Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை ! 25 Oct, 2025 | 11:09 AM அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும். இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி, கடற்கரையை நோக்கிப் படையெடுக்கின்றன. கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை அமைக்க, பெண் நண்டுகள் அவற்றில் முட்டைகளை இட்டு சுமார் இரண்டு வாரங்கள் அடைகாக்கின்றன.நவம்பர் மாதத்தின் மத்தியில், முட்டைகளில் இருந்து வெளிவரும் குட்டி நண்டுகள் கடலுக்குள் செல்கின்றன. இவை கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு, இளம் நண்டுகளாக மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்குத் திரும்புகின்றன. தற்போது இனப்பெருக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ள நண்டுகள், தீவின் வீதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த வழிகளில் மனிதப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவின் பணிப்பாளர் அலெக்ஸா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த அற்புதமான பயணத்திற்காகத் தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை." என்று தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது நண்டுகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகத் தீவின் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். https://www.virakesari.lk/article/228623
  2. க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! 25 Oct, 2025 | 10:51 AM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளார். அனைத்து திருத்தங்களும் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 தேர்வு நிலையங்களில் நடைபெறும். பொது தகவல் தொழில்நுட்ப ( GIT ) தேர்வு டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228615
  3. “ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது! 25 Oct, 2025 | 10:36 AM நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்தல்காரர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைசதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர் படகு மூலம் கஞ்சா மாத்திரம் கடத்தி உள்ளாரா அல்லது பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி உள்ளரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய “ஆனந்தன்” என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், “ஆனந்தன்” வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228620
  4. தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் ! 25 Oct, 2025 | 12:37 PM தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறுகிறது. இந்நிலையில், தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுசீலி பட்டப்படிப்பை முடித்தவர். அங்குதான் அவர் தனது கணவராகிய பேராசிரியர் அல்ஃபிரட் ஜெயரத்தினம் வில்சன் (Prof. A. J. Wilson) அவர்களைச் சந்தித்தார். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன், இலங்கையின் அரசியல் குறித்துப் பல நூல்களை எழுதிய புகழ் பெற்ற கல்விமானாக விளங்கியவர். பிற்காலத்தில் சுசீலி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில்முறை நூலகராக (Professional Librarian) தகுதி பெற்று, தனது கணவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கனடாவில் குடியேறிய பின்னர், அவர் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தில் (University of New Brunswick) நூலகராகப் பணியாற்றினார். சுசீலி வில்சன், கட்சிக்கும், குறிப்பாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூருகிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள் மல்லிகா, மைதிலி மற்றும் குமணனுக்கு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228629
  5. உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmh5y6v47017do29n9l64zn42
  6. வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை! வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் தொடர் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காகவே நாளைய தினம் ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது. வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை மேலும் அறிவித்துள்ளது. https://newuthayan.com/article/வடமாகாணத்ததில்__நாளை_13_மணி_நேர_மின்_தடை!
