Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது - ஜனாதிபதி! நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்ட அவர், சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய பலர் இந்த மாதத்தினுள் கைதாவர் எனவும் தெரிவித்தார். தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும். ஏனென்றால், எம்மிடம் பெரியளவில் டொலர் கையிருப்பு இல்லை. 5 வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. ஒரே தடவையில் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துச் சிக்கல் ஏற்படுமாயின் நாட்டில் மீண்டுமொரு நெருக்கடி ஏற்படும். எனவேதான், மேலதிகமாக வாகனங்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதிக்குத் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு மாறாக படிப்படியாக அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, விவசாயிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 15,000 ரூபாவாக இருந்த உர மானியம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். உண்மையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளதால் புதிய வேலைத்திட்டங்களில் அவதானம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறான மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/மற்றுமொரு_நெருக்கடி_ஏற்படுவதை_தவிர்ப்பதற்கே_வாகனங்களுக்கான_வரி_அதிகரிக்கப்பட்டது_-_ஜனாதிபதி!
  2. இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி “குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.” 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு பிரதான காரணமாகும். பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சமூக ஊடகங்களைப் பற்றி நினைப்பதில்லை, ஆனால் இளைஞர்கள் பல்வேறு உறவுகளை உருவாக்க சில டேட்டிங் பயன்பாடுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர். இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன” என்றார். -(3) http://www.samakalam.com/இலங்கையில்-பாலியல்-நோய்க/
  3. மஹிந்தவின் வீடு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல இதனைத் தெரிவித்தார். “30,000 சதுர அடி… ஐந்து ஆண்டுகள். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால்,… இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்” என்றார். http://www.samakalam.com/மஹிந்தவின்-வீடு-தொடர்பில/
  4. சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? 1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மாவை. இப்போதுள்ள தமிழரசு கட்சித் தலைவர்களில் நீண்ட காலம் சிறையிருந்தவர் மாவைதான். இப்படிப்பார்த்தால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியல், ஆயுதப் போராட்ட காலகட்ட மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியல் ஆகிய மூன்று காலகட்டங்களின் ஊடாகவும் வந்தவர் மாவை. அதனால்தான் ஆயுதப் போராளிகள் மத்தியில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். தமிழ் மிதவாத தலைமைகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த காலகட்டங்களிலும் மாவை ஆயுதப் போராட்டத்தால் அதிகம் அச்சுறுத்தப்படவில்லை. அதற்கு அவருடைய குண இயல்பே காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியை கூட்டமைப்புக்குள் கொண்டுவர உழைத்தவர்களில் மாவை முக்கியமானவர். நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், வன்னியிலிருந்த கருநிலை அரசு, ஒப்பீட்டளவில் நம்பிக் கதைக்கின்ற தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக மாவை காணப்பட்டார். உயரமானவர்; பெருந்தேகி; பொறுமைசாலி; யாராலும் எளிதாக அணுகப்படக் கூடியவர்; யாரையும் பகைக்க விரும்பாதவர். எல்லாவற்றையும் எல்லாரையும் சமாளித்துக் கொண்டு போகக்கூடியவர். அதுதான்-சமாளிப்பு-அவருடைய பலம். அதுதான் அவருடைய பலவீனமும். 2009க்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு மிதவாத அரசியல். அது ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய நிலைமைகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய பண்புருமாற்றத்தைக் (transformation) கோரி நின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தைப் பிரதிபலிப்பாகவும் இருந்தது. ஆனால் 2009 இற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்க சம்பந்தரால் முடியவில்லை. சேனாதியாலும் முடியவில்லை. “சேனாதி” அப்படித்தான் சம்பந்தர் அவரை அழைப்பார். ஆயுதப் போராட்டமானது சிங்கள மக்களைப் பகை நிலைக்குத் தள்ளி விட்டது என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்கள மக்களின் பயத்தை, சந்தேகங்களை நீக்குவதன் மூலம்தான் ஒரு புதிய யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்றும் அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கட்சிக்குள் புதியவர்களைக் கொண்டு வந்தார். தன்னுடைய வழிக்குக் குறுக்கே நின்றவர்களை அகற்றினார். அல்லது அவர்கள் அகன்று போகத் தேவையான நிலைமைகளை ஏற்படுத்தினார். ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியலைக் குறித்து சரியாகவோ அல்லது பிழையாகவோ சம்பந்தரிடம் ஒரு தீர்மானம் இருந்தது. சம்பந்தர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேனாதி விட்டுக் கொடுத்தார். அதனால்,சம்பந்தரின் தவறுகளுக்கு அவரும் பங்காளியானார். சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக தோல்வி அடைந்த பொழுது சேனாதி தமிழரசு கட்சியின் தலைவராக தோல்வியடைந்தார். சம்பந்தரிடம் நல்லதோ கெட்டதோ தலைமைத்துவ பண்பு இருந்தது. ஆனால் மாவை சேனாதிராஜாவிடம் அது இருக்கவில்லை. சமாளிப்பதால் அவர் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமானவராக இருந்தார். ஆனால் கட்சியைக் கட்டிக் காக்க முடியவில்லை. இறுதி நாட்களில் நினைவு தடுமாறிய பொழுதுகளில் அவர் தன்னுடைய மகனுக்கு கூறிய வசனங்களில் ஒன்று “வழக்குக்குப் போக வேண்டும். ஃபைல்களை எடுத்து வை” என்பதுதான். ஒரு மூத்த மிதவாதி அவருடைய மரணத் தறுவாயில் நீதிமன்றம், வழக்கு என்று தத்தளிக்கும் மனதோடு உலகை விட்டுப் போயிருக்கிறார். மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் அவருடைய ஆவி தத்தளிக்குமா? இரண்டு அணிகளாகப் பிளவடைந்த ஒரு கட்சியை அவர் விட்டுப் போயிருக்கிறார். இப்பொழுது கூட்டமைப்பும் இல்லை தமிழரசுக் கட்சியும் ஒரு கட்டுக்கோப்பான நம்பிக்கையூட்டும் அமைப்பாக இல்லை. கட்சியின் தலைவராக மாவை தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபித்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் அவரால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான மிதவாத அரசியலை வழிநடத்தத் தேவையான தரிசனங்களும் இருக்கவில்லை; கொள்ளளவும் இருக்கவில்லை. சம்பந்தரிடமும் இருக்கவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்களிடமும் அது இல்லை. மாவையின் தோல்வி என்பது தமிழ் மிதவாத அரசியலின் தோல்வியும்தான். ஏனென்றால், ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்கத் தேவையான மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் போதிய அளவுக்கு எழுச்சி பெறவில்லை. ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான மிதவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்திற்கு தலைகீழாக எழுச்சி பெற்றிருக்கிறது. ஆயுதப் போராட்டத்தில் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் அடிப்படைத் தகுதிகளாக இருந்தன. ஆனால் 2009க்குப் பின்னரான மிதவாத அரசியலானது பெருமளவுக்குப் பிழைப்பாக மாறிவிட்டது. இந்தச் சீரழிவுக்கு மாவையும் பொறுப்பு. கட்சிக்குள் துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்திருந்தால் தமிழரசுக் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது. அவருடைய சமாளிக்கும் பண்பு கட்சியைச் சிதைத்தது மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவரைத் தோற்கடித்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் கடைசியாக அவர் எனது வீட்டுக்கு வந்தபோது அவரிடம் சொன்னேன் “அண்ண ஒரு சன்நியாசி மாதிரி முடிவெடுங்கோ. இனி நாடாளுமன்றத்துக்கோ அல்லது மாகாண சபைக்கோ போறதில்ல என்று முடிவெடுங்கோ. அப்படிப்பட்ட ஆசைகள் இல்லையென்றால் நீங்கள் யாருக்கும் பணியவோ, அல்லது யாரோடும் சுதாகரிக்கவோ வேண்டியிராது. ஆசைகளில்லாமல் ஓரு சந்நியாசி போல தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்புவதுதான் ஒரே பணி என்று உழையுங்கோ. அப்படி உழைத்தால் கட்சியும் உருப்படும் உங்களுடைய பெயர் ஏன்றென்றும் மதிக்கப்படும்” என்று. பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் அவர் என்னிடம் வருவதில்லை. பொது வேட்பாளருக்காக 2019 ஆம் ஆண்டு அவரை நல்லூர் சின்மயா மிஷினில் சந்தித்த பொழுது அவர் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயங்கினார். அவரோடு வந்த சிவிகே சிவஞானம் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஆனால் கடந்த நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆண்டு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்குமாறு மாவையைக் கேட்டபோது அவர் சொன்னார்.. ”பொது வேட்பாளர் ஏன் தேவை என்பதற்கு நீங்கள் கூறக்கூடிய காரணங்களை விட 10 மேலதிக காரணங்களை நான் கூறுவேன்” என்று. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக, வெளிப்படையாகக் காணப்பட்டார். அது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனினும் சுமந்திரன் அணியை எதிர்த்து அவர் துணிச்சலாக வெளிப்படையாக எடுத்த முடிவு அது. அவருக்கு நெருக்கமாக இருந்தவரும் பின்னர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவருமாகிய மன்னாரைச் சேர்ந்த சிவகரன் கூறுவதுபோல வழிப்போக்கர்கள் கட்சிக்குள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விட்டார்களா? ஆனால் உண்மையான பொருளில் அவர்கள் வழிப்போக்கர்கள் அல்ல. அவர்களைச் சம்பந்தரே தனது வழியைப் பலப்படுத்துவதற்காகக் கட்சிக்குள் கொண்டு வந்தார். அவர்கள் மிக நீண்ட மிதவாதப் பாரம்பரியத்தைக் கொண்ட மாவையை அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே தோற்கடித்து விட்டார்கள். அவருடைய வயதில் அரை மடங்கு வயதை கொண்ட கட்சி உறுப்பினர்கள் அவரை அவமதித்தார்கள். ஆனால் அவருடைய உடலுக்கு பெரும்பாலும் எல்லாக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் மதிப்பளித்தார்கள். சம்பந்தரைப் போலவே மாவையும் ஒரு தோல்வியுற்ற தலைவராகவே இறந்தார். ஆனால் சம்பந்தர் அளவுக்கு அவர் தமிழ்த் தேசிய ஆன்மாவுக்குத் தூரமானவர் அல்ல. https://www.nillanthan.com/7138/
