Everything posted by ஏராளன்
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆசியக் கிண்ண ரி20 – சூப்பர் 4 சுற்றின் தொடக்கப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 11:58 PM ஆசிய கிண்ண கிரிக்கெட் ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் முதலில் பந்துவீச தேர்வு செய்தார், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. தாசுன் ஷனகா 37 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் எடுத்தார், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பாதும் நிஸ்ஸங்கா 22 ஓட்டங்களும் எடுத்தார். அதன்படி, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில்தான் 06 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கைத் துரத்த முடிந்தது. சைஃப் ஹசன் 66 ஓட்டங்களும், லிண்டன் தாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர், முதல் கட்டத்திலேயே பங்களாதேஷ் அணி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ட்ரோஹிட் ஹீத்ரோவும் 58 ஓட்டங்கள் எடுத்தார். அதன்படி, பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் தனது வெற்றி இலக்கை எட்டியது. https://www.virakesari.lk/article/225616
-
அநுரவின் அரசாங்கத்திலும் அடக்குமுறை நீடிக்கிறது ; சிவில் சமூக கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டு : ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை நிறுத்துமாறும் வலியுறுத்து
21 Sep, 2025 | 11:31 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் முரணான விதிகளை திரும்பப் பெறுவதாகவும், ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அமைப்பை நிறுவுவதாகவும் உறுதியளித்து. ஆனால் பதவிக்கு வருந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், அடக்குமுறைகள் நீடிப்பதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களும் தொடர்கின்றன. வட,கிழக்கில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தல், கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்பாறையில் காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்டுப்போராடும் தம்பிராசா செல்வராணி, கிளிநொச்சியில் பெண்கள் உரிமைகள் அமைப்பாளர் வாசுகி வல்லிபுரம் போன்ற மனித உரிமை பாதுகாவலர்கள் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டனர். சிவில் சமூக அமைப்புகள் உளவுத்துறை சேவைகளால், குறிப்பாக நிதி தொடர்பாக, கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் அவை செயற்பட பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான இராணுவமயமாக்கப்பட்ட மேற்பார்வை 'எதிர்ப்பு குரல்களை அடக்குவதற்கும் அவ்விதமான குரல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்பதோடு சர்வதேச கடமைகளை நேரடியாக மீறுகின்றன. வட,கிழக்கில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, கடுமையான அதிகாரத்தடைகள் அவற்றின் அன்றாட வாழ்வியலை அச்சுறுத்துகின்றன. அமைதியான ஒன்றுகூடலுக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் ஆர்ப்பாட்டங்கள் மீது பலமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளனர். 2022 வெகுஜன போராட்டங்களுடன் தொடர்புடைய மாணவ அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியான நீதித்துறை துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். 3,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 2025 மார்சில், கொழும்பில் 27மாணவ செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்ததோடு தமிழர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் உள்ளன. தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கத்தின் உறுதிமொழிகளை மீறி நடைமுறையில் உள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் ஸ்டிக்கர்கள் தொடர்பாக 22 வயது முஸ்லிம் செயற்பாட்டாளரான மொஹமட் ருஸ்டி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதற்காக இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதேபோன்று ஊடகவியலாளர்களில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்குதல்கள் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் கண்காணிப்புக்குள் காணப்படுகின்றனர். இதேவேளை, ஆயுத மோதலின்போது நடந்த பாரிய அட்டூழியங்கள் குறித்து ஐ.நா.வின் ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றபோதிலும், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அரசாங்கம் தொடர்ந்து எதிர்க்கிறது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை அரசாங்கம் செயற்படுத்துகின்றனது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகஸ்ட் மாதம், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதியை வழங்குவதற்கான வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். அது சம்பந்தமான அரசாங்கத்தின் வினைத்திறனான செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. அரசாங்கம் அரசியல் ரீதியான சீர்திருத்த வாக்குறுதிகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. அக்கலாசாரம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/225648
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 03:16 AM 2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் "A" குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தமது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. https://www.virakesari.lk/article/225557
-
