Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயாருடன் பேரம்பேசலில் ஈடுபட்ட அமெரிக்கா ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழர் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க இராணுவத்தினரைத் தமிழ் இளைஞர்கள் இலக்குவைக்கத் தொடங்கினர். திருநெல்வேலித் தாக்குதலுலுக்குப் பழிவாங்கவென்று அரங்கேற்றப்பட்ட ஜூலைப் படுகொலைகளுட‌ன் இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், சிங்கள இராணுவம் எனும் நிலையிலிருந்து தமிழர்களுக்கு எதிரான இராணுவம் எனும் நிலையினை அது அடைந்தது. தமிழர்கள் இந்த இராணுவத்தை சிங்கள இராணுவம் என்பதையும் தம்மை ஆக்கிரமிக்க வந்த இராணுவம் என்பதையும் முழுமையாக உணர்ந்துகொண்டனர். இந்த இராணுவம் அந்நிய இராணுவம் என்று அவர்களால் அழைக்கப்பட்டும், நடத்தப்பட்டும் வந்தது. ஜூலை இனக்கொலை நடந்த சில நாட்களின் பின்னர் பிரபல ஊடகவியலாளரான மேர்வின் டி சில்வா இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவிடம் ஜூலை இனக்கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விளைவுகளில் எதனை நீங்கள் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, "இராணுவம் அரசியலில் செலுத்தும் தாக்கமே" என்று அவர் பதிலளித்தார். இனப்பிரச்சினையில் சிங்கள மக்கள் சர்பாக இராணுவத்தைக் களமிறக்கிய‌ ஜெயார் , அதனை விரிவுபடுத்தி, நவீனமயமாக்கி தமிழர்களை முற்றாக வெல்லும் நிலைக்கு அதனை உயர்த்தவேண்டும் என்று உறுதிபூண்டார். அதற்கு அவருக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் தேவைப்பட்டன. ஆகவே, அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் இதுகுறித்து தொடர்ச்சியாக அவர் அழுத்தி வந்தார். ஜெயவர்த்தனவுக்கு உதவ விரும்பிய அமெரிக்கா, சிங்கள மக்களை உற்சாகப்படுத்த உடனடியாக எதனையாவது செய்யவேண்டும் என்று கருதியது. இந்தியாவின் அழுத்தங்களையடுத்து சிங்களவர்கள் தமக்குத் தோழமையாக எவரும் இல்லையே எனும் மனநிலைக்கு வந்திருந்தனர். ஆகவேதான் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான கஸ்பர் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 1 ஆம் திகதி சிநேகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். இந்த விஜயத்தின் நோக்கமே, "கலங்கவேண்டாம், அமெரிக்கா உங்களுடன் நிற்கிறது" எனும் செய்தியை சிங்களவர்களுக்குச் சொல்வதே. வோஷிங்க்டன், கஸ்பரின் விஜயத்தை பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவரது விஜயத்தின்போது இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்தின் ஊடாக இஸ்ரேலினை இலங்கையினுள் கொண்டுவர அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஐப்பசியின் இறுதிப்பகுதியில் அமெரிக்க ராணுவ ஜெனராலன வேர்னன் வோல்ட்டர்ஸ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். ரீகனின் பிரத்தியேகச் செய்தியுடன் இலங்கை வந்திருந்த அவர் ஜெயாருடன் முக்கியமான பேச்சுக்களில் ஈடுபட்டார். ஜெயாரின் வாழ்க்கைச் சரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ஹிக்கின்ஸ் ஆகியோர் வோல்ட்டர்ஸின் இந்த விஜயம் குறித்து பின்னாட்களில் அவரை வினவியிருந்தனர். அபோது பேசிய வோல்ட்டர்ஸ், "நான் ஜெயாரை தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும் இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி கோரினேன். மேலும் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்தால், இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம், இதில் இராணுவ‌த் தலையீடும் சாத்தியமாகலாம் என்ற அச்சத்தையும் அவரிடம் தெரிவித்தேன்" என்று கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸுக்கும் ஜெயாருக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்கள் குறித்து சில்வாவும், ஹிக்கின்ஸும் வேண்டுமென்றே குறிப்பிடத் தவறிய சில விடயங்களும் இருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருளே இஸ்ரேலிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு எவ்வாறு ஆயுதங்களைத் தருவித்துக் கொள்வது என்பதும், இதற்கு கைமாறாக இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதும்தான். பேரம்பேசலில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவரான வோல்ட்டார்ஸ் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தே இஸ்ரேலிடமிருந்தான ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார், 1. இஸ்ரேலுக்கு இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவதும் அதனை அங்கீகரிப்பதும் 2. வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான புதிய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வது 3. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்குக் கொடுப்பதன் மூலம் துறைமுகத்தை அமெரிக்கச் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவது. 4. அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பாவனைக்கு திருகோணமலைத் துறைமுகத்தினை வழங்குவது என்பனவே அவையாகும்.
  2. இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்? 1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே? இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல். உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது? இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே.
  3. இஸ்ரேலிடம் இராணுவ உதவி கோரிய ஜெயவர்த்தன‌ அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் சுல்ட்ஸ் கூறியதன்படி இஸ்ரேலிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரத்தினை தனது மகன் ரவி ஜயவர்த்தனவுக்கு வழங்கினார் ஜெயார். இதன்படி அமைச்சரவை உறுப்பினரான சமரசிங்க இரகசியப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இஸ்ரேல் பயணமானார். அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர்களில் ஒருவரான வேர்னன் வோட்டர்ஸின் மத்தியஸ்த்தத்துடன் ஆயுதப் பேரம்பேசலில் இஸ்ரேலும் இலங்கையும் ஈடுபட்டன. ரீகனின் அரசாங்கத்தில் மிக முக்கியவராக இருந்த வோல்ட்டர்ஸே இந்தியாவுக்கெதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வந்தார் என்று இந்திய அதிகாரிகள் உறுதியாக நம்பிவந்தனர். ஜெயார் எதிர்பார்த்த இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்திரா காந்தியின் இருவழிப்பாதையில் ஒன்றான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை தனது இராணுவ இயந்திரத்தைக் கட்டியமைக்கக் கால அவகாசம் தரும் ஒரு சந்தர்ப்பமாக ஜெயார் பாவிக்க விரும்பினார் . அதனால்த்தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று அன்று இந்தியாவால் கருதப்பட்ட மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று இந்திரா ஜெயாரை அழுத்தியபோது, அவரும் முழுமனதுடன் ஒத்துக்கொண்டார். அத்தருணத்தில் இலங்கை இராணுவம் "சிங்கள இராணுவம்" என்கிற முழுமையான மாற்றத்தைக் கண்டிருந்தது. அதன் ஒரே குறிக்கோள் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டும்தான் என்பது எழுதாத சட்டமாக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு சிங்கள அரசுத்தலைவர்கள் இலங்கையின் நலன்கள் என்பது சிங்களவர்களின் நலன்களே என்று தொடர்ச்சியாகக் கருதிச் செயற்பட்டு வந்தனர். பேரினவாதச் சிந்தனையினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள் இலங்கை பெரும்பான்மையினருக்கு மட்டுமே சொந்தமானது எனும் நிலைப்பாட்டிலிருந்தே ஆட்சிசெய்துவந்தனர். இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் ஏற்பட்டது 1961 இல்த்தான். தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைதிவழியிலான சத்தியாக்கிரக ஆர்ப்பட்டத்தினை கொடூரமாக அடக்கியதன் மூலம் தமிழ் இளைஞர்களுடன் நேரடியான கைகலப்பில் இறங்கியிருந்தனர் இராணுவத்தினர். அவசரகாலச் சட்டம் எனும் போர்வையில் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு அமைதிவழி ஆர்ப்பாட்டத்தை கடுமையான கரம் கொண்டு அடக்கியதுடன், சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களையும் கைதுசெய்திருந்தனர். இரவுநேர இராணுவ ரோந்தணி மீது இளைஞர்கள் கற்களை வீசியபோது துப்பாக்கிகளால்த் திருப்பித் தாக்கி இளைஞர்கள் சிலரை இராணுவத்தினர் அப்போது கொன்றிருந்தனர். அன்றிலிருந்து இராணுவத்திற்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலான கைகலப்பென்பது வழமையான நிகழ்வாக ஆகிப்போயிற்று. ஒருவர் மீதான மற்றையவரின் வன்மம் வளர்ந்துவரலாயிற்று.
  4. இந்திராவின் அழுத்தத்திற்குப் பதிலடியாக ஜெயார் மேற்கொண்ட மூன்றுவழிக் கொள்கை அரசியல் சதுரங்கத்தில் ஜெயவர்த்தன ஒரு மேதை என்று அவரது அபிமானிகளும் எதிரிகளும் ஒருங்கே கூறுவார்கள். தனது எதிரிகள் இரு விடயங்களில் தனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள் என்றால், அவர் அவர்களுக்கு எதிராக மூன்று விடயங்களில் திட்டமிட்டுக்கொண்டிருப்பார் என்று பரவலாகக் கருதப்பட்டவர். இதே பாணியிலான சதுரங்க ஆட்டத்தைத்தான் இந்திரா காந்தி விடயத்திலும் ஜெயவர்த்தன கைக்கொண்டார். இந்திராவின் இரு வழிச் செயற்பாடுகளுக்கு நிகராக மூன்றுவழிச் செயற்பாட்டினை ஜெயார் முன்னெடுத்தார். அவரது மூன்று வழித் திட்டங்களுமாவன, 1. தனது இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்வது. 2. தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்துவது. 3.தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் போராட்டத்தினைப் பயங்கரவாதப் போராட்டமாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி அழித்துவிடுவது, தமிழ் ஈழம் எனும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினை, நிலத்தை அபகரிப்பதன் மூலம் சிதைப்பது. 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலம் முதல் ஜெயாருக்கு இருந்த முதலாவது கரிசணை என்னவென்றால் தனக்கெதிராக இயங்குபவர்களை, அவர்கள் சிங்களவராகவோ தமிழர்களாகவோ இருந்தாலென்ன, அழிப்பது. தனது பிரதான எதிரியான சுதந்திரக் கட்சியை முற்றாகச் செயலிழக்கச் செய்து, தொழிற்சங்கங்களை காடையர்களைக் கொண்டு அடக்கி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அச்சுருத்தி அடிபணிய வைத்திருந்தார் அவர். ஆனால், இவர்கள் எல்லாரைக் காட்டிலும் தமிழர்கள் மேல் அவர் மேற்கொண்ட அடக்குமுறைகள் மிகக் கொடூரமானவையாக இருந்தன. தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டுவோம் என்கிற சிங்கள இனவாதிகளின் எண்ணக்கரு 1961 ஆம் ஆண்டு சிறிமாவோவின் காலத்திலேயே முதன்முதலாக கருக்கொண்டது. அக்காலத்தில் அரச செயலக‌ங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் செயற்பட்டை வடக்குக் கிழக்கில் முற்றாக முடக்கிப் போட்ட தமிழரின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தை அடக்க அவர் இராணுவ அணியொன்றினை அனுப்பி வைத்திருந்தார். ஆனால், சத்தியாக்கிரகப் போராட்டம் முழுமையாக அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தமையினால், அவர்களை அங்கிருது விரட்ட பலாத்காரத்தைப் பாவிக்க இராணுவ அணியின் அதிகாரி விரும்பவில்லை. ஆகவே, கொழும்பில் நடைபெற்ற முக்கிய மந்திரிசபைக் கூட்டத்திற்குச் சமூகமளிக்குமாறு அந்த இராணுவ அதிகாரியை சிறிமா பணித்தார். அக்கூட்டத்தில் அமைச்சரவையின் பலமான அமைச்சர் ஒருவரும் அவரது சகாக்களும் "தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டும் நேரம் வந்திருக்கிறது" என்று முழக்கமிட்டார்கள். ஆகவே வேறு வழியின்றி, அரசாங்கம் பணித்தவாறே சமாதானமான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டிருந்த தமிழர்கள் மீது இராணுவ அடக்குமுறை ஏவிவிடப்பட்டு, சத்தியாக்கிரகப் போராட்டம் பலவந்தமாகக் கலைக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழர்கள் சாத்வீக வழிகளில் உரிமைகேட்டுப் போராடிய போதெல்லாம் இராணுவ அடக்குமுறையினை ஏவிவிடுவதே வழமையாகக் கைக்கொள்ளப்படலாயிற்று. 1961 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் பங்குகொள்ளும் செல்வநாயகம், தம்பையா ஏகாம்பரம் மற்றும் ராஜவரோதயம் தமிழ்ப் போராளி அமைப்புக்களை இராணுவ ரீதியில் நசுக்கிவிட ஜெயவர்த்தன திடசங்கற்பம் பூண்டிருந்தார். தமிழரின் ஆயுதவழி விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்கு பலமான இராணுவ இயந்திரம் ஒன்றினைக் கட்டியமைக்கவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. தனது இராணுவ உதவிகளுக்காக அவர் முதன்முறையாக வெளிநாடொன்றினைத் தொடர்பு கொண்டது ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் இருக்கும் தறுவாயில், அதாவது 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதி. அன்று அவர் மேற்கொண்ட அறிவிப்பில் பிரித்தானியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் இணைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாடு ஒன்றிலிருந்தோ அல்லது உள்நாட்டிலிருந்தோ ஆபத்தொன்று உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினை அடிப்படையாக வைத்தே ஜெயவர்த்தன இந்த அறிவித்தலை மேற்கொண்டிருந்தார். இவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியாவும் இலங்கையும் தமது நாடுகளுக்கெதிராக வெளிநாடொன்றில் இருந்தோ அல்லது உள்நாட்டிலோ உருவாகும் ஆபத்துக்களை எதிர்கொள்ள இராணுவ ரீதியில் ஒன்றுக்கொன்று உதவும் என்றும், பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது. தான் விடுத்த அறிவிப்பிற்கான பிரித்தானியாவின் பதில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் கண்டறிய லண்டனில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரைப் பணித்திருந்தார் ஜெயார். தனக்குப் பரீட்சயமான செய்திநிருபர்கள் ஊடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பதிலை அறிய உயர்ஸ்த்தானிகர் முற்பட்டார். ஆனால், 1947 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி "இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் சூழ்நிலைகளில் மட்டுமே உதவிட முடியும்" என்று ஒப்பந்தத்தினை மேற்கோள் காட்டிய வெளிவிவகார அலுவலகம் ஜெயவர்த்தனவின் இராணுவ உதவி எனும் பேச்சினை உதாசீனம் செய்திருந்தது. ஆனாலும்கூட, தனது இராணுவ உதவி கோரலினை ஜெயார் கைவிடவில்லை. ஜூலை இனக்கொலை நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர் இந்திரா காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ஜெயாருக்கு வந்திருந்தது. அது தன்னை அச்சுருத்தும் ஒரு செயலாக ஜெயாரினால் பார்க்கப்பட்டது. ஆகவே மீண்டும் ஆடி 28 ஆம் திகதி இராணுவ உதவிக்கான அழைப்புக்களை அவர் மேற்கொண்டார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் அவர் பிரித்தானியா, அமெரிக்கா, பாக்கிஸ்த்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகோரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார். இந்த நாடுகளை மிகுந்த அவதானத்துடன் அவர் தெரிவுசெய்தார். ஆடி 28 ஆம் திகதி இரவு அவசர அவசரமாக உள்ளக அமைச்சரவையினைக் கூட்டிய ஜெயார் அமெரிக்காவும் பிரித்தானியாவும் நிச்சயமாக தமக்கு உதவும் என்று அவர்களிடத்தில் கூறினார். மேற்குலகிற்குச் சார்பான தனது வெளிநாட்டுக் கொள்கை இவ்விடயத்தில் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார். நாம் அவர்களின் நண்பர்கள், ஆகவே அவர்கள் எமக்கு உதவவேண்டிய கடமை அவர்களுக்கிருக்கிறது என்று கூறினார். அப்போது நடந்துகொண்டிருந்த பனிப்போர் நிச்சயம் தமக்குச் சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினால் மேற்குலகு இந்தியா மீது அதிருப்தி கொண்டிருக்கிறது என்று கூறிய ஜெயார், இந்தியாவின் எதிரிகளான சீனாவும் பாக்கிஸ்த்தனும் கூட தமக்கு உதவ முன்வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும், ஜெயார் நினைத்த எளிமையான திட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. அதற்கான முழுக் காரணம் நாடுகள் நட்பின் அடிப்படையில் அல்லாமல் தமது சொந்த நலன்களிலேயே அதிகம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பதுதான். ஜெயவர்த்தன இராணுவ உதவி கோரிய நாடுகளைத் தொடர்புகொண்ட இந்திரா, "நீங்கள் இதில் தலையிட வேண்டாம், விலத்தியே நில்லுங்கள்" என்று கூறியபோது அவையும் அவ்வாறே செய்தன. அவர்களிடம் பேசிய இந்திரா, "இலங்கை இராணுவ ரீதியில் உதிவி கோரினால், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில் இந்தியாவிடமே முதலில் உதவி கோரமுடியும்" என்று கூறினார். இதனை எந்த நிபந்தனையும் இல்லாமல் அந்த நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இலங்கைக்கு வெளிப்படையான இராணுவ உதவிகளைச் செய்வது இந்தியாவை ஆத்திரமூட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அரசாங்கம் கருதியதால், அதனைச் செய்ய மறுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வட்டகைக்குள் இருந்த இந்தியாவை எப்படியாவது வெளியில்க் கொண்டுவரும் முயற்சிகளில் அமெரிக்க இறங்கியிருந்த வேளை, இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை அது தவிர்த்தே வந்தது. அதேபோல் பிரித்தானியாவும் ஜெயவர்த்தனவுக்கு உதவுவதை விரும்பவில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை விற்க முன்வந்தன. பாக்கிஸ்த்தான் உடனடியாகவே கெரில்லாக்களை எதிர்கொள்ளும் இராணுவப் பயிற்சிகளை இலங்கை ராணுவத்திற்கு வழங்கத் தொடங்கியது. இந்தியாவின் சினத்தினை இந்த நிகழ்வு சம்பாதித்துக் கொண்டது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் தனக்கு இராணுவ உதவிகளை வழங்க மறுத்தமையினால் ஜெயார் துவண்டுபோய்விடவில்லை. தனது வெளிவிவகார அமைச்சரான ஹமீதினை அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் அனுப்பிய ஜெயவர்த்தன அந்நாடுகள் தனக்குத் தேவையான உதவியினை வழங்க மறுத்தமைக்காக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸுடன் ஹமீது பேசும்போது இலங்கையை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்தார். மேலும், நேரடியாக இல்லாமல் பாக்கிஸ்த்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஊடாக அமெரிக்கா இலங்கைக்கு உதவும் என்று கூறினார். மேலும், இஸ்ரேலிடமிருந்து இலங்கைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தருவோம் என்றும் அவர் உறுதியளித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸு ஹமீதிற்கு மேலதிகமாக தனது சகோதரரையும் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, சீனா, யப்பான் மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிய ஜெயவர்த்தன, தனது அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இந்த நாடுகள் அனைத்துமே போராளிகளின் தாக்குதல்களை உடனடியாகவே பயங்கரவாதம் என்று சித்தரித்து விமர்சித்ததோடு தமிழ் ஈழக் கோரிக்கையினையும் முற்றாக நிராகரித்திருந்தன. ஆனால் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிவரும் இந்தியாவை விமர்சிப்பதை அவை தவிர்த்திருந்தன. சீனா மட்டும், "ஒரு பெரிய நாடு தனக்கருகில் இருக்கும் சிறிய நாட்டை அச்சுருத்த முடியாது" என்று விமர்சனம் செய்திருந்தது.