  5. இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு adminFebruary 2, 2025 இந்திய வரவு -செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சனிக்கிழமை(01) இந்திய மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இவ்வாறு இலங்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வரவு- செலவு திட்டத்தில் ந்திய வெளியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் .அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2025/210642/
  6. தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 3) January 30, 2025 ‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு பதிலாக நட்பறவு ஒப்பந்தம்’ – பிரேமதாஸ முயற்சி ============== — வி.சிவலிங்கம் — இலங்கைக்கான இந்தியத் தூதுவராக 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை இந்திய முன்னாள் வெளிநாட்டுச் செயலர் ஜே என் தீக்ஷித் செயலாற்றினார். இவரே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவராக இருந்தார். இவர் தனது அனுபவங்களை ‘கொழும்பில் பணி’ (Assignment Colombo) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது நூலின் அட்டைப் படத்தில் ‘ஈழம் அல்லது மடிவோம்’ எனக் கூறியபடி புலியும், ‘சிங்களம் மட்டும்’ எனக் கூறியபடி சிங்கமும் முட்டி மோதுவதாக வரையப்பட்டிருந்தது. இந் நூலில் ‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை பக்கமாக ஒதுக்கி வைத்து’ (The Setting Aside of the Indo-Sri Lanka Agreement) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் இன்று மிகவும் பொருத்தமானவை எனக் கருத முடிகிறது. ஏனெனில் அன்று இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலைப்பாட்டினை எடுத்து இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயற்பாட்டில் இயங்கியது. அதனால் இலங்கை உள் விவகாரங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி இந்தியா உள்ளே நுழைந்தது. உள் நாட்டில் ஜே வி பி இனரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் போன்றன பல்முனை அழுத்தங்களாக அமைந்திருந்தன. ஆனால் தற்போது இலங்கை- இந்திய உறவுகள் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளன. கடந்த காலத்தில் இவற்றை எதிர்த்தவர்கள் அதிகாரத்தில் மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவுகளுக்கான புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் பிரேமதாஸ இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நட்புறவு ஒப்பந்தமாக மாற்ற எண்ணியது போல இன்றைய அரசும் அவ்வாறான புதிய யோசனைகளோடு பிரேமதாஸ அரசின் அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான புதிய பாதையை இன்று ஏன் வகுக்க முடியாது? இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் காலம் சென்ற ஜே என் தீக்ஷித் தந்த விபரங்களைப் பார்க்கலாம். ஜனாதிபதி பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகளை படிப்படியாக அகற்றுவதற்கான தளம் இந்திய சமாதானப் படையினரை அகற்றவும், மீண்டும் தமிழர்களுக்கெதிரான பூனை-எலி ஆட்டத்தைத் தொடரவும் உருவாக்கப்பட்டது. அப்போதைய வேளையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வவுனியா காட்டிற்குள் சுருங்கிய நிலையிலும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை காத்திரமான விதத்தில் ஒடுக்கிய இறுதி கட்டத்தை அடைந்திருந்தது. இத்தகைய பின் புலத்தில் பிரேமதாஸவிற்கு மூன்று பிரதான இலக்குகள் இருந்தன. அதாவது 1. ஏதாவது ஒரு வகையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை முறியடிப்பது. 2. இந்திய சமாதானப் படையினரின் செயற்பாடுகளுக்கு முடிந்தவரை தடைகளை ஏற்படுத்துவதுடன் விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆயுதங்களை வழங்குவது. 3. வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் வடக்கு- கிழக்கில் அமைந்த தமிழ் மாகாண சபை அரசை அகற்றுவது. என்பதே நோக்கமாக அமைந்தது. இவ்வாறு பிரேமதாஸ அரசின் உள் நோக்கங்களை அடையாளப்படுத்திய அவர் தனது இலக்குகளை அடைய மேற்கொண்ட உத்திகளைக் கூறுகையில் – 1989ம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தனது அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதன் மூலம் இந்தியப் படைகளுடனான முரண்பாடுகளை அகற்ற விரும்புவதாகவும் செய்தி அனுப்பினார். – இவற்றைத் தொடரும் வகையில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நிலைமைகளிலிருந்து பின்வாங்கத் தயார் எனவும், அரசியல் தீர்வு குறித்து அவர்களுடன் பேசவும் விருப்பம் தெரிவித்தார். இந்த இரகசியச் செய்தியின்படி 1989ம் ஆண்டு மார்ச் முதல் 1989ம் ஆண்டு யூலை மாத இடைக் காலத்தில் இந்தியப் படைகள் வெளியேறுவதற்கு ஏதுவாகவே திட்டங்கள் வரையப்பட்டன. இந்த இடைக் காலத்தில் இந்தியப் படைகளின் தாக்குதல்களை முறியடிக்க போதுமான ஆயுதங்களையும். உளவுத் தகவல்களையும் பரிமாறவும் செய்தி வழங்கப்பட்டது. அத்துடன் அப்போதிருந்த ஈ பி ஆர் எல் எவ் தலைமையிலான வடக்கு- கிழக்கு இணைந்த வரதராஜப் பெருமாள் தலைமையிலான அரசைக் கலைத்து விடுதலைப் புலிகள் தலைமையிலான நிர்வாகத்தை உருவாக்குவதும் பேசப்பட்டிருந்தது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தோற்றுவிக்கப்பட்ட மாகாண அரசைக் கலைப்பது தொடர்பான விவாதங்கள் இன்று ஆரம்பித்துள்ளதைப் போலவே அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் இவ்வாறாக இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாஸ அரசு, இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பதிலாக இலங்கை – இந்திய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை புதிய நிலமைகளின் பின்னணியில் உருவாக்கத் தாம் தயாராக இருப்பதாகச் செய்தி அனுப்பினார். இப் புதிய நிலமை என்பது இந்திய ஆதரவில்லாத இலங்கை அரசின் ஆதரவுடன் செயற்படும் ஓர் நிர்வாக அலகை வழங்குவதாகவே நாம் கொள்ளலாம். அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வு எனலாம். இவ் வரலாற்றினைப் படிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் இனவாத அரசியலோடு, தமிழ் பிரிவினைவாத அரசியல் இணையும் பின்புலங்களையும், இவ் இணைவின் பின்னால் உள்ள அரசியல் தீர்வு ஏற்பாடுகளையும் இன்றுள்ள நிலமைகளோடு பொருத்தி நோக்குதல் பயனளிக்கும். தேசிய இனப் பிரச்சனைக்;கான தீர்வுகளில் இடையூறினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் அவ்வாறான விரோத சக்திகள் தொடர்ந்து செயற்படுகின்றன. இவை வரலாறு என்பதை விட பாடங்கள் என்பது பொருத்தமாக அமையும். பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் ஏற்படுத்திய உறவுகள் வரதராஜப் பெருமாள் அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசு வரதராஜப் பெருமாள் அரசுடன் படிப்படியாக உறவுகளைத் துண்டித்தது. மாகாண ஆளுனர் தனது அதிகாரத் தலையீட்டினைப் படிப்படியாக அதிகரித்தார். ஒரு புறத்தில் இந்த மாகாண அரசைப் புறக்கணித்த பிரேமதாஸ மறு பறத்தில் இந்த மாகாண அரசில் செயற்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் உறுப்பினர்களுக்கு இன்னொரு செய்தியை வழங்கினார். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு இனிமேல் தொடராது எனவும், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நலன்கள் தமிழர்களால் தலையீடு ஏற்படாத வகையில் புதிய அதிகார பரவலாக்கத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற செய்தியையும் பகிர்ந்தார். இச் செய்தியின் மூலம் மாகாணசபையின் செயற்பாடு மிகவும் திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டது. இவ்வாறான ஒரு மாற்று ஏற்பாடு இனியும் சாத்தியப்படுவதற்கான பின்புலங்கள் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம். இதன் விளைவாக இந்திய சமாதானப்படையின் செயற்பாடுகளும் நெருக்கடியான கட்டத்தை அடைந்தன. இருப்பினும் இலங்கை – இந்திய உறவுகள் குறித்து இரண்டு அரசுகளும் பேசி முடிவுகளை எட்டும் வரை இந்தியப் படைகள் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயற்படுவது என இந்தியா தீர்மானித்தது. இந்த இடைக் காலத்தில் அதாவது 1989ம் ஆண்டு யூலை 2 முதல் 11ம் திகதி வரையான காலப் பகுதியில் 7 கடிதங்கள் பரிமாறப்பட்டன. இக் கடிதங்களின் சாராம்சம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலுள்ள விரிசல்களை உணர்த்தியது. பிரேமதாஸ இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் பற்றிய கரிசனையை விட குறிப்பாக, இலங்கை இனப்பிரச்சனைகளுக்கான தீர்வை விட இந்திய ஆதிக்கத்தை முறியடித்துள்ளதாக செய்தியை வெளிவிடுவதில் கவனம் செலுத்தினார். இந்த முறுகல் நிலையை விடுதலைப்புலிகள் நன்கு பயன்படுத்தினர். முடிந்தவரை வன்முறைகளை ஆழப்படுத்தினர். வரதராஜப் பெருமாள் மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நிலையில் ‘தமிழர் தொண்டர் படை அல்லது தமிழ் தேசிய இராணுவம்’ ஒன்றினைத் தோற்றுவித்து மக்களையும், மாகாண அரசையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன் இலங்கை அரசு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுமாயின் மாற்று ஏற்பாடாக அந்த ஒப்பநதத்தின் பிரகாரம் வடக்கு – கிழக்கு மாகாணம் சுயாதீன நாடாக ‘ஈழம்’ எனப் பிரகடனம் செய்யும் வழிமுறையைத் தவிர மாற்று வழியில்லை என அறிவித்தார். இவை விடுதலைப்புலிகள் – இலங்கை அரசின் புதிய உறவின் பின்னணியை உணர்த்தின. இவை யாவும் 1989 ம் ஆண்டு யூலை முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் நடந்தேறின. இந்தியப் படைகள் யூலை 31ம் திகதிக்கு முன்னர் திரும்பாவிடில் இந்தியப் படைகளுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்யப் போவதாக பிரேமதாஸ தெரிவித்தார். அத்துடன் இந்தியப் படைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் படைகளை விலக்கிக் கொள்ளாவிடில் தாமே இந்திய சமாதானப் படையின் தளபதியாகவும் அறிவிக்கப் போவதாகப் பயமுறுத்தினார். இந்தியப் படைகள் விலகுவதற்கு ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நிலையில் அப் படைகளின் தளபதியாக அறிவிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும், விடுதலைப்புலிகளுடன் பகிரங்கமாக பேச்சவார்த்தைகளை நடத்திய நிலையில், அதற்குப் போதுமான ஆதரவு வழங்கிய நிலையில் இந்திய சமாதானப் படையின் தளபதி என அறிவிப்பதில் எவ்வித நியாயப்பாடும் இல்லை என இந்தியா தெரிவித்தது. ஜனாதிபதி பிரேமதாஸ இவ்வாறு செயற்படுகையில் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னணியை நாம் தற்போது புரிந்து கொண்டால் இன்றைய அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உய்த்துணர முடியும். ஏனெனில் இரு