Everything posted by ஏராளன்
-
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி
இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன? பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை குறைந்தது 90% மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்துள்ளது கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக கூறும் ஓர் அறிக்கை, விரிவான, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் அளவுக்கான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐநாவில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 'இனப்படுகொலை (Genocide)' என்ற வார்த்தையும் அதை குற்றச்செயலாக கூறும் இந்த தீர்மானமும், நாஜி ஜெர்மனியால் 60 லட்சம் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதிலிருந்து நேரடியாக தாக்கம் பெற்றதாகும். போர் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் உடன்படிக்கைகளை காஸாவில் தங்களின் நடவடிக்கைகள் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது. தற்காப்பு, தங்கள் நாட்டு குடிமக்கள் மீதான பாதுகாப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் விதமாகவே தங்கள் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹமாஸால் பரப்பப்படும் யூத எதிர்ப்பு பொய்களால் ஈர்க்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலியர்கள் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். தங்கள் நாட்டுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, இந்த கவுன்சிலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா புறக்கணித்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன. இஸ்ரேலின் பாரம்பரிய மேற்கத்திய நட்பு நாடுகளும் ஆபிரஹாம் உடன்படிக்கைகளில் (Abraham Accords) இஸ்ரேலுடனான தங்கள் நாட்டு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவந்த வளைகுடா அரபு முடியாட்சி நாடுகளும் இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்துள்ளன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கடும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸா பெருமளவு அழிவை சந்தித்துள்ளது அடுத்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில், சுதந்திரமான பாலத்தீன நாட்டுக்கான இறையாண்மையை அங்கீகரிக்கும் மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இணைய உள்ளன. இந்த நகர்வு பெரிதும் அடையாள ரீதியான நடவடிக்கையாக இருக்கும். நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து பாலத்தீனத்தில் குடியேற சியோனிய யூதர்கள் (Zionist Jews) வந்தபோது தொடங்கிய இந்த மோதலின் எதிர்காலம் குறித்த விவாதத்தை இது மாற்றும். ஆனால், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது யூத எதிர்ப்பு என்றும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கான வெகுமதி என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலத்தீன நாடு, இஸ்ரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், ஜோர்டான் ஆறு மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடைப்பட்ட நிலத்தின் எந்த பகுதியிலும் பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற முடியாது என்று அவர் தெரிவித்தார். அந்த நிலம் கடவுளால் யூத மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என இஸ்ரேலிய மத தேசியவாதிகள் நம்புகின்றனர். 1948-ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, இனப்படுகொலை என்பது, ஓர் தேசிய, இன, மதக்குழுவின் மீது பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது என விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காஸாவில் பாலத்தீனர்கள் மீதான தாக்குதல் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, காஸாவின் பல பகுதிகளில் "மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி" நிலவுவதாக ஐநாவின் பல முகமைகள் கூறியுள்ளன இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் காஸாவில் உள்ள பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய நீண்ட பட்டியலில், அந்நாடு சட்ட ரீதியாக காக்க வேண்டிய பொதுமக்கள் மீதும் குறிவைப்பதாகவும், "உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையின் மூலம் பாலத்தீனர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான மனிதநேயமற்ற சூழல்களை உருவாக்குதல்" போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. உணவு தொடர்பான அவசர சூழலை மதிப்பீடு செய்யும் சர்வதேச அமைப்பான ஐபிசியின் (IPC- கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வகைப்பாடு) கூற்றுப்படி, பஞ்சம் மற்றும் பரவலான பட்டினிக்கு வழிவகுத்த இஸ்ரேலிய தடையை இது குறிக்கிறது. இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் உள்ள பொதுமக்களை தெற்கு நோக்கி நகருமாறு உத்தரவிட்டதையடுத்து, அங்கு தற்போது நடைபெறும் வலுக்கட்டாயமான இடம்பெயர்வு குறித்தும் ஐநாவின் இந்த புதிய அறிக்கை விவரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வான்வழி தாக்குதல்கள் மற்றும் காஸா நகரின் அடையாளமாக விளங்கும் உயர்ந்த கட்டடங்கள் உட்பட பல கட்டடங்களை அழிப்பதன் மூலமாகவும் இஸ்ரேலிய தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது. காஸா நகரின் அடையாளமாக விளங்கும் கட்டடங்களை ஹமாஸின் "பயங்கரவாத கோபுரங்கள்" என இஸ்ரேலிய ராணுவம் அழைக்கிறது. "காஸாவில் குழந்தை பிறப்பை தடுக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளையும்" இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காஸாவில் மிகப்பெரிய கருத்தரிப்பு கிளீனிக் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 4000 கருமுட்டைகள் மற்றும் 1000 விந்து மாதிரிகள் மற்றும் கருவுறாத முட்டைகள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவலை இது குறிக்கிறது. இனப்படுகொலையை தூண்டியதாக 3 பேர் மீது குற்றச்சாட்டு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது), அதிபர் ஐஸக் ஹெர்சோக் (நடுவில் இருப்பவர்), பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் (வலதுபக்கத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்) ஆகியோர் இனப்படுகொலையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை தவிர்த்து, இந்த 'இனப்படுகொலைக்கு' தூண்டியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மூன்று பேரையும் ஐநாவின் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவர்களுள் ஒருவர், இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று, "மனித