Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது.😀 அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம் @விசுகு ஐயா!😎
  2. ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு குழப்பமான சூழ்நிலையைக் குறிக்கின்றன. ஸ்வீடன் நாளிதழான Aftonbladet, பள்ளியில் சிக்கியிருந்த ஒரு நபர் பல துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஸ்வீடன் நீதி அமைச்சர் Gunnar Strommer, வன்முறையை "மிகவும் தீவிரமானது" என்று விவரித்தார். மேலும் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், சட்ட அமலாக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். https://news.lankasri.com/article/sweden-school-shooting-5-injured-1738679764
  3. அவர்கள் எல்லாம் அறிக்கை தரமாட்டார்கள் என்று முழுநம்பிக்கை இருப்பதனால்தான் அறிக்கைவிடுவார்களா என்று சவாலாகப் பதிந்தேன்😁. ஆனால் பங்குபிரிப்பவர்கள் பங்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்று தெரியும்தானே!
  4. சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் பிரதிநிதியாக எத்தனை தேர்தல்களில் என்ற வரலாறு தெரிந்தால் அவரை தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லமாட்டீர்கள். மண்டையன் குழு என்ன செய்தது என்பதை உணர்ந்திருந்தால் கடைசிவரை ஈபிஆர் எல் எவ் ஐ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் 1989 இல் ஈபிஆர் எல் எவ் அடாவடி அதி உச்சத்தில் இருந்தபோது எம்பியாக தெரிவானார். இது கள்ள வாக்குகளினால் அவரை பாராளுமன்றம் செல்லவைத்தது. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக, புலிகளின் ஆசீர்வதத்தினூடாக, 2004இல் எம்பியானார். 2010 இலும் தட்டித் தடுமாறி எம்பியானார். அதன் பின்னர் தொடர்தோல்விதான். மக்கள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்.
  5. மண்டையன் குழுவின் அட்டகாசங்களைப் பார்க்காததால் உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் எங்களால் சுரேஷை மண்டையன் குழுத்தலைவராகத்தான் பார்க்கமுடியும். புலிகள் சர்வதேச நாடுகளின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டதாலும், தமிழ் அரசியல் அமைப்புக்களை ஒடுக்கவில்லை என்று காண்பிக்கவும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை இக்கட்சிகள் முன்னெடுக்க விரும்பியதாலும் கூட்டமைப்பினுள் சேர்த்துவிட்டார்கள். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் அட்டகாசங்களுக்கு மன்னிப்புக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. அதனால் அவரை இப்போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
  6. இணைத்ததனால்தான் விவாதிக்கின்றோம். ஆனால் ஒரு தேசியச் செயற்பாட்டளாராக இருந்த உங்களால் சீமானும் நாம் தமிழர் கட்சியும் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் புலிக்கொடியையும் ஏன் பாவிக்கின்றார்கள் என்று புரியவில்லையா? நன்றாகவே புரியும். ஆனால் புலிக்கொடியை ஆட்டுபவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர் என்று நம்புவது உங்கள் குணம். அதையும் இணைத்து ஏன் சீமானைக் கழுவி ஊத்துவதில் ஈடுபடுவதில்லை என்று வியாக்கியானம் தந்தீர்கள். கீழேயுள்ள இணைப்பில் உள்ளது உங்கள் சொந்தக் கருத்தா அல்லது எங்கேயோ பார்த்ததை வெட்டி ஒட்டினீர்களா? 2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை கடந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்வதில் தப்பில்லை!😀 மாடு என்ன எருமை என்றும் சொல்லலாம். எங்களுக்கு தடித்த தோல் (thick skin)😂
  7. 😂🤣 சீமான் பின்னால் போனால் இதுக்கும் மேலே சொல்லுவியள்.. காகம் திட்டி மாடு சாவதில்லை😎
  8. அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம்.
  9. அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர். இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள். பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர். இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல விடயம்தான்.
  10. மதுரை 144 எதிரொலி : இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது! Feb 4, 2025 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்தது. இதனையடுத்து மதுரையில் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லையிலும், திருப்பரங்குன்ற பகுதியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் மலை கோவில் மற்றும் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு முதல் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் மற்றும் நிர்வாகி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட 8 பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர். திருப்பூரில் இருந்து இன்று காலை போராட்டத்திற்கு புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது ஒரு ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மதுரை வந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மாநில நிர்வாகி வன்னிராஜனை விருதுநகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். https://minnambalam.com/political-news/hindu-munnani-rss-leaders-arrested/
  11. பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு! Feb 4, 2025 பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பெரியார் அமைப்பினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கைதான அஜய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாருக்கு எதிராக சர்ச்சையாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்யக் கோரி, பெரியார் அமைப்பினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/insult-to-periyar-ntk-ajay-in-prison/#google_vignette
  12. மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள்! February 4, 2025 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே, முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து சில நாட்களுக்குள், அரச மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் மன்னார் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் உள்ளூர் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளார். https://www.ilakku.org/மன்னார்-கனிய-மணலை-அகழும்/
  13. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர். லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமாகி பிரிட்டிஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி இந்த பேரணி செல்லவுள்ளது. இந்த பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக்கொள்வதற்கு உதவவேண்டிய கடப்பாடு பிரிட்டனிற்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஸ் பிரதமருக்கும் மன்னர் சார்ல்ஸ் உட்பட உயரதிகாரிகளிற்கும் கடிதமொன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கவுள்ளனர். இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். தேசிய விடுதலை என்பது எங்களின் வரலாற்றுக்கடமை https://www.ilakku.org/protest-in-london-demanding-the-right-of-self-determination-of-the-tamil-people/