  5. டெலோ அமைப்பில் இணையவென்று வந்து பின்னர் புலிகளுடன் இணைந்துவிட்ட‌ பெண்போராளிகள் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் திருவாண்மியூர் பகுதியில் சற்றுப் பெரிய வீடொன்றிற்கு பாலசிங்கம் தம்பதிகள் மாறியிருந்தனர். அவர்களுடன் மேலும் பல பெண்கள் வந்து தங்கிக்கொண்டதால் பெரிய வீடொன்றிற்கு மாறவேண்டியது அவசியமாகியிருந்தது. அதுகூட எதிர்பாராத விதமாக நடந்ததுதான். சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போராட போராளி இயக்கங்களில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களோடு சில பெண்களும் பயிற்சிகளுக்காக இணைந்துகொண்டனர். ஆனால், புலிகள் இயக்கமும், புளொட் மற்றும் ஈரோஸ் அமைப்புக்களும் பெண்களை அதுவரை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தமது அமைப்புக்களில் பெண்கள் பிரிவுகள் இதுவரை அமைக்கப்படாமையினால் பெண்களை இணைத்துக்கொள்வதில்லை என்று அவை முடிவெடுத்திருந்தன. ஆனால், தன்னர்வத்தோடு இணைய விரும்பிய பெண்களை டெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரட்ணம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவர், அவர்களை தமிழ்நாட்டில் இயங்கிவந்த தமது முகாமிற்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு பெண்கள் தங்குவதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். டெலோ இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று ஒன்றே இல்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. மேலும், பெண் போராளிகளைப் பராமரித்து அவர்களை வழிநடத்தவென எவரும் இருக்கவில்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. ஆகவே, டெலோவில் இணைய வந்த பெண்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகினர். எனவே, அவர்கள் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை இதுதொடர்பாக அணுகினர். அப்பாதிரியானவரோ பிரபாகரனிடம் சென்று அப்பெண்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். பாதிரியானவரிடம் பேசிய பிரபாகரன் தமது இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லையென்றும், ஆனால் அதிகளவு பெண்கள் இணையும் பட்சத்தில் பெண்கள் பிரிவொன்றை ஆரம்பிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறினார். அப்படியிருந்தபோதும், டெலோ இயக்கத்தில் இணைந்துகொள்ள வந்து நிர்க்கதிக்குள்ளான பெண்களை, பெண்கள் பிரிவு அமைக்கப்படும்வரை வைத்துப் பராமரிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்களை அடேல் பாலசிங்கத்திடம் அனுப்பி வைத்தார். டெலோ அமைப்பில் இணைய வந்திருந்த பெண்களின் பெயர்கள் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி, ஜெயா, லலிதா மற்றும் சாந்தி என்பனவாகும். இவர்கள் அனைவரும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். புலிகளின் முதலாவது பெண்கள் இராணுவப் பிரிவின் தளபதியாக இருந்தவர் சோதியா. சுகி, இராணுவக் காவலரண் ஒன்றின்மீது முதன்முதலாக வெற்றிகரமாக ஆர்.பி.ஜி தாக்குதலை நடத்திய பெண் புலிப் போராளியாவார். புலிகளின் பெண் போராளிகளுக்கென்று யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக இருந்தவர் தீபா. அநாதைப் பெண்பிள்ளைகளுக்கான பராமரிப்பு அமைப்பான செஞ்சோலையின் இயக்குநராகத் திகழ்ந்தவர் லலிதா. பெண்கள் இராணுவப் பிரிவின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாக இருந்தவர் சாந்தி. டெலோ அமைப்பில் இணைந்துகொள்ள வந்து பின்னர் புலிகளிடம் அடைக்கலமாகிய பெண்களும் சேர்ந்துவிட பெரிய வீடொன்றினை திருவாண்மியூர் பகுதியில் பாலசிங்கம் தம்பதிகள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கு மாறிச் சென்றார்கள். பலகணியைக் கொண்ட மாடியறைகளை பாலசிங்கம் தம்பதிகள் தமது தேவைக்காகப் பாவித்துக்கொண்டனர். பெண்கள் கீழ்ப்பகுதியில் தங்கிக்கொண்டனர். திருமணத்தின் பின்னர் மதி பிரபாகரனுடன் சென்றுவிடவே மீதமாயிருந்த பெண்கள் பயிற்சிக்கென்று ஐப்பசி மாதம் 1984 ஆம் ஆண்டு மதுரைக்குக் கிளம்பிச் சென்றனர். அங்குதான் புலிகளின் பெண்போராளிக்கென்று முதலாவது பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது. தம்முடன் தங்கியிருந்த பெண்கள் பயிற்சிக்குச் சென்றதையடுத்து பாலசிங்கம் தம்பதிகள் பெசண்ட் நகரில் கடற்கரையோரம் அமைந்திருந்த இரு அறைகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு மாறிக்கொண்டனர். பிரபாகரனின் மனைவியாக மதிவதனி சந்தித்த சவால்கள் சார்ள்ஸ் அன்ரனி, மதிவதனி, பிரபாகரன், துவாரகா மதிவதனியின் முதல் மூன்று வருடங்களும் மிகவும் மகிழ்வாகக் கழிந்தது. அக்காலப்பகுதியில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இலங்கையின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தோழனாகத் திகழ்ந்த சார்ள்ஸ் அன்ரனி நினைவாக 1985 ஆம் ஆண்டு பிறந்த தனது மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்றே பிரபாகரன் பெயர் வைத்தார். மேலும் 1986 ஆம் ஆண்டு பிறந்த தமது மகளுக்கு புலிகளின் மாவீரர் ஒருவரின் பெயரான துவாரகா என்ற பெயரினை அவர்கள் இட்டார்கள். முதலிரு குழந்தைகள் பிறந்து 10 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த பிரபாகரனின் இளைய மகனுக்கு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மதிவதனியின் சகோதரனான பாலச்சந்திரனின் பெயரினை இட்டார்கள். மதிவதனி பெரும்பாலும் திரைமறைவு வாழ்க்கையினையே வாழ்ந்துவந்தார். வெகு அரிதாகவே பிரபாகரனுடன் வெளிப்படையாக அவர் வெளியே வந்திருப்பார். முதன்முதலாக பிரபாகரன் மதிவதனியை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது 1985 ஆம் ஆண்டு இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப்புடனான நேரகாணலிற்காகத்தான். தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் இந்த சம்பவத்தினை அனித்தா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒருமுறை பிரபாகரன் தனது மனைவியையும் மூன்று மாதங்களே ஆகியிருந்த தனது மகனையும் நேர்காணல் ஒன்றிற்காக கூட்டிவந்திருந்தார். பிரபாகரனுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அவரது மனைவி ஒருமுறை தன்னும் தேவையற்ற விதமாக எதையும் பேசவில்லை. அவர் சித்திரம் பதிக்கப்பட்ட சேலையினையும் மிகவும் எளிமையான மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். மிகவும் பண்பானவராகவும், எளிமையானவராகவும், குடும்பப்பாங்கு கொண்டவராகவும் தெரிந்தார். அவர் கேட்டுக்கொண்டபோது தனது கைகளில் அதுவரை அமர்ந்திருந்த தனது மகனை அவரிடம் தந்தார். தனது பாலகனைப் பார்த்தபடியே "இவனது பெயர் சார்ள்ஸ் அன்ரனி" என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். பிரபாகரன் தனது மகனுக்கு பெயரிட்ட விடயம் குறித்தும் அனித்தா கூறுகிறார், நீங்கள் ஒருவர் மீது வைக்கும் விசுவாசமே அவர்கள் உங்கள் மீது வைக்கும் விசுவாசத்திற்கு காரணியாகிவிடுகிறது என்பதை பிரபாகரனையும் அவரது போராளிகளையும் பார்க்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். அவர் தனது போராளிகள் மீது வைத்திருக்கும் தன்னிகரற்ற விசுவாசமே அவர்களை தமது தலைவன் மீதான தீவிர விசுவாசிகளாக மாற்றியிருக்கின்றது. சீலன் பிரபாகரன் மீது வைத்திருந்த விசுவாசம் அளவிடமுடியாதது. சிங்கள இராணுவ அதிகாரியான சரத் முனசிங்க தனது "ஒரு ராணுவ வீரனின் பார்வையில்" எனும் புத்தகத்தில் இப்படி எழுதுகிறார், "நிர்மலா நித்தியானந்தத்துடன் பேசும்போது பிரபாகரன் ஒரு தலைசிறந்த தலைவன் என்று சீலன் கூறியிருக்கிறார். ஒருமுறை நோயுற்ற போராளியொருவர் தான் படுத்திருந்த படுக்கையிலேயே வாந்தியெடுக்கும் தறுவாயில் அருகிலிருந்து அப்போராளியின் வாந்தியைக் கைகளில் ஏந்திக்கொண்டார் பிரபாகரன். நான் நகைச்சுவையாக நிர்மலாவிடம், "நான் ஒருநாள் உங்களின் சீலனைப் பிடிப்பேன்" என்று கூறினேன். அதற்கு சற்று நிதானமாகப் பதிலளித்த நிர்மலா, அதனை மட்டும் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் ஒருபோதுமே உயிருடன் பிடிக்க முடியாது என்று கூறினார்". நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டதுபோல, சீலனின் உயிரற்ற உடலைத்தான் சரத் முனசிங்கவினால் கைப்பற்ற முடிந்திருந்தது. சீலனின் தியாகத்திற்கும் விசுவாசத்திற்கும் பிரதியுபகாரமாக தனது மகனுக்கு சீலனின் பெயரான சார்ள்ஸ் அன்ரனியை இட்டார் பிரபாகரன். சைவ மத நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதும் மதிவதனி தனது மூத்த மகனுக்கு கிறீஸ்த்தவப் பெயரினை இடுவதை தடுக்கவில்லை. பிரபாகரனின் உணர்வுகளை வெகுவாக மதித்த மதி, அவருக்கு மிகவும் ஆதரவுடைய மனைவியாக வாழ்ந்தார். அவரது உறுதிப்பாடும், தன்னலமற்ற தியாகமும் அவரைத் தெரிந்தவர்களிடையே அவர்பற்றிய நன்மதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. அடேல் பாலசிங்கம் தான் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், மதிவதனியை மனைவியாகத் தெரிவுசெய்ததன் ஊடாக பிரபாகரன் ஆசீர்பெற்றிருந்தார் என்றே சொல்லவேண்டும். அவருக்கு அசையாத அன்பினையும், குடும்ப வாழ்வின் பாதுகாப்பினையும், நெருக்கத்தையும், பிரபாகரன் சந்தித்த எண்ணற்ற இடர்மிகுந்த சந்தர்ப்பங்களின்போதும் மதிவதனி வழங்கினார். மதிவதனியைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை போன்றதல்ல. மிகவும் எளிமையானவராகவும், மென்மையான இதயம் கொண்டவராகவும் இருந்தபோதிலும் மதிவதனி பல சந்தர்ப்பங்களில் இழப்புக்களையும், துயர் மிகு சந்தர்ப்பங்களையும் எதிர்கொண்ட வேளைகளில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டார். திருமணமாகி முதல் மூன்று வருடங்களை மதிவதனி சென்னையிலேயே கழித்தார். இக்காலத்தில் பிரபாகரன் தனது போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களை நடத்துவதிலும், மேற்பார்வை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டதனால் மதிவதனி தனது இரு குழந்தைகளுடன் பொழுதினைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழித்து வந்தார். ஆனால், அந்த அமைதியான வாழ்வும் அவருக்குப் பிடித்திருந்தது. 1986 ஆம் ஆண்டு சிங்கள அரசை தமிழர் தாயகத்திலிருந்தே எதிர்த்துப் போராடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது மதிவதனியும் அவருடன் இலங்கையின் வட மாகாணத்திற்குச் சென்றார். நல்லூருக்கருகில் மறைவிடமொன்றில் அவரது வாழ்க்கை ஆரம்பமாகியது. பின்னாட்களில் அவரது பெற்றோரும் அவருடன் இணைந்துகொண்டனர். தனது கணவரை சிங்கள விமானப்படையின் உலங்குவானூர்திகளும், விமானங்களும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியவேளைகளில் அவர் மிகுந்த வேதனையடைந்தார். 1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் இந்திய ராணுவம் யாழ்நகரைக் கைப்பற்றிய நாட்களில் மதிவதனி நல்லூரில் அமைந்திருந்த மறைவு வீட்டிலேயே தங்கியிருந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இராணுவத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நல்லூர் முருகன் ஆலயத்தில் தஞ்சமடைந்தவேளை மதிவதனியும் தனது குழந்தைகளுடன் அங்கு தஞ்சமடைந்தார். அவரது வாழ்க்கையில் மனவேதனை மிகுந்த காலங்கள் அவை. அவரது கணவரைக் கைதுசெய்ய இந்திய ராணுவம் தாயகம் முழுவது தேடிவருகையில் மதிவதனியோ இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மக்களோடு மக்களாக தஞ்சமடைந்திருந்தார். சூழ்நிலை சற்று தணிந்திருந்த வேளையில் தனது குழந்தைகள் இருவரையும் தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டு விட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் அமைந்திருந்த அடர்ந்த காட்டுப்பகுதியான அலம்பிலுக்குச் சென்று தனது கணவருடன் இணைந்துகொண்டார். அலம்பில் காட்டில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகுந்த மனவேதனையினை அவருக்குக் கொடுத்தது. அவர்கள் இருந்த அடர்ந்த காட்டுப்பகுதி நோக்கி இடையறாது செல்மழை பொழிந்தது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் ரெஜிமெண்ட்டுகள் அங்குலம் அங்குலமாக புலிகளின் காட்டுப்பகுதி முகாம்கள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்தன. இக்காலப்பகுதியிலேயே இந்திய இராணுவத்துடனான மோதல் ஒன்றில் தனது இளைய சகோதரனான பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்கிற செய்தியும் மதிவதனிக்கு வந்து சேர்ந்திருந்தது. இவை எல்லாவற்றைக் காட்டிலும் தனது இரு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து வந்தது அவரை மிகவும் வேதனைப்பட வைத்திருந்த‌து. மதிவதனி அடைந்த வேதனைகளைப் பிரபாகரனினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனால், மதிக்கு அது பிடிக்கவில்லை. பிரபாகரனோ தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். ஆனால், இறுதியில் மதிவதனி மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்று தனது குழந்தைகளுடன் இணைந்துகொண்டார். அங்கிருந்தே அவர்கள் சுவீடன் நாட்டுக்குத் தப்பிச் செல்லும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டன. இந்தப் பயணம் குறித்து பெரிதாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பலர் மதிவதனியும் குழந்தைகளும் ஒஸ்ட்ரேலியாவுக்கே தப்பிச் சென்றதாக அக்காலத்தில் நினைத்திருந்தார்கள். சுவீடனில் இரண்டு வருடங்கள் தனது பிள்ளைகளுடன் மிகவும் இரகசியமான வாழ்க்கையினை மதிவதனி வாழ்ந்து வந்தார். 1989 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தனது கணவருடன் அவர் மீளவும் இணைந்துகொண்டார். 1989 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாசா, மதிவதனி மீண்டும் நாட்டிற்குவரும் ஒழுங்குகளைச் செய்துகொடுத்தார். சுவீடனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த மதிவதனியையும் பிள்ளைகளையும் அங்கிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமா நிலையத்திற்கு அன்டன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் அழைத்துவந்தார்கள். அங்கிருந்து பிரேமதாசவினால் ஒழுங்குசெய்யப்பட்ட விசேட உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் அலம்பில் காட்டிப்பகுதியில் இருந்த பெயர் குறிப்பிடப்படாத புலிகளின் முகாம் ஒன்றிற்கு மதிவதனி, குழந்தைகள், அன்டன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர். அடேல் தனது புத்தகத்தில் மேலும் எழுதுகையில், "அவரது திருமண வாழ்க்கை நெடுகிலும் மதிவதனிக்கு பாதுகாப்பான, நிரந்தரமான இல்லம் என்று ஒன்று இருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா தலைவனின் மனைவியாக மிகவும் துணிச்சலான, கண்ணியமான வாழ்வினை அவர் மேற்கொண்டார். இதனாலேயே தனது குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நிலையான, பாதுகாப்பான வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்க அவரால் முடியாமல் இருந்தது" என்று எழுதுகிறார்.
  6. தலைவர் மதநம்பிக்கைக்கு எதிரானவரா என்று தெரியவில்லை. அவரது திருமணம் கூட சைவ ஆலயத்தில்த்தான் நடைபெற்றிருக்கிறது. அவரது தகப்பனார் வல்வெட்டித்துறையில் பிரசித்திபெற்ற ஆலயம் ஒன்றின் பரிபாலகராக இருந்திருக்கிறார், பிரபாகரன் சிறுவயதிலிருந்தே அங்கு சென்று வந்திருக்கிறார். ஒரு காலத்தில் புலிகள் தம்மை சோசலிசவாதிகளாக அடையாளப்படுத்த முனைந்தபோதும் உண்மையாகவே இடதுசாரிச் சித்தார்ந்தத்தைக் கைக்கொள்ளவில்லை. இதனை மிகத் தெளிவாக சபாரட்ணம் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சோசலிச சித்தார்த்தங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதில் தலைவர் அப்போதே உறுதியாக இருந்தார். புலிகளை சோசலிசவாதிகளாகக் காட்டியே மேற்குலகின் உதவியை ஜெயவர்த்தனா பெற்றுக்கொண்டார் என்றும் கூறுவார்கள். தலைவர் கூறிய மத நம்பிக்கைபற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். "The marriage took place on 1 October 1984 at Thiruporur Murugan Temple in Tamil Nadu. Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil. The wedding was a simple ceremony. After the wedding Mathi left Balasingham’s house and lived with Pirapaharan". இது தலைவரது மதநம்பிக்கை குறித்தும், திருமணம் குறித்தும் சபாரட்ணம் எழுதிய கூற்று
  7. பிரபாகரன் மதிவதனி திருமணம் பிரபாகரனின் காதல் விவகாரம் அவரது இயக்கத்தினுள்ளேயும் அவருக்கு விரோதமான இயக்கங்களுக்குள்ளேயும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. அவரது எதிராளிகள், குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவரான உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தாக்குவதற்கான தனது சந்தர்ப்பமாக இதனைப் பாவிக்க நினைத்தார். பிரபாகரனின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள்ளும் இந்த விவகாரம் விமர்சனங்களை உருவாக்கி விட்டிருந்தது. தனது கொள்கைகளையே பிரபாகரன் மீறுகிறார் என்று அவரது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். "பிரபாகரனுக்கு அது மிகுந்த சோதனைக் காலமாக இருந்தது" என்று சந்தோசம் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆகவே, அடேல் பாலசிங்கத்திடம் தனக்கான உதவியினை பிரபாகரன் தேட விழைந்தார். அன்டன் பாலசிங்கத்தைக் காட்டிலும் இவ்விடயத்தில் அடேல் பாலசிங்கமே பிரபாகரனுக்குத் துணையாக நின்றார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஊர்மிளாவைக் காரணம் காட்டி ஏற்பட்ட பிணக்கில் திருமணம் தொடர்பாக பிரபாகரன் காண்பித்த கடுமையான கொள்கைகளை அடேல் அன்று ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. பிரபாகரன் இயக்கத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனும் கொள்கையினைத் தளர்த்தவேண்டும் என்றே அடேல் அப்போதிருந்து கோரிவந்தார். மனிதர்களின் உணர்வுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் அவசியம் என்பதே அவரது வாதமாக இருந்துவந்தது. அடேல் கொண்டிருந்த நெகிழ்ச்சியான போக்கே உமா மகேஸ்வரன் விடயத்தில் அவர் ஊர்மிளாவைத் திருமணம் செய்தால் பிரச்சினை எல்லாம் முடிவிற்கு வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டினை எடுக்க அன்டன் பாலசிங்கத்திற்கு உதவியிருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், உமாவும் ஊர்மிளாவும் தமக்குள் உறவெதுவும் இல்லையென்று பிடிவாதமாக மறுத்ததோடு திருமணம் செய்யத் தாம் தயாரில்லை என்றும் கூறியிருந்தனர். இதேவகையான நிலைப்பாட்டையே பிரபாகரன் மதிவதனி விடயத்திலும் பாலசிங்கம் எடுத்துக்கொண்டார். அதாவது திருமணம் முடித்தால் சரியென்பதே அவரது நிலைப்பாடு. பிரபாகரன் மதிவதனி காதல் விடயத்தை பாலசிங்கம் மிகவும் அவதானமாகவே கையாண்டார். இந்த விடயம் இன்னொரு பிளவினை ஏற்படுத்துவதை அவர் விரும்பவில்லை. ஆகவே, புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களையும், பிரபாகரனுக்கு நெருக்கமானவர்களையும் அவர் சென்னைக்கு வரவழைத்தார். அவர்களுள் சிலர் பிரபாகரனின் காதலுக்கான தமது எதிர்ப்பினை ஏலவே வெளிப்படுத்தியிருந்தனர். இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டினை அது மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். உமா மகேஸ்வரனுக்கெதிராக பிரபாகரன் பாவித்த அதே காரணங்களை அவர்களும் பாவித்தனர். இயக்கத்தின் விதிகளை வகுத்த தலைவரே அதனை மீறுவது தவறு என்றும் கூறினர். உமா மகேஸ்வரன் ஊர்மிளா விவகாரத்தில் தான் முன்மொழிந்த தீர்வினையே பாலசிங்கம் இந்த விடயத்திலும் முன்வைத்தார். நெகிழ்ச்சித்தன்மையினை இயக்கத்தினுள் அனுமதிப்பதை தான் ஆதரிப்பதாக அவர் கூறினார். உமா - ஊர்மிளா விடயத்தில் தாம் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து அவர்களை திருமணம் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் அதனை மறுத்துவிட்டதாக அவர் ஞாபகப்படுத்தினார். மேலும் தான் அதே நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து பிரபாகரனையும் மதிவதனியையும் திருமணம் முடிக்கக் கோரப்போவதாக புலிகளின் ஏனைய மூத்த உறுப்பினர்களிடம் கூறினார். இயக்கத்தினுள் நெகிழ்வுத்தன்மையினை ஏற்றுக்கொள்ளச் செய்ய பாலசிங்கம் அதிகம் வாதாடவேண்டியிருந்தது. இது குறித்து அடேல் இவ்வாறு கூறுகிறார், "இயக்கத்தின் பழைய கோட்பாடுகளும், விதிகளும் காலத்திற்கு ஒவ்வாதவை என்பதால் அவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பாலா வாதாடினார். காதலும் வீரமும் தமிழரின் கலாசாரத்தில் போற்றப்பட்ட இருவிடயங்கள் என்று அவர் கூறினார். பிரபாகரனின் காதல் திருமணத்தின் மூலம் அவரின் போராளிகளும் தமக்குள் காதல் திருமணங்களில் ஈடுபட்டு எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கைக்குள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வழி இதனால் உருவாக்கப்படும் என்று அவர் எடுத்தியம்பினார். இயக்கத்தின் வளர்சிக்கும், அபிவிருத்திக்குமான நற்காரணிகளாக இவை பார்க்கப்படுதல் அவசியம் என்றும் அவர் கூறினார்". மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்தின் முன்மொழிவை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டதாக அடேல் எழுதுகிறார். இந்த விவாதங்களில் பங்கெடுத்திருந்த இரு மூத்த உறுப்பினர்களுடன் எனக்குப் பேச சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை பிரபாகரன், மதிவதனி மீது தீராக் காதல் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள். ஆகவே, அதனை உடைக்கும் எந்த நடவடிக்கையும் பிரபாகரனை மனதளவில் பாதிக்கும் என்பதோடு உணர்வுரீதியாகவும் அவரைக் கீழே இழுத்துவிடும் என்று அவர்கள் கருதினார்கள். பிரபாகரனுக்கு எப்படியாவது இவ்விவகாரத்தில் உதவ வேண்டும் என்று இயங்கிய அடேல், மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, "தயவுசெய்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பிரபாகரனின் திருமணம் என்பது அவருக்குப் பலமாக அமையும் என்பதோடு, இயக்கத்திற்கும் பலமாக அமையும். ஆகவே, அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டு வந்தார். பிரபாகரன் மதிவதனி திருமணம் ஐப்பசி முதல்ம் திகதி, 1984 பிரபாகரன் மதிவதனியை திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இயக்கத்தின் விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்திடம் கேட்டுக்கொண்டனர். இவ்விதி இயக்கத்திற்குள் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பதோடு எவரும் விதிவிலக்கில்லை என்றும் அவர்கள் கூறினர். அதனை வரவேற்ற பாலசிங்கமும் இயக்கத்தினுள் ஐந்துவருட சேவையினை நிறைவுசெய்த போராளிகள் திருமணம் செய்ய முடியும் என்கிற விதியைக் கொண்டுவந்தார். பிரபாகரனின் திருமணம் இயக்கத்தினுள் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. ஒருவர் பின் ஒருவராக இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திருமண பந்தங்களில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள். இயக்கத்தில் திருமணம் செய்துகொள்வதென்பது வழமையான நடைமுறையாகிப் போனது. பிரபாகரனிடம் பேசிய பாலசிங்கம், அவர் உடனடியாக மதிவதனியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்காக மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரினார். இதற்காக மதிவதனியின் பெற்றோர்களான ஏரம்பு வாத்தியார் மற்றும் சின்னம்மை ஆகியோரை சென்னைக்கு வரவழைக்கும் ஒழுங்குகளில் அவர் ஈடுபட்டார். அவர்களுடன் பேசிய பாலசிங்கம், அவர்களது மகள் பிரபாகரனைக் காதலிக்கிறார் என்றும், ஆகவே தாம் செய்யவேண்டிய கடமை யாதெனில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதே என்றும் கூறினார். பின்னர் அவர்களை மதிவதனியுடன் பேசி அவரது எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்கும்படியும் கோரினார். கந்தசுவாமி கோயில் திருப்பூர் தமது மகளான மதிவதனியுடன் பேசிய பின்னர் அவரது திருமணத்திற்குத் தமது பூரண சம்மதத்தினை அவரது பெற்றோர் வழங்கினர். இலங்கை அரசால் தேடப்பட்டுவரும் கெரில்லாத் தலைவர் ஒருவரை மணப்பதால் அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இன்னல்கள் குறித்து தமது மகளிடம் அவர்கள் விளங்கப்படுத்தியதாக ஏரம்பு தம்பதிகளின் நண்பர் ஒருவர் பின்னாட்களில் என்னிடம் கூறியிருந்தார். "உனது வாழ்க்கை கடுமையான ஆபத்தில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் என்று அவளிடம் எச்சரித்தேன். ஆனால், அவளோ பிரபாகரனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வருவேன் என்று என்னிடம் கூறினாள். அதன்பிறகு எனக்குச் சொல்வதற்கு எதுவுமே இருக்கவில்லை. அவர்களது திருமணத்திற்கு எனது சம்மதத்தினைத் தெரிவித்தேன்" என்று ஏரம்பு வாத்தியார் தனது உறவினரிடம் கூறியிருக்கிறார். பிரபாகரன் மதிவதனி திருமணம் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி தமிழ்நாடு திருப்பூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. சைவர்களின் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் பிரபாகரன். அவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியது. திருமணத்தின் பின்னர் பாலசிங்கம் தம்பதிகள் வாழ்ந்துவந்த வீட்டிலிருந்து வெளியேறிய மதி, பிரபாகரனுடம் வாழத் தொடங்கினார்.
