Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தோழர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கைது மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது! அநுர அலையில் கடந்த தேர்தலில் அவர் அடித்துச் செல்லப்பட்டாலும், ஈபிடிபியின் வாக்கு வங்கி இன்னமும் இருக்கின்றது. அதை ஆட்டம் காண NPP இந்தக் கைது விளையாட்டின் மூலம் நடத்தும் நாடகம் பூமராங் ஆகி NPP ஐ பாதிக்கும்
  2. ஆம். குறித்த கேள்விகளுக்கு மாத்திரம் பதில்களைத் இத் திரியில் பதியுங்கள்.
  3. அவனை எனக்குத் தெரியும் ப.தெய்வீகன் தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில் சென்று அமர்ந்தேன். தன்னால் சுமந்துகொண்டு நடக்க முடியாத இரண்டு பெரிய படச்சட்டங்களுடன் ஒரு மூதாட்டி வந்தார். எனக்கும் அவருக்கும் இடையில் பொலித்தீன் மூடிய அந்தப் படச்சட்டங்களை இரும்புக் கதிரையில் சாய்த்து வைத்தார். அவை கீழே விழுந்துவிடக்கூடாத கவனத்தோடு அணைத்தபடி அருகிலிருந்தார். அவரது நடுங்கும் விரல்களில் ஒன்றில் அணிந்திருந்த மோதிரத்தில் ஒரு சிறுவனின் முகம் தெரிந்தது. நான் அதனை உற்றுப் பார்க்கும் இடைவெளியில் “ஹலோ” என்று எனக்கு வணக்கம் சொன்னார். முதுமையின் வழக்கமான சுருக்கங்கள் படர்ந்த முகத்தில் கண்கள் ஆழத்தில் தெரிந்தன. முன்னம் மிக நெருக்கமாகக் கண்ட உருவத்தை ஒத்த பார்வை. “ஹலோ” “படங்கள் வழுக்கி விழுந்து விடாமல், உங்களது பக்கத்திலும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வீர்களா…” என்னைத் தமிழர் என்று கணித்த அவரது உரையாடல் வியப்பளித்தது. சிறு புன்னகையால் எதிர்கொண்டடேன். படச்சட்டங்களின் எனது பக்க விளிம்புகளைக் கவனம் குன்றாமல் பிடித்துக்கொண்டேன். பதினெட்டாவது நிமிடத்தில் வந்த ரயிலில் நான் ஏறுவதற்குத் தயாரானபோது, மூதாட்டியும் அதே ரயிலில் வருவதற்கு எழுந்தார். இரண்டு படச்சட்டங்களையும் நானே ரயிலுக்குள் எடுத்துச் செல்ல உதவினேன். வெளியில் இருந்ததுபோல இப்போது ரயிலின் உள்ளே ஒரே இருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டோம். எமக்கு இடையில் இரண்டு படச்சட்டங்கள். ஒரு அந்தத்தை அவரும் மறு அந்தத்தை நானும் பிடித்துக்கொண்டோம். எமக்கு முன்னால் அமர்ந்து மக் டோனல்ட்ஸ் உருளைக்கிழங்குப் பொரியலை ஒரு சிறுமி ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் வைத்து மென்றாள். அவளை மடியில் வைத்திருந்த தாயும் சிறுமியும் கண்ணாடி வழியாக வெளிக் காட்சியைப் பார்த்து ரசித்தப்படியிருந்தனர். என்னருகிலிருந்த மூதாட்டியும் என்னைப் போலவே அவர்களைப் பார்த்துத் தனக்குள் அசைபோடும் ஏதோ ஒரு நினைவில் புன்னகைத்தார். அவர் முகத்தில் தெரியும் அத்தனை உணர்வுகளையும் அவருக்குள் இழையோடு ஆழமான துயரொன்று மறைத்தபடியிருந்தது, முதுமையின் களைப்பையும் சலிப்பையும் மீறிய நீண்ட வடு அவரது நடுங்கும் பார்வையில் தெரிந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் சகஜமான உரையாடல் ஆரம்பித்த சில நிமிடங்களில், தான் ஹோம்புஷ் பகுதியில் ஓவியங்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வருவதாக அந்த மூதாட்டி கூறினார். “அப்படியா, எனக்கு ஆஸ்திரேலியாவின் சமகால ஓவியங்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. பென் குவில்ட்டியின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” மூதாட்டி ஆச்சரியத்துடன் என்னை நோக்கினார். விழிகளில் மிதந்த நடுங்கும் பார்வை நிலையாக என்னில் பதிந்தது. “மனிதன் தனக்குள் சிக்கிக்கொண்டுள்ள அக வலிகளை ஓவியங்களில் கொண்டுவருவதில் பென் குவில்ட்டிபோல் யாருமில்லை என்று நினைக்கிறேன். மனிதனை வரையாமல் மனித உணர்வுகளை வரையும் அவரது கலை எனக்குப் பிடிக்கும். உதாரணமாக போர் குறித்த தகவல்களை நாங்கள் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம், கடந்து விடுகிறோம். வரலாற்றில் இடம்பெற்ற பெருங்கொடுமைகளைப் பாடங்களாகப் படிக்கிறோம். ஆனால், உண்மையில் நாங்கள் படித்தபிறகு கடந்து செல்லும் அந்தச் செய்திகளை எங்களது உள்மனம் இலகுவில் கடந்து செல்கிறதா? இலகுவில் ஜீரணித்துவிடுகிறதா? நாங்கள் பார்த்த காட்சிகளிலிருந்து உண்மையிலேயே நாங்கள் வெளியேறிவிடுகிறோமா என்ற அசௌகரியமான வினாக்களை ஓவியங்களாக வெளிப்படுத்தும் பென் குவிலிட்டி உண்மையிலேயே காட்சிகளின் நாயகன்” ஓவியம் பற்றி ஆர்வத்துடன் நான் வரைந்த சொற்களை மேலும் மேலும் ஆச்சரியத்துடனும் பெருமையோடும் அந்த மூதாட்டி பார்த்தார். “பொருளீட்டுவதற்குத் தமிழர்கள் எத்தனையோ வழிகளை நாடுகிறார்கள். ஆனால், நீங்கள் ஓவியக் கடையொன்றை நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது” விழிகளை மெதுவாக மூடித் திறந்தார். சிறு புன்னகையொன்றை உதிர்த்தார். “நான் நடத்தும் ஓவியக்கடை எனது மகனது ஓவியங்களை விற்கும் கடை. அவன் வரைந்த ஓவியங்களை மட்டும் விற்கும் கடை. என் மகன் உலகின் ஒப்பற்ற ஓவியன். நீங்கள் கூறிய பென் குவில்ட்டியைவிட மனித வலிகளை ரத்தமும் சதையுமாகத் தன் தூரிகையில் துயர்சிந்த வரைந்தவன். ஒன்று இரண்டல்ல நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களை ஓரிரவில் வரைந்த சாதனையாளன். ஆனால், அவன் இப்போது உயிரோடு இல்லை” தனது மகனின் ஓவியங்களைப் பற்றிய சொற்கள் அவரது பதிலில் சுவாலைகளாகச் சடைத்து கொழுந்துவிட்டெரிந்தன. குரலில் ததும்பிய அடர்த்தியும் பெருமையும் அவரது விழிகளில் புது வெளிச்சத்தை நிறைத்தது. “உங்களது மகனின் பெயர்…..” “ஓவியன் அருள்குமரன்” உருளைக்கிழங்குப்பொரியலைத் தின்றுகொண்டிருந்த குழந்தை தனது தாயின் மடியிலிருந்து திடீரென்று எங்களைத் திரும்பிப் பார்த்தது. படச்சட்டகங்களின் ஒரு அந்தத்தைப் பிடித்திருந்த கைகளில் மின்னல் இறங்கியதுபோல உதறியெழுந்தேன். (2) இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றும் மொபி படையணியின் ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதிச் செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினது கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினைச் சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தைச் சோதித்தார். சரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளை கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு ‘எம்16’ துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஆஸ்ரேலியாக்காரன் ஒருவன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான். அப்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றைப் பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளைக் கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. மூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும். எனது நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நான் அணிந்திருந்த முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. “பளீர்” துவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் அருள்குமரனின் உயிரற்ற தலை சரிந்தது. (3) அருள்குமரனின் மரண தண்டனை தீர்ப்பு உறுதியானது. அவன் சுட்டுக்கொல்லப்படவிருந்த தினத்திற்கு முதல்நாள் அவனது இறுதி ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குச் சிறை நிர்வாகம் அவகாசம் வழங்கியது. அருள்குமரன் சிறையதிகாரிகளிடம் ஓவியப் பலகைகளைக் கேட்டான். அவன் கேட்ட அனைத்தையும் வழங்கினார்கள் சிறை அதிகாரிகள். அருள்குமரன் காலையில் எழுந்து குளித்தான். தனது வெள்ளைச் சிறை ஆடையுடன் வந்து அதிகாரிகளை வணங்கினான். சிறை அறையிலிருந்த யேசுவின் சிறு சுருவத்தின் முன்னால் கண் மூடித் தொழுதான். அவனது விரல்களுக்கு இடையில் செபமாலை உருண்டது. தியானத்தில் ஆழ்ந்தான். தன் விரல்களில் பூமியின் இறுதி வெளிச்சம் புகுந்துகொண்டதைப்போல, ஓவியப்பலகையின் முன்னால் தூரிகையுடன் அமர்ந்தான். எலும்பொடிந்த மனிதப்பேருரு ஒன்றை மண் வண்ணத்தில் வரைந்தான். இதயமுள்ள இடத்தில் பெருங்கோறையாத் துளையிட்டான். ஒற்றை விழியோடு கோரமாக அவ்வுருவம் வானை நோக்கிப் பிராத்திக்கும் – உடைந்த விரல்களுடைய – கைகளை வரைந்தான். குருதித் துளிகள் வழியும், ஆன்மாவின் ஒலியற்ற ஒப்பாரியை வரைந்து முடித்தான். சாம்பல் பீடத்தில் சம்மணமிட்டிருக்கும் அந்த ஓவியம் இறந்த இதயத்தோடு இறைஞ்சிக் குழறியது. அடுத்த பலகையை எடுத்தான். கரிய வண்ணங்களை மாறி மாறித் தெரிவு செய்தான். தூரிகையில் ஒற்றியெடுத்தான். அறையில் விழுந்த கசங்கிய ஒளியில் அவனது முகம், ஏதோ ஒரு பெருங்களிப்பில் சிதையாய் சிலிர்த்தாடுவது போல தெரிந்தது. இரவு ஒன்பது மணி வரையில் நூற்றுப் பதினாறு ஓவியங்களை வரைந்தான். வரைந்து முடித்த ஓவியப் பலகைகள் சுவரெங்கும் சாய்ந்து கிடந்தன. அறை நிறைந்தது. ஓவியத்தின் துயர்நெடியும் உயிர்வலியும் அதிகாரிகளின் அடிவயிற்றைப் பிசைந்தன. தூரிகை சிந்திய வண்ணங்களால் தூய்மையான அருட்குமரன் அறையின் மூலையில் சாய்ந்தான். அத்தனை ஓவியங்களிலும் தன் இதய ஒலியை ஒற்றுக்கேட்டான். கீறிவிட்டதுபோல ஒரு சிறுபுன்னகையால் பிரசவித்த திருப்திக் கொண்டான். இறுதி மூச்சுக்களைச் சேகரித்தான். எழுந்து குளிக்கச் சென்றான். அதிகாரிகள் அவனைப் பின்தொடர்ந்தார்கள். (3) அருட்குமரன் கொலையுண்ட பின்னர் அவனொரு தமிழன் என்று அறிந்தேன். அவன் சிறையில் எவ்வாறு ஓவியனாக உருவாகினான் என்று அதன் பிறகு செய்திகளில் படித்தேன். நூஸா தீவு அதிகாரிகளுடன் பேசும் சந்தர்ப்பமொன்றில், அவன் சாவதற்கு முதல்நாள் வரைந்த ஓவியங்களையும் அவற்றில் கொப்பளித்த அவனது உணர்வுகளையும் கேள்வியுற்றேன். ஒரு தமிழனை நானே சுட்டுக்கொன்ற பெருந்துயரின் ஊளை எனக்குள் ஒப்பாரியாகக் கேட்டபடியிருந்தது. என் உள்ளம் பனிப்பாளங்களாக மாறிவிட்டதைப்போல சில நாட்கள் உறைந்து கிடந்தேன். எனக்காக ஏதாவது ஒரு சொல் எனக்குத் தேவைப்பட்டது. என்னை நானே ஆறுதல் சொல்ல என் மனம் ஏங்கியது. ஆனால், எனது சொற்கள் எதுவும் எனை எட்டாது என்று என் ஆன்மா குழறியது. கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுபவர்களின் உளவள நலன் கருதி, அந்நாட்டுப் படைத்துறைச் சட்டம் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினேன். ‘மொபி’ சூட்டுப் படையணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அருட்குமரனின் மரணம் எனது வாழ்வை நிறுத்தி எழுப்பியது. மீண்டும் எந்தப் படையிலும் பணியாற்ற முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அவனுக்குத் தண்டனையை நிறைவேற்றிய குற்ற உணர்விலிருந்து வெளியேற முடியாத எனது