நாடுகளிலும் ஏற்படும் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜிவ் காந்தி தேர்தலை எதிர் நோக்கினார். இருந்த போதிலும் இலங்கைக்கும், இலங்கைத் தமிழருக்கும் முடிந்த வரையில் எதுவித திணிப்பும் இல்லாத தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ராஜிவ் காந்தி இருந்ததாக குறிப்பிடும் தூதுவர், பதிலாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழங்கிய வாய்ப்புகளைக் கைவிட்டு, இந்திய சமாதானப் படையின் உதவிகளை உதறித் தள்ளி இவர்கள் தொடர்ந்தும் இக் குழப்பத்தில் தொடர்ந்தும் வாழவேண்டும் என எண்ணுவார்களாயின் இன்னும் பல குழப்பங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் கருதினார். பிரேமதாஸ- விடுதலைப்புலிகளின் தற்காலிக உறவு ஜே வி பி இன் அச்சுறுத்தலை ஒழிக்கவும் பின்னர் விடுதலைப்புலிகளைக் கையாளலாம் என்ற அடிப்படையிலேயே ஆரம்பித்தது. ஜே வி பி இன் அச்சுறுத்தலை ரஞ்சன் விஜேரத்ன திறமையாகக் கையாண்டு சிங்களப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்திய போதிலும் பௌத்த பிக்குகள் பிரேமதாஸ அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மிகவும் சந்தேகக் கண்கொண்டே நோக்கினர். அதே போலவே தமிழர்களும் பிரேமதாஸவின் அணுகு முறைகளில் சந்தேகம் கொண்டிருந்தனர். தாம் பாகிஸ்தானில் தூதுவராக செயற்பட்டபோதும் ஜே ஆர் அரசின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தன்னுடன் தொடர்பு கொண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் முற்றாக அமுல்படுத்தப்படும் வரை படைகளை விலக்க வேண்டாமென தன்னிடம் கூறியதாக தூதுவர் தெரிவிக்கிறார். இவை பற்றி ராஜிவ் காந்தியுடன் உரையாடிய வேளையில் பிரேமதாஸ ஓர் குழப்பமான நிலையில் உள்ளதாகவும் இருப்பினும் இந்தியப் படைகள் 1990 இன் இறுதியில் முழுமையாக விலகுவார்கள் எனவும், இந்தியப் படைகள் முழுமையாக தடைகள் எதுவும் இல்லாமல் செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், பிரேமதாஸ அரசு மாகாண அரசின் சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்திருந்தால் நிலமைகள் மாறியிருக்கலாம் எனவும் தெரிவித்து தாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முடிந்தவரை அமுல்படுத்த எண்ணியிருப்பதாகவும், பிரேமதாஸ அரசு தொடர்ந்து தடைகளைப் போடுமாயின் பிரேமதாஸவும், இலங்கைத் தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கூறியதாக தீக்ஷித் கூறுகிறார். நாம் இவ்வாறான ஒரு கட்டத்தை தற்போது நெருங்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. பிரச்சனைகளின் பின்புலங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் நிலமைகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் முடிவு என்பது இந்தியா இப் பிரச்சனையைக் கைவிடவும் தயாராக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளலாம். இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவதற்கு அதன் பூகோள அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்தலாம். ஆனால் இத் தேவைகள் என்பது இலங்கையில் நிலையான இந்திய நலன்களுக்கு விரோதமில்லாத அரசு ஒன்று இலங்கையில் அமைவதையும் அது உறுதி செய்தல் வேண்டும். அது இலங்கைத் தமிழர்களின் நல்லெண்ணத்துடன் தோற்றம் பெறுவதும் விரும்பத்தக்கது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது தெளிவற்றதாகத் தொடருமானால் அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் பார்வை இனவாத அரசியலிற்கு அப்பால், இந்திய நலன்களை அனுசரித்துச் செல்லுமானால், இந்திய முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து பொருளாதார தங்குநிலை மேலும் அதிகரிக்குமானால் தமிழர் பிரச்சனையை மட்டும் வைத்து இந்திய பூகோள அரசியல் நலன்கள் செல்லும் எனக் கருத முடியாது. தமிழர் தரப்பின் அரசியல் கருத்தோட்டம் என்பது வெறும் உணர்வுகளால் கட்டமைக்கப்படுகின்றன. உள் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் நிலவும் அரசியல் என்பது மாறிவரும் உலக அரசியல் பார்வைகளின் பெறுபேறுகளிலிருந்து உருவானதாக இல்லை. குறிப்பாக, தமிழ் அரசியல் என்பது சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதத்தின் எதிர்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றே. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஜனாதிபதி அநுரவின் கருத்துப்படி இனவாதமே தமிழ் அரசியலின் போக்கையும் கட்டமைக்கிறது. இனவாதம் என்பது தேர்தல் அரசியலின் ஒரு குணாம்சமாக மாறிய நிலையில் அதுவே தமிழ் அரசியலின் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. இங்கு தேர்தல் அரசியலின் அடிப்படைகளில் மாற்றங்கள் தேவையாகிறது. இங்கு பிரேமதாஸ அரசின் இன்னொரு வரலாற்று அம்சத்தை நோக்கலாம். இதுவும் 13வது திருத்தம், மாகாணசபை நிர்வாகம் என்பனவற்றின் எதிர்காலம் குறித்த இன்றைய விவாதங்களுக்குப் பொருத்தமாக அமையலாம். ஏனெனில் தமிழர் தரப்பில் காணப்பட்ட இந்திய சமாதானப் படைகளுக்கெதிரான கருத்துக்கள் என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கண்ணோட்டத்தில் அணுகப்படவில்லை என்பதை தீக்ஷித் இன் பின்வரும் கருத்துக்கள் உணர்த்துகின்றன. அவை அப்போதைய சூழலில் வெளிவராமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று வரை இந்திய சமாதானப் படைகளின் வருகை, அதன் சாதக, பாதகம் குறித்த தெளிவான கருத்துகள் இன்னமும் தமிழ் அரசியலில் இல்லை. 1989ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியத் தேர்தலில் ராஜிவ் அரசு தோல்வி அடைந்தது. ஆட்சிக்கு வந்த வி பி சிங் தலைமையிலான அரசு தமது முதலாவது வெளி விவகார கொள்கைப் பிரகடனத்தில் சமாதானப்படையினரை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதாகவும், அதுவும் 1990 ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி விலகல் முடிவடையும் எனவும் அறிவித்தது. இந்த அறிவித்தலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாஸ அரசுக்குமிடையேயான உறவு உச்ச நிலையை எட்டியது. 1990ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கிடையில் அவை மிகவும் துரிதமடைந்தன. பிரபாகரனின் மனைவி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வர இலங்கை அரசு சகல உதவிகளையும் வழங்கியது. அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான அரசியல் பேச்சுவார்த்தைகள் துரிதமடைந்தன. முன்னாள் அமைச்சர் ஏ சி எஸ் ஹமீட் விடுதலைப்புலிகளுடன் பேசும் முக்கியஸ்தராக நியமிக்கப்பட்டார். புலிகள் தரப்பில் யோகியை உதவியாளராகக் கொண்ட மாத்தையா தலைமையில் குழு தயாராகியது. இப் பேச்சுவார்த்தைகளில் இந்திய சமாதானப் படைகளின் விலகலின் பின்னர் வடக்கு- கிழக்கில் புதிய தேர்தல் முடிவடையும் வரை சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக கிழக்கில் குறிப்பாக திருகோணமலைப் பகுதியில் இந்திய ராணுவம் அங்கு வெளியேறுவதற்குத் தயாராக இருந்த போதிலும் அங்கு தீவிர பாதுகாப்பில் புலிகள் ஈடுபட்டனர். இம் மாற்றங்கள் யாவும் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருந்தன. அவர் பிரதமர் வி பி சிங் அவர்களை நேரில் சந்தித்து நிலமைகளை விளக்கிய போதிலும் அவரின் எதிர்காலத்திற்கு அல்லது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் குறுகிய ஆயுளே இருந்தது. ஏனெனில் புதிய இந்திய அரசு இப் பிரச்சனை என்பது முற்றிலும் தவறான வகையில் ராஜிவ் அரசு கையாண்டிருந்தது என்பதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக வராதராஜப் பெருமாளின் அரசு 1989 ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முற்றாக முடங்கியது. இந்திய தூதரகம்கூட கையை விரித்தது. குறிப்பிட்ட திகதியில் இந்தியப் படைகள் தமிழ் நாட்டைச் சென்றடைந்த போது அங்கிருந்த தமிழ்நாடு அரசு அப் படையினரை நடத்திய விதம் குறித்து தெரிவிக்கையில் இந்திய அரசின் பாரிய பூகோள அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசின் உத்தரவின் பேரில் சென்ற சமாதானப்படையினரை அதுவும் பல நூறு வீரர்கள் மரணத்தைத் தழுவியும், பாரிய காயங்களோடும் சென்றடைந்த நிலையில் அங்கிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ‘தமிழரைக் கொல்லும் இந்தியப் படை’ (Indian Tamil Killing Force) என வர்ணித்ததாக தெரிவிக்கிறார். இந்திய அரசாங்கத்தின் உத்தரவை நிறைவேற்றச் சென்ற அதே நாட்டின் படைகளை மிகவும் கீழ்த் தரமாக நடத்தியதாக வருந்துகிறார். இங்கு இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார் அதாவது தமிழ் நாடு அரசின் செயற்பாடு. அடுத்ததாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடு என்பனவாகும். தமிழ்நாடு அரசின் இன்றைய நிலை என்ன? மத்திய அரசின் பிரதான பங்காளிக் கட்சியாக, இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிகவும் கணிசமான பாத்திரத்தைத் தற்போது வகிக்கிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு எதிர் காலத்தில் எவ்வாறான பாத்திரத்தை வகிக்கும்? போன்ற பல கேள்விகள் இன்று எழுகின்றன. அத்துடன் தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்நாடு அரசுடன் அல்லது மத்திய அரசுடன் முன்னரைப் போல் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதா? இந்திய சமாதானப் படையினரின் விலகலின் பின்னர் ஏற்கெனவே உறுதியளித்தவாறு பிரேமதாஸ அரசு பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ள விதத்தில் தொடரவில்லை. இதன் விளைவாக முறுகல் நிலை மீண்டும் ஆரம்பமானது. பிரேமதாஸ அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான உறவு நிலை குறித்து சிங்கள அரசியலில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் பிரேமதாஸ பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கினார். மாகாண நிர்வாகத்தை அரசு பொறுப்பேற்றது. இதன் மூலம் அவரது பிரதான இலக்குகளில் ஒன்று நிறைவேறியது. இருப்பினும் ஐ தே கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன. இதனால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லாதொழிந்தன. மேற்குறித்த வரலாறு இந்திய, இலங்கை ஆட்சிக் கட்டுமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவேயாகும். குறிப்பாக, வி பி சிங் தலைமையிலான அரசு பின்வரும் முடிவுகளை எடுத்திருந்தது. – இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டது தவறானது. – ராஜிவ் காந்தி – ஜே ஆர் தலைமையிலான இலங்கை- இந்திய ஒப்பந்தம் உரிய விதத்தில் தயாரிக்கப்படவில்லை எனவும், அதன் விளைவாகவே இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டன. – இந்திய சமாதானப் படையினரை இலங்கைக்கு அனுப்பியது அந் நாட்டின் உள் நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகும். – மேற்கூறிய நிலமைகளை அவதானிக்கும் போது இலங்கை விவகாரங்களிலிருந்து வெளியேறுவது, சமாதானப் படையினரை அழைப்பது என்பதே தீர்வாக அமையும். இம் முடிவுகளை அன்றைய வி பி சிங் அரசு எடுத்திருந்ததாக தீக்ஷித் தெரிவித்த வரலாற்றினை இன்றைய நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பது மிக அவசியம். குறிப்பாக அரசு மாற்றங்கள் ஏற்படினும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு அவதானிக்கையில் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற முடிவு இன்றுள்ள அரசியல் புறச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்தில் காணப்பட்ட பூகோள அரசியல் நிலமைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இந்திய- அமெரிக்க உறவுகள் மிகவும் பலமாக உள்ளன. தனது அயல் நாடுகளுடன் உறுதியான நட்புறவைப் பேணுதல் மற்றும் உதவி வழங்குவதில் முதலிடம் என இந்தியா கூறுகிறது. தமிழ்நாட்டில் ‘தொப்புள் கொடி உறவு’ என்ற பெயரில் நடத்திய அரசியல் இன்று இல்லை. தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மிக முக்கியமான அங்கமாக பல வகைகளில் செயற்படுகிறது. இலங்கையும் சர்வதேச பூகோள அரசியல் போட்டிச் சூழலில் பக்கச்சார்பு இல்லாமல் செயற்படுவது என எண்ணுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய – இலங்கை பொருளாதார உறவுகள் மிகவும் பலமடைந்து கப்பல் போக்குவரத்து, பாலம் கட்டுவது, விமானப் போக்குவரத்து, மின்சார பரிமாற்றம், நவீன தொழில்நுட்ப அறிவியல் பங்களிப்பு என வளர்ந்து செல்கையில் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் மாற்றமடைய வாய்ப்பு உண்டு. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்;றம் என்பது மிகவும் ஆரம்ப நிலையில் காணப்படினும், அரசின் கொள்கைப் பிரகடனங்கள், அக் கட்சியின் செயற்பாடுகள் போன்றனவற்றை ஆராயும்போது அடிப்படை மாற்றங்களின் தேவை புரியப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆட்சியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் அடிப்படை மாற்றத்திற்கான அவா வெளிப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆட்சியாளர் எதிர்பாராத அளவிற்கு மக்கள் தமது நம்பிக்கையை 2024ம் ஆண்டு தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமிழ் மக்களும் கணிசமான பிரிவினர் ஆகும். தமிழ் அரசியலில் பாரிய அடிப்படை மாற்றங்களுக்கான ஆர்வம் வெளிப்படா விடினும் கடந்த தேர்தலில் தமிழ் சமூகத்திலுள்ள பின் தங்கிய பிரிவினர் மிகவும் தெளிவாகவே தமது தெரிவுகளை வெளியிட்டுள்ளனர். இம் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதற்கான சமூக கட்டுமானங்களையும், குறிப்பாக சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையும் விதத்திலான பொருளாதார சமூகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தும் விதத்தில் செயற்படுதல் அவசியம். ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு இனவாதம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் போன்றன சமூகப் பிளவுகளைத் தோற்றுவிக்க இடமளிக்காமல் விழிப்போடு செயற்பட வேண்டும். எனவே இலங்கை அரசியலில் தோற்றம் பெறும் அடிப்படை மாற்றங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் புதிய அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான வழிமுறைகளை புதிய வழிகளில் படிப்படியான மிகவும் விட்டுக் கொடுக்காத, சாத்தியமான கொள்கைகளை நோக்கிச் செயற்பட வேண்டும். அதேவேளை ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார வளர்ச்சிக் கட்டுமானத் திட்டமிடுதலில் தமக்கான பங்கைச் செலுத்தும் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் சமாதான சகவாழ்வே அடிநாதமாக அமைதல் அவசியம். https://arangamnews.com/?p=11744
  7. நித்தி எங்கே இருக்கிறார்? தமிழக அரசு பதில்! Jan 31, 2025 நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சனையாக தான் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சர்ச்சை சாமியாரான நித்யானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர் இன்றுவரை எங்கிருக்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் யூடியூப் சேனல்களில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கிருந்து வீடியோ வெளியிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதுவும் புரியாத புதிர்தான். க்ரீன் ஸ்கீரின் மூலம் வேறு எங்கேயோ இருந்து வீடியோ வெளியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. என்ன வழக்கு! நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தேவாரண்யம் ஸ்ரீபோ. கா. சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பாலசுவாமி சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பான உரிமையியல் வழக்குகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 4 மடங்களுக்கும் தக்காரை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அறநிலையத் துறையின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி நித்யானந்தா மனுவை தள்ளுபடி செய்தார். ஈகுவடாரில் நித்தி இதை எதிர்த்து நித்யானந்தா மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜனவரி 31) விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், “நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்” என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், நித்யானந்தா, பிரேமானந்தா ஆத்மானந்தா என்றாலே பிரச்சனை தான். நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் தலையிட முடியாது” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். https://minnambalam.com/tamil-nadu/where-is-nithyanandha-tn-govt-answer/
  8. ‘’டொலரை நிராகரித்தால் 100% வரி’’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை February 1, 2025 8:43 am டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகதளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை விட்டு விலகிச்செல்ல முயற்சிக்கின்றன. நாங்கள் அதை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிந்துவிட்டது. எதிரிகளைப் போலத் தோன்றும் அந்த நாடுகளுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம். அதாவது அவர்கள் புதிய பிரிக்ஸ் கரன்ஸியை உருவாக்கக் கூடாது அல்லது டாலருக்கு நிகராக மற்றொரு கரன்ஸியைத் தேடக் கூடாது, இல்லையென்றால் 100 சதவீத வரிவிதிப்பைச் சந்திக்க நேரிடும் அல்லது மகத்தான அமெரிக்க பொருளாதாரத்தில் வியாபாரம் செய்யும் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டும் என்பதே அது.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2024 டிசம்பரில் ரஷ்யா, ‘பிரிக்ஸ் நாடுகளை டாலரைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கையும், தேசிய பணத்தின் தேவையை வலுப்படுத்தும் ’ என்று தெரிவித்திருந்தது. இதனிடையே, அட்லாண்டிக் கவுன்சிலின் புவிபொருளாதார மையம் நடத்திய கள ஆய்வில், முதன்மை கையிருப்பு பணமாக அமெரிக்க டாலரை உலக அளவில் நம்பியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலரை மதிப்பு நீக்குவதில் யூரோ மற்றும் மாற்று பணத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தக் குழுவுக்கென தனியாக பொதுப்பணம் இல்லை. உக்ரைன் போருக்கு பின்பு, ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் பொது பணத்துக்கான பேச்சுக்கள் எழுந்துள்ளது. அதேபோல், அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாலும், வரிவிதிப்பு மற்றும் பணவியல் கொள்கைகளில் ஏற்படும் மாற்றம் புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக டாலருக்கு நிகரான உந்துதல் அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்பின் வரிகள்: சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஒப்பியாய்டுகள் போன்ற போதை வஸ்துக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கு பிப்.1ம் தேதி முதல் 25 சதவீதம் வரிவிக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின் பங்கு இருப்பதாய் கூறி அந்நாட்டின் இறக்குமதி பொருள்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/100-tax-if-you-reject-the-dollar-trump-warns-brics-countries/
  9. சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நா.க. தமிழீழ அரசாங்கம் அறைகூவல் சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப் பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும். சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படவோ, நிறுத்தப்படவோ அல்லது பெளத்த மயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை. இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாக பிரகடணப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவது போல் இம்முறையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி, பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிநிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப் பட்டிகள் அணிந்தும், கறுப்புக் கொடிகளை ஏந்தியும், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவுப்பதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், தாய்மாரின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது. மேலும் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக் கொள்வதுடன், புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோரின் இணையவழி கண்டன எதிப்பு கருத்தாடல் நிகழ்வு பெப்ரவரி 4 இல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐரோப்பிய, கனேடிய இளையோர் பங்கு பற்றுவது குறிப்பிடத்தக்கது. சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=310366
