-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
துணைவேந்தர் ஒருவாறு எங்களை தன்னுடன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். புலிகள் என்று கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்களை துணைவேந்தரே மீளவும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தமையானது சிங்கள மாணவர்களைடையே அதிருப்தியினை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவர்கள் பலரிடம் இருந்த கேள்வி, "உங்களை எப்படி போக விட்டார்கள்?" என்பதுதான். எங்களை முன்னின்று பிடித்துவந்து, பொலீஸில் கொடுத்த மாணவர்களில் சிலர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதில் மாணவர் சங்க தலைவனும் ஒருவன். சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியின் கம்பகா மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த அவன் பொலீஸ் நிலையத்தில் மிகவும் சாதாரணமாக உலாவந்தான். நாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள்? உங்களை என்ன செய்வதாகச் சொல்கிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். "தெரியாது, எவராவது வந்து எம்மை மீட்டுச் செல்லும்வரை பார்த்திருக்கிறோம்" என்று நாம் கூறினோம். "நீங்கள் யோசிக்கத் தேவையில்லை, உங்களை விசாரித்துவிட்டு, பிரச்சினை ஏதும் இல்லையென்றால், உடனேயே விட்டுவிடுவார்கள்" என்று பாசாங்காக பதிலளித்தான் அவன். அவன் செய்வது என்னவென்று எமக்கு நன்கு தெரிந்திருந்தது. நாங்கள் அறுவரும் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு பொலீஸ் நிலையத்தில் நடந்தது என்னவென்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால் எவருக்கும் எம்மீது அனுதாபம் இருக்கவில்லை. எம்மைக் காட்டிக்கொடுத்து, பொலீஸில் கையளித்தவர்களில் ஒருசிலர் வந்து எம்மிடம் பேசியபோது நான் வெளிப்படையாகவே "எங்களை பிடித்துக்கொண்டு வந்து பொலீஸில் கொடுத்ததே நீங்கள் தானே? இப்போது எதற்காக எங்களைப்பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. எமது கைதின் பின்னர், அதுவரை எம்முடன் சகஜமாகப் பேசும் சிங்கள மாணவர்களே எம்மிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், நாம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதை அறிந்த இன்னொரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எம்முடன் தொடர்பு கொண்டார்கள். கொழும்பில் வெளிவந்த அத்த எனும் சிங்களப் பத்திரிக்கை தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதிபற்றி கட்டுரை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், எம்மால் எமது அனுபவங்களை அப்பத்திரிக்கை நிருபருடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டார்கள். சிங்களத்திலேயே பேட்டி இருக்கும் என்பதனால் என்னையும், இரண்டாம் ஆண்டில் பயின் று வந்த வெள்ளை எனும் புனை பெயர் கொண்ட இன்னொரு மாணவனையும் சொய்ஸாபுர தொடர்மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அந்தப் பத்திரிக்கை நிருபரும், மாணவர் அமைப்பின் சில உறுப்பினர்களும் இருந்தார்கள். சுமார் இரு மணித்தியாலங்களாவது எமது அனுபவங்களைக் கேட்டபடி இருந்தார்கள். பொறுமையாக , இடையூறுகள் இன்றி, நாம் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, அடுத்த கேள்வியினைக் கேட்டார்கள் அவர்களின் முகத்தில் காணப்பட்ட உண்மையான வருத்தமும், தவறிழைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கமும் எமக்கு ஆறுதலாக இருந்தது. நாம் பேசுவதைக் கேட்டுவிட்டு இறுதியாக, "உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கியவர்கள் சிங்களவர்கள். ஆனாலும், மனிதநேயம் கொண்ட சிங்களவரும் இருக்கிறோம். உங்களைப் புலிகள் என்றே அனைத்து பிரதான பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் உங்களின் அனுபவங்களைச் சொல்லவிருக்கிறோம், எங்கள் இனத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருந்துகிறோம்" என்று