  8. பிரபாகரன் மதிவதனி காதல் முதலில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் பராமரிக்கப்பட்டனர். பெண் மாணவர்களை தம்முடன் வைத்திருக்கவோ அல்லது பயிற்சிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கவோ பிரபாகரன் விரும்பவில்லை. ஆகவே, சென்னையில் வசித்துவந்த அடேல் பாலசிங்கத்தைத் தொடர்புகொண்ட பிரபாகரன் அவருடன் தங்குவதற்கு நான்கு யாழ்ப்பாண மாணவிகளை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். விடுதலை வேட்கை என்று தான் எழுதியபுத்தகத்தில் திருவாண்மியூரில் தாம் தங்கியிருந்த நாட்கள் பற்றி அடேல் விபரிக்கிறார். பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட நான்கு பெண்களும் மதி (மதிவதனி), வினோஜா, ஜெயா மற்றும் லலிதா அக்கியோராகும். அவர்கள் நால்வருக்குள்ளும் சற்று உயர்ந்தவரும், மாநிறத்தைக் கொண்டவரும், அழகிய முகச் சாயலும், குறும்புத்தனமும் மிகுந்த மதியே அழகானவராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் நேர்காணலில் அவரைக் கண்ட தி டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் "அசத்தும் அழகானவர்" என்று குறிப்பிட்டிருந்தார். மதி புங்குடுதீவின் மடத்துவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தாயாரின் பெயர் சின்னம்மை என்பதுடன் அவரது தகப்பனாரின் பெயர் ஏரம்பு. ஊரில் அவரை ஏரம்பு வாத்தியார் என்றே அனைவரும் அழைத்து வந்தனர். இந்துசமயத்தை கடுமையாகப் பின்பற்றிவந்த குடும்பம் அவர்களது. மதிகூட அதிக கடவுள் பக்தி கொண்டிருந்ததோடு மற்றோரிடத்தில் அன்பும் இரக்கமும் கொண்டவராக விளங்கினார். பல்கலைக்கழகத்தில் மதி படிப்பில் சிறந்து விளங்கினார். கால்நடை மருத்துவத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டபோதும் மதி விவசாயத்துறையில் கல்விகற்கவே விரும்பினார். கிராமத்தில் அவர்களது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தமையே அவரது கல்வியில் தாக்கம் செலுத்தியதென்றால் அது மிகையில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டபோது மதிவதனி இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். இதனையடுத்து வீடுதிரும்பியிருந்த மதி உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தார். பெரும்பாலும் ஆண்களால் மட்டுமே நிரம்பி வழியும் திருவாண்மியூரில் அமைந்திருந்த புலிகளின் அலுவலகத்திற்கு திடீரென்று நான்கு பெண்கள் வந்துசேர்ந்தபோது ஆரம்பத்தில் சற்று அசெளகரியமாக இருந்தபோதும் அவர்களின் இயல்பான பண்பினால் அங்கு உற்சாகமும் மகிழ்வும் நிரம்பத் தொடங்கியது. அங்கிருந்தவர்களுக்கான சமையல்க் கடமைகளை இந்த நான்கு பெண்களும் பொறுப்பெடுத்துக்கொண்டனர். அவர்களின் யாழ்ப்பாணத்துச் சமையலை அன்டல் பாலசிங்கம் விரும்பிச் சாப்பிட்டார் என்று அடேல் கூறுகிறார். பிரபாகரன் அங்கு விஜயம் செய்யும் நாட்களில் அவருக்குப் பிடித்தமான உணவுவகைகளும் திண்பண்டங்களும் சமைத்துப் பரிமாறப்பட்டன. எப்போதும் துடினமாக இருக்கும் மதி அவ்வபோது குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவார். அவரது துடினமான இயல்பும், குறுபுத்தனமுமே பிரபாகரனுடன் அவரை நெருக்கமாக்கியது. தி டைம்ஸ் பத்திரிக்கை அதனை பின்வருமாறு கூறுகிறது, இந்திய ஹோலிப் பண்டிகையின்போது புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது சாயம் கலக்கப்பட்ட நீரை அவர் ஊற்றினார். அதிலிருந்தே அவர்களது காதல் உருவானது. மதி தன் மீது சாயம் கலந்த நீரை ஊற்றியபோது அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்வது போன்று பாசாங்கு செய்து அவரை அழவைத்த பிரபாகரன் உடனேயே தனது காதலை அவரிடம் வெளியிட்டார். தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று வழங்கப்பட்ட விடுதியில் அந்நாட்களில் தங்கியிருந்த பிரபாகரன் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக மட்டுமே திருவாண்மியூரில் அமைந்திருந்த தனது அலுவலகத்திற்குச் சென்றுவந்தார். ஆனால், ஹோலிப் பண்டிகையின் தண்ணீர் ஊற்றுக்குப் பின்னர் அங்கு அடிக்கடி வரத்தொடங்கினார் அவர். பெரும்பாலான நேரங்களில் மதிவதனியைப் பார்க்கவே அங்கு சென்றுவரத்தொடங்கினார் பிரபாகரன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ‌மாக விரும்பியிருந்தார்கள் என்று அடேல் எழுதுகிறார். இரவு பகல் பாராது மதிவதனியைச் சென்று சந்தித்த பிரபாகரன், அவருடன் பல மணிநேரங்களைச் செலவழித்தார். அநேகமான நேரங்களில் அவர்கள் தமக்குள் சிரித்து மகிழ்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இரவு வேளைகளில் பிரபாகரன் அங்கு வரும்போது அவரது மெய்க்காவலர்களும் ஆயுதங்களுடன் வந்திருப்பார்கள். சென்னையின் கிழ்க்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் வால்மீகி ஆலயம் 2003 இரவுவேளைகளில் பிரபாகரன் மேற்கொண்ட விஜயங்கள் அயலில் உள்ளவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் அவரை பகல் வேளைகளில் மட்டுமே அங்குவருமாறும் கூறுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்திடம் அடேல் கேட்டுக்கொண்டார். சில தினங்க‌ளுக்கு முன்னர் தான் ஒரு சம்பவம் அங்கு நடந்திருந்தது. திருவாண்மியூர் ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் நிரம்பிய பகுதி. தாவணி அணிவதை வழக்கமாகக் கொண்ட அப்பகுதிப் பெண்கள் ஆண்களுடன் பழகுவதைத் தவிர்த்தே வந்தனர். வெள்ளைக்காரப் பெண்மணியான அடேல் தமிழ் ஆணான பாலசிங்கத்துடன் அங்கு வாழ்ந்துவந்தார். அதுவே அப்பகுதியில் விசித்திரமாக நோக்கப்பட, அது போதாதென்று பெருமளவு ஆண்கள் இரவு பகலென்று பாராது அங்கு வந்துசென்றுகொண்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக நான்கு இளம் பெண்கள் வேறு அங்கு வந்து தங்கியிருந்தனர். வயதிற்கு வந்திருந்த இந்த நான்கு அழகிய பெண்களும் பாவாடை சட்டையே அணிந்திருந்தனர். அந்த வீட்டைக் கடந்து சென்ற அனைவரும் அதனை சந்தேகத்துடனே பார்த்துச் சென்றனர். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டில் வெள்ளைக்காரப் பெண்மணியொருவர் விலைமாதர்களின் விடுதியொன்றினை நடத்திவருவதாக அயலில் உள்ளவர்களால் வதந்தி பரப்பப்பட்டது. ஒருநாள் அவ்வீட்டின் முன்னால் கூடிய அப்பகுதி ஆண்கள் சிலர், அப்பகுதி அமைதியான மதிப்பிற்குரிய பகுதியென்றும் அப்பகுதியை விட்டு அவ்வீட்டில் உள்ளவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில ஆண்கள் அவ்வீட்டின் மீது கற்களை வீசவும் செய்தார்கள். பாலசிங்கமோ அல்லது வேறு ஆண்களோ அப்போது வீட்டில் இருக்கவில்லை. வெளியில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தால் பெண்கள் நால்வரும் அச்சத்தில் உரைந்துபோய் வீட்டின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டார்கள் என்று அடேல் எழுதுகிறார். சிறீ மருந்தீஸ்வரர் கோயில் திருவாண்மியூர் அதிஸ்ட்டவசமாக பொன்னமான் சில போராளிகளோடு அங்கு வந்து சேர்ந்தார். தமது வீட்டின்முன்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்தபோது அவர் சற்று அசந்துபோனார். அவர்கள் அங்கு கூடியிருந்ததன் நோக்கம் பற்றி அவர் அறிந்துகொண்டபோது அவரது அதிர்ச்சி அதிகமானது. கூட்டத்தைப் பார்த்து கோபத்துடன் கத்திய பொன்னமான் "நாம் இலங்கையிலிருந்து வந்திருக்கும் விடுதைப் போராளிகள்" என்று கூறினார். இந்திய அரசாங்கம் தமக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்காக இங்குவந்து தங்கவைத்திருப்பதாக அவர் கூட்டத்தைப் பார்த்துக் கூறினார். இதனை உறுதிப்படுத்துவதற்கு தனது இடையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்த அவர் கூட்டத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தார். இதைக் கேட்டதும் அங்கு நின்ற கூட்டம் ஸ்த்தம்பித்துப் போனது. கோபம் கரைந்துபோக அவர்கள் மீது அபிமானமும் மரியாதையும் ஏற்படலாயிற்று. தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அக்கூட்டம் பின்னர் அவர்களை மரியாதையுடன் நடத்தத் தொடங்கியது. அயலில் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களை நாம் மதிக்கவேண்டும் என்று பிரபாகரனிடம் கூறிய அன்டன் பாலசிங்கம், மதிவதனியை இரவுவேளைகளில் அவர் வந்து சந்திப்பது தம்மீது அயலவர்கள் வைத்திருக்கும் மதிப்பினைக் குலைத்துவிடும் என்று கூறினார்.
  9. யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமும் தடுத்து நிறுத்திய புலிகளும் 1983 ஆம் ஆண்டின் இறுதிப்ப‌குதியில் பிரபாகரனின் செயற்பாடுகளில் முக்கியமானவையாகக் காணப்பட்ட ஐந்து விடயங்களில் இறுதி இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்றே கூறலாம். அவை பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொள்வதில் இருந்த தத்துவார்த்த ரீதியிலான சிக்கல்களும் பிரபாகரனின் சொந்த வாழ்க்கையும் ஆகும். திருமதி அடேல் பாலசிங்கம் பெண்விடுதலை குறித்த பொதுவான சிக்கல்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் அடேல் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்டது. அடேல் அவர்கள் 1983 ஆம் ஆண்டு பெண்களும் விடுதலைப் போராட்டமும் எனும் தலைப்பில் புத்தகமொன்றினை சென்னையில் வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். முதலாவதாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருக்கும் எந்தப் பெண்ணும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடி தனது சமூகத்தைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறாள் என்பது. இதன்மூலம் தமது தேசத்தின் மீதான பற்றினை பெண்களால் உணரமுடியும் என்று அவர் கூறினார். இரண்டாவது தாயக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கெடுப்பதன் மூலம் போராட்டத்தினைப் பலப்படுத்தலாம் என்பது. பழமைவாதிகளின் கருத்தான பெண்களின் பங்களிப்பு போராட்டத்தினைப் பலவீனப்படுத்தும் என்பதை அவர் முற்றாக நிராகரித்தார். மூன்றாவது தாயக‌ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் பெண்கள் சமூகத்தில் தமது விடுதலையினை அடைந்துகொள்ள முடியும் என்பது. விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக விடுதலையினையும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அடேல் எழுதிய புத்தகத்தினை அடையாறிலும், திருவாண்மியூரிலும் அக்காலத்தில் தங்கியிருந்தவர்கள் படித்தார்களா என்பதை நான் அறிய முயன்றேன். ஆனால், அப்புத்தகம் பற்றியோ அல்லது அதுகுறித்த கலந்துரையாடல்கள் பற்றியோ எவருக்கும் ஞாபகம் இருக்கவில்லை. அவர்களின் ஒரே சிந்தனை அப்போது நடந்துகொண்டிருந்த இந்திய பயிற்சிபற்றியதாகவே இருந்தது. ஆனால், அடேல் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் பிரபாகரன் தன்னுடன் பேசும்போது பல இளம் தமிழ்ப் பெண்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்று கூறியதாக எழுதுகிறார். போராட்டத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் பெண்கள் தம்மை ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்று அவர் அடேலிடம் கூறியிருக்கிறார். சிங்கள அரசுகளால் தமிழர்கள் மீது கொடூரமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக தம்மையும் போராட அனுமதிக்குமாறு பல பெண்கள் அடேல் ஊடாக பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களை அவர் படித்திருந்தார் என்று அடேல் எழுதுகிறார். அக்கடிதங்களில் தமது சமூகத்தின் மீதான கடூரமான ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தாம் போராடி சமூகத்தைக் காக்கப்போவதாக பெண்கள் பலர் கேட்டிருந்தனர். பின்னாட்களில் அடேலுடன் பேசிய பிரபாகரன் பெண்களையும் ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பெண்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளும் நடைமுறை எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்றின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினக் கொலையும், அதற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கொழும்பு, பேராதனை , மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை தமது தாயகமான வடக்குக் கிழக்கிற்கு துரத்தியிருந்தது. தென்பகுதி பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கப் போவதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்த போது தமிழ் மாணவர்கள் திரும்பிச் செல்ல மறுப்புத் தெரிவித்தனர். தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், தம்மை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் கோரிக்கையினை நிராகரித்த ஆணைக்குழு, உடனடியாக விரிவுரைகளில் கலந்துகொள்ளுமாறும் இல்லையேல் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஆகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்போராட்டத்தை அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களும் வரவேற்றிருந்தன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை ஈரோஸின் மாணவர் அமைப்பான கெஸ் (GUES) முன்னெடுத்திருந்தது. யாழ்க்குடாநாட்டில் வாழ்ந்துவந்த மாணவர்களின் உணர்வுகளை இப்பிரச்சாரம் வெகுவாகத் தூண்டியிருந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவோ மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தது. மாணவர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்திற்கு முன்னர் தத்தமது பல்கலைக்கழக பதிவாளர்களைச் சந்தித்து மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று அது அறிவித்தது. சில மாணவர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேறி தமது பட்டப்படிப்பினைக் காத்துக்கொள்ள முயன்றனர். இதனையடுத்து புலிகள் இயக்கம் "கொலைக்களத்திற்குச் செல்ல வேண்டாம்" என்கிற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை கார்த்திகை 7 ஆம் திகதி வெளியிட்டது. தெற்கில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழ் மாணவர்களின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்படும் என்று அத்துண்டுப்பிரசுரம் குறிப்பிட்டிருந்தது. சிங்களப் பேரினவாதம் பலக்லைக்கழகங்களைக் கூட வெலிக்கடைச் சிறைகளாக மாற்றி படுகொலைகளில் ஈடுபடும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது. தமிழ் மாணவர்களின் அழுத்தத்திற்கு தாம் வளையப்போவதில்லை என்று அரசு அறிவித்தது. அடுத்து பல்கலைக்கழக விரிவுரைகளை தை மாதத்திலிருந்து ஆரம்பிக்குமாறு மாணியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. இது தமிழ்மக்களை ஆத்திரப்பட வைத்தது. மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மக்களின் அனுதாபத்தினைப் பெறத்தொடங்கியது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவிக்க பெருமளவான மக்கள் நாள் தோறும் பல்கலைக்கழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்ததோடு ஊர்வலங்களில் ஈடுபட்டார்கள். யாழ்க்குடாநாடெங்கிலும் கறுப்புக் கொடிகள் தொங்க‌விடப்பட்டன. எங்கும் பதற்றமான நிலை நிலவத் தொடங்கியதோடு ஆங்காங்கே அரச வாகனங்களுக்குப் போராளி அமைப்புக்கள் தீமூட்ட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு, தை மாதம் 9 ஆம் திகதி ஐந்து ஆண்களும் நான்கு பெண்களுமாக 9 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தினை மூடுமாறு அரசு அறிவித்தது. ஆனால், உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்ற அரசால் முடியவில்லை. உண்ணாவிரதத்தின் ஆறாம் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாணவி ஒருவர் மயக்கமுற்றார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் உடல்நிலை மோசமாகிவருவதாக அறிவித்தனர். ஏனைய மாணவர்களின் நிலைமையும் மோசமாகிக்கொண்டே வந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2002 ஆனால் அரசாங்கம் மசியவில்லை. அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் லலித் அதுலத் முதலி உண்ணாவிரதப் போராட்டங்களினால் அரசை பயமுறுத்த முடியாது என்று அறிவித்தார். 7 ஆம் நாளான தை 16 ஆம் திகதி இரவு 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்றது. வாகனத்தில் வந்தவர்கள் விக்டர் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் அச்சுவேலிப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உணவளிக்கப்பட்டபின்னர் தமிழ்நாட்டிற்கு படகுமூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தினை புலிகள் பலவந்தமாக முடித்துவைத்து மாணவர்களைக் கடத்திச் சென்றமையானது ஏனைய போராளிக் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக புளொட் மற்றும் ஈரோஸின் மாணவர் அமைப்பினர் இதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இது மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமையினை எந்த அனுமதியும் இல்லாமல், அவசியமற்ற முறையில் தடுத்த சம்பவம் என்று புளொட் சாடியிருந்தது. ஆனால் தமது நடவடிக்கையினை விளக்கி புலிகள் பின்னர் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தனர். மாணவர்களின் உயிரைக் காக்கவே அவர்களை நாம் அழைத்துச் சென்றோம். அவர்களின் பூரண அனுமதியுடனேயே அவர்களை அழைத்துச் சென்றோம். அவர்கள் தற்போது உணவருந்த ஆரம்பித்திருப்பதோடு நல்ல உடல்நிலையிலும் உள்ளனர். மாணவர்கள் இறப்பதை நாம் அனுமதிக்க முடியாது. உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் மரணித்தாலும் அரசு அதனைச் சட்டை செய்யப்போவதில்லை. அகிம்சை முறையிலான எந்தப் போராட்டத்தையும் அரசு கவனத்தில் எடுக்கப்போவதில்லை என்பதனாலேயே நாம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்றினோம். அதுவரை காலமும் வன்முறையற்ற வழிகளில் போராடுவதன் மூலம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமிழ் மக்கள் எண்ணிவந்ததை மாற்றுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு நடந்துகொண்ட விதத்தினை முன்வைத்து புலிகளுக்கு ஆதரவானவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசை அமைப்போம் என்று பதவிக்கு வந்த ஜெயவர்த்தன அரசு தற்போது மிகவும் கொடூரமான அரசென்று தன்னை வெளிக்காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.தொழிற்சங்கப் போராட்டங்களையும் மாணவர்களின் வன்முறையற்ற போராட்டங்களையும் தனது அரச ராணுவம் மற்றும் பொலீசாரைக் கொண்டு மிருகத்தனமாக அரசு அடக்கிவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்திற்குத் தெரிந்த ஒரே பாஷை துவக்கின் பாஷையே என்று அவர்கள் வாதிட்டனர்.
  10. மட்டக்களப்புச் சிறையுடைப்பு தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு. ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார். வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர். பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர். "எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர். சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. "சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர் சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும். தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும். ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள். நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார். கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர். மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார். "தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார். இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார். "எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார். அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது. தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் த‌த்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது. "தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள். பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.
  11. புலிகளுக்கு முகாம்களை அமைக்க உதவிய குளத்தூர்மணி குளத்தூர் மணியும் நெடுமாறனும் பிரபாகரனுக்குத் தொடர்ச்சியாக உதவிவந்தார்கள். இதனால் இவர்கள் இருவரின் மீதும் பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். பிராபகரனுக்கு தாம் வழங்கிய உதவிகள் குறித்து இவர்கள் செய்தியாளர்களிடம் பல விடயங்களைக் கூறியிருந்தனர். குளத்தூர் மணி 56 வயது நிரம்பியவர் (2005), வீரப்பன் சர்ச்சையில் பேசப்பட்ட முன்னாள் வன இலாகா அதிகாரியின் மகனே இவர். பத்திரிகையாளரிடம் பேசிய மணி, "ஆம், குளத்தூரில் அமைந்திருக்கும் எனது வீட்டுத் தோட்டத்தில்த்தான் முதலாவது பயிற்சி முகாமை நான் நடத்தினேன். பின்னர் அவர்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு முகாமை மாற்றிக்கொண்டோம்" என்று கூறினார். முகாம் அமைக்கப்படும் பகுதியை தான் அடிக்கடி சென்று பார்வையிட்டதாகக் கூறிய மணி, "சில சமயங்களில் நான் அவருடன் பயணம் செய்திருக்கிறேன்" என்றும் பத்திரிக்கையாளரிடம் கூறினார். குளத்தூர் முகாமை நிர்மாணிப்பதில் ஈடுபட்டிருந்த போராளிகளில் ஒருவர் அக்காலத்தில் அங்கு நிகழ்ந்தவை குறித்த சில தகவல்களை புலிகளுக்குச் சார்பான ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்தார். "1983 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் இருந்த எமது பாதுகாப்பு வீட்டிலிருந்து பஸ்ஸில் பயணமானோம். மலைப்பாங்கான காட்டுப்பகுதியொன்றில் நாம் இறங்கிக்கொண்டோம். எமக்கு வழிகாட்டியாக வந்தவர் சேறும் சகதியும் நிறைந்த வீதியொன்றினூடாக முதலில் அழைத்துச் சென்றார், பின்னர் அந்தவீதி சிற்றொழுங்கையாக மாறியது. நாங்கள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் நடந்து கற்கள் நிறைந்த பகுதியொன்றினை அடைந்தோம். இதுவே உங்களின் பயிற்சி முகாமுக்கான சிறந்த பகுதி என்று எமக்கு வழிக்காட்டியாக வந்தவர் எங்களைப் பார்த்துக் கூறினார்" என்று நினைவுகூர்ந்தார். அந்த பாறைகளுடன் காணப்பட்ட பகுதியே பின்னர் பாரிய பயிற்சி முகாமாக மாறியது என்று அவர் கூறுகிறார். போராளிகளே அந்தப் பாறைகள் நிறைந்த நிலத்தை முழுமையான பயிற்சி முகாமாக மாற்றினார்கள். காட்டை வெட்டிச் சுத்தம் செய்த அவர்கள், தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துக்கொண்டார்கள். ஒற்றையடிப்பாதையாக இருந்த நடைபாதையினை மோட்டார் வாகனங்கள் வந்துசெல்லும் பாதையாக மாற்றினார்கள். பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமிற்கு வந்துசென்றார். முகாமின் கட்டமைப்பை தானே திட்டமிட்ட பிரபாகரன், அது தான் திட்டமிட்டதன்படியே கட்டப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டார். மாலை வேலைகளில் இந்த முகாமில் இருந்தே கைத்துப்பாக்கிப் பயிற்சிகளை அவர் நடத்தினார். சிறுமலையில் அமைக்கப்பட்ட முகாம் உட்பட இன்னும் சில சிறிய முகாம்கள் திருப்பரங்குன்றம் மற்றும் அழகர்மலை ஆகிய மதுரை மாவட்ட பிரதேசங்களில் பின்னாட்களில் புலிகளால் அமைக்கப்பட்டன. புளொட் அமைப்பின் பிரதான பயிற்சிமுகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரத்தநாடு பகுதியில் அமைக்கப்பட்டது. மேலும் ஒரு முகாம் மதுரை மாவட்டத்தின் தேனிப் பகுதியில், தமிழ்நாடு ‍ கேரளா எல்லையில் இருந்த இயற்கை அழகு நிரம்பிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புளொட் போராளிகள் தமது முகாமிலிருந்து மலைப்பாங்கான‌ பகுதி நோக்கி அணிவகுத்துச் செல்வது வழமையாகக் காணப்பட்டது. அந்தக் கட்டத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் பெரியதாகக் காணப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் பயிற்சி முகாம்கள் போராளிகளால் நிரம்பி வழிந்ததது. இதனால் சென்னையின் இதயப்பகுதியான நந்தனத்தில் திருமண மண்டபம் ஒன்றினை புளொட் வாடகைக்கு அமர்த்தி தமது போராளிகள் பலரை தங்கவைத்தது. திருமண மண்டபத்தில் மொட்டை மாடியில் புளொட் போராளிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். டெலோ அமைப்பின் பிரதான முகாம்கள் சேலம் மாவட்டத்தில் கொள்ளி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. இதனைவிடவும் காஞ்சிபுரம் பிரதேசத்தில் இருந்த மகரல் எனும் கிராமத்திலும் சென்னைக்கு அருகில் இருந்த போரூர் பகுதியிலும் சில முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஈ.பி.ஆர்.எல் எப் இன் பிரதான முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் பகுதியிலும் சிறியளவான முகாம்கள் ஸ்கந்தபுரம், திருச்சி மற்றும் பழனி ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. ஈரோஸ் அமைப்பின் முகாம்கள் சென்னையின் மீனாம்பாக்கம், வேதாரணியம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் சுமார் 30 பயிற்சி முகாம்களில் தமிழ் ஈழப் போராளிகள் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். தில்லி அதிகாரிகளின் தகவல்களின்படி ஆரம்பத்தில் சில முகாம்கள் மட்டுமே அமைக்கப்பட்டன. பின்னர் சிறியதும், பெரிதுமாக 30 முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைப்பிற்கும் சென்னையில் ஒரு முகாம் இருந்ததோடு மேலும் பத்து மாவட்டங்களில் வேறு முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி முகாம்கள் குறித்து அப்பிரதேச மக்கள் அறிந்தே இருந்தனர். "பையன்கள்" என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட அவர்களுக்கு தம்மாலான உதவிகளை அவர்கள் செய்துவந்தனர். பல சந்தர்ப்பங்களில் வீட்டில் இருந்த உணவுப் பொருட்களும் போராளிகளுக்கு மக்களால் வழங்கப்பட்டன. இந்த முகாம்களுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் தமது பங்களிப்பினைச் செய்திருந்தனர். பலவிடங்களில் உள்ளூர் இளைஞர்களும் போராட்டத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட விரும்பினர். ஆனால் எந்த போராளி அமைப்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தம்முடன் இணைந்துகொள்வதை விரும்பவில்லை. உமா மகேஸ்வரன் என்னுடன் பேசும்போது பல தமிழ்நாட்டு இளைஞர்கள் பிடிவாதமாக போராளிகளுடன் இணைய முயன்றுவந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். "நாங்கள் போரிட்டு சிங்களை வீழ்த்துவதே சரியான வெற்றியாக இருக்கும் என்று அவர்களிடம் சமாதானமாகக் கூறி அனுப்பி வைத்தேன்" என்று அவர் கூறினார். "வீரத் தமிழர்கள் நாங்கள், தனித்துப் போரிட்டே வெல்வோம்" என்று நான் கூறியபோது அவர்கள் உணர்வெழுச்சியால் ஆர்ப்பரித்தனர் என்று உமா மேலும் கூறினார்.
