Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு அனுபவங்களும் அவரது உருவாக்கமும் December 9, 2025 — சி. மௌனகுரு — செல்லுவதற்கு ஆயத்தமாகிறார் என்ற செய்தி வந்தது: —————————— இம்மாதம் இரண்டாம் திகதி எனக்கு ஒரு செய்தி கிடைத்தது செய்தி அனுப்பியவர் ஒரு பெரியவரின் பேத்தி பெயர் சரண்யா வந்த செய்தி இதுதான் “எனது பாட்டனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மூச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது அந்திம காலம் நெருங்கிவிட்டது, செல்ல ஆயத்தமாகிறார். இன்னும்இரண்டு மூன்று நாட்களுக்குள் அது நடக்கலாம் என்று டாக்டர் கூறிவிட்டார். துன்பங்கள் துயரங்கள் இன்றி உடல் உபாதைகள் இன்றி அவர் உயிர் பிரிய வேண்டும் என்பதே எங்களது கவலையாக இருக்கிறது” சரண்யா ஒரு புதுமைப்பெண் ஒரு ஊடகவியலாளி, நாவல் எழுத்தாளர், கவிதைகளும் எழுதுவார், பெண்ணியவாதி தனித்துவமான போக்குடையவர். சரண்யா கூறிய அந்தப் பெரியவர் வேறுயாருமல்ல எங்கள் இளமைப் பருவத்தில் நாங்கள் வாய் நிறைய அண்ணா என அழைத்தவர். அவர்தான் காலம் சென்ற செ. இராசதுரை அவர்கள். அவரது சிரிப்புதான் அவரது டிரேட் மார்க் பிளஸ்பொயிண்ட். ஒரு முறை நான் அண்ணன் ராஜதுரை அவர்களைச் சந்தித்தபோது ‘எனது வாரிசு இவள்தான்தான்’ என்று அவர் சரண்யாவைச் சுட்டிக் காட்டினார். 96 வயதுப் பாட்டனும் 25 வயதுப் பேத்தியும் ஒருவரை ஒருவர் அர்த்த புஸ்டியோடு பார்த்துக்கொண்ட அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. பாராளுமன்ற அரசியலுக்கு வரமுன்னர் அவரது அரசியல் சிந்தனை —————————— தமிழரசுக் கட்சி அரசியலுக்கு வர முன்னர் ராஜதுரை அண்ணன் அவர்கள் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அரசியல் கட்சிகளாலும் அக்கட்சிக் கொள்கைகளாலும் பெரியாரின் திராவிடக்கழக சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும் கவரப்பட்ட ஒரு வாலிபராக இருந்தார். மூட நம்பிகைகளை முற்றாகச்சாடிய மனிதர் அவர், அவரதுபேச்சில் பகுத்தறிவுக் கோட்பாடுகள் பரவியிருக்கும் என்பர். மட்டக்களப்புக் கோவில்களில் அன்று காணப்பட்ட சாதிவேறுபாடு, தீப்பாய்தல், பலிகொடுத்தல் என்பனவற்றிற்கு எதிராகப் பகுத்தறிவுக் கொள்கை கொண்ட முற்போக்கான ஒரு கூட்டம் மட்டக்களப்பில் உருவாகிக் கொண்டிருந்தது, செயற்பட்டுக்கொண்டிருந்தது. மரபுவாதிகள் அக்கூட்டத்தை வியப்புடன் பார்த்த காலம் அது. அக்குழுவின் தலைவர் போல இவர் செயற்பட்டார் இவரைப்போல இடதுசாரிக் கருத்துக்களாலும் திராவிடஇயக்க பகுத்தறிவுக் கருத்துக்களாலும் கவரப்பட்டு சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டு ஒன்றாக இயங்கிய சமூக விடுதலை உணர்வுள்ள வாலிபர்கள் பலர் மட்டக்களப்பில் அன்று இருந்தனர். அவர்களில் மிகப் பலரை நான் அறிவேன். அவர்களோடு தொடர்பிலுமிருந்தேன். அருமையான இளைஞர்கள், ஒரு வகையில் நமது அண்ணன்மார் அவர்கள். மக்கள் மீதும் மண்மீதும் பாசம் கொண்டவர்கள். என் வாலிப வயதில் அவர்கள் எல்லோரும் வயோதிபர்களாகிவிட்டார்கள் சிலர் ஞாபகம் வருகிறார்கள். எம் எஸ் பாலு. கமலநாதன், ம.த.லோறன்ஸ், ஸ்ரூடியோமூர்த்தி, இரா, பத்மநாதன், மூனாரூனா, சற்றடே கந்தசாமி, ஓவியர் குமார், ஆரோக்கியநாதன், பித்தன் சா, ஆறுமுகம்(நவம்), ”ஆரையூர்” அமரன், அறப்போர் அரியநாயகம், பின்னாளில் கலாசூரி பட்டம் பெற்ற வினாயகமூர்த்தி, மூனாகானா, அன்புமணி, ஓடலி கந்தையா, சடாட்சரம், மகேஸ்வரம், மஹாலிங்கசிவம்.. இன்னும் பலர். நான் சொல்வது 1950 நடுக்காலப்பகுதி. இவர்கள் இராஜதுரை அவர்களின் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் ராஜதுரை அவர்களின் சமகாலத் தலைமுறை என்றால் ராஜதுரையால் உருவாக்கப்பட்ட இன்னொருதலைமுறையும் இருந்தது. அவர்களில் சிலர் ஞாபகத்தில் உள்ளனர். கவிஞர் சுபத்திரன், காசிஆனந்தன், பாலு மகேந்திரா, செழியன் பேரின்பநாயகம், அற்புதராஜா குரூஸ், எருவில் மூர்த்தி போன்றோர். நாங்கள் மூன்றாம் தலைமுறை. அவர்களுள் ரமணி, மாலா ராமசந்திரன், முழக்கம் முருகப்பா, தம்பையா, வடிவேல், கணேசானந்தன், பாவா இன்பம், வெலிங்டன், முத்தழகு, வீ சூ கதிர்காமத்தம்பி, எனப்பலர் அடங்குவோம். இவர்கள் யாவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இப்படி ராஜதுரையால் உருவான இளைஞர் கூட்டம் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இருந்தன. இராதுரையும் அவர்கால பின்னணியும் ————————- பெரியார் தமிழ் நாட்டில் திராவிடக் கழகம் ஆரம்பித்தது 1925இல். அப்போது ராஜதுரை பிறக்கவில்லை. இராஜதுரை அண்ணன் பிறந்தது 1927 இல். இலங்கையில் மாக்ஸிஸ ரொட்ஸ்கிய சிந்தனையில் உருவான சமசமாஜக் கட்சி ஆரம்பித்தது 1935 இல் அப்போது இராஜதுரைக்கு வயது 8. அதிலிருந்து பிரிந்த மாக்ஸிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்து 1943 இல் அப்போது இராஜதுரைக்கு வயது 16. தமிழ் நாட்டில் திராவிடக் கழகத்திலிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆரம்பித்தது 1949 இல். அப்போது ராஜதுரைக்கு வயது 22. இலங்கையில் தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி எனும் சமஸ்டிக் கட்சி ஆரம்பித்தது 1949 இல். அப்போது ராஜதுரைக்கு வயது 22. 1950 களின் ஆரம்ப காலங்களில் இராஜதுரை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து கொள்கிறார். அப்போது அவர் 22 வயதைத் தாண்டியிருந்தார். அவர் பாராளுமன்ற எலெக்சன் கேட்டுப் பாராளுமன்றப் பிரதிநிதியானது ஆண்டு 1956 இல் 29 ஆவது வயதில். 1927 க்கும் 1956 க்கும் இடைப்பட்ட காலங்கள் ———————————————————— இந்த 1927 க்கும் 1956 களுக்கும் இடைப்பட்ட 29 வருட கால மட்டக்களப்பு வாழ்வுப் பின்னணி என்பன முக்கியமானவை. இது ராஜதுரை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக முன்னுள்ள காலம் அதாவது இராஜதுரை உருவாகிய காலம். துடிப்பு மிகுந்த விசைவேகம் மிக்க ஒரு சிறுவனின் இளமைக்காலம் அது. துடிப்பு மிகுந்த ஒரு சிறுவன் சமூக அக்கறையும் உலக அறிவும் பெற்று உருவான காலப்பின்னணி இது. அவற்றை அறிதல், ராஜதுரையையும் அவர் சிந்தனையையும் செயலையும் புரிந்துகொள்ள மேலும் உதவும். தமிழரசுக் கட்சியில் இணைய முன்னரான ராஜதுரை அவர்களின் வாழ்வு, பலர் அறியா வாழ்வு. அவரது ஆளுமைக்கு அடித்தளமிடப்பட்ட வாழ்வு, மிக முக்கியமாகப் பலர் அறியவேண்டிய வாழ்வு. சமசமாஜக் கட்சி(ரொட்ஸ்கியம்), கம்யூனிஸம்( லெனினியம்) திராவிட இயக்கம்(பகுத்தறிவு பிராமண எதிர்ப்பு), திராவிட முன்னேற்றக் கழகம் ( தமிழ் மொழியுணர்வு) தமிழ்க் காங்கிரஸ்( இலங்கை அரசில் தமிழர் பங்கு), தமிழரசுக் கட்சி( தமிழருக்கான சுய ஆட்சி), என்பனவற்றின் தாக்கம் பெற்று வளர்ந்தவர் இராஜதுரை. இந்த அரசியல் பின்னணியில் தோன்றியவர் இராஜதுரை. பிறந்து வளர்ந்த சூழல்: ———————– அவர் பிறந்த இடம், வளர்ந்த சூழல் படித்த பாடசாலை, தொடர்புகொண்ட ஆசிரியர்கள் நண்பர் வட்டம் என்பன அவரை உருவாக்கின. பிறந்து வளர்ந்த இடமும் வளர்ந்த சூழலும் ———————- அவர் பிறந்த இடம் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான். அது ஒரு விவசாயக் கிராமம். ஆனால் அவரின் சிறுவயதுக்காலம் மட்டக்களப்பு நகரான கோட்டைமுனை மோர்சாப்பிட்டியில்தான் கழிந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தவர் பலர் வந்து மட்டக்களப்பில் வியாபாரம் செய்தனர். அவர்களைப்போல புகையிலை வியாபாரம் செய்யவந்த செல்லையா என்பவர் மட்ட்க்களப்பில் பெண் எடுத்து அந்த நகரப்பகுதியில் தங்கியிருந்தார். அப்பகுதி பல் சாதித் தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் ஒரு குடும்பம் போல கலந்து மகிழ்ந்து, கொண்டு, கொடுத்து வாழ்ந்த காலப்பகுதி. அங்குதான் புத்த கோவிலான மங்களராமய விகாரையும் இருந்தது, அதனை மக்கள் பாஞ்சாலை என அழைப்பர். மட்டக்களப்பு நகரில் சிங்கள முதலாளிகளின் கடைகள் இருந்தன. அக்கடைகளில் வேலை செய்த சிங்களக்கிராமங்கலில் இருந்து வந்த சிங்கள ஊழியர்கள் மோர்சாப்பிட்டிச் சூழலிலும் பாஞ்சாலையை அண்டியும் வாழ்ந்தனர். அனைவரோடும் ராஜதுரை பழகும் சந்தர்ப்பமும் கூடி விளையாடும் சந்தர்ப்மும் கிடைத்தன. அனைத்து மக்களுடனும் ஒன்றாகத் திரிந்தான் இந்தச் சிறுவன். அவர்கள் வீடுகளில் அவனும் ஒரு பிள்ளை. இந்தச் சூழல் அவரை ஒரு இன பேதம், சாதி பேதம், மத பேதம் எனும் கட்டுகளுக்குள் மாட்டிக் கொள்ளாத சிறுவனாக வளர்தெடுத்தது. 