Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! adminSeptember 24, 2025 எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறது. சர்வதேசம் எதையுமே செய்யாது என்ற விசம பிரசாரத்தின் மூலம் அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். நான் 15 தடவைக்கு மேல் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றவன் என்ற அடிப்படையில், நாட்டிலிருந்து கோரிக்கை வர வேண்டும். உள் நாட்டு மக்கள் போதிய அளவு அக்கறை காட்டாவில்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் அழுத்தம் மட்டும் போதாது என்ற கருத்துப்பட சொல்லி இருந்தார்கள். நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்வதற்கு போர் முடிவடைந்து ஏறக்கூடிய ஏழு ஆண்டுகள் எடுத்தன. 2009 இல் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்தே 3 பிரதான கட்சிகள் இணைந்து இனப்படுகொலை என கையெழுத்திட்டு ஐநாவுக்கு கடிதம் அனுப்பின. 2015ல் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வடக்கு மாகாண சபை இருந்த போதும் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருந்தது. இனப்படுகொலையை நிரூபிக்க முடியாது என சொன்னவர்கள் தற்போது செம்மணிக்கு பிறகு இனப்படுகொலை நிருபிக்கப்படலாம் என்ற கருத்தை எங்கள் தரப்பில் இருந்து சொல்கிறார்கள். நாங்கள் போராடுவதால் அழுத்தம் கொடுப்பதால் எதுவும் ஆகாது என்று இல்லை. எங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பது போல செம்மணி மனித புதைகுழி தோண்டும் போது இருநூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் இன்று வெளிவந்துள்ளது. இதை குழப்புவதற்கு பலர் செயற்பட்டாலும் நாங்கள் அதனை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். இனிமேல் இனப்படுகொலை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு பிராந்தியங்களை ஏற்று ஐநாவின் பொறிமுறை ஊடாக எமக்கான பரிகாரநீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமக்கு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும். சர்வதேசத்திடம் நீதியை கேட்கவும் தொடர்ந்து போராடவும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் – என்றார். https://globaltamilnews.net/2025/220728/
  2. வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு! adminSeptember 24, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220737/
  3. வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை. இப்பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோருகின்ற தரப்புகள்தான் அப்பொழுது ஆட்சியிலிருந்தன. எனவே அவர்களுக்கே இந்தத் தவறில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்களே இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துத் தாமப்படுத்தி, இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் விட்ட தவறை இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் சீரழிவு நிலைக்குள்ளாகி விட்டன. அதிலும் வடக்கு மாகாண சபையின் நிலை இன்னும் மோசம். மாகாணசபை சீரழிந்துள்ளது என்றால், அதனுடைய நிர்வாகம் பாழடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். நிர்வாகம் பாழந்துடைந்துள்ளது என்றால். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுடைய பொறுப்பைச் செய்யவில்லை. அல்லது பொறுப்பைச் செய்யக் கூடிய ஆளுமையுடன் இல்லை என்பதே அர்த்தமாகும். இதற்கு வலுவான ஆதாரமாக, “பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மக்களுக்குச் சரியான முறையில் தங்களுடைய பணிகளைச் செய்யவில்லை.” என்று தொடர்ச்சியாக ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவலை தெரிவித்து வருவதைச் சொல்லலாம். ஆளுநர் சொல்வதில் உண்மையுண்டு. ஒரு தொகுதி உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் உரிய முறையில் தங்களுடைய பணிகளைச் செய்வதில்லை. அதனால் மக்கள் அலைச்சல்களுக்குள்ளாக வேண்டியுள்ளது. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றுப்படாமல் காலதாமதமாகிறது. அதனால் அவர்களுக்குப் பாதிப்பும் சிரமமும் ஏற்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளிலும் இந்த மாதிரி தாமதங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. மருத்துவத்துறை, கல்வித்துறை போன்றவை சீர்குலைவைச் சந்திக்கின்றன. இப்படியே சொல்லிக் கொண்டு – பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். தொடக்கத்தில் ஆளுநர் சொல்வதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஏனென்றால், மாகாணசபை நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளுநர் அவதானித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிலைமை புரிகிறது. குற்றவாளிகளுக்கும் தவறிழைப்போருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை – வாய்ப்பை அளிக்கிறார் என்றே பலரும் கருதினர். அத்துடன், புதிய NPP அரசாங்கமும் ஆட்சியில் இருப்பதால், நிச்சயமாக பெரிய மாற்றங்கள் – முன்னேற்றம் – ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை வேறு விதமாகியது. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக வரவர நிலைமை மோசமாகத் தொடங்கியது. ஆளுநர் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் சொல்கிறாரே தவிர, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதாகக் காணோம் என்ற குரல்கள் எழத் தொடங்கின. ஆளுநர் நல்லவர், நேர்மையானவர். பண்பானவர். ஆனால், நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதில், தவறிழைப்போருக்கான தண்டனைகளை அளிப்பதில் போதிய உற்சாகத்தைக் காட்டவில்லை. ஏனோ தயக்கம் காட்டுகிறார். இதனால் குறைபாடுகள் அதிகரிக்கின்றன. தவறிழைப்போரும் பொறுப்பற்று நடப்போரும் எந்த வகையான அச்சமும் இல்லாமல் அதேவிதமாக நடக்கின்றனர். ஆளுநர் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் சொல்கின்றவர் இல்லை. அவர் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர். தவறுகளை இழைப்போரையும் பொறுப்பற்று நடப்போரையும் நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அது ஏன் செய்யப்படாதிருக்கிறது? என்ற விமர்சனங்களும் கேள்வியும் பரவலாகியுள்ளது. இப்பொழுது வடக்கு மாகாணத்தில் பல புகார்களோடு (முறைப்பாடுகளோடு) ஆளுநர் பணிமனைக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றைப் பார்க்கலாம். 1. ஆளுநரிடம் தெரிவித்தால் – முறையிட்டால் – தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில். 2. ஆளுநரைச் சந்திக்கக் கூடிய நிலை உள்ளதால். 3. ஆளுநரைத் தவிர வேறு யாரிடம் இதை முறையிடலாம் என்ற நிலையில். 4. ஏனைய இடங்களில் அளவுக்கு அதிகமான முறையீனங்களும் பிரச்சினைகளும் பெருகியுள்ளதால், ஆளுநரிடம் முறையிட வேண்டும், தீர்வைக் கோர வேண்டும் என்பதால். 