Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. போர் நிறுத்தம் வேண்டுமா?; எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்!; டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலையான அமைதி ஒப்பந்தம் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தை நிலையான முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மிகப்பெரிய சக்தி, உக்ரைன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதள பக்கத்தில், பெரும்பாலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலைப்பது இல்லை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, நிலையான அமைதி ஒப்பந்தமே சிறந்தது என அனைத்து தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளார். டொனெட்ஸ்க் பிராந்தியத்தை விட்டுத் தர வேண்டும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாடிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு மாற்றாக உக்ரைன் தங்களின் நிலப்பரப்பு சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் வழங்கிய தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் டொனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தை விட்டுத்தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் முன்மொழிந்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த முன்மொழிவை உக்ரைனிய ஜனாதிபதி முழுவதுமாக நிராகரித்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்தித்து பேசவுள்ளார். ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கோருவது உக்ரைனை வேதனையில் தள்ளியுள்ளது. 2024ம் ஆண்டு இந்த பிராந்தியத்திற்கு நுழைந்த ரஷ்ய படைகள் ஏற்கனவே டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கால் பங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=337240
  2. இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும் 17 Aug, 2025 | 09:53 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளன. அப்பிரேரணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. அதேவேளை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனம் பெற்றிருக்கும் நிலையில், மனிதப்புதைகுழிகளுடன் தொடர்புடைய விடயங்களும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222708
  3. இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி 17 Aug, 2025 | 10:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது. ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் என்பது தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல மாறாக, அவை நாட்டின் நிர்வாக, சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் குறிப்பிடும் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது. ஆகவே, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/222709
  4. இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி 17 Aug, 2025 | 10:09 AM வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கெதிராக எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கக்கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, இராணுவமுகாமிற்குச் சென்ற ஐவரில் ஒருவரான 32வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் காணாமல்போயிருந்தார். இந்நிலையில் இவ்வாறு காணாமல்போயிருந்தவர் கடந்த 09.08.2025அன்று முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, கடந்த 09.08.2025அன்று மேஜர் தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இரு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவமும், அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தின் முறையற்ற செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதமிஞ்சிய இராணுவமயமாக்கமுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் தேவையற்றவிதத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணிவந்துள்ளனர். அத்தோடு அப்பகுதி மக்களின் வறுமைநிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை முறைகேடான, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் தூண்டிவிட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திவந்துள்ளனர். அந்தவகையில் இராணுவத்தினரால் அப்பகுதி இளைஞர்களுக்கு இராணுவமுகாமிலுள்ள பொருட்கள், தளபாடங்கள், எரிபொருள் என்பவற்றுடன் இராணுவத்தினரால் காட்டுமிருகங்கள் வேட்டையாடப்பட்டு இப்பகுதி இளைஞர்களிடம் விற்பனைக்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதி மக்களாலேயே எமக்கு முறையிடப்பட்டது. இவ்வாறு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு மாற்றீடாக போதைப்பொருட்களைப் பெற்றுத்தருமாறு 63ஆவது இராணுவமுகாம் இராணுவத்தினர் அப்பகுதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். இவ்வாறாக இராணுவத்தினரின் முறையற்ற செயற்பாடுகள், தொடர்பாடல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கின்றது. இவ்வாறாக அப்பகுதி இளைஞர்களுடன் முறையற்றவிதத்தில் தொடர்பினைப் பேணிவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் மூவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே முற்றுமுழுதான பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் அதிகரித்த இராணுவப் பிரசன்னமென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகளாகியுள்ளநிலையில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான அதிகரித்த இராணுவப்பிரசன்னம் தேவையற்ற ஒன்றாகும். இவ்வாறாக யுத்தம் மௌனித்து ஒன்றரைத் தசாப்தகாலம் கடந்துவிட்ட சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேவேளை இவ்வாறு வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப்பரப்பில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் இடம்பெறக்கூடிய கொடூரமான சம்பவங்களையும் தொடர்ந்தும் எம்மால் அனுமதிக்கமுடியாது. எனவேதான் வடக்கு, கிழக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை(18) வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் தழுவியரீதியில் பூரணகர்த்தாலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கர்த்தாலுக்கான ஆதரவைநல்குமாறு கோரியுள்ளேன். அதேவேளை வன்னி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிஎன்ற வகையில் வன்னியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பிலுள்ள அனைவரும் இந்த பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவுநல்கி வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எமது முழுமூச்சான எதிர்ப்பினை காண்பிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றேன். மேலும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகள் ஆகியுள்ளசூழலில் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் எமது மக்களை வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்திலுள்ள