Everything posted by ஏராளன்
-
உத்தரகாண்ட்டில் மதரஸா இடிப்பு - வன்முறை - 2 பேர் உயிரிழப்பு 100க்கும் அதிகமானோர் காயம்; இணையசேவை முடக்கம்
ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா அகற்றப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பல பத்திரிகையாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் வன்முறையில் காயமடைந்துள்ளனர். 9 பிப்ரவரி 2024, 05:03 GMT உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரத்திலுள்ள பன்பூல்புராவில் வியாழக்கிழமை மாலை வன்முறை வெடித்தது. ஹல்த்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்பூல்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது, கல் வீச்சு தொடங்கியது என்று நைனிடால் காவல்துறை கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கல் வீச்சு மற்றும் தீ வைப்பில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது மக்களுக்கும், அரசு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கலவரம் செய்வோரைக் கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பன்பூல்புராவில் உள்ள காவல்துறையினர் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டிருந்த மதரஸாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, உள்ளூர் மக்கள் தீ வைத்து கற்களை வீசத் தொடங்கியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. மதரஸாவை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். நைனிடால் மாவட்ட தகவல் அதிகாரி ஜோதி சுந்த்ரியால், பிபிசி செய்தியாளர் ராஜேஷ் டோப்ரியாலிடம் பேசும்போது, நான்கு பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். வன்முறையில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை கும்பல் பல வாகனங்களை எரித்துள்ளது, பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள். சேத விவரங்கள் குறித்து தற்போது தெளிவாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. பல பத்திரிகையாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் வன்முறையில் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்புப் படைகளின் நான்கு பட்டாலியன்கள் உட்பட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து காவல்துறை படைகள் வியாழக்கிழமை மாலை ஹல்த்வானிக்கு வரவழைக்கப்பட்டன. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மதரஸா கட்டப்பட்டுள்ளதாகவும், அதை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி எஸ்.எஸ்.பி பிரஹலாத் மீனா தெரிவித்துள்ளார். ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் நைனிடால் டிஎம் வந்தனா சிங் தெரிவித்தார். ஹல்த்வானி வன்முறை பற்றி உத்தராகண்ட் முதல்வர் என்ன சொன்னார்? வியாழன் அன்று கலவரக்காரர்களை கண்டால் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பன்பூல்புரா, ஹல்த்வானியில் சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றும் போது காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையும், அப்பகுதியில் அமைதியின்மையை பரப்பியதையும் முதல்வர் தீவிரமாக எடுத்துக் கொண்டார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை யாரும் சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்," என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பன்பூல்புராவில் பதற்றமான பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கலவரக்காரர்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்," என்று அந்தச் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. ஹல்த்வானியில் என்ன நடந்தது? ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில் உள்ள ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான பணிகளை ரயில்வே நிர்வாகம் நடத்தி வருகிறது. இது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி இது. மதரஸாவை இடிக்கும் பணி வியாழக்கிழமை மாலை தொடங்கியவுடன், ஏராளமானோர் வீதிக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கல் வீச்சு தொடங்கியது. பதிலுக்கு காவல்துறையும் நடவடிக்கை எடுத்தது. ஆவேசமான கும்பல் பன்பூல்புரா காவல் நிலையத்தை தாக்கி பல காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்துடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க தலைவர் நேஹா ஜோஷி தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டதாக ஆட்சியர் வந்தனா சிங் கூறியுள்ளார் நைனிடால் ஆட்சியர் சொல்வது என்ன? பன்பூல்புராவில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த வன்முறையில் சிலர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் உள்ளது என்று நைனிடால் ஆட்சியர் வந்தனா சிங் கூறியுள்ளார். சுடப்பட்ட தோட்டாக்கள் சட்டப்பூர்வ ஆயுதங்களில் இருந்து சுடப்பட்டதா அல்லது சட்டவிரோத ஆயுதங்களில் இருந்து சுடப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டதாகவும் ஆட்சியர் வந்தனா சிங் கூறியுள்ளார். "சுடப்பட்ட மூன்று முதல் நான்கு பேர் இறந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் கும்பல் சுட்ட தோட்டாக்களால் இறந்தார்களா அல்லது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா என்பதை அறியும் பணி நடந்து வருகிறது," என்றார் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங். வன்முறை கும்பல் பன்பூல்புரா காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றதாக கூறும் மாவட்ட ஆட்சியர், "அப்போது காவல்நிலையத்தில் இருந்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலயைத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதையடுத்து, பன்புல்புரா பகுதியை ஒட்டியுள்ள காந்திநகர் பகுதியிலும் வன்முறை பரவியது,” என்றார். "இந்த வன்முறை திடீரென தூண்டப்பட்டது போன்று இல்லாமல், நன்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. கலவரக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் பயன்படுத்தினர்" என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பன்பூல்புரா பகுதியில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரின் முக்கிய பகுதியை வன்முறை எட்டவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். "அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல்துறையினரும் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்," என்றார். ஹல்த்வானி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அகற்றப்படும் மதரஸா நசூல் நிலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நசூல் நிலம் என்பது அரசு நிலம். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த மசூதி அப்துல் மாலிக் என்பவரால் கட்டப்பட்டது என்று பன்பூல்புராவில் வசிக்கும் ஜாபர் சித்திக் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார். "கடந்த நான்கைந்து நாட்களாக இந்தப் பகுதிக்கு காவல்துறையினர் வந்து மதரஸா, மசூதியை அகற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். வியாழக்கிழமை காலை அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரத்துடன் இங்கு வந்தனர். நான் சுமார் 5 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தேன். கற்கள் வீசி சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதை அறிந்தேன்,” என்றார். "சிலர் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கும் நாசப்படுத்தினர். இந்த முழு சம்பவம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. தற்போது, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, நாங்கள் எங்கள் வீடுகளை பூட்டிவிட்டோம்," என்றார். மதரஸாவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சிராஜ் கான் துரித உணவு மையத்தை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான போலீஸ் வாகனங்கள் வருவதை பார்த்தபோது இங்கு வன்முறை நடந்துள்ளது தெரிய வந்தது என்றார். அவர் தனது கடையை விரைவாக மூடிவிட்டு தனது குடும்பத்துடன் தனது வீட்டில் தன்னை பூட்டிக்கொண்டதாக கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cge74ywgwjno
