Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அததெரண கருத்துப் படம்
  2. திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்; மூன்றரை வருடங்களுக்கு பின் நாளை மீண்டும் அங்குரார்ப்பணம் 29 Sep, 2025 | 10:45 AM யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 2022இல் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் மறுநாளே மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள், கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை. அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும். விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இந்த வியாபார நிலையத்தை நோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்தின் பின் இந்த பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/226376
  3. Published By: Digital Desk 1 29 Sep, 2025 | 10:30 AM பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226373
  4. பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றாலும் கோப்பையை வாங்காத இந்தியா - சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது. துபை சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான பைனலில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நடப்பு ஆசிய கோப்பையில், மூன்றாவது முறையாக பாகிஸ்தான் உடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா நீக்கம் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த பாண்ட்யா, முழு உடற்தகுதியை எட்டாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆல்ரவுண்டர் பாண்ட்யா இல்லாததால் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, அதிரடி ஃபினிசர் ரிங்கு சிங் உள்ளே கொண்டுவரப்பட்டார். பாகிஸ்தான் அணி, கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டனுடன் மட்டும் ரவி சாஸ்திரி உரையாடினார். பாகிஸ்தான் கேப்டனுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பேசினார். பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் அசத்திய ஃபர்ஹான்–ஜமான் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால், முதல் ஓவரை துபே வீசினார். வழக்கமாக பவர்பிளேவில் சொதப்பும் பாகிஸ்தான், நேற்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடியது. ஃபர்ஹான் தாறுமாறாக பேட்டை சுழற்றியும் முதல் இரு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தன. துபே ஓவரை குறிவைத்து தாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் களமிறங்கியது போல இருந்தது. ஆனால், தன்னால் முடிந்த வரையில் துபே கட்டுப்பாட்டுடன் வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். பும்ராவின் இரண்டாவது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்சர் விளாசிய ஃபர்ஹான், டி20 கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் 3 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிரடி காட்டிய ஃபர்ஹானுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜமான் உறுதுணையான நிற்க, பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியாவின் துருப்பு சீட்டாக திகழும் குல்தீப் யாதவ் தனது முதல் இரு ஓவர்களில் 23 ரன்களை கொடுத்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 ரன்கள் குவித்த ஃபர்ஹான் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, ஆட்டத்தில் முதல் திருப்புமுனை ஏற்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு நடப்பு தொடரில் நான்கு முறை ' டக் அவுட்' ஆன சைம் அயூப் களமிறங்கினார். ட்ரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு துபே ஓவரில் சைம் அயூப் இரு பவுண்டரிகளை விளாச, 12–வது ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்களைத் தாண்டி நல்ல நிலையில் இருந்தது. குல்தீப் யாதவ் பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சைம் அயூப் (14) ஆட்டமிழக்க, நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹாரிஸ், அக்சர் படேலின் அடுத்த ஓவரிலேயே ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பட மூலாதாரம், Getty Images ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், வருண் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஜமான் (46) பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். அக்சர் படேலின் அடுத்த ஓவரில் தலத்தும் (1) பெவிலியன் திரும்ப, தனது கடைசி ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ஷாஹின் ஷா அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப் என 3 விக்கெட்டுகளை குல்தீப் தூக்கினார். பந்து உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்திலேயே 3 விக்கெட்டுகளும் விழுந்தன. அடுத்த ஓவரில் ஹாரிஸ் ராஃப்பை பவுல்டாக்கிய பும்ரா, விமானம் வீழ்வது போல சைகை காண்பித்து அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இப்படியாக, தொடர்ச்சியாக 6 ஓவர்களில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்ற, 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 9 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு பறிகொடுத்தது மரண அடியாக அமைந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images பைனலில் ஏமாற்றிய அபிஷேக் சர்மா 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கடைசி இரு ஆட்டங்களில் அப்ரிடியின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, இந்தமுறை இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த தொடரில் இந்தியா அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் அபிஷேக் சர்மா (5) விக்கெட்டை, இரண்டாவது ஓவரிலேயே ஒரு குறைவேகப்பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் கைப்பற்றினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ், அடுத்த ஓவரிலேயே அப்ரிடியின் குறைவேகப்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பிட்ச்சின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை கூடக் குறைத்து மாற்றி மாற்றி வீசினர். ஃபஹீம் அஷ்ரஃபின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஒரு கட்டர் பந்தில் கில்லும் (12) ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம்சன், திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரை வீசிய ஃபஹீம் அஷ்ரஃப் பந்துவீச்சில் திலக் வர்மா, பவுண்டரியும் சிக்சரும் விளாச, பவர்பிளே முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images ஆபத்பாந்தவனாக மாறிய திலக் வர்மா பவர்பிளேவுக்குப் பிறகு இந்திய அணியின் மீது சுழல் தாக்குதலை பாகிஸ்தான் தொடுக்க, திலக், சாம்சன் இருவரும் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை காட்டினர். இந்திய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி, செட்டில் ஆக கூடாது என்பதற்காக முதல் 10 ஓவர்கள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். தேவைப்படும் ரன் ரேட் உயர்ந்தபடி இருந்ததால், அதிரடியை தொடங்கிய சாம்சன் அயூப் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் ஒரு அபார சிக்சர் அடித்தார். ஆனால், லெக் ஸ்பின்னர் அப்ரார் வீசிய அடுத்த ஓவரில், இன்சைட் அவுட் ஷாட் அடிக்க முயன்று 24 ரன்களில் பாயிண்டில் ஃபர்ஹானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6–வது விக்கெட்டுக்கு துபே இயங்கிய நிலையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 15–வது ஓவரில் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களை இந்தியா குவித்தது. கடைசி 30 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்ரார் அஹமது, ஹாரிஸ் ராஃப் ஓவர்களில் துபே சிக்சர்கள் விளாசினார். 