-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
இளைஞர்களின் கோபம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேண்டுமென்றே பொலீஸார் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து இளைஞர்கள் மிகுந்த கவலையும், ஆத்திரமும் கொண்டிருந்தனர். இதற்கு எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். சிவகுமாரன் யாழ்ப்பாணத்திலும், பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தபடியும் இளைஞர்களை உணர்வூட்டிக்கொண்டிருந்தார்கள், பழிவாங்குதல் அவசியம் என்று உரைத்தார்கள். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அப்பாவிகள் மேல் கண்மூடித்தனமாக சிங்கள அரசின் காவல்த்துறை நடத்தியிருக்கும் தாக்குதல் தமக்குக் கூறும் ஒரே செய்தி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தினைக் கையிலெடுக்க வேண்டும் என்பதைத்தான் என்று அவர்கள் வாதிட்டார்கள். அவர்களால் மூன்று தனிநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டார்கள். அவர்களின் இலக்குகளாக அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகர ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். சிவகுமாரனின் நண்பர்கள் கூறுகையில், அப்பாவிகளின் கொலையோடு நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சந்திரசேகரவையே முதலில் கொல்லவேண்டும் என்று அவர் தம்மிடம் கூறியிருந்ததாகக் கூறுகிறார்கள். தமிழ் இளைஞர் பேரவை இத்தாக்குதலைக் கண்டித்து பொலீஸாருக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. இலங்கையின் சுதந்திர தினமான மாசி 4 ஆம் திகதியினை தமிழர்கள் நினைவு வணக்க நாளாகவும், இறைவனைப் பிராத்திக்கும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஒன்பது அப்பாவிகள் கொல்லப்பட்ட பகுதிக்கு முன்னால் அமைந்திருந்த முனியப்பர் கோயிலில் உண்ணாவிரத நிகழ்வொன்றினை ஆரம்பித்த அவர்கள், தமிழர்கள் அனைத்து இந்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் கொல்லப்பட்ட ஒன்பது அப்பாவிகளுக்காக நினைவு பூஜைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலும், மாசி 3 ஆம் திகதி மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளைப் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என்றும் இளைஞர் பேரவையினர் கேட்டுக்கொண்டனர். பொலீஸாரின் அச்சுருத்தல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் மாசி 3 ஆம் திகதியன்று பாடசாலைகளைப் புறக்கணித்திருந்தனர். சுதந்திர நாளான மாசி 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியிலும் இளைஞர்களால் கறுப்புக் கொடியொன்று பறக்கவிடப்பட்டது. கறுப்புக்கொடிகள் தம் கண்முன்னே பறப்பதைக் கண்ணுற்ற பொலீஸார் வீதியால் சென்றோரைத் தாக்கியதோடு, மணிக்கூட்டுக் கோபுரத்தில் கட்டப்பட்ட கொடியினை பொதுமக்களை வற்புறுத்திக் கழற்றி எறிந்தனர். அதன்பின்னர் யாழ்நகரிற்குள் சென்ற பொலீஸார் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட கடை உரிமையாளர்களை நையைப் புடைத்ததுடன், கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடிகளையும் அறுத்தெறிந்தனர். அசெளகரியமான சூழல் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து யாழ்ப்பாண வர்த்தகர்களும், சாதாரணம் மக்களும் இருவேறு பிரிவினரிடமிருந்து முரணான அறிவுருத்தல்களைப் பெறவேண்டியதாயிற்று. முதலாவது தமிழ் இளைஞர்கள் மற்றும் ஆயுதஅமைப்புக்கள். மற்றைய பிரிவினர் இலங்கையின் பொலீஸார். இளைஞர்கள் வர்த்தக நிலையங்களிப் பூட்டுமாறு அறிவித்தல் விடுத்தபின்னர், பொலீஸார் அவ்வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வர்த்தகர்களை மிரட்டி மீண்டும் அவற்றினை திறக்கச் செய்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவிய சூழ்நிலையினை வர்த்தகரான மயில்வாகனம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், "நாம் எமது இளைஞர்களை நேசிக்கிறோம். அவர்கள் எமக்குத் தரும் அறிவித்தல்களில் எமக்குப் பிரச்சினை இருந்ததில்லை, அதனை விரும்பியே நாம் செய்துவந்தோம். ஆனால், பொலீஸார் வந்து எம்மை அச்சுருத்தி கடைகளைத் திறக்கப்பண்ணினார்கள். அவர்களை நாம் முற்றாக வெறுத்தோம்". இந்தச் சூழ்நிலை இரட்டை நிர்வாகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவருவதைக் காட்டியது. இளைஞர்களுக்கும், பொலீஸாருக்குமிடையிலான முறுகல்நிலை யாழ்ப்பாணத்தில் மோசமடையத் தொடங்கியது. தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் பின்னர் சிவகுமாரன் இரு கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது முதலாவது முயற்சி பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவைக் கொல்வதாக அமைந்தது. சிவகுமாரனும் அவரது சில நண்பர்களும் சந்திரசேகரவைக் கொல்வதற்கு கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகில் பதுங்கியிருந்தனர். சந்திரசேகர பயணித்த ஜீப் வண்டி அவர்களை நெருங்கியதும், அதனை மறித்த சிவகுமாரன், கதவினைத் திறந்து சந்திரசேகர மீது தனது சுழல்த்துப்பாக்கியினால் சுட்டார். ஆனால் துப்பாக்கி சுடவில்லை. அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி. சந்திரசேகர வாகனத்தை விட்டு வெளியே பாயவும், சிவகுமாரனும் நண்பர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அவரது இரண்டாவது முயற்சி பொன்னாலைப் பாலத்தருகில் துரையப்பாவின் வாகனத்தை வழிமறித்து, அவரைச் சுடுவதாகவிருந்தது, ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது. கூட்டுச் சத்தியம் இதனையடுத்து சிவகுமாரனை எப்படியாவது கைதுசெய்துவிடவேண்டும் என்று பொலீஸார் தமது தேடுதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். தனது நடமாட்டங்களும், செயற்பாடுகளும் சிறிது சிறிதாக முடக்கப்பட்டு வருவதை சிவகுமாரன் உணரத் தொடங்கினார். அதனால் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்று சிறிதுகாலம் அங்கு தங்கியிருக்கலாம் என்று நினைத்தார். அதற்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால் இரு தமிழ் அரசியல்வாதிகளை அவர் அணுகியிருந்தார். ஆரம்பத்தில் உதவிசெய்வதாக உறுதியளித்துவிட்டு, இறுதியில் கையை விரித்துவிட்டார்கள். இதனால் கடும் விரதியடைந்த சிவகுமாரன் தனது நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசும்போது, "அவர்களுக்கு பேசுவதற்கு மட்டுமே நன்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் ஒருபோதும் காரியத்தில் இறங்குவதில்லை" என்று கூறியிருக்கிறார். சிவகுமாரன் தானே செயலில் இறங்கத் தீர்மானித்தார். அதன்படி கோப்பாய் மக்கள் வங்கியினைத் திருடுவது என்று அவர் முடிவெடுத்தார். 1974 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி காலை, வங்கி தனது வேலைகளை ஆரம்பித்திருந்த வேளை சிவகுமாரனும் இன்னும் ஐந்து தோழர்களும் வங்கிக்குச் சென்றனர். வங்கிக்குச் சென்றவுடன் வாசலில் காவலில் இருக்கும் பொலீஸாரைச் சுடுவது, பின் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை ஒரு அறைக்குள் அடைப்பது, பணத்தைத் திருடுவது என்பதே அவர்களது திட்டம். அதன்படி, சிவகுமாரன் காவலுக்கு நின்ற பொலீஸார் மீது இருமுறை சுட்டார், ஆனால் குறி தவறிவிட்டது. பொலீஸார் சுதாரிப்பதற்குள் சிவகுமாரன் செம்மண் தோட்டவெளிகளுக்கூடாக ஓடத் தொடங்கினார், பின்னால் பொலீஸார் திரத்திக்கொண்டே வந்தனர். ஒருகட்டத்தில் பொலீஸார் தன்னை எட்டிப் பிடிக்கும் தூரத்திற்குள் வந்துவிட்டதை உணர்ந்தார் சிவகுமாரன். இனித் தப்பிக்க முடியாது என்கிற நிலையினை உணர்ந்தவுடன், தான் கூடவே வைத்திருந்த சயனைட் வில்லையினை விழுங்கினார். நினைவிழந்து வீழ்ந்துகிடந்த சிவகுமாரனை பொலீஸார் யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றனர். சிவகுமாரன் சயனைட் அருந்தி நினைவின்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி காட்டுத்தீப் போல் நகரெங்கும் பரவியது. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பின்வருமாறு விபரித்தார், "அந்தச் செய்தி எமது செவிக்கு எட்டியபோது நாம் வகுப்பில் இருந்தோம். ஒருவிதத்தில் அச்செய்தி எமக்கு உற்சாகத்தினை அளித்தது. எமது பாடசாலையினைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் தமிழ்த்தாய்க்காக தனது உயிரைத் தியாகம் செய்திருக்கிறான் என்று நாம் பரவசப்பட்டோம். பாடசாலை முடிந்தவுடன் சைக்கிள்களில் ஏறி வேகமாக யாழ்ப்பாண வைத்தியசாலை நோக்கி விரைந்தோம். நாம் அங்கே சென்றபோது பெரும் திரளான மக்கள் வைத்தியசாலையில் குழுமியிருந்தனர். அவர்களுள் அநேகமானவர்கள் மாணவர்கள். அன்று மாலை அவர் இறந்துவிட்டதாக நாம் அறிந்தபோது துக்கம் எம்மை ஆட்கொள்ள அழத் தொடங்கினோம்". யாழ்ப்பாணம் அழுதது, ஒட்டுமொத்த யாழ்க்குடா நாடே அழுதது. அனைத்து இலங்கைத் தமிழர்களும் அழுதார்கள். ஒருவர் செய்யக்கூடிய உச்ச தியாகம் அது. தாங்கொணாத் துயரம் ஒன்றினுள் தமிழ்ச் சமூகம் மூழ்கிக்கொண்டிருந்தது. யாழ்க்குடாநாட்டின் பல வீடுகளில் கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டன. கடைகளின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. சிவகுமாரனின் உயிர்த்தியாகத்தைப் போற்றிப் பதாதைகளும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. சிவகுமாரனின் இறுதிக் கிரியைகள் ஆனி 7 ஆம் திகதி நடைபெற்றது. மிகப்பெருந்திரளான மக்கள் அவரின் வீட்டின் முன்னால் வரிசைகளில் நின்று அவருக்கான தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தினர். அவர்களில் 7 இளைஞர்கள் தமது கைகளை அறுத்து இரத்தத்தில் சிவகுமாரனின் நெற்றியில் திலகமிட்டு தாய்த் தமிழுக்காக தமது உயிரைக் கொடுப்போம் என்று சத்தியம் செய்தனர். பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து போயினர். உயிர்த் தியாகம் எனும் கருத்தியலை உருவாக்கியவர் தியாகி சிவகுமாரனே! சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளை மாணவர்களே பொறுப்பெடுத்துக்கொண்டனர். சிவாகுமாரன் உயர்தரம் பயின்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு அவரது பூதவுடலை எடுத்துச் சென்று அங்கே மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்க விரும்பினர். பொலீஸார் இதற்கு அனுமதி மறுக்கவே பொலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கிய மாணவர்கள், பொலீஸ் தடையினையும் மீறி சிவகுமாரனைன் பூதவுடலை எடுத்துச் செல்வோம் என்று கோஷமிட்டனர். சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, மாணவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே பிணக்கு மேலும் மோசமடையாதவாறு தவிர்த்துவிட்டனர். சுயாதீனமான கணிப்பீடுகளின்படி சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 15,000 ஆவது இருக்கலாம் என்று தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் அதுவரை இடம்பெற்ற இறுதி ஊர்வலங்களில் சிவகுமாரனின் இறுதி ஊர்வலத்திலேயே அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சமஷ்ட்டிக் கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் சிவகுமாரனின் மறைவினையொட்டு மிகவும் இரக்கமான அறிக்கையொன்றினை வெளியிட்டார், "தமிழ் மக்களுக்காகன மிக உச்ச தியாகத்தினை தம்பி சிவகுமாரன் புரிந்திருக்கிறார். அது ஒரு வீரம் மிக்க செயலாகும். தமிழ் மக்களின் பிறப்புரிமையினை மீட்டெடுக்க அவர் தேர்வுசெய்த ஆயுத தாங்கிய வன்முறைப் போராட்டத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் கூட, அவரது இலட்சிய உறுதிக்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று அந்த அறிக்கை கூறியது. இளைஞர்கள் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்டுக் காணப்பட்டார்கள். அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்கு மேடையில் வைக்கப்படுகையில் வரிசையாக நின்ற இளைஞர்கள் கூட்டுச் சத்தியம் ஒன்றினை மேற்கொண்டனர். "சிவகுமாரனின் பெயரால், அவரது ஆன்மாவின் பெயரால், அவரது வித்துடலின் பெயரால் அவர் முன்னெடுத்த தமிழர்களின் சுதந்திரப்போராட்டத்தினை, நாம் எமது இலட்சியத்தினை அடையும்வரை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், அதுவரையில் நாம் ஓய்வெடுக்கவோ பின்வாங்கவோ மாட்டோம் என்றும் இத்தால் உறுதியெடுக்கிறோம்" என்று சிவகுமாரனின் உடல்மீது சத்தியம் செய்துகொண்டார்கள். தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, உயர்வாக மதிக்கப்பட்ட விடுதலைப் போராளியாக சிவகுமாரனுக்கு தமிழர்கள் புகழஞ்சலி செலுத்தியதுடன், ஈழத்தின் "பகத் சிங்" என்றும் அவரை அழைக்கத் தலைப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது நாளந்த போர் நாளேட்டில் சிவகுமாரனின் உயிர்த் தியாகம் பற்றி 1984 இல் இவ்வாறு கூறியிருந்தது. "சிவகுமாரன் ஒரு மிகச் சிறந்த விடுதலைப் போராளியாகவும், ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழந்தார்" என்று பதிவிட்டிருந்தது.
-
பொலீஸ் படுகொலைகள் செல்லையா குமாரசூரியரின் ஆலோசனைப்படி நடந்த சிறிமாவின் அரசாங்கம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிய நாளிலிருந்தே அதனைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கியிருந்தது. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற சர்வதேச நிகழ்வான தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை சிறிமாவின் அரசின் அனுசரணையுடன், தானே நடத்தவேண்டும் என்று விரும்பிய குமாரசூரியர், இதன்மூலம் தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் நல்ல அமைச்சர் எனும் நற்பெயரினை சிறிமாவிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். மலேசியாவிலும், தமிழ்நாட்டிலும் நடைபெற்றதைப்போல, இலங்கையில் நடந்த மாநாட்டை நாட்டின் தலைவரான சிறிமாவே ஆரம்பித்துவைக்கவேண்டும் என்று குமாரசூரியர் பிடிவாதமாக நின்றார். முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தேறியபோது அந்நாட்டின் பிரதமர் டுங்கு அப்துள் ரெகுமானே அம்மாநாட்டினை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே 1968 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி தமிழ்நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது மாநாட்டினை இந்தியாவின் அரசுத்தலைவராக இருந்த சாக்கிர் ஹுஸ்ஸயின் ஆரம்பித்து வைத்திருந்தார். மூன்றாவது மாநாடு பரீஸில் இடம்பெற்றபோது யுனெஸ்க்கோ வின் செயலாளர் நாயகம் ஆரம்பித்து வைத்திருந்தார். நான்காவது மாநாட்டினை நடத்துவதற்கு இலங்கை தெரிவுசெய்யப்பட்டிருந்தது. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இலங்கைக் கிளை, 1973 ஆம் ஆண்டு சித்திரை மாதம் கொழும்பில் மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கான குழுவொன்றினை அமைப்பதற்காக ஒன்றுகூடியது. இலங்கைக் கிளையின் தலைவரான கலாநிதி தம்பைய்யா இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகளில் அந்த நாட்டு தலைவர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைத்ததுபோன்று இலங்கை மாநாட்டினை சிறிமாவே அரம்பித்துவைக்கவேண்டும் என்று தம்பையா தீர்மானம் ஒன்றினை முன்மொழிய, கொம்மியூனிசக் கட்சியின் பின்புலத்தில் இயங்கி வந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் அதனை ஆமோதித்தனர். ஆனால், அக்கூட்டத்தில் பங்குபற்றிய பெரும்பாலானவர்கள் தமிழரின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்திலேயே இந்த மாநாடு நடைபெறுவதை விரும்பினர். யாழ்ப்பாணதில் நிலவிவந்த அரசுக்கெதிரான மனோநிலையினை நன்கு உணர்ந்திருந்த அமைச்சர் குமாரசூரியரின் ஆதரவாளர்கள், மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்தும் எத்தனிப்புக்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பின்புலத்திலேயே நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அன்றைய தினத்திலிருந்து இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதைத் தடுத்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்ட அமைச்சர் செல்லையா குமார்சூரியர் அரச இயந்திரத்தைப் பாவித்து, மாநாட்டினை நடத்தும் குழுவினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எதிராக பல தடைகளைப் போட்டுவந்தார். அவற்றில் ஒன்று மாநாட்டில் பங்குபெறும் பல இந்திய நாட்டவர்களுக்கான இலங்கை வரும் அனுமதியினை இரத்துச் செய்வது. மாநாட்டினை ஒருங்கிணைப்பவர்களின் வேண்டுகோளான வீரசிங்கம் மண்டபத்தினைப் பாவிக்கும் அனுமதி மற்றும் ஒலிபெருக்கிகளைப் பாவிக்கும் அனுமதி ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதித்த அமைச்சர், வீரசிங்கம் மண்டபத்தினை மாநாடு ஆரம்பிக்கும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டுமே பாவிக்கமுடியும் என்று கூறியதோடு, ஒலிபெருக்கிகளைப் பாவிப்பதனையும் தடுத்து விட்டிருந்தார். மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எதிராக அரசு போட்டுவந்த முட்டுக்கட்டைகள், குறிப்பாக அமைச்சர் செல்லையா குமாரசூரியரினால் தொடர்ச்சியாக செய்யப்பட்டுவந்த இடையூறுகள், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக தமிழ் இளைஞர்கள் கருதினர். அதனால், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதற்கு திடசங்கற்பம் பூண்ட இளைஞர்கள் ஓரணியாக திரண்டனர். யாழ்நகர் முழுவதும் தமிழ் கலாசார முறைப்படி இளைஞர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்கம்பத்திலும் வாழைமரங்கள் கட்டப்பட்டதோடு, இந்த வாழைமரங்களுக்கிடையே மாவிலைத் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்து வீதிகளின் ஒவ்வொரு சந்தியிலும் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டன. யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பல தமிழ் ஆராய்ச்சியாளர்கள் யாழ்நகரில் அன்று காணப்பட்ட விழாக்கோலத்தினைப் பார்த்துப் புலகாங்கிதமடைந்தனர்.