது. உலக அளவில், வானொலி மிகவும் பரவலாக நுகரப்படும் ஊடகமாக உள்ளது. பல்வேறு சர்வதேச அறிக்கைகளின்படி, உலகில் மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக வானொலி திகழ்கிறது. வாழ்வியலோடு ஒன்று பட்ட பல அம்சங்களின் கண்ணாடியாய் வானொலி சேவைகள் திகழ்கின்றன. https://thinakkural.lk/article/291460
  11. சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பு Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 11:16 AM வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை (12) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே, இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள் என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர் கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. இதேவேளை தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/176254
  12. படக்குறிப்பு, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்கால பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அதைச் சுற்றி வாழும் மக்களிடம் துளிர்த்தது. ஆனால், சமீபத்தில் சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ள பசுமைப் பூங்கா திட்டம் அவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்காவை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்? அதற்கு மாற்றாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம். படக்குறிப்பு, பசுமைப் பூங்கா குறித்த செயல் விளக்கக் கூட்டத்தில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தென் சென்னை மக்கள் கொந்தளிப்பது ஏன்? பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு. கடந்த 30 ஆண்டுக்காலமாக அப்பகுதி மக்களின் வாழ்வை நஞ்சாக்கிக் கொண்டிருக்கும் அது, சுமார் 200 ஏக்கருக்கும் மேலாகப் பரவியிருக்கிறது. சொல்லப்போனால், அந்தப் பகுதி குப்பைக் கிடங்கு எனப் பேச்சுவழக்கில் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையில் அதுவொரு சதுப்புநிலம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியான அங்கு பல்லாண்டு காலமாக சென்னையின் திடக்கழிவுகளைக் கொட்டிக் கொட்டி, நிலம் பாழாகிக் கிடக்கிறது. இந்நிலையில், அங்குள்ள திடக்கழிவுகளை பயோமைனிங் மூலமாக அப்புறப்படுத்தி, நிலத்தைத் தூய்மையாக்கி மீட்டுருவாக்கும் முயற்சி 2022ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. விரைவில் பெருங்குடி குப்பைக் கிடங்கின் திடக்கழிவுகள் முற்றிலுமாக மறுசுழற்சி செய்யப்பட்டு, சதுப்பு நிலம் மீட்கப்படக்கூட வாய்ப்புள்ளது என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனாலும், அப்படி மீட்கப்படும் அந்த நிலத்தில் தற்போது 185 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்கா அவர்களைக் கோபமடையச் செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை மாநகராட்சி மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அந்தத் திட்டம், பசுமைப் பூங்காவின் பரப்பளவைக் குறைப்பதாகவோ அல்லது மொத்த நிலத்தையும் நீர்நிலையாக மாற்றுவதாகவோ இருக்கலாம் என்றும் அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் திட்டத்தின் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND படக்குறிப்பு, பசுமைப் பூங்காவுக்கான 93 ஏக்கர் பரப்பளவில் 11.2 ஏக்கரில் கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகியவை உருவாக்க திட்டமிடப்பட்டது. பசுமைப் பூங்கா திட்டத்தில் என்ன இருக்கிறது? பள்ளிக்கரணை பசுமைப் பூங்கா திட்டத்தின்கீழ் 93 ஏக்கர் பரப்பளவில், குப்பைக் கிடங்காக இருந்த நிலத்தில் 185 கோடி செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த சந்திப்பில் விளக்கப்பட்டதன்படி, இந்தத் திட்டத்தில் நிழல் குடிசைகள், சூழலியல் கல்வி மையங்கள், பறவை நோக்குதல் கோபுரம், கழிவறைகள், நடைபயிற்சிக்கான பகுதி எனப் பலவும் அமைக்கப்படும். இதற்காக ஒதுக்கப்படும் 93 ஏக்கர் பரப்பளவில் 58.15 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்கப்படும். மீதமுள்ள 23.8 ஏக்கர்களில் நீர்நிலைகள் உருவாக்கப்படும். மொத்த நிலப்பரப்பில், கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகிய கட்டமைப்புகள் 11.2 ஏக்கரில் உருவாக்கப்படும். குப்பைக் கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மறுசுழற்சி செயல்முறையில் இதுவரை 17 லட்சம் சதுர மீட்டர் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்னமும் சுமார் 30 லட்சம் சதுர மீட்டர் அளவிலான கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளன என்றும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். படக்குறிப்பு, திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பெருங்குடியில் நடக்கும் திடக்கழிவு மறுசுழற்சி பெருங்குடி குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலைகளை பயோமைனிங் எனப்படும் திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி கடந்த 2022 முதல் நடந்து வருகிறது. மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் குப்பைகளை மாற்று எரிபொருளாக மாற்றுகிறார்கள். இதுகுறித்து பிபிசியிடம் முன்பு பேசிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனமான சிக்மாவின் துணைத்தலைவர் ஸ்ரீதர், “பல