5. ஆளுநரே எந்த நிலையிலும் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நடவடிக்கைக்கு ஆணையிட வேண்டும் என்ற காரணத்தினால். ஆனாலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உறங்கு நிலையிலேயே தள்ளி வைக்கப்படுகின்றன. சில விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதற்குரிய அதிகாரிகளோடு நேரடியாக ஆளுநர் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைக்குப் பணிப்பதும் நடக்கிறது. அப்படிப் பணித்தாலும் காரியங்கள் எதுவும் உரிய முறையில் நடப்பதாக இல்லை. ஏதோ சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லது செயலாக்கம் நடைபெறாமல் அப்படியே கை விடப்படுகிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அண்மையில் பல ஊடகங்களில் வந்து பொதுக் கவனத்தைப் பெற்ற ஒரு விவகாரம், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மகப்பேற்று மற்றும் பெண்கள் நோயியல் தடுப்பு – குணமாக்கல் பிரிவை இயங்க வைப்பதற்கான முயற்சியாகும். இந்த விடயம் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியது. அதனையடுத்து ஆளுநர் குறித்த மருத்துவனைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். ஒரு மாதம் சென்ற பிறகும் எந்த விடயமும் நடக்கவேயில்லை. பதிலாக அந்தப் பிரிவு இயங்காமல் உள்ளதாகக் குறிப்பிட்டு, அங்குள்ள மருத்துவ உபகரணங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றன. இதனையடுத்து நோயாளர் நலன்புரிச்சங்கம் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தச் சூழலில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் வடமாகாண சுகாதார அமைச்சும் ஆளுநர் தலைமையில் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டி குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் ஆராய்ந்தது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நோயாளர் நலன்புரிச் சங்கமும் அழைக்கப்பட்டிருந்தது. கலந்தாராய்வின்போது குறித்த பிரிவை இயக்குவதற்கான தேவைகளின் பட்டியலை மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார். அந்தப் பட்டியலின் அடிப்படையில் அவ்வளவு வளங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, முதற் கட்டமாக மருத்துவப் பிரிவை அங்கே இயக்க வைப்பதாகவும் படிப்படியாக அதற்கான வளங்களை நிறைவு செய்ய முடியும் என்றும் பேசப்பட்டது. அதற்கமைய தீர்மானமும் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 20 நாட்கள் கடந்து விட்டன. நிலைமையில் துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குப் பிறகு யாரிடம் பேசுவது? எதைப் பேசுவது? இப்படித்தான் அதே மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பேருந்து நிலையக் காணியில் தவறான முறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை (கடைகளை) அகற்றுவது தொடர்பாக ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதற்கான கூட்டமும் நடந்தது. ஊடகங்களிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், நிலைமையில் முன்னேற்றத்தைக் காணவேயில்லை. இப்படித்தான் பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள், ஆசிரிய இடமாற்றங்கள், காணிப் பகுதிகளில் தாதமங்கள் என ஏராளம் குறைபாடுகளும் பிரச்சினைகளும் மலிந்துள்ளன. காணிப்பிரச்சினை எனும்போது ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு காணிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு ஆவணத்தை புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது. அந்தக் காணியில் குறித்த நபரும் அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே குடியிருந்து வருகின்றனர். இருந்தாற்போல கொழும்பில் இருக்கும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சிபாரிசுக் கடிதத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேலதிக சிபாரிசையும் பெற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலரையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரையும் சந்தித்துத் தனக்கும் அந்தக் காணியில் பாதியை உரிமை கோரியிருக்கிறார். இவ்வளவுக்கும் குறித்த நபர் ஒருபோதுமே புதுக்குடியிருப்பிலோ முல்லைத்தீவு மாவட்டத்திலோ குடியிருந்ததே இல்லை. ஆனால், குறித்த சிபாரிசுக் கடிதத்துக்காக மாவட்டச் செயலரும் பிரதேச செயலரும் நீண்டகாலமாகவே காணியில் குடியிருப்பவரை அழைத்து, பாதிக் காணியை வழங்குமாறு பணித்துள்ளனர். காணிக்குரியவர் அதனை மறுக்கவே அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மட்டுமல்ல, பாதிக்காணியை வழங்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக கடிதமும் எழுதியுள்ளனர். இதனை ஆட்சேபித்து பாதிக்கப்பட்டவர் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை. ஆனால், பிரதேச செயலகத்திலிருந்து ஏகப்பட் அழுத்தங்கள் அதற்கிடையில் காணி உரித்தாளருக்கு வந்து கொண்டிருக்கின்றன. இப்படி அரச திணைக்களங்கள் தொடக்கம் தனியார் பிரச்சினைகள் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கூட பிரச்சினைகள் பேசப்படுகின்றனவே தவிர, தீர்வுகள், நடவடிக்கைள், முன்னேற்றங்கள் என்பது போதாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலைப் பலரும் கோருகிறார்கள். தேர்தல் வந்தாலும், அதில் வெற்றியீட்டினாலும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையைப் போல இன்னொரு நிர்வாகம் வந்தால் அதனால் என்ன பயன்? அதை விட தேர்தலே வேண்டாம். அதையும் விட ஆளுநரும் வேண்டாம் என்றுதான் சனங்கள் எண்ணுகிறார்கள். அப்படியென்றால் என்னதான் வேணும் என்பதே கேள்வி. https://arangamnews.com/?p=12331
  4. திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன் திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் ஒளிப்படம் தாங்கிய ஊர்தியை நகர்த்திய பொழுது திருகோணமலையில் அந்த வாகனம் தாக்கப்பட்டது. அந்தச் சம்பவம் தமிழ்த் தேசியக் கட்சிகளை கட்சி கடந்து ஒன்றாக்கியது. ஆனால் அரசாங்கம் நினைவு கூர்தலை தடுக்காது தளர்வாக நடந்து கொள்ளும் போதெல்லாம் குறிப்பாக திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? நினைவுத் தூபியில் யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதல்கள் வெடிக்கின்றன. சில சமயம் இந்த மோதல்கள் ஊடகச் சந்திப்புகள் வரை வருகின்றன. திலீபன் உண்ணாவிரதம் இருந்தது நல்லூர் வளாகத்துக்குள். ஆனால் அது ஒரு கோயில் வளாகம் என்பதனால் அங்கே நினைவுத் தூபியை வைக்க அனுமதிக்கப்படாத காரணத்தால் அது நல்லூர் வளாகத்துக்கு வெளியே இப்போது இருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது திலீபன் உயிர் நீத்த இடம் அல்ல. எனவே திலீபனை நினைவு கூர முற்படுபவர்கள் அந்த இடத்துக்குத்தான் வரவேண்டும் என்று