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த துபே (33), ஃபஹீம் பந்தில் லாங் ஆஃப் திசையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images கடைசி ஓவரில் என்ன நடந்தது? கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, நடப்பு தொடரில் முதல்முறையாக ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் களம்புகுந்தார். குறைவான ஓவர் ரேட் காரணமாக உள்வட்டத்தில் கூடுதல் பில்டர் நிற்க வைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் திலக் வர்மா இரு ரன்கள் ஓட, அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து ஆட்டத்தை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். மூன்றாவது பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுத்த நிலையில், ஸ்கோர் சமமானது. நான்காவது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி விளாச, ஒன்பதாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கத்துக்கு மாறாக டாப் ஆர்டர் கைகொடுக்காத நிலையில், கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 69 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆட்டத்தை வென்றளித்தார். பட மூலாதாரம், Getty Images ஏன் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது? ஆசிய கோப்பை பைனலில் கடைசி ஓவர் திரில்லரில் வென்ற பிறகும், இந்திய அணிக்கு கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மொஷின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செபாஷ் ஷெரீப் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார். வெற்றிபெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது. தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (runners-up) பிடித்த அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியினர் விருது பெறும்போது மொஷின் நக்வியை தவிர்த்து மற்ற அனைவரும் கை தட்டினர். இந்திய அணி மீது பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம் இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்." என்றார். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ், கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுப்பதாக சல்மான் அகா குற்றம்சாட்டினார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி, அவர் அப்படி நடந்துகொண்டார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஓர் அணியாக எடுத்த முடிவு என்று தெரிவித்த சூர்யகுமார், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தங்களுக்கு யாரும் அறிவுறுத்தவில்லை என்றார். சூர்யகுமார் கூறியது என்ன? பரிசளிப்பு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்." எனக் கூறினார். மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படியாக, சர்ச்சையுடன் தொடங்கிய ஆசிய கோப்பை, எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காணப்படாமல் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn95e9pvz20o
  5. 28 Sep, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்தார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226339
  6. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 03:09 PM மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம். அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காலை திங்கட்கிழமை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும். குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும். எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர்,உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும். https://www.virakesari.lk/article/226328
  7. 'நூலிழையில் உயிர் தப்பினேன்' - கரூர் கூட்ட நெரிசலில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம் படக்குறிப்பு, துர்காதேவி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 28 செப்டெம்பர் 2025, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் "காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்." என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார். "யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்," என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்) கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார். கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. 'உணவு, தண்ணீர் தட்டுப்பாடு' தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். "காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்." என்றார். சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, "காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்." என்றார். படக்குறிப்பு, லட்சுமி மயக்கமடைந்த குழந்தைகள் கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி. பிபிசியிடம் பேசிய அவர், "காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்." எனத் தெரிவித்தார். படக்குறிப்பு, ஆனந்த் குமார் காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் காத்திருந்ததாக கூறுகிறார் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆனந்த் குமார். "கரூரில் இதுபோன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விஜய் மாலை தான் வந்தாலும் மதியத்திலிருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை எவ்வாறு அழைத்து வந்தார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் மிகவும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். பாலத்தின் மீதும் பயங்கர கூட்ட நெரிசலாக இருந்தது. ஊர் முழுவதும் குழுமியிருந்த கூட்டம் விஜய் பேச இருந்த இடம் அருகே மொத்தமாக சென்றது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்." என்றார் அவர். திருமண நிச்சயத்திற்கு முன்பு உயிரிழந்த பொறியாளர் படக்குறிப்பு, பொறியாளர் ரவியின் தாயார் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் சிவில் பொறியாளரான ரவியும் ஒருவர். செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாயார், "என் மகன் கடந்த சில மாதங்களாக சொந்தமாக தொழில் செய்து வருகிறான். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை என் மகனுக்கு பெண் பார்க்க இருந்தோம். அதனால் என்ன வாங்கி வர வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்தான். நண்பர்களுடன் பிரசாரத்தை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றான். அவனின் செல்போன் எடுக்கவில்லை. அதன் பின்னர் அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவன் உயிருடன் இல்லை." என உருக்கத்துடன் தெரிவித்தார். வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் பலியான 2 வயது சிறுவன் படக்குறிப்பு, பேரனை பறிகொடுத்த சோகத்தில் வசந்தா இந்த கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த வசந்தா என்பவரது 2 வயது பேரனும் உயிரிழந்துள்ளார். "எனது பேரனை அவனின் அத்தை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சாலையின் ஓரமாக தான் அவர் நின்றுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாகி நகரத் தொடங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தனர்." எனத் தெரிவித்தார். இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த அவரது அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் கரூரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான ஜெயபால் காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை அழகிரி பிபிசியிடம் பேசுகையில், "நண்பர்களுடன் கூட்டத்திற்கு சென்றிருந்தான். அங்கு கூட்ட நெரிசல், உயிரிழப்பு என செய்தி வந்தபோது பதறிப்போய் அவனுக்கு அழைத்தால் அவன் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவன் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1 மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அழைத்து கூறினார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c701n1r4729o
