Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. பாராளுமன்றத்தை நீட்டிக்க ஜெயார் தீட்டிய சதி அடுத்தபடியாக, தனது திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளவைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் ஜெயார். அரச ஊடகங்களான லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியன ஜெயாரின் இத் திட்டத்திற்காக செயலில் இறக்கப்பட்டன. கார்த்திகை 2 ஆம் திகதி அவற்றிற்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தலின்படி மறுநாள் அரசால் வெளியிடப்படவிருக்கும் அறிவிப்புக்களுக்கு இவ்வூடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டது. கூறப்பட்டதன்படி, கார்த்திகை 3 ஆம் திகதி இந்த ஊடகங்களில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியானது. அந்த அறிவித்தல் ஜனாதிபதி ஜெயாரின் கையொப்பத்தோடு வெளிவந்திருந்தது. "1982 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி எனக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை தாங்கியவர்களும், அக்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுமான சிலர் என்னையும், அமைச்சர்கள் சிலரையும் மற்றும் திரு அநுர பண்டாரநாயக்க, பாதுகாப்புப் படைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளைப் படுகொலை செய்யவும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, இவர்களின் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் ஏற்படுத்தி, தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவாறு அரசியலமைப்பை முற்றாக நிராகரித்துவிடவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்". "இந்தக் கயவர்களின் முயற்சி கைகூடுவதனை அனுமதிப்பதா அல்லது எனக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஜனாதிபதி எனும் அதிகாரத்துடன், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்று, மக்களுக்கான நற்திட்டங்களை தொடர்வதற்கான மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதா என்பதுபற்றி தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இக்கயவர்களை நான் பாராளுமன்றத்தில் நுழைய அனுமதித்தால், நடைமுறையில் இருக்கும் ஜனநாயக விழுமியங்களை இவர்கள் அழித்துவிட முயல்வதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நக்சலைட்டுக்கள் பாணியிலான அரசாங்கத்தையும் இவர்கள் உருவாக்கி விடுவார்கள்". "மேலும், ஜனநாயக வழிகளில் தொழிற்பட விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்குள் தமது அதிகாரத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்" "ஆனால், நான் இன்று பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமிடத்து, கடந்த ஐப்பசி 20 ஆம் திகதி நிலவரப்படி எனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 196 ஆசனங்களில் 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி 68 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயகவிரோத, வன்முறையினை விரும்பும் நக்சலைட் அமைப்பாக இருப்பதை நான்விரும்பவில்லை. ஆனால், ஐப்பசி 29 இல் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அவ்வாறான வன்முறைவிரும்பும் ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்தது. ஆகவேதான், பொதுதேர்தல் ஒன்றினை நடத்தி, வன்முறையாளர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதைக் காட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தைத் தொடரலாம் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்" என்று ஜெயாரின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ 1982 குற்றவியல் விசாரணைத் திணைக்களம் இந்த நக்சலைட் சதிபற்றி விசாரிக்க அழைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவும் இன்னும் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவவும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டார். விஜய குமாரதுங்க "கிழட்டு நரியொன்று தன்னையும் தனது கொலைகாரக் கூட்டத்தையும் தனது அரசியல் எதிரிகள் கொல்லத் திட்டமிடுவதாக தானே ஒரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றி வந்ததாம்" என்கிற வகையில் ஜெயாரின் பித்தலாட்டங்கள் குறித்து வதந்திகளும், நகைச்சுவைக் கதைகளும் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தன. தனது சதிக் கோட்பாட்டை உண்மையென்று நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியின் தலைமைப்பீடத்தின் சில பெயர்களையும் ஜெயார் வெளியிட்டார். மேலும், எதிர்கட்சியை வழிநடத்திய மேன்மைதங்கிய பெண்மணியும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். தான் திட்டமிட்டபடியே சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பது உறுதிப்படுத்தப்படும்வரை எதிர்க்கட்சி மீதான கைதுகளையும், விசாரணைகளையும் ஜெயார் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். கொழும்பு அரசியலின் நகைச்சுவைகளுக்கு அப்பால், விஜய குமாரதுங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயாரின் சூழ்ச்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆகவே அவரையும், அவர் சார்ந்தவர்களையும் கைதுசெய்து அடைத்துவைக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலகம் கடுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த மாவட்ட மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இவர்களும் கொலைச்சதி பற்றிக் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தேர்தல் நாள் கடந்து சென்றவுடன், இவர்கள் அனைவர் மீதிருந்த விசாரணைகளையும் பொலீஸார் நிபந்தனையின்றி கைவிட்டுச் சென்றனர்.
  2. சர்வஜன வாக்கெடுப்பு ஜெயாருடன் அமைச்சர்களும், ரோகண விஜேவீரவும் குட்டிமணியை தனது கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு தாம் எடுத்த முயற்சி கடுமையான கணடங்களையும், பின்னடைவையும் சந்தித்திருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்தில் இன்னுமொரு நடவடிக்கையினையும் ஜெயவர்த்தனா செய்தார். அதுதான் 1983 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருந்த பாராளுமன்றத் தேரெதல்களுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தப்போவதாக அவர் விடுத்த அறிவிப்பு. தனது இரண்டாவது ஜனாதிபதிக் காலத்திற்கான பதவியேற்பினை மாசி மாதம் 4 ஆம் திகதிவரை தாமதப்படுத்தியதன் மூலம், ஜெயார் மேலும் மூன்றரை மாதங்கள் தனது முதலாவது ஜனாதிபதிக் காலத்தை நீட்டித்துக்கொண்டார். தனக்கு பாராளுமன்றத்தில் அன்றிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை தனது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் முழுவதற்கும் அனுபவிக்க அவர் விரும்பினார். அநுராதபுரத்தில் ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஜெயவர்த்தன, தனது திட்டம்பற்றி முதன்முதலாக சில தகவல்களை வெளியிட்டார். "இனிவரும் பத்தாண்டுகளுக்கான இலங்கையின் வாக்காளர் வரைபடத்தினை நான் வெளியிட விரும்புகிறேன்" என்று ஜெயார் கூறியபோது பலருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ஆனால், இப்படிக் கூறியதன் மூலம் தான் அனுபவித்துவந்த பாராளுமன்றம் ஊடான பலத்தினை அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க விரும்பியிருந்தார் என்பதை அவருடன் இருந்த வெகு சிலரே உணர்ந்திருந்தனர். தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் தனது திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார் ஜெயார். வழமைபோல தனக்கு விசுவாசமான அமைச்சர்களில் ஒருவரைக் கொண்டு இதனை அவர் ஆரம்பித்து வைத்தார். இம்முறை அவர் அனுப்பிய ஆள், பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஆவார். ஜெயாரின் கட்டளைப்படி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான ஆதரவு தமக்கு வேண்டும் என்பதால், நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு மக்கள் ஆணையொன்று கேட்கப்படும் என்றும் பிரேமதாசா அறிவித்தார். பிரேமதாசவின் ஆலோசனைகளை அன்று பின்னேரமே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமனதாக ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரேமதாசாவின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்டு தமது திகதியிடப்படாத இராஜினாமக் கடிதங்களை கையளிக்க ஒத்துக்கொண்டதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தினை மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிப்பதையும் ஏற்றுக்கொண்டனர். பாராளுமன்றக் குழுவினருடன் பேசிய ஜெயார், திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் தேவையேற்படும்போது பின்னொரு காலத்தில் பாவிக்கப்படும் என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத கடிதங்கள் பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதுடன், இவற்றின்மூலம் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் , அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தையும் ஜெயார் நிலைநாட்டிக்கொண்டார்.
  3. மன்னிக்க வேண்டும் நிழலி, நான் அப்படிக் குறிப்பிட்டிருக்கக் கூடாது. எனக்கு அவ்வப்போது கருத்தெழுதும் நண்பர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். அதற்காக ஏனையவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. நிச்சயமாகப் பலர் வாசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை எனது கருத்துப் பாதித்திருந்தால், உங்களிடமும், ஏனையவர்களிடமும் மீண்டுமொருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நட்புடன், ரஞ்சித்
  4. நிறுத்திவிடும் எண்ணமில்லை வசி. எனக்கிருக்கும் கவலை இத்தொடரினை சபாரட்ணம் அவர்கள் முழுமையாக எழுதமுன்னரே அவரும் இறையடி சேர்ந்ததும், எமது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டதும்தான். அதற்காக, நடந்தவற்றை பதிவிடாமல் இருக்கமுடியுமா? ஆகவே, நிச்சயம் அவர் எழுதிச் சென்றதை இங்கு பதிவேன். நேரம் ஒரு பிரச்சினைதான், ஆனால் செய்யாமலும் இருக்க முடியவில்லை. மீண்டும் எனது நன்றி வசி!
  5. முதலில் உங்களின் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வசி, நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம். சட்டர்டே ரிவியூ எனது தந்தையார் அடிக்கடி அலுவலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரு பத்திரிக்கை. ஆங்கிலம் என்கிறபடியினால், அது அரசு சார்புப் பத்திரிக்கையாக இருக்கும் என்றே எண்ணிவந்தேன். மேலும், போராட்ட இயக்கங்களுக்கெதிரான, அரசுக்குச் சார்பான எனது தந்தையாரின் மனோநிலையும் நான் இந்த முடிவிற்கு வர இன்னுமொரு காரணம். நீங்கள் கூறியபடி விக்டர் ஐவன் ஒரு சிங்கள இடதுசாரிப் பத்திரிக்கையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலைக் கொண்டவர். இந்த ஆவணம் எப்படியிருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தலைவர் பற்றி எழுதப்படுவதால் எதையுமே யோசிக்காது ஆரம்பித்து விட்டேன். ஆனால், தொடர்ந்தும் எழுதும்போதே, இது தலைவர் பற்றி மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய அரசியல்த் தலைவர்கள், அன்றிருந்த சூழ்நிலைகள் , அரச அடக்குமுறை பற்றியும் பேசுகிறது. ஆகவே, தொடர்ந்தும் எழுதுகிறேன். உங்களின் அரசியல் ஆர்வமும், பொருளியல்த்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அறிவும் அற்புதமானது. தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம். மீண்டும் உங்களின் ஊக்கம்தரும் கருத்திற்கு நன்றி !
  6. நன்றியண்ணா. நாம் பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. எமது விடுதலை சாத்தியமாகும்போது எமது மக்களுக்காககப் போராடியவர்களின் பெயர்களோடு இவர்களின் பெயர்களும் எமது வரலாற்றில் இடம்பெறவேண்டும். பார்க்கலாம்.
  7. துப்பாக்கித் தாக்குதல் தொடர்பான சமூகப் பிரச்சினை அமெரிக்காவில் பெரியளவில் நடந்துவருகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 1.5 துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்கள் நடந்துவருகின்றன. இதற்கான காரணமாக அமெரிக்காவில் இன்றுவரை இருந்துவரும் துப்பாக்கிப் பாவனை தொடர்பான சட்டங்களே பலராலும் குற்றஞ்சுமத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இயங்கிவரும் பல ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் சம்மேளமான நஷணல் ரைபிள் அசோஷியேஷன் எனும் அமைப்பு மிகவும் பலம் வாய்ந்தது. அரசியல் மற்றங்களை ஏற்படுத்துவது, ஜனாதிபதிகளைத் தீர்மானிப்பது போன்ற மிகவும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தி வருகிறது. தமது உற்பத்திகளுக்கான சந்தையினை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள இந்த அமைப்பு அரசியலில் தனது பொம்மைகளை தொடர்ச்சியாக இறக்கிவிட்டு வருகிறது. இன்றிருக்கும் குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பதோடு, இவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு பணத்தினை இந்த அமைப்பு வாரியிறைத்தும் வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ் சீனியர், டொனால் டிரம்ப், சாரா போலின் உள்ளிட்ட பலர் இவ்வமைப்பின் உறுப்பினர்கள். இவர்களை அரசியலின் உச்சத்தில் தக்கவைப்பதன் மூலம் தனது நலன்களை இவ்வமைப்பு காத்து வருகிறது. நேற்று அலபாமாவில் நடைபெற்ற பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அலபாமா மாநில ஆளுநரான எலன் ஐவி எனும் பெண்மணி, இந்த அமைப்பினரால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பது பலரும் அறிந்த உண்மை என்பதுடன் இவர் ஆட்சிக்கு வந்தபின்னர் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, கைத்துப்பாக்கிகளை தனது மாநிலத்தில் எவரும் தாராளமாக எடுத்துச் செல்லலாம் எனும் நிலையினை உருவாக்கினார். மேலும், இதுதொடர்பான அரச விளம்பரங்களில் தானே தோன்றி மக்கள் துப்பாக்கிகளை வெளிப்படையாகக் கொண்டு செல்வதை ஊக்குவித்தார். இன்றுவரை அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கு எதிராக நிற்பது குடியரசுக் கட்சியும், அதன் பின்னால் நிற்கு ஆயுத உற்பத்தியாளர்களும் தான். இந்த லட்சணத்தில் டொனால்ட் டிரம்பை மீளவும் பதவிக்குக் கொண்டுவர சிலர் விரும்புவது தெரிகிறது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதென்பதும், துப்பாக்கித்தாக்குதல்களை விமர்சித்துக்கொண்டே குடியரசுக் கட்சியின் ஆயுத விற்பன்னர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதும் ஒன்றுதான்.