  10. சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன் January 31, 2025 நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் “சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்” நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார பெருவீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான சில வரலாற்று வழிகாட்டல் ஈழத்தமிழர் இறைமையை இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே நிதியுடன் ஆட்சிப்படுத்தியமை ஈழத்தமிழர் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட வரலாற்றின் முதல் தொடக்கமாகவுள்ளது. சேர். கியூ கிளக்கோன் (Sir Hugh Cleghorn) இலங்கைக்கான முதலாவது காலனித்துவ செயலாளர், தனது 1799ம் ஆண்டு ‘கிளக்கோன்’ அறிக்கையில், “இருதேச இனங்கள் இலங்கைத் தீவின் நிலத்தை இரண்டாகக் கூறுபோட்டுத் தமக்குள் வைத்துள்ளனர். தெற்கின் உட்பகுதியிலும் மேற்குப் பகுதியில் வளவை ஆறுமுதல் சிலாபம் வரையும் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.மலபார்காரர்கள் (தமிழர்களுக்கு அரபுநாட்டு வணி கர் அல்பரூனி அறிமுகம் செய்த சொல். தமிழையும் மலபார் மொழி என்றே அரபு நாட்டவர் வழி போர்த்துக்கேயர் முதல் முதற்கட்ட ஆங்கில ஆளுநர்களான சேர் றொபெர்ட் பிறவுணிங், சேர். எமேசன் ரெனென்ற் ஆகியோரும் பயன்படுத்தினர் என்பது முனைவர் காரைசுந்தரம்பிள்ளை அவர்களின் வடஇலங்கை நாட்டார் அரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முனைவர் பட்ட நூலில் 140வது பக்கத் தகவல் ) இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களை தமதாகக் கொண்டிருக்கின்றனர். இந்த இருதேச இனங்களும் தங்களின் மதம், மொழி, நடத்தைகள் என்பவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை. தமிழக – ஈழத்தமிழர்களை தமிழினத்தைக் குறிக்கும் மலபார்களாகவே கருதி 1796 முதல் 1802 வரை ஈழத்தையும் தமிழகத்தையும் ஒரே ஆட்சி அலகாக ஆட்சி செய்தமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறது. வடக்கின் நாகதீப ஆட்சி மேற்கில் சிலாபத்தில் இருந்து கிழக்கே திருகோணமலை வரை இருந்த ஆட்சிப்பிரதேசம் என கி.பி. 2ம் நூற்றாண்டின் யாத்திரிகரான பிலோமி (Ptolemy) குறித்தமை 1799 இலும் கிளக் கோனின் அறிக் கையிலும் உறுதியானது முக்கியமான விடயமாக உள்ளது. சேனன் குடிக்கன் தமிழ் அரசர் ஆட்சிகள் கி.மு 177-155 இல் நிலவியமை பற்றிய குறிப்புக் களும் தமிழ் அரசன் எல்லாளன் அநுராதபுரத்தில் ஆட்சியினை கி;மு 145-101 வரை ஆட்சிப்படுத்திய வரலாற்றுக் குறிப்புக்களும். மகாவம்சத்தின் 24வது அதிகாரத்து சிங்கள அரசு குறித்த தொன்மத்திலும் கூட துட்டகைமுனு தனது தந்தைக்குப் போர் பிரகடனம் செய்தைக் கூறிய பொழுது அவர் மகாகங்க என அழைக்கப்பட்ட இன்றைய மகாவலி கங்கைக்கு அந்தப் புறத்தில் தமிழர்கள் ஆளட்டும் இந்தப் புறத்தில் நாங்கள் ஆளுவோம் எனச் சமரசம் செய்ய முயன்ற குறிப்புக்களும் கூடவே துட்டகைமுனு தென்கிழக்கில் மகியங்கனையை ஆண்ட சாத்தன் என்ற தமிழரசனை வென்று தொடர்ந்து 31 தமிழ்ச் சிற்றரசர்களை வென்று அநுராதபுரத்தில் எல்லாளனுடன் போருக்கு வந்தான் எனக் கூறியிருப்பதும் ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகமாக வடக்கு கிழக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்துள்ளமைக்கான மக்கள் வரலாற்று நினைவுகளாக உள்ளன. ஆயினும் கி. பி 1214 முதல் கி.பி 1621 வரை 407 ஆண்டுகள் யாழ்ப்பாண அரசு ஈழத்தமிழர்களின் அரசாக சமகால வரலாற்றில் நிலைபெற்றிருந்து 1505இல் கோட்டே சிங்கள அரசில் போரத்துக்யேர் உடைந்த கப்பலைப் பழுதுபார்க்கக் கால்வைத்து கோட்டே அரசைக் கைப்பற்றிய பொழுது கோட்டே அரசன் விதியபண்டாராவுக்கு நல்லூரில் யாழ்ப்பாண அரசு அரசியல் புகலிடம் கொடுத்துப் பாதுகாத்ததும். அச்சமயம் விதியப்பண்டார வெடிமருந்து தயாரிப்பில் மரணம் அடைந்த பொழுது அவருக்கு பூதவராயர் நடுகல் கோயிலை அமைத்துத் தமிழர் பண்பாட்டு முறையில் வீர வணக்கத்தை யாழ்ப்பாண அரசு செய்தமை சிங்களவர்களுக்கான பாதுகாப்புத் தோழமையாக வும் யாழ்ப்பாண அரசு விளங்கியது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளாக உள்ளது. வடஅமெரிக்க முஸ்லீம் யாத்திரிகரான இபின் பட்டுடா 1344 இல் யாழ்ப்பாண அரசரான ஆரியச் சக்கரவர்த்தியினைச் சந்தித்த பின்னர் அவருடைய அரண்மனையின் பிரமாண்டத்தையும் அனைத்துலக வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பல் அணிகளின் பெருக்கத்தையும் அரசரின் அனைத்துலகத்தவரை வரவேற்று விருந்தளி த்து மதிப்பளிக்கும் பெரும்பண்பையும் வியந்து பாராட்டியமையும் இவ்விடத்தில் மீள்நினைவு படுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. மேலும் 1802 இல் நெதர்லாந்துடன் பிரித்தானியா செய்து கொண்ட அமீன்ஸ் உடன் படிக்கையின் படி (Treaty of Amiens, Holland) இலங்கைத் தீவு பிரித்தானியா முடிக்குரிய அரசாக மாற்றப்பட்டதன் பின்னர் அடுத்து வரும் 30 ஆண்டுகளும் பிரித்தானியா காலனித்துவ அரசாங்கம் ஈழத்தமிழர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் சிங்களவர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் தனித்தனியான அலகுகளாகவே ஆட்சிப்படுத்தினமை இலங்கைத் தீவில் இரு இறைமையுள்ள அரசுக்களை பிரித்தானியாகைப் பற்றியது என்பதற் கான வரலாற்றுச் சான்றாக உள்ளது. இக்காலத்தில் 10.07. 1813இல் பிரித்தானியா தனது சிலோன் அரசாங்கத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் பயன்படுத்த வேண்டிய மொழிகள் குறித்து சிந்தித்த பொழுது அக்காலத்து தனியான யாழ்ப்பாணப் பட்டினத்துக்கும் கரையோரச் சிங்களப் பகுதிகளுக்கும் பிரித்தானியா ஆளு நராக இருந்த சேர். ரெபேர்ட் பிறவுணிங் அவர்கள் காலனித்துவச் செயலாளருக்கு அனுப்பிய நெறிப்படுத்தல் கடிதத்தில் “ தமிழ்மொழி போத்துக்கேயத்துடன் கலந்து எல்லா மாகாணங் களிலும் வழக்கில் உள்ளது. புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு அடங்கலாக வடக்கு முழுதும் தாய்மொழியாக உள்ளது. எனவே நான் தமிழ் மொழியையும் சிங்களத்துடன் சமமாகப் பயன் படுத்தம்படி ஆணைப்படுத்துவதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். இதனை நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் என எண்ணு கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தமை தமிழும் சிங்களமும் இலங்கைத் தீவு முழுவதும் மக்களின் வழக்கு மொழியாக இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றாக உள்ளது. கடைசி நாலு அரசர்களையும் தமிழர் களாகவே கொண்டிருந்த கண்டி சிங்கள அரசை 1815இல் பிரித்தானிய காலனித்துவ அரசு கைப் பற்றியதன் பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வன்னித் தமிழரசின் கடைசி மன்னனான பண்டார வன்னியன் 31.10. 1832 இல் கற்சிலை மடுவில் உயிரிழந்த பின்னரே 1833இல் பிரித்தானியரால் தாம் விரும்பியவாறு தங்களின் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதுவரை இலங்கைத் தீவின் வரலாற்றில் என்றுமே இருந்திராத “சிலோன்” என்னும் செயற்கையான ஒற்றையாட்சி கொண்ட அரசு ஒன்றையும் செயற் கையான தேசியமான “சிலோனிஸ்” தேசியம் ஒன்றையும் பிரித்தானிய காலனித்துவ அரசால் தமிழ் சிங்கள மக்களின் விருப்பின்றி உருவாக்க முடிந்தது என்பதும் இலங்கை தீவின் வரலாறாக உள்ளது. 1833இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங் கம் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்ததின் மூலம் பிரித்தானியர்களின் இலங்கைகான சட்டசபைக்கு சட்டவாக்கத்தில் நிர்வாகத்தில் பரிந்து ரைகள் வழங்குவதற்கு இலங்கையர்களை தாம் நியமனம் செய்து உள்நாட்டு மக்களை ஆட்சிப் படுத்தலை இலகுவாக்க முனைந்த பொழுது தமிழர்களின் தேச இனத்தன்மையையும் ( Tamil Nation), சிங்களவர்களின் தேச இனத்தன்மையையும் (Sinhala Nation) சமத்துவப்படுத்தி இரு தேச இனங்க ளில் இருந்தும் ஒவ்வொரு உறுப்பினர்களை நியமித்தமையும் வரலாறு. கோல்புறூக் கமரோன் அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது ஆறுமுகநாவலர்க்கு 11வயது. அடுத்த ஆண்டில் 1834இல் இவருடைய தந்தையார் பல கிறிஸ்தவ நாட்டுக் கூத்துக்களை தமிழ்ப்படுத்திய வகையில் கிறிஸ்தவர்களிடை பெற்ற மதிப்பின் பின்னணியில் பீற்றர் பார்சிவல் பாதிரியாரின் யாழ் வெல்சியன் மிசன் கல்லூரிக்கு (பின்னர் யாழ் மத்திய கல்லூரியாகியது) ஆங்கிலம் கற்கச் சென்று ஆங்கிலத்திலும் கிறிஸ்தவத்திலும் பழக்கப்படுகின்றார். 19 வயதில் தமிழ் ஆங்கில ஆசிரியராக மட்டுமல்லாது பீற்றர் பார்சிவல் பாதிரியாரின் தமிழ்ப் பண்டிதராகவும் பரிணாம டைந்து பைபிளின் தமிழ்மொழியாக்கக் குழுவி லும் பங்கேற்கின்றார். ஆயினும் 24 வயதில் அம்பலவாண முதலியாருடன் சென்னை சென்று அங்குள்ள பள்ளிகளைப் பார்வையிட்டதன் பின்னர் 1847டிசம்பர் 31ம் நாள் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து முதன்முதலாகச் சைவப்பிரசங்கம் தொடங்கு கின்றார். இந்த கிறிஸ்தவ மத எதிர்ப்பை சைவப் பண்பாட்டு மீட்பாக முன்னெடுக்கத் தொடங்கிய ஆறுமுகநாவலர் 1879 மே மாதம் 22ம் திகதி பிரித்தானிய சட்டசபைப் பிரதி நிதியாக 1833 முதல் 1879 வரை இருந்த சேர். முத்துக்கமாரசுவாமி அவர்களின் இடத்துக்கு அவரின் உறவினரான சேர். பொன்னம்பலம் இராமநாதனை நியமிக்க வேண்டுமென மக்கள் மத்தியில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் உரையாற்றிய பொழுது “தமிழரைத் தமிழர் அல்லாதவர் ஆளக்கூடாது” என்ற ஈழத்தமிழர் தேசியத்தன்மையை வெளிப் படுத்தினார். இதனாலேயே பேராசிரியரி கைலாசபதி அவர்கள் தனது பொதுவுடைமை நிலைப் பாட்டையும் கடந்து ஆறுமுகநாவலரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தையென வரைவுசெய்தார். இதனால் “பண்பாட்டு மீட்டுணர்வு” மூலம் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான விடுதலையை முன்னெடுக்கும் வழமை ஈழத்து அரசியலில் ஆரம்பமாகியது. இது சைவ வேளாள மேலாண்மை ஈழத்தமிழர் அரசியலில் வழக்கமாகவும் வழிசெய்தது. ஆயினும் நாவலர் இந்து என்ற நிலையில் என்றுமே ஈழத்தமிழரை அடையாளப்படுத்தாது சைவர் என்ற நிலையிலேயே தனது பண்பாட்டு மீட்டு ணர்வை முன்னெடுத்தார். சைவசமயத்தைத் தமிழ்ச்சமயம் என்று அழைக்க வேண்டாம். சைவக்கோயில்களைத் தமிழ்க்கோயில்கள் என அழைக் காதீர்கள். சைவம் ஒரு மதம். தமிழ் ஒரு மொழி. சைவரல்லாதவர்களும் தமிழர்களாக உள்ளனர் என்ற தெளிவான வரையறைகளை நாவலர் தனது தேசியத்தை பண்பாட்டு மீட்டுணர்வால் கட்டமைத்த பொழுது ஏற்படுத்தினார். ஆனால் அநகாரிக்க தர்மபாலர் பௌத்தமும் சிங்களமும் சிங்கள தேசியத்தின் தன்மையெனச் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உருவாக்கியமையே இன்றுவரை இலங்கைத் தீவு சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தளங்களில் சிங்கள இனவெறி மொழிவெறி தன்மையினை வெளிப்படுத்தி முழு இலங்கைத் தீவையும் அமைதியற்ற பொருளாதார வளர்ச்சியற்ற ஈழத்தமிழின அழிப்பால் ஈழத்தமிழர்களின் நிலத்தை வளத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சித்தளமாக மாற்றியுள்ளது. பிரித்தானிய காலனித்துவ அரசால் உரு வாக்கப்பட்ட இந்தப் போக்குகளையும் அதன் விளைவுகளையும் இன்றைய சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்கா உண்மையடனும் நேர்மையுடனும் உணர்ந்து இருதேச மக்களின் இறைமைகளும் சமமானதும் இலங்கையின் எல்லாக் குடிகளும் சமமான அரசியல் உரிமைகளை அனுபவிப்பது உறுதியானதுமான அரசியல் அமைப்பு மாற்றங்களை கொண்டுவந்து அனைவருக்குமான பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளரச்சிகளையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உறுதியான செயற்பாட்டுடன் முன்னெடுக்க இந்த வரலாற்று மீள்வாசிப்பு உதவ வேண்டும். இதற்கு எந்த சோல்பரி அரசியல் அமைப்பு 1945 ஏப்ரலில் இன்றைய சிக்கல்களைதத் தோற்றுவித்ததோ அந்த சோல்பரி அரசியல் அமைப்பு அறிமுகம் செய்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையில் இருந்து வெளிவந்து சிறுபான்மை பெரும்பான்மை என்கின்ற பிரித்தானியக் காலனித்துவம் ஏற்படுத்திய வடிவங்களை விடுத்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமும் மற்றைய பகுதிகளில் சிங்களவர்களின் வரலாற்றுத் தாயகமும் உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் இருதேச மக்களதும் இறைமைகளைச் சமமாக மதித்து இலங்கையில் வர்த்தகத்தால் குடிகளாகவும் தொழில் பங்களிப்பால் குடிகளாகவும் உள்ள முஸ்லீம் மக்கள் மலையகத் தமிழ் மக்கள் அனைவரதும் அரசியல் உரிமைகளையும் உறுதி செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்கினாலேயே பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் நடைமுறைச்சாத்தியமாகி நாட்டின் வங்குரோத்து நிலையும் மக்களின் வறுமையும் அறியாமையும் நீங்கும். https://www.ilakku.org/சோல்பரி-ஆணைக்குழு-நியமிக/
