Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யுக்ரேனில் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா - போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா? பட மூலாதாரம்,ALESSANDRO GUERRA/EPA-EFE/REX/SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகீயவ் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய - யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி. இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் அவர் பின்பற்றினார். இந்த போரில் ரஷ்யாவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் யுக்ரேனிய வீரர்கள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு யுக்ரேனின் எதிர் தாக்குதல் தோல்விக்கு பிறகு, இந்த போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி இது. அவ்திவ்கா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் யுக்ரைன் அதை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது. எனவே, இந்த நீண்ட மோதலில் அவ்திவ்காவின் வீழ்ச்சி எதை உணர்த்துகிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு பெரியது. மாபெரும் சக்தி கொண்ட நாட்டுடன் நீளும் போராட்டம் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான போர் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் உள்ள வலிமையின் வேற்றுமை வெளிப்படையாகவே தெரிய தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகம். இந்த போரில் ரஷ்யா ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ள போதிலும், புதிய வீரர்களை களத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தனது பலத்தை காட்டியுள்ளது. யுக்ரேனிய ராணுவம் இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், அது ரஷ்ய இழப்பை விட குறைவே ஆகும். யுக்ரேனின் முன்பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் நடந்தது போலவே, முழுமையாக அழிக்கப்பட்ட இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளது ரஷ்யா. இங்கு நிறுத்தப்பட்டிருந்த யுக்ரேனின் 3வது தாக்குதல் படைப்பிரிவு, தாங்கள் அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்படையினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யா தனது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படைகளை அங்கு நிறுத்தியிருப்பதாகவும், யுக்ரேனிய ராணுவ இலக்குகள் மீது நாளொன்றுக்கு 60 குண்டுகள் வரை வீசியதாகவும் நம்பப்படுகிறது. கடந்த முறை யுக்ரேனிய நகரமான பாக்முத் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது, ஜெனரல் சிர்ஸ்கி விமர்சிக்கப்பட்டார். காரணம் அங்கு நீண்டகாலம் பதவியில் இருந்தவர் அவரே. மேலும், தேவையில்லாத இழப்புகளை ஏற்படுத்தி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த அனுபவம் அவரது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல தெரிகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த ஆண்டு யுக்ரேனிய நகரமான பக்முட்டை ரஷ்யா கைப்பற்றியது போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா? தற்போதைய ரஷ்யாவின் முன்னேற்றம் ஒன்றும் ஒரே இரவில் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, அவ்திவ்காவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா. இந்த தொழில் நகரத்தின் வலுவான தளங்கள் மற்றும் பாதுகாப்பின் மூலம் யுக்ரேனிய வீரர்கள் அங்கிருந்தவாறே ரஷ்யா மீது குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இந்த நகரமே ரஷ்ய வீரர்களின் சடலமயமாக மாறிப்போனது. ரஷ்யாவின் கவச வாகனத்தையும் அவர்கள் அழித்துவிட்டனர். ஆனால், ரஷ்யாவின் முதல் தாக்குதலுக்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக பலப்படுத்தப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு தளத்திற்குள் தற்போது ரஷ்யா முன்னேறி வந்துவிட்டது. ஆனால் ரஷ்யா மிக சமீபத்தில் உருவாக்கிய எந்த தளத்திற்குள்ளும் ஊடுருவ முடியாமல் இருப்பது யுக்ரேனுக்கு ஒரு பின்னடைவே. "ரஷ்யாவால் தந்திரத்தின் மூலம் மட்டுமே இலக்குகளை அடைய முடியும், ஆனால் உத்தியைக் கொண்டு அடைய முடியாது" என்கிறார் யுக்ரேனிய இராணுவத்தின் 3வது தாக்குதல் படைப்பிரிவின் துணைத் தளபதி மேஜர் ரோடியன் குத்ரியாஷோவ், போன் வழியாக பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது வீரர்கள் ஏழுக்கு-ஒன்று என்ற கணக்கில் குறைவாக இருக்கின்றனர். இது ஏதோ நாங்கள் இரண்டு எதிரிகளுடன் சண்டையிடுவது போல் இருக்கிறது” என்று கூறுகிறார். அவர்கள் போக்ரோவ்ஸ்க் மற்றும் கோஸ்ட்யான்ட்னிவ்கா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்யர்களால் நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. ரஷ்யா அவ்திவ்காவை கைப்பற்றியது, கிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டொனெட்ஸ்க் நகரத்தின் மீதான அவர்களின் அழுத்தத்தை குறைக்கும். இந்த நகரத்தை 2014 இல் ரஷ்யா கைப்பற்றியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கத்திய உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது. ரஷ்ய-யுக்ரேன் போரின் தற்போதைய நிலை என்ன? யுக்ரைன் பின்வாங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. குறிப்பாக 2022 கோடைகாலத்தில் நவீன ஆயுதங்களோடு கூடிய பெரிய எண்ணிக்கையிலான ரஷ்ய படை, லிசிசான்ஸ்க் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் பகுதிகளை சுற்றிவளைத்தது. அந்த சமயத்தில் யுக்ரேனால் எதுவுமே செய்ய முடியவில்லை. இருப்பினும் மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் தனது ராணுவத்தின் மூலம் விரைவிலேயே நிலைமையை மாற்றியது. அதே