Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குடியேற்றங்களுக்கான தமிழரின் எதிர்ப்பு சிங்களக் குடியேற்றங்களின் பிதாமகன் - டி எஸ் சேனநாயக்க தமிழர் மீதான சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பென்பது கல்லோயா குடியேற்றத்திட்டத்தினை சேனநாயக்க ஆரம்பித்து வைத்த ஆறு மாதங்களின் பின்னர், 1950 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முன்னெடுக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சி, கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் முதலாவது தொகுதி சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டபோது தனது போராட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் தமிழருக்குச் சொந்தமான பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்படுவதையும் சமஷ்ட்டிக் கட்சி எதிர்த்தது. சமஷ்ட்டிக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தமிழரின் மனதில் ஆளமாக வேரூன்றிக் கொண்டதுடன், தமது தாயகத்தினை கபளீகரம் செய்யவே சிங்களவர்கள் முனைகிறார்கள் என்பதனையும் உணரச் செய்தது. இந்த உணர்வே அவர்களை ஒற்றுமையாகப் போராடும் மனோநிலைக்குக் கொண்டுவந்தது. கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே சகோதரத்துவத்தையும் தோழமையினையும் ஏற்படுத்தியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்கள் இப்போராட்டங்களில் மும்முரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். தமது தாயகத்தை அபகரிக்கும் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தமிழர்கள் இரு வழிகளில் தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தொடங்கினர். அரசு தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியதுடன், சிங்கள அரசுத் தலைமைகளோடு ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சரத்துக்களையும் சேர்த்துக்கொண்டனர். அடுத்ததாக, சிங்களக் குடியேற்றங்களில் எல்லைகளில் தமிழ் விவசாயிகளை குடியேற்றுவதையும் தமிழ் தலைமைகள் செய்ய ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு சித்திரையில் திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய வருடாந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களே பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது. இக்குடியேற்றங்கள் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தந்தை செல்வா தனது பேச்சில் எச்சரித்திருந்தார். "எம்மைப்போன்ற சிறுபான்மை இனம் ஒன்றிற்கு அவர்களின் சனத்தொகையும், தாயகமுமே பாதுகாப்பு அரண்களாகும். சிங்கள அரசுகள் இவை இரண்டையும் தாக்க ஆரம்பித்து விட்டன. மலையகத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழர்களின் எண்ணிக்கையினை அவர்கள் குறைத்து விட்டார்கள். கல்லோயாவிலும், கந்தளாயிலும் சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருவதன் மூலம் எமது தாயகத்தின் மீதும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று கல்லோயாவிலும், கந்தளாயிலும் நடப்பது நாளை பதவியா, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கும் பரவப் போகிறது" என்று அவர் எச்சரித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கும் நோக்குடன் அரசினால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து பிரேரணை ஒன்றும் சமஷ்ட்டிக் கட்சியினால் நிறைவேற்றப்பட்டது. பல சந்ததிகளாக தாம் வாழ்ந்துவரும் தாயகத்தின் மீது தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையினை எவராலும் அகற்றிவிட முடியாது. சிங்களவர்களை மட்டுமே குடியேற்றும் நோக்கில் தமிழரின் தாயகத்தில் அரசு மேற்கொண்டுவரும் குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் சரித்திரகாலம் தொட்டு வாழ்ந்துவரும் வாழ்வை அழிக்கவே சிங்கள அரசு இக்குடியேற்றங்களைச் செய்துவருகிறது என்று தனது முதலாவது தேசிய மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி கடுமையான கணடனத்தைப் பதிவுசெய்கிறது. தமிழரின் சனத்தொகைப் பலம் மீதான சிங்களவரின் தாக்குதல் என்று தந்தை செல்வா குறிப்பிட்டது டி. எஸ் சேனநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தினூடாக ஏறக்குறைய பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதுத்துவம் குறைக்கப்பட்டதோடு, அவர்களின் அரசியல்ப் பலமும் வீழ்ச்சி கண்டது. 1950 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத்திட்டத்திற்கெதிரான தனது போராட்டத்தினையடுத்து, தமிழரின் தாயகத்தினைப் பாதுகாப்பதே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதுடன், "சுவர் இருந்தால்த் தான் சித்திரம் வரையலாம்" எனும் சுலோகத்தினையும் தனது பிரச்சாரங்களில் முக்கிய கருப்பொருளாகவும் வரிந்துகொண்டார். சிங்களக் குடியேற்றங்களுக்கெதிரான தடுப்புச் சுவரைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்ததுடன், சமஷ்ட்டிக் கட்சியின் ஒவ்வொரு வருடாந்த மாநாடுகளிலும் இதனையே முக்கிய பிரச்சினையாக அவர் பேசிவந்தார். மேலும், சிங்களத் தலைவர்களுடன் அவர் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அவர் நிபந்தனைகளையும் இட்டு வந்தார். இருவேறு சிங்களப் பிரதமர்களோடு தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் கருப்பொருளே இச்சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவே இருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்கள் மீதான சிங்களக் குடியேற்றங்களின் தாக்கம் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர்கள் மூன்றுவிதமான சிக்கல்களை எதிர்கொண்டார்கள். முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின், முக்கியமாகக் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலினை இக்குடியேற்றங்கள் மாற்றிப்போட்டன. இரண்டாவது, தமிழரின் விளைச்சல் நிலங்கள் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டதனால், தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாயிற்று. மூன்றாவதாக, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசங்களிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையலாயிற்று. கீழ்வரும் அட்டவணை 1 இல், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட முறையில் அரசு நடத்திவரும் சிங்களக் குடியேற்றங்கள் இனவிகிதாசாரத்தினை எந்தவகையில் மாற்றியமைத்திருக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கிறது. Demographic change in the Eastern Province (1881- 1981) Year Sinhalese Tamils Muslims 1827 250 1.3% 34758 75.65% 11533 23.56% 1881 5947 4.5% 75408 62.35% 43001 30.65% 1891 7512 4.75% 87761 61.55% 51206 30.75% 1901 8778 4.7% 96296 57.5% 62448 33.155% 1911 6909 3.75% 101181 56.2% 70409 36% 1921 8744 4.5% 103551 53.5% 75992 39.4% 1946 23456 8.4% 146059 52.3% 109024 39% 1953 46470 13.1% 167898 47.3% 135322 38% 1963 109690 20.1% 246120 45.1% 185750 34% 1971 148572 20.7% 315560 43.9% 248567 34.6% 1981 243358 24.9% 409451 41.9% 315201 32.2% அட்டவணை 1 அட்டவணை 2 இல், தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சிங்களக் குடியேற்றங்களால் எவ்வகையான பாதிப்பினை கொண்டிருக்கின்றன என்பதனைக் காட்டுகிறது. Change in the racial composition in the North-East (1881-1981) 1881 1946 1981 Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Jaffna District 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.6 97.7 1.7 Mannar District 0.67 61.6 31.1 3.76 51.0 33.0 8.1 63.7 26.6 Vavuniya District 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 76.3 6.9 Batticaloa District 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.4 72.0 23.9 Amparai District N/A N/A N/A N/A N/A N/A 38.1 20.0 47.0 Trincomalee District 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 36.4 29.0 அட்டவணை 2 தேர்தல் முறையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். அம்பாறை மற்றும் சேருவில ஆகிய தொகுதிகளிலிருந்தே இவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 1978 ஆம் ஆண்டு தேர்தல்களின்போது, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐந்து சிங்களவர்களும் வட மாகாணத்திலிருந்து ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பை அறுத்தெறிந்த சிங்களக் குடியேற்றங்கள் சேனநாயக்கவின் திமிரான பேச்சு தமிழர்களை ஆத்திரப்பட வைத்தது. தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றங்கள் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அனைத்துச் சிங்கள அரசுகளாலும் தொய்வின்றி கொண்டுசெல்லப்பட்டன. 1956 ஆம் ஆண்டு வவுனியாவின் கிழக்கில் பதவியா எனும் புதிய சிங்களக் குடியேற்றத்தினை சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரதமாரன S W R D பண்டாரநாயக்கா ஆரம்பித்து வைத்தார். சுதந்திரத்தின் பொழுது திருகோணமலை துறைமுகம் ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையரசிற்குக் கைமாறிய வேளை, துறைமுகத்தில் பணியாற்றி பின்னர் வேலையிழந்த தொழிலாளர்களை மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே பதவியா எனும் சிங்களக் கிராமம் வவுனியாவில் அமைக்கப்பட்டது. பதவியா திட்டத்தின் ஆரம்பப்படியில் 595 தமிழ்க் குடும்பங்களும், 453 சிங்களக் குடும்பங்களும் இப்பகுதியில் குடியேற்றப்பட்டன. ஆனால், சிங்களவர்களுடன் இப்பகுதியில் குடியேறிய பெளத்த பிக்குவும், சிங்களக் குடியேற்றக்காரரும் தமிழர்கள் இப்பகுதியில் குடியேறுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், தமிழர்களுக்கென்று அமைக்கப்பட்ட கொட்டகைகளில் சிங்களவர்களைக் குடியேற்றினர். அரசும் இதற்குத் துணைபோகவே, பதவியா எனும் புதிய கிராமம் முற்றுமுழுதான சிங்களக் கிராமமாக உருப்பெற்றது. பின்னர், 1960 ஆம் ஆண்டு சிறிமா பண்டார்நாயக்க மொறவெவ எனும் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கினார். புராதன தமிழ்ப் பிரதேசமாக விளங்கிய முதலிக் குளம் எனும் பகுதியே சிறிமாவினால் மொறவெவ என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் முதலிக் குளமான மொறவெவவில் வாழ்ந்துவந்த 9,271 மக்களில் 5,101 பேர் தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர். தமிழர்களின் இன்னொரு பூர்வீகக் கிராமமான பெரியவிளான்குளம் ஜெயவர்த்தனவினால் மகா-திவிலுவெவ என்று சிங்களத்தில் பெயர்மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றமாக உருப்பெற்றது. தமிழர்களின் பூர்வீக நீலியம்மன் ஆலயம் - திருகோணமலை அரசாங்கத்தின் முன்னெடுப்புடன் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக, அப்பகுதியில் அமைச்சர்களாகவிருந்த பலரின் தலைமையில் சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். அமைச்சர்களால் தனிப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களின் ஒரே இலக்கு திருகோணமலை மாவட்டத்தினை சிங்களவர்களின் பெரும்பான்மை மாவட்டமாக மாற்றுவது தான் என்றால் அது மிகையில்லை. 1972 ஆம் ஆண்டுவரை தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக விளங்கிவந்த நொச்சிக்குளம், சிங்களவர்களால் நொச்சியாகம என்று பெயர் சூட்டப்பட்டு தூய சிங்களக் கிராமமாக அபிஷேகம் செய்துகொண்டது. இப்பகுதியில் 5000 ஏக்கர் நிலப்பகுதியில் இச்சிங்களக் குடும்பங்கள் குடியேறிக்கொண்டன. 1973 ஆம் ஆண்டு பேரினவாத அரசுகளின் ஆசீர்வாதத்துடன் புதியவகை குடியேற்றத்தில் சிங்களவர்கள் ஈடுபடலாயினர். தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றது. அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது. வெருகல் ஆற்றுக் குடியேற்றம் தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றந்து. அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது. சேருவில சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தினை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் நான்கு பிரதான நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமணலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அல்லைக் குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - வவுனியா வீதியில் மொறவெவ குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - முல்லைத்தீவு வீதியில் பதவியா குடியேற்றத் திட்டமும் அமைக்கப்பட்டன. திருகோணமலையில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும்பட்சத்தில், அவர்கள் தப்பியோட முடியாதபடி அனைத்துத் திசைகளினாலும் சிங்களக் குடியேற்றங்களால் சூழப்பட்டு முற்றுகைக்குள் வைத்திருப்பதும் இதன் ஒரு நோக்கமாக இருக்கிறது. திருகோணமலையினைத் தமிழ் ஈழத்தின் தலைநகராக்குவோம் என்கிற தமிழரின் நிலைப்பாட்டிற்குப் பதிலடியாகவே சிங்கள அரசுகள் திருகோணமலையினைச் சிங்களக் குடியேற்றங்களால் முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தன. முற்றாகச் சிங்களமயமாக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதி திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்ட பகுதிகளையும், அவற்றினைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பாதுகாப்புக் கோட்டைகளாக மாற்றுவதிலும் சிங்கள அரசுகள் வெற்றிகண்டன. திருகோணமலைத் துறைமுகத்தில் பாரிய கடற்படை முகாம் ஒன்று உருவாக்கப்பட்டதுடன், சீனன்குடாவிலும் மொறவெவவிலும் விமானப்படைத் தளங்கள் அமைக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 300 இற்கும் அதிகமான அரச படை முகாம்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை திருகோணமலை மாவட்டத்திலும், அதற்கு அண்மையாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன (இத்தொடர் எழுதப்பட்ட 2005 ஆம் ஆண்டுக் காலப்பகுதியின் நிலவரத்தின்படி இது கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் இம்முகாம்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு என்பது குறிப்பிடத் தக்கது). சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை வவுனியா மாவட்டமும் சிங்களக் குடியேற்றங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, பதவியா போன்ற சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், வவுனியாவில் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கென்று வவுனியா தெற்கு பிரதேசச் செயலகத்தையும் சிங்கள அரசுகள் நடத்தி வருகின்றன. இவ்வாறு, பல தமிழ்ப் பிரதேசங்களை ஊடறுத்து நடைபெற்றுவரும் பல சிங்களக் குடியேற்றங்கள் மூலம், தமிழர் தாயகம் கூறுபோடப்பட்டு சிங்கள மயமாக்கப்படுவதுடன், இப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் விகிதாசாரமும் திட்டமிட்டவகையில் கீழிறக்கப்பட்டு வருகிறது. சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை வவுனியா மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களும் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வவுனியா மாவட்டத்தில் 13,164 தமிழர்களும் 1157 சிங்களவர்களும் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டு 54,179 தமிழர்களாகவும் 15,794 சிங்களவர்களாகவும் காணப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திருகோணமலைக்கு வைக்கப்பட்ட பொறி கந்தளே வெவ என்று சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்ட தமிழரின் கந்தளாய்க் குளம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதுடன் மட்டுமே சேனநாயக்க நின்றுவிட விரும்பவில்லை. திருகோணமலை மாவட்டத்திலும் சிங்களவர்களைக் குடியேற்ற அவர் விரும்பினார். சரித்திர காலத்திலிருந்தே வடமாகாணத்தின் வன்னிப்பகுதியும், கிழக்கும் மிகவும் சிறப்பான அணைக்கட்டுகளைக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் வலையமைப்புக்களைக் கொண்ட செழிப்பான நெல்விளையும் விவசாயப் பிரதேசங்களாகக் காணப்பட்டன. இவ்வாறான நீர்ப்பாசனத் திட்டங்கள் தெற்கில் சிங்களப் பகுதிகளிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலும் காணப்பட்டு வந்தது. அணைகளைக் கட்டி நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது பாரம்பரியமாக தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விவசாய நடைமுறையாகும். திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே பல அணைக்கட்டுக்களும் நீர்பாசனத் திட்டங்களும் காணப்பட்டன. இவ்வாறான பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கந்தளாய்க் குளமும் ஒன்று. திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்களான தம்பலகாமம் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கு கந்தளாய்க் குளத்திலிருந்தே நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், 1948 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தை "கந்தளாய் அபிவிருத்தித் திட்டம்" எனும்பெயரில் மேலும் ஆளமாக்கி மேம்படுத்திய சேனநாயக்க புதிதாக காணிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்து சிங்களவர்களைக் குடியேற்றினார். கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின மூலம் மிகப்பெருமளவில் சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள அரசுகளினால் குடியேற்றப்பட்டனர். கந்தளாய்க் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்துவந்த 86,000 சிங்களவர்களில் 40,000 பேர் கந்தளாய்க் குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின் மூலம் பெரு வெற்றியைச் சம்பாதித்துக் கொண்டதாக உணர்ந்த சேனநாயக்க, அல்லைக் குடியேற்றத் திட்டத்தினை 1950 ஆம் ஆண்டு ஆர்ம்பித்து வைத்தார். 1952 ஆம் ஆண்டு தமிழரின் நில அபகரிப்பின் தந்தை என்று அறியப்பட்ட சேனநாயக்க இறந்துவிட, அவரது மகனான டட்லி சேனநாயகா அத்திட்டத்தினைத் தொடர்ந்து நடத்தினார். அல்லை அபிவிருத்தித் திட்டம் சேனநாயக்கவினால் மகாவலி ஆற்றின் ஒரு கிளையான வெருகல் ஆற்றிற்குக் குறுக்கே, திருகோணமலை குடாவிற்கு தெற்காக அணையொன்றினைக் கட்டுவதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதி தமிழர்களால் பூர்வீக காலத்திலிருந்து கொட்டியார் என்று அழைக்கப்பட்டு வந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் இப்பகுதியில் வாழ்ந்துவந்தபோதும், இப்பிரதேசம் தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசமாகவே விளங்கிவந்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொட்டியார் பகுதியில் ஒரு பிரதேசச் செயலகமே இருந்தது. அது கொட்டியார் பிரதேசச் செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்பகுதியில் மூன்று பிரதேசச் செயலகங்கள் இயங்கி வருகின்றன. மூதூர், சேருவிலை மற்றும் வெருகல் என்பனவே அந்த மூன்று பிரதேசச் செயலகங்களும் ஆகும். 