  11. மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன் Vhg ஜனவரி 31, 2025 மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளார். சாணக்கியன் நேபாளத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதனாலேயே அவரால் மாவையின் மரணவீட்டில் கலந்துகொள்ளமுடியாமல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது. இருந்தபோதிலும், மாவையின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், சாணக்கியன் நினைத்திருந்தால் உடனடியாகவே இலங்கைக்குத் திரும்பிவதிருக்கமுடிந்திருக்கும் என்றும் கூறுகின்றார் தமிழரசுக் கட்சியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மாவையின் மரணவீட்டுக்கு மாவையுடன் முன்னர் முரன்டுபட்ட சில முன்நாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. மாவையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவரை மரணம் நோக்கி கொண்டுசென்றதான குற்றச்சாட்டுகள், பல தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் மீது சமூகவைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மாவையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அவரது மரணவீட்டுக்குவந்து அரசியல் செய்தால் அவர்கள் மீது தமது கோபத்தை வெளிக்காண்பிப்போம் என்று மாவையின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மாவையை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் வரிசையில் சாணக்கியனை நோக்கியும் குற்றச்சாட்டுக்கள் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்த நிலையில் சாணக்கியன் மாவையின் மரணவீட்டுக்குச் சென்றால் அங்கு வைத்து மவையின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சாணக்கியனை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே மாவையின் மரணவீட்டை சாணக்கியன் தவிர்ப்பதாகக் கூறுகின்றார்கள் சில மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள். சேச்..சே.. அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நாங்களும் நம்புகின்றோம். https://www.battinatham.com/2025/01/blog-post_178.html
  12. நாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளை கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்துக்கு ஒப்பாக்கிய ஜனாதிபதி 01 Feb, 2025 | 01:15 PM (எம்.வை.எம்.சியாம்) நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்.வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம். அதனால் காங்கேசன்துறையின் மயிலிட்டி துறையில் இருக்கும் ஜனாதிபதி மாளிகை எனக்கு தேவையில்லை. அதனை பயன்படுத்த பொருத்தமான ஒரு வேலைத்திட்டத்தை தெரிவிக்குமறு ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தெரிவித்திருக்கிறேன். அந்த ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம், கலாசார நிலையம் அமைப்பதற்கு பொருத்தம் என்றால் அதற்கு அதனை பயன்படுத்த வங்குவதற்கு நான் தயார். அதேபோன்று நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம் மஹியங்கனை ஆகிய இடங்களில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளையும் வழங்க தயாராக இருக்கிறேன். ஏனெனில் நாங்கள் வறுமையான நாட்டில் இருக்கிறோம். மக்களும் வறுமையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நாட்டின் தலைவர் தசாவதாரமாக செயற்படுகிறார். அவ்வாறு இருக்க முடியாது. அந்த அரசியல் மாறவேண்டும். அந்ந அரசியலை நாங்கள் மாற்றி இருக்கிறாேம் என்றார். https://www.virakesari.lk/article/205492
  13. கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு 01 Feb, 2025 | 01:15 PM கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி நீரையே அனைத்து தேவைகளுக்கும் நம்பியிருந்த நிலையில் சில நாட்களாக நீர் விநியோகம் மேற்கொள்ப்படவில்லை. இதனால் தாம் கடும் நெருக்கடியை சந்தித்தாகவும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உத்தியோகத்தர்கள் பலரும் நீர் இன்மையால் மிக மோசமாக பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர். இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, கிளிநொச்சியில் அமைந்துள்ள தங்களது நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் நீர் பாவனை அதிகமாக காணப்படுவதனால் சம நேரத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் நீரை வழங்க முடியாதுள்ளது. இதன் காரணமாக மட்டுப்படுத்த அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/205491
  14. முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து February 1, 2025 01:35 pm முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199610
  15. தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள் February 1, 2025 07:16 am 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியை இழந்து அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தாமல் இருத்தல், அரச வருவாயை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுடன், நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் பின்வரும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 1. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் இதன் மூலம் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்யலாம். 2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவிர மற்ற இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்திற்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யலாம். 3. இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மோட்டார் வாகனமும் கொள்வனவாளரின் பெயரில் (பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து வாங்கினால்) அல்லது இறக்குமதியாளரின் பெயரில், குறிப்பிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான இறக்குமதி பில்லில்/சுங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள், மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 4. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மற்ற அனைத்து தேவையான ஆவணங்களுடனும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மேலே உள்ள பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர மற்ற இறக்குமதியாளர்கள், தங்கள் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும்போது, தங்கள் முதல் வாகனத்தை இறக்குமதி செய்த நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் வேறு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். (சுங்கப் பதிவு திகதியிலிருந்து). 5. ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45% க்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 6. மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படாது. 7. ஒரு மோட்டார் வாகனத்தின் வயதை நிர்ணயிப்பதில், மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்ட திகதிக்கும் சரக்குக் கட்டணம்/விமானப் பாதை மசோதா திகதிக்கும் இடைப்பட்ட காலம் கணக்கிடப்படும் 8. சலுகை வரிச் சலுகைகளின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது. 9. ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை(களை) மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். https://tamil.adaderana.lk/news.php?nid=199599
  16. அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வொஷிங்டன் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ ஹெலிகொப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்கவில்-மாற்றுமொரு-விமான-விபத்து/50-351271
  17. வடமராட்சியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்! வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் (31) இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ப) https://newuthayan.com/article/வடமராட்சியில்_இறந்த_நிலையில்_கரையொதுங்கும்_ஆமைகள்!
  18. யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும். - சிறீதரன் எம்.பி! சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். "பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்". நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் அங்கு தெரிவிக்கையில், யாழ் போதனா மருத்துவமனையில் பல் முக சீராக்கல் பிரிவின் சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரே உள்ளார், அவருடை சிறந்த சேவையினூடாக இதுவரை காலமும் காணப்பட்ட நீண்ட கால காத்திருப்போர் நோயாளர் பட்டியல் அவரது சேவைக் காலத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களை பார்வையிட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதில் பெரும்பான்மையாக அவரது சேவையினை பெறுபவர்களாக பாடசாலை மாணவர்கள் கணப்படுகின்றனர். எந்தவொரு தனியார் மருத்துவமனைகளிலும் சேவையாற்றுவதில்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இவருடைய திடீர் இடமாற்றத்தினால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச்சிகிச்சைகளில் பலனை கேள்விக்குறியாக்கும் எனவும் எனவே உடனடியாக அவரை போதனா மருத்துவமனைக்கு விடுவித்து உதவ வேண்டும் அல்லது மாற்று ஆளணியினை நியமிக்க வேண்டு்ம் என வலியுறுத்தினார் . அத்துடன் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரும் மாற்றீடு ஆளணியின்றி இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சாதகமான பதிலை வழங்கியுள்ளார். ( https://newuthayan.com/article/யாழ்._போதனா_மருத்துவமனையிலிருந்து _இடமாற்றம்_செய்யப்பட்ட மருத்துவ_நிபுணர்_மீள்_அழைக்கப்பட_வேண்டும்._-_சிறீதரன்_எம்.பி!