  7. இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல் adminOctober 24, 2025 யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது. நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 26 பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/221923/
  8. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | “தி சாட்டனிக் வெர்சஸ்” நாவல் ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல் அ. குமரேசன் வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தடைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டதில்லை எனும் அளவுக்குத் தாக்குதல்களுக்கு உள்ளானது ஒரு நாவல். படைப்பாளி இப்போதும் பொது இடங்களுக்கு வர இயலாமல் பதுங்கி வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் அந்த நாவல் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) (சைத்தான் வசனங்கள்). இந்தியா விடுதலையடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, 1947 ஜூன் 19இல், அன்றைய பம்பாய் நகரில், பிறந்தவர் அஹமது சல்மான் ருஷ்டி (Salman Rushdie). குடும்பம் பிரிட்டனில் குடியேறியபோது அங்கே கல்வி பயின்றவர். ருஷ்டி தொடக்கத்தில் ஒரு பதிப்பகத்தில் படிதிருத்துநராக வேலை செய்தார். அது அவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டது போலும். அவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ புராணக் கதைக் கூறுகளுடன் அறிவியல் புனைவாக வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூலமாக சமூக மாற்றங்கள் பற்றிப் பேசும் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ (1981ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பெற்ற இந்த நாவல், 1994, 2008 ஆகிய ஆண்டுகளில் ‘புக்கர் விருதுபெற்ற நாவல்களில் சிறந்த படைப்புக்கான விருதை இரண்டு முறை பெற்றது), பாகிஸ்தானின் அரசியல், சமூக நிலைமைகளை விமர்சிக்கும் ‘ஷேம்’, குழந்தைகளுக்காக எழுதிய ‘ஹாரூன் அன் தி ஸீ ஆஃப் ஸ்டோரீஸ்’, தென்னிந்தியப் பின்னணியில் பண்பாடுகள் பற்றி விவாதிக்கும் ‘தி மூர்ஸ் லாஸ்ட் சை’, கிரேக்கப் புராணக் கதைகளை இணைக்கும் ‘தி கிரவுண்ட் பினீத் ஹெர் ஃபீட்’, இந்தியப் பேராரியருக்கு நியூயார்க் நகரில் ஏற்படும் கலாச்சார அதிர்வுகளை சித்தரிக்கும் ‘ஃபியூரி’, காஷ்மீர் பின்னணியில் பயங்கரவாதத்துக்கு எதிராக அன்பின் வலிமையை முன்வைத்த ‘ஷாலிமர் தி க்ளோன்’, அக்பர்-பிளாரன்ஸ் காலக்கட்டங்களுக்குச் செல்லும் ‘தி என்சான்ட்டர்ஸ் ஆஃப் ஃபிளாரன்ஸ்’, சிறார் நாவலாகிய ‘லூகா அன் தி ஃபயர் ஆஃப் லைஃப்’, புராணக் கற்பனைகளையும் நிகழ்காலச் சிக்கல்களையும் நியூயார்க் பின்னணியில் ஆராயும் ‘டூ இயர்ஸ் அன் ட்வென்டி எய்ட் நைட்ஸ்’, டொனால்ட் டிரம்ப் காலக்கட்ட அமெரிக்கப் பின்னணியில் ஒரு மர்மமான குடும்பத்தை அறிமுகப்படுத்தும் ‘தி கோல்டன் ஹவுஸ்’, நவீன காலத்தில் அடையாளத் தேடல் பயணம் பற்றி விவரிக்கும் ‘குயிக்சோட்’, ஒரு பெண்ணின் ஆற்றல் ஓர் அரசாட்சியையே நிறுவுவதாகக் கூறும் ‘விக்டரி சிட்டி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைத் தொகுப்பு, தன் வரலாறு, நினைவுக் குறிப்புகள் ஆகிய நூல்களும் வந்துள்ளன. பதற்றங்களும் ஃபத்வாவும் ருஷ்டியின் நாவல்கள் பெரும்பாலும் புராணக் கதைக் கூறுகளும், மதநூல்களின் கருத்துகளும் கலந்து நவீன வாழ்க்கையைப் பேசுகின்றன என்று செயற்கை நுண்ணறிவுத் துணைகள் தெரிவிக்கின்றன. இவரது நான்காவது நாவல்தான் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses). 1988இல் லண்டனில் வெளியாகிப் பலநாடுகளுக்கும் பயணப்பட்ட இந்த நாவலுக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புத்தகப் படிகள் தீக்கிரையாக்கப்பட்டன. புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பாகிஸ்தான் அரசு புத்தகத்தை இறக்குமதி செய்யவோ விற்கவோ கூடாதென்று தடை விதித்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிலும், ராஜீவ் காந்தி அரசு, படைப்புச் சுதந்திரத்திற்குத் துணையாக நிற்பதற்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாறாக, புத்தகத்திற்குத் தடை விதித்தது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல அரசாங்கங்கள் தடை விதித்தன. ஈரான் நாட்டு அரசுத் தலைவரும் இஸ்லாம் தலைமை குருவுமான அயதுல்லா கோமெய்னி, புத்தகத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கைக்கே தடை விதித்தார். “ஃபத்வா” எனப்படும் அந்த ஆணையின்படி உலகில் எங்கேயும் இருக்கக்கூடிய மத விசுவாசிகள், ருஷ்டியை எங்கே கண்டாலும் கொலை செய்யலாம். கொல்ல வாய்ப்பில்லாதவர்கள் அவர் இருக்குமிடம், நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களைக் கொல்லக்கூடியவர்களுக்கு அளிக்கலாம். ஒரு புனிதக் கடமையாக அறிவிக்கப்பட்ட