இல்லை. அந்தச் சூழலில் பல காணிகள் உண்டு மண்டபங்கள் உண்டு. அதனால் திலீபனை மெய்யாக விசுவாசமாக நினைவுகூர வேண்டும் என்று கருதும் கட்சியோ செயற்பாட்டாளர்களோ இடத்துக்காக அடிபடத் தேவையில்லை. இங்கு இடம் ஒரு பிரச்சினையே அல்ல. திலீபனை எப்படி நினைவு கூரலாம்? அதன்மூலம் அவருடைய நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம்? அதன் மூலம் அவருடைய தியாகத்தின் ஆன்ம பலத்தை எப்படி நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உந்து சக்தியாக மாற்றலாம்? என்று சிந்திப்பதுதான் இங்கு முக்கியம். திலீபனின் நினைவு நாளில் அவருடைய ஒளிப்படம் ஏந்திய வாகனத்தை வடக்கு கிழக்காக நகர்த்துவது ஒரு நல்ல ஏற்பாடு. நல்லூரில் அவருடைய நினைவுகளை பகிரும் ஒளிப்படக் காட்சியை வைப்பதும் ஒரு நல்ல ஏற்பாடு. குருதிக் கொடையும் நல்லது. இவற்றைவிட புதிதாகவும் யோசிக்கலாம். இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக ரிக்ரொக் தலைமுறையின் கவனத்தை, கொழும்பின் கவனத்தை, உலகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்க படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்ட வடிவங்கள்தான். கடந்த 15ஆம் திகதி திலீபனின் நினைவு நாளுக்கு முன்னதாக கொழும்பில் சிங்களப் படைப்பாளியான சந்தரசி சுதுசிங்க எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. திலீபன் என்று பெயரிடப்பட்ட அந்த நூலில்,இரண்டு அத்தியாயங்கள் திலீபனை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளைக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியப் பரப்புக்கு வெளியே வேறு இனங்களும் திலீபனைக் கொண்டாடுவது திலீபனுக்கு மகிமையே. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு மகிமையே. அமைச்சர் சந்திரசேகரன் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்துவது திலீபனுக்கு மகிமையே. திரைப்படக் கலைஞர் சோமிதரன் முகநூலில் கூறியது போல “அஞ்சலி செலுத்த வந்தவரும் ஓர் அரசியலைச் செய்ய வருகிறார். அவரைத் தடுத்து நிறுத்தியவர்களும் தங்களுக்கான அரசியலைச் செய்கிறார்கள்” என்பதே உண்மை. திலீபன் ஓர் ஆயுதப் போராளி. ஆனால் அவர் உயிர் நீத்தது ஓர் அறவழிப் போராட்டத்தில். அவருடைய வழியை விசுவாசமாகப் பின் தொடர்கிறவர்கள்தான் அவரை அஞ்சலிக்கலாம் என்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவரைப் போல சாகும்வரை உண்ணாமல் இருக்க எத்தனை பேர் தயாராக இருந்திருக்கிறார்கள்? உணவோ நீரோ இன்றி எத்தனை நாள் இருக்கலாம் என்பது உபவாசம் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலிருந்து தப்பினாலும் அதனால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களில் இருந்து தப்ப முடியாது. கடந்த 16 ஆண்டுகளாக குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெற்றோர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். எனினும் அப்போராட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டன. அது சரி. ஏனென்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்தான் திரும்பத்திரும்ப தியாகம் செய்ய வேண்டும் என்றில்லை. கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான் அவர்களுக்காகப் போராட வேண்டும். திலீபனைப்போல உயிர் பிரியும் வரை உண்ணாமலும் துளி நீரும் அருந்தாமலும் போராட எத்தனை பேரால் முடியும்? கடந்த 16 ஆண்டுகளாகத் தாங்கள் செய்ய முடியாத அல்லது தாங்கள் செய்யத் தயாரில்லாத தியாகங்களுக்கு உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாங்கள் செய்யத் தயாராக இல்லாத ஒரு தியாகத்துக்கு உரிமை கோருபவர்களால்தான் உண்மையான தியாகம் கொச்சைப்படுத்தப்படுகிறது. தியாகம் செய்ய வேண்டிய காலங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தியாகத்தைப்பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கட்டுரை யாரையும் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. யாரும் சாகவும் வேண்டாம். செத்தது போதும். ஆனால் செய்யத் தயாராக இல்லாத தியாகங்களுக்கு உரிமை கோரக்கூடாது. மாறாக அந்தத் தியாகங்களின் மகிமையை,நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்கலாம். அதிலாவது உண்மையாக இருக்கலாம். தியாகிகளை அஞ்சலிக்கும்போது விளக்கு கொளுத்துவது மலர்களை வைப்பது போன்றவை வழமையான வழிகள்.வாகன ஊர்தி,ஒளிப்படக் காட்சி,குருதிக் கொடை போன்றன ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை.ஆனால் இவற்றுக்கும் அப்பால் புதிய படைப்புத்திறன் மிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக தியாகியின் நாட்களில் ஊர் ஊராக அவருடைய நினைவுகளைப் பரவலாக்கும் விதத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் கலை பண்பாட்டுச் செயற்பாடுகள் பெரிய பங்காற்ற முடியும்.எனவே புதிய கலை வடிவங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். தியாகிகளின் நாட்களில் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி இசை அஞ்சலிகளை இசை வேள்விகளைச் செய்யலாம். அந்த இசை வேள்விகளுக்குப் பிராந்திய,அனைத்துலகக் கலைஞர்களைக் கொண்டு வரலாம். இது ஒரு வழி. இரண்டாவது வழி, தியாகியின் பெயரால் போட்டிகளை ஒழுங்குபடுத்தலாம். கவிதைப் போட்டி,கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி, நாடகப் போட்டி,விவாதப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள்… மூன்றாவது வழி,தியாகிகளின் நாட்களில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து அந்த தியாகத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆழமாக ஆராயலாம். நாலாவதுவழி, தியாகிகளின் பெயரால் தொண்டு செய்யலாம். ஊர் ஊராக சிரமதானங்களைச் செய்யலாம். ஊர்க் குளத்தை,நீரோடும் வாய்க்கால்களைத் தூர் வாரலாம்.ஊரைத் துப்புரவாக்கலாம். மரம் நடலாம். இப்படித் தியாகியின் பெயரால் பசுமைத் திட்டங்களை முன்னெடுக்கலாம். ஐந்தாவது வழி,தியாகிகளின் பெயரால் இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்தலாம்.மருத்துவத் துறை ஒரு இண்டஸ்ட்ரியாக மாறி ஏழைகளுக்குத் தூரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,இலவச மருத்துவ முகாம்களை தியாகிகளின் பெயரால் ஒழுங்கமைக்கலாம். உதாரணமாக அரச பொது மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில சத்திர சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுகிறது. அவ்வாறான சத்திர சிகிச்சைகளை இலவசமாக தியாகிகளின் பெயரால் செய்யலாம். அதாவது தியாகிகளை நினைவு கூர்வது என்பது தொண்டு செய்வது; தன்னாலியன்ற தியாகத்தைச் செய்வது.இவ்வாறு தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் படைப்புத்திறனோடும் தியாக சிந்தையோடும் சிந்தித்தால் புதிய வழிகள் திறக்கும். அவ்வாறு புதிய கற்பனைகள் தோன்றும்போது நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுவது தடுக்கப்படும்.எங்கே நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுகிறதோ அங்கே நினைவுகூர யாருக்கு உரிமை அதிகம் என்று கேட்டுச் சண்டைகளும் அதிகரிக்கும். https://www.nillanthan.com/7795/