  8. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திய அமிர்தலிங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த அரசாங்கம் மற்றும் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடணம் என்பவற்றை காரணங்களாகக் காட்டி சிங்கள மக்களிடையே இன வன்மத்தையும், தமிழர்களுக்கெதிரான பகைமையினையும் ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சர்களும் வளர்க்கத் தொடங்கினர். லண்டனில் நிறைவேற்றப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் தீர்மானங்களுக்கு ஆதரவாக புலிகள் உட்பட எந்த ஆயுத அமைப்பும் வடக்குக் கிழக்கில் நடவடிக்கைகளில் ஈடுபடுமிடத்து, அவற்றின்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஜெயார் அறிவித்ததுடன், அவசர காலச் சட்டத்தினையும் மேலும் நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார். ஜெயாரின் இந்த அறிவித்தலின் உள்நோக்கம் குறித்து நன்கு உணர்ந்துகொண்ட கொழும்பு வாழ் தமிழர்கள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். கொழும்பு வாழ் தமிழர்கள் பலர் அமிர்தலிங்கத்தைச் சந்தித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்துவரும் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து, வைகுந்தவாசனின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கடுமையான கண்டனங்களுடன் ஒரு அறிக்கையினை வெளியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, எழுந்துவந்த சிங்கள இனவன்மத்தை தற்காலிகமாகப் பிற்போடுவதில் ஓரளவிற்கு வெற்றி கண்டது. அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரால் ஒருங்கிணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பைத்தியரக்காரத்தனமானதும், தாந்தோன்றித்தனமானதுமான தீர்மானங்களை நிறைவேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நிறைவேற்றப்பட்டிருக்கும் இத்தீர்மானங்கள் மிகத் தவறானவை என்பதையும், இதன்மூலம் தமிழரின் இலட்சியத்தின் எள்ளளவும் கிடைக்கப்பெறாது என்பதையும் முழுமையாக நம்புகிறோம்" என்று கூறப்பட்டிருந்தது. சிங்கள இனவாதத்தின் தூண்கள் என்று அறியப்பட்ட சண் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையும், அதன சிங்கள மொழிப்பத்திரிக்கையான தவசவும் முன்னணியினரின் இந்த அறிவிப்பை வரவேற்றதுடன், அப்போதைக்கு தமிழர்கள் இன்னொரு தடவை சிங்களவர்களால் கொல்லப்படுவதையும் தவிர்ப்பதற்கு உதவிபுரிந்திருந்தன. குட்டிமணி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, ஜெயவர்த்தனவின் தாளத்திற்கு ஆடுபவர் மற்றும் பாராளுமன்ற பகிஷ்க்கரிப்பை மீளப்பெற்றுக்கொண்டவர் ஆகிய அவப்பெயர்களை பெற்றிருந்த அமிர்தலிங்கம், அதனை மாற்றுவதற்கு அதிரடியாக சில முடிவுகளை எடுத்தார். ஆகவே, வட்டுக்கோட்டை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர் திருநாவுக்கரசு, 1982 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி மரணித்த நிகழ்வை தனது பெயரைத் திருத்தும் நடவடிக்கைக்காகப் பாவித்தார் அமிர்தலிங்கம். திருநாவுக்கரசின் மரணம் நிகழ்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றம், 1980 ஆம் ஆண்டு சித்திரை 5 ஆம் திகதி மணற்காட்டில் பொலீசாரால் பிடிக்கப்பட்டுக், கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து வந்த குட்டிமணி, ஜெகன் ஆகிய டெலோ தலைவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பை வழங்கியது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முதலாவது மரணதண்டனைத் தீர்ப்பு இதுவே என்றால் அது மிகையில்லை. 1979 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசனைக் கொன்றதற்காக குட்டிமணிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. தனது தீர்ப்பிற்கெதிராக குட்டிமணி மேன்முறையீடு செய்திருந்தார். குட்டிமணியும் ஜெகனும் - நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டும் வேளை திருநாவுக்கரசின் மரணத்தையடுத்து, அவ்வெற்றிடத்தினை நிரப்புவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி குட்டிமணியின் பெயரை சிபாரிசு செய்திருந்தது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம், ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மரணிக்கும்போதோ அல்லது பதவி விலகும்போதோ அல்லது அவர் கட்சியினால் நீக்கப்படும்போதோ அப்பதவிக்கு இன்னொருவரை அக்கட்சியின் செயலாளர் சிபாரிசி செய்யமுடியும் என்கிற நிலை இருந்தது. ஆகவே, குட்டிமணியை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் முன்னணியின் கோரிக்கையினை தேர்தல்கள் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன், பாராளுமன்றத்திற்கும் இதுபற்றி அறியத் தந்தது. இதனையடுத்து மிகக்கடுமையான கண்டனங்களும், விமர்சனங்களும் சிங்களவர் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பின. சிங்களப் பத்திரிக்கைகள் குட்டிமணியின் நியமனத்திற்கெதிராகப் பாரிய பிரச்சாரம் ஒன்றினை முடுக்கிவிட்டிருந்தன. தமிழர்களில் ஒரு பிரிவினரும் அமிர்தலிங்கத்தின் இந்த முடிவினை விமர்சித்திருந்தனர். அமிர்தலிங்கம் தனது முடிவிற்கான நியாயத்தை பின்வறுமாறு கூறியிருந்தார், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டுவரும் கொடூரமான விசாரணைகளைப்பற்றிய உண்மைகளை வெளிக்கொணரவே குட்டிமணியின் பெயரை வெற்றிடமான பதவிக்கு சிபாரிசு செய்தோம். பொலீசாரின் சித்திரவதைகள் ஊடாகவும், அழுத்தங்கள் ஊடாகவும் பெறப்படும் பொய்யான வாக்குமூலங்கள் தொடர்பாக மக்களிடையே விளிப்புணர்வினை ஏற்படுத்துவதும் இதன் இன்னொரு நோக்கமாகும்" என்றும் அவர் கூறியிருந்தார். தனது பெயரை முன்னணியின் உறுப்பினராக பிரஸ்த்தாபித்ததை ஏற்றுக்கொண்ட குட்டிமணியும், மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் பதிந்த வழக்கில், நீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட்டு, தன்னை விடுதலையாக்கி, பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், அரசாங்கத்தின் பிரதான சட்டவாளர் குட்டிமணியின் இக்கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், குட்டிமணியின் வேண்டுகோளை நிறைவேற்றும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்குக் கிடையாது என்றும் வாதிட்டார். அவரது வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. நீலன் திருச்செல்வம் அரசியல் யாப்பின்படி தேர்தல் நடந்த அல்லது உறுப்பினர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவர் நியமிக்கப்படவேண்டும் என்கிற சரத்து இருந்தும், குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுப்பதை நீதிமன்றம் தடுத்துவிட்டது. அந்த மூன்று மாதக காலம் முடிவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பதாக, 1983 ஆம் ஆண்டு, தை மாதம் 24 ஆம் திகதி குட்டிமணி தனது பதவியை இராஜினாமாச் செய்தார். பின்னர் இவ்வெற்றிடத்திற்கு சட்டத்தரணி நீலன் திருச்செல்வத்தின் பெயரை முன்னணி சிபாரிசு செய்தது. நீலன் பங்குனி 8 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
  9. ஜனாதிபதித் தேர்தல் - 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நாள் புரட்டாதி 17 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டது. 6 வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயார் ஜெயவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவ, நவ சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் மற்றும் ஜனதா விமுர்திப் பெரமுனவின் ரோகண விஜேவீர ஆகியோரே அந்த அறுவரும் ஆகும். தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது குமார் பொன்னம்பலம்மும் ஆயுத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அமிர்தலிங்கத்திற்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் குறித்த விபரங்களை குமார் பொன்னம்பலம் வெளிக்கொணர்ந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் ஆயுத அமைப்பு இரு விடயங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. முதலாவதாக, 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையான தனிநாட்டினை மீள உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை முன்னணியினர் பாவித்திருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்யாது விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. இரண்டாவதாக, இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம், தனிநாட்டிற்கான ஆதரவை வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், முன்னணி அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விமர்சனங்கள் அமிர்தலிங்கத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே, தனது இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு தமிழர்கள் அனைவரும் இத்தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் திடீரென்று கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதற்கு அவர் முன்வைத்த காரணம் மிகவும் பலவீனமானது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினைத் தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாததால், அந்த அரசியலமைப்பின்படி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வக்களிக்கக் கூடாதென்பதே அவர் முன்வைத்த காரணம். குமார் பொன்னம்பலம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமிர்தலிங்கம் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை குமார் பொன்னம்பலம் முன்வைத்தார். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணைக்கெதிராக அமிர்தலிங்கம் செயற்படுவதாக குமார் கூறினார். "அவர் என்னை மட்டும் தோற்கடிக்க முயலவில்லை, தமிழர்களின் கோரிக்கையான தனிநாட்டையும் தோற்கடிக்க முயல்கிறார்" என்று குமார் பிரச்சாரம் செய்தார். வானொலி பேச்சொன்றில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமது ஒற்றுமையையும், பலத்தையும், தமது அபிலாசைகளையும் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்ட வேண்டும் என்று குமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையினை விபரித்து புரட்டாதி 2 ஆம் திகது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சட்டர்டே ரிவியூ, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் முன்னர் அணியப்பட்ட தமிழ்த் தேசிய போர்வையினைக் களவாடி இன்று அணிந்திருக்கும் குமார் பொன்னம்பலம், முடிக்குரிய இளவரசனைப் போன்று தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் முன் தெரிகிறார், அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புவது போலத் தெரிகிறது" என்று கூறியிருந்தது. மேலும், காலம் காலமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களித்து வந்த கிராமப்புறத் விவசாயிகளான தமிழர்கள், தமது விவசாயப் பொருட்களான மிளகாய், வெங்காயம் ஆகியவற்றிற்கு நல்ல சந்தவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதால், சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து நிற்கிறார்கள் போலத் தெரிவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு ஹெக்டர் கொப்பேக்கடுவ பிரச்சாரம் செய்யச் சென்றவேளைகளில் அவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டதுடன், நல்ல வரவேற்பினையும் வழங்கினர். யாழ்க்குடாநாட்டில் 14 கூட்டங்களில் கலந்துகொண்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ, யாழ்ப்பாணத்து விவசாயிகளின் உற்பத்திப் பொருடகளுக்கான சந்தை எப்போது பாதுகாக்கப்படும் என்றும், தமிழர்களுக்கெதிராக ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தான் பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்துவிடுவதாகவும் உறுதியளித்தார். யாழ்க்குடா நாட்டிற்கு ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெயாரை மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வரவேற்றனர். ஜெயாருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் ஈழ விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் யாழ்நகரின் சுவர்களின் ஜெயாருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, "யாழ்ப்பாணத் தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுக்குப் பிடிக்காது" என்று ஒரு வாசகம் கூறியது. சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டுப்போய் இருக்கும் சிக்கலில் இருந்து அவர்களை மீட்க முயன்றார். "நீங்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு விரும்பியவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது உங்களின் பிரச்சினை. ஆனால், தவறாமல் வாக்களியுங்கள், ஏனென்றால் அது மக்களின் இறையாண்மை ஆகும்" என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். பட்டிருப்பில் மக்கள் முன் பேசிய ஜெயார், "தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் எனக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும், அமைத்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 1982 தேர்தல் வன்முறைகள், சட்ட மீறல்கள், கம்மியூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை அச்சகமும், சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அச்சிட்ட அச்சகங்களும் அரசால் மூடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நடந்தபோதும் ஐப்பசி 20 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜெயவர்த்தன மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டார். சுமார் 81 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் 65 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது, 1. ஜே ஆர் ஜெயவர்த்தன - ஐ.தே.க 3,450,811 வாக்குகள் , 52.91 % 2. எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ - சிறிலங்கா சு.க - 2,548,438 வாக்குகள், 39.07 % 3. ரோகண விஜேவீர - மக்கள் விடுதலை முன்னணி 273,934 வாக்குகள், 4.19 % 4. குமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 வாக்குகள், 2.67 % 5. கொல்வின் ஆர் டி சில்வா - லங்கா சம சமாஜக் கட்சி 57,532 வாக்குகள், 0.88 % 6. வாசுதேவ நாணயக்கார - நவ சம சமாஜக் கட்சி 17,005 வாக்குகள், 0.26 % 902,373 அதிகப்படியான வாக்குகளினால் ஜெயவர்த்தன வெற்றிபெற்றார். ஹெக்டர் கொப்பேக்கடுவவைத் தவிர மற்றைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 சிங்கள மாவட்டங்களிலும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையிலும் ஜெயார் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் கிடைத்த அதேநேரம் ஹெக்டர் கொப்பேக்கடுவவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் 77,300 வாக்குகளை அளித்திருந்தனர். ஜெயாருக்கும் 44,780 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 533,478 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 228,613 வாக்காளர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்கொள்ளும் அபாயத்தை இத்தேர்தல் அமிர்தலிங்கத்திற்கு உணர்த்தியிருந்தது. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் நின்ற குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த ஆதரவினால் உந்தப்பட்ட ஆயுத அமைப்புக்களான புளொட்டும், ஈரோஸும் 1983 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் இணைந்து, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதென்று தீர்மானித்தன. இந்த முடிவும் தனக்கும், கட்சிக்கும் சவாலாக உருவாகிவருவதாக அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஆனாலும், ஜெயாரின் அழுங்குப் பிடியிலிருந்து அமிர்தலிங்கத்தினால் வெளிவர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த தகுதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தனக்குக் கிடைத்த சுகபோகங்களுக்காகவோ அவர் இப்படி உணரவில்லை, மாறாக, ஜெயாரின் பிடியிலிருந்து விலகிவந்தால் வேறு ஆபத்துக்கள் வரலாம் என்று அவர் அஞ்சினார். ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைப்பதாலும், அசெளகரியப்படுத்துவதாலும் தான் எதிர்நோக்கவேண்டி வரும் அபாயம் குறித்து அவர் நன்கு அறிந்தே இருந்தார். "அவர் மிகவும் ஆபத்தான மனிதர். அவருடன் நாம் மிகவும் அவதானத்துடனேயே தொடர்பாட வேண்டும்" என்று என்னிடம் பலமுறை அமிர் கூறியிருக்கிறார். ஜெயவர்த்தன மீது தனக்கிருந்த அச்சம் குறித்து அமிர்தலிங்கம் 1982 ஆம் ஆண்டு ஆனியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வைகுந்தவாசனிடமும், ஆதேவருடம் ஆடி மாதம் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற உலகத் தமிழ் ஈழம் மாநாட்டிலுல் கூறியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்த முயன்றால், வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஜெயவர்த்தன மொத்தமாகத் தண்டித்துவிடுவார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் தீர்மானங்கள் இரண்டை நிறைவேற்றியிருந்தது, 1. 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளான தை மாதம் , 14 ஆம் திகதி, ஒருதலைப்பட்சமாக தமிழீழப் பிரகடணத்தை நிறைவேற்றுவது. 2. அதே நாள் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது. நியோர்க் நகரில் இடம்பெற்ற தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டபோதும் இதேவகையான அச்சத்தினை அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்தார். சுமார் 200 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், அவர்களின் நலன்களுக்கும் தானே பொறுப்பு என்று அமிர் கூறினார். "மக்கள் எவருமற்ற நிலையில் கிடைக்கப்பெறும் விடுதலையினை யார் அனுபவிக்கப் போகிறார்கள்? வங்கதேசத்தின் சுதந்திரத்தை நாம் முன்மாதிரியாகப் பின்பற்றி போராட வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். அந்தப் போரில் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவானது என்பது இவர்களுக்குத் தெரியாது" என்று அவர் வாதிட்டார். இந்த மாநாட்டினை ஒழுங்குசெய்த வைகுந்தவாசன் அமிரைப் பார்த்து, "ஜெயாரின் முகத்துக்கு நேரே பார்த்து, நரகத்திற்குப் போ என்று கூறுங்கள்" என்று கத்தினார். அதற்குப் பதிலளித்த அமிர், "நான் அப்படிச் செய்தால், நரகத்திற்குப் போவது ஜெயார் அல்ல, தமிழ் மக்களே" என்று கூறினார்.
  10. முல்லைத்தீவு - ஓயாத அலைகள் 1
  11. அமிர் சில விடயங்களை வேண்டுமென்றே செய்ததாக நான் நம்பவில்லை. இந்திய இலங்கை அதிகாரவர்க்கத்திற்கின் அழுத்தங்களே அவரை தமிழர் விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளித்தள்ளின என்று நினைக்கிறேன். எமது விடுதலைக்காகப் போராடிய முக்கியமான ஜனநாயகப் போராளிகளில் அவரும் ஒருவர் என்றே படுகிறது.
  12. அமிர்தலிங்கத்தின் முதுகில் சவாரிசெய்த ஜெயார் தமிழர் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெல்வதற்கு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன தன்னிடம் கேட்டபோது அமிர்தலிங்கம் குழம்பிப் போனார். "உங்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றனவே?தேர்தல் பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?" என்று அமிர்தலிங்கம் ஜெயாரைப் பார்த்துக் கேட்டர். "தேர்தல்களை முன்னோக்கிக் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கிறேன். இவ்வருட இறுதியில் தேர்தலை நடத்தும் எண்ணம் எனக்கிருக்கிறது" என்று தனது திட்டத்தை விளக்கினார் ஜெயார். தனது சூழ்ச்சித் திட்டம் குறித்தும் ஜெயார் அங்கு பேசினார். தான் இலங்கையினை கடந்த 5 வருடங்களாக ஆட்சி செய்து வருவதாகவும், பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயங்களின் ஆரம்பம், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினை துரிதப்படுத்தியமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் உருவாக்கம் என்று பலவிடயங்களை அவர் சுட்டிக் காட்டினார். ஆகவே, இந்தச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு மக்களின் அனுமதி தனக்கு வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், நமட்டுச் சிரிபுடன் தொடர்ந்த ஜெயார், "நான் என்னைப் பலப்படுத்திக்கொண்டாலே, மாவட்ட அபிவிருத்திச் சபைகளையும் பலப்படுத்த முடியும்" என்றும் அவர் கூறினார். 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் என்னுடன் இதுகுறித்துப் பேசுகையில், ஜெயார் தன்னைப் பகடைக்காயாகப் பாவித்து தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களை மேற்கொண்டுவருவது தனக்குத் தெரியும் என்று கூறினார். இதன்போது ஜெயார் தன்னிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பாகவும் அமிர்தலிங்கம் பேசினார். தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் வழங்கப்படும் ஆதரவு இரகசியமாகப் பேணப்படவேண்டும் என்றும், அவ்வாறு பேணப்படாதவிடத்து சிங்கள பெளத்தர்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்காது சென்றுவிடும் என்றும் ஜெயார் தன்னிடம் கூறியதாக அமிர்தலிங்கம் கூறினார். ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகள் தொடர்பான சரியான தெளிவினை அப்போது அமிர்தலிங்கம் பெற்றிருந்தார் என்று கூறமுடியும். இச்சூழ்ச்சிகள் சில குறித்து அமிர் என்னிடம் முன்னர் பேசியிருக்கிறார். அப்படியானதொரு சூழ்ச்சியை கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் ஜெயார் பாவித்திருக்கிறார். இப்பேச்சுக்களின்போது அரசியலமைப்பின் பிரகாரம் தமிழ் மொழி தொடர்பான உரிமைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று அமிர் ஒருமுறை ஜெயாரிடம் முறையிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஜெயார், "சிங்கள அமைச்சர் ஒருவரை மொழிதொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லிக் கோருவதே எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. தமது அரசியல் எதிர்காலத்தை இப்படியான நடவடிக்கை பாதித்துவிடும் என்று அவர்கள் இயல்பாகவே அச்சப்படுவதால், இதனைச் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. நீங்கள் உங்களின் மன்னார் மாவட்ட உறுப்பினர் சூசைதாசனை எனக்குத் தருவீர்களாகவிருந்தால், அவரைக்கொண்டு தமிழ் மொழி தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்திவிட முடியும்" என்று கூறியிருக்கிறார். ஜெயார் இங்கே வைக்க எத்தனித்த பொறியை அமிர் உடனடியாகவே உணர்ந்து கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதாகக் காட்டவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, முன்னணியின் உறுப்பினர் ஒருவரை தமிழ் மொழிக்கான உரிமை தொடர்பாகச் செயற்பட வைத்து, தோற்கடித்துவிட்டால், அதற்கான பழியினை தமிழர்கள் மீதே போட்டுவிடலாம் என்று ஜெயார் எண்ணியிருந்தார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இளைஞர்களுக்கும் இடையே உருவாகிவந்த பிளவினை மேலும் ஆளமாக்கமுடியும் என்றும் ஜெயார் நம்பினார். இதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அமிர்தலிங்கம், "இதைப் பார்க்கும்போது எனது மனைவியை உங்களுக்குக் கடனாகத் தந்துதவ முடியுமா என்று நீங்கள் கேட்பதைப்போல் உள்ளது" என்று கூறினார். ஜெயார் தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை அமிர் கண்ணியமாக மறுத்துவிட்டார். ஜெயாரிடம் பேசிய அமிர், தம்மீது ராணுவமும் பொலீஸாரும் நடத்திவரும் தாக்குதல்களால் தமிழர்கள் மிகுந்த அதிருப்திகொண்டிருக்கிறார்கள். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நீங்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்த மறுத்துவருவது குறித்தும் அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். ஆனாலும், ஜெயாரோ விடுவதாயில்லை. தனக்கு ஆதரவளிக்க முடியாவிட்டாலும்கூட, ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிடக் கூடாதென்று கேட்டுக்கொண்டார். இதனால், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தனக்கே வக்களிப்பார்கள் என்று அமிர்தலிங்கத்திடம் கூறினார் ஜெயார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜெயாருக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையே நடைபெற்ற சம்பாஷணை குறித்து ஜெயாரின் சரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கிங்க்ஸ் ஆகியோர் பின்வருமாறு கூறுகிறார்கள், "1982 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் 20 ஆம் திகதியில் நடத்துவதாக நிரணயிக்கப்பட்டிருந்த தேர்தலினை, தனது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் தொடர்ச்சியாகவே ஜெயார் கருதிச் செயற்பட்டிருந்தார். இத்தேர்தல் பிரச்சாரத்தில், பலத்தை மூலதனமாகக் கொண்டே அவர் ஈடுபட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்பொழுது, தனது தேர்தல் நண்பர்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு ஜெயாருக்கு இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தனக்கு ஆதரவு தரும்படி ஜெயார் கேட்டபோது, அமிர்தலிங்கம் அதனை கண்ணியமாக நிராகரித்திருந்தார். ஆனால், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது எனும் உத்தரவாதத்தை அமிர் ஜெயாருக்கு வழங்கினார். ஜெயாரைப் பொறுத்தவரை இது திருப்திகரமான முடிவாக அமைந்தது" என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலினை குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் நடத்துவதன் காரணத்தை ஜெயார் அமிருக்குச் சொல்லவில்லை. ஜெயாரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இளைய அமைச்சர்களான காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும், பாராளுமன்றத்தில் ஜெயாருக்கு இருந்த 5/6 பெரும்பான்மையினைத் தக்கவைக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தனர். கடந்த ஐந்து வருடங்களாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும், பலத்தினையும் நன்கு அனுபவித்த ஜெயார், அதனை 1983 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தல்களில் இழக்க விரும்பவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் ஜெயார் கொண்டுவந்திருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலமான பாராளுமன்ற ஆசனப் பகிர்வு, தனக்கு அடுத்துவரும் தேர்தல்களில் அறுதிப்பெரும்பான்மையினை தராது என்பதை ஜெயார் நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆகவே, தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தை இன்னும் ஆறு வருடங்களுக்கு அவர் நீட்டிக்க விரும்பினார். இதனை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் செய்ய அவர் விரும்பினார். ஆகவேதான், சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்கு, தனது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு தொடரவேண்டும் என்று அவர் நினைத்தார். பாராளுமன்றத்தில் நான்கில் ஐந்து பெரும்பான்மை அவருக்குக் கிடைத்ததையடுத்து, பாராளுமன்றம் மீதான முற்றான அதிகாரத்தைத் தனதாக்கிக் கொண்ட ஜெயார், தனது பலத்தைப் பாவித்து தனது எதிரிகளை பலவீனப்படுத்தி, முற்றாக அழித்துவிடும் கைங்கரியங்களில் இறங்கினார். 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின்படி பிரதமரே நாட்டின் அதிகாரம் பொறுத்ந்திய தலைவர் எனும் நடைமுறையினை 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்று, அரசியல் அமைப்பை மாற்றியமைத்து 1978 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் திகதி, ஜனாதிபதி பதவியினை நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மிக்க தலைவராக உயர்த்தியதுடன், நாட்டின் முதலாவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். தனக்குப் புதிதாகக் கிடைத்த அதிகாரத்தினைப் பாவித்து தனது அரசியல் எதிரியான சிறிமாவை அரசியலில் இருந்து விரட்டியடித்தார். பின்னர், மேன்முறையீட்டின்மூலம் சிறிமாவை அரசியலிலிருந்து விலத்தியது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தனது பாராளுமன்றத்தைக் கொண்டே தோற்கடித்தார். மேலும், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான அதிகாரங்களை அரசியலமைப்பின் திருத்தங்கள் மூலம் அதிகப்படுத்தி, நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் ஜனாதிபதி ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்தாதபடி பார்த்துக்கொண்டார்.