எமது மக்கள் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளைப்போல தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பில், அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு மத்தியில் ஓர் அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள். எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எமது மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்களைப்போல இராணுவப் பிரசன்னமில்லாது சுதந்திரமாக வாழவேண்டுமென்ற அடிப்படை மனித உரிமையினையே நாங்கள் கோருகின்றோம். அதற்காகவே இந்த வடக்கு, கிழக்குரீதியிலான பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்நிலையில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 18.08.2025அன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்குத்தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுஆதரவினை நல்குவதன் ஊடாக, வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்ற எமது அடிப்படை மனிதஉரிமைக் கோரிக்கையினை முழுசர்வதேசத்திற்கும் வலுவாக முன்வைப்போம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222715
  5. வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் 17 Aug, 2025 | 11:08 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இவ்வருடமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு போராட்டங்களும் நடைபெறவிருக்கும் இடங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்திலும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222724
  6. பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு 17 August 2025 பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். 2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/415017/cid-nets-6-more-gunmen-who-operated-under-pillayan
  7. முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம் 17 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7 ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர். குறித்த நபர்களை அங்கிருந்த தப்பியோடியபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் உடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் காவல்துறையினர் தயாரித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்களுக்கு நேரடியாக பங்களிக்கவிலலை என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும் எச்சங்கள் உடற்கூறாய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ பேச்சாளரின் விளக்கம் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார். முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாகவும்,இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காவல்துறை பேச்சாளரின் விளக்கம் இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எவ்.யூ.வுட்லர் விளக்கமளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ஒட்டுச்சுட்டான் காவல்நிலையத்தினால் இரண்டு விசாரணைக்குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன. 13 இராணுவம் சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகாமுக்குள் சந்தேகநபர்களை அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே இரு இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டனர். சிவிலியன்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேய மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்டதாகவும், அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/415018/muthaiyankattu-incident-detailed-explanation-from-the-government#google_vignette
  8. இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் பயணச் செலவு என அனைத்தையும் சிறப்புச் சலுகையாக 9,999 இந்திய ரூபாயாகக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/இந்தியாவில்-இருந்து-கப்ப/
  9. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ? 16 Aug, 2025 | 10:29 AM ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர். இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார். எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது. டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியதில் நான் உடன்படுகிறேன். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மொஸ்கோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/222661
  10. அரசுக்குள் குழப்பம் என்று கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது - பிரதமர் தெரிவிப்பு! தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனையும் இதுவரை பிரயோகிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். உண்மை நிலைமைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு. இந்த அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என்றார். https://newuthayan.com/article/அரசுக்குள்_குழப்பம்_என்று_கூறி_ஆட்சியைப்_பிடிக்க__முடியாது_-_பிரதமர்_தெரிவிப்பு!#google_vignette
  11. மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - சச்சிதானந்தம் வலியுறுத்து! தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ்மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் கூறுகையில்:- தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குதிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடையடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம். முல்லைத்தீவில் இளைஞன் இதந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மதுத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பனது தாக்கம் அல்லது அடக்கு முறைதான். மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்னர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடையடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும். அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்ககூடாது. தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்தி மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த போராட்டங்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டுவரும்_பொருளாதார_நகர்வுகளை_மீட்டெடுக்கும்_இன்றைய_காலகட்டத்தில்_ஹர்த்தால்_உள்ளிட்ட_போராட்டங்கள்_அவசியமற்றது#google_vignette
  12. ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு Published By: Vishnu 16 Aug, 2025 | 03:24 AM ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார். மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன. வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது. மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. Virakesari.lkரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.