-
புவி வெப்பமயமாதல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது
காலநிலை மாற்றம்: 1.5 டிகிரியை தாண்டி உயர்ந்த புவி வெப்பநிலை - பேரழிவை தடுக்கும் ஒரே வழி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் பதவி, காலநிலை செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முதல் முறையாக புவி வெப்பமயமாதல் ஓர் ஆண்டு முழுவதும் 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் சென்றிருக்கிறது, என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு, பாரீஸ் நகரில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்கள் நீண்டகால வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த உறுதிபூண்டனர். இது மிக ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது, ஓர் ஆண்டு முழுவதும் அந்த அளவு மீறப்பட்டிருப்பது, ‘பாரீஸ் உடன்படிக்கையை’ மட்டும் மீறுவதல்ல, நீண்டகால அளவில் இது மீண்டும் நிகழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், கரிம உமிழ்வுகளைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டால் புவி வெப்பமாதலின் வேகம் குறைக்கப்படலாம் என்கிறனர் விஞ்ஞானிகள். “ஓர் ஆண்டு முழுவதுமான சராசரியில் 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேலே போவது சாதாரண விஷயமல்ல. நாம் தவறான பாதையில் செல்வதையே இது காட்டுகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்னவென்று நமக்குத் தெரியும்,” என்றார் பிரிட்டனின் ராயல் வானிலை ஆய்வுக் கழகத்தின் தலைமை நிர்வாகி லிஸ் பென்ட்லி. பட மூலாதாரம்,GETTY IMAGES தொழில்மயமாக்கலில் மனிதர்கள் பெருமளவு புதைபடிம எரிபொருளை எரிக்கத் துவங்குவதற்கு முன்னிருந்த வெப்பநிலை அளவைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் வகையில் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இது, காலநிலை மாற்றத்தைச் சீர்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் குறியீடாக மாறியுள்ளது. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு பதில் 2 டிகிரி செல்ஷியஸாக இருந்தால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளான தீவிர வெப்ப அலைகள், கடல்மட்ட உயர்வு, பல்லுயிர் வள இழப்பு, ஆகியவை தீவிரமாக நிகழும் அபாயம் பன்மடங்கு உயரும் என்று 2019ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் முக்கியமான அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றச் சேவையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வெப்பநிலை 1.52 டிகிரி செல்ஷியஸை அடைந்தது. இதைக் கீழே உள்ள வரைபடத்தில் காணலாம் உச்சத்தைத் தொட்ட கடல்பரப்பின் வெப்பநிலை ஆண்டு முழுதும் வெப்பநிலை 1.5 செல்ஷியஸுக்கு மேல் செல்வது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்து வெப்பமாக இருந்த எட்டாவது மாதமாகும். சொல்லப்போனால், பெர்க்லி எர்த் எனும் அறிவியல் குழு, 2023ஆம் காலண்டர் ஆண்டின் வெப்பநிலை 1.5C-க்கு மேல் இருந்தது என்று தெரிவிக்கிறது. ஆனால், நாசா போன்ற அமைப்புகள் இந்த 12 மாதங்களின் வெப்பநிலை 1.5C-க்கு சற்று கீழே இருந்ததாகச் சொல்கின்றன. இந்த வித்தியாசங்களுக்குக் காரணம், 1800களின் வெப்பநிலையைக் கணக்கிடுவதில் இருக்கிறது. அப்போது அளவிடும் கருவிகள் மிகச் சொற்பமாகவே இருந்தன. ஆனால், அத்தனை தரவுகளும், நவீன பதிவுகள் துவங்கியதிலிருந்து பூமி தற்ப்போதுதான் மிக வெப்பமாக இருக்கிறது என்பதில் உடன்படுகின்றன. அதனினும் நீண்ட காலத்துக்குக்கூட இது இருக்கலாம். மேலும், கடல்பரப்பின் வெப்பநிலை, பதிவானதிலேயே மிக அதிகமாகனதாக இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி, கடல் வெப்பநிலைகள் பொதுவாக அடுத்த ஒன்றிரண்டு மாதங்கள்வரை அதிகரிக்காது. இது எப்படி நடந்தது? சந்தேகமே இல்லாமல், இந்த நீண்டகால வெப்பமடைதல், புதைபடிம எரிபொருட்களை எரித்தல் போன்ற மனிதச் செயல்பாடுகளால்தான் நடக்கிறது. கடந்த ஆண்டின் உண்டான வெப்பமடைதலில் பெரும்பகுதியும் இதனால்தான் நடந்தது. கடந்த சில மாதங்களில் எல்-நினோ போன்ற இயற்கையான காலநிலை வெப்பமடையும் நிகழ்வுகளும் காற்றின் வெப்பநிலையை அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் இவை சுமர் 0.2C மட்டுமே உயர்த்தும். கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பூமியின் சராசரி காற்று வெப்பநிலைகள் 1.5 செல்ஷியஸுக்கு மேலே செல்லத் துவங்கின. அப்போதுதான் எல்-நினோவும் துவங்கியிருந்தது. இந்த அதிகரிப்பு 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் சிவப்புக்கோடு இதைக் காட்டுகிறது. அடுத்த சில மாதங்களில் எல்-நினோ முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியின் வெப்பநிலையைத் தற்காலிகமாக நிலைப்படுத்தி, அதன்பின் அதைச் சற்றே குறைய வைத்து, 1.5 செல்ஷியஸ் அளவுக்கே மீண்டும் கொண்டு செல்லலாம். ஆனால், மனித செயல்பாடுகளால் நிகழும் இந்த வெப்பநிலை உயர்வு, அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டாலொழிய, இனிவரும் தசாப்தங்களில் உயர்ந்துகொண்டுதான் இருக்கும். “பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வை அதிரடியாகக் குறைப்பதுதான் பூமியின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க ஒரே வழி,” என்கிறார் கோபர்னிகஸ் காலநிலை மாற்றச் சேவையின் துணை இயக்குநர் சமந்தா புர்ஜெஸ். இது தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும் நிலை வரலாம் தற்போதைய அளவிலான கரிம உமிழ்வுகளின் மூலம் அடுத்த தசாப்தத்தில் பூமி வெப்பமடைதலை நீண்டகால சராசரியாக 1.5C-க்கு கட்டுப்படுத்தலாம். குறியீட்டளவில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். ஆனால் இது காலநிலை மாற்றத்தின் ஆபத்தான எல்லையைக் குறிக்காது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “இது, காலநிலை மாற்றம் கட்டுப்பாடின்றிச் செல்லும் அளவைக் குறிக்காது,” என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மைல்ஸ் அல்லென். இவர் 2018ஆம் ஆண்டின் ஐ.நா காலநிலை அறிக்கையின் தலைமை ஆராய்ச்சியாளராவார். ஆனால், கடந்த 12 மாதங்களில் நாம் சந்தித்த வெப்ப அலைகள், வறட்சிகள், காட்டுதீ, வெள்ளங்கள் போன்ற சம்பவங்கள் இன்னும் அதிக அளவில் நடக்கும். “ஒரு டிகிரியின் பத்தில் ஒரு பங்கு கூடுதல் வெப்பமும், அதற்கு முந்தைய அதே அளவு வெப்பத்தைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்,” என்கிறார் ஆல்லென். மேலும் அரை டிகிரி வெப்பம், அதாவது 1.5 டிகிரி செல்ஷியஸில் இருந்து 2 டிகிரி செல்ஷ்கயஸ்வரை – ஆபத்தான நிலைகளின் சாத்தியத்தை அதிகரிக்கிறது. இந்தக் காலநிலை புள்ளிகளைக் கடந்தால், சரிசெய்ய முடியாத விளைவுகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, கிரீன்லேண்ட் மற்றும் மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் புள்ளியை அடைந்தால், அது அடுத்த நூற்றாண்டில் பேரழிவான கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும், என்கிறார் பேராசிரியர் பென்ட்லி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பசுமைத் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் போன்றவை உலகின் பல பகுதிகளிலும் பிரபலமடைந்து வருகின்றன. இது ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. நம்முன் இருக்கும் ஒரு வாய்ப்பு ஆனால் மனிதர்களால் பூமி வெப்பமடையும் விதத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்கின்றனர். பசுமைத் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் போன்றவை உலகின் பல பகுதிகளிலும் பிரபலமடந்து வருகின்றன. இது ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சில பயன்களும் உண்டாகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த தசாப்தத்தில் பூமியின் வெப்பம் மிக மோசமான நிலையில் 4 டிகிரி செல்ஷியஸை எட்டும் எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கருதப்படுகிறது. இதற்குக் காலநிலை கொள்கைகள், மற்றும் தீர்மானங்கள் ஒரு காரணம். அத்தனைக்கும் மேலாக, நம்பிக்கை தரும் விஷயம், நிகர கரிம உமிழ்வுகளை முற்றிலுமாக நிறுத்தினால், புவி வெப்பமடைவது கிட்டத்தட்ட நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த தசாப்தத்தில் கரிம உமிழ்வுகளைப் பாதியாகக் குறைப்பது மிகவும் முக்கியமானது. “இதன் பொருள், ஒரு சமூகமாக, ஒரு உலகமாக, நமது தேர்வுகளின் மூலம், பூமி எவ்வளவு வெப்பமடைதலை எதிர்கொள்ளும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்,” என்கிறார் பெர்க்லி எர்த் அறிவியல் குழுவின் காலநிலை விஞ்ஞானி ஸெக் ஹௌஸ்ஃபாதர். https://www.bbc.com/tamil/articles/c1d1x88251do