  8. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 12:47 PM சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது. சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/226300
  9. 28 Sep, 2025 | 05:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) 1995 உலக மகளிர் மாநாட்டின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் உலக மகளிர் உச்சி மாநாட்டை நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த வாரம் இறுதியில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது உலக மகளிர் மாநாடு பீஜிங்கில் நடைபெற்றது. அந்த மாநாட்டைக் கொண்டாடுவதற்கும், பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தின் அமுலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சீன அரசாங்கமும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் இணைந்து நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மேலும், 2025 ஆண்டில் மற்றொரு உலக மகளிர் உச்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்மொழிந்துள்ளார். உலகளாவிய ரீதியில் பெண்களின் வளர்ச்சிக்கான முயற்சிகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டாலும், குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அனைத்து அம்சங்களிலான வளர்ச்சியை மேம்படுத்துவதில், சீனா ஒரு ஆதரவாளராக மட்டுமல்லாமல், ஒரு தீவிரமான செயல்படுத்துபவராகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226316
  10. 28 Sep, 2025 | 05:23 PM இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226340
  11. ஆசிய கோப்பை: அபிஷேக் சர்மா, சூர்ய குமார், கில் விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா பட மூலாதாரம், Getty Images 28 செப்டெம்பர் 2025, 13:58 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது. முதலிலே விக்கெட்டை இழந்த இந்தியா இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், இரண்டாம் ஓவரில் முதல் பந்திலே அபிஷேக் சர்மா 5 ரன்களில் அவுட்டானார் சிறந்த ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை ஃபஹீம் அஷ்ரப் வீழ்த்தினார். மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்தார். சூர்ய குமார் ஒரு ரன்னில் ஆவுட்டானார். நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஷுப்மான் கில்லை ஃபஹீம் அஷ்ரஃப் அவுட்டாக்கினார். கில் 12 ரன்கள் எடுத்தார். நான்கு ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது. தடுமாறிய பாகிஸ்தான் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2 ஓவர் முடிவில் 11-0 என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னது. ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் சிவம் துபே பந்து வீசினார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான், 5வது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். பின் நிதானமாக விளையாடிய ஃபகர் ஜமான், சாஹிப்சாதா தங்களின் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை சேர்த்தனர். 9 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பாகிஸ்தான், அந்த ஓவரின் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 38 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவருக்கு பதிலாக சைம் ஆயுப் களமிறங்கியுள்ளார். அதன்பிறகு 12.5வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சைம் ஆயுப். குல்தீப் யாதவ் இவரின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் ஐந்து பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நிதானமாக ரன்களை சேர்த்து வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கியதால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. 14வது ஓவரின் 4வது பந்தில், அக்சர் படேல் முகமது ஹாரிஸை டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். 15 ஓவர் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின் மீண்டும் 16வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே கேப்டன் சல்மான் ஆகாவை அவுட்டாக்கினார். 8 ரன்கள் மட்டுமே சேர்த்த சல்மான் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு பாட்னர்ஷிப் சரியாக அமையாததால் பாகிஸ்தான் அணி ரன்களை சேர்க்க சற்று சிரமப்பட்டது. தொடர்ந்து 16.4வது ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இது ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட் ஆகும். LBW முறையில் அவரை டக் அவுட் ஆக்கி திருப்பி அனுப்பினார். பின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரவை அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ். இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் 17வது ஓவரில் பும்ரா தனது பங்கிற்கு ஹரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். பின் கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா களமிறங்கி முதல் பந்திலேயே நவாஸ் விக்கெடுட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்கள் எடுத்தார். இறுதிப் போட்டியின் சமீபத்திய நேரடி ஸ்கோரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம், Getty Images ஹர்திக் பாண்ட்யா இல்லை டாஸின்போது வழக்கம்போல் இந்த முறையும் இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. டாஸ் பிறகு வென்ற பேசிய சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் இன்று சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் நாங்கள் நன்றாகவே விளையாடியுள்ளோம்" என்றார். மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவித்தார். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் கான் ஆகியோரும் இப்போட்டியில் இடம்பெறவில்லை. பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினோம்." என்றார். மேலும், "இன்றைய போட்டிக்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். இதுவரை சிறந்த போட்டியை நாங்கள் விளையாடவில்லை. ஆனால் இன்றைய போட்டி சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார். பட மூலாதாரம், Getty Images அணி விவரம் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்லா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், சைம் ஆயுப், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது ஹரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடர் வரலாற்றிலேயே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. பட மூலாதாரம், Getty Images ஆசிய கோப்பை 2025 இது 17வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக எட்டு அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அதில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நடப்பு தொடரில் 2 முறையும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா. தோல்வியே காணாத இந்திய அணி நடப்பு ஆசிய தொடரில் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. நடப்பு தொடரின் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியாவுடன் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதுதவிர போட்டியிட்ட ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இலங்கை என மற்ற அணிகளுடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp8j5pdyy8vo