'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக்-31 போர் விமானங்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும் நேட்டோ செய்தித் தொடர்பாளர், "இது ரஷ்யாவின் அடாவடியான அணுகுமுறை மற்றும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கு மற்றுமொரு உதாரணம்." எனத் தெரிவித்துள்ளார். நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் தங்களின் விமானங்களை அனுப்பி வைத்தன. ஆனால் எஸ்டோனிய வான் பரப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "போர் விமானங்கள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் தான் பயணித்தன. சர்வதேச வான்பரப்பில், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் மற்ற நாடுகளின் எல்லைகளை மீறாமலும் தான் இது மேற்கொள்ளப்பட்டது என கண்காணிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இந்த போர் விமானங்கள் எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து 3 கிமீ தொலைவில் சர்வதேச எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் பறந்தன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்டோனிய பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல் கடந்த வாரம் நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களின் வான்பரப்புக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறியதால் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, கிழக்குப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கிழக்கு நோக்கி நகர்த்தப் போவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல், நேட்டோவில் பிரிவு 4-ன் கீழ் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். "எந்த விதமாக மிரட்டலுக்கும் நேட்டோவின் பதிலடி ஒன்றுபட்டதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்து அடுத்தக்கட்ட கூட்டு நடவடிக்கைகள் பற்றி ஒப்புக்கொள்ள நமது கூட்டாளிகளுடன் ஆலோசிப்பது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்." என்றார் அவர். "நான் அதை விரும்பவில்லை. இது நடந்தால் பெரிய பிரச்னையாக மாறும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்டோனியா, இந்த ஆண்டு தனது வான்வெளியில் ரஷ்யா செய்த ஐந்தாவது அத்துமீறல் இது எனக் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய விமானங்கள் வடகிழக்கில் இருந்து எஸ்டோனிய வான்வெளிக்குள் நுழைந்தது. முதலில் பின்லாந்து வளைகுடாவுக்கு மேல் பின்லாந்து ஜெட் விமானங்கள் அதை இடைமறித்தன என்றும் பின்னர், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட இத்தாலிய எஃப்-35 போர் விமானங்கள் ரஷ்ய விமானங்களைப் பின்தொடந்து சென்று எஸ்டோனியா வான் எல்லைக்கு வெளியே அனுப்பி வைத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய ஜெட் விமானங்கள் எந்தவொரு பயணத் திட்டமும் இல்லாமல், டிரான்ஸ்பாண்டர்களை (transponders) அணைத்து, எஸ்டோனிய விமான கட்டுப்பாட்டுடன் வானொலி தொடர்பு இல்லாமல் இருந்தன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "இந்த ஜெட் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் விதிமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் பறந்தன. பிற நாடுகளின் எல்லைகளை மீறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது. எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து குறைந்தது 3 கிலோமீட்டர் தொலைவில் பால்டிக் கடல் பகுதியில் தான் அவை பறந்தன என்றும் தெரிவித்தது. 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைத்திருந்தார். ஆனால், புதினின் படைகள் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்து, வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. தரை வழியாகவும் மெதுவாக முன்னேற்றம் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா யுக்ரேனில் திட்டமிட்டபடி போர் நடத்த முடியவில்லை என்பதை இந்த ஊடுருவல் காட்டுகிறது என்று எஸ்டோனிய பிரதமர் கூறினார். "நேட்டோ நாடுகள் தங்கள் சொந்த நிலப்பரப்புகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், யுக்ரேன் மீதான கவனத்தையும், உதவியையும் திசை திருப்புவதே ரஷ்யாவின் நோக்கம்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அலாஸ்கா உச்சிமாநாட்டில் டிரம்ப் - புதின் கடந்த வாரம், போலந்து ராணுவம் குறைந்தது மூன்று ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், மொத்தம் 19 ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் நுழைந்ததாகக் கூறினார். இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று ரஷ்யா கூறியது. போலந்து நிலப்பரப்பில் உள்ள வசதிகளை குறிவைக்கும் "எந்தத் திட்டமும் இல்லை" என்றும் அதன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியது. ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸ், வழிகாட்டும் கருவிகள் செயலிழந்ததால் டிரோன்கள் தவறுதலாக போலந்து வான்வெளிக்குள் நுழைந்தன எனக் கூறியது. பல நாட்களுக்கு பிறகு, "டான்யூப் (நதியில்) நதிக்கரையில் உள்ள யுக்ரேனிய உள்கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்", ருமேனிய எல்லையை கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு எப்ஃ - 16 (F-16) ஜெட் விமானங்கள் ஒரு ரஷ்ய டிரோனைக் கண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பின்னர் அந்த டிரோன் ரேடாரிலிருந்து மறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. போலந்து மற்றும் ருமேனியாவில் நடந்த இந்த ரஷ்ய ஊடுருவல்களுக்கு எதிர்வினையாக, நேட்டோ தனது துருப்புகள் மற்றும் போர் விமானங்களை கிழக்கு நோக்கி நகர்த்துவதாக அறிவித்தது. கூட்டணியின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியில் போலந்து வான்வெளி பாதுகாப்பு பணிகளில் பிரிட்டன் , பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvl0g7nxeyo
-
"பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" ஆவணக் காட்சியகம் திறப்பு
Published By: Vishnu 21 Sep, 2025 | 12:31 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/225621
-
கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?
பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025 கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது. யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது. சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, தோட்டப் பகுதியில் ரோலக்ஸ் யானை ஏற்படுத்தியுள்ள சேதம். கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது. இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன. 'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்? கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, கால்நடை மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார். பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர். ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர். படக்குறிப்பு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார். அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார். ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல் படக்குறிப்பு, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார். ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார். யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம் சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4vj37nz1o
-
சர்க்கரையை 10 நாள் அறவே தவிர்த்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025, 01:53 GMT இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். 'அதிக சர்க்கரை' உடலுக்கு கேடு என்பதை பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். வெள்ளை சர்க்கரை சிறந்ததா அல்லது நாட்டுச் சர்க்கரை சிறந்ததா என்பதைக் கடந்து, அனைத்து வகையான சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிர்ப்பதே சர்க்கரையை தவிர்க்கும் சவால் (Sugar cut challenge) ஆகும். 'சர்க்கரையை 10 நாட்கள் தவிர்த்ததால் முகம் பொலிவு பெறுகிறது', 'எடை குறைந்துவிட்டது' என இணையத்தில் பலரும் இதுகுறித்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. இந்த 'சர்க்கரையை முழுமையாகத் தவிர்ப்பது' குறித்த 6 கேள்வி- பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாம் ஏன் சர்க்கரையை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ளும் முன், இருவகையான சர்க்கரைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். முதலில், சேர்க்கப்பட்ட சர்க்கரை (Added sugars) என்பது உணவுகள் அல்லது பானங்கள் தயாரிக்கப்படும் போது அல்லது பதப்படுத்தப்படும் போது சேர்க்கப்படும் எந்த வகையான சர்க்கரை அல்லது இனிப்பூட்டியையும் குறிக்கிறது. வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி, அதன் மூலம் செய்யப்படும் பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் என அனைத்தும் இந்த வகையில் வரும். இதில் தேன் போன்றவை இயற்கையாக உருவானாலும் கூட, அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் தான். இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மற்றொன்று, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரை. 'இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில், 'லான்செட்' வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளா (25.5%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. "நீரிழிவு நோய் மட்டுமல்ல, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது என்பது பல வழிகளில் மனித உடலுக்கு ஆபத்தானது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் சிந்தியா தினேஷ். டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய், இதய நோய், பற் சொத்தை போன்ற பல விளைவுகள் இதனால் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார். 2. நம் உடலுக்கு உண்மையில் சர்க்கரை தேவையா? "நம் உடலுக்கு குளுக்கோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை நிச்சயம் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் என்பது மூளையின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். இது முழு உடலுக்கும் ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும்" என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health) தெரிவிக்கிறது. 'ஆனால் உங்கள் உணவில் குளுக்கோஸை தனியாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற உணவு மூலக்கூறுகளை உடைப்பதன் மூலம் அதற்குத் தேவையான குளுக்கோஸை பெற்றுக் கொள்ளும்' என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. 3. பழங்களில் இருக்கும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டுமா? பட மூலாதாரம், Getty Images "பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ள அனைத்து உணவுகளிலும் சர்க்கரை என்பது இயற்கையாகவே காணப்படுகிறது. இயற்கை சர்க்கரை உள்ள முழு உணவுகளை உட்கொள்வது ஆபத்தில்லை" என ஹார்வர்ட் மருத்துவப்பள்ளியின் கட்டுரை ஒன்று கூறுகிறது. மேலும், "தாவர உணவுகளிலும் அதிக அளவு நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. பால் உணவுகளில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளன." "மனித உடல் இந்த உணவுகளை மெதுவாக ஜீரணிப்பதால், அவற்றில் உள்ள சர்க்கரை நமது செல்களுக்கு நிலையான ஆற்றலை வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது." என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது, இயற்கை சர்க்கரைகளுடன் சேர்த்து நிறைய ஊட்டச்சத்துகளையும் நார்ச்சத்தையும் பெறுகிறீர்கள். 4. சர்க்கரையை தவிர்க்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது' "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது பல வெளிப்படையான நன்மைகளை அளிக்கிறது. உதாரணத்திற்கு, பற்களின் ஆரோக்கியம் மேம்படுவது மற்றும் கலோரி நுகர்வு குறைவதால் உடல் எடை குறைவது போன்றவை. ஆனால் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கும்போது, சிலருக்கு தலைவலி, சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்" என்று கூறுகிறார் மருத்துவர் சிந்தியா. அதே சமயம், "அத்தகைய விளைவுகள் சிலருக்கு வர காரணம் அவர்கள் அதற்கு முன் அதிக சர்க்கரையை உணவில் சேர்த்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கப் காபியில் 4 முதல் 6 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரையை சேர்ப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏற்படலாம். மற்றபடி, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். 5. உடலில் எவ்வளவு விரைவாக நன்மைகளை உணரலாம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்' அமெரிக்காவில் உடல் பருமன் கொண்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (2015), 10 நாட்களுக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் அறவே தவிர்ப்பது, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டது. "சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும். 7 முதல் 8 நாட்களில், மனநிலையில் நல்ல மாற்றங்கள் வரும். 9 முதல் 10 நாட்களில் சருமம் பொலிவடையத் தொடங்கும்." என்கிறார் மருத்துவர் சிந்தியா. அதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு 3 முதல் 5 நாட்களிலேயே ரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். "உடல் எடையில் மாற்றங்கள் தெரிய குறைந்தது ஒரு மாதமாவது சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவு முறையும் இருக்க வேண்டும். ஆனால், அதை உணவியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன் பின்பற்றுவது சிறந்தது" என்று கூறுகிறார் சிந்தியா. 6. தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில், இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் என்பதன் அளவு 10% மேல் இருக்கக்கூடாது. அதை இன்னும் 5% என குறைப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும்" என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (National Health service) பின்வருமாறு பரிந்துரைக்கிறது, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஆரோக்கியமான அளவு என்பது 25 கிராம் சேர்க்கப்பட்ட சர்க்கரை, அதாவது 6 ஸ்பூன் சர்க்கரை. இதுமட்டுமின்றி, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்." என்கிறார் சிந்தியா தினேஷ். அதிலும், நீரிழிவு நோயாளிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று கூறும் சிந்தியா, "ஆப்பிள், கொய்யாக்காய், பால், கேரட் போன்றவற்றை அவர்கள் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்" என்கிறார். "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதை 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் என ஒரு இணைய ட்ரெண்டிற்காக பின்பற்றாமல், அதை வாழ்க்கை முழுக்க பின்பற்றுவதே சிறந்த முறையாக இருக்கும்." என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp8jzjm82k7o
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
20 Sep, 2025 | 06:14 PM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார். கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார். இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/225604
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
திலீபன் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது 20 Sep, 2025 | 05:40 PM தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை (19) இரவு வவுனியாவை அடைந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (20) காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியடியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதைவேளை குறித்த ஊர்தி பவனியானது இன்றையதினம் முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுச்சென்றது. https://www.virakesari.lk/article/225599
-
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ 20 Sep, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பல அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்றுதிரண்டு கார்ல்டன் இல்லத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவரை வாழ்த்தி தங்களது அன்பை வெளிப்பிடுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/225572
-
Genetic disease இல்லாத உலகம் விரைவில் உருவாக போகிறதா? | Ulagin Kathai
மரபணு நோய்களை தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா என விவரிக்கிறது இந்த காணொளி.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களையும தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு Published By: Vishnu 20 Sep, 2025 | 02:47 AM இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 மீனவர்களையும் இம் மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/225556
-
இந்தியாவின் முதல் பெண் மாவோயிஸ்ட் 'கமாண்டர்' 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியது ஏன்?
பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்த நேரத்தில் அவர் பலமுறை தனது பெயரை மாற்றிக்கொண்டார். கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தபோது, அவர் தேவக்கா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு அவர் வட்டி அடிமே என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தேவியின் கணவர் ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டர்தான். அவரது அனுபவங்கள் டஜன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேவி பற்றி மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாங்கள் அவர் ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் கமாண்டர் ஆனது மற்றும் சரணடைந்தது குறித்த கதையை அறிய விரும்பினோம். முதலில் தனது வாழ்க்கைக் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். இறுதியில், தனது கிராமத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றோம். தேவிக்கு இப்போது 50 வயது. நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் நீலபச்சை நிற புடவை அணிந்திருந்தார். வேலை செய்யும் போது அது ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காக அதை உயர்த்திக் கட்டியிருந்தார். எங்களுக்கு அவர் தேநீர் கூட தயாரித்துக் கொடுத்தார். எங்கள் உரையாடல் இடைவெளி விட்டுவிட்டு நடந்தது. இதற்கிடையில், அவர் அரிவாளை எடுத்துக்கொண்டு வயலில் வேலை செய்யவும் சென்றார். நாங்களும் அவரோடு சென்று பேசினோம். ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைதல் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளின் குழுவில் மிகக் குறைந்த பெண்களே இருந்த நேரத்தில், தேவி ஒரு சாதாரண கிராமப்புற குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு, கிளர்ச்சி அரசியல் மற்றும் 'கொரில்லாப் போர்' பாதையைத் தேர்ந்தெடுத்தார். "நாங்கள் நிலமற்றவர்கள். ஏழைகள், பெரும்பாலும் பட்டினியாக இருந்தோம். அடிப்படை சுகாதார சேவைகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் காட்டில் நிலத்தை உழ முயற்சிக்கும்போது, வனத்துறை அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். அவர்கள் போலீசாருடன் கைகோர்த்து செயல்பட்டனர்," என அவர் தெரிவித்தார். வன நிலத்தில் விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. கிராம மக்களைத் தடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சாதாரணமானது என்று உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது மீண்டும் கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். தனது 13வது வயதில் தனது தந்தை வனத்துறை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை பார்த்ததாக தேவி கூறுகிறார். அதன் பிறகு போலீசார் அவரது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவை அனைத்தையும் பார்த்த பிறகு, தேவி வீட்டை விட்டு வெளியேறி வன்முறைப் பாதையில் இறங்கினார். "எனது கருத்தை சொல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது – அது துப்பாக்கி முனையில் பேசுவதுதான்" என்று கூறுகிறார். கிராம மக்கள் ஏன் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது அவர், "போலீஸ் ஒருபோதும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, மாவோயிஸ்டுகள் வந்த பின்னரே வனத்துறை அதிகாரிகள் பின்வாங்கினர்" என்று கூறினார். மாவோயிசம் முடிவுக்கு வந்ததாக கூறிய அரசு 1988-ல் தேவி ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைந்தார். 2000-களில், மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தது. 10 மாநிலங்களில் பரவியிருந்த இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். அதன் வலிமை மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தொலைதூர காடுகளில் இருந்தது. இந்தியாவின் இந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சி சீனப் புரட்சியாளர் மா சே துங்கின், 'அரசாங்க அதிகாரத்திற்கு எதிரான மக்களின் போர்' என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. 1967-ல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதமேந்திய விவசாயிகள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனுடன் சேர்த்து இது நக்சலிச இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்த வன்முறைப் போராட்டத்தில் பல ஏற்ற இறக்கங்கள் வந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பலவீனமடைந்துள்ளது. மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் கொரில்லா முறைகளைப் பின்பற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள், ஏழைக் குழுக்களிடையே நிலத்தைப் பகிர்ந்தளிக்கவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை அகற்றி ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தை நிறுவவும் போராடுவதாகக் கூறுகின்றனர். இந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதிகளை அரசாங்கம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணித்து வருவதாகவும், காட்டு நிலங்களை பெரிய நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், இந்த கிராமப்புறக் குழுக்களுக்கு வன நிலத்தின் மீது உரிமை இல்லை என்று அரசு வாதிடுகிறது. அந்த நிலத்தை உழ முடியாது. மேலும், பெரிய தொழில்கள் மூலமாகவே வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சலிசத்தை "ஏழை பழங்குடி பகுதிகளுக்கு ஒரு பெரிய பேரிடர்" என்று விவரித்தார். இதனால் பழங்குடி