-
தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
09 FEB, 2024 | 12:49 PM கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது. 200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி, தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது. மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175965
-
உத்தரகாண்ட்டில் மதரஸா இடிப்பு - வன்முறை - 2 பேர் உயிரிழப்பு 100க்கும் அதிகமானோர் காயம்; இணையசேவை முடக்கம்
09 FEB, 2024 | 12:10 PM உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும் கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலும் வாகனங்களுக்கு தீயும் வைக்கப்பட்டன. அங்குள்ள பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராடிய மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. வரும் 14-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருந்தும் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றியதாக தெரிகிறது. நாட்டிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்இ "இந்த கலவரத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் போலீஸார். ஹல்த்வானியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் யாரையும் தூண்டிவிடவில்லை துன்புறுத்தவும் இல்லை என்பதை நீங்கள் (வீடியோவில்) பார்த்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்தே ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் சிலர் உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தனர். சிலருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. சிலருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கால அவகாசம் வழங்கப்படாத இடங்களில் பொதுப்பணி துறையினர் மற்றும் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இது தனிப்பட்ட முறையில் யாருக்குமோ அல்லது சொத்துக்களுக்கு எதிரான செயலோ இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்த இடம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட காலி நிலம். அது எந்த மத அமைப்பாகவும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அப்படியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அந்த சொத்துக்கள் மீது தடை ஏதும் இல்லாததால் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றதைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருவதால் இங்கேயும் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்டோம். ஆக்கிரமிப்பு அகற்றம் யாரையும் காயப்படுத்தவோ தூண்டிவிடும்படியோ துன்புறுத்தும் படியோ இல்லாமல் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து விஷயங்களும் சரியான முறையில் செய்யப்பட்டு வந்தன. பாதுகாப்புக்காக போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது பெரிய கும்பல் வந்து எங்கள் குழுவினரை அரைமணி நேரம் தாக்கியது. நகராட்சி ஊழியர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கும் நாளில் படைகள் மீது தாக்குதல் நடத்துவது திட்டமிடப்பட்டிருக்கிறது. முதல் கும்பல் கற்களை வீசிவிட்டு சென்றது. இரண்டாவதாக வந்த கும்பலிடம் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. எங்களுடைய குழு எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் பன்பூல்புரா காவல்நிலையத்துக்கு வெளியே சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்து பதிலடி கொடுக்கும் விதமாக போலீஸார் வானை நோக்கி சுட்டனர். கலவரத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறந்தவர்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தனரா? அவர்கள் சுட்டுக்கொண்டதில் இறந்தனரா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. கலவரக்காரர்கள் பந்தல்பூரா காவல்நிலையத்துக்கு தீ வைக்க முயன்றனர். அப்போது போலீஸார் காவல்நிலையத்தில் இருந்தனர், என்றாலும் கலவரக்காரர்களின் முயற்சியை தடுத்தனர். கலவரக்கார்களை காவல்நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடந்து கலவரம் பந்தல்பூரா பகுதிக்கு அருகில் உள்ள காந்தி நகருக்கு பரவியது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பக்கத்து இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. துணைராணுவப்படையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175962
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம் : ஈபிள் கோபுர உலோகத் துண்டும் உள்ளடக்கம் 09 FEB, 2024 | 10:27 AM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் நேற்று (08) அறிமுகம் செய்யப்பட்டன. பாரிஸ் நகரின் உலகப் பிரசித்திபெற்ற ஈபிள் கோபுரத்தின் அசல்; துண்டொன்றும் இப்பதக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாரிஸ் 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இவ்விரு விளையாட்டு விழாக்களிலும் மொத்தமாக 5,084 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்பதக்கங்களின் மத்தியில் 6 கோண வடிவிலான இரும்புத் துண்டொன்றும் பதிக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்திலிருந்து அகற்றப்பட்ட அசல் இரும்புத் துண்டுகள் மூலம் ஒலிம்பிக் பதக்கத்தின் அறுகோண வடிவிலான பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது என பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு 1899 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் துண்டொன்றையும் வழங்க நாம் விரும்பினோம்' என பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவே கூறினார். பாரிஸை தளமாகக் கொண்ட ஆபரண வடிவமைப்பு நிறுவமான சவ்மெட் இப்பதக்கங்களை வடிவமைத்துள்ளது. நாணயங்களைத் தயாரிக்கும் அரச நிறுவனமான 'மின்னே டி பரிஸ்' இப்பதக்கங்களைத் தயாரித்துள்ளது. https://www.virakesari.lk/article/175946
-
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் கத்தார் 09 FEB, 2024 | 10:16 AM (நெவில் அன்தனி) கத்தாரில் நடைபெற்றுவரும் AFC 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான கத்தார் தகுதிபெற்றுள்ளது. அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மொத்தமாக 5 கோல்கள் போடப்பட்ட 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசை வெற்றிகொண்ட கத்தார் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜப்பானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு கத்தார் ஆசிய சம்பியனாகி இருந்தது. 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர் விருதை வென்றவரும் அதிக கோல்களைப் போட்டவருமான அல்மோயிஸ் அலி, இரண்டவாது அரை இறுதிப் போட்டியின் 82ஆவது நிமிடத்தில் வெற்றிகோலை போட்டார். அதன் பின்னர் இந்தப் போட்டி உபாதையீடு நேரம் உட்பட 23 நிமிடங்கள் தொடர்ந்தபோதிலும் ஈரானினால் கோல் நிலையை சமப்படுத்த முடியாமல் போக கத்தார் இறுதியில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் ஆன நிலையில் ஈரான் முதலாவது கோலை போட்டது. த்ரோ இன் பந்தை சர்தார் அஸ்மூன் கரணம் அடித்து உதைத்து கோல் போட்டு ஈரானை முன்னிலையில் இட்டார். கத்தார் நீண்ட நேரம் பின்னிலையில் இருக்கவில்லை. போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அக்ரம் அபிவ் பரிமாறிய பந்தை ஜசெம் கபிர் ஓங்கி உதைக்க, அது செய்யத் ஈஸாட்டோஹாலி மீது பட்டு கோலினுள் புகுந்தது. இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது 43ஆவது நிமிடத்தில் அக்ரம் அஃபிவ் 2ஆவது கோலைப் போட்டு கத்தாரை முன்னிலையில் இட்டார். இடைவேளையின் பின்னர் 53ஆவது நிமிடத்தில் கத்தார் பின்கள வீரர் அஹ்மத் பாதியின் கையில் பந்து பட்டமை வீடியோ உதவி மத்தியஸ்தர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை ஏ. ஜஹான்பக்ஷ் கோலினுள் புகுத்தி கோல நிலையை 2 - 2 என சமப்படுத்தினார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போட கடுமையாக பிரயத்தனம் எடுத்தன. போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அப்துல்அஸிஸ் ஹாதெம் பரிமாறிய பந்தை அல்மோயிஸ் அலி கோலாக்கி கத்தாரை 3 - 2 என முன்னிலையில் இட்டார். அந்த கோலே இறுதியில் கத்தாரை இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்லும் வெற்றி கோலாக அமைந்தது. கத்தாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது. முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. https://www.virakesari.lk/article/175948