  12. Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226346
  13. 'விஜய் வாகனம் வந்தவுடன்..' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 செப்டெம்பர் 2025, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நெரிசலை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்ன நடந்தது? கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனக்கிழமையன்று விஜய்யின் வாகனம் நின்ற இடத்திற்கு சரியாக எதிரில் இருக்கிறது ரேவதியின் வீடு. சனிக்கிழமையன்று இரவு நடந்த பயங்கரத்தை அவரால் இப்போதும் மறக்க முடியவில்லை. "காலையிலிருந்தே இந்த இடத்தில் அதிக கூட்டம் இருந்தது என்றாலும் மூன்று மணிக்குப் பிறகு கூட்டம் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஏழு மணிக்கு அவர் வரும்போது, அவர் வாகனத்தின் பின்னாலும் பெரிய அளவில் கூட்டம் வந்தது. அவர் வாகனத்தை சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்துவதற்காக, அந்தப் பக்கம் இருப்பவர்களை எதிர்பக்கம் வரச்சொன்னார்கள். ஏற்கனவே எதிர் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. இந்த இரண்டு கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்ததும் பெரும் நெரிசலாகிவிட்டது" என்கிறார் ரேவதி. களத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது ரேவதி குறிப்பிடும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பலியாயினர். விஜய்யின் வாகனம் நின்ற பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. "அவர் இங்கே வந்து பேச ஆரம்பிக்கும்போதே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், அவர் பேச ஆரம்பித்ததும் அருகில் இருந்த தகர கூரையின் மீது ஏற ஆரம்பித்தார்கள்." என விவரிக்கிறார் இதனை நேரில் பார்த்த வெங்கமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ். மேலும் "அந்தத் தகரம் தங்கள் மீது விழுந்துவிடும் என அதற்குக் கீழே இருந்த பெண்கள் வேறு பக்கம் நகர்ந்தார்கள். அதே நேரம் தகரமும் சரிந்து விழுந்தது. இதனால், அருகில் இருந்த சந்துக்குள் ஓட ஆரம்பித்தார்கள். அப்படி ஓடியவர்களில் பலர் கால் இடறி கீழே விழ, குழப்பம் ஏற்பட்டது. பலர் விழுந்தவர்கள் மேலே ஏறியே ஓட ஆரம்பித்தார்கள். கீழே விழுந்தவர்கள் மயங்கிக்கிடக்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்" என வெங்கடேஷ் கூறினார். 4 மணிக்கு மேல் அதிகரித்த கூட்டம் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, 110 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசிவருகிறார். அதன்படி இந்த வாரம் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. சுமார் 4 மணிக்கு மேல் கூட்டம் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. நாமக்கல்லில் விஜய் பேசும்போதே பிற்பகலாகியிருந்தது. அங்கு பேசி முடித்துவிட்டு அவர் கரூரை வந்தடையும்போது மாலையாகியிருந்தது. அவர் பேசத் திட்டமிட்டிருந்த வேலுச்சாமிபுரத்திற்கு ஒரு கி.மீ. தூரத்திலிருந்த பாலத்திற்கு அருகிலிருந்தே பெரிய அளவில் கூட்டம் இருந்தது. பாலத்திற்கு அருகில் மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த விஜய், பேச வேண்டிய இடத்திற்கு வந்து சேரும்போது சுமார் ஏழு மணியாகிவிட்டது. ஏற்கனவே விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர் வாகனத்தின் லைட் அணைக்கப்பட்டது இதற்கிடையில் விஜய்யின் வாகனத்திற்காக தொண்டர்கள் வழிவிட வேண்டியிருந்ததால், அதுவும் நெரிசலை அதிகரித்தது. அவரது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி தகரத்தைப் போட்டு மூடப்பட்டிருந்தது. நெரிசல் அதிகரித்ததால், கூட்டத்தினர் அந்த தகரத் தடுப்பின் மீது ஏறினர். அதனால், அந்தத் தடுப்பு கீழே விழுந்தது. அதேபோல, அருகில் இருந்த கடைகளின் முன்னால் இருந்த தகரக் கூரைகளில் நிறையப் பேர் ஏறினர். அவர்களது எடை தாங்காமல் அந்த கூரைகள் சரிந்து, அதில் நின்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர். இந்த நிகழ்வை நேரில் பார்த்த கோமதி, நெரிசலுக்கு வேறொரு காரணத்தையும் சொல்கிறார். "விஜய் கரூர் பகுதிக்குள் வரும்போது பைபாஸ் பகுதியிலிருந்தே வண்டிக்குள் விளக்கை எரியவிட்டுத்தான் வந்தார். ஆனால், போலீஸ் குடியிருப்பு அருகில் வாகனம் வந்தபோது உள்ளே எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டார்." என்றார். பின், "கண்ணாடி ஷட்டரையும் சாத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை. இதனால், அங்கிருந்த கூட்டம் விஜய் பேசும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது." என்றார். மேலும் "இங்கே ஏற்கனவே கும்பல் இருந்தது. அந்த கும்பலோடு இந்த கும்பலும் சேரவே எல்லோரும் நசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்கிறார் கோமதி. பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர் யார் மீது தவறு? விஜய் பேச ஆரம்பித்தபோது, அவர் பேசிக்கொண்டிருந்த பகுதியின் எதிர்ப்புரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த சாக்கடையின் மேல் பகுதி உடைந்து விழவும் அதன் மீது நின்று கொண்டிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் நெரிசலை அதிகரித்தது. கீழே விழுந்தவர்கள் மீதே ஏறி பலர் ஓட ஆரம்பித்தனர். "இந்த இடத்தில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும்போது விஜய்யின் வாகனத்திற்கு இடமேயில்லை. அவர் போலீஸ் குடியிருப்பு அருகிலேயே பேசியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்தில் இடத்தில் முப்பதாயிரம் பேர் குவிந்தால் என்ன நடக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின். அந்த இடத்தில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தவெக சார்பில் யாரும் முன்வரவில்லை. ஆனால், சமூகவலைதளங்களில் அக்கட்சியினர் சிலர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். அதாவது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் விஜய் பேசுவதற்கு கேட்ட இடம் கொடுக்கப்படவில்லையென்றும் விஜய் அந்த இடத்தை வந்தடைந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. பட மூலாதாரம், TVK 'விஜய் கேட்ட இடத்தை ஒதுக்காதது ஏன்? கரூரில் விஜய் தனது வாகனத்தை நிறுத்திப் பேசுவதற்கு பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி உள்பட நான்கு இடங்களை கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் ஒதுக்கப்படாமல், கரூரில் இருந்து ஈரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், த.வெ.க கேட்ட பகுதிகள் ஒதுக்க முடியாதவையாக இருந்தன என்றார். "அவர்கள் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டார்கள். ஆனால், அந்தப் பகுதி அதிக ரிஸ்க் உள்ள பகுதியாக இருந்தது. குறிப்பாக, அந்த இடத்தின் ஒரு பகுதியில் பெட்ரோல் பங்க் இருந்தது." என்கிறார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம். மேலும் பேசிய அவர், "மற்றொரு பக்கம் ஆறும் பாலமும் இருந்தன. லைட் ஹவுஸ் பகுதி இல்லாவிட்டால் உழவர் சந்தை பகுதியைக் கொடுங்கள் என்றார்கள். அதுவும் மிகக் குறுகலான இடம். ஆனால், வேலுச்சாமிபுரம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்பதால் அந்த இடம் அவர்களது ஒப்புதலோடு வழங்கப்பட்டது" என்றார். பட மூலாதாரம், Sam Daniel/BBC மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? அதேபோல, இந்தக் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு வழங்க வேண்டுமோ அந்த அளவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "ஒரு கூட்டத்தின் தன்மையைப் பொருத்து காவலர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட கூட்டம் ஒன்றால் 250 - 300 பேருக்கு ஒரு காவலர் இருப்பார். நடுத்தரமான ரிஸ்க் என்றால் 100 - 150 பேருக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவார். அதிக ரிஸ்க் உள்ள கூட்டம் என்றால் 50 பேருக்கு ஒருவர் நிறுத்தப்படுவார்கள். இந்தக் கூட்டத்திற்கு காவலர்கள், ஒரு எஸ்.பி., 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 17 ஆய்வாளர்கள், 58 துணை ஆய்வாளர்கள் என 500 பேர் நிறுத்தப்பட்டனர்" எனத் தெரிவித்தார் டேவிட்சன் தேவாசிர்வாதம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, மின்சார வயர்களை ஒட்டியுள்ள மரங்களில் சிலர் ஏறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களை காவல்துறை கீழே இறக்கிய பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்பே நடந்ததாகவும் மின்வாரிய அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgq5zle2y7o