  13. சிற்றின்பம் மற்றும் உணர்திறன் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின்மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள். அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான். நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார். இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார். விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான். அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர். சாபக்காலத்தில் கிடைத்த வரம் அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர். ரிஷியின் சாபம் அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர். பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர். குந்தியின் வரம் அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான். முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள். காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான். குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது. நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார். ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகையதுன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார். ” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “ இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார். ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!! https://solvanam.com/2025/01/12/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-2/
  14. என்னதான் வறுத்தாலும் நாம தலீவர் படத்தை அகன்ற வெண்திரையில் பார்ப்போம்! ஞாயிறு ஷோ புக்கிங் ரெடி😍 ஆன்ரிகளின் விசில் காதில் விண் கூவும்😁 ஆயிரம் கோடியை அள்ள ‘கூலி’ என்ற பெயரையே கெடுப்பதா? -பிரகாஷ் தேவேந்திரன் 75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு.. சன் பிக்சர்கஸ் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படம் இயக்குகிறார் என்ற அறிவுப்பு வெளியாகிய உடனேயே, மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு விட்டது ஒரு எதிர்பார்ப்பு. ஆடியோ ரிலீஸ்சில் ரஜினிகாந்த் பேசிய அந்த வார்த்தைகள், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் இன்னமும் நெகிழ்வாக நின்றுகொண்டிருக்கிறது. அதாவது, “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்களின் பாதங்களில் என் தலையை வைத்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்பது தான் அது. சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் டைரக்டராக உயர்ந்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் என்று புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. கூலி திரைப்படத்திலும் அதே ஃபார்முலா தான். கத்தி, கோடாரி, வெட்டு குத்து ரத்தம், கொடூரமான கொலைகள்.. அப்பப்பா.. ஜீரணிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை வித்தியாசமாக அமைக்கலாம் என்ற முடிவில், திரைக்கதைக்குள் பல ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அவை பெரிதாக எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். க்ரிமேட்டர் மெஷின், அதாவது இறந்த உடலை மின்சாரம் பாய்ச்சி சில நொடிகளில் அதனை சாம்பலாக்கும் நவீன இயந்திரம். அந்த க்ரிமேட்டர் மிஷினை உருவாக்கும் சத்யராஜை கொண்டு, தங்களால் கொலை செய்யப்பட்ட ஒரு இருபது பேரின் உடல்களை அழிக்கச் சொல்கிறார் வில்லன் நாகார்ஜுனா. சத்தியராஜ் அதை செய்யவில்லை என்றால், அவரது மூன்று இளம் மகள்களை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் அதை ஒப்புக் கொண்டு செய்து வருகிறார். இங்கு தொடங்கும் கதை, நாகார்ஜுனாவின் கையாள் சோபின் ஷாஹிரால் சத்தியராஜ் கொல்லப்பட, தனது உற்ற நண்பனும் மைத்துனனும் ஆன சத்தியராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக உள்ளே வருகிறார் ரஜினிகாந்த். திரைப்படத்தின் கதையை முமையாக சொல்வது சரியல்ல. ஆனால், இந்த படத்தின் கதையில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. அதே கமர்ஷியல் கதை தான். கதைக் களம் துறைமுகத்தில் நிற்கும் கண்டைனர் கப்பல்கள் மற்றும் கடல் அலைகள் பின்னணியோடு நகர்கிறது. திரைப்படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அதைத்தொடர்ந்து ஹீரோ அறிமுகப் பாடல். முக்கால் மணிநேரம் முடிவதற்குள், மூன்று ஃபைட், மூன்று பாடல்கள் முடிந்து விடுகிறது. ஒருமணிநேரத்துக்குள் ஐந்து பாடல்கள், ரத்தம் சொட்டச் சொட்ட ரணகளமான கொலைகள். ஒரு இருபது பேர் உடல்களை, காவல்துறை கண்களுக்கு தெரியாமல் மறைப்பதற்கு சத்யராஜின் க்ரிமேட்டர் தொழில் நுட்பத்தை அணுகும் வில்லன் நாகார்ஜுனா, அதற்கு பிறகு நிகழும் கேட்பாரற்ற, சுமார் நூறு கொலைகளை எப்படி மறைத்தார் என்று தெரியவில்லை. பழைய பாடல்களை ஒலிக்க விட்டு, நிகழும் சண்டை காட்சிகள், தலைமறைவாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் வீரர்கள் (கேங்க்ஸ்டர்ஸ்), அப்பா