  14. மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை 04 Feb, 2025 | 12:02 PM இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தலைமையில் சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205764
  15. ’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’ - கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார். 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவிக்காமல் தேசத்திற்கு சேவை செய்ய தேசத் தலைவரை சட்டப்பூர்வமாகக் கடமைப்படுத்தும் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியலமைப்பு-விரைவில்-ரத்து-செய்யப்பட-வேண்டும்/175-351386
  16. ’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ சுதந்திரத்தை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாத்து வளமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி முதல் நாட்டை காக்கும் முப்படையினர் வரை அனைவருக்கும் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சகல தொழிற்துறையினரும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர் எனவும் நாட்டை பொருளாதார ரீதியில் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு இந்த நாட்டின் சகல பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (a) https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அனைத்து-இனத்தவர்களும்-இணைந்து-செயற்பட-வேண்டும்/150-351380 ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி February 4, 2025 06:33 am சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கீழே... தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் - ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம். நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த நான்கு மாதங்களில், வலுவான பொருளாதார அடிப்படையில் நாட்டை ஸ்திரப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துதல், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பிலான புதிய முன்னுதாரணத்துக்காக அர்ப்பணித்தல், இனவாதம், மதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம், கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல், ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. கிராமப்புற வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான எமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களை கைவிடாத அணுகுமுறையை உறுதிப்படுத்தும் நலன்புரி பொறிமுறையை உருவாக்குதல், நாம் தவறவிட்ட புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் அடைந்துகொள்ள பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்க தேவையான முதல் நடவடிக்கைகளை எடுத்தல், ஊழல் ஆட்சியாளர்கள் நிறைந்த நாடு என்று முன்பு காணப்பட்ட பிம்பத்தை தவித்து, உலகின் அனைத்து நாடுகளுடனும், நாடுகளுடனும் மிகவும் நம்பகத்தன்மையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நாடென சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை மீள அடையாளப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறாக, ஊழல் ஆட்சியாளர்களின் ஆயிரம் அவதூறுகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்த நாட்டின் பொது மக்களால் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கம் சீராக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எமது வாக்குறுதியின்படி இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அதன்படி, மேற்கூறிய அடிப்படையில், பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவை நனவாகிக்கொள்ள வரலாற்றில் மிகவும் ஆக்கபூர்வமான பணிகளை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது. அதற்காக, அனைத்து இலங்கை மக்களையும் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறும், 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு 2025 பெப்ரவரி 04 https://tamil.adaderana.lk/news.php?nid=199701
  17. ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அசாத் மௌலானாவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை அங்கு நீக்கப்பட்டுள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்தார் என்று முறைப்பாட்டை வழங்குமாறு அசாத் மௌலானாவின் மனைவிக்கு சாய்ந்தமருது பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் - என்றார். https://newuthayan.com/article/ஈஸ்டர்_தாக்குதல்_வழக்கு;_கோத்தாபய_கைதாவார்
  18. USAIDஐ முடக்கும் பணிகள் நடப்பதாக எலோன் மஸ்க் அறிவிப்பு! அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமான USAID ஐ மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்குவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கும் பில்லியனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (03) எக்ஸ் தளத்தினூடான ஒரு சமூக ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசுவாமி மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் மற்றும் மைக் லீ ஆகியோர் அடங்கிய உரையாடலின் போது, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தினை (USAID ) மூடுவதற்கு தாங்கள் செயல்படுவதாக மஸ்க் கூறினார். இந்த முகவர் நிலையம் புனரமைப்பு செய்யப்பட முடியாதது என்றும், இது மூடப்பட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாகவும் பில்லியனர் இதன்போது சுட்டிக்காட்டினார். ரொய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியின் படி, ட்ரம்ப் நிர்வாகம் USAID இல் இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளை வார இறுதியில் வெளியேற்றியது. மஸ்கின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) பிரதிநிதிகள் USAID கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு அணுகலைப் பெறுவதை அதிகாரிகள் தடுக்க முயன்ற பின்னர் இந்த வெளியேற்றம் அமைந்திருந்தது. 2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது. மோதல் மண்டலங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை இதன் மூலமாக அமெரிக்கா வழங்கியது. இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% ஐ வழங்கியது. USAID இன் இணையதளம் சனிக்கிழமையன்று ஆஃப்லைனில் (அணுக முடியாது) இருப்பதாகத் குறிப்பிடப்பட்டது மற்றும் சில பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை அதை அணுக முடியவில்லை என்றும் தெரிவித்தனர். USAID நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை உலகளாவிய முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இது ஏற்கனவே உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது. தாய்லாந்து அகதிகள் முகாம்களில் உள்ள கள மருத்துவமனைகள், போர் வலயங்களில் கண்ணிவெடி அகற்றுதல், எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் ஆகியவை நீக்கப்படும் அபாயத்தில் உள்ள திட்டங்களில் அடங்கும். அமெரிக்க செலவுகள் மற்றும் மோசடிகளைக் குறைப்பது பற்றி மேலும் விரிவாகப் பேசுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க பற்றாக்குறையிலிருந்து $1 டிரில்லியன் டாலர்களை ட்ரம்ப் நிர்வாகம் குறைக்க முடியும் என்று மஸ்க் மதிப்பிட்டார். http://www.samakalam.com/usaidஐ-முடக்கும்-பணிகள்-நடப்ப/