மிருகங்களுடன்" இஸ்ரேல் சண்டையிடுவதாக கூறியிருந்தார். பிரதமர் நெதன்யாகுவை போன்று யோவ் கேலண்ட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது வாரண்டை எதிர்கொண்டுள்ளார். அமலேக்குக்கு (Amalek) எதிரான யூத சண்டை குறித்த கதையுடன் காஸா போரை ஒப்பிட்டு, அதை தூண்டியதாக நெதன்யாகுவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அமலேக் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அவர்களின் உடைமைகள் மற்றும் விலங்குகளை அழிக்குமாறு யூத மக்களுக்கு கடவுள் கூறியதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மூன்றாவது அதிகாரி ஐஸக் ஹெர்சோக், இவர் போரின் முதல் வாரத்தில் ஹமாஸுக்கு எதிராக நிற்கவில்லையென காஸாவின் பாலத்தீனர்களை கண்டித்தார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று, "முழு தேசமும்தான் இதற்கு பொறுப்பு" என கூறினார். கடும் சட்டவிதிகள் சட்டபூர்வமாக இனப்படுகொலை குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலை தீர்மானத்தை உருவாக்கியவர்கள் விதிகளை கடுமையாக வடிவமைத்தனர். சர்வதேச நீதிமன்றம் அதுகுறித்து கூறும் விளக்கமும் உயர்ந்த விதிமுறைகளை கொண்டதாக இருந்தது. ஹேக் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட பல ஆண்டுகளாகும். ஆனால், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ஐநா அறிக்கை இந்த போர் தொடர்பான சர்வதேச பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும். ஒருபுறம், காஸாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் அழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும், இஸ்ரேலின் தடைகளால் உருவாகியுள்ள பஞ்சத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகள் உள்ளன. அவற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. மறுபுறம், இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், முக்கியமான ராணுவ உதவி மற்றும் ராஜீய ரீதியிலான பாதுகாப்பை வழங்கிவருகிறது, இவை இல்லாமல் காஸாவில் போரை தொடரவும் மத்திய கிழக்கில் குண்டுவீச்சு நடவடிக்கைகளை தொடரவும் இஸ்ரேல் போராட வேண்டிய நிலை உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xrg7zkwwvo
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் 16 Sep, 2025 | 05:14 PM தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கபட்டது. இதன் போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225248
-
ஒரு நல்ல மாற்றம்
எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார். புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும். ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான். இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை. வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும். Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_14.html @Justin அண்ணை உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் கடும் தாக்குதலால் காசா மக்கள் வெளியேற வேண்டிய நிலை! Published By: Digital Desk 1 16 Sep, 2025 | 09:08 AM இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காசா நகர மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடமான அல்-காஃப்ரி கட்டிடத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்துள்ளது. காசா நகரத்தின் மீது நேற்று மாலை பாரிய தாக்குதல்களை நடத்தியதால், இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விதிவிலக்காக தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் நகரின் வடக்கு மற்றும் மேற்கில் குவிந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் நகரத்தைக் கைப்பற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் அண்மையில் சுமார் 50 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெய்டவுனில், ஒகஸ்ட் தொடக்கத்தில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் அதன் 23 மாத இனப்படுகொலைப் போரின் போது குடியிருப்புப் பகுதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மீண்டும் தாக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காசா நகரில் ஆறு வயது இரட்டையர்கள் உட்பட 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225195
-
கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் புதிய உலக சாதனை
14ஆவது முறையாக உலக சாதனை படைத்த கோலூன்றிப் பாய்தல் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் 16 Sep, 2025 | 12:59 PM ஜப்பானில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டியில், சுவீடன் நாட்டு வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் (Armand Duplantis) கோலூன்றிப் பாய்தலில் 6.3 மீற்றர் உயரம் தாவி, 14 ஆவது முறையாக உலக சாதனையை புதுப்பித்துள்ளார். ஆர்மண்ட் டுப்லான்டிஸ் புதுப்பித்த உலக சாதனையின் புதிய உயரம் 6.3 மீற்றர் (20 அடி, 8.04 அங்குலம்). ஆகும். முந்தைய சாதனை குறித்து பார்த்தால், டுப்லான்டிஸ் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 6.26 மீற்றர் உயரம் தாவி உலக சாதனை படைத்திருந்தார். சாதனைகளின் தொடர்ச்சியாக டுப்லான்டிஸ், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 14 முறை உலக சாதனையை முறியடித்துள்ளார். இது, உலக கோலூன்றிப் பாய்தல் வரலாற்றில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் டுப்லான்டிஸ், இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 25 வயதான டுப்லான்டிஸ், "மோன்டோ" (Mondo) என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் பல லீக் பட்டங்களையும் வென்றுள்ளார். இந்தச் சாதனை, கோலூன்றிப் பாய்தல் விளையாட்டில் டுப்லான்டிஸின் ஆதிக்கத்தையும், உலக அளவில் அவரது திறமையையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225227
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம் 15 Sep, 2025 | 03:21 PM தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் சந்திரநேருவின் கல்லறைக்கு மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் தன் பயணத்தை ஆரம்பித்தது. இந்த நினைவேந்தல் ஊர்தியான திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன. அதனைத் தொடர்ந்து, இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225147
-
விண்வெளியில் போர் மூளுமா? அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் யார் வலிமையானவர்?
பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை. அமெரிக்காவும் இதை விரும்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். செயற்கைக்கோள் போர் உலகுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வோம். மிகவும் முக்கியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாக கூறுகிர் முனைவர் ராஜி ராஜகோபாலன் ஆஸ்திரேலிய மூலோபாய நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் விண்வெளி பாதுகாப்பு விஷயங்களில் நிபுணருமான முனைவர் ராஜி ராஜகோபாலன், தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாகக் கூறுகிறார். செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயற்கைக்கோள்களில் சுமார் 630 செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த செயற்கைக்கோள்களில் பாதியளவு ராணுவ செயற்கைக்கோள்கள் என்று ராஜி ராஜகோபாலன் குறிப்பிட்டார். இவற்றில் சுமார் 300 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை. ரஷ்யாவும், சீனாவும் பல ராணுவ செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளில் ராணுவத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவை ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன. 1990ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில் நேச நாட்டுப் படைகளின் நடவடிக்கைகளில் செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. பாலைவனத்தில் வீரர்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல செயற்கைக்கோள் மூலம் இயக்கப்படும் ஜிபிஎஸ் பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் விண்வெளிப் போர் என்றும் இது அழைக்கப்படுகிறது. "இப்போதெல்லாம் அரசாங்கங்கள் உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்கவும் இலக்குகளைக் கண்காணிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் அனைத்து முக்கியப் படைகளும் இந்த அமைப்பை பயன்படுத்தும். செயற்கைக்கோள் உதவியுடன், இலக்கு கண்டறியப்படுவது மட்டுமல்லாமல், இலக்கைத் துல்லியமாகத் தாக்க ஆயுதங்களும் வழிநடத்தப்படுகின்றன" என்று முனைவர் ராஜி ராஜகோபாலன் கூறுகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியா 2029 ஆம் ஆண்டுக்குள் 52 செயற்கைக்கோள்களை விண்வெளியில் அனுப்பும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக அறிவித்தது. அப்படியானால் ஒரு நாடு செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு தகவல்களை வழங்குவது அவசியமா? எந்தவொரு நாடும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறார் முனைவர் ராஜி ராஜகோபாலன். அந்த செயற்கைக்கோள் என்ன வகையானது? எதற்காக பயன்படுத்தப்படுகிறது? எவ்வளவு காலம் செயல்படும்? அதை மீண்டும் எப்படிக் கொண்டு வருவார்கள்? விண்வெளியில் எங்கு வைக்கப்படுகிறது? என்பன போன்ற அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இது செயற்கைக்கோள்கள் ஒன்றோடோன்று மோதுவதைத் தடுக்கும். ஆனால் இப்போது பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதில்லை. 1962 ஆம் ஆண்டில், அமெரிக்கா விண்வெளியில் ஒரு அணுகுண்டை சோதித்தது, அதன் கதிர்வீச்சு பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சேதப்படுத்தியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், விண்வெளியில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் விண்வெளி நிறுவனம் இப்போது அதைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதிகம் பங்களித்திருக்கிறது என்கிறார் ராஜி ராஜகோபாலன். இந்த ஒப்பந்தத்தில் விண்வெளியில் உள்ள வழக்கமான ஆயுதங்களைப் பற்றி எந்தத் தடையும் இல்லை. அவை கூட பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், இது ஒரு முக்கியமான பாதுகாப்பு சிக்கல். அதேபோல், கடந்த சில ஆண்டுகளில் விண்வெளியில் வணிக செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உட்பட பல தனியார் நிறுவனங்களின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பிராட்பேண்ட் இணைய வசதி மற்றும் பிற வசதிகளுக்காக விண்வெளியில் உள்ளன. அதேபோல், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடுகளுக்கு இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது. விண்வெளியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விண்வெளி போட்டியில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவைத் தோற்கடித்தது. ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஜூலியன் சூஸ், பூமியில் எங்காவது தாக்குதல் நடந்தால், அதை நாம் பார்க்க முடியும் என்கிறார். ஆனால் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் என்ன செய்கின்றன என்பது பற்றிய தகவல்களை செயற்கைக்கோள்கள், ரேடார் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு தரவுகளால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் பெறுகிறோம். ஒரு நாடு வேண்டுமென்றே மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழிக்க முயன்றால் என்ன நடக்கும்? "இது ஒரு லட்சுமண ரேகை, இதுவரை யாரும் அதைக் கடக்கவில்லை. ஆம், செயற்கைக்கோள்கள் சிக்னல்களை சீர்குலைத்து தவறான சிக்னல்களை உருவாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன" என்கிறார் ஜூலியன் சுஸ். தற்போது விண்வெளி வளங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்த பிரிவு 5 இல் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, நேட்டோ உறுப்பினரின் செயற்கைக்கோளை யாராவது தாக்கினால், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் தாக்குதல் நடத்தும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் விளக்குகிறார். ஆனால் செயற்கைக்கோள் சேதமடைவதற்கான காரணம் குறித்த உடனடித் தகவல் கிடைக்காததும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுக்கு அருகில் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் சூஸ். இது ஒரு செயற்கைக்கோளைப் படம் எடுப்பதற்கான முயற்சியாகவோ அல்லது அதைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியாகவோ இருக்கலாம். குறிப்பாக, அந்த செயற்கைக்கோளின் செயல்பாடு பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றால், அது மிக முக்கியமான விஷயமாகும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகில் பெரிய ராணுவங்களை கொண்டுள்ளன. இந்த அனைத்து ராணுவங்களும் விண்வெளியில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. இவை பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல, எனவே விண்வெளியில் அவற்றின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை. விண்வெளியில் அமெரிக்கா மிகப்பெரிய சக்தியாக உள்ளது என்று ஜூலியன் சூஸ் கூறுகிறார். 