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா Published By: VISHNU 09 FEB, 2024 | 12:54 PM (நெவில் அன்தனி) பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதும் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்டு பரபரப்பான முடிவைத் தந்ததுமான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 5 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் 3 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது. டொம் ஸ்ட்ரேக்கரின் துல்லியமான பந்துவீச்சு பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது மத்திய வரிசையில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு இணைப்பாட்டங்கள், பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட 17 ஓட்டங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தன. இந்த இணைப்பாட்டங்களில் ஆரம்ப வீரர் ஹெரி டிக்சன், ஒலிவர் பீக், டொம் கெம்பெல், ரஃபாயல் மெக்மிலன், கடைசி இலக்க வீரர் கெலம் விட்லர் ஆகியோர் பங்காற்றியிருந்தனர். அது மட்டுமல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் குறிப்பிட்ட ஓவர்களை வீசத் தவறியதால் கடைசி ஓவரில் 30 யார் வட்டத்துக்கு வெளியே 4 வீரர்களை மட்டும் களத்தடுப்பில் ஈடுபடுத்த நேரிட்டது அதன் தோல்விக்கு காரணமாக அமைந்து. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 180 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49.1 ஓவர்களில் ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஹெரி டிக்சன், சாம் கொன்ஸ்டாஸ் ஆகிய இருவரும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், சாம் கொன்ஸ்டாஸ் 14 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மேலும் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (16.3 ஓவர்கள், 59 - 4 விக்.) ஒரு பக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஆரம்ப வீரர் ஹெரி டிக்சனுடன் ஜோடி சேர்ந்த ஒலிவர் பீக் 5 ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஹெரி டிக்சன் 75 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டினர். அதன் பின்னர் மீண்டும் விக்கெட்கள் சரியத் தொடங்கின. டொம் கெம்பல் (25), ஒலிவர் பீக் (49), டொம் ஸ்ட்ரேக்கர் (3), மஹ்லி ப்றட்மன் (0) ஆகிய நால்வரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (164 - 6 விக்.) இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு ஓவர்கள் (24 பந்துகள்) மீதமிருக்க, போட்டியில் வெற்றிபெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு 16 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஃபாயல் மெக்மிலனும் கெலம் விட்லரும் வெற்றியை மாத்திரம் குறிவைத்து பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் வெற்றியையும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதையும் உறுதிசெய்தனர். மெக்மிலன் 19 ஓட்டங்களுடனும் விட்லர் 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் அலி ராஸா 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 28 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் அரைச் சதங்களைப் பெற்ற அஸான் அவய்ஸ், அரபாத் மின்ஹாஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். அதனைத் தொடர்ந்து நவீத் அஹ்மத் கானுடன் 7ஆவது விக்கெட்டில் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த அரபாத் மின்ஹாஸ் 8ஆவதாக ஆட்டம் இழந்தார். அஸான் அவய்ஸ் 91 பந்துகளில் 51 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 61 பந்துகளில் 51 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஆரம்ப வீரர் ஷமில் ஹுசெய்ன் (17) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 20 உதிரிகளே 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் டொம் ஸ்ட்ரேக்கர் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: டொம் ஸ்ட்ரேக்கர் https://www.virakesari.lk/article/175933
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
படக்குறிப்பு, கரண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம். அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆக்கிரமித்திருக்கும். பதிண்டா நகரின் தெருக்களில் பல முகவர்களும், அவர்களை தேடி வரும் இளைஞர்களின் வெளிநாட்டு கனவினை உடனடியாக சாத்தியப்படுத்துவதாக உறுதியளிப்பார்கள். இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இங்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக் குடியேற்றத்தின் அலை வீசி வருகிறது. அதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய வீரர்கள் கனடாவுக்குச் செல்லும் பயணம் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புற பஞ்சாபியர்களின் இங்கிலாந்து பயணம் வரை அடங்கும். படக்குறிப்பு, கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கனடா மீதான ஏமாற்றம் ஏன்? ஆனால், தற்போது கனடா செல்வதற்கான கனவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான், 28 வயதான பால்கர். கனடாவில் ஒரு வருடம் தங்கியிருந்த அவர் 2023 இன் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார். கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதை அடுத்து அவர் தனது சிறிய கிராமமான பித்தோவை விட்டு வெளியேறினார். அப்போது அவரின் இறுதி இலக்கே கனடாவின் குடியுரிமையை பெறுவது மட்டுமே. எனவே, இவரின் கல்விக்காக இவரது குடும்பம் தங்களது நிலத்தை அடமானம் வைத்துள்ளனர். ஆனால், கனடா சென்ற சில மாதங்களில் அவரது கனவு மங்கிவிட்டது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பால்கர், “அங்கு எல்லாமே விலை அதிகம். கல்லூரி முடித்த பிறகு, பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை கைவிடுகின்றனர்” என்றார். தற்போது பால்கர் தனது பெரிய முற்றம் கொண்ட தனது பாரம்பரிய பஞ்சாபி வீட்டின் ஒரு சிறிய அறையில் எம்ப்ராய்டரி தொழிலை செய்து வருகிறார். மேலும் தனது விவசாயக் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறார். இது போன்ற கிராமப்புறங்களில் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இளைஞர்கள் உயரத்திற்கு செல்கின்றனர். பால்கர் தனது வணிகத்தின் பெரும்பகுதியை இன்ஸ்டாகிராம் மூலம் செய்து வருகிறார். இதுகுறித்து பேசுகையில், “ வாழ்க்கை வேடிக்கையாக இருக்கிறது. வீட்டிலேயே தங்கி நல்ல சம்பாத்தியம் பெறும்போது, நான் ஏன் அங்கு சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் பால்கர். படக்குறிப்பு, "கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது." கனடாவிற்கு குடிபெயரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கனடாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சுமார் அரை டஜன் நபர்களிடம் பிபிசி பேசியது. அனைவருமே ஒரே மாதிரியான உணர்வுகளையே பகிர்ந்து கொண்டனர். அப்படி கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ள இந்தியர்கள் பலரும் யூடியூபில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஒரே மாதிரியான தொனியை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதை காணலாம். இதுகுறித்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபர் ஒருவர், குடியேற்ற முகவர்களால் (immigration agent) சொல்லப்பட்ட கனடா வாழ்க்கை குறித்த தகவலும், டொராண்டோ மற்றும் வான்கூவரில் குடியேறியவர்களின் உண்மை நிலையும் அப்படியே மாறுபட்டதாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ராஜ் கரண் ப்ரார் பதிண்டாவை சேர்ந்தவர். இவர் வெளிநாடு செல்வதற்காக உதவும் முகவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் நிரந்தர குடியிருப்பு மற்றும் மாணவர் விசாவைப் பெற உதவி வருகிறார். அவரிடம் பேசுகையில், கனடா மீதான மோகம் கொஞ்சம் குறைந்துவிட்டது. குறிப்பாக வீட்டிற்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ள வசதி படைத்த குடியேறிகள் மத்தியில் அந்த ஆசை குறைந்து விட்டதாக தெரிவித்தார். இருப்பினும் கூட கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது. ஆனால், அங்கு சென்று வேலை மற்றும் வீட்டு வசதி கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் வெளியிடும் வீடியோக்கள் இவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் குடியேற்ற முகவர். ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இருந்து கனடாவில் படிப்பதற்கான அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 2023இன் இரண்டாம் பாதியில் 40% குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஒரு காரணமாக, சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய ஏஜெண்டுகள் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னால் இந்தியாவிலிருந்து கனடாவில் குடியேறிய தலைமுறையினரின் கனடா செல்லும் கனவு மங்கி வருவதற்கு, ஆழமான கலாசாரம் சார்ந்த பல காரணங்களும் பங்கு வகிக்கின்றன. அதில் கனடாவின் சிக்கலான பிரச்னையான பணி அனுபவத் தேவைகள் மீதான தடை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் சலசலப்பு போன்ற பிரச்னைகள் அடங்கும். படக்குறிப்பு, "பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர்" கனடாவை விட்டு இந்தியாவுக்கு திரும்பியவரின் கதை கரண் அவுலாக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எட்மண்டனில் வாழ்ந்து, பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொண்டவர். இவர் கனடாவில் மேலாளராக இருந்த வேலையை விட்டுவிட்டு, தற்போது பஞ்சாபில் உள்ள தனது பிறந்த ஊரான கான் கி தாப் கிராமத்தில் வசதியான கிராமப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், கனடாவின் LGBT சமூகத்தை உள்ளடக்கிய கல்விக் கொள்கை மற்றும் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவதற்கான முடிவு ஆகியவற்றால் தான் வருத்தத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் பொருந்தாத தன்மை, மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இந்தியாவில் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன. இதுகுறித்து கரண் அவுலாக் கூறுகையில், “ நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கு உதவுவதற்காக 'பேக் டு மதர்லேண்ட்' என்ற இணைய ஆலோசனை மையத்தை தொடங்கினேன். குறைந்தது தினமும் இரண்டு மூன்று அழைப்புகளாவது வரும். அவர்களில் பெரும்பாலானோர் கனடாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஞ்சாபில் வேலை வாய்ப்புகள் குறித்தும், எப்படி நாட்டிற்கு திரும்பி வருவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்” என்று தெரிவித்தார். குடியேற்ற வழக்கறிஞர் குழுவான கனடிய குடியுரிமை நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல் பெர்ன்ஹார்ட், குடியேற்றத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு இந்த போக்கு "கவலை அளிக்கிறது" என்று கூறுகிறார். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேகமாக அதிகரிக்கும் வயதானவர்களின் மக்கள் தொகையை தடுப்பதற்காக தாராளவாத குடியேற்றக் கொள்கையை அமல்படுத்தினார். கனடிய புள்ளிவிவரங்களின்படி, குடியேற்றம் 2021 இல் கனடாவின் தொழிலாளர் வளர்ச்சியில் 90 சதவீதமும், மக்கள்தொகை வளர்ச்சியில் 75 சதவீதமும் இடம்பிடித்துள்ளது. படக்குறிப்பு, 2022 இல் கனடிய குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது. கனடா சென்றவர்களில் இந்தியர்களே அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு 14.7 பில்லியன் டாலர்கள் பங்களிக்கின்றனர். அவர்களில் இந்தியர்களே பெரும்பாலானோர். கனடாவில் குடியேறிய ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார். 2022 இல் கனடா குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது. கனடாவில் தற்போது குடியேற்றத்தின் அதிகரிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் விகிதம் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், கனடா ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் புதிய குடியேறிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் பெர்ன்ஹார்ட் கூறுகையில், “மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களின்(Reverse migration) விகிதம் 2019இல் உச்சத்தை எட்டியது. இது இடம்பெயர்வோர் கனடா மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது” என்கிறார். அத்தகைய புலம்பெயர்ந்தோர் அல்லது வெளியேறியவர்கள் குறித்து நாடுகளுக்கான தனித்தனி புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் ராய்ட்டஸின் அதிகாரபூர்வ தகவல்களின்படி, 2021 மற்றும் 2022 இல் 80,000 முதல் 90,000 குடியேறியவர்கள் கனடாவை விட்டு வெளியேறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது வேறு இடத்திற்குச் சென்றிருக்கலாம். 2023 இன் இரண்டாம் பாதியில் சுமார் 42,000 பேர் கனடாவை விட்டு வெளியேறினர். கனடா குடியுரிமைக்கான நிறுவனத்தின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி, மிகக் குறைவான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கே கனடாவின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அப்படி தகுதி பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் 2001 இல் கனடிய குடிமக்கள் ஆனார்கள். அந்த எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 45 சதவீதமாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடாவின் மக்கள்தொகை 2023 இல் பன்னிரெண்டு மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கனடாவில் வீட்டு வசதி, சுகாதாரச் சிக்கல்கள் அதிகமான மக்களுக்கு இடமளிக்க நினைக்கும் கனடாவின் தீவிர குடியேற்ற இலக்குகளில் இருந்து இந்த பிரச்னை தொடங்குகிறது. கனடா தேசிய வங்கியின் பொருளாதார நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை, கனடாவின் வீட்டுவசதி நெருக்கடியில் உள்ளதாகவும், அதன் சுகாதார கட்டமைப்பு அழுத்தத்தில் இருக்கும்போது, கூடுதல் மக்கள்தொகை வளர்ச்சி மேலும் சுமையை அதிகரிப்பதாகவும் எச்சரித்தது. புதிதாக வரும் மக்களால், கனடாவின் மக்கள்தொகை 2023 இல் 12 லட்சம் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு மக்கள் குடியேறும் எண்ணிக்கையை 5 லட்சம் என்ற அளவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே, வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த முடியும் என்று நிபுணர்களின் அறிக்கை கூறப்படுகிறது. கொள்கை வடிவமைப்பாளர்கள்(Policy Makers) இந்த அறிக்கையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத அரசு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிக்கு வரம்புகளை விதித்தது. இது கல்வி விசாக்களில் தற்காலிகமாக 35 சதவீதத்தை குறைக்கும். கனடாவில் இருந்து வெளியேறுவதற்கான அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த குறிப்பிடத்தகுந்த கொள்கை மாற்றம், மேலும் கனடா மீதான விருப்பத்தை குறைக்கும் சிலர் நம்புகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c8vn7nm09qjo
-
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிருஷ்னேந்திரன்!