  12. ஆயுதங்களுக்காக இந்தியாவில் தங்கியிருப்பதைத் தவிர்த்த பிரபாகரன் பாண்டிச்சேரியில் ரோ அதிகாரிகளுடனான இரகசிய கூட்டம் நடந்ததன் பின்னர் பிரபாகரன் மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வந்தார். சென்னையில் அவர் பாலசிங்கம் தம்பதியினர் தங்கிருந்த சாந்தோம் சாலை விடுதியில் தங்கியிருந்தார். அதுவே அக்காலத்தில் புலிகளின் அலுவலகமாகவும் தொழிற்பட்டு வந்தது. அந்த அலுவலகம் எப்போதும் ஆட்களால் நிரம்பியிருந்தது. இது பாலசிங்கத்தின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக அமைந்ததுடன் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறியிருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பாலசிங்கம் தம்பதியினர் தமது வாழிடத்தை சென்னைக்கு வெளியே அமைந்திருந்த திருவாண்மியூருக்கு மாற்றியிருந்தனர். சென்னைக்கு வரும்போதெல்லாம் பிரபாகரன் இங்கேயே தங்கினார். அடையார் பகுதியில் ஓரளவிற்கு விசாலமான வீடொன்றினை வாடகைக்கு எடுத்துக்கொண்ட புலிகள் அங்கேயே தமது அரசியல் அலுவலகத்தினைத் திறந்தனர். இந்த அரசியல் அலுவலகத்திலிருந்துதான் பாலசிங்கமும் அடேலும் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த அலுவலகத்தில்த்தான் சக்கரட்ட பயிற்சிமுகாமுக்கு கொண்டுசெல்லப்படுமுன் புலிகளின் போராளிகளுடன் பிரபாகரன் சந்தித்துப் பேசிவந்தார். பொன்னம்மான், அப்பையா, கிட்டு ஆகியோரும் பிரபாகரனை இந்த அலுவலகத்தில் சந்தித்தே சென்றிருக்கிறார்கள். இவர்களுள் அப்பையாவே வயதில் மூத்தவராக இருந்தார். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் பிரிவில் கைதேர்ந்தவராக விளங்கினார். 1983 ஆம் ஆண்டின் இறுதி நான்குமாத காலத்தில் பிரபாகரன் நான்கு விடயங்களில் அக்கறை செலுத்தினார். இவை அனைத்துமே அவரது வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தவை. அத்துடன் புலிகளின் வரலாறு, தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம், இலங்கையின் வரலாறு ஆகியவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியவை. அவையாவன, 1. இந்தியப் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்வது. 2. மட்டக்களப்புச் சிறையுடைப்பு. 3. விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்களின் பங்களிப்பு. 4. அவரது தனிப்பட்ட காதல் விவகாரம் தமிழ்நாட்டு அரசியல்வாதியான நெடுமாறனுடன் கிட்டு இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டத்தினை ஒரு வரப்பிரசாதமாக இறுதியில் உணர்ந்துகொண்ட பிரபாகரன் அதிலிருந்து உச்சபயனை தனதியக்கம் அடைந்துகொள்ளவேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டார். இந்திய இராணுவ அதிகாரிகளிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட மரபுவழிப் போராட்ட வழிமுறையின் மூலம் புலிகளை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றியமைக்கும் சிந்தனையில் அவர் ஈடுபட்டார். எனது ஊரான அரியாலையைச் சேர்ந்த புலிகளின் போராளியான சந்தோசமும் அக்காலத்தில் சென்னையில் பிரபாகரனுடன் தங்கியிருந்தார். பிராபகரனின் சிந்தனையில் அன்று ஓடிக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து நான் அவரிடம் வினவினேன், பிரபாகரன் இரு விடயங்கள் குறித்து தீர்மானமாக இருந்ததாக சந்தோசம் கூறினார். அதாவது, இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி என்பது நெடுநாள் நீடிக்கப்போவதில்லையென்பதும், போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் அவற்றினை எப்போதுமே தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க இந்தியா முயலும் என்பதுமே அவையிரண்டும் ஆகும். இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கையினை தூக்கி நிறுத்தியதன் பின்னர் தமிழ்ப்போராளிகளுக்கு தான் வழங்கிவரும் பயிற்சியினை நிறுத்திவிடும் என்று பிரபாகரன் தனது போராளிகளிடம் கூறிவந்தார். "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போது நிலைபெறுகிறதோ, அன்றே அவர்களுக்கு எமது தேவை இல்லாது போய்விடும். நாளையே ஜெயவர்த்தன இறந்துபோக சிறிமா ஆட்சிக்கு வந்தால், இந்தியா எம்மை முற்றாகக் கைவிட்டு விடும். ஏனென்றால், அதன்பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவான ஆட்சி இலங்கையில் ஏற்படுத்தப்படும்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் நினைவுகூர்ந்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து தன்னை விலத்திக்கொள்ள இந்தியாவுக்கு இன்னொரு காரணமும் ஏற்படலாம் என்பதை பிரபாகரன் உணரத் தலைப்பட்டிருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளை இந்தியா வழங்குவது சர்வதேசத்தில் தெரியவந்து, அதற்கெதிரான பலமான எதிர்ப்பும் விமர்சனங்களும் வெளிவருமிடத்து இந்தியா பின்வாங்கிவிடும் என்று அவர் கருதினார். மேலும் ஜெயவர்த்தன இந்தியாவுடன் அனுசரித்துச் செல்வதென்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இவ்வாறான காரணங்களால் பின்வரும் இருவிடயங்களைச் செய்திடவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது இந்தியப் பயிற்சி நடக்கும் காலம்வரை அதிலிருந்து முழுமையான பயனைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது, இந்தியாவிடம் மட்டுமே தங்கியிருக்காது தமக்கான சொந்த பயிற்சியினையும், ஆயுத வளங்களையும் தேடிக்கொள்வது. இந்த இரண்டு காரணிகளுமே பின்னர்வந்த 4 வருடங்களில் பிரபாகரனின் கொள்கைக்கும் திட்டமிடல்களுக்கும் அடிப்படையாக‌ அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கான பயிற்சித் தளங்களை தமிழ்நாட்டிற்கும் வன்னிக்கும் விஸ்த்தரிக்க அவர் தீர்மானித்தார். அக்காலத்திலேயே புலிகள் மதுரையிலும் வன்னியின் சில பகுதிகளிலும் பயிற்சி முகாம்களை நடத்திக்கொண்டிருந்தனர். அந்த முகாம்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய, பரந்த வலைப்பின்னல் முகாம்களை கட்டியெழுப்பவும் அவர் உறுதிபூண்டார். அதேகாலத்தில் தனது இயக்கத்தின் ஆயுதக் கையிருப்பைப் பெருக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார். "இந்தியாவை நாம் ஆயுதங்களுக்காக நம்பியிருக்கும்வரை நாம் அவர்களது அடிமைகளாகவே இருப்போம்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் என்னிடம் சிறித்துக்கொண்டே கூறினார். ஆகவே, சுதந்திரமான ஆயுதச் சேகரிப்பில் அவர் இறங்கினார். "இவையே பிரபாகரனின் புத்திசாதுரியமான முடிவுகளாக இருந்தன" என்று ரமேஷ் நடராஜா என்னிடம் தெரிவித்திருந்தார். இதனை மிகத் தெளிவாக தினமுரசு பத்திரிக்கையில் 1996 முதல் 1999 வரையான காலப்பகுதியில் "அல்பிரெட் துரையப்பா முதல் காமிணி வரை" எனும் தலைப்பில் அவர் எழுதிய அரசியல்த் தொடரில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரனின் திறமைகளை, பலங்கள் அவரது வெற்றிகள் தொடர்பாக தினமுரசில் தான் தொடர்ச்சியாக எழுதிவந்ததனால் தனது அமைப்பான ஈ.பி.டி.பி இற்குள் கடுமையான எதிர்ப்பினைத் தான் சம்பாதித்துக்கொண்டதாக அவர் கூறினார். "மற்றைய இயக்கங்களும் பிரபாகரனின் திட்டமிடல், சிந்தனையாற்றல், பலங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு தம்மையும் வளர்த்துக்கொள்ளலாம் என்கிற காரணத்திற்காகவே அவர் பற்றி எழுதினேன்" என்று அவர் தனது எழுத்துக்களுக்கு நியாயம் கற்பித்தார். ரமேஷ் எனப்படும் அற்புதராஜா நடராஜா ‍- ஈ.பி.டி.பி தனது மூத்த போராளிகளை வட இந்தியாவிற்கு பயிற்சிக்காக பிரபாகரன் அனுப்பிவந்தபோதிலும், தமிழ்நாட்டில் தாம் அமைத்திருந்த பயிற்சி முகாம்களையும் அவர் விஸ்த்தரிக்கத் தொடங்கினார். தில்லியின் சக்ரட்டா பயிற்சி முகாமிற்கு 200 போராளிகளை பிரபாகரன் அனுப்பியிருந்தார். பின்னர் இப்பயிற்சி முகாம் பங்களூருக்கு மாற்றப்பட்டபோது ,மேலும் பல போராளிகள் பிரபாகரனால் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1983 ஆம் ஆண்டி இறுதிக் காலப்பகுதியில் தனது இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவு வலையமைப்பினை பிரபாகரன் ஆரம்பித்தார். விடுதலை வேட்கை எனும் தலைப்பில் அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் சர்வதேச ஆயுதச் சந்தையில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டது என்று எழுதுகிறார். "உண்மையாகவே நாம் தங்கியிருந்த அறையில் ஒருமுறை பெருமளவு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் ரொக்கெட் லோஞ்சர்களும் நிரம்பிக் காணப்பட்டது. அவ்வாறே மில்லியன் கணக்கான ரூபாய்களும் எமது அறை அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தன‌" என்று அவர் மேலும் கூறுகிறார். இந்தியாவுக்கு வெளியே சுதந்திரமான ஆயுதக் கொள்வனவில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த இன்னொரு போராளித் தலைவர் புளொட்டின் உமா மகேஸ்வரன் ஆகும். ஆனால், அவருக்கு வெளிநாடொன்றில் இருந்து கப்பலொன்றில் கொண்டுவரப்பட்ட‌ 40 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்களும் சென்னையில் இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அதனை விடுவிப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இந்தச் சம்பவத்தின் மூலம் அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இந்தியாவினால் செய்தியொன்று வழங்கப்பட்டது. அதுதான், அவர்கள் தமது ஆயுதத் தேவைக்காக இந்தியாவையே நம்பியிருக்க வேண்டும் என்பதும், அதனை மீறி வெளியுலகில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் இந்தியா அதனை அழித்தே தீரும் என்பதுவுமே அது. ஆனால், பிரபாகரனால் இந்தியாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவ்வப்போது தனக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டுவர முடிந்திருந்தது. தமிழ்நாட்டு சுங்கத்துறையினர் இதற்கு பிரபாகரனுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. 80 களின் ஆரம்ப காலத்திலேயே பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த குளத்தூர் மணி தமிழ்நாட்டில் பயிற்சிமுகாம்களை நிறுவுவது எனும் பிரபாகரனின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து அபரிதமான அதரவு கிடைத்தது. 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டில் இரு பாரிய பயிற்சி முகாம்களை பிரபாகரனினால் அமைத்துக்கொள்ள முடிந்தது. முதாலவது முகாம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அருகிலிருந்து காட்டுப்புறக் கிராமமான குளத்தூரில் அமைக்கப்பட்டது. இரண்டாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் இருந்த காட்டுப்புறக் கிராமமான சிறுமலையில் அமைக்கப்பட்டது. குளத்தூர் முகாமினை உருவாக்குவதற்கு திராவிடர் கழகத்தின் செயற்பாட்டாளராக அன்று இயங்கிவந்த குளத்தூர் மணி பிரபாகரனுக்கு உதவியிருந்தார். முகாமிற்கு அருகிலிருந்த கிராமங்களிலிருந்து போராளிகளின் உணவுத்தேவைக்காக தானியங்களை அவர் எடுத்துவந்து கொடுப்பார். இவ்வாறே சிறுமலை முகாமிற்குத் தேவையான உதவிகளை நெடுமாறன் கவனித்து வந்தார்.
  13. பயிற்சியின் நிறைவில் கண்கலங்கிய கிட்டுவும், யதார்த்தை உணர்த்திய பிரபாகரனும் மூன்று இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தில்லியின் இதயப்பகுதியில் அமைந்திருந்த ராமகிருஷ்ணபுரம், தில்லி விமான நிலையத்திற்கு அருகில் இருந்த டெஹெரா டன் மற்றும் சக்கிரட்ட ஆகிய பகுதிகளிலேயே பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் சாதாரண பயிற்சிக்கு கொண்டுவரப்பட்ட போராளிகள் தனித்தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். விசேட பயிற்சிகளுக்கென்று அழைத்துவரப்பட்ட போராளிகளை, அவர்கள் வேறு வேறான இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஒரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஆனால், புலிகளின் போராளிகளை ஏனைய அமைப்புக்களின் விசேட பயிற்சிப் போராளிகளுடன் தங்கவைப்பதை அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டனர். புலிகளின் போராளிகளை தொடர்ந்தும் தனியாக வைத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. புலிகளை இரகசிய ராணுவப் பயிற்சி நிலையமான சக்கிரட்ட பகுதியில் தங்கவைத்து பயிற்சியளித்தனர். இப்பகுதி இந்திய ராணுவப் புலநாய்வு அதிகாரிகளினால் "கட்டமைப்பு ‍ 22 " என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த முகாமிலேயே சீன ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த திபெத்தில் சீன அரசின் நிர்வாகத்திற்கெதிராகப் போராடிவந்த திபெத்தியப் போராளிகளுக்கு ரோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தன. புலிகளின் போராளிகளுக்கு இந்த முகாமினை ஒதுக்குமாறு ரோ வினால் புலிகளைப் பயிற்றுவிக்கென அமர்த்தப்பட்ட அதிகாரியான‌ காவோ தனது உதவியாளர்களுக்குப் பணித்திருந்தார். இந்தியப் பயிற்சிக்காக தனது போராளிகளை அனுப்புவது தொடர்பில் தலைவர் தனது சந்தேகங்களைக் கொண்டிருந்தார். சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக தான் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கும், இந்தியா போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்திற்கும் இடையிலான பாரிய வேற்றுமையினை அவர் தெளிவாக உணர்ந்தே இருந்தார். ஆனாலும், இந்திய பயிற்சியினைப் பாவித்து மாற்றியக்கங்களைக்கொண்டு இந்தியா புலிகளை பிற்காலத்தில் அழித்துவிடும் நிலைமை உருவாகலாம் என்று தலைவரிடம் கூறிய அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், புலிகளும் இந்தியப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி தலைவரைச் சம்மதிக்க வைத்தார். பாலசிங்கம் கூறியதன்படி நிகழுமானால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் இந்தியப் பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார். ஈரோஸின் பாலக்குமார் "இந்தியாவும் ஈழத்தமிழர்களும்" எனும் தலையங்கத்துடன் 1988 ‍- 1989 ஆம் ஆண்டுகளில் புலிகளால் வெளியிடப்பட்ட பதிவில் இதுகுறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவில் தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியளிப்பதில் இந்தியா கொண்டிருந்த உறுதியை பிரபாகரன் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியப் பயிற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுக்குமிடத்து இந்தியாவினால் பயிற்சியளிக்கப்படும் ஏனைய இயக்கங்கள் தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளின் அழிப்பென்பது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று அவர் அஞ்சினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. "மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியே எமக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், எமது சக்தியைப் பாவித்து நாம் பல பயிற்சி முகாம்களை அமைத்துக்கொண்டு எமது இராணுவ பலத்தினை வளர்த்துக்கொண்டோம். இந்தியாவிடம் தங்கியிருக்காமல் எமது வளங்களைப் பாவித்து எமக்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்" என்று புலிகளின் அப்பதிவு மேலும் கூறுகிறது. பிரபாகரன் பற்றிய இந்தப் பதிவு மேலும் தொடரும்போது அவர் கொண்டிருந்த சிந்தனையும், மதிநுட்பமான முடிவுகளும் போராட்டத்தினை முன்கொண்டு சென்றது குறித்து நாம் மேலும் மேலும் அறிந்துகொள்ள முடியும். தனது போராளிகளைத் தனியான முகாம் ஒன்றில் வைத்து பயிற்சியளிக்குமாறு பிரபாகரன் ரோ அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ரோவும் அதற்குச் சம்மதித்திருந்தது. பயிற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே போராளி அமைப்புக்களில் புலிகளே திறமையானவர்கள் என்பதை ரோ அதிகாரிகள் அறிந்திருந்தனர். ரோ வின் கைக்கூலிகளாக தனது போராளிகள் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பிரபாகரன் எடுத்திருந்தார். அக்காலத்தில் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட இளைஞர்களுக்கு இயக்கப் பெயர் வழங்கப்படுவது வழமையாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது போராளியின் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது பொலீஸாரிடமிருந்தோ துன்புருத்தல்களை எதிர்கொள்வதைத் தடுப்பது. இரண்டாவது போராளிகளுக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுப்பது. புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருபோராளி அவ்வியக்கத்திற்கும், இலட்சியத்திற்கும் எப்போதும் விசுவாசமாக செயற்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. மேலும், தமது முன்னைய வாழ்விலிருந்து முற்றான விலகலையும் இயக்கப் பெயர்கள் போராளிகளுக்கு வழங்கின. புலிகள் இயக்கத்தில் இந்த நடைமுறை ஒரு மதத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். போராளிகள் தமது இயக்கப் பெயர்களையே பாவிக்கவேண்டும் என்றும் ஏனைய போராளிகளின் இயற்பெயரை எக்காரணத்தைக் கொண்டும் அறிந்துகொள்ள முயலக் கூடாது என்கிற கடுமையான கட்டளையும் இருந்தது. போராளிகளின் குடும்பங்களின் விபரங்கள் எதிரிகளுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது போராளிகளிடம் பேசிய பிரபாகரன் எக்காரணத்தைக் கொண்டும் தமது இயற்பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பணித்திருந்தார். இயக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களையே போராளிகள் இந்திய அதிகாரிளிடம் கூறி வந்தமையினால் அவர்களது குடும்ப விபரங்கள் குறித்து ரோ அதிகாரிகளால் அறியமுடியாது போய்விட்டது.பொன்னமானின் உண்மையான பெயர் அவரது வீரமரணத்தின் பின்னரே வெளியே தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார். இந்தியப் பயிற்சி அட்டவணை மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. காலை 8 மணிக்கு உடற்பயிற்சிகளுடன் நாள் ஆரம்பிக்கும். காலையுணவு ஒன்பது மணிக்கு பரிமாறப்பட்டது. பயிற்சிகளுக்கான தேற்றம் மற்றும் தேற்றத்தினை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் செயற்பாடுகள் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டன. மரபுவழிப் போர்முறை மற்றும் கரந்தடிப்படைப் போர்முறை ஆகியனவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்புக்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே வழங்கப்பட்டு வந்தன. மதிய உணவு பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை பரிமாறப்பட்டது. பிற்பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடக்கும் மைதானத்திலேயே கழிக்கப்பட்டது. அனைத்துப் போராளிகளுக்கும் எஸ்.எல்.ஆர், ஏ.கே. 47, எம் ‍ 16, ஜி 3, எஸ்.எம்.ஜி, .303, ரிவோல்வர்கள், பிஸ்ட்டல்கள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் கிரணேட்டுக்கள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகளின்போது திறமையாகச் செயற்பட்டதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சில போராளிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. விசேட பயிற்சிகளின்போது வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, கண்ணிவெடிகளைப் புதைப்பது, தாங்கியெதிர்ப்பு ஆயுதங்களைக் கையாள்வது, தொலைத்தொடபு மற்றும் புலநாய்வு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. டெலோ அமைப்பிலிருந்து ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றிற்கு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் கப்பல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக பிரத்தியேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. டெலோ அமைப்பின் இந்தப் பிரிவில் பயிற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவர் என்னுடன் பேசுகையில் ரோ அதிகாரிகளால் தாம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், கப்பல்களை அடையாளம் காண்பது, அது எந்த நாட்டிற்குரியது என்பதைக் கண்டறிவது, அக்கப்பல் எவ்வகையைச் சார்ந்தது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தக் குழுவினர் கப்பல்களைப் புகைப்படம் எடுப்பது, கப்பலுக்கான தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பது போன்ற புலநாய்வுச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றனர். இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு நீருக்கடியில் சென்று உளவுத்தகவல்களை சேகரிப்பது போன்ற விடயங்களிலும் இக்குழுவினர் இந்திய கடற்படையினரால் பயிற்றப்பட்டனர். டெலோ அமைப்பைச் சேர்ந்த அந்த முன்னாள்ப் போராளி என்னிடம் பேசும்போது திருகோணமலை துறைமுகத்தினைக் கண்காணிப்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகத் தெரிந்ததாக கூறினார். திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்ச் செல்வதைத் தடுப்பதே இந்திய அதிகாரிகளின் ஒரே நோக்கமாக‌ இருந்ததாகவும், இதற்கான பயிற்சியில் தாம் காட்டிய ஈடுபாட்டினையடுத்து ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்திருந்ததாகவும் கூறினார். ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட டெலோ அமைப்பின் ஒரு குழுவினர் ஐந்து முக்கியமான புலநாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பயிற்றப்பட்டனர். அவையாவன, 1. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் இராணுவ உதவிகளை அவதானிப்பது 2. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பிரித்தானியாவின் முன்னாள் போர்வீரர்களைக் கொண்டியங்கும் கூலிப்படையான கீனி மீனி சேர்விஸஸின் செயற்பாடுகளை அவதானிப்பது 3. பாக்கிஸ்த்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை அவதானிப்பது 4. வொயிஸ் ஒப் அமெரிக்கா எனப்படும் அமெரிக்காவின் வானொலி நிலையத்தின் செயற்பாடுகளை அவதானிப்பது 5. திருகோண‌மலை துறைமுகத்தினை அவதானிப்பது. இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் பயிற்றுவிப்பாளன் ஒருவனுடன் சிங்கள விசேட அதிரடிப்படையினர் பயிற்சிகளை ஒருங்கிணைத்திருந்தவர்கள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் ரோவுக்காக வங்கதேசம், சிக்கிம், பாக்கிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். ஏனையவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள். விசேட பயிற்சிகளுக்கென்றும் தனியான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், போராளிகள் தில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் இந்த விசேட பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன. சங்கர் ராஜியும் டக்கிளஸ் தேவானந்தாவும் என்னுடன் பேசும்போது சில அதிகாரிகள் இலங்கை குறித்த தகவல்களைத் திரட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறினர். இலங்கையில் இருக்கும் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகள் தம்மிடம் பணித்ததாகக் கூறினர். பயிற்சியில் ஈடுபடும் போராளிகள் இந்த விபரங்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பது அவர்களின் கடமை என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தம்மிடம் பயிற்சி பெறுபவர்களை அவ்வப்போது ரோ அதிகாரிகள் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. உண்மையாகவிருத்தல், நன்னடத்தை மற்றும் குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. புலிகளின் போராளிகளே பயிற்சியாளர்களின்போது இந்திய அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றனர். பயிற்சி முடிந்தபொழுது நடத்தப்பட்ட விடைபெறுதல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. புலிகளைப் பயிற்றுவித்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர் இறுதி விடைபெறும் உரையினை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கினார். புலிகளின் தரப்பில் பேசிய கிட்டுவும் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். சொற்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கண்கள் கண்ணீரால் நிரம்பியதாக கூடவிருந்த போராளிகள் கூறியிருந்தனர். சென்னைக்குத் திரும்பியபோது இந்த நிகழ்வினை பிரபாகரனிடம் பொன்னம்மான் தெரிவித்தார். சிறிது நேரம் மெளனமாகச் சிந்தித்துவிட்டு பிரபாகரன் பேசத் தொடங்கினார், "ஒரு குறிக்கோளுக்காகவே நாம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களோ (இந்தியர்கள்) வேறொரு நோக்கத்திற்காக எமக்குப் பயிற்சியளித்தார்கள். எமது குறிக்கோளுக்கு எதிராக அவர்கள் தமது இராணுவத்தை இறக்கினால் அவர்களுடன் சண்டையிடுமாறு நான் கிட்டுவைக் கோருவோன். கிட்டுவும் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டே ஆகவேண்டும்" என்று கூறினார். சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது இந்த நிகழ்வினை கிட்டு நினைவுகூர்ந்தார்.
