Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் - ஊழல் விசாரணை ஆணைக்குழு Published By: Vishnu 23 Sep, 2025 | 02:52 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று 2024 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர் விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஆறு பேர், முன்னாள் மாகாண ஆளுநர்கள் நால்வர், முன்னாள் தூவர்கள் 29 பேர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 2 நீதியரசர்கள் உள்ளடங்குகின்றனர். கடந்த கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறித்த காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரான (காலஞ்சென்ற)லொஹான் ரத்வத்தே, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார,காதர் மஸ்தான், பிள்ளையான் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் மாகாண ஆளுநர்களான ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க மற்றும் விலியம் கமகே ஆகியோரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225804
  2. பல கட்சி முறைமையை நீக்கி தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி - பொதுஜன பெரமுன 22 Sep, 2025 | 05:00 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம். பல கட்சி முறைமையை இல்லாதொழித்து,தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. போலியான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒருவருட காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருட கால ஆட்சியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போதைப்பொருட்கள் கிலோகிராம் கணக்கில் கைப்பற்றப்பட்ட ஆனால் தற்போது கொள்கலன் கணக்கில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோடிக்கணக்கான சொத்துக்கள் தமக்கு பரம்பரை வழியில் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பிடுகிறார்கள். ஆனால் தேர்தல் காலத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை.தாம் ஏழ்மை நிலையில் வாழ்வதாகவும், மக்களுடன் மக்களாக வாழ்வதாகவுமே குறிப்பிட்டார்கள். எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. அந்த மாநாட்டில் பங்குப்பற்றிய சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்துவமான கொள்கை உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம்.பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் நிபந்தனையற்ற வகையில் ஒன்றிணைவோம் என்றார். https://www.virakesari.lk/article/225780
  3. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள். மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள். அறிவியல் என்ன சொல்கிறது? எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும் இது மட்டும் இல்லை. நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன. வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது. "இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன். குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன். தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார். இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும். முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும் "மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன். "ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்." இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. தூக்கத்தின் நன்மைகள் இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது. இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை. அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன? ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம். ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது. "நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன். உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது. "நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05918r470do
  4. 10) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம்(சுழிபுரம் கிழக்கு, ஏழாலை வடக்கு) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸமா றுக்மன் குடும்பம் 40000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 23/09/2025 இன்று வரை மொத்தமாக 360070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.
  5. 22 Sep, 2025 | 04:07 PM (இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார திங்கட்கிழமை (22) இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த வெளிப்படுத்தல்கள் தொடர்பின் உள்ளடங்கள் குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகஷ சமர்ப்பித்துள்ள சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்கள் சந்தேகத்துக்குரியதாக காணப்படுகிறது. தான் சட்டத்தரணியாக பணிபுரிந்து சொத்துக்களை சேகரித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை காட்டிலும் அவரிடம் அதிகளவான சொத்துக்கள் இருக்கும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களிலும் அவரது சொத்துக்கள் இருக்கலாம், ஆகவே இவ்விடயம் குறித்து ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாடளித்துள்ளோம். இரண்டாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம். இவர் வசித்த கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கு 51 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணிகள் முறையான விலைமனுகோரலுடன் மேற்கொள்ளப்பட்டதா, அல்லது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் 51 கோடி ரூபாய் பதுக்கப்பட்டதாக என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இந்த முறைப்பாடு குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இல.260 டொரிங்டன் மாவத்தை கொழும்பு 07 இல் 360 இலட்சம் ரூபாவுக்கு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக அவருக்கு 360 இலட்சம் ரூபாய் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதில் சந்தேகம் உள்ளது. ராஜபக்ஷர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி நாட்டு மக்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியள்ளார்கள். இவர்களின் சொத்து குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பம் முறையற்ற சொத்து சேகரித்த விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை போன்று ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/225755