09 FEB, 2024 | 12:33 PM யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ச.கிருஷ்னேந்திரன் யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175963
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 2 ஆயிரம் ரூபா !! 09 FEB, 2024 | 11:04 AM நாட்டில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (8) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் முருங்கைக்காயின் மொத்தவிலை 1980 ரூபாவாக காணப்பட்டது. மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ருபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவாக அதிகரித்து வந்த ஒரு கிலோ கரட்டின் விலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/175954
-
குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - வடக்கு ஆளுநரிடம் நெதர்லாந்தின் துணைத்தூதுவர் தெரிவிப்பு
09 FEB, 2024 | 10:35 AM நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் துணைத்தூதுவருக்கு தெளிவுபடுத்தினார். அவ்விடயங்களை கேட்டறிந்த இவன் ருட்ஜென்ஸ் குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என கூறியுள்ளார். அத்துடன் முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்து வட மாகாண அபிவிருத்திக்குத் தேவையான பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/175942
-
யாழ். மாவட்ட செயலாளர் - புதிய மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு
யாழ். மாவட்ட செயலாளர் - மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு 09 FEB, 2024 | 11:04 AM யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இணைந்துகொண்டார். https://www.virakesari.lk/article/175947
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
மேற்கு அவுஸ்திரேலிய பிரீமியர் ரோஜர் குக்குடன் ஜனாதிபதி ரணில் இருதரப்பு கலந்துரையாடல் 09 FEB, 2024 | 12:06 PM இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (09) பேர்த் நகரில் நடைபெற்றது. இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் பிரீமியர் (Premier) ரோஜர் குக் இணக்கம் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் காணப்படும் சாத்தியக்கூறுகளை விவரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்து, இந்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஷ்வர, பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயதுன்ன, இஷாக் ரஹ்மான், ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே மற்றும் ரிஷான் டி சில்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர். இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் மேற்கொண்டுள்ளதோடு ஏழாவது இந்து சமுத்திர மாநாடு இன்றும் (09) நாளையும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது. "நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பிரதான உரை ஆற்றவுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (08) பிற்பகல் பேர்த் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். https://www.virakesari.lk/article/175940
-
பாகிஸ்தானில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் - மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தம்
பாகிஸ்தான் தேர்தல்: செல்போன், இணைய சேவை துண்டிப்புக்கு நடுவில் வாக்குப்பதிவு நடந்தது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், யவெட் டான், கரோலின் டேவிஸ் மற்றும் சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி நியூஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய தேர்தலில் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது. பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை “கோழைத்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளது. தேர்தல் முடிவுகள் எவ்வளவு விரைவில் அறிவிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவை தேர்தல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். முன்னதாக வாக்குப்பதிவு வல்லுநர்கள் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இது பிடிஐ கட்சியின் வாய்ப்புகளைக் குறைக்கும் எனக் கருதப்படுகிறது. மொபைல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பிபிசியிடம் பேசிய ஒரு வாக்காளர், இந்த முடிவால் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். “வாக்காளர்களுக்கு இதுபோன்ற இடையூறுகளுக்குப் பதிலாக வாக்களிக்கத் தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். லாகூர் நகரிலுள்ள பல வாக்காளர்கள் பிபிசியிடம், இணைய முடக்கம் காரணமாக டாக்சிகளை முன்பதிவு செய்து வாக்களிக்கச் செல்ல முடியவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது அவர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் கூறினார்கள். இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “நாட்டில் சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களின் விளைவாக, விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பராமரிக்கவும், அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்,” என்று கூறினார். இந்த அளவுக்கான செல்போன், இணைய சேவை முடக்கம், குறிப்பாக தேர்தல் நேரத்தில் என்பது பாகிஸ்தானில் இதுவரை நடக்காத ஒன்று. பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததுள்ளன என்றாலும் வாக்குப்பதிவு நாளில் தனிமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. வடக்கில் உள்ள இஸ்மாயில் கானில், நான்கு போலீஸ் அதிகாரிகள் அவர்களது வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பல காயங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பலுசிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்கள் மீது புதனன்று நடத்தப்பட்ட இருவேறு வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த செல்போன், இணைய முடக்கத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி விமர்சித்துள்ளார். கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான அவர், “உடனடியாக” அந்தச் சேவைகளை மீட்டெடுக்க அழைப்பு விடுத்தார். நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் பிபிசி பார்வையிட்ட ஒரு வாக்குச்சாவடி நிலையத்தின் நுழைவாயிலில் ஆயுதமேந்திய காவல்ர்கள் இருந்தனர். மேலும் ராணுவ அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். முற்றிலும் நியாயமான தேர்தல்: நவாஸ் ஷெரிஃப் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகள் மர்யம் லாகூரில் உள்ள இக்ராவில் இன்று மதியம் வாக்களித்தனர். கடும் பாதுகாப்பு இருந்தது. அதிகாரிகள் அவர்களைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கியிருந்தனர். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா எனக் கேட்டதற்கு, நவாஸ் ஷெரிஃப் “முற்றிலும் நியாயமாக நடந்துள்ளது” என்று பதிலளித்தார். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிக்கு வெளியே பிபிசியிடம் பேசிய அவர், “ராணுவத்துடன் தனக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை” என்று கூறினார். ஒருவேளை அவர் ஜெனரல்களுடன் பகைமையில் தனது நீண்டகால வாழ்க்கையைக் கழித்ததை மறந்திருக்கலாம். “நாகரீகம் இல்லாமை, ஆணவ, நாட்டைச் சீர்குலைக்கும், அழிக்கும் கலாசாரம்” என்று இம்ரான் கானின் தலைமையிலான பாகிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டார். மேலும், அவரது கட்சி வெற்றி பெற்றால், “மக்களின் வாழ்க்கை எளிதாகும், பணவீக்கம் குறையும். மக்கள் விரும்புவது இதுதான். அவர்களின் விருப்பம் நிறைவேற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். லாகூரில் டஜன்கணக்கான வாக்காளர்கள் நசீராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் சிறிய தாழ்வாரத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் வாக்களிக்க இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாகக் கூறினார்கள். அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பொருளாதார போராட்டங்கள் பாகிஸ்தானின் இந்தத் தேர்தலில் 12.8 கோடி மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பாதிப் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 5,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 313 பேர் மட்டுமே பெண்கள். அவர்கள் 336 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 266 இடங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரிஃப்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் இதில் பங்கெடுத்துள்ளன. இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடும் கிரிக்கெட் பேட் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இந்த நடவடிக்கையால், சுயேட்சைகளாகப் போட்டியிடும் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள், கால்குலேட்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர், பகடை உள்ளிட்ட பிற சின்னங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் படிப்பறிவில்லாத நாட்டில் தேர்தல் சின்னங்களே வாக்கெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிடிஐ உறுப்பினர்கள், ஆதரவாளர்களை அடைத்து வைத்து, பேரணிகள் நடத்துவதைத் தடை செய்வது ஆகியவற்றின் மூலம் அவர்களைத் திறம்பட முடக்கியது உள்ளிட்ட பிற தந்திரங்களும் பிடிஐ வேட்பாளர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரம் ஐந்து நாட்களில் மூன்று தனித்தனி வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் குறைந்தது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். பட மூலாதாரம்,EPA கடந்த தேர்தலின்போது ஊழலுக்கான தண்டனையைப் பெற்றிருந்த நவாஸ் ஷெரிஃப் கட்சிக்கு இம்முறை மக்கள் வாக்களிக்க முடிந்தது. அவர் 1999 ராணுவ சதித்திட்டத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் 2017இல் அவரது மூன்றாவது பதவிக்காலம் குறைக்கப்பட்டது. ஆனால், அவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் பதவியில் இருப்பதற்கான வாழ்நாள் தடை ரத்து செய்யப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் அவர் மீதான வழக்குகள் நீக்கப்பட்டு, நான்காவது முறையாகத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் 169 இடங்கள் தேவைப்படும். எந்தக் கட்சியேனும் பெரும்பான்மையை வெல்ல முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2022இல் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத் துயரங்களால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது, வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின்படி, 2023ஆம் ஆண்டு பாகிதானில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2017 முதல் பாதுகாப்புப் படைகள், போராளிக் குழுக்கள், பொதுமக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் 90,675 வாக்குச் சாவடிகளில் பாதியை “உணர்திறன்” மிக்கப் பகுதி என வகைப்படுத்தியுள்ளது. அதாவது வன்முறை அபாயம் உள்ள பகுதி என எச்சரித்துள்ளது. இந்த வகைப்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் தேர்தல் வன்முறை வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்தாலும், வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 23:59 (19:00 GMT) வரை வேட்பாளர்கள், பிரசாரம் மற்றும் கருத்துக் கணிப்புகள் பற்றி என்ன கூறலாம் என்பது உட்பட, தேர்தல் கவரேஜ் தொடர்பான கடுமையான விதிகள் நடைமுறையில் இருக்கும். கூடுதல் செய்தி: பிபிசி உருது மற்றும் ஃப்ளோரா ட்ரூரி https://www.bbc.com/tamil/articles/cz5jpxmkm8jo