2008 ஆம் ஆண்டில், அது அதன் செயற்கைக்கோள்களில் ஒன்றை அழித்தது. இதைத் தவிர, அமெரிக்கா மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறது. உதாரணமாக, அமெரிக்கா மற்ற செயற்கைக்கோள்களைப் போலவே ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் செலுத்தக்கூடிய X-37 விண்வெளி விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த விமானம் இரண்டு ஆண்டுகள் விண்வெளியில் தங்கி பின்னர் தானாகவே பூமிக்குத் திரும்பும். அதேபோல், தகவல் தொடர்புகளுக்கான ஜிபிஎஸ்-க்கு மாற்றாக லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. விண்வெளி பந்தயத்தில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வரும் முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவை முந்தியது. ஆனால் அதன் பின் வந்த காலத்தில் ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் அமெரிக்காவை விட பின்தங்கி விட்டது. யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் அதன் விண்வெளித் திட்டங்களையும் பாதித்துள்ளன. மறுபுறம், உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்புகளைச் சேகரிப்பதற்கு செயற்கைக்கோள்களையே அமெரிக்கா பெருமளவில் சார்ந்துள்ளது. ரஷ்யா இதை அமெரிக்காவின் பலவீனமாகக் கருதி, செயற்கைக்கோள்களை குறிவைத்து ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. சீனாவும் இந்தத் துறையில் பின் தங்கிவிடவில்லை. "2024 ஆம் ஆண்டில் 100 செயற்கைக்கோள்களை ஏவுவதே சீனாவின் இலக்காக இருந்தது, ஆனால் அதனால் 30 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், அதன் செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்களைச் சுற்றி வேகமாக நகரும் திறனைப் பெற்றுள்ளன. சில செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான முறையில் அருகில் சென்றன," என்று கூறுகிறார் ஜூலியன் சுஸ். செயற்கைக்கோள்கள் விண்வெளியில் அதிக வேகத்தில் சுழல்கின்றன, அவை ஒன்றுடன் ஒன்று மோதினால், அவற்றின் துண்டுகள் விண்வெளியில் சிதறக்கூடும். ஒரு சென்டிமீட்டர் துண்டு கூட, அதிவேகத்தில் நகர்ந்தால், ஒரு வெடிகுண்டை போலவே சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியான சூழ்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினால் அது பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார் ஜூலியன் சுஸ். உதாரணமாக, ரஷ்யா விண்வெளியில் அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தினால், செயற்கைக்கோள் சிதைவதால் உருவாகும் துண்டுகள் அதன் சொந்த செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தும். சமீபத்தில், சீனாவும் ரஷ்யாவும் நிலவில் ஒரு அணு உலையை நிறுவ ஒப்புக்கொண்டன. இது எதிர்கால ஆராய்ச்சிப் பணிகளுக்கு மின்சாரம் தயாரிக்கப் பயன்படும். தொழில்நுட்ப திட்டங்கள் பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு, கோல்டன் டோம் அமெரிக்காவை வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியும். சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் விண்வெளிச் சட்டம் மற்றும் தரவு திட்டத்தின் இயக்குனர் சாடியா பெக்கரானன், விண்வெளித் தொழில்நுட்பம் என்பது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை விண்வெளியில் ஏவுவது மட்டுமல்ல என்கிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஈடிடி (EDT) எனப்படும் தானியங்கி ரோபாட்டிக்ஸ்(autonomous robotics) போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும் என்று சாடியா கூறினார். தானியங்கி ரோபாட்டிக்ஸ் மூலம், இயந்திரங்கள் விண்வெளியில் தானாகவே வேலை செய்ய முடியும். "இது எதிர்காலத்தில் விண்வெளி பாதுகாப்பின் முழு கட்டமைப்பையும் மாற்றக்கூடும். இது அமெரிக்காவை வான் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கவசத்தையும் (Golden Dome) கொண்டுள்ளது." ஸ்டார்ஷீல்ட் என்பது பல செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. இது அமெரிக்க அரசாங்கத்தாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது. ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் கோல்டன் டோம் திட்டத்தை முன்மொழிந்தார். எதிரி ஏவுகணைகளைக் கண்டறிய ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விரைவாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் திறனை ராணுவம் பெறும் என்கிறார் சாடியா பெக்கரானேன் கூறுகிறார். இது பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் மற்ற நாடுகளை விட முன்னிலையில் உள்ளன என்கிறார் சாடியா பெக்கரானன். "விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்." தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாட்டுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பினால், எந்த தொழில்நுட்பமும் நிலைத்திருக்க முடியாது என்கிறார் சாடியா பெக்கரானன். விண்வெளியில் இந்த உபகரணங்களின் ஆயுட்காலம் காலாவதியாகும் தருவாயில், அவற்றை சரிசெய்ய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், புதிய தொழில்நுட்பம் அவற்றை விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக அகற்றவும் உதவும். உலகில் அவற்றின் தாக்கம் எத்தகையது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது. முனைவர் பிளெவின்ஸ் போவன், பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆஸ்ட்ரோ பாலிடிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். செயற்கைக்கோள் போர் தொடர்பான விஷயங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருகிறார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோள் போர் நடந்தால், அதனால் ஏற்படும் சேதம் மற்றும் தாக்கத்தை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று அவர் நம்புகிறார், ஏனெனில் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றின் உதவியுடன் மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. எந்த செயற்கைக்கோள்கள் அழிக்கப்படுகின்றன என்பதையே இது பெரும்பாலும் சார்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது வழியைக் கண்டறிய அல்லது உணவை ஆர்டர் செய்ய உதவும் ஜிபிஎஸ் சிக்னல்களை அனுப்பும் செயற்கைக்கோள்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பொருளாதாரச் சேவைகளில் இன்னும் கடுமையான