ஆண்டுகளாகக் குவிக்கப்பட்ட குப்பைகளைக் கிளரும்போது, அதைச் சுத்தப்படுத்தும்போது துர்நாற்றம் வீசவே செய்யும். ஆனால், இந்தத் திட்டம் ஒரு சில ஆண்டுகளில் முடிவடைந்த பிறகு, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர், காற்று ஆகியவற்றின் தரம் மேம்படும்,” என்று கூறினார். தற்போது ஓரளவுக்கு திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி இந்தப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து கழிவுகளால் பாழான நிலம் மீட்கப்பட்ட பிறகு அங்கு பசுமைப் பூங்கா அமைக்கத் திட்டமிட்டது. படக்குறிப்பு, குப்பைக் கிடங்கை அகற்றிய பிறகு, சதுப்பு நிலத்தை ஏதும் செய்யாமல் இயற்கையாகவே விடவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. ‘பசுமைப் பூங்காவால் எந்தப் பயனும் இல்லை’ ஆனால், கடந்த ஜனவரி மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பசுமைப் பூங்கா அமைக்க வேறு இடம் பார்க்குமாறும் இந்தப் பகுதியில் மீட்கப்படும் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து, சதுப்பு நிலத்தை மீட்டெடுக்குமாறும் கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி நடந்த இந்தத் திட்டம் குறித்த செயல்விளக்கக் கூட்டத்தில் பெருங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கலந்துகொண்டனர். அவர்கள் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லையெனவும் குப்பைகளை அகற்றிய பிறகு மீட்கப்படும் நிலத்தை மீண்டும் சதுப்புநிலமாகவே மாற்றவேண்டும் எனவும் கூறினர். மேலும், இப்போது தங்களுக்குத் தேவை பசுமைப் பூங்கா அல்ல, வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுதான் எனக் கூறிய குடியிருப்புவாசிகள், அதற்கு சதுப்புநிலம் மீட்டுருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேளச்சேரி மேற்கு, ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் கீதா கணேஷ், “அந்த இடத்தில் இருக்கும் குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு, அங்கு வேறு எதுவும் செய்யாமல் அப்படியே விட்டாலே போதுமானது. அதைச் செய்தாலே இங்கு பெய்யும் மழைநீர் அனைத்தும் அங்கு சென்றுவிடும். அங்கிருக்கும் இடத்தை முறையாகத் தூர்வாரிப் பராமரித்தாலே வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் வருவதைத் தடுக்க முடியும். அதைவிட்டு, இத்தகைய திட்டத்தைக் கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை,” என்று கூறினார். பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND படக்குறிப்பு, சதுப்பு நிலப்பகுதியை மீட்ட பிறகு பசுமைப்பூங்கா என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக்கொள்வது குறித்து மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட சதுப்பு நிலம் பள்ளிக்கரணை 1900களின் தொடக்க காலத்தில் 8,000 ஹெக்டேருக்கு பரந்து விரிவடைந்திருந்ததாகப் பழைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பரப்பு, ஈசிஆர் முதல் மத்திய கைலாஷ் வரை நீண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தென் சென்னையின் வளர்ச்சியில் பங்கு வகித்த நெடுஞ்சாலைகள், ஐடி பூங்காக்கள் மற்றும் அதைச் சுற்றி வளர்ந்த இன்னும் பல கட்டுமானங்கள், ஆங்காங்கே துண்டு துண்டாக அந்த நிலத்தை வெட்டியெடுக்கவே, இறுதியில் தற்போது சுமார் 500 ஹெக்டேர் என்ற பரப்பளவாகச் சுருங்கிவிட்டது. இந்நிலையில், அதில் 200 ஏக்கர் பரப்பளவை பெருங்குடி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெருங்குடியைச் சுற்றி வாழும் பெண்களின் தாய்ப்பாலில் ஆர்கனோகுளோரின் எனப்படும் நச்சு வேதிமம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணமாக அந்தக் குப்பைக் கிடங்கை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. உலகிலேயே தூய்மையானதாகக் கருதப்படும் தாய்ப்பாலையே நஞ்சாக்கிய குப்பைக்கிடங்கின் அபாயகரமான சூழலில் வாழ்ந்த மக்கள், தற்போது அது தூய்மைப்படுத்தப்படுவதை எண்ணி மகிழ்ந்தாலும், அதன்பிறகு அந்த நிலத்தை மீட்ட பிறகு மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதை பசுமைப்பூங்கா என்ற பெயரில் எடுத்துக்கொள்வது குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தத் திட்டம், ஏற்கெனவே வாழ்விடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உயிரினங்களை மேலும் சிக்கலில் தள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பசுமைப் பூங்கா அமைப்பதால் என்ன பிரச்னை? “பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் பயோமைனிங் மூலம், அந்த நிலத்தை மீண்டும் மீட்டுருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தச் செயல்முறை பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இங்கு 2022 முதல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக இந்த நிலம் தூய்மைப்படுத்தும் முயற்சி முடிவடைந்தால், அதை சதுப்புநிலமாகவே விடவேண்டியது மிகவும் அவசியம்,” என்று விளக்குகிறார் கடல் உயிரியல் வல்லுநரான முனைவர் தி.தி.பாபு. “இத்தகைய ஈரநிலக் கட்டமைப்பை மனிதர்களால் புதிதாக வேறோர் இடத்தில் அப்படியே செயற்கையாக உருவாக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” அப்படியிருக்க, மீட்கப்படும் நிலத்தின் இயற்கை அமைப்பை மறுபடியும் மீட்டுருவாக்க முயல்வதே சரியான அணுகுமுறை என்று வலியுறுத்துகிறார் முனைவர் தி.