  5. சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் September 21, 2025 11:26 am 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்… அ.நிக்ஸன்- வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்ற கடும் தொனியையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தினார். சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர். சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸ்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது. சுவிஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிஸ்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர். சிங்கள தமிழ் பிரதிநிதிகளின் நியாயமான நீண்ட விளக்கங்களை செவிமடுத்ததாக இக் கட்டுரையாளருக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார். சுவிஸ்லாந்து அரசியல் நிர்வாக முறைமை பற்றிய விளக்கங்களின் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுஸே் பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர். கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர். ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர். இக் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால், அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார். ஆனால், இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர். அதேநேரம், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார். அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது, அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார். அதேநேரம் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார். சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர். ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர். அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார். இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார். அதேவேளை மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார். சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார். 2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளியிப்படுத்தியிருந்தார் எனவும், ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார். இக் கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார். எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது. அதேநேரம் இக் கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://oruvan.com/switzerland-seminar-what-happened/
  6. காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்கள், இராணுவத்தின் உத்தரவின் பேரில் காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை ஏற்றிச் சென்ற லொரி ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், சனிக்கிழமை அதிகாலை, காசா நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இது "மருத்துவர்களை நகரத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதற்காக இயக்கப்பட்ட இரத்தக்களரி பயங்கரவாத செய்தி" என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225645
  7. தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி 21 Sep, 2025 | 04:57 PM நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார். தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் சனிக்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/225675
  8. ”தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்” - செல்வம் அடைக்கலநாதன் வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன். எங்களை பொறுத்த வரையில் ஒற்றுமை இன்மையை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம். குறிப்பாக எமது ஒற்றுமை இன்மையினால் தமிழ் மக்கள் விரக்தியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேசிய கட்சிகளின் பிரதித்துவம் உருவாகியது. இது ஒரு செய்தியாகவே நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக எமது செயற்பாடுகள் வெறுமனவே பேச்சளவில் காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் அவ்வாறு ஏற்பட்டால் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும். எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும். எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது. அத்தோடு அதற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் எட்டப்படவில்லை. ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்லுகின்ற அபாய நிலை இருக்கின்றது. எனவே ஒற்றுமையாக மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/தமிழ்-தேசியத்தை-பற்றி-பே/
  9. கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அவர் காலத்தில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன். கடந்த 2004, ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார், அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசிய பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் பாராளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும். அந்த தேர்தலில் வடகிழக்கு எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களை தெரிவு செய்தனர் அதில் ஒரு நிர்வாக அதிகாரியா இருந்த கனகசபை அண்ணரும் தெரிவானார். அந்த காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும் கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்த காலம்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதனால் மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது 2006, நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்திற்கு மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என கனகசபை, அவர்களுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்த்தியின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார். அந்தப்பயம் காரணமாக 2010, தேர்தலில் வேட்பாளராக சம்மதிக்கவில்லை அதற்க்கு பின்னர் அவர் எந்த தேர்தல்களிலும் ஈடுபடவில்லை அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டு கூறினார். அரசியலுக்கு வருவதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாக சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86, அகவையில் இறையடி சேர்ந்துள்ளார் அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரினை பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/கனகசபை-ஐயாவின்-மறைவு-பேர/
