Everything posted by ஏராளன்
-
பாகிஸ்தானில் இரு குண்டுவெடிப்புகள் : 20 பேர் பலி!
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:53 PM பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் மாகாணத்திலேயே இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175808
-
பேருந்துகளில் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்
பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/290938
-
சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருது அறிவிப்பு
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 01:56 PM இவ் வருடத்திற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் விருதினை பிரித்தானியாவைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) வழங்குகிறது. நிமா சரிகானி ஒரு அமைதியான சூழலில் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கு "ஐஸ் பெட்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சுற்றுச்சூழலின் அழகு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. “வியப்பூட்டி மனதை உருக்கிய புகைப்படம் நமது பூமியின் அழகையும் பலவீனத்தையும் பார்க்க அனுமதிக்கிறது நிமா சரிகானியின் சிந்தனையைத் தூண்டிய குறித்த புகைப்படம் ஒரு விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த பிணைப்பு, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் மற்றும் வாழ்விட இழப்பின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் காட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் கலாநிதி டக்ளஸ் குர் தெரிவித்துள்ளார். நிமா சரிகானி நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக துருவ கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பிடித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு புகைப்பட கலைஞர்களின் 25 புகைப்படங்கள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. அதில் நிமா சரிகானி புகைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற மற்றைய நான்கு சிறந்த இறுதிப் போட்டியாளர்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175782
-
காவல்துறையால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்;
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியான நிலையில் குறித்த மாணவனைக் கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.
-
யாழ்.பல்கலை மாணவனுக்கு பிணை!
07 FEB, 2024 | 05:16 PM போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியான நிலையில் குறித்த மாணவனைக் கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர். அத்துடன், பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு அனுப்பவும் உத்தரவிட்டு மல்லாகம் நீதவான் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார். https://www.virakesari.lk/article/175814
-
குப்பை மற்றும் காற்றிலிருந்து மின்சாரம்… காசாவை இருளில் இருந்து மீட்கும் 15 வயது சிறுவன்!
இஸ்ரேலின் கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில் மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி வைத்திருக்கிறான் ஒரு சிறுவன். காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில் 15 வயதான இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் – அத்தார் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் ‘காசாவின் நியூட்டன்’ என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள். குப்பை உள்ளிட்ட கிடைத்த பொருள்களை எல்லாம் வைத்து மின்சாரம் தயாரித்திருக்கிறார் இந்தச் சிறுவன். மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள பொருட்களை வைத்து காற்று மூலம் மின்சாரம் தயாரித்து அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க உதவி வருகிறார் ஹுசாம். இதையடுத்து இச்சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “இருளுக்குள் இருந்த என் சகோதரர்களைப் பார்த்தேன். அவர்கள் கண்களில் பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் அளிக்க நினைத்தேன்” என ஹுசாம் கூறியுள்ளார். இஸ்ரேல் மொத்த காசாவையும் இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில் இந்தச் சிறுவனின் முயற்சி குன்றில் இட்ட விளக்காக ஜொலிக்கிறது. இதுபோன்ற நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே மிகத் திறமையானவன் எனவும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை அவன் நிகழ்த்துவான் எனவும் ஹுசாம் தாயார் தெரிவித்துள்ளார். நன்றி – காமதேனு https://thinakkural.lk/article/290897
-
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அவசர அவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியதற்கான காரணம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கேள்வி - உடனடியாக நீக்க கோரிக்கை Published By: RAJEEBAN 07 FEB, 2024 | 04:26 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அவசரஅவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியதற்கான காரணம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சந்தேகம்; -உடனடியாக நீக்க கோரிக்கை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில்காணப்பபட்ட இரகசியதன்மையையும் அதனை அவசரஅவசரமாக நிறைவேற்றியதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அரசாங்கம் அரசமைப்பு கொள்கைகளை புறக்கணித்துள்ளமை குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது. சட்டத்தை அவசரஅவசரமாக நிறைவேற்றுவதற்கான நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் இந்த சட்டம் கருத்து சுதந்திரம் சட்டத்தின் ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் முழுமையாக கருத்தில்எடுக்க தவறியமையும் குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கவலை வெளியிடடுள்ளது. நீதிமன்றத்தின் பரிந்துரைகளை தெரிவுசெய்து நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசமைப்பிற்கு உகந்ததா என்ற கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால்உருவாக்கப்படவுள்ள ஆணைக்குழுவிற்கான பரந்துபட்ட அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தீங்கிழைக்கும் மற்றும் விருப்பம் போன்ற முக்கிய சொற்களின் தெளிவின்மை மற்றும் சுயாதீன நிபுணர்களின் செயற்பாடுகள் குறித்தும் கரிசனை வெளியிட்டுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் செயல்முறை மற்றும் சாரத்தினை அரசாங்கம் மீளாய்வுசெய்யவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் உடனடியாகநீக்கவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கரிசனைகளிற்கு உண்மையான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175813
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:50 PM நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று புதன்கிழமை (6) மாலை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175806
-
முருகன், ராபர்ட்பயஸ் கால வரையறையற்ற உண்ணாவிரதம்?!
“ஒருவாரத்தில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்வதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி”; இராபர்ட் பயஸ் முன்னெடுத்த போராட்டம் நிறைவு 07 FEB, 2024 | 04:52 PM திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 7 நாட்களாக ராபர்ட் பயஸ் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்தும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராபர்ட் பயஸ் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதனை உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தார். சிறப்பு முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்து விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கடவுச்சீட்டு எடுப்பது தொடர்பாக தன்னை இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், சிறப்பு முகாமில் தங்களுக்கு மட்டும் தொடரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தனிமைச் சிறைவாசம் முடிவுக்கு வர வேண்டும் என்பனவே ராபர்ட் பயஸ் முன்வைத்த கோரிக்கையாக காணப்படுகின்றது. இந்நிலையில் 7 நாட்களாக தொடர்ந்த அவரது உண்ணாவிரத போராட்டத்தை உரிய அலுவலர்கள் யாரும் கண்டுக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்த நிலையில் இதனை கண்டித்து ஏனைய முகாம்வாசிகள் தெரிவித்த எதிர்ப்பினையடுத்து வட்டார சிறப்பு துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாக சிறப்பு முகாமுக்கு வருகைத் தந்து கோரிக்கைகளை கேட்டறிந்து நடைபயிற்சி உள்ளிட்ட முகாம் சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்பதாகவும் ஒரு வாரத்தில் இலங்கை துணைத் தூதகரத்திற்கு அழைத்து செல்வதாகவும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினைத் தொடர்ந்து இராபர்ட் பயஸ் தற்காலிகமாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஒருவாரத்தில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்வதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் தனது உண்ணாநிலை போராட்டத்தை தொடரப் போவதாகவும் இராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175815
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆறு இந்திய மீனவர்கள் விடுதலை இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியதற்காக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கக் கூடாது, தவறினால் சிறையில் அடைக்கப்படும் என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்களின் மீன்பிடி கைவினைப்பொருட்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை தேசியமயமாக்க நீதிபதி உத்தரவிட்டார். https://thinakkural.lk/article/290901
-
திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை - இந்திய உச்சநீதிமன்றம் கருத்து
07 FEB, 2024 | 09:59 AM புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2(எஸ்)-வது பிரிவு கூறுகிறது. அதாவது திருமணமாகாத பெண் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்பதை இது உணர்த்துகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. பாரபட்சமாக உள்ள இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனக்கு திருமணமாகவில்லை. எனினும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியாவில் திருமண பந்தத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தாயாவதுதான் விதிமுறையாக உள்ளது. திருமணம் செய்துகொள்ளாதவர்கள் குழந்தைக்கு தாயாவது விதிமுறை அல்ல. மனுதாரர் திருமணம் செய்துகொள்ளாமலேயே தாயாக விரும்புகிறார். அது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் பேசுகிறோம். திருமணம் என்ற பந்தம் நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமா வேண்டாமா? நாம் மேற்கத்திய நாடுகளைப் போன்றவர்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளில் பல குழந்தைகள் தங்கள் தாய் தந்தை யார் என்றே தெரியாமல் உள்ளனர். அதே நிலை இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. திருமணபந்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக நீங்கள் எங்களை பழமைவாதி என்று முத்திரை குத்தினாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத்தின் பிறபிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/175764
-
பெருமளவு பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனை
4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை 07 FEB, 2024 | 03:02 PM நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும் 517 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைகளில் 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், 1,561 போதைமாத்திரைகள், 1 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவிற்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள் , 1,285 சிகரட்டுக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கையின் மூலம் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ள நிலையில், 107 பாடசாலைகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் பாவனை உள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிள்ளைகளை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள 434 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/175799
-
புதனும் புதிரும்
தொடருதே கதை... தொடருங்கள் ஐயா. முதியோரைக் கொல்லும் மூடனை ஏன் கைது செய்ய முடியவில்லை?!
