Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி! எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பாக இந்த பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஜனாதிபதி ஈடுபட உள்ளார். குறிப்பாக அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் எரிபொருளை நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது. https://newuthayan.com/article/பெப்ரவரி_நடுப்பகுதியில்_மத்திய_கிழக்கு_செல்லும்_ஜனாதிபதி!
  2. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணம் எமக்குக் கிடையாது! நாமல் ராஜபக்ச தெரிவிப்பு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணமில்லை. எமது ஆட்சியின்கீழ் அரசியற்பழிவாங்கலுக்கு முடிவுகட்டப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ச நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசியற்பழிவாங்கலுக்காகவும், குடும்பத்தைப் பழிவாங்கவும் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. சட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சினை இல்லை. ஆனால் சிலரை இலக்குவைத்து செயற்படுவத்துவதில்தான் பிரச்சினை உள்ளது. எதிரணியை ஒடுக்கித் தமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கே தற்போதைய அரசாங்கம் முயல்கின்றது. நாம் தவறிழைத்திருந்தால் நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து அரசாங்கம் ஊடகக் கண்காட்சியை நடத்தக்கூடாது. இந்த அரசுக்கு மக்கள் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, பலவந்தமாக ஆட்சியை மாற்ற முடியாது. தேர்தல் ஊடாகவே அது நடக்கும். அத்துடன், அரசியற்பழிவாங்கலுக்கு எமது ஆட்சியில் முடிவு கட்டப்படும்' -என்றார். https://newuthayan.com/article/ஆட்சி_மாற்றத்தை_ஏற்படுத்தும்_எண்ணம்_எமக்குக்_கிடையாது!_நாமல்_ராஜபக்ச_தெரிவிப்பு
  3. மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை! adminJanuary 28, 2025 சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.01.25) சென்ற இருவர் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை (சோலார் ) பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து , வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து , அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/210410/
  4. வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்! adminJanuary 28, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210414/
  5. வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்! adminJanuary 28, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/210421/
  6. இந்திய மீனவர்களின் கைது விவகாரம் - எஸ்.ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே எதிர்வரும் 05ஆம் திகதி வரை இந்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில் தமிழக முதலமைச்சர் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளார். இராஜதந்திர நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் இதற்கு முன்னரும் மீனவர் விவகாரம் தொடர்பில் பல கடிதங்களை கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.hirunews.lk/tamil/394910/இந்திய-மீனவர்களின்-கைது-விவகாரம்-எஸ்-ஜெய்சங்கருக்கு-மீண்டும்-கடிதம்-அனுப்பினார்-மு-க-ஸ்டாலின்
  7. சுதந்திர தினம் அன்று வடக்கு,கிழக்கில் கறுப்பு நாள் போராட்டம்! எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தயாராகியுள்ளது. சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக நினைவுகூர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். தமிழ் மக்களின் உணர்வுகளையும்,வலிகளையும் உலகுக்கு மட்டுமல்லாமல் தற்போதைய அரசாங்கத்திற்கும் எடுத்துக்கூறுவதற்காக தாம் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த போராட்டத்தில் பொதுமக்களும் இணைந்து கொண்டு ஆதரவளிக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். https://www.hirunews.lk/tamil/394925/சுதந்திர-தினம்-அன்று-வடக்குகிழக்கில்-கறுப்பு-நாள்-போராட்டம்
  8. யாழ்.பல்கலை வகுப்புத் தடை நீக்கச் சர்ச்சை: பதவியை உதறினார் கலைப்பீடாதிபதி! உண்மையை வெளிப்படுத்துக! உடனடி நடவடிக்கை எடுக்குக! வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலரின் வகுப்புத்தடையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூதவை நீக்கியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு அதிருப்தி தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீடப் பீடாதிபதி ரகுராம், பீடாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார். கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மாணவர்கள் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்தனர். அதையடுத்து நேற்று பல்கலைககழக மூதவை கூடி இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தது. மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை நீக்குவதற்கு மூதவை தீர்மானித்தது. இந்தநிலையில், வகுப்புத்தடை ஏன் அந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், வகுப்புத்தடை விடயத்தில் இருந்த உண்மையைத் திரிவுபடுத்தி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி ரகுராம், மூதவையின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, பீடாதிபதிப் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவரது பதவி விலகலை துணைவேந்தர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. https://newuthayan.com/article/யாழ்.பல்கலை_வகுப்புத்_தடை_நீக்கச்_சர்ச்சை:_பதவியை_உதறினார்_கலைப்பீடாதிபதி!
  9. தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு! புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையே இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தக் கூட்டத்துக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்புக்கான அழைப்புக் கடிதம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரால் நேற்றுமுத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதற்குக் கால அவகாசம் கோரிய நிலையில் திகதி தீர்மானிக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளரம குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கட்சிகளி/