  14. Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:28 PM 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பெரிய ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உக்ரேனில் சுமார் நால்வர் பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகர் கீவ் மீது குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா, யுக்ரைனின் ஏழு பகுதிகளை நோக்கி சுமார் 600 ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது. மோசமான இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட சபோரிஜியா பகுதியில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரேன் பதிலடி கொடுக்கும் என்றும், இந்தத் தாக்குதல் மாஸ்கோ தொடர்ந்து சண்டையிட்டு கொல்ல விரும்புகிறது என்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டணம் தெரிவித்துள்ளார். அண்மைய தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/226320
  15. 28 Sep, 2025 | 02:21 PM (இராஜதுரை ஹஷான்) 2014 முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 594,368 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்வதற்காக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் நட்டத்துக்கான பல காரணிகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மின்சார சபையில் போதுமான சேவையாளர்கள் உள்ள நிலையில் ஒருசில கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளியக தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டமை நட்டத்துக்கான காரணிகளில் பிரதான ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சார சபை தொடர்ச்சியான நட்டமடைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் ஒருகட்டமாக அதிகரித்ததால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். இருப்பினும் 2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்சார சபை இலாபமடையும் நிலைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினசரி 18 மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.மின்கட்டமைப்பின் சிக்கல்களினால் இவ்வாறு மின்விநியோகம் துண்டிக்கப்படவில்லை. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடனை உரிய காலப்பகுதியில் செலுத்ததாத காரணத்தால் மின்வியோகம் சிக்கலுக்குள்ளானது என்று அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்கள். மின்கட்டணத்தை அதிகரித்து 24 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்கியமை சந்தேகத்துக்குரியது என்று குழுவின் தலைவர் இதன்போது கேள்வியெழுப்பினார். https://www.virakesari.lk/article/226318
  16. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 10:21 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது என தெரிவித்த ஓய்வுப்பெற்ற இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் அனில் குமார் சவ்லா, அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் தனித்துவமான அனுகூலங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற 'கடல்சார் உரையாடல்' மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அட்மிரல் அனில் குமார் சவ்லா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கைக்குத் வருவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்புகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும், இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் கிட்டத்தட்ட பிணைக்கப்பட்டவையாகும். கடல்சார் இராஜதந்திரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சவால்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாகும். கடல்சார் பாதுகாப்பும், பொருளாதாரப் பலன்களுக்காகக் கடலைப் பயன்படுத்துவதும் பிரிக்க முடியாதவை. எனவே பாதுகாப்பும், வளர்ச்சியும் கைகோர்த்து செல்ல வேண்டும். கடல்சார் வளங்கள் வரம்பற்றதல்ல என்பதையும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதிசெய்வது அவசியம். மரபுசாராத கடல்சார் பாதுகாப்புச் சவால்கள் 21-ம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கான நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான குழுக்களும் கடல் பயணத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்ததால், தாக்குதல் இலக்குகளும், ஆயுதங்களை விநியோகிக்கும் வழிமுறைகளும் பெருகின. பலவீனமான அரசுகள், அவற்றின் எல்லைக்குள் செயல்படும் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தத் தவறுவது ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, செங்கடலில் ஹூத்தி குழுவினர் நடத்திய தாக்குதல்களை குறிப்பிடலாம். கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகியவை இனிமேல் சாதாரண குற்றங்கள் அல்ல. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக மாறிவிட்டன. இந்தக் குற்றங்களை எதிர்த்துப் போராட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மறுபுறம் தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது. உலகில் மிகப் பெரிய கடற்படை இருந்தாலும் அது சாத்தியமில்லை. அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி இங்கு அவசியமாகிறது. கடற்படைகள், கடல்சார் இராஜதந்திரத்தில் தனித்துவமான அனுகூலத்தைக் கொண்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/226287
  17. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அகமது அல் கதீப் பிபிசி உருது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் அதன் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு பல காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். இந்த உத்தி சார்ந்த ஒப்பந்தம், 'பிராந்திய அதிகாரச் சமநிலையில்' ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், இஸ்ரேலின் உத்தியைப் பாதிக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செப்டம்பர் 9 அன்று கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வளைகுடா நாடு எடுத்த முதல், பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கை இது தான் என பல ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். வளைகுடா நாடுகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் உறுதித் தன்மை ஓரளவுக்கு பலவீனமடைந்துவிட்டது என்ற அச்சத்தை, இஸ்ரேலியத் தாக்குதல் வலுப்படுத்தியுள்ளது என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கத்தாரில் நடைபெற்ற இஸ்ரேலின் தாக்குதலை 'காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு' என்று சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் வர்ணித்திருந்தார். 