சொல்லி பேட்டியினை முடித்துக்கொண்டார்கள். அப்பத்திரிக்கையின் அடுத்தவார இதழில் எமது பேட்டி வெளியாகியிருந்தது. நாம் கூறியவற்றில் பெரும்பாலான விடயங்களை அப்படியே மாற்றம் செய்யாது வெளியிட்டது அத்த பத்திரிக்கை. அத்த பத்திரிக்கையில் வெளியான எமது பேட்டி பல சிங்கள மாணவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது. இப்பேட்டியினை வழங்கியது யாரென்று அறிய அவர்கள் முயன்றார்கள். சிங்களம் பேசுக்கூடியவன் என்பதனால் என்னிடம் வந்து, "நீயா இப்பேட்டியைக் கொடுத்தது? எங்களை இரக்கமற்றவர்கள் போன்று பேசியிருக்கிறாயே?" என்று கேட்டார்கள். அந்தப் பேட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நாம் மறுத்துவிட்டபோதிலும், "நீங்கள் செய்ததைத்தானே பத்திரிக்கையும் பேட்டியாக வெளியிட்டிருக்கிறது?" என்று என்னிடம் பேச வந்த சிங்கள மாணவர்களிடம் கூறினேன், அவர்களிடம் பதில் இருக்கவில்லை. இனவாதம் தலைக்கேறிய பின்னர் கூடவே படிக்கும் தமிழ் மாணவர்களையும் பயங்கரவாதிகள் என்றும், கொலைகாரர்கள் என்று அடையாளம் காணும் சிங்கள மாணவச் சமூகத்திலேயே எமது பல்கலைக்கழக படிப்பும் நடந்தேறியது.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
மன்னிக்க வேண்டும். வேலைப்பழுவினால் தொடர்ந்து எழுதமுடியாது போய்விட்டது. மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு, கல்கிஸ்ஸை பொலீஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும், நிலாப்டீனும் மொறட்டுவை பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விசாரிப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை. நான் உட்பட இன்னும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களை அவர்கள் தனியான அறைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அறுவரும் கோண்டாவில், மாணிப்பாய், பருத்தித்துறை, சித்தங்கேணி, தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன் கொழும்பிற்கு வந்தவர்கள். நான் 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு உயர்தரத்தில் கற்பதற்காக வந்திருந்தேன். எங்களை ஒவ்வொருவராக அழைத்து விச்சரிக்க ஆரம்பித்தனர் ஜெயரட்ணமும் நிலாப்டீனும். சிறிய மரத்தினால் ஆன மேசை. மேசையின் ஒரு பக்கத்தில் ஜெயரட்ணம் அமர்ந்துகொள்ள, இன்னொரு பக்கத்தில் நிலாப்டீன் அமர்ந்துகொண்டான். எங்களை ஒவ்வொருவராக அழைத்து ஜெயரட்ணத்தின் முன்னால் இருக்கச் சொல்லிப் பணித்தார்கள். அவனது கைய்யில் புகைப்பட அல்பம் ஒன்று இருந்தது. அதிலிருந்தவர்களைக் காண்பித்தவாறே அவனது விசாரணை ஆரம்பித்தது. முதலில் நான். ஜெயரட்ணமே முதலில் விசாரணையினை ஆரம்பித்தான். "எந்த ஊரடா நீ?" கோண்டாவில் என்று நான் கூறவும், உடனேயே அல்பத்தை திறந்து சில புகைப்படங்களைத் தேடினான். பின்னர் குறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று அதட்டியபடி கேட்டான். அப்புகைப்படம் புலிகளின் வீரர் ஒருவருடையது. கோண்டாவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முகாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றிய போராளி ஒருவருடையது. ஆனால் எனக்கோ அவரைத் தெரியவில்லை. ஆகவே, "இவரை எனக்குத் தெரியாது" என்று கூறவும், நிலாப்டீன் அறைந்தான். "கோண்டாவில் எண்டு சொல்கிறாய் ஆனால் இவனை உனக்குத் தெரியவில்லையா ?" என்று அவன் கத்தினான். "எனக்குத் தெரியாது " என்று மீண்டும் கூறினேன். அதன் பிறகு இன்னும் சில புகைப்படங்களைக் காண்பித்து அவர்களைத் தெரியுமா என்று ஜெயரட்னம் கேட்கவும், அவர்களில் ஒருவரையும் தெரியாது என்று மீண்டும் கூறினேன். தொடர்ந்தும் நான் எவரையும் தெரியாது என்று கூறவும், "எப்பயடா கொழும்பிற்கு வந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்டான். "1990 ஆம் ஆண்டு" என்று