-
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை
நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் முழு வடிவம்! 07 FEB, 2024 | 12:52 PM தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் எனவும் அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதேவேளை, விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின் முழு வடிவம், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்தால் மாத்திரமே இந்த வேலைத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளைப் பெற கனவு காணும் சிலர், நாட்டுக்கு பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். யதார்த்தத்தை புறக்கணித்து கனவுகளின் பாதையில் பயணித்தால் நாடு மீண்டும் பெரும் ஆபத்தில் தள்ளப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, பல்வேறு தனிப்பட்ட நலன்களுக்காக நாடு பற்றிய பொறுப்பைப் புறக்கணித்தால் வரலாறு எம்மை துரோகிகள் என பெயரிடும் எனவும் சுட்டிக்காட்டினார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை இன்று (07) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை பிரதமர் தினேஷ் குணவர்தன, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வரவேற்றனர். அதன்போது, பாராளுமன்ற பிரதான வாயில் முன்பாக பாடசாலை மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடினர். படைக்கள சேவிதர், பிரதி படைக்கள சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்டோர் புடைசூழ பாராளுமன்ற அவைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினார். தமது தனிப்பட்ட கனவுக்காக அல்லாமல் நாட்டின் பொதுவான கனவை நனவாக்கும் நோக்கத்திற்காக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். தன்னைக் கடுமையாக விமர்சித்த பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானோர் பழைய பகைகளை விடுத்து, நாட்டுக்காக ஒரு பொதுப் பயணத்திற்கு இணங்க முடியுமாக இருந்தால், தம்முடன் நீண்டகாலம் நெருக்கமாகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏன் அவ்வாறு செயற்பட முடியாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். விண்கல் வேகத்தில் வீழ்ந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தை ரொக்கெட் வேகத்தில் மீண்டும் உயர்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தனித்துவமான வெற்றி எனவும் சுட்டிக்காட்டினார். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுப்பது மிகவும் சிரமமானதும் கடினமானதுமான பணியாக இருந்தாலும் ஏனைய நாடுகளைப் போன்று நீண்டகால சிரமங்கள் மற்றும் வலிகள் இன்றி, நாட்டை மீட்டெடுக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களினால் நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம் சாத்தியமாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகும்போது வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார். சிக்கலான மறுசீரமைப்பு திட்டத்தை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அடித்தளமாக அமையும் எனவும், கடனில் இருந்து விடுபடுவதற்கான பாதையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு: ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடி ஏற்பட்டது. சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து விடுபட முடிந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் மீள முடியாது. நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும் நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது. நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? புத்தபிரான் போதித்த ஒரு போதனையை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “அத்ததீபா – விஹரத” தங்களுக்குத் தாங்களே ஒளியாக வாழ வேண்டும். நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உலகில் எங்கும் ஏனையவர்களைக் குறைகூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது. எம்மை எமக்கான ஒளியாக மாற்றாவிட்டால், நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாவிட்டால், நமக்கு நன்மை நடக்காது. நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. நெருக்கடிக்கும் தீர்வு இல்லை. முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால் சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டைக் கிழியக் கத்தினாலும் நாம் அடிப்படையில் இருந்து மாறாவிட்டால் முறைமைய மாற்ற எம்மால் முடியாது. அதனைச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த காலம் , நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பல விடயங்களை இச்சபையில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். 2022 பெப்ரவரியில் இந்த நாடு இருந்த நிலை, நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இந்த வருடம் பெப்ரவரியாகும் போது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் இந்த பெப்ரவரி வரையான நமது பொருளாதார குறிகாட்டிகள் சிலவற்றை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06 சதவீதமாக இருந்தது. இன்று அது 6.4சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதமாக உள்ளது. இன்று அது 3.3 சதவீதமாக உள்ளது. அன்று ஒரு டொலரின் பெறுமதி 363 ரூபாய். இன்று 314 ரூபாய். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடங்களில் இலங்கையானது முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்திய 6 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் இருப்புப் பற்றாக்குறை காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், எங்களால் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவைத் தொகை உபரியை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 12 சதவீதமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 52 பிரதான அரச நிறுவனங்கள் 745 பில்லியன் ரூபா நட்டம் ஈட்டின. செப்டம்பர் 2023இற்குள், இந்த 52 நிறுவனங்களும் 313 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் இந்நிறுவனங்கள் கடன் சுமையை தாங்க முடியாத நிறுவனங்களாக காணப்படுகின்றன. தெரிவுசெய்யப்பட்ட கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சமயம் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. 2023 டிசம்பர் நிலவரப்படி, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். குறுகிய காலத்தில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்ணிக்கையை 1,487,303 ஆக அதிகரிக்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மேலும், 2023இல் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுத்தோம். கோட்டா முறையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மீனவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், உற்பத்தித் தொழிற்துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விநியோக வலையமைப்பில் எந்தத் தடையும் இல்லை. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம். நமது பொருளாதாரம் விண்கல் வேகத்தில் சரிந்தது. ஆனால் தற்போது எமக்கு அதனை மாற்ற முடிந்துள்ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளோம். நாங்கள் வீ(V) வடிவ மீட்பு அல்லது வீ(V) வடிவ மீட்சியைப் பெற்று வருகிறோம். நாம் அடைந்த விசேடமான வெற்றியாக அதனைக் குறிப்பிடலாம். வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி மிகவும் கடினமானது மற்றும் வேதனையானது. ஆனால் ஏனைய நாடுகளைப் போல நீண்ட கால சிரமங்கள் மற்றும் வலிகள் இல்லாமல் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது. நான் ஒரு உதாரணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறேன். கிரேக்கம் கடன் செலுத்த முடியாமல் 2009ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் பின்னர் முழு நாடும் மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. அந்தக் காலத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. மீண்டும் அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சுமார் 10 வருடங்கள் தேவைப்பட்டது. நமது நாடு குறுகிய காலத்தில் இத்தகைய விதிவிலக்கான சாதனைகளை எட்டுவது உண்மையில் உலக சாதனையாகும். எங்களால் எப்படி அவ்வாறான சாதனைப் படைக்க முடிந்தது? 2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், நாங்கள் தயாரிக்கும் கொள்கைகள், நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தையும் அவ்வப்போது நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். மக்கள் முன்னிலையிலும் அவ்வப்போது பகிரங்கமாக அறிவித்தேன். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவை பற்றி கலந்துரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தக் கொள்கைகள் ஒருபோதும் மறைக்கப்படவில்லை. ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ளோம். அரசியல் ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முடிவையும் நாட்டு நலன் கருதியே எடுத்தேன். எமக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்கவில்லை. தனிப்பட்ட இலாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்கு சரியான கொள்கைகளை செயற்படுத்தினோம். பாராளுமன்றத்திலுள்ள சில தரப்பினர் அந்த முடிவுகளை எதிர்த்தனர். ஆனால் பெரும்பான்மையானோர் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களையும் இலக்குகளையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக அந்த முடிவுகளுக்கு ஆதரவாக கையுயர்த்தினர். எதிர்காலத்தில் தேசத்தின் பாராட்டை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இந்தப் பயணத்தில் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அன்றிருந்த நாட்டின் உண்மையான நிலைமையை நான் எடுத்துக் காட்டினேன். பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை நிலையான பாதைக்கு வழிநடத்தும் பல திட்டங்களை முன்வைத்தேன். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்டமாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் நாங்கள் செயல்படுத்திய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கைகள் காரணமாக, நாங்கள் தற்போது நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான பாதைக்கு பிரவேசித்திருக்கிறோம். அத்தோடு சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் இலக்குகள் மற்றும் பயணம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளன. இருண்ட பொருளாதார சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நாம் தற்போது சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தைக் காண்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருளாதாரம் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் பலர் நினைத்துப் பார்க்க முடியாத இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர். மேலும் சிலர் தங்கள் வருமான வழிகளை இழந்தனர். சிலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். இன்னும் சிலர் உரிமைகளை இழந்தனர். பெரும்பாலான துன்பங்கள் சாதாரண மக்களுக்குத்தான் சொந்தமானது. இழந்த வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு வழங்க தற்போது நாம் முயற்சிக்கிறோம். மக்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வேலைத் திட்டத்தை 'உரித்து' என்ற பெயரில் அண்மையில் ஆரம்பித்தோம். உரித்து வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம். ஒன்று காணி மற்றது வீடு. இங்கு காணி உரிமை பிரதான இடத்தைப் பெறுகிறது. 1897 தரிசு நிலச் சட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை காலனித்துவப் பிரித்தானிய அரசு பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும், பறிக்கப்பட்ட காணி உரிமைகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த காணி உரிமையை மீள வழங்கும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக எமது சமூகத்தில் இணைக்கின்றோம். இது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மற்றும் புரட்சிகரமான நகர்வாகும். அரிசியில் தன்னிறைவு பெற பல தசாப்தங்களாக விவசாயிகள் அனுபவித்த கடின உழைப்பக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாகும். மேலும், இந்நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு முறையான வருமானம் கிடையாது. பொருத்தமான வீடு இல்லை. இந்த மக்களுக்கு வருமான வழி மற்றும் வீட்டு உரிமை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். நகர்புர, குறைந்த வருமானமுடைய 50,000இற்கும் மேற்பட்டோருக்கு முழுமையான வீட்டுரிமை வழங்கப்படும். வெற்றிகரமான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் போது நாட்டின் அனைத்துத் தரப்பினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக வறிய மற்றும் நிர்க்கதியான மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்தோம். இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை. வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும். 2022 ஓகஸ்ட் மாதமளவில், ஜனாதிபதி நிதியம் முற்றிலும் செயலிழந்தது. 9,000இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள், பணம் இல்லாமல் குவிந்திருந்தன. ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை மேலும் 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்தன. அவை அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 4,917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. தற்போது பணம் செலுத்துவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று அல்லது ஜந்து வேலை நாட்களுக்குள் பணம் செலுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மருத்துவ உதவிகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவித் தொகைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு நாம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தை உயர்த்தினோம். 2016 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு சமாந்தரமாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அடைந்துவரும் வளர்ச்சி சமூகத்தில் பேசப்படும் தலைப்புகளில் பிரதிபலிக்கிறது. சில காலம் முன்பு மின் வெட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அப்போது, எவ்வளவு கொடுத்தாலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று நாம் மின்சாரக் கட்டணத்தைப் பற்றி பேசுகிறோம். சில காலத்திற்கு முன்பு கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 3000 ரூபாவிற்கு வாங்கப்பட்டது குறித்து பேசப்பட்டது. எரிபொருள் வரிசைகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செலவிடுவது பற்றி பேசப்பட்டது. இன்று நாம் இலங்கையில் முதலீடு செய்யும் புதிய எரிபொருள் நிறுவனங்கள் பற்றி பேசுகிறோம். காய்கறி வாங்க வழியில்லை என்று பேசிக்கொண்டனர். இன்று ஒரு கேரட்டின் விலை பற்றி பேசுகின்றனர். புத்தகம் அச்சடிக்க காகிதம் இருக்கவில்லை என்று அன்று கூறப்பட்டது. இன்று வற் வரி பற்றிப் பேசுகிறோம். ஆம். வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன. 2023 இறுதியில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1,000,029 ஆக உயர்ந்துள்ளது. இது 130 சதவீத அதிகரிப்பு. வரி வலையமைப்பு விரிவடையும் போது, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஏற்படும் வரிச்சுமை குறையும். மேலும், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைத் தொடரும்போது, பொருளாதாரம் ஸ்திரமாகும்போது, வரிச்சுமையைக் குறைப்போம். "வற்" வரியின் சதவீதத்தை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். மலையளவு கடனைச் சுமந்துகொண்டுதான் இதையெல்லாம் செய்கிறோம். கடந்த காலம் முழுவதும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்து மீள் திட்டத்தைத் தயாரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். முதல் கட்டமாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது. தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த சிக்கலான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இது நமது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமையும். மேலும் கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையின் மையமாக இது மாறிவிட்டது. IMF, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த ஆண்டு 2% முதல் 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணித்துள்ளன. 2025இல் அதை 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டில், தீயில் விழிந்திருந்த நாட்டை மீட்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்தோம். 2021 ஐ விட சில விடயங்களை 2022ஆம் ஆண்டு மேம்படுத்திக் கொண்டோம். 2022 ஐ விட 2023 எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொண்டோம். 2024. இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், 2025 இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதில் மாத்திரம் திருப்தி அடைய முடியுமா? வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. ஆனால் மறுசீரமைப்புக்குப் பிறகு நாம் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை மீளச் செலுத்த ரூபாவைப் போன்று டொலர்களும் எம்மிடம் இருக்க வேண்டும். 2023 செப்டெம்பர் மாத மளவில் மொத்தக் கடன் 91 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. இந்த கடன்களை செலுத்த நீண்ட காலம் அவசியப்படும். அதற்காக நாம் தேசிய மட்டத்தில் வருமானம் ஈட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் கடன் பிடிக்குள் சிக்கிக்கொள்வோம். கடன் மறுசீரமைப்பு காரணமாக வருடமொன்றிற்காக நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கடனில் சிக்கியிருக்க முடியாது. அதேபோல் கடன் பெறவும் முடியாது. அதேபோல் எமது வரவு செலவுக்கு இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை பாரதூரமானது. இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும். 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் தொடர்ந்து கடன் வாங்கிவந்துள்ளோம். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியுள்ளோம். ஆட்சியாளர்களும் கடன் வாங்கப் பழகினர். மக்களும் இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு ஏற்றார்போல் இசைவாக்கமடைந்தனர். அரிசி இலவசமாக வழங்கப்படும், மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும், சம்பளம் அதிகரிக்கப்படும், இலட்சக்கணக்கில் அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவை கடன் பெற்று நிறைவேற்றப்பட்டன.இந்தக் கடன் மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும். கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபடாவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. எதிர்காலம் ஒன்று இல்லாமல் போகும். எனவே கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு நமக்கான வலுவான பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இவற்றை அடைவதற்கு ஏற்றுமதி வருமானத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் விரைவாக அதிகரிப்பது இன்றியமையாதது. அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம். போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க எதிர்பார்க்கிறோம்.ஊழலை ஒழித்தல் மற்றும் சமூக நவீன மயமாக்கல் என்பனவே இந்த செயல்முறையின் முக்கிய அம்சங்களாகும். இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், முறைமையான சட்ட விதிகளால் மாத்திரமே ஊழலை ஒழிக்க முடியும் என்பதை பலர் உணரவில்லை. திருடர்கயைப் பிடியுங்கள் என்று கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகளும் தேவை. ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்கவும் கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விடயங்களும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலில் நாம் கவனம் செலுத்தும் சில முக்கிய விடயங்கள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு வலியுறுத்த விரும்புகிறேன். சுற்றுலாத்துறையை எம்மால் எளிதாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்தத் துறையில் முன்னேற்றத்திற்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்தவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வருடத்திற்கு 05 மில்லியனாக அதிகரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும். நமது நாடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் நிறைந்த நாடு. அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச தொழில்நுட்பத்தைப் பெற்று, நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்தால், வலுசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அந்நியச் செலாவணியைப் பெறலாம். பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தியில் நாம் உயர்ந்த நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஆரம்ப கட்டத் திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம் குறித்து நாம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். பயிரிடுகின்றோம். ஆனால் இன்னும் காலாவதியான முறைகளையே பின்பற்றி வருகிறோம். பல தசாப்தங்களாக எந்த விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. அடுத்த மூன்று, நான்கு போகங்களில் உலர் வலயத்தில் விவசாய நிலங்களின் உற்பத்தியை இரண்டு, மூன்று மடங்கினால் உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கான கொள்கை ரீதியிலான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இம்மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டு இப்பணிகள் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு, உலர் வலயத்தில் விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், ஈரவலயப் பகுதியில் உள்ள நிலத்தை ஏனைய வர்த்தகப் பயிர்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எழுபதுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பயனுள்ள பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தற்போது வீணாகிவிட்டன. சில நிலங்களில் உரிய பயனைப் பெறுவதில்லை. சில நிலங்கள் முற்றாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜனவசம, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் வீணாகி வருகின்றன. அது மாத்திரம் அல்ல. இந்த அரச நிறுவனங்களைப் பராமரிக்க பில்லியன் கணக்கான அரச பணம் செலவிடப்படுகிறது. இரு பக்கத்திலும் நாட்டிற்கு இழப்பு. பாரிய வீண்விரயம் இடம்பெறுகிறது. இந்த நிலங்களிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கு பயனுள்ள வேலைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த நிலங்கள் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி வணிக பயிர்ச்செய்கைக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும். அவசியம் ஏற்பட்டால், அந்த தொழில்முனைவோர் வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டைப் பெற அனுமதியும் வழங்குவோம். முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகப் போகும் நிலங்களை அந்நியச் செலாவணி ஊற்றுக்களாக மாற்றி பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். கடந்த சுதந்திர தினத்திற்கு பிரதம அதிதியாக இங்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமர், தனது நாட்டில் முன்னெடுத்த விவசாய புரட்சி குறித்த விடயங்களைக் குறிப்பிட்டார். தாய்லாந்து பாரம்பரிய முறைகளில் சிறைப்பட்டிருக்காமல் நவீன தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதால் விவசாயத்தின் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. அவற்றிலிருந்து நாமும் பாடம் கற்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது பொருளாதாரத்தை விரைவாக வலுப்படுத்த வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக பாரிய உந்து சக்தி கிடைக்கிறது. ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரத் தயங்குகின்றனர். இலங்கையில் முதலீடு செய்வது ஒரு தலைவலி. பிரச்சினை. அனுமதி பெறுவதில் பல உத்தியோபூர்வ தடைகள் உள்ளன. அது மட்டும் அல்ல. சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாரிய அளவில் கவரும் வகையில் வேலைத் திட்டங்களை நாம் தற்போது தயாரித்துள்ளோம். ஒரு எளிய செயல்முறை மூலம் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதை இது சாத்தியமாக்குகிறது. இது ஊழலை மோசடிகளைத் தடுக்கிறது. சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கான அனைத்து அனுமதிகளும் வசதிகளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒரே கூரையின் கீழ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலம் மட்டுமின்றி, மின்சாரம், நீர் வசதிகள், வீதிக் கட்டமைப்பும் மிக விரைவாக செய்து தரப்படுகிறது. பெரும்பாலான பணிகள் கணனி மூலம் செய்யப்படுவதால், சட்ட விரோத செயல்களுக்கு வாய்ப்பில்லை. இந்த அனைத்து விடயங்கள் மற்றும் சர்வதேச தரங்களின் அடிப்படையில், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படும் பலவிதமான முதலீட்டு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் இந்த ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்படும். அதேபோல் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் நாம் காலணித்துவ நாடாக இருந்தோம். அப்போது நாம் மிகவும் வறுமையான நாடாக இருந்தோம். எனவே, அத்தகைய சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி மற்றும் சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் நவீன உலகத்தை அணுகுவது சாத்தியமற்றது. இவற்றின் மூலம் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்கவும் முடியாது. அதனால் சர்வதேச அனுபவம், நடைமுறைகளின் அடிப்படையில், இரண்டு துறைகளுக்குமான புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மனித வளம் மேம்படுத்த வேண்டும். வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் பாதுகாப்பிற்காக துரித நவீனமயமாகக்கல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக கல்வி மறுசீரமைப்புக்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உலகின் எதிர்காலம் புதிய தொழில்நுட்ப அறிவின் மீதே தங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் திறன் மிக்க இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்காகவே உயர்தரத்தில் சித்திபெறும் மாணவருக்குசெயற்கைக் நுண்ணறிவுக் கல்வியை வழங்குவதற்கான கொள்கையைத் தயாரித்து வருகிறோம். அதற்கான பல அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சாதாரண தரம், உயர்தரத்தில் சித்தி பெறாத அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்லூரிகளை உருவாக்குவோம். புதிய அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத் தெரிவுடன் கூடிய புதிய சந்ததியை உருவாக்குவதற்கு அவசியமான பின்னணியை நாம் ஏற்படுத்துவோம். அதேபோல் எமது நாடு ஒரு தீவாகும். அதற்கு உகந்த வகையிலான பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களும் அதற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படையினர், இராணுவ உபகரணங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும், நாட்டில் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருகிறோம். நமது வெளிநாட்டு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதே போல் பூகோள அரசியல் நகர்வுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதார வாய்ப்புக்களைப் பெறும் வகையில், உரிய பலன்களைப் பெறும் வகையில் மறுசீரமைக்க வேண்டும். எனவே, அனைத்து நாடுகளுடனும் அணிசேராக் கொள்கையுடனும் நட்புறவு அடிப்படையிலும் வெளிநாட்டு உறவுகளைத் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நமது வெளியுறவுக் கொள்கைகள் காலோசிதமானதாக மாற்ற வேண்டும். அதேபோல், பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ள புதிய முறையிலான வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கமைய எமது வெளியுறவுக் கொள்கைகளை காலத்திற்கேற்ற வகையில் மறுசீரமைத்துக் கொள்வோம். நமது தயாரிப்புகள் வெளிநாட்டு சந்தைகளைச் சென்றடைவதற்கு அவசியமான அனுமதியை பெற்றுத் தரக்கூடிய வகையில் பொருளாதார உறவுகளை கட்டமைப்போம். அதற்காக பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட ஆரம்பித்துள்ளோம். இதற்கமைய அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முழுமையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்படும். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் வலயத்தின் பரந்துபட்ட பொருளாதார கூட்டமைப்பான RCEP இல் இணையவுள்ளோம். அதேபோல் ஐரோப்பிய சங்கத்தின் வர்த்தகத்துக்கான பொது முறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவோம். இவ்வாறு பல்வேறு துறைகளை நவீனப்படுத்துவதன் பலனாக நாட்டு மக்களின் வாழ்க்தைத் தரம் மேம்படும். நாட்டின் அனைத்துப் தரப்பினருக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில் வெற்றிகரமான திட்டத்தைச் செயல்படுத்தும் அதேநேரம் நல்லிணக்கமும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படும். நாங்கள் மற்றொரு விடயம் குறித்து கவனம் செலுத்துகிறோம். இன்று எமது பொருளாதாரம் கொழும்பு நகரையும் மேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. நாட்டின் 46 வீதமான பொருளாதாரம் மேல் மாகாணத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். மேல் மாகாணத்திற்கு வெளியே பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட நகரங்களிலும் எமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். தற்போதும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மேலும், ஒன்பது மாகாணங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியலமைப்பில் மாகாண சபை அதிகாரங்களின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவோம். தொழிற்கல்வி, விவசாயம் போன்ற துறைகளை உதாரணமாகக் கூறலாம். அதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரப் போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம், ஒன்பது மாகாணங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பு உருவாகும். எமது நாட்டின் புவியியல் அமைவிடத்தை மையப்படுத்தி உயரிய பலனை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்காக மூன்று துறைமுகங்களில் புதுவிதமான அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். அதனால் இந்து சமுத்திரத்தின் சேவை மத்தியஸ்தானமாகவும் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுவதற்கும் எதிர்பார்க்கிறோம். அதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரத்தை விசேட நிதி வலயமாக பிரகடனப்படுத்துவோம். அதற்குள் வெளிநாட்டு நிதி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உருவாக்குவோம். எமது நாட்டின் தேசிய வளம் எமது இளம் சமூகத்தினர் என்பதை அடிக்கடி நினைவுகூறுகிறேன். அந்த வளத்தைப் பாதுகப்பது எமது ஒருமித்த நோக்கமாகும். இளம் சமூகத்தின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு நிகரானதாகும். கடந்த காலங்களில் இளம் சமூனத்தினர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை தற்போதும் உள்ளது. அதனால் எமது இளம் சமூகத்தினருக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும். அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும். இவ்விடத்திலிருந்து முன்னேறிச் செல்வதற்கு புதிய வலுவான பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும். அதற்கான பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். அதற்குரிய புதிய