1940, 50 களிலே கோட்டைமுனையிலே ஒரு வாசிகசாலை இருந்தது. அதன் பெயர் சிவானந்தா வாசிகசாலை. அதில் சென்று படிக்கும் வாய்ப்பு இச்சிறுவனுக்கு ஏற்பட்டது. அக்காலத்தில் லூயிஸ்பிள்ளை என்பவரால் ஒரு புத்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர் வெலிங்டன் புத்தகசாலை. அதில் இந்திய பத்திரிகைகள், முக்கியமாக திராவிட இயக்க நூல்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, விற்கப்பட்டன. லூயிஸ் பிள்ளை முடிதிருத்தும் வகுப்பைச் சேர்ந்தவர். முடி திருத்தும் நிலையத்தை மின்சார உபகரணம் கொண்டு நவீனப்படுத்திய முன்னோடி, சீர்திருத்தவாதி. பகுத்தறிவு நூல்கள் மட்டக்களப்பிற்கு வர வழிவகுத்தவர் அவர். அவரது மூத்த மகன்தான் வெலிங்டன். அவனது பெயரில் அது ஆரம்பிக்கப்பட்டது, சிறிய அளவிலும் கையடக்க அளவிலும் அங்கு திராவிட இயக்க நூல்கள் விற்கப்பட்டன. அண்ணாதுரையின் தீபரவட்டும், கம்பரசம் நூல்களும் கருணாநிதி, சிபி சிற்றரசு, அன்பழகன் ஆகியோரின் நூல்களும் அங்கு கிடைத்தன. தமிழ் இளஞர் மாத்திரமல்ல இஸ்லாமிய இளஞர்களும் அங்கு வந்து வாசித்தனர். புத்தகம் பெற்றுச்சென்றனர், பகுத்தறிவுக் கொள்கைகளும் தமிழும் அவர்களை இணைத்தன. ஓட்டமாவடி ஜலால்தீன் எனக்கு ஞாபகம் வருகிறான். பயங்கர “அண்ணா பக்தன்” அவன். அந்தப் புத்தகசாலை அன்று அரும்பி வந்த இளைஞர் பலர் தமிழர் இஸ்லாமியர் பேதம் இன்றி ஒன்று கூடும் இடமும் ஆயிற்று. வெலிங்டன் புத்தகசாலை போல இன்னொரு இடமும் எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் அஜந்தா ஸ்ரூடியோ. மட்டக்களப்பின் இன்றைய காந்தி பார்க்கின் முன்னால் அது அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் மூர்த்தி. அங்குதான் ஓவியர் குமார் பணி புரிந்தார். ஓவியர் குமார் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஓவியம் பயின்றுவிட்டு வந்தவர். அவர் ஸ்ரூடியோவில் அந்த மேசைக்கு முன்னால் அமர்ந்து புகைப்படங்களை தனது பிரஸ் மூலம் செம்மைப் படுத்திகொண்டிருப்பது ஞாபகம் வருகிறது. அங்குதான் இந்த இளைஞர் குழாம் பின்னாளில் கூடும். என்னிலும் மூத்தவர்களான காசி ஆனந்தன், மாஸ்டர் சிவலிங்கம், இரா. பத்மநாதன், பாலு மகேந்திரா, தங்கவடிவேல் (சுபத்திரன்), அற்புதராஜா குரூஸ் ம. த லோரன்ஸ் ஆகியோர் அங்கு பெரும்பாலும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவர். அங்கும் ஒரு அரசியல் அலசல் நடக்கும். பகுதறிவுச் சிந்தனைகள் பகிரப்படும். கிண்டல் பேச்சுகள் இடம்பெறும். சிறு வயதுப் பையனான நான் அதனை அவதானித்துக் கொண்டிருப்பேன்; அதில் அங்கு வரும் இராசதுரையும் கலந்து கொள்வதுண்டு. பின்னாளில் மட்டக்களப்புக் கச்சேரியின் முன்நடந்த சத்தியாக் கிரகத்தின் போது இந்த இடம் ஒரு முக்கிய இடமாகச் செயற்பட்டமை இன்னொரு கதை அது தனிக்கதை. கண்ணகியின் வழிபாடு வாழ்வியலான பிரதேசத்தில் சிலப்பதிகாரம் அறிமுகம் ———————————————————— சிலப்திகாரம் தமிழகத்தில் தமிழ் அறிஞர்களால் முன்னிலைப் படுத்தப்பட்ட காலம் அது. சிறப்பாக ம பொ சிவஞானம் ஆகியோராலும் கருணாநிதி போன்றோராலும் பரவலாக்கப்பட்டு தமிழ் நாட்டில் பட்டிதொட்டி எங்கும் சிலப்திகாரம் பரப்பப்பட்ட காலம் அது. இவர்கள் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகளையும் நூல்களையும் படித்து படித்து அதில் தோய்ந்தார் இராஜதுரை. தமிழ்ப் பண்பாட்டின் அறநெறி தவறிய அரசை கேள்வி கேட்கும் காவியமாக அதனைக் கண்டார். மட்டக்களப்பிலே வைகாசி மாதம் ஆண்டு தோறும் கதவு திறந்து சடங்கு நடைபெறும். கண்ணகி வழக்குரை படிக்கப்படும். அத்தகைய கண்ணகி அம்மன் கோவில்களில் வாலிப இராஜதுரை சிலப்பதிகாரம் பற்றிப் பேச ஆரம்பித்தார், கண்ணகி அம்மன் கோவில்கள் அவரது பேச்சினை வளர்க்கும் இடங்களாகின. இராசதுரையின் சிலப்பதிகாரப் பேச்சு ஜனரஞ்சகம் பெறலாயிற்று. இப்படித்தான் அவர் பேச்சாளரானார். திராவிடக் கழகக்காரர் போல தோளிலே ஒரு கறுப்புத்துண்டு போட்டபடி வலம் வந்த இராஜதுரை என்ற அந்த இளைஞர் என் மனதிலே பதிந்துள்ளார். அவரைப் பின்பற்றிக் கறுப்புத்துண்டு தோளில் போட்டோர் பலர். அவர்களுள் நானும் ஒருவனானேன். இப்படிக் கறுப்புத் துண்டு போட்டோரை அன்று “சூனா மானா” என அழைத்தனர். சூனா மானாக்காரன் என்றால் சுயமரியாதைக் காரன் என்று அர்த்தம். இப்படி அன்று ஒரு சூனா மானாவாக இருந்தவர்தான் ராஜதுரை. (பின்னாளில் அவர் பாராளுமன்ற அங்கத்தவரான போது, அவர் என்ன பாராளுமன்றம் சென்று சிலப்பதிகாரச் சொற்பொழிவு ஆற்றப் போகிறாரா என்று கிண்டல் பேசியோரும் உண்டு ) எனது 14ஆம்15 ஆம் வயதுகளில் அப்படி அவரைக் கறுப்புத்துண்டோடு கண்டதாக ஞாபகம். அவரோடு தொடர்பு கொள்ளப் பல இளைஞர்கள் விரும்பினர். ஒரு வெகுஜனமக்கள் தலைவராக அவர் உருவாக ஆரம்பித்த காலம் அது. அழகான வாலிபன், வசிகரமான சிரிப்பு, முற்போக்கு எண்ணம் கொண்டவன், சாதி, மதம், இனம், பிரதேசம் கடந்து அனைவருடனும் நெருங்கிப் பழகும் குணம்- இவை யாவும் ராஜதுரையை அச்சூழலில் ஒரு தனித்துவமான ஆளுமையாக வளர்த்தெடுத்தது. அவரது பேச்சுவன்மை அவரை இளைஞர் மத்தியில் ஹீரோ ஆக்கியது சிறு வயதில் அவர் பேச்சாளரோடு ஊடகவியலாளர் ஆகவும் ஆனார். வேல். . முழக்கம், தமிழகம், சாந்தி, தேனாடு, உதய சூரியன் எனப்பெயரிய பத்திரிகைகள் அவர் நடத்தியதாக அறிகிறோம். இவை மட்டக்களப்பு பிரதேச அளவில் நடத்தப்பட்டன போலத் தெரிகின்றன. இக்காலத்திலே தமிழரசுக் கட்சி சுதந்திரன் பத்திரிகையைக் கொழும்பில் ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர் ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள். அப்போது மட்டக்களப்பிலிருந்து அப்பத்திரிகைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆள்தான் ராஜதுரை. அப்படி அனுப்பியவர்களுள் முக்கியமானவர் பி வி கணபதிப்பிள்ளை, என் மனைவியின் தந்தை. அவரே எனக்கு இத்தகவல் கூறியவர். அவரும் யாழ்ப்பாணத்தவர், வடராட்சியினர், ஜி ஜி பொன்னம்பலத்தின் உறவினர். ஜி ஜி பொன்னம்பலம் தனது அன்றைய காங்கிரஸ் கட்சியோடு சேரவும் மட்டக்களப்பில் அதனை ஸ்தாபிக்கவும் நினைத்து அவரை அழைத்தபோதும் அவரோடு சேராது தமிழரசுக் கட்சியையும் செல்வநாயகத்தையும் ஆதரித்தவர் அவர். மட்டக்களப்பில் அவர் திருமணம் புரிந்தவர். மோர்சாப்பிட்டியின் மிக அருகில் இருந்த கொலட் லேனில் வாழ்ந்தவர். இராஜதுரையின் வெற்றிக்கு 1958களிலும் அதன் பின்னரும் உழைத்தவர். கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். சமூக, சமய சேவகர். ஆங்கிலம் லண்டன் மெற்றிகுளேசன் முடித்து, மொழிபெயர்ப்புத் திணைக்களைத்தில் வேலை செய்தவர். மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தவர். இராசதுரையும் அவரிடம் ஆங்கிலம் கற்றுள்ளார், அவர் இராசதுரையின் பிரியதிற்குரிய ஆசிரியர். ஒருவகையில் அவரின் பயபக்திக்குரிய மாணவன். எனது மாமா எனக்கு பிற்காலத்தில் எனக்கு அக்காலக் கதைகள் பல கூறியுள்ளார். அதில் ராஜதுரையின் இளமைக்காலக் கதையும் ஒன்று. படித்த பாடசாலை —————— மட்டக்களப்பு அரசடி மெதடிஸ்த பாடசாலையிலும் பின்னர் மட்டக்களபு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் இராஜதுரை படித்திருக்கிறார். அங்கு அவருக்கு நல்ல முற்போக்கு எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வாய்த்திருக்கின்றனர். அங்கு படிப்பித்த ஆசிரியர் சிலர் லங்கா சமசமாஜக்கட்சியினை மட்ட்க்களப்புக்கு அறிமுகம் செய்தவர்கள். பிரின்ஸ் காசிநாதர், யோகம் வேலுப்பிள்ளை வணசின்ஹா ஆசிரியர். சிவனேசராஜா ஆசிரியர் போன்றோரும் இன்னும் பலரும் சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள் என அறிகிறோம். என் எம் பெரெரா