  14. இந்தியப் பயிற்சி 1983 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் சென்னையி முழுதும் ஈழத் தமிழ் இளைஞர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவர்களைத் தொகுதி தொகுதியாக பஸ்வண்டிகளில் ஏற்றி தில்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ரோ அதிகாரிகள். "அது ஒரு களைப்பு மிகுந்த நீண்ட தூரப் பயணம்" என்று அரியாலையைச் சேர்ந்த நிருபன் எனும் இளைஞர் என்னுடன் சில வருடங்களுக்கு முன்னர் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். டெலோ அமைப்பின் முதலாவது தொகுதிப் பயிற்சிப் பாசறையின் உறுப்பினரான அவர் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார். டெலோ அமைப்பே இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது அமைப்பென்பதும் குறிப்பிடத் தக்கது. சுமார் 2,000 கிலோமீட்டர்கள் தூரத்தினைக் கடக்க தமது பஸ்வண்டிக்கு மூன்று நாட்கள் எடுத்ததாக அவர் கூறினார். தில்லியைச் சுற்றிப்பார்த்தபடியே தமது பயணத்தைத் தொடர அவர்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாம். "இடங்களைச் சுற்றிக் காட்ட எம்மை அழைத்துச் சென்றார்கள். ஆனால் எம்மை எவருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று நிருபன் கூறினார். தில்லியிலிருந்து பயிற்சி முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டம் என்பது ஒரு இரகசியாமான நடவடிக்கை என்று அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது. "எமது மூன்றரை மாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு நாம் மீன்டும் சென்னைக் கொண்டுவரப்பட்டபோதுதான் நாம் பயிற்றப்பட்ட இடம் டெஹெரா டன் எனும் பகுதி என்பது எமக்குத் தெரியவந்தது. பயிற்சி முழுதுவதும் எம்மை முகாமிற்கு வெளியே செல்ல அவர்கள் அனுமதியளிக்கவில்லை". அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றின் மலைப்பாங்கான நிலப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த அந்தப் பயிற்சி முகாம் வெளியுலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. "அது ஒரு அழகான இடம். நாம் அங்கு தங்கியிருந்த நாட்களை மகிழ்வுடன் களித்தோம். ஆனால் அங்கு நிலவிய காலநிலை மட்டுமே எமக்குப் பிரச்சினையாக இருந்தது" என்று அவர் கூறினார். முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட முதலாவது நாள் கடுங்குளிராகக் காணப்பட்டதாகக் கூறும் நிருபன் தனக்கு வழங்கப்பட்ட தடிப்பான கம்பளத்தினால்க் கூட அக்குளிரைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். பயிற்சிமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு, பதியப்பட்ட பின்னர் ஒவ்வொரு போராளிக்கும் இரு போர்வைகளும், படுக்கை விருப்பித் துணியும், மடித்துவைக்கக்கூடிய கட்டிலும் வழங்கப்பட்டது. "மிகக்கடுமையான குளிரைக் கொண்ட பிரதேசம்" என்று நிருபன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், ஒருவார காலத்தின் பின்னர் குளிருக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள். "பின்னர் குளிருக்கு எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்" என்று அவர் கூறினார். ஆனால், வட இந்திய உணவை உட்கொள்வது கடிணமாகவே தென்பட்டது. சப்பத்தி, நாண், பூரி என்பவற்றுடன் உருளைக்கிழங்கு, முட்டை அல்லது ஆட்டுக்கறி அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இடையிடையே கோழிக்கறியும் வழங்கப்பட்டிருந்ததது. எப்போதாவது ஒருமுறைதான் சோறும் மீன்கறியும் முகாமில் கிடைத்தது. "அவர்களின் உணவில் சுவையே இருக்கவில்லை. அவர்கள் மிளகாய்த்தூள் பாவிப்பதேயில்லை" என்று நிருபன் தொடர்ந்தார். "சூடான, சுவையான உணவையே நாம் எதிர்ப்பார்த்தோம்" என்று அவர் மேலும் கூறினார். ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர். பின்னர் வந்த மாதங்களில் மேலும் சில தொகுதிப் போராளிகளை அமைப்புக்கள் அனுப்பி வைத்திருந்தன. இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச‌ பயனைப் பெற்றுக்கொள்ள இயக்கங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. டெலோவினால் அனுப்பப்பட்ட தொகுதிப் போராளிகளுக்கு சிறீ சபாரட்ணமும், ஈரோஸ் போராளிகளுக்கு பாலக்குமாரும், ஈ.பி.ஆர்.எல்.எப் தொகுதிக்கு டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் போராளிகளுக்கு உமா மகேஸ்வரனும், புலிகளின் போராளிகளுக்கு பொன்னமான் என்று அழைக்கப்பட்ட குகனும் தலைமை தாங்கியிருந்தார்கள். உமா மகேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவாநந்தாவிற்கும் லெபனானில் அவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புதுப்பிக்கும் நிகழ்வாக இந்தியப் பயிற்சி அமைந்திருந்தது.
  15. இந்தியப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - புலிகளும் ஏனைய விடுதலை அமைப்புக்களும் புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியளவில் ஐந்து போராளி அமைப்புக்களும் இந்திய பயிற்சித் திட்டத்தினுள் இணைக்கப்பட்டிருந்தனர். இலங்கையிலிருந்து போராளி அமைப்புக்கள் தமது முதலாவது தொகுதிப் போராளிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்துவருவதற்கு இருவாரகால அவகாசத்தினை மட்டுமே ரோ வழங்கியிருந்தது. "குறைந்தது 300 போராளிகளையாவது இருவார காலத்தினுள் சேர்த்து தமிழ்நாட்டிற்கு அழைத்துவருமாறு நாம் கேட்கப்பட்டோம். டெலோ அமைப்பிடம் குறைந்தது 500 போராளிகளையாவது அழைத்துவரவேண்டும் என்று ரோ கோரியிருந்ததை நாமும் அறிந்துகொண்டோம்" என்று ஈரோஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராஜி கூறினார். ரோவினால் கேட்டுக்கொண்டதற்கமைய டெலோவும் ஈரோஸும் உடனடியாக இதனை யாழ்ப்பாணத்திலிருந்த தமது போராளிகளுக்கு அறியத் தந்தனர். இந்தச் செய்தி யாழ்ப்பாணமெங்கும் காட்டுத்தீயைப்போல பரவியது. "இந்தியா எமக்குப் பயிற்சியளிக்கப்போகிறது" என்பதே இளைஞர்கள் மத்தியில் அப்போது பேச்சாக இருந்தது. ஜூலைக் கலவரத்தினூடாக யாழ்ப்பாணத்தில் பெருமளவில் வந்து சேர்ந்திருந்த ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி பரவத் தொடங்கியது. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடும்பங்கள் ஒரே இரவில் அவர்களின் வாழிடங்களில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, உடுத்த உடையுடன் உயிரை மட்டுமே காத்துக்கொள்ள ரயில்களிலும், கப்பல்களிலும் தமது தாயகம் நோக்கி ஓடிவந்திருந்தனர். கொழும்பு, கண்டி, குருநாகலை, அநுராதபுரம், காலி மற்றும் தெற்கின் மாத்தறை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் விரட்டப்பட்டிருந்தார்கள். வெறுங்கைகளுடன், வாழ்நாளில் சேர்த்த சொத்துக்களையெல்லாம் இழந்து ஆத்திரமும், உறுதியும் மட்டுமே மீதமாயிருக்க தாயகம் மீண்டிருந்தார்கள். "ஆம், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், ஆனால் எங்கள் கெளரவத்தை மட்டும் இழக்கவில்லை" என்று 22 வயது நிரம்பிய இளைஞர் ஒருவருடன் அகதிகள் முகாமில் பேசும்போது கூறினார். கண்டியில் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த கதிர்காமர் குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் தொடர்ந்து பேசும்போது, "எனது பாட்டி எங்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கேதான் அவரது சகோதரி இருக்கிறார். யாழ்ப்பாணத்திற்கு நான் செல்வது இதுவே முதல்முறையாகும். எங்கள் வேர்களைத் தேடி நாங்கள் செல்கிறோம்" என்று அவர் கூறினார். பின்னாட்களில் அவர் டெலோ அமைப்பில் இணைந்துவிட்டதாக நான் அறிந்துகொண்டேன். குமார் நடராஜா அநுராதாபுரத்தில் வசித்து வந்தவர். பெளத்தர்களின் புனித நகரில் பலகாலம் வாழ்ந்துவந்த அவரது பாட்டனார் ஒரு வழக்கறிஞராக வேலைபார்த்துவந்தவர். அவர்களுக்கென்று கடையொன்றும், அழகிய வீடும், தோட்டம் செய்யும் காணியும் அங்கிருந்தன. "தெய்வாதீனமாக எமது உறவினர்கள் இப்போதும் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். நாங்கள் அங்கு சென்று அவர்களுடன் தங்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். ஆனால் அவர் யாழ்ப்பாணத்தில் அதிக காலம் வாழவில்லை. அவர் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டார். கதிர்காமர், குமார் நடராஜா போன்ற இளைஞர்கள் ஒருபோதுமே யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருக்காதவர்கள். அவர்கள் சிங்களவர்கள் மத்தியில் இலங்கையின் தென்பகுதிகளில் பிறந்தவர்கள். அங்கேதான் தமது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர்கள். தெற்கோடு மனதளவில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவர்களைத்தான் சிங்களவர்கள் பலவந்தமாக அவர்கள் தமது வாழிடங்கள் என்று நினைத்து இருந்தவிடங்களில் இருந்து பிடுங்கி, வடக்குத்தான் உங்களின் தாயகம், அங்கேயே ஓடிப்போங்கள் என்று ஒரு இரவிற்குள் துரத்தியடித்தார்கள். இந்தச் சூழ்நிலையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இருந்த பேராசிரியர் கே. கைலாசபதி சிறப்பாகச் சொல்லியிருந்தார், "தாம் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக, வன்முறைகளூடாகப் பிடுங்கி எறியப்பட்டமையானது அவர்களின் மனங்களிலும், உடலிலும் அவர்கள் தனியான தேசத்தைச் சேர்ந்தவர்கள், அந்தத் தனியான தேசம் நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ்த் தேசியத்திற்கு ஜெயவர்த்தன செய்த மிகப்பெரிய உதவியே இந்த வன்முறைகள். அன்றிலிருந்து தமிழர்களைப் பொறுத்தவரை இனிமேல் திரும்பிப் பார்த்து சமரசம் செய்வதற்கு இடமில்லையென்று ஆகிப்போயிற்று". வடக்குக் கிழக்கில் வாழ்ந்துவந்த இளைஞர்களும் தெற்கிலிருந்து துரத்தப்பட்டவர்களையொத்த கோபத்தினைக் கொண்டிருந்தனர். அவர்களின் இன கெளரவத்தினை இத்தாக்குதல்கள் காயப்படுத்தி விட்டிருந்தன. "சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கி வருகிறார்கள், நாமும் இனிமேல் திருப்பித் தாக்க வேண்டும்" என்பதே ஜூலை இனக்கொலைக்கான அவர்களின் பதிலாக இருந்தது. "தமிழ் இளைஞர்களின் மனோநிலை ஜூலைப் படுகொலைகளுக்குப் பின்னர் கடலளவு மாறிப்போயிற்று" என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்த பேராசிரியர் சிவத்தம்பி கூறினார். "தாக்குதல்களுக்கு முன்னர் போராளிகளின் தீரச் செயல்களை இளைஞர்கள் புகழ்ந்து பாராட்டிவந்தார்கள். ஆனால், போராளிகளுடன் இணையவேண்டும் என்கிற அவா அவர்களிடத்தில் அப்போது பெரிதாக இருக்கவில்லை. ஆனால், ஜூலை இனக்கொலைக்குப் பின்னர் அந்த நிலை மாறிப்போய்விட்டது. அவர்கள் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் ஆயுதப்போராட்டத்தின் பங்காளிகளாக மாற விரும்பினர்" என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், வெளியாரின் உதவியில்லாமல் சிங்கள அரசை எதிர்த்துப் போராட முடியுமா என்கிற கேள்வி பல இளைஞர்களிடத்தில் இருந்தது. அதற்கு இரு காரணங்கள் அவர்களுக்கு இருந்தன‌. இந்தியாவின் உதவியினால் வங்கதேசப் போரில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. வெளியாரின் உதவியின்மையினால் தெற்கின் ஜே.வி.பி யினரின் கிளர்ச்சி தோல்வியடைந்திருந்தது. ஆகவே, இந்தியா அயுதப் பயிற்சி வழங்கப்போவதாகத் தீர்மானித்தபோது அவர்கள் எதிர்பார்த்த வெளிநாட்டு உதவி கிடைத்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆகவே பல நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணையத் தொடங்கினார்கள். டெலோ அமைப்பு வேகமாக இயங்கத் தொடங்கியது. மினிபஸ் வண்டியொன்றினை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட டெலோ அமைப்பினர் யாழ்க்குடாநாடெங்கும் பயணித்து, "சிங்களவர்களை எதிர்த்துப் போராட விரும்புபவர்கள் எல்லாம் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள். நாம் எமது வீரர்களை இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கவிருக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் அறிவித்தபடி வலம்வந்தார்கள். "அங்கு மிகவும் அவசரமான நிலைமை காணப்பட்டது. எமது வேண்டுகோளுக்கு இளைஞர்களிடையே இருந்து வந்த வரவேற்பினைப் பார்த்து நாம் அசந்துவிட்டோம்" என்று முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் நினைவுகூர்ந்தார். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியின் உயர்தர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த அனைத்து மாணவர்களும் தம்முடன் வந்து இணைந்துகொண்டபோது தாம் அதிர்ந்துபோய் விட்டதாக அவர் கூறினார். ஈரோஸ் அமைப்பிடம் மினிபஸ் ஒன்றினை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் வசதிகள் இருக்கவில்லை. ஆகவே துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு யாழ்க்குடாநாடெங்கும் அது விநியோகித்து வந்தது. "எல்லோரும் வந்து எங்களுடன் இணையலாம்" என்கிற டெலோவின் கொள்கையினை அது கைக்கொள்ளவில்லை. தமது அமைப்பிற்குரிய கொள்கையின் அடிப்படையிலேயே இளைஞர்களை அது சேர்த்துக்கொள்ள விரும்பியது. தம்முடன் இணையும் இளைஞர்கள் செயல்த்திறன் மிக்கவர்களாகவும், கொள்கையில் உறுதியானவர்களாக இருக்கவேண்டும் என்றும் அது எதிர்பார்த்தது. இயக்கத்திற்குப் புதிதாக இளைஞர்களைச் சேர்க்கும் செயற்பாட்டில் புளொட் அமைப்பு சற்றுத் தாமதமாகவே இறங்கியது. தாம் அதுவரை கடைப்பிடித்துவந்த ஆட்சேர்ப்பிற்கான இயக்கவிதிகளை அது முற்றாகக் கைவிட்டு விட்டது. புளொட் அமைப்பில் எவரும் வந்து இணைந்துகொள்ளலாம் என்று அது அறிவித்தது. புளொட் அமைப்பிற்கு பணம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் அவ்வமைப்பிடம் பெருமளவு பணம் கையிருப்பில் இருந்தது. ஆட்சேர்ப்புச் செயற்பாட்டில் இறுதியாக இறங்கிய அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகும். அவ்வமைப்பு ஐந்து போராளிக் குழுக்களிலும் மிகவும் வறியதாக அன்று இருந்தது. "எங்களிடம் பத்து ரூபாய்கள் கூட இருக்கவில்லை" என்று பின்னாட்களில் ஈ.பி.டி.பி அமைப்பில் சேர்ந்துகொண்ட ரமேஷ் நடராஜா என்னிடம் தெரிவித்தார். போராளிகளை இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்புவது செலவு மிகுந்த ஒரு விடயம் என்று அவர் கூறினார். இதுகுறித்து சுவாரசியமான விடயம் ஒன்றினையும் அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் பயிற்சித் திட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணத்து போராளிகளுடன் தொடர்புகொண்ட பத்மநாபா உடனடியாக ஆயிரம் இளைஞர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு கோரியிருந்தார். மேலும், "ஆட்களைச் சேர்ப்பது குறித்து நீங்கள் யோசிக்கவேண்டாம், மட்டக்களுப்பு அலுவலகத்தினர் அதனைச் செய்து தருவதாக எனக்கு உறுதியளித்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார். ஆனால், தமது கவலையெல்லாம் வேறாக இருந்ததாக ரமேஷ் என்னிடம் கூறினார். சேர்க்கப்பட்ட இளைஞர்களை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து, பராமரித்து, பின்னர் பாதுகாப்பாக படகுகளில் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கவேண்டிய தேவை இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் பெருமளவு பணம் தேவை. "இளைஞர்களை படகு ஒன்றில் அனுப்பிவைப்பதற்கு குறைந்தது 25,000 ரூபாய்களாவது வேண்டும். படகுக்கான வாடகை மட்டுமே 15,000 ரூபாய்கள். அவ்வளவு பணத்திற்கு நாம் எங்கே போவது? ஆகவே, கொள்ளையிடுவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார் ரமேஷ். முதலாவது கொள்ளைச்சம்பவம் யாழ்ப்பாணத்தின் பிரதான தபாலகத்தில் நடத்துவதென்று முடிவாகியது. "தபாலகத்தில் பணம் இருப்பதை நாம் அறிந்துகொண்டோம். ஆனால், தபாலகத்திற்கு மிக அண்மையாக யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. ஆனால், எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எம்மில் எழுவர் கால்நடையாக தபாலகத்திற்குச் சென்று அங்கிருந்த தபால் அதிபரையும் ஏனைய ஊழியர்களையும் அச்சுருத்தினோம். அங்கிருந்த பணத்தினை ஐம்பது சிறிய பொதிகளாக அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள். அந்தப் பொதிகளை அவிழ்த்து அவற்றிலிருக்கும் பணத்தினை எம்மிடம் கையளிக்குமாறு ஊழியர்களை நாம் கோரினோம். பணத்தைக் கொள்ளையிட்டுச் செல்ல சுமார் 30 நிமிடங்கள் எடுத்தது" என்று அவர் கூறினார். யாழ்ப்பாணம் தபாலகத்தின் கொள்ளைச் சம்பவத்தின் வெற்றியினால் குதூகலமடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் சில நாட்களின் பின்னர் கார் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்குவில், பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களில் இயங்கிவந்த தபாலகங்களைக் கொள்ளையிட்டனர். அதன் பின்னர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை அவர்கள் கொள்ளையிட்டனர். இவற்றில் இருந்து சேர்த்துக்கொண்ட பணத்தின் மூலம் தமது இயக்கத்தில் சேர்ந்த அனைவரையும் இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தனர். அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நகைச்சுவையான சம்பவங்கள் குறித்து அவ்வப்போது அவர்கள் பேசிக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, டெலோ அமைப்பில் இணைந்துகொண்ட ஒரு இளைஞருக்கு "தேங்காய்" என்று புனைபெயர் இடப்பட்டது. அவரது தாயார் சமைப்பதற்கு தேங்காயொன்றினை வாங்கிவரும்படி அவரை கடைக்கு அனுப்பியிருந்தார். கடைக்குச் செல்லும் வழியில் தன்னுடன் கூடக் கற்கும் சில நண்பர்களை அவர் சந்தித்தார். அவர்கள் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்வதாகக் கூறவே, அவரும் அவர்களுடன் இணைந்துகொண்டார். இன்னும் ஒரு சுவாரசியமான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது. ஈ.பி.ஆர் எல்.எப் அமைப்பிற்காக தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், அவ்வியக்கத்தின் இடைத்தங்கல் முகாமில் சுவரொட்டியொன்றினை வரைந்துகொண்டிருந்தார். அதில், "பிரபாகரன் நீடூழி வாழ்க" என்று எழுதப்பட்டிருந்தது. அதனை அவதானித்த முகாமின் மேற்பார்வையாளர் அந்த இளைஞனிடம், "தோழர், பிரபாகரன் நீடூழி வாழவேண்டும் என்று நீங்கள் ஏன் வாழ்த்துகிறீர்கள்?" என்று அந்த இளைஞரைக் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பாவித்தனமாகப் பதிலளித்த அந்த இளைஞன், "ஏன், எமது இயக்கத்தின் தலைவர் அவர் இல்லையா?" என்று கேட்டிருக்கிறார். பயிற்சிக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட சில இளைஞர்களுக்கு தாம் இணைந்துள்ள இயக்கத்தின் விபரங்களோ அல்லது அன்றிருந்த இயக்களுக்குள் இருந்த முரண்பாடுகள் பற்றிய விபரங்களோ தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் லேக்ஹவுஸ் பத்திரிக்கை நிருபர்களாகப் பணிபுரிந்த நண்பர்கள் இவ்வாறான பல சுவாரசியமான தகவல்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அந்நாட்களில் ஒவ்வொரு போராளி அமைப்பும் வாய்வழித் தொடர்பாடல் மூலமே தமிழ்நாட்டிற்குச் செல்லவிருக்கும் படகுகள், இடம், நேரம் பற்றிய விபரங்களை தமது உறுப்பினர்களுக்கு வழங்கி வந்தார்கள். இயக்கங்களால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்திற்குச் செல்லும் இளைஞர்கள், கடற்கரையிலிருந்து இடுப்பளவு நீர்மட்டம் வரை ஓடிச்சென்று தயாராக நிற்கும் படகுகளில் ஏறிக்கொள்ள வேண்டும். அப்படி ஓடிச்செல்லும்போது அது எந்த இயக்கத்தின் படகென்று ஆராய்ந்து பார்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை எல்லா இயக்கங்களும் தமிழீழத்திற்காகவே போராடுவதாக நினைத்தார்கள். ஒரு இளைஞன் இற‌ப்பர்ச் செருப்புகளை அணிந்தவாறு ஓடிக்கொண்டிருந்தான். அவன் ஓடிச்சென்று தடாலென்று படகில் ஏறிக்கொண்டபோது முழுப்படகுமே நீரில் நனைந்துவிட்டது. ஆனால், அந்த இளஞனின் செருப்பு கழன்று கடலில் மிதந்துகொண்டு செல்வதைக் கண்ட அவன், "என் செருப்பு, என் செருப்பு, என் செருப்பு" என்று அழத் தொடங்கினான். அவனது அழுகையினைக் கண்ட படகிலிருந்த ஏனைய இளைஞர்கள் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள், எவர் இணைய விரும்பினாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று எடுத்த முடிவு பிழையானது என்று ரமேஷ் என்னிடம் வருத்ததுடன் கூறினார். "தமது இயக்கமே மிகப்பெரியது என்று காட்டி தில்லியின் பாராட்டுதல்களைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எண்ணிக்கையினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிய அவர்கள் தமது இயக்கத்தில் இணையும் இளைஞர்களின் தகுதிபற்றி அறிய விரும்பியிருக்கவில்லை. இந்தவகையான ஆசைக்குள் அகப்படாமையினாலேயே பிரபாகரனினால் இன்றிருக்கும் நிலையினை அடைய முடிந்தது" என்று என்னிடம் கூறினார். பிரபாகரன் மட்டுமே தனது இயக்கத்தில் இணையும் இளைஞர்கள் பற்றி அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். இயக்கத்தின் அடிப்படை விதிகளை எச்சந்தர்ப்பத்திலும் தளர்த்தவோ, விட்டுக்கொடுக்கவோ அவர் விரும்பவில்லை. அவரது கடுமையான நடைமுறைகள் பற்றி அவரிடம் வினவியபோது, "50 இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்ட போராளிகள், அலைந்துதிரியும் 500 பேரை விட திறன் கொண்டவர்கள்" என்று கூறினார். பிரபாகரன் ஆட்சேர்ப்பில் காட்டிய நடைமுறையே இலட்சிய உறுதியும், செயற்திறனும், துணிவும், தலைமை மீதான அசைக்க முடியாத விசுவாசமும், சுய ஒழுக்கமும் கொண்ட போராளிகளை உருவாக்க வழிவகுத்ததோடு, ஏனைய இயக்கங்கள் அனைத்திலுமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை மக்கள் வேறுபடுத்திப் பார்க்கவும் வழிசமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.