-
ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி - கிரியெல்ல
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஆற்றிய சிம்மாசன பிரசங்கத்தை செவிமெடுத்து, வாத பிரதிவாதங்களை முன்வைத்தோம்.ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கை பிரகடனத்தை நாங்கள் புறக்கணித்தோம். ஜனநாயகத்துக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தின் மீது அரசாங்கம் வன்மையான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றில் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை. ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து 'எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் ' என ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு வெட்கமில்லையா? நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் 40 இற்கும் அதிகமான வரிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியின் போது அமுல்படுத்தப்பட்ட சரீர வரிகள் ஊடாக எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படலாம். தொழில் இல்லாத இளைஞர்கள் கூட வருமான வரி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது நகைப்புக்குரியது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை. அரசியலமைப்புக்கு அமைய இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சமடைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிச்சயம் தோற்கடிப்போம். எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி கோருகிறார். இவர்களுக்கு ஆதரவு வழங்கினால் எமக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்காது. ஆகவே அட்டை பூச்சிப் போல் ஒட்டிக் கொண்டு இருக்காமல் தேர்தலை நடத்துங்கள். தமக்கான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துக் கொள்வார்கள் என்றார். https://www.virakesari.lk/article/175884
-
சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
Published By: VISHNU 08 FEB, 2024 | 09:35 PM சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது. இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/175928
-
புவி வெப்பமயமாதல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 05:08 PM புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவா்கள் வரம்பை நிா்ணயம் செய்தனா். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை முதல் முறையாக ஒரு வருடத்தில் கடந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவி வெப்பமயமாதல் அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் வேகம் குறைவடையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டு முதல் இவ் வருடம் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் வெப்பமயமாதல் 1.52 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தரவு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் கடும் வெப்பம் நிலவிய எட்டாவது மாதமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும். https://www.virakesari.lk/article/175904
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு
08 FEB, 2024 | 08:22 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்ட காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் முதலான பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் யானையின் தாக்குதல் அதிகரித்திருப்பதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கும் பிரதேச மக்கள், கிராமத்துக்குள் யானைகள் வருவதை தடுக்க பாதுகாப்பு வேலிகள் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/175914
-
சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி
Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
Pakistan Under-19s 179 Australia Under-19s (49.1/50 ov, T:180) 181/9 AUS Under-19 won by 1 wicket (with 5 balls remaining)
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை - சஜித்
தனியார் பல்கலை மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் 08 FEB, 2024 | 03:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஹொரய்ஸன் மற்றும் கே.ஐ.யு ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) விசேட கூற்றொன்றை முன்வைத்து, மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வட்டியில்லாத வங்கிக் கடன் வழங்கப்படாததன் காரணத்தால் அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹொரய்ஸன் மற்றும் கே.ஐ.யு ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான செயற்பாடுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு அந்த இரண்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இம்முறை ஏழாவது மாணவர் குழுவும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க பல்கலைக்கழகங்கள் அல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் சுமார் 5000 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வட்டியில்லாக் கடன் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகிறது. இதற்கு முன்னரும் எதிர்க்கட்சித் தலைவரால் இந்த கேள்வி சபையில் முன் வைக்கப்பட்டதுடன் அதற்கு மறுநாளே ஜனாதிபதி செயலகத்தில் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் போது இரண்டு வங்கிகளினதும் முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் திறைசேரி அதிகாரிகள் ஆகியோரும் அழைக்கப்பட்டு அந்த விவகாரத்திற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது. இதற்கு முன்னர் கடன் பெற்றுக் கொண்ட சுமார் 200 பேர் அந்த கடனை மீள செலுத்த தவறிய காரணத்தாலேயே இந்த கடனை மீள பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/175895
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
Pakistan Under-19s 179 Australia Under-19s (45/50 ov, T:180) 164/7 Aust U19 need 16 runs in 30 balls. Current RR: 3.64 • Required RR: 3.20 • Last 5 ov (RR): 13/1 (2.60)
-
ஐசிசி பவுலிங் தரவரிசையில் பும்ரா முதலிடம்
ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை நெருங்கினார். ஆனால், அவரால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. 1979-80 ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கபில் தேவ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் செய்ய முடியாத சாதனையை தற்போது பும்ரா செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சமீபத்திய தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி, 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. இந்த வரிசையில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை (841 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார் பும்ரா. அஸ்வின் மார்ச் 2023இல் இருந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதற்கு முன், தரவரிசைப் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்ததே அவரின் முந்தைய சாதனைகளில் சிறந்தது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பாராட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் பும்ரா ‘ஆட்ட நாயகன்` விருதை வென்றார். இந்தப் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சிறப்புப் பிரிவு பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாத்தியமான, அற்புதமான இன்ஸ்விங் யார்க்கர் மூலம் பும்ரா, ஆலி போப்பின் மிடில் மற்றும் லெக் ஸ்டம்புகளை வீசிய விதத்தைப் பாராட்டினார். தான் பார்த்த சிறந்த யார்க்கர்களில் இதுவும் ஒன்று என்றார். இந்தியாவிலிருந்து நான்காவது பந்து வீச்சாளர் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 45 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரே இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இது பத்தாவது முறையாகும். பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில், பத்து முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா. ஐதராபாத் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா. அவர் 10.67 என்ற சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இதுவரை நான்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நான்காவது பந்து வீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பும்ராவுக்கு முன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தனர். வித்தியாசமான பந்துவீச்சும் காயங்களும் பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சு வித்தியாசமானது. இந்தத் தனித்துவமான பந்துவீச்சு நடவடிக்கையின் காரணமாக, பும்ரா குறைந்த ரன்-அப்பில் அதிக வேகத்தை அடைய முடிந்தது. ஆனால், இதிலுள்ள பிரச்னை என்னவென்றால், இத்தகைய அதிவேக பந்துவீச்சு முதுகுத்தண்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும். பும்ரா தனது சர்வதேச போட்டிகளை தொடங்கியதில் இருந்து இந்த பந்துவீச்சு நடவடிக்கையால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது என்று ஆய்வாளர்கள் கருதினர். வயது மற்றும் உடற்தகுதி காரணமாக, முதல் ஐந்து ஆண்டுகளில் பும்ரா எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக அவருக்குக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில், இடதுகை கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை. ஆனால், அவர் காயத்தில் இருந்து மீண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டில், பும்ரா கீழ் முதுகு அழுத்த எலும்பு முறிவு பிரச்னையால் அவதிப்பட்டார். வழக்கமான கதிரியக்க பரிசோதனையின்போது இந்தச் சிக்கல் கண்டறியப்பட்டது. இதனால் அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்தியா-நியூசிலாந்து தொடருக்காக இந்திய அணிக்குத் திரும்பினார். முதுகு வலியிலிருந்து மீண்ட பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா 2022இல், கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து மீள குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், இதிலிருந்து மீள கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆனது. இதனால், 