அக்காலத்தில் இவர்களின் தலைவர். இவர்கள் யு என் பி எதிர்ப்பாளர்கள் காலனித்துவ எதிர்ப்பாளர்கள், இந்த எதிர்ப்பு அலையில் அன்று ராஜதுரை கவரப்பட்டிருக்கிறார் இராஜதுரை அக்காலத்தில் என் எம் பெரேராவை அழைத்து மட்டக்களப்பில் பேச வைத்திருக்கிறார். அப்படியாயின் இளம்பருவத்தில் அவருக்கு என் எம் பெரேராவுடன் தொடர்பு இருந்தது என நாம் ஊகிக்கலாம். மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் கிருஸ்ணக்குட்டியுடன் மிகுந்த நட்புப் பாராட்டியதுடன் அவரை ஒரு மேதின மேடையில் கௌரவித்தும் இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பா, ஜீவானந்தம் இலங்கை வந்தபோது, அவரை அழைத்து மட்டக்களப்பில் பேச வைத்திருக்கிறார். மத்திய கல்லூரியில் படித்துகொண்டிருந்த காலத்தில் இங்கிலாந்து மன்னர் பிறந்த தினம் கொண்டாடக்கூடாது என நோட்டீஸ் ஒட்டினார் ராஜதுரை என அறிகிறோம். அன்று யு என் பிக் கட்சியிதான் மட்டக்களப்பில் செல்வாக்குற்றிருந்தது. ஆர் பி கதிராமர் எனும் எம் பி, யூ என் பி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். யூஎன் பியின் கொள்கைகளுக்கு ஒத்துவராத மட்டக்களப்பில் படித்த ஒரு கூட்டம் லங்கா சமாமாஜ கட்சியை ஆதரித்தது அவர்களில் பலர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தாக்கம் ராஜதுரையில் இறங்கியிருகலாம். ஆனால் இடதுசாரிக் கட்சிகள் அன்று தமிழர் தேசியபிரச்சினை பற்றி எடுத்த முடிவுகள் முற்போக்கான பலருக்கு உடன்பாடாயிருக்கவில்லை. மொழி வழித் தேசியத்தை அன்றைய இடதுசாரிகளும் புரிந்திருக்கவில்லை. இந்த நிலைப்பாடு இராஜதுரைக்கும் உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம், அவருக்கு இன்னொரு முகாம் தேவைப்பட்டது போலும். அது தமிழரசுக் கட்சி முகாம். அங்கு அவர் சென்றதும் முற்போக்கு கருத்துகளை அங்கு கொண்டு சென்றதும் இன்னொரு கதை. பத்திரிகை வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ———————— பின்னாளில் இராஜதுரை அவர்கள் தேசிய அளவில் சுதந்திரன் பத்திரிகையிலே ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார். எழுத்தாளர் கவர்ச்சிகரமான பேச்சாளர் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடிய இளைஞர் அணியிலே முன் நின்றவர் அவர். அதனால் அவர் அடி உதைகளும் பட்டிருக்கிறார். அவரது ஆரம்ப கால வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. இவற்றில் மிக அநேகமானவை அவர் தமிழரசுக்கட்சியில் இணைய முதல் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களாகும் பணக்காரர்களே பாராளுமன்ற எலக்சன் கேட்கலாம் என்ற காலத்தில் மிக மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்த ஒரு இளைஞர் அந்தப் பெரும் பெரும் புள்ளிகளுடன் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவானார். தன் பேச்சால் ஈழத் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்தவர். தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பேச்சு மிகுந்த துணையாயிற்று. தந்தை செல்வாவின் மிக விருப்பத்துக்குரிய ஒரு இளைஞராக அவர் அன்று இருந்தார். எனது முதல் சந்திப்பு: ——————– எனது 9 ஆவது வயதில் அவர் எனக்கு அறிமுகமாகின்றார் அவர். காலம் 1952, இடம் மட்டக்க்ளப்பு நகரசபை மண்டபம். அப்போது அது மாநகரசபை ஆகவில்லை. எனக்கு அந்தக் காட்சி நல்ல ஞாபகம் இருக்கிறது. மட்டக்களப்பு நகரமண்டபம் கட்டிய புதிதில் அங்கு சிலநாடகங்கள் நடந்தன. என் மகன் என்ற நாடகத்தில் நான் வீரவசனம் பேசி அந்த சிறு வயதில் நடித்தபோது, நாடகம் முடிய ஒரு இளைஞர் மேடைக்கு வந்து என்னைத் தூக்கி அணைத்தமை என் வாழ்வில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர்தான் ராஜதுரை என்றார்கள். நான் கேள்விப்பட்டிருந்தவரின் கைகள் என்னில் படிகின்றன தன் பேச்சு வன்மையாலும் செயற்படுகளாலும் இளைஞர் மத்தியில் நட்சத்திரமாக அவர் தோன்றியிருந்த காலம் அது. அப்போது அவருக்கு வயது 25 ஆம் என்னை விட 16 வயது மூத்தவர் அவர். அவர் முதன் முதலாக பாரளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கள் ஊரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் என் தந்தையார் எழுதித்தந்த பேச்சைப் பாடமாக்கி இராசதுரைக்காக தேர்தல் பிரசாரம் செய்தமை ஞாபகம் வருகிறது, மைக்கிலே பேசிய புதிய அனுபவம் அது. அப்போது எனக்கு வயது 13. எனது பேச்சை வெகுவாக ரசித்த அவர் அருகில் அழைத்து அணைத்துப் பாராட்டியமை இன்னும் ஞாபகத்தில் உண்டு. என் தந்தை மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தவர் அவர். சின்னையா அண்ணர் என்றே அவர் என் தந்தையை அழைப்பார். வீட்டுக்கும் வருவார். இவனை நன்றாகப்படிப்பித்து விடுங்கள் என்று என் தந்தையை வேண்டுவார். அவரது இளமைக்காலம் அர்த்தம் பொருந்திய காலம். அதுவே அவரது வாழ்வின் பொற்காலமும் கூட. அவரும் இஸ்லாமிய உறவுகளும் ———————– இது அவரது பிற்கால வரலாறு எழுதப்படும் போது சேர்க்கபடவேண்டிய செய்திகளுள் ஒன்று இது. அவர் இஸ்லாமிய மக்களுடன் கொண்டிருந்த உறவுகள் மிக முக்கியமானவை அக்காலத்தில் தமிழரசு கட்சியினுடைய பிரசுரங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே இருந்தது. அதில் அவர் மிகக்கவனமாக இருந்தார். அவரது சிறு பருவக்காலத்திலும் வாலிப் பருவத்திலும் பின்னரும் கூட அவர் இஸ்லாமிய மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தமிழரசுக் கட்சியில் எலக்சன் கேட்ட முஸ்லிம்களும் உணடு அவரது அணுக்கத் தொண்டர்களான மருதமுனையை சேர்ந்த மசூர் மௌலானா போன்றவர்கள் ஞாபகம் வருகிறார்கள். மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ராசதுரையின் ஒரு பெரும் அபிமானி. தனது பேச்சின் குருநாதர் இராஜதுரை அண்ணர்தான் என அஸ்ரப்பே கூறியிருகிறார். ராஜதுரை அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் மத்தியிலே மிகுந்த மதிப்பு இருந்தது. இராஜதுரையின் இரண்டாவது எலக்சன் 1965 இல் நடந்து முடிந்து அவர் வெற்றி ஈட்டிய போது அவருக்கு ஏறாவூரிலே மூன்றாம் குறிச்சியில் இருந்த இஸ்லாமிய மக்களால் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஒருவர் இவர் மீது பற்று கொண்டவர், அவரது பெயர் செயினா. ராஜதுரையைத் தமது தோழில் சுமந்து கொண்டு “எங்கள் துரை” என்று கூற, மக்கள் “இராஜதுரை” எனக் கூற ஊர்வலம் சென்றதாம் என்று அதனைப் பார்த்த அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட என் தம்பி சிவராஜா என்னிடம் கூறியுள்ளான், இப்போது அவனுக்கு வயது 80 அப்போது வயது 15. மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதி. நியாயப்படி ஒரு தெரிவு தமிழர் முஸ்லிம்கள் என இருவர் வரவேண்டும் எனப் பிரித்த பிரிவு. ஆனாபடியால் ஒரு முஸ்லிமும் பாராளுமன்றம் போக வேண்டும் என்று அன்றே கூறியவர் ராஜதுரை என்றும் அறிகிறேன். இன்றைய காலச்சூழலில் இவையெல்லாம் பேசப்பட வேண்டிய விஷயங்கள். இப்படியும் ஒருகாலம் இருந்ததா என இன்றைய தலைமுறை அதிசயிக்கும் காலங்கள். விபுலாந்த இசை நடனக் கல்லூரி =================== அவரால் உருவானதுதான் விபுலாந்த இசை நடனக் கல்லூரி. யாப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி போல ஒரு கல்லூரியை அவர் மட்டக்களப்பிலும் நிறுவ நினைத்தார். அங்கு பயிற்றுவிக்க இந்தியாவிலிருந்தும் ஆட்களை வருவித்தார். அதில் பலர் பயின்று டிப்ளொமா பட்டம் பெற்று வெளியேறினர். பின்னால் அது கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் அது சுவாமி விபுலாந்த அழகியல் கற்கைகள் நிறுவகமாகி இன்று இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் வருடம் தோறும் பல பீ.