நான் கூறவும், "சரி, போ" என்று என்னை விட்டுவிட்டான். அதன் பின்னர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாவின் முறை. அவனது தம்பி புலிகள் இயக்கத்தில் இணைந்து சிலாவத்துறைச் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தவன். மாவீரர் குடும்பமாதலால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோது பிரபாவினால் இலகுவாக கொழும்பிற்கு வர முடிந்திருந்தது. மாவீரர் குடும்பத்தைச் சாராதவர்கள் சரியான காரணங்கள் இன்றி கொழும்பிற்கு வருவதென்பது அக்காலத்தில் புலிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரபா 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொழும்பிற்கு வந்தமையானது அவன் மீது கடுமையான சந்தேகத்தை ஜெயரட்ணத்திற்கும், நிலாப்டீனுக்கும் ஏற்படுத்தி விட்டிருந்தது. முதலில் புலிகளின் புலநாய்வுப்பிரிவினரால் அனுப்பப்பட்டவன் என்று கூறி அவனை இருவரும் கடுமையாகத் தாக்கினார்கள். அவன் "இல்லை, நான் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததினால்த்தான் கொழும்பிற்கு வந்தேன்" என்று கூறவும், "அப்படியானால் நீ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான், உண்மையை ஒத்துக்கொள்" என்று கூறி மீளவும் தாக்கினார்கள். அடி தாங்காமல் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அவனைத் தனியாக ஒரு மூலையில், தரையில் இருத்திவிட்டு, "விடியும் முன்னர் நீ எப்படி கொழும்பிற்கு வந்தனீ எண்டதைச் சொல்லிப்போடு, இல்லையெண்டால் காலையில உன்னை நாலாம் மாடிக்கு கொண்டுபோவோம், அங்க போன பிறகு நீ உயிரோடு திரும்ப இயலாது" என்று மிரட்டினார்கள். அடுத்தவன் லீலாகிருஷ்ணன். பருத்தித்துறையைச் சேர்ந்தவன். பல்கலைக்கழக மல்யுத்த அணியில் இருந்தவன், அதனால் உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவனும் கொழும்பிற்கு வந்திருந்தமையினால் அவனையும் தாக்கியபடியே விசாரித்தார்கள். அவனது குடும்பம் மாவீரர் குடும்பமா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறே தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆனால் கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்துவந்த புஸ்ப்பாகரன், சித்தங்கேணியைச் சேர்ந்த ரமேஸ் என்று மீதியாய் இருந்தவர்களையும் விசாரித்தார்கள் இடையிடையே தாக்கினார்கள். எல்லோரையும் நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்றே நாம் நம்பியிருந்தோம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்தார். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களை புலிகள் என்று தவறாகப் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அதிகாரி பீரீஸுடன் அவர் வாதிட்டார். "உன்னைப்போன்ற சிங்கள துரோகிகளால்த்தான் புலிகள் கொழும்பில் குண்டுவைக்கிறார்கள். இவங்களை என்னிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவருடன் கர்ஜித்தான் பீரிஸ். ஆனால் அவர் விடுவதாய் இல்லை, "இவர்களில் இறுதியாண்டில் படிக்கும் ஆறு மாணவர்களையும் என்னுடன் அனுப்பி வைய்யுங்கள், இவர்களுக்கான பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நானே இவர்களை பரீட்சை முடிந்தவுடன் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று மன்றாட்டமாக அவர் பீரிஸிடம் கெஞ்சினார். சிங்களவராக இருந்தும் தமிழ் மாணவர்கள் பரீட்சையினைத் தவறவிடக் கூடாது என்ற அக்கறை அவருக்கு இருந்தது. அவருடன் சில நிமிடங்கள் தர்க்கித்துவிட்டு, "சரி, அழைத்துச் செல், ஆனால் இவர்களால் ஏதாவது தீங்கு ஏற்படுமாக இருந்தால் நான் உன்னை வந்து கொல்வேன்" என்று கத்தியவாறே எங்களை அவருடன் அனுப்பி வைத்தான். ஆனால் எங்களைத் தவிரவும் மூன்றாம், இரண்டாம் வருடங்களில் படித்துக்கொண்டிருந்த இன்னும் நாற்பது மாணவர்களை பீரிஸ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தான்.