  19. சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று, இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது. அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன என தெரிவித்தார். http://www.samakalam.com/சுதந்திர-தினம்-தமிழர்-தே/
  20. யாழ், மன்னார் மாவட்ட செயலகங்களில் சுதந்திர தின நிகழ்வுகள்! adminFebruary 4, 2025 இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று , மாவட்ட செயலரின் உரை இடம்பெற்றது . மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு. ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/210712/
  21. மீண்டும் தமிழில் தேசிய கீதம்! adminFebruary 4, 2025 தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாடலுடன் தொடங்கின, அதே நேரத்தில் விழா நிறைவின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. கொழும்பு- 02, பாதுகாப்பு சேவைகள் கல்லூரி, கொழும்பு- 10, நாலந்தா கல்லூரி, கொழும்பு- 04, முஸ்லிம் பெண்கள் கல்லூரி, கொழும்பு- 07, ரோயல் கல்லூரி, கொழும்பு- 04, ராமநாதன் இந்து கல்லூரி, கொழும்பு- 10, சாஹிரா கல்லூரி, கொழும்பு- 10, அனைத்து புனிதர்கள் பெண்கள் கல்லூரி, கொழும்பு- 08, சுசமய வர்தன கல்லூரி, கொழும்பு- 04, இந்து கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 44 மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர். https://globaltamilnews.net/2025/210722/
  22. அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்! February 3, 2025 — கருணாகரன் — தென்னிலங்கை அரசியற் களத்தைக் கலக்கும் NPP யும் அநுர குமார திசநாயக்கவும் வடக்கில் தமிழ்த்தரப்பையும் தடுமாற வைக்கும் உபாயத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்ற வெற்றி NPP க்கும் அநுர குமாரவுக்கும் வடக்கில் தமக்கான அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கான தந்திரோபாய நடவடிக்கையில் அநுர ஈடுபடுகிறார். அதனுடைய வெளிப்பாடுகளே, அவருடைய அண்மைய யாழ்ப்பாண விஜயமாகும். யாழ்ப்பாண விஜயத்தில் அநுர சில வெற்றிகளை உடனடியாகவே பெற்றுள்ளார். 1. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் அநுரவைச் சுற்றித் திரண்ட மக்கள். இதன் மூலம் தமிழ் மக்களின் பேராதரவு தனக்கும் NPP க்கும் உண்டென்று காட்டியுள்ளார். குறிப்பாக தனக்குள்ள ஜனவசியத்தை உலகுக்கும் தமிழ்த் தரப்புகளுக்கும் தன்னுடைய கட்சிக்கும் காட்டியிருக்கிறார். அதிலும் தமிழ் மக்களின் பேரதரவைப் பெற்ற ஒரே சிங்களத் தலைவர் – ஜனாதிபதி தானே என்பதைக் காட்டுவதற்கு அநுரவுக்கு இது வாய்த்துள்ளது. இன்னும் இதை ஆழமாகச் சொன்னால், இன்றுள்ள தமிழ்த் தலைவர்களை விடவும் அநுரவுக்கு தமிழ் மக்களிடம் பேராதரவுண்டு என்பதை நிரூபித்திருக்கிறார். 2. “வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுவது ஏன்?” என்று யாழ்ப்பாணத்தில் வைத்துப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி, பலரையும் மடக்கி விட்டார் அநுர குமார. “இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தடுமாறினார்கள்” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரிகள் மட்டுமல்ல, அங்கே பிரசன்னமாகியிருந்த தமிழ்த்தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிவஞானம் சிறிதரனும் இதற்குப் பதிலளிக்காமல் மௌனமாகவே இருந்துள்ளனர். ஆகவே இங்கும் அநுரவுக்கும் NPP க்கும் வெற்றி கிட்டியுள்ளது. 3. தமிழ் அரசியற் தரப்பினர் உங்களை(மக்களை) ஏமாற்றுகின்றனர். உங்களுக்குரிய தேவைகளைப் பற்றியோ, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ இவர்கள் சரியாக – சீரியஸாகச் சிந்திப்பதேயில்லை. சும்மா படங்காட்டுவதற்காக வாயடிப்பதுதான் இவர்களுடைய வேலை. இல்லையென்றால், அரசாங்கம் ஒதுக்கும் நிதியைக் கூட ஒழுங்காகச் செலவழிக்க முடியாமலிருப்பதைப் பற்றி இவர்கள் அக்கறையில்லாமல் இருந்திருப்பார்களா? பாருங்கள், அதைக் கூட அங்கிருந்து (தெற்கிலேயிருந்து) நாம் வந்துதான் பேசவேண்டியுள்ளது. இந்தளவுக்குத்தான் உங்களுடைய தலைவர்களாக இருந்தவர்களும் இருக்க நினைப்போரும் உள்ளனர் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அநுர. அதாவது, தெற்கிலே பொறுப்பில்லாமல் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி, மக்கள் ஒதுக்கித் தள்ளுவதற்குப் பயன்படுத்திய உத்தியை, இங்கும் தமிழ் அரசியல்வாதிகளை ஒதுக்குவதற்குப் பயன்படுத்துகிறார். இதிலும் அநுரவுக்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. 4. யாழ்ப்பாணத்தில் அநுரவுக்குக் கிடைத்த வரவேற்பு எதிர்காலத்தில் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் ஒரு தூண்டுதலாக அமையும். இதையும் விடத் தாம் இன்னும் பெரிய வரவேற்பைக் கொடுக்க வேண்டும் என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டும். அதுதான் நடக்கவும் போகிறது. அப்படியே, கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அது வளர்ச்சியடையும். அங்கே (திருகோணமலை, அம்பாறையில்) சிங்கள மக்களும் வாழ்வதால், இது இன்னும் உச்சமடையும். இதனால், அரசியற் தீர்வைப் பற்றிய உரையாடல்களில் தேசிய மக்கள் சக்தியின் பக்கமே மக்கள் நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தமிழரின் அரசியலிலும் NPP யின் அரசியலிலும் முக்கியமானவை. ஏனென்றால், அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களிலும் NPP வடக்குக் கிழக்கில் செல்வாக்கைப் பெறுவதற்கான சாத்தியங்களை இது உண்டாக்குகிறது. அதேவேளை தமிழ்த் தேசியத் தரப்புகளுக்கு ஆணி அடிக்கும் காரியமாகவும் இது அமையக் கூடும். முக்கியமாக வடக்கிற்கு அனுப்பப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் ஏன் திருப்பி அனுப்புகிறீர்கள் என்று யாழ்ப்பாணச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி பகிரங்கமாவே கேட்டதும் அதற்கான பதிலை அதிகாரிகளும் தமிழ் அரசியற் தரப்பினரும் சொல்ல முடியாமல் தடுமாறியதும் தன்னை, தம்மை, வலுப்படுத்திக் கொள்வதற்கான உபாயமாகும். இதை அநுர திட்டமிட்டே செய்திருக்கிறார். இதற்கு யாராவது மறுப்புச் சொல்லியிருந்தால் அதற்கான பதிலை அவர் நிச்சயமாக அளித்திருப்பார். அதற்கான