ஏ பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இராஜதுரை அரங்கின் முன்னால் அவரது உருவப்படம் ================== அண்மையில் தான் அவரது பெரிய திருவுருவப்படத்தை கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவகத்தினர் ராஜதுரை அரங்கின் முன்னால் திறந்து வைத்திருந்தார்கள். நீண்ட நாட்களாக இழுபட்டு வந்தது அது. அதற்கான படங்கள் தேவைப்பட் போது அவற்றை எனக்கு சரண்யா அனுப்பியிருந்தாள். அது அவர் உருவாக்கிய கல்லூரி அது தனது தமிழகச் செல்வாக்கைப் பயன்படுத்தி பல உதவிகளை அங்கிருந்து அவர் அப்போது பெற்றுக் கொடுத்தார். முக்கியமாக அவரது நல்ல நண்பரான அன்று தமிழக முதல்வராக இருந்த எம் ஜீ ஆர் அவர்கள் இந்தக் கல்லூரிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். நுழைவாயிலில் ஒரு பக்கம் விபுலானந்தர் திரு உருவும் மறுபக்கம் ராஜதுரை அவர்களின் திரு உருவும் காட்சி தந்தன. அவர் உருவாக்கிய நிறுவகத்தில் ஓவியம் பயின்ற கொண்டிருந்த ஓவியர்களால் உருவாக்கப்பட்ட படங்கள் அவை. அதை அப்படியே படம் பிடித்து நான் சரண்யாவுக்கு அனுப்பினேன். அதனை அவர் பாட்டனுக்கு காட்டி இருக்கிறார். அவர் மிகவும் மகிழ்ந்து போய் இருக்கிறார். நெகிழ்ந்து போய் இருக்கிறார். நான் சரண்யாவுக்கு ஒரு பதில் அனுப்பினேன். “எங்கள் சிறு வயதிலேயே எங்களின் ரோல் மாடலாகவும் கதாநாயகனாகவும் இருந்தவர் அவர். பையனாக இருந்த காலத்திலே அவரது பேச்சினால் மிகவும் கவரப்பட்டோம், அவரைப் போலவே பேசவும் பழகினோம்.” என்று. ஆரம்ப காலமும் பிற்காலமும் ————————– ஆரம்ப காலங்களில் அவரோடு எனக்கு இருந்த நெருக்கம் இடைக் காலத்தில் இல்லாமல் போனது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிற்காலச் சந்திப்பு —————— பிற்காலத்தில் அவரது அந்திம காலத்தில் அவர் மட்டக்களப்புக்கு வந்தபோது தனது பழைய நண்பர்களைத் தேடிச்சென்று சந்தித்தார். என்னையும் சந்திக்க அழைப்பு அனுப்பினார்; சென்று சந்தித்தேன். பழைய காலங்களை நினைவு கூர்ந்தார். அவர் வார்த்தைகளில் நெகிழ்ச்சி கண்களில் கண்ணீர்க் கசிவு, மட்டக்களப்பு மண் பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். அவரது அருமை ஆசிரியர் பி.வி கணபதிப்பிள்ளையின் மனைவி எனது மாமியார் மகேஸ்வரி எங்களுடந்தான் இருந்தார். மகேஸ்வரி அக்காவைப் பார்க்க வேண்டும் என்றார் இராஜதுரை. வீட்டுக்குக் கூட்டிச்சென்றேன். மாமி அவரைவிட வயதில் பல மடங்கு மூத்தவர், ராஜ்துரையைக் கண்ட தும் அவர் வணக்கம் என இருகரம் கூப்பி வரவேற்ற அந்தக்காட்சி காணக் கிடைக்காத காட்சி. இரு பழம் கிழங்களும் தத்தம் மனதுள் எவ்வளவு நினைத்திருப்பர். எனக்கு ஒரு சாயிபாபா படமும் சிறு அழகிய டப்பாவில் குங்குமும் தந்து “நீர் இதனை எல்லாம் நம்பமாட்டீர் விரும்பினால் பெற்றுக் கொள்ளு ராஜா இது சாயி எனக்கு அளித்த பிரசாதம்”என்று கூறினார். “ராஜா” என்றே அவர் என்னை அழைப்பார். அந்த உச்சரிப்பு தனித்துவமானது, மனைதில் என்னவோ சுரப்பது. நான் அவர் தந்தவற்றை மிக மரியாதையோடு பெற்றுகொண்டேன். அவர் மகிழ்சியோடு அதனை அவதானித்தார். “அண்ணன் உங்களுக்கு முற்கால இராஜதுரை வரலாறு, பிற்கால ராஜதுரை வரலாறு என இரண்டு வரலாறுகள் உள்ளன” என்றேன். அர்த்த புஸ்டியோடு சிரித்தார். ‘பிற்காலம் பற்றி நிறையத் தரவுகள் எம்மிடம் உள்ளன. என்னைப் பொறுத்தவரை உங்களின் முற்காலமே பொற்காலம். நினைவில் உள்ளவற்றைப் பதியுங்கள்’ என்றேன். மீண்டும் சிரித்தார்; ஒரு அனுபவச் சிரிப்பு. சிலவற்றை நினைவு கூர்ந்தார், சில மணி நேரம் அந்தப் பழையகாலத்துள் வாழ்ந்தார். வாழ்ந்தோம். என் தந்தையை எங்கள் வீட்டருகில் இருந்த ராஜதுரையை அவரோடு இணைந்து சத்தியாக்கிரகப் போரில் இணைந்த எமது கிராம மக்களை பெயர் கூறிக் கூறி நினைவு கூர்ந்தார். என்ன ஞாபகசக்தி? அவர்களில் பெரும்பலானோர் இன்றில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அவருக்கு இப்படிப் பல்லயிரக்கணக்கான உறவுகள் இருந்திருக்கும். பேச்சின் இடையில் அக்காலத்திலும் இடைக்காலத்திலும் தான் பெற்ற மிக் மிக கசப்பான அனுபவங்களை மனம்விட்டு நாகரிகமாக் கூறினார். தான் கட்சியில் ஓரங்கட்டப்பட்டமையையும் அதன் பின் தான் எடுத்த முடிவுகளையும் கூறினார். அவர் தனது வாழ்வின் சரி பிழைகளை மீட்டிப் பார்க்கிறார் என உணர்ந்து கொண்டேன். அக்கணம் நான் அவரில் அந்த பழைய இராஜதுரை அண்ணரைக் கண்டேன். வாழ்வின் இறுதி நாட்களில் சில பெரியவர்கள் யாரோடும் பேசமாட்டார்களாம். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்களாம். அவரகள் ஓயாது பேசுவது தம்மோடுதானாம். அதுவே மனிதர் வாழ்வின் இறுதி இதய நாதம். அவரை விபுலாந்த அழகியற்கற்கைகள் நிறுவகம் அழைத்துச் சென்றோம். அவர்கள் அழகாக அவரைக் கௌரவித்தனர். மாணவர்கள் தமக்காக அதனை உருவாக்கிய அப்பெரியவரைக் காணத் திரண்டிருந்தனர். அகம் முகம் மலர வாளாகத்தை இராஜதுரை அரங்கைக் கவனித்தார். அன்றைய அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிறேன்; சொற் சுத்தம், குரல்சுத்தம், அதே உறுதி, அதே கம்பீரம், அதேகுரல், அதே எடுத்துரைப்பு. அவருடனான இறுதிச் சந்திப்பு 2019 ————————– 2019 ஆம் ஆண்டில் நான் இந்து பத்திரிகை நடத்திய கலை, இலக்கிய, மகாநாடு ஒன்றுக்கு உரை நிகழ்த்தச்சென்ற போது என்னைத் தேடி வந்து, இராஜதுரை அண்ணர் தங்கியிருந்த வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள் சரண்யா. அந்த வீடு அவரது இளைய மகள் பூங்கோதையின் வீடு. இராஜதுரைக்கு ரவீந்திரா, ரவீந்திரன், இளங்கோ, பூங்கோதை, திருமகன் சிறி என ஐந்து மக்கள் உளர். மனைவி காலமாகிவிட்டார், மகள் பூங்கோதையுடனும் பேரப்பிள்ளைகளுடனும் அங்கு அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் அறையில் இருந்தார், நான் செல்வது அவருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சிரமப்பட்டு நடந்து வந்து அமர்ந்து கொண்டார், அதே சிரிப்பு, அதேதொனி, “வாராஜா” என்று விழித்துக் கதைத்தார். உணவு உண்டு, உரையாடி முடிந்து வரும்போது எழுந்து சென்று தனது புத்தக அலுமாரியிலிருந்து பாஸ்கரத்தொண்டமான் எழுதிய ஒரு நூலை எடுத்து அதில்கையெழுத்திட்டு எனக்களித்தார். அவரைப்போல அழகான உறுப்பான கையெழுத்து. வழியனுப்பி வைத்தார் இப்போது நாம் அவரை வழியனுப்பி வைப்போம். அவர் என்றும் எங்கள் மனதில் இருப்பார் ———————————————————— இரண்டு நாட்களுக்கு முன் சீவகன் லண்டனிலிருந்து போன் பண்ணினார்… இராஜதுரை அண்ணன் போய்விட்டார்… அதன் பின்னர்தான் சரண்யாவின் செய்தி கிடைத்தது…”அப்பப்பா காலமானார்”. மனதைத் துயரம் கௌவியது. அவர் வாழ்வு ஒரு இரு முனை வாழ்வா? ————————— ஒரு புறம் பகுத்தறிவுச் சிந்தனை, மூட நம்பிக்கைக்கு எதிரானசிந்தனைகள், மாக்சிஸ சிந்தனை, தமிழர் விடுதலைச்சிந்தனைகள், ஏழைமக்கள் பால் அக்கறை. மறுபுறம் அரசாங்க அமைச்சர், அசுவமேதயாகம், அந்தணரை அழைத்து ஆசி வேண்டியமை, சாயிபாபாவின் சீடன். ஒரு இரு முனை வாழ்க்கையா அல்லது வாழ்வின் வளர்ச்சி நிலையா, அல்லது மாற்று நிலையா அல்லது எல்லாவற்றையும் வாழ்வனுபவங்களாகப் பெற்றபக்குவமா? அவரது தேடலில் அவர் வந்து சேர்ந்த இடம் இதுவா? எது எவ்வாறாயினும் ஒரு சகாப்தம் முடிந்தது. அவ்வளவுதான் நான் சரண்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். அச்செய்தி இதுதான். “அவர் வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது. பலபடிப்பினைகளைத் தருவது. அவர் பலகாரியங்கள் செய்துள்ளார். மட்டக்களப்புக்கு தன்னை மறக்காதபடி பல காரியங்கள் செய்துள்ளார். அவர் இறப்பு இரங்கற்குரியதன்று, அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்க வேண்டாம் கொண்டாடுங்கள். எழுதப்பட வேண்டியது அவரது வாழ்வு ————————- 1927 தொடக்கம் 2025 வரையும் 98 வருட காலம் அவர் வாழ்ந்த பெரும் வாழ்வனுபவம் பெற்றவர் அவர் , இப்படி அனுபவம்பெற்ற பலர் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்துள்ளனர், அவர்கள் வாழ்வனுபவங்கள் அதிகம் எழுதப்படவில்லை. இவரது வாழ்வு அனுபவக் காலத்தை ஆறு காலகட்டங் களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்பது எனது புரிதல். முதல் காலகட்டம்: அவர் தமிழரசுக் கட்சியில்சேர முன்னர் அவரது சிந்தனைகள் செயல்பாடுகள் உருவான காலகட்டம். இரண்டாவது காலகட்டம்: அவர் தமிழரசுக் கட்சியிலே முக்கிய ஒரு ஆளாக இருந்து செயல்பட்டகால கட்டம். குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலும் சிறப்பாக இலங்கையிலும் அவர் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க அவர் செய்த செயற்பாடுகளும் அவர் எதிர்கொண்ட சவால்களும். மூன்றாவது காலகட்டம்: தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த பின்னர் அவர் கட்சிக்குள் எதிர் கொண்ட சவால்களும் அதை அவர் கையாண்ட விதங்களும். நாலாவது காலகட்டம்: அவர் யு.