  6. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும். கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது. ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா? ஹைப்பர்தைமீசியா என்பது நோயா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர். "புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர். இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது. அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர் இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம். "தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார். மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார். இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார். அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார். "ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார். இதற்கான அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம். காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள். வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும். நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள். அச்சு பிசகாத நினைவாற்றல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ். இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர். இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார். இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார். 51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார். ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார். 2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது. இதற்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் "ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன. நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும். இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார். "சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். "சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது. இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது. இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM). "இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது. வரமா? சாபமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ் ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்? "பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார். "இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார். "நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார். "நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார். "ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு உண்டா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். "இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார். "இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார். இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார். மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o
  7. தங்காலையில் லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்! 22 Sep, 2025 | 04:59 PM அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். 245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை (22) இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்போது வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று லொறிகளில் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் மற்றும் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இந்த லொறியின் சாரதி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225781
  8. ஜனாதிபதி ஜப்பானுக்கு செப். 27 உத்தியோகபூர்வ விஜயம் 22 Sep, 2025 | 04:55 PM (நமது நிருபர்) ஜப்பான் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் சனிக்கிழமை (27) ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகாரத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதிக்கும், ஜப்பான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பரஸ்பர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து டோக்கியோவின் முன்னணி ஜப்பான் செயற்றிட்டம் மற்றும் முதலீட்டாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். 2025 மசாகா கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/225778
  9. 22 Sep, 2025 | 04:43 PM திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/225771
  10. 22 Sep, 2025 | 04:33 PM வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர். https://www.virakesari.lk/article/225766
  11. 22 Sep, 2025 | 02:14 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225744
  12. சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 11:01 AM மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 9மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, இரண்டு டி-56 மேகசின்கள், 115 சுற்றுகள் டி-56 வெடிமருந்துகள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பத் மனம்பேரியை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு செப்டெம்பர் 17ஆம் திகதியன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயனங்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து வைத்ததாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மித்தெனியவில் அண்மையில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பத் மனம்பேரியிடம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225721