பாதிப்பு ஏற்படும், ஏனெனில் செயற்கைக்கோள்களில் அணு கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் பரிவர்த்தனையின் நேரம் என்ன என்பதை யாருடைய நேரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த சேவைகள் நிறுத்தப்படலாம். விவசாயிகள் மற்றும் வானிலை துறைகள் விவசாயம் அல்லது இயற்கை பேரழிவுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகின்றன. இது மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, புயல்கள் அல்லது பிற பேரழிவுகள் பற்றிய துல்லியமான தகவல்களை மக்கள் சரியான நேரத்தில் பெறவில்லை என்றால், பலர் இறக்க நேரிடும். ஒரு நாடு ஒரு செயற்கைக்கோளின் இழப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைப் பொறுத்தது. விண்வெளியில் நேரடித் தாக்குதலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிக்க நாடுகளுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவைப்படும் என்றும் முனைவர் பிளெவின்ஸ் போவன் நம்புகிறார். அவர்கள் விண்வெளியில் மாற்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த வேண்டும், அல்லது செயற்கைக்கோள்கள் இல்லாமல் வேலை செய்யக்கூடிய உபகரணங்களின் வலையமைப்பை பூமியில் உருவாக்க வேண்டும். அவை செயற்கைக்கோள்களைப் போல பயனுள்ளதாக இல்லாவிட்டாலும், அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் செயற்கைக்கோள்கள் எப்போது, எப்படி தாக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். விண்வெளியில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் பிளெவின்ஸ் போவன். "பூமியில் நாடுகளுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டை மீறும் போதுதான் விண்வெளியில் போர் பரவும். வெளிப்படையாக பலர் அதில் இறந்துவிடுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம், எனவே பூமியில் நடக்கும் மோதல்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை விட விண்வெளிப் போரைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக் கூடாது என்பதே எனது கருத்து." எனவே செயற்கைக்கோள் போரினால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது? விண்வெளியில் உள்ள இயற்கையாலோ அல்லது மனிதனாலோ உருவாக்கப்பட்ட மிகச்சிறிய பொருள் கூட ஆபத்தானதாக இருக்கலாம். செயற்கைக்கோள்களை ஆயுதமாக்குவது எப்போதும் நோக்கமாக இருக்காது. ஆனால் தொழில்நுட்பம் இப்போது வணிக மற்றும் ராணுவ செயற்கைக்கோள்களுக்கு இடையிலான கோடுகளை மங்கலாக்கியுள்ளது. பல நாடுகள் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை தாக்கி அழித்து தங்களத திறனை பரீட்சித்துப் பார்த்துள்ளன. ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது. அதேபோல், விண்வெளியில் தாக்குதல் நடந்தால், அது பூமியிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgj5vv3kq5o
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
திலீபனின் 38ஆவது நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு 16 Sep, 2025 | 11:38 AM தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225215
-
நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
Published By: Priyatharshan 16 Sep, 2025 | 01:00 PM இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225220
-
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு குறித்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறியுள்ளதுடன், இது தவறான சித்தரிக்கப்பட்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfm8ghbu00gjo29n9jy9a3yj
-
ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்வு
15 Sep, 2025 | 03:42 PM ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதியோர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். இந்த சாதனை, உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட நாடாக ஜப்பானை நிலைநிறுத்தியுள்ளது. 100 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 1963-ல் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1998 இல் 10,000 ஆகவும், 2012 இல் 50,000 ஆகவும் உயர்ந்தது. தற்போது, ஒரு ஒலட்சத்தை நெருங்கியுள்ளது. 114 வயதான ஷிகேகோ ககாவா என்பவரே ஜப்பானில் வாழும் மிக வயதான பெண் ஆவார். அவர் 80 வயதைக் கடந்தும் மகப்பேறு மருத்துவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். மிக வயதான ஆண், 111 வயதான கியோடகா மிசுனோ ஆவார். ஷிமானே மாகாணத்தில் அதிகபட்சமாக ஒவ்வொரு 100,000 பேருக்கும் 168.69 பேர் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். அதே சமயம், சைட்டாமா மாகாணத்தில் இந்த விகிதம் மிகக் குறைவாக உள்ளது. ஜப்பானின் சுகாதார அமைச்சர் டகாமரோ புகோகா கூறுகையில், ஜப்பானியர்கள் மீன் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்வதும், தினசரி நடைப்பயிற்சியும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றார். நீண்ட ஆயுள் ஒரு சாதனை என்றாலும், ஜப்பான் கடுமையான மக்கள் தொகைக் குறைவு மற்றும் முதுமையடையும் சவால்களை எதிர்கொள்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/225157
-
கைகுலுக்காத சர்ச்சை: ரெஃப்ரி மீது பாகிஸ்தான் ஆவேச புகார் - பிசிசிஐ கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்." ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது. ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான "கை குலுக்கல்" நடக்கவில்லை. போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். "ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது" என்று கூறினார் அவர். ஹெசன் மேலும் கூறுகையில், "நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்." ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, துபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி டாஸின் போது இரு கேப்டன்களும் போட்டி நடுவரும் இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், "ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது" என்று எழுதினார். "எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை" என்று நக்வி மேலும் எழுதினார். டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது. பட மூலாதாரம், Getty Images கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை" என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு "நல்லெண்ண சைகை" மட்டுமே என்று கூறினார். "நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல" என்றார் அந்த மூத்த அதிகாரி. "சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை," என அவர் மேலும் கூறினார். எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம், Getty Images கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும். இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளப் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது. உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள். நேர்மையாக விளையாடுங்கள். உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும். சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும். எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள். போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jq7v35l08o