திருச்சியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் நைனா மொஹம்மட் மற்றும் தமிழ் அறிஞர் ஜனார்த்தனனன் போன்றவர்கள் யாழ்ப்பாண நகரம் பூண்டிருந்த விழாக்கோலத்தையும், மக்களின் மனங்களில் நிரம்பிவழிந்த தமிழ் உணர்வையும் கண்டு வியப்புற்று தந்தை செல்வாவின் வீடு அமைந்திருந்த காங்கேசந்துறைக்கு பேசப்போயிருந்தனர். "ஐயா, நாம் இங்கு காணும் மக்கள் உணர்வையும் உற்சாகத்தினையும் தமிழ்நாட்டில்க் கூட காணவில்லை. யாழ்ப்பாணத்து மக்கள் தமிழின்மேல் கொண்டிருக்கும் அன்பும் அவர்களின் உற்சாகமும் எம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டது" என்று அவரிடம் கூறினர். அதற்குப் பதிலளித்த செல்வா அவர்கள், "யாழ்ப்பாணத்து மக்கள் தமது மொழிபற்றியும், கலாசாரம் பற்றியும் அதீதமான உணர்வுமிக்கவர்கள். தாம் தமிழரென்பதற்காக அச்சுருத்தப்படுவதாலேயே இந்த உணர்ச்சி அவர்களுக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து 9 ஆம் திகதி முடிவடைந்தது. இந்த நிகழ்வு பெரும் தமிழ் அறிஞர்களின் அறிவினைப் பறைசாற்றியதுடன் அவர்களுக்கிடையிலான அறிவுசார் சம்பாஷணைகளையும் கொண்டிருந்தது. வீரசிங்கம் மண்டபத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஆரம்பம் அமைந்தாலும், டிம்மர் மண்டபத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கும், கல்விமான்களுக்குமான மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முடிவுநாளான தை 10 ஆம் திகதி இந்த விழாவில் சாதாரண மக்களும் அனுமதிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதிநாள் நிகழ்விற்கு துரையப்பா அரங்கினை பதிவுசெய்திருந்தார்கள். இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்ளவென பெருந்திரளான மக்கள் மதியத்திலிருந்து துரையப்பா அரங்கினை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால், அரங்கத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்டுக் கிடந்தன. வாயிலில் நின்ற காவலர்கள் யாழ் நகர மேயர் அல்பிரெட் துரையப்பாவின் ஆணையின்படியே வாயிற்கதவுகள் பூட்டப்பட்டதாகக் கூறியதுடன், அவரது அனுமதியின்றின் அதனைத் திறக்க முடியாதென்று மறுத்துவிட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் துரையப்பாவைத் தொடர்புகொள்ள எடுத்துக்கொண்ட் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அன்றிரவு துரையப்பா அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டு ஒளித்துக்கொண்டார். துரையப்பா வேறு வழியின்றி, இறுதிநாள் நிகழ்வினை வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் இருந்த பகுதியில் நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் தீர்மானித்தனர். அவசர அவசரமாக மேடையொன்று எழுப்பப்பட்டு, மக்கள் அனைவரும் மேடையின் முன்னாலிருந்த புற்றரையில் அமருமாறு கேட்கப்பட்டனர். காங்கேசந்துறை வீதியினைத் தவிர்த்து அமர்ந்துகொள்ளுமாறு கூட்டத்தினர் வேண்டப்பட்டனர். ஆனால் நிகழ்விற்கு வருகைதந்த மக்களின் எண்ணிக்கை 10,000 இனைத் தாண்டவே, மக்களின் ஒருபகுதியினர் காங்கேசந்துறை வீதியிலும் நிற்க வேண்டியதாயிற்று. அப்பகுதிக்கு வந்த யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸ் பரிசோதகர் சேனாதிராஜாவை கூட்டத்திற்கருகில் மறித்த தன்னார்வத் தொண்டர்கள், வீதியினைப் பாவிக்கமுடியாதென்றும், மணிக்கூட்டுக் கோபுர வீதியினைப் பாவிக்குமாறும் கோரினார்கள். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வாகனத்தில் போவது, அங்கு பேசிக்கொண்டிருக்கும் வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு அவமதிப்பாக இருக்கும், ஆகவே தயவுசெய்து மாற்றுவழியால் செல்லுங்கள் என்று மிகுந்த கெளரவத்துடனேயே இளைஞர்கள் பொலீஸ் பரிசோதகரிடம் கேட்டிருக்கிறார்கள். சேனாதிராஜாவும் தனது வாகனத்தைத் திருப்பிக் கொண்டு மாற்று வழியினால் தனது பொலீஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தின் பின்னர் அதேவழியால் வந்த இன்னொரு யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸாரான சார்ஜென்ட் வோல்ட்டர் பெரேராவிடமும் இளைஞர்கள், சேனாதிராஜாவிடம் கூறியதையே கூறியிருக்கிறார்கள். பொலீஸ் நிலையத்திற்குத் திரும்பிய சார்ஜன்ட் வோல்ட்டர் பெரேரா இதுபற்றி தனது அதிகாரி, பரிசோதகர் நாணயக்காரவிடம் முறையிட்டிருக்கிறார். இந்தவிடயத்தை நாணயக்கார யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவிடம் முறையிட்டிருக்கிறார். அப்போது நேரம் இரவு 8:30 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் முற்றான ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாருடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு பொலீஸ் பாரவூர்தியில் வந்திறங்கினார் சந்திரசேகர. அப்போது திருச்சியிலிருந்து வருகைதந்திருந்த தமிழறிஞர் கலாநிதி நைனா மொகம்மட் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சின் சொல்லாண்மையினையும், பிழையின்றிப் பொழிந்துகொண்டிருந்த தமிழையும் கேட்டுப் பார்வையாளர்கள் மெய்மறந்து நின்றிருந்தனர். எங்கும் நிசப்தமான அமைதி. எல்லாமே மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திடீரென்று ஒலிபெருக்கியூடாகக் கடுந்தொணியில் பேச ஆரம்பித்த சந்திரசேகர, மக்கள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு அறிவித்தார். பின்னர், தன்னோடு வந்திருந்த ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீசாரை தாக்குதல் நிலைகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். பாரவூர்தியை மக்களை நோக்கி ஓட்டுமாறு கூறிய சந்திரசேகர, கலகம் அடக்கும் பொலீஸாரை பாரவூர்தியின் பின்னால் அணிவகுத்து நகருமாறு பணித்தார். அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்கள், மாநாட்டினைக் குழப்பவேண்டாம் என்று பொலீஸாரைப் பார்த்து மன்றாடத் தொடங்கினர். அவர்கள் மேல் தமது பாரமான சப்பாத்துக் கால்களால் உதைந்துகொண்டு பொலீஸார் முன்னேறினர். வைத்தியநாதன் மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்த பகுதிகளை நோக்கி பொலீஸார் கடுமையான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர். அவற்றில் ஒன்று மேடைக்கு மிக அருகில் விழ, அருகில் இருந்த மாநாட்டு தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் மூச்சுத்திணறி கீழே விழுந்தார். மேடையில் வீற்றிருந்த சர்வதேச தமிழ்ப் பேச்சாளர்கள் கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதலினால் காயப்பட்டு, பார்வையின்றித் தடுமாறத் தொடங்கினர். பின்னர் தாம் கொண்டுவந்த துப்பாக்கிகளை எடுத்து வானை நோக்கிச் சுடத் தொடங்கினர் பொலீஸார். துப்பாக்கிச் சூடுபட்டு மின்கம்பிகள் அறுந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மேல் வீழ்ந்தது. ஏழு மக்கள் மின்னழுத்தத்தால் அவ்விடத்திலேயே பலியானார்கள். காயப்பட்ட பலரில் இருவர் பின்னர் மரணமானார்கள். நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகவும் குழப்பகரமான நிலையில் முடிவிற்கு வந்ததுடன், இன்றுவரை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவையும் ஏற்படுத்தி விட்டது, இந்த அக்கிரமத்தை மன்னிக்கமுடியாமலும் ஆக்கிவிட்டது. இந்தக் கொலைகளுக்குப் பின்னர் அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தினையும் மன்னிக்கத் தமிழ் மக்கள் தயாராக இருக்கவில்லை. பொலீஸாரின் கண்மூடித்தனமான நடவடிக்கையினை தவறென்று ஏற்றுக்கொள்ள பிரதமர் சிறிமா மறுத்துவிட்டார். பொலீஸாரின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்திய பிரதமர், மாநாட்டினர் பொலீஸார்மீது தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார். அப்பாவி மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவுக்கும், அவரோடு அன்றிரவு மக்கள் மேல் தாக்குதல் நடத்திய பொலீஸாருக்கும் சிறிமாவினால் பதவியுயர்வு வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஆனால், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து நீதித்துறையினரூடாக விசாரணை ஒன்றை நடத்த யாழ் நீதிபதி பாலகிட்ணர் அமர்த்தப்பட்டார். ஆனால், பாலகிட்ணர் பிரேரித்த விடயங்களை அமுல்ப்படுத்த சிறிமா அரசு மறுத்துவிட்டது. நீதித்துறை மீதும், பொலீஸார் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை தமிழ்மக்கள் முற்றாக இழந்தனர். அரச சாரா மக்கள் அமைப்பான யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஒ. எல். டி கிரெஸ்ட்டர், வி. மாணிக்கவாசகர் மற்றும் ஓய்வுபெற்ற கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய சபாபதி குலேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பங்குனி 1974 இல் வெளிவந்த அவர்களது அறிக்கையில் பொலிசாரைக் குற்றவாளிகளாக அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். பொன் சிவகுமாரனின் உடைக்கப்பட்ட உருவச் சிலை
-
முதலாவது சயனைட் பொன் சிவகுமாரன் (1950 - 1974) தமிழர் ஐக்கிய முன்னணியினரை சமாதானப்படுத்த சிறிமாவோ எடுத்துவந்த அனைத்து முயற்சிகளையும் 1973 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளன்று இடம்பெற்ற 9 தமிழரின் படுகொலைகள் உடைத்துப் போட்டன. இந்த மரணங்கள் தமிழரின் இதயங்களை ஆளமாக ஊடுருவிட்டதுடன், அவர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்துமிருந்தன, குறிப்பாக இளைஞர்கள் இதனால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆயுத ரீதியில் இயங்க ஆரம்பித்திருந்த இளைஞர்கள் இந்த 9 பேரின் படுகொலைகளுக்கும் பழிவாங்கவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்களின் முதலாவது இலக்காக இருந்தவர் சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாண நகர மேயராகவும் இருந்த அல்பிரெட் துரையப்பா. யாழ்ப்பாணத்தில்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்துவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் செல்லையா குமாரசூரியரின் மிக நெருங்கிய நண்பரே அல்பிரெட் துரையப்பா. குமாரசூரியருடன் சேர்ந்து தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தடுத்துவிட எத்தனித்த துரையப்பா தன் பங்கிற்கு துரையப்பா விளையாட்டரங்கினை தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினர் இறுதிநாள் நிகழ்வுகளுக்கு உபயோகிக்க தரமுடியாது என்று மறுத்துவிட்டார். ஒருவருக்கொருவர் நேரடியாகத் தொடர்பில்லாத, இரு ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் துரையப்பாவைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்கள். அவர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன்னுத்துரை மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் புதல்வன் சிவகுமாரன். இரண்டாமவர் 19 வயதே நிரம்பிய பிரபாகரன். சிவகுமாரனைப் பொறுத்தவரையில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் தனிப்பட்ட ரீதியில் அவரை மிகவும் பாதித்திருந்தது. ஏனென்றால், தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வருகைதந்திருந்த பல வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தன்னார்வத் தொண்டர் அமைப்பில் சிவகுமாரனும் இருந்தார். ஆனால், பிரபாகரன் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்கும் வேளையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். ஆனால், மாநாட்டின் இறுதிநாளில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை தமிழினத்தின் புகழ் மீதும் அதன் கலாசாரத் தொன்மைமீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக அவர் பார்த்தார். சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர்தான் சிவகுமாரன். தனது ஆரம்பக் கல்வியினை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். உயர்தரத்தின்பின்னர் மேலதிக படிப்பிற்காக கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் அவர் இணைந்துகொண்டாலும் கூட, தனது அதீத அரசியல் ஈடுபாட்டினாலும் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்புக்களாலும் அதிலிருந்து இரு மாத காலத்திற்குள் அவர் விலகினார். 1971 ஆம் ஆண்டு தமிழ் மாணவர் அமைப்பில் இணைந்த சிவகுமாரன், அதற்கு முன்னரே அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார். முதலாவதாக 1971 ஆம் ஆண்டு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறியின் வாகனம் மீதும், பின்னர் அல்பிரெட் துரையப்பாவின் வாகனம் மீதும் அவர் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தார். அவருடனான நினைவுகளை அவரது தோழர்கள் மிகவும் வாஞ்சையுடன் நினைவுகூருகிறார்கள். "அவர் மிகவும் உணர்வுபூர்வமானவர். ஆயுதப் போராட்டம்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். சமஷ்ட்டிக் கட்சி சுதந்திரவிடுதலைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவேண்டும் என்றும், அக்கட்சிக்கு ஆயுத ரீதியிலான துணை அமைப்பொன்று வேண்டுமென்றும் தொடர்ச்சியாக வாதிட்டு வந்தார்" என்று அவரது தோழர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா கூறுகிறார். வங்கதேச விடுதலைப் போராட்டத்தையே தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தின் முன்மாதிரியாக சிவகுமாரன் பார்த்து வந்தார். அங்கு முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி அரசியல் ரீதியிலான போராட்டங்கள் மூலம் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க, ஆயுதக் குழுக்கள் அவரின் போராட்டத்திற்கு பக்கபலமாக ஆயுத ரீதியிலான போராட்டத்தினை நடத்திவந்தன. சிவகுமாரன் பற்றிப் பேசும்போது ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், "அவர் ஆயுதப் போராட்டத்தின் அவசியம் குறித்து இரவிரவாகப் பேசுவார். அரசியல் ரீதியிலான போராட்டமும், ஆயுத ரீதியிலான போராட்டமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று உறுதுணையாக விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கலாம் என்பதே அவரது சிந்தனையாக இருந்தது". குட்டிமணி தங்கத்துரை குழுவில் சில காலம் செயற்பட்ட சிவகுமாரன், பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து தனக்கான குழுவொன்றினை "சிவகுமாரன் குழு" எனும் பெயரில் நடத்தினார்.1972 ஆம் ஆண்டு , மாசி மாதம் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் நிறுத்தப்பட்டைருந்த துரையப்பாவின் வாகனத்தின்மீது குண்டுத்தாக்குதலை நடத்தினார் என்கிற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டிருந்தார். சிவகுமாரன் தனது வாகனத்திற்குக் குண்டெறிந்தவேளை, துரையப்பாவும் அவரது நண்பரான நீதிபதி கொலின் மெண்டிசும் யாழ்ப்பாணம் ஓய்வு விடுதியில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தனர். வாகனம் கடுமையாகச் சேதப்படுதப்பட்டிருந்தது. சிவகுமாரன் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதும், சிவகுமாரனுக்காக வாதாடிய வழக்கறிஞர் சி. சுந்தலிங்கம் வழக்கினை மல்லாகம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த சுந்தரலிங்கம், துரையப்பாவின் நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மல்லாகம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட வழக்கில் பிணையணுமதி கோரப்பட்டபோது, நீதிபதியினால் அது மறுக்கப்பட்டது. சில மாதங்களின்பின்னர் போதிய சாட்சிகள் இன்மையினால் சிவகுமாரன் விடுதலை செய்யப்பட்டார். விசாரணைகளின்பொழுது அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். தனது தோழர்களுடன் அவர் இதுபற்றிப் பேசும்போது, சித்திரவதைகள் தாங்கமுடியாதவையாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். இனிமேல் பொலீஸாரின் கைகளில் பிடிபடப்போவதில்லை என்று அவர் தனது தோழர்களிடம் கூறியிருந்தார். "அவர்களின் கைகளில் பிடிபடுவதைக் கட்டிலும் நான் இறப்பதே மேல். அவர்களிடன் பிடிபட்டு எனது தோழர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் காட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் நான் இறந்துவிடுவது எவ்வளவோ மேல்" என்று அவர் கூறியிருக்கிறார். 1973 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவும் சித்திரவதைகளின் கொடூரத்தனமைபற்றிக் கூறுகிறார். "சித்திரவதைகள் மிகக் கடுமையானதாக இருந்தது. அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு நாள் இரவு என்னை திறந்த வெளியொன்றிற்கு இழுத்துச் சென்று நான் மயக்கமாகி விழும்வரை அடித்தார்கள். நான் மயங்கியவுடன், இறந்துவிட்டதாக நினைத்து என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். பின்னர் ராணுவ ரோந்து வாகனம் ஒன்று என்னை அங்கிருந்து மீட்டு வந்தது" பொலீஸ் சித்திரவதையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முறையொன்றினை சிவகுமாரன் கண்டுபிடித்தார். பிடிபடுவதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்வது மேலானது என்று அவர் புரிந்துகொண்டார். உட்கொண்டவுடன் உயிரினை உடனே பறிக்கும் நஞ்சான சயனைட்டினை தன்னோடு எப்போதும் அவர் காவித் திரியத் தொடங்கினார். சயனைட் வில்லையினை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் முறைமையினை உருவாக்கியவர் சிவகுமாரனே ! தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தன்னார் தொண்டர் படையின் முக்கிய உறுப்பினராக சிவகுமாரன் செயலாற்றிவந்தார். யாழ்ப்பாண நகரை அலங்கரிப்பதில் முன்னின்று உழைத்த சிவகுமாரன், தனது தோழர்களின் உதவியுடன் நகரை இரண்டு மூன்று நாட்களிலேயே ஒரு கலாசார பூங்காவாக மற்றியிருந்தார். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு இறுதிநாள் படுகொலைகளின் பின்னர் அவர் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்டதாகவும், எவருடனும் பேசுவதைக் கூடத் தவிர்த்துவிட்டதாகவும் அந்நாட்களில் அவரோடிருந்தவர்கள் கூறுகின்றனர். அப்படுகொலைகளுக்கு கட்டாயம் பழிதீர்த்தே ஆகவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. துரையப்பா மற்றும் பொலீஸ் அதிகாரி சந்திரசேகர ஆகிய இருவரையும் தான் பழிவாங்கப்போவதாக அவர் தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார். "ஒன்பது அப்பாவிகளைப் ப்டுகொலை செய்த இந்த ராஸ்க்கல்களின் செயல் ஒருபோதும் தண்டிக்கப்படமால்ப் போகாது" என்று தனது நண்பர்களிடம் சிவகுமாரன் கூறியிருக்கிறார்.
-
கிழக்கு ஜேர்மனி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது அங்கேயிருந்த பொருளாதார நிலைக்கும், மேற்கின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜேர்மனியின் பொருளாதார நிலைக்கும் வித்தியாசம் இல்லையென்று எவரும் நினைத்தால், அது அவர்களின் அறிவுசார்ந்த விஷயம். ஒன்றில் சோவியத் யூனியன் அன்றிலிருந்தே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, அல்லது கிழக்கு ஜேர்மனியை வேண்டுமென்றே பொருளாதாரத்தில் கீழ்நிலையில் வைத்திருந்தது. அந்தக் காலத்தில்க் கூட பெருமளவு கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனிக்குள் தப்பிவந்தார்கள். இந்த லட்சணத்தில் உக்ரேனைப் பிடித்து தனது பரந்த சோவியத் ஒன்றியக் கனவை நனவாக்கத் துடிக்கும் அதிமேதகு, அதி வணக்கத்திற்குரிய, கெளரவ....வேறு ஏதாச்சும் இருக்கா?....புட்டின் அவர்கள் மேம்பட வைத்திருப்பார் என்று நம்புவோமாக.
-
கடந்த பங்குனி மாதத்திலிருந்து ரஸ்ஸியாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழும் ரஸ்ஸியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லயன் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? சிலவேளை ரஸ்ஸியாவின் செல்வம் அளவுக்கதிகமாகப் போய்விட்டதால் வெளிநாடுகளுக்கு அதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்று இந்த ஒரு மில்லியன் ரஸ்ஸியர்களும் எண்ணியிருக்கலாம்.
