Everything posted by கிருபன்
-
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் adminSeptember 16, 2025 உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாக கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/220402/
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரும் ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் வருமாறு… பெற்றோர்-1-“இந்தச் சின்ன வயதில் எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கு? அஞ்சு மணிக்கு எழுப்ப வேணும்”. பெற்றோர்-2-“அப்படியே? அஞ்சு மணிக்கு எழும்பி எத்தனை மணி மட்டும் படிக்கிறது?” பெற்றோர்-1-“அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் வீட்டில படிப்பு. ஆறிலிருந்து ஏழு மட்டும் ரியூஷன். ரியூசன் முடிஞ்ச கையோட வீட்ட வந்து சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் பறக்க வேணும்”. பெற்றோர் -2 -”பள்ளிக்கூடத்தால வந்து?” பெற்றோர்-1- “வந்த வேகத்தில் சாப்பிட வேணும்.பிறகு ஒரு சின்னத் தூக்கம். பிறகு இரண்டிலிருந்து நாலு மணி மட்டும் ரியூஷன். பிறகு நாலரையில இருந்து இந்த டியூஷன்.பிறகு ஏழில இருந்து ஒன்பது மட்டும் வீட்டில தாய் படிப்பிப்பா”. பெற்றோர் -2- “அப்ப பிள்ளை எப்ப நித்திரைக்குப் போகும்?” பெற்றோர் -1- “10 மணிக்கு .. நாலரைக்கு எழும்ப வேணுமே ?எங்கட பிள்ளையள் எவ்வளவு வருந்திப் படிக்க வேண்டி இருக்கு?” இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து பிள்ளைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. எனவே முதலாவது பெற்றோர் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சென்று விட்டார். இரண்டாவது பெற்றோர் இப்பொழுது எனது நண்பரோடு கதைக்கிறார்…. “பாத்தீங்களே பிள்ளைய எப்பிடிப் படிப்பிக்கினம் என்று? அவர் சொன்னது உண்மை எண்டு நம்புறீங்களே ?” எனது நண்பர் – “ஏன் பொய்யே?” பெற்றோர் -2- “ஓம்.அது பொய்.அவர் சொன்னவர் பிள்ளை அஞ்சு மணிக்கு எழும்புது என்று. அது பொய். பிள்ள மூன்று மணிக்கு எழும்புது. அது பத்து மணிக்கு நித்திரைக்குப் போறதில்ல. 11 மணிக்குத்தான் போகுது”. நண்பர்- “உண்மையே? ஏன் அப்பிடிப் பொய் சொன்னவர்?” பெற்றோர் -2- “ஏனெண்டால் தன்ர பிள்ள அவ்வளவு நேரம் படிக்குது எண்டு சொன்னா நீங்களும் உங்கட பிள்ளைய அப்படிப் படிப்பீங்கள்.போட்டியில உங்கட பிள்ளை முன்னுக்கு வரலாம்.அதுதான் தன்ர பிள்ள படிக்கிற நேரத்தக் குறைச்சுச் சொன்னவர்”….. இது அந்தத் ரியூட்டரி வாசலில் நடந்த ஓர் உரையாடல். புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டி மனோநிலையை அது காட்டுகிறது. பரவலாக விமர்சிக்கப்படுவதுபோல அது பிள்ளைகளின் பரீட்சை அல்ல. நடுத்தர வர்க்கப் பெற்றோரின் பரீட்சைதான். அதுவும் படித்த நல்ல உத்தியோகம் பார்க்கும் பெற்றோர். ஆனால் பிள்ளைகளிடம் அவ்வாறான போட்டி மனோநிலை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒரு போட்டி மனோநிலைக்குரிய வயது அதுவல்ல. எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியரின் பிள்ளை பரீட்சை எழுதிய பொழுது கல்வியதிகாரியான அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்… “பரீட்சை எழுதப் போகும்போது பிள்ளைக்கு உறிஞ்சிக் குடிக்கும் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கி கொடுங்கள். பரீட்சைச் சூழலில். பதட்டத்தில் பிள்ள மூடியைத் திறக்கும்போதோ அல்லது மூடும்போதோ நீரைச் சிந்தி விடக்கூடும்”….. என்று. தண்ணீர்ப் போத்தலின் மூடியை பதட்டத்தில் சரியாக மூட முடியாத ஒரு வயதில் இப்படி ஒரு தேசிய மட்டப் பரீட்சை தேவையா? இந்தக் கேள்வி இந்த நாட்டில் ஏற்கனவே பல மனநிலை மருத்துவர்களாலும் கல்வியியலாளர்களாலும் கேட்கப்பட்டுவிட்டது. ஆனால் மாற்றம் நடக்கவில்லை. அந்தப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக அந்தப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக வருவாயீட்டும் தொழிற் துறையாக வளர்ந்து விட்டன. அங்கே இலவசக் கல்வி கேள்விக்குள்ளாகிறது. அங்கே வசூலிக்கப்படும் காசு ஏனைய தேசியமட்டப் பரீட்களுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் வசூலிக்கப்படும் காசைவிட அதிகமாகவும் இருப்பதுண்டு. பரீட்சை பெறுபேறுகளின் பின் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படும் விதத்திலும் பெற்றோரின் மனோநிலை தெரிகிறது. சில ஆசிரியர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஒரு தகப்பன் ஆசிரியருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். ஆனால் இதில் சித்தி பெற்ற பிள்ளை பின்னர் வரக்கூடிய சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் வெற்றி பெறும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் சொன்னார்….மேல் மாகாணத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது. நியமனம் கிடைத்ததும் அவர் முதலில் போனது கொரனவில் உள்ள தக்க்ஷிலா மத்திய கல்லூரிக்கு. அங்கேதான் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டிலேயே முதற் தடவை 200 புள்ளிகளைப் பெற்ற பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளையின் ஆறாவது ஆண்டு தவணைப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அவர் தொகுத்துப் பார்த்திருக்கிறார். அந்தப் பிள்ளை முன்னணியில் நிற்கவில்லை. அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எல்லா பிள்ளைகளுமே கல்விப் பொது சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பிரகாசிக்கும் என்றில்லை. ஒரு தேசிய பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர முடியாத வயதில் பிள்ளைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றுவது பெற்றோர்தான். இந்த பந்தயக் குதிரை மனோபாவம் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கின்றது. அதேயளவுக்கு அவர்களுடைய உளப்பாங்கையும் தீர்மானிக்கின்றது. உலகின் முன்னேறிய கல்வி முறைமையைக் கொண்டிருக்கும் நாடுகளில், குறிப்பாக யப்பானில் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை பரீட்சைகள் இல்லை. அதற்குக் கூறப்படும் விளக்கம் என்னவென்றால், உளப்பாங்கு உருவாகும் ஒரு காலகட்டத்தில் போட்டிப் பரீட்சைகளை வைத்தால் அது பிள்ளைகளின் உளப்பாங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறு பிராயத்திலேயே உருவாக்கப்படும் போட்டிச் சூழல் பிள்ளைகளை சுயநலமும் பேராசையும் பொறாமையும் கள்ளத்தனமும் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. “பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும்.கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்”என்று கூறுகிறார், பேராதனைப் பல்கலைக்கழக,பொறியியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. நவரட்ணராஜா. போட்டிபோட்டுப் படித்து பட்டம் பெற்று, முன்னிலைக்கு வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றிய பொழுது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள். இந்த போட்டி மனோநிலை முன்னேறுவதில் மட்டுமல்ல தப்பிச் செல்வதிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் நன்கு தெரிந்த ஒருவர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் உள்ள அரசாங்கத்தால்கூட புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பொருத்தமான முடிவை எடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கொழும்பில் தேசிய கல்வி ஆனைக்குழுவை சந்தித்த பிரதமர் ஹரினி இந்த விடயதைப் பற்றியும் உரையாடியுள்ளார். புலமை பரிசில் பரீட்சையை இப்போதைக்கு அவர்கள் நீக்கப் போவதில்லை என்று தெரிகிறது. சிலசமயம் அவர்களுடைய ஆட்சிக்காலம் முடிவதற்கு இடையிலாவது நீக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். சிறு பிள்ளைகளுக்கான ஒரு தேசிய பரீட்சையை நீக்கும் விடயத்தில் சமூகத்தின் கூட்டு உளவியலை மீறிப்போகப் பயப்படும் ஒர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு,யுத்த வெற்றி நாயகர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தலாமா இல்லையா? போன்ற இதயமான பிரச்சினைகளில் துணிந்து முடிவெடுக்கும், ரிஸ்க் எடுக்கும் என்று எப்படி நம்புவது? https://www.nillanthan.com/7764
-
மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி!
மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி! 14 Sep, 2025 | 10:37 AM மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மத்திய அரசாங்கத்திடமிருந்து சுயாட்சியைக் கோரும் ஒரு பிரிவாக இது கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/225030
-
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல் 14 September 2025 நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/420066/provincial-council-elections-should-be-held-immediately-pefral-organization-insists
-
இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில்
இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில் 14 September 2025 இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன. இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறது. நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது. அதே நேரத்தில, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், அது வலியுறுத்துகிறது. இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச ஆதரவை முன்கூட்டியே பெறவும் இது வழிவகுக்கிறது. அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து, வழக்குத் தொடரும்போது திறன்களை வலுப்படுத்த சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. ஒரு சுயாதீனமான பொது வழக்கு தொடுநர் அமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, இந்த தீர்மானம் பாராட்டி ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது, அத்துடன், ஏற்கனவே பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகரைக் கொண்ட ஒரு நீதித்துறை பொறிமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க, இலங்கை அரசாங்கத்தை இந்த தீர்மானம் ஊக்குவிப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/420040/key-draft-resolution-on-sri-lanka-to-be-tabled-in-geneva-within-2-weeks
-
தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன்
தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பாக எல்லை நிர்ணயம் மற்றும் விகிதாசார முறை குறித்து அரசாங்கத்தில் குழப்பம் இருப்பதாகவும், ஜனாதிபதி இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். அபிவிருத்தி நிதியம் உருவாக்குவது குறித்து முன்னர் பேசப்பட்ட போதிலும் முன்னேற்றம் இல்லை எனவும், மாவட்டத்தில் நிலவும் நிர்வாக மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்தை மக்கள் நலன் சார்ந்ததாக கருதி ஆதரிக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சாணக்கியன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு இதற்கு வாக்களிக்காதது தவறான முடிவு எனவும், இதற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். எதிர்காலத்தில் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டமூலங்களுக்கு கட்சி ஆதரவு வழங்க வேண்டும் எனவும், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் விடயங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். https://adaderanatamil.lk/news/cmfj2e8q200exo29nq9uhwif4
-
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது. மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை. வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது. 1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது. இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது. இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி - ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும். அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு. உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை. சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை. எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் ஆகியோருடைய படங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மண்டைதீவில் நாட்டப்பட்டிருந்தது. திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன. ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை. ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது. மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை. இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு? யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு. கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம். ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம். இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா? மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு. பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம் மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு. ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா? வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான். ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, 'அரசியல் விடுதலை' என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா? இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர். அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு. மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படுகின்றமை பகிரங்கமாக தெரிகிறது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது வேறு. ஆனால் 13 இன் கீழ் உள்ள மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாணங்களின் அரைகுறை அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம். அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது. 1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்... https://www.koormai.com/pathivu.html?therivu=2610&vakai=5