என்.பி அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட காலகட்டங்கள், அதாவது அவரது அமைச்சர் காலப் பணிகள் அல்லது செயற்பாடுகள். ஐந்தாவது காலகட்டம்: அவர் வெளிநாட்டுத் தூதுவராக இருந்து செயல்பட்ட அவரது ராஜ தந்திர காலகட்டங்கள். ஆறாவது காலகட்டம்: அவர் ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்த போது செயல்பட்ட காலகட்டங்கள். அதாவது அவர் இறுதி காலகட்டங்கள். தனது கடந்த கால வாழ்வு பற்றிய அவரது சுய மதிப்பீடு. இந்த வகையிலே அவரது 98 வருட கால வாழ்க்கை அணுகப் பட்டு எழுதப்பட்டால் அதிலிருந்து நாம் பல படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு பெரிய அரசியல் நாவலுக் கான கருவைக் கொண்டது அவரது வாழ்க்கை. அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் பிற்கால வாழ்க்கை பற்றியும் நிறைய எழுத்து ஆதாரங்கள் நாம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த ஆதாரங்களுடன் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுக் குறிப்புகளும் வாய்மொழித் தகவல்களும் மிக மிக முக்கியமான ஆதாரங்களாகும். அவரோடு அன்று பேசிப் பழகித் திரிந்த இன்று உயிரோடு வாழும் முதிர்ந்த தலைமுறையுடன் பேசிப் பெறப்படும் வாய்மொழித் தகவல்கள் இந்த வரலாற்றினை முழுமையாக்க மிகவும் பயன்படும். வாய்மொழித்தகவல்கள் மிக முக்கியமாயினும் அவை அகஉணர்வு மீதூரப்பெற்றமையினால் அவை கவனமாகப்பரிசீலனை செய்யப்டவும் வேண்டும். அவர் வரலாற்றை எழுத விரும்பும் ஒரு வரலாற்று அல்லது பண்பாட்டு அல்லது அரசியல் மாணவர் ஒருவருக்கு இக்குறிப்புகள் உதவக் கூடும். அதன் ஒரு அங்கமாகவே இந்த முதலாவது காலகட்டம் இங்கு எழுதப்படுகிறது ஆர்வம் உடையோர் இதனைத் தொடர வேண்டும். https://arangamnews.com/?p=12504
  2. வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி! பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்கவா போகின்றீர்கள். எம்மை சுட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக இதனை அவதானித்தேன். இதனை ஏன் இந்த திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. ஒரு மண்வெட்டி பிடியை கூட நாங்கள் வெட்ட முடியாது. அதற்கு வழக்குப்போடும் இவர்களால் இதனை தடுக்க முடியாதா? வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கத்திடம் கேட்கிறேன் இது ஊழல் இல்லையா? இது தொடர்பாக நீங்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை இவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள். வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமல் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை.அதன்படி 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளவா போகின்றீர்கள். இது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகள். வவுனியா வடக்கை அத்திப்பட்டி போல காணாமல் ஆக்கப் போகிறீர்களா. அதற்கு நான் விடமாட்டேன். இப்பிடியான அநீதியான வேலைகளை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடில் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். எங்களை சுட்டாலும் எமது எதிர்ப்பை காட்டியே தீருவோம் என அவரட மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=351875
  3. யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் தெரிவில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி முன்னிலை வகித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கு உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், விஞ்ஞான பீடப் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், விஞ்ஞானபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன் ஆகிய ஆறுபேர் போட்டியிடுகின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பேரில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்த நிலையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாவது நிலையையும், மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன் மூன்றாவது நிலையையும் பெற்றுக்கொண்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் சுற்றறிக்கையின் படி, பேரவையால் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று விண்ணப்பதாரர்களின் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினுடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனடிப்படையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார். https://akkinikkunchu.com/?p=351871
  4. இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்று யாழ். மாவட்டச் செயலக வாயிலை மூடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு முதல் நெடுந்தீவு வரையான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலனை நேரில் சந்தித்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=351890
  5. யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை 10 Dec, 2025 | 11:26 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ் ஆளணி வெற்றிடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவானவை ஆகும். நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் போதனைசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், அந்தப் பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. எனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட தாபன வழிகாட்டல்களை மீறி வேலைகள் உதவியாளர் மற்றும் வேறு சில வெற்றிடங்களைத் தனியார் நிறுவனம் ஊடாக நிரப்புவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கிறோம். இந்த நிலமை அப் பல்கலைக்கழகப் பணியாளர்களிடையே திருப்தியின்மையை ஏற்படுத்தியிருப்பதுடன், அதற்கெதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர். எனவே இது விடயத்தில் உடனடியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வை வழங்கத் தவறினால் நாம் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று உள்ளது. https://www.virakesari.lk/article/232951#google_vignette
  6. இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு! 10 Dec, 2025 | 10:28 AM இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பல்வேறு சர்வ மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கான கிலன்பச புத்த பூஜை திங்கட்கிழமை (08) அன்று நடைபெற்றது. மேலும் தலதா தாதுக்கான அன்னதானம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. அதன்படி, மேற்படி மத நிகழ்ச்சிகளின் கீழ், கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால், மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்ற பிறகு, திங்கட்கிழமை (08) மாலை பௌத்த சடங்குகளின்படி கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா தாதுவிக்கு கிலான்பச புத்த பூஜை வழங்கப்பட்டது. தலதா மாளிகையின் மகா சங்கத்தினரின் 25 உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) காலை பக்தியுடன் நடைபெற்றது. அங்கு, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த கடற்படை வீரர்களை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் நினைவு கூர்ந்தனர். மேலும், அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போர்வீரர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்து, 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/232945