  19. மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா! இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். “தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா? இந்த அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம். “வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம்.” http://www.samakalam.com/மூவினத்தவர்களும்-கொண்டா/
  20. ஆசான் ஜெயமோகன், அவரும் மலையாளிதான், இப்படிச் சொல்லியுள்ளார்! “மலையாளம் என்பதே தமிழ்தான். சொல்லப்போனால் மாற்றுமொழி உச்சரிப்புச் சாயல் வந்து சேராத தொல்தமிழே மலையாளம். தொல்தமிழ்ப் பண்பாடே மலையாளப் பண்பாடு” “தொல்தமிழின் ‘ராகம்’ கொண்ட உச்சரிப்பு தமிழகக் கடலோர மக்களிடமும், பழங்குடிகளிடமும், ஈழத்து மக்களிடமும் உண்டு. இவர்கள் அனைவருமே மலையாளம் போல் தமிழ் பேசுபவர்கள் என்பார்கள் மையநிலத் தமிழர்கள்.” சீமான்,மலையாளம், கடிதம் jeyamohanJanuary 31, 2025 அன்புள்ள ஜெயமோகன், செந்தமிழன் சீமான் இந்த உரையில் ஆற்றூர் ரவிவர்மா தமிழ் பற்றிச் சொன்னதைச் சொல்கிறார். உலகில் தாய்மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்புள்ளவர்கள் சீனர், கிரேக்கர் தமிழர் என்று. அது நீங்கள் ஓர் உரையில் குறிப்பிட்டது. நீங்கள் தமிழரா மலையாளியா? சிவலை தமிழரசு அன்புள்ள தமிழரசு, சீமான் உரை கேட்கவில்லை. நீண்ட உரைகள், அரசியலுரைகள் கேட்கும் நிலையில் நான் இல்லை. அந்த ‘high voltage’ அரசியல் விவாதங்களிலேயே எனக்கு ஆர்வமில்லை. அது வேறு உலகம். ஆற்றூர், நித்ய சைதன்ய யதி , ஐயப்பப் பணிக்கர் ஆகிய பலர் சொல்லியிருக்கும் கருத்துத்தான் நீங்கள் சொல்வது. ஐயப்பப் பணிக்கர் தொல்காப்பிய அழகியல் இலக்கணத்தையே மலையாளத்துக்கும் அடிப்படையாக முன்வைத்தவர். நான் மலையாளி. அதை மறைப்பதில்லை, மழுப்புவதுமில்லை. ஆனால் மலையாளம் என்பதே தமிழ்தான். சொல்லப்போனால் மாற்றுமொழி உச்சரிப்புச் சாயல் வந்து சேராத தொல்தமிழே மலையாளம். தொல்தமிழ்ப் பண்பாடே மலையாளப் பண்பாடு. குறைந்தது நூறாண்டுகளாக என் குடும்பம் செவ்வியல் தமிழ்- மலையாளம் இரண்டிலும் தேர்ச்சிகொண்டதாக இருந்து வருகிறது. (தொல்தமிழின் ‘ராகம்’ கொண்ட உச்சரிப்பு தமிழகக் கடலோர மக்களிடமும், பழங்குடிகளிடமும், ஈழத்து மக்களிடமும் உண்டு. இவர்கள் அனைவருமே மலையாளம் போல் தமிழ் பேசுபவர்கள் என்பார்கள் மையநிலத் தமிழர்கள். என்னைப் பற்றியும் அப்படிச் சொல்வதுண்டு. நான் ‘எங்கள் குமரிமாவட்டத்து உச்சரிப்பே சரியான தமிழ்’ என்று பதில் சொல்வது வழக்கம். தொல்லியல்- மொழியியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் உதவியுடன் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அமைத்த தமிழ் உச்சரிப்பு இதே ஒலிகொண்டிருந்தது) மலையாள அடித்தளப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் தொல்தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ள முடியாது. சங்ககாலம் முதல் தொடரும் வேலன் வெறியாட்டு முதல் பல்வேறு சடங்குகளும் வழிபாடுகளும் கேரளத்திலேயே உள்ளன. சிலப்பதிகாரப் பண்பாடும் கேரளத்திலேயே உள்ளது. கேரளம் ஆங்கிலேயர் வந்து மலைகளை தோட்டமாக்குவது வரை மிக வறிய நிலம். அங்கே உபரிச்செல்வம் மிகக்குறைவு. ஆகவே பெருநகரங்கள், பெரிய ஆலயங்கள் மிகக்குறைவு. அதனால் அன்னியர் படையெடுப்பும் ஆக்ரமிப்பும் பெரும்பாலும் நிகழவில்லை. பின்னர் கடலோரப்பகுதிகளில் ஊடுருவல்கள் நிகழ்ந்தன. ஆக்ரமிப்பு நிகழவில்லை. ஆனால் மலைகளில் தொல்தமிழ்ப்பண்பாடு அப்படியே நீடிக்கிறது. ‘மலையாளம் என்பது தொல்தமிழ்தான், தமிழகம் என்னும் பண்பாட்டு நிலத்திலேயே கேரளமும் உள்ளது’என்பது என் தனிப்பட்ட கருத்து அல்ல. இது கேரளத்தில் வலுவாகவே நீடிக்கும் ஒரு சிந்தனைப் பள்ளி. இளம்குளம் குஞ்ஞன்பிள்ளை, ஐயப்பப் பணிக்கர், எம்.கோவிந்தன் என அதற்கு மூன்று தலைமுறைத் தொடர்ச்சி உண்டு. எம்.கோவிந்தனின் மாணவர்தான் ஆற்றூர் ரவிவர்மா. அவர் சொல்வது அதையே. நான் ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவன். அந்தச் சிந்தனைப் பள்ளியில் வந்த நாவல்தான் மனோஜ் குரூர் எழுதி வம்சி பதிப்பகம் வெளியிட்ட ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ சங்ககாலம் பற்றிய மலையாள நாவல் அது. என் முன்னுரையுடன் மலையாளத்தில் வெளிவந்தது. ஆங்கிலத்திலும் இப்போது வெளிவந்துள்ளது. சங்ககாலப் பின்னணியில் ஓர் இலக்கிய நாவல் தமிழில் இன்னும் எழுதப்படவில்லை என்பதை நினைவுகூருங்கள். இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் அதேகாலகட்டத்திலேயே நாராயண குரு தமிழின் நீட்சியாக மட்டுமே மலையாளத்தை நோக்கும் அணுகுமுறை கொண்டிருந்தார். திருக்குறளை மொழியாக்கம் செய்தார். அவர் மரபில் வந்தமையால் நித்ய சைதன்ய யதியும் அதே கருத்தைச் சொல்கிறார். நான் நித்யாவின் மாணவன். இந்தக் கருத்தை இங்கே மட்டும் சொல்வதில்லை, எந்தக் கேரள அவையிலும் சொல்கிறேன். இன்றைய கேரளச்சூழலில் ஒரு சாராரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும் என எனக்குத் தெரியும், ஆனால் நான் எம்.கோவிந்தனின் மரபு, நாராயணகுருவின் மரபு என இதை அழுத்தமாகவே சொல்கிறேன். 2024 மாத்ருபூமி இலக்கியவிழாவில் அதைச் சொன்னேன். கேரள சம்ஸ்கிருதப் பேரவை, கேரள ஆசிரிய கூட்டமைப்பு போன்றவை கண்டனத்தீர்மானங்கள் நிறைவேற்றி என்னை மன்னிப்பு கேட்கும்படி கோரின. இந்த இணையதளத்திலேயே நூறு கட்டுரைகளுக்குமேல் இந்தக் களத்தில் உள்ளன. கொற்றவை என்னும் நாவலே இக்கோணத்தில்தான் எழுதியுள்ளேன். சரி, சீமான் உரை வழியாகவேனும் என்னையும், இக்கருத்தையும் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. என் கட்டுரைகளையும் எதிர்காலத்தில் படிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஜெ https://www.jeyamohan.in/211727/
  21. ஆண்டவன் சன்னதியில் ஆடையை கழற்ற நிர்பந்திப்பதா? -குருசாமி மயில்வாகனன் சில பிரபல கோவில்களில் ஆண்கள் சட்டை இல்லாமல் திறந்த மார்புடன் வர நிர்பந்தம் தரப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் இதில் மாற்றம் வேண்டுகின்றனர். ”இதில் மாற்றம் அவசியம் தான்” என நாராயணகுரு சச்சிதானந்தாவும், அய்யா வைகுண்டர் கோவில் பிரஜாபதியும் ஆதரிக்கின்றனர். என்ன செய்யலாம் ஒரு விவாதம்; நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் தலைவரான ஆன்மீகவாதியான சுவாமி சச்சிதானந்தாவே சட்டையைக் கழற்றும் விதமான ஆடை கட்டுப்பாடுகளை கைவிடலாம் எனக் கூறி இருப்பது பலத்த வரவேற்பை பெற்று, கேரள அரசு இது குறித்து ஆன்மீக பெரியோர்களிடம் ஆலோசித்து வருகிறது. வழக்கம் போல பழமைவாதிகள் கச்சை கட்டிக் கொண்டு பாரம்பரிய வழக்கத்தில் அரசாங்கம் தலையிடலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுவாமி சச்சிதானந்தா தனது பேச்சில், சட்டையைக் கழற்றும் இந்த நீண்டகால நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். இது இரு சமூகத் தீமை. நாராயணகுருவின் நோக்கங்களுக்கு எதிரானது. சமூக சீர்திருத்ததை வலியுறுத்திய நாராயண குரு தொடர்புள்ள கோவில்களிலேயே சட்டையைக் கழற்றும் நடை முறை இருப்பது வருத்தமளிக்கிறது. பிறமதத்தினர் விரும்பி வரும் போது தடுத்து அனுமதி மறுப்பதைக் கண்டு வருத்தமடைகிறேன். கோவில்களின் புனிதம் காக்கிறோம் என்ற பெயரால் மனிதாபிமானத்தை தொலைக்கிறோம். கோவில்களை அனைத்து மக்களுக்கானதாகவும் மாற்றிக் காட்டியவர் நாராயணகுரு என்றார். இவர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளார். சுவாமி சச்சிதானந்தாவின் பேச்சை கேரள முதல்வர் பினராய் விஜயனும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் ஆதரித்துள்ளனர். தமிழ் நாட்டில் இதன் எதிர்வினையாக கன்னியாகுமரி சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலில் ஆண்கள் சட்டை இல்லாமல் வர நிர்பந்திக்கும் வழிமுறை கைவிடப்படும் எனபாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள குருவாயூர், கரிக்ககம் சாமுண்டிதேவி கோவில், கோட்டயம் ஏற்றமானூர் கோவில் , தென் கர்நாடகத்தின் கோவில்கள் மட்டுமின்றி, திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, மற்றும் சில தென் தமிழகக் கோவில்களில் ஆண்கள் மேல் ஆடையின்றி திறந்த மார்புடன் தான் போக வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் சட்டை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆடைக் கட்டுப்பாடுகள் மாற்றவே முடியாதவையா..? மதம் சார்ந்த வழிபாட்டுச் சடங்குகள் மிகத் தீவிரமான, கடுங் கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதாகவே இன்றளவும் உள்ளன. இவற்றில் வைதீக சமயச் சடங்குகளின் வலியுறுத்தல்கள் வெளிப்படையானவை. ஆயினும், அச்சடங்குகளும், கட்டுப்பாடுகளும் காலந்தோறும் மாறி வந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சபரி மலை செல்வதற்கு நாற்பது நாட்கள் விரதம் இருப்பதும், கடுமையான, கரடு,முரடான பாதையில் நடந்து சென்று தான் ஐய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதும் இன்றைக்கு இல்லை. ஒறிரு நாட்கள் விரதம் இருந்துவிட்டு, காரில் நேராக சன்னிதானத்தில் இறங்கும் வசதியானவர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். தற்போது சட்டை கழட்டும் கட்டுப்பாடுகள் வேண்டாம் என்றால், மதம் சார்ந்த விசயங்களில் அரசு தலையிடக்கூடாதென்றும் ,நாத்திகர்கள் கருத்தே சொல்லக்கூடாதென்றும் ஒலிக்கும் குரல்கள் சற்று ஓங்கியே ஒலிக்கின்றன. மதச்சார்பற்றதாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அரசானது மதம் சார்ந்த விசயங்களில் தலையிடக்கூடாதென்பது சரியானதே. ஆனால், அதை எல்லாவிதமான பிரச்சினைக்கும் பொருத்த முடியாது. இன்றைய இளம் பக்தர்கள் தான் சட்டை கழட்டி வரச் சொல்வதை ஏற்க மறுத்து குரல் எழுப்புகிறார்கள். எத்தனையோ பல மாற்றங்களை எல்லாம் ஏற்பவர்கள் கூட ஆகம விதிகள் என அவர்கள் கூறிக் கொள்கின்ற வழிபாடு உள்ளிட்ட வைதீக நெறிமுறைகளில் அரசு தலையிடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தற்போது பேசப்படுகின்ற ஆண்கள் மேல்சட்டை அணிந்து வருவது, உள்ளிட்ட பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற விசயங்களுக்கும் ஆகம விதிகளுக்கும் சம்பந்தமில்லை இது போன்ற விசயங்களில் இதுவரை ஏராளமான மாற்றங்களை அவர்கள் தாமாகவே செய்து வந்துள்ளார்கள் என்பதைப் புகழ்பெற்ற வழிபாட்டிடங்களின் அது தேவாலயமாகவோ அல்லது பள்ளிவாசலாகவோ இருந்தாலும் அவைகளுக்கு முன்பாக நின்று கொண்டு அங்கு வருகின்ற வழிப்பாட்டாளர்களைக் கேட்டால், அவர்கள் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கூறுவார்கள். பாலபிரஜாபதி அடிகளார் கர்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலைகளின் அருகில் பக்தர்கள் செல்வதற்கு ஆகம விதிகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. ஆனால், பக்தர்கள் தரும் கட்டணத்திற்கேற்ப உள்ளே செல்லவும்,சில நேரங்களில் தொடவும் வாய்ப்பு வழங்கப்படுவதை நாம் பல சமயங்களில் பார்க்கலாம். பிரபலங்கள் வருகின்ற நேரங்களிலும், கூட்டமே இல்லாமல் காத்தாடுகின்ற நேரங்களில் அந்த விதிகளெல்லாம் காற்றில் பறப்பது கண்கூடு. இதற்கான காரணம் என்னவெனில், அதன் மூலமாகக் கிடைக்கின்ற வருமானம் தான். பிரதமர் நரேந்திரமோடி குருவாயூர் கோவில் வந்த போது அவர் மேல் சட்டைக்கு பதிலாக மேலுடலை முழுவதுமாக மறைத்துக் கொள்ளும்படி பெரிய அங்கவஸ்திரத்தை போட்டுக் கொள்ள அனுமதித்தார்களே..