ஆண்டில் கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து விடுவித்தது யுக்ரேனிய ராணுவம். ஆனால், தற்போது இந்த போர் வேறு நிலையை அடைந்துள்ளது. இந்த போர்க்களத்தின் மீது உலக அரசியல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள் வழஙகும் உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது. யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் அமெரிக்கா முதன்மையானதாக இருக்கிறது. அதற்கு காரணம் அதனால் மட்டுமே, வேகமாக அதிக அளவிலான ஆயுதங்களை வழங்க முடியும். யுக்ரேனுக்கு வழங்குவதற்கான 95 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அமெரிக்கா இன்னமும் வழங்கவில்லை. மற்ற நட்பு நாடுகளும் இந்த இடைவெளியை நிரப்ப போராடி வருகின்றன. எனவே யுக்ரேன் தனது ஆயுதங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்து விட்டது. ஆனால் யுக்ரேன் எதிர்பார்த்தபடி, அவ்திவ்கா மட்டுமே பின்வாங்கும் இடமாக இருக்காது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒட்டுமொத்த யுக்ரேனும் தேவைப்படுகிறது. அதை அவர் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பு மேற்கத்திய ஒற்றுமையின் மூலம் தகர்ந்தும் போகலாம் அல்லது அசாதாரண திறமையை கொண்டுள்ள போதிலும் யுக்ரேன் இந்த போரில் வெற்றி பெறாது என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தலாம் என்பதே தற்போதைய ரஷ்ய-யுக்ரேன் போரின் நிலை. https://www.bbc.com/tamil/articles/crgrpddmlk7o
  2. அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது - பிரதமர் Published By: VISHNU 18 FEB, 2024 | 06:25 PM (எம்.வை.எம்.சியாம்) அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் இதன்போது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கொண்டு நடத்தல் தொடர்பான பல விடயங்களை முன்வைத்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்த அரச வங்கிகள் தேசிய வளமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்துக் கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் ஓரளவு மீண்டிருப்பதால் முக்கியமான வங்கிகளை எப்படியேனும் பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இன்னும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். பல பாரிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தான் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுத்ததால் தான் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதை தனியார் நிறுவனத்திற்கு விற்பதுதான் ஒரே வழி என்பவையெல்லாம் புனையப்பட்ட கதைகள். இது போன்ற கதைகளில் நாம் ஏமாறாமல் இந்த மூன்று வங்கிகளிலும் சிறப்பான முறையில் தலையிட வேண்டும். பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. 3500 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் எந்த விதத்திலும் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படமாட்டாது. இது அரசாங்கத்தின் முடிவு. அந்தப் பகுதிகள் படிப்படியாக வனப் பாதுகாப்பிற்கு விடுவிக்கப்படும். தற்போது நாம் இணங்கியுள்ள சர்வதேச காலநிலை மாற்ற உடன்படிக்கையின் படி மூவாயிரம் அடிக்கு மேல் உள்ள தோட்டங்களைக் குடியிருப்பாளர்கள் இன்றியே வைத்திருக்க முடியும். இது போன்ற உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு என்ன செய்வது என்று இந்த நாட்களில் கலந்துரையாடப்படுகிறது. பெருந் தோட்டங்களில் 143,000 வீட்டு உரிமையாளர்களே உள்ளனர். ஏனையவர்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/176697
  3. இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால், ஜடேஜா, சர்ஃபராஸ் கான் - பதிவான சாதனைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 40 நிமிடங்களுக்கு முன்னர் ராஜ்கோட் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது, கேப்டன் ரோகித் சர்மா சர்ஃபராஸ் அகமதுவை கட்டிப்பிடிக்க, ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா பந்தை முத்தமிட்டார். அதே பந்தில், தனது சுழற்பந்து வீச்சால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் சாதனை படைத்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 33 ரன்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிய நேரத்தில், அவர் அணிக்காக களத்தில் நிலைத்து ஆடினார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அவர் நான்காவது டெஸ்ட் சதத்தையும் அடித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்சில் 112 ரன்கள் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை பாதி ஆட்டக்காரர்களை பெவிலியன் திருப்பி அனுப்பிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா தொடர்ந்து நான்கு நாட்கள் வலுவான நிலையில் இருந்தது. இதில், 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐந்து டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு எதிராக 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவைத் தவிர குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நான்காவது நாளில் நடந்தது என்ன? முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களையும், இங்கிலாந்து 319 ரன்களையும் எடுத்தன. 