'திடீர் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்' பட மூலாதாரம், Saudi Press Agency படக்குறிப்பு, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. சௌதி அரேபியா-பாகிஸ்தான் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, உலக அரசியலில் ஒரு திடீர் மற்றும் ஆச்சரியமான நிகழ்வாகக் குறிப்பிடுகிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐரோப்பா மற்றும் பாதுகாப்புக் கொள்கை நிறுவனத்தின் இயக்குநரும் ஆராய்ச்சியாளருமான வலேனியா சக்கரோவா. சௌதி அரேபியா, 'அமெரிக்க அணுசக்தி பாதுகாப்பை' சார்ந்திருப்பதில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் கருதுகிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கும் தெற்காசியாவும் ஒரு புதிய உலக அரசியல் யதார்த்தத்திற்குள் நுழைகின்றன என்று சக்கரோவா சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் பதிவிட்டுள்ளார். "இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் 80 ஆண்டுகளாக ஒத்துழைத்து வருகின்றன, அது அனைவரும் அறிந்ததே" என்று சௌதி அரேபிய அரசியல் ஆராய்ச்சியாளர் முபாரக் அல்-அதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார். பிராந்தியமும் சர்வதேச சமூகமும் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து செல்லும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சம் என்று அல் அதி கருதுகிறார். பிராந்திய அதிகாரச் சமநிலையில் மாற்றம் இந்த 'உத்தி சார்ந்த ' ஒப்பந்தம் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்களை வலுப்படுத்துவதையும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான 'தற்காப்பை' மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என சௌதி பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அந்த இரண்டு நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும் என்றும் அது கூறுகிறது. பிபிசியிடம் பேசிய முபாரக் அல்-அதி, ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த சிக்கலான மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். "இது, இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கும், கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, அதன் உத்தி சார்ந்த கூட்டாளியான அமெரிக்கா துரோகம் செய்ததற்கும் தொடர்புடையது" என்று அவர் கூறினார். பல ஆண்டு காலமாக, அமெரிக்காவிற்கும் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா போன்ற ஆறு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, இதன் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஈடாக ஆறு நாடுகளுக்கும், அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகானமிஸ்ட் கூற்றுப்படி, இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2019-இல் சௌதி அரேபியாவையும் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் தாக்கியபோது இந்த ஒப்பந்தத்தின் அடித்தளத்தில் முதல் விரிசல்கள் தோன்றின. இந்த இரண்டு சம்பவங்கள் நடந்த போதும், அமெரிக்கா குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்ரேல் கத்தார் மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ மீண்டும் அதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ளாது என்பதற்கான உத்தரவாதத்தை இப்போது முன்வைப்பது மட்டுமல்லாமல், மிகவும் நம்பகமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வளைகுடா நாடுகள் கோருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது 'தி எகானமிஸ்ட்'. பிபிசியிடம் பேசிய சௌதி ஆய்வாளர் அல் அதி, தனது நாடு "அதன் பாதுகாப்பு அல்லது உத்தி சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு கூட்டாளியை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பவில்லை. எனவே, அதன் கூட்டாளிகளை பன்முகப்படுத்துவது முக்கியம் எனக் கருதுகிறது" என்றார். புதிய ஒப்பந்தம் பிராந்திய அதிகாரச் சமநிலையில் ஒரு பெரிய மாற்றத்தைத் தூண்டக்கூடும் என்றும் இஸ்ரேலின் உத்தி சார்ந்த இலக்குகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளையோ அல்லது எந்தவொரு ஆயுதங்களையோ சௌதி மண்ணில் நிலைநிறுத்த முடியும். சௌதி அரேபியாவின் சொந்த முடிவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளை சௌதி அரேபியாவில் நிறுவ முடியும். ஹட்சன் இன்ஸ்டிடியூட்டைச் சார்ந்த ஹுசைன் ஹக்கானியின் கூற்றுப்படி, புதிய சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான ஆவணத்தில் பயன்படுத்தப்படும் சொற்களில் 'உத்தி சார்ந்த' ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களின் பயன்பாடும் அடங்கும். பாகிஸ்தான் தனது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை விவரிக்க 'உத்தி சார்ந்த' என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறது என்று ஹுசைன் ஹக்கானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவின் "சுயாதீனமான கொள்கை வகுப்பின் சக்தியை" பிரதிபலிக்கிறது, இது பல சக்திகளுடன் அதன் ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஒரே ஒரு கூட்டாளியுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பலருடன் உறவுகளை விரிவுபடுத்தும் திறமை சவுதி அரேபியாவுக்கு உள்ளது"என்று அல் அதி கூறுகிறார். இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியா வேறு எந்த சக்தியுடனும் செய்து கொண்ட வேறு எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யாது, மாறாக அந்த ஒப்பந்தங்களை வலுப்படுத்துகிறது என்கிறார் அல் அதி . பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு முயற்சிகளில் வலுவான பங்காளிகளாக உள்ளன. அமெரிக்கா சௌதி அரேபியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி, எனவே பாகிஸ்தானுடனான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்திய அரசியல் மற்றும் உத்தியில் இரு நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் பயனளிக்கும் என அல் அதி கருதுகிறார். அதேபோல் பொதுவான மதமும் வலுவான நம்பிக்கையும் பாகிஸ்தானையும் சௌதி அரேபியாவையும் ஒன்றிணைத்துள்ளதாகவும் அல் அதி குறிப்பிடுகிறார். ஓமன் வளைகுடா இரு நாடுகளையும் பிரிக்கிறது, அவற்றின் நிலவியல் இருப்பிடம் முக்கியமானது எனவும் அவர் விளக்குகிறார். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே இஸ்லாமியப் பெரும்பான்மை நாடு பாகிஸ்தான் மட்டும் தான். பாகிஸ்தானிடம் 170க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது. சௌதி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானின் கனிம மற்றும் பெட்ரோலியத் துறைகளில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது. அதேபோல் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் தனது வைப்புத்தொகையை இரண்டு பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கவும் சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது ப்ளூம்பெர்க். வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மை பட மூலாதாரம், GOP படக்குறிப்பு, பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான சௌதி பத்திரிகை நிறுவனத்தின் (SPA) படி, பாகிஸ்தானுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாற்று கூட்டாண்மை, சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தி சார்ந்த நலன்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது. மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மசூதிகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான 'ஒற்றுமையின் அடித்தளம்'எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1960 ஆம் ஆண்டு, ஏமனில் எகிப்திய ராணுவம் போர் தொடுக்கும் என்ற அச்சம் நிலவியபோது, பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக சௌதி அரேபிய மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது. அதன் பின்னர், 1979 இல் இரானியப் புரட்சிக்குப் பிறகு தெஹ்ரானுடனான மோதல் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் நெருக்கமாகின. 1991 ஆம் ஆண்டு இராக் குவைத் மீது படையெடுத்த போது, பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்கு ஒரு ராணுவக் குழுவை அனுப்பியது, மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக சௌதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பாகிஸ்தான் இணைந்தது. 