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
"புலிகள் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி நாடாக தமிழீழம் கேட்டார்கள் அதை அவர்கள் தமிழ் தேசியம் என்றால் அது மிகச் சரியானது" - இங்கே ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் கருத்து இது. அதற்கான எனது எதிர்வினை தவறான அல்லது பகுதியளவில் மட்டுமே பார்க்கப்படுகின்ற ஆனால் இன்று பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தின் ஒருபகுதி மட்டுமே இது. ஐந்து குருடர்கள் யானையினை எப்படி விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். யானையின் தும்பிக்கையினை மட்டுமே பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் தும்பிக்கை மட்டுமே. அவ்வாறு யானையின் வாலைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் அதன் வால் மட்டுமே, அவ்வாறே யானையின் காதினைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் காது மட்டுமே. யானையின் கால்களில் ஒன்றைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் மொத்தமான கால் மட்டுமே. யானையின் வயிற்றைப் பிடித்துப் பார்த்தவனுக்கு யானை என்றால் வெறும் வயிறு மட்டும்தான். அவ்வாறே இதுவும், தமிழ்த்தேசியம் என்றால்ப் புலி, புலி என்றால் தமிழ்த்தேசியம் - ஏன், புலிகளின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ்த்தேசியம் என்று ஒன்று இருக்கவில்லையோ??? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. இது புரியாமையினால் கூறப்படுகின்றதா அல்லது வேண்டுமென்றே சொருகப்படுகின்றதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஈழத்தமிழர்களின் தேசியம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள உண்மையாகவே விழைகின்றவர்களுக்கு சிறு உதவி, இலங்கை தமிழ்த் தேசியவாதத்தின் ஐந்து முக்கிய கூறுகள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கென தனித்துவமான மொழி (தமிழ்), பண்பாடு, மத மரபுகள் மற்றும் சமூக வழக்கங்கள் கொண்ட ஒரு சமூகமாக இருப்பதாக வலியுறுத்துவது. வரலாற்றுப் பாரம்பரிய தாயகம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன என்ற கோட்பாடு. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் கொள்கைகளுக்கு எதிரான எதிர்வினை சிங்களம் மட்டுமே அரச மொழியாக்கம், கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பாகுபாடு போன்ற சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுக் கொள்கைகளால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்ற உணர்விலிருந்து உருவான இயக்கம். அரசியல் தன்னாட்சி / சுயநிர்ணய உரிமை தமிழர்கள் தங்களுடைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் தாங்களே தீர்மானிக்கும் உரிமை பெற வேண்டும் என்ற கோரிக்கை (மத்தியிலான கூட்டாட்சியிலிருந்து தனி அரசியல் அதிகாரம் வரை). பல்வேறு வெளிப்பாடுகள் மற்றும் பாதைகள் தமிழ்த் தேசியவாதம் ஒரே வடிவில் இல்லாமல், அமைதியான அரசியல் இயக்கங்களிலிருந்து ஆயுதப் போராட்டங்கள் வரை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தமிழ்த்தேசியம். வெறுமனே புலிகள் கோரிய தமிழரின் தாயகம் மட்டும் அல்ல. உங்களின் தவறான திரிபுகளைத் திருத்துங்கள்.
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
நண்பர் ஒருவருடன் அண்மையில் பேசும்போது, மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அதனையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அதில் குறிக்கப்பட்டுள்ள சரத்துக்களை மாற்றும் எண்ணம் அநுரவிற்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்பில் மாற்றம் செய்யாது இதனை அவரால் செய்ய முடியுமா? அப்படிச் செய்வதென்றாலும் அதனை இப்போதுகூட அவரால் செய்ய முடியும்தானே? ஏன் மாகாணசபைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆக, 2007 இல் பிரித்துப்போட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையினை மேலும் பலவீனமாக்கி, காணி பொலீஸ் அதிகாரங்களை உத்தியோகபூர்வமாகவே `13 ஆம் திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி, வெறும் உப்புச் சப்பற்ற மாகாணசபைகளையே அவர் தரவிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அவரை விமர்சித்தவுடன், அவரது தமிழ்க் காவடிகள் ஓடோடி வந்து, "அப்ப நாமலை வரச் சொல்லலாமா? ரணிலை வரச் சொல்லலாமா? கோத்தாவை வரச் சொல்லலாமா?" என்று புத்திசாதுரியத்துடன் கேட்கிறார்கள்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நீங்கள் இதனை வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும், ஒருவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு, முண்டு கொடுப்பவர்களுக்கு, காவடி தூக்குபவர்களுக்கு என்று சிங்களவர்கள் ஒரு சொற்றொடரை வைத்திருக்கிறார்கள். "புக்க தெனவா" என்பதே அது. இதனை நான் தமிழாக்கம் செய்ய விரும்பவில்லை.