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
”இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல் தான் மை டியர் சிஎம் சார்” – விஜய் பேச்சு! 13 Sep 2025, 11:30 PM ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான் என விஜய் விமர்சித்துள்ளார். திருச்சியை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 13) இரவு அரியலூர் மக்களை சந்தித்து தனது பரப்புரையை மேற்கொண்டார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். ரீல் அறுந்து போய்விட்டது! அவர் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான் ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா? கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்’ என கதை விடுகிறீர்களே My Dear CM Sir… உங்களுக்குதான் ஆசையா, பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டுதே My Dear CM Sir…” என மதுரை மாநாட்டில் தான் அங்கிள் ஸ்டாலின் என பேசியது விமர்சனத்துக்கு உள்ளானதை சூசகமாக சுட்டிக்காட்டினார் விஜய். ”ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என நீங்களே சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது. அப்படி அறுந்து போனது எவையெல்லாம் தெரியுமா? எனக் கூறி திமுக-வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார் விஜய். அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.1000, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள், மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் மானியம், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தம் போன்ற திமுக வாக்குறுதிகளை கூறி செய்தீர்களா என அரசை நோக்கி கேள்விகளை அடுக்கினார் விஜய். அதற்கு இல்லை என்றனர் அங்கிருந்த தொண்டர்கள். அரியலூருக்கு செய்தது என்ன? தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்டம் குறித்து பேசுகையில், “வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர். சிமெண்ட் உற்பத்தி, முந்திரி தொழில், பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை என்னவானது? இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன்?” என விஜய் கேள்வி எழுப்பினார். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்! அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தால், தனது வாக்குறுதியாக, “ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி; மனசாட்சி உள்ள மக்களாட்சி… இதுதான் நமக்கு வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்!” எனக்கூறி விஜய் தன் பேச்சை முடித்தார். https://minnambalam.com/all-you-are-releasing-today-is-a-reel-my-dear-cm-sir-vijay/
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
ஹாட்லியின் மைந்தன். எங்களுக்கு சீனியர். சத்திர சிகிச்சை நிபுணர் நிமலரஞ்சனின் இழப்பினால் துயரில் இருக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
கொலையாளியை ஜீரணித்தவர் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுடன் பயணித்த ரிஷி லோமேசர், ஒரு கட்டத்தில் அவர்களுடன் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனைப்படி தங்களுடன் பயணித்த பலருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு ஒரு சிறு குழுவுடன் தங்களது யாத்திரையை பாண்டவர்கள் தொடர்ந்தனர். அப்பொழுது ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ரிஷி லோமேசர் கூறலானார். அகஸ்தியர் வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் சிலர் ஆவிகளாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தை அவர்களிடம் வினவினார். “அகஸ்தியா! நாங்கள் உன் முன்னோர்கள். நீ இன்னும் திருமணம் செய்து கொள்ளாதக் காரணத்தினால், எங்களுக்கு நீத்தார் கடன் செய்ய உனக்கு பிள்ளை இல்லை. நீ திருமணம் செய்து பிள்ளை பெறும் வரை நாங்கள் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என பதில் உரைத்தனர். சில காலம் கழித்து குழந்தைப் பேறு இல்லாத விதர்ப அரசன் அவரிடம் வந்து குழந்தை பெற ஆசி வழங்குமாறு வேண்டினான். இணையற்ற அழகும் , சிறந்த குணமும் கொண்ட பெண் பிறப்பாள் என அகஸ்தியர் ஆசிர்வதித்தார். அந்த பெண்ணுக்குத் திருமண வயது ஆனவுடன் தனக்கே அவளை மணமுடித்து தரவேண்டும் என நிபந்தனை விதித்தார். அவ்வாறே தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லோபாமுத்ரா என பெயரிட்டு வளர்த்து வந்தான் விதர்ப்ப அரசன். இணையற்ற அழகியாய் விளங்கிய லோபாமுத்ராவை திருமணம் செய்து கொள்ள பல தேசத்து அரசர்கள் விரும்பினாலும் அகஸ்தியர் மேல் இருந்த பயத்தால் யாரும் பெண் கேட்டு செல்ல துணியவில்லை. அகஸ்தியர் ஒரு நாள் விதர்ப்ப தேசத்துக்கு சென்று லோபாமுத்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டினார். அவரது வயதையும் அவர் வாழும் எளிய வாழ்வையும் எண்ணி அவருக்கு தனது மகளை மணமுடிக்க தயங்கினான் அரசன். ஆனால் லோபாமுத்ராவோ அவரது ஞானத்தையும் அறிவையும் எண்ணி அவரை மணமுடிக்க சம்மதித்தாள். தனது ஆடம்பரமான உடைகளை துறந்து துறவிகள் அணியும் காவி உடை அணிந்து அகஸ்தியருடன் சென்று எளிய வாழ்வை வாழத் துவங்கினாள். நாளடைவில் இருவரிடையே அன்பு பெருகத் துவங்கியது. ஆனால், தன் விருப்பத்தை நேரடியாக சொல்ல நாணி, குடியிருக்க நல்ல வீடும், உடுத்திக் கொள்ள ஆடம்பர உடைகளும் வேண்டும் என அவரிடம் கேட்டார். அகஸ்தியரும் பல அரசர்களிடம் சென்று தானம் கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவர் கேட்கும் தனத்தை தர எந்த அரசரிடமும் வழியில்லாமல் இருந்தது. வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும். ஒரு முறை அகஸ்தியர் அவ்வழியே வர, அவரை விருந்துக்கு அழைத்தான் வில்வலன். அவரும் சம்மதித்து விருந்தை உண்டார். அவர் உண்டு முடித்தவுடன் வாதாபி வெளியே வருவான் என வில்வலன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வாதாபியை தான் ஜீரணித்து விட்டதாக அகஸ்தியர் கூறினார். அதைக் கேட்டு பயந்த வில்வலன், அவரை சரணடைந்து தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து உயிர் பிச்சைப் பெற்றான். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு தேவையான செல்வமும் கிடைத்தது. சிலகாலம் கழித்து, லோபாமுத்ராவிற்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. அதன் மூலம், அவர்களது முன்னோர்களின் கடன் தீர்க்க வழியும் பிறந்தது. சிறுமையும் பெருந்தன்மையும் ரிஷி ரைபாயாவிற்கு இரு மகன்கள் இருந்தனர். ப்ரத்யும்னன் என்ற அரசன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்தை நடத்தி வைக்க அவரது மகன்களான பரவசு மற்றும் அர்வவசு இருவரையும் அனுப்பித் தர வேண்டினான். ரைபாயாவும் சம்மதித்து தனது மகன்களை யாகம் நடத்த அனுப்பினார். யாகம் நடத்த முன்னேற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், பரவசுவிற்கு தனது மனைவியை காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே, தனது ஆசிரமத்திற்கு திரும்பி சென்றான். அவன் ஆசிரமத்தை நெருங்கிய நேரம், சூரியன் முழுவதும் வராத கருக்கல் நேரம். ஏதோ ஒரு கொடிய வனவிலங்கு ஆசிரமத்தை நெருங்குவது போல் தோன்ற, தன் கையில் இருந்த கனத்த தடியை அந்த உருவத்தை நோக்கி வீசினான். அதை நெருங்கி பார்த்தப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது மரவுரி தரித்திருந்த தன் தந்தையை தான் தவறுதலாக கொன்றுவிட்டது. அப்பொழுதுதான் பாரத்வாஜ முனிவரின் சாபம் நினைவிற்கு வந்தது. பரத்வாஜ முனிவரின் மகன் யவக்ரீதா செய்த தவறுக்காக ரிஷி ரைபயா அவனை கொன்றார். மகனை இழந்த கோபத்தில் உன் மகனின் கையாலே இறப்பாய் என ரிஷி ரைபயாவிற்கு சாபமிட்டிருந்தார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டிருந்தது. வேகவேகமாய் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த பரவசு, அர்வவசு தங்கி இருந்த இடத்திற்கு சென்று நடந்ததை விவரித்தான். பின், தந்தையை கொன்ற பாபம் விலக நாம் பரிகாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசன் நடத்தும் யாகமும் தடையின்றி நடக்க வேண்டும் எனக் கூறி அதற்கு ஒரு தீர்வையும் கூறினான். அரசனின் யாகத்தை தன்னால் தனியாக நடத்த முடியும் ஆனால் அர்வவசுவால் அவ்விதம் செய்ய முடியாது எனக் கூறி தனக்காக காட்டிற்கு சென்று பரிகாரம் செய்யக் கூறினான். அவன் மேல் எந்தவித சந்தேகமும் கொள்ளாத அர்வவசு அதற்கு சம்மதித்து பரிகாரம் செய்ய சென்றான். இங்கே பரவசு யாகத்தை துவங்கினான். செய்ய வேண்டிய பரிகாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அர்வவசுவை பார்த்தவன் பொறாமையில் பொசுங்கினான். காரணம் , தான் செய்ய வேண்டிய பரிகாரத்தை வேறொருவரை செய்ய சொன்னதால் அவன் பாவம் தீரவில்லை. அதன் விளைவாய், அவன் மனதில் தீய எண்ணம் மூண்டது. அர்வவசுவை பார்த்து “தன் தந்தையை கொன்றவன் வருகிறான். யாகம் நடக்கும் இந்த புண்ணிய இடத்தில் இத்தகைய தீய குணம் உள்ளவனை எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கூறினான். அர்வவசுவின் விளக்கங்களை கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை. தனது சகோதரனுக்காக பரிகாரம் செய்ததே அவனுக்கு எதிராய் திரும்ப அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான். அங்கிருந்து திரும்பிய அர்வவசு, காட்டிற்குள் சென்று அகோரமாக தவம் புரியத் துவங்கினான். பலகாலம் அவன் புரிந்த தவத்தினால் மகிழ்ந்த தேவர்கள் பிரசன்னமாகி அவனிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். தவத்தினால் மனதில் இருந்த க்ரோதம் நீங்கியிருக்க “தேவர்களே! எனது தந்தையை தாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். மேலும் , என் சகோதரனின் மனதில் உள்ள க்ரோதங்கள் நீங்கி , அவனது பாபங்களையும் நீக்க வேண்டும்” என கேட்டான். அவனது பெருந்தன்மையை கண்டா தேவர்களும் அவன் கேட்ட வரத்தை வழங்கின https://solvanam.com/2025/04/13/கொலையாளியை-ஜீரணித்தவர்/
-
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளின் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக ITJP அண்மையில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு, நிமலராஜனின் படுகொலைக்குப் பின்னணியில் உள்ள அரசியல் சூழல், உத்தியோகபூர்வ விசாரணையில் ஏற்பட்ட திட்டமிட்ட தோல்விகள், மற்றும் இலங்கையின் நீதிப் பொறிமுறை நீதி வழங்கத் தவறியதன் பரந்த தாக்கங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தனிநபரின் துயரத்தை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தப் படுகொலை ஏன் ஒரு மையப் புள்ளியாகத் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆய்வு தொடர்பாக சுருக்கமான ஓர் அலசல் கீழே தரப்பட்டுள்ளது. கொலைக்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை ஒரு தற்செயலான தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, அது 2000ஆம் ஆண்டில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவச் சூழலின் தவிர்க்க முடியாத விளைவாகும். அரசின் பாதுகாப்புப் படைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தண்டனையின்மையுடன் பெரும் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலகட்டத்தில், ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஏன் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு இலக்கானார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணியை ஆராய்வது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. 2000ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை 1995இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், மோதல்கள் தொடர்ந்து நீடித்தன. யாழ்ப்பாணம் ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 512ஆவது பிரிகேட்டின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நகரம் முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டிருந்ததுடன், இரவு நேரங்களில் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒட்டுக் குழுக்கள்’ என்று அழைக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. இவை அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரச படைகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பங்கு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மிக முக்கியமான அரச ஆதரவு துணை இராணுவக் குழு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆகும். அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருள் ஆதரவுடன், தண்டனையின்மையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அவர்களை அச்சுறுத்துதல் மற்றும் இலக்கு வைத்துக் கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக ஈ.