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட் நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாச, ஷுப்மான் கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார். தனது வாழ்க்கையில் முதல் சர்வதேச டெஸ்டை விளையாடிய சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியால் எந்த நிலையிலும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போட்டி கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு முன்னால் மிகப்பெரிய இலக்கு இருந்தபோதிலும், ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்ததால், இந்தப் போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்க்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்களையும், பென் ஃபோக்ஸ் மற்றும் டொம் ஹார்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களையும், ஜேக் கிராலி 11 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை சுருட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஜடேஜா என்ன சொன்னார்? போட்டி முடிந்ததும், அவரது பேட்டிங் குறித்து ஜடேஜாவிடம் கேட்டபோது, "நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். நான் ரோஹித்துடன் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தேன். நான் எனது திறமையை நம்பி ஷாட்களை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியிருந்தது." என்றார். ஆடுகளம் குறித்து ஜடேஜா கூறுகையில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் போது ரன்களை எடுப்பது எளிது. படிப்படியாக அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும்" என்றார். "ரோகித் டாஸ் வென்றபோது, நாங்கள் என்ன விரும்பினோமோ அதனைப் பெற்றோம். இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியாது, இதற்காக நீங்கள் களத்தில் அதிகம் உழைக்க வேண்டும். பந்தை நீங்கள் சரியாக பிட்ச் செய்ய வேண்டும், நீங்கள் கடினமாக உழைத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்." என்று ஜடேஜா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸுக்கு முன் ஜடேஜா ஏன் அனுப்பப்பட்டார்? இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி டாஸ் வென்றது. ஆனால் அதன் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 33 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்படிப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தார். பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருந்த சர்பராஸ் கானுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்திற்கு அனுப்பப்பட்டார். இதற்குப் பின்னால் உள்ள காரணம் நிச்சயமாக அவரது அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது மற்றும் சர்ஃபராஸ் தனது முதல் போட்டியிலேயே இதுபோன்ற அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ரஜத் படிதார் தனது அறிமுகப் போட்டியில் பூஜ்ஜியத்திற்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தார். போட்டி முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஜடேஜாவுக்கு அனுபவம் அதிகம், அதிக ரன்கள் எடுத்தது, லெப்ட்-ரைட் கூட்டணி வேண்டும் என்பதால் அவரை முதலில் அனுப்பினோம். சர்ஃபராஸ் இந்த போட்டியில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார். எதிர்காலத்திலும் இது இப்படியே தொடருமா? இது குறித்து ரோகித் கூறுகையில், "இது நீண்ட காலத்துக்கானது அல்ல. தேவைக்கு ஏற்ப, அன்றைய தினம், அணி மற்றும் பந்துவீச்சை பார்த்து, மதிப்பீடு செய்து முடிவெடுப்போம்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES முத்திரை பதித்த ஜெய்ஸ்வால் இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, அவர் சில சாதனைகளை செய்தார். இது மிகவும் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்காக தனது முதல் டெஸ்டில் விளையாடிய யஷஸ்வியின் பேட் தொடர்ந்து களத்தில் ரன்களை குவித்து வருகிறது. யஷஸ்வி இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் 71.75 சராசரியில் 861 ரன்கள் எடுத்துள்ளார். சதத்துடன் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்தியாவின் மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த இன்னிங்ஸில் யஷஸ்வி 12 சிக்சர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் எந்த இன்னிங்ஸிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை இதுவாகும். யஷஸ்வியின் மூன்று சதங்களும் 150க்கும் அதிகமான ஸ்கோராகும். முதல் டெஸ்டில் 171 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 209 ரன்களும், ஏழாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 214 ரன்களும் அவர் எடுத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சாதனை படைத்த ஜெய்ஸ்வால் என்ன சொன்னார்? போட்டிக்கு பிறகு பேசிய அவர், "முதல் இன்னிங்சில் ரோகித் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. மேலும் அனைத்து சீனியர்களும் என்னிடம் கூறியது போல், நீங்கள் செட் ஆனவுடன், பெரிய ஸ்கோரை அடிக்க முயல வேண்டும்" என்றார். "எனவே நான் ஆடுகளத்தில் இறங்கும் போதெல்லாம், நான் பெரிய இன்னிங்ஸ் விளையாட முயற்சிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் ஒருமுறை செட்டில் ஆனவுடன் என்னால் முடிந்தவரை விளையாட முயற்சிக்கிறேன்." தொடக்கத்தில், யஷஸ்வி அதிக பந்துகளில் விளையாடி குறைவான ரன்களையே எடுத்திருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஆரம்பத்தில் ரன்களை எடுப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு செஷன் மற்றும் பந்துவீச்சாளர் மீது கவனம் செலுத்தினேன். ஆடுகளத்தில் நன்றாக செட்டில் ஆனதும் பந்துகளை எங்கே அடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வைத்திருந்தேன்." என்றார். சதம் அடித்ததும் காயத்தால் களத்தில் இருந்து வெளியேறியது குறித்து, அவர் கூறுகையில், "சிறிது நேரம் பேட்டிங் செய்த பிறகு, என் முதுகு சரியில்லை. நான் வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் என் முதுகில் இருந்த பிரச்னை மிகவும் பெரியது. நான் செல்ல