-
உமா மகேஸ்வரன் தலைவர்களின் இந்த முடிவிற்கெதிராக தமிழ் இளைஞர் பேரவை புரட்சிசெய்ய ஆரம்பித்தது. அவ்வமைப்பின் கொழும்பு கிளையின் தலைவர் ஈழவேந்தனும், செயலாளர் உமா மகேஸ்வரனும் தமிழ்த் தலைவர்களைப் புறக்கணிக்குமாறு கடுமையான அறிக்கையொன்றினை வெளியிட்டனர். "மக்கள் விரும்புவதை உங்களால் செய்யமுடியாவிட்டால், தயவுசெய்து விலகிச் செல்லுங்கள்" என்பதே அவ்வறிக்கையின் செய்தியாக இருந்தது. ஈழவேந்தன் சமஷ்ட்டிக் கட்சியில் இளைய தலைவர்களான அமிர்தலிங்கம், நவரட்ணம் மற்றும் ராஜதுரை ஆகியோர், இளைஞர்களை ஆசுவாசப்படுத்த முயன்றதுடன், தாம் மீண்டும் சமஷ்ட்டி முறை ஆட்சிக்கான கோரிக்கையினை மீண்டும் தில்லையென்று தெரிவித்தனர். "எமது முடிவு உறுதியானது. நாம் சமஷ்ட்டி முறைத் தீர்வினை கைவிட்டு விட்டோம். தமிழர் ஐக்கிய முன்னணியின் தீர்மானத்தில் சுய ஆட்சியென்று பாவிக்கப்படும் பதத்தினை நாம் சமஷ்ட்டி என்று அர்த்தப்படுத்தக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்படுவது தனிநாட்டிற்கான கோரிக்கையே அன்றி, அதற்குக் குறைவான எதுவுமல்ல" என்று ஈழவேந்தனிடமும் உமா மகேஸ்வரனிடமும் அமிர்தலிங்கம் தெரிவித்தார். தான் சமஷ்ட்டிக் கட்சியில் தலைவராக 1973 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து வெளியிட்ட அறிக்கையில் அமிர்தலிங்கம், சமஷ்ட்டிக் கட்சியில் நடவடிக்கைகளில் நிச்சயம் இளைஞர்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று கூறினார். அவர் தான் கூறியபடி செயற்படவும் தலைப்பட்டார். அதன்படி, 1973 ஆம் ஆண்டு புரட்டாதி 9 ஆம் திகதி மல்லாகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி, சமஷ்ட்டி அடிப்படையிலான கோரிக்கையினைக் கைவிடுவதாகவும், தனிநாட்டிற்கான கோரிக்கையே தமது தற்போதைய நிலைப்பாடு என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. தமது தீர்மானம் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "சிங்கள மக்களின் விருப்பத்துடன் எமக்கான உரிமைகளை எம்மால் பெறமுடியாது என்பது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில், எமக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமிழர் பூர்வீக தாயகத்தில் தமிழ் தேசமாக, உலகின் எந்தவொரு நாடும் சுயநிர்ணய உரிமையின் பால் தாமைத் தாமே அள்வதுபோல, எம்மை நாமே ஆளும் நிலையினை உருவாக்குவதுதான்" என்று கூறினார். மல்லாகம் தீர்மானத்தின் இறுதிப்பகுதி இதனைத் தெளிவாக விளங்கப்படுத்துகிறது, "இன்று நடந்த தேசிய மாநாட்டின் பிரகாரம், தமிழர்கள் தமக்கான தனியான தேசத்தை அமைக்கும் அனைத்து இலக்கணங்களையும், தனியான நாட்டில் வாழும் உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தெரிவிப்பதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழர்களும் தமது பூர்வீக தாயகத்தில் தனியான தேசமாக வாழ்வதுதான்" இத்தீர்மானத்தினையடுத்து இளைஞர்கள் மகிழ்வுடன் காணப்பட்டனர். தமிழ் ஈழமே எங்கள் தாய்நாடு, தமிழ் ஈழமே எங்கள் ஒரே விருப்பு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆயுத அமைப்புக்கள் இந்தச் சுலோகங்களையே தமது தாரக மந்திரமாக வரிந்துகொண்டன. அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துசென்ற இளைஞர்கள், தமிழர் தாய்நாட்டை உருவாக்குவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் அறைகூவல் விடுத்தனர். அமிர்தலிங்கம் இயல்பாகவே உணர்வுபூர்வமானவர். இளைஞர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டினால் உந்தப்பட்ட அவர் பின்வருமாறு கூறினார், "எங்களின் இளைஞர்களுக்காக, இந்தத் தருணத்தில் நான் கூற விரும்புவது, எங்களால் வழங்கக் கூடியது இரத்தமும், வியர்வையும், கண்ணீரும்தான். இதனால் உங்கள் மீது பொலீஸாரின் தடியடியும், இராணுவத்தின் அராஜகத் தாக்குதல்களும், வழக்கின்றித் தடுத்துவைக்கப்படும் அட்டூழியங்களும் நிகழ்த்தப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்துநிறைந்த இந்தப் பாதையூடாகப் பயணித்து எமக்கான சுந்தத்திரத்தை நாம் அடைவோம்". "எமது தாய்நாட்டிற்கான விடுதலைக்காக எமது இரத்தத்தையும் , உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டோம்" என்று இளைஞர்கள் பதிலுக்கு ஆர்ப்பரித்தனர். ஆனால், வெறும் இரு மாத காலத்திற்குள் தமிழ்த் தலைவர்களும், தமிழ் இளைஞர் அமைப்பினை வழிநடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் அடியாட்களும் இளைஞர்களைக் கைவிட்டனர். அரசுக்கெதிரான எதிர்ப்பினைக் காட்டவேண்டிய அவசியத்தில் தவித்த தமிழர் ஐக்கிய முன்னணியினர், தபால் சட்டமான "உபயோகித்த முத்திரைகளைப் பாவிக்கப் படாது" என்பதனை மீறும் முகமாக பாவித்த முத்திரைகளையே தாம் பாவிக்கப்போவதாக அறிவித்தனர். காந்தி ஜயந்தி தினமான ஐப்பசி 2 ஆம் திகதியன்று ஆலயங்களில் சத்தியாக்கிரக நிகழ்வுகளை நடத்தப்போவதாகவும், 10,000 கடிதங்களை பாவித்த முத்திரைகளை மீண்டும் இணைத்து அனுப்பப்போவதாகவும் அறிவித்தனர். இவ்வறிவித்தலை எள்ளி நகையாடிய இளைஞர்கள், பாவிக்கப்பட்ட முத்திரையுடன் அனுப்பப்படும் கடிதங்களை தபால் ஊழியர்களே குப்பையினுள் எறிந்துவிடுவார்கள், உங்களின் எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போய்விடும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியப்டியே அந்த எதிர்ப்பு நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. தமிழ் இளைஞர் பேரவை 50 நாள் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தினை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்தது. பகல் வேளையில் உண்ணாவிரதமிருந்த உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரிக் கோஷமிட்டனர். இந்த சுசுழற்சிமுறை உண்ணாவிரத நிகழ்வினை பரிகசித்த சிவகுமாரன், இதனை ஒரு மோசடி நாடகம் என்று வர்ணித்தார். சத்தியாக்கிரகம் எனும் உயரிய செயற்பாடு தமிழ்த் தலைவர்களால் அரசியல் விபச்சாரமாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களில் இயங்கும் பல இளைஞர்கள் தமது மறைவிடங்களில் உண்ண உணவின்றி நாள்தோறும் பட்டினியை எதிர்கொண்டுவருவதாக அவர் கூறினார். தமிழர் ஐக்கிய முன்னணியினரும், தமிழ் இளைஞர் பேரவையும் கைதுசெய்யப்பட்ட இளைஞர் விவகாரத்தை தமது அரசியல் ஆதாயங்களுக்காகப் பாவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஐப்பசி மாதமளவில், தமிழர் ஐக்கிய முன்னணியினரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவிடாது தடுப்பதென்பது அரசைப் பொறுத்தவரையில் அவசியமானதாக உணரப்பட்டது. ஐப்பசி 11 அன்று, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் எதிர்க்கட்சியினரின் பேரணியொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்தது. இப்பேரணியில் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதி ஒருவரையும் அனுப்பிவைக்குமாறு அது கேட்டிருந்தது. எதிர்க்கட்சியினரின் இந்தப் பேரணியில் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கலந்துகொள்வதை சிறிமா விரும்பவில்லை. ஆகவே, அவர் தந்தை செல்வாவிற்கு சிநேகபூர்வமான கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில், காங்கேசந்துறை இடைத்தேர்தலினை தான் நடத்தாமைக்கான காரணம் பொலீஸாரின் அறிவுருத்தலேயன்றி வேறில்லை என்றும், தமிழர் ஐக்கிய முன்னணியினருடன் தான் புதிய பேச்சுக்களை ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐப்பசி 8 ஆம் திகதி அரசுடன் தமிழர் ஐக்கிய முன்னணி நடத்திய பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்குக் காரணம், தந்தை செல்வா முன்வைத்த 4 கோரிக்கைகளில் ஒன்றினை மட்டுமே செய்வதாக சிறிமா ஒத்துக்கொண்டதுதான். நீதிமன்ற மொழிப்பாவனைக்கான சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்க்க சிறிமா இணங்கியபோதும், ஏனைய மூன்று கோரிக்கைகளான தமிழ் மொழியினை அரச கரும மொழியாக யாப்பினுள் இணைப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு சுய அதிகாரத்தை வழங்குவது, அரச ஆதரவுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உடனே நிறுத்துவது ஆகியவை சிறிமாவினால் முற்றாக நிராகரிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைகளின் தோல்வி, 1973 ஆம் ஆண்டு, மார்கழி 2 ஆம் நாள் அன்று அரச நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாமை எனும் எதிர்ப்புப் போராட்டத்தினை நோக்கி தமிழர் ஐக்கிய முன்னணியினரைத் தள்ளியது. மேலும், கைதுசெய்யப்பட்டு, வழக்கின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கக் கோரும் போராட்டத்தினையும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கையிலெடுத்தனர். மார்கழி 31 இற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் விடுதலை செய்யப்படாதவிடத்து, சில தெரிவுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அது அரசுக்கு அறிவித்தது. "மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலீஸார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கைதுசெய்யவேண்டி ஏற்படும்" என்று அமிர்தலிங்கம் கூறியிருந்தார். பொலீஸார் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்கும்போது சரியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டி வந்தார். தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என்று பொலீஸாரை தலைமை வழக்கறிஞர் அறிவுருத்தியபோது, இந்த இளைஞர்களை தாம் தொடர்ந்தும் விசாரித்துவருவதாகவும், விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்றும் பொலீஸார் அறிவித்தனர். இந்த பொய்க்காரணங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததுடன், காசி ஆனந்தன் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பொலீஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அரசாங்கம் காசி ஆனந்தனை விடுதலை செய்தது. மீமாக இருந்த 42 பேரில் 25 இளைஞர்களை மார்கழி 29 வரையில் விடுதலை செய்திருந்தது.நீதியமைச்சராக இருந்த பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா, தந்தை செல்வாவிற்கு எழுதிய கடிதத்தில், மீதமிருக்கும் இளைஞர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் அல்லது அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று கூறிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய முன்னணியினர் தமது சட்டங்களை மீறும் ஆர்ப்பாட்டத்தினைப் பின்போட்டுவிட்டனர். ஆனால், தை 10 ஆம் திகதி தமிழ் மக்களை, குறிப்பாக இளைஞர்களை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கை ஒன்றினை சிறிமாவின் அரசு எடுத்திருந்தது.
-
தலைமறைவு வாழ்க்கை தங்கத்துரை, குட்டிமணி, பெரிய சோதி உட்பட சில உறுப்பினர்கள் பொலீஸாரிடமிருந்து ஒளிந்துகொள்ள பிரபாகரன் தொடர்ந்தும் தனது பெற்றோருடனேயே தங்கியிருந்தார். பங்குனி நடுப்பகுதியில், ஒரு நாள் அதிகாலை 3 மணிக்குப் பொலீஸார் பிரபாகரனின் பெற்றோரின் கதவினைத் தட்டும்போது அவர்கள் தேடிவந்திருப்பது தன்னையே என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் வீட்டின் பின்வழியால் இருளினுள் மறைந்து தலைமறைவானார். வீட்டின் முன் கதவைத் திறந்த பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் கதவின் முன்னால் பொலீஸார் நிற்பதைக் கண்டதும் அதிர்ந்துபோனார். பிரபாகரனின் தாயிடமும், அவரின் பின்னால் ஒளிந்துநின்ற பிரபாகரனின் இரு சகோதரிகளிடமும் பேசிய பொலீஸார் தாம் பிரபாகரனைக் கைதுசெய்யவே வந்திருப்பதாகக் கூறினார்கள். அவர்களின் விக்கித்துப் போய் நிற்க, பொலீஸார் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் துரித கதியில் தேட ஆரம்பித்தார்கள். ஆனால், பிரபாகரனை அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை. அங்கு வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், "தீவிரவாதியான உங்களின் தம்பி தப்பிவிட்டான், ஆனால் அவனை நான் நிச்சயம் விரைவில் கைதுசெய்வேன்" என்று அவரது சகோதரிகளைப் பார்த்து கூறிவிட்டுச் சென்றார். ஆனால், சிங்களப் பொலீஸாரினால் பிரபாகரனை ஒருபோதுமே கைதுசெய்ய முடியவில்லை. அவர்களைவிட அவர் எப்போதுமே இரு படிகள் முன்னிலையிலேயே இருந்துவந்தார். அவர்களின் நண்பர்கள் கூறும்போது, பொலீஸார் அவரைத் தேட ஆரம்பித்ததன் பின்னர் அவர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். பின்னாட்களில் ராமுக்குப் பேட்டியளித்த பிரபாகரனும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். "1973 ஆம் ஆண்டு நான் தலைமறைவு வாழ்க்கையினை ஆரம்பித்துவிட்டேன். தலைமறைவு வாழ்க்கையினை வாழ்வதென்பது மிகவும் சிக்கலானதொரு விடயம். ஆனால் நெடுங்காலமாக இதனைச் செய்யவேண்டியிருந்தது. நம் எல்லோருக்குமே அது ஒரு கடிணமான காலமாக இருந்தது. எம்மைச் சுற்றி ராணுவம் எப்போதுமே அக்கிரமங்களில் ஈடுபட்டுவந்த அக்காலத்தில் அவர்களின் வலையிலிருந்து தப்பி வருவது கடிணமானதாகவே இருந்தது". தங்கத்துரை குட்டிமணியுடன் இணைந்து பிரபாகரனும் தலைமறைவு வாழ்க்கைக்குள்ச் சென்றார். தனது மகன் இருக்கும் இடத்தை ஒருவாறு அறிந்துகொண்ட வேலுப்பிள்ளை அவரை வீடுதிரும்புமாறு மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டபோதும் அவர் வர மறுத்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். அவர் தனது தந்தையிடன் பின்வருமாறு கூறினார், "என்னால் உங்களுக்கோ அல்லது வீட்டில் எவருக்குமோ இனிமேல் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. நான் வீடுதிரும்பினால் உங்களுக்கும், வீட்டிலுள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் உருவாகும். என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வேண்டாம். என்னை எனது பாதையிலேயே போக விடுங்கள். எதிர்காலத்தில் என்னிடமிருந்து எதனையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்" என்று கூறினார். ஆனால், பொலீஸார் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவரைச் சுற்றி வலை இறுகத் தொடங்கியபோது அவர் குட்டிமணி, தங்கத்துரை, பெரியசோதி ஆகியோருடன் குட்டிமணியின் படகில் ஏறி தமிழ்நாட்டிற்குச் சென்றார். இலங்கைத் தமிழர்கள் அதிகம் பாவிக்கும் தமிழ்நாட்டின் வேதாரணியம் பகுதியில் அவர்கள் தரையிறங்கினார்கள். அங்கு சிலகாலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் சென்னைக்குச் சென்று தமக்கான அமைவிடம் ஒன்றினை உருவாக்கி தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அவர் நினைத்தார். குட்டிமணியும் தங்கத்துரையும் சேலத்திற்குச் சென்றுவிட்டனர். பிரபாகரனும் பெரியசோதியும் தாம் தங்கியிருந்த பகுதியில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பெரும்பாலும் தயிர்ச் சாதமும், கோயில் பிரசாதமுமே அவர்களின் உணவாக இருந்தது. பலநாட்கள் வெறும்வயிற்றுடனேயே அவர்கள் உறங்கியிருக்கிறார்கள். சென்னையில் ஜனார்த்தனின் உதவியுடன் சிறிய வீடொன்றினை கோடாம்பாக்கம் பகுதியில் அவர்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டனர். பிராபகரனைக் கண்டவுடனேயே ஜனார்த்தனுக்குப் பிடித்துப்போயிற்று. அதற்கான காரணத்தை அவரே பின்னர் விளக்கியிருந்தார், "அவர் மிகவும் இளையவராகவும், கூச்சசுபாவமுள்ளவராகமும் தெரிந்தார். உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தார். புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும், செயலில் இறங்கவேண்டும் என்கிற வேகமும் அவரிடம் இருந்தது. அவர் என்னிடம் கேட்ட பல கேள்விகளைக் கண்டு நான் வியந்துபோனேன். தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றி மிக ஆளமாக அவர் புரிந்துவைத்திருந்தார். அவரை பலமுறை இரவு உணவுகளுக்காக அழைத்துச் செல்வேன். அவருடன் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான விடயமாக இருந்தது. அவருக்கும் சுவையான உணவுகளை உண்பது பிடித்துப் போயிருந்தது". பிரபாகரனிடம் பணம் பெரிதாக இருக்கவில்லை. இருந்தவற்றையும் மிகவும் சிக்கனமாகவே அவர் பயன்படுத்தி வந்தார். பெரியசோதியே அவர்களுக்கான உணவினைத் தயாரிப்பார். பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மரக்கறிகளுடன் அவர்கள் சோற்றினை உட்கொண்டார்கள். அசைவ உணவுகளை விரும்பும் பிரபாகரன் சனிக்கிழமைகளில் கோழிக் கறியினை அவரே சமைப்பார். எப்போதும் செயலில் இறங்கவேண்டும் என்று விரும்பும் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்த செயலற்ற வாழ்வு களைப்பினைக் கொடுத்தது. அதனால் செயல்ப்பாடு மிக்க யாழ்ப்பாணத்திற்கே மீண்டும் திரும்பவேண்டும் என்று அவர் நினைத்தார். 1974 ஆம் ஆண்டு, தனது தோழரான செட்டி அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிவந்து சென்னையின் மைலாபூரில் தங்கியிருப்பதனை அறிந்தபோது அவரைச் சென்று சந்தித்தார் பிரபாகரன். 1973 ஆம் ஆண்டு செட்டியும், அவருடன் கண்ணாடி, அப்பையா மற்றும் சிவராஜா ஆகிய நால்வரும் அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பி வந்திருந்தார்கள். பிரபாகரனும் செட்டியும் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்ப நினைத்தபோது பெரியசோதி அதனை விரும்பவில்லை. செட்டியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என்று அவர் பிரபாகரனை எச்சரித்தார். தனது மைத்துனரான பிரபாகரனிடம் பேசிய பெரியசோதி, செட்டி நம்பத்தகுந்தவர் இல்லையென்றும், ஒரு குற்றவாளியைப்போல இப்போது செயற்பட்டுவருவதாகவும் கூறினார். ஆனால், பிரபாகரன் பெரியசோதி கூறியதைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. செட்டி ஒரு செயல்வீரன் என்று பெரியசோதியைப் பார்த்துக் கூறினார் பிரபாகரன், "நீங்கள் உங்கள் வாழ்க்கையினை சமைப்பதிலும், உண்பதிலும் உறங்குவதிலும் செலவழிக்கிறீர்கள். உங்களைப்போன்று எனது வாழ்க்கையினையும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனக்குச் செயற்பாடுகளே முக்கியம். நான் இளமையாக இருக்கும்போதே எனால் செய்யமுடிந்தவற்றைச் செய்ய நான் விரும்புகிறேன். செட்டியும் என்னைப்பொலவே செயற்பாடுகளை விரும்புகிறவன்" என்று கூறினார். செட்டியுடன் மீள ஒன்றிணைய பிரபாகரன் எடுத்த முடிவு பெரியசோதிக்கு கவலையளித்தது. அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் நடவடிக்கையினை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் முயன்றார். குட்டிமணியுடனும் தங்கத்துரையுடனும் பேசி பிரபாகரன் யாழ் திரும்புவதைத் தடுத்துவிட அவர் முயற்சித்தார். பின்னர் ஜனார்த்தனன் மூலம் பிரபாகரனுடன் பேசி அவர் நாடு திரும்புவதைத் தடுக்க முனைந்தார். பிரபாகரனுடனான தனது சம்பாஷணை குறித்துப் பின்னாட்களில் பேசிய ஜனார்த்தனன், பிரபாகரன் கேட்ட கேள்விக்கு தன்னிடம் பதில் இருக்கவில்லை என்று கூறினார், "செட்டியின் சமூகவிரோத செயற்பட்டுகள் குறித்து நான் அறிவேன். அவனுடன் சேர்வதால் எனது அடையாளத்தை நான் ஒருபோதும் இழந்துவிடப்போவதில்லை" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக ஜனார்த்தனன் கூறினார். வயதில் மிகவும் இளையவரான பிரபாகரன் தமது அறிவுரைகளை மீறி யாழ்ப்பாணம் செல்ல எத்தனிப்பதையும், தமது வட்டத்திற்குள் இல்லாத, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டியுடன் தோழமை பூணுவதையும் குட்டிமணியோ தங்கத்துரையோ விரும்பவில்லை. ஆனால், பிரபாகரனின் உணர்வுகளையும், செயலில் அவருக்கிருந்த நம்பிக்கையினையும் த் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார் ஜனார்த்தனன். 1974 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியபோது, யாழ்ப்பாண மக்கள் சிறிமாவின் செயற்பாடுகளினால் கடுமையான அதிருப்தியடைந்திருந்தனர். தமது சுயகெளரவத்தினைக் காத்திட வேண்டுமென்றால், தனியான நாட்டினை உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் நினக்கத் தொடங்கியிருந்தனர். இதற்கு தபால் அமைச்சராக இருந்த குமாரசூரியரின் அடாவடித்தனமும், கொழும்பிலிருந்த ரஸ்ஸியத் தூதரகத்தால் ஆட்டுவிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும் அமைப்பினரின் எழுத்துக்களும் சிறிமாவின் இனவாதச் செயற்பாடுகளும் அன்று காரணமாக இருந்தன. 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அதிருப்தியினைத் தணியவைக்க சிறிமா இருமுறை முயன்றார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இதனை அவர் செய்தார். இலங்கையின் பிரதான செய்திநிறுவனமான லேக் ஹவுஸ் பத்திரிக்கை ஸ்த்தாபனத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களில் ஒருவரான தொண்டைமான் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார். இதனால் கவலையடைந்த அரசாங்கத்திற்கு, தமிழர் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி நோக்கிச் சாய்வதைத் தடுக்கும் செயற்பாடுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வழிக்குக் கொண்டுவரப்பட்ட தலைவர்கள். 1973 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் திகதி நீதிமன்ற மொழிகள் சட்டத்தினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தமிழ் மொழி வடக்குக் கிழக்கில் அமைந்திருந்த நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக பாவிக்கக் கூடிய நிலை உருவாகியது. தமிழர்கள் இச்சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்ர்குமாறு கூறியபோதும், அரசு அதனை விடாப்பிடியாக மறுத்து நிராகரித்துவிட்டது. 1973 ஆம் ஆண்டு, வைகாசி 17 அன்று, தமிழ் இளைஞர் பேரவை அமைப்பினர் யாழ்ப்பாணம் சமஷ்ட்டிக் கட்சியின் பிரதான அலுவலகத்தின் முன்னால் அமர்ந்து, தமிழர் ஐக்கிய முன்னணி உடனடியாக தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை, தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு கூட்டம் ஒன்றினை நடத்தியது. கூட்டத்தில் பேசிய ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணியின் தலைவர் சுந்தரலிங்கம் தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முதன்மை நடவடிக்கைகளை தமிழர் ஐக்கிய முன்னணி முன்னெடுக்கவேண்டும் என்னும் வேண்டுகோளினை முன்வைத்தார். அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு சபையினை உருவாக்கி, தனிநாட்டிற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தனிநாட்டிற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு மறுத்துவிட்ட சமஷ்ட்டிக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும், எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு ஒரு அலோசனைச் சபையினை உருவாக்கலாம் என்று கூறிவிட்டன. ஆனால், "தமிழரின் பாரம்பரிய தாயகத்தில், தம்மைத் தாமே ஆழும் ஈழத்தமிழ் தேசம்" ஒன்றினை உருவாக்க தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு அரசியல் அமைப்புச் சபை ஒன்றினை உருவாக்கத் தவறியமைக்காக இளைஞர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். சுய ஆட்சி என்பது சமஷ்ட்டி முறையிலான ஆட்சியே என்று அவர்கள் வாதாடினர். தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாப்பதும், அதனால் வரும் அதிகாரத்தையும், சலுகைகளையும் அனுபவிப்பதுமே அவர்களின் உண்மையான நோக்கம் என்று குற்றஞ்சாட்டியதோடு, இதனாலேயே தமிழ் மக்களின் விருப்பங்களையும், அவர்களது உணர்வுகளையும் இத்தலைவர்கள் பார்க்க மறுத்துவருவதாகவும் கூறினர்.