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நீங்கள் இணைத்த காணொளி பார்த்தேன். நல்ல முயற்சி என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். அரூஸ் சொல்வதுபோல அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா எடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது, அதேபோல இம்முறையும் தமிழர்களை தனது நலன்களுக்காக மட்டுமே பாவித்துவிட்டு எறிந்துவிடுமா என்பதிலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மேலும், தனது பலப் பிராந்தியத்திற்குள் இருக்கும் சிறிய நாடுகள் அல்லது இனங்கள் மீது அப்பிராந்திய வல்லரசுகள் கொண்டிருக்கும் செல்வாக்கென்பது உண்மைதான். எம்மாலும் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது. எமக்கெதிராக சோனியா தலைமையிலான காங்கிரஸின் அன்றைய தலைமை செய்த குற்றங்களை விசாரிப்பதன் மூலம் எமக்கான நீதியையும் தீர்வையும் பெற்றுவிடலாம் என்பதே நான் கூற வந்தது. ஆனாலும் அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் எந்நாடும் இதுகுறித்து எமக்காக உதவ முன்வரப்போவதில்லை. நீங்கள் இணைத்த காணொளி பல விடயங்களைச் சொல்லியிருக்கிறது. சிந்தனையினையும் தூண்டியிருக்கிறது. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. எந்த நிலையிலும் நிதானம் இழக்காது கருத்தாடும் உங்களின் பாணி தனியானது. வாழ்த்துக்கள்!- சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்
இது உண்மைதான். தாம் வாழும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் இருந்து தப்பி வெளியே வரும் இவர்கள், தாம் வந்து குடியேறும் மேற்கத்தைய நாடுகளில் தாம் எந்த அடிப்படைவாதத்திலிருந்து தப்பி வெளியேறினார்களோ, அதே அடிப்படைவாதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். அத்துடன் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊற்றி வளர்க்கப்படுகின்றனர். இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டிலும், அவுஸ்த்திரேலியாவில் மிக அண்மையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முன்னின்று படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மேற்குலகில் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய இளைஞர் யுவதிகள்தான் என்பது அதிர்ச்சியான தகவல். 2014 முதல் 2019 வரையான காலப்பகுதியில் உலகையே ஆட்டிப்படைத்த இஸ்லாமிய அடிப்படைவாதக் கொடூரப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் அமைப்பில் இணைவதற்கு மேற்குலகில் பிறந்து வளர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் முன்னின்று சென்றிருந்தனர் என்பதும், இவர்களுள் சிலர் மிகவும் கொடூரமான படுகொலைகளை வீடியோக்களின் முன்னால் நின்று நிகழ்த்திவிட்டு அல்லாவுக்கே மகிமை என்று கூக்குரலிட்டதும் நினைவில் இருக்கலாம். இவ்வாறு அவுஸ்த்திரேலியாவிலிருந்து சிரியா சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதியொருவன் தனது இரு மகன்களையும் அங்கு கூட்டிச் சென்றிருந்தான். அப்பயங்கரவாதியும், அவனது இரு புதல்வர்களும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவர்கள், லெபனானிய பின்புலத்தைக் கொண்டவர்கள். சிரியாவில் இவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர், தான் படுகொலை செய்த இரு சிரியர்களின் தலைகளைக் கொய்து தனது இரு மகன்களினதும் கைகளில் கொடுத்த அவன், அல்லாவுக்கே மகிமை என்று கூவியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரானிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நிச்சயம் துடைத்தழிக்கப்பட வேண்டும். இதற்காக நான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இப்போது நீங்கள் கூறும் நானா யாரென்று புரிந்துவிட்டது. அந்த நபரின் குரோதத்தின் காரணமும் தெளிவாகிறது. நான் விடயம் தெரியாமல் இனம்பற்றியெல்லாம் எழுதிவிட்டேன். மிக்க நன்றி!- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள், மோகன் அண்ணா.