  7. ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.! Vhg டிசம்பர் 09, 2025 யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர். விசா இல்லை வேலை இல்லை, தனிமை விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது. குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12.2025) அதிகாலை முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/12/blog-post_480.html
  8. ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம் 10 December 2025 யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். அத்துடன், அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப், யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், ரஷ்யா தங்களிடம், நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால், தாங்கள் எதனையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், யுக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்பதால், நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு தங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/435093/ukraine-cannot-cede-land-to-russia-presidential-plan
  9. உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் 2025 ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை IMDB தளம் வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் மிக அழகான பெண்களின் டாப் 10 பட்டியலில் ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லி இரண்டாவது இடத்தையும், சீன நடிகை தில்ரபா தில்முரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காம் இடத்தில கொரிய நடிகை நான்சி மெக்டோனி உள்ளார். அழகான பெண்கள் வரிசையில் இந்திய நடிகை க்ரீத்தி சனோன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. IMDbKriti SanonKriti Sanon in Nadiadwala Special (2022) ஹனியா அமீர், ஜூலியா பட்டர்ஸ், மெக்கென்ன கிரேஸ், குளோ கிரேஸ் மோரெட்ஸ், ஏரியல் வின்டர் ஆகியோர் டாப் 10ல் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/உலகின்-மிக-அழகான-பெண்களின்-பட்டியல்/53-369356
  10. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை! மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன. ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி மக்கள், மற்றும் ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது. வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது. இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் இன்றும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும். மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/மன்னார்-யாழ்ப்பாணம்-கிள/
  11. அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி DilukshaDecember 9, 2025 10:30 am 0 பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிதி சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுகட்டமைப்பு மற்றும் உதவிக்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். https://oruvan.com/chandrika-donates-rs-250-million-to-government-relief-fund/
  12. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை! 09 Dec, 2025 | 11:52 AM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சாதாரண மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால் அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வீடுகள் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232852
  13. “டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப்பைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அதற்கமைய, இந்த அனர்த்தத்தின் கீழ் காணாமல் போன நபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்யக் கோரும் நபர், அந்த நபர் வழக்கமாக வசித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், அத்தகவல்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் இந்தக் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிப்பார் என்பதுடன், பிரதேச செயலகத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக இது காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சேபனைகள் இல்லையெனில், பிரதேச செயலாளரால் அனுமதிக்காகப் பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட வலயத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்திப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. இதன் கீழ், நபர் ஒருவர் காணவில்லை என்பதற்கான சான்றிதழ் கோரப்பட்டிருக்கும் போது, மேற்கூறியவாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பிரதேச செயலாளரால் ‘காணவில்லை என்பதற்கான சான்றிதழை’ வெளியிடவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகூடம் (National Archives) தெரிவிக்கிறது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க குறிப்பிட்டார். https://www.samakalam.com/காணாமல்-போனோர்-மற்றும்-உ/
  14. டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு! December 8, 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/
  15. போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 11:56 AM போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார். https://www.virakesari.lk/article/232752
  16. கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232757
  17. ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்! 08 Dec, 2025 | 01:15 PM கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232760
  18. அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா? 08 Dec, 2025 | 12:14 PM தம்பு லோவி அண்மைய மாதங்களில் பல்கலைக்கழகங்கள் பற்றிய பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. இவற்றுள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தல் ( Times Higher Education World University Rankings) முக்கியமானது. இதன்படி, தொடர்ந்து 10 ஆவது வருடமாக இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் மஸ்ஸாச்சுட்டஸ் இன்ஸ்டிடியூட், மூன்றாம் இடத்தை ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவையும் பெற்றுள்ளன. முதல் 40 இடங்களில் சீனாவின் 5 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பல்கலைக்கழகங்களும் இம்முறை சிறந்த இடங்களை பிடித்துள்ளன. இந்திய பல்கலைக்கழகங்கள் எவையும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், அதன் 128 பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தன. ஆனால், கடந்த 10 வருடங்களில் இது 7 மடங்காக அதிகரித்துள்ளமை இந்திய பல்கலைக்கழகங்களின் முன்னேற்றப்பாதையை காட்டுகின்றன. இத்தகைய ஒரு பின்னணியில் நாம் இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமையை ஆராய்ந்துபார்ப்போமானால், இலங்கையின் எந்த பல்கலைக்கழகங்களும் முதல் 1000 க்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், 5 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், சிலிட் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவையே அவை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எந்த பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இலங்கையின் மூத்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருக்கின்றபோதிலும், இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் 7 ஆவது இடத்திலேயே யாழ் பல்கலைக்கழகம் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வெளியான