  13. இலங்கை ஜனாதிபதியாக ஓராண்டை நிறைவு செய்த அநுர; தமிழர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களை பின்தள்ளி, புதிய ஆட்சியொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றுடன் ( செப்டெம்பர் 21) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய நிலையில், புதிய கட்சியாக முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியுள்ளது. ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை இல்லாதொழித்து, நாட்டின் பின்னடைவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவு இந்த ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த கட்டுரையாகும். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கியமை பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ''வளமான நாடு - அழகான வாழ்க்கை'' என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள், இந்த அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சிக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியாக காணப்பட்ட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ வீடுகள், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில், இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஊழல், மோசடி புகார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஊழல், மோசடி, வீண்விரயங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரணில் அதிபராக இருந்த போது தனது அமெரிக்காவிற்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, அங்கிருந்து லண்டன் நோக்கி பயணித்தார். தனது மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டமையின் ஊடாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தியிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்களாக மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜித்த சேனாரத்ன, ஷஷிந்திர ராஜபக்ஸ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தவிர, ஊழல், மோசடி, வீண்விரயம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. போதைப்பொருளை ஒழித்தல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், மறைத்து வைக்கப்பட்டு போதைப்பொருட்கள் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் தலைமறைவாகி, இலங்கைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்த நிழலுலக தலைவர்கள் என கருதப்படும் பிரதான சந்தேகநபர்கள் அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனூடாக நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயண பொருட்கள் மீட்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் இலங்கை ஜனாதிபதிகள் வசம் காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக முன்வைத்திருந்தது. எனினும், அந்த உறுதிமொழியை இதுவரை நிறைவேற்ற தவறியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அடையாளம் காணுதல் இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது. எனினும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக விசாரணைகள் முடிவடையாத நிலையில், அந்த உறுதிமொழியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குதல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கையானது, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவித்திருந்த போதிலும், கடந்த ஒரு வருட காலத்தில் அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. பிரதான உறுதிமொழிகள் உள்ளடங்கலாக மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர்களின் காணி விடுவிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியிருந்தது. எனினும், அந்த உறுதிமொழியும் இதுவரை முழுமை பெறாதுள்ளது. சில பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், முழுமையாக காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, இன்று வரை எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், அவர்களின் விடுதலைக்கான தொடர்ந்தும் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பிலான இறுதி முடிவு இன்று வரை எட்டப்படாதுள்ளமையை காண முடிகின்றது. பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மலையக தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், லயின் அறைகளில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு நிரந்தர வீடொன்றை கட்டிக்கொள்வதற்கான காணிகள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இவ்வாறு தேர்தல் மேடைகளிலும், கொள்கை பிரகடனத்திலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முழுமையாக ஒரு வருட காலத்திற்கு நிறைவேற்றப்படவில்லை. எனினும், தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? வடகிழக்கு மாகாணங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கும் வகையில் தற்போதைய ஆளும் கட்சியாக இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன்படி, வடகிழக்கு மாகாணம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைத்திருக்கின்றதா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெருமளவான நம்பிக்கை வைத்து, வரலாற்றில் என்றுமே இல்லாதளவு வாக்குகளை கடந்த முறை வழங்கியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளுக்கு அதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த அங்கீகாரம் இல்லாது செய்து, தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வங்கியை அந்த மாகாணங்களில் பெற்றிருந்தது. பட மூலாதாரம், PARAMESWARAN WIKNESHWARAN படக்குறிப்பு, மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வாக்குகள், இன்று தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? இந்த விடயம் தொடர்பில் மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''பொதுவாக இலங்கை மக்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது சிங்களமாக