வேண்டியிருந்தது. " என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸ் குறித்து கேப்டன் ரோகித் கூறியது என்ன? போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “சர்ஃபராஸ் பேட்டிங் செய்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் அவர் அற்புதமாக செயல்பட்டார் என்று அனைத்து மும்பை வீரர்களும் கூறினார்கள். அவர் பெரிய ரன்கள் எடுத்தார்." என்றார். "அவர் 300 ரன்கள், இரட்டை சதம் அடித்துள்ளார். அடிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உள்ளது. நான்கைந்து வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகிறார். அறிமுக வீரர்கள் பதற்றமாக இருப்பது வழக்கம். ஆனால் சர்ஃபராஸ் கான் பதற்றமாக இருந்ததாக நான் உணரவில்லை. அவர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். பார்க்க நன்றாக இருந்தது." என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்து ரோகித் என்ன சொன்னார்? போட்டி முடிந்ததும், இந்திய வீரர் ரோகித்திடம் இந்த ஆட்டம் குறித்து கேட்டபோது, "டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்து நாட்கள் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இங்கிலாந்து சிறப்பாக விளையாடியதால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. எங்களது பந்துவீச்சு வலுவாக உள்ளது. மறுநாள் நாங்கள் திரும்பி வந்த விதம் ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்." என்றார். போட்டியின் திருப்புமுனைகள் குறித்து பேசிய ரோஹித், "பல திருப்பு முனைகள் இருந்தன. டாஸ் வெல்வது நல்லது, ஏனென்றால் அதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். பந்துவீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்தனர். ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் ஆகிய இரண்டு இளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்றி, எங்கள் வேலை பாதி முடிந்தது. அந்த முன்னிலையை எங்களுக்குக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குத் தேவை. நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்." என்று கூறினார். ஜெய்ஸ்வால் குறித்து கேப்டன் ரோகித் கூறுகையில், "நான் அவருடன் இங்கும், விசாகப்பட்டினத்திலும் நிறைய பேசியுள்ளேன். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அவர் தனது கேரியரை சிறப்பாக தொடங்கினார், அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிகிறார்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தொடரை வெல்ல விரும்புகிறேன்: பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என பின்தங்கியிருந்தாலும், தனது அணி வலுவாக மீண்டு வந்து தொடரை வெல்ல விரும்புவதாக அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகிறார். தொடரில் 1-2 என பின்தங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். இன்னிங்ஸ் முழுவதும் நாங்கள் அப்படித்தான் விளையாட விரும்பினோம். இந்தியாவின் ஸ்கோரை நெருங்க விரும்பினோம். சில நேரங்களில் எங்கள் திட்டம் வேலை செய்கிறது. எப்போது அது நடக்காது." என்றார். தனது அணி இங்கிருந்து மீண்டு வர விரும்புவதாகவும், இந்தத் தொடரை வெல்ல விரும்புவதாகவும் ஸ்டோக்ஸ் கூறினார். "தற்போது தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளோம், மீண்டும் மீண்டும் தொடரை வெல்ல எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், அதையே செய்ய விரும்புகிறோம்" என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இந்த டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக (372 ரன்கள் வித்தியாசத்தில்) ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வியாகும். தவிர, டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் எட்டாவது பெரிய வெற்றி இதுவாகும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸின் போது 12 சிக்ஸர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார். வாசிம் அக்ரம் 1996 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் எடுத்திருந்த போது அதே எண்ணிக்கையிலான சிக்ஸர்களை (12) அடித்திருந்தார். அதேசமயம், இந்தியாவைப் பொருத்தவரை, இந்த சாதனை இதற்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து (எட்டு சிக்ஸர்கள்) பெயரில் இருந்தது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இரண்டாவது இந்திய மற்றும் 9வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். https://www.bbc.com/tamil/articles/cyx72p9rngko
  4. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இந்த தீர்ப்பு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தி வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது. மேலும், இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்க்கு அபராதம் 355 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், அவர் சுமார் 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/292285
  5. பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பெப்.8ஆம் திகதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பக்கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். நன்றி – இந்து தமிழ் https://thinakkural.lk/article/292194