-
புதைத்து பல ஆண்டுகள் ஆகியும் சில உடல்கள் அழுகாமல் இருப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் ஆர்ச்சி அட்டாண்ட்ரில்லா பிபிசி வங்க சேவை 15 செப்டெம்பர் 2025 பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன. அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுதான். வழக்கமாக, இறந்து 12 மணிநேரம் கழித்து உடல் அழுக ஆரம்பிக்கிறது. ஆனால், பல சமயங்களில், உடல்கள் புதைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அவை அழுகுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. பழமையான கல்லறைகளை தோண்டியபோது, பல ஆண்டுகள் கழித்தும் அதிலிருந்த சடலங்கள் கிட்டத்தட்ட அப்படியே இருந்தன. இது பெரும்பாலும் மத ரீதியிலான பார்வையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு பின்னால் அறிவியல் ரீதியிலான காரணங்களும் உண்டு. இப்படியான சூழல்களில், உடல்கள் அழுகாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இதற்கு தடயவியல் விஞ்ஞானிகள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, மம்மிஃபிகேஷன் எனப்படும் உடல் அழுகாமல் பதப்படுத்தும் செயல்முறை (mummification). மற்றொன்று, இறந்த உடல் முழுவதும் மெழுகு போன்ற பொருளால் பூசப்படுவது (adopasory), இது உடல் அழுகாமல் தடுக்கிறது. இயற்கையாகவே 'மம்மி'யாதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாலைவன பகுதிகளில் சில உடல்கள் இயற்கையாகவே 'மம்மி'யாகிவிடும், பல ஆண்டுகளாக அவை அப்படியே இருக்கும் வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் மிகவும் குறைவாக, அதிக வெப்பநிலை உள்ள சூழல்களில் இறந்த உடல்களை வைக்கும்போது, உடலில் நீர் உள்ள பகுதிகள் வேகமாக வறண்டு விடுகின்றன. இதன் காரணமாக, உடலில் பாக்டீரியாக்கள் வளர முடியாமல், உடல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். சர் சலீம் உல்லாஹ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி, இந்த செயல்முறைக்கு மம்மிஃபிகேஷன் என்று பெயர் என தெரிவித்தார். இந்த செயல்முறை உடலை பதப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இதன்காரணமாக, பாலைவனங்களில் பல சடலங்கள் இயற்கையாகவே 'மம்மி'யாகி விடுகின்றன, பல ஆண்டுகள் அழுகாமல் அதே நிலையில் இருக்கின்றன. வறண்ட மணல் உள்ள பகுதிகளில் சடலங்கள் இயற்கையாகவே பதப்படுத்தப்படுவது சாத்தியம். எனினும், வங்கதேசத்தில் மணல் மற்றும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் காரணமாக இவ்வாறு நடப்பதில்லை. அடாப்சரி (Adapsory) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூழலில் நிலவும் பல காரணிகளை பொறுத்தே உடல் எவ்வளவு வேகமாக அழுகுகிறது என்பது அமைகிறது அடிபோஜெனிக் (Adipogenic) அல்லது அடிபோஸ் (adipose) திசு என்பது, ஒருவித சோப் போன்று இருக்கும் மெழுகு போன்ற பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்பு உடைவதற்கு பதிலாக, அதை பாதுகாக்க உதவுகிறது. யூஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை, அடிபோசைட்டுகள் உருவாகுதல் மற்றும் அழிக்கப்படுதல் இரண்டும் சூழலை சாந்தே அமைவதாக கூறுகிறது. ஒருமுறை இத்தகைய அடப்சோரியம் உருவான பின்னர், பல நூறு ஆண்டுகளுக்கு அது நிலையாக இருக்கிறது. டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூற்றின்படி, இது பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. வெப்பநிலை, காலநிலை, உணவு முறை, உடல் புதைக்கப்பட்டுள்ள முறை, உயிரிழந்த நபரின் உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், "ஈரமான சூழல்களில், சடலங்கள் வெள்ளை நிறத்தில் தோன்றும். அவற்றைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று பூசப்பட்டிருப்பது போன்று தோன்றும். உடலில் உள்ள கொழுப்பு பகுதி, மெழுகு போன்ற பொருளை உருவாக்கி, சடலம் முழுவதையும் சூழும். இது, நீருடன் ஏற்படும் வேதியியல் செய்முறையால் நடைபெறுகிறது" என்றார். இந்த செயல்முறை நடந்தால், அந்த சடலம் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும் என்கிறார் அவர். அதாவது, உடல் அழுகத் தொடங்கும் செயல்முறை நடக்காது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான மற்றொரு ஆய்வில், அத்தகைய சடலங்கள் பல பத்தாண்டுகளாக பதப்படுத்தப்படலாம் என்கிறது. மேலும், அடாப்டாலஜி (adaptology) எனும் இந்த முறையில் மூன்று விஷயங்களும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவது, ஹைட்ராக்ஸி கொழுப்பு அமிலங்கள் உருவாவது இரண்டாவது, இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள அதிகப்படியான நீர். மூன்றாவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இந்த காரணங்களுக்காக, உடல்கள் மண்ணுக்குக் கீழே ஆழமாக புதைக்கப்படும்போதும் இத்தகைய சூழல் உருவாக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூறுகையில், இத்தகைய சூழலை உடலில் உருவாக்கக்கூடிய பல மருந்துகள் உள்ளன என்கிறார். பல வித உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் தனிமமும், உடல் அழுகுவதை மெதுவாக்குகிறது. தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் தடயவியல் நிபுணர் மருத்துவர் கபீர் சோஹெல் கூறுகையில், இத்தகைய அடபோசிஸ் முறையை வேறுவிதமாக விளக்குகிறார். "இறந்த பின் உடலில் உள்ள கொழுப்பு கெட்டியாகி விடுவதால், உடல் அழுகுவதற்கு காரணமான பாக்டீரியா அல்லது மற்ற கிருமிகள் செயல்பட முடியாமல் போகிறது. அப்படியான சூழலில், உடலின் அமைப்பு அப்படியே மாறாமல் நீண்ட காலம் இருக்கிறது, மேலும் முகமும் அடையாளம் காணும் வகையில் உள்ளது. இத்தகைய சூழல்களில் உடல் நீண்ட காலத்துக்கு முன்பே