1960 ஆம் ஆண்டு சேருவிலை பிரதேசச் செயலகமும், 1980 இல் வெருகல் பிரதேசச் செயலகமும் அப்பிரதேசங்களில் அரசினால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நலன்களைக் கவனிக்கவென்று உருவாக்கப்பட்டன. 1981 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி சேருவிலை பகுதியில் வாழ்ந்த 20,187 மக்களில் 11,665 பேர் தென்பகுதிகளில் இருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழருக்குச் சொந்தமான, ஆனால் மக்கள் வாழ்ந்துவராத காணிகளில் மட்டுமே சிங்களவர்களை அரசு குடியேற்றவில்லை. தமிழர்கள் பூர்வீகமாக வழ்ந்துவந்த தமிழ்க் கிராமங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றிய அரசுகள் அவற்றிற்குச் சிங்களப் பெயர்களை இட்டதன் மூலம், அவை பாரம்பரியமான சிங்களக் கிராமங்கள் என்று சரித்திரத்தினை மாற்றி எழுதுவதிலும் வெற்றி கண்டன. இப்பகுதியில் சிங்களமயமாக்கப்பட்டுள்ள கிராமங்களான புளஸ்த்திகம, காங்கேயப்பட்டுன என்பவை புராதன தமிழ்க் கிராமங்களாக இருந்து முற்றான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளானவற்றிற்கு உதாரணங்களாகும். புராதன தமிழ்க் கிராமமான அரிப்பு எனும் பிரதேசத்திற்கு சேருவில எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டது. அவ்வாறே கல்லாறு எனும் தமிழ்க் கிராமம் சோமபுற என்றும், நீலப்பளை எனும் தமிழ்க் கிராமம் நீலபொல என்றும், பூநகர் எனும் தமிழ்க் கிராமம் மகிந்த புர என்றும், திருமங்கலை எனும் தூய தமிழ்க் கிராமம் சிறிமங்களபுர என்றும், இலங்கைத் துறை எனும் தமிழ்க் கிராமம் லங்கா பட்டுண என்றும் சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டன. 1951 ஆம் ஆண்டளவில் கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில், அரச முன்னெடுப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளுக்கு முக்கிய காரணமாக உருவாகியிருந்தன. 1951 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் சேனநாயக்க கிழக்கில் முடுக்கிவிடப்பட்ட குடியேற்றங்களே தனது அரசின் முக்கியமான வெற்றிகரமான செயற்பாடு என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாக் குடியேற்றம் அழகரட்ணம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படியில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றினை உருவாக்கிய பிரதமர் சேனநாயக்க, இத்திட்டத்தினை நடத்துவதற்கு விசேட பணிக்குழு ஒன்றினை உருவாக்கினார். இத்திட்டத்திற்கு கல்லோயா அபிவிருத்திச் சபை என்று அவர் பெயரிட்டார். பட்டிப்பளை ஆறு என்று சரித்திர காலத்திலிருந்து தமிழில் அழைக்கப்பட்டு வந்த ஆற்றிற்கு கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. சிங்கள கல்விமான்களின் ஆசீர்வாதத்துடனும் ஆராய்ச்சிகளுடனும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயரிடும் செயற்பாடுகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன. தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை - டி எஸ் சேனநாயக்க கல்லோயா திட்டத்தினை 1949 ஆம் ஆண்டு ஆவணி 28 ஆம் திகதி சேனநாயக்க இங்கினியாகலை பகுதியில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடகாலத்தில் இத்திட்டம் நிறைவுபெற்றது. இந்த நீர்த்தேக்கத்திற்குச் சிங்களவர்களின் அரசு சேனநாயக்க சமுத்திரம் (சிங்களத்தில் சேனநாயக்க சமுத்ர) என்று பெயரிட்டது. சேனநாயக்க சமுத்திரமாக மாற்றப்பட்ட தமிழரின் பட்டிப்பளை ஆறு இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 120,000 ஏக்கர்கள் நிலம் 40 குடியேற்றக் கிராமங்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. இந்த கிராமம் ஒவ்வொன்றிலும் 150 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர்கள் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இந்த 40 குடியேற்றக் கிராமங்களில் 6 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழரின் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 7,000 சிங்களக் குடும்பங்கள் இத்திட்டத்தினூடாக தமிழ்ப் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் குடியேற்றப்பட்டார்கள். இச்சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். நாட்டின் தந்தையென்று சிங்களவர்களால் அழைக்கப்பட்ட சேனநாயக்க, "தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை" யென்று ஆனதுடன், நாடு முற்றான இனப்போரிற்குள் புதைந்துவிட அடித்தளம் இட்ட சிங்களவர்களில் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கு முன்னர் கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தினையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைத்தே அழைக்கப்பட்டு வந்தது. அம்பாறை மாவட்டம் 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப் பிளந்து உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டது. 1911 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டம் அமைக்கப்பட்ட பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்ததுடன், தமிழர்கள் இரண்டாம் நிலையிலும், சிங்களவர்கள் மூன்றாம் நிலையிலும் வாழ்ந்துவந்திருந்தார்கள். 1911 ஆம் ஆண்டில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 36,843 (55 %), தமிழர்கள் 24,733 (37%) மற்றும் சிங்களவர்கள் 4,762(7%) ஆக இருந்தது. ஆனால், 1921 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 31,943 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 25,203 ஆகவும் சிங்களவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகவும் காணப்பட்டது. பின்னால் வந்த வருடங்களில், முக்கியமாக கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக இப்பிரதேசத்தில் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை பின்வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் விபரங்கள் கூறுகின்றன, 1953 இல் : முஸ்லீம்கள் 37,901, தமிழர்கள் 39,985, சிங்களவர்கள் 26,459 1963 இல் : முஸ்லீம்கள் 97,990 (45.6%), சிங்களவர்கள் 62,160 (29%), தமிழர்கள் 49,220 (23.5%) 1971 இல் : முஸ்லீம்கள் 123,365 (47%), சிங்களவர்கள் 82,280 (30%), தமிழர்கள் 60,519 (22%) 1981 இல் : 166,889 (47%), சிங்களவர்கள் 146,371 (38.01%) தமிழர்கள் 78,315 (20%). 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்படி சிங்களவர்களின் எண்ணிக்கை 252,458 ஆக இருக்க முஸ்லீம்களின் எண்ணிக்கை 281,702 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 113, 3003 எனும் பலவீனமான நிலையிலும் காணப்பட்டது. அன்றிலிருந்து இம்மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை முதலாவது இடத்திற்கு அரச ஆதரவுடன் முந்தள்ளப்பட்டுவிட்டதும் குறிப்பிடத் தக்கது. கல்லோய அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆறு குடியேற்றக் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்களை அரசும் சிங்களக் குடியேற்றவாசிகளினால் உருவாக்கப்பட்ட காடையர்களும் இணைந்து அடித்து விரட்டினர். 1956 ஆம் ஆண்டு ஆனியில் நடைபெற்ற இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பின்போது குறைந்தது 200 தமிழர்கள் சிங்களவர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். முதலாம் கட்ட ஆக்கிரமிப்பு நிறைவுக்கு வந்தபின்னர் இப்பகுதிகளில் குடியேறுவதற்கு மீண்டும் எத்தனித்த தமிழர்கள் இரண்டாவது கட்டமாக 1958 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்களினால் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனாலும் சில குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் நிலை ஏற்பட்டபோதும் கூட, 1990 களில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலைகளின் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டனர். அன்றிலிருந்து கல்லோயாத் திட்டத்தின் மூலம் பூர்வீகத் தமிழ்ப் பிரதேசமாகவிருந்த இப்பகுதியில் குடியேற்றப்பட்ட இறுதி 900 தமிழ்க் குடும்பங்களும் திட்டமிட்ட படுகொலைகளினூடாகவும் கலவரங்களினூடாகவும் இப்பகுதியிலிருந்து முற்றாக அடித்து விரட்டப்பட்டதுடன் இப்பகுதியில் தமிழ் இனச் சுத்திகரிப்பொன்றினை சிங்கள அரசுகள் செய்து முடித்திருக்கின்றன. தமிழரின் பூர்வீகப் பிரதேசத்தில், தமிழினம் முற்றாக அடித்து விரட்டப்பட்டு சிங்கள விவசாயிகள் குடியேறி வாழ்ந்துவருகிறார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அபகரிக்கப்பட்டுவரும் தமிழர் தாயகம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த வவுனியா மாவட்டத்தின் பன்குளம் கிராமத்திற்குச் சென்ற பொலீஸ் அதிகாரிகளும் இராணுவத்தினரும், அங்கிருந்த தமிழர்களின் கொட்டகைகளுக்கும், பயிர்களுக்கும் தீமூட்டினர். 1983 ஆம் ஆண்டு சித்திரை 6 ஆம் திகதி நடைபெற்ற இந்த நாசகாரச் செயலிற்கான உத்தரவினை வழங்கியவர் அன்றிருந்த வவுனியா உதவி அரசாங்க அதிபராகும். இதன் பின்னர், வவுனியாவில் இயங்கிவந்த காந்தீயம் அமைப்பின் தலைமையகத்திற்குச் சென்ற பொலீஸாரும் இராணுவத்தினரும் அவ்வமைப்பின் செயலாளர் கலாநிதி எஸ் ராஜசுந்தரத்தைக் கைதுசெய்து குருநகர் இராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றனர். இரு நாட்களுக்குப் பின்னர் காந்தீயம் அமைப்பின் தலைவரான அருளானந்தம் டேவிட்டை இராணுவம் கைதுசெய்தது. இவர்கள் இருவரும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 1977 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்கள் மீது அரச ஆதரவுடன் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களைக் காக்கவும், அவர்களுக்கான புணர்வாழ்வினை வழங்கவுமே தொண்டு நிறுவனமான காந்தீயம் இயங்கிவந்தது. ஆனால், தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைக்கும் ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட நடவடிக்கையே காந்தீயம் அமைப்பாளர்கள் மீதான அடக்குமுறை என்றால் அது மிகையில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணங்கள் தமது பூர்வீகத் தாயகம் என்றும், அவற்றினை ஆளும் அதிகாரம் தமக்கு வேண்டும் என்றும் தமிழர்கள் கோரிவந்த நிலையில், அதனைச் சிங்களவர்கள் கடுமையாக எதிர்த்துவந்ததுடன், தமிழர்களின் கோரிக்கையினை வேருடன் பிடிங்கி எறியவே ஜெயவர்த்தன திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். அரச ஆதரவுடன் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த சிங்கள குடியேற்றங்களே தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையினுள், சமஷ்ட்டி அடிப்படியில், வடகிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்கள் தமக்குத் தரப்படவேண்டும் கோரிக்கையினை முன்வைத்தமைக்கான அடிப்படைக் காரணமாகும். அக்காலத்தில் இலங்கையில் காணப்பட்ட கிராமப்புற நிலப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட பல தீர்வுகளில் அரச ஆதரவுடனான குடியேற்றங்களும் ஒன்று. 1927 ஆம் ஆண்டு இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுநராகக் கடமையாற்றிய சேர் ஹியூ கிபோர்ட்டே இந்த யோசனையினை முதலில் முன்வைத்திருந்தார். ஆனால், நிலம் என்பது இலங்கை மக்களைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதால், அரசாங்கம் மிகவும் அவதானமாக இதனைக் கையாளவேண்டும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அவரது பரிந்துரைகளின்படி, ஈரவலயத்தில் வாழும் காணியற்ற ஒருவரை வறண்ட வலயத்தில் குடியேற்றலாம் என்றே கூறப்பட்டிருந்தது. சேர் ஹியூவின் பரிந்துரைகள் அன்றிருந்த சட்டவாக்கல் கவுன்சிலினால் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காணி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. காணி ஆணைக்குழு குருநாகலை, அநுராதபுரம், திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாவிக்கப்படாத பெருந்தொகை வெற்றுக்காணிகளை இக்குடியேற்றங்களுக்காக அடையாளம் காட்டியது. 1933 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராகவிருந்த டி எஸ் சேனநாயக்க அரசிற்குச் சொந்தமான இக்காணிகளை அபிவிருத்தி செய்யும் ஆணையினை வெளியிட்டார். இதன் பிரகாரம் பாவிக்கப்படாத இக்காணிகள், கிராமங்களை விரிவாக்கவும், அரசாங்கத்தின் பாவனைக்கும், விவசாயக் குடியேற்றங்களை அமைக்கவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தவகையில் விவசாயிகளுக்கான காணிகள் முதன் முதலாக மின்னேரியாவில் சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன்பின்னர் சிங்களவர்கள் பொலொன்னறுவை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இவை எல்லாமே அப்பொழுது நீதியான முறையில் நடைபெற்றுவருவது போன்றே தோன்றியது. காணியற்ற தமிழ் விவசாயிகள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும், காணியற்ற சிங்கள விவசாயிகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் குடியேற்றப்பட்டு வந்தனர். சிங்களவரைப் போலவே, தமிழரும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த விவசாயக் குடியேற்றங்களை அன்று வரவேற்றிருந்தனர். ஆனால், 1949 ஆம் ஆண்டு இவை எல்லாமே தலைகீழாக மாறிப்போயிற்று. பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 1949 ஆம் ஆண்டு கல்லோயாச் சிங்களக் குடியேற்றம் அரசினால் முன்னெடுக்கப்பட்டது. அவ்வருடம் மாசி மாதம் தனது நிரந்தரக் காரியாதிரிசி சேர் கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசன இயக்குநர் த. அழகரட்ணம் மற்றும் நில அளவையாளர் நாயகம் சேர் எஸ் புரொகிர் ஆகியோரை அழைத்த அன்றைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க, பட்டிப்பளை ஆற்றினைச் சுற்றி பாரிய விவசாயக் குடியேற்றம் ஒன்றினை உருவாக்க ஆற்றிற்குக் குறுக்கே அணை ஒன்றினைக் கட்டும் தனது திட்டத்தினைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் விவசாயிகள் நண்மையடைவதோடு, நீர்ப்பாசனம் கிடைக்கும் மேலதிக காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டமுடியும் என்று அவர் கூறினார். ஆகவே, இத்திட்டத்தின் சாத்தியப்பாடுகளை அறிந்துகொள்ள அழகரட்ணத்தை அவர் பணித்தார். பிரதமர் தனது திட்டம் பற்றிக் கூறியபோது தானும், சேர் கந்தையா வைத்தியநாதனும் மிகவும் உற்சாகமடைந்ததாக அழகரட்ணம் வீரகேசரிப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். "தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கே பிரதமர் தனது திட்டத்தை உருவாக்கியிருந்தார் என்று நாங்கள் கனவில்க் கூட நினைத்திருக்கவில்லை" என்று அவர் கூறினார். அழகரட்ணமும் அவரது நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகளும் முஸ்லீம் கிராமமான சம்மாந்துரைக்குச் சென்று, அங்கிருந்து மாட்டு வண்டிகளில் ஆற்றின்வழியே மேல்நோக்கிப் பயணித்தனர். பதுளை மாவட்டத்தின் மதுல்சீமை மலைத்தொடர்களிலிருந்தே பட்டிப்பளை ஆறு உருப்பெறுகிறது. அங்கிருந்து 85 கிலோமீட்டர்கள் பயணித்து வங்காள விரிகுடாவினை அது அடைகிறது. கிறீஸ்த்துவுக்கு முன் மூன்று நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பசுமையான தமிழ்க் கிராமமான பட்டிப்பளைக்குச் சென்றது அழகரட்ணத்தின் குழு. அங்கிருந்து இங்கினியாகலை நோக்கிச் சென்ற அந்தக் குழுவினர் அப்பகுதியில் அணையொன்றினைக் கட்டுவதற்கு உகந்த இடத்தினைத் தெரிவுசெய்தார்கள். இதன் அடிப்படையில் இப்பகுதியில் விவசாயக் குடியேற்றம் ஒன்றினை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை அழகரட்ணத்தின் குழு அரசிடம் முன்வைத்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நாடுதழுவிய அடக்குமுறைகள் வடக்குக் கிழக்கில் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்துவிட்ட அதேவேளை தெற்கில் சிங்கள மக்கள் மீது தனது அடக்குமுறையினை ஜெயாரின் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தினை தனது தொழிற்சங்கக் காடையர்களைக் கொண்டு கொடூரமாக அடக்கியதிலிருந்து தனக்கெதிரான சக்திகள் அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வந்தது. ஜெயவர்த்தனவின் அடக்குமுறைக்கு தமது எதிர்ப்பினைக் காட்டியவர்கள் என்றால் அது மொனராகலை மாவட்ட விவசாயிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டும்தான். சர்வதேச சீனி உற்பத்தி நிறுவனம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் பொதுமக்களின் விவசாயக் காணிகளை அரச ஆதரவுடன் கபளீகரம் செய்ய முற்பட்டவேளை மொனராகலை மாவட்ட விவசாயிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அவ்வாறே, பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஜெயவர்த்தன அரசின் தலையீட்டையும், இலவசக் கல்வி முறையில் ஜெயார் கொண்டுவர முயற்சித்த மாற்றங்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். மேலும் பல்கலைக் கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகவும், பொலீஸ் அக்கிரமங்களுக்கெதிராகவும் பின்னாட்களில் விரிவுபடுத்தப்பட்டது. கொழும்பு மற்றும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக மாணவர்கள் மீதான பொலீஸ் அடக்குமுறைகளையடுத்து கெலனிய, பேராதனை, றுகுண மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கழக மாணவர்கள் தமது விரிவுரைகளைப் புறக்கணித்ததோடு 1983 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒருநாள் பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டார்கள். திருமதி விவியேன் குணவர்த்தன ஜெயவர்த்தனவின் அடக்குமுறை தனது எதிராளிகளை அடக்கிச் சிதறடித்ததுடன், தேர்தல்க் காலங்களில் வன்முறைகளைப் பாவிப்பதன் மூலம் வெற்றிகொள்ளும் நிலைமையினையும் அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவியான சிறிமா பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து முற்றாக நீக்கிவிட்ட ஜெயாரினால் அதன் தொடர்ச்சியாக மக்களிடம் பிரபலயமடைந்துவந்த திரைப்படக் கலைஞரும் அரசியல்வாதியுமான விஜே குமாரதுங்க மீது நக்ஸலைட் எனும் பொய்யான குற்றச்சாட்டினைச் சுமத்திச் சிறையில் அடைக்கவும் முடிந்தது. இதில் வேதனை என்னவென்றால், தனது சகோதரியான சந்திரிக்காவின் கணவர் விஜே குமாரதுங்க சிறையில் அடைக்கப்படுவதற்கான சூழ்ச்சியில் அநுர பண்டாரநாயக்கவும் பங்குகொண்டதுதான். ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியான வன்முறைகள், அச்சுருத்தல்கள், கள்ளவாக்குகள் ஆகிய பல முறைகேடுகளிலும் ஜெயவர்த்தன அரசு இறங்கியிருந்தது. சுதந்திரக் கட்சியினரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பொலீஸாரைக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்வது, அக்கட்சியின் தேர்தல் முகவர்கள் மீது வீண்பழி சுமத்தி கைதுசெய்வது ஆகிய்வற்றை ஜெயவர்த்தனவின் அரசு தேர்தல் நடைமுறையாகவே கைக்கொண்டு வந்தது. தனது அடக்குமுறைக் குற்றங்களை மறைக்க ஜெயவர்த்தனவின் அரசு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வபோது காட்டி வந்தது. 1977 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தை வெகுஜன வாக்களிப்பின் மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஜெயவர்த்தன நீட்டித்தபோது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதற்கெதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தன. ஆகவே, இக்கண்டனங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சூழ்ச்சியொன்றில் இறங்கினார் ஜெயார். அதாவது, சர்வஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்கிற வாக்குகளைக் காட்டிலும் "இல்லை" என்கிற வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்ட 18 தேர்தல்த் தொகுதிகளில் இடைத்தேர்தல்களை அவர் நடத்தினார். 