-
புதிய தமிழ்ப் புலிகளின் உதயம் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு தலைவனாக வரிந்துகொண்டு பிரபாகரன் களமிறங்கியபோது அவருக்கு வயது 17 மட்டுமே ஆகியிருந்தது. இவ்வயதிலேயே தனது முதலாவது வெடிகுண்டுத் தாக்குதலை ராணுவ காவல்த்துறை களியாட்ட நிகழ்வின்போது துரையப்பா விளையாட்டரங்கில் அவர் நிகழ்த்தினார். தன்னுடன் நின்று தனது இலட்சியத்தில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய வெகுசிலரான செட்டி, சிவராஜா, ரமேஷ், கண்ணாடி, சரவணன், கலபதி மற்றும் கிருபாகரன் ஆகிய இளைஞர்களோடு தனது பயணத்தை அவர் ஆரம்பித்தார். தனது இயக்கத்திற்கு புதிய தமிழ்ப் புலிகள் என்று அவர் பெயர் சூட்டினார். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ்ப் பழமைவாதிகளுக்கும் எதிர்வினையாற்றவே தனது அமைப்பை அவர் உருவாக்கினார். குட்டிமணியும் தங்கத்துரையும் தனக்கு 15 வயது ஆகியிருந்த வேளையிலேயே அவர் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினருடன் சேர்ந்தார். தனது உறுதியாலும், விடாமுயற்சியினாலும், உத்வேகத்தாலும், இலட்சியம் மீதான தீராத பற்றினாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாலும் அமைப்பினுள் படிப்படியாக உயர்ந்து தலைமை ஏற்கும் நிலைக்கு வந்தார் பிரபாகரன். துரையாப்பா விளையாட்டரங்கு மீதான பிரபாகரனின் பெற்றொல்க் குண்டுத் தாக்குதலில் செட்டி, பெரிய சோதி, கண்ணாடி ஆகியோரும் அவருடன் இருந்தனர். புதிய தமிழ்ப் புலிகளின் உத்தியோகபூர்வ தொடக்கநாள் எதுவென்று சரியாகத் தெரியாவிட்டாலும்கூட, அவ்வமைப்பு போராட்டக் குணம்கொண்ட இளைஞர்கள் அமைப்பாக பரிணாம வளர்ச்சிபெற்றபோது அமைக்கப்பட்டதாக துரையப்பா அரங்குமீதான தாக்குதலில் ஈடுபட்ட சிலரின்மூலம் நான் அறிந்துகொண்டேன். எது எவ்வாறிருப்பினும், துரையப்பா அரங்குமீதான தாக்குதலே புதிய தமிழ்ப் புலிகளின் முதலவாது தாக்குதல் என்று பதிவாகியிருக்கிறது. சிலர், அல்பிரட் துரையப்பா மீது 1975 ஆம் ஆண்டு, ஆடி 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே அவ்வமைப்பின் முதலவாது தாக்குதல் என்று கூறுகிறார்கள். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 25 ஆம் திகது தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கையினை அடிப்படையாக வைத்தே துரையப்பா மீதான தாக்குதல் புலிகளின் முதலாவது வன்முறைச் சம்பவம் என்று இவர்கள் கூறுகிறார்கள். உமா மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த மத்திய குழுவினரின் கடிதத்தில் துரையப்பாவைக் கொன்றதே முக்கிய சம்பவமாக கருதப்பட்டதால், இதனையே முதலாவது வன்முறைச் சம்பவமாகக் கருதுவோரும் இருக்கிறார்கள். இக்கடிதம் தொடர்பான இன்னொரு சுவாரசியமான கதையும் இருக்கிறது, அதனை பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். துரையப்பா அரங்குமீதான தாக்குதலின் பின்னர் தமிழ் மாணவர் அமைப்பு மீதான பொலீஸாரின் தீவிர கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், இத்தாக்குதலின் பின்னால் இருந்தது பிரபாகரன் தான் என்று பொலீஸார் அறிந்துகொள்வதற்குப் பல மாதங்கள் ஆகின. ஏனென்றால், புதிய தமிழ்ப் புலிகளின் உருவாக்கத்தில் பிரபாகரன் ஈடுபட்டிருந்ததனால், அவ்வமைப்புப் பற்றி பொலீஸார் மட்டுமல்லாமல், தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர்களே அதிகம் அறியாமலேயே இருந்துவிட்டனர். தனது அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பிரபாகரன் ரகசியம் பேணிவந்ததே இதற்குக் காரணமாகும். பிரபாகரனின் அமைப்புப்பற்றி அதிகம் அறிந்திராமையினாலேயே பொலீஸார் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினரே துரையப்பா அரங்கு மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அவர்களைத் தேடி வந்தனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பினை உருவாக்குவதில் பிரபாகரனும் அவரது தோழர்களும் பெருமளவு நேரத்தைச் செலவிட்டனர். சுபாஸ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர் மற்றும் தனது தகப்பனார் ஆகியோரின் மூலம் தான் கற்றுக்கொண்ட முன்மாதிரியான ஒழுக்கங்கங்களை தனது அமைப்பினுள்ளும் ஏற்படுத்தினார் பிரபாகரன். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை முற்றாகத் தடைசெய்திருந்த பிரபாகரன், உறுப்பினர்கள் அனைவரும் இலட்சியமான தமிழ் மக்களின் விடிவிற்காக தமது வாழ்வையே அர்ப்பணிக்கவேண்டும் என்ற இயக்க விதியினை ஏற்படுத்தினார். தென்னிந்தியாவின் மிகப்பெரும் அரசர்களாக விளங்கிய சோழர்களின் இலட்சினையான புலியையே தமது இலட்சினையாகவும் அவர்கள் வரிந்துகொண்டார்கள். புலியின் சிரத்தையே தனது இயக்கத்தின் கொடியாகவும் பிரபாகரன் தெரிவுசெய்தார். அந்தக் காலத்தில் தனது பெற்றோருடன் வல்வெட்டித்துறையிலேயே பிரபாகரன் வாழ்ந்து வந்தார். இடைக்கிடையே வீட்டிலிருந்து காணாமல்ப் போன பிரபாகரன் அந்த நேரத்திலேயே தனது ரகசிய அமைப்பினை உருவாகி வந்தார். அவரது செயற்பாடுகள் குறித்து அவரது பெற்றோர் எதனையும் அறிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர் பேர்வையினரைத் தேடி பொலீஸார் வலைவிரித்து பிரபாகரனின் பெற்றோரின் வீட்டுக் கதவினையும் பங்குனி மாதம் 1973 ஆம் ஆண்டு தட்டியபோதே அவர்களுக்கு தமது மகனும் புரட்சிகரச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. தேசிய பாராளுமன்றத்தின் பங்குபற்றுவது என்று தமிழர் ஐக்கிய முன்னணியினர் எடுத்த முடிவு, இளைஞர்களுடன் நேரடியான பிணக்கிற்கு இட்டுச் சென்றது. தமிழ் மாணவர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், "உங்களின் முடிவின் பின்னாலுள்ள நியாத்தன்மையினை விளக்குங்கள் பார்க்கலாம். புதிய அரசியலமைப்பு என்பது தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனம் என்று எங்களிடம் கூறிவிட்டு, இன்று உங்களின் உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அதே அரசியல் யாப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். எங்களை அடிமைகளாக்குவதற்காக உருவாக்கப்பட்ட யாப்பிற்கு நீங்களே அனுசரணை வழங்குகிறீர்கள். தமிழர்களை சிங்களவருக்கு அடிமைகளாக்கும் கைங்கரியத்திற்கு உங்களின் கட்சியும் துணைபோகின்றதல்லவா?" என்று தமிழ்த் தலைவர்களைக் கேள்விகேட்டிருநெதது. ஆனால், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இளைஞர்களின் கேள்விகளுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட ஒற்றைப்பதில், "பாராளுமன்றத்தில் அமர்வதன்மூலம் அரசியல் யாப்பிற்கெதிராகப் பேசமுடியும், அதன்மூலம் தமிழர் நலன்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதனைப் பார்க்கலாம்" என்பதாகவே இருந்தது. ஆனால், இப்பதிலை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இளைஞர்கள் நிராகரித்தபோது, அதற்குப் பதிலளித்த தலைவர்கள், "எங்கள் அரசியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அனுபவம் போதாது" என்று கூறினர். ஆனால், அரசினால் வழங்கப்படும் சுகபோகங்களுக்கும் சலுகைகளுக்கும் மட்டுமே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கிறார்கள் என்பதே இளைஞர்களின் வாதமாக இருந்தது. இளைஞர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், அரச பிரச்சாரத்தினை எதிர்கொள்ளவும் ஒரு சத்தியாக்கிரக நடவடிக்கையினைத் திட்டமிட்டார் தந்தை செல்வா. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான புரட்டாதி 2 ஆம் திகதியன்று இழக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க சத்தியாக்கிரக போராட்டமொன்றினை அவர் ஏற்பாடு செய்தார். தமிழ் இளைஞர்களின் கொதிநிலையினை ஆற்றுவதற்கு யாழ்ப்பாணத்து அரச இலட்சினையான நந்திக்கொடியினை சத்தியாக்கிரகத்தில் ஏற்றிய தமிழர் ஐக்கிய முன்னனியினர், புதிய தமிழ்த் தேசத்தின் உதயத்தினை உதயசூரிய கொடியினை ஏற்றுவதன்மூலம் குறியீடாகக் காட்ட முயன்றனர். இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வில் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். மேலும், இதே சத்தியாக்கிரக நிகழ்வில் பேசிய தந்தை செல்வா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாகவும், அதற்கான காரணத்தை மறுநாள் பாராளுமன்றத்திலேயே தான் அறிவிக்கப்போவதாகவும் கூறினார். தனது ராஜினாமாவின் மூலம் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உலகிற்குக் காட்ட முடியும் என்று தான் கருதுவதாகவும் கூறினார். மறுநாள், ஐப்பசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அறிவித்த தந்தை செல்வா தமிழ் மக்களின் மனோநிலையினை அறிந்துகொள்ள விரும்பினால் தனது தொகுதிக்கான இடைத்தேர்தலினை நடத்தி அறிந்துகொள்ளுங்கள் என்றும் சவால் விட்டார். ஆனால், தந்தை செல்வாவின் சவாலினை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசாங்கம், இடைத்தேர்தலினையும் தொடர்ச்சியாக பிற்போட்டுவந்தது. தமிழ் மாணவர் அமைப்பு எனும் இளைஞர் அமைப்பு தனது கட்டுப்பாட்டினை விட்டுச் சென்றுவிட்டதனையும், அவ்வமைப்பின் தலைவர்களைப் பொலீஸார் தொடர்ச்சியாகக் கைதுசெய்துவந்ததையும் அவதானித்த அமிர்தலிங்கம் 1973 ஆம் ஆண்டு புதியதொரு இளைஞர் அமைப்பொன்றினை ஆரம்பித்து அதற்கு தமிழ் இளைஞர் அமைப்பு என்று பெயரிட்டார். இந்த புதிய அமைப்பில் சுமார் 40 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள் பின்னாட்களில் ஆயுத அமைப்பின் தலைவர்களாக மாறினார்கள். வேறுவேறான அரசியல்ப் பாதைகளில் பயணித்த பல இளைஞர்களை இதன்மூலம் ஒருகுடையின் கீழ் கொண்டுவர அமிரால் முடிந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதியாக இந்த இளைஞர் பேரவை அமையாவிட்டாலும்கூட, தமிழர் ஐக்கிய முன்னணியின் தீவிர ஆதரவாளர்களான மாவை சேனாதிராஜா போன்றவர்கள் இந்த இளைஞர் அமைப்பை தலைமைதாங்குவதற்கு நியமிக்கப்பட்டார்கள். அமிர்தலிங்கத்திற்கு விரும்பிய விடயங்களை இந்த இளைஞர் பேரவை செய்ய ஆரம்பித்தது என்று இவ்வமைப்பின் இடதுசாரிச் சிந்தனையுள்ள சிலர் விசனப்பட ஆரம்பித்திருந்தனர்.இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த பாக்கியநாதன் ராஜரட்ணம் இவ்வமைப்பின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகையில், "அமிர்தலிங்கம் எம்மிடம் சொல்பவற்றைச் செய்வதே எமது ஒரே வேலையாக அப்போது இருந்தது". என்று கூறினார். தை 14 ஆன்று உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையும் பொலீஸாரினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட மறுநாளான தை 15 ஆம் திகதி உறுப்பினர்களான ஞானசேகரமும் ஆசீர்வாதம் தாசனும் கைதுசெய்யப்பட்டார்கள். தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் பொன்னுத்துரை சத்தியசீலன் மாசி 20 நாளன்று பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். பொலீஸாரின் கடுமையான சித்திரவதைகளின்பொழுது சத்தியசீலன் இன்னும் பல உறுப்பினர்களின் விடயங்களைக் கூறியதாக வதந்திகள் உலாவின. இன்றுவரை இதனை பல ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்கள் நம்பிவருகின்றனர். தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பான பல தகவல்களை சத்தியசீலன் அன்று பொலீஸாருக்கு வழங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தமிழ் இளைஞர் பேரவையின் பல உறுப்பினர்களை பொலீஸார் பங்குனி மாதத்தில் கைதுசெய்தனர். சோமசுந்தரம் சேனாதிராஜா, மாவை, ஆனந்தப்பூபதி, மற்றும் சிவராமலிங்கம் சந்திரக்குமார் ஆகியோர் பங்குனி 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட, சுந்தரம்பிள்ளை சபாரட்ணம் 10 ஆம் திகதியும், திஸ்ஸவீரசிங்கம் 16 ஆம் திகதியும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையடுத்து அப்பாத்துரை நித்தியானந்தன், சிவராமலிங்கம் சூரியக்குமார் உள்ளிட்ட இன்னும் சில இளைஞர்களை பொலீஸார் பின்னாட்களில் கைதுசெய்திருந்தனர்.
-
பின்னடித்த தமிழ் தலைவர்கள் சிறிமாவோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமிழ் இளைஞர்களின் வன்முறையின் பின்னாலிருந்த அரசியலினப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் அனைவருமே இவை சாதாரண வன்முறைகள்தான் என்று புறந்தள்ளிவிட்டிருந்தனர். தனது பொலீஸார் இந்த வன்முறையினை மிக இலகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சிறிமா நம்பியிருக்க, தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமது தளபதியான அமிர்தலிங்கம் இந்த வன்முறைகளை ஏவும் இளைஞர்களை இலகுவாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே நம்பினர். ஏனென்றால், ஒருமுறை அமிர்தலிங்கமே ஏனைய தமிழ் அரசியல்த் தலிவர்களிடம், "என்னால் அவர்களை இலகுவாகச் சமாளிக்க முடியும்" என்று கூறியிருந்தார். குடியரசு தினத்திற்கு 4 தினங்களுக்கு முன்னதாகவே காவல்த்துறை இளைஞர் தலைவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் அமைப்பினரின் ஸ்த்தாபக உறுப்பினரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அன்று கைதுசெய்யப்பட்டார். ஆனி 9 ஆம் திகதி சிவாநந்தனும் சிவஜெயமும் கைதுசெய்யப்பட்டார்கள். மறுநாள் நமசிவாயம் ஆனந்தவிநாயகம் ஆனி 10 திகதியும், காசி ஆனந்தன் ஆனி 15 திகதியும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மயில்வாகனம் ராஜசூரியர் 30 திகதியும் சின்னையா குவேந்திரராஜா ஆடி 9 அன்றும், அமரசிங்கம் ஆடி 12 ஆம் திகதியும் செல்லையா தனபாலசிங்கம் ஆகிய செட்டி, பொன்னுத்துரை சிவகுமாரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை தமிழர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பரவலான ஆர்ப்பாட்டங்களும் இதனையடுத்து இடம்பெறத் தொடங்கின. இளைஞர்களின் மனோநிலையை சரியாகப் புரிந்துகொள்ள அமிர்தலிங்கம் தவறிவிட்டிருந்தார். இது 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணத்தை அவர் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தமிழர் முன்னணியினரை பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறு இளைஞர்கள் கோரியிருந்தனர். அவர்களது வாதம் மிகவும் எளிமையானது. "புதிய அரசியலமைப்பினை முற்றாகப் புறக்கணித்து, அதற்கெதிராக ஆறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து, யாப்பு பிரகடணப்படுத்தப்பட்ட நாளினை கரிநாளாக அறிவித்து, மக்களை அந்த யாப்பினை எரிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே, அதே அரசிய யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று அவர்கள் தலைவர்களிடம் கேட்டார்கள். யாழ்ப்பாணத்தின் பழைய பூங்கா தெருவில் தமிழ் அரசியல்த் தலைவர்களின் இந்த இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டது, அதில் "ஏமாற்றுவதே உங்களின் புதிய அரசியல் விளையாட்டு" என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞர்களின் எதிர்ப்பும், போராட்டமும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் பாராளுமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணம் செய்வதை தடுக்கவில்லை. ஆடி 4 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தோன்றிய அவர்கள் பின்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். " இலங்கைக் குடியரசுக்கு எனது பூரண விசுவாசத்தையும், தோழமையினையும் காட்டுவேன் என்றும், என்னாலான அனைத்து வழிகளிலும் நேர்மையுடன் இலங்கைக் குடியரசுக்காக நம்பிக்கையுடன் எனக்கு தரப்பட்ட பணியை செவ்வணே செய்வேன் என்றும் அமிர்தலிங்கம் ஆகிய நான் அரசியல் அமைப்பின்படியும், இந்த நாட்டின் சட்டத்தின்படியும் சத்தியம் செய்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்தார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை சர்வதேசத்திற்குக் காண்பித்த அரசாங்கம், தமிழர்கள் புதிய அரசியலமைப்பினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பறைசாற்றியது. இது இளைஞர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியது. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம், இந்த அரசியல் யாப்பிற்கு சட்டரீதியான அந்தஸ்த்தினை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிவிட்டனர் என்று சாடிய இளைஞர்கள், பாராளுமன்றத்தினைப் புறக்கணிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டின் யாப்பு, சமாதான, ஜனநாயக வழிகளில் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருந்த அனைத்து வழிகளையும் முற்றாக அடைத்து விட்டதனால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஒரே வழி தனிநாடுதான் என்று கூறினர். தனிநாட்டினை அடைவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் ஆயுதவழிப் போராட்டமே என்று உறுதியாகக் கூறிய இளைஞர்கள், தமிழ் அரசியல்த் தலைவர்களை உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாரிய விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோரினர். சிறிமாவின் செயற்பாடுகளும் இளைஞர்களின் கருத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. தந்தை செல்வாவினால் தனக்கு எழுதப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை தொடர்பான கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பியிருக்கவில்லை. தந்தை செல்வா தனது முன்னைய கடிதம் குறித்து மீண்டும் அவரை வினவியிருந்தார். ஆனால், அவரது இரு கடிதங்களும் கிடைக்கப்பட்டது என்கிற பதில் மட்டுமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணி கேட்டுக்கொண்ட ஆறு அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை மாற்றும் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. ஆகவே, தந்தை செல்வாவின் முதலாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல புரட்டாதி 30 இற்குள் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவிடத்து, தமிழரின் சுதந்திரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் உடனடியாக வன்முறையற்ற போராட்டங்களை முடுக்கிவிடவேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், தமிழத் தலைவர்களிடம் அதற்கான துணிவு இருக்கவில்லை. இளைஞர்களோ தலைவர்கள் கூறியபடி செயற்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றனர். புரட்டாதி 17 ஆம் திகதி, துரையாப்பா விளையாட்டரங்கில் நடந்துகொண்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் 17 வயதே நிரம்பிய பிரபாகரன் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டார். இத்தாக்குதல் தமிழ் இளைஞர்களை காவல்த்துறை கைதுசெய்வதைக் கண்டித்தும், அதற்கு மேலதிகமாக அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவுமே இதனை அவர் செய்திருந்தார். இந்த களியாட்ட நிகழ்வினை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், ராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் சேவையினைப் பாராட்டியே இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையாகும். ஆனால், எவருக்குமே இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. மார்கழி 20 ஆம் திகதி உடுவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வினோதனின் வீட்டின்மேல் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினர் கைய்யெறிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களத் தேடி பொலீஸார் நடத்திய கடுமையான கைது நடவடிக்கைகளையடுத்து வன்முறைகள் வெகுவாகக் குறையத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது தப்பியோடி தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியுமிருந்தார்கள். சுமார் 2 வருடங்களும் 7 மாதங்களும் மிகவும் அமைதியாகவே கழிந்துகொண்டிருந்தபொழுது மிகவும் குறிப்பிடத் தக்க வன்முறையாக 1975 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி முன்னாள் யாழ்நகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை நடந்தேறியது.