  10. யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை! adminJanuary 27, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்திற்கு செயலாளர் என்று எவரும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவருடைய கல்வியாண்டு பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகவே தலைவர் ,செயலாளர். இல்லாமல் எவ்வாறு ஒன்றியம் இயங்க முடியும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு நிறைவேற்ற அதிகாரமிக்க தலைவர் செயலாளரும் நியமிக்கப்படுமாக இருந்தால் அது பீடங்களினுடைய மாணவர் ஒன்றியங்களில் இருந்து தான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. தற்போது செயலாளராக தன்னை வெளிப்படுத்தும் நபருடைய நியமனமானது சட்ட விரோதம் என்ற அடிப்படையில் எங்கள் முறைப்பாட்டினை துணைவேந்தருக்கு மாணவர் நலச் சேவை பிரிவுக்கும் முன்வைத்துள்ளோம். முன்னர் இருந்த மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை வறிதாகியிருந்தது. அதன் பின்னர் தற்போதுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டார். அதில் எமக்கு ஒரு சந்தேகம் இருந்தது. குறிப்பிட்ட திகதியில் முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினுடைய தலைவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. எந்தவித கல்வி ரீதியான அவர் செயல்பாட்டிலும் ஈடுபட முடியாது. ஆகவே ஒரு தலைவர் வகுப்பு தடையில் இருந்த நிலையில் எவ்வாறு அந்த பீடம் ஒரு முடிவினை எடுத்து மாணவர் நல சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கமுடியும். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் கலைப்பீட மாணவர் ஒன்றிய சிரேஷ்ட பொருளாளர் ஊடாகவும் பீடாதிபதி ஊடாகவும் மாணவர் நல சேவை கிளைக்கு அனுப்பவேண்டும். ஆனால் அதனை விசாரித்த போது அவ்வாறான கடிதத்தை அனுப்பவில்லை என்றும் நியமனத்தை அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் விருப்புகளை காட்டுவதற்காக ஒரு சிலருடைய திட்டமிடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவரது நியமனம் ஒரு சட்டமுறையற்ற நியமனம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு சொல்ல வேண்டும் என மூன்று, நான்கு கடிதங்களை அனுப்பி இருந்த போதும் எவ்வித பதிலும் தரப்படவில்லை. செயலாளருடைய கையெழுத்துக்கள் இல்லாத கடிதங்கள் செல்லுபடியற்றது. மாணவர் ஒன்றியங்களைப் பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் செயலாளரிடம் இருக்கின்றது. செயலாளரின் பதவி வறிதானால் உச்சபட்சமாக அதிகாரம் உள்ள நபர் கூட்டத்தை கூட்ட முடியும். தற்போது நடைபெறுகிறது சம்பவத்தின் படி செயலாளரில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒன்றிய தலைவரின் பதவி வறிதாகி இருக்கின்றது. மூன்று நான்கு மாதங்களாக செயலாளரில்லை. கலைப்பீட மாணவர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு என்னுடையது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கண்காணிக்கின்ற அதிகாரம் குறித்தவொரு கட்டமைப்பு இருக்கிறது. இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி களைத்துப் போய்விட்டோம். கலைப்பீடத்திற்கு வர வேண்டிய ஒரு சிறப்புரிமையை கேட்டு அலுத்து போய் விட்டோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் இயங்குநிலையில் இல்லாத நிலையில், அதன் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை இயக்குபவர்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ளார் https://globaltamilnews.net/2025/210377/
  11. போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம் அறைகூவல்! adminJanuary 27, 2025 இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்துக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவனாக, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்பவனாக சமூகத்திடம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். போதைப்பாவனை எமது சமூகத்தை எல்லா விதத்திலும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகம் மாத்திரமல்ல, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என ஊடுருவியுள்ள போதைப்பாவனை எங்களுடைய சக்தி மிகு இளம் சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த போதை பாவனை சுயமாக சிந்திக்க கூடிய எங்கள் இளம் சமூதாயத்தை மிக அசிங்கமான வழியில் சீரழித்துக்கொண்டு இருக்கிறது. போதை பாவனையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக , அதனை எதிர்த்து நிற்கும் மிக பெரிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக கருதுகிறேன். சக்திமிக்க , உலகத்தையே மாற்றியமைக்க கூடிய மாணவ சமூதாயம் போதைப்பொருளை அடிமையாகி வருகின்றனர். பாடசாலைகள் இந்த போதைப்பாவனையை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த மண் இளம் குருத்துக்களை போதைப்பாவனை அற்ற சமூகமாக உருவாக்கி நின்ற மண். இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டம் , ஒரு சமூக போராட்டமாக உருவாக வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் , சமூகத்தை பற்றி சிந்திக்க கூடியவர்கள் இந்த தருணத்தை எங்களுக்காக ஒதுக்கி , இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும். தனி நபராக சமூகமாக இந்த கால பொறுப்பை பற்றி சிந்தியுங்கள். போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாகும். உங்களுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுவித்து , எங்கள் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210379/
  12. 2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது. ஓ ரசிக்கும் சீமானே… widevisionstudio2025-01-26T21:34:06+00:00 தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார். புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார். வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது. ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான். எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.) தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது. சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை. வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார். அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான். நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று.. எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது. ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை. தமிழ் நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான். சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல.. பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை. தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது. ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை. தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு அரசியற் சக்தியாகத் தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டும் அரசியல் நிலைப்பாடுகளைத் திருத்தியமைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் மேற்கொள்ள முன்வருவாரா? சீமானின் இப்போதைய அதிகபட்ச இலக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது. அதனால், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் புதுவித நன்மைகள் நடக்குமென்றால் அது வரவேற்கப்படலாம். இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? 2015-01-25 அமரதாஸ் இவை, ‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள். https://widevisionstudio.com/archives/3812?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0isTEPYSOPsx80PY_CUOgdyqft-okNG13REK0hbGfwJnt77nIVS4wy5vw_aem_Niv3yqN7HZJetZhNUOIRig