புதைக்கப்பட்டாலும் அதே நிலையில் உள்ளது." என்றார் அவர் தாகா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள டாக்டர். முகமது மிஸானர் ரஹ்மான் கூறுகையில், உடலில் அதிகமாக கொழுப்பு இருந்தால், இவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது என்கிறார். புதைக்கப்படும் இடத்தில் காற்று இருந்தாலோ அல்லது அந்த நிலம் தாவரங்கள் வளர முடியாத தரிசு நிலமாக இருந்தாலோ அல்லது மணலாக இருந்தாலோ, உடல் அழுகுவது மெதுவாக இருக்கும் என்கிறார் அவர். "வங்கதேசத்தில் நிலவும் சூழலில், உடலின் தோல் இலகுவாகி, ஆறு முதல் 12 நாட்களுக்குள் உதிர்ந்துவிடும். ஆனால், இந்த கால அளவு பருமனாக இருப்பவர்களுக்கு நீள்கிறது. அப்படியான சமயங்களில், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலான காலம் எடுக்கிறது," என தெரிவித்தார் அவர் வங்கதேசத்தில் குளிர் காலங்களில் நிலவும் வறண்ட வானிலையால், அடிபோஸ் திசுவின் மூலம் அழுகாமல் இருப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகின்றன. எனினும், இந்திய துணைக்கண்டத்தின் காலநிலை வேகமாக அழுகுவதற்கான சாதகத்தையே கொண்டுள்ளது. வேதியியல் விளைவுகள் படக்குறிப்பு, மருத்துவர் கபீர் சோஹெல் மருத்துவர் கபீர் சோஹெல், சில சந்தர்ப்பங்களில் உடல்களை பதப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்தார். அப்படியான சூழல்களில், ஃபார்மாலின் உள்ளிட்ட பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ரசாயனங்கள் பூசப்பட்ட உடல்கள், நீண்ட காலத்துக்கு பதப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டில் ஒருவர் இறந்து, அவரை அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும்போதோ அல்லது வேறு காரணத்துக்காக பதப்படுத்த வேண்டிய தேவை இருந்தாலோ, அந்த சூழல்களில் எம்பால்மிங் எனும் செயல்முறை செய்யப்படுகிறது. இதற்கு, ஃபார்மால்டீஹைட், மெத்தனால் மற்றும் மற்ற ரசாயனங்களின் உதவியுடன் உடல் பதப்படுத்தப்படுகிறது. புதைக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த ரசாயனங்களால் உடல்கள் நீண்ட காலத்துக்கு அழுகாமல் அப்படியே இருக்கும். ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிக்கல் சயின்ஸ் எனும் இதழில் வெளியான கட்டுரையின்படி, மண்ணில் உள்ள உலோகங்கள், கனிமங்கள் மற்றும் அமிலத்தன்மை காரணமாக, உடலை அழுகச் செய்யும் பாக்டீரியாவின் விளைவுகளை குறைத்து, உடல் அழுகுதலை மெதுவாக்கும் என்கிறது. இதுதவிர, உடல்களை பதப்படுத்த அங்கு நிலவும் வெப்பநிலையும் சில சமயங்களில் தாக்கம் செலுத்துகிறது. உதாரணத்திற்கு, இமயமலையில் இறப்பவர்களின் உடல்கள், பல நாட்களுக்கு அழுகாமலேயே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr57j531w1o
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி Published By: Vishnu 16 Sep, 2025 | 06:23 AM 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஹொங்கொங் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற போட்டியில் நாணயற் சுழட்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது. பதிலளித்த துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. சிறப்பான துடுப்பெடுத்தாட்ட செயல்திறனுடன் களமிறங்கிய பதும் நிஸ்ஸங்க 68 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225180 விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்த பெத்தும் நிஸ்ஸங்க! 16 Sep, 2025 | 12:36 PM ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் (fifties) அடித்த வீரர்களின் பட்டியலில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தொடரில் இடம்பெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிராக போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம், ஆசியக் கிண்ண இருபதுக்கு - 20 தொடர்களில் அவர் குவித்த அரைசதங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் மூலம், விராட் கோஹ்லி அடித்த 8 அரைசதங்கள் என்ற சாதனையை அவர் கடந்துள்ளார். பெத்தும் நிஸ்ஸங்க ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் 9 அரைசதங்கள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லி ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 போட்டிகளில் 8 அரைசதங்களைப் பெற்றுள்ளார். இலங்கை அணியின் இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அவரது சிறப்பான ஆட்டத் திறமையால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். விராட் கோஹ்லி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். https://www.virakesari.lk/article/225224
-
வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும். வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. சமகால தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. ஆயினும், இந்தியா, பங்களாதேசம், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டரீதியான மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfmak1yi00fxqplpalcpcg9z
-
உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி 'Bone-02'
சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி 'Bone-02' 15 Sep, 2025 | 03:17 PM உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்' (bone glue), எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 'போன்-02' (Bone-02) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவப் பசையானது, எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவினர் இந்தப் பசையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லின் சியான்ஃபெங், கடலுக்கு அடியில் உள்ள பாலத்தில் சிப்பிகள் எப்படி உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்து இந்த பிசினை உருவாக்க உத்வேகம் பெற்றதாகக் கூறுகிறார். இரத்தம் நிறைந்த சூழலிலும், இந்த பிசின் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் எலும்பை துல்லியமாக ஒட்டி உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், எலும்பு குணமடைந்த பிறகு, இந்த பிசின் இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், இரும்புத் தகடுகள் அல்லது தழும்புகளை அகற்றுவதற்காக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்குப் பதிலாக, இந்த பிசினைப் பயன்படுத்தும்போது, எலும்பு முறிவுகளை மிகக் குறைந்த நேரத்தில் சரிசெய்ய முடியும். இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த பிசினால் ஒட்டப்பட்ட எலும்புகள் அதிகமான பிணைப்பு சக்தியைக் கொண்டிருப்பது ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய உலோக உள்வைப்புகளுக்கு மாற்றாக இருக்கலாம் எனவும் இந்த பிசின் தொற்று மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு, எலும்பியல் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225149