மக்கள் "உணவு, மின்சாரம், கல்வி, வீட்டுவசதி, கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர்" என்று அவர் கூறினார். சரணடைய விரும்பாத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு இப்போது ஒரு "கடுமையான அணுகுமுறை" மற்றும் "சகித்துக்கொள்ளாத கொள்கை" ஆகியவற்றை பின்பற்றுகிறது. இதைச் செயல்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 2026 மார்ச் 31-க்குள் "இந்தியா நக்சல் இல்லாத நாடாகிவிடும்" என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். போராட்டத்தில் இறந்தவர்கள் 1980-களைப் பற்றிய தேவியின் கூற்றுக்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்துவது எங்களுக்குச் சாத்தியமில்லை. அவர் 30 பேர் கொண்ட படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி, ஒருபோதும் ஒரே இடத்தில் தங்கவில்லை என்று கூறுகிறார். பாதுகாப்புப் படைகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அவர், "நான் முதல் முறையாக மறைந்திருந்து தாக்கியது எனக்கு நினைவிருக்கிறது. நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள கண்ணிவெடியை அமைத்து ஒரு கண்ணிவெடியால் தகர்க்க முடியாத வாகனத்தை வெடிக்கச் செய்தேன். அதில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று கூறுகிறார். இத்தகைய தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதில் அவருக்குப் பெருமை உள்ளது. மேலும், இதில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது கைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நாங்கள் பலமுறை வற்புறுத்திக் கேள்வி கேட்டோம். பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, காட்டில் ஷம்பாலா தேவியின் புகைப்படம். காவல்துறையின் ஒற்றர்கள் என்று தவறாக நினைத்துத் தாங்கள் கொன்ற அல்லது பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறந்த பொதுமக்களின் மரணத்திற்காக அவர் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். அவர், " நாங்கள் எங்கள் சொந்த மக்களைக் கொன்றுவிட்டோம் என்பதால் இது தவறாகத் தோன்றியது. நான் அவர்களின் கிராமங்களுக்குச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டேன்," என்று கூறுகிறார். ஒருமுறை அவரது படைப்பிரிவு, பாதுகாப்புப் படையினர் மீது பதுங்கித் தாக்கியபோது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சாதாரண குடிமகனும் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அவரது தாய் மிகவும் கோபமாக இருந்தார், அழுதுகொண்டிருந்தார். படைப்பிரிவு ஏன் இரவில் தாக்குதல் நடத்தியது என்று கேட்டார் என்று அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் பொதுமக்களை அடையாளம் காண்பது கடினம். தேவியின் கூற்றுப்படி, இரவு நேரத் தாக்குதல்கள் மிகவும் பயனுள்ளவை. தாம் எத்தனை பேரைக் கொன்றோம் என்பது தனக்குத் தெரியாது என்று தேவி கூறுகிறார். ஆனால், பாதுகாப்புப் படைகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் 'குறைந்த தீவிரம் கொண்ட போர்' குறித்த மிகப்பெரிய தரவுத்தளமான 'தெற்கு ஆசிய தீவிரவாத தளம்' தரவுகள்படி, 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்த மோதலில் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 4,900 மாவோயிஸ்டுகள், 4,000 பொதுமக்களும் மற்றும் 2,700 பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வன்முறையை அனுபவித்த மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் கிராம மக்கள் பெரும்பாலும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்ததாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும் தேவி கூறுகிறார். பல பழங்குடி சமூகங்கள் மாவோயிஸ்டுகளைத் தங்கள் மீட்பர்களாகக் கருதினர் என்று அவர் கூறுகிறார். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அவர்கள் காட்டு நிலங்களை சாதாரண மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர். மேலும், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற அவர்களுக்கு உதவினர். இது தொடர்பாக நாங்கள் சில கிராம மக்களுடன் பேசினோம். அவர்களும் தேவியின் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தினர். சவால்களும் 'சுதந்திரமும்' முதலில், கொரில்லாப் போரின் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் தேவிக்கு புதியவையாக இருந்தன. அவர் அதற்கு முன்பு ஒருபோதும் பொதுவில் ஆண்களுடன் பேசியதில்லை. எனவே, அவர்களுக்குத் தலைமை தாங்குவதையும், அவர்களுக்குக் கட்டளையிடுவதையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக நிலத்தில் வேலை செய்த பிறகு அவர் இந்த நிலையை அடைந்ததால், ஆண்கள் அவரை மதித்தனர் என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, மாவோயிஸ்ட் அமைப்பில் தினமும் தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் பொறுப்பு. பாதுகாப்புப் படைகள் அங்குத் தேடுவதால், முகாம்கள் தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் படைப்பிரிவு தொடர்ந்து காடுகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. கடினமான மாதவிடாய் காலங்களில் கூட பெண்களுக்கு எந்த விடுப்பும் அளிக்கப்படவில்லை. ஆனால், தேவி ஒரு 'சுதந்திர' அனுபவத்தைப் பற்றியும் பேசுகிறார். தன்னை நிரூபிப்பதன் மூலமும், தனது அடையாளத்தை உருவாக்குவதன் மூலமும் இந்த 'சுதந்திரத்தை' அவர் உணர்ந்தார். "பழங்குடி சமூகத்தில் பெண்கள் செருப்புகளைப் போல் நடத்தப்பட்டனர். அவர்கள் யாருடைய மனைவியோ அல்லது தாயோ என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. ஆனால், மாவோயிஸ்ட் அமைப்பில், எங்கள் வேலை மூலம் நாங்கள் அடையாளம் காணப்பட்டோம் – அப்படி கமாண்டர் ஆனது எனது அடையாளம்," என்று அவர் கூறுகிறார். தான் தனது கிராமத்திலேயே இருந்திருந்தால், சிறு வயதிலேயே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பேன் என்று தேவி கூறுகிறார். மாவோயிஸ்டாக மாறிய பிறகு, அவர் தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிந்தது. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தேவியின் கணவர் ஷம்பாலா ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டராக இருந்தார். ஆனால், மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து, அதிக மக்கள் கொல்லப்பட்டபோது, தேவி தனது வாழ்க்கையைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். வாக்குறுதியளிக்கப்பட்ட புரட்சி எங்கும் காணப்படவில்லை என்று அவர் உணர்ந்தார். "ஒருபுறம், பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. மறுபுறம், நாங்களும் அதிக தாக்குதல்கள் மற்றும் கொலைகளைச் செய்து கொண்டிருந்தோம்" என்று அவர் கூறினார். அந்த வாழ்க்கையை விட்டு வெளியேற மற்றொரு காரணம், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு எலும்பு காசநோய் (bone TB) ஏற்பட்டது. சிகிச்சைக்காக அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மறைந்து மறைந்து செல்ல வேண்டியிருந்தது. "எந்தவொரு நிரந்தர மாற்றமும் நாடு தழுவிய விரிவாக்கத்தால் மட்டுமே வர முடியும். ஆனால், நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் செல்வாக்கு குறைந்துகொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் குறைந்துகொண்டிருந்தது," என்று தேவி கூறினார். தொலைதூரப் பகுதிகளில் வாழும் சமூகங்கள் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளிடம் உதவி பெற்றன. இப்போது அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. மொபைல் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் வெளி உலகத்துடன் சிறப்பாக இணைந்தனர். இதற்கிடையில், பாதுகாப்புப் படைகள் டிரோன்கள் போன்ற நவீன உபகரணங்களைக் கொண்டு ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளை கிராமங்களிலிருந்து தொலைவில் உள்ள காடுகளுக்குத் தள்ளினர். இது அவர்களை மேலும் தனிமைப்படுத்தியது. சரண் பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது அரசு கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்கிறார். 25 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அரசின் கொள்கையின் கீழ் தேவி ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்தக் கொள்கையின் கீழ், மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதங்களை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்து சரணடைகிறார்கள். அரசு அவர்களின் மறுவாழ்வுக்காக நிதி, நிலம் மற்றும் விலங்குகளை வழங்குகிறது. இப்போது தேவி, தான் ஓடி வந்த அதே கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சரணடைந்த பிறகு, தேவி மற்றும் அவரது கணவருக்கு அரசிடமிருந்து நிலம், ரொக்கப் பணம் மற்றும் குறைந்த விலையில் 21 செம்மறி ஆடுகள் கிடைத்தன. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தனது கணவர் ரவிந்தர் மற்றும் மகளுடன் ஷம்பாலா தேவி சரணடைதல் கொள்கை, மாவோயிஸ்டுகளின் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று வெளிப்படையாக கூறவில்லை. இதன் கீழ், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்த்து, ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். தங்களுக்கு எதிராக வன்முறை தொடர்பான சட்ட வழக்குகள் எதுவும் இப்போது இல்லை என்று இந்தத் தம்பதியர் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் அத்தகைய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 8,000 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மறுபுறம், எத்தனை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் எஞ்சியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் அவர்களின் உச்சத்தில் தீவிரமாக இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை. சரணடைந்த பிறகு, தேவி கிராம சபையில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர்கள் மக்களின் புகார்களை கிராமத் தலைவரிடம் எடுத்துச் சென்று, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவுகின்றனர். "அரசுடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாவோயிஸ்டுகளையும் ஒழித்துவிடுவோம் என்ற அரசின் அறிவிப்பு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாங்கள் தேவியிடம் கேட்டோம். படக்குறிப்பு, கிராம மக்களிடையே ஷம்பாலா தேவி மற்றும் அவரது கணவர் அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்து, "இறுதியில் இந்த இயக்கம் தோல்வியடைந்தாலும், அது ஒரு வரலாற்றை உருவாக்கிவிட்டது. உலகம் ஒரு பெரிய போராட்டத்தைக் கண்டுள்ளது. இது எங்கோ இருக்கும் ஒரு புதிய தலைமுறைக்கு தங்கள் உரிமைகளுக்காகப் போராட உத்வேகம் அளிக்கலாம்" என்று கூறினார். ஆனால், தனது எட்டு வயது மகளை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் அனுப்புவாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, அவரது பதில் தெளிவாக இருந்தது. "இல்லை, இங்குள்ள சமூகம் வாழும் வாழ்க்கையை நாங்கள் இப்போது வாழ்வோம்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n4yky4mdo
-
வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் - வலி. மேற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!