நிறுவனத்தையும் உருவாக்க வேண்டும். அரசியல் அபிலாஷைகளை மனத்தில் வைத்துக்கொண்டு, தேர்தலில் பெறும் வாக்குகளை இலக்காகக் கொண்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அல்லது வீண்கதை பேசி எம்மால் முன்நோக்கிச் செல்ல முடியாது. மாறாக எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த மாற்றத்தைக் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. அதற்காக நீண்ட கால முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியப்படும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் 2048 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறலாம். எந்த நெருக்கடிக்கும் குறுகிய கால தீர்வுகள் இல்லை. இரண்டு நாட்களில் எந்த இலக்கையும் அடைய முடியாது. புத்த பெருமான் ஞானம் பெறுவதற்காக மிக நீண்டகாலம் ஆனது. ஞானம் பெற்ற பின்னரும் அவர் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதனைப் புரிந்து கொண்டு நாம் நிதானமாகவும் திட்டமிடலுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் புத்தரின் பிரசங்கம் ஒன்றைக் கூறினேன். புத்தரின் பிரசங்கத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துவுக்கு முந்தைய ஐநூறாம் ஆண்டுகளில் சீனாவில் வாழ்ந்த தத்துவஞானி கன்பூசியஸ் என்பவர்" உலகைக் கட்டியெழுப்ப முதலில் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முன் குடும்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். குடும்பத்தைக் கட்டியெழுப்பும் முன்னதாக எமது தனிப்பட்ட வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு முன்னதாக எமது மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார். எனவே, இந்த சபையில் உள்ள அனைவரும் முதலில் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, அவர்களுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப, நாம் அனைவரும் சரியான பாதையில் செல்ல வேண்டும். அதற்காக நம் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டால் மட்டுமே நமது பயணத்தைத் துரிதப்படுத்த முடியும். தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்துகள் பற்றி கனவு காணும் சிலர், அந்த நாட்டை விடவும் பதவிகளை அதிகமாக நேசிக்கின்றனர். அந்த பதவிகளுக்காக நாட்டுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். நாட்டையும் மக்களையும் ஏமாற்றுகின்றனர். நடைமுறையை உணராமல் கனவுப் பாதையில் செல்ல முற்படும் பட்சத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும். நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக ஒற்றுமையாக கலந்துரையாடுவோம். நாங்கள் செயல்படுத்தும் முறையை விட சிறந்த மாற்று முறைகள் இருந்தால், அவற்றைக் கூறுங்கள். அவற்றை ஆழமாகப் ஆராய்வோம். அது குறித்தும் கலந்துரையாடுவோம். அவற்றில் நாட்டுக்குச் சிறந்தென கருதப்படும் யோசனையைச் செயற்படுத்துவோம். அவ்வாறான பேச்சுக்களில் கலந்துகொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். அவ்வாறான பேச்சுக்களுக்குக்கு தயார் எனில், அந்தக் கலந்துரையாடல்களுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதானிகளையும் அழைப்பிக்க முடியும். கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் தொடர்பில் இரு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன். 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் எழுத்தாளரும் பேச்சாளருமான எலன் கெல்லர் "தனியாக நாம் சில விடயங்களை மட்டுமே செய்ய முடியும். ஒன்று பட்டால் பல விடயங்களை செய்யலாம்." 19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன ''முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்'' அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்? மீண்டும் - மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஔியாவோம். இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர். நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர். நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்? மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்? இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது. நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம். அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் - பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஔியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம். வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்....! https://www.virakesari.lk/article/175788
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
விளக்கமறியல் கைதியான கெஹலிய ரம்புக்கலவுக்கு தினமும் வெளியிலிருந்து உணவு! Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 12:24 PM மருந்து மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தினமும் வெளியிலிருந்து உணவு வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட மருந்துகள் தொடர்பிலோ அல்லது அத்தகைய மருந்துகளுக்கான கோரிக்கைகளோ இதுவரை கிடைக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருந்துகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவரால் எடுக்கப்படுவதாகவும் ஆணையாளர் கூறுகிறார். முன்னாள் அமைச்சருக்கும் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். https://www.virakesari.lk/article/175783
-
திருப்பூர்: தீண்டாமைச் சுவரா? பாதுகாப்புச் சுவரா? - பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, சர்ச்சைக்குரிய சுவரை ஏறி குதிக்கும் சிறுமி கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, "தீண்டாமைச் சுவரால் அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக" பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அது தீண்டாமைச்சுவர் அல்ல, குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர் என எதிர்தரப்பும் புகார் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை கண்டறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் ஊராட்சியின் தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர். ‘‘இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது. இதனால், தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானதால், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. குன்னத்தூர் சாலையின் ஓரத்தில் தேவேந்திரன் நகர் அமைந்திருக்கிறது. அந்த நகருக்கும் வி.ஐ.பி கார்டனுக்கும் மத்தியில், அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதி எம்எல்ஏவுமான தனபால் தொகுதி மேம்பாட்டு நிதி 8.5 லட்சம் ரூபாயில், ஊராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் ஒரு பகுதியில் தான் அந்தச்சுவரும் அமைந்திருக்கிறது. நாம் தேவேந்திரன் நகருக்குள் சென்றதும் சில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அந்தச்சுவரின் மீது ஏறிக்குதித்து வி.ஐ.பி நகருக்குள்ளும், மறுமுனையில் இருந்து தேவேந்திரன் நகருக்குள்ளும் வந்து சென்றனர். தேவேந்திரன் நகரில் சிலரிடம் சுவர் குறித்தும் சுவரை மக்கள் தாண்டிக்குதிப்பதையும் பற்றி விசாரித்தோம். படக்குறிப்பு, 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுப்பதாக குமரேசன் கூறுகிறார். ‘20 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கிறோம்’ பிபிசி தமிழிடம் பேசிய தேவேந்திரன் நகரைச்சேர்ந்த குமரேசன், ‘‘300-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் தேவேந்திரன் நகருக்குள் குடியிருக்கிறோம். வி.ஐ.பி கார்டன் பகுதியில் மனை இடங்கள் உருவாக்கப்பட்ட போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்பைச்சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6-7அடி உயரத்துக்கு இந்த தீண்டாமைச்சுவரை கட்டினர். அப்போதே நாங்கள் எதிர்த்தும் எந்தப்பயணும் இல்லை. எங்கள் பகுதியிலுள்ள அரசு ரோட்டின் அருகேயுள்ள வி.ஐ.பி கார்டன் அரசு ரோடுகளை பயன்படுத்தி 2-3 நிமிடங்களில் சேயூர் பேருந்து நிலையம் செல்ல முடியும். ஆனால், இந்தச்சுவர் அகற்றப்படாமல் உள்ளதால், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி நாங்கள் பேருந்து நிலையம் செல்கிறோம். சுவரின் அருகே அந்தப்பக்கம் இருக்கும் சேவை மையம் செல்லவும், ரேஷன் கடைக்கும் செல்லவுமே நாங்கள் பல தொலைவு நடக்க வேண்டியுள்ளது,’’ என்றார். மேலும் தொடர்ந்த அவர், ‘‘நாங்கள் பலமுறை இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். விசாரணை நடத்திய முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள், ‘உடனடியாக தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்தித்தர சேயூர் ஊராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என பதிலளித்து உள்ளனர். கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்த வேண்டுமென ஊராட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சுவர் இன்னமும் அகற்றி பாதை ஏற்படுத்தப்படவில்லை,’’ எனக்கூறினார். மேலும், நம்மிடம் முதல்வரின் தனிப்பிரிவு பதில் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு தொடர்பான ஆவணங்களை காண்பித்தார். படக்குறிப்பு, அரசு ரோட்டில் ஏன் சுவர் இருக்க வேண்டும் என மனோன்மணி கேள்வி எழுப்புகிறார். ‘அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்’ பிபிசி தமிழிடம் பேசிய மனோன்மணி, ‘‘வி.ஐ.பி நகரில் இருக்கும் மூன்று ரோடுகளை அரசிடம் ஒப்படைத்து தான் மனையிடத்தை உருவாக்கியுள்ளனர். அரசு அமைத்துள்ள இந்த மூன்று ரோடும் நாங்கள் இருக்கும் தேவேந்திரன் நகரில் எம்.எல்.ஏ நிதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோட்டுக்கு வருமாறு தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு அரசு ரோடுகளுக்கு மத்தியில் சுவர் இருக்கிறது. அரசு ரோட்டில் சுவர் ஏன் இருக்க வேண்டும்?" "எங்கள் பகுதி ரோட்டுக்கு அந்தப்பக்கம் வி.ஐ.பி கார்டன் அரசு ரோட்டின் ஓரம் சேவை மையம் உள்ளது. இதைப் பயன்படுத்தவும் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி வி.ஐ.பி கார்டனுக்குள் வந்து சேவை மையத்தை பயன்படுத்த வேண்டுமா? சுவரை முழுமையாக அகற்ற வேண்டுமென நாங்கள் கூறவில்லை, மூன்று அரசு ரோடு இணையும் பகுதியில் 5 அடிக்கு சுற்றுச்சுவரை இடித்து வழி ஏற்படுத்தித்தர அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள்,’’ என்றார் மனோன்மணி. படக்குறிப்பு, வி.ஐ.பி நகருக்குள் தான் வேலைக்கு செல்வதாக கோவிந்தராஜ் கூறுகிறார். ‘வி.ஐ.