  6. ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை கையளிப்பதற்கு தயங்கும் ரஸ்ய அதிகாரிகள் - நவால்னியின் சகாக்கள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 18 FEB, 2024 | 10:21 AM சிறையில் உயிரிழந்த ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவல்னியின் உடலை அவரது தாயரிடம் கையளிப்பதற்கு ரஸ்ய அதிகாரிகள் மறுக்கின்றனர் என நவால்னியின் நெருங்கிய சகாவொருவர் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னரே உடலை கையளிப்போம் என ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தயாரிடம் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் நடந்துகொண்டிருந்த வேளை தீடிரென மயக்கமடைந்து வீழ்ந்து நவால்னி உயிரிழந்தார் என ரஸ்ய அதிகாரிகள் அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். தீடீர் இறப்பு நோய் அறிகுறி காணப்பட்டுள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் இது ஒரு தெளிவற்ற பொதுவான விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நகரமொன்றிற்கு நவால்னியின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நவால்னியின் தாயாருக்கு தெரிவித்தனர் அவர் அங்கு சென்றவேளை பிரேதஅறை மூடப்பட்டிருந்தது என நவால்னியின் சகாக்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது பிரேத பரிசோதனை முழுமையானதாக காணப்படாததால் மற்றுமொரு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே நவால்னியின் உடலை அதிகாரிகள் மறைக்கின்றனர் என தெரிவித்துள்ள நவால்னியின் சகாக்கள் அவரது உடலை உடனடியாக குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/176650
  7. ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (16) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/292241
  8. 18 FEB, 2024 | 02:48 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு, இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ப்பட்டபோதே ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில், 300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/176677
  9. நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738 என்றும் அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள் என்றும் பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது என்றும் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்துள்ளார் .. 396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர் சுமார் 34 பாடசாலைகளில் 4,000 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். கல்வி அமைச்சு இந்த ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை பெப்ரவரி 22ஆம் திகதி சேர்த்துக்கொள்ளவுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சுமார் 350,000 மாணவர்கள் இவ்வருடம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பாலசூரிய மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/292291
  10. அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும், ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான கருத்துக்கள் இருப்பின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்காமல் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292301
  11. 90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா; 10 இலட்சம் ரூபாய் திணைக்களங்கள் வழங்கியதாக யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு 18 FEB, 2024 | 02:03 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இம்முறை பயணிகளிடம் ஒருவழி படகுப் பயண கட்டணமாக 1,500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளதாகவும் யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டுவர வேண்டும் என்பதாகவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், அதைப் பற்றி இம்முறை தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். கச்சதீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176675
  12. 18 FEB, 2024 | 12:59 PM சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும் இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விசாரணையில் இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும் ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது. இதையடுத்து 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார். போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். என என்ஐஏ தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176670
  13. Published By: RAJEEBAN 18 FEB, 2024 | 11:31 AM நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக குறுகிய வழிமுறைகள் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு குறுகிய வழிமுறைகள் எதுவும் இல்லை என இந்தநாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெறும் இக்காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாபதி முறை நீக்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நோக்கம் எனக்கில்லை என்பதை நான் பல தடவை தெரிவித்துள்ளேன். அதற்கான நிதிகள் உள்ளன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்த கதைகளை எதிர்கட்சியினரே பரப்பி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்கட்சியில் பிளவுபட்டுள்ள இரண்டு குழுக்களிற்கு இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. ஒரு குழுவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளதாக தெரியவரும்போது பாரம்பரிய எதிர்கட்சி பதற்றமடைகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி தங்கள் ஊடக நண்பர்களை பயன்படுத்தி அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்த தகவல்களை பரப்பினார்கள் எனது பேரை பயன்படுத்தி அவர்கள் இந்த தகவல்களை பரப்புகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை அவசர அவசரமாக முன்னெடுக்க முடியாது என்பது இந்த நாட்டு மக்களிற்கு எதிர்கட்சியினரை விட நன்கு தெரியும் அதற்கான நடைமுறைகள் உள்ளன நாங்கள் இந்த பொறிக்குள் சிக்ககூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் பொருளாதார மீட்சி குறித்து பேசுங்கள் என அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176658