  16. பாண்டிச்சேரியில் பிரபாகரனுக்கும் ரோ அதிகாரிகளுக்கும் இடையே நடந்த இரகசியக் கூட்டம் பிரபாகரனும் பத்மநாபாவும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். புலிகளுக்கென்று சென்னையில் அலுவலகம் எதுவும் இருக்கவில்லை. பேபி சுப்பிரமணியம், நேசன் உள்ளிட்ட வெகு சில போராளிகளே அப்போது சென்னையில் தங்கியிருந்தார்கள். பெரும்பாலான போராளிகள் மதுரையில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிமுகாமிலேயே தங்கியிருந்தார்கள். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்லும்போது பெருமளவு போராளிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். புலிகளின் போராளிகளின் மொத்த எண்ணிக்கை 50 ஐக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே அன்று காணப்பட்டது. ரோ கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்திரகாசன் பேபி சுப்பிரமணியத்திடம் இந்தியாவின் திட்டம் பற்றிக் கூறினார். பின்னர் அச்செய்தியை பேபி சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பிரபாகரனுக்கு அறியத் தந்தார். இந்தியாவின் திட்டத்தினை அறிந்த பிரபாகரன் கடுங் கோபம் கொண்டார். செயலிழந்து காணப்பட்ட போராளி அமைப்புக்களை தனது தேவைக்காக இந்தியா இயக்க நினைப்பதாக அவர் உணர்ந்தார். 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெலோ அமைப்பு எந்தவித இராணுவத் தாக்குதல்களிலும் தன்னை ஈடுபடுத்தியிருக்கவில்லை. ஈரோஸ் அமைப்பு விவாதங்களுக்கப்பால் செயற்பாடுகளில் இறங்க விரும்பியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த கல்விமான் ஒருவர் என்னுடன் பேசுகையில், "ஈரோஸ் அமைப்பு தானும் எதையும் செய்யப்போவதில்லை, செய்பவர்களையும் விடப்போவதில்லை" என்று சலித்துக்கொண்டார். தனது அதிருப்தியை ரோ விடம் தெரிவித்த பிரபாகரன், சந்திரகாசனூடாக அல்லாமல் ரோ தன்னுடன் நேரடியாகவே இதுபற்றி பேசியிருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார். (2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் இலங்கை அரசுக்குச் சார்பாகவும், புலிகளின் அழிப்பினை நியாயப்படுத்தியும் சந்திரகாசன் செல்வநாயகம் வழங்கிய செவ்வி இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. ரோவின் திட்டத்தின்படி பரந்தன் ராஜனையும் கருணாவையும் இணைத்து புலிகளுக்கெதிரான நாசகார வேலைகளை ஒருங்கிணைத்த சதியில் இவரும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.) http://www.srilankaguardian.org/2008/03/we-are-better-off-without-ltte.html புலிகளின் வைரியும் ரோவின் நெருங்கிய தோழருமான சந்திரகாசன் மேலும், இந்தியாவின் திட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினை சரிவர ஆய்வுசெய்து தனக்கு அறிவிக்க நம்பிக்கையான ஒருவரை பிரபாகரன் தெரிவுசெய்தார். ஆகவே, லண்டனில் அப்போது தங்கியிருந்த அன்டன் பாலசிங்கத்தை தொலைபேசியில் அழைத்த பிரபாகரன் உடனடியாக சென்னைக்குச் சென்று அங்கு ஏற்பட்டிருக்கும் புதிய திருப்பங்கள் குறித்துக் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டார். லண்டனில் பாலசிங்கம் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பு தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. மதில்மேற் பூனையாக அதுவரை இருந்த பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் அப்போது ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினையும் தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர். இவ்வாறான புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெருமளவு பணம் வந்து சேரத் தொடங்கியது. சில புலம்பெயர் தமிழர்கள் லண்டனை விட்டு இலங்கை சென்று போராளிகளுடன் தம்மையும் இணைத்து போராட‌ ஆயத்தமானார்கள். அன்டன் பாலசிங்கமும் அடேலும் ஆவணி மாதத்தின் இறுதிப் பகுதியில் பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். அவர்களை வரவேற்க வெள்ளை வேட்டியுடனும் மண்ணிற மேற்சட்டையுடனும் சென்றிருந்த பேபி சுப்பிரமணியம் அவர்கள் இருவரையும் வூட்லாண்ட் ஹோட்டலில் தங்கவைத்தார். அங்கிருந்து பாலசிங்கமும் அடேலும் "தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் விடுதலைப் போராட்டமும்" எனும் தலைப்பில் நீண்ட துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டனர். இப்பிரசுரத்தின் நோக்கம் புலிகளின் குறிக்கோள்கள், அவர்களின் அரசியல் சித்தார்த்தம் ஆகியனவற்றை மக்களுக்குப் புரியவைப்பது மற்றும் போராட்டத்திற்கான நிதியினை சேகரிக்க மக்களின் உதவியை நாடுவது என்பதாகவே இருந்தது. புரட்டாதி மாதத்தின் நடுப்பகுதியில் பாலசிங்கமும் அடேலும் அங்கிருந்து கிளம்பி சாந்தோம் பகுதியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு அறைகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பிற்குள் வாழத் தொடங்கினார்கள். சாந்தோம் குடியிருப்பிற்கு பாலசிங்கம் தம்பதிகள் குடிபுகுந்து சில நாட்களுக்குள் தமிழ்நாடு உளவுத்துறையைச் சேர்ந்த ஜம்போ குமார் என்பவர் பாலசிங்கத்தின் சென்னை வருகையின் காரணத்தைக் கண்டறிய அவரைச் சந்திக்கச் சென்றார். பின்னர், விசேட புலநாய்வுத்துறையின் உதவி அத்தியட்சகர் அலெக்ஸாண்டரை பாலசிங்கத்திற்கு ஜம்போ குமார் அறிமுகம் செய்துவைத்தார். அலெக்ஸாண்டர் ஊடாக பாலசிங்கத்திற்கு ரோவின் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கத்துடன் தொடர்புகொண்ட ரோ அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தில் புலிகளும் இணையவேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்தனர். ரோவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரனே சென்னைக்கு நேரடியாக வந்து முடிவெடுக்க வேண்டும் பால‌சிங்கம் விரும்பினார்.ஆகவே, பிரபாகரனை உடனடியாக சென்னைக்கு வருமாறு அவசரச் செய்தியொன்றினை அவர் அனுப்பினார். மேலும், புலிகள் இந்தியாவின் திட்டத்தை ஏற்காது விடில் அவர்கள் இந்தியாவால் கைவிடப்படும் நிலைக்கு உள்ளாவார்கள் என்றும், இந்தியாவுடன் நெருக்கமாவது அவசியம் என்றும் அவர் பிரபாரகனிடம் கூறினார். பாலசிங்கத்தின் செய்தியும் வேண்டுகோளும் வன்னியில் புலிகளின் பயிற்சி முகாமொன்றில் கூடிய புலிகளின் உயர்பீட உறுப்பினர்களிடையே ஆளமாக விவாதிக்கப்பட்டது. உயர் பீடத்தின் ஒரு பிரிவினர் இந்தியாவின் திட்டம் குறித்த தமது சந்தேகங்களை வெளியிட்டனர். பிரபாகரன் சென்னைக்கு வரும்போது அவரைக் கைதுசெய்வதற்காகத்தான் ரோ நாடகம் ஆடுகின்றதா என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டையில் பிணையில் விடப்பட்ட பிரபாகரன் இரகசியமாக இந்தியாவை விட்டு இலங்கைக்கு வந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆகவே, பாலசிங்கத்திடமிருந்து மேலதிகமான தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் முடிவெடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். ரகுவும் மாத்தையாவும் மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள மதுரைக்குச் சென்றார்கள். பாலசிங்கமும் அடேலும் அவர்களைச் சந்திக்க மதுரைக்குச் சென்றார்கள். பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் செல்வது பாதுகாப்பானதா என்று பாலசிங்கத்திடம் வினவினார் மாத்தையா. அதற்குப் பதிலளித்த பாலசிங்கம் ரோ தன்னை ஏமாற்றுவதற்காகவே இதனைச் செய்வதாக தான் நம்பவில்லை என்று கூறினார். மேலும், பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பிணையினை அவர் உதாசீனம் செய்தமையானது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையே அன்றி மத்திய அரசாங்கம் அதுகுறித்து சற்றேனும் கவலைப்படவில்லை என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். போராளிகளுக்கான இராணுவப் பயிற்சியை வழங்குவது எனும் முடிவு மத்திய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டதென்பதும், இந்திரா காந்தியே பிரத்தியேகமாக இதனைக் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மாத்தையா மற்றும் ரகுவுடன் பேசிய பாலசிங்கம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்த தகவல்களை விளக்கத் தொடங்கினார். ஆனால், மாத்தையாவோ ரகுவோ இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு வந்தனர். இப்பயிற்சித் திட்டத்திற்கான கோரிக்கையே பிரபாகரனை இந்தியாவிற்கு வரவழைத்துக் கைதுசெய்வதற்காக ரோ நடத்தும் நாடகம் என்பதில் அவர்கள் விடாப்பிடியாக நின்றிருந்தனர். அதன்பின்னர், பிரபாகரனுக்கு நேரடியாக கடிதம் ஒன்றினை எழுதிய பாலசிங்கம் அவரை சென்னைக்கு வருமாறு வேண்டிக்கொண்டார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் அப்போது காணப்பட்ட சூழ்நிலை பொலீஸார் பிரபாகரனைக் கைதுசெய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் வாதிட்டார். தனது மதிப்பீட்டில் நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டிற்குப் வருமாறு பிரபாகரனை அவர் கேட்டுக்கொண்டார். பாலசிங்கத்தின் மதிப்பீட்டை நம்பிய பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு சென்றார். பாண்டிச்சேரியில் இரகசிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இக்கூட்டம் குறித்து அடேல் தனது புத்தகமான "சுதந்திர வேட்கை" இல் பின்னர் பதிவிட்டிருந்தார், "அன்றிரவு பாலாவும், நானும் எமது மெய்ப்பாதுகாவலர்கள் சிலரும் கார் ஒன்றில் ஏறி பாண்டிச்சேரி நோக்கிய நீண்ட பயணத்தை மேற்கொண்டோம். புலிகளின் தலைவர்களுக்கு ரோ வின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே நடக்கப்போகும் இரகசியக் கூட்டம் அது. குறிக்கப்பட்ட நேரமொன்றில் பிரபாகரனுக்கும், பாலாவுக்கும் ரோவின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே அந்த முக்கியமான கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து எமது அறைகளுக்குத் திரும்பிய தம்பியினதும் பாலாவினதும் முகங்களில் தவழ்ந்த‌ புன்னகை அக்கூட்டம் வெற்றிகரமாக நடந்திருப்பதை எமக்குச் சொல்லியது". இக்கூட்டம் குறித்த மேலதிகத் தகவல்களை நாராயண் சாமி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். டெலோ போன்ற மாற்று போராளி அமைப்புக்களுக்கு பயிற்சி நிலையங்களை ரோ முதன்முதலாக வழங்கியமை குறித்து பிரபாகரன் இயல்பாகவே கோபமடைந்திருப்பார் என்பதை ரோ அதிகாரிகள் எதிர்பார்த்தே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஆகவே, பிரபாகரனைச் சந்தித்தபோது, அவரை ஆசுவாசப்படுத்தும் முகமாக ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 7.62 மி.மீ லுகார் கைத்துப்பாக்கியை அவருக்குப் பரிசாக அளித்தனர். அக்கூட்டத்தில் பங்கேற்ற ரோ அதிகாரிகளுக்கு நெருக்கமானவராக நாரயணன் சாமி இருந்தமையினால் இக்கூட்டம் குறித்த தகவல்களை அவரும் அறிந்திருந்தார். சமாதானப் பொறி எனும் நூலை எழுதிய இந்தியப் பத்திரிக்கையாளரான சூரியநாராயணா பிரபாகரனுடனான நேர்காணல் ஒன்றின்போது பாண்டிச்சேரியில் இடம்பெற்ற இரகசிய கூட்டம் நடந்த இடம், நேரம் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தார். பாண்டிச்சேரியில் கூட்டம் நடைபெற்றதை ஒத்துக்கொண்ட பிரபாகரன் ஏனைய விடயங்கள் குறித்த தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். சூரியநாராயணனின் பதிவின்படி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தோ எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தோ தான் பிரபாகரனிடம் வினவவில்லை என்றே தெரிவித்திருந்தார். நான் அறிந்தவகையில் பாண்டிச்சேரிக் கூட்டம் புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நடைபெற்றிருக்க வேண்டும். அக்காலத்தில் டெலோ மற்றும் ஈரோஸ் அமைப்புக்களின் போராளிகள் பயிற்சிகளை ஏலவே ஆரம்பித்து விட்டிருந்தனர். ஈரோஸின் சங்கர் ராஜியுடன் தொடர்புகொண்ட ரோ , 300 போராளிகளை புரட்டாதி மாதத்தின் முதல்வாரத்தில் தமிழ்நாட்டில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முகாமிற்கு அழைத்துவருமாறு பணித்தனர். அங்கிருந்து தொகுதிகளாக அவர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்தே அவர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய போராளி அமைப்புகளுக்கான பயிற்சிகளும் இவ்வாறே ஒழுங்குசெய்யப்பட்டன. போராளி அமைப்புக்கள் தத்தமது போராளிகளை தமிழ்நாட்டில் இருக்கும் பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்ல, ரோ அவர்களை தில்லிக்குக் கொண்டுசென்றது. பத்மநாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இந்தியாவின் பயிற்சித் திட்டத்திற்குள் இறுதியாக உள்வாங்கப்பட்ட அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகும். இந்தியாவில் இயங்கிவந்த மார்க்ஸிஸ்ட் , நக்சலைட் அமைப்புக்களுடன் ஈ.பி.ஆர்.எல்.அப் அமைப்பிற்கிருந்த நெருக்கத்தையடுத்து இந்தியா அவர்களை தள்ளியே வைத்திருந்தது. இந்தியா குறித்துக் கடுமையான விமர்சனங்களை பத்மநாபா கொண்டிருந்தார் என்பதை ரோ அறிந்தே இருந்தது. இந்தியா ஒரு முதலாளித்துவ நாடென்றும் ஆகவே இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தனியான தமிழர் நாடொன்று உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காதென்றும் பத்மநாபா வாதிட்டு வந்தார். மேலும், சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார். சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.அப் இயக்கத்தின் அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து அறிந்தபோது பதற்றமடைந்தார். ஆகவே, பத்மாநாபாவை உடனடியாக சென்னைக்கு வருமாறு அவர் அழைத்தார். இந்தச் சந்தர்ப்பத்தினை தமது இயக்கம் பயன்படுத்தத் தவறினால் அது தமது கைகளை விட்டு நிரந்தரமாகவே நழுவிச் சென்றிவிடும் என்று பேசி பத்மநாபாவை இணங்கச் செய்தார். பின்னர் பத்மநாபாவையும் அழைத்துக்கொண்டு உன்னிகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றார். தமது இயக்கத்தால் வெளியிடப்பட்டு வந்த ஈழ முழக்கம் எனும் சஞ்சிகையின் சில பிரதிகளைத் தம்முடன் எடுத்துச் சென்றிருந்த அவர்கள் அவற்றினை உன்னிகிருஷ்ணனிடம் காட்டி, சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாக அதில் வெளிவந்த சில ஆக்கங்களை சுட்டிக்காட்டி தாம் சோவியத் ஒன்றியத்திற்கோ இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல என்று நிரூபிக்க முனைந்தனர். ரோ அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பையும் பயிற்சித் திட்டத்தில் ஏற்கச் சம்மதம் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக, இந்தியாவில் செயற்பட்டுவரும் நக்சலைட் அமைப்புக்களுடனான தொடர்புகளை அவ்வமைப்பு கைவிட்டு விட வேண்டும் என்று ரோ விதித்த நிபந்தனையினை பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.
  17. எமக்கென்று கொள்கைகள் இல்லை, இந்தியா நாம் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறதோ அதனை நாம் செய்துகொடுப்போம் ‍- சிறீசபாரட்ணம் இந்திராவினால் அமைக்கப்பட்ட மூன்றாவது புலநாய்வு அமைப்பின் மூன்று பிரதான தலைவர்களான காவோ, சக்சேனா மற்றும் சங்கரன் நாயர் ஆகியோர் இலங்கையைத் தடம்புரளவைக்கும் திட்டத்தினை வகுக்கத் தொடங்கினர். தமது நடவடிக்கைக்கு "சிறிலங்கா ஒபரேஷன்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்களின் திட்டத்தின் சாராம்சமே தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியளிப்பது, ஆயுதங்களை வழங்குவது மற்றும் நிதியினை வழங்குவது. இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக‌ அமைச்சரவைச் செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ் சந்திரசேகரன் எனப்படும் இலங்கைப் பிரச்சினையில் நன்கு பரீட்சயமான அதிகாரி நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்டம், களத்தூரில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பயிற்சிமுகாம் - 1985 இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ரோவிடம் கையளிக்கப்பட்டது. ஆகவே, இலங்கைக்கான தனது திட்டத்தினை செயற்படுத்த விசேட பிரிவொன்றினை ரோ அமைத்துக்கொண்டது. கொழும்பில் இந்தியத் தூதராக முன்னர் செயலாற்றி வந்த ரொமேஷ் சண்முகம் இந்த விசேட பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னையில் இயங்கிவந்த ரோவின் கிளைக்கு உன்னிகிருஷ்ணன் பொறுப்பாக இருந்தார். புலநாய்வுப் பிரிவின் சென்னைக் கிளைக்கு கார்த்திகேயன் என்கிற அதிகாரி பொறுப்பாக இருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெறும்வரைக்கும் சென்னையில் செயற்பட்டுவந்த தமிழ்ப் போராளி அமைப்புக்கள் குறித்து உன்னிகிருஷ்ணன் அதிகம் அக்கறை காட்டியிருக்கவில்லை. ஆனால், தமிழர் மீதான கலவரத்தின் பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்த தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் மற்றும் கொழும்பில் வியாபாரங்களை நடத்தி இனக்கலவரத்தில் அவற்றினை இழந்து இந்தியா மீண்டிருந்த பல இந்திய வர்த்தகர்களுடன் மட்டுமே உன்னிகிருஷ்ணன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். கார்த்திகேயனோ தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்க‌ளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். சந்திரகாசன் சென்னைக்கு குடிபெயர முன்னமே இந்தியாவின் உளவுத்துறையான ரோவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று பரவலான செய்திகள் அக்காலத்தில் வெளிவந்திருந்தன. மேலும், தமிழ் ஆயுத அமைப்புக்களுடனும் அவர் தொடர்பில் இருந்தார். குறிப்பாக டெலோ அமைப்பின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்ட காலத்தில் அவர்களுக்காக நீதிமன்றில் வாதாடியிருக்கிறார். குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் மரணங்களுக்குப் பின்னர் டெலோ அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற சிறி சபாரட்ணத்துடனும் அவர் மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். தி.மு.க வின் தலைவரான கருநாநிதியுடன் தொடர்பில் இருந்த சந்திரகாசன் பின்னாட்களில் கருநாநிதிக்கும் டெலோ அமைப்பின் சிறி சபாரட்ணத்திற்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பிற்குக் காரணமாக இருந்தவர். டெலோ அமைப்பிற்கு அப்பால், புளொட், புலிகள், ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புகளுடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. பாண்டி பஜார் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையினை தணிக்கும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இந்தியாவின் திட்டத்தினை போராளிகளுக்கு அறியத் தருவதற்காக சென்னையில் ரோ அமைப்பிற்குப் பொறுப்பாகவிருந்த உன்னிகிருஷ்ணன் சந்திரகாசனை நாடினார். சபாரட்ணத்துடனான தனது நெருக்கமான தொடர்பினால் அவருக்கே இந்தியாவின் திட்டத்தினை முதன்முதலாக அறிவித்தார் சந்திரகாசன். சிறிசபாரட்ணமும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பாவித்துக்கொண்டார். சிறிசபாரட்ணமும், டெலோவின் இன்னொரு தலைவரான ராசுப்பிள்ளையும் உன்னிக்கிருஷ்ணனை நேரடியாகச் சந்தித்து இந்தியாவின் திட்டத்தின்படி ஆயுதப் பயிற்சியினை மேற்கொள்ள தாம் விரும்புவதாகத் தெரிவித்தனர். டெலோ தலைவர்கள் தன்னை வந்து சந்தித்ததையடுத்து உன்னிகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். டெலோ அமைப்பின் வளைந்துகொடுக்கும் நெகிழ்வுத்தனமையே இதற்குக் காரணமாக இருந்ததாக உன்னிகிருஷ்ணன் பின்னர் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்பின் தத்துவார்த்தமான பார்வையோ அல்லது புலிகள் இயக்கத்தின் அதீத தேசிய ரீதியான சிந்தனைகளோ அற்றிருந்த டெலோ அமைப்பினை தமது திட்டத்திற்கேற்பக் கையாள்வது மிகவும் இலகுவானது என்று உன்னிகிருஷ்ணனும் ரோ அதிகாரிகளும் உணர்ந்துகொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினை தூரத்திலேயே வைத்திருக்க ரோ விரும்பியது. மார்க்ஸிஸ சிந்தனையும் இந்திய நக்சலைட்டுக்களுடனான அவ்வமைப்பின் நெருக்கமும் இந்திய அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்திருந்தன. ஈரோஸ் அமைப்புப்பற்றி ரோ அதிகம் பொருட்படுத்த விரும்பவில்லை. தர்க்கங்களில் மட்டுமே ஈடுபடும் அமைப்பாக அக்காலத்தில் ஈரோஸ் செயற்பட்டு வந்ததனால் அவ்வமைப்பை சட்டை செய்யவேண்டிய தேவை ரோவிற்கு இருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு சிறிசபாரட்ணத்தைப் பேட்டி கண்ட புரொண்ட் லைன் சஞ்சிகை அவ்வியக்கத்தை ரோ முதலாவதாகத் தெரிவுசெய்ததற்கான காரணம் பற்றி வினவியிருந்தது. அதற்குப் பதிலளித்த சிறி சபாரட்ணம், "நாம் சித்தார்ந்த கொள்கைகளிலோ தேசியவாதக் கொள்கைகளிலோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இந்தியா நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதனைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம், அவ்வளவுதான்" என்று கூறியிருந்தார். ஈரோஸ் அமைப்பின் தலைவர்களான அருட்பிரகாசமும், சங்கர் ராஜியும் என்னுடன் பேசும்போது இந்தியாவின் திட்டம் குறித்து பலநாட்கள் தாம் அமைப்பிற்குள் விவாதித்து வந்ததாகக் கூறினர். அவ்வமைப்பின் லண்டன் கிளையின் தலைவர் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்தியாவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தமது குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைய முடியாது போய்விடும் என்கிற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் ஏனைய தலைவர்கள் இந்தியாவின் சலுகைகளை ஏற்றுக்கொள்ள விரும்பினர். அவர்கள் தலைமைக்கு அனுப்பிய செய்தி என்னவெனில்,"இந்தியா தரவிரும்பும் சலுகைகளை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாதுவிட்டால் நாம் அழிந்துவிடுவோம்" என்பதாகும். ஏ.ஆர்.அருட்பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் நடைமுறையான எந்த விடயத்தையும் தர்க்கித்தே முடிவெடுப்பது என்பதை அவ்வமைப்பின் யாழ்ப்பாணப் பிரிவு தூக்கியெறிந்தது. நாம் உயிர்வாழ‌வேண்டுமென்றால் இந்தியாவின் உதவிகளைப் பெறுவதே சரியானது என்று அது கூறியது. அமைப்பின் இளைஞர்கள் சிங்கள அரசினை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தில் இறங்கவேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் இந்தியாவின் சலுகைகளை ஏற்றுக்கொண்டு ஆயுதப் பயிற்சிக்கு இணங்கவில்லையென்றால் இளைஞர்கள் ஈரோஸ் அமைப்பைக் கைவிட்டு விட்டு டெலோ அமைப்பில் சென்று சேர்ந்துவிடுவார்கள் என்று யாழ்ப்பாணப் பிரிவு தலைமையிடம் தெரிவித்தது. அதன் பின்னர் இந்தியாவின் திட்டம் குறித்து அறிந்துகொள்ள இந்திய உளவுத்துறையுடன் அருட்பிரகாசம் தொடர்புகொண்டபோது ஈரோஸ் அமைப்பை பயிற்சித் திட்டத்தில் இணைந்துக்லொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பின்னர் தனது நண்பரும் இந்தியாவில் ரஸ்ஸிய தூதராகப் பதவிவகித்தவருமான அதிகாரியுடன் தொடர்புகொண்ட அருட்பிரகாசம் இந்தியா தமது இயக்கத்தையும் ஆயுதப் பயிற்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோருவதாகக் கூறினார். அவரும் இந்தியா விரும்புவதையே நீங்களும் செய்யுங்கள் என்று கூறினாராம். இதன் பின்னர் ஈரோஸ் அமைப்பு சங்கர் ராஜியையும் சந்திரனையும் உன்னிக்கிருஷ்ணனைச் சந்திக்க அனுப்பியது. இந்தியாவின் பயிற்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட இரண்டாவது தமிழ்ப் போராளி அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத் தக்கது. சந்திரகாசன் தொடர்புகொண்ட மூன்றாவது போராளி அமைப்பு புளொட் ஆகும். ஆனால், ரோ தன்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கவேண்டும், சந்திரகாசனூடாக அல்ல என்று உமா மகேஸ்வரன் முரண்டு பிடித்தார். சந்திரகாசன் குறித்து ஏனையவர்களுடன் பின்னாட்களில் பேசிய உமா மகேஸ்வரன், "அவர் ஒரு அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜெண்ட்" என்று கூறியிருக்கிறார். பின்னர் சந்திகாசன் அருட்பிரகாசத்தையும் வேலுப்பிள்ளை பாலகுமாரையும் உமாவிடம் அனுப்பி இந்தியத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருக்கிறார். ஆரம்பத்தில் முரண்டுபிடித்த உமா பின்னர் பயிற்சியை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார்.