தயாரிப்புடன்தான் – தகவல் திரட்டுடன்தான் – அவர் இதைச் சொன்னார். என்றபடியால்தான் சிறிதரனும் கஜேந்திரகுமாரும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தனர். ஆகவே, பகிரங்க வெளியில் தமிழ்த்தேசியத் தரப்பைத் தோற்கடித்துத் தன்னை – NPP யை நிறுவியிருக்கிறார். ஜனாதிபதி இந்தச் சேதியைச் சொல்வதற்கு – இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு – முன்பே, வடக்குக்கு அனுப்பப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்று பல தடவை, பல தரப்பினராலும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாகாணசபையை தமித்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்த – விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பெருமளவு நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இப்படிக் குற்றஞ் சாட்டப்பட்ட விடயத்தைக் குறித்து இதுவரையிலும் கஜேந்திரகுமார், சிறிதரன் தரப்புகள் உள்பட எவரும் விசாரித்ததும் இல்லை. உண்மையைக் கண்டறிந்ததும் இல்லை. பதிலாக அரசாங்கம் வடக்கைப் புறக்கணிக்கிறது. பாரபட்சம் காட்டுகிறது என்றே புறணி சொல்லி, பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தே வந்திருக்கிறார்கள். கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளிலும் உள நிலையிலும் பாரபட்சங்களும் புறக்கணிப்புகளும் இருந்தது உண்மைதான். அதேவேளை அரசாங்கத்தினால் வடக்குக்கு அனுப்பப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதும் உண்டு. என்பதால்தான் இதைப் பகிரங்கமாக – முகத்துக்கு முன்பாக – ஜனாதிபதி போட்டுடைக்க வேண்டி வந்தது. இதற்குப் பிறகு கூட இந்த விடயத்தைக் குறித்து உண்மையைக் கண்டறிவதற்கு சிறிதரனோ, கஜேந்திரகுமாரோ அல்லது ஏனைய தமிழ்த்தரப்பினரோ முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் இது தொடர்பாக நாம் உண்மையைக் கண்டறிந்து உங்களுக்கும் (அரசாங்கத்துக்கும்)மக்களுக்கும் விளக்குவோம் என்று கூட இதுவரை (இந்தக் கட்டுரையை எழுதும்வரை) இவர்களிடமிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை. ஆனால், வடக்கிலுள்ள அதிகாரிகளும் வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த, செய்யும் அரசியற் தரப்பினரும் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். குறிப்பாக முன்பு ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களாக இருந்த விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், சிவமோகன், கலையரசன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அனைவரும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள். கூடவே முன்பு அதிகாரிகளாக இருந்தோரும் முன்னர் அரசியல் அதிகாரத்திலிருந்தோரும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையோராவர். ஏனென்றால், போரினால் மிக மோசமான அழிவைச் சந்தித்த பிரதேசம் வடக்காகும். உளரீதியான பாதிப்பு. உடல் ரீதியான பாதிப்பு. வளரீதியான பாதிப்பு. தொழில் ரீதியான பாதிப்பு. புவியியல் மற்றும் சூழலியல் சார்ந்த பாதிப்பு. பொருளாதார ரீதியான பாதிப்பு, பண்பாட்டு ரீதியான பாதிப்பு எனப் பல வகையான பாதிப்பைச் சந்தித்தது வடக்கு. அவ்வாறு பல முகப் பாதிப்புகளைச் சந்தித்த பிரதேசத்தை மீள்நிலைப்படுத்துவதற்கு பல வழிகளில் பல விதமான உதவிகளும் நிவாரணங்களும் ஆதரவும் நிதியும் தேவையாக இருந்தது. அதில் ஒன்றே அரச உதவியும் நிதி ஒதுக்கீடுமாகும். அதையே முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதும் அந்த நிதியைத் திருப்பி அனுப்புவது என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வடக்குப் பிரதேசத்துக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும். வடக்கிலே உள்ள அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அனைவரும் தமிழர்கள் அல்லது தமிழ்பேசும் சமூகத்தினரேயாகும். சில காலங்களில் மட்டும் ஆளுநராகப் பதவி வகித்தோர், சிங்களவர்களாக இருந்துள்ளனர். மற்றும்படி அநேகமாக அனைவரும் தமிழ்த்தரப்பினராக இருந்தபடியால், இனரீதியாகப் பாரபட்சம் காட்டி நிதியைச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியதாக யாரும் கதை (விட) சொல்ல முடியாது. இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், ஒவ்வோராண்டும் திருப்பி அனுப்பப்பட்ட நிதியின் விவரமும் அந்த நிதி எந்த ஒதுக்கீட்டிற்கானது, எந்தத் திணைக்களத்திற்கானது என்ற விவரமும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமா? என்பதேயாகும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமாக இருந்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டேயாக வேண்டும். இந்த இடத்திலே இன்னொரு விடயத்தையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. அண்மைக்காலத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் , “அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அப்படி மக்களுக்குப் பொறுப்பாக வேலை செய்ய முடியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது அவர்கள் தமது கதிரையை விட்டு வெளியேற வேண்டும்…” என்ற குற்றச்சாட்டைப் பகிரங்கமாகவும் சற்றுக் காட்டமாகவும் முன்வைத்து வருகிறார். ஆளுநரின் கூற்றும் ஜனாதிபதியின் கூற்றும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. அதாவது அதிகாரிகளின் அசிரத்தையே பெரும்பாலான தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் காரணம் என்பதை இவை நிரூபிக்கின்றன. இதேவேளை இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிடலிலும் அதற்கான தரவுகளைச் சேகரிப்பதிலும் கூட வடக்கு மிகப் பின்தங்கியதாகவும் பலவீனமுடையதாகவுமே உள்ளது. வடக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் குறைபாடுகளை நாம் தெளிவாகவே காண முடியும். குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத்திட்டங்களும் அபிவிருத்திகளும் தோல்வியையே கண்டுள்ளன. பல கட்டிடங்கள் செயற்பட முடியாத நிலையில் பாழடைந்து கொண்டிருக்கின்றன. வாழ்வாதார உதவிகளுக்கென மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும் நிவாரணங்களும் எந்த வகையிலும் குறித்த தரப்பினரின் வாழ்வை மேம்படுத்தவேயில்லை. அவ்வாறே சிறுதொழில் வளர்ச்சி, கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் போன்றவையும் வெற்றியைப் பெறாமல் படுத்து விட்டன. இவையெல்லாம் சரியாகத் திட்டமிடப்படாமையின் வெளிப்பாடுகளே – விளைவுகளேயாகும். அல்லது இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தி, வெற்றியடையச் செய்திருக்க வேண்டும். அதுவும் திட்டமிடலில் ஒரு பகுதியேயாகும். அது செய்யப்படவேயில்லை. ஆகவே பொறுப்பான அதிகாரிகள் (திட்டமிடற் பிரிவினர் உள்பட அதற்கு மேலுள்ள நிறைவேற்று அதிகாரிகள் வரையில்) இதற்குப் பொறுப்புடையோகின்றனர். இந்தப் பொறுப்பு வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த – செய்கின்ற அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அப்படியென்றால், இந்தக் கூட்டுத் தவறு ஏன் நிகழ்ந்திருக்கிறது? மக்கள் மீது இவர்களுக்கெல்லாம் அக்கறையே இல்லையா? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். இதற்குப் பிரதான காரணம், பொறுப்பின்மையாகும். இரண்டாவது ஆற்றலின்மை. மூன்றாவது, அச்சம். நான்காவது, அரசியல். பொறுப்பின்மை என்பது அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, சாதாரண ஊழியர்கள் மட்டுத்திலும் அரசியல்வாதிகளிடத்திலும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு தீவிர நோயாகும். தட்டிக்கழித்தலும் சாட்டுச் சொல்லுதலும் தமிழ்ச்சமூகத்தில் வலுத்து விட்டது. இதைத் தட்டிக் கேட்போரும் சுட்டிக் காட்டுவோரும் எதிராளிகளாக நோக்கப்படும் அளவுக்கு இந்த நோய் வலுத்துள்ளது. இந்தப் பொறுப்பின்மை போருடன் சேர்ந்து வளர்ந்ததாகும். ஒரு காலகட்டத்தில் மிக அர்ப்பணிப்போடு பணியாற்றிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பின்னர் ஏனோ தானோ என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இதற்குக் காரணம், போர்க்காலத்தில் பொறுப்புச் சொல்வது சுலபம். போர்ச்சூழலில் நாம் இப்படித்தான்தான் செயற்படக் கூடியதாக இருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். அங்கே முழுமையான நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சூழலும் இல்லை. அப்படியாக இருந்தாலும் அதற்கான பொறுப்பை ஏதோ ஒரு தரப்பின் தலையில் விட்டு விடலாம். இப்போது (போருக்குப் பிந்திய சூழலில்) அப்படிச் செய்ய முடியாது. இப்பொழுது நிர்வாக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டும். பொறுப்புச் சொல்ல வேண்டும். அதற்குப் பழக்கப்படாத அதிகாரிகளே பலரும். இதை மூத்த அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பெரும்பாலான அதிகாரிகள் நீண்டகாலமாக அல்லது தமது பணிக்காலம் முழுவதுமே வடக்கிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாளர்கள். பிற இடங்களில் வேலை செய்யும்போது கிடைக்கின்ற அனுபவத்தைப் பெறாதவர்கள். ஆகவே ஒரு மந்த நிலை, ஆற்றலின்மை இவர்களிடத்திலே உருவாகியிருக்கிறது. இது பொறுப்பின்மையை வளர்த்திருக்கிறது. அடுத்தது, அச்சமாகும். இது கூட வடக்கிற்குள் முடங்கியிருந்ததால் ஏற்பட்டது எனலாம். தாம் சுயாதீனமாகவும் தற்துணிவோடும் சில வேலைத் திட்டங்களை, தீர்மானங்களை முன்னெடுத்தால், அதற்காகப் பழிவாங்கப்படுவோமோ?அரசாங்கத்தின் ஆட்களாகக் கருதப்பட்டு விடுவோமோ? என்ற அச்சம். கூடவே அரசாங்கத்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற பிரிகோட்டுக்குள் சிக்க வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால், தட்டாமல், முட்டாமல் ஏதோ இருக்கும் காலம் வரையிலும் கதிரையைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று நடந்து கொள்வது. இதனால், தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கும் செயற்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த்திட்டம் இரணைமடு – மருதங்கேணி – பாலியாறு என மூன்று திசைகளில் இழுபடுகிறது. இதை துணிச்சலோடு அதிகாரிகள் அதற்கான அடிப்படையில் வாதிட்டு முன்னெடுத்திருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை. நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வடிகாலமைப்புச் சபை ஆகிய இரண்டு தரப்பு அதிகாரிகளின் தயக்கங்களே இந்தத் திட்டம் இன்னும் இழுபறியில் இருப்பதற்கும் சர்ச்சையோடு நீடிப்பதற்கும் காரணமாகும். அதிகாரிகளிடத்தில் நீடிக்கின்ற தயக்கமே அரசியற் தரப்பினரிடத்திலும் உள்ளது. ஆக கூட்டு மந்தத் தனமே இங்கே நிலவுகிறது. இறுதியான காரணம், அரசியலாகும். ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல அரசியல் சிக்கல்களுக்குள் தாம் உள்ளாக வேண்டி வந்து விடும் என்ற முன்னெச்சரிக்கையோடு தணிந்து – பணிந்து – மந்தமாகிப் போவதோடு, அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று காட்டுவதற்கான – பழியை அரசின் தலையில் கட்டி விடும் விதமாகவும் இந்தக் குறைபாடு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் புறக்கணிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று சுலபமாகப் பழியைச் சுமத்தி விடுவதற்கு இதை ஒரு கருவியாகவும் வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளனர். இதை தமிழ் அரசியல்வாதிகள் தாராளமாக ஆதரித்துள்ளனர். அவர்களுடைய அரசியலுக்கு இது தேவையான கருப்புப்பொருள் அல்லவா! இதனால்தான் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதைப்பற்றி இவர்கள் கேள்வி எழுப்பவேயில்லை. இனியும் கேட்கப்போவதில்லை. இப்படியான ஒரு நெருக்கடிச் சூழல் ஏற்படும்போது, அது அதிகாரிகளின் குறைபாடு, தவறு, குற்றம் என அவர்களுடைய தலையிற் கட்டிவிடவே முயற்சிக்கின்றனர். அப்படியானால், எதற்காக இவர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குச் செல்கின்றனர்?ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்போய்க் குந்தியிருக்கின்றனர்? இப்போது NPP யும் அநுரவும் எல்லோருக்கும் சோதனையை – சவாலை உருவாக்கியுள்ளனர். யதார்த்தத்துக்கு – உண்மைக்கு – நெருக்கமாக வர முடியாத – வர விரும்பாத தரப்புகளுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை NPP யும் அநுரவும் சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. அதற்கான NPP யோ அநுரவோ ஒன்றும் தேவதூதர்களோ, தேவ கட்டமைப்போ இல்லை. ஆனால், முடிந்தளவுக்கு எளிமையாகவும் இயல்பாகவும் சனங்களின் மீதான கரிசனையோடும் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. புதிய அரசாங்கம், புதிய ஆட்சி,புதிய தலைமை பல மாற்றத்தை உண்டாக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அதனுடைய அடையாளமே இந்த மணியடிப்பாகும். பார்ப்போம், இனியாவது மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்கிறதா? என்று. https://arangamnews.com/?p=11758