இந்த ஃபத்வாவைத் தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்தன. ஜப்பான் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைத்தூதரையும், மார்க்க போதனைகளையும் இழிவுபடுத்திவிட்டார் என்பதே ருஷ்டி மீதான குற்றச்சாட்டுகளின் சாரம். மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்தது. பல ஆண்டுகள் கழித்து, பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிவர விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் இடுப்பில் கத்திக்குத்து பட்டு காயமடைந்தார். மறுபடி பாதுகாப்பு வளையத்திற்குள் பதுங்க வேண்டியதாயிற்று. அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய திறனாய்வாளர்கள், நாவலில் அப்படி இழிவுபடுத்துகிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்கள். விமர்சிக்கப்படுகிற பகுதி இலக்கியப்பூர்வமான கற்பனைச் சித்தரிப்புதான் என்று கூறினார்கள். மார்க்கம் சார்ந்த பலர் புலம்பெயர்ந்தவர்களாகப் பல நாடுகளில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற நாவல்தான் இது என்றார்கள். எந்த மக்களுக்காக அவர் தன் படைப்பின் மூலம் பேசுகிறாரோ அந்த மக்களைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்யத் துடிப்பது துயரமானது என்றும் கவலை தெரிவித்தார்கள். இவ்வாறு ருஷ்டிக்கு ஆதரவாக எழுதியவர்களில் மதம் சார்ந்தவர்களும் இருந்தது கவனத்திற்குரியது. சமூகப் பொறுப்பு படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எப்போதும் தோள்கொடுக்கிறவர்களிலும் சிலர், படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சமூகப் பொறுப்பும் முக்கியமானது. நம்பிக்கைகள் சார்ந்தவற்றை விமர்சிக்கிறபோது கூட நம்புகிறவர்கள் ஏற்கத்தக்க வகையில் நுட்பமாக அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றார்கள். படைப்புச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா அல்லது தோழமையானவையா என்ற விவாதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்த நாவலையும் நாவலாசிரியரையும் எதிர்த்துக் கிளம்பியவர்கள் எல்லோரும் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசித்திருப்பார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகப் படித்து ஒரு முடிவுக்கு வராமலே, சமூகத் தலைவர்கள் அல்லது இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்புவதே வேலையாக இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே சுயமான சிந்தனை ஏதுமின்றி வன்முறைக்குத் தயாராகிறவர்கள் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் சாதிகளிலும் இன்னபிற அமைப்பிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இருவரின் கதை ருஷ்டியின் மாய மெய்யியல் சித்தரிப்புத் தன்மையுடன் புத்தகம் சொல்கிற கதை என்ன? இந்தியாவில் இந்தித் திரைப்பட உலகம் சார்ந்த இருவர் இதன் நாயகர்கள். கிப்ரயீல் ஃபரிஷ்டா நட்சத்திர நடிப்புக் கலைஞர். சலாவுதீன் சாம்ச்சா இங்கிலாந்தில் வேலை செய்யும் பின்னணிக் குரல் கலைஞர். ஃபரிஷ்டா பக்திப் படங்களில் இந்து தெய்வங்களாக வந்து புகழ்பெற்றிருப்பவர். சாம்ச்சா தன் தந்தையுடனும் இந்தியச் சூழலுடனும் ஒத்துப்போக மறுத்து லண்டனில் குடியேறியவர். இவர்கள் இருவரும் பயணிக்கும் விமானத்தை மற்ற பயணிகளோடு சேர்ந்து கடத்துகிறது பஞ்சாப் தனிநாடு தீவிரவாதக் குழு. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விமானத்தை ஆற்றின் மேல் பறக்க வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். மற்ற அனைவரும் மாண்டுவிட, ஃபரிஷ்டாவும் சாம்ச்சாவும் மாயமான முறையில் உயிர் பிழைக்கிறார்கள். ஃபரிஷ்டா இறைத்தூதர் கிப்ரயீல் போலவும், சாம்ச்சா ஒரு சாத்தான் போலவும் உருமாறுகிறார்கள். ஃபரிஷ்டா தலையின் பின்னால் அவ்வப்போது ஒளிவட்டம் தோன்றுகிறது, சாம்ச்சாவுக்கு ஆட்டுக் கொம்புகளும் கால்களும் முளைக்கின்றன. சம்ச்சாவை ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் கைது செய்து அவமதிக்கவும் செய்கின்றனர். ஃபரிஷ்டா தனது முன்னாள் காதலியான ஆலியா என்ற மலையேற்ற வீரரைக் கண்டுபிடித்துச் சேர்கிறார். இருப்பினும், தன்னை இறைத்தூதராகக் கருதுவதன் மனச்சிதைவுக்கு உள்ளாக அவர்களது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. லண்டனில் மதப் பரப்புரையில் ஈடுபட முயல்கிறார் ஃபரிஷ்டா. அந்த முயற்சி தோல்வியடைகிறது. தெருவில் இறங்கி நடக்கும் ஃபரிஷ்டா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சிசோடியா கார் மோதுகிறது. அவர் ஆலியாவுடன் சேர்ந்து ஃபரிஷ்டாவை மனச்சிதைவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். சாம்ச்சாவின் தோற்றமும் நடத்தையும் தீவிரமடைகின்றன. விமான