  10. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது! adminSeptember 21, 2025 யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் படகு சவாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை ( 21.09.25) நடைபெற்றது. நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழ். மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் எமது இலக்காகும். இதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், தனியார் துறையினரும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் யாழ். படகு சவாரி திட்டம் மண்டைதீவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் எமது யாழ். மண்ணுக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கு இது உதவும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/220610/
  11. எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த நாய் தனது எஜமானை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழ். மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. https://hirunews.lk/tm/421236/an-uninvited-guest-rushed-to-the-jaffna-hospital-to-inquire-about-the-well-being-of-his-master
  12. கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம் முருகானந்தம் தவம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்திரம் கொடுத்தன. சிறப்புரிமைகளை அங்கீகரித்தன. ஆனால், தற்போதைய அனுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் மூடி மறைக்க முற்படுகின்றது என்றவாறாக கடும் விமர்சனங்கள் வெளிக் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் பிளவுகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றியமை போன்றவற்றால் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பாளிகள், மீண்டெழும் ராஜபக்‌ஷக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனம் வரவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும், நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்கவே தற்போது ‘சர்வாதிகாரம்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஏற்கெனவே சில தடவைகள் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்த நிலையில், அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி மீதும் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சபை கூடிய நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தனது அறிவிப்பை விடுத்தார். அதில், “அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது. ஆனால், பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒழுங்கற்றது. அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்குக் காரணமாக சபாநாயகர் எடுத்துக் கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அவற்றைச் சமர்ப்பிக்காது சந்தித்தன முறையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நிராகரித்ததுடன் சபையில் சபாநாயகர், சபைமுதல்வர் ஆகியோர் நடந்து கொண்ட முறைதான் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசின் சர்வாதிகாரத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற் கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே அரசு அதனை நிராகரித்தது. அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை யாருக்குக் கொண்டுவர முடியும் யாருக்குக் கொண்டுவர முடியாது எனவும் நிலையியற் கட்டளையில் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லையென்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தபோதும், சபை முதல்வரே சபைக்கு உதவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாகவும் சண்டித்தனப் போக்குடனும் நடந்து கொண்டார். சபை முதல்வர் எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியும் கிண்டலடித்தும் எச்சரித்தும் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எமது மேல் மாகாண எம்.பிக்களை மட்டும் வைத்தே எம்மால் தோற்கடிக்க முடியும் எனக்கூறியதுடன் எமது பக்கத்துக்கு எம்.பிக்களையும் எழுந்து நிற்க வைக்கவா?. உங்களால் மட்டுமல்ல எங்களினாலும் முடியும் என மிரட்டும் தொனியிலும் பேசினார். அதுமட்டுமன்றி, இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் சபாநாயகரை எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியதுடன், எதிர்க்கட்சி எம்.பிக்களை பார்த்து சபைக்கு உதவாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சபைக்கு உதவாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தி சபைக்கு நடுவுக்கு வந்த நிலையில், சபை முதல்வருக்கு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு முதலில் கூற தடுமாறிய சபாநாயகர் பின்னர் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து, குறித்த தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கூறியபோதும் சபைமுதல்வரான பிமல், அது தொடர்பில் காதில் வாங்காது சபாநாயகருக்கு உத்தரவிடும்வகையில் சில கருத்துக்களைக்கூறினார் , சபாநாயகருக்கு சபையை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது போன்று வகுப்பெடுத்து சர்வாதிகாரிபோன்றே செயற்பட்டார். இறுதிவரை அந்த சபைக்குதவாத வார்த்தையை சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாபஸ் பெறவில்லை, எனினும், எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வாபஸ் பெறவேண்டும். அந்த வார்த்தை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக நின்றதால் சபையைக் கொண்டு நடத்தமுடியாத நிலையில், இறுதியாகச் சபாநாயகர் அந்த வார்த்தையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிட நேரிட்டது. அந்தளவுக்கு சபாநாயகரைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில், சபை முதல்வர் சபையில் செயற்பட்டதுடன், சர்வாதிகாரத்தனத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தமையும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது . மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம், சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு முரணான புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை. ஆனால், மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும் சட்டங்களை இயற்றும் உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது, தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே.வி.பி. தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சிறிது சிறிதாகத் தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொஞ்சம்-கொஞ்சமாக-மாறும்-கொடூரமான-முகம்/91-364872