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் பும்ரா தவறவிட்டார். மார்ச் 2023இல் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் கழித்த பிறகு, ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய கேப்டனாக பும்ரா அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பும்ரா 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் பும்ராவின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "அவர் ஒரு தலைமுறைக்கானவர்" என்று அவரை பாராட்டினார். பும்ரா அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறன் மற்றும் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் என டிராவிட் பாராட்டினார். அவர்தான் போட்டியின் வெற்றியாளர் என்று கூறினார். பும்ரா மீண்டும் களமிறங்கிய பிறகு சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுவதைவிட தற்போது நிம்மதியாக இருக்கிறது என பும்ரா கூறினார். இதிலிருந்து குணமடைவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்ததாகக் கூறினார். அதன் பிறகு பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தொடங்கி சமீபத்தில் நடைபெற்ற விசாகப்பட்டினம் டெஸ்ட் வரை விளையாடிய ஏழு போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 'முழு பலத்தையும் பயன்படுத்துவேன்' பட மூலாதாரம்,GETTY IMAGES விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு, தான் எண்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை என்றும் எண்களில் அக்கறை காட்டினால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். “இந்தியாவின் வெற்றிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என அவர் தெரிவித்தார். "விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு யார்க்கர் மட்டுமே ஒரே வழி என்று நான் நினைத்தேன். அதனால்தான் ஆலி போப்பிற்கு யார்க்கர் வீசினேன்" என்றும் அவர் கூறினார். "வேகப்பந்து வீச்சுக்கு நான் தலைவர் அல்ல. ஆனால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது எனது பொறுப்பு" என்றார். "ஒவ்வொரு விக்கெட்டும் வித்தியாசமானது. விக்கெட்டை எடுக்க எனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்" என்று பும்ரா கூறினார். https://www.bbc.com/tamil/articles/c3g0536g0geo
-
யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 05:27 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்துள்ளன. வலி.வடக்கு பிரதேசத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் நிலையில், காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்களால் பல வருடங்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதுடன், காணி விடுவிப்பு போராட்டங்களையும் பல்வேறு தடவைகள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேறிய காணிகளையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரும்பசிட்டி , கட்டுவான் மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன. அதில் மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளும் உள்ளடங்கியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில், அந்த கிராம அமைப்புக்கள் அண்மையில் கூடி ஆராய்ந்து, தமது காணிகளை சுவீகரிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முதல் கட்டமாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானித்துள்ளனர். https://www.virakesari.lk/article/175905
-
இலங்கை: 'போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு ராணுவமே பொறுப்பு' - நீதிமன்றம் உத்தரவு
படக்குறிப்பு, யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் புதன்கிழமை (பிப். 07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார். நடந்தது என்ன? கந்தசாமி இளரங்கன் என்ற 28 வயதான இளைஞன் ஒருவன், 2006ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி காணாமல் போனதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார். வாகன ஓட்டுநரான கந்தசாமி இளரங்கன் ஓமந்தை வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான முக்கிய சோதனைச் சாவடியாக ஓமந்தை சோதனைச் சாவடி அந்தக் காலப் பகுதியில் காணப்பட்டது. பெரும்பாலான தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டதாக இன்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கந்தசாமி இளரங்கன் பயணி ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுவதற்காக வேன் ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செலுத்தியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்த நிலையில், கந்தசாமி இளரங்கன், அவருடன் பயணித்த பயணி ஆகியோரை ராணுவம் இடைமறித்து சோதனை செய்துள்ளதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் ''ஓமந்தை சோதனைச் சாவடியில் ராணுவம் சோதனை செய்ததன் பின்னர், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடையாது. அவர் அந்த வழியாகப் பயணித்தமைக்கான ராணுவப் பதிவு, பதிவுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால், அவர் இத்தனை மணிக்கு வந்தார் என்பது தொடர்பான பதிவு உள்ளது. ஆனால், போனமைக்கான பதிவு இல்லை," என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். கடும் கட்டுப்பாடுகள் நிலவிய காலப் பகுதி என்பதால், கந்தசாமி இளரங்கனின் தாயாருக்கு உடனடியாக, அவரது மகனைத் தேட முடியாத நிலைமை அன்று காணப்பட்டுள்ளது. அதன் பின்னரான காலத்தில் தனது மகன் தொடர்பில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் ஆராய்ந்துள்ளதுடன், தனது மகன் தொடர்பான எந்தவித தகவல்களையும் அவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதையடுத்து, கந்தசாமி இளரங்கனின் தாயார், ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணைக்குழு, போலீஸ் உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறைப்பாடுகளைச் செய்த போதிலும், தனது மகன் தொடர்பான தகவல்களை தாயினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையிலேயே, கந்தசாமி இளரங்கனின் தாய், வவுனியா மேல் நீதிமன்றத்தில் 200ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிடுகின்றார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை ராணுவ தளபதி, ராணுவத்தின் 211ஆம் படையணியின் கட்டளை தளபதி உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். ''இலங்கை ராணுவத்தால் இந்த மனு மீது ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது. அவர் வந்தது உண்மைதான். ஆனால், அப்போதே அவர் சென்றுவிட்டார்," என இலங்கை ராணுவம் ஆட்சேபனை செய்ததாக மூத்த சட்டத்தரணி கூறுகின்றார். பட மூலாதாரம்,KOGULAN இவ்வாறான நிலையில், இறுதிக்கட்ட யுத்தம் வலுப்பெற்ற காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அதன் பின்னர், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கந்தசாமி இளரங்கனின் தாய், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மீள தொடர்வதற்கு மேல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். இதன் பின்னரான காலத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததுடன், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். ''கந்தசாமி இளரங்கன் வந்தது உண்மை. ஆனால், அவர் சென்றுவிட்டார்" என பிரதிவாதிகள் சாட்சியமளித்த பின்னணியில், அதை கந்தசாமி இளரங்கனின் தாய் நீதிமன்றத்தில் நிராகரித்துள்ளார். ''அவர் ராணுவத்திடம் இருந்து சென்றிருந்தால், எனக்கு அறிவித்திருப்பார். அவர் அந்த இடத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்," என தாய் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அத்துடன், கந்தசாமி இளரங்கனுடன் வேனில் பயணித்ததாகக் கூறப்படும் இளைஞனான உமாதரன் தொடர்பான தகவல்களும் இல்லை எனக் கூறிய மூத்த சட்டத்தரணி, அவர் தொடர்பில் யாரும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். இவ்வாறான விடயங்களை ஆராய்ந்ததை அடுத்தே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முக்கிய தீர்ப்பொன்றை நேற்று வழங்கியுள்ளார். தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது? படக்குறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்) ''மனுதாரர் அளித்த சாட்சியங்களிலும், ஏனைய சாட்சியங்களிலும் இருந்து கந்தசாமி இளரங்கன் அந்த இடத்திற்குப் போயிருக்கிறார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இவர் முற்று முழுதாக ஸ்ரீலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளார். கடைசியாக அவர் ராணுவத்தின் பொறுப்பிலேயே இருந்துள்ளார். எனவே, ராணுவமே பதிலளிக்க வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலான மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சர்வதேச சட்டங்கள், இலங்கை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்தச் சம்பவத்திற்கு இலங்கை ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிடுகின்றார். நீதிபதி ராணுவத்திற்கு விடுத்த உத்தரவு எதிர்வரும் ஜுன் 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தேதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனை, உயிருடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இலங்கை ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அது தவறும் பட்சத்தில், இலங்கை ராணுவம் கந்தசாமி இளரங்கனை வலிந்து காணாமல் ஆக்கியதாக தீர்மானித்து, அதற்கு நட்டஈடாக மனுதாரருக்கு மூன்று பிரதிவாதிகளும் கூட்டாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இப்படியான தீர்ப்புகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதா? ''சிங்கள பகுதிகளில் இவ்வாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழர் பகுதியில் இதுவே முதல் முறை. ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் கிடையாது. ஏனென்றால், இது சிவில் வழக்கு. நஷ்ட ஈடு மட்டும்தான் கொடுக்கச் சொல்லலாம்," என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிட்டார். இலங்கை ராணுவத்தின் பதில் பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இந்தத் தீர்ப்பு தொடர்பில் இலங்கை ராணுவத்தின் சட்டப்பிரிவு சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ராணுவம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது. ''இந்த வழக்கில் காணாமல் போன நபர் இருப்பாராயின், எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு இல்லையென்றால், மனுதாரருக்கு ஜூன் 3ஆம் தேதி ஆகும்போது ஒரு மில்லியன் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது சட்டப் பிரிவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு மேல் தாம் கூறுவது சிரமமான விடயமாகும்," என, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழுக்கு கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn0nqgrgxwvo