வெடிப்பில் அவர் இறந்துவிட்டதாக நம்பும் அவரது மனைவி பமீலா, நண்பர் ஜம்பி ஜோஷி இருவரும் உறவைத் தொடங்கியிருப்பது தெரியவர மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஜம்பி ஒரு விடுதியை நடத்தும் குடும்பத்தினருடன் அவரைத் தங்க வைக்கிறார். கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாக்காததாலும், விமான விபத்துக்குப் பிறகு கைவிட்டதாலும் ஃபரிஷ்டா மீது அ சாம்சாச்சாவுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவரது சாத்தான் தோற்றம் தீவிரமடைந்து பின்னர் மனித உருவத்துக்குத் திரும்புகிறார். ஃபரிஷ்டாவின் திரையுலக வெற்றியிலும் காழ்ப்பு கொள்ளும் சாம்ச்சா அவரைப் பழிவாங்க எண்ணுகிறார். ஃபரிஷ்டாவின் மனச்சிதைவை அறியும் சாம்ச்சா, தொலைபேசி மூலம் வெவ்வேறு குரல் பதிவுகளையும், ஆலியா பற்றிய விவரங்களையும் பயன்படுத்தி , தவறான எண்ணம் வரச் செய்து. அவர்களுடைய உறவைச் சிதைக்கிறார். சாம்ச்சா, ஜம்பி, பமீலா மூவரும் கருப்பின மக்கள் நலச் செயல்பாட்டாளர் டாக்டர் உஹுரு சிம்பா ஆதரவுப் பேரணியில் பங்கேற்கிறார்கள். தொடர் கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்படும் சிம்பா,. சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிடுகிறார். சமூகக் கண்காணிப்பில் ஈடுபடும் சீக்கிய இளைஞர்கள் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் – அவன் ஒரு வெள்ளையன். ஒரு தெற்காசிய இரவு விடுதியில் காவல்துறை சோதனை நடத்துகிறது. அதனால் கலவரம் தூண்டப்படுகிறது. காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல்களை விநியோகிக்க பமீலாவும் ஜம்பியும் திட்டமிடுகிறார்கள், ஆனால் முகமூடி ஆசாமிகள் கட்டடத்திற்குத் தீவைத்து, ஆதாரங்களை அழித்து இருவரையும் கொல்கிறார்கள். கலவரக்காரர்களால் எழும் தீப்பிழம்புகள் தனது அற்புத மகிமையின் விளைவு என்று நம்புகிறார் ஃபரிஷ்டா. தொலைபேசியில் வந்த தவறான தகவல்களுக்கு சாம்ச்சாவே காரணம் என்பதை அறியும் ஃபரிஷ்டா அவரைக் கொல்லும் எண்ணத்துடன் புறப்படுகிறார். தீப்பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கும் விடுதிக் காப்பாளரையும் அவரது மனைவியையும் காப்பாற்ற முயல்கிறார் சாம்ச்சா. அதைக் காணும் ஃபரிஷ்டா கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார். இருவரும் இந்தியா திரும்புகிறார்கள். ஃபரிஷ்டா திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்கள் தோல்வியடைகின்றன. சிசோடியா-ஆலியா இருவரும் கொல்லப்படுகிறார்கள். சாம்ச்சா, மனத்தாங்கலுடன் பிரிந்திருந்த தனது தந்தையைப் பார்க்கச் செல்கிறார். சிசோடியாவையும் ஆலியாவையும் கொன்றது ஃபரிஷ்டாதான் என்று அவரிடமிருந்து தெரியவருகிறது. சாம்ச்சாவின் தந்தை இருக்கும் பண்ணைக்குச் சென்று, அவரைக் சுடப் போவது போலத் துப்பாக்கியை நீட்டுகிறார். சில நொடிகளில் துப்பாக்கியைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொள்கிறார். தந்தையுடன் சமாதானமாகும் சாம்ச்சா தனது இந்திய அடையாளத்திலும் இணக்கம் கொள்கிறார். கோபத்திற்குக் காரணம் இந்தக் கதையில் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டதாகக் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஃபரிஷ்டாவின் மூன்று கனவுகள் இருக்கின்றன. முதல் கனவில், ஜாஹிலியா நகரில் (மெக்கா நகர அடையாளமாக இப்படியொரு நகரம்) இறைத்தூதர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட வசனங்களைச் சொல்கிறபோது, பழைய தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அதே போனற வேறு சில வழிகாட்டல்களையும் கூறுகிறார். பின்னர், அவை சாத்தானின் வேலையால் தவறாகச் சொல்லப்பட்டுவிட்டன என்றும், உண்மையில் அவை இறைவனால் சொல்லப்பட்டவையல்ல என்றும் கூறுகிறார். நகரத்தைக் கைப்பற்றும் தூதருக்கு இரண்டு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர், வேற்று மதப் பூசாரி. இன்னாருவர் எதையும் சந்தேகிக்கிற பகடிப் புலவர். நகரம் கைப்பற்றப்படும்போது ஒரு பாலியல் விடுதியில் பதுங்கிக்கொள்கிறார் அங்குள்ள பெண்களுக்கு தூதரின் மனைவிகளுடைய பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. தூதரிடமிருந்து தப்பிக்கும் ஒருவன், தனக்கு அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறான். அவர் உண்மையிலேயே தனக்கு இறைவன் சொன்ன வசனங்களில் சிலவற்றை மாற்றிவிட்டார் என்றும் கூறுகிறான். இவையெல்லாம், இறைத்தூதர் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பதாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இரண்டாவது கனவில், இந்தியாவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணான ஆயிஷா, தனக்கு இறைத்தூதரின் அருள் கிடைத்ததாகக் கூறி, மக்களை அழைத்துச் செல்கிறாள். அரபிக் பெருங்கடல் குறுக்கிடுகிறது. இறையருள் இருப்பதால் கடல்நீர் மீது அவர்கள் நடக்க முடியும் என்கிறாள். அதைக் கேட்டு கடல் மீது நடக்கிறபோது, அவர்கள் நீரில் மறைகிறார்கள். அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்றும், இல்லை இறையருளால் புனித நகரத்தை அடைந்துவிட்டார்கள் என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது கனவில் மதவெறியரான இமாம் என்பவர் வருகிறார். அவர், இடைறத்தூதராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஃபரிஷ்டாவை, தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிஷா என்ற அரசியுடன் செயற்கையாகப் போரில் ஈடுபட வைக்கிறார். இத்தகைய சித்தரிப்புகள் வரம்புமீறிவிட்டன, தூதரின் சொற்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள்தான் விபரீதங்களாக உருவெடுத்தன. இறைத்தூதர், புனித நகரம் ஆகிய பெயர்களைக் கற்பனையாகப் புனைந்தவர், இவற்றையும் வேறு வகையில் கொண்டுவந்திருக்க முடியும் என்ற கரிசனக் குரல்களும் கேட்கின்றன. ஆயினும், ஃபத்வா அறிவித்து ஒருவரின் வெளியுலகை இருட்டடிப்பு செய்வது ஏற்க முடியாதது என்ற படைப்புரிமைக் குரல்களும் உரக்க எழுகின்றன. ஒரு படைப்பில் தவறான சித்தரிப்பு இருப்பதாகக் கருதப்படுமானால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், சரியானது எது என்று எடுத்துக்காட்டவுமான வாய்ப்பை விமர்சிக்கிறவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயன்றி இப்படி ஆளை ஒழிக்கும் பாதையில் செல்வது நாகரிகக் காலத்திற்குப் பொருந்ததாதது. மேலும் அது மார்க்கத்தினர் அனைவருமே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த உணர்வுகளும் மேலோங்க, அந்த “பத்வா” ஆணையை விலக்கிக்கொள்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை. ஏனென்றால், மதவிதிகளின்படி ஃபத்வா ஆணையைப் பிறப்பித்தவர் யாரோ அவரேதான் விலக்கிக்கொள்ளவும் அதிகாரம் உள்ளவர். ஆனால் அயதுல்லா கோமெய்னி காலமாகிவிட்டாரே… எதிர்காலத்தில் எந்த மதம், எந்த அமைப்பானாலும் இப்படிப்பட்ட தண்டனை ஆணைகளைப் பிறப்பிக்கிற அதிகாரங்கள் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை மனித நேய மத நம்பிக்கையாளர்கள் எழுப்புவது சிறந்ததொரு சேவையாக அமையும். அதற்கொரு இணக்கத் துணையாக, தி சாட்டனிக் வெர்சஸ் (The Satanic Verses) இந்த நாவல் 1988ஆம் ஆண்டுக்கான ஒயிட்பிரெட் விருது (இப்போது கோஸ்டா புத்தக விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-17-salman-rushdies-the-satanic-verses-novel-based-article-written-by-a-kumaresan/
  9. ஏகலைவன் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் துரோணாச்சாரியாரின் கண்காணிப்பின் கீழ் கௌரவர்களும் பாண்டவர்களும் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். அப்பொழுது அர்ஜுனனுக்கு மட்டும் அவர் தனிக்கவனம் கொடுப்பதாக துரியோதனன் குற்றம் சாட்டினான். அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவும், அர்ஜுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு போட்டி ஒன்றை துரோணர் ஏற்பாடு செய்தார். அங்கே இருந்த மரத்தின் உச்சி கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பழத்தை ஒரே கணையில் வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி. அங்கிருந்த அனைவரும் முயன்றும் யாராலும் அப்பழத்தை வீழ்த்த இயலவில்லை. அர்ஜுனன் அதை ஒரே அம்பில் வீழ்த்தினான். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் கணையை தொடுக்க குறி வாய்த்த பொழுது உங்கள் கண்ணில் பட்டது என்ன என துரோணர் கேட்டார். ஒவ்வொருவரும் , கிளை, இலை பின் பழம் என சொல்ல அர்ஜுனனோ தன் கண்களுக்கு அப்பழம் மட்டுமே தெரிந்தது எனக் கூறினான். இந்த ஒரு பதிலிலேயே அங்கிருந்தவர்களில் மிக சிறந்த வில்லாளி யாரென்று அனைவருக்கும் புரிந்தது. பிரதம சீடனை மிஞ்சிய வேடுவ இளவரசன் ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் துளி இரத்தமும் சிந்தவில்லை. அந்த வித்தையை கற்றவர் யார் என்று அனைவரும் யோசிக்க அப்பொழுது அங்கே வந்த நிஷாத நாட்டு இளவரசன், துரோணரை வணங்கி “என் பெயர் ஏகலைவன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை வணங்கினான். அப்பொழுதுதான் முன்பு நடந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. சில காலம் முன்பு அவரிடம் வந்த ஏகலைவன் தன்னை சிஷ்யனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால் குரு வம்சதிற்கு குருவாக இருந்த காரணத்தினால் நிஷாத நாட்டு