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கு நீங்கள் குறிப்பிடுவது யாரை, தமிழர்களையா? தமிழர்களைத்தான் என்று எடுத்துக்கொண்டால், தமிழர்களில் எந்தப் பிரிவினர் மேற்குடனும், இலங்கையுடனும் சேர்ந்து பயணிக்கலாம் என்று விரும்புகிறார்கள்? எமக்கான பயன் கிடைக்குமென்றால் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பயன் தான் என்ன? அதனைத் தருவதற்கு இந்தியா உடன்படுகின்றதா? அதற்கான சமிக்ஞைகள் இந்தியாவினால் எப்போது, யாரிடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன? நீங்கள் சிட்னியில் உங்களின் இந்திய நண்பர்களுடாக இந்திய அதிகார வர்க்கத்தினை அணுகியிருக்கிறீர்களா? புலிகளை அழிக்க உதவுங்கள், நாம் மகிந்தவிடம் உங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதியளித்த பின்னர், யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்டபோதும், தனது வாக்குறுதியைத் தானே தூக்கிக் கடாசிவிட்டு பேசாமலிருக்கும் இந்தியா இப்போது எதற்காக எமக்கான தீர்வைத் தரப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கு "நம்ம நானா " என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் குறிப்பிடும் நபர் சிங்கள இனவாதிகளில் மிகத் தீவிரமானவர்களில் ஒருவரான சிறிமாவை ஆதரித்தவர் என்பதுடன் அவரது செயற்பாடுகளை இன்றுவரை நியாயப்படுத்தி வருபவர், தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை இன்றுவரை கொச்சைப்படுத்தி வருபவர், தமீழத் தேசியத் தலைமைத் தண்டிக்கவேண்டும் என்று கூறிவருபவர் , பொதுவாகத் தமிழ்த் தேசியம் என்பது அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர். ஆக, நான் சொல்பவரும் நீங்கள் குறிப்பிடுபவரும் ஒரே நபர்தான் என்றால், நீங்கள் சரியாகவே கணித்திருக்கிறீர்கள் என்று பொருள். மேலதிக விபரங்களுக்கு என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள், நாம் அந்த நபரை யாரென்று சரியாக இனங்கண்டுகொள்ளலாம்.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நாங்கள் மகிந்த மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் விடுதலை கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடினோம். நாங்கள் சோனியா மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடினோம் அதனை ஏவிவிட்டு எம்மில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று எமது பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கக் காரணமான ரஜீவைக் கொன்றோம், ஜே ஆர், பிரேமதாச, சந்திரிக்கா, ரணில், டிங்கிரி பண்டா, சிறிமா, பண்டாரநாயக்க, கோத்தாபய என்று எவரையுமே குற்றம் சாட்ட முடியாது, ஏனென்றால் நாங்கள்தான் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினோம். எங்களுக்கெதிராக எம்மை அழித்தவர்கள் எல்லோருமே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வழக்குகள் போட்டுப் பயங்கரவாதிகள் என்று நாமமும் இட்டு அழித்து, அடக்கி விட்டார்கள். ஆனால் நாம் மட்டும் எதுவுமே பேசக் கூடாது, ஏனென்றால் நாம்தான் எமக்கு நடந்த அனைத்து அழிவுகளுக்கும் காரணம் ! இவ்வளவு கேவலமான உணர்வு தமிழரில் இல்லாமல் வேறு எந்த இனத்திலும் இருக்கமுடியாது.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
மீண்டும் அதே திசையில்த்தான் சிந்திக்கிறீர்கள். சோனியா எனும் தனி மனிதர் செய்த தவறுகள் குறித்துப் பேசுவதும், நீதிகேட்பதும் எவ்வாறு இந்தியாவைப் பகைப்பது ஆகிவிடுகிறது? பாரதீய ஜனதாக் கட்சி மீது ஈழத்தமிழர்களுக்குப் பகையிருக்கிறதா, என்ன? அல்லது இந்திய மக்கள் மீதுதான் எமக்குப் பகையிருக்கின்றதா? இருப்பதெல்லாம் எம்மீது படுகொலை ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்ட சோனியா எனும் தனிப்பட்ட மனிதருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் தேவைமட்டுமே. ஒரு குற்றவாளி மீது தண்டனையினைக் கோரும்போது அந்த நாட்டினையே பகைப்பது ஆகிவிடுவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் சோனியா என்பது ஒரு நாடல்ல, தனி மனிதர் மட்டுமே. யூகொஸ்லாவியாவின் சேர்பியப் போர்க்குற்றவாளி சுலொபொடான் மிலோசொவிச்சினை கைதுசெய்தபோது அதனை சேர்பியாவுக்கெதிரான பகையுணர்வாக அந்த நாட்டு மக்களே பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நாட்டு மக்களின் உதவியுடனேயே அவன் சர்வதேசப் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டான். அப்படியிருக்க, சோனியா மீதான விமர்சனம் என்பதோ அல்லது தண்டனைக்கான கோரல் என்பதோ எப்படி இந்தியா எனும் மொத்த நாட்டையே பகைப்பதாக ஆகிவிடுகிறது?? - சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.