-
வன்முறையின் விதைகள் இலங்கையின் குடியரசு தினம் தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகப் பார்க்கப்பட்டது. முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அறுத்தெறிந்த இளைஞர்கள் யாழ்க்குடாநாடு முழுவதும் மின்னிழப்பை உருவாக்கினார்கள். ஆகவே, சிங்கள அரசின் குடியரசு நிகழ்வுகள் யாழ்ப்பாணச் செயலகத்தினுள்ளும், பொலீஸ் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்களுக்குள்ளும் மட்டுமே நடைபெற்றன. குடியரசு தின நிகழ்வுகளிருந்து, சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தனர். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஆங்காங்கே வன்செயல்கள் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டதுடன், அரச கட்டிடங்கள் மீது கல்விச்சும் இடம்பெற்றது. கறுப்புக்கொடிகள் தமிழர் பிரதேசங்களில் வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் மரங்கள் என்று பரவலாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. காலைவேளையில் யாழ்நகரில் ரோந்துபுரிந்த காவல்த்துறை நகரில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளைக் கிழித்தெறிந்தது. 6 நாட்களுக்குப் பின், வைகாசி 28 ஆம் திகதி இலங்கை சம சமாஜக் கட்சியின் ஆதரவாளரான சிவசோதியின் வீட்டின்மேல் இளைஞர்கள் பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தாக்கினார்கள், ஆனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனி 1 ஆம் திகதி, சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் ஏ. விஸ்வநாதன் வீட்டின்மீது எரிகுண்டுகள் வீசப்பட்டன. சிங்களவர்களுக்குச் சார்பாகவும், தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தும் அரசியல் யாப்பினை உருவாக்கிய சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கொல்வி ஆர் டி சில்வாவிற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே அவரது கட்சி ஆதரவாளர்கள்மீது இத்தாக்குதல் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதே கொல்வின் சில காலங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான சம உரிமை கேட்டுப் வாதிட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன்பின்னர், இந்த இனவாத யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. 1972 இல் நான்கு சிறிய ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தன. தங்கத்துரை - குட்டிமணி தலைமையிலான அமைப்பு தமது இலக்காக சி அருளம்பலத்தை தெரிவுசெய்தனர். அவரது குட்டையான உடல் அமைப்பிற்காக "சின்னன்" என்றழைக்கப்பட்ட அருளம்பலம் கொழும்பிலேயே வசித்து வந்ததால், குட்டிமணி - தங்கதுரை அமைப்பினரால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகவே, அருளம்பலத்தின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராம சபைத் தலைவரும், தீவிர சுதந்திரக் கட்சி ஆதரவாளருமான வி. குமாரகுலசிங்கத்தின் மீது தாக்குவதென்று முடிவெடுத்தார்கள். இவர் இன்னொரு அரச ஆதரவு அமைச்சர் குமாரசூரியருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குமாரசூரியர், குமாரகுலசிங்கம் ஊடாகவே அருளம்பலத்தை தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி அரசுடன் சேரும்படி ஊக்குவித்து வந்தார் என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. அரசுடன் அருளம்பலம் சேர்ந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்களாலும், தமிழ் மக்களாலும் துரோகியென்று அழைக்கப்பட்டு வந்தார். அரசியலமைப்பு பிரகடணப்படுத்தப்பட்டு 13 ஆவது நாளான ஆனி 4 ஆம் திகதி கோப்பாய்ச் சந்திக்குச் சென்ற குட்டிமணி, செட்டி மற்றும் சிறி சபாரட்ணம் ஆகியோர் உலகநாதனிடம் சென்று தமக்குச் சவாரி ஒன்று தேவையாக இருப்பதாகக் கூறி, அவரை குமாரகுலசிங்கத்தின் வீட்டிற்குத் தம்மை அழைத்துச் செல்லுமாறு கோரினார்கள். கார் குமாரகுலசிங்கத்தின் வீட்டினை அடைந்ததும், தம்முடன் கொண்டுசென்ற கைத்துப்பாக்கியினால் குமாரகுலசிங்கத்தின்மீது சுட்டுவிட்டு மீண்டும் காரிற்குள் ஓடிவந்தனர். குமாரகுலசிங்கத்தின் காலில் குண்டடி பட்டிருந்தது, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. காரினை நீர்வேலி நோக்கி ஓட்டிச் சென்ற குட்டிமணி, ஆளரவம் இல்லாத பகுதியொன்றில் காரினை நிறுத்திவிட்டு உலகநாதனைச் சுட்டுக் கொன்றார்கள். அருகிலேயே உலகநாதனின் காரும் எரியூட்டப்பட்டது. குட்டிமணி குமாரகுலசிங்கத்தையே கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது சாரதி உலகநாதனையே அவர்களால் கொல்ல முடிந்தது. அதே நாள் மாலை, சுதந்திரக் கட்சி ஆதரவாளரான சுந்தரதாஸின் வீட்டின்மீதும் குண்டெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சிவகுமாரனினால் 1970 இல் சோமவீர சந்திரசிறி மீதும், 1971 இல் அல்பிரட் துரையப்பா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் குட்டிமணியினால் நடத்தப்பட்ட மூன்று குண்டெறி தாக்குதல்கள் மற்றும் உலகநாதனின் கொலை ஆகியன சமாதானத்தை விரும்பும், ஒழுக்கமான யாழ்சமூகத்தை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனால், இத்தாக்குதல்கள் இன்னும் இரு ஆயுத அமைப்புக்களை தாக்குதல்களினை மேற்கொள்ள உந்தியிருந்தது. அதில் ஒன்று பிரபாகரனுடையது மற்றையது தமிழ் மாணவர் ஒன்றியத்தினுடையது. தங்கத்துரை - குட்டிமணி அமைப்பினராலோ அல்லது சிவகுமாரனின் அமைப்பினராலோ தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் சத்தியசீலன் உடனடியாகச் செயற்பட்டு அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வட்டுக்கோட்டை தியாகராஜாவைக் கொல்வதற்கு திஸ்ஸவீரசிங்கத்தையும், ஜீவன் எனப்படும் ஜீவராஜாவையும் அனுப்பிவைத்தார். அப்போது பம்பலப்பிட்டியவில் தியாகராஜா வாழ்ந்துவந்தார். ஆனி மாதம் 7 ஆம் திகதி காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற தாக்குதல் அணியினர், அவரது வீட்டின் கதவைத் தட்ட, தியாகராஜவும் கதவைத் திறந்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருக்கும் பத்திரிக்கை ஒன்றிலிருந்து அவரைப் பேட்டியெடுக்கத் தாம் வந்திருப்பதாக திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் அவரிடம் தெரிவிக்க, "என்னை எந்தப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று குமாரசூரியர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்" என்று கூறிக்கொண்டே அவர்களை அமரச் சொன்னார் தியாகராஜா. திஸ்ஸவீரசிங்கம் அமர விரும்பவில்லை. அவர் தியாகாராஜின் அருகிலேயே நின்ருகொண்டிருந்தார். ஜீவன் கதவின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தார். தியாகராஜா காரைநகர் இந்துக் கல்லூரியின் அனுபவம் மிக்க அதிபர். தன்னிடம் வந்திருந்த இரு விருந்தாளிகளினதும் உடல்மொழி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜீவன் தனது காற்சட்டை வாரிற்குள் இருக்கமாகச் செருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை வெளியே உறுவி எடுத்தார், பதற்றத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. முன்னர் துப்பாக்கியால் சுட்டுப் பழக்கமில்லாதவர், தான் கொண்டுவந்த துப்பாக்கிச் சுடுமா என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. குறிபார்ப்பதுகூட அவ்ருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் செய்யப்பட்ட அத்துப்பாக்கியில் அவர் அதிகம் பயிற்சிகூடப் பெற்றிருக்கவில்லை. "சுடடா" என்று ஜீவனைப் பார்த்து பொறுமையிழந்து கத்தினார் திஸ்ஸவீரசிங்கம். "திஸ்ஸா" என்று கத்திய ஜீவன் அவரை அப்பால் செல்லுமாறு கூறிவிட்டு கதவை நோக்கி ஓடினார் . சுதாரித்துக்கொண்ட தியாகராஜா, சடுதியாகக் குனிந்து, தரையிலிருந்த விரிப்பை வேகமா இழுத்தார். நிலவிரிப்பில் நின்றுகொண்டு சுட எத்தனித்த ஜீவன் நிலை தடுமாறி விழ, சன்னங்கள் சுவரில் பட்டுத் தெறிக்க தியாகராஜா உயிர் தப்பினார். திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் உடனேயே அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள். அவர்களின் கொலைமுயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துவந்த பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அது ஒரு மிகத் தெளிவான செய்தியைக் கொடுத்திருந்தது.
-
தமது முடிவில் உறுதியான இளைஞர்கள் அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது. இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது. அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர். அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக 4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது, 1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். 3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். 4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும். சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர். " இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர். இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள் இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர். கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. க வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர். முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர். தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார். செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர் சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார். சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது, 1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது. 2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது. 3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது. 4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது. அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன, 1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது. 3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். 4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். 5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். 6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும். இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு, 1. சி. அருளம்பலம் - நல்லூர் 2. ஏ. தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்) 3. சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்) 4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர் 5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் - நியமிக்கப்பட்டவர் புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர். அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".
-
மக்கள் விடுதலை முன்னணியின் கலகம் சித்திரை ஐந்தாம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தாக்குதல்களை மொனராகலைப் பகுதியிலும், வெல்லவாயாப் பகுதியிலும் ஆரம்பித்தனர். மாலையே அரம்பிக்க திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், தவறான தொடர்பாடலினால் முன்னரேயே அரம்பித்து விட்டிருந்தது. சித்திரை 2 ஆம் திகதி வித்யோதய சங்கராமய எனும் பெளத்த விகாரையில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் நாடுதழுவிய ரீதியில் தமது தாக்குதல்களை சித்திரை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதென்று முடிவெடுத்திருந்தார்கள். சங்கேத மொழியில் அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் "ம.வி.மு அப்புஹாமி இறந்துவிட்டார், நல்லடக்கம் 5" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சமிக்ஞையாக அரச வானொலியில் "நீல கொப்பேயா" எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொனராகலையிலும், வெல்லவாயாவிலும் ஆயத்தமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறிமாவின் அரசு நாட்டின் ஏனைய பொலீஸ் ராணுவ முகாம்களை உஷார் நிலைக்குக் கொண்டுவந்தது. தாக்குதலை எதிர்பார்த்து பொலீஸாரும் ஆயத்தத்துடன் இருந்தனர். தாக்குதலை முறியடித்து, முன்னேறும் முயற்சிகளையும் பொலீஸார் மேற்கொண்டனர். தமது தவற்றினை உணர்ந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு, தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. சுமார் 25 - 30 வரையான இளைஞர்கள், பொலீஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பெற்றொல்க் குண்டுகளையும், கையெறிகுண்டுகளையும் பாவித்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நாடு முழுவதுமிருந்த 273 பொலீஸ் நிலையங்களில் 93 பொலீஸ் நிலையங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பலவீனமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் நிலையங்களை அரசாங்கமே மீளப்பெற்றுக்கொண்டது. சிங்களக் கலகக்காரர்கள் மிகவும் பலவீனமான ஆயுதங்களை வைத்திருந்தனர், அவர்களில் எவருக்குமே தரமான போர்ப்பயிற்சிகள் கிடைத்திருக்கவில்லை, அவர்களைச் சரியான திட்டத்தில் வழிநடத்தத்தன்னும் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களின் ஆரம்ப வெற்றிகளுக்கான ஒரே காரணம் பொலிஸார் இத்தாக்குதல் பற்றி அறிந்திருக்காமைதான். ஆனால், ஆரம்பகட்டத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டவுடன், தன்னை மீள ஒருங்கமைத்த அரசகாவல்த்துறை கடுமையான எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டது. ராணுவமும் துணைக்கு அழைக்கப்பட்டதுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவி கோரப்பட்டது. பல நாடுகள் உதவிசெய்ய, இந்தியாவும் தன்பங்கிற்கு உலங்கு வானூர்திகளையும், வானிலிருந்து குதிக்கும் தாக்குதல் ராணுவக் குழுக்களையும் உடனடியாக அனுப்பிவைத்தது. http://telo.org/telooldnews/wp-content/uploads/2014/11/Premawathie-Manamperi.jpg கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவம் சுமார் 3 வாரங்களில் கலகக்காரரின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. மேலும், ஆண்டின் இறுதியில் சுமார் 18,000 கலகக்காரரும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரச தகவல்களின்படி சுமார் 5,000 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், குறைந்தது 25,000 சிங்கள இளைஞர்கள் இதன்போது பலியானதை அரசு உத்தியோகபூர்வமற்ற வகையில் ஒத்துக்கொண்டிருந்தது. கடுமையான சித்திரவதைகளும், கூட்டுப் படுகொலைகளும் இடம்பெற்றதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அரசினால் நிராகரிக்கப்பட்டன. ஹம்மெர்ஹெயில் கோட்டை ஹம்மெர்ஹயில் கோட்டை இத்தாக்குதல்களின்ப்பொது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவிடயம் கொழும்பில் தங்கியிருந்த சிறிமாவும், அவரது பிள்ளைகளும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றினுள் ஒளிந்துகொண்டதுதான். கொழும்பு நகர் பாதுகாப்பானதாக வரும்வரை அவர்கள் அக்கப்பலிலேயே தஞ்சமடைந்திருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், தமிழர்கள் ஆர்வம் காட்டிய இன்னொரு செய்தியிருக்கிறது. அதுதான் யாழ்ப்பாணம் காரைநகர் ஹம்மெர்ஹயில் கோட்டையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்கள் 12 பேரையும் மீட்க அக்குழு முயன்ற செய்தி. தமிழர்கள் வங்கதேச விடுதலையிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். இந்தியத் துணைக்கண்ட சுதந்திரத்தின்போது இந்தியா பாக்கிஸ்த்தான் எனும் இரு நாடுகளாகப் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்த்தானுக்குள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகள் மேற்குப் பாக்கிஸ்த்தான் என்றும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தன. பாக்கிஸ்த்தானின் இவ்விரு மாநிலங்களுக்குமிடையே சுமார் 1600 கிலோமீட்டர்கள் அகலமான இந்தியப் பகுதி அமைந்திருந்தது. பாக்கிஸ்த்தானின் இரு பகுதிகளிலும் நிலப்பரப்பில் பெரிய பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தான் ஆகும். இதனுள் பஞ்சாப், சிந்த், பாலுச்சிஸ்த்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்பகுதி ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கிழக்குப் பாக்கிஸ்த்தானில் கிழக்கு வங்காளம் எனப்படும் பகுதிமட்டுமே இருந்தது. சனத்தொகையில் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மேற்குப் பாக்கிஸ்த்தானைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்தின்பின்னர் பாக்கிஸ்த்தானின் அரசியல்ப் பலம் மேற்குப் பாக்கிஸ்த்தானின் உயர்மட்ட வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து கிடந்தது. நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தானின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டதுடன், கிழக்குப் பாக்கிஸ்த்தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும், தம்மை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மேற்குவாசிகள் நடத்துவதாகவும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பிணக்கு மெதுமெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கியது. பாக்கிஸ்த்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியல் ஸ்த்திரத்தனமையினமையாலும், பாரிய பொருளாதார நெருக்கடிகளினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி முறை தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சியே அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. மேற்கின் ராணுவ ஆட்சியினை வெறுத்த கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் தமது தலைவராக ஷேக் முஜிபுர் ரகுமானை தேர்வுசெய்து, மேற்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் காட்டி வந்தனர். அவாமி லீக் எனப்படும் அரசியல்க் கட்சியை ஆரம்பித்த முஜிபுர் ரகுமான் பிரிக்கப்படாத பாக்கிஸ்த்தானில், சமஷ்ட்டி அடிப்படையில் கிழக்குப் பாக்கிஸ்த்தானுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கோரிவந்தார். 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் 313 ஆசனங்களில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி 170 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்கப் போதுமான பலத்தை முஜிபுர் ரகுமான் பெற்றுக்கொண்டபோதும், மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆளும்வர்க்கம் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், அவரது கட்சியான அவாமி லீக்கையும் தடைசெய்தது. இதனையடுத்து பாக்கிஸ்த்தான் முழுவதும கடுமையான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. அன்றைய பாக்கிஸ்த்தான் ஜனாதிபதி யகயா கான் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தனது மகனான டிக்கா கானை அனுப்பிவைத்தார்.1971 ஆம் ஆண்டு பங்குனி 25 அன்று அவரது பணிப்பின்கீழ் செயற்பட்ட ராணுவம் கலகக்காரர்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ராணுவத்தைக் கலைத்து, நிராயுதபாணிகளாக்க மேற்கு பாக்கிஸ்த்தான் ராணுவம் முயன்றது. இந்த நடவடிக்கைக்காக மேற்கிலிருந்து விமானம் மூலம் ராணுவத்தினரைக் கொண்டுவரவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. பாக்கிஸ்த்தான் ராணுவத்தில் பணியாற்றிய வங்களி இன அதிகாரிகளும், சிப்பாய்களும் ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்துகொண்டனர். முஜிபுர் ரகுமானின் நெருங்கிய ஆதரவாளர்களும் இன்னும் பத்து மில்லியன் வங்காளிகளும் இந்தியாவுக்குத் தப்பியோடினர். அங்கே தமக்கான தற்காலிக அரசாங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்தனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானை விடுவிப்பதற்கான போரில் ஈடுபட்டுவரும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் சுதந்திர போராட்ட வீரர்களான முக்திபாகினி அமைப்பிற்கு ராணுவ ரீதியில் உதவும் முடிவினை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்தார். முக்திபாகினி கெரில்லாக்கள் இந்திய எல்லைக்குள், கிழக்குப் பாக்கிஸ்த்தானின் எல்லையோரங்களில் தொடர்ச்சியான முகாம்களை அமைத்து வந்தார்கள். இந்த முகாம்கள் மீது மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடுமையான ஷெல்வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டபோது, இந்தியாவும் பதில்த்தாக்குதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குப்பகுதியூடாக இந்தியாவினுள் நுழைந்து தாக்குதல் நடத்த பாக்கிஸ்த்தான் ராணுவம் திட்டமிட்டபோது, இந்தியா முழு அளவிலான போரை மார்கழி 3 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் மீது ஆரம்பித்தது. இந்திய ராணுவமும், வங்காளி கெரில்லாக்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் கிழக்குப் பாக்கிஸ்த்தனில் நிலைகொண்டிருந்த மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் நிலைகுலைந்துபோனது. மார்கழி 16 ஆம் திகதி கிழக்கிலிருந்து பாக்கிஸ்த்தான் ராணுவம் முற்றாகச் சரணடைய சுதந்திர வங்காளதேசம் உருவானது. ஆயுதப் போராட்டம்பற்றிய எண்ணத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்கள் தெற்கின் தோல்வியடைந்த ம.வி.மு இன் போராட்டத்தையும், சுதந்திர வங்காளதேசத்தின் உருவாக்கத்தையும் உன்னிப்பாக அவதானித்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டனர். இன்று கனடாவில் வசித்துவரும் முன்னாள் போராளியொருவர் கூறுகையில், "நாம் இந்த இரு சம்பவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்தோம். இவையிரண்டிலும் இருந்து ஏறாளமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். இவ்விரு நடவடிக்கைகளும் எம்மை உற்சாகப்படுத்தியிருந்தன. எம்மை இந்த நிகழ்வுகள் வெகுவாக ஊக்கப்படுத்தியிருந்தன" என்று கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினரின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரச படைகள் மேல் தாக்குதல் நடத்துவதென்பது சாத்தியமானதுதான் என்கிற நம்பிக்கையினை தமக்கு அது ஏற்படுத்திவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். உத்வேகமும், இலட்சியம் மீதான உறுதியும், ஆயுதங்களும் சரியான தலைமையும் வாய்க்கப்பெறுமிடத்து அரச படைகள் மேல் தாக்குதல் நடத்தி வெற்றிபெறுவதென்பது சாத்தியமானதுதான் என்பதை ம.வி. மு இனரின் தாக்குதல் முயற்சி தமக்கு ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். "அவர்களின் தாக்குதல் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது, அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இருக்கவில்லை, பயிற்சிகள் ஏதுமின்றியே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அவர்களின் தலைமை மிகவும் பலவீனமானதாக இருந்தது, அதனாலேயே அவர்களது திட்டம் பிழைத்துப்போனது" என்றும் அவர் கூறினார். "நாங்கள் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், கைப்பற்றும் ஒரு பிரதேசத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என்பதுதான். இதன்படி, ம.வி. மு செய்தது தற்கொலைக்குச் சமனானது. ஆரம்பத்தில் பாரிய நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டாலும், பின்னர் ராணுவமும் பொலீஸாரும் பதில்த்தாக்குதல்களை ஆரம்பித்தபோது, அவர்களை தாம் கைப்பற்றிய இடங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். அதனேலேயே நாம் மறைந்திருந்து தாக்கிவிட்டு, மறைந்துவிடும் நகர்ப்புற கெரில்லா பாணியைக் கையாண்டோம்". "அதேவேளை, வங்கதேச உருவாக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் சிக்கலானவை. சமஷ்ட்டிக் கட்சியின் பிரச்சாரகரான மாவை சேனாதிராஜாவோ அல்லது இளைஞர்களை உசுப்பேற்றும் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் கோவை மகேசன் ஆகியோர் போதிக்கும் பாடங்களைப் போலல்லாமல் மிகவும் சிக்கலானவை" என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் இந்திரா காந்தியின் பாக்கிஸ்த்தானின் மீதான ராணுவ வெற்றியையும், வங்கதேச உருவாக்கத்தையும் பாராட்டி சமஷ்ட்டிக் கட்சியினர் 1972 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆம் திகதி காங்கேசந்துறையில் 7 கட்சி பேரணியொன்றை நடத்தியிருந்தனர். அங்கே சமூகமளித்திருந்த இளைஞர்களின் தலைவர்கள், இலங்கையிலும் இந்தியா வங்கதேசத்தில் செய்ததுபோல தமிழர்களுக்கென்று தனிநாட்டை விடுவித்துதரும் என்று மக்களிடம் கூறத் தலைப்பட்டனர். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறிய ஒருவிடயம் தான் வங்கதேசத்தின் விடுதலையென்பது வெறுமனே இந்திய ராணுவத்தின் நடவடிக்கையினால் மட்டுமே உருவானதல்ல என்பது. நன்கு பயிற்றப்பட்டு, நன்றாக ஆயுதம் தரித்த, வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட முக்திபாகினி எனும் கிளர்ச்சிப்படையுடன் சேர்ந்தே இந்திய ராணுவம் மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவத்தைத் தோற்கடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சி தனது வன்முறையற்ற அகிம்சா ரீதியிலான போராட்டப் பாதையினை மாற்ற ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. அமிர்தலிங்கம் மட்டுமே அயுதப் போராட்டம் தொடர்பான சாதகமான எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கூட மிகவும் அவதானமாக, மேலெழுந்தவாரியாக இதுகுறித்துப் பேசிவந்தார். "தமிழர்கள் தீர்க்கமான விடுதலைப் போராட்டம் ஒன்றின் மூலம் தமக்கான தனியான நாட்டினை அடைவதற்கான நேரம் நெருங்கியிருக்கிறது. இதனை அடைவதில் வெளிநாட்டு உதவியினைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சுதந்திரம் கடையில் வாங்கும் சரக்கல்ல. ஒரு கடுமையான போராட்டம் மூலமே அதனை நாம் பெற்றுக்கொள்ளமுடியும், தேவையேற்பட்டால் நாம் அதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வங்கதேசத்து மக்களை முன்னுதாரணமாகப் பாவித்துப் போராட வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், போராளிகள் வங்கதேசப் போரை அரசியல்க் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் மிகவும் ஆளமாக ஆராய்ந்தனர். அதன்மூலம் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தனர், "தமிழர்கள் தமக்கான தனிநாட்டினை அடைவதற்கு இந்தியா ஒருபோதும் துணை நிற்காது". தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்தவே இந்தியா வங்கதேசப் போரில் இறங்கியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து பாக்கிஸ்த்தானின் அச்சுருத்தலை அது எதிர்கொண்டு வந்தது. சீனாவுடனான அதன் மோதலையடுத்து வடக்கிலிருந்தும் அது அச்சுருத்தலினை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவேதான், மேற்குப் பாக்கிஸ்த்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து, தனியான நாடாக அங்கீகரிப்பதன்மூலம், கிழக்கிலிருந்த எதிரியை அது இல்லமலாக்கியிருக்கிறது. ஆனால், இலங்கையிலோ நிலைமை வித்தியாசமானது. இலங்கையிலிருந்து ஈழத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தால், ஈழம் எனும் நட்பு அயல் நாட்டை அது கொண்டிருக்கும். ஆனால், அது இந்தியாவுக்கெதிரான இலங்கை எனும் நாட்டை உருவாக்கிவிடும். இந்த புதிய எதிரி நாடு இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்துவிடும். ஆகவேதான், இந்தியா ஒருபோதுமே ஈழம் எனும் தமிழருக்கான தனிநாடு உருவாவதற்கு எமக்கு உதவப்போவதில்லை. அவர்கள் கூறுவது சரிதான். இந்தியாவின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் இதுதான் என்பதும் சந்தேகமில்லை.