இருக்கலாம், தமிழர்களாக இருக்கலாம். இவர்களிடம் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஊழல், மோசடிகளை இல்லாது செய்வோம். போதைப்பொருட்களை இல்லாது செய்வோம்." இந்த மாதிரியான சில பொதுவான கோரிக்கைகள் வெளிவந்தன. இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் ஓரளவு முன்னோக்கி செல்வதாக தெரிகின்றது. ஆனால், தமிழர்களின் கோரிக்கை என்று பார்த்தால், ஈழத் தமிழர் பிரச்னையாக இருக்கலாம். அரசியல்தீர்வு விடயமாக இருக்கலாம். கடந்த கால குற்றச்சாட்டுக்கள் மீதான தீர்வாக இருக்கலாம். இந்த மாதிரியாக விடயங்களில் இந்த அரசாங்கம் ஒரு அடியேனும் முன்நோக்கி வைத்ததாக தெரியவில்லை." என்றார். வெளிப்படையாக தெரியவில்லை. அரசியல் தீர்வு, போர் குற்றச்சாட்டுக்கள், காணாமல் போனோர் விடயங்கள், வடக்கு கிழக்கு பொருளாதாரம், மலையக தமிழ் மக்களின் சம்பள பிரச்னையாக இருக்கலாம். இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் நழுவி செல்லும் போக்கை கடைபிடித்து செல்வது தெட்ட தெளிவாகவே தெரிகின்றது. கடந்த அரசாங்கங்கள் செய்த அதேவேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் தொடர்வதாக கூட இருக்கலாம். அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவிப்புக்களின் தமிழர்களின் பிரச்னைக்கான தீர்வு இல்லை என்பதே உண்மை.'' என மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். எதிர்கட்சிகள் ஒன்றிணைவு பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு அடுத்த நொடியே, பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்டு, தற்போது பிரதான எதிர்கட்சியாக விளங்குகின்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஏனைய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் வழங்க முன்வைத்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் விடுதலை மற்றும் அரசாங்கத்திற்கு செயற்பாடுகளுக்கு எதிராகவே தாம் ஒன்றிணைந்ததாக கூறிய பிரதான எதிர்கட்சிகள், இன்று ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் என்றும் இல்லாதவாறு இம்முறை பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் ஒன்று கூடியிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் அமர்ந்து, அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் பதில் - பிமல் ரத்நாயக்க என்ன கூறுகின்றார்? பட மூலாதாரம், FB/BIMAL RATHNAYAKE படக்குறிப்பு, தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியுள்ள போதிலும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டமையினால் தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். எனினும், உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே தாம் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ''இந்த நாட்டு மக்கள் 76 வருடங்கள் சென்ற பாதையை ஒரு புறம் வைத்து விட்டு, புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி புதிய பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அநுர சகோதரர் ஜனாதிபதியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. உண்மையில் நாம் வேலை செய்ய ஆரம்பித்தது மே மாதம் 6ம் தேதிக்கு பின்னர். மே 6ம் தேதியே எமது உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவாகினார்கள். அதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சில வேலைகளை எமக்கு செய்ய இடமளிக்கவில்லை. தேர்தல் நடாத்தப்படும் காலப் பகுதியில் எம்மால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது. மே 6ம் தேதிக்கு பின்னரே நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்.'' என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydn4lp32eo
  14. Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:01 AM லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது. அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த "தாக்குதலின் விளைவாக, சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர்" என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225705
  15. 22 Sep, 2025 | 05:30 PM (இராஜதுரை ஹஷான்) சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னரான சட்டத்தில் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே பகிரங்கப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் நாங்கள் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறித்த விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு வெளிப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் தலைமையிலான அரசாங்கத்தின் தலைவர்கள் அறியவில்லை. இந்த சட்டத்தின் ஊடாக தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் அறிந்திருக்கவில்லை. 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 மார்ச் மாதம் வரையிலான காலத்தை வரையறுத்து சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை. சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல் அல்லது விடயங்களை மறைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவரின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்கப்படாத சொத்து அவருக்கு உரிமையானதாக இருந்தால் அதனை அரசுடமையாக்க முடியும்.உண்மை தகவல்களை மறைத்தால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது ஒரு வருடகால சிறைதண்டனை விதிக்கப்படும். சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஒருவருட கால ஆட்சியில் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225783
  16. பாலத்தீனத்துக்கு பெருகும் ஆதரவு; தனி நாடாக அங்கீகரிப்பதால் என்ன மாற்றம் வரும்? பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிக்க தயாராகி வருகின்றன. பிரிட்டனின் முடிவை விமர்சித்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், இது ஹமாஸுக்கு அளிக்கும் வெகுமதியைத் தவிர வேறில்லை என கூறியுள்ளது. #Palestine #Britain #Israel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. 22 Sep, 2025 | 01:50 PM (எம்.மனோசித்ரா) இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22) நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 'மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை' என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார். வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை - இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225741