வெபோமெட்ரிக்ஸ் தரப்படுத்தலின்படி, கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் , மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இடங்களை பிடித்துள்ளன. கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்திலும், யாழ் பல்கலைக்கழகம் 8 ஆவது இடத்திலும் இருக்கிறன. முன்னர் 13 ஆவது இடத்தில் இருந்த கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கடந்த சில வருடங்களில், ஆய்வு, கல்வி செயற்பாடுகள் மற்றும் இதர செயற்பாடுகளில் பல்கலைக்கழக நிர்வாகமும் கல்வியாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருப்பதை காட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில், மாணவர் வளமும், ஆசிரியர் வளமும் மற்றும் பௌதிக வளங்களும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கின்ற நிலையிலும் புலம்பெயர் தமிழ் மக்களின் கணிசமான உதவிகள் கிடைகின்றநிலையிலும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்களில் தொடர்ந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலைமைக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தரை தெரிவுசெய்வதற்காக இன்று நடைபெறும் மதிப்பீடு முக்கியத்துவம்பெறுகின்றது. தமது அரசியல் மற்றும் சுய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தை அதன் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் ஊடாக முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் பிராந்தியத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியதுமான சரியான ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் யாழ் பல்கலைக்கழக சபை உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழக தெரிவில் அரசியல் தலையீடுகள் அதிகளவில் இருந்தமை அனைவருக்கும் வெளிப்படையான ஒரு உண்மை. ஆகவே, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் தகைமை, மற்றும் அவர்கள் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வு செயற்பாடுகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் நலன்களுக்கும் எவ்வாறு கடந்த காலங்களில் பங்களித்திருக்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பற்றுறுதி, தலைமைத்துவப்பண்பு, சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து சரியான ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம். https://www.virakesari.lk/article/232755
  19. 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார். "சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார். மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக தெரிய வந்தது.கடல் அரிப்பை தடுக்க புத்தளம் கடற்கரையில் ஒரு சுவரைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளைஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/600க்கும்-மேற்பட்ட-இறால்-பண்ணைகள்-பாதிப்பு/175-369246
  20. மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்! நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார். இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/
  21. 🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை! adminDecember 8, 2025 மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்! ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்! இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். 🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st Runner Up வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர். வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும், வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். 🌟 உலகக் கோப்பைப் போட்டியில் தலைமை! அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS World Cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் தலைமை தாங்கி, வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) இலங்கைக்குப் பெற்றுத் தந்துள்ளார். இது இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாகும். இச்சாதனை மாணவர்களுக்கு மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி திரு. நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி. யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே அடித்தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223804/
  22. வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன் adminDecember 7, 2025 வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை ==================================================================================== இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான திரு செ.இராசதுரை அவர்கள் 07.12.2025 ஆந் தேதி தமிழகத்தின் சென்னையில் இயற்கையடைந்தார் என்ற செய்தி இலங்கையில் அரசியல் பிரக்ஞையுடன் வாழ்வோரின் கவனத்தைப் பெறுவதாக இருக்கிறது. நாம் பிறந்து வாழும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நமது மூத்த தலைமுறைகளின் ஆதரவையும், அன்பையும் பெற்ற ஓர் அரசியல் தலைவனுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு இக்குறிப்பையும் பதிவாக்க விரும்புகிறோம். இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும், இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையும் கற்றறிவதில் ஆர்வங் கொண்ட மாணவர்கள் கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் அரசியல் ஆளுமையாக, முன்னாள் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் காணப்படுகின்றார் எனலாம். இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் செல்நெறியில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு முன்னும், பின்னுமான அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு திரு செ.இராசதுரை பற்றிய கற்கை மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. வடக்கு இலங்கையிலிருந்து வித்தியாசங்கள் மிகுந்த கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் பிரதிநிதித்துவ சனநாயக அரசியலுக்கேயுரிய தன்மைகளுடன் தமிழ்த் தேசியவாத அரசியலை வேரூன்றச் செய்வதில் மிகுந்த பங்களிப்பை நல்கிய முழுநேர அரசியல்வாதியாக சுமார் மூன்று தசாப்த காலமாகத் திரு செ.இராசதுரை அவர்கள் செயலாற்றியுள்ளார். இவருக்குப் பின்னர் மிதவாத அரசியலைச் செய்யவல்ல அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முழுநேர அரசியல்வாதிகளை இவருடைய அரசியல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் உருவாக்கியிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது. மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குள் வாழ்ந்த பல்லின, பல்சமூகத் தன்மைகளையும், பல்பண்பாடுகளையும் நன்கு உள்ளார்ந்து ஆய்ந்தறிந்து அதற்குத் தகுந்த வகையில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஒரு பிரபுத்துவ அரசியல் ஆளுமையாக அவர் இயங்கியுள்ளார். இதனால் மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பிராந்தியத் தலைவராக இவர் மேற்கிளம்பித் தெரிந்துள்ளார். இவ்வாறு, சரி பிழைகளுக்கு அப்பால் ‘தமிழ்த் தேசியம்’ எனும் குடையின் கீழ் மிதவாத அரசியல் அணுகுமுறைமையாலும், தனது தலைமைத்துவத்தாலும் மக்களை அணிதிரட்டிய திரு செ.இராசதுரை அவர்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் மாறாத நோயாக இருந்து வரும் தனிநபர்கள் சிலருடைய ஆதிக்கமும், ஏகப்பிரதிநிதித்துவக் கற்பனையும் திட்டமிட்டு வஞ்சனையைச் செய்திருக்கிருக்கின்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. செ.இராசதுரை எனும் அரசியல்வாதிக்குச் செய்யும் வஞ்சகம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ்த்தேசியவாதத்திற்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிந்திருந்தும் அதிகாரத்தைத் தம்பிடிக்குள் வைத்திருப்பதற்காகப் பேராசை கொண்ட சிலர் எந்தவித தூரநோக்குகளுமின்றி இந்த வஞ்சனையைச் செயயத் துணிந்திருக்கிறார்கள். செ.