நாட்கள் – மாதங்களாக – வருடங்களாக நீண்டு வதைத்தது. இந்தோனேஷியாவின் பாலியின் ‘தீர்த்தா எம்புல்’ என்ற பாவங்களைக் கழுவும் புனிதச் சுனையில் சென்று முப்பது தண்ணீரிலும் மூழ்கி எழுந்தேன். என் துயர் சுமப்பதற்கு ஓருடல் போதாது போல கனன்றுகொண்டிருந்த என் நிலையை மனைவி வைஷாலி அச்சத்தோடு கணித்தாள். முழுமையான மாற்றத்திற்காக நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தோம். எனக்குத் தொடர்ந்தும் படைசார் பணிசெய்வதற்கு விருப்பம் உண்டா என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினர் கேட்டார்கள். இலக்குத் தவறாமல் சுடுகின்ற திறனுடைய என்னால், தங்களது நாட்டுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை ஆராயும் வகையிலும் அந்தக் கேள்வி அர்த்தம் கொண்டிருந்தது. நான் துப்பாக்கியை வெறுப்பதாகக் கூறினேன். “சட்டப்பூர்வமாகச் செய்தாலும் ஒரு ஆயுதத்தின் மூலம் செய்யக்கூடியது வன்முறை மாத்திரமே. கொலை எந்த வடிவத்திலும் கொலையே. அதில் சட்டப்பூர்வமான கொலை – தண்டனைகொலை என்ற எந்த வேறுபாடும் இல்லை” என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்புக்குக் கூறினேன்; “தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பேசாதே. அது அவர்களை வேறு வகையில் சிந்திக்க வைக்கும். நீ கடந்த காலத்தில் துப்பாக்கியை உபயோகித்த காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருப்பதுபோன்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும்” என்று சந்திப்பு முடிந்து வரும்போது வைஷாலி எச்சரித்தாள். அவள் சொன்னதும் சரி. நான் சொன்னதும் சரி. வைஷாலிக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அவளது வருமானத்திலேயே நாங்களிருவரும் சிட்னியில் வசிக்கக்கூடிய சூழல் கூடியது. அருட்குமரனின் சொந்த இடம் சிட்னி என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அவனது குடும்பத்தை அல்லது அவனைத் தெரிந்தவர்களை நான்கு வருடங்களுக்குப் பின்னர் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவனது செய்தியும் அவன் தொடர்பான கதைகளும் முழுமையாக அனைவரின் ஞாபகங்களிலும் அகன்றிருக்கும் என்று நம்பினேன். “ஆஸ்திரேலியா என்பது தெற்கே விக்டோரியா முதல் வடக்கே டார்வின்வரை பரந்து விரிந்த ஒரு பெரிய கண்டம். இங்குள்ள ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கு ஆயிரம் நல்ல காரியங்கள் உண்டு. வெளிநாட்டில் இடம்பெற்ற ஒரு தண்டனையைப் பற்றியும் அதில் சம்பந்தப்பட்ட உன்னையும் தேடிக் கொண்டிருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாதே” எப்போதும்போல வைஷாலி சமரசம் செய்தாள். (4) வீட்டுக்கு வந்த நான் படுக்கையில் வீழ்ந்தேன். அருள்குமரனுக்கு மரண தண்டனையைத் தீர்த்த நூஸா தீவில் அன்று இரவு வீசிய பெருங் காற்றும் மங்கிய ஒளியும் நினைவில் ஓங்கி அறைந்தன. தண்டனை நிறைவேற்றிய பின்னர் தீவின் வாசலில் எங்கள் படையணி திரும்பிய வாகனத்தின் முன்னால் தவரஞ்சனி நிலத்தில் வீழ்ந்து மண் அள்ளி வீசித் தூற்றிய கணங்கள் கண்முன்னால் எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்தன. சிறுகச் சிறுக என்னைப் பின்தொடர்ந்த காலச் சர்ப்பம், சிட்னி ரயில் நிலையத்தில் வைத்து என்னை முழுமையாகப் பற்றிப் படர்ந்ததை எண்ணி நடுங்கினேன். தவரஞ்சனிக்கு நான் யார் என்று தெரியாது. ஆனால், அவளது கண்களின் நடுங்கிய பார்வையும், புத்திரசோகத்தின் வலியும் என்னை ஆழத்துளைத்தது. வேலை முடிந்து வந்த வைஷாலியிடம் அனைத்தையும் குரல் நடுங்கச் சொல்லி முடித்தேன். அவள் “வெளியே நடை போய் வருவோம், வா” என்று அழைத்துச் சென்றாள். “தண்டனை வழங்கியதற்காக ஒவ்வொரு மனிதனும் நடுங்கிச் செத்தால், நாட்டில் ஒரு நீதிபதியும் உயிருடன் இருக்க முடியாது. நீ ஒரு சட்டத்தின் சாரதி. அந்தத் தொழிலை நேர்மையோடு செய்தாய். நிறைந்த கனவோடு செய்தவை அனைத்தும் நீடித்த பெருமையோடு உன் வாழ்வில் தங்க வேண்டியவை. இந்த உலகம் மிக மிகச் சிறியது. எல்லோரும் எல்லோரையும் எதிர்கொள்ளத்தான் போகிறோம். அதற்காக ஒளிந்துகொண்டே வாழ முடியுமா?” வைஷாலியின் சொற்கள் எனக்குக் கரம் தந்து மீட்கப் பார்த்தன. அருட்குமரன் சாவினால் விடுதலையாகிவிட்டான். இப்போது காலம் என்னை உயிரோடிருந்து ஒரு தண்டனையை அனுபவித்து அதிலிருந்து என்னை விடுவிக்கப் பணிக்கிறது. நான் என்னை வெல்வதுதான் இங்கே எனக்கு விடுதலை என்றானது. அன்றைய நடை, மீண்டும் மனதில் ஒளியை மீளிருத்தியது. “அருட்குமரனின் ஓவியக் கண்காட்சியொன்று சிட்னி நகரசபைக் கலைக்கூடலில் அடுத்த வாரம் நடைபெறுவதாக, தவரஞ்சினி சொன்னார். அந்த நிகழ்வுக்குப் போனால் என் மனது சிறிது அமைதிகொள்ளும். நீ என்ன நினைக்கிறாய்?” “நிச்சயமாக, எதையும் பார்த்து நீ ஓடக்கூடாது. போதும் போதும் என்றளவு கேள்விகள் உன் மனதில் தோன்ற வேண்டும். அவற்றுக்கு நீயே கண்டுகொள்ளும் பதில்கள்தான், இந்தக் குழப்பத்திலிருந்து உன்னை நிரந்தரமாக வெளியே கொண்டு வரும். நம் ஒவ்வொருவர் மனதிலும் நாமே இருள். நாமே ஒளி” வைஷாலியின் பதில்கள் மேலும் உறுதியைத் தந்தன. (5) சிட்னி நகரசபைக் கலைக்கூடத்திற்கு நானும் வைஷாலியும் போய் இறங்கும்போது அங்கு ஏற்கனவே கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது. ஆஸ்திரேலிய அரசின் கலை – பண்பாட்டுத்துறை அமைச்சர் கதரின் மேர்பி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் கண்காட்சியைத் திறந்து வைத்தார். தவரஞ்சினி மகளுடன் வந்திருந்தார். அமைச்சர் கதரின் அவர்களோடு அருட்குமரனின் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்தவாறு அவற்றின் முன் நடந்தார். தன் மகனின் உயிர் நிறைத்த ஓவியங்கள் அனைத்தும் பேசும் மொழி புரிந்தவளாய் தாய் தவரஞ்சினி விழி நீர் சொரிந்தாள். தவரஞ்சினியின் கைகளை இறுகப் பற்றிய அமைச்சர் கதரின் தவரஞ்சனியை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். “ஒரு தாய் இப்படியும் பெருமையடைய வேண்டும் என்று எனக்கு இறைவன் விதித்திருக்கிறான்” தவரஞ்சினி விம்மிய வார்த்தைகளை அமைச்சருக்கு அருகில் வந்துகொண்டிருந்த ‘சிட்னி மோர்னிங்க ஹெரால்ட்’ செய்தியாளர் குறிப்பெடுத்தார். தவரஞ்சினியை அமைச்சர் கதரின் ஆரத்தழுவிய காட்சியை கமராக்கள் ஒளிவீசிப் பிடித்தன. உரை நிகழ்த்துவதற்கு ஒழுங்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் அமைச்சர் கதரின் ஏறினார். “அருள்குமரனின் மரணம் துரதிஷ்டவசமானது. அவரது இறப்பு என்பது அதி திறன்வாய்ந்த ஓவியனின் இழப்பு. மரணத்தைத் தண்டனையாக வழங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது நாகரீகமாக வளர்ச்சியடைந்துள்ள சமூகத்தின் உள்ளுணர்வாக உருமாற வேண்டும். தண்டனை என்பது ஒரு குற்றவாளியிடமிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், அந்தக் குற்றவாளி திருந்துவதற்கான காலப்பகுதியாகவும் வழங்கப்படுவது. இவை இரண்டுமே நிறைவேறிய நிலையில்தான் அருட்குமரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இன்று நாங்கள் இங்கு கூடியிருப்பது, அருள்குமரனின் ஓவியங்களைக் கொண்டாடுவது அனைத்தும் அவரது திறமைக்கான அங்கீகாரம் மாத்திரமன்றி, இன்னொரு வகையில் பிராயச்தித்தமும்தான். அருட்குமரன் வரலாற்றில் ஒரு ஓவியனாகவே நினைவுகூரப்படுவார்” மேடையிலிருந்து இறங்கிய அமைச்சரின் கைகளைப் பற்றிய சிட்னி நகரபிதா நன்றி கூறினார். தனக்கு இன்னொரு நிகழ்வுள்ளதாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்ட அமைச்சர் வெளியேற, கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களின் நீண்ட வரிசை, மெது மெதுவாக ஓவியங்களின் முன் நகர்ந்தது. நானும் வைஷாலியும் அவ்வரிசையில் இருவராய் கரைந்திருந்தோம். ஓவியங்கள் எதையும் என்னால் சில நொடிகளுக்கு மேல் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. நெற்றிக்கு நடுவில் நரம்புகள் கிழிவதுபோல வலியெடுத்தது. ஒவ்வொரு ஓவியமும் நான் அருகில் சென்றவுடன், குருதி வழியும் சொற்களைக் கோர்த்துப் பேச விளைவதுபோல அச்சமூட்டின. இதயத்தின் பேரிரைச்சல் செவிகளில் எதிரொலித்தது. எல்லோரும் என்னை அடையாளம் கண்டுவிட்டதைப்போல விழிப்படலம் விறைத்தது. சுவரிலிருந்த ஓவியங்கள் குற்றுயிராய் குருதி வழிய தரையில் இறங்கின. முறிந்து கால்களை இழுத்து இழுத்து அருகில் வந்து என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன. முகத்தில் ஒரு குழியும் ஒரு விழியுமுடைய உருவமொன்று, தன் நெஞ்சின் இடப்பக்கத்தில் ஒற்றை விரலைக் குத்தியபடி உரக்கச் சிரித்தது. என் முகத்தில் குருதித் துளிகள் தூவானமாய் வீழ்ந்தன. நான் வைஷாலியின் விரல்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு கண்காட்சியின் நடு மண்டபத்திற்கு ஓடினேன். தவரஞ்சினியின் கால்களில் விழுந்தேன். குழறி அழுதேன். பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்தார்கள். தவரஞ்சினியின் பாதங்களைப் பிடித்திருந்த எனது கைகளை இழுத்தார்கள். நான் விடாது பிடித்துக் கதறினேன். ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோய் திரும்பினார்கள். மங்கல் சிவப்பு ஒளியில், நான் மண்டியிட்டுக்கிடந்தேன். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒருவாறு என்னை விடுவித்து கைத்தாங்கலாக மண்டபத்திற்கு வெளியே தூக்கிச் சென்றார்கள். வைஷாலி என் பின்னே ஓடி வந்தாள். பாதுகாப்பு அதிகாரிகளை உரக்க அழைத்த தவரஞ்சினி என்னை விடுதலை செய்யுமாறு கூறினார். நொடி அமைதியில் எனது அழுகை ஒலி மாத்திரம் ஈனமாய் கேட்டது. அதிகாரிகளின் பிடி என் மீது சற்றுத்தளர்ந்தது. தவரஞ்சினி அந்த அதிகாரிகளிடம் – “அவனை எனக்குத் தெரியும்” என்றார். தவரஞ்சினியின் மோதிரத்திலிருந்த அருள்குமரனின் சிரித்த முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. https://vallinam.com.my/version2/?p=10815#respond
  4. @alvayan , இந்தக் கேள்விக்கு வீரரின் பெயரைத் தரவேண்டும். நீங்கள் அணியின் பெயரைத் தந்துள்ளீர்கள். விரும்பிய வீரரின் பெயரைத் தாருங்கள். மேலும் உங்கள் கணிப்பின்படி அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகவுள்ளதால், போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாறுபடலாம். எப்படிப் போகின்றது என்பதைப் பொறுத்து புள்ளிகள் தரலாம்.😄 போட்டியில் கலந்து கொண்டவர்களில் கீழே உள்ளவர்களின் பதில்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ளது. 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ 4 புலவர் 5 சுவைப்பிரியன் 6 அல்வாயன்