இளவரசனை அவரால் சிஷ்யனாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார். “குருவே! உங்கள் உருவத்தை மண்ணால் செய்து வைத்து தினமும் உங்களை வணங்கி வில் பயிற்சி செய்துவந்தேன். உங்கள் கருணையால் நான் நன்கு கற்று வருகிறேன்” என அவன் கூறினான். அவன் கூறியதை கண்டு வியந்த துரோணர், இப்படி ஒரு வில்லாளி இருப்பது என்றும் குரு வம்சத்திற்கு ஆகாது என மனதில் நினைத்துக் கொண்டார். பின் அவனிடம் “நீ நன்கு கற்று தேறி வருவது மகிழ்ச்சியே! ஆனால் , குரு தக்ஷிணையாக என்ன தரப்போகிறாய்?” எனக் கேட்டார். ஏகலைவனும் பணிவுடன் அவர் விரும்பும் தக்ஷணையை தருவதாகக் கூறினான். “அப்படியானால் உனது வலது கை கட்டை விரலை எனக்குத் தருவாயாக” என கேட்டார். அவர் கூறியவுடன் எந்தவித கோபமோ வருத்தமோ தயக்கமோ இன்றி தனது வலது கட்டை விரலை வெட்டி அவரது காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன். தோல்வியான வெற்றி சிறு வயதிலேயே தனது சகோதர்கள் அனைவரையும் விட பெரிய உடலையும், அதிக பலத்தையும் பெற்றவனாக பீமன் இருந்தான். தன் பலத்தை தன் சகோதரகளைக் காப்பாற்ற பயன்படுத்திய அதே சமயத்தில் கௌரவர்களை துன்புறுத்தவும் உபயோகித்தான். இதனால் எரிச்சலடைந்த துரியோதனன், பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான். ஒருமுறை கங்கைக் கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் , பீமனின் உணவில் விஷத்தைக் கலந்து விட்டான். அது தெரியாத பீமன் அந்த உணவை உண்டு மயங்கிவிட, மற்ற சகோதரர்களின் உதவியுடன் அவனை கயிற்றில் கட்டி, கங்கையின் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டான். பீமன் வீழ்ந்த இடத்தில கொடிய நாகங்கள் வாழ்ந்து வந்தன. பீமனை அவை கடிக்க, அவற்றின் விஷம் ஏற்கனவே அவன் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தின் முறியடிக்க, பீமன் புத்துயிர் பெற்று எழுந்தான். தாங்கள் கடித்தும் அவன் இறக்காதது கண்டு அதிர்ச்சியடைந்த பாம்புகள் தங்கள் தலைவனான வாசுகியிடம் சென்று முறையிட்டு பீமனை அங்கே கொண்டு வந்தன. பீமனைக் கண்டவுடன் அவன் குரு வம்ச இளவரசன் என அடையளாம் கண்டுகொண்ட வாசுகி , பீமனின் உடல் நலம் தேற அவர்களின் அபூர்வ மருந்தை அவனுக்கு கொடுத்தது. அதைக் குடித்தவுடன் பீமனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் உடல் புத்துணர்வு பெற்றது. அந்த மருந்து மேலும் கிடைக்குமா என அவன் கேட்க, மேலும் ஏழு குவளை மருந்து அவனுக்கு தரப்பட எட்டு குளிகை மருந்தை குடித்து புதிய பலம் பெற்றான் பீமன். அதைக் குடித்தவுடன் அவனுக்கு தூக்கம் சொக்க, ஒரு வார காலம் வாசுகியின் அரண்மனையில் தங்கி ஓய்வெடுத்தான். பின், அவனிடம் விடைபெற்று கரைக்கு திரும்பினான். இறந்துவிட்டான் என கௌரவர்கள் நினைத்த பீமன், புத்துணர்வுடனும் புதிய பலத்துடனும் வருவது கண்டு துரியோதனன் தன்னைத் தானே நொந்து கொண்டான். https://solvanam.com/2025/05/25/ஏகலைவன்/
  10. வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA) மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம். அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள் 1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility) 2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing) 3. வலுவான வலையமைப்பு (Stronger Networking) 4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention) 5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth) 6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு (Personal & Brand Equity) விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் படிக்கட்டுக்கள் . விருதுகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை நீங்களே ஒருமுறை மதிப்பாய்வு செய்ய கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர். https://jaffnazone.com/news/51566
  11. யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம் வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://jaffnazone.com/news/51571
  12. கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள் October 24, 2025 10:36 am குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் ‘மிஸ் இலங்கை’ கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, அவர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆறு பெண்களையும் அழைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில், பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் இருக்கும் ஆபாச காணொளி தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மற்ற ஐந்து நடிகைகளின் புகைப்படங்களும், ‘மிஸ் இலங்கை’ மாடலின் புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் காணப்பட்டன. பெரும்பாலான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. https://oruvan.com/pornographic-videos-on-kehelbaddara-padmes-phone-actresses-summoned-for-questioning/