பி நகருக்குள் தான் வேலைக்கு செல்கிறோம்’ நாம் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது வி.ஐ.பி நகரில் இருந்து சுவரை ஏறிக்குதித்து வந்த கோவிந்தராஜிடம் பேசினோம். நம்மிடம் பேசிய அவர், ‘‘தேவேந்திரன் நகருக்குள் வசிக்கும் நான் வி.ஐ.பி கார்டன் பகுதிக்குள் செயல்படும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறேன். சுவரை தாண்டாமல் சாதாரண ரோட்டில் நடந்து சென்றால், கம்பெனிக்கு செல்ல 20 நிமிடங்கள் ஆகிவிடும். உணவு இடைவேளையில் சீக்கிரம் வந்து செல்ல சுவர் ஏறிக்குதிக்கிறேன். இப்படி வந்தால் நான் வீட்டுக்கு வர, 3 நிமிடங்கள் கூட ஆகாது,’’ என்றார் அவர். மேலும் தொடர்ந்த கோவிந்தராஜ், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை விட அதிக பனியன் கம்பெனிகள் உள்ளன. இங்கு எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் தான், 90 சதவீத தொழிலாளர்களாக உள்ளனர். இந்தச்சுவரை நான் மட்டுமல்ல, பெண் பணியாளர்களும் ஏறிக்குதித்து தான் கடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சுவரை ஏறிக்குதித்து தான் பேருந்து நிலையம் செல்கின்றனர்,’’ எனக்கூறினார். மேலும், தாங்கள் ஏறிக்குதிப்பதால் அந்த சுவற்றில் ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும், அதில் காலை வைத்து தான் அனைவரும் ஏறிக்குதிப்பதாக நம்மிடம் சுவற்றையும் காண்பித்தார். படக்குறிப்பு, சுவர் அருகே உள்ள அரசு சேவை மையம் ‘நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம்’ தேவேந்திரன் நகர் மக்கள் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து வி.ஐ.பி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த கோவிந்தசாமியிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ். நம்மிடம் பேசிய அவர், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் 72 மனையிடங்கள் உள்ளன. 2006-ல் இருந்து இங்கு மக்கள் மனையிடங்கள் வாங்கி வசித்து வருகின்றனர். நாங்கள் மனையிடம் வாங்கும் போது வி.ஐ.பி கார்டன் உருவாக்கிய நான்கு பேரும், இந்த நான்கு பேரிடம் விவசாய பூமியை வாங்கியுள்ள கே.சி.பழனிசாமியும் இணைந்து இந்த சுற்றுச்சுவரை பாதுகாப்புக்காக கட்டியுள்ளனர். அதுவும் கே.சி பழனிசாமி என்பவரின் இடத்தில் தான் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்தச்சுவர் எங்கள் பகுதிக்கு பாதுகாப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரோடு பழனிசாமிக்கு சொந்தமானது என அவர் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்,’’ என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த கோவிந்தசாமி, ‘‘சில நாட்களாக இந்தச்சுவரை தீண்டாமைச்சுவர் என, அரசு அதிகாரிகளும், தேவேந்திரன் நகரை சேர்ந்தவர்களும் தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது. புகார் தெரிவிக்கும் தேவேந்திரன் நகரைச் சேர்ந்தவர்களின் உறவினரான ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் கூட எங்கள் பகுதியில் வசித்து வருகிறார், குடியிருப்பு சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம், எங்களை குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பது, தீண்டாமை எனக்கூறுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்துள்ளோம்,’’ என்கிறார் அவர். படக்குறிப்பு, சுவர் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியின் உத்தரவு ‘மக்கள் நடக்கும் ரோடு எனக்கு சொந்தமான இடம்’ இந்த நிலையில், தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு சாலையே தனது சொந்த நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் கே.சி.பழனிசாமி. இது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த கே.சி.பழனிசாமி, ‘‘5.6 ஏக்கர் நிலம் ராவாளன், சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம் மற்றும் நடராஜன் ஆகியோருக்குச் சொந்தமானது. இதில், 4 ஏக்கர் நிலம் வி.ஐ.பி கார்டன் மனையிடமாக மாற்றப்பட்டது, 1.6 ஏக்கர் நிலத்தை நான் இந்த நான்கு பேரிடம் இருந்து விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். வி.ஐ.பி கார்டன் பகுதிக்கும் தேவேந்திரன் நகர் பகுதிக்கும் இடையில் இருக்கும் சுவர் மற்றும் அந்த வழித்தடம், எனக்கும் இந்த நால்வருக்கும் கூட்டாக பாத்தியப்பட்டது." "அந்த மக்களின் நலன் கருதி பெருந்தன்மையாக அந்த இடத்தில் அவர்கள் நடந்து செல்ல அனுமதித்தேன். இன்று தீண்டாமை எனக்கூறி அவர்கள் புகார் தெரிவித்துள்ளது எனக்கு மன உளைச்சலை தருகிறது. அந்த இடம் எனக்குச்சொந்தமானது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது,’’ என்றார். கே.சி.பழனிசாமி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பிப்ரவரி 5-ம் தேதி மனுவும் கொடுத்துள்ளார். படக்குறிப்பு, சுவர் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு அரசு என்ன சொல்கிறது? ‘ஒரு தரப்பு சுவரை தீண்டாமைச்சுவர் என்கிறார்கள், மறு தரப்பு பாதுகாப்புச்சுவர் என்கிறது. எது உண்மை, தீர்வு தான் என்ன’? என்ற கேள்வியை பிபிசி தமிழ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவிநாசி தாசில்தாரிடம் முன்வைத்தது. அதற்கு விளக்கமளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ‘‘இருதரப்பிடமும் மனு பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான விவகாரம் என்பதால் வருவாய்த்துறை மூலம் கலெக்டர் விசாரிக்கிறார். இடத்தை அளந்து, முழு விசாரணை முடித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தால் அதை நாங்கள் செயல்படுத்துவோம்,’’ என்றார். அரசு சாலை அமைத்துள்ளதே தனது நிலத்தில் தான் என கே.சி.பழனிசாமி தெரிவிக்கிறார். அப்போது, சாலை அமைக்கும் போது அது யார் இடம் என ஊராட்சி நிர்வாகம் விசாரிக்கவில்லையா? தனியார் இடத்தில் ஊராட்சி ரோடு அமைத்தது எப்படி? என்ற கேள்வியை பிபிசி தமிழ் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் முன்வைத்தது. அதற்கு பதிலளித்த விஜயகுமார், "ஊராட்சியினர் முறைப்படி சாலை அமைத்துள்ளனர். சாலை அமைத்த இடத்தில் 5 அடி எனக்குச் சொந்தம் என பழனிசாமி தெரிவிக்கிறார். அந்த இடத்தை அளவீடு செய்தால் உண்மை என்னவென்று தெரியவரும்," என்றார். பிபிசி தமிழிடம் விளக்கமளித்த தாசில்தார் மோகனன், ‘‘இரண்டு நாட்களில் பிரச்னை குறித்து துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருதரப்பு புகார்களையும் பெற்றுள்ளோம். விசாரணை முடித்து ஒருவேளை அது தீண்டாமைச்சுவராக இருந்தால் இடித்து அகற்றப்படும். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் விசாரணை முடிந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/cz9m0qm49gqo
-
ரயிலில் உறங்கியதால் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள்,பணத்தை இழந்த பேருவளை பெண்!
07 FEB, 2024 | 11:53 AM கணவருடன் ரயிலில் கொழும்புக்குப் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் ரயிலில் கொழும்பு நோக்கி பயணித்தபோது தான் உறங்கி விட்டதாகவும் ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது தான் விழித்துப் பார்த்தபோது தனது நகைகள், பணம் காணாமல் போயிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது குழுவைக் கைது செய்ய கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. https://www.virakesari.lk/article/175779
-
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
தென் கொரியாவை வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கிண்ண இறுதிக்கு முன்னேறியது ஜோர்தான் 07 FEB, 2024 | 10:10 AM (நெவில் அன்தனி) சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக தென் கொரியாவை வெற்றி கொண்ட ஜோர்தான், ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாட தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது. கத்தார், அல் ரய்யான், அஹ்மத் பில் அலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அஸான் அல் நய்மாத்துக்கு ஆரம்ப கோலை போடுவதற்கு வழிசமைத்த மூசா அல் தமாரி 2ஆவது கோலைப் போட, ஜோர்தான் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய ஜோர்தான் மிக வேகமாகவும் மன உறுதியுடனும் விளையாடிய தென் கொரியாவை திணறச் செய்தது. ஜோர்தானிடம் அடைந்த தோல்வியினால் 60 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஆசிய சம்பியனாகும் தென் கொரியாவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது. போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் தென் கொரியாவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஜோர்தான் இரண்டு தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகளை தென் கொரிய கோல் காப்பாளர் ஜோ ஹியொன் வூ தடுத்து நிறுத்தினார். ஆசியாவின் அதிசிறந்த வீரர் விருதை 9 தடவைகள் வென்ற சொன் ஹியங் மின் 19ஆவது நிமிடத்தில் தென் கொரியா சார்பாக போட்ட கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதால் அதனை மத்தியஸ்தர் நிராகரித்தார். அதனைத் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மாறிமாறி கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது தென் கொரியா வீரர் சோல் யங் வூ தலையால் முட்டிய பந்து கொலின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது. இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் தென் கொரிய பின்கள வீரர் ஜுங் சியங் ஹியுன்டோ பந்தை தனது கோல் காப்பாளருக்கு பின்னோக்கி நகர்த்தியபோது வேகமாக செயற்பட்ட மூசா அல் தமாரி அதனைக் கட்டுப்படுத்தி அல் நய்த்துக்கு முதலாவது கோலைப் போட வழிசமைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் பந்தைத் தடுப்பதற்கு முன்னால் நகர்ந்த தென் கொரிய கோல் காப்பாளருக்கு மேலாக பந்தை செலுத்தி யஸான் அல் நய்மத் முதல் கோலைப் போட்டார். (ஜோர்தான் 1 - 0) கடந்த 6 போட்டிகளில் ஐந்தாவது தடவையாக ஒரு கோலால் பின்னிலை அடைந்த தென் கொரியா, மாற்று வீரர்களை களம் இறக்கி எதிர்த்தாடலை பலப்படுத்தியது. ஆனால், மாற்று வீரர்களில் ஒருவரான சொ கே சுங் 60ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்த எடுத்த முயற்சி நூலிழையில் தவறியது. அது தென் கோரியாவுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுக்க, ஆறு நிமிடங்கள் கழித்து அற்புதமாக பந்தை நகர்த்திச் சென்ற மூசா அல் தமாரி தனது அணியின் 2ஆவது கோலை புகுத்தினார். அதன் பின்னர் தென் கொரியா கோல் போடுவதற்கு எடுத்த கடும் முயற்சிகளை ஜொர்தான் தடுத்து இறுதியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/175765