  23. மாவையும் மட்டக்களப்பும்….. February 2, 2025 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய சாத்வீக போராட்ட வரலாறு, ஆயுதபோராட்டமாக பரிணமித்த அரசியல் நிலைமாறு காலத்தை பதிவு செய்பவர்கள் எவரும் அன்றைய மூன்று இளம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை மறந்தும் கடந்து செல்ல முடியாது. அவர்கள் வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா. இவர்களில் காசி ஆனந்தனும், மாவை சேனாதிராஜாவும் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் நிலைத்து நின்றனர். அவர்களில் ஒருவரான மாவையின் மூச்சு 29.01.2025 அன்று நின்று போனதால் அவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் இறந்த காலமாகிவிட்டார். வடக்கின் எந்த தலைவருக்கும் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் உறவு கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு. 1970 களில் இருந்து இந்த போராட்டம் தமிழ் இளைஞர்களால் ஆயதப்போராட்ட சிந்தனையுடன் சமாந்தரமாக எடுத்துச்செல்லப்பட்டதிலும், அகிம்சை போராட்டங்களுக்கு பாராளுமன்ற அரசியலுக்குள்ளும், வெளியிலும் வலுச்சேர்ப்பதிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற வாய்ப்பு உண்மையான விடுதலை நோக்கில் நேர்மையான அரசியலை கொண்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. தமிழர்விடுதலைக்கூட்டணியின் தமிழ்த்தேசிய அரசியலோடு சேர்ந்து பயணித்த தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டு அரசியல் மட்டக்களப்பு இளைஞர்களுடான தொடர்பையும், மட்டக்களப்பு கிராமங்களின் தொடர்பையும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாவைக்கு அதிகரித்தது. அந்த இளைஞர்களில்- மூத்தவர்களில் பலர் இன்று எம்மத்தியில் இல்லை. சிலர் இன்னும் இருக்கிறார்கள். இன்றைய தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கின் இன்றைய பாராளுமன்ற, அல்லது முன்னாள் பாராளுமன்ற அரசியல்வாதிகளில் – இன்றிருப்பவர்களில் பெருந்தலைவர் செ.இராசதுரையும், கி.துரைராசசிங்கமும் மட்டுமே இதை நினைவுகூரக்கூடும். மாவையின் அரசியல் தொடர்பு அம்பாறை மாவட்டத்தில் அறப்போராட்ட குழு தலைவர் அரியநாயகம் முதல், பாண்டிருப்பு வேல்முருகு மாஸ்டர் வரை ஆழமான தளத்தை கொண்டது. தமிழர் கூட்டணி என்ற பெயரைச் சூட்டியவரே அரியநாயகம்தான். தமிழர் மகாசபை ஊடாகவும், பாண்டியூரான், செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் ஊடாகவும், பொன்.வேணுதாஸ், பன்னீர்ச்செல்வம்…..போன்ற இளைஞர்களின் ஊடாகவும் நிலைத்த அரசியல் உறவு. இந்த பிரதேசத்தில் மாவையுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும், தமிழ்தேசிய வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுமாக திரு.சிந்தாத்துரை, திரு.அரசரெத்தினம், வண.சிவநேசக்குருக்கள் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மட்டக்களப்பு -பட்டிருப்பில் , சி.மூ. இராசமாணிக்கத்தின் 1970 தேர்தல் தோல்விக்கு பின்னரும், மரணத்தின் பின்னரும் மண்டூர் வேலாயுதபிள்ளை மாஸ்டர், பழுகாமம் முத்துப்பிள்ளை மாஸ்டர், செட்டிபாளையம் லிங்கநாதன் மாஸ்டர், களுவாஞ்சிக்குடி பாக்கியராசா போன்றவர்கள் ஊடாகவும் மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டு அரசியல் வலுப்பட்டது. 1970 களில் தமிழ் இளைஞர் பேரவையூடாக மண்டூர் மகேந்திரன், கல்லாறு நடேசானந்தம், கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்பராசா, தம்பிராசா, அரசரெத்தினம் (கப்டன் டேவிட்) போன்றவர்களால் தமிழ்த்தேசிய மக்கள் மயயப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு மண்ணில் கிராமங்களையும், அதன் வாழ்வியலையும், அவற்றின் அரசியல் தேவைகளையும் அறிந்திருந்த ஒரு வடக்கு தமிழ்தேசிய தலைமையை மாவைக்கு நிகராக அடையாளம் காண்பது கஷ்டம். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அன்றைய மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை பெற்றதும், அவருக்கு ஆசிரியையாக பட்டிருப்பு முன்னாள் எம்.பி. யின் பாரியார் முத்துலட்சுமி கணேசலிங்கம் பாடம் எடுத்ததும், தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைவர் உமாமகேஸ்வரன் நில அளவையாளராக பழுகாமத்தில் தங்கியிருந்து கடமையாற்றியதும் ஆயுதப்போராட்ட வீறுக்கு முந்திய காலங்கள். தமிழ்த்தேசிய பாராளுமன்ற மூத்த தலைமைகளுள் ஒருவரான மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, இளைஞர் பேரவையின் அன்றைய தலைவர் அன்ரன் மற்றும் வாசுதேவா, நிமலன் சௌவுந்தரநாயகம், வாகரை பிரான்ஸ்சிஸ் உள்ளிட்ட இளைஞர்கள் பலரும் மாவைக்கு அறிமுகமாகி இருந்தார்கள். இதில் கவிஞர் காசி ஆனந்தனுக்கும் பெரும் பங்குண்டு. இந்த வழமைக்கு மாறான ஒரு நெருக்கமான உறவு தமிழ்த்தேசிய அரசியலோடு பிற்காலத்தில் முரண்பட்டு நின்றவர்களையும் கூட மாவையின் தொடர்பில் இருந்து பிரித்து வைக்கவில்லை. அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் இருதரப்பும் இந்த உறவை இறப்புவரை பேணினார் என்பது தமிழ்த்தேசிய அரசியலில் வழமைக்கு மாறான பாணி. இவற்றிற்கும் அப்பால் மாவையை மட்டக்களப்போடு கட்டிப்போட்ட சில விடயங்களை குறிப்பிட்டேயாகவேண்டும். (*).மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி நீக்கப்பட்டு பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது. (*).இராசதுரை -காசி ஆனந்தன் அரசியல் மோதலில் மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடு. (*). அ.அமிர்தலிஙகம், நீலன் திருச்செல்வம் படுகொலைக்கு பின்னரான அரசியல் விபத்தில் மாவையின் பாராளுமன்ற பிரவேசம். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் செயற்பட்ட விதம். (*). 1989, 1994 இல் வடக்கிலும், கிழக்கிலும் மாவை சந்தித்த பாராளுமன்ற தேர்தல் தோல்விகள். (*). கடந்த கால ஆயுத அரசியல் கலாச்சாரத்தில் மாவை கொண்டிருந்த வெறுப்பும், காலப்போக்கில் புலிகளின் தலைமையுடனான உறவில் அதிகரித்த இடைவெளியும். (*). பாராளுமன்ற அரசியல் வாதியாக மாவையின் அரசியல் அணுகுமுறையும், செயற்பாடுகளும் . பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதி உருவாக்கப்பட்டபோது ஏற்கெனவே அம்பாறை தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா 1977 தேர்தலில் அங்கு போட்டியிடவிரும்பினார்.(?). அல்லது தமிழர்விடுதலைக்கூட்டணியின் அன்றைய செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கத்தின் விருப்பமாகவும் அது இருந்து இருக்கமுடியும்.(?). இந்த நிலைப்பாடு மாவையின் நெருக்கத்தை இங்கு அதிகரித்தது. ஆனால் இராசதுரை -காசி ஆனந்தன் முரண்பாடு அதிகரித்த நிலையில் அது மாவைக்கும் , அமிர்தலிங்கத்திற்கும் குறுக்கே வந்து நின்றது. இந்த நிலையில் , இராசதுரை -காசி ஆனந்தன் மோதலை விரும்பாதவர்கள் காசி ஆனந்தனை ஏன்? பொத்துவில்லில் நிறுத்தக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். இந்த நியாயமான கேள்விக்கு பதிலளிப்பது அமிர்தலிங்கம் தலைமையிலான வேட்பாளர் நியமனக்குழுவுக்கு சிக்கலானது. புதிய தொகுதியில் மாவையை இலகுவாக வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு பதிலாக நிலைமை எதிர்மாறாக மோசமானது. வடக்கில் இருந்து ஒருவர் இறக்குமதி செய்யப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றி பெறுவது ஒப்பீட்டளவில் இலகுவானது. கொழும்பு மத்தி, நுவரெலியா -மஸ்கெலிய மூன்று அங்கத்தவர் தொகுதிகளில் இது வெளிப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கா மகன் அநுராவை வெற்றி பெறவைப்பதற்காகவே நுவரெலியா -மஸ்கெலிய தொகுதியை மூன்று அங்கத்தவர் தொகுதியாக்கினார். சௌ.தொண்டமான், காமினி திசாநாயக்க, அநுரா பண்டாரநாயக்கா ஆகியோர் வெற்றி பெற்றனர். கொழும்பு மத்தியிலும் இதே நிலைதான். பிரேமதாச, செல்லச்சாமியோடு முஸ்லிம் பிரதிநிதி ஒன்று வெற்றிபெறுவது வழமை. சி.டபிள்யூ.சி, யு.என்பி, எஸ்.எல்.எப்.