  13. ஒப்பந்த மீறல்களும் ஏமாற்றுதல்களும் ஜெயவர்த்தனவுடனான 11 மாதகாலப் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்பேச்சுக்களின் மூலம் சில நிவாரணங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 1977 மற்றும் 1981 அரச வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான நிவாரணம், தமிழ்பேசும் பொலீஸ்காரர்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றுதல், வவுனியா மாவட்டத்தில் எல்லைகளை மாற்ற அரசாங்கம் எடுத்துவந்த முயற்சிகளை தற்காலிகமாகவேனும் நிறுத்திவைத்தல் ஆகிய விடயங்களை முன்னணியினரால் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசாங்கம் ஒத்துக்கொண்டதுபோல மாவட்ட அதிகார சபைகளுக்கான அதிகாரங்களையோ அல்லது இச்சபைகள் இயங்குவதற்கான நிதியினையோ அரசு ஒருபோதுமே கொடுக்க விரும்பவில்லை. மேலும், அரசியலமைப்பில் கூறப்பட்ட தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, நிலங்களைப் பாவித்தல் மற்றும் நிலப் பங்கீடு, சட்ட அதிகாரங்கள் என்று எவற்றையுமே அரசு நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் கூறப்பட்ட தமிழர் தொடர்பான எந்தவிடயங்களையும் நடைமுறைப்படுத்த அரசு மறுத்துவருவது தொடர்பாக அமிர்தலிங்கம் பலமுறை ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்று இவ்வாறிருந்தது, "1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி உங்களது அரசாங்கம் தமிழ் மொழிக்கு சில ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகக் கூறியிருந்தது. ஆனால், இன்றுவரை உங்கள் அரசாங்கம் அதனைச் செயற்படுத்தத் தவறியுள்ளதுடன், உங்களின் அமைச்சர்களும் செயற்படுத்த முடியாமைக்கான காரணங்களைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.மிகவும் அடிப்படையான விடயங்களான தமிழில் தமிழர்களுடன் தொடர்புகொள்ளுதல் என்பதுகூட உங்களால் செயற்படுத்தமுடியாமல் இருக்கிறது". "அரசால் செய்துகொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது அடிப்படை மொழி உரிமைகளைக் கூட தமிழர்கள் பெறாதவிடத்து, அவர்கள் தமது மொழிதொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை எவராலும் குறைகூறமுடியுமா?" ஆர். சம்பந்தன் இவ்வாறே, 1980 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டமூலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பான அதிகாரங்களை வழங்க அரசு தயாராக இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஜெயவர்த்தனவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார், "1980 ஆம் ஆண்டு அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டத்தின் மூலம் காணிகளை உபயோகிக்கவும், அவற்றினைப் பங்கீடு செய்யவும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரையில் அமுல்ப்படுத்தப்படவில்லை. இன்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தச் சட்டம் வெறும் கடதாசியில் இறந்துபோய்க் கிடக்கிறது. இச்சட்டத்தில் குறிக்கப்பட்டதுபோல, காணிப் பாவனை மற்றும் பங்கீட்டில் அரசோ அல்லது அமைச்சர்களோ தலையீடு செய்யமுடியாது எனும் சரத்து தொடர்ச்சியாக மீறப்பட்டே வருகிறது. காணிவிடயம் தொடர்பாக அரச திணைக்களங்களினால் வெளியிடப்பட்டு வரும் சுற்றுநிருபங்களைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒருபோதுமே இச்சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தரப்போவதில்லை என்பது உறுதியாகிறது" சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்டமும் இவ்வாறே அரசால் செயற்படுத்தப்படாமல் விடப்பட்டது. பொலீஸார் மீதான மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் அதிகாரத்தினை சட்டத்தில் கூறப்பட்டதுபோல் நடைமுறைப்படுத்த அரசு விரும்பவில்லை. பொலீஸாரும் ராணுவமும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தவே அரசால் தொடர்ந்தும் பாவிக்கப்பட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலவிடயங்களைச் செய்யமறுத்த அரசாங்கம், தானே உருவாக்கிய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள், முன்னணி உறுப்பினர்கள் அடங்கிய உயர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களையும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது எட்ப்பட்ட விடயங்களையும் செய்ய மறுத்தது. அரசுக்கும் முன்னணியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 1981/1982 ஆகிய வருடங்களில் 11 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. "நம்பிக்கைத் துரோகங்களினதும் ஏமாற்றுக்களினதும் இழி சரித்திரம்" என்கிற பெயரில் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை 1983 ஆம் ஆண்டு ஆவணி 10 ஆம் திகதி, அதாவது அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தம் செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அரசாங்கம் செய்யத் தவறியிருந்த சில முக்கிய விடயங்கள் குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார், அக்கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறியது, "1981 ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று, தமிழ் மக்களுக்கெதிராக உங்கள் அமைச்சர்களாலும், கட்சி ஆதரவாளர்களினாலும் வன்முறைகள் ஏவிவிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமக்கு விடுக்கப்பட்ட அனைத்து அழைப்புக்களையும் ஏற்றுக்கொண்டு நாம் பேச வந்திருக்கிறோம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் செய்யப்படும் என்று நாம் வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் நாம் தவறாது செய்தே வந்திருக்கிறோம். எமது சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் நடைபெறும் விடயங்கள் குறித்து நாம் பொறுப்பெடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் எமக்குத் தரப்படவில்லை. ஆனால், கனம் ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் உயர்மட்டக் குழுவிலும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளிலும் எட்டப்பட்ட தீர்மானங்களை அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறதா என்பதுபற்றிக் கூறமுடியுமா? நான் சில விடயங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்", "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் - இச்சபைகள் திறம்பட செயற்படுவதற்கு வழங்கப்படுவதாக உறுதியளித்த எந்த விடயங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை". "தமிழ்பேசும் பொலீஸாரை பெரும்பான்மையாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பதவியில் அமர்த்துவது எனும் தீர்மானம் வடக்கில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய தமிழ் மாவட்டங்களில் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வவுனியா திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நாம் அண்மையில் சந்தித்த பல அசம்பாவிதங்கள் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலீஸாரை நாம் நிறுத்தியிருந்தால் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அது நடக்கவில்லை. பொலீஸ் சேவைக்கு தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம், இனப்பாகுபாடற்ற முறையில், குறிப்பாக இனங்களுக்கிடையிலான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் தருணங்களில் அவர்கள் சிறப்பாக நடந்துகொள்ளமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை". "1981 ஆம் ஆண்டு வைகாசி - ஆனி மாதங்களில் பொலீஸாரின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் ஒருசிலருக்கு மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கேசந்துறை, சுண்ணாகம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ் நூலக எரிப்பிற்கான நிவாரணமாக லயணல் பெர்ணாண்டோ தலைமையிலான ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாய்களில் இதுவரை ஜனாதிபதி நிதியம் இரண்டு மில்லியன் ரூபாய்களை மட்டுமே வழங்கியிருக்கிறது. சுண்ணாகம், காங்கேசந்துறை ஆகிய பகுதிகளில் தமிழர்களைக் கொன்றும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடியும் வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸார் அடையாளம் காணப்பட்டபோதும், இன்றுவரை அவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லையென்பதுடன், வன்முறைகள் நடைபெற்ற பகுதியில் அமைந்திருக்கும் மல்லாகம் நீதிமன்றுக்கும் இதுவரை அவர்கள் கொண்டுவரப்படவில்லை. மேலும், இந்த விசாரணைகளைச் சிக்கலாக்கும் நோக்கில், வழக்கினை கொழும்பிற்கு மாற்றியிருப்பதன் மூலம் பொலீஸ் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்புக் கருதி கொழும்பில் நடைபெறவிருக்கும் விசாரணைகளில் பங்குகொள்ள முடியா நிலைமையினையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது". "ஊர்காவற்படைக்கென்று தேர்வுசெய்து, பொலீஸாரினால் தகுதியானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பல இளைஞர்கள் இதுவரையில் ஊர்காவற்படையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊர்காவற்படை எனும் பிரிவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை". "மட்டக்களப்பின் பன்குடா மற்றும் கல்வியங்காடு ஆகிய பகுதிகளில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை". 1981 ஆம் ஆண்டு, ஆவணியில் இடம்பெற்ற முதலாவது உயர் மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கனம் ஜனாதிபதியான உங்களால் வழங்கப்பட்ட அறிவுருத்தலான வவுனியா நகரச் சந்தியில் அநீதியான முறையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையினை அகற்றுவது குறித்த செயற்பாடு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள அரச ஊழியர்களால் தமிழரை இம்சிக்கவென்று அமைக்கப்பட்ட ஒரு சிலையினை அகற்றுவதற்கே ஜனாதிபதியான உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், சிங்கள இனவாதத்தினால் உந்தப்பட்டு ஆட்சிநடக்கும் இந்த அரசிடமிருந்து தமிழர்கள் எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?" "அரச, பொதுச் சேவைகளில் தமிழருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அரசால் சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டபோதிலும், இத்திட்டத்தினை அமுல்ப்படுத்தும் அமைச்சரின் செயலாளர் இச்சுற்று நிருபங்களுக்கெதிராக நடந்துவருவதுடன், தமிழர்களை அரச பணிகளில் சேர்ப்பதையும் தடுத்தும் வருகிறார். இந்த இழிசெயல் குறித்து இக்கடிதத்தில் மேலும் விலாவாரியாக பேச நான் விரும்பவில்லை". "மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்களை மூன்று பேருக்கு மட்டுப்படுத்துவது என்ற இணக்கப்பாடு இதுவரை செயற்படுத்தப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை அபிவிருத்திச் சபைக்குள் கொண்டுவந்தமை, பின்னர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இந்த நியமனத்தை பலர் சுட்டிக்காட்டியபோது அந்த உறுப்பினரை பதவிவிலக்கிவிட்டு மீண்டும் அவரையே இச்சபைகளுக்கு உறுப்பினராக நிறுத்தியது போன்ற பல முறைகேடுகளில் அரசு தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கிறது". "அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் எதுவித பயனும் இல்லையென்பதைச் சுட்டிக்காட்டவே மேற்சொன்ன, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் இன்றுவரை நடைமுறைப்பத்தப்படாது தட்டிக் கழிக்கப்பட்டுவரும் விடயங்கள் சிலவற்றை பிரஸ்த்தாபித்திருந்தேன்". அரசியலமைப்பில் கூறப்பட்டதன்படி தமிழ மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகள் இதுவரையில் தரப்படாமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம் இணங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படாமை, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை இதுவரை நடைமுறைப்படுத்தாமை என்பவை மட்டுமே இன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்நோக்கும் பிரச்சினைகள் அல்ல. மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்பாக கண்காணித்து வந்த ஜெயரட்ணம் வில்சன், "அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் மிகவும் அற்பத்தனமாக நடந்துகொள்வதுடன், பெரும்பாலான நேரங்களில் அதிகாரப் பகிர்வினை முற்றாகவே நிராகரித்தும் வருகிறார்கள்" என்று கூறுகிறார். "ஒவ்வொரு அமைச்சரும் தனது சொந்த எண்ணத்தின்படி அதிகாரங்களைப் பகிரவோ அல்லது தம்முடனேயே வைத்துக்கொள்ளவோ விரும்புகிறார்கள். அதிகாரப்பகிர்வு தொடர்பாக பொதுவான நடைமுறை ஒன்று அவர்களிடத்தில் இல்லை. இதில் வருத்தமளிக்கும் விடயம் என்னவெனில், தமது அமைச்சுகளின் கீழான விடயங்களுக்கு நிதியொதுக்கீட்டினைச் செய்ய அமைச்சர்கள் முன்வருவதில்லை" என்றும் அவர் கூறினார். தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமது மாவட்ட சபைகளை அபிவிருத்திச் செய்வதற்கான நிதியினை அரசு வழங்காதது குறித்து இச்சபைகளின் அதிகாரிகள் விசனப்பட்டிருந்தார்கள். தமிழர்களின் மாவட்டங்களின் மீதான தனது அதிகாரத்தைத் தன் கையிலேயே தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற விடயங்களின் செயற்பாட்டினை அரசு தடுத்துவருவதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். யாழ்ப்பாண மாவட்ட சபையின் தலைவர் நடராஜா இரு விடயங்கள் தொடர்பாக நிதியினைத் திரட்ட நினைத்திருந்தார். முதலாவது விடயம், காங்கேசந்துறையிலிருந்து தமிழ்நாட்டின் நாகபட்டிணம் வரையான படகுச் சேவையொன்றினை ஆரம்பிப்பது. இப்படகுச்சேவையின் மூலம் யாழ்ப்பாண மாவட்ட சபைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று இச்சேவை தொடர்பான முன்னோடி ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இரண்டாவது, காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு சீமேந்துப் பையிற்கும் தலா ஒரு ரூபாய்ப்படி வரி அறவிடும் யோசனை. ஆனால், இந்த இரண்டு யோசனைகளையும் அரசு உடனடியாகவே நிராகரித்து விட்டது. இதனால், இச்சபைக்கு அரசால் ஒதுக்கப்படும் மிகச்சொற்ப நிதியைக்கொண்டே தனது செயற்பாடுகளை நடத்தவேண்டியதாயிற்று. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையினை நடத்துவதற்கு அரசு தொடர்ச்சியாக போட்டுவந்த முட்டுக்கட்டைகளால் விரக்தியடைந்த தலைவர் நடராஜா, தனது அதிருப்தியை வெளிக்காட்டும் முகமாக 1983 ஆம் ஆண்டு, ஆடி மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். ஜெயவர்த்தன அவரை சந்திக்க அழைத்திருந்தபோதும், 1983 ஆம் ஆண்டின் ஜூலைப் படுகொலைகள் ஆரம்பித்து விட்டமையினால் மாவட்ட அதிகார சபைகள் என்கிற திட்டமே அரசால் முற்றாகக் கைவிடப்பட்டு விட்டது. சுமார் ஒருவருட காலத்திற்கு முன்பதாக, 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதமளவில், கனடாவிலிருந்த தனது ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சனை வரவழைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான இன்னொரு சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். மேலும், தன்னைச்சுற்றியிருக்கும் இனவன்மம் கொண்ட அமைச்சர்களால், தன்னுடைய சுயாதீனம் தடுக்கப்பட்டு வருவதாகவும் வில்சனிடம் ஜெயார் தெரிவித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு பங்குனி 15 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதும் ஜெயரட்ணம் வில்சன், ஜெயார் தன்னுடம் பேசிய விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். "இனவன்மம் கொண்ட அமைச்சர்களால் நான் சூழப்பட்டிருக்கிறேன். இந்த நச்சு வட்டத்திலிருந்து நான் வெளியே பாய்ந்துவர உங்களின் நண்பர்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நீங்கள் பேசுவீர்களாகவிருந்தால், என்னால் சில விடயங்களைச் செய்யமுடியும்" என்று ஜெயார் கூறியதாக வில்சன் எழுதுகிறார். ஜெயாரின் வேண்டுகோளின்படியே வில்சன் அமிர்தலிங்கத்துடன் பேசினார். பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்துப் பேசிய ஜெயார், "அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை நீங்கள் எனக்குப் பெற்றுத்தரவேண்டும். ஆனால், இதனை நீங்கள் வெளியே பகிரங்கமாகப் பேசக் கூடாது. அப்படித் தெரிந்தால், பெளத்த சிங்களவர்களின் வாக்குகள் எனக்குக் கிடைக்காது போய்விடும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், என்ன நீங்கள் நம்பலாம்" என்று கூறவும், அமிர்தலிங்கமும் ஜெயார் வைத்த பொறியில் முற்றாக அகப்பட்டுப் போனார்.