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி இந்தத் இடைத்தேர்தல்களிலும் ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி 14 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு தனது கட்சிக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று ஜெயார் பிரச்சாரம் செய்துவந்தார். ஆனால், இந்த இடைத்தேர்தல்களில் ஜெயாரின் கட்சி மேற்கொண்ட கடுமையான முறைகேடுகளினூடாகவே அவரால் வெற்றிபெற முடிந்ததாக எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றஞ்சாட்டியிருந்தன. 1983 ஆம் ஆண்டு பங்குனி 7 முதல் 15 வரையான காலப்பகுதியில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்தியாவில் தலைநகர் புது தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வினையொட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பாணை ஒன்றினை மாநாட்டின் தலைவருக்கும் ஏனைய அரசத் தலைவர்களுக்கும் அனுப்பியிருந்தனர். இந்த அறிக்கை இலங்கையில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதம் குறித்தும், இப்பயங்கரவாதத்தினை முறியடித்து தமிழ் மக்களுக்கான தனியான நாட்டினை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் ஒன்றினுள் இறங்குவதற்கான நியாயப்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தது. "உலக நாடுகளின் சமூகத்திற்கு !, சிறிலங்கா தன்னை சொர்க்கபுரித் தீவென்று வெளியுலகில் பிரச்சாரம் செய்துவருவதோடு, பெளத்த கோட்பாடுகளான அகிம்சையினையும், சமாதானத்தினையும் கைக்கொண்டு, சோசலிஸ ஜனநாயகத்தினை அரசியலில் பின்பற்றுவதன் மூலம் நடுநிலையான அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து வருவதாகவும் பித்தலாட்டம் செய்து வருகிறது. ஆனால், சிறிலங்கா வெளியுலகிற்குக் காட்டிவரும் இந்த ஜனநாயக முகமூடியின் பின்னால் அது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனரீதியான அடக்குமுறைகளும், அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களும் , இராணுவ பொலீஸ் அட்டூழியங்களும், இவை அனைத்தினூடான திட்டமிட்ட இனக்கொலையும் மறைந்து கிடக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வாதிகாரத்தனமான அரசியல் நடைமுறையினைக் கைக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் ஆளும் வர்க்கம், தேசிய இனவாதத்தினையும், மத அடிப்படைவாதத்தினையும் முடுக்கிவிட்டுள்ளதன் மூலம் தமது அதிகாரத்தை தக்கவைத்து வருகின்றன. மேலும், இதே அதிகார வர்க்கங்கள் தமிழ் மக்கள் மீது மிகவும் திட்டமிட்ட அடிப்படியில் மிகக் கொடுமையான இனவாத அரசியலை முன்னெடுத்தும் வருகின்றன". "இதில் வேதனை தரும் முரண்பாடு யாதெனில், உலக மனிதவுரிமை அமைப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட, மனித குலத்திற்கெதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டு வருகின்ற சிறிலங்கா போன்ற சர்வாதிகாரத்தனமான நாடுகள் உலக அரங்கொன்றில் அகிம்சையினையும், சமாதானத்தையும் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு வலம்வருவதுதான்". "எமது குறிக்கோள் என்னவெனில், சிறிலங்கா பாஸிஸ அரசின் பொய் முகத்திரையினை சர்வதேச அரங்கில் துகிலுரிப்பதும், இந்த அராஜக அரசின் கீழ் எமது மக்கள் அடைந்துவரும் அவலங்களை வெளிக்கொணர்வதும், அடிமைகளாக கீழிறக்கப்பட்டு, மெதுவான சாவை எதிர்நோக்கியிருப்பதைக் காட்டிலும், வேறு எந்தத் தெரிவுகளும் இல்லாத நிலையில் கெளரவத்தினையும், சுதந்திரத்தினையும் அடைந்துகொள்ள எமது மக்கள் முன்னெடுத்திருக்கும் வீரம்செறிந்த போராட்டத்தினை நியாயப்படுத்துவதும் ஆகும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது. ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இராணுவத்தையும், பொலீஸாரையும் தனது அடக்குமுறையின் கருவிகளாகப் பாவித்து வந்தது. சமூக உரிமைகள் அமைப்பு இந்த அபாயகரமான மாற்றத்திற்கெதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தது. இந்த அமைப்பின் தலைவரான ஆயர் வணக்கத்திற்குரிய லக்ஷ்மண் விக்கிரமசிங்க தலைமையில் 1983 ஆம் ஆண்டு சித்திரை 15 ஆம் திகதி கூடிய சமூக உரிமைகள் அமைப்பினர், அதிகரித்துவரும் பொலீஸ் அடக்குமுறைகள் பற்றியும், அடாவடித்தனங்கள் பற்றியும் விமர்சித்திருந்தன. மேலும், பொலீஸாரின் அடக்குமுறைச் சம்பவங்கள் குறித்த பட்டியல் ஒன்றினையும் இவ்வமைப்பு வெளியிட்டது. கொத்மலைப் பகுதியில் செய்தியாளர்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதல், கண்டி பொலீஸ் நிலையத்தில் நீதிக்குப் புறம்பான விதத்தில் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட 17 வயது இளைஞன், ஏக்கலை சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், மாத்தளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது பொலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட நபர், கொழும்பு நடைபாதை வியாபாரிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விவியேன் குணவர்த்தன மீதான பொலீஸாரின் தாக்குதல் ஆகியன் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. எஸ். ஏ. டேவிட் சொலொமொன் அருளானந்தம் - காந்தீயம் ஆனால், தமிழ் மக்கள் மீது சிறிலங்காவின் பொலீஸாரும் இராணுவத்தினரும் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டவற்றைக் காட்டிலும் பல மடங்கு கொடுமையானவை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததோடு, பொலீஸார் எழுதும் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கடுமையாகத் தாக்கப்பட்டு வந்தனர். இந்த வாக்குமூலங்கள் கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்கெதிராகப் பொலீஸாரினால் பாவிக்கப்பட்டபோது, சிறிலங்காவின் நீதிமன்றங்களும் அவற்றினை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தன. 1983 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த கட்டட வடிவமைப்பாளரும், காந்தீயம் அமைப்பின் தலைவருமான எஸ். அருளானந்தம் டேவிட் அவர்களின் அவலத்தினைச் செய்தியாகக் காவி வந்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவை சித்திரவதைகளுக்குப் பின்னர் கொன்றுபோட்ட இராணுவப் புலநாய்வுத்துறை முதலாவது கவசவாகனச் சாரதி வாகனத்தின் தடுப்புக்களைப் பிரயோகித்தார். புலிகளின் தாக்குதலில் அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனம் சடுதியாக வீதியின் நடுவே நின்றதைக் கண்ட இரண்டாவது கவச வாகனத்தின் சாரதி, தனது வாகனம் முதலாவது வாகனத்துடன் மோதுப்படுவதைத் தவிர்க்க வீதியின் கரைநோக்கி வாகனத்தைச் செலுத்த, அது கண்ணிவெடியால் உருவாகியிருந்த கிடங்கிற்குள் வீழ்ந்தது. எதிர்பாராது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து நிலைகுலைந்துபோன புலிகள், தாக்குதல் திட்டத்தினைக் கைவிட்டு, தமது மினிபஸ் தரித்துநின்ற பரந்தன் பகுதிநோக்கி ஓடத் தொடங்கினர். அவசரத்தில், புலிகளின் அணியினைச் சேர்ந்த நால்வர் தமது பாதணிகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர். அவற்றினைப் பரிசோதித்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் அவை காடுகளில் பாவிக்கப்படும் பாதணிகள் என்பதை அறிந்துகொண்டதோடு, அவற்றில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டுகொண்டனர். பாதணிகளில் கிட்டு, கணேஷ், விக்டர் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயர்கள் காணப்பட்டன. காடுகளில் பாவிக்கும் பாதணிகளை அதிகப் பாவித்துப் பழகியிருக்காமையினால், அவற்றுடன் ஓடுவதைக் காட்டிலும் வெறுங்காலுடன் ஓடுவதே அவர்களைப் பொறுத்தவரை அன்று இலகுவானதாக இருந்திருக்கிறது. மேலும், ராணுவ வாகனத்தின் அருகில் சிறிய காகிதம் ஒன்றினையும் புலநாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர். அக்காகிதத்தில் ஒருவருடைய பெயர் இருந்தது. திருகோணமலை மாவட்டம், கிளிவெட்டியை வதிவிடமாகக் கொண்ட சித்திரவேல் சிவானந்தராஜா என்பதே அந்தப் பெயர். இதனையடுத்து, கிளிவெட்டியைச் சேர்ந்த சிவானந்தராஜாவை விசாரிக்க ராணுவப் புலநாய்வுத்துறை அங்கு சென்றது. இராணுவத்தினருடன் பேசிய அவர், சார்ள்ஸ் அன்டனி எனப்படும் சீலன் தனது பாடசாலை நண்பர் என்றும், தன்னை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு அவர் வற்புருத்தி வந்ததாகவும், ஆனால் தான் இணைய விரும்பவில்லையென்றும் கூறினார். அவரை விடுதலை செய்த ராணுவப் புலநாய்வாளர்கள், கிளிவெட்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரான 28 வயது நிரம்பிய கதிர்காமத்தம்பி நவரட்ணராஜாவை பங்குனி 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து குருநகர் முகாமிற்கு அழைத்து வந்ததோடு கடுமையான சித்திரவதைகளின்பின்னர், 1983 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை ராணுவத்தினர் ஒருபோதும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தம்மால் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் உடலை யாழ் வைத்தியசாலையில் கையளித்த ராணுவத்தினர் அவர் சுகயீனம் காரணமாக இறந்தார் என்று கூறினர். அன்று, ராணுவத்தை எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிவு வைத்தியசாலையில் இருந்த எவருக்கும் இருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணராக பணியாற்றிவந்த மருத்துவர் என். சரவணபவனந்தன் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் பிரேதப் பரிசோதனையை நடத்தியிருந்தார். வைத்தியர் சரவணபவனந்தனால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை பின்வருமாறு கூறியது, "இறந்துபோன நவரட்ணராஜாவின் உடலில் 25 வெளிக்காயங்களும், பத்து உட்காயங்களும் காணப்பட்டன. அவரது நுரையீரலில் காணப்படும் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டவையாகும். அவரது மரணம் இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளின் செயலின்மையினால் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடலின் தசைப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாலேயே இந்த செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருப்பின் அவரது உயிரைக் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது. சித்திரை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இளைஞர் நவரட்ணராஜாவின் மரணம் பற்றிய செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்ததோடு, வைத்தியர் சரவணபவனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் சவ அறைக்குச் சென்ற பொலீஸார் நவரட்ணராஜாவின் மரணம் தொடர்பாக வைத்தியர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையினைத் தேடியதாகவும், ஆனால் அதனை மருத்துவர் சரவணபவனந்தன் பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டதனால் பொலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவின் சித்திரவதையும் அதன்பின்னரான கொலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதும், இராணுவத்தினர் மீதும் அதீத கோபத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசிடமிருந்து மேலும் மேலும் அவர்களை அந்நியப்படவும் வைத்திருந்தது. கைதுசெய்யப்படும் அனைவரையும் சித்திரவதைக்குள்ளாகுதல் என்பது அன்றைய கால கட்டத்தில் இராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுவான நடைமுறையாகக் கையாளப்பட்டு வந்ததுடன், கைதுசெய்யப்படும் தமிழர்கள் அனைவரும் பாரபட்சமின்றி சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துவந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அரச இயந்திரத்தின் ராணுவப் பொலீஸ் படைகளுடன் நேரடியான மோதல்களுக்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றிருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களால் சித்திரை 5 ஆம் திகதியன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவரட்ணராஜா கொல்லப்படுவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைக்க பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலையும் மாணவர் மீது மேற்கொண்டிருந்தனர். சித்திரை 5 ஆம் திகதி காலை, புனித ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாடாகியிருந்தது. இதனையடுத்து புனித ஜேம்ஸ் தேவாலயத்தைச் சுற்றித் தடைகளை ஏற்படுத்திய பொலீஸார், அத்தேவாலயம் நோக்கி மாணவர்கள் வருவதைத் தடுக்க எத்தனித்தனர். ஆனால், அருகிலிருந்த புனித மரியாள் பேராலயத்திலிருந்து தமது பேரணியினை மாணவர்கள் ஆரம்பித்து நடத்தவே, அப்பகுதிக்குச் சென்ற பொலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துப் போட்டனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இரண்டாவது கண்ணிவெடித் தாக்குதல் புலிகளின் மீள் எழுச்சி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. வடக்கின் பாதுகாப்பு நிலைமையினை அது வெகுவாகப் புரட்டிப் போட்டிருந்தது. இங்கிலாந்துப் பத்திரிக்கையாளரான டேவிட் செல்போர்னுக்குச் செவ்வி வழங்கிய ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, "நாம் தற்போது உச்சத்தில் இல்லை" என்று கூறியிருந்தார். டேவிட் செல்போர்ன் "பயங்கரவாதிகளே தாக்குதலையும் நேரத்தையும் தெரிவு செய்கிறார்கள், நாம் செய்வதெல்லாம் அதற்கான எதிர்வினை மட்டும்தான்" என்று திஸ்ஸ வீரதுங்க அவரிடம் கூறினார். தான் பிரித்தானியச் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் கணத்தில்க் கூட பிரபாகரன் கண்ணிவெடிப் போரினைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதோ அல்லது ராணுவத்தின் நடமாட்டங்கள் முடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் அடைபடவேண்டிய நிலை உருவாவதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பொன்னாலைப் பாலத்தைத் தகர்த்து கடற்படை ரோந்து அணியை அழிக்க புலிகள் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியடைந்தபோதிலும், அவர்கள் கண்ணிவெடித்தாக்குதல்கள் மீதான தமது நாட்டத்தினை ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை. தமது தவறுகளில் இருந்து பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட அவர்கள், தமது உத்திகளை மேலும் மெருகேற்றிக்கொள்ள எத்தனித்தனர். கண்ணிவெடிகளை இயக்குவதற்கு ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது கடிணமானது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். காவிச்செல்வதற்குக் கடிணமானதாக இருந்த அதேவேளை, அதன் இரைச்சலும் புலிகளுக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. ஆகவே, ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக லொறிகளில் பாவிக்கப்படும் பற்றரிகளைப் பயன்படுத்தலாம் என்று புலிகள் முடிவெடுத்தனர். புலிகளின் இரண்டாவது கண்ணிவெடி முயற்சியும் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு, பங்குனி 4 ஆம் திகதி கிளிநொச்சி உமையாள்புரம் கோவிலின் அருகிலேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றது. சீலனே இத்தாக்குதலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். முதலாவது தாக்குதலைப் போலவே, இத்தாக்குதலிலும் செல்லக்கிளியே கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைப் போலல்லாது இந்தமுறை கண்ணிவெடித்தாக்குதலில் இருந்து தப்பியோடும் ராணுவத்தினர்மீது துப்பாக்கித் தாக்குதலையும் நடத்துவதென்று புலிகள் தீர்மானித்திருந்தார்கள். மினி பஸ்ஸில் தாக்குதல் நடைபெறப்போகும் இடத்திற்கு வந்திறங்கிய புலிகளின் அணி, வீதியில் இரு கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு அவற்றின்மீது தாரினை ஊற்றி மறைத்துக்கொண்டது. கண்ணிவெடிகளையும் பற்றரியையும் இணைக்கும் மின்கம்பிகளும் தாரினாலும், மண்ணினாலும் உருமறைப்புச் செய்யப்பட்டன. இரு குழுக்களாகத் தம்மைப் பிரித்துக்கொண்ட புலிகளின் அணி, வீதியின் இருமருங்கிலும் நிலையெடுத்துப் பதுங்கிக்கொண்டது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்குக் காவலுக்கு நிற்கும் இராணுவ அணிக்கு உணவுப் பொருட்களைக் காவிவரும் இராணுவ ரோந்து அணியே அவர்களின் அன்றைய இலக்கு. ஆனையிறவு தடை முகாமிலிருந்தே கிளிநோச்சிப் பொலீஸ் நிலைய ராணுவத்தினருக்கு மூன்றுவேளையும் உணவு கொண்டுவரப்பட்டது. காலை வேளையில் அவ்வீதியால் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆதலால், காலையுணவைக் கொண்டுசெல்லும் ரோந்து அணியையே தாக்குவதென்று புலிகள் முடிவெடுத்தனர். இராணுவத்தினருக்கு உணவினை ஏற்றிச்செலூம் ட்ரக் வண்டி காலை 7 மணிக்கு ஆனையிறவு முகாமிலிருந்து கிளம்பியது. அதற்குக் காவலாக நான்கு ராணுவ வீரர்கள் சென்றனர். வீதியில் ராணுவ ட்ரக்கினைக் கண்டதும், தனது சக்காக்களை உசார்ப்படுத்தினார் சீலன். ஆனால் இந்தமுறையும் செல்லக்கிளியின் நேரம் தவறிவிட்டது. பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைக் காட்டிலும் இம்முறை கண்ணிவெடி இலக்கு அருகில் வரும்போது வெடித்திருந்தது. கண்ணிவெடி வெடித்தபோது வீதியில் உருவான கிடங்கினுள் ட்ரக் இறங்குவதற்குச் சற்று முன்னர் சாரதி ட்ரக்கினை நிறுத்திவிட்டார். ட்ரக்கிலிருந்ஃது வெளியே குதித்த ராணுவத்தினர் தாம் கொண்டுவந்த தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக எல்லாத்திசைகளிலும் சுட ஆரம்பித்தனர். புலிகளும் பதிலுக்கு இரு பக்கத்திலிருந்து ராணுவத்தினர் மீது தாக்கத் தொடங்கினர். இரு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் தமது ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு ஆனையிறவு நோக்கி ஓடத் தொடங்கினார்கள். சாரதியும், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஏனைய ராணுவ வீரர்களின் பின்னால் ஓடத் தொடங்கினார். வீதிக்கு வந்த புலிகள், ட்ரக் வண்டியின் பின்னால் மீள ஒருங்கிணைந்தார்கள். இருவர் ராணுவத்தினரின் ஆயுதங்களை எடுத்துக்கொள்ள மேலும் இருவர் ட்ரக் வண்டியின் அடியில் சென்று அதன் அமைப்பைச் சோதித்தார்கள். ராணுவத்திற்குக் கொண்டுவரப்பட்ட உணவினை உண்டுவிட்டு, குளிர்பானங்களையும் அருந்தினார்கள். அங்கிருந்து தப்பி ஓடிச்சென்ற இராணுவ வீரர்கள் ஆனையிறவு முகாமைச் சென்றடைந்து, மேலும் ராணுவ வீரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வருவதற்கு நேரம் எடுக்கலாம் என்பதை அறிந்திருந்த புலிகள், சாவகசமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாங்குளம் முகாமிலிருந்து பலாலி நோக்கி இரு ராணுவக் கவச வாகனங்கள் அவ்வீதியால் அப்போது வந்துகொண்டிருந்தன. முகாம்களுக்கிடையே ராணுவ வீரர்கள் இடம் மாறிக்கொள்ளும் வழமையான செயற்பாட்டிற்கமைய இவ்விரு கவச வாகனங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தில் சென்றவர்கள் வீதியின் நடுவே தமக்கு முன்னால் ராணுவ ட்ரக் ஒன்று நிற்பதைக் கண்டுகொண்டார்கள். கவச வாகனத்தின் சாரதி, வீதியில் நின்ற ட்ரக் வண்டிக்கு அருகில் சீருடை அணிந்த சிலர் நிற்பதையும் கண்டுகொண்டார். புலிகளும் தம்மை நோக்கி இரு கவச வாகனங்கள் வேகமாக வருவதை அவதானித்தார்கள். உடனே வீதியின் கரைக்கு பாய்ந்த புலிகள், கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தங்கத்துரையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு அரச பயங்கரவாதினாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகள் பொங்கியெழுந்துகொண்டிருந்தவேளை, மாசி 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் அவ்வுணர்ச்சியைக் கட்டுக்கடங்காத கோபமாக மாற்றிவிட்டிருந்தது. பிரபாகரன் மதுரையை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிக்கொண்டிருந்த வேளை, நீர்வேலி வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா நீதிமன்றில் வரலாற்றைச் சுட்டிக் காட்டி ஆற்றிய வாதத் தொகுப்பில் குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தமிழனின் உணர்வினையும் ஆளமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எல்.டி. மூனெமலி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தங்கத்துரை, குட்டிமணி, தேவன், சிவபாலன் மாஸ்ட்டர், நடேசநாதன் மற்றும் சிறி சபாராட்ணம் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், சிறி சபாரட்ணம் தலைமறைவாகியிருந்தபடியினால், அவரின்றியே வழக்கு நடைபெற்றது. வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான் தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார். மாசி 24 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்த்தண்டனையினை வழங்குமுன்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். தங்கத்துரை தமிழில் உணர்வூர்வமான பேச்சொன்றினை வழங்க அதனை ஆரம்பத்திலிருந்தே நடேசன் சத்தியேந்திரா மொழிபெயர்த்துவந்தார். தங்கத்துரையின் பேச்சு நீண்டு செல்கையில் சத்தியேந்திரா அழத்தொடங்கினார். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சத்தியேந்திரா, தங்கத்துரையின் பேச்சினை தன்னால் தொடர்ந்தும் மொழிபெயர்க்க முடியாது என்று நீதிபதியினைப் பார்த்துக் கூறினார். சத்தியேந்திராவுக்கு இவ்வழக்கில் உதவிபுரிந்த சிவசிதம்பரம் தங்கத்துரையின் மீதிப் பேச்சினைத் தமிழில் மொழிபெயர்த்தார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நடராஜா தங்கத்துரை - கொழும்பு, மாசி 24, 1983 தமிழர்களின் வரலாறு பற்றியும், சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக அரசுகளால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை மிதவாதத் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கத் தவறியமையும், அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்ததையும் விளக்கப்படுத்திய தங்கத்துரை தனது பேச்சினை பின்வரும் வகையில் நிறைவு செய்தார். "நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்". "நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?" "ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?" "ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!" இறுதி வெற்றி எமதே என்று தங்கத்துரை எதிர்வுகூறியபடி தனது பேச்சினை முடித்தபோது நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். அப்பாவிச் சிங்கள மக்கள் அதிகார வெறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் செயலினால் பழிவாங்கப்பட்டு விடக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று அவர் கூறியபோது என்னால் அழுகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைத்துத் தமிழர்களும் அழுதார்கள். தங்கத்துரை எம் அனைவரையும் உணர்வுகளால் இணைத்துவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும் அவர் உணர்வால் ஒன்றிணைத்தார். தமிழர்கள் உணர்வுரீதியாக ஒருங்கிணைவதை அவர் அன்று உறுதிப்படுத்திக்கொண்டார். தங்கத்துரையின் உரையின் இறுதிப்பகுதியை, குறிப்பாக அவரது உரையின் இறுதி வாக்கியத்தை மேற்கோள் காட்டித் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுடன், அந்தப் பேச்சு தமிழ் மக்கள் மேல் எவ்வகையான தாக்கத்தினைச் செலுத்தப்போகின்றது என்பது பற்றிய ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கத்துரையின் பேச்சினை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்ததுடன், தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்ப் பயங்கரவாதத்தினை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவரப்போகின்றது என்பது பற்றி எதிர்வுகூறியிருந்தன. சிங்களப் பத்திரிக்கைகளோ ஒரு படி மேலே சென்று, தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆரவாரத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, தமிழ்ப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வானளவப் புகழ்ந்து தள்ளியிருந்தன. தங்கத்துரையின் அன்றைய பேச்சு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும், இலங்கை அரசியலின் எதிர்காலம் மீதும் செலுத்தவிருக்கும் தாக்கத்தினை சிங்கள ஊடகவியலாளர்கள் அன்று கண்டுகொள்ளத் தவறியிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையில் இரு தரப்புக்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறியிருந்தனர். ஒருபக்கச் சார்பாக செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலம் தமது தலைவர்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த குற்றங்களைத் தூண்டிவிட்டதுடன், அவற்றினை ஆதரித்தும் அவர்கள் எழுதி வந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஊழல்ப்பெருச்சாளி ஆளாளசுந்தரமும் அவருக்குப் புலிகள் வழங்கிய எச்சரிக்கையும் நான்கு நாட்களின் பின்னர், மாசி 22 ஆம் திகதி பிரபாகரன் தனது விடுதலைப் போராட்டத்திற்கு இன்னொரு குணவியல்பையும் கொடுத்தார். மக்களை ஊழல்களிலிருந்தும் ஏனைய சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் காப்பவர்கள் என்பதே அது. பிரபாகரனின் சமூகச் சுத்திகரிப்பிற்கு முதலாவதாகத் தண்டிக்கப்பட்டவர் கோப்பாய்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எம். ஆளாளசுந்தரம் ஆகும். அவர் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வந்தார். ஆளாளசுந்தரம் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்ததோடு வழக்கறிஞராகவும் பட்டம்பெற்றிருந்தவர். சிறிமாவின் அரசாங்கத்திடமிருந்து பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்ட சிறிமாவின் தமிழ் ஆதரவாளர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தவர். சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் யாழ்நகர மேயருமான அல்பிரெட் துரையப்பாமீது கடுமையான விமர்சனங்களை ஆளாளசுந்தரம் முன்வைத்து வந்தார். பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், துரையப்பாவை "கூப்பன் கள்ளன்" என்று வெளிப்படையாக கேலிசெய்திருந்தார். ஆனால், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஜெயவர்த்தனவுடனான தமது நெருக்கத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தான் முன்னர் விமர்சித்து வந்த அதே ஊழல்களை தானும் செய்யலாயிற்று. ஆளாளசுந்தரம் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கூட்டுறவுச் சங்கத்தில் பல ஊழல்களும், முறைகேடுகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடைபெறத் தொடங்கியதாக பலமான முறைப்பாடுகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மனோகரன், ஆளாளசுந்தரத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டியதுடன், அவரை உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தனது குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், அதனோடு இணைந்த ஆவணங்களும் மூன்றாம் தரப்பு ஒன்றினால் ஆராயப்படவேண்டும் என்றும் கோரியிருந்தார். பின்னர் ஒரு நாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், ஏனைய ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்த அறை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உள்ளிருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் சாம்பலாகிப் போயின. ஆளாளசுந்தரமே தனது முறைகேடுகளை மறைக்க ஆவணங்களை எரித்தார் என்று மக்கள் நம்பினர். ஆகவே, ஆளாளசுந்தரத்திற்கும், அவர் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் ஒரு பாடத்தைப் புகட்ட எண்ணினார் பிரபாகரன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தாம் விரும்பியபடி நடந்துகொள்ள முடியாதென்றும், மக்களின் நலனே அவர்களின் மிக முக்கியமான குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஒருநாள் இரவு கல்வியங்காட்டில் அமைந்திருந்த தனது வீட்டுக் கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, "யாரது?" என்று ஆளாளசுந்தரம் கேட்டார். "ஆளாள் அண்ணையைப் பாக்க வேணும்" என்று கதவின் வெளியில் இருந்து பதில் வந்தது. ஆளாளசுந்தரம் கதவைத் திறக்கவும், கணேஷ் என்று அழைக்கப்பட்ட புலிகளின் போராளியொருவர் அவரருகில் சென்று வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். "அண்ணை, இதை ஒரு எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்ளுங்கோ. இனிமேலும் உங்கட ஊழல் வேலைகளைச் செய்யாதேயுங்கோ" என்று அவரை எச்சரித்துவிட்டு தான் வந்த சைக்கிளில் திரும்பிச் சென்றுவிட்டார் கணேஷ். மறுநாள் யாழ்ப்பாணத்தில் அனைவரும் இச்சம்பவம் குறித்து பேசிக்கொண்டார்கள். "ஆளாளை புலியள் வெருட்டியிருக்கிறாங்கள்" என்று மக்கள் இச்சம்பவத்தை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்கள். ஆளாளசுந்தரத்தின்மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் வியப்படைந்திருந்த தமிழ் மக்களுக்கு நான்கு முக்கிய விடயங்களைப் பிரபாகரன் கூறியிருந்தார். முதலாவது, புலிகள் மீண்டும் செயலில் இறங்கிவிட்டார்கள் என்பது. இரண்டாவது, புலிகள் உங்களைப் பாதுகாப்பார்கள் என்பது. மூன்றாவது, ஊழல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பது. நான்காவது, தமிழீழ விடுதலைப் புலிகள் இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எடுபிடியல்ல என்பதே அவை நான்கும். மறுநாள், தமது கையொப்பத்துடன் துண்டுப் பிரசுரம் ஒன்றினை புலிகள் வெளியிட்டனர். சமூகத்திற்கெதிரான செயற்பாடுகள் கடுமையான குற்றங்களாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ஆளாளசுந்தரத்தினால் செய்யப்பட்டுவந்த சமூகத்திற்கெதிரான முறைகேடுகள் பற்றியும் விளக்கப்பட்டிருந்தன. ஆகவே, அவருக்கு எச்சரிக்கையொன்றினை விடுக்கும் முகமாக அவரது வலது காலில் தாம் துப்பாக்கியால் சுட்டதாக புலிகள் அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவித்திருந்தனர். ஆளாளாசுந்தரத்திற்கு புலிகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்பார்த்த பலனைத் தந்திருந்தது. யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மொத்த நிர்வாகக் குழுவினரும் இதனைத் தொடர்ந்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். தமக்கெதிராகப் புலிகள் செயற்படமாட்டார்கள் என்று எண்ணியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைவர்களுக்கு நடுக்கம் பிடித்துக்கொண்டது. தமது கட்சி உறுப்பினரான ஆளாளசுந்தரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனின் தாயகம் திரும்பலும் அரசியல் வெற்றிடத்தினை நிரப்பலும் பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் சென்று சரியாக ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி, காலை புலரும் முன் வல்வெட்டித்துறையில் தரையிறங்கினார். 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி, அதாவது யாழ் நூலகம் எரிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அவர் மிகுந்த வருத்தமும், கோபமும் கொண்டிருந்தார். அவர் மீது இராணுவத்தினரும், பொலீஸாரும் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தனர். அவரது மறைவிடங்கள் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு சல்லடை போடப்பட்டன. அவரிடமிருந்த பணமும் அற்றுப்போயிருந்தது. அவரால் நம்பப்பட்ட பல நண்பர்கள் அவரை விட்டுச் சென்றிருந்தனர். தன்னையும், தனது போராட்ட அமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள டெலோ அமைப்புடன் சேர்ந்து, ஒரு பகுதியாக இயங்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த 19 மாதங்களில் அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் புலிகளியக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றிருந்தார். தனது இயக்கத்தைப் பலப்படுத்தி தனித்து இயங்கும் நிலைக்கு அவர் உயர்த்தியிருந்தார். ஜெயவர்த்தன அரசின் அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில் தோற்றுவித்திருந்த உணர்வெழுச்சிப் போராட்டங்கள் தனது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜெயவர்த்தனவிடம் முற்றாகச் சரணடைந்திருந்த நிலையில் மக்களால் அவர்கள் கைவிடப்படுவதன் மூலம் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்றும் உருவாகிவருவதையும் அவர் உணர்ந்துகொண்டார். பேபி சுப்பிரமணியம் இவ்விரு விடயங்கள் குறித்தும் அவர் பேபி சுப்பிரமணியத்துடனும் நெடுமாறனுடனும் ஆலோசனைகளை நடத்தினார். "ஒரு ஆயுதப் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது, ஜெயவர்த்தனவுக்கே நன்றிகள்" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக நெடுமாறன் நினைவுகூர்திருந்தார். "நாம் செய்யவேண்டியதெல்லாம் மக்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்த உந்துசக்தியை மேலும் தீவிரமாக்குவதுதான். இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், இந்த உணர்வெழுச்சி அடங்கிப் போய்விடும்" என்று பிரபாகரன் விவாதித்திருக்கிறார். சீலனின் முழங்கால் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து, அவரையும் தன்னுடம் தாயகத்திற்கு அழைத்து வந்த பிரபாகரன் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டச் சூழ்நிலையினை போராட்டத்தின் இன்னொரு படியான ஆயுத மோதலுக்கு முன்கொண்டுசெல்லத் தீர்மானித்தார். தனது சிறுபராயம் தொட்டு எண்ணிவந்த ஆயுத ரீதியிலான தாயக விடுதலைப் போராட்டத்தினை முழுமூச்சுடன் ஆரம்பிக்க முடிவெடுத்தார். எதிரி மீது திருப்பியடிக்க, பலமாகத் திருப்பியடிக்க அவர் முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினையிருந்தது. அதுதான் தமிழ்நாட்டில் அவருக்கு இன்னமும் இருந்த நீதிமன்றப் பிணை. தான் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் தப்பிவந்தது தெரியவருமிடத்து தனக்குப் பிணைநின்ற நெடுமாறனுக்கு சங்கடத்தையும் அசெளகரியங்களையும் அது ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினார். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்த நாளிலிருந்து அவர் நெடுமாறனின் மதுரை வீட்டிலேயே தங்கியிருந்தார். "நான் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வருமா?" என்று நெடுமாறனிடம் வினவினார் பிரபாகரன். "என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். உங்களுக்கும் உங்களின் போராட்டத்திற்கும் நண்மையானதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் நெடுமாறன். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் வந்திறங்கிய நாள்வரை, சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலை விடுத்து பெருமளவில் அமைதியாகவிருந்த புலிகளின் படை அன்று மாலையே பொலீஸாரையும், இராணுவத்தையும் கலங்கவைக்கும் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. நெடுமாறனுடன் தலைவர் - 1980 களில் அன்று இரவு 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் பரிசோதகர் எ.கே. ஆர். விஜேவர்த்தன சிகரெட்டுக்களை வாங்கிவர "சிறி கபே" எனும் தேநீர்ச் சாலைக்கு தனது ஜீப்பில் சென்றிருந்தார். அவரது குடும்பம் விடுமுறை நாட்களில் அவரைப் பார்க்க அங்கு வந்திருந்தது. ஆகவே, குடும்பத்தினருடன் பொழுதைக் களிக்க சில நண்பர்களையும் அன்று அவர் இரவு விருந்திற்கு அழைத்திருந்தார். அவர் சிகரெட்டுக்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது ஜீப்வண்டியில் ஏறும்போது அதுவரை அவரைத் தொடர்ந்துவந்த நான்கு புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். தனது அதிகாரி வாகனத்தில் ஏறுவதற்கு வாகனத்தின் கதவினைத் திறந்துவிட வெளியே வந்த சாரதி வீரசிங்கவும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு பொலீஸாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பொலீஸ் வாகனத்தில் தப்பிச்சென்றது புலிகளின் அணி. 31 சிறி 5627 எனும் இலக்கமுடைய அந்தப் பொலீஸ் ஜீப் வண்டி மறுநாள் புத்தூர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விஜேவர்த்தனவின் மீதான தாக்குதலை திட்டமிட்டவர் பிரபாகரனே. இத்தாக்குதல் பற்றி மறுநாள் வெளிவந்த ஈழநாடு பத்திரிக்கை விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தது. மேலும் தொடர்ந்து வந்த நாட்களில் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள், மாத்தையாவைத் தேடிப் பிடிப்பதற்கு உருவாக்கப்பட்டிருந்த ராணுவப் புலநாய்வுத்துறையின் குழு வல்வெட்டித்துறைக்குச் சென்றமை போன்ற தகவல்களையும் அது வெளியிட்டு வந்தது. பருத்தித்துறை பொலீஸ் அதிகாரியின் மரணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் நிம்மதியினை ஏற்படுத்தியிருந்ததுடன், மக்களும் அதனை வரவேற்றிருந்தனர். மக்களைப் பொறுத்தவரை பொலீஸ் அதிகாரி விஜேவர்த்தன ஒரு கொடுமையான பயங்கரவாதியாகத் திகழ்ந்தார். பொதுமக்களை அச்சுருத்தவும், துன்புறுத்தவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகத் தனக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்களை அவர் விருப்பத்துடன் பாவித்து வந்தார். ஆகவே, அவ்வாறான கொடுமையான அதிகாரி ஒருவர் களத்திலிருந்து அகற்றப்பட்டது தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிம்மதியளிக்கும் விடயமாகவும், புலிகளால் தமக்கு செய்யப்பட்ட உதவியாகவும் தெரிந்தது. தனது ஆயுதப் போராட்டத்திற்கு புதிய குணவியல்பினைக் கொடுக்கும் தாக்குதலாக விஜேவர்த்தனவின் தாக்குதலை பிரபாகரன் திட்டமிட்டார். "மக்களைப் பாதுகாக்கும் காவலர்கள்" என்பதே அந்த விசேடமான குணவியல்பு !