2018 ஆம் ஆண்டுக்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக சௌதி அரேபியா சென்றனர். மற்ற வளைகுடா நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர முடியுமா? பட மூலாதாரம், Pakistan PM's office படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சில அரசியல் ஆய்வாளர்கள், சௌதி அரேபியாவை பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்கு 'அமைதியாக நிதியளிக்கும்' நாடாகக் குறிப்பிடுகின்றனர். சௌதி அரேபியா பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகளுக்கு நிதி வழங்கி, அதன் அணு ஆயுத சேமிப்பை விரிவுபடுத்தும் பணியில் மறைமுகமாக பங்கு வகிக்கிறது என்பது அவர்களது கருத்து. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆய்வாளர்களும், ராஜ்ஜீய அதிகாரிகளும் பாகிஸ்தானின் 'அணுசக்தியால்' சௌதி அரேபியா பயனடையக் கூடும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர் என்கிறது 'தி எகனாமிஸ்ட்' பத்திரிக்கை. சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தின் மையக்கருவாக மாறக்கூடும் என்கிறார் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான தல்ஹா அப்துர் ரசாக். இதுகுறித்த அவரது 'எக்ஸ்' தளப் பதிவில், பிராந்திய நாடுகள் இனி அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இப்போது வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் செயல்முறையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மற்ற வளைகுடா நாடுகளின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "அது சாத்தியம்" என்று கூறியிருந்தார். "ஜி.சி.சி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்)-ல் உள்ள எந்த நாடும் அதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தினால், நாங்கள் சௌதி அரேபியாவுடன் பரஸ்பர உடன்பாட்டை எட்டியுள்ளதால், மற்ற நாடுகளையும் அதில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்"என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgr1epwx2zo
  18. 28 Sep, 2025 | 10:49 AM (நா.தனுஜா) முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட நிராகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள், சத்துருக்கொண்டான் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகளின் மீள்விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழுவில் அங்கம்வகிக்கும் அறிக்கையாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் தன்முனைப்பு தமது அரசாங்கத்திடம் இருப்பதாகவும், ஆகவே இதுபற்றி விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததுடன் அதற்கு உதாரணமாக அண்மையில் குருக்கள்மடத்தில் உள்ள மனிதப்புதைகுழியை தான் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வைப் பொறுத்தமட்டில், அப்பணிகளுக்காகப் போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்து, அவற்றை உரியவாறு முன்னெடுத்துவருவதாகவும், இருப்பினும் நிபுணத்துவம் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச சமூகத்திடம் அதனைக் கோருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை கடந்தகால அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தன்முனைப்பு அரசாங்கங்களுக்கு இல்லாததன் காரணமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும், ஆனால் தமது அரசாங்கத்திடம் அந்த அரசியல் தன்முனைப்பு இருப்பதன் காரணமாக மேற்படி கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான வளங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/226291
  19. Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது. நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையிடம் மீனவர்களை ஒப்படைத்தது. அங்கிருந்து அவர்கள் காக்கிநாடாவுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் ஒரு இரண்டாம் நிலை இழுவைமடி மீன்பிடி படகு வாங்க நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தனர். ஆனால் வீடு திரும்பும் போது, தொழினுட்ப கோளாறு காரணமாக இலங்கை நீரில் மிதந்ததாக அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஒகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை கடற்படை மீனவர்களைக் கைது செய்தது. அதன் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செப்டம்பர் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாண நீதிமன்றம் ஆந்திர மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்டனர். வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவர்கள் திரும்புவதற்கான முயற்சிகளைத் ஆரம்பித்தது. இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையின் ஆதரவுடனும், நான்கு மீனவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியதாகவும் உயர் ஸ்தானிகராலயம் செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226327
  20. கரூரில் 40 பேர் பலி: கூட்ட நெரிசலுக்கு பிறகு என்ன நடந்தது? நிழலாக உறைந்த நிஜங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சி 28 செப்டெம்பர் 2025, 09:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்சை சூழ்ந்துள்ள கூட்டம் படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ரவி என்கிற கட்டடப் பொறியாளரும் ஒருவர். இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடிய நிலையில் சிலர் துக்கம் தாளாமல் அழுதனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் சிக்கிய பலரது உடைமைகள் சிதறிக் கிடக்கும் காட்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் தனது உறவுகளை இழந்த குடும்பத்தினர் துக்கம் தாங்க முடியாமல் உடைந்து அழுதனர். படக்குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காலணிகள் பரவிக் கிடக்கின்றன. படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் தற்போதைய கழுகுப் பார்வை காட்சி. போக்குவரத்து இயல்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20lgdw2vqo