  5. @சுவைப்பிரியன் அண்ணா, 43 வது கேள்வி குழு A இல் இறுதியாக வரும் அணி எது? ஆனால் நீங்கள் இந்தியாவை முதலாவதாகவும், இறுதியாகவும் வரும் என்று தந்துள்ளீர்கள். இது போலவே இறுதியாக வரும் அணி என்ற 46, 49, 52, 67, 70 கேள்விகளுக்கும் உங்கள் கணிப்பின்படி முதலாவதாக வரும் அணியையே இறுதியாகவும் வரும் எனவும் தந்துள்ளீர்கள். இவற்றை மாற்றினால் புள்ளிகள் கிடைக்கக்கூடும். அல்லது போட்டியில் இறுதியாக வரவே வாய்ப்புக்கள் அதிகம்🙃! கணிப்புக்களை மாற்றினால் ஏற்றுக்கொள்ளப்படும். 😀
  6. @புலவர் ஐயாவின் பதில்கள் ஏற்கப்பட்டுள்ளன.😄
  7. டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..! December 31, 2025 — அழகு குணசீலன் — ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பின் பேரில் விசாரணைக்கு சென்றபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26.12. 2025 அன்று கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுத்து வைப்புக்கு பின்னர், தொடர்ந்தும் விசாரணைகளுக்காக 2026 ஜனவரி 9 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் கைதுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன…? 1990 முதல் இன்று வரை ஈ.பி.டி.பி. மீதும் அதன் தலைமை மீதும் மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விதிவிலக்கான மாற்று இயக்கங்களும் இல்லை, தலைமைகளும் இல்லை. பொதுவாக அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தங்கள் நலன் சார்ந்து இந்த இயக்கங்களுக்கு பின்னால் நின்று அவர்களை ஊக்குவித்தும் உள்ளன. தவறுகளை சுட்டிக் காட்டுவதை விடவும் இயக்கங்களோடு ஒத்து ஓடுதல் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு உயிர்ப்பிச்சையாக இருந்திருக்கிறது. தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட அமைப்பொன்றின் படைத்துறைத்தளபதியாக இருந்து ஸ்ரீலங்கா மத்திய அரசின் அமைச்சரவை அமைச்சர் வரை பல பதவிகளை டக்ளஸ் வகித்து இருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப்போராட்ட நிலையில் இருந்து பயங்கரவாத வடிவத்தை படிப்படியாக உள்வாங்கி கொண்டபோது தமிழ்த் தேசியத்தின் பெயரிலான பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்து நின்றவர் டக்ளஸ். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதுடன் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கும் எதிராக எந்த சமரசமும் இன்றி போராடிய ஒருவர். கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.இந்த எதிர்வு கூறலில் உள்ள உண்மையை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம். ஸ்ரீ லங்கா அரசியலமைப்பின் ஆறாவது சரத்தை ஏற்றும், ஒட்டுமொத்த 1978 அரசியலமைப்பையும், தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சுமார் 20 அரசியலமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு, மக்கள் மத்தியில் போலி தமிழ்த்தேசிய – சமஸ்டி, ஒற்றையாட்சி நிராகரிப்பு, இன்னும் தனித் தமிழ் ஈழம் என்ற முரண்பாட்டு அரசியலை டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட அரசியலே அவரது அரசியலாக இருக்கிறது. இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை ஊடான மாகாணசபை அதிகாரப்பகிர்வை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அசைக்க முடியாத உறுதியுடன் இன்றுவரை வெளிப்படையாக இடித்துரைப்பவர். இது விடயத்தில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை , அவர்கள் முப்படைகளோடும் பலமாக இருந்த காலத்திலும், தனது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளின் 13 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மாகாணசபை முறை தீர்வு அல்ல என்று கூறிக்கொண்டு, புலிகள் இருக்கும் வரை மாகாணசபையை பகிஷ்கரித்தும், புலிகள் தோற்கடிக்கடிக்கப்பட்ட பின்னர்,…. ஆரம்பம், அடிப்படை, அந்த புள்ளி, இந்த புள்ளி என்று ஏமாற்று அரசியலை டக்ளஸ் செய்யவில்லை. ஏன்? இன்றும் “ஏக்கய ராஜ்சிய” வார்த்தையாடலின் போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க தயாரில்லை. இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை இந்திய மேலாதிக்கம் என்றும், இராணுவ ஆக்கிரமிப்பு என்றும் பயங்கரவாதத்தை கையில் எடுத்து கிளர்ச்சி செய்த ஜே.வி.பி.யினர் கூட இறுதியில் மாகாணசபை தேர்தலில் பங்கு பற்றினர். ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடாத்திய ஜே.வி.பி. உறுப்பினர்/ ஆதரவாளரான கடற்படை வீரரை ஜே.வி.பி. மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினர். புலிகள் இயக்கமும், புலிகளால் இந்திய கைக்கூலிகள் என்று தடைசெய்யப்பட்ட இயக்கங்களும், புலிகளை அராஜகவாதிகள் என்று கூறிய இந்த இயக்கங்களும் உண்மையில் இந்திய வெளியுறவில் இரு துருவங்களைச் சேர்ந்தவை. தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது புலிக்கு பின்னால் போனவர்கள் இப்போது புலி இல்லாத நிலையில் இந்தியாவுக்கு பின்னால் போகின்றார்கள். இந்த தளம்பல், சந்தர்ப்பவாதம் டக்ளஸ் இடத்தில் இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை அவர் இந்தியாவை பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிர்ணய சக்தியாகவே பார்க்கிறார். தேவையான நெருக்கத்துடனும், தேவையான தூரத்திலும் வைத்து அரசியல் செய்கிறார். இதை ஜே.வி.பி.கூட அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே கற்றுக்கொண்டது. பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக பார்த்தவர் -பார்க்கிறவர் டக்ளஸ். அதனால் புலிப் பயங்கரவாதத்தையும், அரசபயங்கரவாதத்தையும் அவர் பயங்கரவாதமாகவே பார்த்தார். புலிகளின் மக்கள் மீது அக்கறையற்ற வெறும் அதிகாரப்பசிக்கான அரசியல் இலங்கை அரசையும், இந்திய அரசையும் தூண்டி மக்களை அழிக்கும் என்பது டக்ளஸின் அரசியல் நோக்கு. புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அவர் கூறினார். இதை புலிகள் இல்லாத போது சொன்ன சுமந்திரன் பிராதான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர். செல் நெறியை நிர்ணயிப்பவர். ஆனால் இந்த உண்மையை புலிகள் இருக்கும் போதே சொன்னவர் டக்ளஸ். மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில் வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. தற்போது 2001 இல் தனக்கும், தனது அமைப்புக்குமான தற்பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி தென்னிலங்கை குற்றவாளி ஒருவரின் கரங்களுக்கு எப்படி போனது என்பதே கேள்வி/ விசாரணை. இத்துப்பாக்கி 18 ஆண்டுகளுக்கு பின்னர் 2019 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது. அதை டக்ளஸிடம் இருந்து, தான் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இராணுவத்தரப்பு பதிவேட்டின் படி 13 – T56 ரக துப்பாக்கிகளையும், 6 ரிவோல்வர் களையும் டக்ளஸ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனைகளுடன் சுயமாக கையொப்பமிட்டடு பெற்றுள்ளார் என்கிறது புலனாய்வுப் பிரிவு. புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைமைகளும், உறுப்பினர்களும் புலிகளால் வேட்டையாடப்பட்ட சூழலில் டக்ளஸ் தேவானந்தா மட்டும் அல்ல மற்றைய அமைப்புக்களும், தலைமைகளும் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் இராணுவ/ ஆயுத உதவிகளை பெற்றுள்ளன. என்பதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இன்றைய கேள்வி அந்த துப்பாக்கி மற்றைய தரப்புக்கு எப்படி போனது என்பதுதான்? பார்க்கவும், கேட்கவும் இது நியாயமான கேள்விதான். இல்லை என்பதல்ல. அதுவும் சட்ட ரீதியில் மிக முக்கியமான கேள்வியும் கூட. ஆனால் ஒரு இயக்கத்தின், அரசாங்க இயந்திரத்தின் யுத்தகால செயற்பாடுகளை தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிரல்ல. ஜே.வி.பி.யும், ஜனாதிபதியும் இந்த சூழ்நிலைக்கூடாகவை பயணித்துள்ளனர். ஈ.பி.டி.யில் இருந்து விலகிச்சென்றவர்களால். கையாடப்பட்டு தென்னிலங்கையில் விற்கப்பட்டிருக்கலாம், அல்லது, யுத்தத்திற்கு பின்னர் மீள ஒப்படைக்கப்பட்டும் துப்பாக்கிகள் வழங்கப்பட்ட/ மீள ஒப்படைக்கப்பட்ட பதிவுகளை மீளப்பெறாத வகையில், ஆயத களஞ்சியத்தில் இருந்து களவாடப்பட்டிருக்கலாம்.. அல்லது, இராணுவத்திடம் இருந்து கூட இந்த துப்பாக்கி கைமாறியிருக்கலாம், அல்லது துப்பாக்கியோடு சென்றவர் இறந்திருக்கலாம்,. என்பது போன்ற பல கேள்விகளே ஈ.பி.டி.பி. தரப்பில் உறுதியாக கூற முடியாத ஒரு பதிலாக அடிபடுகிறது. படையில் இருந்து தப்பியோடிய பல சிப்பாய்களிடம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கை குற்றச்செயல்களில் இந்த படையினரும், அவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாதங்கள் டக்ளஸை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்ய போதுமானதா? என்றால் இல்லை. மாறாக சூழலை மேலும் விளங்கிக்கொள்வதற்கான மேலதிக தகவல்கள் மட்டுமே. தற்போது, டக்ளஸ் கைது செய்யப்பட்டது அரசாங்கம் பிள்ளையார் பிடிக்கப்போன…. கதையை நினைவூட்டுகிறது. புலனாய்வு பிரிவினர் கடந்த காலங்களில் மறுதலித்து வந்த ஒரு உண்மையை அவர்களே சர்வதேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் இராணுவத்தின் ஆதரவுடன் தமிழ்க்குழுக்கள் இணைந்து செயற்பட்டன என்பதும், அக்குழுக்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இது இலங்கை மக்களுக்கு ஒன்றும் இரகசியம் அல்ல. இதற்கு ஈ.பி.டி.பி. மட்டும் அல்ல புலிகளால் தடைசெய்யப்பட்ட மற்றைய குழுக்களும் விலக்கல்ல. பிரேமதாச -ரஞ்சன் விஜயரெட்ண காலத்தில் புலிகளுக்கும் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. பணமும் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தை வெளியேற்றவும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப். கூட்டு தமிழ்த்தேசிய இராணுவத்தை செயலிழக்கச் செய்யவும் என்று கூறி புலிகள் இந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டனர். இந்த ஆயுதங்களை புலிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்ததற்கு வரலாறு இல்லை. ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ஈரோஸ் பொறுப்பேற்று அதற்கான ஆயுதங்களையும், சம்பளங்களையும், வாகனங்களையும் பெற்றுக்கொண்டது. இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியையும், வாகனங்களையும் ஈரோஸ் முகாம்களை தாக்கி புலிகள் எடுத்துச்சென்றனர். இவற்றிற்கான பட்டியலை எங்கு தேடுவது.? முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது இலங்கை படையினர் முகாமுக்குள் இருந்த காலம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களின் சம்பளம், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை கொழும்பு அரசாங்கமே செய்தது. பஜீரோ ஜீப் வாகனங்களும். வழங்கப்பட்டன. இவை எல்லாம் எப்போது? எங்கே வைத்து ஒப்படைக்கப்பட்டன. ஆயுதங்களை இந்தியாவும், இலங்கையும் வழங்கியதாக கூறப்படுகிறது.. இப்படி உள்நாட்டு யுத்தம் ஒன்றின் போது முறையற்ற, ஒழுங்கமைக்கப்படாத நிர்வாகம் என்பது எல்லா நாடுகளிலும் பொதுவான ஒரு போக்கு. இது டக்ளஸ் தேவானந்தாவை பிணையெடுப்பதற்கான பதிவல்ல. ஜதார்த்தம். சட்டம், ஒழுங்கு, நீதி, நிர்வாகம் சீர்குலைந்து, செயலிழந்து இருக்கின்ற நிலையில் பொதுவான தன்மை. ஜே.வி.பி. கிராமிய மட்டத்தில் தனது அமைப்பை ஸ்திரப்படுத்த ஓய்வு பெற்ற படையினருக்கான அமைப்புக்களை உருவாக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தில் இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடியவர்கள். இவர்களை பாதுகாக்கவே டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால் அரசாங்கம் ஒழித்து பிடித்து விளையாடுகிறது. டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தரப்பு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க படாதபாடு படுகிறது அரசாங்கம். இறுதியாக, இன்று கர்மா….., தெய்வம் நின்றறுக்கும்….., மன்னருக்கு செங்கம்பள வரவேற்பு…. என்றெல்லாம் பேசுபவர்களுக்கு. அந்த கர்மாவின் பங்காளிகளான நீங்கள் கர்மாவை முள்ளிவாய்க்காலுக்கு பின்னரும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் கர்மா பற்றிய உங்களின் புரிந்துணர்வு தான் என்ன…? பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் . அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா கொலை செய்தது என்று சொல்லலாமா? இங்கு எது கர்மா…..? கைது செய்யப்படுவர்களுக்கு கர்மாதான் காரணம் என்றால், காணாமல் போனவர்கள்…. சிறையில் வாடும் அரசியல் கைதிகள்….., போரில் அங்கவீனம் அடைந்தோர்… நிற்கதியாக்கப்பட்ட. தாய்மார்கள்…. பிள்ளைகள்…. எல்லாம் கர்மாவைச் சுமக்கிறார்களா …? உங்கள் குடும்பங்களில் ஏற்பட்ட போர்க்கால இழப்புக்களுக்கு என்ன பெயர்..? கர்மாவா …? மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல். https://arangamnews.com/?p=12565
  8. 2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள் Nishanthan SubramaniyamJanuary 1, 2026 1:15 pm 0 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன. Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். பணியிட தொடர்பாடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த விசாக்களில் UK-யில் இருப்பவர்கள், தங்கள் விசாவை நீட்டிக்கும் போது, இந்த புதிய நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது. மேலும், 2026 பெப்ரவரி 25 முதல் Electronic Travel Authorisation (ETA) திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. “அனுமதி இல்லையெனில் பயணம் இல்லை” என்ற விதியின் கீழ், விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் டிஜிட்டல் முன் அனுமதி பெற வேண்டும். ETA-வின் கட்டணம் £16 ஆகும். இது இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் பலமுறை நுழைவிற்கு அனுமதிக்கும். விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், பயணம் தொடங்குவதற்கு முன் ETA அனுமதி இருப்பதைச் சரிபார்ப்பார்கள். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெறுகின்றனர். அதே நேரத்தில், நிரந்தர குடியிருப்பு (Indefinite Leave to Remain – ILR) மற்றும் குடியேற்றம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பெரும்பாலான குடியேற்றர்களுக்கான நிரந்தர குடியிருப்பு பெறும் காலக்கெடுவை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்தல், மேலும் உயர்ந்த ஆங்கிலத் திறன் நிபந்தனைகள் மற்றும் நீண்டகால வருமானம், பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; ஏற்கெனவே நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு இது பின்நோக்கி பொருந்தாது. 2026 க்கான புதிய சம்பள வரம்பு உயர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த வரம்புகள் தொடரும். குறிப்பாக, Skilled Worker விசாவிற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பான £41,700 விதி தொடர்ந்தும் அமலில் இருக்கும். தற்காலிகமாக வழங்கப்பட்ட shortage occupation சலுகைகள் 2026 முடிவு வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், நிகர குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பது, உயர்தர திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது என்பதே நோக்கம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், நாட்டில் நிரந்தரமாக தங்கும் குடியேற்றர்கள் நீண்டகால பங்களிப்பும் சமூக ஒருங்கிணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால், வேலை வழங்குநர்கள், குடியேற்றர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் UK Home Office வெளியிடும் புதிய வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்றவும், ஆங்கிலத் தேர்வுகள், ETA விண்ணப்பங்கள் மற்றும் எதிர்கால குடியேற்றத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். https://oruvan.com/new-immigration-rules-to-come-into-effect-in-the-uk-from-2026-know-the-key-visa-changes/
  9. கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு 01 Jan, 2026 | 02:21 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்குரிய திணைக்களமாகவே இயங்கி வருவதால் நியாயமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் இதனால் குறித்த பணியின்போது பார்வையாளர்களாக தமிழ் தரப்பினரையும், அவர்களது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கன்னியா வெந்நீரூற்றை அண்மித்த பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த மாரியம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரன பணிக்காக உடைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதி தொல்லியலுக்கு உரியது என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பௌத்த விகாரை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக கன்னியா வெந்நீரூற்றின் நுழைவுப்பகுதியின் இடது பக்க மூலையில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது. 1623 – 1638 ஆண்டு வரை பறங்கிய படைத் தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மன் ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீரூற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பதும் பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234936#google_vignette
  10. யாழ். மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அரச கடமைகள் ஆரம்பம்! செய்திகள் 2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச சேவை சத்தியப்பிரமாணத்தை (உறுதிமொழி) மேற்கொண்டனர். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjv61dgq03dzo29n6x2pa7e8
  11. குருநகர் ஜெற்றி தாக்குதல் பற்றிய ஆவணங்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.. இந்திய இராணுவம் முரசொலி, ஈழநாடு பத்திரிகைகளை குண்டுவைத்து தகர்த்து ஒபரேசன் பவான் யுத்தத்தை புலிகள் மீது ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஊரடங்கு வேறு அமுலில் இருந்தது. அப்போது வடமராட்சியில் வீட்டில் இருந்த எங்களுக்கு தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களின் சத்தம்தான் போரை அறிவித்துக்கொண்டிருந்தது. வெரித்தாஸ், பிபிசி வானொலிகளில் வரும் செய்திகள்தான் 15 மைல் தூரத்தில் என்ன நடக்கின்றது என்பதை சொல்லியது. ஆனால் பல செய்திகள் வந்தே சேரவில்லை. ஒபரேசன் பவான் பற்றிய குறிப்பு திசை வாரசஞ்சிகையில் உள்ளது. ஆனால் மேலோட்டமாகவே இருக்கின்றது. https://noolaham.net/project/247/24657/24657.pdf
  12. ”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை. தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை. அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன். அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோத செயல் என தீர்ப்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார். விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார். https://www.samakalam.com/அரசியல்-நோக்கத்திற்காக/
  13. 🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! adminJanuary 1, 2026 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த வேளையில், அங்குள்ள ஒரு பாரில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம்).சுமார் 01:30 மணியளவில் கிராஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பிரபல பார் மற்றும் உணவகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பு நிகழ்ந்த சமயம் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை வரவேற்க ஒன்றுகூடியிருந்துள்ளனா். வெடிப்புக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், அங்கு இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட வானவேடிக்கைகள் (Fireworks) வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் காவல்துறையினா் அந்தப் பகுதியை முற்றாக மூடிவிட்டுத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை (No-fly zone) விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உலங்குவானூர்திகள் (Helicopters) மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ விசேட உதவி எண்களும் (Helpline) அறிவிக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/225413/
  14. நன்றி பல @செம்பாட்டான் . இந்தப் பதில்களைத் தரவேற்றுகின்றேன். @புலவர் ஐயாவிடம் மற்றைய கேள்விகளுக்கான விடைகளை எடுக்கவேண்டும்!