தி.பாபு. அப்படிச் செய்யத் தவறினால், அது அப்பகுதியில் ஏற்கெனவே சீரழிந்து கொண்டிருக்கும் சூழலியல் சமநிலையை மேலும் சீர்குலைக்கும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இது அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்களைப் பாதிப்பது மட்டுமின்றி, தற்போது வாழ்விடப் பற்றாக்குறையால் அழிந்துகொண்டிருக்கும் பள்ளிக்கரணை வாழ் ஊர்வனங்கள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களையும் தாவரங்களையும் மேன்மேலும் அழிவை நோக்கித் தள்ளும் எனவும் கூறுகிறார் கடல் உயிரியல் வல்லுநர் முனைவர் தி.தி.பாபு. படக்குறிப்பு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையில், பஞ்சு போல் நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டவை. ‘குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே!’ முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேல் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்த அரசாங்கம், சதுப்பு நிலத்திலேயே குப்பையையும் கொட்டியது என்று கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகர், “இப்போது அந்தக் குப்பைக் கிடங்கைத்தான் பசுமைப் பூங்காவாக மாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே,” என்று வாதிடுகிறார் அவர். பல ஆண்டுக்காலமாகச் சிதைக்கப்பட்ட பிறகு, இப்போதுள்ள இந்த நிலத்தை முற்றுமுழுதாகப் பழைய சதுப்பு நிலமாக மாற்ற முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “பழைய சதுப்பு நிலம் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அதை மீட்டெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்தச் சதுப்பு நிலப்பகுதி முழுக்கவும் பஞ்சு போல் நீரை உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்டவை. ஆனால், இத்தனை ஆண்டுக்காலமாக அங்குக் குவிக்கப்பட்ட கழிவுகளால் நிலமே பாழாகிக் கிடக்கிறது. அவ்வளவு பெரிய சிதைவை முற்றிலுமாகச் சரிசெய்து நிலத்தை மீட்டெடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்,” என்கிறார் டேவிட் மனோகர். இதே சந்தேகத்தை பெருங்குடி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலரும் எழுப்புகின்றனர். ஆனால், தரைமட்ட அளவு வரை குப்பைக் கிடங்கில் இருக்கும் குப்பைகளை முழுமையாக மறுசுழற்சி செய்து நிலத்தை மீட்க முடியும் என்று திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும் பகுதியை முற்றிலுமாக மீட்டெடுத்தாலும், அங்கு “பசுமைப் பூங்கா உட்பட எந்தவிதமான கட்டமைப்புகளையும் கொண்டு வரக்கூடாது, சதுப்புநிலத்தை மீட்டெடுத்து அதே நிலையில் பராமரிக்க வேண்டும்” என்று அதைச் சுற்றி வாழும் மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். https://www.bbc.com/tamil/articles/ckvey9n5210o
  13. Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 09:58 AM யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார். திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர் பிடிபட்டுள்ளார். இவ்வாறு திருடப்பட்ட ஐ போன் உரிமையாளரின் கைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176245
  14. ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கையால் பேரழிவு ஏற்படும் - அவுஸ்திரேலியா எச்சரிக்கை Published By: RAJEEBAN 12 FEB, 2024 | 12:19 PM ரஃபாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டால் அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களிற்கு பேரழிவு ஏற்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் காசாவில் உடனடியுத்த மனிதாபிமான யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை குறித்து இஸ்ரேலின் நண்பர்கள் உட்பட பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன இது குறித்து சர்வதேச அளவில் கருத்துடன்பாடு அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் சர்வதேச சமூகத்தை செவிமடுக்கவேண்டும் எனவும் பெனிவொங் தெரிவித்துள்ளார். பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர் காசாவின் வடபகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மக்கள் தென்பகுதிக்கு நகர்ந்துள்ளனர். இஸ்ரேல் இந்த மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் அந்த மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தாவிட்டால் அந்த மக்களிற்கு பேரழிவு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176176
  15. Published By: VISHNU 12 FEB, 2024 | 09:36 PM கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்திலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. கால்பந்துபோட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்தில் நின்ற 35 வயதான வீரர் மேல் மின்னல் தாக்கியுள்ள நிலையில் குறித்த வீரர் மைதானத்திற்குள் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கால்பந்துபோட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 12 மாதங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்த இரண்டாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176228