  13. வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன் October 24, 2025 10:59 am இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.” எனவும் க. கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/white-flag-issue-international-investigation-needed-billionaire/
  14. போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி October 24, 2025 அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/the-entire-country-must-unite-to-eradicate-the-drug-scourge/
  15. கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு லக்ஸ்மன் ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம். இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற தோரணையில் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது சத்தமின்றி இருக்கிறார். சூத்திரதாரியைக் கைது செய்வோம். தண்டனை வழங்குவோம் என்று கூறிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்குட்படுத்தியது. பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரவீந்திரநாத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.இருந்தாலும், அவரது கைதின் பின்னர் அவ்விடயம் எதுவுமற்றதாக அமைதியடைந்து விட்டதாகவே தெரிகிறது. பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்‌ஷக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன. பிரித்தானியாவின் செனல் 4 கூட இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்து அவருடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ராஜபக்‌ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்‌ஷக்களின் திட்டமே. இலங்கை என்ன சொல்கிறது? என்ற செனல் 4 இன் கேள்வியுடனேயே இருக்கும் விடயமாக உயிர்த்த ஞாயிறு விவகாரம் முடிவின்றி இருக்கிறது. உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பு சேர்ந்து பலரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த வாரத்தில், பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவே பிரதான சூத்திரதாரி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன எவ்விடத்திலும் கூறவில்லை. போலியான விடயங்களை சமூக மயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதற்காக இந்தியாவின் பெயர் இதற்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ, இத் தகவல் எவ்வாறு வெளியே வந்தது என்பது பற்றியோ அவர் கருத்து வெளியிடவில்லை. இது ஆராயப்பட வேண்டியதே. ஆனால், இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன அத் தகவலை மறுத்து பொலிஸ் தலைமையகத்தினால் ஊடகங்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. அத்துடன், அது காணாமல்போனது. அதே நேரத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்தபோதிலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் ரீட் மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சுராச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 14ஆம் திகதி பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றின்மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த ரிட் மனுவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இதுவரையில் ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருக்கின்றனர். ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர். அடுத்தவர் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர். தற்போதிருப்பவர் தாக்குதலை நடத்துவதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்தார் எனப் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கித் தான் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர். எவ்வாறானாலும், வாய் வார்த்தைகளை மாத்திரமே எல்லோராலும் அடுக்கி விட முடியும். செயலில் நடத்திமுடிப்பதென்பது சாதாரணமானதல்ல என்பதுதான் இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் நேபாளம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்து வந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க, அறிவிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும், கர்தினால் மல்கம்ரஞ்சித் ஆண்டகை