-
நம்பிக்கையிழந்த தமிழர்கள் சிறிமாவின் அதிதீவிர இனவாத நிலைப்பாடு தமிழரிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பாக இளைஞர்களிடையே இது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் சிங்களவர்களை மேலும் நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்களின் மனநிலை சிறிது சிறிதாக இறுக்கமடையத் தொடங்கியிருந்தது. அரசியல் யாப்புருவாக்கத்தில் அதுவரையில் பங்களிப்புச் செய்துவந்த சமஷ்ட்டிக் கட்சியை அதிலிருந்து உடனடியாக விலகுமாறு இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். "உங்களது கோரிக்கைகள் அனைத்தையுமே அவர்கள் நிராகரித்துவிட்ட பின்னரும் இன்னும் ஏன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்து வருகிறீர்கள்?" என்று அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அடங்காத் தமிழன் என்று அறியப்பட்ட சுந்தரலிங்கம் இதுதொடர்பாக தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தார், "உங்களை போகவேண்டாம் என்று சொன்னோம். உங்களை மீறி அவர்கள் தமக்கு விரும்பியதைச் செய்துவிடுவார்கள் என்று கூறினோம். இப்போது என்ன நடந்திருக்கிறதென்பதை பாருங்கள்? உங்களைத் தமது பலத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறார்கள். உங்கள் குரலினை அவர்கள் செவிசாய்க்கவில்லை.நாங்கள் உங்களை எச்சரித்தபடியே தமிழரின் இலட்சியத்தை பலவீனப்படுத்திவிட்டு வந்து நிற்கிறீர்கள்" என்று கடுமையாக சமஷ்ட்டிக் கட்சியினரைச் சாடியிருந்தார். சுந்தரலிங்கத்தின் விமர்சனத்திற்குப் பதிலளிக்க சமஷ்ட்டிக் கட்சி அமிர்தலிங்கத்தை நியமித்திருந்தது. பத்திரிக்கையாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது, தாம் தோற்கடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். தனது கருத்தினை பத்திரிக்கையில் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "அவருக்கு என்ன பதிலினை நான் கொடுக்க முடியும்? அரசாங்கத்திலிருக்கும் இடதுசாரிகள் கூட எம்மை ஏமாற்றி விட்டார்கள். இளைஞர்களின் முன்னால் நாம் இப்போது முட்டாள்களைப்போல நிற்கிறோம்" இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சிக்கு வெளியே வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனி 21 ஆம் திகதி அரசியலமைப்புக் குழுவிலிருந்து தமது கட்சி வெளியேறுவதாக தந்தை செல்வா அறிவித்தார். தாமது முடிவுபற்றி தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இந்த அரசியலமைப்பில் பிரஜாவுரிமை, அடிப்படை மனிதவுரிமைகள் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவர நாம் முயற்சித்தோம். ஆனால், அவை அனைத்தையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவது குறித்தும் பேசுவதற்கு பிரதமருடனும் அரசியல் யாப்பு அமைச்சருடனும் முயற்சித்தேன். பாராளுமன்ற வாக்குப் பலத்தினால் மட்டுமல்லாமல், பரஸ்பர விட்டுக்கொடுப்பினாலும் இணக்கப்பாட்டினை உருவாக்கமுடியும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால், இவை எதுவுமே அவர்களுடான பேச்சுக்களின்போது என்னால் செய்துகொள்ளமுடியாமற் போய்விட்டது. இனச்சிக்கல் குறித்து விட்டுக்கொடுப்புகளைச் செய்து இணக்கப்பட்டிற்கு வருவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அரசியல் யாப்பில் குறைந்தபட்சம் அடிப்படை உரிமைகளாவது உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரதமரையும், அரசியலமைப்பு அமைச்சரையும் நாம் வேண்டினோம், எமது கோரிக்கைகளை செவிமடுக்க அவர்கள் தயாராக இருந்தபோதும், அவற்றினை ஏற்றுக்கொண்டு யாப்பில் திருத்தங்களைச் செய்ய அவர்கள் விடாப்பிடியாக மறுத்து விட்டனர்" என்று கூறினார். அரசியல் யாப்புருவாக்க சபையில் இருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறுவதாக எடுத்த முடிவினை இளைஞர்கள் ஒரு வெற்றியாகவே பார்த்தனர். சிங்களவர்களுடனான இணக்கப்பாட்டு அரசியல் படுதோல்வியினைச் சந்தித்துவிட்டதனால், இனிமேல் வேறு போராட்ட மார்க்கங்களின் மூலமே எமது இலட்சியத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் வன்முறையற்ற வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுப் பார்க்கலாம் எனும் எண்ணத்திலேயே இருந்தனர். புரட்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் 1971 இல் அரசியலமைப்புச் சபை யாப்பினை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை , தமிழ் இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். முதலாவது பங்குனி - சித்திரை மாதங்களில் தெற்கில் இடம்பெற்று வந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகம். இரண்டாவது, மார்கழியில் இடம்பெற்ற வங்கதேசத்திற்கான சுதந்திரப் போர். சாதாரண தமிழர்களோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தெற்கில் இடம்பெற்றுவந்த தீவிர இடதுசாரிகளின் ஆயுத வன்முறை பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, அது ஒரு தனிச்சிங்களப் பிரச்சினை, இரு சிங்களப் பிரிவுகளுக்கிடையேயான பிணக்கு, அவ்வளவுதான். ஆட்சியிலிருக்கும் சிறிமாவின் அரசாங்கத்திற்கும், அவ்வாட்சியுடன் முரண்பட்ட சிங்கள இளைஞர்களுக்கும் இடையேயான பிரச்சினையாகவே அதனை அவர்கள் கருதியதால், தமிழர்களுக்கும் அப்பிரச்சினைக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், வங்கதேச விடுதலைக்காக அங்கே நடந்துவந்த போர்பற்றி அதிக அக்கறை தமிழர்களால் காட்டப்பட்டது. பல தமிழர்கள் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிய சமயத்திலிருந்தே அதனை மிக ஆளமாக உள்வாங்கி செய்திகளைப் பிந்தொடர்ந்து வந்தனர். தமிழர்கள் இந்தப் போரில் அதிக ஆர்வம் காட்டக் காரணமாக அமைந்தது இந்தியா, இன்னொரு நாட்டின் சுதந்திரத்திற்காக போரில் இறங்கியிருக்கிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல், போரின் இறுதியில் வங்காளதேசம் எனும் புதிய சுதந்திர நாடு உருவாக்கப்பட்டதையும் அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வந்தார்கள். தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைக் கலகமும், வங்கதேச சுதந்திரப் போராட்டமும் கிட்டத்தட்ட 1970 இன் ஆரம்பகாலத்திலேயே உருப்பெறத் தொடங்கியிருந்தன. இந்த இரு சம்பவங்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் ஏறத்தாள ஒரேமாதிரியானவை. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தெற்கின் சிங்கள இளைஞர்கள் அரசுக்கெதிரான சுலோகமாக "எங்களுக்கு தேங்காய்ப்பாலைத் தந்துவிட்டு, கொழும்பிலிருப்பவர்களுக்கு பசுப்பாலையா கொடுக்கிறீர்கள்?" என்பதை முன்னிறுத்தினார்கள். அதேவேளை வங்கதேச சுதந்திரப் போரில், "கிழக்குப் பாக்கிஸ்த்தானை மேற்குப் பாக்கிஸ்த்தான் சுரண்டுகிறது" என்பது கோஷமாக முன்வைக்கப்பட்டது.
-
பொறுமையிழந்த தமிழ் மக்கள் 1970 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் வவுனியாவில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு கொல்வின் ஆர் டி சில்வாவின் வேண்டுகோள் பற்றி ஆராய்ந்தது. கூட்டத்தில் பேசிய தந்தை செல்வா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்ல நல்ல விடயங்களை இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கியிருப்பதால் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினைத் தவற விடக்கூடாது என்று கூறினார். சி ராஜதுரை, சி என் நவரட்ணம் ஆகியோர் இதனால் தமிழருக்கு ஏதாவது நலன்கள் கிடைக்கும் என்று நம்புகிரீர்களா என்று செல்வாவிடம் தமது சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் இந்த அழைப்புப் பற்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முக்கியமானவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பதனை முடிவெடுக்கலாம் என்றும், அவ்வாறு பங்கெடுக்கும் பட்சத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகளை எப்படி உறுதிசெய்துகொள்ளலாம் என்பதுபற்றியும் தீர்மானிக்கலாம் என்றும் முற்றாகியது. சரியாக ஒரு வாரத்தின் பின்னர் கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியினர், கொழும்பிலிருந்த பிரபலமான தமிழ் வழக்கறிஞர்கள், மூத்த தமிழர்கள் ஆகியோருடன் நீண்ட கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகளின் முடிவில் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்வதென்று முடிவாகியது. அதேவேளை, யாப்பினை உருவாக்கும் பொழுது தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்படுவதை யாப்புருவாக்கத்தில் பங்குபற்றும் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் முடிவில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இக்கூட்டம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. மேலும், இந்த யாப்பில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் சமஷ்ட்டி அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை இவர்கள் அரசிடம் முன்வைப்பார்கள். மத்திய அரசிடமிருந்து கணிசமான அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்யும் வழியில் யாப்பு அமைய இவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தும், தாய்மொழியில் கல்விகற்கும் நிலையும் ஏற்பட அழுத்தம் கொடுப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். மேலும் அதிகாரம் மிக்க அமைப்பொன்றினை நாம் உருவாக்கி, அதன்மூலம் எமது பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு அரசிடம் கையளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றும் கூறினார். பிரதமர் சிறிமாவின் அழைப்பினையேற்று 1970 ஆம் ஆண்டு, ஆடி 19 அன்று ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் கருத்தரங்கின் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கச் சபையினை சேர்ந்து உருவாக்கினார்கள். இச்சபை புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதனைச் சட்டமாக மாற்றவும், இறுதியில் அதனை அரசியலமைப்பாக நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா, சமஷ்ட்டிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கதிரவேற்ப்பிள்ளை, தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கட்சிகள் ஆதரவு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு இருக்கும் என்பதனை உறுதிப்படுத்தினர். அரசியலமைப்பை வரைவதற்காக அமைக்கப்பட்ட செயலணி அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்ததுடன் அரசியலமைப்பின் அடிப்படை நகலினை இனிவரும் கூட்டங்களில் வரையலாம் என்றும் முடிவெடுத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு கமிட்டி தமது பரிந்துரைகளை ஒரு நகலாக வரைந்து புரட்டாதி மாதமளவில் பிரதான அரசியலமைப்பு குழுவின் முன்னால் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரை நகலில் 7 தலைப்புகளின் கீழ் 60 கட்டுரைகள் வரையப்பட்டிருந்தன. தமிழர்களின் பிரதான ஐந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய அடிப்படை தீர்வுகளை இந்த நகல் கொண்டிருந்தது. சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளில் பகுதி 1 சமஷ்ட்டிக் கட்டமைப்புப் பற்றி விவரிக்கிறது. அதன்படி ஒரு மத்திய அரசாங்கமும் ஐந்து பிராந்திய அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து பிராந்தியங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள்ஒரு பிராந்தியமாகவும், தென்னஞ்செய்கை அதிகமாகக் காணப்படும் வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதிகள் ஒரு பிராந்தியமாகவும், தேயிலை, இறப்பர் அதிகமாகப் பயிரிடப்படும் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இணைந்து மூன்றாவது பிராந்தியமாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கிய கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் இணைந்து வட கிழக்குப் பிராந்தியமாகவும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அம்பாறை மாவட்டம் தென்கிழக்குப் பிராந்தியமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. பகுதி ஒன்றில் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் அதிகாரத்தினை எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கம் பாராளுமன்றம் மூலம் நடத்தப்படும் அதேவேளை பிராந்திய அரசுகள் அவற்றிற்கான பிராந்திய அதிகார சபைகளினால் நிர்வகிக்கப்படும். இந்த பிராந்திய அலகுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களை அப்பிராந்தியங்களின் மக்களே தெரிவுசெய்வார்கள். பிராந்திய அலகுகள் மேலும் பல நிர்வாகக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுவார். இந்தக் கமிட்டியின் தலைவர்கள் பிராந்திய சபைக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, இவ்வாறு பரிதுரைக்கப்படும் உறுப்பினர்களால் அப்பிராந்தியத்துக்கான முதலமைச்சர் தீர்மானிக்கப்படுவார். இதன்படி மத்திய அரசாங்கம் பின்வரும் விடயங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும். சர்வதேச தொடர்பாடல்கள், பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கு, காவல்த்துறை, பிரஜாவுரிமை, குடிவரவு & குடியகல்வு, சுங்கத்துறை, தபால் & தொலைத்தொடர்புத்துறை, துறைமுகங்கள், கடல், வான் மற்றும் ரயில் போக்குவரத்து, பிராந்தியங்களுக்கிடையிலான வீதிப் பராமரிப்பு, மின்சாரத்துறை, நீர்ப்பாசனம், அளவைகள், சுகாதாரம் & கல்வி தொடர்பான கொள்கை வகுப்பு, மத்திய வங்கி & பணவியல் கொள்கை. இவை தவிர்ந்த ஏனைய துறைகளும் அதிகாரங்களும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பகுதி 4 தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்பாட்டில் இருக்கும் என்றும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற சேவைகள் தமிழ் மொழியிலேயே நடைபெறும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நீதிமன்ற சேவைகள் சிங்கள மொழியிலேயே நடைபெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் எந்தவொரு தனிமனிதனும் தனது தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பாட முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. பகுதி 5 இன்படி, பிராந்தியங்களின் மக்களுக்கான அரச கட்டளைகள், அறிவுருத்தல்கள் அவர்களின் தாய்மொழியிலேயே அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. பகுதி 3 ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதோடு தனிமனிதனுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக அம்மனிதன் நீதிச்சேவையினைப் பெற்றுக்கொள்வ்தற்கான அடிப்படை உரிமை என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. உத்தேச அரசியலமைப்பினை வழிநடத்திச் செல்லும் குழுவும், பகுதிகளுக்குப் பொறுப்பான குழுக்களும் 1971 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூடி கலந்தாலோசித்து வந்தபோதும் கூட, சமஷ்ட்டிக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலினை ஏறெடுத்தும் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை தீர்மானங்களை அரசியல் யாப்பாக்குவதிலேயே குறியாக இருந்தனர். அதன்படி அரசு முன்வைத்த தீர்மானங்களில் முதலாவதாக இலங்கை நாடு சுதந்திரமான, இறமையுள்ள சோசலிசக் குடியரசு என்பது சேர்க்கப்பட்டு, முற்றான ஆதரவுடன், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியினை மட்டுமே கொண்ட நாடாகும்". இது தொடர்பாக சமஷ்ட்டிக் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையினை அரசிடம் முன்வைத்தபோதும்கூட, அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. எஸ் தர்மலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தர்மலிங்கம் இந்த அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றினை பங்குனி 16 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அவரின் மாற்றம் பின்வருமாறு கூறியது, "இலங்கைக் குடியரசு பிரிவினையற்ற சமஷ்ட்டிக் குடியரசாக இருக்கும்" என்பதாகும். பாராளுமறத்தில் சிங்களத் தலைவர்களிடம் மன்றாட்டமாகப் பேசிய தர்மலிங்கம், இனச்சமத்துவம் இல்லையேல் நாடு பாரிய இனச்சிக்கலுக்குள் அகப்படும் என்றும், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் காணும் என்றும் கூறினார். ஆகவே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக் கூடியது என்றும், இதனால் முழு நாடுமே நண்மைஅடையும் என்றும் கூறினார். ஆனால், அரச தரப்பிலிருந்த் அனைத்து உறுப்பினர்களும் தர்மலிங்கத்தின் வேண்டுகோளினை முழுமையாக எதிர்த்துப் பேசியதுடன் சமஷ்ட்டி தொடர்பில் தாம் ஒருபோது சிந்திக்கவோ செயற்படவோ போவதில்லையென்றும் கூறினர். தர்மலிங்கத்தின் பேச்சு கீழே, "உங்களிடம் சமஷ்ட்டி அமைப்புப் பற்றிப் பேச ஆணையோ அதிகாரமோ இல்லையென்றால் குறைந்தபட்சம் மத்திய அரசிடம் குவிந்துகிடக்கும் நிர்வாக அதிகாரங்கச்ளையாவது மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்". "நான் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்விலேயே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒற்றையாட்சி அமைப்பினை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதற்கு மேலதிகமாக 1965 இல் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விற்கே தமது ஆணையைத் தந்திருக்கிறார்கள்". என்று கூறினார். ஆனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த ஆட்சேபணைகளுக்கும் மத்தியிலும் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பங்குனி 27 அன்று சட்டமாக்கப்பட்டது. தர்மலிங்கம் ஒரு தீவிர சோஷலிச ஆதரவாளர். சிங்கள அரசுத் தலைவர்களின் இனவாதப் போக்குக் குறித்து மனமுடைந்த அவர் பின்வருமாறு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார், " இன்றைய நாள் இலங்கையின் துரதிஷ்ட்டமான நாள். எனது சிங்கள நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், அவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை பார்க்க மறுக்கும் அவர்கள் , தமிழர் நலன்கள் பற்றி எதுவித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை". ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள்ளேயே இலங்கையினை வழிநடத்த ஆரம்பித்த சிங்களத் தலைவர்கள், சமஷ்ட்டி கட்சி பரிந்துரைத்த தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, உத்தியோக பூர்வ மொழிப் பயன்பாடு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததுடன், அதனையும் முற்றாக நிராகரித்தும் இருந்தனர். இதற்கு மாற்றீடாக அரசு முன்வைத்த அடிப்படை தீர்மானம் பின்வருமாறு கூறியது, "1965 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் பகுதி 33 இன் படி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக சிங்களம் மட்டுமே இருக்கும்" என்று கூறியது. இதன்மூலம் சிறிமாவின் அரசு முன்னைய பிரதமர் பண்டாரநாயக்காவின் 1965 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியினை முடிந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டத்தினை மீளவும் கொண்டுவருமாறு சமஷ்ட்டிக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையினையும் அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. அத்துடன், சிங்கள மொழிக்கு விசேட அந்தஸ்த்தும், மொழிரீதியிலான வழக்குகள் பிற்காலத்தில் வருமிடத்து அதற்கெதிரானா காப்பும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், அடிப்படை தீர்மானங்களின்படி மொழிதொடர்பான சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்குமென்றும், தேவையேற்படின் அச்சட்டங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான அனைத்துச் சட்டங்களும் தமிழ் மொழியிலும் இருக்கும் எனும் கோரிக்கை இந்த அடிப்படைத் தீர்மானத்தின் மூலம் முற்றாக நிராகரிப்பட்டுப் போனது. அத்துடன், நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சமஷ்ட்டிக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளில் தமிழ்மொழியே பயன்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இச்சட்டத்தின்மூலம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. கே ஜெயக்கொடி தமிழ் மொழியும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரையப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குறித்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் சமஷ்ட்டிக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்கொடி பாராளுமன்றத்தின் தனது ஆட்சேபணையினை பின்வருமாறு தெரிவித்தார், "நீங்கள் குறைந்தத பட்சம் வடக்குக் கிழக்கில் உள்ள நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழியில் நீதிமன்ற அமர்வுகளை நடத்த அனுமதியுங்கள்" என்று கோரியபோது, சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை எள்ளிநகையாடி, மறுதலித்துக்கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெளத்த மதத்திற்கு அதிவிசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அடிப்படை தீர்மானத்தின்படி பெளத்த மதத்திற்கான முன்னுரிமை இவ்வாறு கூறப்பட்டது, " இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முக்கிய இடம் வழங்கப்படும். மேலும், பெளத்த மதத்தினை போற்றிப் பாதுகாத்து, அதனை மேலும் வளர்ப்பது அரசுகளின் தலையாய கடமையாகும். மற்றைய மதங்களுக்கான உரிமைகள் இச்சசனத்தின் 18 ஆம் பகுதி, பிரிவு 1 "டி" இல் குறிப்பிடப்பட்டதுபோல வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. சிங்கள பெளத்த மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த அரசியலமைப்பை வரைந்தவர்கள் இத்துடன் நிற்கவில்லை. சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் பகுதி 29 இல் குறிப்பிட்டிருந்த "சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்தான பாதுகாப்பு" எனும் சரத்து இப்புதிய அரசியலமைப்பில் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. சோல்பரி யாப்பு, பகுதி 29 , பிரிவு 2C இன் பிரகாரம் ஒரு மதமோ, இனமோ ஏனைய மதத்தினருக்கோ அல்லது இனமக்களுக்கோ பாதகம் விளைவிக்கும் வகையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமும் இந்தப் புதிய அரசியலமைப்பில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது. பல லட்சம் மலையகத் தமிழரின் வாக்குறிமைகளைப் பறித்தபோது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சட்டம் அம்மக்களைக் காக்க முடியாதபோதும், அச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்வரை எதிர்காலத்தில் சிங்கள மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையினையும் இச்சோலப்ரி யாப்பின் சட்டம் தடுத்துவிடலாம் என்று அஞ்சிய சிறிமாவோ, இந்த சரத்து முற்றாக நீக்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பினை வரைந்தவரான கொல்வி ஆர் டி சில்வாவிடமும் ஏனைய சிங்களவர்களிடமும் கூறியிருந்தார். அத்துடன், பாராளுமன்றமே அதியுயர் அதிகாரம் மிக்க அமைப்பு என்று கூறியதுடன், பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மையினைக் கொண்ட சிங்களவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையேலே நாடு இயங்கும் என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.
-
இலங்கைக் குடியரசு யாப்பு தமிழ் மாணவர் பேரவை வீதிப் போராட்டங்களையும், சுவரொட்டிப் போராட்டத்தினையும் முடுக்கிவிட்டிருந்த அதே காலப்பகுதியில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசியலமைப்புச் சபையொன்றினை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பின்படி இலங்கை நாடானது சுதந்திரமான, இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு உழைப்பதாகக் கூறிச் செயற்பட்டு வந்த சமஷ்ட்டிக் கட்சியும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசுக்கு உதவ முன்வந்திருந்தது. ஆனால், சமஷ்ட்டிக் கட்சியின் அரசுடனான இந்த ஒத்துப்போதல் முடிவிற்கு தமிழ் இளைஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. உத்தேச அரசியலமிப்பிற்கும் தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பிருக்கக் கூடாது என்று வாதிட்ட இளைஞர்கள் இந்த அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்பொழுது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இச்சட்டம் அமுலாக்கப்படும் என்றும், ஏற்கனவே நலிந்துபோயுள்ள தமிழரின் இன்றைய நிலை உலகத்தின்முன்னால் மேலும் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் வாதாடினர். சுந்தரலிங்கமும் நவரட்ணமும் இந்த அரசியல் யாப்புருவாக்க முயற்சியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சியை விலகிநிற்குமாறு தம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தனர். ஆனால், அரசியல் யாப்புருவாக்கத்தில் தனது பங்களிப்பினையும் நல்குவது எனும் முடிவில் சமஷ்ட்டிக் கட்சி மிகவும் உறுதியாக நின்றுவிட்டது. தமது இறுதி முயற்சியாக சுந்தரலிங்கமும் நவரட்ணமும் சமஷ்ட்டிக் கட்சியின் யாழ்ப்பாண நகர மேயர் நாகராஜாவின் வீட்டில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து அவர்களை அரசியலமைப்பு விவகாரத்திலிருந்து விலகும்படி கேட்கச் சென்றிருந்தனர். ஆனால், அங்கு பேசிய அமிர்தலிங்கம், "அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு சமஷ்ட்டிக் கட்சியினைப் போகக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை" என்று மிகவும் கண்டிப்பாகக் கூறினார். பிரபல சிங்கள பெளத்த இனவாதிகளுடன் அமிர்தலிங்கம் சுந்தரலிங்கத்திடமும், நவரட்ணத்திடமும் பேசிய அமிர்தலிங்கம், "இலங்கை சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவே அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும் மலையகத் தோட்டங்களின் அமைச்சராகவும் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் திருச்செல்வத்துடன் பேசும்போது புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கென்று பல சலுகைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினை தவறவிடக் கூடாதென்று கூறியிருக்கிறார்" என்றிருக்கிறார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை நம்பவைத்து ஏமாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா - சிறிமாவுக்கு இடதுபுறத்தில். 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களில் கொல்வின் ஆர் டி சில்வாவும் ஒருவர் என்பதால் அமிர்தலிங்கம் உட்பட பல சமஷ்ட்டிக் கட்சி தலைவர்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். "ஒரு மொழியென்றால் இரு நாடு, இரு மொழியென்றால் ஒரு நாடு" என்ற கொல்வின் ஆர் டி சில்வாவின் மயக்க வார்த்தைகளில் மதிமயங்கிய சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அவரால் தாம் முழுமையாக ஏமாற்றப்படவிருக்கிறோம் என்பதனை அப்போது அறிந்திருக்கவில்லை.
-
எரிக்கப்பட்ட பேரூந்து பிரபாகரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்றது. அவரும் அவரது மூன்று தோழர்களும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தொன்றிற்குத் தீமூட்டியிருந்தனர். அரசாங்கத்தின் தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நோக்கில் அரசுடைமைகளை எரியூட்டுவது சரியானதாக அவர்களுக்குப் பட்டது. ஆனால், அவ்வாறு அரசுடைமைகளைச் சேதப்படுத்தும்போது பொதுமக்கள்ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் மிகக் கவனமாக செயற்பட்டுவந்தனர். வல்வெட்டித்துறைக்கான தனது அன்றைய சேவையினை முடித்துக்கொண்டு பருத்தித்துறையில் அமைந்திருக்கும் பேரூந்து டிப்போவுக்கு வரும்வழியில் அதனை எரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. வல்வெட்டித்துறைக் கிராமத்தின் மூலையிலிருந்த ஒதுக்குப்புறமான வீதியின் அருகில் பிரபாகரனும் அவரது தோழர்கள் மூவரும் கைகளில் பெற்றோல் கொள்கலன் ஒன்றையும், தீப்பெட்டிகளையும் ஏந்திக்கொண்டு காத்திருந்தனர். தூரத்தில் பேரூந்தின் விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்ட தோழர்கள் இருட்டினுள் நழுவிவிட, பிரபாகரன் நிதானமாக தாம் கொண்டுவந்திருந்த தென்னை மரக் குற்றியினை வீதிக்குக் குறுக்காக இழுத்துப் போட்டார். தமக்கு முன்னால் விதிக்குக் குறுக்கே கிடந்த தென்னங்குற்றியை அகற்றிவிட பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கிவர, அவர்களை பேரூந்தைவிட்டு விலகிச் செல்லுமாறு விரட்டினார் பிரபாகரன். மக்கள் எவருமற்றை வெற்றுப் பேரூந்தின் மீது தான் கொண்டுவந்த பெற்றோலினைத் தெளித்துவிட்டு, பேரூந்திற்குத் தீமூட்டினார். இந்தச் சம்பவத்தின் பின்னர் தோழர்களிடையே பிரபாகரனுக்கான மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சோமவீர சந்திரசிறி சிவகுமாரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடம்பெற்றது. சிங்களப் பெளத்த இனவாதி என்று தமிழரால் பரவலாக அறியப்பட்ட உதவிக் கலாசார அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவர்மேல் தக்குதல் நடத்தத் திட்டமிட்ட சிவகுமாரன் காரின் அடிப்பகுதியில் தான் கொண்டுவந்த குண்டினைப் பொறுத்திவிட்டு கூட்டத்திற்குள் மறைந்துபோனார். சிறிது நேரத்தில் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதற உதவியமைச்சரின் காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், இத்தாக்குதலில் அமைச்சருக்கோ அல்லது வெறு எவருக்குமோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்னொரு தாக்குதல் முயற்சியையும் சிவகுமாரன் மேற்கொண்டார். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை இலக்குவைத்து 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒரு குண்டுத்தாக்குதலை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த துரையப்பாவின் கார்மீது தான் கொண்டுவந்த கையெறிகுண்டை அவர் வீசியெறிய காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், துரையப்பா அப்போது அங்கிருக்காததினால் தப்பித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மேயராக இருந்த 1971 முதல் 1975 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக அல்பிரெட் துரையப்பாவே செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
-
தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கம் சமஷ்ட்டிக் கட்சியினரின் உதவியினை இதுதொடர்பாக நாடிய மாணவர்கள், புதிய தரப்படுத்தல் திட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரியிருந்தனர். ஆனால், சமஷ்ட்டிக் கட்சி இதற்கு உடனடியான பதில் எதனையும் வழங்க விரும்பவில்லை. சமஷ்ட்டிக் கட்சியின் மெளனத்தினால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், இத்தரப்படுத்தலுக்கெதிரான நடவடிக்கைகளை தமது கைகளில் எடுப்பதற்காக யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடினார்கள். அவர்களிடம் சத்தியசீலன் பேசும்போது, "நாம் தமிழ்க் காங்கிரஸ் மீது ஒருநாளுமே நம்பிக்கை வைத்தவர்கள் இல்லை. அது மிகவும் பழமையானதும், புதிய சிந்தனைகளை அறவே ஒதுக்குவதுமான ஒரு கட்சி. அதேபோல சமஷ்ட்டிக் கட்சியும் பழமைநோக்கிச் செல்வதுடன், இளைஞர்களின் உணர்வுகளுக்கு, குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைக்கு ஒருபோதுமே செவிசாய்த்ததில்லை. ஆகவே, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எமக்கு புதிய அமைப்பொன்று தேவை". ஆகவே அந்த மாணவர் குழு தமக்கான புதிய அமைப்பொன்றை உருவாக்கியது. அதற்கு "தமிழ் மாணவர் பேரவை" என்று அவர்கள் பெயரிட்டனர். அவ்வமைப்பின் தலைவராக சத்தியசீலன் பொறுப்பெடுத்ததோடு, செயலாளராக திஸ்ஸவீரசிங்கம் செயற்பட்டார். இந்த அமைப்பில் சிவகுமாரன், அரியரத்திணம் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆரம்பத்தில் உயர்தரம் வரை கல்விகற்ற மாணவர்கள் மாத்திரமே அமைப்பினுள் சேர்க்கப்பட்டபோதும்கூட பின்னர் அது சாதாரண தரம் வரை கற்ற மாணவர்களையும், அண்மையில் பாடசாலையினை விட்டு நீங்கிய மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் சிவகுமாரன் அமைப்பை விட்டு வெளியேற பிரபாகரன் சேர்ந்துகொண்டார். 1971 ஆம் ஆண்டு தை 12 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்தத் தரப்படுத்தல் திட்டம் தொடர்பாக பேசவேண்டும் என்று கேட்பதற்காக மாணவர் பேரவையினர் அமிர்தலிங்கத்தை அணுகியிருந்தனர். ஆகவே சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த அமிர்தலிங்கம் மாணவர்களின் கோரிக்கை பற்றி பொதுச்சபையில் பேசியதோடு பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளினையும் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால், 1970 தேர்தல்களில் காரைநகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ தியாகராஜாவிடம் தோற்றிருந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லத் தவறியதோடு, சமஷ்ட்டிக் கட்சியும் மாணவர்களின் ஆதங்கத்தின் ஆழத்தினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்ததுடன், இன்னும் ஐந்து பிரச்சினகளுடன் இன்னொன்றாக இத்தரப்படுத்தல்பற்றிப் பேசலாம் என்று வாளாவிருந்துவிட்டது. தந்தை செல்வாவுடன் அமிர்தலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையில் விவாதிக்கப்பட்ட சில விடயங்களை பிரத மந்திரியுடன் பேசுவதற்கென்று சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து தந்தை செல்வா தலைமையில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். தன்னை சந்திக்க விரும்பிய சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களை கல்வியமைச்சர் பாடி உட் டின் மகமூட்டுட்டன் பேசுமாறு அனுப்பிய சிறிமாவோ, கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய ஒத்துக்கொண்டாலும்கூட தரப்படுத்தல் திட்டம் அப்படியே தொடரும் என்பதனை சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களிடம் கண்டிப்பாகக் கூறினார். அவ்வாறே அக்குழுவினருடன் பேசிய கல்வியமைச்சரும், தரப்படுத்தல் முடிவு மந்திரி சபையினால் எடுக்கப்பட்டதேயன்றி, தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் கூறியதோடு, தான் அங்கு எடுக்கப்பட்ட முடிவினை செயற்படுத்தும் அமைச்சர் மட்டுமே என்றும் கூறினார். மேலும், இந்த முடிவினை மாற்றவோ, அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு அதிகாரம் இல்லையென்றும் கையை விரித்துவிட்டார். 1972 இல் புதிய தரப்படுத்தல் திட்டம் அமுலாக்கப்பட்டு அதன் தீவிரத் தன்மை தமிழ் மாணவர்களால் உணரப்பட்டபோது, தமிழ் மாணவர் பேரவை தனது எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடத் தொடங்கியது. சிங்கள வராலாற்று ஆசிரியரான கெ. எம். டி சில்வா இத்தரப்படுத்தல் முறை பற்றி பதிவிடும்போது, 1972 இல் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்கள் 400 புள்ளிகளுக்கு வெறும் 229 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்த நிலை போதுமானதாக இருக்க தமிழ் மாணவர்களோ 250 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறே பல்வைத்தியத் துறைக்கு சிங்கள மாணவர்கள் 215 புள்ளிகள் மட்டுமே பெற்றுத் தெரிவாகும்போது, தமிழ் மாணவர்கள் குறைந்தது 245 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியத்துறைக்கு சிங்கள மாணவர்கள் 200 புள்ளிகளுடன் தெரிவாகியபோது தமிழ் மாணவர்கள் 230 புள்ளிகளுக்கு அதிகமாக எடுத்தால் ஒழிய தேர்வுசெய்யப்படும் நிலையினை இழந்திருந்தார்கள். இது பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி 1972 இல் பல்கலைக்கழகங்களுக்கு விஞ்ஞான பாடங்களுக்குத் தெரிவான மாணவர்களில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 33.6 வீதமாக வீழ்ச்சியடைய சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 63 வீதமாக அதிகரித்திருந்தது. இந்தச் சரிவு பின்வரும் வருடங்களில் மேலும் அதிகரித்ததுடன் 1973 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 வீதமாக வீழ்ச்சிகாண சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 67.4 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. தாம் இனரீதியில் பாகுபாடு செய்யப்பட்டதை உணர்ந்த தமிழ் மாணவர்கள், சிங்கள அரசியல்த் தலிமைகளிடமிருந்து தமிழ் மாணவர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லையென்பதையும் உணரத் தலைப்பட்டார்கள். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர இருக்கும் ஒரே மார்க்கம் தனிநாடுதான் என்றும் அதனை அடைவதற்கான ஒரே வழி ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே என்று திடமாக நம்பத் தொடங்கினார்கள். பிரபாகரனும், சிவகுமாரனும் இந்த எண்ணக்கருவை மிகவும் ஆணித்தரமாகவும், உணர்வுபூர்வமாகவும் தமது தோழர்களிடையே பரப்பத் தொடங்கியிருந்தனர். பொன் சிவகுமாரன் ஆனால் இவர்கள் இருவரும் பெரிதாகச் சந்தித்துக்கொண்டதில்லை. தமக்கே உரிய அமைப்புக்களில் இதனை அவர்கள் செய்துவந்தார்கள். இவர்கள் இவ்வாறு தனித்தனியாகச் செயற்பட்டு வந்தாலும், இவர்கள் இருவருக்குமே பல பொதுவான பண்புகள் இருந்ததாக அவர்களின் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை, தமது நோக்கங்கள் நிறைவேற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் இருவருமே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோசை தமது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசவும், ஆலோசிக்கவும், வாதிடவும் அவர்களால் முடிந்தது. சிவகுமாரன் பற்றிப் ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், "சிவகுமாரன் ஆயுதப் போராட்டம் பற்றி இரவிரவாகப் பேசுவார். ஆயுதப்போராட்டமே தமிழர்களின் ஒரே தீர்வு என்பதை அவர் எமக்குக் கூறிக்கொண்டே இருப்பார்". பிரபாகரனின் முன்னைய தோழர்களில் ஒருவர் பேசும்போது, "அவர் பேசத் தொடங்கினால், அவரை நிறுத்துவது கடிணமானது. தமிழர்களின் பாரம்பரிய புகழ்பற்றித் தொடர்ச்சியாகப் பேசும் பிரபாகரன், அப்புகழினை மீண்டும் தமிழினம் அடையவேண்டும் என்றால் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினூடாக தனிநாட்டினை உருவாக்குவதன் மூலமே அதனைச் செய்யமுடியும் என்று அவர் கூறுவார்" என்று பகிர்ந்தார்.
-
தரப்படுத்தல் 1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார். பாடி உட் டின் மகமூட் கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார். தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார். முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள். இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார். தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக வாதிட்டார்கள். http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பதிலளிக்கப்பட்ட பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரே பட்டியலில் அதிகூடிய புள்ளிகள் முதல் அதி குறைந்த புள்ளிகள் வரை தரப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை, தகுதி அடிப்படியில் தரப்படுத்தும் முறை என்று அறியப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு அமைவாக இந்தப் பட்டியலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், சிறிமாவின் அரசாங்கம் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தின்படி, சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் தாம் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, ஒரே மொழியில் பரீட்சை எழுதியவர்களின் புள்ளிகள், ஒருவரின் புள்ளிகளுக்கெதிராக இன்னொருவரின் புள்ளிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டார்கள். இந்தப் புதிய தரப்படுத்தல் முறை சிங்கள மாணவர்களுக்கு மிகவும் அனூகூலமாகவும், தமிழ் மாணவர்களில் பல்கலைக் கழக அனுமதியில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதை தமிழ் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்தப் புதிய தரப்படுத்தல்த் திட்டத்திற்கெதிராக பாரிய மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மாணவர்களான பொன்னுத்துரை சத்தியசீலனும் சபாலிங்கமும் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாணவர் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கனகரட்ணம் மகா வித்தியாலயம் (பின்னாளில் ஸ்டான்லிக் கல்லூரி என்று அறியப்பட்டது), பரி யோவான் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் ஊடாகப் பயணித்து இறுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற பாரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில் சிறிமாவின் நோக்கத்தின் கருவியாகச் செயற்பட்ட பாடி உட் டின் மகமூட்டீன் உருவப்பொம்மை தீக்கிரையாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவன் சத்தியசீலன் பின்வருமாறு கூறினார், "மொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பையும் பாதிக்கும் வகையிலேயே இந்த புதிய தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வி கடுமையான வீழ்ச்சியினை அடையப்போவதுடன் பல தமிழ் மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் தகமையும் குறைவடையப் போகிறது. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும் அதனூடான வேலைவாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தமது கல்வியின் மூலம் தரமான தகுதியினையும், வேலைவாய்ப்புக்களையும் அடையமுடியும் என்று இருந்த தமிழ் மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் இதன்மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது".
-
தனிநாடு தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார். சுந்தரலிங்கம் தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார். ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில் போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். நவரட்ணம் 1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது. 1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது, "...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார். "இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில் தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர்.