  18. இலங்கையை ஆக்கிரமிக்குமாறு கோரிய எம்.ஜி.ஆரும் அவரை வழிக்குக் கொண்டுவந்த இந்திராவும் ரோ அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்முதலே இலங்கை தொடர்பான விடயங்களை அது கையாளத் தொடங்கியது. வங்கதேச உருவாக்கத்தில் பாக்கிஸ்த்தானுடனான போரின் பின்னர் கொழும்பில் தனது செயற்பாடுகளைப் பலப்படுத்தியது ரோ. இந்தியாவுடனான போரின்போது பாக்கிஸ்த்தானிய குண்டுவீச்சு விமானங்கள் கொழும்பில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பும் வசதிகளை இலங்கையரசு செய்து கொடுத்தபோதும், அமெரிக்காவின் கப்பற்படை இலங்கையை அண்மித்த இந்துசமுத்திரத்தினூடாக பிரவேசித்தபோதும் தனது தென்கோடியின் பாதுகாப்புப் பலவீனப்பட்டிருப்பதை இந்திரா உணர்ந்துகொண்டிருந்தார். அன்றிலிருந்து இந்தியா கொழும்புமீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டே வந்தது. இந்தியாவின் கொழும்பு மீதான இந்தக் கண்காணிப்பென்பது 1977 ஆம் ஆண்டு ஜெயார் ஜனாதிபதியாகப் பதவியேற்று அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதும் இன்னமும் அதிகமானது. இப்படியான பின்னணியிலேயே 1983 ஆம் ஆண்டு தமிழர் மீதான இனவன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. கிரிஷ் சந்திரா சக்சேனா 1983 ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது ரோ வின் துணை இயக்குனரான மத்தியு ஏபிரகாம் கொழும்பிலேயே நின்றிருந்தார். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்தியத் தூதுவராலயத்திற்கு ஆடி 25 ஆம் திகதி காலை அவர் காலி வீதியால் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரைத் தமிழர் என்று எண்ணிய சிங்களக் காடையர்கள் அவரை வழிமறித்துத் தாக்கத் தொடங்கினர். அவர் பயணம் செய்த கார் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு எரிக்கப்பட்டது. காரினுள் இருந்து வெளியே இழுத்து வீசப்பட்ட அவர்மீது காடையர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். தான் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேள, "நான் தமிழன் அல்ல, நான் ஒரு இந்தியன்" என்று அவர் அலறத் தொடங்கினார். அவர் ஒரு இந்தியர் என்பதை அறிந்துகொண்டதும் அவர்மீதான தமது தாக்குதலை சிங்களக் காடையர்கள் மேலும் உக்கிரமாக நடத்தத் தொடங்கினர். இத்தாக்குதலின்போது மத்தியூ மிகவும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவர் தில்லிக்கு அனுப்பிவைத்தார். அப்போது ரோவின் இயக்குநராக இருந்த சக்சேனா, மத்தியூ தனக்கு அனுப்பிவைத்த தாக்குதல் தொடர்பான அறிக்கை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்துவந்த உணர்வெழுச்சியான சூழ்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றினை இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர் பாதுகாப்புக் கூட்டமொன்றில் சமர்ப்பித்தார். இதற்கு மேலதிகமாக இந்திய புலநாய்வுத்துறையின் (அமைப்பு 1) தகவல்களும் அங்கே விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியும் பிரசன்னமாகியிருந்தார். இந்த உயர் பாதுகாப்பு கூட்டத்தின் நோக்கமே தமிழ்நாட்டில் உருவாகிவரும் உணர்வெழுச்சியான சூநிலையினை எவ்வாறு தடுப்பது அல்லது ஆற்றுவது என்பதாகவே இருந்ததாக இக்கூட்டத்தில் அன்று பங்கேற்றிருந்த அதிகாரியிருவர் என்னிடம் தெரிவித்தார். "பதற்றமான சூழ்நிலையினால் ஏற்படப்போகும் பாதிப்பைக் குறைப்பதுதான் எமது ஒரே நோக்கமாக இருந்தது. தான் புதிதாக சேர்த்துக்கொண்ட தமிழ்நாட்டின் பங்காளிக் கட்சியான அ.தி.மு.க வின், குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் இருப்பையும், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இருக்கும் அரசியல்த் தளத்தைத் தக்கவைத்துக்கொள்வதுமே இந்திராவின் கரிசணையாக அன்று இருந்தது" என்று அவர் கூறினார். தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கி இலங்கையினுள் அனுப்பிவைக்கும் தனது முடிவு உறுதியாக்கப்பட்டதும் இந்திரா அதனை உடனடியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அறியத் தந்தார். ஜெயவர்த்தனவைக் கையாள தான் எடுத்திருக்கும் இருவழிக் கொள்கை பற்றியும் எம்.ஜி.ஆரிடம் அவர் விளக்கினார். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை தமிழ்ப் போராளிகளைத் தாம் பயிற்றுவிக்கப்போவதாக இந்திரா கூறியபோது எம்.ஜி.ஆர் இதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டார். போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழ‌ங்குவது மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருப்திப்படுத்திவிடாது என்று அவர் இந்திராவுடன் தர்க்கித்தார். இலங்கையை ஆக்கிரமித்து தமிழர்களைக் காக்குமாறே தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோருகிறார்கள் என்று இந்திராவிடம் அவர் கூறினார். "சரி, நீங்கள் கோருவதுபோல் நாம் இலங்கையை ஆக்கிரமிப்பதாகவே வைத்துக்கொள்வோம், அப்படியானால் தெற்கில், சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களின் நிலை என்னாகும்?" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் வினவினார். தமிழ்நாடு, சேலம் மாவட்டம், களத்தூர்க் கிராமத்தில் இயங்கிய புலிகளின் பயிற்சிப் பாசறை 1985 புலிகளின் சிறுமலை பயிற்சிப் பாசறை , திண்டுக்கல் மாவட்டம் 1985 பின்னர், காமிணி திசாநாயக்கவின் அண்மைய உரையொன்றினை மேற்கோள் காடிய இந்திரா, "நாம் இலங்கையை ஆக்கிரமித்தால் இலங்கை இராணுவம் தமிழர்களைக் கொல்லும், குறிப்பாக பெண்களையும் சிறுவர்களையும் அது வேட்டையாடும். இதை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கோரினார். (தனது தொழிற்சங்க கூட்டமொன்றில் ஆவணியில் பேசியிருந்த காமிணி திசாநாயக்க, "இந்தியா எம்மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள குறைந்தது 24 மணித்தியாலங்களவது எடுக்கும். அந்த 24 மணித்தியாலத்தினுள் அனைத்துத் தமிழர்களையும் நாம் கொன்றுவிடலாம்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது). இதனையடுத்து இந்திராவின் சிந்தனையினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், தனது நெருங்கிய சகாவான மின்சார வளத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து இந்திராவின் கருத்தினை மக்களிடையே பிரச்சாரப்படுத்தும்படி பணித்தார். வைகாசி 2000 இல் சென்னையிலிருந்து வெளிவரும் நியூஸ் டுடே எனும் பத்திரிக்கையில் இந்த நிகழ்வு குறித்த‌ பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். தனது விசேட புலநாய்வுப் பிரிவின் அதிகாரிக‌ளை அழைத்த இந்திரா தனது மறைமுக வழியான தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து ஆயுதம் வழங்குவது எனும் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம் ஒன்றினை வகுக்கும்படி பணித்தார். இந்த அமைப்போ இலங்கைப் பிரச்சினையினைக் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பல்ல. ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்த அமைப்பு இந்திராவால் உருவாக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே இதனை அவர் உருவாக்கியிருந்தார். விசேட புலநாய்வு அமைப்பு என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்த்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் நடந்துவந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விசேட புலநாய்வு அமைப்பு காவோ எனும் அதிகாரியினால் வழிநடத்தப்பட்டது. பிரதமரின் செயலக இயக்குநர் சங்கரன் நாயர் மற்றும் ரோவின் இயக்குநர் சக்சேனா ஆகியோர் இந்த விசேட புலநாய்வுப் பிரிவிற்கு உதவிபுரிந்து வந்தனர்.
  19. ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கவே ஆயுதப் போராட்டம், தனிநாட்டிற்காக அல்ல ‍ - இந்திரா போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் இந்திராவின் மறைமுகமான திட்டத்திற்கு உறுதியான நோக்கம் ஒன்று இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இந்திரா எதிர்பார்த்த ஒரே விடயம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ள வைப்பதே அன்றி அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் பிரதான திட்டமிடலாளர்களில் ஒருவர் சென்னையிலிருந்து வெளிவரும் புரொன்ட் லைன் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை வழங்கியபோது, "ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை முயற்சிக்குக் கொண்டுவர முடியும் என்று இந்திரா நம்பியதாலேயே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் முடிவினை எடுத்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதன் ஒரே நோக்கம் இலங்கை அரசாங்கத்தின் தலையினைக் கொய்வதல்ல, மாறாக தமிழர்களின் பின்னால் இந்தியா எனும் பெரிய சக்தி இருக்கிறது எனும் செய்தியினை இலங்கை அரசாஙத்திற்கு உணர்த்தவே" என்று கூறினார். பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இந்தியாவின் இந்தக் கொள்கை பற்றி அறிந்தே இருந்தார்கள். பிரபாகரன் இதுகுறித்து மிகத் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் புரொண்ட் லைன் சஞ்சிகைக்குப் பேட்டியளித்தபோது, "இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் ஒரே நோக்கம் இலங்கையரசாங்கம் தனது அழுங்குப் பிடியில் இருந்து இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்வரை போராளிகள் ஊடாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது. அவ்வாறு இலங்கையரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதும், போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது" என்று கூறினார். புலிகளின் தலைவர்கள், சிறுமலை பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, 1985 ஆம் ஆண்டு ‍ வே.பிரபாகரன் (இடமிருந்து 3 ஆவது), பொட்டு அம்மான்(வலதுபுறமிருந்து முதலாவது) தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கவும், ஆயுதங்களைக் கொடுக்கவும் திட்டத்தினை வரையுமாறு மூன்றாவது புலநாய்வு அமைப்பைப் பணித்த இந்திரா, உடனடியாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாரும் உத்தரவிட்டார். இந்தியாவில் ஏற்கனவே இருவேறு புலநாய்வு அமைப்புக்கள் இயங்கிவந்த நிலையில், இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட நாத்தின் அமைப்பு "மூன்றாவது அமைப்பு" என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவின் முதலாவது புலநாய்வுச் சேவையான புலநாய்வுப் பிரிவு 1953 ஆம் ஆன்டிலிருந்து இலங்கையினுள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் எனும் போர்வையில் இயங்கி வருகிறது. 1968 ஆம் ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தான் உளவுப்பிரிவு பயிற்சியும் ஆயுதமும் வழங்க ஆரம்பித்ததை இந்திய புலநாய்வுத் துறை (முதலாவது அமைப்பு) கண்டுபிடிக்கத் தவறியதையடுத்து அதன்மீதான நம்பிக்கையினை இந்திரா இழந்திருந்தார். காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன் இரு போர்களில் ஈடுபட்டிருந்த பாக்கிஸ்த்தான், சீக்கியர்கள் தனிநாடு ஒன்றினை உருவாக்க உதவுவதன் மூலம் இந்தியாவைப் பலவீனப்படுத்த கங்கணம் கட்டியிருந்தது. இதனைத் தடுப்பதற்கு செயலில் இறங்கிய இந்திரா அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வுப் பிரிவுகளுக்கு நிகரான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை உருவாக்குமாறு தனது பாதுகாப்பு ஆலோசகராக அப்போது பணியாற்றி வந்த ரமேஷ்வர் நாத் காவோ வைப் பணித்தார். இந்தியாவின் இரண்டாவது புலநாய்வுப் பிரிவான ரோ 1968 ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியகப் புலநாய்வுப் பிரிவாக உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால நோக்கமே பாக்கிஸ்த்தானிலிருந்து வரும் அச்சுருத்தலைச் சமாளிப்பதுதான். பிற்காலத்தில், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதையடுத்து ரோவின் பார்வை இலங்கை மீதும் திரும்பியது. பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே ரோ அமைப்பு இயங்கியது. காவோ இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ரோவின் கட்டமைப்பும், செயற்பாடுகளும் பாராளுமன்றத்திடமிருந்தும் மறைக்கப்பட்டு இருந்தன. கட்டுப்பாடற்ற வளங்கள் அதற்கு வழங்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற வங்கதேசப் பிரச்சினையில் ரோ மிக முக்கியமான பங்கொன்றினை ஆற்றியிருந்தது. வங்கதேசத்தின் பலமான முக்திபாகினி ஆயுத அமைப்பு உட்பட பல போராளி அமைப்புக்களுக்கு ரோ ஆயுதப் பயிற்சியினை வழங்கியது. தற்போது 8000 ஆண் , பெண் உளவாளிகளைக் கொண்ட பெரும் உளவுக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் ரோ, சுமார் 40 சர்வதேச நாடுகளில் இயங்கி வருகிறது. மிக அண்மைக்காலமாக ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தலிபான்கள் மற்றும் அல்‍கொய்தா தீவிரவாதிகள் குறித்த புலநாய்வுத் தகவல்களை அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ரோ வழங்கிவருகிறது. ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் தொடர்பான வரைபடங்கள், தீவிரவாதத் தலைவர்களின் புகைப்படங்கள், பாக்கிஸ்த்தானிற்குள் செயற்பாட்டுவரும் தீவிரவாதிகளின் முகாம்கள், அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லாடனின் நடமாட்டங்கள் மற்றும் அவரது தாக்குதல்த் திட்டங்கள் குறித்த தகவல்களையும் ரோ அமைப்பு அமெரிக்க புலநாய்வு அதிகாரிகளுக்கு வழங்கிவருகிறது.
  20. போராளிகளுக்கான இராணுவப் பயிற்சி ஜெயவர்த்தனவை இந்திரா காந்தி எப்போதுமே கிழட்டு நரியென்றே அழைத்து வந்தார். இந்திராவைப் பொறுத்தவரை ஜெயவர்த்தனா நம்பப்படமுடியாதவராகக் காணப்பட்டார். ஜெயவர்த்தன தொடர்பான இந்திராவின் கணிப்பீடுகள் அவரது நெருங்கிய தோழியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்டது. ஏனென்றால், ஜெயவர்த்தனவின் அரசியல் சூழ்ச்சிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர் சிறிமாவோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு மேலாக, இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட விசேட பாதுகாப்பு புலநாய்வுத்துறைப் பிரிவும் ஜெயார் குறித்த தகவல்களை இந்திராவுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது. அமைச்சரவையின் பாதுகாப்புச் செயலகம் என்று அறியப்பட்ட இந்த அமைப்பிற்கு "மூன்றாவது புலநாய்வு அமைப்பு" என்று இன்னொரு பெயரும் இருந்தது. ரமேஷ்வர் நாத் காவோ ஜெயவர்த்தனவை எப்போதும் நம்பமுடியாது என்பதை இந்திரா நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, அவரை இரு வேறு வழிகளில் கையாள்வது என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது வெளிப்படையான இராஜதந்திர வழி. மற்றையது மறைமுகமான வழி. இராஜதந்திர வழி பற்றி முன்னைய அத்தியாயங்களில் நாம் பார்த்திருந்தோம். பேச்சுவார்த்தைகளுக்கு அணுசரணை வழங்குவதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனவை இராஜதந்திர ரீதியில் அழுத்துவதே அது. தமிழர்கள் மீதான தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவோ ஜெயவர்த்தனவோடும், ஹமீதோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திராவிடம் பேசும்போது தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைக் காட்டிலும் அவர்களை இராணுவ ரீதியில் அடக்கி, அடிபணியவைப்பதிலேயே ஜெயாரின் அரசாங்கம் உறுதியாக நிற்பது தெரிகிறது என்று கூறியிருந்தார். இவ்வாறான மதிப்பீட்டையே இந்திராவின் புதிய புலநாய்வு அமைப்பின் அதிகாரியான கொழும்பில் தங்கியிருந்த ரமேஷ்வர் நாத் காவோவும் இந்திராவிடம் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, பாக்கிஸ்த்தான், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஜெயவர்த்தன ஆயுதங்களை கொள்வனவு செய்தமையானது இவர்களின் கணிப்பீடு சரியானதுதான் என்பதை உறுதிபடுத்தியிருந்தது. புதிய புலநாய்வு அமைப்பின் தலைவரான காவோவே இந்திராவின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றி வந்தார். ஜெயவர்த்தன எடுக்கும் எந்த ஒரு இராணுவத் தீர்வும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுருத்தலை ஏற்படுத்தும் என்றும், அது இந்திராவுக்கு அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் நாத் இந்திராவிடம் கூறினார். பாதுகாப்பு அச்சுருத்தல் என்று அவர் குறிப்பிட்டது இலங்கையில் தமது சகோதரர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டு மக்கள் இறங்குவதால் ஏற்படக் கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியா ராணுவ ரீதியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வந்ததோடு, அவ்வாறு இந்தியா தலையிடாதவிடத்து தமிழ்நாட்டுத் தமிழர்களே நேரடியாக இவ்விடயத்தில் இறங்கும் அபாயம் இருப்பதாகவும் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படியான தருணத்தில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை மத்திய அரசாங்கம் அடக்க முற்படும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் பலவீனப்பட்டுப் போகும் என்றும் அவரிடம் கூறப்பட்டது. இவையனைத்தையும் விட முக்கியமாக இன்னொரு விடயம் நாத்தினால் இந்திராவிடம் முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவின் எதிரிகள் பெருமளவில் இலங்கையினுள் கால்பதிக்கும் சூழ்நிலை உருவாகிவருகிறது என்பது. அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வு அமைப்புக்களுக்கு மேலதிகமாக பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் புலநாய்வு அமைப்புக்களும், இந்நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் பிரசன்னமும் இலங்கையினுள் உருவாகலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அவரிடன் கூறினர். ஆகவே, இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி ஜெயவர்த்தன மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தினைப் பிரயோகித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை எட்டுவது. இது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பாவித்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது. மூன்றாவது புலநாய்வு அமைப்பின் இருவழித் திட்டத்தினை இந்திரா முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது தடவை யாகவும் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், இந்த இருவழித் திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது புலநாய்வு அதிகாரிகளை இந்திரா பணித்தார். தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வுகளை செய்துவரும் அதேவேளை, மறைமுகமான நடவடிக்கைகளை முற்றாக மூடி மறைத்தது இந்திராவின் அரசாங்கம். இந்திரா காந்தியும், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓரிரு அதிகாரிகளும் மட்டுமே இந்த இரகசியத் திட்டம்பற்றிய தகவல்களை வைத்திருந்தனர்.