பி.டி.பி மீது பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பின்னர் வந்த அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாகவும் பதவிகளை வகித்தனர். இது அவர்களின் அரசியல் செல்வாக்கையும், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்ற பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 2000 பொதுத் தேர்தல் அக்டோபர் 10, 2000 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தல், நிமலராஜனின் கொலைக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் போர்க்காலத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் வன்முறைகள், வாக்காளர் மோசடி மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாக நிமலராஜன் தனது செய்திகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்தச் செய்திகள், கொலைக்கான நேரடி நோக்கத்தை நிறுவுவதில் முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க எச்சரிக்கையின் பின்னணியில். தேர்தலில் ஈ.பி.டி.பி. நான்கு ஆசனங்களை வென்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கு நிமலராஜனின் செய்திகளே ஒரு காரணம் என அக்கட்சி கருதியதாக நிமலராஜனே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு நேர்காணலில், “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிமலராஜன் தனது விவகாரங்களை நடத்திக் கொண்டிருப்பதாக” அவர் எச்சரித்திருந்தார். இந்த அரசியல் சூழல், நிமலராஜனின் ஊடகப் பணிக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறி, அவரது படுகொலைக்கு வழிவகுத்தது. யாழ்ப்பாணத்தின் குரல்: மயில்வாகனம் நிமலராஜன் மயில்வாகனம் நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள், தமிழ் நாளிதழான வீரகேசரி, சிங்கள வார இதழான ராவய மற்றும் தமிழ்நெற் இணையதளம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிய ஒரு பன்மொழி ஊடகவியலாளர் ஆவார். போரினால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய மிகச் சில சுயாதீனக் குரல்களில் ஒருவராக அவர் விளங்கினார். குண்டுவெடிப்புகள், இராணுவ நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள், அரசியல் ஊழல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும் போருக்கு மத்தியில் தமிழ் மக்களின் அன்றாடப் போராட்டங்கள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அவர் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், சைக்கிளில் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, தொலைபேசி மூலம் லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு தனது செய்திகளை வாசித்துக் காட்டுவார். அவரது பணி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சென்ற ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் அவரது படுகொலைக்கு முன்னதாக, நிமலராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலமுறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான அவரது செய்திகளுக்குப் பிறகு, ஈ.பி.டி.பியினரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். “தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், அந்த அழைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவருக்குப் பதில் கிடைத்தது. கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, இராணுவத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று, தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புகைப்படங்களை அனுப்பத் திட்டமிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியபோது, கொழும்பில் உள்ள ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் கேட்டதற்காகவே அவற்றைச் சேகரித்ததாக நிமலராஜன் விளக்கினார். படுகொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கூட, அவர் இராணுவத்தினரால் மீண்டும் விசாரிக்கப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக அவரை அமைதியாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் முன்னறிவிப்புகளாகவே இருந்தன. தாக்குதல் மற்றும் படுகொலை: நிகழ்வுகளின் காலவரிசை தாக்குதல் நடந்த இரவின் விவரங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அரசின் பாதுகாப்புப் பொறிமுறை எவ்வளவு படுமோசமாகத் தோல்வியடைந்தது என்பதை அம்பலப்படுத்துகின்றன. இது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சந்தித்த அதிர்ச்சியையும், நீதிக்காக அவர்கள் எதிர்கொண்ட நீண்ட போராட்டத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தாக்குதலின் இரவு அக்டோபர் 19, 2000 அன்று இரவு, யாழ்ப்பாணம் கடுமையான ஊரடங்குச் சட்டத்தின் கீழ் இருந்தது. திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக நகரம் இருளில் மூழ்கியிருந்தது. இரவு சுமார் 9:45 மணியளவில், நிமலராஜன் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தனது படிக்கும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், வானொலியில் பிபிசி தமிழோசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம், இரண்டு ஆயுததாரிகள் வீட்டினுள் நுழைந்தனர். ஒருவன் நிமலராஜனின் தந்தையை ஒரு கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினான். அதே நேரத்தில், மற்றொருவன் நிமலராஜனின் அறைக்குள் நுழைந்து அவரை நோக்கி மூன்று முறை சுட்டான். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயது மருமகன் பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் தப்பிச் செல்லும் போது ஒரு கைக் குண்டினை வீசினர், அது பொது அறையின் நடுவே வெடித்துச் சிதறியது. இதில் நிமலராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடிப் பின்விளைவுகள் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நிமலராஜனின் மைத்துனர் உடனடியாக அருகிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 15-20 நிமிடங்கள் ஆனது. ஆனால், அவர்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வாகன உதவியை வழங்கவில்லை. இறுதியில், ஒரு அயலவரின் சிறிய உழவு இயந்திரத்தின் (லாண்ட் மாஸ்டர்) பெட்டியில் நிமலராஜனின் உடலையும், படுகாயமடைந்த மூன்று குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சென்றடைய அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கடுமையான ஊரடங்கு மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரத்தில், அரச படைகளின் தலையீடு இன்றி தாக்குதல் நடத்துவதும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதும் எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்தத் துயர நிகழ்வு, நீதியை வழங்கும் நோக்கம் கொண்டிராத ஒரு தோல்வியுற்ற விசாரணைக்கே வழிவகுத்தது. விசாரணை நிமலராஜன் படுகொலையில் விசாரணை என்பது நீதிக்கான ஒரு கருவியாகச் செயல்படவில்லை; மாறாக, அது அரச ஆதரவு பெற்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலைத் திட்டமிட்டுச் சிதைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே விளங்கியது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு மரணம் தொடர்பான விசாரணை சுயாதீனமாகவும், முழுமையாகவும், உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். நிமலராஜன் வழக்கில், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டன. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பகட்ட தோல்விகள் விசாரணையின் முதல் சில மணி நேரங்களிலேயே மிக மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன. இதுவே வழக்கின் அடித்தளத்தைச் சிதைத்தது. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பாதுகாக்கத் தவறியது: உயர் பாதுகாப்பு வலயத்தில் கொலை நடந்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வலையத்தை அமைக்கவில்லை. இதனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆவணப்படுத்தத் தவறியது: குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது பிற்காலப் பகுப்பாய்வுகளுக்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை இல்லாமற் செய்தது. தடயவியல் சான்றுகளைச் சேகரிக்கத் தவறியது: கைரேகைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டின் பாகங்கள் உடனடியாகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவில்லை. இந்த ஆரம்பகட்டத் தவறுகள், விசாரணை ஒருபோதும் தீவிரமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும். சாட்சியங்கள் மற்றும் சாட்சியங்களை கையாண்ட விதம் விசாரணையின் போது சாட்சியங்களும் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டன. இது நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்தது. தாமதமான விசாரணைகள்: கொலை நடந்த இரவில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த பல ஆண்டுகள் ஆனது. நிமலராஜனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெற விசாரணையை மேற்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். தடயவியல் தாமதங்கள்: சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டின் பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பகுப்பாய்வு முடிவுகள் வெளிவர மேலும் பல மாதங்கள் தாமதமானது. தவறான முன்னுரிமைகள்: நிமலராஜனுக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விசாரணையாளர்கள் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்வது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள்: கைதுகளும் தண்டனையின்மையும் விசாரணை இறுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது திரும்பியது. ஜெகன், முரளி, பாஷா மற்றும் நெப்போலியன் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டத் தவறின. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதன் மூலம் சட்டரீதியாக பயனற்றதாகிவிட்டன, இது மேலதிக விசாரணையின்றி அவற்றை நிராகரிக்க அதிகாரிகளுக்கு ஒரு வசதியான காரணத்தை வழங்கியது, இதன் மூலம் வழக்கின் ஒரு முக்கிய தூண் தகர்க்கப்பட்டது. ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கொலைக்கான நோக்கம் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒருபோதும் பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. இது விசாரணையின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்தது. முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான நெப்போலியன் போன்றவர்கள், பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இது அரச தரப்பினரின் உடந்தையை உறுதிசெய்து, இலங்கையில் வேரூன்றியிருந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்தது. நீதியின் தேக்கம் (2004-2021) 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 நவம்பரில், சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்தது. இதன் விளைவாக, கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 21 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் முழுமையான தோல்வியை உறுதிப்படுத்தியது. “நிமலராஜன் படுகொலை விசாரணையின் விளைவு”: ஒரு அச்சமூட்டும் முன்னுதாரணம் நிமலராஜன் படுகொலை கொலையாளிகள் தண்டிக்கப்படாதது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தக் கொலைக்குப் பிறகு, 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்புக்கூறப்படவில்லை. இந்தத் தண்டனையின்மைக் கலாச்சாரம், ஊடகவியலாளர்களிடையே ஒரு ஆழமான அச்சத்தை விதைத்தது. இதன் விளைவாக, பலர் சுய தணிக்கையை மேற்கொண்டனர், சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இது சுயாதீன ஊடகவியலத்தின் குரல்வளையை நெரித்தது. நிமலராஜனின் கொலை, அவரது துணிச்சலான ஊடகப் பணியை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் படுகொலையாகும். ஆரம்பம் முதலே, விசாரணை வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது: குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடம் பாதுகாக்கப்படவில்லை, சாட்சியங்கள் தாமதமாக விசாரிக்கப்பட்டன, மேலும் முக்கிய சந்தேக நபர்கள், குறிப்பாக அரசியல் செல்வாக்குள்ளவர்கள், ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு, அரசு மற்றும் அரசு ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாகத் தவறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமது மகன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்காத நிலையில் நிமலராஜனின் பெற்றோர் வெளிநாட்டிலேயே இறந்துபோனார்கள் என்பது, இந்த நீதியின்மையின் தலைமுறை கடந்த துயரத்தின் சான்றாகும். ஆசிரியர் குறிப்பு: NotebookLM உதவியுடன் ITJP அறிக்கையைக் கொண்டு வீடியோ பதிவு மற்றும் அறிக்கையின் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://maatram.org/articles/12294
-
காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி
காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன். புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே. சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025). செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்? நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்? பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது. 1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம். காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது. மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது. வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும். நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது. பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் * கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை * 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி https://maatram.org/articles/12285
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..! September 11, 2025 — அழகு குணசீலன் — புலம்பெயர்ந்த தேசங்களில் பலர் இயற்கை மரணத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பல்துறை ஆர்வலனாக ஜீவனின் மரணம் பெற்றிருக்கின்ற ஈர்ப்பு அதிகமானது. அதிசயிக்கத்தக்கது. புலம்பெயர்ந்த தேசங்களையும் கடந்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூரிலும் ஜீவன் தனது கலைப்பயணத்தின் ஊடாகப் பேசப்படுகிறார். இதற்கு என்ன காரணம்? ஜீவன் ஒரு முன்னாள் ஈழப்போராளி. ஒரு ஊடகவியலாளர். ஒலி, ஒளி பரப்பாளர், படப்பிடிப்பாளர். நாடக, குறுந்திரை தயாரிப்பாளர். சிறந்த தொடர்பாளர். கட்டுரையாளர், பேச்சாளர், விமர்சகர். சினிமாவிலும் தேர்ச்சி பெற்ற பல்துறை ஆற்றல் கொண்டவர். இவற்றின் பிரதிபலிப்பாக மரணித்தும், மறக்காத நினைவுகளோடு பலரும் அவருடனான நினைவுகளை இரைமீட்கின்றனர். எனக்கும் ஜீவனுக்குமான முதல் சந்திப்பு எப்போது, எங்கு ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனது நினைவு சரியென்றால் 1990 நடுப்பகுதியில் சூரிச்சில் இடம்பெற்ற இரு கவிதை நூல்களின் விமர்சன நிகழ்வு என்று நினைக்கிறேன். சுவிஸ் ரவியின் “செட்டை கழற்றிய நாங்கள்”, மற்றும் காத்தான்குடி என்.ஆத்மாவின் “அதிகாலை நீல இருள்” கவிதை நூல்கள் அவை. அந்த நிகழ்வுதான் சுவிஸில் நான் கலந்து கொண்ட முதலாவது கலை, இலக்கிய நிகழ்வு. ஜீவனின், போராட்ட பின்னணி, கலை, இலக்கிய ஆர்வம், அப்போது மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பம் என்பனவற்றின் அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன். அதற்கு பின்னர் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கலந்துரையாடல்களில் இந்த உறவு தொடர்ந்தது. எங்களை ஜீவனுடன் நெருக்கமாக பிணைத்த சில விடயங்களை குறிப்பிட்டால், அவற்றினூடாக அவரின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும். தமிழ் ஏடு பத்திரிகை, லண்டன் ரி.பி.சி.வானொலி, பாரிஸ் ரி.ஆர்.ரி வானொலி, தொலைக்காட்சி என்பன அவற்றுள் சில. மேலும் “FLUCHT” அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான ஓவியப்போட்டி, ஜீவனின் குறும்படங்கள் போன்ற வற்றையும் குறிப்பிடலாம். (FLUCHT: ஜேர்மன் மொழியில் அகதியாதல், தப்பித்த்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டது) ஓவியப்போட்டிக்கு பிரதான நடுவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவரை அழைத்திருந்தோம். மற்றைய இரு நடுவர்களுள் ஓவியக்கலை அழகியலில் ஈடுபாடு கொண்ட ஜீவனும் ஒருவர் என்று நினைக்கிறேன். எனினும் எனக்கு நிச்சயமாக குறிப்பிட முடியாதுள்ளது. அன்றைய சூழலில் மாற்று சினிமா, மாற்று மொழி சினிமா குறித்த சிறந்த விமர்சகர்களாக ஐரோப்பாவில் இருந்த சில தமிழர்களுள் ஜீவனும் ஒருவர். அச்சுறுத்தல்களுக்கும், ஜனநாயகத்திற்கு முரணான கருத்துச்சுதந்திர தடைகளுக்கும் மத்தியிலும் ‘பரம்’ என்று அறியப்பட்ட பாலசுப்பிரமணியத்தை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ்ஏடு’ பத்திரிகையில் சினிமா விமர்சனம், அறிமுக கட்டுரைகளை ஜீவன் தொடர்ந்து எழுதினார். அப்போது தமிழ் ஏட்டில் என்னால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதப்பட்டன. பண்டமாற்று போன்று இருவரும் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் விமர்சனங்களைச் செய்து கொள்வோம். நான் எழுதி, ஜெயந்தி மாலாவின் குரலில், ராம் ராஜ்ஜின் ரி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட “பூகோளம்” நிகழ்ச்சி நிறைவுறும் போது எங்கள் வீட்டு தொலைபேசி அலறும். அந்த அழைப்பில் வருபவர்களுள் ஜீவன் முதன்மையானவர். அவர் நிகழ்சி குறித்த கருத்துக்களை சூடு ஆறுமுன் சொல்லுவார். ஜீவன் மூன்று குறும்படங்களையும் போட்டிக்கு தயாரித்தார். ‘எச்சில் போர்வை’, ‘நிழல் யுத்தம்’ என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை பரிசுகளையும் பெற்றுக்கொண்டன. ஜீவனை ஒரு அழகியல் கலைஞன் என்றும் குறிப்பிடலாம். காட்சிகளை அவர் படமாக்கும் விதம் அற்புதமானது. அவை வெறும், காட்சிகளோ, படங்களோ அல்ல. மனித எண்ணங்களை பிரதிபலிக்கின்ற – பார்வையாளர்களோடு நேரடியாக பேசுகின்ற கைவண்ணங்கள். அதனால்தான் ஜீவனின் கமரா மொழி பாலுமகேந்திரா பாணி என்று குறிப்பிட்டேன். ஜீவன் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய தலைசிறந்த கமராக்கலைஞன். இந்தப் பண்புகளை சிங்கப்பூரில் அவரே குறிப்பிடுகின்ற கோபாலு அண்ணர் முதல் பாலச்சந்தர் -பாலுமகேந்திராவின் அனுபவங்கள் வரை பெற்று தன்னை புடம்போட்டுக்கொண்டு சிறந்த கமராக்கலைஞனாக உயர்ந்தவர். பாரிஸ் ரி.ஆர்.ரி. தொலைக்காட்சியில் பிலிப் தேவா தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் ஜயந்தியும், நானும் பங்களிப்பு செய்தோம். எங்கள் கதைக்கும், குரலுக்குமான காட்சியை படமாக்குவதில் ஜீவனின் கமரா மிகவும் அற்புமாக பேசியது. சுமார் 25- 30 ஆண்டுகளுக்கு முன்னரான ஒப்பீட்டளவில் இன்றையதை விடவும் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த காலத்தில் ஜீவனின் கைவரிசை குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம், சிங்களம் பின்னர் டொச் மொழியிலும் புலமை பெற்றிருந்த ஜீவன் தனது உறவுகளை தமிழ்பரப்புக்கும் அப்பால் விரிவுபடுத்தியது வியப்புக்குரியதல்ல. அவர் எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தார். அவரது சிங்கள மொழியாற்றல், செய்தித்தொகுப்பு, ஊடக நுணுக்கங்கள் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பினரால் 1980 களில் நடாத்தப்பட்ட “தமிழ் ஈழத்தின் குரல்” வானொலியில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பவராகவும் இருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் இந்த பணி உதவியது. இலங்கையின் இருதயம் என்று கருதப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் “புளொட்” அமைப்பு நடாத்திய நிக்கவரெட்டிய வங்கிக்கொள்ளையிலும் ஜீவன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயக்கத்திற்கு போனதால் தான் தனது வாழ்வு தொலைந்தது என்று கவலைப்படும், எல்லா இயக்கங்களினதும் ஆயிரக்கணக்கான அன்றைய இளைஞர்களுள் ஜீவனும் ஒருவர். இறுதியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட “உதயம்” கிழக்கின் வருடாந்த ஒன்று கூடலுக்கான நடன நிகழ்வொன்றை அவரே ஏற்பாடு செய்தும் தந்திருந்தார். நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை. அஞ்சலிகள் ஜீவன். https://arangamnews.com/?p=12315