  21. விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் யார்யார்? உருக்கமான பின்னணியுடன் முழு விவரம் படக்குறிப்பு, உறவுகளை இழந்து கதறும் குடும்பத்தினர் 28 செப்டெம்பர் 2025, 02:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் அடங்குவர். அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 5 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் யார்? 1. தாமைரக்கண்ணன் (25), பாகநத்தம், கரூர் 2. ஹேமலதா, விஸ்வநாதபுரி, கரூர் 3. சாய்லெட்சனா (8), விஸ்வநாதபுரி, கரூர் 4. சாய்ஜீவா (4), விஸ்வநாதபுரி, கரூர் 5. சுகன்யா (33), காவலர் காலனி, கரூர் 6. ஆகாஷ் (23), காமராஜ்புரம் வடக்கு, கருர் 7. தனுஷ்குமார் (24), காந்திகிராமம், கரூர் 8. வடிவழகன் (எ) வடிவேல் (54), பசுபதிபாளையம், கரூர் 9. ரேவதி (52), கொடுமுடி, ஈரோடு 10. சந்திரா (40), ஏமூர் புதூர், கரூர் படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்) 11. குருவிஷ்னு (2), வேலுச்சாமிபுரம், கரூர் 12. ரமேஷ் (32), கோடங்கிபட்டி, கரூர் 13. சனுஜ் (13), தாந்தோனி கிராமம், கரூர் 14. ரவிகிருஷ்ணன் (32), எல்.என்.எஸ் கிராமம், கரூர் 15. பிரியதர்ஷணி (35), ஏமூர் கிராமம், கரூர் 16. தரணிகா (14), ஏமூர் கிராமம், கருர் 17. பழனியம்மாள் (11), வேலுச்சாமிபுரம், கரூர் 18. கோகிலா (14), வேலுச்சாமிபுரம், கரூர் 19. மகேஷ்வரி (45), அருகம்பாளையம், மண்மங்கலம் 20. அஜிதா (21), அரவக்குறிச்சி, கரூர் படக்குறிப்பு, தாமரைகண்ணன் (வேடசந்தூர்), மணிகண்டன் (வெள்ளக்கோவில்), ரமேஷ் (கோடங்கிபட்டி) 21. மாலதி (36), ராயனூர் வடக்கு, கரூர் 22. சுமதி (50), ரெத்தினம் சாலை, கரூர் 23. மணிகண்டன் (33), காங்கேயம், திருப்பூர் 24. சதீஷ்குமார் (34), கொடுமுடி, ஈரோடு 25. கிருத்திக்யாதவ் (7), 5 ரோடு, கரூர் 26. ஆனந்த் (26), சுக்காம்பட்டி, சேலம் 27. சங்கர் கனேஷ் (45), குஜிலியம்பாறை, திண்டுக்கல் 28. விஜயராணி (42), பிச்சம்பட்டி, கரூர் 29. கோகுலபிரியா (28), காங்கேயம், திருப்பூர் 30. பாத்திமாபானு (29), ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் 31. கிஷோர் (17), அன்பு நகர், கரூர் 32. ஜெயா (55), வெங்கமேடு, கரூர் 33. அருக்காணி (60), ஏமூர், கரூர் 34. ஜெயந்தி (43), வேலாயுதம்பாளையம், புகளூர் உயிரிழந்தவர்களின் உருக்கமான பின்னணி விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தாமரைக் கண்ணனுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களில் கரூர் விஸ்வநாதபுரியைச் சேர்ந்த ஹேமலதாவும், அவர்களது குழந்தைகள் சாய் லெட்சனா, சாய்ஜீவாவும் அடங்குவர். சாய் லெட்சனா கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். உயிரிழந்தவர்களில் 28 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ள நிலையில் மொத்தம் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yj40lvvego
  22. 27 Sep, 2025 | 04:34 PM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் செப்ரெம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சத்திரசிகிச்சையியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி, சிரேஷ்ட விரிவுரையாளரும், சத்திர சிகிச்சை நிபுணருமான சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா, உடற்கூற்றியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி துரைரட்ணம் செந்தூரன், புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, சமஸ்கிருதத்துறைத் தலைவரும்இ சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா மற்றும் விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவநேசன் சபா ஆனந் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன் விவசாய உயிரியலில் சிரேஷ்ட பேராசியரகவும், மருத்துவ பீடத்தைச் சேர்நத சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியலில் பேராசிரியராகவும், சத்திர சிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன் உடற்கூற்றியலில் பேராசிரியராகவும், புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியலில் பேராசிரியராகவும், சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும், விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந் உடற்கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/226249
  23. 27 Sep, 2025 | 09:06 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இத் தருணத்தில், இலங்கை அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி வருவதாகவும், இந்த அபிவிருத்தியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படும் என்றும், அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார். "எக்ஸ்போ 2025 ஒசாகா" கண்காட்சியில் இலங்கை மற்றும் ஜப்பானின் கண்காட்சி அரங்குகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்போ 2025 கண்காட்சி மூலம் இலங்கைக்கு தனது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை உருவாகும் என்று தெரிவித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், கடினமான காலங்களில் ஆதரவளித்தும் வெற்றிகரமான காலங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வலுவான பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு: நட்புறவு என்பது மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைக்கிறது. எல்லைகளைக் கடக்கின்றது. மனித உறவுகளை வளர்க்கின்றது. மேலும், ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக பொதுவான இலக்குகள் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது. "எக்ஸ்போ 2025" கண்காட்சி இந்த இலட்சியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். நட்புறவு மற்றும் பொதுவான இலக்குகளை கொண்டாடும் இந்த நேரத்தில், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் உங்களுடன் இணைவதை கௌரவமாகக் கருதுகிறேன். “எக்ஸ்போ 2025” என்பது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாகும். இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம். எக்ஸ்போ போன்ற சர்வதேச தளங்களில் எமது பலம் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சமூகத்தில் பொறுப்புக் கூறத்தக்க மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்ட பங்காளராக எமது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உலகின் ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதன்போது, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், விவசாயம் மற்றும் நமது ஏராளமான கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு உள்ளிட்ட அதிக திறன் கொண்ட துறைகளை வளர்ப்பது தொடர்பான எமது தெளிவான கொள்கையை நன்கு பிரதிபலிக்கிறது. "எக்ஸ்போ 2025" இன் தொனிப்பொருள் "நமக்கான எதிர்கால சமூகத்தை உருவாக்குதல்" என்பதாகும். எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதே இதன் நோக்காகும். உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இந்த சகாப்தத்தில், இலங்கை நமது பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். இதன்போது, அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அந்தச் சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் உறுதிசெய்கிறோம். எக்ஸ்போ 2025 கண்காட்சி ஊடாக இலங்கை தமது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, சமீப காலங்களில் அது முன்பை விட வலுவடைந்துள்ளது. எமது நெருங்கிய நண்பராக, கடினமான காலங்களில் ஜப்பான் எமக்கு ஆதரவளிப்பதுடன், வெற்றியின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளியாகவும் உள்ளது. பல இலங்கையர்கள் இப்போது ஜப்பானில் வசிக்கின்றனர். இதன் மூலம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் உள்ள இலங்கை அரங்கம் நமது நாட்டின் விடாமுயற்சி, கலாசாரப் பெருமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று எக்ஸ்போ 2025 ஐப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரங்கையும் இலங்கை தின நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசும் எக்ஸ்போ 2025 சங்கமும் வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் பண்டைய கலாசார பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் இலங்கைத் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன்போது பெளதிக முன்னேற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வளமான உலகத்தையும் அழகான எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. ஒவ்வொரு கனவும் நனவாகும், அனைவரும் பிரகாசிக்கக்கூடிய மற்றும் தேசத்திற்கு மகத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய உலகை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா (Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/226267

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.