இராசதுரைக்குச் செய்யப்பட்ட வஞ்சகம் முன்னணியிலிருந்த சில தமிழ் மிதவாதத் தலைவர்களின் உண்மையான தமிழ்த் தேசிய அக்கறையினைக் கேள்விக்குரியதாக ஆக்கியதுடன், ‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் விடுதலை’ என்பவை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உபாயமாகவும், ஒரு கோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்ற கருதுகோளையும் வலுப்படுத்தி நிற்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்க வைக்க முயற்சிக்கும் தரப்பினர் தமக்கு ஒத்துவராதவர்களை உள்ளிருந்து வெளியேற்றுவதற்காக உருவாக்கிய ‘துரோகியாக்கல்’ என்ற உத்தியின் துணையுடன் திரு செ.இராசதுரை அவர்களுக்கு எதிரான வஞ்சகம் திட்டமிடப்பட்டிருப்பதைப் பற்றி அறியவும் முடிகிறது. இது இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் ‘துரோகியாக்கல்’ எனும் உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் பற்றிக்; கற்றறிய உதவுவதாகவும் இருக்கிறது. 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு செ.இராசதுரை அவர்களைத் தோல்வியுறச் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளிருந்தே நடைபெற்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. இதற்காக மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர் தன்மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் சவால்கள் மிகுந்த இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு வாக்காளர்கள் செ.இராசதுரை அவர்களைக் கைவிடவில்லை, அவரை வெற்றி பெறச் செய்தார்கள், ஆனாலும் செ.இராசதுரைக்கு எதிரான உள்ளகப் ‘பனிப்போர்’ நின்றுவிடவில்லை. தனது தரப்பினருடன் பனிப்போருக்குச் செல்லாமல் அவர்கள் எதிர்பார்த்த ‘துரோகியாக்கல்’ சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டார். இத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே அவரது வரலாறு தெரிகிறது. அவர் வெளியேறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஒரு ‘கட்சியையோ!’, ஒரு ‘அமைப்பையோ!’ உருவாக்கியதாக அறிய முடியவில்லை, இதனால் எதையும் பகுத்தறிந்து பார்க்கத்தகுந்த மட்டக்களப்பு மக்களின் மனதில் அவர் நிலையாக வாழும் தன்மையினைப் பெற்றுக் கொண்டார் எனலாம். திரு செ.இராசதுரையின் வெளியேற்றம், மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியலில் வெளித் தோற்றத்திற்கு நிறுவனத் தன்மை காணப்பட்டாலும் அதனுள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் ஆதிக்கமும், செல்வாக்குகளும், சர்வாதிகாரப் போக்குகளும் மேலோங்கிய நிலைமையின் எதார்த்தத்தை உணரச் செய்தது. இத்தோடு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைமைகளிடையே பன்மைத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பின்வாங்கும் தன்மை, உள்ளார்ந்த சனநாயகத்தின் பலகீனம், கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களில் ஆர்வமின்மை ஆகியவற்றினையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம். தமிழ்த் தேசியவாத அரசியலில் எதிர்மறை நோக்குடன் ‘பிராந்தியவாதத்தை’ வளர்த்தெடுக்க முனைவோருக்கான வாய்ப்புகளை செ.இராசதுரைக்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சனையும் அதன் விளைவுகளும் நன்றாக வழங்கி வந்துள்ளன எனலாம். து.கௌரீஸ்வரன், 07.12.2025 https://globaltamilnews.net/2025/223801/
  23. வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன் அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம் என்பதை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார். அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல. மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?. ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார். ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார். “வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R ) இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது. அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன? பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது. பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ? நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார் புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள். உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள். எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது. https://www.nillanthan.com/7984/
  24. மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன் டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின. மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக் கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது. புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன. ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள் அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை, விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம் இளகவில்லை. மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா? புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட. டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம். அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள். இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது. https://www.nillanthan.com/7971/
  25. பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முரண்பாடான இந்த விடயத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக கட்சித் தலைவர்களை அழைத்து முடிவை எடுக்க வேண்டும். இப்போது அரச அதிகாரம் ஜனாதிபதி அலுவலகத்தாலோ அல்லது பிரதமர் அலுவலகத்தாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழுவால் தான் தற்போது நாட்டின் நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பாராளுமன்ற அதிகாரத்தை இழிவுப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை தீத்வா சூறாவளி அழிவுகளில் இருந்து மீள அரசாங்கத்திற்கு அனுபவம் குறைவாகவே உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை மற்றும் புனரமைப்புக்கான கண்காணிப்புக் குழுவை பாராளுமன்றத்தால் நியமிப்பது பொருத்தமானது. அதன் தலைமைப் பதவியை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வகிக்க வேண்டும். அத்துடன் புனரமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்களை கொண்ட ஒரு சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு நாட்டின் நான்கு மகாநாயக்க தேரர்கள் தலைமை தாங்கினால், அது ஒரு பெரிய பலமாக இருக்கும். ஏனைய பிரதான மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகும். பேரிடருக்குப் பிறகு, 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் பணிகளை ஒப்படைக்கப்பட்ட அனைத்துத் திணைக்களங்கள், அரச பிரிவுகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் செயலற்றவர்களாகி விட்டனர். பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, உதவிகளை வழங்குவதில் அரசியல்மயமாக்கலைச் செய்ய முயற்சிக்கிறது. மற்றொரு சமாந்தரமான நிவாரண நிதியையும் நிறுவியும் உள்ளது. இந்த அழிவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் ஒரு வியூகம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். இன்னும் யார் இறந்தார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று கூட முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=351532

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.