எப்படி? வழிபாட்டிடங்கள் சார்ந்த சடங்குகள் மட்டுமல்லாது, திருமணங்கள், புதுமனை புகுதல், திவசம், மற்றும் பலவகையான ஹோமங்கள் உள்ளிட்ட வீடுகளில் செய்யப்படுகின்ற சடங்குகளில் கூடப் பலவிதமான மாற்றங்கள் உருவாகிவிட்டன. இது தவிர, தனிப்பட்ட வாழ்க்கையிலுங் கூட குறிப்பிட்ட சாதிகளுக்கான சடங்குகளில் கால ஓட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் நாம் காணலாம். உதாரணமாக, பிராமணன் கடல் கடந்து வெளிநாடு செல்லக் கூடாது என அன்றைய தினம் சொல்லப்பட்டது. இன்று அவர்களே அதிகமாக வெளிநாடு செல்கின்றனர். பிராமணக் குடும்பங்களில் சில வகுப்பாரில் கணவர் இறந்ததும் விதவைக் கோலம் பூணுகின்ற பெண்கள் தலைமழிக்கப்பட்டு வீட்டின் மூலையில் தங் கவைக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்த நிலை மாறியிருக்கிறது. இன்று விதவைப் பெண்கள் குங்கும், பூ, பட்டுப்புடவையுடன் சர்வசாதரணமாக மகிழ்ச்சியுடன் பொது இடங்களில் நடமாடுவதைக் காண்கிறோம். மத ஆச்சாரங்களில் சீர்திருத்தங்கள் வேண்டி எந்த ஒரு தலைவரோ, ஒரு இயக்கமோ போராட்டாத நிலையில், கொடுமையான அப் பழக்கங்கள் வெகு சுலபமாக மறைந்துள்ளன. இதுபோலவே பெண்கல்வி, உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், உடையணிதல், தொழில் போன்ற பல அம்சங்களில் தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அம் மாதிரியான மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்ட வைணவ சமயத்தின் பெருமாள் கோவில்களில் ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்கள் பாடும் வழக்கத்தை இராமனுஜர் அறிமுகம் செய்யவில்லையா? நாகரீகம் வளராத காலகட்டத்தில் ஆண்கள் வெறும் வேட்டியையும், மேல்துண்டையும் மட்டுமே அணிந்தனர். இறை வழிபாட்டு இடங்களில் தோளில் உள்ள துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டனர். தற்போதும் அதை தொடரச் சொன்னால் சரியாக இருக்குமா? ஆக, ஆகமம் போன்ற விதிகள் வலியுறுத்துகின்ற பழக்கங்களும் அல்லது மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ள பழக்கங்களும் மாறியிருப்பதையும் மாறக் கூடியவை என்பதையும் மறுப்பவர்கள் உணர வேண்டும். அடுத்து மதம் சார்ந்த விசயங்களில் அரசு தலையிடக்கூடாதென்கிற கோரிக்கை சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்கக் கூடியதே. வழிபாட்டிடங்களின் உள்பிரச்சினைகளில் அங்கு கடைப்பிடிக்கப்படுகின்ற விதிமுறைகளுக்குள் அரசு தலையிடக் கூடாது…என்றாலும்< பிரச்சினைகள் வரும் போது தலையிட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பே! இதன் தொடக்கமாக மத நிறுவனங்களுக்கு அரசு வழங்கிவருகின்ற சலுகைகள் மற்றும் உதவிகள் அனைத்தும் முழுமுற்றாக நிறுத்தப்பட்டு அவற்றை லாபமீட்டுகின்ற தனியார் நிறுவனங்களாகக் கருதி, வகைப்படுத்தி நடத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்ய வேண்டிய பல விசயங்கள் உள்ளன. இதில் சிறுபான்மை, பெரும்பான்மை மதப் பாகுபாடுகளும் சிறிய மற்றும் பெரிய போன்ற அளவுகளும் காட்டப்படவே கூடாது. கட்டுரையாளர்; குருசாமி மயில்வாகனன் https://aramonline.in/20560/men-enter-temple-without-shirt/
  22. விடுதலைப் புலிகள் பெயரின் தமிழ்வேந்தன் என்பவர் அறிக்கை கொடுத்துள்ளார். இவர் உண்மையாகவே விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை சீமான் தம்பிகள் கட்டாயம் ஆராய்வார்கள், ஆனால் அறிக்கையில் உள்ள கருத்து விடுதலைப் புலிகளின் தமிழ்நாடு பற்றிய கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றது. இப்படியான அறிக்கைகள் 10-15 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கவேண்டும்.
  23. ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கம்! Jan 31, 2025 சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் மற்றும் பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து, இலங்கை அரசோடு இணைந்த சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், பல தடைகளையும் தாண்டி எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். எமது தேசியத் தலைவரின்(பிரபாகரன்) சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எமது தாயகம் நோக்கிய பயணத்தை சர்வதேச பூகோள அரசியல் நலன் கருதி சர்வதேச சக்திகளும், இலங்கை அரசும் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைந்து நசுக்க முற்படுவதுடன், எமது போராட்ட வரலாற்றையும், ஈழத் தமிழ் மக்களுடைய கலாச்சார விழுமியங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். புகைப்படம், பயிற்சி வழங்கவில்லை! பல காலகட்டங்களில் எமது அண்டை நாடான இந்தியாவோடும், தமிழகத் தமிழர்களோடும் பின்னி பிணைந்து ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு, இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம். சீமான், தேசியத் தலைவரை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம். இந்த சர்ச்சையான கருத்துக்கள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் இழிவு படுத்துகின்ற, கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். ஒரு கொதி நிலையை உருவாக்கும்! நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது எமது இயக்கமோ, ஈழத் தமிழ் மக்களோ அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்ற தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் நன்றி உணர்வோடு பற்றிக் கொள்ள விரும்புகிறோம். தேசியத் தலைவர் திராவிட இயக்கங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்ளுகின்றோம். விடுதலைப் புலிகளின் கொள்கை தொடர்பாக அண்மையில் வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அரசியல் துறை என்று பேரிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். சம்பந்தப்பட்ட அறிக்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும், திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. விடுதலை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எமது இயக்கத்தின் பேச்சாளர்களைப் போன்று ஊடகங்களில் கருத்து கூறுவதை சம்பந்தப்பட்ட நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையோடு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு கொதி நிலையை உருவாக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சீமானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை! எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்ந்த உலகப் பரப்பில் தவறான செயற்பாடுகளுக்கோ, அரசியல் செயற்பாட்டுக்கோ பயன்படுத்த முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். சீமானுக்கோ, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பதைனையும், எமது போராட்டத்தை அரசியல் வழியில் முன்னெடுத்துச் செல்ல விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் கட்டமைப்புகள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றோம். ஆகவே பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும், பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதனையும், இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது. விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது” இவ்வாறு தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/prabhakaran-seeman-photo-issue/
  24. அரசியலமைப்பு திருத்தம் இன்றி முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அனைத்தும் நீக்கப்படும் அரசியலமைப்பு திருத்தம் இன்றி, முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்தது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்பட்டது. கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களால் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பின்னரே குறைக்கவோ அல்லது திருத்தவோ முடியும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் அரசியலமைப்பை திருத்தாமல் நீக்கப்படக்கூடிய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நீக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=310275
  25. அமெரிக்காவை உலுக்கியுள்ள விமானவிபத்து – பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் பலி அமெரிக்காவில் ஹெலிக்கொப்டருடன் மோதி விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் ரஸ்யாவின் பிரபல பனிச்சறுக்கு வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான யெவ்ஜினா சிஸ்கோவாவும் ( 52) வடிம் நவுமொவ்வும் ( 55) பயணித்ததாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தம்பதியினர் 1991 முதல் 96ம் ஆண்டுவரை ரஸ்யாவிற்காக ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடி தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றவர்கள். ரஸ்யாவில் தங்கள் பனிச்சறுக்கல் விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்கள் பின்னர், அமெரிக்காவில் குடியேறி பயிற்சியாளர்களாக மாறியிருந்தனர். அமெரிக்காவிற்காக விளையாடிய அவர்களின் மகனும் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டியொன்றில் கலந்துகொண்டுவிட்டு 13 பனிச்சறுக்கு வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தவேளையே இவர்களது விமானம் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த 13 பனிச்சறுக்கு வீரர்களும் ரஸ்யாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பிள்ளைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யாவிற்காக பனிச்சறுக்கு போட்டிகளில் விளையாடிய இன்னா வோலியன்ஸ்கயா என்ற வீராங்கனையும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். இதேவேளை விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பனிச்சறுக்கு விளையாட்டு சமூகத்தை சேர்ந்த பலர் பயணித்தனர் என்பதை அமெரிக்காவின் பனிச்சறுக்கல் விளையாட்டிற்கான தலைமை அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கன்சாஸ் விச்சிட்டாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத இந்த பெருந்துன்பியல் சம்பவத்தினால் நாங்கள்மனமுடைந்துபோயுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.. https://akkinikkunchu.com/?p=310279

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.