  18. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு! Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:03 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை ( செப்டெம்பர் 21) அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார். மேலும் "பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் தங்கள் கூட்டாண்மையை" வழங்கியுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் "பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பை எப்போதும் நிறுவுவதைத் தடுக்கும் முறையாக" செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையிலான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, அமைதியான சகவாழ்வையும் ஹமாஸின் முடிவையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது, அதற்கான எந்த வெகுமதியும் அல்ல," எனவும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன அதிகாரசபை கனடாவிற்கு அதன் ஆட்சியை சீர்திருத்துவதில் "நேரடி உறுதிமொழிகளை" வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது. கனடா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் அங்கீகரிப்பது இரு நாடு தீர்வுக்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஒரு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225706
  19. தந்தை அருகில் இருந்த போதே 13 வயது மகனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - மேற்கு கரையில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் மஜர்மே தனது 13 வயது மகன் இஸ்லாமின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கிறார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெனின் 22 செப்டெம்பர் 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் நாடுகள் குடிமக்களைப் பாதுகாக்கத்தான் இருக்கின்றன. ஒரு தந்தையும் தனது பிள்ளையைப் பாதுகாக்கவே விரும்புகிறார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், தனது 13 வயது மகன் இஸ்லாம், இஸ்ரேலியப் படைகளால் இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அப்தெல் அஜீஸ் மஜர்மே அருகில் நின்றுகொண்டிருந்தார். "என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. ஒரு ராணுவ ஜீப் அருகில் வந்து, ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தங்கள் ஆயுதங்களால் என்னைக் குறிவைத்து, என்னை அங்கிருந்து செல்லும்படி கத்தினர். என் மகன் கொல்லப்பட்டான் என்று கூட எனக்குத் தெரியாது. நான் அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தேன்." ஜனவரி முதல் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முகாமிற்கு தான் சென்றது, அங்கிருக்கும் தனது வீட்டிலிருந்து குடும்ப ஆவணங்களை எடுக்கத்தான் என்று அப்தெல் அஜீஸ் கூறினார். "நான் யாரிடமும் புகார் அளிக்க முடியாது," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பாலத்தீன அதிகார சபையால் தங்களையே கூட பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை - அது யூதர்களின் முடிவுகளை மட்டுமே செயல்படுத்துகிறது." ஒரு பாலத்தீனராக, அப்தெல் அஜீஸ் தனது அதிகாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், ஒரு தந்தையாக அவர் வேதனையில் துடிக்கிறார். "என் மனதிற்குள்ளேயே, அந்த வீரனிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஏன் ஒரு 13 வயது பையனைத் தேர்ந்தெடுத்தாய்? நான் அவனுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். என்னைச் சுட்டிருக்கலாம். ஏன் குழந்தைகளைச் சுடுகிறீர்கள்? நான் இங்கே இருக்கிறேன், என்னைச் சுடு." பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் செப்டம்பர் 9-ஆம் தேதி தனது மகன் இஸ்லாமைப் புதைத்தார். சந்தேக நபர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அந்தப் பதின்ம வயது சிறுவன் என்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பதை விளக்க அது மறுத்துவிட்டது. ஜெனின் போன்ற நகரங்கள், இஸ்ரேல்-பாலத்தீன ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பாலஸ்தீன அதிகார சபையின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. இவை ஒரு அரசு உருவாவதற்கான விதைகளாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், அங்கு வளர்ந்தது பயங்கரவாதம் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஜனவரியில், காஸாவில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, ஆயுதமேந்திய பாலத்தீன குழுக்களை ஒடுக்க ஜெனின் மற்றும் அண்டை நகரமான துல்கரேமிற்கு அது டாங்கிகளை அனுப்பியது. அப்போதிருந்து, இஸ்ரேலியப் படைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இரு நகரங்களிலும் உள்ள அகதிகள் முகாம்களில் பெரும் பகுதிகளை அழித்து, மற்ற பகுதிகளில் கட்டடங்களை இடித்து வருகின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாடு மேற்கு கரை முழுவதும் பரவும் அதேவேளையில், காஸா போரும் தொடரும் நிலையில், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும் பல நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்கத் தயாராகி வருகின்றன. ஜெனின் மேயர் முகமது ஜாரர், இஸ்லாம் சுடப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள முகாம் நுழைவாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் முன்பு சென்றபோது இங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் இப்போது இல்லை. ஆனால், ஒரு பெரிய மண் திட்டு சாலையைத் தடுத்துள்ளது. இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்னும் உயரமான கட்டடங்களிலிருந்து அந்தப் பகுதியை நோட்டமிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஜெனின் நகரத்தில் சுமார் 40% பகுதி இப்போது இஸ்ரேலியப் படைகளுக்கான ஒரு ராணுவப் பகுதியாக உள்ளது என்றும், முழு முகாமையும் உள்ளடக்கிய சுமார் கால் பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் ஜாரர் என்னிடம் கூறினார். "இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல, ஒரு பெரிய அரசியல் திட்டம் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்தது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கு கரையை இணைக்க விரும்புகிறது. அதற்கான தயாரிப்பாக, அதன் திட்டத்திற்கு எந்த [ஆயுதமேந்திய] எதிர்ப்பும் இல்லாமல் இருக்க அது விரும்புகிறது." ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு ஊதியம் வழங்க பாலத்தீன அதிகார சபைக்கு தேவைப்படும் வரி வருவாயைத் தடுத்து, அதை நீண்ட கால பொருளாதார முற்றுகையின் கீழும் இஸ்ரேல் வைத்துள்ளது. கொல்லப்பட்ட பாலத்தீன பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக இஸ்ரேல் அதன் மீது குற்றம் சாட்டுகிறது. பாலஸ்தீன அதிகார சபையோ இப்போது அந்த நிதி உதவித் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறுகிறது. உள்ளூர் மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதும், இளைஞர்களை வெளியேறாமல் இருக்கும்படி சமாதானப்படுத்துவதும் கூட இப்போது மிகவும் சவாலான காரியமாக உள்ளது என்று ஜாரர் கூறினார். இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்திருந்தாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் அதை அங்கீகரிப்பது முக்கியமானது என்றார் அவர். "இது, ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தாலும் கூட பாலத்தீன மக்களுக்கு ஒரு அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த அங்கீகாரம் மேற்கு கரையில் [அதிகமான] ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அது பாலத்தீன மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சர்வதேச சமூகம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அழைக்கப்படும்." பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஒரு பாலத்தீன அரசு அங்கீகரிக்கப்படுவது, இஸ்ரேலுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் உள்ள அரசியல் பிளவை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. "ஒரு பாலத்தீன அரசு இருக்காது," என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கு கரையில் குடியேறியவர்களிடம் கடந்த வாரம் கூறினார். "இந்த இடம் எங்களுடையது. எங்கள் பாரம்பரியத்தையும், எங்கள் நிலத்தையும், எங்கள் பாதுகாப்பையும் நாங்கள் கவனித்துக் கொள்வோம்." என்றார் அவர். நெதன்யாகு ஒரு பாலத்தீன அரசைத் தடுப்பதன் மூலமே தனது அரசியல் வாழ்க்கையை உருவாக்கினார். அவரது அரசு மேற்கு கரையில் யூத குடியேற்றங்களை விரிவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகள் அந்த பகுதியை இஸ்ரேலுடன் முறையாக இணைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் சமீபத்தில் மேற்கு கரையில் 82% பகுதியை இணைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். மீதமுள்ள பாலத்தீன பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று துண்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிப்பதை எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையைப் பிடித்தது. பின்னர் அதை விட்டு வெளியேறவில்லை. ஜெனிவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் குடிமக்களின் குடியிருப்புகளை நிறுவுவது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கு கரைக்கு ஒரு வரலாற்று யூத உரிமை உள்ளது என்று இஸ்ரேல் வாதிடுகிறது. சுமார் அரை மில்லியன் குடியேற்றம் செய்யப்பட்டு, இப்போது அங்கு வாழ்கின்றனர். குடியேற்ற விரிவாக்கத்தைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய அமைப்பான 'பீஸ் நௌ' (Peace Now), கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு கரை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய புறக்காவல் நிலையங்கள் தோன்றியுள்ளதாகக் கூறுகிறது. தொலைதூர குடியிருப்புகள் சர்வதேச மற்றும் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை. ஆனால், நெதன்யாகு அரசிடமிருந்து அவை சாலைகள், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வடிவில் மறைமுக ஒப்புதலையும் அரசு ஆதரவையும் பெறுகின்றன. இந்த கோடைக்காலத்தின் தொடக்கத்தில், நப்லஸின் தெற்கே தனது வீட்டுக்கு அடுத்துள்ள மலையில் புதியவர்கள் குடியேறியிருப்பதை அய்மான் சூஃபான் கண்டார். தனது ஜன்னலிலிருந்து, அவரும் அவரது பேரக்குழந்தைகளும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அமைத்த எளிய மரக் கூடாரம் மற்றும் தகர கொட்டகையைத் தெளிவாகக் காண முடிகிறது. அவர்கள் அருகிலுள்ள இட்சார் குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று அய்மான் கூறுகிறார். படக்குறிப்பு, நப்லஸுக்கு அருகில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தொலைதூர குடியிருப்பு தோன்றியது. "எங்களை எங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றத்தான் அவர்கள் இங்கு இந்த தொலைத்தூர குடியிருப்பை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடியேற்றவாசி வந்து, வீட்டின் கதவை தட்டி, 'வெளியேறு, வெளியேறு!' என்று கத்துகிறான்," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் தங்கள் குப்பைகளை எங்கள் வீட்டு வாசலில் எறிகிறார்கள். நான் அதிகாரிகளை அழைக்கிறேன். அவர்களோ, 'நாங்கள் ராணுவத்தை அனுப்புவோம்' என்று கூறுகிறார்கள். ஆனால், ராணுவம் ஒருபோதும் வருவதில்லை. குடியேற்றவாசிகள் தான் ராணுவம், அவர்கள்தான் போலீஸ், அவர்கள்தான் எல்லாம்." 1967-ல் இஸ்ரேல் மேற்கு கரையை ஆக்கிரமித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, புரின் கிராமத்திற்கு அருகில் அய்மானின் குடும்பம் இந்த வீட்டைக் கட்டியது. படக்குறிப்பு, தனது வீட்டிலிருந்து புதிய தொலைதூர குடியிருப்பை அய்மானால் பார்க்க முடிகிறது. இந்த கிராமப்புற பகுதிகள் போன்ற இடங்கள், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், அங்குள்ள குடியேற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்கால பாலத்தீன அரசிடம் இறுதியில் ஒப்படைக்கப்படும் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டன. ஆனால், அங்கே இஸ்ரேலிய கட்டுப்பாடு நிலைத்துவிட்டது, குடியேற்றங்கள் பெருகியுள்ளன. இஸ்ரேலியப் படைகள் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆதரவளிக்கின்றன என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. 