  16. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு என்ன ஆனது? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தவறு செய்யும்போது எல்லாத் தருணங்களிலும் இதுபோல நடக்கிறதா? என்ன நடந்தது? தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தபோது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, வேறொரு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரில் ஏறிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அந்த அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி இது தொடர்பாக புகார் அளிக்க அங்கிருந்து புரப்பட்டு சென்னையை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்தக் காரை பெரும் போலீஸ் படையுடன் வந்து மடக்கிய அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், காரின் சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதற்கு அந்தப் பெண் அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் சாவியைத் தர மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் அதிகாரி பேசினார். தில்லியில் இருந்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தமிழக உயரதிகாரிகள் தலையிட ஒரு வழியாகச் சென்னையை வந்தடைந்த அந்த அதிகாரி அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்துப் புகார் அளித்தார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது. 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு 2021ஆம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இரு தரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20,500 அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் தனக்காக ராஜேஷ் தாஸே வாதாடினார். இந்த மேல் முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு என்ன ஆனது? விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி ராஜேஷ் தாசுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், இதுபோல அரசு உயர் அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அந்த வழக்குகள் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன கேள்விகள் இருக்கவே செய்கின்றன. 2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில், பல காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அருணா ஜெகதீஸன் ஆணையம் விசாரணை நடத்தி, பல காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க பரிந்துரை அளித்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்த அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி மாதப் பிற்பகுதியில் அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. பட மூலாதாரம்,FACEBOOK/GETTYIMAGES உயர் அதிகாரிகள் தப்புவது எப்படி? சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றும்போதுதான், அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குட்படுத்த முடியும்; இல்லாவிட்டால் ஏதும் நடக்காது என்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். "சிவில் சமூகம் வலுவாக இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணம். அதனால்தான் பல்வீர் சிங் விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில், சாத்தான்குளம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. இதன் காரணமாக அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இப்போதுவரை ஜாமீன் பெற முடியவில்லை. ராஜேஷ் தாஸ் விவகாரத்தைப் பொருத்தவரை, புகார் அளித்தவரும் இன்னொரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால்தான் இந்த வழக்கு இவ்வளவு தூரம் முன்னேறியது. சாதாரண காவலராக இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்கிறார் ஹரி பரந்தாமன். வேறு சில நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கே.பி.எஸ். கில், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்டார். இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. "ஆனால், இதிலும் பாதிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அதனால் அவர் போராட முடிந்தது. அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்களை எதிர்க்கும் அளவுக்கு சிவில் சமூகம் இல்லை. இப்போதும் உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்து வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை சிவில் சமூகம் கண்டுகொள்வதேயில்லை. மேலை நாடுகளில் இதுபோல நடந்தால், அடுத்த நாளே அரசு கவிழ்ந்துவிடும். ஜார்க்கண்டில் முதலமைச்சரைக் கைது செய்கிறது அமலாக்கத் துறை. பொதுமக்களிடம் எந்த உணர்வும் இல்லை. அப்படியிருக்கும்போது, அதிகாரவார்க்கம் தன் தவறுகளுக்காக தண்டிக்கப்படுவது அரிதான விஷயம்தான்" என்கிறார் ஹரி பரந்தாமன். படக்குறிப்பு, அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் உயர் அதிகாரிகளுக்கு தனிச் சலுகை உண்டா? அதிகார வர்க்கத்திற்கு என தனியாக எந்த சலுகையும் கிடையாது. அவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகவே தப்பிக்கிறார்கள் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ஜி. திலகவதி. "இதுபோன்ற விவகாரங்களில் பெரும்பாலும் புகார் தெரிவிப்பவர்கள் உறுதியாக இருப்பதில்லை. அது ஒரு முக்கியக் காரணம். மேலும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு தப்பிக்கும் வழி தெரியும். தவிர, நம்முடைய சட்ட அமைப்பும் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இப்போது, ராஜேஷ் தாஸ் விவகாரத்தில்கூட இவர் இனி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். அங்கு தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டபோதே, அவர் கைது செய்யப்படாமல் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டார். அதிகார வர்க்கத்திற்கென தனியான 'இம்யூனிட்டி' என ஏதும் கிடையாது. சட்டத்தில் உள்ள சலுகைகள், வழக்கறிஞர்களின் வாதத் திறமைகளின் காரணமாகவே இவர்கள் தப்பிக்கிறார்கள்" என்கிறார் திலகவதி. https://www.bbc.com/tamil/articles/c3gkd9p8lq9o