-
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது. எனவே கற்ககோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குறித்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கோரியுள்ளனர் அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். https://jaffnazone.com/news/50542
-
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல் சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; 1) தேசியப் பட்டியல் ‘பின் கதவு’ என்றால் உங்கள் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் 2020 ஆம் ஆண்டு பின் கதவாலா பாராளுமன்றத்திற்குள் நுளைந்தார்? நான் எங்கேயும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது என்று கூறியதில்லை. அதற்கு மாறான எனது கருத்து பல இடங்களில் பதிவாகி உள்ளது. இதை மறுப்பதற்கு பத்திரிகை எடுத்து வர வேண்டாம். பத்திரிகைகள் வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. 2) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று நான் எங்கேயும் கூறியதில்லை. இனப்படுகொலையை குற்றவியல் ரீதியாக நிறுவுவதற்கு இன்னொரு கூறு (ingredient) தேவை என்றே கூறியிருக்கிறேன். Mens Rea இற்கும் Dolus Specialis இற்கும் உள்ள வித்தியாசம் சட்டத்தரணி என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் தெரியாமல் இருப்பது துரதிஷ்டமே. 3) மேலே (2) இல் சொன்னது இதற்கும் பொருந்தும் 4) ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அல்ல, ஏக்கிய ரஜய தான் ஒற்றையாட்சி என்ற வித்தியாசம் கூட ஒரு சட்டத்தரணிக்குத் தெரியாதா? நீங்கள் கூறிய மற்றைய விடயங்கள் வெறும் அவதூறுகளே. அவற்றிற்குப் பதில் வழங்கத் தேவையில்லை. கலப்புப் பொறிமுறையை உள்ளக விசாரணை என்று கூறும் உங்களது கருத்தைக் குறித்து யாரை நொந்து கொள்வது? எமது நாட்டின் கல்விக் கட்டமைப்பையா? . மீண்டும் சொல்கின்றோம் ‘பேப்பர் கட்டிங்’அரசியல் செய்து மக்களைத் தவறாக வழிநடத்துவது தவறு என சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=340687
- IMG_2890.jpeg
-
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு! September 13, 2025 கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார். அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேவேளை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. https://www.ilakku.org/meeting-between-indian-ambassador-and-telo/
-
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம் September 13, 2025 மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர். அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர். பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர். https://www.ilakku.org/walking-tour-from-mullaitivu-in-support-of-mannar-wind-farm-protest/
-
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது. இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் கத்மண்டுவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர். இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9ஆம் திகதி பதவி விலகினார். உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்தது. அதன்பின்னர் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது. பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர். இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது. https://www.ilakku.org/nepal-parliament-dissolved-election-date-also-announced/
-
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன. தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார். இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்; தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/224987
-
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு 13 Sep, 2025 | 12:06 PM பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண "இரு- நாடுகள் தீர்வை" (Two-State Solution) செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், அதன் மூலமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியம் என்றும் கூறுகிறது. அதேநேரம், இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கிறது. ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கவும் கோருகிறது. ஐ.நா.வின் தகவலின்படி, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64,750-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அத்துடன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224981
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர் 13 Sep, 2025 | 09:48 AM இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஏனைய நாடுகளுடன் இணைந்து கொண்டது. டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்று கட்டாருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் முக்கியப் பங்கையும் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக கட்டார் திகழ்வதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது. ஹமாஸ் தலைவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தகர்க்கும் முயற்சி என கட்டார் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார். கட்டாரை வளைகுடா பிராந்தியத்தில் ஒரு வலுவான நட்பு நாடாக வொஷிங்டன்கருதுகிறது, ஏனெனில் அமெரிக்காவின் அல் உதேத் விமானப்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது. கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் காரணமாக அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/224964
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம் 13 September 2025 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது. திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர். https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்! adminSeptember 13, 2025 படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220286/
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பாஸ்வேர்ட்டை மாத்தலாம் அல்லது கைத்தொலைபேசியில் (ஐபோன் ஆக இருந்தால் Passwords App) சேமிக்கப்பட்ட பாஸ்வேர்ட்டை பார்த்துக்கொள்ளலாம்😀