  14. தமிழ் மக்களின் தளபதி எனும் ஸ்த்தானத்திலிருந்து துரோகி எனும் நிலைக்கு இறங்கிய அமிர்தலிங்கம் அரசை மகிழ்விக்க எண்ணிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், அரசாங்கத்துடன் இணைந்து பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் விருப்பத்தைத் தெரிவித்ததோடு, 1982 ஆம் ஆண்டு சித்திரை 29 ஆம் திகதி, ஜெயவர்த்தனபுற கோட்டேயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியினைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்விலும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டாம் என்று போராளிகள், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் எச்சரிக்கைகளையும் மீறி முன்னணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வழமைபோல அமிர்தலிங்கம் மிகச் சிறந்த பேச்சொன்றை வழங்கினார். தமிழர்களின் சரித்திரம் தொடர்பான சான்றுகளிலிருந்து ஆரம்பித்த அவர், தமிழர்களுக்கும், தொடந்ர்துவந்த அரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை அரசுகள் கைவிட்டு தமிழர்களை ஏமாற்றியது குறித்தும், தமிழர்களின் பூர்வீக தாயகம் எவ்வாறு சிங்களவர்களால் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தமிழர்கள் எவ்வாறும் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும், தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்திலேயே பாதுகாப்பற்றை நிலையில் வாழ்கிறார்கள் என்பதுபற்றியும், இவையனைத்தும் எவ்வாறு தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளியது என்பது குறித்தும் பேசினார். ஆனால், தனது பேச்சின் இறுதியில், "முன்னர் நடந்தவை எப்படி இருந்தபோதும், ஜனாதிபதி ஜெயாரின் நேர்மையிலும், நீதியிலும், இனங்களைச் சமமாக நடத்தும் விதத்திலும் தனது கட்சி அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக" கூறி முடித்தார். பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் நான் ஈடுபட்டிருக்காமையினால், அதன் உத்தியோகபூர்வ நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால், அமிர்தலிங்கத்தின் பேச்சினைக் கேட்டபின்னர் அவரை வாழ்த்துவதற்காகத் தொலைபேசியில் அவருடன் பேசினேன். "பல மக்கள் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாக இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நான் பாவித்துக்கொண்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்குகொள்ளவேண்டாம் என்று இளைஞர்கள் விடுத்த வேண்டுகோள் தவறானது என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். எமது பிரச்சாரத்திற்கு பாராளுமன்றத்தை ஒரு களமாக நாங்கள் பாவிக்கிறோம். இளைஞர்களுக்கு இது புரியுமாற்போல்த் தோன்றவில்லை" என்று என்னிடம் அமிர்தலிங்கம் கூறினார். இளைஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இச்செயற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். தமிழ் மக்கள் வழங்கிய ஆணையான தனிநாட்டிற்கான செயற்பாடுகளிலிருந்து விலகி, பாராளுமன்ற சுகபோகங்களில் திளைத்திருக்கவே முன்னணியினர் விரும்புகிறார்கள் என்று மக்கள் மத்தியில் இருந்துவந்த கருத்து மேலும் மேலும் வளரத் தொடங்கியது. 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 29 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழம் மாணவர் பொது மன்றம், யாழ் பலகலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் மாணவர் அமைப்பு, புரட்சிகர கம்மியூனிச அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த ஹர்த்தாலின் வெற்றியும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதைப் பறைசாற்றியிருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. திரையரங்குகள் தமது திரையிடல்களை இரத்துச் செய்திருந்ததுடன், போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. பாடசாலைகளுக்கான மாணவர் வரவு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்துத் தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. வைகாசி மாதத்தில் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, அவரைச் சுற்றிவளைத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அவரையும் அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் தாம் முற்றாகப் புறக்கணிப்பதாகக் கோஷமிட்டனர். தமது சக மாணவர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு வருகையில், அமிர்தலிங்கமும் அவரது கட்சியினரும் ஜெயாருடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவருடன் விருதுபசாரங்களில் கலந்துகொண்டு, ஜெயார் வழங்கும் தின்பண்டங்களையும் தேநீரையும் அருந்தி மகிழ்வதாகவும் அவர்கள் சாடினர். ஜெயாருடனும் அவரது அமைச்சர்களுடனும் விருந்துபசாரத்தில் ஈடுபடும் அமிர்தலிங்கம் அமிர்தலிங்கத்தை அவர்கள் "துரோகி" என்று விமர்சித்தனர். தமிழ் மக்களின் தளபதி எனும் நிலையிலிருந்து துரோகி எனும் நிலைக்கு அவர் கீழிறங்கியிருந்தார். அமிர்தலிங்கத்தினதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் சரிவு ஆரம்பித்திருந்தது. ஜெயவர்த்தனவின் திட்டம் வெற்றியளித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கால்களுக்குக் கீழே பாரிய குழியொன்றினை ஜெயார் வெட்டிக்கொண்டிருந்தார்.
  15. ராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்காக போராளிகளைக் கண்டித்த அமிர்தலிங்கமும் முன்னணியும் இராணுவத்தின் மீதான தாக்குதல் மற்றும் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகியவற்றினையடுத்து, ஐப்பசி 27 ஆம் திகதி தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். போராளிகளின் தாக்குதல்களுக்குப் பின்னர், ராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுக்கும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்படுவதாகவும் அமிர்தலிங்கத்திடம் கூறப்பட்டது. இக்கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ராணுவத் தளபதிகள் அமிர்தலிங்கத்திடம் பேசும்போது, பொதுமக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள் மீதும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று தமது ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், ராணுவத்தின்மீதோ அல்லது பொலீஸார் மீதோ நடத்தப்படும் எந்தத் தாக்குதல்களையும் தாம் ஆதரிக்கவில்லையென்றும், அவற்றைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினர். இதனை வெளிக்காட்டும் நோக்கத்துடன், அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இணைந்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டனர், "இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. வன்முறைகள் மூலம் தமிழ் மக்களின் இலட்சியத்தை எந்தவகையிலும் அடையமுடியாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். இவ்வாறான வன்முறைகள் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து இருந்துவரும் கரிசணையினை முற்றாக இல்லாதொழிக்கவே துணைபோகும்" என்று அந்த அறிக்கை கூறியது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே எப்படியாவது பிளவொன்றினை உருவாக்கி விடவேண்டும் என்று காத்திருந்த ஜெயாருக்கு இதன்மூலம் வெற்றி கிடைத்திருந்தது. இந்த இலக்கினை அடைவதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு அமைச்சர் சிறில் மத்தியூவை ஜெயார் பணித்திருந்தார். முன்னணி மீது மத்தியூவினால் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு, போராளி அமைப்புக்களின் வன்முறைகளின் பின்னால் இருப்பது முன்னணியினரே என்பதுடன், அதன் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தான் என்பதுமாக இருந்தது. பொலீஸார் மீதான தாக்குதல்களை முன்னணியினர் கண்டிக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களை சிறில் மத்தியூ முன்னணி மீது பிரயோகித்து வந்திருந்தார். அவரது விருப்பத்தின்படி, போராளிகளை கண்டித்து முன்னணியின் தலைமை அறிக்கையினை வெளியிட்டது. தனது வலையில் அமிர்தலிங்கமும் முன்னணியினரும் சிக்கிவிட்டதையடுத்து களிப்படைந்த ஜெயார், ஜெயரட்ணம் வில்சனை அமிர்தலிங்கத்திடம் தூதனுப்பி, உயர்மட்ட குழுவிற்கான கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தலாம் என்று கூறினார். அமிர்தலிங்கமும் உடனடியாகவே இதற்கு ஒத்துக்கொண்டார். ஜெயாரின் நம்பிக்கைக்குரியவரும், ராஜாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவை இன்னும் விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கினார். "மிதவாதிகளுக்கான கூட்டம்" என்கிற பெயரில் சிங்களவர்களையும் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழர்களையும் இணைத்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் தீவிரவாதிகளை முற்றாக ஓரங்கட்டி விடலாம் என்று எண்ணினார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம், சட்டம், ஒழுங்கு ஆகியவை தொடர்பாகவே இக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டங்கள் பற்றி அல்விஸ் பேசும்போது, அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து வன்முறைகளுக்கெதிரான மனோநிலையினை உருவாக்குவது, பயங்கரவாதத்தை நிராகரிப்பது, இன மத ரீதியிலான வன்முறைகளை தவிர்ப்பது ஆகியவையே தமது முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று கூறினார். இதன்மூலம், தமிழ் மக்களிடமிருந்து தம்மை முற்றாகவே அந்நியப்படுத்துவிடும் நடவடிக்கையிலேயே அரசு இறங்கியிருக்கிறது என்பதை போராளிகள் உணர்ந்துகொண்டனர். அரசியல்க் கட்சிகளுக்கிடையிலான மாதாந்தக் கூட்டங்கள் 1981 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதத்திலிருந்து ஆரம்பமாகின. ஒவ்வொரு கூட்டத்திலும் தான் எழுப்பவிருக்கும் கேள்விகள் குறித்த நகலை கூட்டத்திற்கு முன்பாகவே ஜெயாருக்கு அனுப்பிவைத்த அமிர்தலிங்கம், அக்கேள்விகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை இதன் மூலம் கூட்டத்திற்கு அழைக்கமுடியும் என்று நினைத்தார். இக்கூட்டங்களில் ஜெயார் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டதுடன், அமைச்சர்களும் கூட்டுறவுடன் செயற்பட விரும்புவது போலத் தெரிந்தனர். மேலும், முன்னணியினரால் எழுப்பப்பட்ட அனைத்து கரிசணைகள் தொடர்பாகவும் தாம் செயற்படப்போவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். பதிலுக்கு அரசை மகிழ்விக்க எண்ணிய முன்னணியினர், 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி குறிக்கட்டுவானில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தாம் கண்டிப்பதாக அறிக்கை விட்டனர். "எமது அரசியல்க் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்தவிதமான வன்முறைகளையும் ஆதரித்தது கிடையாது. இந்த கண்மூடித்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முன்னணியினரின் அறிக்கை கூறியது. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலை - 2015 முன்னணியினரின் இந்த அறிக்கையினை சிறில் மத்தியூ வரவேற்றார். காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலைக்குச் சென்றுகொண்டிருந்த அவர், அங்குவைத்தே இந்த அறிக்கையினை தான் வரவேற்பதாகக் கூற நினைத்தார். நானும் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். மத்தியூ தன்னுடன் விமானத்தில் காங்கேசந்துறைக்கு அழைத்துச்சென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். முன்னணியினரின் அறிக்கைக்குப் பதிலளித்து தான் வழங்கப்போகும் அறிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு தலைமை ஆசியரிடம் கூறுமாறு என்னை மத்தியூ பணித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தான் வழங்கப்போகும் அறிக்கையினால் முன்னணியினர் மீது போராளிகள் சினம் கொள்வார்கள் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. போராளிக் குழுக்கள், குறிப்பாக புளொட் அமைப்பு இதனால் அதிக சினங்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் அமைப்பு யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கியது. "ஜெயாரின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக இயங்கத் தொடங்கியிருக்கிறது" என்று அந்தச் சுவரொட்டிகள் விமர்சித்திருந்தன.