2003-ல் குடியேற்றவாசிகள் வீட்டிற்குத் தீ வைத்தபோது தனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றும், அதற்குப் பிறகு தனது வீடு பலமுறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அய்மான் கூறினார். "யார் என்னைப் பாதுகாக்க வேண்டும்," என்று அய்மான் கேட்டார். "பாலத்தீன போலீசா? நகரங்களில் இது நடப்பதைத் தடுக்க கூட அவர்களால் முடியவில்லை, இங்கு எப்படி வருவார்கள்? இங்கே, எனது பாதுகாப்பு, என்னை ஆக்கிரமித்தவர்களின் கைகளில் உள்ளது." களத்தில் எதுவும் மாறாது என்றாலும் ஒரு பாலத்தீன அரசை சர்வதேச ரீதியாக அங்கீகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்று அவர் கூறுகிறார். "வரப் போவது இன்னும் மோசமானது," என்று அவர் கூறினார். "ஆனால், நான் இந்த வீட்டை விட்டு வெளியேறினால், அது நான் பிணமாக வெளியேற்றப்படும் போதுதான். நான் பிறந்த, வளர்ந்த, என் குழந்தைப் பருவத்தைக் கழித்த இந்த வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு ஒரு நினைவு உள்ளது. நான் எப்படி இதை விட்டு வெளியேற முடியும்?" ஓஸ்லோ ஒப்பந்தங்களுக்குப் பிந்தைய தசாப்தங்களில், இஸ்ரேலிய விவரிப்புகள் கடுமையாகியுள்ளன. ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்கள் வலுப் பெற்றுள்ளன. பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாடு குறைந்துவிட்டது. "பாலத்தீனம் ஒருபோதும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததில்லை. ஒருபோதும் இருக்கவும் போவதில்லை," என்று மகனை இழந்த தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கூறினார். "இன்றோ, நாளையோ, ஒரு ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ, அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள். பாலத்தீனம் விடுவிக்கப்படும்." இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரண்டு தனிநாடுகள்தான் இங்குள்ள மோதலுக்கான தீர்வு என்ற யோசனையை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரிக்கின்றன. பாலத்தீன பிரதேசங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள போதிலும், பாலத்தீன அமைப்புகள் பலவீனமடைந்துள்ள போதிலும் இந்த நிலைப்பாட்டில் அந்நாடுகள் உள்ளன. இப்போது, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகள் இணைப்பிற்காக அழுத்தம் கொடுப்பதால், காஸா போர் மற்றும் அதற்குப் பிறகு காஸாவை யார் ஆள்வார்கள் என்ற கேள்விகள் அந்த அரசியல் முட்டுக்கட்டையை வெளிப்படையான மோதலாக மாற்றியுள்ளன. சட்டங்கள் மற்றும் அறிவிப்புகளால் அல்லாமல் அரசும் இறையாண்மையும் களத்தில் உள்ள உண்மைகளால் தீர்மானிக்கப்படும் என்று சில இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர். தனது ஒப்புதல் இல்லாமல் ஒரு பாலத்தீன அரசு இருக்க முடியாது என்று இஸ்ரேல் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறது. இப்போது, அங்கீகரிப்பை முன்னெடுப்பதன் மூலம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இஸ்ரேலால் மட்டும் தனிநாடு உருவாவதை தடுக்க முடியாது என்று சமிக்ஞை செய்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx0043gnrxo
  20. Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 09:59 AM பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, அமைதி மற்றும் இரு - மாநில தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் செயல்படுகிறோம் என அவர் தமது எக்ஸ் தளத்தில் காணொளி அறிக்கையொன்றினூடாக பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துகல் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து பிரான்ஸூம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக், காசாவில் பணையக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில பழமைவாதிகளிடமிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசு "நடக்காது" என ஞாயிற்றுக்கிழமை(21) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225704
  21. திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அனுஷ்டிப்பு 22 Sep, 2025 | 11:18 AM தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225727
  22. ஜனாதிபதி அநுர இன்று அமெரிக்கா விஜயம் 22 Sep, 2025 | 10:19 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 12 மணியளவில்) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானின் ஒசாகாவிற்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அங்கு சிறப்பு கண்காட்சி 2025 இல் கலந்து கொள்வார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாட்டின் தனித்துவமான சலுகைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225719
  23. மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்! 22 Sep, 2025 | 09:35 AM மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225712
  24. Published By: Vishnu 22 Sep, 2025 | 05:35 AM இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியலை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் மாநில அமைச்சர்கள், 29 முன்னாள் தூதர்கள் மற்றும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத முன்னாள் அமைச்சர் முன்னாள் மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். முன்னாள் ஆளுநர்கள் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலகா, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க, வில்லியம் கமகே ஆகியோர் தொடர்புடைய தேதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோகன் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/225702

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.