Published By: Vishnu 20 Sep, 2025 | 02:37 AM வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறுக்கே வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்றையதினம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது செட்டியார் மடம் சந்தியிலும் இவ்வாறு ஒரு வாகனம் மாடு ஒன்றின் கயிற்றில் சிக்கியது. அது பெரிய வாகனமாக இருந்ததால் ஆபத்துகள் ஏற்படவில்லை. இதுவே மோட்டார் சைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டியாக இருந்திருந்தால் அங்கே பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதுபோல கட்டாக்காலி நாய்கள் வீதியில் செல்வதாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/225553
-
ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர்ப் பாதை தொற்று - உடலுறவு மூலம் பரவுமா?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ரெபேக்கா தார்ன் பிபிசி 19 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா? இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது. உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது. பட மூலாதாரம், Getty Images சிறுநீர் பாதை தொற்று ஏற்பட என்ன காரணம்? சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று. பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது. அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது. பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும். அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் திடீரென அல்லது வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை மேகமூட்டம் போல் தோன்றும் சிறுநீர் சிறுநீரில் ரத்தம் காணப்படுதல் கீழ் வயிற்றில் வலி, அல்லது முதுகில் (விலா எலும்புகளுக்குக் கீழே) வலி அதிக காய்ச்சல், அல்லது குளிர்ச்சி/வெப்பம், நடுக்கம் ஏற்படுதல் சோர்வு அல்லது பலவீனம் அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம். சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதன்மை முறையாகும் "சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா. நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது. மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது. மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள். "அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன். "எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார். குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீரகத் தொற்று பெண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று தொற்றக்கூடியதா? சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல. ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய சிறுநீரின் மாதிரியை வழங்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும். இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள். இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும். சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார். "நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா. நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீர் பாதை தொற்றை குணமாக்க க்ரான்பெரி சாறு உதவுமா இல்லையா என்பது குறித்து கலவையான கருத்துக்கள் உள்ளன குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது. க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன. சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்) - கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும். - பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள் - நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். - உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும் - உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும் - நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும். - பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள் பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன? மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம். ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர். "சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdjv23l369o
-
ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர் வெள்ளை மாளிகை டேனியல் கேய் வணிக செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர். டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார். "ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக். நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் புதிய கோல்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறார் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக். 2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது. தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார். மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார். பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன். பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார். "சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ். ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது. ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார். "நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப். 2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது. அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg3jeyeklzo
-
அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் - பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி
அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் Published By: Vishnu 19 Sep, 2025 | 07:20 PM இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் வெள்ளிக்கிழமை (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில், மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், தொழில்சார் சுகாதார ஆலோசனை, மனநல ஆலோசனை, பல் வைத்திய சேவைகள், நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான பரிசோதனைகள், நடமாடும் கண் மருத்துவ பரிசோதனை, பிசியோதெரபி மருத்துவமனைகள் மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டன. உயிர்நீத்த போர் வீரர்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் பிரச்சினைகளையும் ஆராய ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், காயமடைந்த போர் வீரர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குகண்ணாடிகள் மற்றும் தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் இதற்கு இணையாக பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு சேவைகள் ஆணையம் மற்றும் இராணுவ பணிப்பகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளால் போர்வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிலம், வீட்டுவசதி, சம்பளம் மற்றும் ஏனைய நிர்வாக பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. https://www.virakesari.lk/article/225547
-
2026ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தில் அரச செலவீனம் 21,611கோடி ரூபாவால் அதிகரிப்பு
Published By: Vishnu 19 Sep, 2025 | 06:47 PM (இராஜதுரை ஹஷான்) 2026நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடியே 6,46,8000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடியே 8,018,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடியே 8,450,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு 61,744கோடியே 50இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவீனமுமாக மொத்தம் 1,11,715 கோடியே 9,980,000இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 299,29,80,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக 11.377,980,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 8,385,000,000 ரூபா அதிகமாகும். பிரதமரின் விடயதானங்களுக்குரிய செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,170,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 9,75,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 1,95,000,000 ரூபா குறைவானதாகும் . அதேவேளை 2025ஆம் ஆண்டு , சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உள்ளிட்ட இன்னும் சில அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விடவும் 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு ,செலவுத்திட்ட முன்மொழிவு எதிர்வரும் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் வருமாறு; புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000,000ரூபாவும், பௌத்த அலுவல்கள் திணைக்களம் 1,350,000,000ரூபாவும், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,04,000,000ரூபாவும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் 1,78,000,000 ரூபாவும், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,85,000,000ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 