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்களும் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்க நினைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் பாதிரியார்கள் மற்றும் நித்தியானந்தனின் கைதுகளையடுத்து யாழ்க்குடாநாட்டில் இடம்பெற்றுவந்த போராட்டங்கள், சத்யாக்கிரகங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆகியவை மொத்த தமிழ் மக்களையும் அரசுக்கெதிரான போராட்டக் களத்திற்கு இழுத்துச் சென்றிருந்தன. இப்போராட்டங்கள் மக்களை உத்வேகப்படுத்தியிருந்ததுடன் அரசுக்கெதிரான போராட்ட மனோநிலைக்கும் உயரே தள்ளியிருந்தன. போராட்டங்களை அடக்குவதற்கு ஜெயவர்த்தனவின் அரசு மேற்கொண்ட குறுகிய பார்வை கொண்ட ராணுவ பொலீஸ் அடக்குமுறைகள் மக்களை மேலும் மேலும் போராட்டங்கள் நோக்கி இழுத்துவந்ததுடன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் வேண்டா வெறுப்பாக போராட்டத்தில் இறங்க வைத்திருந்தது. போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்கில் ஒருங்கிணைந்த வகையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கார்த்திகை 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாம் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடும் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளத் தீர்மானித்தது. முன்னணியின் இந்தச் சந்தர்ப்பவாதத்தினைச் சுட்டிக் காட்டியிருந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை அவர்களின் பங்களிப்பை, "மக்கள் போராட்டத்திற்கு கும்பலோடு கும்பலாக கோவிந்தா பாட வந்தவர்கள்" என்று கேலி செய்திருந்தது. தமிழர் தாயகத்தில் புதிதாக எழுந்துவந்த தமிழ் மக்களின் எழுச்சியை ஜெயவர்த்தனவும் அவரது பாதுகாப்புத் தரப்புக்களும் கணிக்கத் தவறியிருந்தன . புனித அந்தோணியார் ஆலயம், இரம்பைக் குளம் - வவுனியா மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்குப் பழிவாங்கலாக அரசு மேற்கொண்டுவந்த அடக்குமுறைகள் மக்கள் போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்ததோடு மக்களின் பங்களிப்பினையும் அதிகரிக்கச் செய்தன. மார்கழி 15 ஆம் திகதி வவுனியா இரம்பைக்குளத்தில் அமைந்திருந்த புனித அந்தோணியார் ஆலயத்தினுள் நுழைந்த கலகம் அடக்கும் பொலீஸார் அப்பாவிகள் மீது தடிகளாலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். மார்கழி 18 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை வவுனியா இரம்பைக் குளத்தில் தமிழ்மக்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதலை பின்வருமாறு விவரித்திருந்தது. "மார்கழி 15 ஆம் திகதி ஆலய முன்றலில் தமிழர், முஸ்லீம்கள், பெளத்தர்கள் என்று வேறுபாடின்றிச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்பிள்ளைகள், பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பாடசாலை மாணவிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட மெளன நடைப்பயணப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மாணவிகள் தமது வாய்களை மூடி துணைகளைக் கட்டி, உடைகளில் கறுப்புத் துணித்துண்டுகளை அணிந்துகொண்டு வீதியால் வந்துகொண்டிருந்தனர். மாணவிகள் வீதிக்கு வந்தபோது அவர்கள் மீது பாய்ந்த பொலீஸ் காடையர்கள் அவர்களின் தலை முடியினைப் பிடித்து இழுத்துக் கீழே வீழ்த்தியதுடன் அவர்கள் மீது சரமாரியாக கால்களால் உதைக்கத் தொடங்கியதுடன் தடிகளால் தாக்குதலும் நடத்தினர். தமது மெளன நடைப்பயணப் போராட்டத்தை பொலீஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து வீதியிலேயே அமர்ந்துவிட்ட மாணவிகள் மீது பொலீஸார் லத்திகளால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். மேலும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடமான அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற பொலீஸார், அங்கு பொலீஸாரின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மீது குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டனர்" என்று எழுதியது. பொலீஸாரின் அடக்குமுறை மூலம் தமிழ் மக்களின் போராட்டங்களை அடக்கிவிடலாம் என்று அரசு எண்ணியது. ஆனால், அரசு எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. போராட்டம் மக்கள்மயப்படுத்தப்பட்டதோடு மக்களின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல்ப் போனதுடன் மக்களை ஒன்றிணையவும் உதவியது. வயது, பால், சாதி, சமூக அந்தஸ்த்து என்று எந்தவித வேறுபாடும் இன்றி மக்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், தம்மை அடக்கி ஒடுக்குவதற்கு அரசால் பாவிக்கப்பட்டு வந்த கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிரான தமது கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தனர். போராட்டங்களின் முன்னால் நின்று செயற்பட்ட பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் தமது மொத்த எதிர்ப்பினையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகக் குவித்து ஆக்ரோஷமாகப் போராடி வந்தனர். 1983 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை யாழ்ப்பாணத்தில் நடத்தினர். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொடுமையான இச்சட்டத்தைப் பாவித்து அரசு கைதுசெய்து தடுத்து வைத்திருந்த மாணவர்த் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக சேவகர்கள் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் கோஷமிட்டபடி சென்றனர். இப்பேரணியின் பின்னர் நான்கு நாள் சத்தியாக்கிரக நிக்ழவினையும் அவர்கள் மாசி 1ம் ஆம் திகதியிலிருந்து மேற்கொண்டனர். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 அன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அரச சேவைகள் அனைத்தும் முற்றான ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சத்தியாக்கிரக போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 என்பது இலங்கையின் சுதந்திர நாள் என்பது குறிப்பிடத் தக்கது. தலைவருடன் சீலன் மிகுந்த அரசியல் அவதானியாகத் திகழ்ந்த பிரபாகரன், வடக்குக் கிழக்கில் நடைபெற்று வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களையும் அவற்றுக்கெதிரான அரசின் அடக்குமுறைகளையும் நன்கு கூர்ந்து அவதானித்து வந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமிருந்து தமிழ் மக்களைத் தலைமை தாங்கும் பொறுப்பினை தான் எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஜெயவர்த்தனவின் அரசே உருவாக்கிவருவதை அவர் நன்கு உணர்ந்துகொண்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மக்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகும்போது அதனால் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தை உமா மகேஸ்வரன் அபகரித்துக்கொள்வதைத் தடுப்பதும் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆகவே, ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்கள் குறித்து தனது நெருங்கிய சகாக்களான பேபி சுப்பிரமணியத்துடனும், சீலனுடனும் பிரபாகரன் தீவிர ஆலோசனைகளை நடத்தினார். சீலன் தனது முழங்கால் காயத்திலிருந்து தேறிவந்துகொண்டிருந்தார். மேலும், தாயகத்தில் ஏற்பட்டுவந்த அரசியல்ச் சூழ்நிலைகள் குறித்து தனது வழிகாட்டியான நெடுமாறனுடனும் பிரபாகரன் பேசினார். நெடுமாறனின் ஆசியோடும், சீலனின் துணையுடனும் 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி அதிகாலை தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பினார் பிரபாகரன். அவர் நாடுதிரும்பிய முதல் நாள் மாலையே அவரின் வருகையினை அறிவிப்பதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தின் அதிகாரியான இ.கே.ஆர். விஜேவர்த்தன புலிகளால் கொல்லப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் பாதிரியார் டொனால் கனகரட்ணத்துடன் அவரது தாயாரும் சகோதரிகளும் கார்த்திகை 14 ஆம் நாள் இடம்பெற்ற கத்தோலிக்கப் பாதிரியார் சிங்கராயரின் கைது, மறுநாள் 15 ஆம் திகதி இடம்பெற்ற பாதிரியார் சின்னராசாவின் கைது, கார்த்திகை 18 ஆம் நாள் இடம்பெற்ற மெதொடிஸ்த்த திருச்சபையின் மதகுரு ஜயதிலகராஜாவின் கைது, மார்கழி 15 ஆம் திகதி இடம்பெற்ற அங்கிலிக்கன் திருச்சபையின் பாதிரியார் டொனால்ட் கனகரட்ணத்தின் கைது மற்றும் கார்த்திகை 20 ஆம் திகதி இடம்பெற்ற நித்தியானந்தன் தம்பதிகளின் கைது ஆகியன தமிழ் மக்களிடையே கொந்தளிப்பான மனோநிலையினை உருவாக்கின. உணர்வெழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களாக இந்த உணர்ச்சி மாறியது. தமிழர் விடுதலைப் போராட்டத்தில் இக்களம் தனித்தன்மையானதும், தன்னெழுச்சியான நிகழ்வாகவும் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான பாதிரியார்கள், கன்னியாஸ்த்திரிகள், சமயப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தினர் தேவாலயங்களினுள்ளும், அவற்றின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரச நிர்வாக அலுவலகங்களின் முன்னால் மறியல்ப் போராட்டங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆகியவற்றிலும் அவர்கள் ஈடுபலாயினர். "முறிந்த பனை" ஆவணம் இந்தப் போராட்டங்கள் பற்றி விரிவான தகவல்களை வழங்குகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் வாரப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ இனை மேற்கோள் காட்டி முறிந்த பனை இந்த போராட்டங்கள் குறித்த பதிவினை பேசுகிறது. கொழும்பில் ராணுவ அறிக்கைகளை மட்டுமே தனது செய்தியாக வெளியிட்டுவந்த லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளுக்கு யாழ்ப்பாணத்தில் எழுந்து வந்த மக்களின் உணர்வலைகள் குறித்து அறிவேதும் இருக்கவில்லை. அவர்களின் கவலையெல்லாம் சிங்களவர்களின் நலன்களைப் பற்றி பேசுவது மட்டும்தான். இதனையே அவர்களின் சிறிலங்காவின் நலன்கள் என்கிற போர்வையில் செய்துவந்தார்கள். 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 20 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ தனது ஆசிரியர் தலையங்கத்தினை, "பேனாவையும் கத்தியையும் கொண்டு நடத்தும் ஊடக சிறுமையினை நிறுத்து" என்று என்று விழித்திருந்தது. அரச ஆதரவுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்த கொழும்புப் பத்திரிக்கைகளின் இனவாத நிலைப்பாட்டினை இக்கட்டுரை கடுமையாகக் கண்டித்திருந்தது. மதகுருக்களைக் கைதுசெய்ய அரச உயர்பீடம் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே அவர்கள் அனைவரையும் "பயங்கரவாதிகளாகக்" காட்டுவதன் மூலம் கொழும்புப் பத்திரிக்கைகளால் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. மதகுருக்களின் கைதுகள் குறித்துச் செய்தி வெளியிட்ட கொழும்புப் பத்திரிக்கைகள், "பயங்கரவாத மதகுருக்கள் கைது" என்று தலைப்பிட்டே செய்தி வெளியிட்டன. சட்ட அதிகாரத்தினையும் நீதித்துறையினை ஒருங்கே தமது கைகளுக்குள் எடுத்துக்கொண்ட கொழும்பின அரச தனியார் இனவாதப் பத்திரிக்கைகள் கைதுசெய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் தான் என்று தம் பங்கிற்கு தீர்ப்பிட்டிருந்தன. பாதிரியார் கனகரட்ணம் சில நாட்களுக்குப் பின்னர் விடுதலையான செய்தியை லேக் ஹவுஸின் சிங்களப் பத்திரிக்கைகள் முற்றாக இருட்டடிப்புச் செய்ய, ஆங்கிலப் பத்திரிக்கையான டெயிலிநியூஸும், தமிழ்ப் பத்திரிக்கையான தினகரனும் அச்செய்தியை வேண்டுமென்றே பத்திரிக்கையின் உட்புறத்தில் சிறு பெட்டிச் செய்தியாக வெளியிட்டு உண்மை வெளிவருவதைத் தடுத்திருந்தன. பிலிமத்தலாவை பாதிரியார் பயிற்சிக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த கனகரட்ணம் அடிகளார் 1977 ஆம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான திட்டமிட்ட வன்முறைகளினைக் கண்டிக்கும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று தனது கல்லூரியில் சிங்கள தேசத்தின் கொடியினை ஏற்றுவதை நிராகரித்திருந்தார். இதனையடுத்து சில சிங்கள மாணவர்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்த நிலையில் கனகரட்ணம் தனது பதவியைத் துரந்ததுடன், வவுனியாவின் எல்லைப்புறக் கிராமமொன்றில் தமிழ் சிங்கள இனங்களிடையே அமைதியை உருவாக்கும் நோக்கில் "ஒற்றுமை இல்லம்" எனும் அமைப்பினை ஆரம்பித்து நடத்திவந்தார். ஆனால், அவர் தமிழ்ப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார் எனும் பொய்யான குற்றச்சாட்டில் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டார். அப்பகுதியில் இருந்த சிங்களவர்கள் சிலருக்கும் பாதிரியாருக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பினால் அவர் குற்றமற்றவர் என்பதை உணர்ந்துகொண்ட அரசாங்கம் சில நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ்ப் போராளி அமைப்புக்களை ஒன்றுபடுத்த முயன்ற அருளர் என்கின்ற அருட்பிரகாசம் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் புலிகள் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்த அதே நேரம் போராளி அமைப்புக்களை ஒரு அணியாக சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்த பிணக்கினைச் சரிசெய்ய அமிர்தலிங்கம் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் 1982 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் அருளரால் மேலும் விரிவாக்கப்பட்டன. ஏ. ஆர். அருட்பிரகாசம் "தமிழரின் பூர்வீகத் தாயகம்" எனும் நூலினை எழுதிய அருளரிடம் எனக்கு பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவரது இந்த நூலினை சரிபார்ப்பதிலும் அவர் பின்னாட்களில் எழுதிய நூலான "பொருளாதாரச் சுரண்டல்" எனும் நூலின் ஆக்கத்திலும் நான் அவருக்கு உதவியிருந்தேன். "இந்த நூல்களை எதற்காக எழுதினீர்கள்?" என்று அவரைக் கேட்டேன். "எல்லாம் வயிற்றுப் பசிக்காகத்தான்" என்று சிரித்துக்கொண்டே அவர் கூறினார். "நாம் வெறும் வயிற்றுடன் தூங்கிய நாட்களும் இருந்தன " என்று அவர் என்னிடம் கூறினார். "அப்படியான ஒரு இரவிலேயே நாம் அனைவரும் ஒன்றாக இயங்குவது குறித்துச் சிந்தித்தேன். அப்படி ஒன்றாவதன் மூலம் உமா கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த பெருந்தொகைப் பணத்தினை எமக்குள் பங்கிட்டிருக்க முடியும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார். "உமா அன்று தான் கொள்ளையிட்ட பணத்தினை வேறு எந்த போராளி அமைப்புடனும் பகிர்ந்து கொண்டாரா?" என்று நான் அருளரைக் கேட்டேன். "இல்லை, நான் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் எனது பேச்சை அவர் தட்டிக் கழித்து விட்டார்" என்று அவர் கூறினார். ஆனால், போராளிகளை ஒன்றிணைக்கும் தனது முயற்சிபற்றி அருளர் சிறிதும் கவலைப்படவில்லை. பொலீஸ் அதிகாரி பஸ்டியாம்பிள்ளையின் கொலை மற்றும் 1978 ஆம் ஆண்டு கண்ணாடிப் பண்ணை மீதான பொலீஸாரின் தேடுதல்கள் ஆகியவற்றின் பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்த அருளர், போராளி அமைப்புக்களிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை நன்கு உணர்ந்தே இருந்தார். தான் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அங்கு வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று அனைவருமே தன்னிடம் முன்வைத்த ஒரே கேள்வி, "ஏன் உங்களால் ஒன்றாகச் செயற்பட முடியாமல் இருக்கிறது?" என்பதுதான் என்று கூறிய அருளர், அதற்கான பதில் தன்னிடம் இருக்கவில்லை என்றும் கூறுகிறார். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுரையின் நாரந்தனைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருளர் 1949 ஆண்டு பிறந்தவர். அவரது தகப்பனார் அருளப்பு ஆசிரியராகக் கடமையாற்றி வந்ததுடன் தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் சத்தியாக் கிரகத்திலும் தந்தை செல்வாவுடன் சேர்ந்து பங்கெடுத்தவர். காலிமுகத்திடல் போராட்டம் சிங்களக் காடையர்களால் அடித்துக் கலைக்கப்பட்ட பின்னர் முறிந்த கையுடன் வீடுவந்த தனது தகப்பனார், "எனது மொழிக்குச் சமாமான அந்தஸ்த்துக் கோரி கால்களை மடித்து தரையில் இருந்து கடவுளைப் பார்த்து வேண்டியதற்காக எனக்குத் தரப்பட்ட தண்டனை இது" என்று தன்னிடம் கூறியதாக அருளர் கூறினார். சில வருடங்களுக்குப் பின்னர், 1964 ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்ற அருளரின் தந்தையார், தமிழர் தாயகத்தின் மீது அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமஷ்ட்டிக் கட்சியினரால் எல்லையோரக் கிராமங்களில் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பண்ணை எனப்படும் கிராமத்தில் குடியேறினார். காலிமுகத்திடல் சத்தியாக் கிரகம் லெபனானில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு திருச்சியூடாக பாலாலி வருவதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தவேளை அருளருக்கு அவசரச் செய்தியொன்று வந்திருந்தது. அதாவது, பலாலியில் அருளர் கைதுசெய்யப்படப் போகிறார் என்பதும், அவரது தகப்பனாரின் கண்ணாடிப் பண்ணை மீது பொலீஸாரின் அடாவடிகளும் தேடுதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதுமே அச்செய்தி. ஆகவே அவர் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தார். லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்திலும் அவர் இரு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. குண்டுகளைத் தயாரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அருளர், தான் இலங்கை மீளும்போது தன்னுடன் குண்டுகளைத் தயாரிக்கும் பொருட்களையும் இரகசியமாக தனது பயணப் பையில் கொண்டுவர முயன்றிருந்தார். பெய்ரூட் விமான நிலையத்தில் இவற்றினைக் கண்டுகொண்ட சுங்க அதிகாரிகள் அருளரைக் கைதுசெய்திருந்தனர். ஆனால், லெபனானில் இயங்கிவந்த செல்வாக்குள்ள பலஸ்த்தீன ஆயுதக் குழுவான அல் பத்தா அமைப்பின் போராளி ஒருவர், அருளரைத் தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு இயந்திரவியலாளர் என்றும், கற்களை வெடிக்கவைப்பதற்காகவே குண்டு தயாரிக்கும் பொருட்களைத் தன்னுடன் கொண்டு வந்தார் என்றும் சுங்க அதிகாரிகளிடம் பேசி நம்பவைத்து அருளரை விடுவித்திருந்தார். Al-Fatah Group "அது ஒரு கடிணமான வேலை" என்று போராளி அமைப்புக்களை ஒன்றாக்க தான் முயன்றது குறித்துப் பேசும்போது அருளர் கூறினார். 1982 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அமைப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு ஆகியவையே அந்த ஐந்து அமைப்புக்களும் ஆகும். இந்த அமைப்புக்களின் தலைவர்களிடையே பகைமைகள் காணப்பட்டபோதிலும், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்தது போன்று தீவிரமானவையாக அவை இருக்கவில்லை. ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தலைவரான பத்மநாபாவுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலும் பிணக்குகள் இருந்தன. அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையேயும், போராளிகளுக்கிடையேயும் சூழ்ச்சிகளும் காலை வாரிவிடும் செயற்பாடுகளும் அப்போது சர்வசாதாராணமாகவே நடைபெற்று வந்திருந்தன. போராளி அமைப்புக்களுக்கிடையிலான இந்த பூசல்கள் சிலவேளைகளில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன், சில சமயங்களில் இந்தப பூசல்கள் ஆழமாவதற்குக் காரணமாகவும் அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. பழ நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் மற்றும் கே வீரமணியின் திராவிட கழகம் ஆகிய அரசியற் கட்சிகள் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன. டெலோ அமைப்பின் தலைவர் தனது இயக்கத்தைனை மு கருநாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி இழுத்துச் சென்றிருந்தார். புளொட் அமைப்பிற்கு பெருஞ்சித்திரனாரின் தனித் தமிழ் இயக்கமும், ரஸ்ஸியச் சார்புக் கம்மியூனிஸ்ட் கட்சியும் ஆதரவு வழங்க, சீனச் சார்பு இந்தியக் கம்மியூனிஸ்ட் கட்சி ஈ பி ஆர் எல் எப் அமைப்பிற்கு ஆதரவு வழங்கி வந்தது. தமிழ் போராளி அமைப்புக்களில் ஈரோஸ் அமைப்பு மாத்திரமே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் எவற்றுடனும் தொடர்புகளைப் பேணாது தனித்துச் செயற்பட்டு வந்தது. தமது அரசியல்த் தத்துவார்த்த ரீதியிலும் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. எல்லா அமைப்புக்களுமே மார்க்ஸிஸம், சோஷலிஸம் என்கிற அடிப்படையில் தமது அரசியலை வகுத்திருந்த போதிலும் அவற்றுக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு அமைப்பும் வேறுபட்ட அளவிலேயே வழங்கி வந்தன. புலிகளைப் பொறுத்தவரையில் மார்க்ஸிஸம் என்பது மேலெழுந்தவாரியாக மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. புலிகளைப் பொறுத்தவரையில் சாதீய வேறுபாடுகளைக் களைவது, சீதனக் கொடுமைகளைக் களைவது உட்பட சமூகத்தில் காணப்பட்ட கொடுமையான நடைமுறைகளை அழிப்பது என்பதே பிரதானமான சமூகம் சார்ந்த செயற்பாடாகக் காணப்பட்டது. ஆனால், ஈ பி ஆர் எல் எப் அமைப்பானது அடிப்படையில் மார்க்ஸிஸ அமைப்பாகச் செயற்பட்டு வந்ததோடு சமூகத்தின் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரை போராட்டத்திற்காகத் திரட்டும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது. "இந்தப் பிரச்சினை பற்றி நான் ஆராய்ந்தபோதே அதன் ஆழம் குறித்து அறிந்துகொண்டேன்" என்று அருளர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு அமைப்பினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை இவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றையும் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்பதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம் என்று அருளர் கூறினார். "எம்மைப்பொறுத்தவரை பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் செயல்முறை சிறந்ததாகத் தெரிந்தது" என்றும் அவர் கூறினார். ஆகவே பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினை ஒத்த திட்டத்தினை முன்மொழிந்த அருளர், அதற்கு ஈழம் விடுதலைக் கமிட்டி என்று பெயரிட்டார். இந்த அமைப்பு ஐந்து கமிட்டிகளின் தலைவர்களை உள்ளடக்கிய உயர் பீடத்தைக் கொண்டிருக்கும். "எனது திட்டத்தினை அனைத்து போராளி அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்வினைத் தந்திருந்தது" என்று அருளர் கூறினார். ஜெயவர்த்தனவின் அரச பயங்கரவாதத்திற்கெதிராகச் செயற்படுவதற்கு போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணையவேண்டும் என்று இலங்கையிலும், வெளிநாடுகளில் இருந்தும் கல்விமான்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்த்தர்கள் ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த அழுத்தங்களையடுத்து அருளரின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் போராளித் தலைவர்களுக்கு அப்போது இருக்கவில்லை. பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், உமா மகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு அரசியல்ப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் அமைப்பு பொருளாதார துறைக்குப் பொறுப்பாகவும், சிறி சபாரட்ணம் தலைமையிலான டெலோ அமைப்பு வெளிவிவகாரத் தொடர்புகளுக்குப் பொறுப்பாகவும், பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எப் அமைப்பு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது. ஜெயவர்த்தனாவுடம் சேர்ந்தியங்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டுவது தொடர்பாக போராளி அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும் அருளர் என்னுடன் பேசினார் . "1983 ஆம் ஆன்டு இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குப் போட்டியாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் நாம் அவர்களை ஓரங்கட்டியிருக்க முடியும். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதாக ஜெயவர்த்தன அறிவித்தபோது அது எமக்குச் சாதகமாகவே தெரிந்தது" என்று அருளர் கூறினார். அருளரால் முன்மொழியப்பட்ட இணைந்த போராளிகள் அமைப்பு, ஜெயவர்த்தனவின் அரசாங்கம், முன்னணியுடன் பேசுவதைத் தவிர்த்து இனிமேல் தம்முடனேயே நேரடியாகப் பேச வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது. 1983 ஆம் ஆண்டு பங்குனியில் இந்த இணைந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வான ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்றினை ஜெயவர்த்தனவின் அரசாங்கம் முன்வைக்குமிடத்து அதனைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை ஜெயவர்த்தன அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டும் தமது திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த முயற்சி போராளி அமைப்புக்களின் கூட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அருளர் மேலும் கூறினார். ஆனால், போராளி அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையினை ஜெயவர்த்தனவும் அமிர்தலிங்கமும் முற்றாக நிராகரித்திருந்தனர். ஜெயாரைப் பொறுத்தவரை அமிர்தலிங்கத்துடனான தனது தொடர்பினை அப்போதுதான் மீளவும் புதுப்பித்திருந்தார். அமிர்தலிங்கமோ மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்ததன் மூலம் மக்களின் உணர்வுகளையோ போராளிகளின் மனோநிலையினையோ சரியாகக் கணிப்பிடத் தவறியிருந்தார். இது திரு சபாரட்ணம் குறிப்பிட்ட விடயங்கள். எனது தரவுகள் இல்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தலைவரின் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம் பிரபாகரன் அன்று ஆற்றிய அசாத்தியமான உரையே மாவீரர் நாள் பேருரையாக பிற்காலத்தில் உருப்பெற்றது. ஆண்டுதோறும் பிரபாகரனினால் வழங்கப்படும் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம் வலுப்பெற்று வந்ததோடு, அண்மைய வருடங்களில் இதன் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டது. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான நிகழ்வாக இது கருதப்பட்டது. மேலும் மாவீரர் நாள் நிகழ்வுகளும் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்றதைக் காட்டிலும், இந்தியப் படை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதிகள் புலிகள் வசம் வந்தபின்னர் மிகவும் விமரிசையாக இடம்பெறத் தொடங்கின. 1994 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதும், 1995 ஆம் ஆண்டு, புலிகள் யாழ்க்குடாவை விட்டு வெளியேறிச் சென்றபின்னர் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர் நாளுடன் தொடர்புடைய நிகழ்வுகள் கார்த்திகை மாத ஆரம்பத்திலேயே தொடங்கிவிடும். கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் கிராம மட்டங்களில் மாவீரர் நாள் தொடர்பான போட்டிகளும், நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. இவ்வாறான போட்டிகளில் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு இறுதிநாள் நிகழ்வுகளுக்காக ஆயத்தப்படுதப்பட்டன. இவ்வாறான முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒன்றின் நிகழ்வில் பிரபாகரன் கலந்துகொள்ள, ஏனைய துயிலும் இல்லங்களில் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொள்வார்கள். மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்கள் கைகளில் மலர்த்தட்டுக்களையும், சைவர்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள் என்பதற்கேற்ப தேங்காய் எண்ணெய் விளக்குகளையோ அல்லது மெழுகுவர்த்திகளையோ ஏந்தி வரிசையாக நிற்பர். மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான தியாகச் சுடரினை ஏற்றுவதற்கு ஏதுவாக போராளியொருவரால் மரதன் ஓட்டமுறையில் காவிவரப்படும் சுடரொன்று பிரபாகரனிடத்திலோ அல்லது அந்தந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் நிகழ்வினை நடத்தும் புலிகளின் முக்கியஸ்த்தரிடமோ வழங்கப்படும். தீயாகச் சுடர் சங்கர் இறந்த நேரமான மாலை 6:04 மணிக்கு பிரபாகரனால் ஏற்றிவைக்கப்படும். இதன் பின்னர் மாவீரர் குடும்பங்கள் தமது மாவீரரின் சமாதியின் முன்னால் தாம் கொண்டுவந்த விளக்கினையோ அல்லது மெழுகுதிரியினையோ வைத்து வணங்குவர். இறுதிச் சுடரேற்றும் நிகழ்விற்கு முன்னர் பிரபாகரன் தனது வருடாந்த மாவீரர் தினை உரையினை நிகழ்த்துவார். மாவீரர் ஒருவருக்காக கண்ணீர்விடும் அவரது குடும்பம் நித்தியானந்தன் தம்பதிகளின் கைது வயிற்றில் குண்டடிபட்ட சங்கர் காயத்தை அழுத்துப் பிடித்துக்கொண்டே மூன்று கிலோமீட்டர்தூரம் ஓடிச் சென்று, பாதுகாப்பான இடம் ஒன்றினை அடைந்திருந்தார். அவரைத் துரத்திச் சென்ற ராணுவக் கொமாண்டோக்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. சங்கருக்கு அந்த இடம் மிகவும் பரீட்சயமாக இருந்தது. ஒழுங்கைகளும், குச்சொழுங்கைகளும் அவர் அடிக்கடி வலம் வந்த இடங்கள்தான். சங்கர் தப்பிச் சென்றதையடுத்து அவரைப் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ராணுவத்தினரும் சரத் முனசிங்கவும் நேரே நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றனர். முனசிங்க என்னிடம் பேசும்போது நிர்மலா கோபமாகக் காணப்பட்டதாகக் கூறினார். அவர்களைப் பார்த்து நிர்மலா திட்டியதாகக் கூறினார் அவர். "எவ்வளவு துணிவிருந்தால் எனது வீட்டிற்குள் நுழைவீர்கள்? எனது வீட்டைச் சோதனை செய்ய உங்களுக்கு அனுமதி இருக்கின்றதா?" என்று அவர் ராணுவத்தினரைப் பார்த்துக் கேட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் சோதனையிடுவதற்கான அனுமதி எதுவும் தேவையில்லை என்று ராணுவத்தினர் நிர்மலாவிடம் கூறியபோதும், அவர் தொடர்ந்தும் தம்முடம் கோபமாகப் பேசியதாக முனசிங்க கூறினார். "எனது வீட்டினைச் சோதனை செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை, நான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன்" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கூறினார். "அவரின் கூச்சல்களுக்கு மத்தியிலும் நாம் அவரது வீட்டைச் சோதனையிட்டோம். காயங்களுக்குக் கட்டுப்போடும் ஒரு சில துணிகள் மற்றும் ஒரு சோடி ஊன்றுகோல்களைத் தவிர வேறு எதுவும் அங்கு இருக்கவில்லை". ஊன்று கோல்களைக் காட்டி, "இவற்றினை ஏன் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்?" என்று நிர்மலாவைப் பார்த்துக் கேட்டார் முனசிங்க . "எமது நாடக ஒத்திகைகளுக்காக இவற்றை நான் பாவிக்கிறேன்" என்று நிர்மலா பதிலளித்தார். இராணுவத்தினரைத் தொடர்ந்து நிர்மலாவின் வீட்டிற்கு வந்த பொலீஸாரினாலும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் இரட்டைப் படுக்கை கொண்ட கட்டிலின் மெத்தையைப் புரட்டிப் போட்டார்கள். அதில் பெரிய இரத்தக் கறையொன்றினை அவர்கள் கண்டார்கள். "இது எப்படி வந்தது?" என்று முனசிங்க நிர்மலாவைப் பார்த்துக் கேட்டர். "எனக்கு கடந்தவாரம் இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது" என்று நிர்மலா பதிலளித்தார். "உங்களுக்கு இந்த அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் இன்று உயிருடன் இருக்க மாட்டீர்கள்" என்று பதிலளித்த முனசிங்க அவர்கள் இருவரையும் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக குருநகர் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார். கடுமையான சித்திரவதைக் கூடம் என்று யாழ்ப்பாணத்து மக்களால் பேசப்பட்ட குருநகர் முகாமிற்கு போராளிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்படும் பல இளைஞர்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்திருந்தார்கள். ஆரம்பத்தில் எதனையும் பேச மறுத்த நித்தியானந்தன் தம்பதிகள் பின்னர் ஒருவாறு பேசத் தொடங்கியதாக முனசிங்க கூறினார். போராளிகள் என்று சந்தேகத்தின்பேரில் இழுத்துச் செல்லப்பட்டுக், கடுமையாகத் தக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பல இளைஞர்கள் இறுதியில் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறியிருந்தார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
"எமது மக்கள் உயரிய பதவிகளை வகித்தவர்களையும், வசதியான வாழ்க்கையினை வாழ்ந்தவர்களையும் தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் தலைவர்களுக்கென்று விசேடமான அந்தஸ்த்து எதுவுமே வழங்கப்படக் கூடாதென்று முடிவெடுத்திருக்கிறோம். இந்தப் புனிதமான போராட்டத்தில் தமதுயிரை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளையும் நாம் சமமாகவே நோக்குகிறோம். எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் மாவீரராகிய அனைத்துப் போராளிகளையும் ஒரே நாளில் நினைவுகூர்வ்தன் மூலம் எமது போராட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய அர்ப்பணிப்பிற்காக நாம் அவர்களுக்கு நன்றியினையும் கெளரவத்தினையும் செலுத்த முடியும். அவ்வாறில்லையென்றால், காலப்போக்கில் ஓரிரு போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் மட்டுமே பேசப்படுவதோடு, மற்றையவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டு விடும். தமது வீரர்களையும், வீராங்கனைகளையும் கெளரவிக்கத் தவறும் எந்தத் தேசமும் காட்டுமிராண்டிகளின் தேசமாகிவிடும். மற்றைய நாடுகளைப் போலல்லாமல் எமது தேசம் பெண்களுக்கு மிகுந்த கெளரவத்தினை வழங்கிவருகிறது. இவ்வகையான கெளரவத்தினை நாம் எமது வீரர்களுக்கு வழங்குவது கிடையாது. ஆனால், நாம் இன்று ஒரு மாற்றத்தினைக் கொண்டுவந்திருக்கிறோம். நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கும் முறையினை ஆரம்பித்து வைத்திருக்கிறோம். இன்றுவரை நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கவில்லை. ஆனால், இன்று அதனை நாம் மாற்றியிருக்கிறோம். இன்று எமது மாவீரர்களுக்கு கெளரவம் செலுத்தும் நாள் ஒன்றினை நாம் உருவாக்கியிருக்கிறோம். இன்று எமது தேசம் உலகின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடிகின்றதென்றால், அது எமது 1307 மாவீரர்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலுமே சாத்தியமானது. தமது வாழ்க்கைபற்றிச் சிந்திக்காது, தேசத்தின் விடுதலைபற்றி மட்டுமே சிந்தித்து அவர்கள் போராடியதாலேயே உலகின் மரியாதையினை நாம் பெற முடிந்திருக்கிறது. இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த மாவீரர் நாளினை நாம் அனுஷ்ட்டிப்போம், இந்த நாள் எமது வாழ்க்கையின் மிக முக்கிய நாளாக அமைய நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்" - தலைவரின் முதலாவது மாவீரர் நாள் உரையிலிருந்து
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காகவும், என் இனத்திற்காகவும், என் தேசத்தின் விடுதலைக்காகவும் நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளுக்காகவும் சாமானியன் எனது நன்றிகள் ஐயா!!!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சங்கரின் மறைவு கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் செல்லும் பொழுதுவரை சங்கர் "ஒரு உண்மையான மனிதனின் கதை" எனும் ரஸ்ஸிய நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். சரியாக 7 நாட்களின் பின்னர், கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தனதுயிரை அவர் ஆகுதியாக்கியிருந்தார். இந்த நாளே வீரத்திற்கும், தியாகத்திற்குமான நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தான் படித்து வந்த நாவலான "ஒரு உண்மையான மனிதனின் கதை" இல் வரும் நாயகனைப் போன்றே சங்கரும் தனதுயிரைத் தமிழ்த்தேசத்திற்காகக் கொடுத்திருந்தார். ஒரு உண்மையான மனிதனின் கதை - ரஸ்ஸிய நாவல் மதுரையின் இடுகாடு ஒன்றில் சங்கரின் உடல் தீயுடன் சங்கமமானது. சங்கரின் இறுதிக் கிரியைக்குத் தானும் போகவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். ஆனால், அவரோடு இருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். பிரபாகரனின் பாதுகாப்பு அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், கிட்டு, பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான் ஆகியோர் உட்பட சிலர் சங்கரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். நெடுமாறனும் இந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டார். அது ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் துடிப்பான இளைஞர் ஒருவரின் உயிரினை முதன்முதலாக இழந்திருந்தது. சங்கரின் மரணம் புலிகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இழப்பினை அறிவிப்பதனூடாக பொலீஸாரும், இராணுவத்தினரும் போராளிகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தலாம் என்று பிரபாகரன் எண்ணினார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புலிகளின் எண்ணிக்கை அன்றைய காலத்தில் வெறும் 30 மட்டும் தான். மேலும், சங்கரின் மரணத்தை அறிவிப்பதனால் தமிழ் மக்களின் மனவுறுதி பாதிக்கப்படும் அதேவேளை புலிகளுடன் இணைந்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையினையும் பாதிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சங்கரின் இழப்பு அவரது தந்தையாரான ஆசிரியர் செல்வச்சந்திரனுக்கு புலிகளால் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு தனது வீட்டிற்கு வந்த இரு "புலிகளின் பொடியள்" சங்கரின் இறப்புப் பற்றி தன்னிடம் அறியத் தந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறியிருந்தார். சங்கரின் முதலாம் ஆண்டு நிறைவின்போது புலிகள் அவரது மறைவினை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் சுவர்கள் சங்கரின் திரு உருவப்படத்துடன் அஞ்சலிச் செய்தியைக் காவிக்கொண்டிருந்தன. சங்கரின் வாழ்க்கை, அவரது திறமைகள், துணிவான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைக் காவிய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. சரத் முனசிங்க என்னுடன் பேசும்போது சங்கரின் மரணம் தொடர்பான விடயங்களை தாம் சில மாதங்களின் பின்னர் அறிந்துகொண்டதாகக் கூறினார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சங்கரின் இறப்பினை முதலாவது தமிழ்ப் போராளியின் மரணம் என்று பதிவுசெய்திருந்தது. சங்கர் மரணமடைந்து ஏழு வருடங்களின் பின்னர் அவரது நினைவுநாளினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். வன்னிக் காட்டிற்குள் ஒதுக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தனது போராளிகளுக்கு முற்றுகையினை உடைக்கும் மனோதைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கவும், தனது இயக்கத்திற்கு மேலும் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்த தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை நினைவுகூருவது அவசியம் என்று அவர் கருதினார். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போன்று, தமிழரின் கலாசாராத்தில் ஊறிப்போயிருந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தியாகங்களுக்கெல்லாம் சிகரமான தேசத்திற்காக உயிர்கொடுக்கும் நினைவேந்தலிற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசத்திற்காகவும் உயிர்கொடுத்த வீர மறவர்களைக் கெளரவிக்கும் நடைமுறையான நடுகல் நிறுவி வழிபடும் முறையினை பிரபாகரன் மீளவும் கொண்டுவந்தார். தமிழ்ச் சங்க கால இலக்கியங்களில் மக்களையும், போர்வீரர்களையும் உணர்வெழுச்சியுடன் வைத்திருக்க அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நடுகல் வழிபாட்டினை பிரபாகரனும் பின்பற்றினார். பிரபாகரனின் நடுகல் வழிபாட்டு முறையின் மீள் உருவாக்கம் எதிர்ப்பர்த்ததுபோலவே மக்களிடையே அதீத ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. மாவீரர்களாகிப்போன போராளிகளின் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளை மாற்றிப்போட்டது. இழந்த தமது உறவுகளுக்காக இரங்குவது மட்டுமே தம்மால் செய்யக்கூடியது எனும் நிலையிலிருந்து, அவ்வீர மறவர்களின் கெளரவத்திலும், பெருமைகளிலும் பங்குகொள்ளும் மனநிலையினை இது உருவாக்கியது. மாவீரராகிப்போன குடும்பங்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்களை நோக்கி நெருங்கிவர இந்த மாவீரர் நாட்களும், கெளரவித்தல்களும் வழிசமைத்துக் கொடுத்தன. ஆதி தமிழ்க் கலாசாரத்தில் நடைமுறையில் இருந்த மாவீரருக்கான வணக்கத்தினை ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடன் மீட்டுவந்து நிறுத்தியது. இந்த மாவீரர் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக 2000 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வினைக் குறிப்பிட முடியும். மாவீரர் கெளரவம் தொடர்பான புலிகளின் பிரச்சாரத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த பல தாய்மார்கள் உணர்வுப் பெருக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தமது பிள்ளைகளின் நெற்றியில் திலகமிட்டு, நாட்டிற்காகப் போராடும்படி கூறி புலிகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். ஆதித் தமிழ்க் கலாசாரத்தில் மாவீரராகிப் போன தமது கணவன்மாரின் நிகழ்வில் தமது ஆண்பிள்ளையின் நெற்றியில் சந்தனத்தால் வீரத் திலகமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் தாய்மாரின் செயலினை இது ஒத்திருந்தது. சிங்களவர்களும், தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்காத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் மாவீரர்களைக் கெளரவிக்கும் கலாசாரத்தினை விளங்கிக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பரவிவந்த ஆரிய இந்துக் கலாசாரம் இந்த மாவீரர் வழிபாட்டு முறையினை சிறுகச் சிறுக மழுங்கடித்து விட்டிருந்தது. ஆனால், தமிழ்க் காலாசாரத்தின் வேரிற்குள் சென்று மீண்டும் மாவீரர் கெளரவிப்பினை பிரபாகரன் மீட்டு வெளியே எடுத்து வந்தார். முதலாவது மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் - 1989 1989 ஆம் ஆண்டு, சங்கல் மரணித்த நாளான கார்த்திகை 27 ஆம் திகதியினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் ராணுவச் சீருடை அணிந்த 600 ஆண் மற்றும் பெண் போராளிகள் அணிவகுத்து நிற்க அதுவரை தாய்நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தமதுயிரை ஈந்த 1307 மாவீரகளுக்கான வணக்கம் செலுத்தப்பட்டது. போரில் காவியமான மாவீரர்களின் திரு உருவப் படங்கள் நடுகற்களில் வீற்றிருக்க, அவர்களின் பாதங்களின் மீது