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை வீழ்த்தி 9ஆவது தடவையாக இறுதிக்குள் நுழைந்தது இந்தியா Published By: VISHNU 07 FEB, 2024 | 01:37 AM (நெவில் அன்தனி) பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா, 9ஆவது தடவையாக 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 248 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது. 15ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தனது முன்னைய 5 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடி இலகுவான வெற்றிகளை ஈட்டிய இந்தியா, அரை இறுதியில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. 12ஆவது ஓவரில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் 4ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் ஓட்டம் பெறாமலும் இதற்கு முன்னர் 2 சதங்களைக் குவித்த முஷீர் கான் 4 ஓட்டங்களுடனும் அர்ஷின் குல்கர்னி 12 ஓட்டங்களுடனும் ப்ரியன்ஷு மோலியா 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். முதல் விக்கெட்டை கிவேனா மஃபாக்கா வீழ்த்த அடுத்த 3 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லூஸ் கைப்பற்றினார். முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் இந்தியாவின் வெற்றி நடைக்கு தென் ஆபிரிக்கா முற்றுப் புள்ளி வைத்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அணித் தலைவர் சாஹரனும் சச்சின் தாஸும் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 171 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். அவர்களது இணைப்பாட்டம் இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக 2019இல் குல்னாவில் நடைபெற்ற இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் தௌஹித் ரிதோய், ஷமிம் ஹொசெய்ன ஆகிய இருவரும் பகிர்ந்த 161 ஓட்டங்களே 5ஆவது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சச்சின் தாஸ் 95 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 96 ஓட்டங்களைப் பெற்று மஃபாக்காவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததும் இந்தியா மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியது. சச்சின் தாஸ் உட்பட மேலும் இருவர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (227 - 7 விக்.) எனினும் உதய் சாஹரன் 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தை அவசரமாக எடுக்க முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அவர் 124 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளை மாத்திரம் அடித்திருந்தார். எனினும் அடுத்த பந்தில் ராஜ் லிம்பானி பவுண்டறி ஒன்றை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய 18 வயதை அண்மிக்கும் கிவேனா மஃபாக்கா தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 6 போட்டிகளில் 21ஆக உயர்த்திக்கொண்டார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ட்ரைஸ்டன் லூஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவரகளில் 7 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ஸ்டீவ் ஸ்டோக் 17 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். அடுத்த களம் புகுந்த டேவிட் டீஜர் 2ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்கள் பகிரப்படுவதற்கு உதவிய போதிலும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், ரிச்சர்ட் செலெட்ஸ்வேன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கையை 118 ஓட்டங்களாக உயர்த்தினர். அதுவரை சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரே ப்ரிட்டோரியஸ் 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து செலெட்ஸ்வேனும் ஒலிவர் வைட்ஹெட்டும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது வைட்ஹெட் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். டெவன் மராயஸ் 3 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டம் இழக்க தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அணித் தலைவர் யுவான் ஜேம்ஸுடன் மேலும் ஒரு இணைப்பாட்டத்தை செலெட்ஸ்வேன் ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிகவும் அவசியமான செலெட்ஸ்வேனின் விக்கெட்டை திவாரி வீழ்த்தினார். செலெட்ஸ்வேன் 100 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து யுவான் ஜேம்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (224 - 7 விக்.) ட்ரைஸ்டன் லூஸ் 12 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 23 ஓட்டங்களுடனும் ரைலி நோட்டன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஷீர் கான் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உதய் சாஹரன். https://www.virakesari.lk/article/175757
-
அனுமதி மறுக்கப்பட்ட சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள்?
Published By: RAJEEBAN 07 FEB, 2024 | 06:15 AM இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன. சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான தேர்ட் இன்ஸ்டியுட் ஒவ் ஓசோனோலஜியின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் மாலைதீவை நோக்கி சென்றது எனினும் தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் - இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/175760
-
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மருத்துவமனைகளுக்கு மின்சாரத்தை வழங்க ஜப்பானிடமிருந்து 2.8 பில்லியன் ரூபா நிதியுதவி
Published By: VISHNU 07 FEB, 2024 | 12:59 AM (எம்.மனோசித்ரா) புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாவனை மூலம் இலங்கை மருத்துவமனைகளில் வலுசக்தி வழங்கலை உறுதிப்படுத்தும் கருத்திட்டத்துக்கான ஜப்பான் உதவவுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனை, குருநாகல் போதனா மருத்துவமனை மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுதல் மூலம் மின்சார வசதிகளை வழங்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஊடாக 1230 மில்லியன் ஜப்பானிய யென் கருத்திட்ட உதவியாக (ஏறத்தாழ 2.8 பில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. சுகாதார துறையில் புதுப்பிக்கத்தக்கப்படாத வலுசக்தி பாவனையைக் குறைத்தல், சுகாதார சேவைகள் பிரிவின் ஒட்டுமொத்த வினைத்திறனை அதிகரித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துதல் இக்கருத்திட்டத்தின் நோக்கமாக அமைகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துதல் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/175754
-
யாழில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு ; மூவர் கைது
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 10:59 AM யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று புதன்கிழமை (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். அதன்போது, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனால் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்றமையால், சாரதி வாகனத்தை நிறுத்தவில்லை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேவேளை, டிப்பர் வாகன சாரதி, உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175769
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் கூற்றை மறுக்கும் அமைச்சர் பந்துல! Published By: VISHNU 06 FEB, 2024 | 11:14 PM கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளதனை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கஞ்சா செடி பயிரிடுவதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது வேறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அமைச்சரவைக்கு எந்த அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175750
-
மத்திய அரசு vs தென் மாநிலங்கள்: டெல்லியில் போராட தயாராகும் கேரள, கர்நாடக முதல்வர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 பிப்ரவரி 2024 இந்தியாவின் தலைநகரான டெல்லி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுவரை பார்த்திடாத ஒன்றை பார்க்க இருக்கிறது. நாளை(புதன்கிழமை) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் இந்தியாவில் உள்ள கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கு பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். அதேவேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இடது ஜனநாயக முன்னணியின் எம்.பி.க்கள் இணைந்து அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க கோரி போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆளும் திமுக,வினர் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில், மூன்று மாநிலங்களின் கோரிக்கைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. சமூக ஊடகங்களில், ‘என் வரி என் உரிமை’ என்ற ஹேஷ்டேக்கில் பிரச்சாரம் நடக்கிறது. அதனை, கர்நாடக அரசு எடுத்துக் கொண்டு, செய்தித்தாள்களில் ‘என் வரி என் உரிமை’ என முழுப் பக்க விளம்பரம் செய்து பிரசாரம் செய்துள்ளது. நாட்டில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும் மாநிலங்களிடம் இருந்து எடுத்து, நிதி ரீதியாகப் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது என இந்த மாநிலங்கள் கூறவில்லை. மாறாக, மத்திய அரசின் நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்கு மாற்றும்போது, சிறந்த மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்ற வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார்கள். “மத்திய அரசின் பட்ஜெட் அளவு அதிகரிக்கும் போது, அதிகாரப் பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கான மானியங்களும் அதிகரிக்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை. வட இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மத்திய அரசுக்கு வழங்கிய 100 ரூபாயில் கர்நாடகாவுக்கு ரூ.12 அல்லது ரூ.13 மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. தங்க முட்டையைப் பெற, கோழியைக் கொல்கிறது மத்திய அரசு. ஆனால், அப்படி செய்யக் கூடாது,'' என, சித்தராமையா சுருக்கமாக கூறினார். வட மாநிலங்களை விட தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் நிதி ரீதியாகவும் மனித வள குறியீடுகளிலும் சிறப்பாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. “இந்தப் போராட்டம் அரசியல் அல்ல. இது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான போட்டி அல்ல. இது மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பது.” என்றார் சித்தராமையா. நிதிப் பங்கீட்டில் என்ன பிரச்னை? நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான விதிமுறைகள் தங்களுக்கு போதுமான நிதி கிடைக்காத வகையில் 14 மற்றும் 15 வது நிதிக் கமிஷன்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்கள் கருதுகின்றன. வருமான வரி, கார்பரேட் வரி, ஜிஎஸ்டி, டீசல், பெட்ரோல், செஸ் மற்றும் கூடுதல் கட்டணம்(surcharge) போன்ற வரிகளை மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக வசூலிக்கும் தொகை அதிகமாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு. இரண்டு நிதிக் கமிஷன்களுக்கு இடையில், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகா பெறும் நிதியின் பங்கு 4.71 சதவீதத்திலிருந்து 3.