  13. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் ரீதியில் அழுத்தங்கள்.. யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவினால் அதிருப்தியடைந்து பதவி விலகியுள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக பல்கலைக்கழக மட்டத்திலிருந்தும் வெவ்வேறு தரப்பிலிருந்தும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் மேம்பாடு தொடர்பில் சிந்திக்கும் போராசிரியர் ரகுராம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமூகத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இவருக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இதன் பின்ணியில் இருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருப்பதாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/jaffna-university-dean-raguram-decision-1737891856
  14. விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுதான்! Jan 26, 2025 நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி விஜய்யின் 69-ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒருபுறம் படத்தின் ஷூட்டிங் மறுபுறம் பாலிடிக்ஸ் என விஜய் மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று முன்தினம் (ஜனவரி 24) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை விஜய் சந்தித்தார். முதற்கட்டமாக 20 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து அவர்களுக்கு வெள்ளிக் காசை பரிசாக கொடுத்தார். கடைசி படத்தில் விஜய் நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தநிலையில், விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் போஸ்டரானது ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது வேனின் மீது ஏறி நின்று விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அதேசாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய் பின்னால் வெள்ளை உடையணிந்து பலரும் கோஷங்கள் எழுப்பியபடி அணிவகுத்து நிற்கின்றனர். விஜய்யின் கடைசி படத்திற்கு அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ அல்லது ‘முதல்வன்’ என பெயர் வைக்கப்படும் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், ‘ஜனநாயகன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/cinema/actor-turned-politician-vijay-69-title-jana-nayagan/
  15. பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்குவதாகத் திரைப்படமொன்றை உருவாக்கினால் எடுபடுமா? இந்தக் கேள்விக்கு, ‘அது எத்தனை பேரைச் சென்றடையும் என்பதை விட, எத்தனை பேருக்கு அது தேவை என்பதே முக்கியமானது’ என்று பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படம். பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிற இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், கருண பிரசாத், மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், சேகர் நாராயணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார். சரி, இப்படம் சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறதா? பாட்டலும் கையுமாய்..! ’மதுவில் ஊறிய வாழ்க்கை’ எனும்படியாக, ஒரு நாளின் பெரும்பொழுதுகளைப் போதையின் துணையோடு கடக்கிற மனிதன் ராதாமணி (குரு சோமசுந்தரம்). சென்னை ஆவடி அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்கிறார். மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), ஒரு மகன், ஒரு மகள் என்று மூன்று பேர் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அது பற்றிய நினைவுகளை மறக்கிற அளவுக்குத் தினமும் மதுவில் திளைக்கிறார் ராதா. சுருக்கமாகச் சொன்னால் எந்நேரமும் ‘பாட்டலும் கையுமாய்’ திரிகிறார். ‘பாட்டல்’ என்று அக்கம்பக்கத்தினரால் அழைக்கப்படும் அளவுக்கு அவரது நிலை மாறுகிறது. அதனால், உடன் பிறந்த சகோதரரின் (ஆண்டனி) மேற்பார்வையில் நடந்துவரும் கட்டடப் பணியில் அவரால் ஒழுங்காகப் பங்கேற்க முடிவதில்லை. இத்தனைக்கும் ’டைல்ஸ் பதிப்பதில் ராதாவைப் போல் யாருமில்லை’ என்ற பெயர் அந்த வட்டாரத்தில் அவருக்குண்டு. வேலையில் ஒழுங்காக ஈடுபடுவதில்லை. மேஸ்திரியாக இருக்கும் சகோதரனின் மச்சான் உடன் ‘ஈகோ’ மோதல். பணி நடக்குமிடத்தில் இருக்கும் பொருட்களைத் திருடி விற்றுக் குடிக்கிற அளவுக்குப் போதை மீதான ஈர்ப்பு. இப்படிப் பல குற்றச்சாட்டுகளைக் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் தெருவில் வசிப்பவர்கள், சுற்றத்தினரிடமும் பெற்று, பல அனாவசியச் சண்டைகளுக்குக் காரணமாகிறார் ராதா. ஒருநாள் காவல்நிலையம் வரை பிரச்சனை செல்ல, ’ஸ்டோர் ரூம்மை க்ளீன் பண்ணச் சொல்லுங்க’ என்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது, சோதனையில் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பிரித்துக் குடித்துவிடுகிறார் ராதா. அப்புறமென்ன, அடுத்த சில மணி நேரத்தில் அங்கிருப்பவர்களின் அனைத்து அர்ச்சனைகளையும் ஏந்திக் கொள்கிறார் அஞ்சலம். ’இந்த மனுஷன் குடியை நிறுத்த மாட்டாரா’ எனும் பல்லாண்டு கால விருப்பம் ஆதங்கமாகி ஆத்திரமாக மாறும் நிலையை எட்டுகிறது. அது, பாட்டல் ராதாவை ஒரு போதை மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டுபோய்விடும் அளவுக்குச் செல்கிறது. புத்தா போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் அசோகன் (ஜான் விஜய்), அங்கு வரும் ஒவ்வொருவரையும் மது நோயாளியாக நடத்துகிறார். அவர்கள் மனம் மாறி, மது போதையை நாடாமல் குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சில காரியங்களைச் செய்கிறார். ஆனால், அந்த இடமே பாட்டல் ராதாவுக்கு நரகமாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? மது போதையைக் கைவிடத் துணிந்தாரா? தனது குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்த திரைப்படத்தைக் காண மேற்சொன்ன விளக்கமே போதுமானது. பின்வரும் கருத்துகள் ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், ‘அது தேவையில்லையே’ என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். தேவையான கருத்து! மதுவே கதி என்றிருக்கும்போதும், அதன் வாசனை கூட இல்லாமல் போதை மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போதும், மது குறித்த நினைவுகளைக் கைவிட முடியாமல் தன்னைத்தானே நொந்துகொள்ளும்போதும், மீண்டும் மதுவை நாடிச் செல்லும்போதும், தனது உடல்மொழியில் நாயகன் குரு சோமசுந்தரம் காட்டுகிற வேறுபாடுகள் ‘அடிபொலி’ ரகம். ’ஃபேஜ் 3’யில் வரும் அளவிலான பார்ட்டி கொண்டாட்ட வாழ்க்கைமுறையைத் திரையில் பிரதிபலிக்கிறவராய் வந்த சஞ்சனா, இதில் சமூகத்தின் அடித்தட்டில் வாழ்கிற ஒரு பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிற பாவனைகளின் ஒரு துளியாக, இதன் கிளைமேக்ஸ் ஷாட்டில் அமைந்திருக்கிறது அவரது நடிப்பு. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களிலும் நல்ல பாத்திரங்களை ஏற்று வருகிறார் ஜான் விஜய். இதிலும் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். குரு சோமசுந்தரத்தின் சகோதரராக வரும் ஆண்டனி, சகோதரியாக வரும் சுஹாசினி சஞ்சீவ், போதை மறுவாழ்வு மையத்தில் காட்டப்படும் லொள்ளுசபா மாறன், அபி ராமையா, மாலதி அசோக் நவீன், கருணபிரசாத், சேகர் நாராயணன் என்று இப்படத்தில் ஒவ்வொருவரும் பல கலைஞர்கள் நம்மை வசீகரிக்கின்றனர். பாகுபலி எனும் பாத்திரத்தில் வருபவரையும் இப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ‘ஜமா’ படத்தின் நாயகனும் இயக்குனருமான பாரி இளவழகன், இப்படத்தில் நாயகனின் மது போதை நண்பர்களில் ஒருவராக வருகிறார். இது போன்று இப்படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் பல இருக்கின்றன. இப்படத்தின் ‘காஸ்ட்டிங்க்’கை கவனமாகத் தேர்ந்தெடுத்து ஆக்கியது போன்று இதர தொழில்நுட்பங்களிலும் பெருங்கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ’தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ எனும் ‘சிந்துபைரவி’ பாடல் பின்னணியில் ஒலிக்க, ஆவடி பகுதியைப் பறவைப் பார்வையில் காண்பிக்கும் ஷாட்டில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அது, ’பெரும்பாலான சமூகம் மதுவில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறதோ’ என்று எண்ண வைக்கிறது. ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, ரூபேஷ் ஷாஜியின் கேமிரா சந்துபொந்துகளிலெல்லாம் பயணித்திருக்கிறது. ‘கேமிரா வைக்கிற அளவுக்கு க்ளீனா இல்லையே’ என்று தயங்குகிற இடங்களிலும் படம்பிடித்திருப்பது, திரைக்கதையோடு பார்வையாளரை ஒன்ற வைக்கிற உத்திகளில் ஒன்று. ராஜராஜின் கலை வடிவமைப்புக்கு அதில் பெரிய பங்குண்டு. ட்ரெய்லரில் அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். சங்கத்தமிழனின் படத்தொகுப்பானது, தரையில் சிந்திய மது மண்ணில் ஊறித் தனது எல்லையை விரிப்பது போன்று திரையில் கதை சொல்ல உதவியிருக்கிறது. காட்சி எந்த இடத்தில் முடிகிறது, தொடங்குகிறது என்று உணர்வதற்கு வழி இல்லாமல் செய்திருக்கிறது. இப்படியொரு படத்தில் ஒலி வடிவமைப்புக்குப் பெரும் பங்கு இருக்க வேண்டும். சுரேன் – அழகியகூத்தன் கூட்டணியானது வசனம், இசை, பின்னணி ஒலிகள் இடம்பெறுகிற விகிதத்தைச் செம்மையாக அமைத்திருக்கிறது. இது போக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படச் சில நுட்பங்கள் சிலாகிக்கிற அளவில் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்தில் தனது பங்கு என்ன என்று உணர்ந்து செயலாற்றி இருக்கிறார். ’என் வானம் நீ’ எளிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளும் மெலடி; ஆனால், அது ‘கபாலி’யில் வரும் ‘மாயநதி’யை நினைவூட்டுகிறது. ’யோவ் பாட்டிலு’ பாடல் ஒரு அக்மார்க் ‘டாஸ்மாக் பார்’ பாடல். ’நா குடிகாரன் நானா குடிகாரன்’, ‘தண்ணியில கிறுக்கு’, ’கண்களின் ஈரம்’ பாடல்களும் சட்டென்று ஈர்க்கும் ரகத்தில் இருக்கின்றன. வாழ்வில் தீராத சோகத்தைக் காட்டுவதிலும், ‘விடியல் வராதா’ என்ற ஏக்கத்தைச் சொல்வதிலும், நடித்தவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டிருக்கிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசை. ஒரு திரைப்படமாக இக்கதையை ஆக்க, பலரது உழைப்பை ஒருங்கிணைக்க, இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருப்பார். அனைத்தும் நிறைவுற்றபிறகும் கூட அவர் இதன் வெளியீட்டிற்காகக் காத்திருந்திருக்கிறார். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியே தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருப்பது அதனை உணர்த்துகிறது. ‘மதுபானக்கூடம்’ உட்படச் சில படங்கள் மதுவின் தீமையை உணர்த்துகிற வகையில் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. ஏன், அறுபதுகளில் கூட சிவாஜி அத்தகைய மதுப்பிரியராகத் திரையில் தோன்றி ‘மது மனிதனுக்குத் தேவையில்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். எம்ஜிஆரின் எத்தனையோ படங்கள் அதனை நீதியாகப் புகட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் இதனைச் சேர்க்கலாமா என்றால் ‘வேண்டாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ’தினமும் மதுவில் திளைக்கிற ஒருவர் இப்படத்தைப் பார்த்தால் மனம் திருந்திவிட மாட்டார்களா’ என்கிற ஆதங்கத்தை முன்வைக்கிறது ‘பாட்டல் ராதா’. அது நிகழுமா என்றால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ‘தீவண்டி’ என்றொரு படம் வந்தது. சிகரெட் பிடிப்பதைக் கைவிட முடியாமல் தவிக்கும் இளைஞனின் தகிப்பை அப்படம் சொன்னது. அதனைப் பார்க்கும் ஒருவர் சிகரெட் தனது கையைச் சுடுவதாக உணர்வார். அது போலவே, ‘மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று’ என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படம் மதுப்பிரியர்களால் வாடும் அவர்களது குடும்பத்தினர், சுற்றத்தினர், சமூகத்தின் ஏக்கக்குரலாக அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது விக்கிபீடியா. Bottle Radha Movie Review ’அதற்குப் பதிலாக மலையாளத்தில் தயாரித்து தமிழில் டப் செய்திருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும்’ என்று சொல்கிற நிலை ஏற்படாத அளவுக்கு நல்லதொரு வெற்றியை ’பாட்டல் ராதா’ திரைப்படம் பெற வேண்டும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் உள்ளது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அதனால், இதில் இருக்கிற குறைகளைப் பிற்பாடு பேசிக் கொள்ளலாம்! https://minnambalam.com/cinema/bottle-radha-movie-review-in-tamil/
  16. வேங்கை வயல் : சிபிஐ வேண்டாம்; ஆனால்… விஜய்யின் புது கோரிக்கை! Jan 26, 2025 வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். சிபிஐ விசாரணை கால தாமதத்தை ஏற்படுத்தும்! இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/vijay-request-on-vengaivayal-case/
  17. ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள் January 26, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக் கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது நாட்டு மக்களுக்கு இருக்கிறது. முன்னைய போக்குகளில் இருந்து வேறுபட்ட முறையில் தங்களது ஆட்சிமுறை இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அரசாங்கத்தின் மற்றைய தலைவர்களும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும், மக்கள் கொண்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முறையில் செயற்படுவதில் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்பது வெளிப்படையானது. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, தெற்கில் உள்ள பழைய கட்சிகளாக இருந்தாலென்ன, வடக்கில் உள்ள தமிழ்க்கட்சிகளாக இருந்தாலென்ன இரு தேசிய தேர்தல்களுக்கு பின்னரான புதிய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. தற்போது அவை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இந்த முயற்சிகளினால் தற்போதைய அரசியல் நிலக்காட்சியில் எந்த உருப்படியான மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம் எதிரணி கட்சிகளின் மக்கள் செல்வாக்கு தொடர்பான நிலைவரமேயாகும். நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) இருந்த மக்கள் ஆதரவைக்கூட தற்போது கொண்டிருக்கவில்லை. அதற்கு அதன் தலைவர்களின் கொள்கைகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணம். அத்துடன் இரு கட்சிகளும் தொடர்ச்சியாக பிளவுகளுக்கு உள்ளாகின. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வேகத்தில் மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கைப் பெற்று அதிகாரத்துக்கு வந்ததோ அதே வேகத்தில் அதிகாரத்தையும் ஆதரவையும் இழந்து விட்டது. தங்களிடமிருந்து விலகிப்போனவர்களை மீண்டும் வந்து இணையுமாறு ராஜபக்சாக்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், எவரும் திரும்பிவந்ததாக இல்லை. அவர்களிடம் திரும்பிவருவதற்கான காரணமும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவை எதிர்நோக்கும் நெருக்கடிகள் காரணமாக மாத்திரமே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தளவு மக்கள் ஆதரவுடன் என்றாலும் இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அண்மைக்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரு தேசிய தேர்தல்களிலும் அடைந்த படுமோசமான தோல்விகளுக்கு பிறகு தங்களது பரிதாபமான நிலையை உணர்ந்து கொண்ட இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மீண்டும் இணைந்து செயற்பட்டால் எதிர்காலத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு சவாலை தோற்றுவிக்க முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. இணைந்து செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் காட்டியிருக்கும் சாதகமான சமிக்ஞைக்கு உடனடிக் காரணம் விரைவில் நடைபெறவிருப்பதாக நம்பப்படும் உள்ளூராட்சி தேர்தல்களேயாகும். இரு தலைவர்களுக்கும் இடையிலான தலைமைப் போட்டியையும் தன்னகம்பாவத்தையும் தவிர, இரு கட்சிகளும் தனித்தனியாக இயங்குவதற்கு எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது. முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க மூன்று தசாப்த காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் முன்னைய எந்த தலைவரும் விக்கிரமசிங்கவை போன்று மிகவும் நீண்டகாலமாக தலைமைத்துவத்தை வகித்ததில்லை. தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் கட்சியின் கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கு பின்னரும் கூட கட்சியின் தலைவர் பதவியை விட்டுச் செல்வதற்கு விக்கிரமசிங்க தயாராயில்லை. அதேவேளை, அவரைத் தவிர, வேறு உருப்படியான தலைவரைக் கண்டுபிடிக்கவும் முடியாத பரிதாப நிலையில் அந்த கட்சி இருக்கிறது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்திய விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சி செய்து களைத்துப்போன பின்னரே சஜித் பிரேமதாச 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதிய கட்சியை அமைத்தார். விக்கிரமசிங்கவுடன் இருந்தால் தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது என்ற ஒரே காரணத்துக்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான அரசியல்வாதிகள் பிரேமதாசவுடன் இணைந்தார்கள். தேர்தல் தோல்விகளை காரணம் காட்டி விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு தரவேண்டும் என்று கேட்ட பிரேமதாசவும் இப்போது இரு ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வியைக் கண்டு விட்டார். இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் மிகவும் கூடுதலான காலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த விசித்திரமான பெருமைக்குரியவர் விக்கிரமசிங்க. இப்போது பிரேமதாசவும் இரண்டாவது தடவையாக எதி்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவரும் தனது முன்னாள் தலைவரை போன்று நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. விக்கிரமசிங்கவின் தலைமைத்துவ பாங்கில் அடையாளம் காணப்பட்ட அதே குறைபாடுகளுக்காக தற்போது பிரேமதாச மீதும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி ஓரளவுக்கேனும் பலமானதாக இருந்தால் பிரேமதாசவை கைவிட்டு பெரும்பாலான அரசியல்வாதிகள் எப்போதோ விக்கிரமசிங்க பக்கத்துக்கு வந்திருப்பார்கள். மாற்று வழியில்லாத காரணத்தினாலேயே அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுவதற்கு விரும்பினாலும் கூட, விக்கிரமசிங்கவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான தன்னகங்கபாவ போட்டி அந்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அவர்களில் ஒருவர் போட்டியிட்டிருந்தால் அநுரா குமார திசாநாயக்க நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கமாட்டார். மக்கள் செல்வாக்கை இழப்பதற்கான சகல அம்சங்களும் தன்னகம்பாவத்தில் இருக்கிறது என்பதற்கு அரசியலில் விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பிரகாசமான உதாரணங்கள். அதேவேளை, அவர்கள் இருவரின் தலைமையிலும் அமையக்கூடிய எந்தவொரு கூட்டணியும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய சாத்தியம் பெரும்பாலும் தற்போதைய சூழ்நியைில் இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பாரிய எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த மக்கள் பொருளாதார இடர்பாடுகளில் தணிவைக் காணமுடியாத நிலையில் அரசாங்கத்தின் மீது ஓரளவு அதிருப்தியடைகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், பொருளாதார நெருக்கடி உட்பட இன்றைய சகல பிரச்சினைகளுக்கும் காரணமான தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான பழைய கட்சிகள் எந்த புதிய கோலத்தில் வந்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று கூறமுடியாது. முன்னைய காலத்தைப் போன்று தற்போது மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே நெடுகவும் விசுவாசமாக இருப்பதாக கூறமுடியாது. மக்களிடம் இன்று நிரந்தரமான அரசியல் விசுவாசங்கள் இல்லை. அதன் காரணத்தினால் தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மூன்று சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 43 சதவீதமான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் ஜனாதிபதி தேர்தல்களில் பெற்ற வாக்குகளை அவர்களின் தலைமையிலான கூட்டணிகளினால் பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியவில்லை. இதுகாலவரை மற்றைய கட்சிகள் பெற்ற வாக்குகளே பெருமளவில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த இரு தேர்தல்களிலும் கிடைத்தது. அதனால், இலங்கை பாராளுமன்ற அரசியல் காணாத பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய மக்கள் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதில் காண்பிக்கும் நேர்மையையும் அக்கறையையும் பொறுத்தே அதற்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவார்கள் என்பதை ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் உணர்ந்துகொள்வது அவசியம். மாறிவரும் அரசியல் சூழலில் நிரந்தரமான கட்சி விசுவாசம் என்பது மக்கள் மத்தியில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ் தேசிய கட்சிகளின் நிலை ================= இது இவ்வாறிருக்க, பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த தமிழ் தேசிய கட்சிகளும் ஐக்கியமாகச் செயற்படுவதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றன. இந்த முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முன்னரங்கத்தில் நின்று முன்னெடுக்கிறார். அவர் முதலில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனைகளை தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அத்துடன் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் சில தமிழ் கட்சிகளும் சிவில் சமூக அயைப்புக்களும் சேர்ந்து அமைத்து செயலிழந்துபோன தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நோக்குடனேயே அவர்களின் இந்த ஐக்கிய முயற்சிகள் அமைந்திருக்கின்றன. சிறீதரன் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்கின்ற போதிலும், இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக சம்பந்தப்படவில்லை. தமிழரசு கட்சியின் தலைவர்களில் சிறீதரன் கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவதில் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவர் என்ற வகையில் சீறீதரன் தனியாக இந்த ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்குடன் கட்சியின் மத்திய செயற்குழு தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனைள் தொடர்பில் மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏழு பேரைக்கொண்ட குழுவை கடந்தவாரம் நியமித்தது. கஜேந்திர குமாருடனான பேச்சுவார்த்தைகளில் தமிழரசு கட்சி கலந்து கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால் மத்திய செயற்குழுவின் தீர்மானம் சிறீதரன் பேச்சுவார்த்தைகளில் தனியாக பங்கேற்பதற்கு தடையாக இருக்கிறது. முன்னைய சில சந்தர்ப்பங்களில் கட்சியின் உத்தியோகபூர்வமான தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்ட அவர் இது விடயத்திலும் அவ்வாறு செயற்படுவாரா என்பதும் தெரியவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் கட்சியின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்பதே தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாக இருக்கிறது. அதனால், தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளின் அடிப்படையில் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கஜேந்திரகுமார் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தமிழரசு கட்சி ஒத்துழைக்கக்கூடிய சாத்தியம் குறித்து சந்தேகம் எழுகிறது. மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்கள் தங்களை முன்னரைப் போன்று அமோகமாக ஆதரிப்பார்கள் என்று தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நினைக்கிறார்கள் போன்று தெரிகிறது. ஆனால், உள்நாட்டுப் போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே வடக்கு தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள மறுப்பது துரதிர்ஷ்டவசமானது. https://arangamnews.com/?p=11730
  18. சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..! January 25, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் உட்கட்சி நெருக்கடிக்கு குறைந்த பட்சம் வயது 15. இதற்கும் சுமந்திரனின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பிரவேசத்திற்குமான தொடர்பு சமாந்தரமானது. தனிநபர் வழிபாடு, அதிகாரபோட்டி, அரசியல் பொறாமை, குத்துவெட்டு, உள்ளத்தில் ஒன்று உதட்டில் இன்னொன்று, நானா..? நீயா..? போன்ற அரசியல் நோய்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததால், காலம் கடந்தும் தவறான நேரத்தில் தவறான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. உளவியல் மனநோய்க்கு சட்டவைத்தியம் செய்யமுடியாது. கட்சியின் தலைமுதல் பாதம்வரையான நிர்வாக கட்டமைப்பில் சத்திர சிகிச்சை செய்து சில பகுதிகளை வெட்டி வெளியே போட்டாலும் கூட கட்சி தப்பிப்பிழைக்க வழியில்லை. போருக்கு பின்னரான இந்த வைக்கோல் இழுத்த வழி அரசியல் கொழும்பு வரை சென்று குப்பை கொட்டும் நிலைக்கு கட்சியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சமஸ்டி அரசியல்வாதிகள் ஏக்க இராச்சியத்தில் நீதி கேட்டு நிற்கிறார்கள். தமிழரசுக்கட்சி பல சிறிய குழுக்களாக துண்டு துண்டாக உடைந்து சிதறிக்கிடக்கின்ற போதும், சிறிதரன் -சுமந்திரன் என்ற இரு பெரும் சுவர் வெடிப்புக்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது. வீட்டிற்குள் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பை மேலால் சீமெந்து பூசி-மெழுகி வெள்ளை அடிக்க முடியாது. வீடு அடித்தளத்துடன் முற்றாகத்தகர்க்கப்பட்டு மீண்டும் ஒரு புதிய அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்கு முன்னோடியாக இந்த பொறுப்பு ஒரு புதிய, அரசியல் நேர்மையுள்ள கட்டுமான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த “கிளீன் தமிழரசை” செய்வது யார் என்பதே தமிழ்த்தேசிய அரசியல் முன்னால் உள்ள இன்றைய முக்கிய கேள்வியாகும். இன்று தமிழரசுக்கட்சியின் மத்திய குழு என்ற பெயரிலான சுமந்திரன் பக்தர்கள் குழு கட்சியின் முடிவுகளில் கட்சி நலனுக்கும் அப்பால் சுமந்திரன் நலன்சார்ந்து அவரால் நகர்த்தப்படுகிறது. பாராளுமன்ற குழுவான சிறிதரன் பக்தர்கள் குழு அவரின் நலன்களை பாதுகாப்பதில் ஆர்வமாய் உள்ளது. இந்த நிலை கட்சியில் மத்திய குழு அதிகாரமா? பாராளுமன்ற குழு அதிகாரமா? என்ற அதிகார போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் அரசியலில் இவை இரண்டும் ஒன்றோடு இணைந்த நேர்மையான செயற்பாட்டை கொண்டிருக்க வேண்டியவை. ஒருவகையில் “தோல்வியிலும் அதிகாரம், வெற்றியிலும் தோல்வி” என்ற நிலையையே சுமந்திரன் -சிறிதரன் போட்டியில் அவதானிக்க முடிகிறது. இதனால்தான் சிறிதரன்- சுமந்திரன் அரசியல் விளையாட்டை சிறுபிள்ளைத்தனமான “கள்வன் -பொலிஸ் விளையாட்டு” என்று சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் சிறுபிள்ளைத்தனமாக “ஒழித்து பிடித்து” விளையாடுகிறார்கள். அண்மையில் பேசுபொருளாகவுள்ள பாராளுமன்றம் வரை கொண்டு வந்து கொட்டப்பட்ட “குப்பை அரசியல்” , மேலெழுந்த ரீதியாக விமானநிலைய தடுத்து வைப்பு, கனவான்களின்(?) கனிமொழியுடனான சந்திப்பு, தடைசெய்யப்பட்டுள்ள கனடா அமைப்பு, சுமந்திரன் காட்டிய மேற்கோள், சிறிதரனின் பாராளுமன்ற உரை…. போன்றவை வெறும் செய்திகளுக்கும் அப்பால் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் தமிழரசுக்கட்சியின் அடிப்படைக் கொள்கை சார்ந்தவை. இரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்கள் தனிநபர் வழிபாட்டு “பக்தியை” வெளிப்படுத்துகிறதே அன்றி தமிழரசுக்கட்சியின் கொள்கை “பற்றை” வெளிப்படுத்துவதாக இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சில பதிவுகள் விலக்காக உள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சில அதிதீவிர பக்தர்களின் கண்களை திறந்திருக்கிறது என்பது ஒரு முக்கிய மாற்றம். இந்த அடிப்படையில், சிறிதரன் – சுமந்திரன் விவகாரங்களில் தனிநபர் வழிபாட்டு திரைக்கு பின்னால் சாமிகளின் / கட்சியின் கொள்கை பிறழ்வுகள் மறைந்துள்ளன. தமிழரசு மூலஸ்தானத்திற்கு முன்னால் போடப்பட்டுள்ள திரைச்சீலையை நீக்கினால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது சந்திக்கு வரும். கீழே குறிப்பிடப்படும் கொள்கைகளில் தமிழரசுக்கட்சி பிறழ்ந்து முன்னுக்கு பின் முரணாக செயற்படுகிறது. இந்த பிறழ்வு தனிதபர் வழிபாட்டையும், கொள்கை முரண்பாட்டையும் வெளிச்சம் போடுகிறது. 