மகள் செண்டிமெண்ட் என்று எல்லாமே லோகேஷின் ட்ரெண்டில் கூலி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமரா பதிவுகளும், எடிட்டரின் ஒட்டு-வெட்டுகளும் நன்றாக இருக்கிறது. சாண்டி மாஸ்டரால் இதில் இவ்வளவு தான் செய்ய முடியும். அனிருத்தின் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின், சார்லி, லொள்ளு சபா மாறன் என்று எல்லோரும் திறமையான நடிகர்களே. உபேந்திராவுக்கு நடிக்க ஒன்றும் இடமில்லை. இதில், ஸ்ருதிஹாசனின் பெர்ஃமார்மன்ஸ் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ருதி.. அமீர்கான் எப்போது வருவார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பெரிய எதிர்பார்பையே ஏற்படுத்திவிட்டார்கள். கடைசியில், படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வருகிறார் அவர். வந்தவுடன் என்ன..? டமால் டுமீல் தான்.. ஒரு முப்பது பேர் காலி. அவருடைய கெட்-அப் நன்றாக இருந்தாலும், அவரைப் போய் இப்படியா பயன்படுத்துவது என்று சலிப்பு மேலோங்குகிறது. நல்ல திறமையான நடிகரை முற்றிலும் வீணடித்துவிட்டார்கள். படம் முழுக்க லாஜிக் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன. சுத்தியலால் ஓங்கி மண்டையில் அடித்தும் சாகாமல் நின்று பேசுவது, சவக்குழியில் அதுவும் ஈர மண்ணில் புதைக்கப்பட்டவர் உயிரோடு எழுந்து வருவது, சோபினின் காதலி சொல்வதை உண்மை என்று நம்பும் கண்ணா ரவி கதாபாத்திரம் என்று, சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினியும், சத்யராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக சொல்லப்பட்டாலும், ஒரேயொரு முறை தான் இருவரும் இணைந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது ஏனென்று கேள்விகள் எழுகின்றன. இன்னொன்றை வெகுவாக பாராட்டியாக வேண்டுமென்றால், நமது AI தொழில்நுட்பம் தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாற்பது வருடத்திற்கு முந்தைய இளமைத் தோற்றத்தையும், பேச்சையும் அப்படியே படக்குழு கொண்டுவந்து விட்டது. சூப்பர்ப்..! தொலைக் காட்சிகளில் ஓடும் முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில், எதில் பார்த்தாலும் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வசதியாக டிவி தொடர் இயக்குபவர்கள் அதை செய்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. அவரும் அந்த பாணியை கையாண்டிருப்பது போல தோன்றுகிறது. இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டுமென்றால், கலாநிதி மாறனுக்கு தனது சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் மட்டுமே அதனை தனது தொலைக்காட்சியில் வெளியிட முடியும் என்ற நிலைமை இருப்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைய படங்கள் எல்லாமே ‘ ரெட் ஜெயண்ட்டு’க்கு தானே சொந்தமாகிறது..! படுபயங்கர வன்முறைக் காட்சி காரணமாக படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதை 18 வயதுக்குள்ளானவர்கள் பார்க்க முடியாது. ரஜினி படத்திற்கான நகைச்சுவை, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் காட்சி அமைப்பு இல்லை என்பது பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்தப் படம் LCU இல்லை என்று சொல்லிவிட்டாலும், ICU இருக்கிறது. படத்திற்கு இல்லை.. படத்தில் அடியாட்களாக வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்குத் தான்.. FDFS – First Day First Show பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் காசை கத்தைகத்தையாக செலவழிக்க துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னூறு நானூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி. மொத்தத்தில், கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைந்திருக்கிறது. ரசிகர்களின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்..! திரை விமர்சனம்; பிரகாஷ் தேவேந்திரன் https://aramonline.in/22486/coolie-rajinikandh/
  15. “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன. இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் திகதி. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர். இதனால் முழு தேசமும் கோபமடைந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/
  16. தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு August 15, 2025 இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது. அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. https://www.ilakku.org/protest-against-threats-against-tamil-journalists/