  13. காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க! யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தியா ஒதுக்கிய பணமும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதாது என தெரிவித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார். குறித்த கலந்துரையாடலில் காங்கேசன் துறைமுத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுபிகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் துறைசார் அமைச்சர் விமல் ரட்நாயக்காவிடம் கோரிக்கை முன்வைத்தார். இதன்போது பதிலளித்த அமைச்சர் விமல் ராநாயக்க, யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை மூலமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறைமுகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம். துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார். பதில் வழங்கிய அமைச்சர், இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார். நாங்களும் பேசியுள்ளோம். ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார். இதன்போது கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என கூற முடியும் என்றார். பதில் வழங்கிய அமைச்சர், ஆய்வறிக்கை இருக்கிறது நாடாளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கினார். யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்ட வீடு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கேள்வி எழுப்பினார். மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக கைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். https://newuthayan.com/article/காங்கேசன்_துறைமுகத்தை_வணிகத்துறைமுகமாக_அபிவிருத்தி_செய்ய_முடியாது_-_அமைச்சர்_பிமல்_ரத்நாயக்க!
  14. யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு! adminSeptember 19, 2025 ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும். இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும்,நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே இதன் நோக்கமாகும். இந் நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள். டிஜிட்டல் பணம் https://globaltamilnews.net/2025/220550/
  15. பிரித்தானியாவில் ட்ரம்புக்குப் பிரமாண்ட அரச விருந்து 18 Sep, 2025 | 06:32 PM பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர். விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், 155 அடி நீளமுள்ள மேசை அமைக்கப்பட்டது. இந்த மேசை முழுக்க, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நிறத்திலான பொருட்கள், மற்றும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. விருந்திற்காக பிரிட்டன் இராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர், அரண்மனையின் ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அமெரிக்கா - பிரிட்டன் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225456
  16. திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்! 18 SEP, 2025 | 05:39 PM திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/225445
  17. சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு adminSeptember 18, 2025 யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்றைய தினம் அதன் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://globaltamilnews.net/2025/220534/
  18. மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை adminSeptember 18, 2025 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம். அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது https://globaltamilnews.net/2025/220495/
  19. செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு adminSeptember 18, 2025 செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீட்டை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக கட்டம் கட்டமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் , மற்றும் பேராசிரியர் சோமதேவாவின் செய்மதி மூல அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மனித புதைகுழி காணப்படும் இடங்களுக்கு அண்மையில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 08 வார கால அனுமதி வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டதை அடுத்தே இன்றைய தினம் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2025/220511/
  20. இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு adminSeptember 18, 2025 நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. குறித்த மந்திரிமனையானது கடந்த 2011ஆம் ஆண்டு தொல்பொருள் சின்னமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்தாக காணப்படுவதால் , அதனை புனரமைக்கவோ பாதுகாக்கவோ முடியாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இருந்துள்ளது. அந்நிலையில் மந்திரிமனையின் ஒரு பாகம் சேதமடைந்து , உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட வேளை , அவற்றை பாதுகாப்புக்கும் வகையில் இரும்பு கம்பிகளை முட்டுக்கொடுத்து வைத்திருந்தனர். அந்த கம்பிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருடர்கள் திருடி சென்ற நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக அப்பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதனை அடுத்து , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு , மிகுதியுள்ள மந்திரிமனை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தனர். அந்நிலையில் , இடிந்து விழுந்த பகுதியில் உள்ள ஏனைய பகுதிகளை பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரும்பு கம்பிகளை கொண்டு முட்டு கொடுத்து வைத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/220525/