  14. 18 FEB, 2024 | 11:58 AM யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை, கடத்திச் சென்றமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/176661
  15. 18 FEB, 2024 | 10:51 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 இளவயது மகப்பேறுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176653
  16. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். நரேந்திரமோடி வலியுறுத்தல் இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். https://ibctamil.com/article/pm-modi-urged-to-formalize-the-india-sl-agreement-1708223045
  17. கட்சி பெயரில் திடீரென திருத்தம் செய்த நடிகர் விஜய் நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார். கட்சிப் பெயரிலேயே தவறு அவர் அறிவித்த 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். திருத்தம் செய்ய அனுமதி இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/actor-vijay-who-changed-the-name-of-the-party-1708232720
  18. 17 FEB, 2024 | 09:15 PM ஆர்.ராம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், நாளை 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தகட்டமாக எவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள என்பது தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 75வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக்கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ன. அதேநேரம், கட்சியின் நிருவாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரையில், எனது தலைமைத்தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாக கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானித்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. எவ்வாறானினும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன. எனவே, அனைத்து தடைகளையும் முறையாக கையாண்டு அவற்றை கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/176638
  19. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 பிப்ரவரி 2024 இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா? பட மூலாதாரம்,ERIC LALMAND/BELGA MAP/AFP படக்குறிப்பு, பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது? மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது. ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பட மூலாதாரம்,VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர். விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு. விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு. பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள். ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும். அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர். போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர். இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர். ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும். எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா? இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/cv20e2e217jo
  20. யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டைச் சமாளிக்கும் இந்தியாவின் 'ஜெய்ஸ்பால்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டுக்கு பதிலாக இந்தியா 'ஜெய்ஸ்பால்' கிரிக்கெட்டை களமிறக்கியிருக்கிறது. ஆம், இந்தியாவின் இளம் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியை ஐ.சி.யு.வுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. அதிலிருந்து இங்கிலாந்து அணி மீள்வதற்கு சாத்தியமில்லை என்றும் தெரிகிறது. ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்தியா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 322 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இன்றைய காலகட்டத்தில், டி-20 போன்ற வேகமான கிரிக்கெட்டின் ஆக்ரோஷம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் ஒரு வீரரிடம் அரிதாகவே காணப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போல் டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட்டை இவ்வளவு சிறப்பாக சமநிலையில் வைத்திருக்கும் ஒரு வீரர் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் விரைவில் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து, பவுண்டரிகளை விளாசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்பின்னர்களின் பந்துகளை விளாசிய ஜெய்ஸ்வால் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை குறிவைத்தார். ஆட்டத்தின், 27வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார். லாங் ஆன் ஆஃப் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷத்தில் இருந்து, பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட் மற்றும் ரெஹான் அகமதும் தப்பவில்லை இருவரின் பந்துகளிலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்தார். அவரது ஆக்ரோஷத்தில் டி-20 போட்டியின் தன்மை வெளிப்பட்டாலும், அவர் ஆடித்த ஒவ்வொரு பவுண்டரியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. யஷஸ்வி தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், 122 பந்துகளில் மூன்றாவது சதத்தையும், தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் 209 ரன்கள் எடுத்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையும் யஷஸ்வி விட்டுவைக்கவில்லை. அவரது ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் மிக அழகாக இருந்தன. அவரது இன்னிங்ஸைப் பார்த்த முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது சமூக ஊடகப் பக்கமான 'எக்ஸ்' தளத்தில், "யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சதத்திற்குப் பின் சதம். சுழற்பந்து வீச்சாளர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நடத்தப்படுகிறார்கள். கொடு கொடு கொடு," என பதிவிட்டிருந்தார். சிக்சருடன் அரை சதம், நான்குடன் சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்டத்தில், 133 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து, 104 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 78.19 ஆகும். இதையடுத்து முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். சதம் அடித்த யஷஸ்வி, டேவிட் வார்னரைப் போல் காற்றில் குதித்து கொண்டாடினார். ஒருவேளை முதுகு வலிக்கு இதுவே காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு பிறகு 400 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். விராட் 2018-இல் 593 ரன்களும், ரோஹித் சர்மா 2021-இல் 368 ரன்களும் எடுத்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹைதராபாத் டெஸ்டின் முதல் நாளில், ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் டெஸ்டில் இருந்து டி20க்கு மாறுவது அல்லது டி20யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். யஷஸ்வி, டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார். அதன் பிறகு அவர் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்ததன் அடிப்படையில் அவர் கூட்டாக ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த விஷயத்தில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சமன் செய்துள்ளார். ஜெய்ஸ்வால் இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளார்? பட மூலாதாரம்,GETTY IMAGES யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்நாட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2019-ஆம் ஆண்டில், ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இவர் வெளிச்சத்திற்கு வந்தார். ஜெய்ஸ்வால் இன்னிங்சில் 113, 22, 122, 203 மற்றும் 60 ரன்கள் எடுத்தார். 2020-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இவர் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முதல் சீசனில் சரியாக விளையாடவிட்டாலும், படிப்படியாக அவர் முன்னேறினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லருடன் இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. 13 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். யஷஸ்வி 2019-இல் ரஞ்சி விளையாடத் தொடங்கினார். 2021-22ல், அவர் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதுவரை, அவர் 37 முதல் தர இன்னிங்ஸில் 73 சராசரியுடன் 2482 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 11 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். அதனால்தான் அவருக்கு ஒருநாள் மற்றும் டி-20க்கு முன் டெஸ்ட் கேப் வழங்கப்பட்டது. இரவில் சமையல், பகலில் பயிற்சி! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது நண்பர் ராஜு பாயுடன் மும்பையில் (ஜூலை 2018) உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் சூரியவான் கிராமத்தைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை 11 வயதில் மும்பைக்கு இழுத்தது. தனியாகப் போராடினார். பால் பண்ணையில் கூட வேலை செய்ய வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக, மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் யஷஸ்வியும் வசித்து வந்தார். இங்கு இரவில் உணவு சமைத்துவிட்டு, பகலில் கிரிக்கெட் பயிற்சி செய்து வந்தார். இது தவிர கோல் கப்பாவும் விற்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்தார். கடின உழைப்பு பலன் தந்தது, மற்றவை வரலாறானது. https://www.bbc.com/tamil/articles/c4nj42w77elo
  21. அஸ்வெசும : விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/292261
  22. 17 FEB, 2024 | 06:28 PM இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இவ்வாறானதொரு நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/176641
  23. மேலுள்ள படத்தில் Avdiivka பகுதி.
  24. வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை தரிசித்த இந்திய தூதுவர் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை நேற்று (16) தரிசித்திருந்தார். அந்த வகையில் இலங்கையின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொன்மைமிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவர் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார். மடு தேவாலயம் குறித்த ஆலயமானது இந்தியாவின் நன்கொடையின் மூலம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயத்தில் வழிபாடு செய்து வடமாகாண விஜயத்தை ஆரம்பித்ததுடன், மக்களின் நல்வாழ்வு - சுபீட்சத்துக்காக பிரார்த்தித்துள்ளார். அத்துடன் மடுதேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/indian-ambassador-visited-hindu-christian-temples-1708120558?itm_source=parsely-api

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.