  17. பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு Published By: Rajeeban 15 Aug, 2025 | 11:28 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கரையை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேத்திலிருந்து முற்றாக துண்டிக்கும். இது பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் அங்கீகரிப்பதற்கும் எதுவும் எவருமில்லை என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் குடியேற்றம் என்பது சட்டவிரோதமானதாக காணப்படுகின்றது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இது காணப்படுகின்றது. மேற்குகரையிலும் கிழக்குஜெரூசலேத்திலும் உள்ள 160 குடியேற்றங்களில் ஏழு இலட்ச்சம் யூதர்கள் வசிக்கின்றனர். இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர தேசத்திற்கான கோருகின்ற நிலம். பலவருடகால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களிற்கு பின்னர் நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெரூசலேத்துடன் இணைக்கின்றோம் என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது சியோனிசத்தின் சிறந்த வடிவம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222596
  18. கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி Published By: Vishnu 15 Aug, 2025 | 02:25 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார். மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222581
  19. மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம் Published By: VISHNU 15 AUG, 2025 | 03:19 AM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த 12 வது நாள் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/222583
  20. முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது,குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்,கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222594
  21. யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம் 15 August 2025 யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது. அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளன. சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன. சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/414671/jaffna-international-book-festival-begins-today
  22. ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் 'அக்கமஹா பண்டிதர்' கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmec8v7pv02kfqp4k3icdgqxs
  23. மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmecd842d02klqp4kir09iie9
  24. ‘ராஜபக்‌ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்‌ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவும் அது தொடர்பில் அரசுத் தரப்புக்குக் கிடைத்துள்ள புலனாய்வு எச்சரிக்கைகளுமே நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தைச் சதித் திட்டங்கள் மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.எனவே, “ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என பேச வைத்துள்ளது. ராஜபக்‌ஷக்களின் குடும்பம் மீது குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரது குடும்பத்தையும் இலக்கு வைத்து அனுரகுமார அரசு முன்னெடுத்து வரும் விசாரணை,கைது, விளக்கமறியல்,வழக்குகள் போன்ற விடயங்களும் அனுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது ஊழல். மோசடி எனக் கூறிக்கொண்டு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதுமே அனுரகுமார அரசை வீழ்ச்சிப் பாதைக்கும் ராஜபக்‌ஷக்களை எழுச்சிப் பாதைக்கும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் தான், ராஜபக்‌ஷக்களின் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’வின் முன்னாள் அமைச்சரும் முக்கிய உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்‌ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளன. சமீபத்திய தூதரக விஜயர்களின்போது, நாம் சந்தித்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள், ராஜபக்‌ஷக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து இதேபோன்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நாமல் ராஜபக்‌ஷ உங்கள் தலைவர், அடுத்த ஜனாதிபதி என்று எம்மிடம் கூறினர். அதுமட்டுமன்றி, பொதுமக்கள் கலந்துரையாடல்கள், குறிப்பாக, கிராம மட்டத்தில், ராஜபக்‌ஷக்களுக்கு குறிப்பாக நாமல் ராஜபக்ஷவுக்குஆதரவு அதிகரித்து வருகின்றது. ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்ஷவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதைப் பற்றி கிராம மக்கள் ஏற்கெனவே பேசத் தொடங்கி விட்டனர். நாமல் ராஜபக்‌ஷவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த அச்சம் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ராஜபக்‌ஷவினரை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்குப் பயமாக இருக்கும்போது, அவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். நாமல் ராஜபக்‌ஷ வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். இது குறித்து புலனாய்வுப் பிரிவுகள் “ஏற்கெனவே தமது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன” என்று கூறியுள்ளார்.