-
கரிகாலன் தங்கத்துரை எனப்படும் ந. தங்கவேலு அவர்களின் ரகசியக் குழுவிற்கு தங்கத்துரையே தலைவராக இருந்தார். அவரை அவர்கள் மாமா என்று பாசத்துடன் அழைத்து வந்தார்கள். அந்த அமைப்பில் சுமார் 25 இளைஞர்கள் இருந்தார்கள். அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் உறவினர்கள். 1970 இல் தங்கத்துரை இரு சுழல்த் துப்பாக்கிகளை வாங்கியிருந்தார். ஒன்று 0.22 எம்.எம் வகையும் மற்றையது 0.38 எம்.எம் வகையையும் சேர்ந்தது. இவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றினை பயிற்சிக்காக அவர்கள் பாவித்து வந்தார்கள்.அமைப்பிலிருந்தவர்களை இவ்வகையான சுழல்த் துப்பாக்கிகளைத் தயாரிக்குமாறு தங்கத்துரை கேட்டிருந்தார். வானொலி திருத்துனரான கண்ணாடி என்று அழைக்கப்பட்டவர் இந்த தயாரிப்பு முயற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரது உதவியாளராக "தம்பி" பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர்கள் அவ்விரு துப்பாக்கிகளையும் பாகம் பாகமாய்ப் பிரித்தெடுத்து மீண்டும் அவற்றைச் சேர்த்து துப்பாக்கிகளாக பொருத்தினார்கள். சில நாட்களிலேயே துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்று விட்டார்கள். 1982 ஆம் ஆண்டு கொழும்பு குயீன்ஸ் கிளப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணிக்கெதிராக நடத்தப்பட்ட வழக்கின்போது நான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவர்களின் துப்பாக்கித் தயாரிப்பு முயற்சி பற்றி நான் வினவியபோது தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "துப்பாக்கிகளைத் தயாரிப்பதுபற்றிய அறிவு எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எமது தோழர்களில் பலர் இப்போதுதான் துப்பாக்கியை முதல்முறையாகக் கண்டிருக்கிறார்கள். நான் கண்ணாடியிடமும் பிரபாகரனிடமும் அவற்றை கழற்றிப் பார்க்குமாறு கூறியிருந்தேன். ஒரு வீட்டின் விறாந்தையில் அமர்ந்தபடி சுத்தியலினாலும் திருகாணிக் கழற்றியினாலும் அவற்றைக் கழற்ற முயன்றார்கள். மிகச் சிறிய நேரத்திலேயே அவர்களால் அவற்றினை முற்றாகக் கழற்றியெடுக்க முடிந்தது. தம்மால் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களைக் கவனமாக ஒரு பத்திரிகைத் தாள் மீது பரவிவிட்டு பின்னர் அப்படியே துப்பாக்கியாகப் பொருத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பான அவதானிப்பும், ஞாபகசக்தியும் இருந்ததை நான் கவனித்தேன்". சிறிது காலத்திலேயே கைத்துப்பாக்கிகளைத் தாமாகவே தயாரிக்கும் நிலையினை அவர்கள் அடைந்தார்கள். சிலவற்றை அவர்களே தயாரித்தார்கள். அதேபோல ரவைகளைத் தயாரிக்கும் புதிய முறைகளையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். முதலில் தீப்பெட்டிகளில் இருக்கும் இரசாயணத்தைக் கொண்டு ரவைகளை அவர்கள் செய்துபார்த்தார்கள். பின்னர் சரவெடிகளில் இருக்கும் இரசாயணத்தை ரவைகளில் நிரப்பி முயன்று பார்த்தார்கள். அவற்றுள் மூலை வெடி என்றழைக்கப்பட்ட முக்கோண வடிவ வெடிகளை அதன் வெடிச் சக்திக்காக ரவைகளில் பாவிக்க விரும்பினார்கள். வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா அக்காலத்தில் சிவகுமாரன் பயன்படுத்திய துப்பாக்கி, உலகநாதனைக் கொல்ல குட்டிமணி பயன்படுத்திய துப்பாக்கி, வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜாவைக் கொல்ல திஸ்ஸவீரசிங்கம் பாவித்த துப்பாக்கி மற்றும் அல்பிரட் துரையப்பாவைக் கொல்ல பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆகிய எல்லாமே அவர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். அதேபோல குண்டுகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குண்டுகளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். துப்பாக்கிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் குண்டுகளைத் தயாரிப்பது ஆபத்தானது. இவ்வாறான குண்டுத் தயாரிப்புக்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது 1970 ஆம் ஆண்டு தொண்டைமானாறு பனங்காட்டில் இரசாயணங்களை அவர்கள் கையாளும்போது ஏற்பட்டிருந்தது. குண்டுக்கான வெடிபொருட்களை அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும்போது வெடிப்பு ஏற்பட்டது. அதில் சின்னச் சோதி காயப்பட்டிருந்தார். இரண்டாவது வெடிப்பு சற்றுத் தீவிரமானது. தங்கத்துரை, சின்னச் சோதி, பிரபாகரன் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். பிரபாகரனுக்கு வலதுகாலில் எரிகாயம் ஏற்பட்டிருந்தது. அக்காயம் ஆறுவதற்கு சிலகாலம் சென்றதுடன், அது நிரந்தரமான கருத்த வடுவையும் அவரது காலில் ஏற்படுத்திவிட்டிருந்தது. பிரபாகரனுக்கு தனது காலில் ஏற்பட்ட காயம் பெருமையாக இருந்தது. தனது நண்பர்களுக்கு அக்காயத்தைக் காட்டி அவர் மகிழ்ந்தார். காலில் கருமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இனிமேல் கரிகாலன் என்று அழைக்கப்படலாம் என்று நகைச்சுவையாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. சோழர்களின் புகழ்மிக்க இளவரசனான கரிகாலச் சோழன் மீது பிரபாகரன் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். கரிகாலச் சோழன் கூட தனது காலில் ஏற்பட்ட கருமை நிறத் தழும்பிற்காகவே "கரிகாலச் சோழன்" என்று அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கரிகாலச் சோழன் தனது போர்த்திறமை மூலம் சோழ நாட்டினை விஸ்த்தரித்து சோழப் பேரரசாக மாற்றியிருந்தார். பிரபாகரனும் தனது பெயரை கரிகாலன் என்று வரிந்துகொண்டார். 1982 இல் தமிழ்நாட்டின் பாண்டி பஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட பொலீஸ் அறிக்கையில் பிரபாகரனின் பெயர் "கரிகாலன்" என்றே பதியப்பட்டிருந்தது. பிரபாகரனின் வலது காலில் இருக்கும் எரிகாயத் தழும்பை முன்வைத்தே பொலீஸார் தமது தேடுதல்களை நடத்தியிருந்தார்கள். ஆயுதங்களையும் குண்டுகளையும் தயாரிக்கும் பிரபாகரனின் அவா இன்றுவரை தொடர்கிறது. இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பிரபாகரன் அவற்றை மெருகூட்டுவதன் மூலம் எவ்வாறு தாக்குதல்களில் அவற்றை திறமையாகவும், குறைந்த ரவைகளுடன் பயன்படுத்தலாம் என்று எப்போதுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக மோட்டார்கள், நீண்ட தூர ஆட்டிலெறிகளைக் கூட உருமாற்றி, இலங்கையரசு பாவித்த மேற்கு நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எறிகணைச் செலுத்திகளின் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகளைப் பிரபாகரன் கையாண்டு வந்தார். பிரபாகரன் 14 வயது நிரம்பியிருந்த வேளையிலேயே அவரது மைத்துனரான சாதாரண தரத்தில் கல்விபயின்று வந்த பெரிய சோதி என்பவரால் அமைப்பினுள் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பாடசாலைக்குச் சமூகமளிப்பதைத் தவிர்த்து வந்த பிரபாகரன் அரசியல் கூட்டங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். 1968 இல் டட்லியின் அரசிலிருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததன் பிற்பாடு, யாழ்க்குடாநாட்டில் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களும், விவாதங்களும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வந்தன. சமஷ்ட்டிக் கட்சியின் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவினை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் போராடி பெறுவதை விடுத்து, மீண்டும் இன்னொரு சிங்களக் கட்சிக்கே ஆதரவளிப்பதென்பது கட்சியின் நோக்கத்திற்கு முரணானது என்று வாதிட்டனர். சமஷ்ட்டிக் கட்சியின் முடிவு பற்றி தந்தை செல்வா என்னதான் சமாதான சொல்ல முனைந்தாலும், இளைஞர்கள் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. குறிப்பாக வி நவரட்ணத்தின் சுயாட்சிக் கழக உறுப்பினர்கள் இதனால் பெரிதும் அதிருப்தியடைந்து காணப்பட்டார்கள்.
-
சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று கல்வியமைச்சராக இருந்த ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொள்ள, ஹரிஜன்களாக இருந்த தமிழ் மாணவர்கள் சிலர் பெளத்த மதத்தினைத் தழுவிக் கொண்டதால், ஹரிஜன்களால் உருவாக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சிங்களப் பாடசாலைகளாக அரசால் பொறுப்பெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவித்தலை விடுத்துடன், இந்த பொறுப்பேற்றல் நிகழ்வில் தான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்து தமிழ் மாணவர்களின் மனநிலையினை மேலும் கொதிநிலைக்குக் கொண்டு சென்றார். ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொள்ள இவ்வறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்றுணர்ந்த தமிழ் மாணவர்கள் இந்த நிகழ்வுக்கெதிரான பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்தனர். ஆனால், பிரதமர் டட்லியுடன் இதுகுறித்து பேசிய சமஷ்ட்டிக் கட்சியினர், பாடசாலைகளை சிங்கள மயமாக்கும் அரசின் முடிவினை மீளப்பெறுவதில் வெற்றிகண்டனர். ஆனாலும், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவு அரசின் எகத்தாளமான முயற்சிக்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சத்தியாக்கிரக நிகழ்வினை நடத்த முயன்றபோது, அரசு பொலீஸாரைப் பாவித்து அதனைத் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால், பொலீஸாரின் தடையினை தான் உதாசீனம் செய்யப்போவதாக சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணி அறிவிக்கவே, அரசு சம்பந்தப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கும் கடற்படையின் பாதுகாப்பைப் போட்டது. ஆனால், தமது இளைஞர் அணியுடன் பேசிய சமஷ்ட்டிக் கட்சியின் தலைமை, போராட்டத்தைக் கவிடும்படி வேண்டிக்கொண்டதுடன், இளைஞர்கள் கடற்படையுடன் மோதும் சந்தர்ப்பத்தினையும் தவிர்த்துக்கொண்டது. எந்த முடிவையோ அல்லது நடவடிக்கையையோ காலம் தாழ்த்தி, தாமதமாகவே எடுக்க நினைக்கும் சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு தமிழ் இளைஞர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதனால் இளைஞர் அணியிலிருந்து பல உறுப்பினர்கள் வெளியேறிச் சென்று தமக்கான அமைப்புக்களை உருவாக்கினார்கள். அவர்களுள் ஒன்று குட்டிமணி - தங்கத்துரை அமைப்பு. குட்டிமணியும், தங்கத்துரையும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். குட்டிமணியின் இயற்பெயர் செல்வராஜா யோகச்சந்திரன் என்பதுடன் தங்கத்துரையின் இயற்பெயர் நடராஜா தங்கவேலு ஆகும். 1969 இல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தினை கடுமையாக விமர்சித்த அவர்கள், தமிழ் மக்களின் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பாலஸ்த்தீனத்து மக்களின் விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த யாசீர் அரபாத்தை முன்னுதாரணமாகக் கொண்டிருந்த தங்கத்துரை தமது குழுவிற்கு தமிழ் விடுதலை இயக்கம் என்று பெயரிட விரும்பினார். ஆனால், அக்கூட்டத்தில் பெயர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படமலேயே முற்றுப்பெற்றது. ஆனாலும், ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதென்று அங்கிருந்த அனைவருமே ஒருமித்து முடிவெடுத்திருந்தனர். தொண்டைமனாறு குண்டுவெடிப்பில் காலில் காயம்பட்ட பிரபாகரன் பருத்தித்துறையில் இருந்த விசாலமான வீடொன்றில் குட்டிமணி - தங்கத்துரை ஆகியோர் தலைமையிலான அமைப்பு தமது கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. பிரபாகரனும் இந்த கூட்டங்களில் தவறாது பங்கெடுத்து வந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பிரபாகரனே வயதில் இளையவராக இருந்தார். அவருக்கு அப்போது 14 வயது. குட்டிமணி, தங்கத்துரைக்கு மேலதிகமாக இக்கூட்டங்களில் பெரிய சோதி, சின்னச் சோதி, செல்லையா தனபாலசிங்கம் (செட்டி), செல்லையா பத்மனாதன் (கண்ணாடி), சிறீ சபாரட்னம், பொன்னுத்துரை சிவகுமாரன் மற்றும் வைத்திலிங்கம் நடேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டுவந்தனர். "நாங்கள் புரட்சி பற்றிப் பேசினோம். புரட்சியாளர்கள் பற்றிப் பேசினோம். ஆனாலும், இவையெல்லாவற்றையும் விட குண்டுகளைத் தயாரிப்பது பற்றியும், ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றியுமே அதிகமாகப் பேசினோம். நாங்கள் வெறும் 15 பேர் மட்டுமே கொண்ட சிறிய அமைப்புத்தான்" என்று நடேசுதாசன் தமிழ் இதழொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது தமது ஆரம்பகால அமைப்புப்ப்பற்றிக் கூறியிருந்தார். 1971 முதல் 1972 வரையான காலப்பகுதியில் இந்த அமைப்பினர் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தொண்டைமனாறு பனத்தோப்பு ஒன்றினுள் இடம்பெற்ற தற்செயலான குண்டுவெடிப்பில் இவ்வமைப்பின் பல உறுப்பினர்கள் காயப்பட நேர்ந்தது. அவர்களில் ஒருவர் பிரபாகரன். அவரது காலில் கடுமையான தீக்காயம் ஒன்று ஏற்பட்டதுடன், அது கருமையான அடையாளம் ஒன்றினை நிரந்தரமாகவே ஏற்படுத்தியிருந்தது.
-
பிரபாகரனும் ஊர்ச்சண்டியர் சம்பந்தனும் ஒருநாள் காலை பிரபாகரனும் அவரது தோழர்களில் ஒருவரும் பஸ்ஸில் ஏறி பருத்தித்துறை நோக்கிப் பயணமானார்கள். பாடசாலைக் காற்சட்டை அணிந்த இரு சிறுவர்கள் தனது கைத்துப்பாக்கியை வாங்க வந்திருப்பதைக்கண்ட சண்டியர் சம்பந்தன் திகைத்துப்போனார். ஆகவே, அவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி அவர் மிரட்டினார். ஆனாலும், அந்தக் கைத்துப்பாக்கியை பார்த்துவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழரும் விரும்பியதால், அதனை அவர்களிடம் காண்பித்தார் சண்டியன். காண்பித்ததோடு நின்றுவிட்ட சண்டியன், அவர்கள் அதனைத் தொட்டுப்பார்க்க அவர் இடம் கொடுக்கவில்லை. "இதுவொன்றும் விளையாட்டுத் துவக்கல்ல. சிறுவர்களான நீங்கள் இதனைத் தொடக்கூடாது" என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறினார் சண்டியன் சம்பந்தன். கைத்துப்பாக்கியொன்றை முதன்முதலாகத் தனது கண்முண்னே கண்டபோதும்கூட அதனைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்படாததால் அவரது கண்கள் கலங்கிவிட்டன. ஆகவே அந்தக் கைத்துப்பாக்கியை எப்படி இயக்குவதென்று தனக்குக் காண்பிக்குமாறு அந்தச் சண்டியரிடம் அவர் மன்றாடத் தொடங்கினார். ஆனால், சம்பந்தனோ, இது விளையாட்டுத் துப்பாக்கியல்ல, சிறுவர்கள் இதனைத் தொடக்கூடாது என்று கூறி, பிடிவாதமாக மறுத்துக்கொண்டே, "உங்களுக்கு எதற்குக் கைத்துப்பாக்கி?" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார். இதைக் கேட்ட பிரபாகரன், "ராணுவத்தையும் பொலீஸாரையும் எதிர்த்துப் போராடப் போகிறோம்" என்று பெருமையாகக் கூறினார். "நாம் அவர்களை இங்கிருந்து துறத்தியடிக்க வேண்டும். அவர்களே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக இங்கே இருக்கிறார்கள்" என்று ஆத்திரத்துடன் முழங்கினார். "ஏன்?" என்று திருப்பிக் கேட்டார் சம்பந்தன். "சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்களின் தேசத்தை விடுவிக்க வேண்டும்" என்று பிரபாகரன் மீண்டும் பெருமையாகக் கூறினார். பிரபாகரன் கூறியதை கேட்டு அதிர்ந்துபோன சம்பந்தன், "உங்களின் வயதிற்கு மீறிய கதைகளைப் பேசுவதை விட்டு விட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார். "இந்த விடயங்களைப் பார்ப்பதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பதை மட்டுமே இப்போதைக்குச் செய்யுங்கள். என்னைப்போல வளர்ந்து பெரியவர்களாகிய பின்னர் வேறு விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம், இப்போது போய்வாருங்கள்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார் சம்பந்தன். பிரபாகரனுக்கோ கைத்துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்ல மனம் இருக்கவில்லை. "மீதிப்பணத்தைக் கொண்டுவந்தால் துப்பாக்கியைத் தருவீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் அவர். ஆனால், துப்பாக்கியை அவர்களுக்கு விற்பதில்லை என்று சம்பந்தன் பிடிவாதமாக இருந்துவிடவே, பிரபாகரன் மனமுடைந்துபோனார். வெளிச்சம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பின்வருமாறு இந்த நிகழ்வினைப் பகிர்ந்திருந்தார். "எனக்கு அப்போது 14 வயதுமட்டுமே ஆகியிருந்தது. எனது கருத்துக்களோடு ஒத்துப்போன இன்னும் ஏழு தோழர்களும் சேர்ந்து ஒரு பெயரில்லாத அமைப்பை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். எமது நோக்கம் விடுதலைக்காத் தொடர்ந்து போராடுவதும், ராணுவத்தினர் மீது தாக்குவதுமாகவே இருந்தது. நானே அந்தச் சிறிய அமைப்பின் தலைவராக இருந்தேன். அந்த நேரத்தில் எமது மனங்களில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது ஒரு துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும் என்பதும், சில குண்டுகளையாவது தயாரித்துவிடவேண்டும் என்பதும் தான். தாம் வாரம் வாரம் சேர்த்து வந்த 25 சதங்களை எனது தோழர்கள் என்னிடம் கொண்டுவந்து தருவார்கள்". "சுமார் 40 ரூபாய்கள் சேரும்வரை அந்தப் பணத்தினை நானே பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நேரத்தில்தான் பக்கத்துக் கிராமத்தில் வாழ்ந்துவந்த சண்டியரான ஒருவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்கவிரும்புவதாக நாம் கேள்விப்பட்டோம். அதனை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எனது சகோதரியின் திருமணத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட மோதிரத்தை விற்றும் இன்னும் 70 ரூபாய்களை நாம் சேர்த்துக்கொண்டோம். மேலும் 40 ரூபாய்கள் போதாமையினால், அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கும் எமது எண்ணத்தை நாம் கைவிடவேண்டியதாயிற்று". சண்டியன் சம்பந்தன் மட்டுமே அன்றைய காலத்தில் பிரபாகரனைப் புறக்கணித்திருக்கவில்லை. பிரபாகரன் கல்விபயின்ற சிதம்பராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எமது பாடசாலையில் பிரபாகரன் இருந்த வகுப்பு பல ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும், பல ஆசிரியர்கள் அந்த வகுப்பு மாணவர்களை எச்சரித்து வந்ததாகவும் கூறிய அவர், பிரபாகரன் என்று ஒரு மாணவன் அவ்வகுப்பில் இருந்தார் என்று நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்று கூறினார். பிரபாகரனும் சமஷ்ட்டிக் கட்சியும் சாதாரணதர வகுப்பினை அடைந்தபோது பிரபாகரனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் தொடர்ந்தும் போய்வந்தார். 1969 ஆம் ஆண்டு, சித்திரை 7 முதல் 9 வரை உடுவில் பகுதியில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திலேயே சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று தான் முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்று வெளிப்படையாக மக்களிடம் கூறினார் தந்தை செல்வா. "1960 களிலிருந்து பிரதான சிங்கள அரசியல்க் கட்சிகளுடன் செயற்பட்டு வருகிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை பதவியிலிருந்து நீக்க 1960 பங்குனியில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே 1965 இல் சுதந்திரக் கட்சியை பதவியிலிருந்து அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு ஆதவளித்தோம். ஆனால், அவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை ஆட்சிக்கு வந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். நாம் இன்று அனைவராலும் கைவிடப்பட்டு நிற்கிறோம்" என்று செல்வா மிகுந்த வருத்தத்துடன் மக்களுக்குக் கூறினார். தமிழருக்கான தனிநாடே எமது தீர்வு என்று பிரகடனம் செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் பிரபாகரனும் கட்டைக் காற்சட்டை அணிந்து நின்றிருந்தார். இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றிவிட்டதால், தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்குவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்று அங்கிருந்த இளைஞர்கள் வாதிட்டனர். ஆனால், இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானத்தை அந்த வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு விரும்பாத சமஷ்ட்டிக் கட்சி, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டது. ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானம் குறித்த சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர்கள் செல்வாவிடம் கேட்டனர். சிங்களவர்கள் உங்களை சமஷ்ட்டிவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கேலிசெய்கிறார்கள். ஆனால், நீங்களோ தமிழ் இளைஞர்கள் கோரிய தனிநாட்டுப் பிரகடனத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். ஏன் அவர்களது தனிநாட்டுக்கான தீர்மானத்தை நிராகரித்தீர்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த தந்தை செல்வா, " நாம் அதனை நிராகரிக்கவில்லை. எங்களுக்குச் சிறிது நேரம் தாருங்கள் என்று மட்டுமே அவர்களைக் கேட்டோம். எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறும் சிங்களவர்களே எம்மை சமஷ்ட்டிவாதிகள் என்று அழைக்கும் நிலையினை நாம் உருவாக்குவோம். சமஷ்ட்டி என்பது ஒருநாட்டில் ஒற்றுமையாக வாழும் ஒரு பொறிமுறையே அன்றி, தனியான நாட்டுக்கான கருவியல்ல என்பதனை அவர்கள் ஏற்கச் செய்வோம். நமது இளைஞர்கள் சமாதானமான முறையில் எமது பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். "நீங்கள் கூறுவதுபோல சிங்களத் தலைவர்களை உங்களின் கோரிக்கைக்கு உடன்படவைக்க முடியாமல்ப் போனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு பத்திரிக்கையாளர் செல்வாவிடம் வினவியபோது, "வயோதிபர்கள் தோல்வியடையும்போது இளைஞர்கள் வெற்றிபெறுவார்கள்" என்று அவர் அமைதியாகப் பதிலளித்தார்.
-
பிரபாகரனும் கைத்துப்பாக்கியும் பிரபாகரனின் தோழர்களில் எழுவர் இராணுவத்தினரை எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். அதற்காக தம்மைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி வந்தனர். குண்டுகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தனர். தமது நடவடிக்கைகளை ஒருங்கமைப்பதற்காக ஒரு குழுவை அவர்கள் உருவாக்கினர். தமது குழுவுக்கான பெயரைத் தேடுவதில் அவர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. அவர்களுக்கிருந்த இலக்கு ஒன்றுதான், அதுதான் தம்மை ஆக்கிரமித்து நிற்கும் காவல்த்துறை, ராணுவம் உட்பட்ட சிங்கள அரசின் ஆயுதக் கருவிகளை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது. ஆனால் இலட்சியத்தை மட்டுமே கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என்று பிரபாகரன் தனது தோழர்களிடம் கூறினார். எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஆயுதங்கள் வேண்டும், குறைந்தது ஒரு கைத்துப்பாக்கியாவது எமக்கு வேண்டும் என்று அவர் கூறினார். துப்பாக்கிகளை பொலீஸார் காவித்திரிவதையும், சில பெரியோர்கள் அவற்றை வைத்திருந்ததையும் அவர்கள் முன்னர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பிரபாகரனோ தோழர்களோ ஒருபோதுமே அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. ஆகவே, ஒரு துப்பாக்கியை வாங்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், துப்பாக்கி வேண்டுவதற்குப் பணம் தேவை. ஆகவே துப்பாகியொன்று தேவையான பணத்தினை தமக்கு வீட்டில் தரப்படும் வாராந்தப் பணமான 25 சதத்தினை சேமிப்பதன் மூலம் சேர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பிரபாகரனே அந்தச் சிறிய குழுவின் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் இருந்தார். ஏனென்றால், தமக்குள் பிரபாகரனே மிகவும் நம்பிக்கையானவர் என்று அவரது தோழர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆகவே, சேர்க்கப்படும் பணத்தை பிரபாகரனே பாதுகாத்து வந்தார். சுமார் 20 வாரங்களில் அவர்களிடம் 40 ரூபாய்கள் சேர்ந்துவிட்டன. தாம் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு கைத்துப்பாக்கியொன்றை அவர்கள் வாங்கத் தீர்மானித்தனர் . பருத்தித்துறையில் பெருஞ்சண்டியர் என்று பேசப்பட்ட சம்பந்தன் என்பவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்க விரும்புவதாக அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழர்களும் முடிவெடுத்தனர். தாம் சேர்த்த பணமான 40 ரூபாய்களுக்கு மேலதிகமாக தனது சகோதரி ஜெகதீஸ்வரியின் திருமணத்தில் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பிரபாகரன் விற்று மேலும் 70 ரூபாய்களைச் சேர்த்துக்கொண்டார். ஆனால் துப்பாக்கியை வாங்குவதற்கும் இன்னமும் 40 ரூபாய்கள் தேவையாக இருந்தது. ஆகவே, சண்டியரைச் சந்தித்து, தமது நோக்கத்தினையும், அதற்கான தேவையினையும் விளக்கி, மீதிப் பணத்தை ஆறுதலாகத் தரமுடியுமா என்று கேட்கலாம் என்று பிரபாகரன் முடிவெடுத்தார்.