  21. தொண்டைமான் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த தனது அமைச்சகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை தொண்டைமான் கூட்டினார். அவரது ஊடக ஆலோசகர் என்கிற வகையில் அம்மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கு என்னையும், அவரது சட்டச் செயலாளரான அமரசிங்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்லச்சாமியையும் அவர் அழைத்திருந்தார்.இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்ததன் நோக்கமே சிங்கள மக்களுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் அண்மையில் நடந்த தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் குறித்துக் கடுங்கோபத்தில் இருப்பதையும், பார்த்தசாரதியுடனனான பேச்சுக்களை மீண்டும் ஜெயவர்த்தன ஆரம்பிக்காத பட்சத்தில் இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடும் எனும் செய்தியையும் சொல்வததுதான். தொண்டைமான் இதனைக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினார். இந்த மாநாட்டில் பங்குகொண்ட பெரும்பாலான சிங்களப் பத்திரிக்கையாளர்கள் சினத்துடன் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் தொண்டைமானின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புளொட்டின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்தது மற்றும் சிங்கள மக்களுக்கெதிராக தமிழர்களை ஒருங்கிணைப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்மீது அவர்கள் சுமத்தினர். மேலும், இவற்றினைச் செய்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்புணர்வைத் தட்டிக்கழித்து அவர் செயற்பட்டிருப்பதாகவும் அவர்கள் வசைபாடினர். இந்தியாவுக்கான தனது பயணம் குறித்த விளக்கத்தினை தொண்டைமான் வழங்கியபின்னர் அவரிடம் முன்வைக்கப்பட்ட முதலாவது கேள்வி இப்படி அமைந்திருந்தது. கேள்வி : தொண்டைமான் அவர்களே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும், உமா மகேஸ்வரனையும் சந்தித்ததாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையினை அவர்கள் கைவிடும்வரை முன்னணியினருடனோ அல்லது எந்தப் பயங்கரவாத அமைப்புடனோ பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அப்படியாயின், நீங்கள் அமைச்சரவைத் தீர்மானத்தை மீறிவிட்டீர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? தொண்டைமான் : நான் இந்தப் பயணத்தை அமைச்சரவை உறுப்பினராக மேற்கொள்ளவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற வகையிலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன். ஆகவே அமைச்சரவை உறுப்புரிமையினை மீறினேனா என்கிற கேள்விக்கு இங்கே இடமில்லை. கேள்வி : ஆனால், இந்தப் பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கோ அல்லது மலையகத் தமிழருக்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விடயமாயிற்றே? தொண்டைமான் : இது தமிழர்கள் சம்பந்த‌ப்பட்ட விடயம். நான் ஒரு தமிழன். கேள்வி : இந்தியப் பத்திரிக்கைச் செய்திகளின்படி நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவது குறித்துப் பேசியிருக்கிறீர்கள், இது உண்மைதானா? தொண்டைமான் : பொதுவான வேலைத்திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நாம் பொதுவான இலக்குக் குறித்துப் பேசினோம். தீவிரவாத சிங்கள அமைப்புக்களும் அரசாங்கமுமே எம்மை இந்த நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றன. எமக்குப் பொதுவான ஒரு அடையாளத்தினைத் தந்தவர்களும் அவர்களே. 1948 ஆம் ஆண்டும் பெரும் எண்ணிக்கையான மலையகத் தமிழர்களை அரசு நாடற்றவர்களாக்கியது. 1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையினை அப்போது இருந்த அரசு இரத்துச் செய்தது. தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மூலம் தமிழர்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பு மறுதலிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பாதுகாப்பாகவும், உரிமைகளுடனும் வாழ்தல் என்பதே எமது பொது இலட்சியமாக மாறியிருக்கிறது. தமது பொது இலட்சியம் பற்றித் தமிழர்கள் கூடிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ? மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் எம்மால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய இறக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் கோபம் குறித்த கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : இங்கு நடந்த வன்முறைகள் குறித்த இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்? தமிழர் மீதான வன்முறைகளை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்? தொண்டைமான் : கடந்த 40 வருடங்களில் இந்தியா இவ்வளவு தூரத்திற்கு உணர்வுரீதியாக எழுந்ததை நான் பார்க்கவில்லை. நான் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகுந்த கவலையுடனும், ஆத்திரத்துடனும் என்னுடன் பேசினார்கள். அரசாங்கத்தில் நான் தொடர்ந்தும் பங்காளியாக இருப்பது குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டார்கள். தமிழர்களை முற்றாக அடக்கி ஒடுக்கி, ஈற்றில் நசுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பாகமே இந்தத் தாக்குதல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதன்போது குறுக்கிட்ட சிங்கள பத்திரிக்கையாளர் ஒருவர் சென்னைக்கும் புது தில்லிக்கும் இடையே பிளவு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : திரு தொண்டைமான் அவர்களே, இந்த உணர்வு ரீதியான வெளிப்பாடு சென்னையில் மட்டும்தான் காணப்பட்டதா அல்லது தில்லியிலும் இது தெரிந்ததா? தொண்டைமான் : தமிழ்நாட்டிலேயே இந்த உணர்வு அதிகமாகக் காணப்பட்டதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், தில்லியில் அவர்கள் தமிழ்மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கவலை கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கருதினால், நீங்கள் தவறிழைக்கிறீர்கள் என்று பொருள். ஏனென்றால், தில்லியிலும் கடுமையான ஆத்திரமும் கரிசணையும் இது தொடர்பாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. நான் தில்லியில் கேள்விப்பட்டது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் உயர் அதிகாரியொருவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள் மீதான படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததாக நாங்கள் நம்புகிறோம். ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிங்களவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும்போது இந்திய மத்திய அரசும் கண்களை மூடிக்கொண்டிருப்பதே சரியான செயலாகும்" என்று என்னிடம் கூறினார். பின்னர் சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு தொண்டைமான் பின்வருமாறு கூறினார், "தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிங்களவர்கள் பூரணை நாட்களில் ஓய்வாக இருந்து மத வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு மறுநாளே படுகொலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏனென்றால், ஆடி 23 ஆம் திகதி பூரணை நாள், மறுநாள் ஆடி 24 ஆம் திகதியே தமிழர்கள் மீதான படுகொலைகள் ஆரம்பித்தன" என்று அவர் கூறினார்.
  22. ஈழத்திற்கு மாற்றீடான தீர்வை முன்வைத்தால் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயார் ‍- அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நிபுணராக விளங்கிய லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் எனும் இராணுவ அதிகாரியை ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அனுப்பிவைத்தார். இந்திரா காந்தி அமிர்தலிங்கத்தைச் சந்தித்த ஐப்பசி 17 ஆம் திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் ராணுவ அதிகாரி இலங்கைக்குப் பயணமானார்.அமெரிக்காவின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் உளவு அமைப்பின் திறமையான அதிகாரி என்று போற்றப்பட்ட வேர்னன் வோல்ட்டர்ஸ், ஜனாதிபதி ரீகனுக்காக பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செய்தவர் எனும் மரியாதையினைப் பெற்றிருந்தவர். ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் சூத்திரதாரியே இந்த அதிகாரிதான் என்று இந்திய அதிகாரிகள் கருதினர். ஜெயவர்த்தனவுடன் பல மணிநேர தனிப்பட்ட உரையாடல்களில் வேர்னன் வோல்ட்டர்ஸ் பங்குகொண்டார். பிற்காலத்தில் ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கின்ஸ் ஆகியோருடன் பேசும்போது இந்தியாவுடனனான தொடர்பாடல்களுக்கான பாதை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் குறுகலானது என்று தான் ஜெயாரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஜெயவர்த்தனவின் சுயசரிதையில் மேலும் சில தகவல்களை வோல்ட்டர்ஸ் வழங்கியிருந்தார். ஜெயாருடனான ஆலோசனைகளின்போது தான் தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும், இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி ஜெயாரிடம் கேட்டுக்கொண்டதாக வோல்ட்டர்ஸ் கூறியிருந்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் மேலும் மோசமடைந்துசென்றால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக தான் ஜெயாரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் ஜெயாரை ஆசுவாசப்படுத்தவே தனது உயர் இராணுவ அதிகாரியை அமெரிக்கா அனுப்பி வைத்ததை இந்தியா நம்ப மறுத்தது. இந்த அதிகாரியின் வருகை குறித்து அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்ஷித் பின்வருமாறு தனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதுகிறார், "தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் பயிற்சிகள், ஆயுத உதவிகள் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயவர்த்தனவிடம் விலாவாரியாக விபரித்தார். மேலும், இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்பாடல் முகவராகச் செயற்பட அமெரிக்கா விரும்புவது குறித்தும் பேசினார். இஸ்ரேலிடமிருந்து இராணுவத் தளபாடங்களையும், புலநாய்வு உதவிகளையும் இலங்கை பெற முயன்று வருகிறது. மேலும், இந்தியா தொடர்பான புலநாய்வுத் தகவல்களைச் சேகரிக்க இலங்கையினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகப் பாவிப்பதும் வோல்ட்டார்ஸின் இன்னொரு நோக்கமாகும். அத்துடன் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கை இராணுவத்தில் கூலிப்படையினராக உள்வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் ஒத்துக்கொண்டார். இந்த விபரங்களை இலங்கையிலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாகவும் வோஷிங்க்டனில் இருக்கும் தகவலறிந்த வட்டாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று எழுதுகிறார். ஐப்பசி 17 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திரா, இலங்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறினார். தாம் ஒத்துக்கொண்ட விடயங்களிலிருந்து பின்வாங்கும் இலங்கையரசு, பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு தான் பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாகக் கூறினார். இந்திரா காந்தி இந்த அறிவிப்பினை வெள்கியிட்டவேளை, பார்த்தசாரதியை இரண்டாவது தடவையாக பேச்சுக்களுக்கு அழைக்கும் முடிவினை ஜெயார் எடுத்திருக்கவில்லை. ஆனால், இந்தியத் தூதுவர் சத்வால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு பார்த்தசாரதியை ஜெயவர்த்தன அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வோல்ட்டர்ஸின் அறிவுரைக்கு அமைவாக, பாரத்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்க ஜெயவர்த்தன சம்மதித்தார். பார்த்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்கும்படி தொண்டைமானும் ஜெயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் அழைப்பின்பேரில் தொண்டைமான் ஐப்பசி 10 திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த நாட்களில் தொண்டைமான் இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ, எம்.ஜி.ஆர், கருநாநிதி மற்றும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோருடனும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் அவர் ஈடுபட்டார். இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ மற்றும் பார்த்தசாரதி ஆகியோருடனான தொண்டைமானின் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாகக் காணப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பாக தொண்டைமான் காத்திரமான பங்கின ஆற்றவேண்டும் என்று இந்திரா தன்னிடம் கோரியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழர்களை பிரித்தாளும் ஜெயாரின் சதிக்கெதிராக தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று இந்திரா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பாக ஒன்றிணையும் முயற்சிக்கு தான் ஆதரவளிக்க ஒத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகுறித்தும் இந்திரா தன்னிடம் வினவியதாகவும் கூறினார். "ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில், தம்மைத்தாமே ஆள்வதற்கான தீர்வொன்றினை வழங்கும் பட்சத்தில் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தான் இந்திராவிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தனது பரிந்துரையினை வரவேற்ற இந்திரா இதுகுறித்து அனைவருடனும் தொடர்ந்து பேசுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். "நான் இதனையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகவும் வரிந்து கொண்டேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்திராவிடம் தான் பேசிய விடயங்கள் தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் மற்றும் சென்னையில் தன்னைச் சந்தித்த உமா மகேஸ்வரன் ஆகியோரிடம் தொண்டைமான் பேசினார். தொண்டைமானின் நிலைப்பாடு தொடர்பாக அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் திருப்தி தெரிவித்திருந்தார்கள். உமா மகேஸ்வரனுடனான தனது சந்திப்பை பலரும் அறியும்வகையில் நடத்த தொண்டைமான் விரும்பினார். இச்சந்திப்புக் குறித்து சென்னைப் பத்திரிக்கையாளர்களுக்கு அறியத்தந்த தொண்டைமான், சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினையும் ஒழுங்கு செய்தார். உமா மகேஸ்வரன் எனும் போராளித் தலைவரை ஜெயாரின் அரசாங்கத்தின் அமைச்சர் என்கிற வகையில் அல்லாமல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற வகையிலேயே தான் சந்தித்ததாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உமா தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து, ஈழக் கோரிக்கையினைக் கைவிட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐப்பசி 22 ஆம் திகதி இலங்கை திரும்பிய தொண்டைமான், மறுநாள் ஜெயாரைச் சந்தித்து தில்லியிலும் சென்னையிலும் இனப்பிரச்சினை குறித்து நிலவும் சூழ்நிலையினை விலாவாரியாக விளக்கினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை கொண்டுவர பார்த்தசாரதியை மீளவும் பேச்சுக்களுக்கு அழைக்குமாறு ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். மிதவாத தமிழ்த் தலைமைகளும், உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயாராக இருப்பதாக ஜெயாரிடம் கூறினார் தொண்டைமான். ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியுள்ள கட்டமைப்பு ஒன்றே தமிழர்கள் எதிர்பார்க்கும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக இருக்கும் என்று ஜெயாரிடம் அவர் தெரிவித்தார்.
  23. வொயிஸ் ஒப் அமெரிக்கா ‍ வானொலி அஞ்சல் நிலைய அமைப்பும் சர்ச்சையும் 1983 ஆம் ஆண்டு ஆவணி 13 ஆம் திகதி அமெரிக்காவுடன் புதியதொரு வானொலி பரிவர்த்தனை நிலையம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைசாத்திட்டமையானது இந்தியாவுக்குக் கடுமையான எரிச்சலையூட்டியது. பாரிய பரப்பளவில் பகிரப்படக்கூடிய 500 கிலோவொட் மற்றும் 250 கிலோவொட் சிற்றலைவரிசை டிரான்ஸ்மிட்டர்களை இவ்வொப்பந்தத்தின்மூலம் அமெரிக்கா இலங்கையில் நிர்மானிக்க வழிபிறந்தது. இப்புதிய வானொலி நிலையத்தினூடாக மொத்த இந்திய உபகண்டம், அரபுலகம், சீனாவின் சில பகுதிகள், சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய பகுதிகள், அப்கானிஸ்த்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு தனது வானொலிச் சேவையினை அமெரிக்காவினால் விஸ்த்தரிக்க முடிந்திருந்தது. இந்த வானொலி நிலையத்தை அமைப்பதன் மூலம் தனது பிரச்சாரத்தை அமெரிக்கா முடுக்கிவிட எண்ணியது. இந்த வானொலி நிலையத்தினை இலங்கையில் இருக்கும் இரண்டாவது அமெரிக்க இராணுவத் தளம் என்று இந்திரா வர்ணித்தார். அவரைப் பொறுத்தவரை திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் முதலாவது தளமாகக் கருதப்பட்டது. ஆகவே, இதுதொடர்பான தனது அதிருப்தியினை இந்தியா இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் தெரியப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் அதிருப்தியினை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இவ்வொப்பந்தம் 1951 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுடன் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டுவரும் ஒப்பந்தமேயன்றி, புதிய ஒப்பந்தம் கிடையாது என்று அது கூறியது. இலங்கையின் நியாயத்தை ஏற்க மறுத்த இந்தியா அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த ஒரே வானொலி நிலையம் இதுவே என்றும், இதன்மூலம் இப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய ஒலிபரப்பு நிலையங்களை இதனால் தடுக்க முடியும் என்றும், செய்மதிகளுடனான தொலைத் தொடர்பையும் இந்த நிலையம் முடக்கிவிடும் வல்லமையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில். "அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படவிருக்கும் இந்த வானொலி அஞ்சல் நிலையத்தின் மூலம் இந்திய உபகண்டத்தையும் அருகிலிருக்கும் பல நாடுகளையும் அதனால் இலகுவாக தனது பிரச்சார வீச்செல்லைக்குள் கொண்டுவரமுடியும்" என்று கூறியது. சோவியத் ஒன்றியமும் இந்த வானொலி நிலையம் குறித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்தியா வெளியிட்ட அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமெரிக்காவின் இரண்டாவது தளமே இந்த வானொலி நிலையம் எனும் இந்திரா காந்தியின் கூற்றுப்பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பேச்சாளர், "அது சாதாரண இராணுவத் தளமன்று, அதனைக் காட்டிலும் ஆபத்தானது" என்று கூறினார். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குத் தயாராகவே வந்திருந்த அவர், தான் கொண்டுவந்த வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைச் செய்தியொன்றின் பிரதிகளை அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். மரே மார்டர் எனும் பத்திரிக்கையாளரால் வழங்கப்பட்ட இந்தக் கட்டுரை "நிக்கொலொயிடிஸின் ஒப்பந்தம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. நிக்கொலொய்டிஸ் என்பவர் வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனத்தின் உப தலைவர் என்பதுடன் "நாம் சாதாரண ஊடக நிறுவனம் அல்ல, எமது நோக்கமே பிரச்சாரம் செய்வதுதான்" என்றும் வெளிப்படையாகக் கூறிவந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நிக்கொலெயிட்ஸின் அறிக்கையின்படி வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனம் அது இயங்கும் பிராந்தியங்களில் உள்ள உள்நாட்டு மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது, "இந்த நாடுகளில் ஆளும்வர்க்கத்திற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை நாம் ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள், மோசமான நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், மக்களின் தேவைகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் வழங்காமை, அடக்குமுறைகள், கலாசார வேறுபாட்டுப் பிணக்குகள், மத ரீதியிலான பிணக்குகள் குறித்து நிச்சயம் வொயிஸ் ஒப் அமெரிக்கா பேசும்" என்று கூறப்பட்டிருந்தது. ஆகவேதான், இந்திரா காந்தி இந்த உத்தேச வானொலி நிலையத்தினை அமெரிக்காவின் இரண்டாவது தளம் என்று கூறினார் என்று அப்பேச்சாளர் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் சிந்தனைகளை, கொள்கைகளை இந்த வானொலி நிலையத்தினூடாக அமெரிக்கா பிரச்சாரப்படுத்தவிருப்பதால் இதனை ஒரு பிரச்சாரத் தளமாக இந்திரா கருதுகிறார் என்றும் அவர் பேசினார். ஆனால், இலங்கையரசு முழுமூச்சுடன் இந்த புதிய வானொலி அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகளை முடுக்கிவிட்டது. இதற்கென நாத்தாண்டியாவின் இரணவிலப் பகுதியில் இருந்த 800 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட தென்னந் தோப்பு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் கட்டுமாண முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையுடன் வொயிஸ் ஒப் அமெரிகா வானொலி அஞ்சல் நிலைய ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வெயின்பேர்கர் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். வேறொரு நாட்டிற்கான பயணத்தின்போது தேநீர் அருந்துவதற்காகவே கஸ்பர் இலங்கை சென்றார் என்று அவரின் பயணத்தின் கனதியை குறைத்துக் காட்ட அமெரிக்கா முயன்றபோதும் கொழும்பில் இருந்த இந்திய உயர்ஸ்த்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்காவிடம் இலங்கை கேட்ட இராணுவ உதவிகளை அமெரிக்கா இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து வழங்க மறுத்த விடயம் குறித்துக் கவலையடைந்திருந்த ஜெயவர்த்தனவை ஆறுதல்ப்படுத்தவே அவர் இலங்கை வந்ததாகக் கூறினர். கொழும்பில் கஸ்பர் தங்கியிருந்தபோது இலங்கையின் கோரிக்கையான இராணுவ உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர். ஆனாலும், ஜெயவர்த்தன சலிப்படைந்து காணப்பட்டார். அவர் தொடர்ந்தும் அமெரிக்கா தன்னைக் கைவிட்டு விட்டதாகக் குற்றஞ்சாட்டியபடி இருந்தார்.
  24. இந்தியாவின் நலன்களுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான தீர்வினைத் தேடிய இந்திரா பார்த்தசாரதியின் முயற்சிகளை முறியடிக்க ஜெயவர்த்தன மேற்கொண்டுவந்த செயற்பாடுகள் அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் ஒரு மூலைக்குள் முடக்கிவிட்டன. ஐப்பசி மாதத்தில் ஐரோப்பாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கத்தை எதிர்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்திய மத்தியஸ்த்தத்தினூடாக இலங்கையரசுடன் பேசுவதற்கு அமிர்தலிங்கம் சம்மதம் தெரிவித்ததற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்வதற்கு இந்திராவை வற்புறுத்தவில்லை என்று அமிர்தலிங்கம் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஜெயவர்த்தன தனது இராணுவத்தைப் பலப்படுத்தி இன்னொரு ஜூலைக் கலவரத்தினை கட்டவிழ்த்துவிட சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஐப்பசி 17 ஆம் திகதி தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய அமிர்தலிங்கம் தன்னைச் சந்தித்த புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை இந்திராவுடன் பகிர்ந்துகொண்டார். அதற்குப் பதிலளித்த இந்திரா அமிர்தலிங்கத்தையும் அவருடன் பயணித்த சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன ஆகியோரையும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், வேறு எதனையும் பேச அவர் மறுத்துவிட்டார். ஆனால், தமிழ்த் தலைவர்களைத் தனியாகச் சந்தித்த பார்த்தசாரதி, இந்தியாவின் உண்மையான கவலையினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அயல்நாடுகளை அச்சுருத்தும் வல்லரசாக தான் கருதப்படுவதை இந்தியா விரும்பவில்லை. தென்னாசியாவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வல்லரசாக பார்க்கப்படுவதையே இந்தியா விரும்புகிறது. ஆகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஒரே கொள்கை சமாதான முயற்சிகளுக்கான நல்லெண்ண உதவிகளை வழங்குவதுதான் என்று விளக்கிய பார்த்தசாரதி, இந்தியாவின் இந்த நல்லெண்ணம் சர்வதேசத்தில் திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதில் ஜெயவர்த்தனவுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளை எவரும் கேள்விகேட்க முடியாது. அதாவது, அவர்கள் எமது பிராந்திய வல்லமையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். எங்களுக்குச் சற்று அவகாசம் தாருங்கள், உங்களுக்கான உரிமைகளை நாம் பெற்றுத் தருவோம்" என்று அவர் கூறினார். ஐப்பசி 17 ஆம் திகதிய கூட்டத்தின்பின்னர் இந்திராவின் கரிசணை மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகக் குவிந்திருந்தது. முதலாவது, ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது. தொடர்ச்சியான நீண்ட கலந்தாலோசனைகளின் பேறாக இரு விடயங்கள் அவரது கவனத்திற்க் கொண்டுவரப்பட்டன. அரசியலைப்பில் ஆறாவது சட்டத் திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மற்றும் பார்த்தசாரதியின் முயற்சிகளை மீள முன்னெடுப்பது ஆகியவையே அவ்விரு விடயங்களும் ஆகும். ஆறாவது திருத்தத்தின் மேல் சத்தியப்பிரமாணம் செய்ய முன்னணியினர் தொடர்ந்தும் மறுத்தே வந்தனர். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐப்பசி 20 ஆம் திகதிக்குள் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாதவிடத்து அவர்கள் தமது பாராளுமன்றப் பதவிகளை இழக்கும் அபாயம் உருவாகியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது பாராளுமன்ற பதவிகளை இழப்பதென்பது தமிழர்களை இலங்கை அரசிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடும் நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே இதனைத் தடுக்க பார்த்தசாரதியினூடாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. பார்த்தசாரதி தனது முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமும், அதனூடாக ஜெயாரே பார்த்தசாரதியை பேச்சுக்களுக்கு அழைக்கவைக்கும் சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது. இந்திராவின் கரிசணைக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது விடயம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பு. அமிர்தலிங்கமே இந்த சிங்கள ஆக்கிரமிப்புக் குறித்து இந்திராவிடம் முதன்முதலில் அறியத் தந்திருந்தார். இதுகுறித்து பிறிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம். எந்த மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை அன்று (1984) இந்தியா எதிர்த்ததோ, அதே மாதுரு ஓயாவில் இலங்கை விசேட படைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம் - 2021 மூன்றாவது, இந்திராவின் வெளியுறவுக் கொள்கையின் பரிமாணங்கள். இந்தியாவுக்கெதிரான சக்திகளை இலங்கையில் அனுமதிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அது கருதியது. ஆகவேதான், இந்தியாவுக்கெதிரான நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முயன்றபோது இந்தியா இதுகுறித்து அதிக அக்கறை காட்டியது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க தயங்கியபோதும், அமெரிக்கா இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்தினுள் வைத்திருக்கவே விரும்பியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.