  17. Published By: RAJEEBAN 12 FEB, 2024 | 04:31 PM ரஃபாவில்இஸ்ரேல்மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால் அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது. குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. யப்னா முகாமில் இரண்டு மசூதிகள் தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/176202
  18. நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291414
  19. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி! 12 FEB, 2024 | 02:07 PM தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவை தலைவர் அப்பாவு துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். பின்னர் உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களிலே தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். இதையடுத்து ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிடவும் ஆளுநருக்கு எதிராகவும் அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். பின்னர், உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களிலே தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். https://www.virakesari.lk/article/176184
  20. தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை - காஞ்சன ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார். மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை. வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291412
  21. ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி Published By: VISHNU 12 FEB, 2024 | 06:32 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்காக கருஜயசூரிய தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாகக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினர் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாகவும் கட்சிகளுக்கிடையில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கருஜய தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றையும் நியமித்து, அரசியலமைப்பு திருத்தும் மேற்காெண்டு, ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதற்கு தற்போது வேகமாக செயற்பட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது நாட்டுக்குள் பாரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதனால் இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமா, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இடம்பெறுமா அல்லது பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுமா என நிச்சயமாகத் தெரிவிக்க முடியாமல் இருக்கிறது அதனால் தற்போதுள்ள நிலைமையில் என்ன நடக்கப்போகிறது என எங்களுக்கு மாத்திரமல்ல, என்ன செய்வதென ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியாமல் இருக்கும். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு சென்றால் அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு கைகளையம் உயர்த்தி ஆதரவளிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/176224
  22. தூதரக பேச்சுவார்த்தை வெற்றி; கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிப்பு 12 FEB, 2024 | 10:20 AM புதுடெல்லி: கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரின் அல் தஹாரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் கத்தார் நாட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. விடுவிக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களை விடுவித்து இந்தியா திரும்புவதை சாத்தியப்படுத்திய கத்தார் அரசினை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசு தலையிட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், தூக்கு தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. தொடர்ந்து அவர்களை இந்தியா அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்நிலையில் இரு நாட்டு தூதரக பேச்சுவார்த்தைக்கான பலனாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்த முன்னாள் வீரர்களில் ஒருவர், “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் தாயகம் திரும்புவது சாத்தியப்பட்டிருக்காது. இந்திய அரசின் தொடர் முயற்சியினாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176160