ஆணைக்குழுவின் விசாரணையில் திருப்தியில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றுகோரிவந்தார். அன்றைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லாமலேயே அவர் இந்த நிலைப்பாட்டுடன் இருந்து வந்தார். புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதில் பலரும் பங்கு அவருக்கும் இருக்கிறது என்றே கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெருந்தொகையானவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நீர்கொழும்பு சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார். இருந்தாலும், எதுவுமே நடைபெறாது நீண்டுகொண்டே செல்வதானது ஏன், எதனால் என்பது வெளியாகவில்லை. ஆரம்பத்திலிருந்து பல்வேறு வினாக்களுடனேயே இருக்கும் விடயம் இப்போதும் தொடர்கிறது என்றால், அரசின் இயலாமையா, பாதுகாப்பு, விசாரணைத் தரப்பின் குறைபாடா? என்றும் கேள்வியை எழுப்புகிறது. அந்தவகையில், வினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் கேள்விதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கேள்விகளுடன்-உயிர்த்த-ஞாயிறு/91-366740
  16. கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் adminOctober 24, 2025 கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கடற்தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு இந்திய மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம். இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/221887/
  17. செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம் October 23, 2025 11:32 am ”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார். https://oruvan.com/chemmani-massacre-plan-to-seek-foreign-technical-assistance/
  18. 2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் October 23, 2025 12:16 pm 2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://oruvan.com/single-curriculum-for-pre-schools-across-the-country-from-2026/
  19. மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர். அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர். குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள், தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=345677
  20. “இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை” October 23, 2025 இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலானா பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார். https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/
  21. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் - பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை.! Vhg அக்டோபர் 23, 2025 கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22.10.2025) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நேரடியாகப் பயங்கரவாதத் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். இந்நிலையில் அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டுக்குக் கடந்த- 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாகவிருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகத் தெரிவித்து அது தொடர்பான விசாரணைகளுக்குக் கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கிச் சென்றிருந்தனர்.. இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்துள்ளன. வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை-03 மணியளவில் அவர் வெளியேறியுள்ளார். https://www.battinatham.com/2025/10/blog-post_359.html
  22. வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு ! By SRI 2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார். குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார். https://www.battinews.com/2025/10/500.html
  23. யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் sachinthaOctober 23, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/
  24. காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில். வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார். https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette
  25. செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு! adminOctober 23, 2025 திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2025/221869/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.