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலத்தில், கர்நாடக மாநிலம் முறையே 42 சதவீத வரி மற்றும் 41 சதவீத வரிகளை வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு அதிக வரி (4,34,000 ரூபாய்) செலுத்துவதில் நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. நஷ்டத்தைப் பொறுத்தவரை, இந்த நிதியாண்டில் 62,098 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக கர்நாடகா மேற்கோள் காட்டியுள்ளது. 2017-18ல் கர்நாடகாவுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1,87,000 கோடி. கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் திங்கள்கிழமை சட்டப் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர்,“மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரியில், 10 வது நிதிக்குழு காலத்தில் கேரளாவின் பங்கு 3.87 சதவீதமாக இருந்தது. இது 14வது நிதிக்குழுவில் 2.5 சதவீதமாகவும், 15வது நிதிக்குழுவில் 1.925 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதிக தனிநபர் வருமானம் மற்றும் மக்களின் தொகை வளர்ச்சியை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக கேரள மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள்,” என அவர் சட்டமன்றத்தில் பேசினார். அந்தந்த மாநிலங்கள் வசூலிக்கும் ஒவ்வொரு ரூ.65க்கும் மத்திய அரசு ரூ.35 வழங்குவதாக பாலகோபால் கூறினார். ஆனால் கேரளாவின் சொந்த வரி வசூலான ரூ.79க்கு எதிராக மத்திய அரசு ரூ.21 மட்டுமே வழங்குகிறது. "அது ரூ.100ல் ரூ.21 மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு. உ.பி (உத்தரப்பிரதேசம்) மத்திய அரசிடமிருந்து ரூ.100க்கு ரூ.46 பெறுகிறது. பீகாரில் ரூ.100க்கு ரூ.70 கிடைக்கிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களை விட சிறந்த ஆதாரம் தேவையா?’’ என அவர் சட்டமன்றத்தில் கேட்டார். நிதிப் பங்கீடு மட்டும்தான் பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கர்நாடகாவில் உள்ள 234 தாலுகாக்களில் 130 தாலுகாக்களில் கடந்த ஆண்டு வறட்சி நிலவுவதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக் குழு ஒன்று ஆய்வு செய்து அறிக்கை சர்ப்பித்தது. அந்த அறிக்கையின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார். ஆனால், அந்தக் குழு எந்தக் கூட்டத்தையும் நடத்தவே இல்லை. “நாங்கள் ரூ 35,000 கோடி நஷ்டமடைந்திருந்ததால், 2023 செப்டம்பரில் ரூ 17, 901 கோடி கேட்டிருந்தோம்.ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை,” என்றார் சித்தராமையா. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசும் இழப்பீட்டுக் காலத்தை நீட்டிக்க மறுத்து வருகிறது. சுருக்கமாக, மாநில அரசின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களை திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சி முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் மாநிலங்களின் திறனை முடக்க வேண்டும் என அவர்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதை ஒத்த கருத்துள்ள முற்போக்கு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்,”என்றார். 15 வது நிதிக்குழு சில மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, ரூ 5,495 கோடி ரூபாயை மானியாக வழங்க பரிந்துரைத்ததாக சித்தராமையா சுட்டிக்காட்டினார். “இது மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நிராகரித்துவிட்டார்,” என்றார். இந்த நிலையில், திங்கட்கிழமை மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “யார் விருப்பத்திற்கு ஏற்றதுபோல வரிப் பகிர்வு முறையை மாற்ற முடியாது,” என்று கூறினார். கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு, அந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி ஆயோக் சிஇஓ வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய சித்தராமையா, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மட்டுப்படுத்த நினைத்த பிரதமர் மோதியின் முயற்சிகள் குறித்தும் பேசினார். “சிறப்பு மானியமாக ரூ 5,495 கோடி வழங்க வேண்டும் என நிதிக்குழு பரிந்துரைத்தும், அதனை நிராகரித்துள்ளனர். குறைந்து வரும் நிதி உதவி, மேல் பத்ரா பாசனத்திட்டத்திற்கான ரூ 5,300 கோடி நிதி உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இவை அனைத்தும், நிதி அயோக்கின் சுயாட்சி குறித்த கேள்விகளை எழுப்புகிறது,” என சித்தராமையா சுட்டிக்காட்டினார். பிரச்னை எங்கு இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES நிதி ஆயோக் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் இரண்டு கொள்கைகளில் பிரச்னை உள்ளது. மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒரு கூறு. கிடைமட்ட அதிகாரப் பகிர்வும் உள்ளது. பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சூத்திரம் தொலைவு சூத்திரம்(Distance Formula) என்று அழைக்கப்படுகிறது. நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடீஸ்(NIAS) கல்லூரியின் சமூக அறிவியல் துறை பேராசிியர் நரேந்தர் பானி இப்பிரச்னை குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர்,“இந்த முறை தொடர வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி. அதற்கு சித்தராமையா சவால் விடுகிறார். அவர் அனைத்து தென் மாநிலங்கள் என்று சொல்கிறார். இதில், குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான வேலையும் மற்றொரு அம்சம். நீங்கள் அவர்களை குறிவைத்தால், அவர்களின் நிலை இன்னும் மோசமடையும். நிதி பகர்விற்கு நிதி ஆயோக் ஒரு சூத்திரத்தை உருவாக்கியுள்ளது. இப்போது, இந்தப் பிரச்னைக்கு பிறகு, நிதி ஆயோக் ஒரு புதிய சூத்திரத்தை உருவாக்குமா இல்லையா என்பது தான் பிரச்னை,” என்றார் நரேந்தர். எவ்வாறாகினும், நிதிக்குழு உறுப்பினர்களை மத்திய அரசு தான் தேர்ந்தெடுக்கிறது, என்றார் நரேந்தர் பானி. திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் டி.நாராயணா பிபிசி ஹிந்தியிடம் பேசினார். அப்போது அவர்,“நிதி ஆணையங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்த விஷயங்களில் ஒன்று இடப்பெயர்வு. அதன் சொந்தக் கொள்கையின்படி, புலம்பெயர்ந்தோருக்கு ஒப்பிடத்தக்க சேவைகளை வழங்குவதற்கு மாநிலங்களை தயார்படுத்துகிறார்கள் என்றால், அதற்கான பணத்தை புலம்பெயர்ந்து செல்லும் மாநிலத்திற்கு அவர்கள் கொடுக்க வேண்டாமா?’’ எனக் கேட்டார்., கடந்த வாரம் அமைக்கப்பட்ட 16வது நிதிக் கமிஷன் எதிர்கொள்ள இருக்கும் "கடுமையான பிரச்சனையை'' அவர் சுட்டிக்காட்டுகிறார். "கிட்டத்தட்ட 15 முதல் 16 ஆண்டுகளாக எங்களிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லை. இடப்பெயர்வு மிக அதிகமாக இருந்த காலகட்டமும் இதுவே. தென் மாநிலங்களில், தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, நிதி ஆயோக் இதை ஏற்க மறுத்துவிட்டது, மத்திய அரசும் இதனை ஏற்கவில்லை,” என்றார் நாராயணன். தொடர்ந்து பேசிய அவர்,“புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணக்கிடாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் தனது சொந்த மக்களுக்கு மத்திய அரசு எந்த நல்லதையும் செய்யவில்லை என்பதை தென்மாநிலங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். போராட்டம் நடத்துவதை விட, இப்படி முன்னெடுப்பதே சிறந்ததாக இருக்கும். நிதி ஆயோக்கின் முடிவுகள் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்,”’ “புலம்பெயர்ந்தோர் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்பதை மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மாநிலங்கள் அவர்களுக்கு வீடுகளை கட்ட வேண்டும், மத்திய அரசை அதற்கான செலவை ஏற்கச் சொல்ல வேண்டும், “ என்றார் முனைவர் நாராயணா. முனைவர் நாராயணா தற்போது பெங்களூரு எம்.எஸ்.ராமையா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் தலைவராக உள்ளார். தென் மாநிலங்களின் கோபம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் கேரளா மக்களுக்கு வீடுகள் கட்டத் தொடங்கியபோது, அது ஒரு விசித்திரமான பிரச்னையை எதிர்கொண்டது. வீடற்றவர்களுக்கு கேரள அரசு கட்டிக்கொடுக்கும் வீடுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (பிஎம்ஏஒய்) `பிராண்டிங் லோகோக்களை’ ஒட்டுமாறு கேரளாவிடம் கேட்டது. "வீடுகளில் பிஎம்ஏஒய் லோகோ மற்றும் பிரதமரின் புகைப்படம் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த நாங்கள் மறுத்துவிட்டோம், ஏனெனில் இது குடிமக்கள் மனித கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுகிறது,'' என கேரள உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கான முழுத் தொகைக்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதுதான் விஷயம். கடந்த ஏழு ஆண்டுகளில், எங்கள் அரசு 17,103 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, மேலும் மத்திய அரசு 2,083 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. தெளிவாக, மத்திய அரசின் பங்கு மாநிலத்தின் பங்கை விட மிகக் குறைவாக இருப்பதை காணலாம்’’ என்றார் ராஜேஷ். லோகோ ஒட்ட வேண்டும் என்று கூறிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, ராஜேஷ், நவம்பர் 2023 இல் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு ஒரு கடிதம் எழுதினார். "அந்த வீடுகளில் வேறு ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை எழுதவில்லை. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை," என்றார் ராஜேஷ். https://www.bbc.com/tamil/articles/cy7w8pz39e8o
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கஞ்சாசெடியை பயிரிட அமைச்சரவை அனுமதி Published By: VISHNU 05 FEB, 2024 | 11:11 PM ஏற்றுமதி நோக்கத்திற்காக கஞ்சாசெடியை பயிரிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அவர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175662