  16. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வைக்கப்பட்ட பொறி போராளிகளின் செயற்பாடுகள் நடந்துகொண்டிருந்த அதேவேளை, ஜெயரட்ணம் வில்சனின் உதவியுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு பொறியொன்றை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார் ஜெயவர்த்தன. ஜெயரட்ணம் வில்சன் , மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் வன்முறைகளின் காலம் கடந்துசென்றவுடன் அச்சபைகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை கலந்தாலோசித்து நிவர்த்திசெய்வதற்கு உயர்மட்ட அமைச்சர் குழுவுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் இணைத்து குழுவொன்றினை அமைக்கலாம் என்று ஜெயாரிடம் ஆலோசனை வழங்கினார். ஆனால், இந்த ஆலோசனையினை நிராகரித்த ஜெயார், தனது அமைச்சர்கள் இதற்கு ஒருபோதும் உடன்படமாட்டார்கள் என்று கூறினார். ஜெயவர்தன ஆனால், தமிழர் மீது அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணி வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட கையோடு கனடா திரும்பியிருந்த ஜெயரட்ணம் வில்சனை உடனடியாகக் கொழும்பு திரும்ப அழைத்த ஜெயவர்த்தன, வில்சன் முன்வைத்த உயர்மட்ட அமைச்சர்கள் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இணைந்த குழுவினை அமைக்க தான் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். தனது மொத்த அமைச்சரவையும் இந்த திட்டத்தை எதிர்த்தாலும்கூட, தான் இந்தக் குழுவை அமைத்தே தீருவேன் என்று கூறிய ஜெயார், தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இருந்துவரும் இனச்சிக்கலை இதன்மூலம் தீர்த்துவைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். ஆகவே, இதுதொடர்பான கலந்துரையாடல்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்று வில்சனிடம் கூறினார் ஜெயவர்தன. சில நாட்களுக்குப் பின்னர், அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஜெயாரை அவரது வீட்டில் சந்தித்தனர். அச்சந்திப்பில் அரச சார்பில் அமைச்சர்களான அத்துலத் முதலி, தொண்டைமான், நிசங்க விஜேரட்ண, ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம்.எச். முகம்மட் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜெயரட்ணம் வில்சன் ஜனாதிபதியின் ஆலோசகர் என்கிற ரீதியில் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று ஆவணி 31 ஆம் திகதி வெளியிடப்பட்டது, "ஜனாதிபதி ஜெயவர்த்தனா தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களும் , அண்மைய மாதங்களில் நாடுமுழுதும் அநியாயமான முறையில் இழக்கப்பட்ட உயிர்கள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன், இனங்களுக்கிடையிலான பதற்ற நிலையினை தளர்த்தி, ஒற்றுமையினையும் சமாதானத்தையும் உருவாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இணங்கியிருக்கிறார்கள். 1. ஜனாதிபதி தலைமையில் உயர்குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் பிரதம மந்திரி, அமைச்சர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்குத் தடையாக இருக்கும் அனைத்துக் காரணிகள் பற்றியும் இந்தக் குழு கலந்துரையாடும். 2.நாடு முழுவதிலும் இடம்பெறும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசியல்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமது பங்களிப்பினை வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். 3. மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் திறமையான செயற்பாட்டிற்கு தேவையான உதவியும் வழங்கப்படும். இப்படிக்கு, ஜே ஆர் ஜெயவர்த்தன, இலங்கையின் ஜனாதிபதி 31/08/1981 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் இக்குழுவின் முன்னால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்கு குழுவொன்றினை அமைக்கவிருப்பதாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாளான புரட்டாதி 13 ஆம் திகதி ஜெயார் ஒரு அறிவிப்பினை வழங்கினார். முன்னணியினரால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளாவன, 1. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். 2. பொலீஸ் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல். 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் தமிழ்பேசும் பொலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல். 4. வன்முறைகள் மீள் இடம்பெறுவதைத் தடுக்க ஊர்காவல்படையினை உருவாக்குதல். இக்குழுழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக நடைபெறுவதாக நம்பத் தொடங்கிய அமிர்தலிங்கம், ஊடகங்களிடம் பேசும்போது, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது பங்கிற்கு பாதித்தூரத்தைப் பயணிக்க விடும்புகிறது" என்று கூறியதுடன், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 3 மாதங்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது எனும் தனது முடிவையும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறினார். மொஹம்மட் ஹனீபா மொஹம்மட்
  17. இராணுவத்தின் மீதான முதலாவது தாக்குதல் சீலனின் சரித்திரம் சீலன் தலைமையில் புலிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்கிற செய்தி யாழ் பல்கலைக் கழகத்திற்குள் பரவியபோது "புலிகள் எல்லையைக் கடந்துவிட்டார்கள்" என்று தான் நினைத்ததாக பேராசிரியர் கைலாசபதி நினைவுகூர்ந்தார். அதுவரையில், பொலீஸார் மீதும், காட்டிக்கொடுப்பவர்கள் மீதும், அரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கெதிராக இயங்குவோர் மீதும் மட்டுமே தமது தாக்குதல்களை புலிகள் மட்டுப்படுத்தியிருந்தார்கள். இரு ராணுவ வீரர்களைக் கொன்று, அவர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றிய நிகழ்வே இராணுவம் மீது புலிகள் நிகழ்த்திய முதலாவது தாக்குதலாகும். இலங்கை ராணுவத்தின் முதலாவது ராணுவத் தளபதியாக திஸ்ஸ வீரதுங்கவை பதவியில் அமர்த்தும் உத்தியோக பூர்வ நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நாளை புலிகள் இராணுவம் மீதான தமது முதலாவது தாக்குதலுக்குத் தெரிவுசெய்தார்கள். 1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15 ஆம் திகதி இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. திஸ்ஸ வீரதுங்க இராணுவத் தளபதியாக பதவியேற்றப்பட்டு, அவரது நிலையும் லெப்டிணன்ட் ஜெனரல் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் ஜெயாரினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாரிய சித்திரவதைகள், கொலைகள் காணாமற்போதல்கள் என்பவற்றிற்குக் காரணமாக இருந்தவர். புலிகளின் தாக்குதல் சீலன் தலைமையில் நடைபெற்றது. அவ்வருடம், ஆனி மாதத்தில் பிரபாகரனுடன் கூடவே தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த சீலன், இராணுவத்தின்மீது தாக்குதல்களை நடத்துவதற்கென்று யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தமது தாக்குதலின் மூலம் புலிகள் பற்றிய மதிப்பினை மக்கள் மத்தியிலிருந்து குறைத்துவிடலாம் என்று புளொட் அமைப்பினர் எண்ணியிருந்தனர். ஆனால், பிரபாகரன் அதனை அனுமதிக்க விரும்பவில்லை. ஆகவே, ஆனைக்கோட்டைத் தாக்குதலைக் காட்டிலும் துணிகரமான நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரன் திட்டமிட்டார். ஆகவேதான், தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட கொடூரமான ராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க பதவியேற்கும் நாளில் ராணுவத்தின்மீது தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டார். இத்தாக்குதலுக்குப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தது , திருகோணமலை ஆலய வீதியைச் சேர்ந்த, உயர்ந்த ஆணழகனான் சீலனைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. சீலனுடன் பிரபாகரன் சார்ள்ஸ் லூக்காஸ் அந்தணி எனும் இயற்பெயருடைய சீலன் இயக்கத்திற்குப் புதியவர். இயக்கத்தில் சேர்ந்து இருவருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. போராட்டத்தின் மீதான ஈடுபாடும், பிரபாகரனுக்கான விசுவாசமும் அவரை முக்கியமான இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. சீலன் ஒரு வறிய கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். குடிகாரரான தகப்பனார் குடும்பத்தின் பொறுப்புக்களை கைகழுவி விட்டிருந்த நிலையில், மருத்துவர் ஒருவரின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த சீலனின் தாயாரே வீட்டின் சுமைகளைத் தாங்கி வந்தார். படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தபோதும் சீலனும் அவரது சகோதரியும் பெரும்பாலான நாட்களில் தண்ணீரையே மதிய உணவாக பாடசாலை விட்டு வீடு திரும்போது அருந்திவந்தனர். இலங்கைக் கொடியினை எரித்தார் என்பதற்காக பொலீஸாரால் சீலன் ஒருமுறை கடுமையாகத் தக்கப்பட்டிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு வருடங்களில் சீலன் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். சீலனின் போரிடும் ஆற்றல் கண்டு அவர்கள் பெரிதும் அஞ்சியிருந்தார்கள். ஆகவேதான், 1983 ஆம் ஆண்டு மீசாலையில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சீலன் என்று அவர்கள் அறிந்தபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ் குருநகர் முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சீலனின் மரணத்தை களியாட்ட நிகழ்வொன்றை ஒழுங்குசெய்து கொண்டாடி மகிந்தனர். பிரபாகரனோடு தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமுன் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் சீலனும் ஈடுபட்டிருந்தார். ராணுவ வாகனங்களின் நடமாட்டத்தை அவர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தார். இந்த ராணுவ வாகனங்களின் வாடிக்கையான பயணிக்கும் தெருக்கள், நேரங்கள், அவை பயணிக்கும் ஒழுங்கு ஆகியவற்றை அவர் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். அதன்படி, ஒவ்வொருநாள் காலையிலும் பலாலியிலிருந்து கிளம்பும் ராணுவத்தின் பொறியியல்ப் பிரிவிற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று கட்டடப் பொருடக்ளைக் கொள்வனவு செய்துகொண்டு திரும்புவதை சீலன் அவதானித்தார். இந்த ஜீப் வண்டி யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திலேயே தனக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யத் தரித்து நிற்கும். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இந்த அரச கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் வழமைபோல தமக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்வதற்கு ஐப்பசி காலை 10:30 மணிக்கு அந்த ஜீப் வந்தது. ராணுவத்தின் கொள்வனவு அதிகாரியான சார்ஜண்ட் தனது மெய்ப்பாதுகாவலரான லான்ஸ் கோப்ரல் ஹேவாவசத்துடன் கடைக்குள் சென்றுவிட, ராணுவச் சாரதி ஜீப் வண்டியிலேயே தலையை வாகனத்தில் திசைமாற்றியின் மேல் சாய்த்துக்கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தார். வாகனத்திலிருந்த இன்னொரு ராணுவ வீரரான திஸ்ஸேரா வாகனத்தை விட்டிறங்கி அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய 0.303 ரைபிள் வண்டிக்குள் கிடந்தது. இந்தத் தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் சீலன். சீலனும் அவரது மூன்று தோழர்களும் ஜீப்பின் பின்புறம் நோக்கிச் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்களது சைக்கிள்கள் ஜீப் வண்டியை அண்மித்ததும், திடீரென்று சைக்கிள்களிலிருந்து குதித்த சீலனும் இன்னொரு தோழரும் அவ்விடத்தில் நின்ற ராணுவ வீரகளான திஸ்ஸேரா மற்றும் ஹேவாவசம் ஆகியோரை மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர். பின்னர் ஜீப் வண்டியிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்து சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். சிங்கள இராணுவத்தினரும், பொலீஸாரும் தம்மீதான தாக்குதல்களுக்கு எவ்வகையான பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்பதை அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள், அன்றைய தாக்குதல் குறித்த செய்தி பரவியதும், உடனடியாகக் கடைகளைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். அனைத்துப் போக்குவரத்துக்களும் முற்றாக நிறுத்தப்பட்டதோடு, நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆனால், இவை எதுவுமே இராணுவத்தினர் தமது பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதைத் தடுக்கவில்லை. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அருகிலிருந்த வீடுகள் மீது இராணுவத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதோடு கண்ணில்ப் பட்ட அப்பாவிகளை கண்மூடித்தனமாக இராணுவம் தாக்கியது. இத்தாக்குதல் அரசுக்குப் பெரிய தலையிடியாக மாறியது. மன உளைச்சலுக்கு ஆளான பொலீஸார் மீது மட்டுமே தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அதுவரை நம்பிவந்த அரசின் எண்ணத்தை இத்தாக்குதல் சிதறடித்திருந்தது. "அவர்கள் இப்போது ராணுவத்திமீதே கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்று அரச ஆதரவாளர்கள் பேசத் தொடங்கினர். இத்தாக்குதல் நடைபெற்று எட்டு நாட்களுக்குப் பின்னர் அரசிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. புலிகளின் இத்தாக்குதலால் தாம் பிந்தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிய புளொட் அமைப்பு, ஐப்பசி 23 ஆம் திகதி கிளிநொச்சி மக்கள் வங்கியைக் கொள்ளையிட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த வங்கிக்கொள்ளையில் ராணுவத்தின் கெமுணு படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் விஜேவீர புளொட் அமைப்பினரால் கொல்லப்பட்டார். வங்கியின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரையின் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ அணியினால் வங்கிக் கொள்ளையினைத் தடுக்க முடியவில்லை. புளொட் அமைப்பினர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதிலும், அவர்களால் 270 லட்சம் ரூபாய்கள் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கொள்ளையின் பின்னர் மக்கள் வங்கி கிராமப்புற கிளைகளை மூடிவிட்டதுடன், பிரதான வங்கிகளின் அலுவலக நேரத்தினையும் குறைத்துக்கொண்டது. புளொட் கொடி கிளிநொச்சி வங்கிக் கொள்ளையே புளொட் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட இறுதியான நடவடிக்கையாகும். அதன்பின்னர் அந்த அமைப்பு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு, தை மாதம் 2 ஆம் திகதி அந்த அமைப்பின் உயிர்நாடியான சுந்தரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் கடுமையாக விமர்சித்து வந்த புளொட் அமைப்பின் இதழான "புதிய பாதை" பிரதிகளை யாழ்ப்பாணம் சித்ரா அச்சகத்தில் சரிபார்த்துக்கொண்டிருக்கும் போது அவர் சுடப்பட்டார். மார்க்ஸிசச் சிந்தனையுள்ள செயற்பாட்டாளராக விளங்கிய சுந்தரம், பிரபாகரனுடனான உமா மகேஸ்வரைன் பிணக்கின்போது, உமாவை ஆதரித்து அவருடன் சேர்ந்து வெளியேறியவர். பொலீஸ் விசாரணைகளின்போது, திறந்திருந்த அச்சகத்தின் யன்னலினூடாக சீலனே சுந்தரத்தைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்பட்டது. இதனை சந்தர்ப்பவாத இலக்கு என்று ராணுவ பாஷையில் அழைப்பார்கள். ராணுவத்தின் கவச வாகனப் பிரிவின் சார்ஜண்ட் அப்புகாமி தனது குடும்பத்தை நகவிகாரைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆகவே, அவருக்கு ஒரு ஜீப் வண்டியும் காவலுக்கு ராணுவ வீரர்களும் வழங்கப்பட்டிருந்தது. குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு ஜீப்வண்டியில் சென்ற அவர்கள் அங்கிருந்து படகின்மூலம் நாகவிகாரைக்குச் சென்றனர். ஜீப்பினை ஓட்டிச் சென்ற ராணுவச் சாரதி, படகுதுறையின் அருகிலிருந்த தேநீர்க் கடையின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் திசைமாற்றியில் தலையைச் சாய்த்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். காவலுக்கு அனுப்பப்பட்ட இரு ராணுவ வீரர்களும், தமது ஆயுதங்களை வண்டியினுள் வைத்துவிட்டு, சற்றுத் தூரத்தில் நின்று அலவலாவிக்கொண்டு நின்றனர். காந்தனும் அவரது அணியும் அவ்விடத்தில் தற்செயலாக வந்தபோது, ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தைக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க எண்ணினர். ஆகவே, சாரதியைச் சுட்டுக் கொன்றுவிட்டு வாகனத்திற்குள்ளிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாயினர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கி நிரப்பும் துப்பாக்கிகள் இரண்டும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் அவற்றுக்கான ரவைகளும் அடக்கம். தாக்குதல் நடப்பதை சற்றுத் தொலைவில் நின்று அவதானித்த இரு ராணுவ வீரர்களும் நீர் ஏரிக்குள் பாய்ந்து மறுகரை நோக்கி நீந்தித் தப்பித்துக்கொண்டனர். கிளிநொச்சி வங்கிக்கொள்ளையினை அடுத்து, ராணுவத்தினரும், பொலீஸாரும் தமது தேடுதல் நடவடிக்கைகளை கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து காந்தீயம் பண்ணைகளும் தேடுதல் வேட்டைகளுக்கு இலக்காகின. 1982 ஆம் ஆண்டு தை மாத இறுதியில் புளொட் அமைப்பைச் சேர்ந்த சிவம், மரியநாயகம், ஞானசேகரம், டிரக்டர் சிறி, பாங்கர், கணேசலிங்கம், ரொபேர்ட், பாரூக், உதயகுமார் ஆகியோர் பொலீஸாரின் தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இக்கைதுகள் புளொட் அமைப்பினை பெரிதாகப் பாதிக்கவில்லை. 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி, காந்தன் தலைமையில் சென்ற புளொட் அமைப்பினர் புங்குடுதீவில் அமைந்திருந்த குறிக்கட்டுவான் படகுத்துறையில் ராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் சார்ஜண்ட் அபெயரட்ண பண்டாவைச் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் தமது அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்டுவந்த அழுத்தத்தினைச் சமாளிக்கமுடியாது தள்ளாடிய உமா மகேஸ்வரன், கண்ணன் (சோமசுந்தரம் ஜோதீஸ்வரன்), காக்கா (துரைராஜா சிவனேஸ்வரன்), அன்டன் (சிவனாயகம் அன்பழகன்) மற்றும் தாசன் ஆகிய புளொட் முக்கியஸ்த்தர்கள் 1982 ஆம் ஆண்டு, மாசி மாதம் 25 ஆம் திகதி படகுமூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். ஏனையவர்களை தமிழ்நாட்டுக் கரையில் இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அன்டனை கடற்படையினர் கைதுசெய்தனர். விசாரணைகளின்போது, கிளிநொச்சி வங்கியிலிருந்து கொள்ளையடித்த நகைகள் கொண்ட இருபது பைகளுடன் உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாக அன்டன் கூறினார். மேலும், உமா மகேஸ்வரனும் ஏனையவர்களும் தம்முடன் உப இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் மூன்று கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. உமா தப்பிச் சென்ற மூன்றாவது நாள் குருநகர் ராணுவ முகாமிலிருந்து கிளம்பிய ராணுவ அணியொன்று வவுனியாவில் இயங்கிவந்த உமாவின் மறைவிடம் ஒன்றைச் சுற்றிவளைத்துக்கொண்டது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சமரில் புளொட் அமைப்பின் காந்தன் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலின்போது குறிக்காட்டுவான் தாக்குதலில் காந்தனால் கைப்பற்றப்பட்ட இரு தானியங்கி குண்டேற்றும் துப்பாக்கிகளும் பெருமளவு ரவைகளும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