  15. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் December 29, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்கிழமை வந்திருந்தார். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் “இந்தியா இல்லத்தில்” ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்துப் பேசினர். அவரிடம் கூறவேண்டிய விடயங்கள் குறித்து இந்த தலைவர்கள் முன்கூட்டியே தங்களுக்குள் வேறு ஒரு இடத்தில் கலந்தாலோசனை நடத்தியது இந்த தடவை வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக அமைந்திருந்தது. தங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும்போது தங்களுக்குள் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வாவது இருப்பது அவசியம் என்று இப்போது தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் போலும். இயற்கை அனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசிய இந்த தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே பிதானமாக முன்வைத்தனர். அத்துடன் பிரதமர் மோடிக்கான கடிதம் ஒன்றையும் அவரிடம் இவர்கள் கையளித்தனர். மாகாணசபைகளை பற்றி வழமையாக அக்கறை காட்டாமல் இருந்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியம் என்று ஏனைய தலைவர்களுடன் சேர்ந்து ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு ஜெய்சங்கருடனான சந்திப்புக்காக அவர் அவசரமாக கொழும்பு திரும்பினார். மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை மற்றைய தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கூறிய அதேவேளை, கஜேந்திரகுமார் இலங்கையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலை உருப்படியாகச் செய்வது சாத்தியமில்லை என்றும் அதனால் கூட்டாட்சி (Federal system) அடிப்படையிலான ஏற்பாடு மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும் என்றும் சுட்டிக்காட்டியதன் மூலமாக தன்னை மற்றையவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதில் அக்கறை காட்டினார். ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உடனடியாகவே தாங்களும் இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வாக கூட்டாட்சி முறையே இருக்கமுடியும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தங்களைப் பொறுத்தவரை கூட்டாட்சி என்ற அடையாளப் பெயரில் அல்ல, அதிகாரங்களின் உள்ளடக்கத்திலேயே அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறினார். ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பிறகு கஜேந்திரகுமார் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மற்றைய தமிழ்க்கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான கொள்கை வேறுபாட்டை விளக்கும் நோக்கில் அமைந்திருந்தன. தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாணசபை தேர்தல்களிலும் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலிலும் அக்கறை செலுத்திய அதேவேளை, கூட்டாட்சி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவருவதற்கு இந்தியா ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுறுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக கூறினார். பிரதமர் மோடிக்கான கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது என்றைக்குமே தெரிய வராமலும் போகலாம் என்றும் கூட கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த கடிதத்தில் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கியிருக்கிறதே தவிர, கூட்டாட்சிமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று நம்பகமாகத் தெரியவருகிறது. மாகாணசபை தேர்தல் தொர்பிலான தமிழ்க் கட்சிகளின் வலியுறுத்தலோ அல்லது கூட்டாட்சி முறை பற்றிய நிலைப்பாடோ ஜெய்சங்கருக்கு புதியவை அல்ல. வெளியுறவு அமைச்சராக மாத்திரமல்ல, அதற்கு முன்னர் வெளியுறவு செயலாளராக பதவி வகித்த நாட்களிலும் அவர் இலங்கை தமிழ்க் கட்சிளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். அவர் வெளியுறவு செயலாளராக இருந்தபோது கொழும்பில் தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பு ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கவனத்துக்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு பெருமளவு நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன என்றும் மீண்டும் இரு மாகாணங்களின் இணைப்பு குறித்து கொழும்புடன் பேசக்கூடிய நிலையில் இந்தியா இல்லை என்றும் கூறியிருந்தார். வெளியுறவு அமைச்சராக வந்த பிறகு கொழும்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை தானும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் கூட்டாட்சி கோரிக்கையை எவ்வாறு முன்வைக்க முடியும் என்று ஜெய்சங்கர் கேள்வியெழுப்பினார். கஜேந்திரகுமாரும் கலந்துகொண்ட அந்த சந்திப்பில் கூட்டாட்சி முறை குறித்து வாழ்நாள் பூராவும் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த வாரத்தைய சந்திப்பில் அவர் கூட்டாட்சி முறையைப் பற்றி முன்னரைப் போன்று எதையும் கூறியதாக தெரிய வரவில்லை. மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு கொழும்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கு கூட நேரடியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று அதில் கலந்துகொண்ட தலைவர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. பதிலாக, இயற்கை அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் மாகாணசபை தேர்தல்களை எவ்வாறு நடத்தச் செய்வது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடமே ஜெய்சங்கர் ஆலோசனை கேட்கும் தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு வரும்போது மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவது குறித்தும் மாகாணசபைகள் முறைமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவரிடம் வலியுறுத்திக்கூறுமாறு தமிழ் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் ஜெய்சங்கர் பதில் எதையும் கூறாமல் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு தலைவர் கூறினார். சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதற்கு பின்னரான 38 வருட காலத்தில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இந்தியாவினால் முடியவில்லை. பெருமளவுக்கு மாறிவிட்ட புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் அரசாங்கத்தின் மீது இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தவிதமான நெருக்குதலையும் கொடுப்பதற்கு மோடி அரசாங்கம் நாட்டம் காட்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கும் என்பதை மாத்திரம் எதிர்பார்க்கலாம். அதுவும் குறிப்பாக, இயற்கை அனர்த்தத்தின் அழிவுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்ற ஒரு அரசாங்கத்திடம் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உடனடியாக கேட்பதற்கு மோடி அரசாங்கம் முன்வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தைக் கோரும் அரசியல் போராட்ட இயக்கம் ஒன்றை ஜனவரி முதல் முன்னெடுக்கப் போவதாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சூறாவளிக்கு முன்னர் கூறியிருந்தார். மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை மேலும் பின்போடுவதற்கு சூறாவளியின் வடிவில் வசதியான சாட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. இந்தியாவிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, தமிழ்க் கட்சிகளுக்கு வேறு மார்க்கமே இல்லை. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை முடக்காமல் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியாவைக் கொண்டு நெருக்குதல் கொடுப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் உதவியை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவை நாடியிருக்கிறது. தமிழகத்தில் இன்னமும் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரசாரங்களில் மீண்டும் இலங்கை தமிழர் பிரச்சினையை முக்கியத்துவம் பெறச் செய்வதற்கான ஒரு முயற்சியாகவும் இதை சில அவதானிகள் கருதுகிறார்கள். மாகாணசபை தேர்தல் தொடக்கம் கூட்டாட்சிக் கோரிக்கை வரை இலங்கை தமிழர்களின் கதியை இந்தியாவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு நிற்கின்றன தமிழ்க் கட்சிகள். இலங்கை அரசாங்கத்தை அசைப்பதற்காக இந்திய அரசாங்கத்தை முதலில் அசைப்பதே தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப் பகுதியில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழர் தரப்பு இழைத்த மாபெரும் தவறையும் அதற்கு காரணமான முக்கிய சக்திகளையும் பற்றிய தெளிவான விளக்கப்பாட்டை தமிழ்க் கட்சிகள் கொண்டிருப்பது அவசியம். மாகாணசபை முறைமையின் இன்றைய சீரழிவுக்கு தமிழர் தரப்பும் கணிசமானளவுக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். https://arangamnews.com/?p=12559
  16. அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட வேண்டும்; மக்கள் பங்கேற்பின் மூலம் இணக்கப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன், காலாவதியான அடக்குமுறை நடவடிக்கைகளை விட, பரஸ்பர செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் பலவந்தமான நடவடிக்கைகள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அதேவேளை, மக்கள் இணக்கப்பாடும் பொறுப்புக்கூறலும் மாத்திரமே ஸ்திரத்தன்மையை பெற்றுத்தரும். 