பி மூன்று கட்சிகளும், மூவினமக்களும் பிரதிநிதித்துவம் பெற்றனர். இந்த இலக்கிலேயே மாவைக்கு பொத்துவில் குறிவைக்கப்பட்டது. இதை மட்டக்களப்பில் “சாணைக்குறி” என்பது மட்டக்களப்பு தமிழின் அழகு. பிறந்த பச்சைக்குழந்த ஒன்றை போர்த்திக்கொள்ளும் துணியை “சாணைச்சீலை” என்பது வழக்கம். இந்த குறியீட்டின் அர்த்தம் உறவுமுறைக்குள் பிறந்த குழந்தைகளை இன்னார்க்கு இன்னார் என்று ஊர், உறவுகள் பேசுவது. இதே போன்று தான் பொத்துவில் தொகுதியின் பிறப்பு மாவைக்கு சாணைக்குறி போட்டு கட்டிவைக்கப்பட்டது எனலாம். அதேவேளை இதையும் மீறி மாவையை பொத்துவில்லில் இறக்கினால் அதன் தாக்கம் மட்டக்களப்பில் காசி ஆனந்தனின் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மாவையை பொத்துவில்லில் நிறுத்தும் முடிவு கைவிடப்பட்டு, அவசர அவசரமாக எம்.சி. கனகரெத்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.சூழ்நிலையை விளங்கிக்கொண்ட மாவை அமிர்தலிங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார். மாவையை பொத்துவில்லில் வெற்றி பெற வைப்பதை விடவும் இராசதுரையை தோற்கடிப்பது அமிர்தலிங்கத்தின் பிரதான நோக்காக இருந்தது. அன்று மாவை, காசி ஆகியோர் அமிர்தலிங்கத்தின் தடத்திலேயே சற்றும் விலகாது பயணித்தனர். அவர் கீறிய கோட்டை தாண்டமாட்டார்கள். மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் செ.இராசதுரைக்கும், காசி ஆனந்தனுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் உதயசூரியன், வீட்டு சின்னங்களில் இவர்கள் போட்டியிட்டனர். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரில் எவருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த முடிவை மீறி கோவை மகேசன், ஈழ வேந்தன், சிவபாலன் போன்றோர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து காசி ஆனந்தனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை இதைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தில் நடுநிலைமை வகித்தார். இதுவும் மட்டக்களப்பு மக்கள் மாவையை மானசீகமாக நேசிக்க காரணமாக அமைந்தது. 1989 விகிதாசார ரீதியான முதல் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் அ.அமிர்தலிங்கம் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் வடக்கு கிழக்கில் கிடைத்த மொத்தவாக்குகளால் அவர் தேசிய பட்டியல் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல முடிந்தது. 1989 யூலை 13 இல் புலிகள் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு மாவை நியமிக்கப்பட்டார். அதே தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட மாவை வெறும் 2,820 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்று ஈரோஸிடம் படு தோல்வியடைந்தார். இதுவே அரசியல் விபத்து ஒன்றின் மூலமான மாவையின் பாராளுமன்ற அரசியலின் ஆரம்பம். தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் கிடைத்த வாக்குகள் பெரும்பங்களிப்பு செய்தன. மேலும் மாவையின் பொத்துவில் தொகுதிக்கு எம்.பி.யாவது என்ற எண்ணம் தொடர்ந்தும் வலுப்பெற்று வந்தது. இதற்கு வடக்கில் வாய்ப்பு இல்லை என்று அவர் நினைத்திருக்கவும், பொத்துவில்லில் இலகுவாக வெற்றி பெற முடியும் என்று நினைத்திருக்கவும் கூடும். இதனால் 1994 இல் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு தனது நீண்ட நாள் அரசியல் ஆசையை நிறைவேற்றினார். ஆனாலும் அவர் தோல்வியடைந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் அவரின் நண்பர்களாக இருந்த போதும் மாவை அங்கு போட்டியிடுவதை விரும்பவில்லை. அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையும், அதன் முக்கியஸ்தர்களும் சுயேட்சை குழு ஒன்றை களமிறக்கியதன் மூலம் மாவை தோற்கடிக்கப்பட்டார். இது அவரின் எதிர்கால பாராளுமன்ற அரசியலுக்கு சில படிப்பினைகளை வழங்கயிருக்க வாய்ப்புண்டு. பின்னர் புலிகளின் மற்றொரு படுகொலை அவருக்கு மீண்டும் ஒரு விபத்து வாய்ப்பை வழங்கியது. நீலன் திருச்செல்வத்தின் கொலைக்கு பின்னர் ஏற்பட்ட தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கு மீண்டும் மாவை நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் அவருக்கு அம்பாறை தமிழர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனால் மட்டக்களப்பு மண்ணுடனான தொடர்பு மேலும் அதிகரிக்க மாவைக்கு வாய்ப்புகிடைக்கிறது. தற்போது தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதியையும் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளும், வேலைவாய்ப்புக்களையும் வழங்கினார். தேசிய பட்டியல் எம்.பி.யான மாவை அம்பாறை மாவட்ட எம்.பி. போன்றே செயற்பட்டார். குறிப்பாக பெரிய நீலாவணை வைத்தியசாலை இவரின் முயற்சியாலும், நிதி ஒதுக்கிட்டாலும் அமைக்கப்பட்டது. 1989, 1994 இல் இவர் சந்தித்த தேர்தல் தோல்விகளும், தேசியப்பட்டியல் எம்.பி.பதவியும் மட்டக்களப்போடு அவரின் தொடர்பை அதிகரிக்க உதவின. மாவை சேனாதிராஜா பொதுவாக முஸ்லீம் சமூகத்துடன் ஒரு நல்லிணக்க நிலைப்பாட்டை எப்போதும் கொண்டிருந்தார். இந்த உறவு அஷ்ரப் காலத்திற்கு முந்திய மன்சூர் மௌலானா காலத்து உறவு. இதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியிலும் மாவைக்கு நற்பெயர் இருந்தது. என்றாலும் கல்முனை தமிழ் பிரதேச விவகாரத்திற்கு அவராலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீர்வு காண முடியவில்லை. ஆனால் மாவை தமிழ் – முஸ்லிம் இனவாத அரசியல் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான படுகொலைகளுடன் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. இதற்கு பின்னரான 2000 ,2001,2004,2010,2015 ஆகிய ஐந்து தேர்தல்களிலும் அவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார். 2020 இலும், 2024 இலும் தேசிய பட்டியலுக்கு முயற்சி செய்தார் முதலாவதில் செயலாளர் கி.துரைராசசிங்கம் விரைந்து செயற்பட்டதில் கலையரசன் எம்.பி.ஆனார். 2024 இல் அவரது முதுமை முக்கிய தடையாக -காரணமாக குறிப்பிடப்பட்டது. 2020 இல் கலையரசனுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அம்பாறை தமிழர்களுக்கு எம்.பி.இல்லாத நிலையில் தனது சேவையை அம்பாறை தமிழர்களுக்கே வழங்கியிருப்பார் என்று நம்பலாம். மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றுக்கு மாவையூடாக தீர்வு காணமுற்பட்ட சம்பவம் ஒன்றை மூத்த தமிழ்த்தேசிய நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருந்தேன். மட்டக்களப்பு – புளியந்தீவில் உள்ள முன்னணிப்பாடசாலைகள் அனைத்தும் கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்கொண்டவை. ஒரு பாடசாலை மட்டுமே இந்துமத பாரம்பரியம் கொண்டது. அன்று இதன் அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஒரு கருத்து இருந்தது. இது மதரீதியான முரண்பாட்டு பிரச்சினையா? தனி நபர்களுக்கு இடையிலானதா? அல்லது கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பதில் தெளிவில்லை. ஆனால் புறக்கணிப்பு என்று அபிவிருத்தி அக்கறை கொண்ட ஒரு பகுதியினர் கருதினர் . மட்டக்களப்பில் தமிழ்த்தேசிய அரசியலில் பிரபலமான அந்த எம்.