ஆட்சி மாற்றத்துக்காக 2029ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்‌ஷ என்பது மக்களின் கருத்தாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்து, அனுரகுமார அரசுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன கூறுகையில், “அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அனுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலைப் பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை. அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லை . எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் அப்படி நடந்தும் உள்ளது. பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் என தெரிவித்துள்ளார். அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணி திரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பியுமான நாமல் ராஜபக்‌ஷவும் ,ஏமாற்றத்தைப் பொறுத்தது போதும், இனி அதிலிருந்து எழுவோம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. இளைஞர், யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார். பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அனுர அரசாங்கம் மாறியுள்ளது.எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றோம். எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியலின் புது வரவும் சர்ச்சைக்குரியவருமான அர்ச்சுனா இராம நாதன் எம்.பியும் ‘நாமல் ராஜபக்‌ஷவே அடுத்த ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியாக நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இதனை நான் அவரிடம் நேரிலும் தெரிவித்துள்ளேன். அவரின் தந்தை, சித்தப்பாமார் தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளை அவர் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடாது என்றும் நேரடியாகக் கூறியுள்ளேன்.அதற்கான உத்தரவாதத்தை அவர் எனக்கு வழங்கியுள்ளார்’’ என சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து ‘அடுத்த ஜனாதிபதி நாமல்’ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார். இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. ஆனால் அதனை ராஜபக்‌ஷக்கள் மாற்றி ‘ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சி’ என்ற வரலாற்றை எழுதினர். அவர்களின் குடும்ப ஆட்சி எந்தளவுக்கு அவர்களுக்கு பலத்தைக் கொடுத்ததோ, அதுவே பின்னர் பலவீனமாகவும் மாறி அவர்களின் குடும்ப ஆட்சியை விரட்டியது. அதன்பின்னர் மக்கள் மாற்றமான ஆட்சி ஒன்றை எதிர் பார்த்த நிலையில்தான் அதனைப் பயன்படுத்தி தமது பிரசார ஆயுதத்தின் மூலம் அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், அவர்கள் ‘வாய்ச் சொல் வீரர்’களாக மட்டுமே இருக்கின்றனர். இதனால் இவர்கள் மீது ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்றவாறாக மக்களுக்கிருந்த மயக்கம் தெளிந்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி என பிளவுண்டு மீண்டும் அணி சேர வாய்ப்பில்லாத நிலையில், இருப்பதால் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. அதனால் தான் ராஜபக்‌ஷக்கள் என்னதான் ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தான் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள். நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுவந்தவர்கள். அவர்களின் ஆட்சிக்குப் பின்னர் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை, மக்களுக்கு விமோசனமும் கிடைக்கவில்லை என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில்தான் தற்போது மீண்டும் ‘ராஜபக்‌ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷக்களின்-அலை-அடிக்கத்-தொடங்கும்-அறிவிப்புக்கள்-விடப்படுகின்றன/91-362923
  25. 13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர். இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், கணவன் மனைவி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு, கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மனைவிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய, முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான இலங்கையை சேர்ந்த முகமது முனாவர், கைது செய்யப்படாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் முகமது முனா வரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவனான முகமது முனாவரும், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தது அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த பொழுது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து சட்டநடவடிக்கள் மேற்கொள்வதற்காக மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன், இலங்கையில் இருந்து சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/13-ஆண்டுகளாக-தேடப்பட்ட-இலங்கை-கடத்தல்-தலைவன்-கைது/175-362950

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.