  21. மந்திரிமனையை பாதுகாக்க முடியாமைக்கு தனி நபரே காரணம் என தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு புதன், 17 செப்டம்பர் 2025 03:48 AM யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மந்திரி மனையை பாதுகாக்கவும் , அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அவை எதனையும் செய்ய முடியவில்லை. மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனிநபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாதாகவே மந்திரி மனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மந்திரி மனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் , வடமாகாண ஆளுநர்கள் , மாவட்ட செயலர்கள் , தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் , அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. மந்திரி மனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் , உலக வங்கி என பல்வேறு பட்ட தரப்பினரும், நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 இலட்ச ரூபாயை வழங்கியும் இருந்தார். அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் , காணி உரிமையாளரின் சம்மதம் இல்லாதமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் , அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார். இவ்வாறான நிலையில் மந்திரி மனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால் , அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் , எமது தற்துணிவின் அடிப்படையில் , இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம். அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்களே தவிர , விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்து இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி , இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது. தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரி மனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் , இது வரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடாத்தி வந்தது. அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தினை தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில், மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார் https://jaffnazone.com/news/50592
  22. இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை adminSeptember 17, 2025 யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனால் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டு மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலையே இன்றைய தினம் புதன்கிழமை மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220439/
  23. காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான் adminSeptember 17, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மக்களிடம், நடந்தவற்றை கேட்டறிந்து காவல்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் எடுத்து கூறினார். அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/220449/
  24. மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள் Veeragathy Thanabalasingham September 16, 2025 Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது. இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்க் ஹசீனாவும் நாட்டை விட்டு தப்பியோடினார்கள். ஆனால், கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய நேபாளப் பிரதமர் இராணுவத்திடம் பாதுகாப்பைத் தேடிக் கொண்டார். நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபாய சில வாரங்களில் நாடுதிரும்பிய அதேவேளை, ஷேய்க் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரை பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும், இந்தியா அதற்கு இணங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையில் மக்கள் கிளர்ச்சிக்கு இரு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய தேர்தல்களில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்ததன் மூலம் அதிகார மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றது. அந்த மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடதுசாரிக்கட்சி ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலம் முதன் முதலாக அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘சாதனையாக’ பதிவாகியிருக்கிறது. பங்களாதேஷில் நோபல் சமாதானப் பரிசாளரான முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவிருக்கிறது. கடந்த வாரத்தைய கிளர்ச்சியை அடுத்து நேபாளத்திலும் இடைக்கால அரசாங்கம் ஒன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. தெற்காசியாவின் இந்த மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, பங்களாதேஷிலோ அல்லது நேபாளத்திலோ இடம்பெற்ற படுமோசமான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் கிளர்ச்சி பெருமளவுக்கு அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் மக்கள் கிளர்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்த்த முதல் நாடாக இலங்கை வரலாற்று முக்கியத்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. சகல கிளர்ச்சிகளிலும் மாணவர்களும் இளைஞர்களுமே முன்னரங்கத்தில் நிற்பது இயல்பு. ஆனால், கடந்த வாரத்தைய நேபாளக் கிளர்ச்சியில் இளைஞர்களின் பங்கேற்பு முன்னென்றும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இளைஞர்களின் போராட்டமாகவே முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. 1900 களின் பிற்பகுதிக்கும் 2010 களின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இளைஞர்கள் ‘இஸற்’ தலைமுறையினர் என்று வர்ணிக்கப்படுகின்றனர். குறிப்பாக 1997ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இவர்கள் 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நேபாளத்தில் இடம்பெற்ற கிளர்ச்சி ‘ஜென் இஸற் இயக்கம்’ ( Gen. Z movement) என்றே பிரபல்யமாக அழைக்கப்படுகிறது. அந்தத் தலைமுறையினரின் சார்பில் பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தங்களை வேண்டிநிற்கும் ‘ஹமி நேபாள்’ (நாங்கள் நேபாளியர்கள்) என்ற இயக்கமே போராட்டத்துக்கு தலைமை வகித்தது. நேபாளம் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் புதிய நாடு அல்ல. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் புரட்சியினால் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் நேபாளம் சந்தித்தது. ஆனால், குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நேபாளத்தின் வீதிகளில் தற்போது எதற்காக இறங்கினார்கள்? நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் சகல சமூக ஊடகங்களையும் (2023 சமூக ஊடக பயன்பாட்டு ஒழுங்கு விதிகளின் கீழ்) ரெலிகோம் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒருவார காலக்கெடு விதித்து ஆகஸ்ட் 28ஆம் திகதி அறிவித்தது. முக்கியமான சமூக ஊடகளில் எதுவும் அந்த அறிவிப்பை கருத்தில் எடுக்காத நிலையில் செப்டெம்பர் 4ஆம் திகதி அரசாங்கம் (பேஸ்புக், எக்ஸ், வட்ஸ்அப் உட்பட ) 26 சமூக ஊடகங்களை தடைசெய்தது. சுமார் மூன்று கோடி சனத்தொகையை கொண்ட நேபாளத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்த தடையை மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஒரு தணிக்கையாகவும் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு கட்டுப்பாடாகவுமே பார்த்தார்கள். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இணையத்தை பெருமளவுக்கு பயன்படுத்துகின்ற ஒரு நாட்டில் இத்தகைய தடைவிதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவில்லை. செப்டெம்பர் 8ஆம் திகதி வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் பலியானதுடன் நூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அதையடுத்து தலைநகர் காத்மண்டுவில் மாத்திரமல்ல, நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள். செப்டெம்பர் 9ஆம் திகதி சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கிய போதிலும் போராட்டங்கள் தணியவில்லை. நேபாளத்தில் கடந்தகாலப் போராட்டங்களின்போது இடம்பெறாத அளவுக்கு படுமோசமான வனமுறைகள் கடந்த வாரம் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்றம் உட்பட பெருவாரியான அரசாங்கச் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தார்கள். சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் முன்னெடுத்த போராட்டம் இறுதியில் அரசாங்கத்தை கவிழ்த்த மாபெரும் மக்கள் வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது. வன்முறைகள் தீவிரமடைந்து சிறையுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. ஆனால், நேபாள இராணுவம் ஓரிரு நாட்களில் அராஜக நிலைவரத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. கடந்த வார வன்முறைகளில் குறைந்தது 51 பேர் பலியானதாகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவமும் இடம்பெற்றது. அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் (பிரதமர்) கே.பி. சர்மா ஒலி, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் டியூபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோவாத நிலையம்) கட்சியின் தலைவர் பிரசண்டா ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே கடுமையாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கோட்பாடுகளைப் பொறுத்தவரை, பெருமளவுக்கு ஒத்துப்போகாத இந்தத் தலைவர்களை ஊழலே பிணைத்து வைத்திருந்தது என்று கூட விமர்சனங்கள் வெளியாகின. ஆட்சியாளர்களின் குடும்பங்கள் ஆபாசத்தனமான ஆடம்பரத்தில் வாழ்வதைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் மக்களும் அரசாங்கத்தை விரட்டுவதற்கு எடுத்த முடிவை எவராலும் தடுக்க முடியவில்லை. முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை குடும்ப அதிகாரமாகவும் ஆட்சிமுறையை தனிப்பட்ட நலன்களுக்கான சாதனமாகவும் மாற்றியதைக் கண்டு சீற்றமடைந்த ஒரு தலைமுறையின் முழக்கம் நேபாளத்தை உலுக்கியிருக்கிறது. நேபாள அரசியல் தலைமைத்துவம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) ஜனநாயக குடியரசின் புதிய அரசியல் முறைமை மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்தது. ஆனால், இறுதியில் மக்கள் அரசியல் உறுதிப்பாடின்மை, மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலையே சந்தித்தார்கள். கடந்த 15 வருட காலப்பகுதியில் நேபாளத்தில் 17 அரசாங்கங்கள் பதவியில் இருந்தன. மாவோவாத ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கிய தலைவர்களும் மற்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட பிரதமர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பெரிய வெளி இருந்தது. முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையும் இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும் ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம். பங்களாதேஷைப் போன்றே அடுத்த கட்ட அரசியல் செயன்முறைகளை தீர்மானிப்பதில் நேபாளத்தில் இராணுவம் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது. இளைய தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேபாளத்தின் முன்னாள் பிரதம நீதியரசரான 73 வயதான சுசீலா கார்கி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக வெள்ளிக்கிழமை ( செப்டெம்பர் 12) பதவியேற்றிருக்கிறார். நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசரான கார்கி (2016 – 2017), அந்த நாட்டின் நிருவாகத்துக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்ற இளைய தலைமுறை இயக்கத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கிக் கொண்டதன் பின்னரே கார்கியின் நியமனம் சாத்தியமாகியது. இடைக்கால நிருவாகத்தில் ‘ஹமி நேபாள்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது. முடியாட்சியின் முடிவுக்குப் பின்னரான கடந்த சுமார் 20 வருடகால ஜனநாயக பரீட்சார்த்தம் கண்டிருக்கும் தோல்வி நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பம் தரும் கேள்விகளை எழுப்புகிறது. தற்போதைய நெருக்கடியை நேபாளத்தின் குழப்பகரமான ஜனநாயக மாற்றத்தின் பரந்த பின்புலத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு வெற்றிகரமான மக்கள் போராட்ட இயக்கங்கள் (1990 & 2006) விரிவான அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை மற்றும் கூட்டாட்சி குடியரசு ஆட்சிமுறை ஆகியவற்றுக்குப் பின்னரும் கூட சாதாரண மக்களுக்கு அர்த்தபுஷ்டியான மாற்றத்தை நேபாளம் கொண்டுவரவில்லை. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற முடியாட்சிக்கு ஆதரவான சக்திகளும் இருக்கின்றன. தெற்காசியாவின் மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, இலங்கையில் மாத்திரமே இடைக்கால அரசாங்கங்கள் நியமிக்கப்படவில்லை.கோட்டபாய நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பிறகு 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்று இன்னமும் சில நாட்களில் ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. பங்களாதேஷில் அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தல்கள் அமைதியான அதிகார மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் தற்போது வெளிக்கிளம்புகின்ற அரசியல் மாற்றுச் சக்திகள் புதிய நெருக்கடியை கையாளுவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளிலேயே அந்த நாட்டின் எதிர்கால அரசியல் தசைமார்க்கம் தங்கியிருக்கிறது. பொதுவில் மக்கள் அரசியல் வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதையே இந்த தெற்காசியக் கிளர்ச்சிகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12303
  25. ”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நேற்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது. 1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது. அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர் https://www.samakalam.com/பருத்தித்துறை-துறைமுகம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.