  18. 1981 இனக்கலவரம் சிங்களக் காடையர்கூட்டங்களால் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகள் ஆகியவை கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டன . நகர்ப்பகுதிகளான இரத்திணபுரி, பலாங்கொடை, கஹவத்தை, கொழும்புக் கரையோரப்பகுதிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் ஆகியவை இந்த அரச ஆதரவுபெற்ற காடையர்களால் தாக்குதலுக்குள்ளாயின. கொள்ளைகளும், தீமூட்டல்களும், படுகொலைகளும் நாட்டின் உட்புறம் நோக்கியும் விரிவைடைய ஆரம்பித்தன. மலையகத் தோட்டப்பகுதிகளில் வீதிகளில் கத்திகள், வாட்கள், தடிகள், சைக்கிள்ச் சங்கிலிகளுடன் சுதந்திரமாக வலம் வந்த சிங்களக் காடையர் குழு தமிழர்களின் வீடுகளை கொள்ளையிட்டதுடன் தீமூட்டி அழித்தது. கையில் அகப்பட்ட தமிழர்களை வெட்டியும், அடித்தும் கொன்றது. காடையர்களுடன் வலம் வந்த பொலீஸாரும் இராணுவத்தினரும், காடையர்களின் செயலை ஊக்குவித்ததுடன், பலவிடங்களில் அவர்களுடன் சேர்ந்தே தாக்குதல்களில் இறங்கியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்கள் பல முற்றாகவே சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. பல தமிழர்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி அருகிலிருந்த காட்டுப் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இத்தாக்குதல்களில் குறைந்தது 25,000 மலையகத் தமிழர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகிய அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 10,000 தமிழர்கள் வீடுகளை இழந்திருந்தனர். மலையகத் தமிழர் மீது அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதலால் மிகவும் கோபமடைந்திருந்து காணப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமானும், செயலாளர் செல்லச்சாமியும் ஆவணி 17 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேசில் அமைந்திருந்த ஜெயாரின் வதிவிடத்திற்குச் சென்று, "ஒன்றில் எனது மக்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திவரும் தாக்குதலை உடனே நிறுத்துங்கள், அல்லது நான் அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டி வரும்" என்று கூறவும், தனது பாதுகாப்புப் பிரிவினரான உதவி பாதுகாப்பமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் செயலாளர் தர்மபால, ஒருங்கிணைப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல , பொலீஸ் மா அதிபர் அனா சென்விரட்ண ஆகியோருடன் உயர் பாதுகாப்பு மாநாட்டில் ஈடுபட்டிருந்த ஜெயவர்த்தன, தொண்டைமானைச் சாந்தப்படுத்தும் நோக்கில், "அதைத்தான் நாங்கள் அனைவரும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார். தனது மக்கள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துவதை உடனடியாகத் தடுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன உட்பட பல உயர் அதிகாரிகளுடன் தொண்டைமான் அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். அவர்களுடனான அவரது உரையாடல்கள் மென்மையாக இருக்கவில்லை, அவரது குரலில் கோபமும் அழுத்தமும் தெரிந்தது. "உங்கள் அனைவருக்கும் நான் பலமுறை தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இதுவரை நீங்கள எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. காடையர்கள் எமது தெருக்களில் வலம்வந்து எமது மக்களைத் தாக்குகிறார்கள். எனது மக்களை தனியாகப் பிரித்தெடுத்து கொலை செய்கிறார்கள். இந்தக் காடையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் உங்கள் அரசாங்கத்தில் இருக்கும் பலம்வாய்ந்த அமைச்சர்கள் ஆதரவு வழங்கிவருகிறார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். உங்களால் இந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கூறுங்கள். எனது மக்கள் தமது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தேவையானதைச் செய்வார்கள்" என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார். இதனையடுத்து தானே செயலில் இறங்கிய ஜெயவர்த்தன, உடனடியாக இராணுவத்தினரையும், பொலீஸாரையும் மலையகத்திற்கு அனுப்பி நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். மலையகத் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தமிழகத்திலும், இந்தியாவிலும் எதிரொலித்தது. 1981 ஆம் ஆன்டு ஆவணி 19 ஆம் திகதி தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இத்தாக்குதல்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் "கவனயீர்ப்பு நடவடிக்கை" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். இதுகுறித்து லோக்சபாவில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ, இந்த வன்முறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தல் வன்முறைகள், ஆனைக்கோட்டைத் தாக்குதல் ஆகியவற்றிற்குப் பிறகு கொழும்பிற்கும் மலையகப் பகுதிகளுக்கும் பரவியதாக இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். குறிப்பாக மலையகத் தோட்டங்களில் வேலைபார்ப்பவர்கள். பல தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். நரசிம்ம ராவோ "இலங்கையரசாங்கம் அவசரகால நிலைமையினைப் பிரகடணம் செய்திருக்கிறது. மேலும், நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அது செய்துவருகிறது. நாட்டின் இன்னமும் சுமூகமான நிலை திரும்பாதலால், மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் நிலவுகிறது. அதனால், இந்திய பிரஜைகளுக்கு உண்மையாகவே நடந்த அநர்த்தங்கள் பற்றி தெளிவான தகவல்கள் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார். "அங்கு நடப்பது நிச்சயமாக இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. ஆனாலும், இந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கே நடந்துவரும் அவலங்கள் குறித்த இந்தியாவின் கவலையினை இலங்கை அரசிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய பூர்விக்கத்தைக் கொண்டவர்கள், சிலர் இந்தியக் குடிமக்கள். ஆகவே, இந்த வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் இலங்கையரசின் நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தற்போது நடைபெற்றுவரும் சிக்கல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படுவதுடன் சரித்திர காலம் தொட்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் நட்புறவு மீது எழும் எந்தச் சந்தேகமும் முற்றாகக் களையப்பட்டு விடும் என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார். கதிர்காமம் - முழுச் சிங்கள பெளத்த மயமாக்கலின் பின்னால் இந்தியப் பிரஜைகள் மீதான முதலாவது தாக்குதல் சம்பவம் புரட்டாதி மாதம் முதலாம் வாரத்தில் இடம்பெற்றது. தென்னிந்திய யாத்திரீகர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருந்த பஸ்வண்டி திஸ்ஸமஹராம எனும் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. தனபதி எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உள்ளூர்த் தலைவர் ஒருவரும் அப்பேரூந்தில் பயணம் செய்திருந்தார். பேரூந்து இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டதையடுத்து, அருகிலிருக்கும் வாகனத் திருத்துமிடமொன்றிற்குச் சென்று உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். தம்மிடம் உதவிகேட்டு வந்திருப்பது தமிழர் என்பதை அறிந்துகொண்ட அங்குநின்ற சிங்களவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு வாட்களால் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்ததுடன், சென்னையில் ஒருநாள் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்ய சபாவில் (மேற்சபை) இந்தத் தாக்குதல் குறித்து புரட்டாதி 11 ஆம் திகதி விவாதித்திருந்தனர். மேற்சபையில் பேசிய நரசிம்ம ராராவோ, இலங்கையின் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் நடந்த வன்செயலுக்காக வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தமிழ்நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். "இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்செயல்கள் முழுக்க முழுக்க இலங்கையின் உள்விவகாரமாக இருந்தபோதும், நாம் இலங்கை அரசுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தற்போது இடம்பெற்றுவரும் வன்செயல்கள் குறித்த இந்தியாவின் கவலையினை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு தகவல்களை வழங்கிவரும் இலங்கையரசு, தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எமக்கு விளக்கமளித்திருக்கிறது. இவ்விடயங்கள் குறித்து தாம் அதியுச்ச கவனம் எடுத்திருப்பதாகவும், இவற்றினை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்துவருவதாகவும் இலங்கையரசு எமக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது" என்றும் அவர் கூறினார். தொண்டைமானின் வற்புருத்தலின் காரணமாக மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரத்திணபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார் ஜெயவர்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் பேசும்போது, தான் சிங்கள பெளத்த தீவிரவாதிகளின் நாசச் செயலினால் வெட்கப்படுவதாகக் கூறினார். "அவர்கள் மிருகங்கள். அவர்கள் மிருகங்களைக் காட்டிலும் கீழ்த்தரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் அவலங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார். ஆனால், ஜெயவர்த்தனவின் இந்த முதலைக் கண்ணீரை தமிழர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. இதுகூட அவரது சூழ்ச்சியின் ஒரு பகுதிதானோ என்று அவர்கள் எண்ணினார்கள். "தனது சிங்கள மக்கள் எம்மீது இந்த அக்கிரமங்களை நடத்தும்வரையில் அவர் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்?" என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நியூஸ் இன்டர்னஷனல் எனும் செய்திச்சேவை, ஜெயாரின் வேஷம் தொடர்பாகத் தமிழர் கொண்டிருந்த சந்தேகங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தது. "அவர்கள் உங்களை ஒரு ஏமாற்றூப்பேர்வழியென்றும், சூழ்ச்சிக்காரர் என்றும் அழைக்கிறார்களே?" என்று அச்செய்தியாளர் கேட்டதற்கு, "அவர்கள் என்னை ஏமாற்றுப்பேர்வழி என்றும் சூழ்ச்சி செய்பவர் என்றும் அழைப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஏமாற்றத் தெரியாதவராகவோ சூழ்ச்சி செய்யத் தெரியாதவராகவோ இருந்தால் , ஒரு நாட்டின் தலைவராக இருப்பதில் அர்த்தமில்லை. அரசியல் என்றாலும், போரென்றாலும் தனிமனித வாழ்வென்றாலும், சூழ்ச்சிகளின்றி வெற்றிபெற முடியாது. ஒரு குத்துச்சண்டை வீரர் கூட சூழ்ச்சி செய்யவேண்டும், எதிரியை ஏமாற்ற வேண்டும். நான் இளவயதினனாக இருக்கும்போது குத்துச்சண்டையில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் எதிரியின் முகத்தில் அடிப்பதுபோல் பாசாங்குசெய்துவிட்டு, வயிற்றில் குத்த வேண்டும். ஆமாம், நீங்கள் கட்டாயம் சூழ்ச்சி செய்யவே வேண்டும்" என்று சாதாரணமாகப் பதிலளித்தார். ஆவணியில் இடம்பெற்ற வன்முறைகள் இந்திய மேற்சபையில் மார்கழி 18 ஆம் திகதி மீண்டும் எதிரொலித்தன. நரசிம்ம ராவோ பேசும்போது, ஆவணி வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். பொலீஸாரின் கூற்றுப்படி 7 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, 196 எரிப்புச் சம்பவங்களும், 35 கொள்ளைச் சம்பவங்களும், 15 வழிப்பறிச் சம்பவங்களும், 7 காயப்படுத்தல்களும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதாக அவர் கூறினார். "இந்திய அரசு, இலங்கையரசுடன் நெருக்கமான தொடர்பாடல்களைப் பேணி வருவதுடன், எமது கவலையினை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட இலங்கையரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதிய பலனைத் தந்திருப்பதாக இந்தியா ஏற்றுக்கொள்கிறது" என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையரசால் உத்தியோகபூர்வமாக் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரசிம்ம ராவோ பேசிவருவதாக லண்டன் ஒப்சேர்வர் பத்திரிக்கையில் ப்றையன் ஏட்ஸ் எனும் பத்திரிக்கையாளர் 1981 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி இப்படி எழுதுகிறார், "இலங்கையில் தேற்கிலும், கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்களுக்கெதிராகவே ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் சிங்களவர்களால் திட்டமிட்ட முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவாகிறது. இத்தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட தாக்குதல்கள் என்பதும் தெளிவாகிறது. இந்த அமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய தோழர்கள். குறைந்தது 25 தமிழர்கள் கொல்லப்பட்டும், பல தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் வாழ்நாள் சொத்துக்களும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முழு முட்டாள்த்தனமான அக்கிரமங்களை நிகழ்த்தியவர்கள், சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும், தமிழர்களின் இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்கெதிரான தடுப்பு நடவடிக்கையாகக் காட்டவுமே இந்தப் பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். இலங்கை எனும் தீவு முகம்கொடுத்துவரும் பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது" என்று கூறுகிறார்.
  19. ஆனைக்கோட்டைத் தாக்குதல் தமிழ் மக்களின் சரித்திரத்தில் சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட இன்னொரு அவமானமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முடிவடைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பின் உதவித்தலைவர் சுந்தரம் தலைமையில் அவ்வமைப்பினர் யாழ்ப்பாணத்திலிருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு பொலீஸ் நிலையத்திலிருந்த அனைத்து ஆயுதங்களையும் புளொட் அமைப்பினர் எடுத்துச் சென்றிருந்தனர். சிங்கள அதிகார மமதைக்கு விழுந்த முதலாவது குறிப்பிடும்படியான அடியாக இத்தாக்குதலைக் குறிப்பிட முடியும். மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட இத்தாக்குதல் ஆடி மாதம் 27 ஆம் திகதி இரவு 10 மணிக்கு நடத்தப்பட்டது. வான் ஒன்றைக் கடத்திக்கொண்டு பொலீஸ் நிலையத்திற்குச் சென்ற புளொட் போராளிகள், வாயிற்கதவை தட்டினார்கள். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் கதவைத் திறக்கவே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட அவர் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். வாசலில் சூட்டுச் சத்தங்கள கேட்டதையடுத்து உள்ளேயிருந்த கொன்ஸ்டபிள்களான ஜயரத்ண, குருசாமி மற்றும் பந்துலசேன ஆகியோர் வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த பதினேழு 0.303 ரைபிள்கள், ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஐந்து ஷொட் கண்கள், சுமார் 1500 ரவைகள் என்பன புளொட் போராளிகளால் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்ததும் தாம் வந்த வாகனத்திலேயே அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். காயப்பட்ட நிலையிலிருந்த பொலீஸாரை யாழ் மருத்துவமனையில் அனுமதித்தபோது, கொன்ஸ்டபிள் ஜயரத்ண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1971 ஆம் ஆண்டில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பொலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெற்ற மிகவும் துணிகரமான இத்தாக்குதலால் ஜெயாரும், பொலீஸாரும் நிலைகுலைந்து போயினர். இலங்கைப் பாதுகாப்புத்தரப்பும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானது. தேசிய பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் டி.வி. வீரப்பிட்டிய இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். முதலாவதாக யாழ்ப்பாணத்தில் மீளவும் ராணுவத் தலைமைக் காரியாலயம் ஒன்றினை நிறுவுவது. இரண்டாவது சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடுவதுடன், ஓரளவு பெரிய பொலீஸ் நிலையங்களின் பாதுகாப்பினை அதிகப்படுத்துவது. ஜெயாருடன் சிறில் ரணதுங்க ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் நடைபெற்று சரியாக இரு நாட்களுக்குப் பின்னர், அதாவது ஆடி 29 ஆம் திகதி பிரிகேடியர் சிறில் ரணதுங்க வடமாகாணத்தின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதுடன், அவர் தனது தலைமைக் காரியாலயத்தை பலாலி இராணுவ முகாமில் உருவாக்கினார். அவருக்கு உதவியாக லெப்டினண்ட் ஜெனரல் டென்சில் கொப்பெக்கடுவ எனும் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆவணி 11 ஆம் திகதி குருநகரில் அமைந்திருந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. டென்சில் கொப்பெக்கடுவ பிரிகேடியர் சிறில் ரணதுங்க இராணுவப் புலநாய்வு அமைப்பை உருவாக்கியதுடன் ராணுவத்தினதும், பொலீஸாரினதும் புலநாய்வு வலையமைப்புக்களை ஒருங்கிணைந்து செயற்படப் பணித்தார். மேலும், பலவீனமான, சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடும் நடவடிக்கையும் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் 9 நிலையங்கள் மூடப்பட்டதோடு, மீதி 7 நிலையங்களினதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கால்நடையாகப் பொலீஸார் ரோந்துசெல்வதை நிறுத்திய சிறில் ரணதுங்க, வாகனங்களில் மட்டுமே குழுக்களாக ரோந்தில் ஈடுபடமுடியும் என்று பொலீஸாரைப் பணித்தார். பெரும்பாலான நேரங்களில் பொலீஸ் வாகனங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ வாகனங்களும் ரோந்துகளில் இணைந்துகொண்டன. பொலீஸாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்ணுற்ற வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பலர், பொலீஸார் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதைக் கைவிட்டு இராணுவ வீரர்கள் போல் செயற்படுகிறார்கள் என்று எழுதத் தொடங்கினர். ஆனைக்கோட்டைத் தாக்குதலால் கடுமையான சிற்றமடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, அதுபற்றிப் பேசுவதற்காக ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். "அதை என்னிடம் விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது. ஆனால், மத்தியூவிற்கோ அந்தப் பதிலினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, மறுநாள் காலை , 28 ஆம் திகதி, ஆவணி 1981 ஆம் ஆண்டு அவர் ஜெயாருக்குக் கடிதம் ஒன்றினை எழுதினார். கனம் ஜனாதிபதி அவர்களுக்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரை மகிழ்விக்க நீங்கள் தேவைக்கதிகமாக வளைந்து கொடுப்பதாக நான் உணர்கிறேன். இந்த வளைந்துகொடுத்தல்கள் இன்னும் அதிகமானால், நீங்கள் உங்களின் சமநிலையினை இழந்து கீழே மல்லாக்காக விழுந்துவிடப்போகிறீர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கப்போவதில்லை. அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்யச் சென்றுவிடுவார்கள். இப்படிக்கு சிறில் மத்தியூ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மகிழ்விப்பதையே ஜெயார் தனது தலையாய கடமையாகச் செய்துவருவதாக மத்தியூ குற்றஞ்சாட்டுவதற்கு அமிர்தலிங்கத்தின் மீதான தண்டனைக்கு தான் பரிந்துரை செய்தவற்றினை ஜெயார் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கோபமே காரணமாக இருந்தது. ஆனால், அரசியல் யாப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பின்பர் மீது கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அதிகாரம் அப்போது இருந்தது. மத்தியூவின் கடிதம் ஜெயவர்த்தனவுக்கு கடும் சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடம் எழுத்துமூலமாக சிறில் மத்தியூ மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜெயார் கோரினார். மத்தியூவும் அப்படியே செய்திருந்தார். தனது ஏவலாளிகளைத் தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான பணிகளை வழங்குவதிலும் ஜெயவர்த்தன மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வந்தார். ஜெயாரினால் மத்தியூவிற்கு வழங்கப்பட்ட பணி சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருப்பதே. மத்தியூவை ஜெயவர்த்தனா சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருக்கப் பணித்திருந்தபோதும், அவர் தன்னைக் காட்டிலும் மக்களிடையே பிரபலமாவதை அவர் விரும்பியிருக்கவில்லை. மத்தியூவின் குறைந்த குலத்தினால் அவரை ஒருபோதுமே பெளத்த மகாசங்கத்தினர் சிங்கள பெளத்தர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஜெயவர்த்தனா நன்கு அறிந்தே இருந்தார். இதனாலேயே அவரை பெளத்த சாசன அமைச்சராக ஆக்குவதை ஜெயவர்த்தன தவிர்த்து வந்தார். மத்தியூவும், ஏனைய சிங்கள இனவாதிகளும் நாட்டில் தமிழருக்கெதிரான வன்மத்தை உருவேற்றிக்கொண்டு வந்தனர். அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தான் நிகழ்த்திய பேச்சின் 20,000 பிரதிகளை அவர் பெளத்த விகாரைகள், பொலீஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரச கூட்டுத்தாபனங்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றிற்கு அனுப்பி வைத்தார். அவரது பேச்சின் பிரதிகளோடு, தமிழ் ஈழம் அமையும் பட்சத்தில் எத்தனை பெளத்த விகாரைகள் தமிழர்கள் வசமாகும் என்கிற விபரங்களோடு வரைபடங்களையும் அவர் அனுப்பிவைத்தார். நாடெங்கிலும் சிங்களவர்களை விழித்து, "சிங்கள மக்களே" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் மத்தியூவினால் ஒட்டப்பட்டு வந்தன. "திராவிடர்களுக்கெதிராக கிளர்ந்தெழுங்கள்" என்கிற வாசகங்கள் நாடெங்கிலும் ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்கள் கட்டாயம் குடியேறவேண்டும் என்றும், அதன்மூலமே பெளத்த சின்னங்களும், விகாரைகளும் பாதுகாக்கப்பட முடியும் என்றும் அவர் சிங்கள மக்களை வேண்டிக்கொண்டார். இவ்வாறான இனவாதத் தூண்டுதல்களின் ஒரு கட்டமாக தமிழர்களுக்கு கூட்டுத்தண்டனை ஒன்றினை நிச்சயம் வழங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி அரச அமைச்சர்களிடையே சுடர்விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. விமலா கன்னங்கர கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் விமலா கன்னங்கர ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, "நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்றால், நாமே ஆட்சி செய்ய வேண்டும். நாம் ஆளுகிறோம் என்றால், நாமே ஆள வேண்டும். சிறுபான்மையினத்தினருக்கு நாம் எதையுமே கொடுக்கக் கூடாது. நாம் சிங்கள பெளத்தர்களாக இந்நாட்டில் பிறந்திருக்கிறோம். நாம் பெரும்பான்மையின மக்களாக இருந்தபோதும் கூட, கடந்த நான்கு வருடங்களாக சிறுபான்மையினத்தவருக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறோம். நாம் மீண்டு பெரும்பான்மையின மக்களாக இந்த நாட்டினை ஆளவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். தமிழருக்கெதிரான வன்மம் மொத்தச் சிங்கள இனத்திற்குமே பற்றிக்கொண்டது. ஆங்காங்கே தமிழருக்கெதிரான வன்முறைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் உடனடியாகவே கண்டித்திருந்தனர். பொலீஸாரைக் கொல்வது உணர்வற்ற ஒரு நடவடிக்கை என்று அவர்கள் விமர்சித்திருந்தனர். ஆனால், நாட்டில் தமிழர்களுக்கெதிராக சூழ்கொண்டுவந்த வன்மத்தை அவர்களால் தணிக்க முடியவில்லை. ஆனைக்கோட்டைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கொன்ஸ்டபிள் ஜயரத்ணவின் உடல் அவரின் ஊரான இரத்திணபுரிக்குக் கொண்டுவரப்பட்டபோது வன்முறைகள் வெடித்துக் கிளம்பின.