1. வடக்கு, கிழக்கில் குடியேற்ற கொள்கை. 2 .தமிழ் மொழிப் பயன்பாட்டு கொள்கை. 3. பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த கொள்கை. 4. அயலுறவுக்கொள்கை 5. பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தல். சிறீதரன் சென்னை பயணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை விமர்சித்து ஒரு காத்திரமான உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியாருந்தார். வடக்கில் 1983 கலவரத்திற்கு முன்னர் வசித்த சிங்கள மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுவது தொடர்பான உரை அது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய சிறீதரன் தென்னிலங்கையிலும், மலையகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட தமிழர்களையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டு பேசினார். அது மட்டுமின்றி கொழும்பு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளிலும் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்று கூறி கொலைசெய்யப்பட்ட அரசியல்வாதி பெர்ணான்டோ பிள்ளையின் பரம்பரையையும் நினைவுகூர்ந்தார். தமிழரசுக்கட்சியின் குடியேற்றக்கொள்கை தொடர்பாக இந்த உரையில் குறைகாண முடியாது. அப்படி காண்பதெனில் தொனியில் மட்டுமே காணமுடியும். அரசாங்க தரப்பில் இருந்து விமல் ரத்நாயக்க உட்பட எவரும் வாய்திறக்கவில்லை. ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விமானநிலைய விவகாரம் தெரியவந்தபோது இந்த உரைக்கு பழிவாங்கவே அரசாங்கம் இந்த அழுத்தத்தை சிறிதரனுக்கு கொடுக்கிறது என்றே அரசியல் அவதானிகளால் எடுத்த எடுப்பில் கருதப்பட்டது. ஏனெனில் அநுர அரசாங்கம் பேசுகின்ற “இலங்கையர்” கோட்பாடு இதுதான். அதற்கான சிறந்த உதாரணமே இலங்கையின் மேற்கு, வடமேற்கு கரைகளில் சிறிதரன் குறிப்பிட்ட தமிழர்கள் கரைந்த கதை. தமிழரசுக்கட்சியின் மொழிக் கொள்கை என்று நோக்கினால் விமானநிலைய அதிகாரிகள் – சிறிதரன் உரையாடலில் புலப்படுவது என்ன? சிறிதரனுக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் – சிங்களம், ஆங்கிலம் தெரியாது என்று சிலர் அவரை சிறுமைப்படுத்த முனைகின்றனர். இந்த காலனித்துவ நாட்டாமை மனோநிலை காற்சட்டை காரர்களுக்கு தமிழரசுக்கட்சியின் மொழிக் கொள்கை தெரியாதா? அல்லது மேலாண்மைக்கு சேவகம் செய்கிறார்களா? இலங்கையின் அரசியல் அமைப்பின் படியும், தேசிய மொழி கொள்கையின் படியும் இலங்கைத்தீவு முழுக்க அதைப் பயன்படுத்துகின்ற உரிமை சிறிதரனுக்கு உண்டு. இருக்கின்ற உரிமையை பயன்படுத்த தெரியாதது அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை தாங்களாகவே புறம்தள்ளுவது, தமிழில் பேசுவது இளக்காரமானது என்று எண்ணுகின்றவர்கள்தான் இன்று தமிழரசுகட்சியை கட்டுப்படுத்துகின்றனர். ஒரு சிங்கள அதிகாரிக்கு சிங்களத்தில் பேசுவதற்கு இருக்கின்ற உரிமையை விடவும் பாராளுமன்ற சிறப்புரிமையுடன் கூடிய அதிகபட்ச உரிமை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமிழைப்பேசுவதற்கு சிறிதரனுக்கு உண்டு. மொழிக்கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு படுத்தவேண்டியது அரசாங்கமும், அதிகாரிகளுமேயன்றி சிறிதரன் அல்ல. இதில் சிரிப்புக்கிடமானது என்னவெனில் தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் தமிழ்த்தேசியத்தின் பேரில் தமிழில் பேசிய சிறிதரனை இழிவு படுத்துவதுதான். சிறிதரன் – சுமந்திரன் பிந்திய கருத்து மோதலில் குறிப்பிடப்படுகின்ற மற்றொரு விடயம் பயங்கரவாத தடுப்புச் சட்டம். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை அது நிறைவேற்றப்பட்ட முதல்நாளில் இருந்து தமிழரசுக்கட்சி எதிர்க்கிறது. அதை நீக்கக்கோரி சுமந்திரன் கையெழுத்து வேட்டை யிலும் ஈடுபட்டார். தென்னிலங்கையில் கையெழுத்து சேகரிக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜே.வி.பி.யும், அநுரகுமார திசாநாயக்கவும் ஆதரவளித்தனர். இப்போது கனடாவில் உள்ள தமிழ் டயஸ்போரா அமைப்பு ஒன்றை சந்திக்கவே சிறிதரன் சென்னை செல்கிறார் என்று புலனாய்வு பிரிவுக்கு தெரியவந்ததால் அவர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட கனேடிய தமிழர் அமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம். இங்கு தமிழரசுக்கட்சியின் கொள்கை என்ன? பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்கிறதா ? இல்லையா ?அதனடிப்படையில் தமிழ் டயஸ்போரா அமைப்புக்களை தடை செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா? அச்சட்டத்தின் கீழ் சிறிதரன் விமானநிலையத்தில் அசௌகரியங்களை சந்தித்ததை ஏற்றுக்கொள்கிறதா? தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றை சிறிதரன் சந்திப்பது தவறு என்று கூறுகிறதா? எப்போதும் சுமந்திரனுக்கு சால்வை போடும் யாழ்.பத்திரிகை ஒன்று தான் கனடாவில் விசாரிதததில் சிறிதரனின் விமான நிலைய விவகாரத்திற்கு தடைசெய்யப்பட்ட அமைப்பை சந்திப்பது தான் காரணம் என்று எழுதியிருந்தது. இந்த செய்தியை சுமந்திரன் பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கோள் காட்டியிருக்கமுடியும். ஒரு தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளராக, வெளியுறவுக்கொள்கை செயற்பாட்டாளராக சுமந்திரன், சிறிதரன் தடுக்கப்பட்டதற்கு அரசாங்க தரப்பு போன்று காரணம் கூறி பதிலளிக்க முடியுமா?. அவர் அந்த ஊடக சந்திப்பில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராகவும், அதன்கீழ் டயஸ்போரா அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு இருப்பது தொடர்பாகவும், சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியங்களுக்கு எதிராகவும் கருத்து சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? சிறீதரன், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர், பொதுச்சபையினால் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்கமுடியாமல் உள்ளவர், கடந்த தேர்தலில் யாழ்தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சியின் ஒரு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர். விமான நிலைய சம்பவத்தை கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் கண்டித்து இருக்கவேண்டுமே அன்றி அரசு தரப்பு சட்டத்தரணியாக பக்கம் மாறி சாட்சியம் அளிக்க முடியாது. சுமந்திரனின் கடந்த கால அரசியலில் கட்சிகொள்கைக்கு முரணாக இவ்வாறான பல சந்தர்ப்பங்களை உதாரணம் காட்டமுடியும். தமிழரசுக்கட்சியின் அயலுறவுக்கொள்கையில் தமிழ்நாடு மாநில, இந்திய மத்திய அரசுடனான உறவுகள் முக்கியமானவை. இதனால்தான் தமிழரசுக்கட்சி அரசியல் வாதிகள் சென்னை மாநாட்டில் கலந்து கொண்டனர். டெல்லி பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரான கனிமொழியூடாக மோடி அரசுக்கு இனப்பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்க சுமந்திரனும், சாணக்கியனும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக கனிமொழியினால் இது எந்தளவு சாத்தியம் என்பது வேறு கேள்வி. அதுபோன்றே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறிதரன் சிறப்புரிமைக்கூடாக ஒரு விசாரணையை கோரியிருக்கிறார். விளைவுகள் எப்படி இருந்தபோதும் அதற்கான உரிமை சிறிதரனுக்கு உண்டு. தமிழரசுக்கட்சியின் இரு முரண்பாட்டு அணிகளும் கட்சியையும், அதன் கொள்கையையும் முதன்மைப்படுத்தி தனிநபர் பக்தி அரசியலை தவிர்த்து செயற்பாட்டு அரசியலை செய்யவேண்டுமேயன்றி ஏற்பட்டுள்ள வெடிப்பை மேலும் ஆழமாக்கும் குறுக்கு ஒழுங்கைகளில் பயணிக்க கூடாது. வெளிப்படைத்தன்மையும், திறந்த விவாதமும், கருத்து சுதந்திர உட்கட்சி ஜனநாயகமும் பேணப்பட கட்சி உறுப்பினர்கள் போராடவேண்டும். இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இல்லையேல் தமிழரசுக்கட்சியில் மற்றொரு உடைவை யாராலும் தவிர்க்க முடியாது. இல்லையேல் மாற்று அரசியல் சக்தி ஒன்றின் தேவையே காலத்தின் கட்டாயமாக அமையும். வடக்கு கிழக்கில் என்.