  23. 12 FEB, 2024 | 06:11 PM நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்துக்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்கும் உரிமையை வழங்கியதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தங்களுக்கிணங்க, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியே தவிர தேச நலனுக்காக இலக்காக் கொண்ட அபிலாஷை அல்ல என்றும் இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு நேற்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Peter Maynard, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Shyam Divan மற்றும் இந்தியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரசாந்த குமார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர். "அரசியலமைப்பு பேரவையில் இருப்பது ஜனாதிபதியின் கைப்பாவைகள் அல்லர்" அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் வெளியேயும் தைரியமாக தெரிவித்து வருகிறார். இதன் மூலம் அதன் அங்கத்தவர்களை நிறைவேற்றுநரின் கீழ் உள்ளவர்கள் என்று அழைப்பது தவறு. நிறைவேற்று ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை மட்டுப்படுத்தவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அதில் ஒரு அங்கத்தவராக, ஜனாதிபதியின் கைக்கூலியாகவோ அல்லது கைப்பாவையாகவோ செயற்படமாட்டேன் என்றும், அனைத்து விடயங்களிலும் பாரபட்சமின்றி, சரியான முறையில் நீதி நியாயமாக, தீர்மானங்களை எடுப்பேன் என்றும் தான் பேரவையில் குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். "கீழிருந்து மேலாக அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக் கொள்கையை பின்பற்றுவோம்" சந்தை சமூகத்தில் செயல்படும் மனிதநேய முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, வளங்களின் உருவாக்கம் மற்றும் உருவாக்கப்பட்ட வளங்களின் வருமானம், சமூக நீதி மற்றும் சமத்துவ அடிப்படையில் இரண்டையும் பகிர்ந்தளிப்பதே ஒரு கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையாகும். சமூக ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட நடுத்தர பாதையே எமது கொள்கை. சமூகத்தில் எழும் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து மக்கள் கருத்துக்களை உள்ளீர்த்த, பங்கேற்பு கொள்கையை வகுப்பதாகும். "ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்" ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியைப் பேணுதல் மற்றும் நீதியின் அடிப்படையில் நீதித்துறை செயல்முறையை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் கருத்துக்களை கோரி நியாயமான தீர்வுகளை வழங்கும் கட்மமைப்பை செயல்படுத்துவோம். ஜனநாயகத்தின் மூன்று தூண்கள், அவற்றின் அதிகாரப் பகிர்வு மற்றும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையினுள் வலுவான ஜனநாயக கட்டமைப்பை நாட்டில் நிறுவுவோம்.சுதந்திர ஊடகங்களும் நான்காவது தூணாகக் கருதப்பட்டு அவை பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். "அடிப்படை உரிமைகள் திருத்தப்பட வேண்டும்" இந்நாட்டின் அரசியலமைப்பின் முக்கிய அங்கமான அடிப்படை உரிமைகள் பற்றி நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகள் தொடர்பான பகுப்பாய்வு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, தெளிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். "ஊழலை இல்லாதொழிக்கும் ஒரு புதிய முறைமை" ஊழலை ஒழிக்க நடவடிக்கை எனுக்க வேண்டும். தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்ட உள்ளடக்கம் போதுமானதாக இல்லாததால், அரசியலமைப்பின் மிகவும் உயரிய பகுதியாக, ஓர் எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒரு கட்டமைப்பாக ஊழல் எதிர்ப்பு நிறுவகம் நிறுவப்பட நடவடிக்கை எனுக்கப்படும். எவரும்,எந்த அதிகாரத்தாலும், செல்வாக்கு செலுத்த முடியாத முறைமை உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். "திருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை" நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும், தேசிய அறிஞர்கள் பேரவையும் நடந்து கொண்டது போல, இந்நாட்டை அழித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, எமது நாட்டிற்கு இழந்த வளங்களும் சொத்துக்களும் மீட்கப்படும். இந்நாட்டை அழித்த திருடர்களுடன் எங்களுக்கு எந்த வகையிலுமான டீல்களும் இல்லை என அவர் தெரிவித்தார். "அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களை திருத்தம் செய்வோம்." அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கத்தின் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனநாயகத்தை சீர் குலைக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்து, உண்மையில், அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, உண்மைக்கு முன்னுரிமை அளிக்கும், யோசனைகளை முன்வைப்பதற்கு முன்னுரிமை அளித்து, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சிறந்த சட்டங்கள் கொண்டு வரப்படும். சிவில் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176220
  24. Published By: DIGITAL DESK 3 12 FEB, 2024 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இது தொடர்பில் யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும். இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம். அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள். இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு. இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். https://www.virakesari.lk/article/176204

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.