  20. அமிர்தலிங்கத்தைக் கொல்லும் வழிவகைகளை பாராளுமன்றத்தில் ஆராய்ந்த பேரினவாதிகள் கண்டுகொள்ளப்படாத செய்தி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் மூலம் தாம் இரு முக்கிய செய்திகளை சிங்கள அரசிற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கியதாக தமிழர்கள் நினைத்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு பெருவாரியாக வாக்களித்ததன் மூலம் தமிழர் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தார்கள். அதாவது, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்று வேண்டுமென்றும், அந்தச் சுதந்திரமான நாட்டை அடைவதன் மூலம் தமது இன உரிமைகள், சுயகெளரவம், பாதுகாப்பு, இருப்பிற்கான உத்தரவாதம், தமது நிலம் மீதான அதிகாரம் ஆகியவற்றை மீள தமதாக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும், இதனை வன்முறைகளற்ற வழியில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற மிதவாதத் தலைமைகளினூடாகவே அடைய விரும்புகிறார்கள் என்பதையும் உரத்துக் கூறியிருந்தார்கள். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் தலைவரான ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் தமிழர்கள் வழங்கிய செய்தியின் முதற்பகுதியினை மட்டுமே பார்க்க விரும்பினார்கள், அதாவது தமிழர்களுக்கான தனிநாடு என்பது. ஆகவே, பிரிவினைவாதத்தை தமிழர்களிடையே விதைத்துவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். ஆனால், தமிழர்கள் எதற்காககத் தனிநாடு நோக்கித் தள்ளப்பட்டார்கள் என்பதையோ அல்லது அவர்களை உந்தித்தள்ளிய பிரச்சினைகளை எங்கணம் கையாள்வது என்பதுபற்றியோ அவர்கள் கிஞ்சித்தும் ஏறெடுத்துப் பார்க்கத் தயாராக இருக்கவில்லை. கோபமும், வெறுப்பும் அவர்களின் கண்களை மறைக்க, அவர்கள் தமிழர்களின் இரண்டாவது செய்தியை முற்றாகப் பார்க்கத் தவறினார்கள். அதுதான், தமிழர்கள் தமது இல்ட்சியத்தை அடைய வன்முறைகளற்ற, ஜனநாயக வழிகளிலேயே போராடுவார்கள் என்பது. மேலும், தேர்தல்களில் பங்குகொள்ள வேண்டாம் என்று புளொட் அமைப்பின் கோரிக்கையினை முற்றாக புறக்கணித்த தமிழ் மக்கள், அவர்களின் அச்சுருத்தல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்பதையும் நிரூபித்திருந்தார்கள். இதனைக்கூட ஜெயாரின் இனவாத அரசு பார்க்க மறுத்துவிட்டது. தமிழர்கள் இத்தேர்தலின் மூலம் வழங்கிய செய்தியைத் தெளிவாகப் புரிந்திருந்தால், ஜெயாரின் அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் பங்கெடுப்பதென்று எடுத்த தீர்மானத்தை ஆதரித்து, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்ட இந்த தீர்வை வாழங்கியிருக்கும். ஆனால், ஜெயாரோ வடக்குக் கிழக்கில் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கு முட்டுக்கட்டைகளைப் போடுவதற்கு ஆரம்பித்தார். இந்த சபைகள் இயங்குவதற்கான அதிகாரங்கள் என்று தானே வரைந்தவற்றை வழங்குவதற்குப் பிடிவாதமாக மறுத்த ஜெயார், இச்சபைகளை இயக்குவதற்கான நிதியினை முற்றாகத் தடுத்துவிட்டதுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும், தமிழர்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை முடுக்கிவிட்டார். தமிழர்களின் தனிநாட்டிற்கான கோரிக்கையென்பது பாரிய தண்டனைக்குரிய குற்றம் என்று வரிந்துகொண்டு ஜெயாரும் அவரது அரசாங்கமும் செயலில் இறங்கின. ஜெயவர்தன ஒருபோதுமே ஒரு சிறந்த அரசியல்த் தலைவராகவோ, எதிர்காலம் குறித்து சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவராகவோ இருந்ததில்லை. பல அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை ஜெயார் ஒரு தூரநோக்குச் சிந்தனையற்ற, அரசியல் சூதாட்டங்களில் தேர்ச்சிபெற்ற, தனது எதிரிகளை சூழ்ச்சிகள் மூலம் பலவீனமாக்கி தனது அரசியல் ஸ்த்திரத்தன்மையினை எப்படியாவது உறுதிசெய்துகொள்ளத் துடிக்கும் அதிகார வெறிபிடித்தவர் என்றே கணிப்பிட்டிருந்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு இத்தேர்தலில் தமிழர்கள் வழங்கியிருந்த அமோக ஆதரவு தனது அரசியல் அதிகாரத்திற்கும், தனது இனமான சிங்களவர்களுக்கும் எதிராக தமிழர்கள் விட்ட சவால் என்று ஜெயார் எண்ணினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைமையினைப் பலவீனமாக்கியும், தமிழர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டும் அவர்களின் குரலை அடக்கிவிட முடியும் என்றும் ஜெயாரின் எதிர்பார்ப்பு, முன்னணிக்கு தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் மூலம் கடுமையாகச் சிதைவடைந்து போனது. அத்துடன், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதிலும், தமிழ் மக்களை போராளிகளை நோக்கித் தள்ளுவதிலுமே ஜெயாரின் செயற்பாடுகள் வந்து முடிந்திருந்தன. தமிழர்களின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தைத் தீக்கிரையாக்கியது, தமிழ் அறிஞர்கள், புலவர்கள் மற்றும் மூதாதையர்களான திருவள்ளுவர், ஒளவையார், ஆறுமுகநாவலர் ஆகியோரின் உருவச் சிலைகளை உடைத்தது, தமிழரின் பொக்கிஷமான யாழ் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் வீட்டைத் தீக்கிரையாக்கியது, அமிர்தலிங்கத்தைக் கைதுசெய்து அவமானப்படுத்தியது என்று ஜெயாரின் இனவாத அரசு செய்திருந்த காட்டுமிராண்டித்தனங்கள் தமிழர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தன. அப்படியிருந்தபோதிலும் கூட, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் மூலம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் ஜெயாரின் தீர்வுடன் தாம் சேர்ந்து பணிபுரிய தயார் எனும் செய்தியையும் அனுப்பியிருந்தனர். இதற்கு அரசால் வழங்கப்பட்ட பதில் யாதெனில், தமிழர்கள் மீது அரச பயங்கரவாதிகளான பொலீஸாரும், இராணுவத்தினரும் நடத்திய வன்முறைகளைச் சரியென்று நியாயப்படுத்தியதுதான். ஆகவேதான், ஜெயாரின் அடியாட்களில் ஒருவரான அமைச்சர் சிறில் மத்தியூ யோகேஸ்வரனின் வீட்டை பொலீஸார் எரியூட்டியதை பாராளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசினார். மேலும், அரசாங்கத்தின் தலைவரான ஜெயார் ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்திய வார இதழான இந்தியா டுடேக்கு வழங்கிய நேர்காணலில் இதனை மேலும் உறுதிப்படுத்தியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், யாழ் நூலகம் பொலீஸாரால் எரியூட்டப்பட்ட சம்பவம் உட்பட யாழ்நகரில் பொலீஸாரும், இராணுவத்தினரும் இணைந்துநடத்திய வன்முறைகளை "யாழ்ப்பாணச் சரித்திரத்தின் இருண்ட பக்கங்கள்" என்று வர்ணித்திருந்தார். யொகேஸ்வரன் பேசும்போது தனது வீட்டினை பொலீஸார் எரித்தபோது தான் எப்படி தனது உயிர்கைரைக் காத்துக்கொள்ள தப்பியோடினேன் என்று விபரித்தார். "சமாதான காலத்தில், எந்தவொரு நாகரீகமடைந்த நாட்டிலும் நாம் பார்க்கமுடியாத வன்முறைகளையும், கொடூரங்களையும் உங்களின் அரச இயந்திரத்தை கட்டவிழ்த்து விட்டு அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டீர்கள். தனிப்பட்ட ரீதியில் நானும் அனைத்தையும் இழந்திருக்கிறேன்" என்று அரசை விமர்சித்தார். பொலீஸாரின் வன்முறைகளை நியாயப்படுத்திய அமைச்சர் சிறில் மத்தியூ, பயங்கரவாதிகளுடன் யோகேஸ்வரன் கூட்டமொன்றினை தனது வீட்டில் நடத்திவந்ததாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால், சிறில் மத்தியூவின் கபடத்தனமான இக்கூற்றினை யோகேஸ்வரன் முற்றாக நிராகரித்தார். இதன்போது பேசிய மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம், "அமைச்சர் சிறில் மத்தியூவினால் வழங்கப்பட்ட அறிவுருத்தல்களின் அடிப்படையிலேயே பொலீஸார் யோகேஸ்வரனின் வீட்டைக் கொழுத்தினார்கள்" என்று கூறினார். எஸ்.வெங்கட் நாராயணன் ஒருமாத காலத்திற்குப் பின்னர் இந்தியா டுடேயின் செய்தியாளர் வெங்கட் நாராயணனுக்கு ஜெயார் வழங்கிய செவ்வியில் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டினை மேலும் உறுதிப்படுத்தியிருந்தார். வெங்கட் நாராயணன் : யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள். சுமார் 50 வருடங்கள் பழமைவாய்ந்ததும், 96,000 விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொண்டிருந்ததுமான அவர்களின் நூலகத்தை பொலீஸார் எரித்தது மற்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டை பொலீஸாரே எரித்ததும் தமிழர்களுக்கு கடுமையான மனவேதனையைக் கொடுத்திருக்கிறதே? ஜெயவர்த்தன : ஏனென்றால், யோகேஸ்வரன் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்று பொலீஸார் நினைக்கிறார்கள். அதனால்த்தான் அவரது வீட்டை அவர்கள் எரித்தார்கள். வெங்கட் நாராயணன் : அன்றிரவு பொலீஸார் நடந்துகொண்ட முறையினைப் பார்க்கும்போது, யோகேஸ்வரனைக் கைதுசெய்து கொல்லும் நோக்கத்துடன் செயற்பட்டிருப்பதாகத் தெரிகிறதே? ஜெயவர்தனா: பயங்கரவாதிகள் கூட இதனைத்தானே செய்கிறார்கள்? டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் புரட்டாதி 7 ஆம் திகதி இந்த செவ்வி மீள்பிரசுரமாகியது. அந்தக் காலத்தில் ஜெயவர்த்தனவின் தமிழர் மீதான மனோநிலை எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது குறித்தோ அல்லது யோகேஸ்வரனின் வீடு எரிக்கப்பட்டது குறித்தோ ஜெயவர்த்தன எந்தவித அனுதாபமும் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், இவை இரண்டையுமே பொலீஸார்தான் செய்தார்கள் என்பதனையும் அவர் மறுக்கவில்லை. தனது அடுத்தகேள்வி குறித்து வெங்கட் நாராயணன் விவரிக்கும்போது, ஜெயாரின் நிலைப்பாடு "பழிக்குப் பழி வாங்குவது" போன்றே இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், ஜெயாரின் "பழிக்குப் பழி வாங்கும்" விளையாட்டு கடுமையான சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்தில் அரசால் நடத்தப்பட்ட வன்முறைகளைக் காட்டி, தமிழர்கள் தமது சொந்த வாழிடங்களிலேயே வாழ்வதற்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லையென்பதை தெளிவாகக் விளக்கியிருந்தார். மேலும், 1956, 1958 ஆம் ஆண்டு சிங்களப் பகுதிகளிலும், கிழக்கில் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு அண்மையிலும் வசித்த தமிழர்கள் மீது அரசும் சிங்கள மக்களும் நடத்திய தாக்குதல்கள் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், 1979 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழர்களுக்கு அவர்களின் சொந்தத் தாயகத்தில்க் கூட பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாடுகளில் அமிர்தலிங்கம் மேற்கொண்ட பேச்சுக்களால் கடுஞ்சீற்றம் கொண்ட அரசாங்கம், அரச ஊடகத்துறையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முடுக்கிவிட்டது. இதற்குச் சமாந்தரமாக தமிழர்களுக்கெதிரான வெறுப்பை உமிழும் பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அமிர்தலிங்கம் நாடு திரும்பியதுடன் அரசுக்கெதிரான நம்பீகையில்லாப் பிரேரணையொன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. அதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின்மீது ஜெயாரின் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைத்தது. இந்தப் பிரேரணை 36 ஐக்கிய தேசியக் கட்சி பா. உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் முன்வைக்கப்பட்டிருந்தது. உலகப் பாராளுமன்றச் சரித்திரத்தில் அதுவரை கண்டிராத, பகுத்தறிவற்ற பாராளுமன்ற நிகழ்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் பிரேரணையைக் குறிப்பிடலாம். இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில், அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையினையே முதலில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்று அரசு முடிவெடுத்தது. அதன்படி ஆடி 23 , 24 ஆகிய நாட்களில் இந்த விவாதம் நடந்தது. பாணதுறை பா.உ நெவில் பெர்ணான்டோ இந்த பிரேரணையினை கொண்டுவந்தார். பிற்காலத்தில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் இந்த பிரேரணை குறித்துப் பேசும்போது ஜெயாரின் அழுத்ததினாலேயே தான் இந்தப் பிரேரணையினை முன்வைக்கவேண்டி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பாக்கீர் மாக்கார் தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பதிலளித்து பேச அமிர்தலிங்கம் எழுந்தார். அவரை மிகவும் தரக்குறைவாகவும் ஏளனமாகவும் விழித்தபடி ஆளும்கட்சி பா. உ க்கள் கோஷமிட அரம்பித்தனர். அவரை ஒரு பொய்யர் என்றும், துரோகியென்றும், கொலைகாரப் புலிகளின் ஆதரவாளர் என்றும் விமர்சித்தனர். அமிர்தலிங்கத்தைப் பேசவிடாது தடுக்க முயன்ற நெவில் பெர்ணான்டோ, அமிரின் தன்னிலை விளக்கம் பாராளுமன்ற அனுமதியுடன் மட்டுமே நடத்தப்பட முடியும் என்று கூறினார். பெர்ணான்டோவின் கோரிக்கைக்கு அடிபணிந்த சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அமிர்தலிங்கம் பேசமுடியாது என்று தீர்ப்பிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பா. உ க்களும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். சுதந்திரக் கட்சியின் உபதலைவர் மைத்திரிபால சேனநாயக்க ஒரு கேள்விய இதன்போது எழுப்பினார். அமிருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் நிராகரிக்கப்படவேண்டும் என்பதற்காக மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். முதலாவதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், உலகில் வேறெந்தப் பாராளுமன்றத்திலும் இவ்வாறு நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். இரண்டாவது, எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றப் பாரம்பரியங்களுக்கு அமைவாகவே தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், அவரின் செயற்பாடுகள் மீது மொத்த எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வைத்திருக்கின்றன என்றும் கூறினார். மூன்றாவது, அரசால் கொண்டுவரப்பட்ட இந்த நகைப்பிற்கிடமான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அமிர்தலிங்கத்திற்கு இது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராகப் பணிபுரியலாம் என்றும் அவர் விளக்கினார். மைத்திரிபால சேனநாயக்க ஆனால், மைத்திரிபால சேனநாயக்கவின் இந்த கூற்றினை சமயோசிதமாக நிராகரித்த சபாநாயகர், மிகவும் தாமதமாக இக்கேள்வி எழுப்பப்பட்டதால், தனது முடிவினை தன்னால் மாற்றமுடியாது என்று மழுப்பிவிட்டதுடன், அமிருக்கெதிரான பிரேரணை தொடரட்டும் என்றும் கட்டளையிட்டார். இதனால் வெறுப்படைந்த கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம, சபாநாயகர் பாராளுமன்றத்தை நடத்துகிறாரா அல்லது ஆளுங்கட்சியினை நடத்துகிறாரா என்று கேள்வி கேட்டார். பின்னர் ஆளுங்கட்சி பா. உ க்களின் பலத்த கூச்சல்களுக்கு மத்தியில் சரத் முத்தெட்டுவே கமவும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இதன்மூலம், பாராளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் அமிர்தலிங்கத்திற்கு இருந்ததென்பது உறுதியாகிறது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுடன், அமிருக்கெதிரான பிரேரணைக்கு அரச ஊடகத்துறை முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் ஜெயார் பணித்திருந்தார். அமிருக்கெதிரான பிரேரணையின் உண்மையான் நோக்கமே தமிழ் மக்களுக்கதிரான வெறுப்பினை நாடுமுழுவதற்கும் கொண்டு செல்வதுதான். அமிர்தலிங்கமும், அவரது உறுப்பினர்களும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக அரச பா. உ க்கள் கூச்சலிட்டார்கள். தெற்கில் அகிம்சை குறித்தும், காந்தீயம் குறித்தும் பேசும் முன்னணியினர், வடக்கில் பிரிவினைவாதம் குறித்தும், வன்முறைகள் குறித்தும் இளைஞர்களுக்கு உணர்வூட்டிவருவதாகவும், இளைஞர்களின் வன்முறைகளின் மூளையாகச் செயற்படுவதே அவர்கள்தான் என்றும் அரச உறுப்பினர்கள் முன்னணியினரைக் குற்றஞ்சாட்டினர். மேலும், அரசுடன் சேர்ந்து செயற்படப்போவதாக உள்நாட்டில் கூறும் முன்னணியினர், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அரசுமீதும் சிங்கள மக்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதாகவும் அவர்கள் விமர்சித்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் முன்னணியினரை இரட்டை முகம்கொண்ட பொய்யர்கள், துரோகிகள் என்று ஆளும்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். புலிகளுக்கான வங்கிக்கணக்குகளை முன்னணியினர் நடத்துவதாக அநுராதபுர உறுப்பினர் யஸபல கேரத் விவாதத்தின் இரண்டாம் நாளன்று கூறினார். இங்கிலாந்து, அமெரிக்கா, நோர்வே, டென்மாக் ஆகிய நாடுகளிலிருந்து புலிகளுக்கு அனுப்பப்பட்ட பணமான 400 மில்லியன் ரூபாய்கள் சிவசிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியபோது சிவசிதமபரம் அதனை முற்றாக மறுத்தார். அதன்பின்னர், அமிர்தலிங்கமும் அவரது உறுப்பினர்களும் அவர்கள் செய்துவரும் துரோகங்களுக்குத் தண்டனையாக எந்தவகைகளில் தண்டிக்கப்படவேண்டும் என்று ஆளும்கட்சி உறுப்பினர் விவாதிக்கத் தொடங்கினர். குண்டசாலா உறுப்பினர் சந்திரபால பேசும்போது, "எனக்கு அதிகாரம் இருந்தால், அமிர்தலிங்கத்தை அருகிலிருக்கும் கொங்கிறீட் தூணுடன் கட்டி, அவருக்குப் புத்தி வரும்வரை குதிரைகளுக்கு அடிக்கும் சவுக்கினால் அடிப்பேன். அதன்பின்னர், எவரும் தமக்கு விரும்பியதை அவருக்குச் செய்யலாம். அவரை பேரா ஆற்றிலோ அல்லது கடலிலோ தூக்கி எறிந்துவிடலாம். அவரது உடல் முற்றாக குதறப்பட்ட நிலையில் அவர் உயிர்தப்பி வருவதென்பது நடவாத காரியம்" என்று தனது விருப்பத்தினைத் தெரிவித்தார். இரத்திணபுரி உறுப்பினர் புஞ்சிநிலமே பேசும்போது, "நேற்றுக் காலையிலிருந்து இந்த கெளரவமான சபையில் அமிர்தலிங்கத்திற்கு வழங்கவேண்டிய தண்டனைகள் குறித்துப் பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். பாணதுறை உறுப்பினர் பேசும்போது சிங்கள மன்னர் காலத்தில் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்துப் பேசினார். சிறிய இடைவெளியில் நடப்படும் இரு கமுக மரக் குற்றிகளை வளைத்து, அவற்றின் நுனிகளில் துரோகிகளின் கைகால்களைக் கட்டி, பின்னர் கயிறுகளை வெட்டிவிடும்போது அவர்களது உடல் இரண்டாகச் சிதறும். அவ்வாறே அமிர்தலிங்கமும் அவரது கட்சியினரும் கொல்லப்படவேண்டும் என்று கூறுகிறேன். சில உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் உடனடியாகக் கொல்லப்படவேண்டும் என்று கேட்கிறார்கள். சிலர் இவர்களது கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை காலிமுகத்திடலில் கட்டிவைத்துச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த நாட்டின் மக்களும், இந்த அரசாங்கமும் அமிர்தலிங்கம் மீதும், அவரது கட்சியினர் மீதும் இந்தவகையில் ஏதாவதொரு தண்டனை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்" என்று அவர் கூறினார். "ஜெயார் - மனிதனும் அரசியல்வாதியும்" எனும் தனது புத்தகத்தில் ஜெயரட்ணம் வில்சன் எழுதுகையில், உறுப்பினர் புஞ்சிநிலமே கமுக மரத் தண்டனை குறித்து ஜெயாரிடம் பேசும்போது, பழங்காலத் தண்டனைகள் தற்காலத்திற்கு உகந்தது அல்ல என்று ஜெயார் கூறியதாக எழுதுகிறார். 