பி.பி. க்கு வழி திறந்து விட்டதில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு பெரும் பங்குண்டு. இதிலிருந்து பாடம் கற்க மறுத்தால், தமிழ்த்தேசிய அரசியலை மறக்க வேண்டியதுதான். https://arangamnews.com/?p=11723
  19. இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும் January 26, 2025 3:02 pm கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அதன்படி, அவற்றின் இருப்பிடம் மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அவை எந்த நோக்கத்திற்கு ஏற்றவை என்பதை அரசாங்கம் மிக விரைவில் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, பொது நிர்வாக அமைச்சகம் அறிக்கைகளைக் கோரியுள்ளது. ஹோமகமவில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை இராஜதந்திர சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பெரஹெரா சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். எனவே, அந்த இரண்டை மட்டுமே அவர் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் பிற சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. https://oruvan.com/only-the-two-presidential-palaces-will-be-used-for-government-purposes/
  20. யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=309587
  21. யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிஸார் விளக்கம் ! ShanaJanuary 26, 2025 சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதை யோஷித ராஜபக்ஷவின் நண்பர் அல்லது வேறு நபரொருவர் எடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என்றும், சந்தேக நபரின் நடத்தையைப் பொறுத்து, அந்த நேரத்தில் பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரியே சந்தேக நபருக்கு கைவிலங்கு போடலாமா வேண்டாமா என்பதை என்பதை தீர்மானிப்பார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது. அதற்கமைய, அவரை நாளை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது https://www.battinews.com/2025/01/blog-post_101.html
  22. ஹமாஸ் அமைப்பில் புதிதாக 15000 உறுப்பினர்கள் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல் Published By: Rajeeban 26 Jan, 2025 | 10:27 AM reuters இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அமெரிக்க காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதேயளவு - 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டனர் என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜோபைடன் நிர்வாகத்தின் இறுதிநாட்டிகளில் கிடைத்த தகவல்கள் உட்பட பல தகவல்கள் குறித்துஅமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் காங்கிரஸிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளன. ஹமாஸ் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றுள்ளது புதிதாக இணைக்கப்பட்டவர்களில் பலர் இளையவர்கள், என தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் புதியவர்களிற்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை ஹமாஸ் அவர்களை சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் அலுவலகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. காசாவில் தான் இழந்த அதேயளவு உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளது என அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் ஜனவரி 14ம் திகதி தெரிவித்திருந்தார்.இது நீடித்த கிளர்ச்சி நிரந்தர போரை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை பூர்த்தி செய்த பின்னர் படைகளை மீளபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,ஹமாஸ் மீள் எழுச்சி பெறுகின்றது பூர்த்தி செய்வதற்கு வேறு எந்த வெற்றிடமும் இல்லாததே இதற்கு காரணம் என அன்டனி பிளிங்கென் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/204902
  23. இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல் 26 Jan, 2025 | 11:54 AM ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதi செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனியர்கள் காசாவின் வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆர்பெல் யெகுட் உயிருடன் இருக்கின்றார் அவர் விடுதலை செய்யபப்படுவார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆர்பெல் யாகுட் 2023 ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.கிபுட்ஸ் நிர் ஒஸ்ஸில் மேற்கொண்ட தாக்குதலின் போது ஹமாஸ் இவரை பணயக்கைதியாக பிடித்திருந்தது.இந்த தாக்குதலின் போது அவரது சகோதாரர் கொல்லப்பட்டார்.இந்த யுவதியின் ஆண்நண்பர் மற்றும் உறவினர்களும் கடத்தப்பட்டனர், அவர்களில் சிலர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். ஆர்பெல் யாகுட் ஒரு விண்வெளி ஆர்வலர். https://www.virakesari.lk/article/204919
  24. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். https://www.hirunews.lk/tamil/394867/அவுஸ்திரேலிய-ஓபன்-டென்னிஸ்-தொடரின்-சாம்பியன்-பட்டத்தை-சுவீகரித்தார்-ஜானிக்-சினெர்
  25. அரசாங்க ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி அநுர பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரச சேவையை வலுப்படுத்துவது மற்றும் அரச சேவைக்கான செலவை நிர்வகிப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவையில் காணப்படும் அத்தியாவசியமான 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகளை இவ்வருட பாதீட்டுத் திட்டத்தில் முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் நேர்முகப் பரீட்சைகள் தாமதமாகக்கூடிய வெற்றிடங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த அரச சேவை மூலம் மனிதவளத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், “City Branding” முறையை பயன்படுத்தி அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. https://www.hirunews.lk/tamil/394857/அரசாங்க-ஊழியர்களுக்கு-நியாயமான-அடிப்படைச்-சம்பள-அதிகரிப்பு-ஜனாதிபதி-அநுர

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.