6,34,782,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டு இந்த அமைச்சுக்கு 7,14,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 7,9,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு 4,55,000,000,000ரூபாவும், நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சுக்கு 5,8,500,000,000 ரூபாவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 5,54,999,998,000 ரூபாவும், வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,3,000,000,000 ரூபாவும், வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 2,700,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 4,46,000,000,000 ரூபாவும், கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2,21, 300,000,000ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 23,100,000,000ரூபாவும், நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 1,03,500,000,000ரூபாவும், கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 3,8,600,000,000ரூபாவும், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 3,01,000,000,000ரூபாவும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 5,96,000,000,000ரூபாவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 18,000,000,000ரூபாவும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கு 11,500,000,000 ரூபாவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 10,600,000,000 ரூபாவும், சுற்றாடல் அமைச்சுக்கு 18,300,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 16,400,000,000ரூபாவும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 16,000,000,000 ரூபாவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு 193,000,000,000ரூபாவும், தொழில் அமைச்சுக்கு 6,400,000,000ரூபாவும், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 13,500,000,000ரூபாவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 6,000,000,000 ரூபாவும் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு, செலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படுவதுடன் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்குத் டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு,செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். https://www.virakesari.lk/article/225546
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது 19 Sep, 2025 | 05:36 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக இன்றைய தினம் வருகை தந்திருந்தது. இதன்போது பொது மக்கள் அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/225540 Thileepan Song
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதய, இரைப்பை மற்றும் குடல், கல்லீரல் சிகிச்சைப் பிரிவுகள் திறப்பு
19 Sep, 2025 | 02:57 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் சிகிச்சை பிரிவு ஆகியன பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலையின் வினைத்திறன் பெரிதும் மேம்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெ குஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின் கட்டட திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை குடல் பிரிவு மற்றும் கல்லீரல் பிரிவு திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை காலை (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இருதய சிகிச்சை பிரிவு கட்டிடம் 05 தளங்களைக் கொண்டுள்ளது. 4,328 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் தரை தளத்தில் வைத்தியசாலைகள், எக்ஸ்-ரே அலகுகள் மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள் உள்ளன, அதே நேரத்தில் முதல் மாடியில் ஒரு கேத் லேப் மற்றும் ஒரு கரோனரி கேர் யூனிட் (CCU) உள்ளன. இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (SICU) உள்ளன, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 80 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன. கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனை சேவைகளை மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) வழங்கி வருகிறது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திறப்பு விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர், இந்த வைத்தியசாலைகிழக்கு மாகாணத்தில் மூன்றாம் நிலை சுகாதாரப் பராமரிப்பின் முதுகெலும்பாக நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, முற்றுமுழுதான கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகைதரும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் ஒரு முன்னணி வைத்தியசாலையாக வளர்ந்துள்ளது. 2005/2006 ஆம் ஆண்டுகளில் இந்த வைத்தியசாலையில் மருத்துவராகப் பணியாற்றும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தாம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகும். இருதயவியல் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிறப்பு சுகாதாரப் பராமரிப்பில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைக்கும் சிறப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய இரைப்பை குடல் மற்றும் ஹெபடோபிலியரி பிரிவும் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் நிறைவடைவது அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும் என்றும், இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வசதிகளை விரிவுபடுத்துதல், மனிதவளத்தை வலுப்படுத்துதல் மற்றும் நவீன உபகரணங்களை மேம்படுத்துதல் ஆகியவை எதிர்காலத்தில் தொடரும் என்றும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆறு மாடி மருத்துவ வளாகம் நிறைவடையும் என்றும், விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவினை நிறுவ நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்க வைத்தியசாலையின் திறன் பெரிதும் மேம்படுத்தப்படும். மேலும் அரசாங்கம் பாதியில் நின்ற திட்டங்களை திட்டமிட்ட முறையில் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டன, இது 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஜூலை மாதம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாணத்தின் ஒரே போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு வைத்தியசாலையின் ஆய்வில் பங்கேற்றபோது, கடந்த காலங்களில் ஆய்வு செய்த வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு வைத்தியசாலைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட வைத்தியசாலை என்று கூறினார். கடந்த காலங்களில் அத்தியாவசிய கட்டிட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கவும், வைத்தியசாலையின் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகளை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரட்ணசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே. முரளீதரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன், சுகாதார அமைச்சின் சார்பாக பொறியியலாளர் கே.எம்.சி. குருப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நிபுணர் டாக்டர் கே. கணேசலிங்கமி கலாரஞ்சனி, துணைப் பணிப்பாளர் டாக்டர் மைதிலி பார்த்தெலோட், மற்றும் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225504
-
யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி, இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfqpheu000j3o29nkhre3ue2
-
கச்சதீவை உடைமையாக்குவது அல்ல, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை
18 Sep, 2025 | 09:13 AM பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/225381
-
புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqq6u4k00ipqplpe5uqk1qk
-
க.பொ.த சாதாரண தர 2025 (2026) மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqr2aeg00irqplp0d9e8grw
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி Published By: Vishnu 19 Sep, 2025 | 12:08 AM 2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ரி20 போட்டியின் பி குழுவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 14 ஓட்டங்கள், செடிகுல்லா அடல் 18 ஓட்டங்கள், இப்ராஹிம் ஜத்ரான் 24 ஓட்டங்கள், கரீம் ஜனத் ஒரு ஓட்டம், டார்விஷ் ரசூலி 09 ஓட்டங்கள், அஸ்மதுல்லா உமர்சாய் 06 ஓட்டங்கள், ஆப்கானிஸ்தான் அணிக்காக கெப்டன் ரஷித் கான் 24 ஓட்டங்கள் எடுத்தனர். பந்துவீச்சில், இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லாலகே மற்றும் தாசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்கள், அதே நேரத்தில் போட்டி முழுவதும் மிகவும் வெற்றிகரமான இன்னிங்ஸை விளையாடிய பாதும் நிஸ்ஸங்க இந்த போட்டியில் 06 ரன்கள் மட்டுமே எடுத்தார். குசால் பெரேரா 28 ஓட்டங்கள் எடுத்தார், கமில் மிஷாரா 4 ஓட்டங்கள் எடுத்தார், கெப்டன் சரித் அசலங்கா 17 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணி இடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/225462