1981 ஆம் ஆண்டு, ஆடி 24 ஆம் திகதி, 121 ஆதரவு வக்குகளினால் அமிருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றது. இரு அரச உறுப்பினர்களான தொண்டைமானும், ஷெல்ட்டன் ரணராஜாவும் வக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பிரேரணைக்கெதிராகப் பேசிய தொண்டைமான் அமிர்தலிங்கத்திற்கெதிரான நடவடிக்கைகள் தமிழர்களை ஜனநாயக வழிமுறைகளிலிருந்து விரட்டி தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தூண்டிவிடும் என்று எச்சரித்தார். ஆனால், தொண்டைமானின் எச்சரிக்கையினை ஜெயாரோ அவரது ஆலோசகர்களோ செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்தி, தமிழ்ப் போராளிகளை இராணுவ ரீதியாக அழித்து, தமிழர்களை மண்டியிட வைத்து, தாம் விரும்பிக்கொடுக்கும் தீர்வினை இரைஞ்சிப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவருவது மட்டுமாகவே இருந்தது.
  21. மிகச்சரியான உண்மை. முள்ளிவாய்க்கால் இரத்தக்கறை மாறமுன்னமே இன்னொரு முள்ளிவாய்க்காலை ரஸ்ஸியா உக்ரேனில் நடத்திக்கொண்டிருக்கிறது. அதனை மட்டும் தாங்கள் ஆதரிக்கலாமா?
  22. உண்மையான முகமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் இதுவரை மறைத்த முகம் எது? எனது பெயரையே வெளிப்படையாகத்தானே எழுதுவருகிறேன்? இதில் மறைப்பதற்கு என்னவிருக்கிறது? ஏன், நான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதால் என்னைத் தூற்றலாம் என்று நினைக்கிறீர்களா? தராளமாக. நான் கவலைப்படவில்லை. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பும், சிங்கள ஆக்கிரமிப்பும் ஒன்றுதான். எனக்கு இருமுகம் கிடையாது.
  23. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் நீர்வேலி வங்கிக்கொள்ளை, தங்கத்துரை குட்டிமணியின் கைதுகள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது இடம்பெற்ற அரச பயங்கரவாதம் ஆகியவை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது அரச இராணுவம் பாரிய தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்திருந்தது. இதனால், யாழ்க்குடாநாட்டில் தனது இரகசிய மறைவிடங்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பது உகந்ததல்ல என்பதனை பிரபாகரன் உணரத் தொடங்கினார். மிகுந்த களைப்படைந்த நிலையிலும், பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்பட்ட பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தும் பொறுப்பினை மாத்தையாவிடம் அப்போதைக்குக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குப் பயணமானார். பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குரிய சில இளைஞர்களும் 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் திகதி அதிகாலை படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியத்திற்குத் தப்பிச் சென்றனர். வேதாரணியத்தின் வரைபடம் ஆனால் அந்தக் கடற்பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையான எம். கே. சிவாஜிலிங்கத்தினூடாக (டெலோ உறுப்பினர்) தனது பயணத்திற்கு படகு ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு பிரபாகரன் கேட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தமது தேர்தல் வெற்றியை வெடிகொழுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும்வேளை, பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 10 இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த வீடொன்றிற்கு இரகசியமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஒரு ஜி - 3 ரைபிள், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஒரு ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கி மற்று சில கைத்துப்பாக்கிகள் ஆகிய ஆயுதங்கள் இருந்தன. திடீரென்று ஒரு துப்பாக்கி வெடித்துவிட்டது, ஆனால் அவர்களின் அதிஷ்ட்டமாக கட்டிலின் மெத்தையொன்றிற்குள் சன்னம் புகுந்துகொண்டதனால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மறுநாள் , ஆனி 6 ஆம் திகதி, முழுநாளும் அவர்கள் அந்த வீட்டிலேயே ஒளிந்திருந்தனர். அன்று இரவு, படகுப் பயண்த்திற்காக கடற்கரை நோக்கி அவர்கள் மெதுவாக நகர்ந்து செல்கையில் இராணுவ ஜீப் வண்டியின் விளக்கு வெளிச்சத்தினைக் கண்ணுற்றார்கள். உடனேயே கடற்கரை மணலில் வீழ்ந்து படுத்துக்கொண்ட அவர்கள், தாம் கிடந்த பகுதியினை அந்த ஜீப் வண்டி கடந்து செல்லும்வரை அசையாது கிடந்தார்கள். "படகில் பயணிக்கும்போது பிரபாகரன் சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னால் தொலைவில் மறைந்துகொண்டிருக்கும் கடற்கரையினைப் பார்த்துக்கொண்டு இருந்த அவர், தமிழ் மக்கள் மீது ஜெயார் நிகழ்த்திவரும் அட்டூழியங்களுக்குப் பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக்கொண்டார்" என்று அன்றிரவு அவருடன் படகில் தமிழ்நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கிட்டு பின்னர் எழுதியிருந்தார். வைகாசி 31 ஆம் திகதியிலிருந்து ஆனி 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழ் மக்களின் உரிமைகளையும், சுய கெளரவத்தையும், கண்ணியத்தையும் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவாவினை அவருள் அதிகரித்திருந்தது. "தம்மிடமிருக்கும் அதிகார மமதையிலும், தமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்கிற அகம்பாவத்திலும் சிங்களவர்கள், தமிழர்களின் கலாசாரத் தலைநகரையும், தமிழர்களின் பொக்கிஷமான நூலகத்தையும் எரித்தார்கள். தமிழர்கள், அவர்கள் நினைப்பதுபோல அக்கிரமங்களுக்கு அடங்கிக் கிடக்கும் இனமல்ல என்பதை சிங்களவர்களுக்கு நிச்சயம் புரியவைப்போம்" என்று அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டு, எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சைவ மதகுரு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், 1974 ஆம் ஆன்டு சிறிமாவின் ஆட்சியில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது அப்பாவிகளின் படுகொலைச் சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் யாழ்நகரும், யாழ் நூலகமும் எரியூட்டப்பட்ட சம்பவம் ஆகியவையே பிரபாகரனை ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் ஒன்றினை உருவாக்கவும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்திறங்கிய பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான விடயங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து தனது இலட்சியத்தின்மீது தான் கொண்டிருந்த உறுதியிலும், அர்ப்பணிப்பிலும் எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி செயற்பட்டு வரலானார். தமிழ்நாட்டின் சிறுமலை காட்டுப்பகுதியில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரனும் புலிகளும் தனது இயக்கத்திற்கென்று சிறுமலை, பொள்ளாச்சி மற்றும் மேட்டூர் ஆகிய காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான வாழ்விடங்களை அவர் உருவாக்கினார். இந்த மறைவிடங்களிலேயே புலிகள் இயக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதப் பயிற்சியிலும், தொலைத் தொடர்புக் கருவிகளை உபயோகிப்பதிலும் பயிற்றப்பட்டனர்.
  24. தேர்தலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் எரிக்கப்பட்ட யோகேஸ்வரனின் வீடு அன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்துத் வாக்குச் சாவடிகளுக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், வீதிச் சோதனைச் சாவடிகளும் பொலீஸாரால் அமைக்கப்பட்டிருந்தன. வீதி ரோந்துகளில் பொலீஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பவனி வந்தனர். வாக்குப் பெட்டிகளும், சிங்கள தேர்தல் அதிகாரிகளும் இராணுவப் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். வக்களிப்பு முடிவடையும்வரை வாக்களிப்பு நிலையங்களிலேயே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்ட இராணுவத்தினர், வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவற்றைப் பாதுகாப்பாக வாக்கு எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தேர்தல் விதிமுறைகளின்படி வாக்களிப்பு காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் நடைபெறவேண்டும் என்றும், அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்குகள் எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டதன் பின்னரே வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாண வாக்குச் சாவடிக்குப் பொறுப்பாகவிருந்த சரத் முனசிங்க கூறும்போது, "நாங்கள் அதிகாலையே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றுவிட்டோம். ஆனால், காலை 10 மணிக்குப் பின்னரே வாக்குப் பெட்டிகளைத் தாங்கிவந்த பஸ்கள் வக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தன. மாலை 6 மணியளவில் நாம் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம்" என்றார். தேர்தல் நாளன்றும் பொலீஸார் மூன்று தலைவர்களைத் தடுத்து வைத்தனர். அவர்கள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம், நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான எம்.சிவசிதம்பரமும் ஆகும். தேர்தல் அதிகாரிகளின்படி, வக்களிப்பு நிலையங்களில் குழப்பமான சூழ்நிலையும், வாக்குவாதங்களும், ஒருவரையொருவர் தூற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றதாகக் கூறினர். தேர்தல் முடிந்த கையோடு சிங்கள தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தெற்கிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்குகளை எண்ணும் நிலையத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. சில வாக்குப் பெட்டிகள் கணக்கெடுக்கும் நிலையத்திற்கு வராததால் அங்கே குழப்பம் நிலவியது. அனைத்து வாக்குப் பெட்டிகளும் வராமல் கணக்கெடுப்பை ஆரம்பிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரி துரைசாமி மறுத்துவிட்டார். இதனால் கொதிப்படைந்த அமைச்சர் சிறில் மத்தியூ துரைசாமியைப் பார்த்து கோபத்துடன் கத்தினார். சிங்கள அதிகாரியான பியசேகர அரச தலைமை சட்ட அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கினார். அதற்குப் பதிலளித்த சட்ட அதிகாரி, தேர்தலினை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்குக் கிடையாது என்றும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியான துரைசாமி வாக்குகளை எண்ணமுடியும் என்றும் கூறினார். யோகேந்திர துரைசாமி யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் குறித்து தேர்தல் திணைக்களத்திற்கு தனது அறிக்கையை அனுப்பிய துரைசாமி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், சில வாக்குப் பெட்டிகள் தாமதமாகவே வாக்குகளை எண்ணும் நிலையத்தை வந்தடைந்தன. தேர்தல்க் கடமைகளில் ஈடுபட்ட பெருமளவு சிங்கள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இடப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கை பற்றி தேர்தலில் பங்கெடுத்த அரசியல்க் கட்சிகள், சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு எழுத்துமூல அறிக்கையொன்ம்றினைச் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற அடிப்படை தெளிவு கூட இருக்கவில்லை. இத்தேர்தல் சரியான முறையில் நடத்தப்படவில்லை. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறைகளும், சதிகளுமே தேர்தல் குழப்பமான முறையில் நடைபெறுவதற்குக் காரணமாகின என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வெறும் 23,302 வாக்குகளுக்குப் பதிலாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 263,369 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜெயாரினால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தைத் தன்னும் கைப்பற்ற் முடியாது போய்விட்டது. அதேவேளை தமிழ்க் காங்கிரஸின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாகக் காணப்பட்டது. அதற்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,369 மட்டுமே. ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும்பான்மையானவை ஆள்மாறாட்டம் மூலமும், பொலீஸாரும் ராணுவத்தினரும் வாக்குப் பெட்டிகளை கள்ள வாக்குகளைக் கொண்டு நிரப்பியதாலும் பெறப்பட்டவை. ஒரு வாக்குப் பெட்டியில் 59 வாக்கட்டைகள் காணப்பட்டன. அவை அனைத்துமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடப்பட்டிருந்ததோடு, சேர்த்து ஒன்றாகக் கட்டப்பட்டும் இருந்தன. தேர்தலில் அரசு முறைகேடுகளில் ஈடுபட்டதனால் அதிருப்தியடைந்த தேர்தல் அதிகாரி பியசேகர, தனது அதிருப்தியைக் காண்பிக்க பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக ஜெயாருக்கு அறிவித்தார். அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜெயார், அவரை அமைதியாக வைத்திருப்பதற்காக ரோமிலிருக்கும் இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு தூதுவராக நியமனம் செய்து அனுப்பிவைத்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழர்கள் இன்னமும் வன்முறையற்ற, மிதவாத அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது. போராளிகளின் அரச படைகள் மீதான தாக்குதல்களை வரவேற்றும், அவர்களின் அர்ப்பணிப்பின் மீதும், அசாத்திய துணிச்சல் மீதும் பெருமரியாதை வைத்திருந்தபோதும், அவர்கள் மீது தமது அரசியல் எதிர்காலத்தைக் கையளிக்கும் நிலைமைக்கு தமிழர்கள் இதுவரை வரவில்லையென்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டின. இந்த சிறிய புரிதலைக் கூட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் முடிவுகளின்மூலம் ஜெயார் புரிந்துகொள்ளத் தவறினார். அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஜெயாருடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆயத்தமாகியதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான பதவிகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயினர். அரச நிர்வாகத்துறையில் பரீட்சயமும், அனுபவமும், திறமையும் மிகுந்த தமிழர்களை தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்வு செய்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியம் நடராஜா யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.