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA – 1979) நீக்குவதாக உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் “A Thriving Nation, A Beautiful Life” என்ற ஆங்கிலப் பிரதியின் 129ஆம் பக்கத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை சிங்களப் பிரதியில் காண முடியவில்லை. இது தேசிய மக்கள் சக்தியும் அதன் சட்டக் குழுவும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு முரண்பாடாகும். இருப்பினும், இரண்டு பிரதிகளுமே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி குறிப்பிடுகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பல இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. இது பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல் இடையூறுகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை ‘அறிவிக்கப்படாத பயங்கரவாதச் செயல்களாக்க்’ கருதுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலேயே, முந்தைய அரசாங்கங்கள் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பரந்த பயங்கரவாத எதிர்ப்பு விதிகள் சிவில் சமூகத்தின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகாரப்பூர்வ ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதை அங்கீகரித்து, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (JVP), தனது ஆரம்பகால கொள்கை பிரகடனத்தின் ‘அரசின் கட்டமைப்பு’ எனும் 14ஆவது பிரிவின் கீழ், அடக்குமுறை சட்டங்களை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்தது. இந்த அருவருப்பான சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அபாயகரமான சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எளிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு முற்போக்கான அரசாங்கம், போர் மற்றும் ஆயுத மோதல்களின் வடுக்களைக் கையாண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவே ஒரே வழியாகும். வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல் “தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது தனது தேர்தல் நேர்மை குறித்த ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது. NPP அளித்த பொருளாதார வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியால் இயற்றப்பட்ட சட்டங்கள், எதிர்கால அரசாங்கங்களை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைக் கட்டமைப்பிற்குள் பிணைத்துள்ளமை இதற்கு ஒரு காரணமாகும் (கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக NPP அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும்). மேலும், பல்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் சில வாக்குறுதிகளின் முன்னுரிமைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழல்களால் அல்லது வேறு காரணங்களால், நீண்ட காத்திருப்போ அல்லது பெரும் வளங்களோ தேவைப்படாத சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்வதற்கோ அல்லது அதற்குப் பதிலாக வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர், அரச அடக்குமுறையின் தொடர்ச்சியான கருவியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் வைத்திருப்பதற்குத் தேவையான புதிதாக எதையாவது NPP கண்டறிந்துள்ளதா? எதுவாக இருந்தாலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல. PTA வை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதே தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்த தெளிவான புரிதலாகும். பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாளுவதற்குப் பதிலாக, சமூக – பொருளாதார அல்லது தேசிய ரீதியான குறைகளுக்குத் தீர்வு தேடுபவர்களுக்கு எதிராக பாரிய அளவில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இச்சட்டம் பங்களிப்பு செய்துள்ளதாக இதனை ஒழிப்பதற்காகக் குரல் கொடுத்தவர்கள் நம்பியிருந்தனர். காரணம் எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தான் ஒரு காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த, முந்தைய அனைத்து அரசாங்கங்களின் பாதையையே பின்பற்றி, தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்குப் பதிலாக, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றி, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பைப் பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்தச் சட்டத்தை நேரடியாக ரத்து செய்திருக்க வேண்டும். சர்வதேச சூழல் சர்வதேச அளவில், பயங்கரவாதத்திலிருந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, அதே உரிமைகளை மீறுவதோடு அவற்றைச் சீர்குலைக்கவும் செய்கின்றன. காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இதற்குச் சிறந்த சமகால உதாரணமாகும். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு, தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், நெதன்யாகுவின் பயங்கரவாதப் பிரச்சாரங்களை ஆதரிப்பவர்கள் எவ்வித விளைவுகளையும் எதிர்கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவில், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது யூதர்கள் மீது நடாத்தப்பட்ட போண்டி பீச் (Bondi Beach) தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் மறைமுக சியோனிச சக்திகளின் அழுத்தத்தினால், சியோனிசம் மற்றும் நெதன்யாகுவின் பயங்கரவாத ஆட்சியை விமர்சிப்பவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அடக்குமுறை நடவடிக்கைகளை விட ஆலோசனை மற்றும் உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதுவே நிலையான உறுதிப்பாட்டை வளர்ப்பதோடு, அடிப்படை சமூக – பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதும் செயல்படுத்துவதும், இன்னும் கடுமையான சட்டங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. இது இறுதியில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்ற வெடிப்புச் சூழல்களுக்கே வழிவகுக்கின்றன. ஏனெனில், இத்தகைய சட்டங்கள் எப்போதும் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாடு ஆகிய நோக்கங்களுடனேயே உருவாக்கப்படுகின்றன. சமூகச் சுமைகளைக் களைவதும், வடுக்களைக் குணப்படுத்துவதும், பாலங்களை உருவாக்குவதுமே முற்போக்கான சமூகங்களுக்கான சிறந்த மாற்றாக எப்போதும் இருந்து வந்துள்ளன. அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA) இந்தச் சூழலில்தான், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமான ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை’ (PSTA) நாம் பரிசீலிக்க வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த PSTA, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், PTA-வில் உள்ள மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், முந்தைய அரசாங்கங்கள் 2018 இல் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) மற்றும் 2023 மார்ச் மற்றும் செப்டெம்பரில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) ஆகியவற்றின் கீழ் கொண்டுவர விரும்பிய விதிகளையும் இது அப்படியே கொண்டுள்ளது. CTA மற்றும் ATA ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய PSTA சட்டமூலமானது தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கவில்லை. பரந்த வரைவிலக்கணம் ஒரு பயங்கரவாதச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது போரை பிரசாரம் செய்தல் அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல் போன்ற நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களைப் ‘பயங்கரவாதக் குற்றம்’ என PSTA சட்டமூலம் வரைவிலக்கணப்படுத்துகிறது. முன்னரைப் போலவே, இந்த வரைவிலக்கணம் இப்போதும் ஆபத்தான முறையில் மிகப்பரந்ததாகவே உள்ளது. தற்போதைய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும், நியாயமான பொது மக்கள் போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, ‘அரசாங்கத்தை வற்புறுத்தும்’ நோக்கம் ஒரு பயங்கரவாதக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பயங்கரவாதமாகக் கருதப்படாது என்று ஒரு விலக்கு நிபந்தனை இருந்தபோதிலும், இந்த அரசாங்கமோ அல்லது எதிர்கால அரசாங்கங்களோ பொதுப் போராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாக முத்திரை குத்தக்கூடிய அபாயம் இன்னும் நீடிக்கவே செய்கிறது. விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதன் மூலம், பொலிஸ் மா அதிபர் எவரையும் தடுத்து வைக்க முடியும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு, பின்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை இதை நீடிக்க முடியும். இது நீதித்துறை மேற்பார்வை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய உத்தரவு அமுலில் இருக்கும்போது, ஒரு நீதவானால் பிணை வழங்கவோ அல்லது சந்தேக நபரை விடுதலை செய்யவோ முடியாது. மேலும், ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பொருட்களைக் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு இந்த சட்டமூலம் அதிகாரத்தை வழங்குகிறது. 1971 மற்றும் 1988-89 காலப்பகுதிகளில் இத்தகைய சட்டம் இருந்திருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். நீதித்துறை மேற்பார்வை, மனிதாபிமான முறையிலான தடுப்புக்காவல் நிபந்தனைகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுதல், தனிமனித ரகசியங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் வந்து பார்ப்பதற்கான உரிமைகள் போன்ற சில ஏற்பாடுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், இத்தகைய பாதுகாப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாகும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து மீளாய்வு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடுவது என்பது எளிதான அல்லது மலிவான காரியம் அல்ல. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை உத்தரவுகள் மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடைசெய்யப்பட்ட பகுதி” என அறிவிக்க முடியும். அவ்வாறான இடத்தில் புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பது கூட மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாறும். ‘வழக்குத் தொடர்வதைத் தள்ளிவைத்தல்’ எனும் விதியின் கீழ், ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன; இது அடக்குமுறையை நுட்பமான முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சந்தேக நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று ஒப்புக்கொண்டு, அவரை ஒரு ‘புனர்வாழ்வு’ திட்டத்திற்கு அனுப்ப சட்டமா அதிபரால் முடியும். கடுமையான தண்டனைகளும் கண்காணிப்பும் அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்துவது போன்ற ஒரு “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புகளைப் பேணுதல் அல்லது அரசாங்கம் அர்த்தப்படுத்துவது போன்ற “பயங்கரவாதப் பிரசுரங்களைப் பரப்புதல்” ஆகியவற்றுக்காக, ஒரு நபருக்கு மேல் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இருபது ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நேரடி அல்லது மறைமுக நோக்கத்துடன் ‘கவனக்குறைவாக’ ஒரு அறிக்கையை விநியோகிப்பது உட்பட, எந்தவொரு பிரசுரத்தையும் விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் தனிமனித இரகசியத்திற்கும் (Privacy) கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. 