மலர்கள் தூவப்பட்டு, பிரபாகரன் முதலாவது விளக்கினை ஏற்ற, தொடர்ச்சியாக அனைத்து மாவீரர்களுக்கும் விளக்கேற்றப்பட்டது. ஈகைச் சுடர் ஏற்றல் எனும் மிகவும் இயல்பான இந்த நிகழ்வு இன்று விரிவான, உணர்வுபூர்வமான, ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடனான சடங்காக மாறிப்போனது. தான் ஆரம்பித்த மாவீரர் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக போராளிகளால் அனுஷ்ட்டிக்கப்பட்டது கண்டு நெகிழ்ந்த பிரபாகரன் தனது முதலாவது மாவீரர் நாள் உரையினை தனது உணர்வுகளின் குவியலாக எடுத்துரைத்தார். மிகவும் சிறிய பேச்சாக அமைந்த பிரபாகரனின் முதலாவது மாவீரர் நாள் உரை மாவீரர்களை வணங்கும் நிகழ்வு ஏன் அவசியம் என்கிற விளக்கத்தோடு ஆரம்பித்திருந்தது. "எமது போராட்டத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். தமிழ் ஈழம் எனும் உயரிய இலட்சியத்தை அடைய தமது இன்னுயிரை அர்ப்பணித்த 1307 மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாக இந்த மாவீரர் தினத்தினை நாம் உருவாக்கினோம். இன்றே இதனை முதன்முறையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பல நாடுகளில் மரணித்த தமது விடுதலைப் போராளிகளுக்கான கெளரவத்தினை அவர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாமும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி வணகுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். எமது இயக்கத்தில் முதலாவது மாவீரரான சங்கரின் நினைவுநாளினை, தாயக விடுதலையில் வித்தாகிப்போன அனைத்து மாவீரகளுக்குமான வணக்க நாளாக இன்றுமுதல் நாம் அனுஷ்ட்டிப்போமாக" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புலிகளின் முதலாவது மாவீரர் தமது பிரதான வீட்டின் விறாந்தையில் அமர்ந்திருந்த ரஜனி ராஜசிங்கம் , தமது வளவினுள் இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்று நுழைவதைக் கண்ணுற்றார். உடனே வீட்டின் பின்புறம் நோக்கி ஓடிச்சென்று தனது மூத்த சகோதரியான நிர்மலாவைப் பார்த்து, "நிர்மலா அக்கா, ஆமி ஜீப்பொன்று வருகிறது" என்று கத்தினார். தனது சகோதரியைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்த ரஜனி, அக்கணத்தில் வீட்டினுள் புலிகளின் போராளியான சங்கரும் இருந்ததை அறிந்திருந்தார். நிர்மலாவின் பராமரிப்பில் இருந்துவந்த சீலனை தாம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டோம் எனும் தகவலைச் சொல்வதற்காக சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு அப்போது வந்திருந்தார். மேலும், தன்னை பல நாட்களாக தமது வீட்டில் தங்க வைத்து, அக்கறையுடன் பார்த்துக்கொண்டதற்காக நிர்மலாவிற்கும், நித்தியானந்தனிற்கும், ரஜனிக்கும் தனது நன்றியைத் தெரிவித்து விடுமாறு சீலன் சங்கரைக் கேட்டிருந்தார், ஆகவேதான் சங்கர் அன்று நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு வந்த நேரம் மதியமாதலால், அவரை தம்முடன் மதிய உணவில் கலந்துகொள்ளுமாறு நிர்மலா கேட்டிருந்தார். "இன்று நான் கோழிக்கறி சமைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு விட்டு உங்களின் தலைவரின் கோழிக்கறி போல் சுவையானதா என்று கூறுங்கள்" என்று நிர்மலா சங்கரிடம் வேடிக்கையாகக் கூறினார். ஏனென்றால், பிரபாகரனின் கோழிக்கறி பற்றி சீலன் பல தடவைகள் நிர்மலாவிடம் பேசியிருக்கிறார். நிர்மலா, சங்கரின் உணவுக் கோப்பையில் இரு கோழிக்கறித் துண்டுகளைப் பரிமாறியிருந்தார். முதலாவது துண்டினை சங்கர் சுவைக்க ஆரம்பிக்கும்போதே ராணுவத்தின் வருகை தொடர்பான ரஜனியின் கூக்குரல் அவர்களுக்குக் கேட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட சங்கர், பின்கதவூடாக வெளியேறி மதில் நோக்கி ஓடுகையிலேயே வீட்டின் பின்புறமாக ஓடிவந்த ராணுவக் கொமாண்டோ வீரனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். அவரது வயிற்றுப் பகுதியில் சன்னம் பாய்ந்தது. வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருக்க, அதனை ஒரு கையினால் அழுத்துப் பிடித்துக்கொண்ட சங்கர் ஓடத் தொடங்கினார். சுமார் மூன்று கிலோமிட்டர்கள் வரை ஓடி, தமது மறைவிடம் ஒன்றினுள் அடைக்கலமாகியபின்னர் தனது கைத்துப்பாக்கியை சகபோராளிகளிடம் கொடுத்துவிட்டு மயங்கிச் சரிந்தார் சங்கர். எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாதெனும் உறுதியும், தனது ஆயுதத்தை உயிரைக் கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும் என்கிற இயக்கத்தின் கொள்கையும் சங்கரை ஆட்கொள்ள கடுமையான இரத்த இழப்பிற்கூடாகவும் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தனது சகாக்களிடம் வந்து சேர்ந்திருந்தார். சங்கரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஆகவே, அவரைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்குக் கூட்டிச்சென்று மருத்துவ உதவியினைப் பெற்றுக்கொடுக்கும் சிரமமான பணி மூத்த போராளியான அன்டன் எனப்படும் சிவகுமாருக்குக் கொடுக்கப்பட்டது. அன்டன், சங்கரை தமிழ்நாட்டின் கோடியாக்கரை எனும் போராளிகளுக்கு மிகவும் பரீட்சயமான பகுதிக்கு படகுமூலம் பாதுகாப்பாகக் கொண்டுசென்றார். அங்கு, புலிகளின் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட சங்கருக்கு மருத்துவ உதவிகளை மருத்துவர் ஒருவரூடாகப் பெற்றுக்கொடுத்தார். பின்னர், மதுரைக்கு உடனடியாக சங்கரை அழைத்துச் சென்ற அன்டன், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். மதுரையில் சங்கரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தனர். புலிகளின் பயிற்சி முகாம்கள் ஒன்றில் அப்போது தங்கியிருந்த பிரபாகரனுக்கு சங்கரின் நிலைபற்றி அறிவிக்கப்பட்டது. உடனடியாக சங்கரைப் பார்க்க வந்தார் அவர். சங்கர் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அறையினுள் பிரபாகரன் நுழையும்போது பேபி சுப்பிரமணியமும் அங்கிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிகவும் துல்லியமாக அவர் என்னுடன் பின்னர் பேசியிருக்கிறார். பிரபாகரன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். சங்கரின் கைகளை தனது கைகளில் ஏந்திக்கொண்ட பிரபாகரன், அவற்றினை தனது கன்னங்களில் வைத்து அழுத்தினார். பின்னர் சங்கரின் கைகளை மெதுவாக அவரருகில் வைத்துவிட்டு, அவரின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, சங்கரின் தலையினை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். சங்கரின் தலைமுடியினை மென்மையாக பிரபாகரன் வருடிக்கொண்டிருக்க, சங்கர் அண்ணாந்து பிரபாகரனைப் பார்த்தார். தனது தலைவர் தன்னைப் பார்க்க வந்திருப்பதை சங்கர் அப்போதுதான் உணர்ந்துகொண்டார். சங்கரின் உதடுகள் "தம்பி, தம்பி, தம்பி" என்று முணுணுக்கத் தொடங்கின. பிரபாகரனுக்கு இயக்கத்தினுள் இருந்த செல்லப்பெயர் "தம்பி". ஆனால், அவரிலும் வயதில் குறைந்தவர்கள் கூட அவரைச் செல்லமாகத் தம்பி என்றே அழைத்தனர். சங்கர் பிரபாகரனைக் காட்டிலும் 6 வருடங்கள் இளையவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர் நெடுமாறன். இச்சம்பவம் தொடர்பான தத்ரூபமான விபரிப்பினை அவர் பல செவ்விகளிலூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அப்படியான ஒரு செவ்வியில், "அவர்கள் ஒருவரையொருவர் பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். அந்தப்பொழுதில் அவர்களின் மனங்களில் எவ்வாறான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை இலகுவில் கணித்துவிடமுடியாதிருந்தது. சங்கரை மிகவும் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் முகம் கூறிய ஒரே செய்தி, தயவுசெய்து எம்மை விட்டுப் பிரிந்துவிடாதே என்பதாக எனக்குத் தெரிந்தது" என்று அவர் கூறியிருக்கிறார். பிரபாகரனின் உடல்மொழி அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் என்பதைச் சொல்லியது. தனது முதலாவது போராளியின் மரணத்தை காண்பது அவரை மிகவும் வருத்தியிருந்தது. வெறும் 22 வயதே நிரம்பியிருந்த இளைஞர், வாழ்வின் சுகபோகங்களை தேசத்தினதும், இனத்தினதும் மீட்சிக்காகவும் கெளரவத்திற்காகவும் தியாகம்செய்து இன்று உயிரையும் கொடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்டு பிற்பாகரன் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். பிரபாகரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவரது கன்னங்களின் மேல் ஓடியது. சங்கரின் உயிர்விளக்குச் சிறுகச் சிறுக அணைந்துகொண்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும், தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது. மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது. பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது. மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார். தியோகுப்பிள்ளை 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன. முக்கியமான தகவல் "மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது". "மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். "அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது". "நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?" "ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார் ஜயதிலகராஜாவினாலேயே சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்". "இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார். "அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" என்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார். "ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார். "அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார். "சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார். "புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார். மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார். தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார். "என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார். "புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார். புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார். "நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர். இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார். அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார். உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர். "நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். MP5A3 - தானியங்கித் துப்பாக்கி
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிங்கராயரின் கைது மினிபஸ்ஸினைக் கைவிடுமுன்னர் அச்செழுப் பகுதியில் இயங்கிவந்த மெதடிஸ்த்த தேவாலயத்திற்கு ஓட்டிச் சென்ற மாத்தையா அங்கிருந்த கிறிஸ்த்தவ மதகுரு ஜயதிலகராஜாவைச் சந்தித்தார். தேவாலயத்தின் பின்னால் இருந்த மதகுருவின் வாசஸ்த்தலத்திற்குக் காயப்பட்ட போராளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். ஏனையவர்கள் அந்த மினிபஸ்ஸில் தமது முகாம் நோக்கிச் சென்றார்கள். முகாமின் அருகில் அவர்கள் இறங்கியபின்னர், போராளிகளில் ஒருவர் அதனை நவாலி வரை ஓட்டிச் சென்று விட்டுவிட்டு முகாம் திரும்பினார். காயப்பட்ட போராளிகளின் நிலையினை அவதானித்த மதகுரு ஜயதிலக்கராஜா, காயப்பட்ட போராளிகளையும், மாத்தையாவையும் தனது காரில் ஏற்றிக்கொண்டுபுத்தூர் மெதடிஸ்த்த வைத்தியசாலையில் பணிபுரிந்த தனது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜாவிடம் அழைத்துச் சென்றார். காயப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, கடுமையாகக் காயப்பட்டிருந்த சீலனின் உடலில் இருந்து பெருமளவு குருதி வெளியேறியுள்ளதால், அவர் தொடர்ச்சியாக வைத்தியர்களால் கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறினார். மேலும், சீலனைப் பரிசோதித்த ஜயகுலராஜா, சீலனின் முழங்காலில் ஐந்து குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருப்பதாக கூறினார். அவரது முழங்காலின் ஒரு பகுதியூடாக மூன்று சன்னங்கள் வெளியேறியிருக்கும் காயங்களைக் காட்டிப் பேசிய ஜயகுலராஜா, இன்னும் இரு சன்னங்கள் முழங்காலுக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறினார். அக்குண்டுகளை அறுவைச் சிகிச்சை ஒன்றின் மூலமே வெளியே எடுக்கமுடியும் என்கிற நிலையிருந்தது. ரகுவையும், புலேந்திரனையும் முகாமிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, சீலனை தனக்குத் தெரிந்த இன்னொரு வீட்டில் வைத்து பராமரிக்க முடியும் என்றும் கூறினார். ஆரம்பச் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியர் ஜயகுலராஜாவின் விடுதியில் தங்கவைக்கப்பட்ட சீலன், இரவானதும் வைத்தியருக்குப் பரீட்சயமான குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டார். ரஜினி திரணகம சீலனைப் பாதுகாப்பாக பராமரிக்க அனுப்பப்பட்ட வீடு, இலக்கம் 330, நாவலர் வீதி , யாழ்ப்பாணம் எனும் முகவரியை உடைய நிர்மலா நித்தியானந்தனின் வீடாகும். அக்காணியில் இரு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காணியின் மத்தியில் பெரிய வீடொன்றும், ஓரத்தில் இன்னொரு சிறிய வீடும் கட்டப்பட்டிருந்தது. நிர்மலா நித்தியானந்தன் மற்றும் அவரது கணவர் முத்துப்பிள்ளை நித்தியானந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றி வந்தவர்கள். அக்காணியிலிருந்த சிறிய வீட்டிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். நிர்மலா நித்தியானந்தனின் பெற்றோரான ராஜசிங்கம் தம்பதிகள் பெரிய வீட்டில் தங்கியிருந்தனர். நிர்மலா நித்தியானந்தன் நிர்மலாவின் வீட்டிற்கு அன்றிரவு சீலனை அழைத்துச் சென்ற வைத்தியர் ஜயகுலராஜா, நிர்மலாவையும், அவரது தங்கையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்தியராகக் கல்வி கற்றுவந்தவருமான ரஜனியையும் அழைத்து சீலனின் காயங்கள் பற்றியும், அவரது மருத்துவ தேவைபற்றியும் விளங்கப்படுத்தினார். நித்தியானந்தன் தம்பதிகள் பயன்படுத்திய இரட்டைக் கட்டிலில் சீலன் கிடத்தப்பட்டார். அவரது முழங்காலில் இருந்து இன்னமும் இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு இன்னொரு கண்டிப்பான கட்டளையினையும் ஜயகுலராஜா இட்டார். தானோ அல்லது ராஜனோ அன்றி வேறு எவரும் இவ்வீட்டினுள் அனுமதிக்கப்படக் கூட்டது என்பதே அது. இங்கே ராஜன் என்று அவர் கூறியது மாத்தையாவைத்தான். மாத்தையாவின் இளம்பராயப் பெயர் ராஜன் என்பது குறிப்பிடத் தக்கது. மாத்தையா வைத்தியர் ஜயகுலராஜாவிடமிருந்து மருந்துகளையும், அறிவுருத்தல்களையும் எடுத்துக்கொண்டு நிர்மலாவின் வீட்டிற்குச் சைக்கிளில் சென்றுவந்தார். ராஜசிங்கம் தம்பதிகள் தமது குடும்பத்தில் ஒருவரைப்போல சீலனைக் கவனித்து வந்தார்கள் நிர்மலாவும் அவரது கணவர் நித்தியானந்தனும். சீலனின் சிறுபராய வாழ்க்கையின் கஷ்ட்டங்களையும், போராட்டத்தின் மீது அவர் வைத்திருந்த அர்ப்பணிப்பையும் கண்டபோது அவர்மீது அவர்களுக்கு இரக்கமும், இனம்புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. தனது குடிகாரத் தந்தையாலும், வேலைவாய்ப்பின்றி சுற்றித் திரிந்த அண்ணனாலும் தனது சிறுபராயத்தில் ஏற்பட்ட கஷ்ட்டங்கள் குறித்து சீலன் அவர்களிடம் கூறியிருந்தார். தனது குடும்பத்தை தனது தாயாரே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கவனித்து வந்ததாகக் கூறிய சீலன், அவரைத் தனியே தவிக்கவிட்டு வந்ததற்காக மனம் வருந்துவதாகவும் கூறியிருந்தார். மேலும், புலிகள் இயக்கத்தில் சேர்வதற்காக மதகுரு சிங்கராயரே தனக்கு ஊக்கம் தந்ததாகவும் அவர் கூறினார். சீலனைப் பராமரித்து வந்த நிர்மலா, சீலனின் வலியைத் தடுக்கும் ஊசிகளைக் கேட்டபோது, சிங்கராயர் தனக்குத் தெரிந்த மருந்தகம் ஒன்றிலிருந்து அவற்றினைப் பெற்று மாத்தையாவிடம் வழங்கினார். நிர்மலாவிடமும், நித்தியானந்திடமும் பேசிய சீலன், தனது வீட்டின் ஏழ்மையினைப் போக்குவதைக் காட்டிலும், தமிழ் மக்களின் விடுவிற்காகப் போராடுவதே அவசியமானது என்று தான் நினைத்ததாலேயே தான் வீட்டை விட்டு வெளியேறி புலிகளுடன் இணைந்ததாகக் கூறினார். பிரபாகரன் போன்ற உன்னதமான தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுவது தான் அடைந்த பாக்கியம் என்று சீலன் கூறினார். "பிரபாகரன் ஒரு மேன்மையான தலைவர்" என்று சீலன் அவர்களிடம் அடிக்கடி கூறிக்கொள்வார். பிரபாகரனின் மேன்மை பற்றி விளக்குவதற்காக சீலன் ஒரு சம்பவத்தை அவர்களுக்குக் கூறினார். ஒருமுறை போராளி ஒருவர் வாந்தியெடுக்கும் நிலையில் இருந்தபோது, பிரபாகரன் தனது கைகள் இரண்டையும் சேர்த்து அவற்றிற்குள் வாந்தியெடுக்கும்படி அந்தப் போராளியிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதனைச் செய்ய அப்போராளி தயங்கியபோது, "நாம் தோழர்கள், நீ தயங்காது வாந்தியெடு" என்று பிரபாகரன் அப்போராளிக்குத் தைரியமூட்டியதாக சீலன் அவர்களிடம் கூறினார். வலதுபக்கத்தில் சரத் முனசிங்க பின்னாட்களில் பயங்கரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் நிர்மலாவும், அவரது கணவர் நித்தியானந்தனும் ராணுவத்தால் குருநகர் முகாமில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இதுகுறித்து நிர்மலா சரத் முனசிங்கவிடம் கூறியிருக்கிறார். முனசிங்க தான் 2000 இல் எழுதிய "ஒரு ராணுவ வீரரின் பார்வையிலிருந்து" எனும் புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தனது புத்தகத்தின் இறுதி நகலை என்னிடம் படித்துப் பார்த்துக் கூறுங்கள் என்று முனசிங்க என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவரிடமிருந்து பல தகவல்களை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் மேற்கொண்ட விசாரணை, மீசாலை பகுதியில் அவர் நடத்திய தேடுதலின்போது ஏற்பட்ட சீலனின் மரணம், திருநெல்வேலித் தாக்குதல் ஆகியவை தொடர்பான பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்தது. சீலன் தன்னிடம் கூறிய போராளி ஒருவரின் வாந்திபற்றிய சம்பவத்தை நிர்மலா முனசிங்கவிடம் விபரிக்கும்போது குறுக்கிட்ட முனசிங்க, "உங்களின் சீலனை நான் விரைவில் பிடிப்பேன்" என்று கூறவும், "தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் உயிருடன் பிடிக்க முடியாது" என்று நிர்மலா கூறியிருக்கிறார். அன்டன் சின்னராசா பிலிப் சீலன் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின், கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலாவின் வீட்டைத் தாம் சோதனையிட்டதாக முனசிங்க என்னிடம் கூறினார். தாம் தற்செயலாகவே சீலனை நித்தியானந்தன் தம்பதிகள் பராமரித்து வருவதை தெரிந்துகொண்டதாகக் கூறினார். ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படி இரு கத்தோலிக்கப் பாதிரியார்களான சிங்கராயரும், சின்னராசாவும் புலிகளின் பிரச்சார வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருவதையும் , அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கவனித்துவருவதையும் தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். ஆகவே இவர்கள் இருவரையும் ராணுவப் புலநாய்வுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதல் சீலன் இராணுவ புலநாய்வுத்துறையினரின் செயற்பாடுகளை ஜெயார் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும், 1981 ஆம் ஆண்டிலிருந்து பிரிகேடியர் சிறில் ரணதுங்கவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த புலநாய்வுத்துறை திறமையாகவே செயற்பட்டு வந்தது. புலநாய்வுத்துறையினை சீரமைக்க கப்டன் முனசிங்கவை சிறில் ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த மூத்த புளொட் உறுப்பினர்கள் மூலம் பெருமளவு தகவல்களை புலநாய்வுத்துறை பெற்றிருந்தது. தமக்குத் தகவல்களை வழங்கும் புளொட் உறுப்பினர்களுடன் மிகவும் சிநேகமாக சிறில் ரணதுங்க நடந்துகொண்டார். ஜெயவர்த்தன யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, மூன்று மூத்த புளொட் உறுப்பினர்களை யாழ் குருநகர் முகாமில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூவரும் அன்டன், அரங்கநாயகம், அரபாத் ஆகியோராகும். தாம் பங்கெடுத்த கொலைகள், கிளிநொச்சி மக்கள் வங்கி உட்பட வங்கிக்கொள்ளைகள் பற்றிய பல விபரங்களை இவர்கள் மூவரும் ராணுவத்திற்கு வழங்கியிருந்தனர். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தின் பூஞ்செடிகளைப் பராமரிப்பதற்கு இவர்கள் மூவரையும் சிறில் ரணதுங்க பாவித்து வந்தார். ஐப்பசி 26 ஆம் திகதி, ரணதுங்கவின் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் இவர்கள் மதின்மேல் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால், அன்டனும் அரங்கநாயகமும் மூன்று மணிநேரத்தில் பொலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டபோதும் அரபாத் தப்பிச் சென்றுவிட்டார். அன்றிரவு குருநகர் முகாமில் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்திவிட்டுக் காலை 5:30 மணியளவில் கலைந்து செல்லும் தறுவாயில் அவர்களுக்குச் செய்தியொன்று வந்திருந்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறியது. ஆகவே, அரபாத்தைக் கைதுசெய்யும் தமது எண்ணத்தை அப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அனைவரும் சாவகச்சேரி நோக்கி விரைந்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கிடையில், சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாம் வந்த மினிபஸ்ஸிலேயே தப்பிச் சென்றுவிட்டது புலிகளின் தாக்குதல் அணி. இத்தாக்குதலை விசாரித்த பொலீஸாரும் ராணுவத்தினரும் இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, வெறும் 15 நிமிடங்களிலேயே திறமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். கார்த்திகை 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயிலில் மீசாலையில் ஏறிக்கொண்ட அரபாத்தை பணிமுடிந்து வீடு செல்லும் ராணுவத்தினர் கைதுசெய்தனர். அன்டனும், அரங்கநாயகமும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின்போது சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். சாவகச்சேரி பொலீஸ் நிலையம் இரு மாடிகளைக் கொண்டது. சாவகச்சேரியூடாகச் செல்லும் பிரதான வீதியான கண்டி வீதியில் இப்பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. 1981 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் புளொட் அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரவு பகலாகக் காவல் போடப்பட்டிருந்தது. ஐப்பசி 27 ஆம் திகதி இரவு இரு கொன்ஸ்டபிள்களான கருனநாதனும், கந்தையாவும் காவலுக்கு நின்றார்கள். அவர்கள் இருவரிடமும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளே இருந்தன. ரிப்பீட்டர் ரக துப்பாக்கி இத்தாக்குதலுக்கான திட்டத்தினை சீலன் மிகவும் திறமையாக வகுத்திருந்தார். இப்பொலீஸ் நிலையத்திற்கு இருமுறை சென்றிருந்த சீலன், பொலீஸ் நிலையத்தின் உள்ளமைப்பையும், கட்டிடங்களின் விபரங்களையும் அவதானித்திருந்தார். பொலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிவிலியன் ஒருவரின் ஊடாக ஆயுதங்களையும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் பாதுகாப்பாக வைக்கும் பகுதிபற்றிய விபரங்களையும் அவர் அறிந்துகொண்டார். சந்தோசமும் புலேந்திரனும் "தாக்குதலுக்கான எமது இலக்கு நோக்கி நாம் செல்லுமுன், பொலீஸ் நிலையம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். எமது தாக்குதல் அணியை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்ட நாம், ஒவ்வொரு பிரிவுக்கும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்துமுடித்தோம். எனக்கும் சங்கருக்கும் வழங்கப்பட்ட பணி பொலீஸார் தங்கியிருக்கும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பொலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்துவது" என்று இத்தாக்குதலில் பங்குகொண்டவரும் எனது ஊரான அரியாலையினைச் சொந்த இடமாகவும் கொண்டவருமான சந்தோசம் என்னிடம் கூறினார். அவரது தந்தையாரான கணபதிப்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். சீலனும் ரகுவும் இணைந்து ஒரு அணியை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி, காவலுக்கு நிற்கும் பொலீஸார் மீது தாக்குதல் நடத்துவது, முதலாவது மாடியில் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிகளை அழிப்பது பின்னர் பொலீஸாரின் உறங்கும் விடுதியில் இருக்கும் பொலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது. சந்தோசமும் சங்கரும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் பொலீஸாரின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பஷீர் காக்கவுக்கும், மாத்தையாவுக்கும் கொடுக்கப்பட்ட பணி, பொலீஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. புலேந்திரனுக்கும் அருணாவுக்கும் வழங்கப்பட்ட பணி, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், காயப்பட்ட போராளிகளையும் வாகனத்திற்குக் கொண்டுவருவது. "நாங்கள் அனைவரும் நன்கு பராமரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றைப்போல் ஒருங்கிணைந்து இயங்கினோம்" என்று சந்தோசம் கூறினார். 29 சிறி 7309 எனும் இலக்கத் தகடுடைய மிட்சுபிஷி ரோசா மினி பஸ்ஸை அருணாவும் புலேந்திரனும் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஐப்பசி 25 ஆம் திகதி கோப்பாயில் வசித்துவந்த பஸ் ஓட்டுநரான தவராஜாவைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஐப்பசி 27 ஆம் திகதி தில்லையம்பலம் கோயிலிக்குச் செல்வதற்காக பஸ் ஒன்று தேவைப்படுவதாகக் கூறியதுடன், முற்பணமாக 100 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு இருபாலையில் இருக்கும் வீடொன்றிற்கு தம்மை வந்து ஏற்றும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள். தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தவராஜா பேசும்போது, தன்னிடம் வந்து பஸ்ஸை ஒழுங்குசெய்தவர்கள் கூறியபடி இருபாலையில் இருந்த வீடொன்றிற்கு தானும் தனது உதவியாளர்களும் சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் தம்மை இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களின் கண்களைக் கட்டிய புலிகள், அன்றிரவு கோப்பாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார். சாவகச்சேரித் தாக்குதலுக்காக எட்டுப் புலிகள் பயணமானார்கள். சீலன், மாத்தையா, அருணா, சங்கர், புலேந்திரன், ரகு, சந்தோசம் மற்றும் பஷீர் காக்கா ஆகிய எண்மருமே அவர்களாவர். அவர்களிடம் ஒரு எஸ் எம் ஜி துப்பாக்கியும், ஒரு ஜி 3 துப்பாக்கியும், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியும், இரு சுழற்துப்பாக்கிகளும் சில கைய்யெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. எஸ் எம் ஜி துப்பாக்கி ஜி 3 துப்பாக்கி காலை 5:30 மணியளவில் அவர்கள் பயணம் செய்த மின்பஸ் சாவகச்சேரி பொலீஸ் நிலையப் பகுதியை அடைந்தது. பொலீஸ் நிலையத்தின் முன்னால் பஸ் வந்ததும், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பஸ்ஸிலிருந்து குதித்த சீலனும் ரகுவும் காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் நடத்தினர். கருனநந்தன் அவ்விடத்திலேயே விழுந்து உயிர்விட்டார். ஆனால், சில மீட்டர்கள் பின்னால் ஓடிச்சென்ற கந்தையா, முழங்காலில் இருந்து தனது ரிப்பீட்டர் துப்பாக்கியால் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஆனால், அவரை முந்தி ஓடிச்சென்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர் அவர்பக்கம் திரும்பி அவரைச் சுட்டுக் கொன்றார். சீலனும், ரகுவும் பொலீஸ் நிலையத்தின் முதலாவது மாடிக்கு ஓடிச் சென்றார்கள். அங்கிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை அவர்கள் அழித்தார்கள். பின்னர், மாடியில் இருந்த பொலீஸாரின் தூங்கும் அறைக்குச் சென்றார்கள். அவ்வேளை அங்கு 6 பொலீஸார் இருந்திருக்கிறார்கள். கட்டிலின் கீழே ஒளித்திருந்த பொலீஸ் சாரதி திலகரத்னமீது சீலன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தாக்குதல் ஆரம்பமானதையடுத்து மாடியிலிருந்து குதித்துத் தப்பிச்செல்ல கொன்ஸ்டபிள் ஜயதிலக்க முயன்றபோது, அவரது கால் முறிந்தது. இன்னொருவர் தனது கட்டிலின் கீழே ஒளிந்துகொண்டதால் புலிகளின் பார்வையிலிருந்து தப்பிவிட்டார். தன்னுடன் சுழற்துப்பாக்கியொன்றை வைத்திருந்த கொன்ஸ்டபிள் வீரக்கோன் கதவொன்றின் பின்னால் மறைந்து நிலையெடுத்துக்கொண்டு சீலனும் ரகுவும் மாடியில் இருந்து கீழிறங்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவர்கள் இருவர் மீதும் சூடு வீழ்ந்தது. சீலனின் முழங்காலினூடாக சன்னம் பாய அவர் கீழே விழுந்தார். ரகுவின் வலது கையில் சன்னம் பட்டு எலும்பு முறிந்தது. பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொலீஸாரின் விடுதி நோக்கி ஓடிச்சென்ற சந்தோசமும், சங்கரும், ஆயுத அறையைக் காப்பற்ற பொலீஸார் வராது தடுத்தனர். ஆனால், அவர்கள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தை எத்தனிக்கவில்லை. அங்கிருந்த பொலீஸார் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து அங்கேயே ஒளிந்துவிட்டார்கள். ஆயுதவறையினை உடைத்த மாத்தையாவும் பஷீர் காக்காவும் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர். சீலன் மீதும் ரகு மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதையும், அவர்கள் இருவரும் அலறுவதையும் கேட்ட அருணாவும் புலேந்திரனும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோக்கி ஓடிச் சென்றனர். கீழே வீழ்ந்திருந்த சீலனை அருணா மினிபஸ்ஸிற்குக் கொண்டுவர, மறைந்திருந்து வீரக்கோன் மீண்டும் தாக்க, புலேந்திரனின் தோற்பட்டையில் சூடுபட்டது. காலைவேளையில் நடத்தப்பட்ட துணிகரமான இத்தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர். உடுவிலைச் சேர்ந்த கருனநாதன், மிருசுவில்லைச் சேர்ந்த கந்தையா, கேகாலையைச் சேர்ந்த திலகரத்ன ஆகியோரே அந்த மூவரும் ஆகும். மேலும் இத்தாக்குதலில் சார்ஜன்ட்கந்தையா, கொன்ஸ்டபிள் ஜயதிலக்க மற்றும் சிவில் பணியாளர் கந்தையா செல்வம் ஆகியோரும் காயப்பட்டனர். இவர்களுள் சிவில் பணியாளரான கந்தையா செல்வம் பின்னர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார். .303 ரைபிள் 0.38 சுழற்துப்பாக்கி இத்தாக்குதலின்போது புலிகள் இரு உப இயந்திரத் துப்பாக்கிகளையும், ஒரு 0.38 சுழற்துப்பாக்கியையும், ஒன்பது 0.303 ரைபிள்களையும், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகளையும் கைப்பற்றிச் சென்றனர். மொத்தத் தாக்குதலுமே 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டதோடு, புலிகள் தாம் வந்த மினி பஸ்ஸிலேயே மீசாலை நோக்கித் தப்பிச் சென்றனர். பின்னர், அந்த மினிபஸ் கைவிடப்பட்ட நிலையில் நவாலிப் பகுதியில் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல் சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த விவசாயக் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார். வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள். காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும். புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார். முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது. காரைநகர் பொன்னாலை வீதி புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார். வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன. தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான் கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி. முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர். செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது. யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல் ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார். முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார். அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார். ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார். ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தாக்குதலில் இறங்கிய புலிகள் நெல்லியடித் தாக்குதல் சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தை ஒத்த படையொன்று தனக்கும் அமையவேண்டும் என்ற பிரபாகரனின் விருப்பம் இயல்பானதே. ஏனென்றால், அவர் தனக்கு விசுவாசமான போராளிகளை தன்னுடன் சேர்த்து வைத்திருந்தார். சுமார் 25 போராளிகள் நன்கு பயிற்றப்பட்ட நிலையில் தமது அச்சுவேலி முகாமில் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள். ஜெயவர்த்தனவின் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் கடற்படைக்கும் அவர்களின் பாணியிலேயே பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாத்தையாவின் தலைமையில் தயாராகிய புலிகளின் தாக்குதல் அணி, மூன்றுவகையான கெரில்லாப் போர்த் தந்திரங்களைப் பரீட்சித்துப் பார்த்திருந்தது. பதுங்கியிருந்து தாக்குவது, கண்ணிவெடிகளை வெடிக்கவைத்துத் தாக்குவது மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்குவது ஆகியவையே அவர்கள் பரீட்சித்துப் பார்த்தவை. இதற்கான பயிற்சிகளை அவர்கள் ஆடி 2 ஆம் திகதி முதல் ஐப்பசி 27 வரையான காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தனர். இதற்கு முன்னர், சீலன் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 ஆம் திகதி ராணுவத்தினர் மீது நடத்தியிருந்த தாக்குதலைத் தவிர, புலிகள் பெரும்பாலும் பொலீஸ் பரிசோதகர்கள், உளவாளிகள், பொலீஸாரோடு சேர்ந்து இயங்குபவர்கள் மீதே தமது தாக்குதல்களை நடத்தி வந்திருந்தார்கள். ஆனால், புலிகளின் தற்போதைய அணி புதிய தாக்குதல் உத்திகளைப் பரீட்சித்துப் பார்த்ததுடன், குறுகிய நேரத்தில் எதிரிக்கு அதிக இழப்பினை ஏற்படுத்தும் தாக்குதல் முறைகளையும் பரீட்சித்திருந்தார்கள். மறைந்திருந்தும் தாக்குதலுக்கு பொறுப்பாக ஷங்கர் நியமிக்கப்பட்டார். கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு செல்லக்கிளி பொறுப்பாக நியமிக்கப்பட்டதோடு, சீலன் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஷங்கர், செல்லக்கிளி, சீலன் ஆகிய போராளிகள் பிரபாகரனால் புத்திசாதூரியம் கொண்டவர்களாகவும், துணிந்தவர்களகவும், செயற்திறன் மிக்கவர்களாகவும் கணிக்கப்பட்டிருந்தனர். செல்வச்சந்திரன் சத்தியநாதன் - ஷங்கர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அண்மையில் இருக்கும் கம்பர்மலையில் ஆசிரியிரகாப் பணியாற்றிவந்த செல்வச்சந்திரன் அவர்களின் புத்திரனே ஷங்கர் என்று அழைகப்பட்ட சத்தியநாதன் ஆகும். சுரேஷ் என்றும் அழைகப்பட்ட ஷங்கருக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். கம்பர்மலை பொதுநூலகத்திற்கு அருகிலிருந்த பண்டிதரின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தூரத்தில் ஷங்கரின் வீடு அமைந்திருந்தது. பண்டிதரோடு ஒன்றாகப் படித்துவந்த ஷங்கர், தனது 20 ஆம் வயதில் புலிகளோடு தன்னை இணைத்துக்கொண்டார். ஷங்கர்,1961 ஆம் ஆண்டு ஆனி 19 ஆம் திகதி பிறந்தார். 1981 ஆம் ஆண்டு சென்னையில் வாழ்ந்துவந்த ஷங்கரை பொலீஸார் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பிரபாகரன் 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பிவைத்தார். புலிகள் இயக்கத்தின் நற்பெயரையும், சரித்திரத்தினை உமா மகேஸ்வரன் உரிமைகோறுவதை தடுத்து நிறுத்துவதற்கு, புலிகள் பாரியதொரு தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்று பிரபாகரன் விரும்பிமார். ஆனைக்கோட்டை பொலீஸ்நிலையம் மீதான தாக்குதல், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் புளொட் அமைப்புப் பற்றியும் தமிழ் மக்கள் பேசத் தொடங்கியிருந்தனர். 1981 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து சீலனின் பெயர் பிரபலமாகி வந்ததையடுத்து, ஷங்கருக்கும் வாய்ப்பொன்று அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மறைந்திருந்து தாக்கும் திட்டத்தை வகுத்தார். வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றி இரவு ரோந்தில் ஈடுபடும் பொலீஸ் அணிமீது தாக்குவதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சுமார் ஒருவாரகாலமாக இந்த இரவுநேரப் பொலீஸ் ரோந்து அணியின் நடமாட்டங்களை அவதானித்து வந்த ஷங்கரும் அவரது தோழர்களும், நெல்லியடிச் அந்திக்கு அண்மையாக அமைந்திருந்த ஆளரவமற்ற பகுதியில் தமது தாக்குதலை நடத்துவதென்று முடிவெடுத்தார்கள். அன்றிரவு ஷங்கரும், அவரது தோழர்களும் வீதியின் இருமருங்கிலும் மறைந்துகொண்டு பொலீஸ் ரோந்து அணிக்காகக் காத்திருந்தனர். சுமார் 7:30 மணியளவில் தொலைவில் தெரிந்த பொலீஸ் வாகனத்தின் விளக்குவெளிச்சத்தைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. தனது தோழர்களை நிலையெடுத்து ஆயத்தமாகுமாறு ஷங்கர் பணித்தார். பொலீஸாரின் ஜீப் வண்டி அவர்கள் மறைந்திருந்த பகுதிக்கு அண்மையாக வந்தபோது, ஷங்கர் வாகனத்தை ஓட்டிவந்த கொன்ஸ்டபிள் ஆரியரத்ன மீது துப்பாக்கியால் சுட்டார். அவரின் தலையைத் துளைத்துக்கொண்டு சன்னம் பாய, வாகனத்தின் தடுப்புக்களை பலமாக அழுத்திக்கொண்டே அவர் சாய்ந்து உயிர்விட்டார். கடுமையாக அதிர்ந்துகொண்டு ஓய்விற்கு வந்தது பொலீஸாரின் ஜீப் வண்டி. வாகனத்திலிருந்த ஏனைய பொலீஸார் சுதாரிக்கு முன், மீண்டும் அவர்களை நோக்கிச் சுட்டார் ஷங்கர். வாகனத்திலிருந்த கொன்ஸ்டபிள் குணபாலா கொல்லப்பட, மீதமிருந்தவர்களில் அருந்தவராஜா, மல்லவராச்சி ஆகிய பொலீஸ் கொன்ஸ்டபிள்களை ஷங்கரின் தோழர்கள் சுட்டுக் கொன்றனர். சாரதிக்கு அருகில் அமர்ந்துந்த பொலீஸ் பரிசோதகர் திருச்சிற்றம்பலம், மற்றும் கொன்ஸ்டபிள்கள் சிவராஜா , ஆனந்த ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். பொலீஸாரிடமிருந்த துரிதகதியில் ஆயுதங்களை களைந்த புலிகள், வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றினை மறித்து, சாரதியையும் பயணியையும் இறக்கிவிட்டு, அதில் ஏறித் தப்பிச் சென்றனர். வழமைபோல, இத்தாக்குதலுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது இலங்கைப் பொலீஸ் படை. நெல்லியடி, அல்வாய், வதிரி, கரவெட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் எரித்த பொலீஸார், அப்பகுதியிலிருந்து சந்தேகத்தின் பேரில் 20 இளைஞர்களையும் இழுத்துச் சென்றனர். பொலீஸார் மீது நெல்லியடியில் புலிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மறுநாளே அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் அறிக்கையொன்றினை வெளியிட்டனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் தலைவர்களால் விடுக்கப்பட்ட கண்டனத்தை அமைச்சர் சிறில் மத்தியூ வரவேற்றிருந்தார். தாம் ஒருபோதும் வன்முறையினை ஆதரிக்கப்போவதில்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணி கூற, "பயங்கரவாதிகளின் வன்முறைகளை கண்டித்தமைக்கு நன்றி" என்றி சிறில் மத்தியூ அவர்களைப் பாராட்டினார். சிறில் மத்தியூவின் இந்த பாராட்டுதல்கள் வழமையானதாகத் தெரிந்தாலும், போராளிகளுக்கும் முன்னணியினருக்கும் இடையே உருவாகி வந்த பிளவினை ஆளமாக்கும் ஜெயாரின் கைங்கரியமே இதன்பின்னாலும் இருந்தது என்றால் அது மிகையில்லை.