பி. குறிப்பிட்ட பாடசாலை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் பாடசாலை அபிவிருத்தி அக்கறையாளர்கள் ஒரு திட்டம் போட்டனர். மட்டக்களப்பின் மூத்த தமிழ்த்தேசிய அரசியல் வாதியூடாக மாவை சேனாதிராஜாவையுடன், குறிப்பிட்ட எம்.பி.யையும் பாடசாலை நிகழ்வொன்றுக்கு அதிதியாக அழைக்க முடிவுசெய்தனர். இதற்கு முன்னர் பல தடவைகள் அழைத்தும் எம்.பி. அதை தட்டிக்கழித்து வந்ததால் இந்த முடிவு. இந்த முறை மாவையும் வருவதால் அழைப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் ஒத்துக்கொண்டார். ஆனால் மாவை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் இருந்து வந்திறங்கிய போது, இறுதி நேரத்தில் தனக்கு கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று இருப்பதாக கூறி எம்.பி. கொழும்பு சென்றுவிட்டார் என்று சொன்னார் அவர். மட்டக்களப்பு பிரச்சினை ஒன்றுக்கு மாவையூடாக தீர்வைத்தேடும் அளவுக்கு அவருக்கு மட்டக்களப்பில் அரசியல் உறவும், அவர் மீதான நம்பிக்கையும் இருந்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. இயக்க மோதல்கள், தனிநபர்கள் மீதான அரசியல் படுகொவைகளை மாவை விரும்பவில்லை. மு.ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் ஆகியோரை ரெலோ படுகொலை செய்ததில் இருந்து இது வெளியிடப்பட்டது. காலப்போக்கில் அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைத்து கொலைகளையும் சிலர் தமிழ்த்தேசியத்தின் பெயரில் நியாயப்படுத்தியிருந்தபோதும், மாவை நியாயப்படுத்தவில்லை. அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அந்த சந்தர்ப்பத்தில் மாவையும் அமிரோடு இருந்திருந்தால் இன்றைய இறுதிச்சடங்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கும் என்பதை மறுதலிப்பது கஷ்டம். மாவையோடு மிகவும் நெருக்கமாக அரசியல் செயற்பாட்டாளர்களாக இயங்கிய பலரதும் கொலைகள் அவரைபாதித்து இருந்தது. இதனால் புலிகளின் தலைமைக்கும் மாவைக்கும் இடையிலான உறவில் இடைவெளி அதிகரித்தது. சகோதர இயக்கங்களின் கொலைகளை அவர் “துரோகிகள்” என்ற பையில் போட்டு கட்டவில்லை. கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுடன் மிக நெருங்கிய அரசியல் உறவைக்கொண்ட வேல்முருகுமாஸ்டர், நிமலன் சவுந்தரநாயகம், கிங்ஸ்லி இராசநாயகம், அ.தங்கத்துரை, சி.சம்பந்தமூர்த்தி, சாம் . தம்பிமுத்து, கலாமாணிக்கம் கொலைககளும் அவரை பாதித்திருந்தன. அ.அமிர்தலிங்கம், வி.யோகேஸ்வரன், உள்ளிட்ட மற்றைய, சகலதரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொவைகளாலும் மாவை பாதிக்கப்பட்டிருந்தார். மற்றும் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களும் ஒரு காலத்தில் அவரோடு செயற்பாட்டில் இருந்தவர்கள். இயற்கை மரணம் எய்திய மண்டூர் மகேந்திரனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது ஆரோக்கியமற்ற உடல்நிலையிலும் அவர் மட்டக்களப்பு வந்திருந்தார். அப்போது மாவை பல விடயங்களை நம்பிக்கைக்குரியவர்களுடன் மனம்விட்டு பேசியிருக்கிறார். மாவையின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் அவரை விடுதலைப் போராளி என்ற நிலையில் இருந்து ஒரு வழக்கமான பாராளுமன்ற அரசியல்வாதியாக மாற்றிவிட்டது. காலப்போக்கில் அவர் அதிலே மூழ்கிவிட்டார். தேர்தல் அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் மாவை ஒப்பீட்டளவில் ஒரு நாகரிகமான பாராளுமன்ற அரசியல்வாதியாக இருந்தார். “மோட்டு சிங்களவன்,….. போன்ற காழ்ப்புணர்ச்சி இனவாத வார்த்தைகளை அவர் எப்போதும் தவிர்த்து வந்தார். உட்கட்சி பிரச்சினைகளை பேசித்தீர்க்க விரும்பினார் எனினும் அது அவரின் கைகளில் மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாவை அவரின் உருவத்திற்கும், உயரத்திற்கும் ஏற்ற உறுதியான ஆளுமையோ, தலைமைத்துவப் பண்புகளையோ கொண்ட கட்சியின் கட்டளைத்தளபதி அல்ல. அதனால் சுமார் இரு சகாப்தங்களாக தமிழ்த்தேசிய அரசியலுக்கு செயலாளராகவும், தலைவராகவும் அவரால் சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியவில்லை. இந்த பலவீனம் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் காய் நகர்வுகளும், இராஜதந்திர செயற்பாடுகளும் தோல்வியடைய காரணமாக அமைந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய தலைமைத்துவ மெத்தன போக்கு தமிழரசுக்கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. மாவையின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ்த்தேசிய அரசியல் அனுபவம் இறுதியில் திக்கு தெரியாத ஒரு காட்டில் தமிழ் மக்களையும், கட்சியையும் கொண்டு போய் விட்டுள்ளது என்பது துரதிஷ்டம். என்றாலும் இந்த நிலைக்கான ஒட்டு மொத்த பொறுப்பையும் யாரும் மாவையின் தலையில் மட்டும் கட்டிவிடமுடியாது. சமகால அரசியலில் அவரின் தலைமைத்துவ பலவீனம் பல குத்துவெட்டுகளுக்கும், குழிபறிப்புக்களுக்கும் காரணமான ஒரு பதவி வெறியாக எல்லாத்தரப்பிலும் மாறிவிட்டது. வெளுத்ததெல்லாம் வெள்ளை என்று நம்பிய மாவையின் இந்த நிலைக்கு அவரது பலவீனத்திற்கும் பாதிப்பங்குண்டு. தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மாவை எப்போதும் பதிவு செய்யப்படவேண்டிய ஒருவர். ஆகக்குறைந்தது இந்த கொடூரமான தமிழ்த்தேசிய அரசியல் சூழலிலும் ஒப்பீட்டளவில் மாவையை ஒரு மானிட நேயம் கொண்டவராக அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் மட்டக்களப்பு அடையாளம் காணமுடியும். அஞ்சலிகள் …! https://arangamnews.com/?p=11754
  24. உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மஹிந்த வௌியேற தயார்! February 3, 2025 04:24 pm அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ ஒரு கணம் கூட அங்கே தங்க மாட்டார் என்றும், அது குறித்து இங்கும் அங்கும் கருத்துக்களை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். மேலும், உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=199683
  25. யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்! adminFebruary 3, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள், இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போது, மீள் குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலான விடயம் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1775.27 ஏக்கர் காணி இராணுவத்தினரிடமும் , 160.67 ஏக்கர் காணி , கடற்படையினரிடமும் , 660.05 ஏக்கர் காணி விமான படையினரிடமும் , 28.28 ஏக்கர் காணி காவற்துறை திணைக்களத்திடமும் காணப்படுகின்றன. இவ்வாறாக யாழ் . மாவட்டத்தில் 2ஆயிரத்து 642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படையினர் மற்றும் காவற்துறையினரின் வசம் உள்ளன என தெரிவிக்கப்பட்டது https://globaltamilnews.net/2025/210676/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.