11ஆவது சரத்து சில விதிவிலக்குகளை வழங்கிய போதிலும், கைதுகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் இத்தகைய விதிவிலக்குகளைப் புறக்கணிக்கும் விதத்தைக் கருத்தில் கொண்டால், இது நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இந்தச் சட்டமூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. Encrypted செய்யப்பட்ட டிஜிட்டல் தொடர்புகள் உட்பட எந்தவொரு தொடர்பாடலையும் இடையில் மறித்து அதன் குறியீடுகளை நீக்க (Decryption) முடியும். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலவீனமான தன்மையை நன்கு அறிந்த நிலையில், கைது செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிப்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகவே உள்ளது. சிவில் நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல் கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்திருந்தால், தற்போது ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினரால் ஏப்ரல் அல்லது நவம்பர் மாதங்களில் நினைவுகூரப்படும் “வீரர்களை” கொண்டாடும் எவரும் இந்த ஏற்பாடுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். பரந்த வரைவிலக்கணங்கள் மூலம் தற்செயலாகவே சட்டபூர்வமான சிவில் நடவடிக்கைகள், ஊடகவியல் மற்றும் பொதுக் கலந்துரையாடல்கள் குற்றமாக்கப்படலாம் என்பதே பிரதான கவலையாக உள்ளது. புதிய சட்டமூலத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் ஒருவர் கூட பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படலாம். 78ஆவது சரத்தானது மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணமாக உள்ளது. அதன்படி, “நம்பகமான தகவல்” என்பது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சாதாரண செயற்பாடுகளைக் கூடக் குறிக்கலாம். அத்தகைய நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படலாம். கட்டாயத் தகவல் வழங்கலும் நாட்டின் எல்லைக்கு அப்பாலான விரிவாக்கமும் சட்டமூலத்தின் 15ஆவது சரத்தானது, பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது; இதனை மீறுபவர்கள் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். நீதியை எதிர்பார்க்கும் மக்கள் மீது, குறிப்பாகப் பெரும்பான்மையினத்தைச் சேராத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்த ஏற்பாடுகள் கொடூரமான முறையில் பயன்படுத்தப்படுமா? தகவல் பெறுபவர்களைக் கூட அரசாங்கத்தின் உளவாளிகளாக மாறும்படி இது வற்புறுத்தக்கூடும். அதுமட்டுமன்றி, இந்தச் சட்டமூலமானது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது. பிரிவு 2(c)-இன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது தெளிவாகிறது. தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புலம்பெயர் சமூகங்களுக்கு எதிராக PSTA ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, வெளிநாட்டில் இருந்து சமூக ஊடகங்களில் இலங்கையின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கூட சட்டவிரோதமான செயலாக மாறக்கூடும். முடிவுரை மக்களை அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTA-வும் கொண்டுள்ளது. இதில் உள்ள விதிவிலக்கு சரத்துகள், ஏனைய வரையறைகளுடன் (அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்றவை) முரண்படுவதோடு, நடைமுறைச் செயல்பாட்டின் போது அவை வலுவிழந்து போகும் அபாயத்தையும் கொண்டுள்ளன. இந்தச் சட்டமூலத்தின் தலைப்பு அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் அரசாங்கத்தையும் அதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியையும் பாதுகாப்பதாகும். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகித்தல் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இதில் இல்லை. பல ஏற்பாடுகள் இந்த நோக்கங்களைச் சிதைக்கின்றன. அந்த ஏற்பாடுகள் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறுதல் உள்ளிட்ட அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது. PTA சட்டத்தைப் போலவே, PSTA சட்டமும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு போதிய ஆதாரங்கள் இன்றி நபர்களைத் தடுத்து வைக்கவும், தெளிவற்ற முறையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பேச்சுகளைக் குற்றமாக்கவும், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி கூட்டங்கள் மற்றும் அமைப்புகளைத் தன்னிச்சையாகத் தடை செய்யவும் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. இது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துகிறது; அத்துடன், பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதோடு, பிடியாணை இன்றி எவரையும் நிறுத்தவும், விசாரணை செய்யவும், சோதனையிடவும் மற்றும் கைதுசெய்யவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி அளிக்கிறது. மேலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நபர்கள் மீது ‘சுயவிருப்பின் பேரில்’ மேற்கொள்ளப்படும் ‘புனர்வாழ்வை’ திணிக்க சட்டமா அதிபருக்கு இது அதிகாரம் அளிக்கிறது. இந்தத் திட்டமிடப்பட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், NPP அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது அல்லது அது வழிதவறிச் சென்றுள்ளது. முன்னைய PTA சட்டத்தைப் போலவே, இந்தப் புதிய சட்டமூலமும் சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம். NPP கட்சியானது, எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச அடக்குமுறையின் ஒரு தொடர்ச்சியான கருவியாக வேறு வடிவில் வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் புதிதாக எதனையாவது கண்டறிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமக்குக் கிடைத்த தேர்தல் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் PTA சட்டத்தைத் திருத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக ரத்துச் செய்திருக்க வேண்டும். மக்கள் விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். காலம் கடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக NPP கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தமது பாதையிலிருந்து வழிதவறிச் சென்றுள்ளனரா என்பதற்கான விடை, அவர்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானிக்கப்படும். லயனல் போபகே https://maatram.org/articles/12519
  17. சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன் December 31, 2025 2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே தான் அமைந்துள்ளன. அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில், மே 6, 2025 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 43.26சதவீதமான வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 339 உள்ளுரா ட்சி சபைகளில் 265 சபைகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநிறுத்தியது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நிலவிய பிளவுகளுக்கு மத்தியிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 35 சபைகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்கிற்கு வெற்றி களைத் தக்க வைத்துக்கொண்டது. இருப்பினும் ஆட்சியமைப்பதில் தமிழர சுக் கட்சி யின் விட்டுக்கொடுக்காத தன்மையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜன நாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டிணைவு பத்து உள்ளுராட்சி மன்றங்கள் வரையில் தமதாக்கிக் கொண்டன. இந்தக் கூட்டிணைவ கொள்கை அடிப்படையில் அமை வதாகவே காண்பிக்கப்பட்டு உடன்பாடும் செய்யப்பட்டது. குறித்த கொள்கைக் கூட்டில் சந்திரகுமார் தலைமையிலான சமவத்துக் கட்சியும் இணைந்து கொண்டிருந்தது. எனினும் சொற்ப காலத்தில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியானது 13ஆவது திருத் தச்சட்டத்தினை வலியுறுத்தி செயற்பாடுகளை ஆரம்பித்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி முரண்பட்டது. ஈற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதற் குப் பின்னால் சுமந்திரனின் முதலமைச்சர் கனவும் காணப்படுகின்றது என்பது தனிக்கதை. அதேநேரம், மலையக அரசியலில், பாரம் பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான பின்ன டைவைச் சந்தித்த நிலையில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஓரளவு தம்மை தக்க வைக்கும் நிலைக்குச் சென் றிருந்தன. குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம், ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த சமூக நீதியாகவும், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானத்தின் பிராகரம் எடுக்கப்பட்ட செயற் பாடாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கறுப்பு அத்தி யாயமாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள் உள்ளிட்ட 240 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், போர்க்கால மீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டு வந்திருந்ததோடு பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் வெகுவாகவே வலியுறுத்தியுள் ளது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 6, 2025 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் 60ஃ1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இத்தீர்மானம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் சர்வதேச பொறிமுறையை 2027வரை நீட்டித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை ‘வெளிநாட்டுத் தலையீடு’ என்று ஆரம்பத்தில் விமர்சித்தாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய கட்டாயத்தில், நவம்பர் மாதம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப் பாட்டிலிருந்த சுமார் 5,000 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 2025ஆம் ஆண்டு ‘அனைத்து நாடுகளுடனும் நட்பு’ என்ற கொள்கையின் கீழ் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயங்களைக் கண்டது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான காலப்பகுதியிலர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியமானது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மன்னார் முதல் தமிழ்நாடு வரையிலான கடல்வழி மின்சார இணைப்பு, திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க ‘UPI’ பணப்பரிமாற்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. அத்துடன் மலையகத்தில் மேலும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மே மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மியும், ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும் மற்றும் நவம்பர் மாதம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025இல் சீனா (ஜனவரி), வியட்நாம் (மே), ஜேர்மனி (ஜூன்) மற்றும் ஜப்பான் (செப்டெம்பர்) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக் கமளித்தார். ஆனால் குறித்த சந்தித்து உத்தியோக பூர்வ இருதரப்பு சந்திப்பாக நடைபெற்றிருக்க வில்லை. பொருளாதார ரீதியாக, செப்டெம்பரில் ஜப்பான் மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ் சாலைப் பணிகள் (கடவத்தை – மீரிகம) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு கெடுபிடிகள், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போன்றவை நிர்வாக ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயண மொன்றுக்காக பயன்படுத்திய நிதி தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது கொழும்பு வாழ் மேல்தட்டு வர்க்கத்துக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆண்டின் இறுதியில், நவம்பர் 28 அன்று இலங்கையின் கிழக்குக் கரையைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளி ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உள்நட்டில் உருவாக்கியுள்ளது. இச்சூறாவளியால் நாடு முழுவதும் சுமார் 640க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.6மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கிராமங் களையே துடைத்தெறிந்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். புயலின் பாதிப்புகள் தணியாத நிலையில், டிசம்பர் 23, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக வெளிப்படையில் காணப்படுகின்றது. ஆனால் இதற்கான பின்னணியைப் பார்க்கின்றபோது இந்தியா இலங்கையில் எந்த வொரு தரப்பினரையும் காலூன்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை அப்பட்ட மாகவே வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே குறித்த விடயத்தில் தீவிரமான கவனம் அவசியமானின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு என்பது இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு ஊழல் ஒழிப்பு கெடுபிடிகளுக்கும், சர்வதேச இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண முயற்சித்த ஆண்டாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன் னேற்றங்கள் ஏற்படுவது போன்று தென்பட்டாலும் நிலையான அரசியல் தீர்வு மற்றும் நீதிக்கான பயணம் இன்னமும் நீண்டதாகவே உள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் பேரிடர் மேலாண்மையில் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நடைபோட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான பெரும் சவால்களாக எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்விதமான சூழலில் புதிய ஆண்டை முகங்கொடுப்பது மிகவும் அவதானத்துக்கு உட்பட்டதாகும். https://www.ilakku.org/சோதனைகளும்-வேதனைகளும்-நி/
  18. கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது 31 December 2025 கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு மாநகர சபையின் ஆளுமையை ஆளும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/438471/colombo-municipal-council-budget-passed
  19. ”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல” யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் . இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வர நிலையில் அதனை மக்கள் அடாத்தாக அகற்ற வேண்டும் என கருதியது இல்லை. இலங்கை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடங்களை எவ்வாறு அகற்றுகிறீர்களோ அவ்வாறே இந்த சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டிடத்தையும் அகற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. வலி வடக்கில் #இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில் இந்த சட்ட விரோத விகாரக் கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளை சூழ்ந்து தமிழ் மக்களின் பாரம்பரியமாக காணப்பட்ட நான்கு #கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஒரு இந்து ஆலயமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதில் 2013 ஆம் ஆண்டு மயிலிட்டி பிள்ளையார் ஆலயம் உயர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்த போது உரிய அனுமதிகளை பெற்று பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதி மக்களை ஒரு நாள் வழிபட அனுமதித்தார்கள்.அங்கு வழிபாட்டை நடத்தியவர்கள் தாங்கள் சென்றபோது ஆலயம் முழுமையாக இருந்ததாகவும் தாங்கள் வழிபாடுகளை மேற்கொண்டோம் என தெரிவித்த நிலையில் தற்போது குறித்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளது . சட்டரீதியாக மக்கள் வழிபட்ட ஆலயங்களை அழிக்க முடியுமென்றால் சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டடத்தை அகற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. நாங்கள் மதங்களை மதிக்கிறோம் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல விடுதலைப் புலிகள் கூட தமது கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது நயினாதீவு விகாரை மற்றும் யாழ் நாக விகாரைகளை அகற்ற நினைக்கவில்லை பாதுகாத்தார்கள். இன்று #யாழ்ப்பாணத்தில் விகாராதிபதிகள் என்ன கூறுகிறார்கள் அண்மையில் #நயினாதீவு நாக விகாராதிபதி கூறினார் தையிட்டியில் புத்தபெருமான் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை கட்ட யாருக்கும் கூறவில்லை. தையிட்டி திஸ் விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்க வேண்டும் என கூறுகிறார். அதேபோல் யாழ்ப்பாணம் நாக விகாரதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளை அந்த மக்களுக்கே மீணடும் வழங்க வேண்டும் எனக் கூறுகிறார். இதிலிருந்து என்ன வழங்குகிறது குறித்த விகாரை சட்டவிரோதமாக அடாத்தாக காணப்படுகின்றமை தெளிவாக பௌத்த துறவிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பௌத்த மதத்தை இழிவு படுத்தவில்லை யாழிலிருந்து பௌத்த மதத்தை அகற்ற வேண்டுமென கூறவில்லை சட்ட நீதியாக எமது மக்களின் காணி உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு கோருகிறோம். ஆகவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டிடத்தை அகற்றுவதற்காக போராடும் நாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ கிடையாது தமிழ் இனத்தின் இருப்புக்காகவும் இன விடுதலைக்காகவும் போராடுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார் https://www.samakalam.com/தையிட்டி-போராட்டம்-நில-அ/
  20. செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம் யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. செம்மணி வளைவு அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம். மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/controversial-decision-nallur-pradeshiya-sabha-1767161372
  21. @புலவர் ஐயா ஓமெண்டால் சரி! ஐயாவை இந்தப் பக்கம் காணோம்!
  22. @புலவர் , 41 வது கேள்வியில் இருந்து 69 வது கேள்விவரையான பதில்களைத் திரும்பத் தரவேண்டும். உங்கள் பதில்கள் என்ன என்றே புரியவில்லை! அல்லது முதலில் இருந்தே தரலாம். எனவே மீள ஒருதடவை முயற்சியுங்கள்.. @வீரப் பையன்26 , @செம்பாட்டான் , ஐயாவுக்கு உதவி செய்யுங்கோ 😬
  23. ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு ! 29 டிசம்பர் 2025 யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை. அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின. ரமணியின் ஓவியங்களை மேலும் ரசிக்கச் செய்தவர், எம்முடைய ஓவிய ஆசிரியர் கிருஷ்ணதாசன். ஒவியர் ரமணிக்கு நெருக்கமான அவர் வரையும் ஓவியங்களிலும், எழுத்துக்களிலும், ரமணியின் ஓவியப்பாணி வெளிப்படும். அவரது அதீதமான அவரது சிலாகிப்புக்களும், ரமணியின் ஓவியங்கள் மீதான எமது ரசணை அதிகமாவதற்கு ஒரு காரணமெனலாம். ரமணி வெறும் ஓவியர் மட்டுமல்ல தேர்ந்த ஒரு சிற்பியும் கூட என்பது பின்னால் நாம் தெரிந்து கொண்ட விடயம். யாழ் இந்துக்கல்லூரி ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை , தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, எனப் பல பெரியார்களின் உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர். அன்னாருக்கு எமது அஞ்சலிகள் ! https://4tamilmedia.com/menu-essay/culture/ramani https://www.facebook.com/share/p/1FqsnUuJCN/?mibextid=wwXIfr முகநூலில் இருந்து.. ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளேன். ஓர் ஆசானாக... ஆறாம் வகுப்பிலிருந்தே எனக்கு ஓவியத்தின் அரிச்சுவடியைக் கற்றுத் தந்தவர். வண்ணங்களோடும் கோடுகளோடும் நான் உறவாடக் காரணமானவர். ஒரு மாணவனாக அவரிடம் நான் கற்ற கலைப்பயிற்சிகள் என் வாழ்நாள் சொத்தாகும். அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக எமது பாடசாலையில் உருவாக்கப்பட்ட மில்லர் சிலைவடிப்பின் போது அவருக்கு ஒத்தாசையாக இருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பது என் வாழ்வின் பெரும் பாக்கியம். யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின. முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும், இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும். எனது பெருவிருப்பிற்குரிய குருநாதர் “ரமணி சேர்” அவர்களின் இழப்பால் துயருறும் கலையுலகத்தினருக்கும், எனது அருமை பள்ளித்தோழர்களான அவரது புதல்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கலை மேதையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி!
  24. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர். கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=354091
  25. பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி 29 December 2025 மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/438053/various-services-declared-as-essential-services-president-takes-action

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.