-
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!
லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி : இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை 15 Sep, 2025 | 02:02 PM இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், இங்கிலாந்து சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நாட்டின் கொடி நமது பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. அதை மதிக்காமல், இன ரீதியான மிரட்டலை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஏனையவர்களை அச்சுறுத்துவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது," என்று அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தால் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. https://www.virakesari.lk/article/225137
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படங்கள்.
-
அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகம்
16 Sep, 2025 | 11:12 AM (எம்.மனோசித்ரா) அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும் வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் முறை கையொப்பங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும், இந்த தொழில்நுட்பத்தை கிராம அலுவலர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். இந்த முயற்சிக்கு அமைவாக, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் இல. 19, 2006 இன் ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை இலக்கமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு அமைவாக, டிஜிட்டல் முறைமை கையொப்பங்களை வழங்குவதற்கான அதிகாரியாக லங்கா பே நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைமை உத்தியோகபூர்வ கடிதப் பரிமாற்றங்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, விரைவான, மிகவும் வினைத்திறன் மிக்க, பயனுள்ள அரச சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225204
-
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் 16 Sep, 2025 | 11:06 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 26 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் திங்கட்கிழமை (15) தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் 26வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் தலைவர் த.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.யூட் பிரசாத் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/225198
-
இரண்டு வருடங்ளுக்கு ஆணையை நீடியுங்கள் ; பொறுப்புக்கூறல் தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக இணைந்து வேண்டுகோள்
16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை. மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது. கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன. இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/225193
-
அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் - கடற்படை
16 Sep, 2025 | 08:55 AM (எம்.மனோசித்ரா) தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். இது தொடர்பான தரவுகளையும் நாம் அவ்வப்போது ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை கடந்த சகல அரசாங்கங்களிடம் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம். இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படையுடன் எமது நட்புறவு தொடர்ந்தும் சுமூகமாகப் பேணப்படுகிறது. இது குறித்த புதிய வழிமுறைகளை நாம் அரசாங்கத்திடம் யோசனைகளாக முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய வடக்கு மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலில் முக்கிய விடயமாகப் பேசப்படும். நாமும் அதில் அவதானமாக இருக்கின்றோம். அத்தோடு எமது கடற்பரப்பின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏனைய சட்ட விரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் நூறு சதவீதம் அவை கட்டுப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். இது தொடர்பில் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகமகே தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களை சரியாக சென்றடைந்திருக்கிறது என்று நம்புகின்றோம். கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை. எமது கடற்படை படகுகளை அணுப்பி நாம் இந்த எல்லையிலிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு காண்பிக்கின்றோம். உள்ளக மீனவர்களும் பெருமளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளை விட எமது மீன் பிடிப்படகுகளின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225191
-
அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ
16 Sep, 2025 | 11:43 AM அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் எனது வாழ் நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது. நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்த போது என்னை பார்வையிட பல மக்கள் ஒன்று திரண்டனர். அரசியல் பலத்தை விட என்னிடம் மக்கள் பலம் உண்டு. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://web.facebook.com/PresidentRajapaksa https://www.virakesari.lk/article/225216
-
லஞ்சீற்றுக்கு தடை - மாற்றீடாக வாழையிலை பயன்படுத்துவதென தீர்மானம்!
15 Sep, 2025 | 05:43 PM பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று திங்கட்கிழமை (15) தீர்மானித்துள்ளனர். பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225154
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
வழியெங்கும் கூட்டம்; Vijay பிரசாரத்தை பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி இருக்கிறார். விஜய்க்கு பெரும் கூட்டம் திரண்டது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரம், செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் அது வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். #Vijay #TVK #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு