Everything posted by ரசோதரன்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.
-
வாழைப்பூ வடை
நண்பன் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தான் விரும்புகின்றேன், கவிஞரே. அது சாத்தியமும் கூட. ஏராளமானோர் இதே குறைபாட்டுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை ஒரு நோய் என்று சொல்லாமல், குறைபாடு என்றே சொல்கின்றார்கள். அசட்டுத்தனமாக அவசரப்பட்டு கேட்கும், வாசிக்கும், பார்க்கும் எல்லாவற்றையும் அவன் அப்படியே நம்பி விடாமல் இருந்திருக்கலாம். 'உணவே மருந்து............' என்பது ஆரோக்கியமாக இருக்கும் நாட்களுக்கு பொருந்தும். நோயோ அல்லது குறைபாடு ஒன்றோ வந்துவிட்டால், சரியான சிகிச்சை மிக அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்..............🙏.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23
-
வாழைப்பூ வடை
👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அமர்த்தியா சென் அவர்களின் ஐந்து புத்தகங்களை வாசித்து விட்டு தான் கருத்து எழுதுவது என்று நான் நினைத்திருக்க, ஆறாவதாக விவிலியத்தையும் வாசி என்று சொல்லி விட்டீர்களே, வாலி...........................🤣.
-
வாழைப்பூ வடை
அதுவே கிருபன்................. முழுச் சமூகமுமே மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய விடயங்களில் மருத்துவம் முதன்மையான ஒன்று.
-
வாழைப்பூ வடை
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் தென் பகுதிகளில் சில வாழைத் தோட்டங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன், அண்ணா. கலிஃபோர்னியாவின் தென் பகுதிகளிலும் வாழை நன்றாகவே வருகின்றது. என்னுடைய வீட்டில் வாழைகள் குட்டிகளும், குலைகளுமாக வருடம் முழுவதும் நிற்கின்றன. ஆனால் இங்கு கலிஃபோர்னியாவில் வாழைகளை தோட்டங்களாக நான் பார்த்ததில்லை. அமெரிக்காவின் வாழைத் தோட்டம் தான் தென் அமெரிக்கா. அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளில் காடுகளை எரித்து வாழைத் தோட்டங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சூறையாடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உலகில் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் ஜேர்மனியர்களே என்றும் ஞாபகம். அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்காவை எரித்து எடுத்த வாழைப்பழங்களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்தார்கள்................... First banana, Second banana (முதல் போக வாழைப்பழம், இரண்டாம் போக வாழைப்பழம்) என்னும் குறியீடும், இவை ஒரு வகையான தர அளவீடுகள், இங்கிருந்தே வந்தன. காட்டை எரித்தவுடன் செய்யப்படும் முதல் போகத்தில் விளையும் வாழைப்பழங்கள் பெரிதாகவும், அடுத்த அடுத்த போகங்களில் சிறிதாகவும் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில்முறை விளையாட்டு வீரர்களை இந்த குறியீட்டால் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள் - First banana, அடுத்த நிலை வீரர்கள் - Second banana ,....................
-
வாழைப்பூ வடை
மிக்க நன்றி அல்வாயன். சில இன்றைய செய்திகள் அல்லது நிகழ்வுகள் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிடுகின்றன, அல்வாயன். அப்படியே மனம் போன போக்கில் அலைந்து அலைந்து எழுதுகின்றேன் போல.................... அவனின் முடிவு பெரும் துயரமே..........
-
வாழைப்பூ வடை
அண்ணா, ஏறக்குறைய இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அப்படியே நடந்தவை. அந்தக் கடைசி ஒரு வரி போலவே நண்பனின் வாழ்க்கை அவசரமாக, அநியாயமாக முடிந்தது. சொல்ல முடியாத சோகம் எந்த நாளில் நினைத்துப் பார்த்தாலும். நான் இதை கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தே அப்படி ஒரு (கடைசி) வரியில் முடித்தேன். மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்பதே இதன் சாரம், அண்ணா.
-
வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.
- VazhaiPooVadai.jpg
-
வணக்கம்.
வணக்கம் லிங்கம். மிகப் பழைய ஒரு உறவு போல......................👍.
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
மிக்க நன்றி வில்லவன். ஒரு 'காமடி டிராமா' எழுதித் தாருங்கோ என்று தான் இங்கு நான் இருக்கும் இடத்தில் என்னைக் கேட்பார்கள். இந்த நாடகத்தையும் அப்படித்தான் எழுதினேன். ஆனால் அப்பொழுது எழுதி முடித்த போது, பல வருடங்களின் முன், நான் சிரிக்கவில்லை, கண்களை துடைத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் இன்று இங்கு களத்தில் கடைசிக் காட்சியை மீண்டும் எழுதிய போதும், காலையிலேயே, கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தன................ இனி எங்கு காண்பமோ................ மிக்க நன்றி கவிஞரே. பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களினதும் ஒரே நோக்கம் தங்கள் சந்ததியை உருவாக்குதலே என்று சொல்லப்படுகின்றது. மரம் செடி கொடிகள் கூட. 'உருண்டு........' என்று அதையே சுட்டியிருந்தேன். ஆணும், பெண்ணும் இணைவது என்பதன் ஒரு வடிவம்...................
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
அமெரிக்காவின் சி - 130 சிறிய ஓடுபாதையிலேயே இறங்கி ஏறும் ஆற்றல் உள்ளது. அதனாலேயே அமெரிக்கா இந்த விமானத்தை பலாலி விமான நிலைய ஓடுபாதையில் இறக்கி ஏற்றக் கூடியதாக இருக்கின்றது. 2000 தொடக்கம் 3000 அடிகள் வரை நீளமான, ஒழுங்காக செப்பனிடப்படாத ஓடுபாதையிலேயே இந்த விமானம் இறங்கி ஏறும். பொதுவாக பெரிய பயணிகள் விமானம் ஏறி இறங்குவதற்கு 5000 அடிகள் அல்லது அதற்கு மேலான மிகச் சிறப்பான ஓடுபாதைகள் தேவையாக இருக்கின்றது. இந்தியா விமானப்படையிடம் சி - 130 இருக்கின்றது. ஆனாலும் அதை அவர்கள் இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இன்னமும் உபயோகிக்கவில்லை என்று நினைக்கின்றேன். சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
காட்சி 5 (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் கதைத்துக்கொண்டிடுக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: அமிர்தத்தின்ரை போக்கே வரவர சரியில்லை. பார்வதியோட எல்லோரும் நல்லா பழகிறது பிடிக்கவில்லை போல தெரியுது. அதிலயும் தப்பு இல்லை............. அமிர்தத்திற்கு இந்த வீடுதான் உலகம். அவளை விட வேற ஒருவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் தாங்க முடியாதுதான்........................ பார்வதி: ஓம் அப்பா, நானும் அதைக் கவனிச்சனான். அம்மா முந்தி மாதிரி இல்லை, கொஞ்சம் குழம்பின மாதிரி இருக்கிறா. தட்சணாமூர்த்தி: (சிரிக்கிறார்) என்ன பிள்ளை, அம்மாவிற்கு மெதுவா தட்டி விட்டுதென்று சொல்லிறாய்............... எங்க ஆளைக் காணவில்லை? பார்வதி: அம்மாவும் பெரியம்மாவும் கோயிலுக்கு போட்டினம். கோயில்ல இன்றைக்கு அம்மனுக்கு ஏதோ விசேசமாம், அம்மாதான் விடாப்பிடியா பெரியம்மாவை கூட்டிக்கொண்டு போனவா. அம்மாவிற்கு பெரியம்மாவில சரியான விருப்பம், ஆனால் நாங்கள் பெரியம்மாவோட அடுகிடைபடுகிடையாக இருக்கிறதுதான் பிடிக்கவில்லை. தட்சணாமூர்த்தி: அதுதான் பிள்ளை. அந்த பாரதத்தின்ட முகத்தைப் சில நேரத்தில பார்த்தால், சாட்சாத் அம்மனே குடி வந்த மாதிரி இருக்குது. பாரதத்தை முந்தி பார்த்த மாதிரி ஞாபகம் ஒன்றும் இல்லை................... பார்வதி: நீங்கள் மறந்துவிட்டியள், அப்பா. பெரியம்மா உங்கட கல்யாண வீட்டில நடந்த எல்லா விசயங்களையும் அப்படியே சொல்லுகிறா. பழைய கதை எல்லாவற்றையும் இப்ப நடந்தது மாதிரி சொல்லுகிறா................. தட்சணாமூர்த்தி: ஓமடி பிள்ளை, வயசும் போகுதுதானே, ஆனால் நான் எதையும் மறக்கிற ஆளில்லை. இப்ப இதுவா முக்கியம், எப்படி அமிர்தத்தை சமாதானப்படுத்திறதென்று பார்ப்பம்................. (அமிர்தமும் பாரதமும் கோயிலிலிருந்து வருகிறார்கள்.) அமிர்தம்: அப்பப்பா, என்ன வெயில், சித்திரை பிறந்தாலே சுட்டெரிக்குது காண்டாவனம்........... பாரதம்: அதுக்கும் கடவுளுக்குத் தான் பேச்சு.......... என்ன மனிதர், இயற்கையாக நடக்கிற விசயங்கள் நடக்கத்தானே வேண்டும். ஆயிரம் ஆயிரம் கோடி உயிரினத்தில ஒரு உயிரினம் தான் மானிடர். எல்லா நிகழ்வும் மனிதருக்கு மட்டுமே வசதியாக இருக்கவேணுமா..................... தட்சணாமூர்த்தி: என்ன பிள்ளை........... என்றைக்கும் இல்லாம இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு சலிச்சு போய் வந்திருக்கிறா............ அமிர்தம்: கோயிலுக்கு போய்விட்டு வாற வழியில, சனங்களின்ர பேச்சைக் கேட்டு பார்வதம் மனம் நொந்து போய்விட்டாள். ஒரே வெயில், மழையே இல்லை நிறைய நாளா, அம்மை வருத்தம், அது இது என்று சனத்தின்da பிரச்சனைக்கு பாரதம் தான் காரணம் என்று சனம் ஒரே திட்டு.............. பார்வதி: யார் திட்டினது பெரியம்மாவை? பெரியம்மா என்ன கடவுளோ இவையினர கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு............. யார் திட்டினது என்று சொல்லுங்கோ, நான் போய் நல்லா நாலு கேட்டிட்டு வாறன்................. அமிர்தம்: வாய் தடுமாறிட்டுது. பாரதத்தை சனம் ஏன் திட்டுது, கோயிலுக்குள்ள இருக்கிற கடவுளைத் தான் காரணம் என்று சொல்லுது. அதுதான் பாரதத்திற்கு ஒரே கவலையா போயிட்டுது. தட்சணாமூர்த்தி: இதுக்குப் போய் நீ ஏன் பிள்ளை கவலைப்படுகிறாய்? சனம் அப்படித்தானே, படைக்கிறதும் அவனே, காக்குறதும் அவனே, அழிக்கிறதும் அவனே, எல்லாமே அவன் தான். நல்லது நடந்தால் போற்றிவினம், பிடிக்காதது நடந்தால் மாறிவிடுவினம். இதுகளையெல்லாம் காதில வாங்கிக் கொள்ளாதே பிள்ளை............. பாரதம்: அப்படி என்னவென்று விட்டிட்டு இருக்கிறது? எவ்வளவு ஜீவராசிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே யாரையும் எதற்கும் குற்றம் சொல்வதில்லை, மனிதர் மட்டும் சகமனிதரையோ, இயற்கையையோ இல்லாவிட்டால் கடவுளையோ தேடி பழிசுமத்துகிறார்கள். தீதோ நன்றோ, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டுப் போறதுதானே? பார்வதி: இல்லை பெரியம்மா, ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை எப்படி அப்படி சாதரணமா சொல்லிறியள்........... எல்லோரும் ஏதோ முடிஞ்சளவு நல்லா, வசதியா வாழத்தான் விரும்பிவினம். மனிதர் மட்டும்தான் சிந்திக்கினம், மற்ற உயிர்கள் சிந்திக்கிறது இல்லை தானே.................. அமிர்தம்: ஏய் பார்வதி, பெரியவர்களுடன் அப்படி கதைக்ககூடாது.................. பார்வதி: நான் என்ரை பெரியம்மாவோட தானே கதைக்கிறன், நீங்கள் ஏதோ மூன்றாம் ஆளிடம் நான் கதைக்கிற மாதிரி சொல்லிறியள். பாரதம்: அமிர்தம், நீ சும்மா இரு. பிள்ளை என்னோட தானே கதைக்கிறாள். அவள் தனக்கு சரியென்று பட்டதை சொல்லுகிறாள். பார்வதி, மனிதருக்கு மட்டும் சிந்திக்கின்ற இயல்பை கொடுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக மற்ற உயிர்களை அழித்து வாழவோ அல்லது பழித்தும், பழி சுமத்தியும் வாழவோ இருக்காது. தட்சணாமூர்த்தி: சரி, சரி இதை விடுங்கோ. மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் சண்டை போடவேணும்.............. பார்வதி, அந்த புத்தகத்தை எடுத்து தா ஒருக்கால், நான் கொண்டு போய் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன். (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் செல்கிறார்கள். அவர்கள் சென்ற பின்) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தாயே, நான் ஆரம்பத்திலயே சொன்னனான் தானே. மனிதருக்குள் எல்லாம் இருக்குது, சந்தர்ப்பம் கிடைத்தால் அது அது வெளியில வரும். இந்த அற்ப மனிதரை பார்த்து நீங்கள் பதறலாமோ................. இது எல்லாம் உண்டு, உருண்டு, உறங்கி அழிந்து போகிற ஒரு சாதாரண பிறவிதான்......... பாரதம்: நீ சொல்வது முற்றிலும் சரியே அமிர்தம். அவரவர் அனுபவிப்பது அவை அவை செய்தவையே, மழை இல்லாமல் போனது ஏன் என்றால் மனிதன் மழையை அழித்து விட்டான். இது தெரியாமல் கழுதைக்கு கல்யாணம் முடித்து வைத்தால், மழை வருமா........... அமிர்தம், நான் திரும்பிப் போகிற நேரம் வந்துவிட்டது. அமிர்தம்: தாயே, நான் ஒரு மிகச்சாதாரண மனிதப் பிறவி. நான் எதும் தவறு செய்திருந்தால்…. பாரதம்: உன்னை அறிந்துதான் நான் விரும்பி வந்தேன். நீ என்றும் என் விருப்பத்துக்குரியவள். என்றும் என்னுடனேயே இருப்பாய்................ (முற்றிலும் இருட்டாகின்றது.) (அமிர்தம் மட்டும் தனித்து நிற்கிறார்.) (தட்சணாமூர்த்தியும் வருகின்றார்.) தட்சணாமூர்த்தி: என்ன, கோயிலுக்கு போய் வந்தனி, இன்னும் சீலைகூட மாத்தாமல் அப்படியே நிற்கிறாய்? பாரதம் எங்கே? (அமிர்தம் ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.) தட்சணாமூர்த்தி: ஏனப்பா, பாரதம் எங்கே.......... அமிர்தம்: அவ போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: எங்க போயிட்டா? அமிர்தம்: எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: இப்ப எப்படி போனா…..ஒன்றுமே விளங்கவில்லை. அமிர்தம், பாரதம் உண்மையில யார்? அமிர்தம்: பாரதம் என்னுடை பெரியம்மா மகள் தான். தட்சணாமூர்த்தி: உனக்கு உண்மையில ஒரு பெரியம்மா இல்லை என்ற எனக்கு தெரியும் அமிர்தம். அமிர்தம்: ஆ............. தலைய சுத்துதே............ யாராவது ஓடி வாங்கோவன்.............. (எல்லோரும் ஒடி வருகிறார்கள்.) (முற்றும்.)
-
பூரணநாயகி
எம் மக்களின் இப்படியான சொல்லொணா துன்பங்களையும், இழப்புகளையும் உறவினர்களும், நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வாழ்வா சாவா என்றே புலம் பெயர்தல், நிலத்திலும் நீரிலும், எப்போதும் இருக்கின்றது. சில வருடங்களின் முன் கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குஜராத்தி இந்தியக் குடும்பம், தாய் - தந்தை - இரண்டு சிறு பிள்ளைகள், ஒரு பனிப்புயலில் சிக்கி இறந்து போனார்கள். 'கடவுளே.............' என்று அரற்றுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை..............
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
மிக்க நன்றி அல்வாயன்...................👍. இந்தக் காலத்தில் மேடை நாடகங்களை ஒரு 25 அல்லது 30 நிமிடங்களுக்கு மேல் இழுத்தால் சனம் எழும்பிப் போக ஆரம்பித்து விடும் அல்லது கொட்டாவி விடுவார்கள்.............. ஐந்து அல்லது ஆறு காட்சிகளில் முடிக்க வேண்டியிருக்கின்றது. தொலைக்காட்சிகளில் என்றால் மெகா சீரியல் என்று இழு இழுவென்று இழுத்து வருசக்கணக்காக போடலாம்..............
-
மாவளி கண் பார்
இதற்கு கிழுக்கட்டை என்றும் ஒரு சொல் இருக்கின்றதா................. கொழுக்கட்டை என்ற சொல்லில் கட்டை கொஞ்சம் இடிக்குதே என்று நினைத்திருந்தேன்............... கிழுக்கட்டை என்பது கிட்டத்தட்ட கிளுவம் கட்டை என்பது போல ஒரேயடியாக இடிக்குதே...............🤣.
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
காட்சி 4 (வீட்டில் எல்லோரும் இருந்து கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: பாரதம், உன்னை இங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. அக்கம்பக்கத்து ஆட்கள் கூட உன்னைப் பார்க்க அடிக்கடி வருகினம். நீ பேசாம உன்னுடைய வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து, இங்கே பக்கத்திலயே இருந்திடன். அமிர்தம்: அப்படியெல்லாம் இருக்க முடியாது. அவையளுக்கு எவ்வளவு வேலை இருக்கும், உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. பார்வதி: வயது போன காலத்தில என்ன பெரிய வேலை இருக்குது? பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. இங்க வந்து எங்களோட இருக்கலாம். அமிர்தம்: பெரியம்மாவோ? லக்ஷனா: உங்கட அக்கா அம்மாவிற்கு பெரியம்மா, எனக்கு பெரிய அம்மாச்சி. அமிர்தம்: எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்ல............. பாரதம், நீ ஏதாவது வாய் மலரன். அள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் நான் மாட்டுப்பட்டு நிற்கிறன். (அயலவர் இருவர் – கனகா, சசி - உள்ளே வருகிறார்கள்.) அமிர்தம்: என்ன ரெண்டு பேரும் ஒன்றாக வாறீயள். முந்தி வருந்தி அழைச்சாலும் வரமாட்டியள், ஒரே வேலை என்று பாடுவியள், இப்ப ஓடி ஒடி வாறீயள்................. கனகா: அமிர்தம் மாமிக்கு எப்பவும் தமாஷுதான்.................. அமிர்தம்: என்னைப் பார்த்தா உனக்கு கோவை சரளா மாதிரி தெரியுதே............ ஒரே தமாஷு என்கிறாய். நான் கோபமா இருக்கிறன் ஆக்கும்..................... சசி: ஏன் மாமி கோபப்படிறியள்? பாரதம் மாமியிட்ட கேட்டால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுவா..................... தட்சணாமூர்த்தி: சசி, பிரச்சனையே பாரதம் மாமிதான்................ நாங்கள் எல்லாரும் அவவை இங்க வந்து இருக்கச் சொல்லுறம், அமிர்தத்திற்கு அதில அவ்வளவு உடன்பாடில்லை. கனகா: பாரதம் மாமி என்ன சொல்லுறா? பார்வதி: அவ ஒன்றும் பேசாமல் இருக்கிறா................. அம்மா வெருட்டி வைச்சிருக்கிறா போல இருக்குது. அமிர்தம்: சும்மா இருங்கோடி........ நானே வெருண்டு கிடக்கிறன்.......... இதுக்குள்ள வெருட்டி வைச்சிருக்கிறன், வெடிகுண்டு வைச்சிருக்கிறன் என்று நீங்கள் வேற. லக்ஷனா: பெரிய அம்மாச்சி, நீங்கள் என்ன சொல்லுறியள்................ பாரதம்: நான் இங்க நிரந்தரமாக வந்திருக்கிறது கொஞ்சம் சிரமமான விசயம், நீங்கள் எல்லாம் அங்க வரத்தானே போறீர்கள். அமிர்தம்: அவவின்ட இடத்திற்கு போறதிற்கு அவசரப்படாதேங்கோ............. ஆறுதலா போகலாம்................. பார்வதி: ஏன் ஆறுதலாக போகவேணும்........... இப்பவே போவம். அமிர்தம்: இவள் ஒருத்தி.......... எனக்கு சுடுமென்றா கொள்ளிக் கட்டையை எடுத்து தன்ரை குடுமியிலயும் செருகுவாள்............... தட்சணாமூர்த்தி: சரி, சரி இதுக்காக ஒருவரும் வாக்குவாதப்பட வேண்டாம். பாரதம் போகும் போது நாங்களும் போய் பார்த்திடுவம். சசி, நீ ஏதும் அலுவல் கதைக்க வந்தனியே...................... சசி: அலுவல் என்று ஒன்றும் இல்லை மாமா. பாரதம் மாமி சொன்ன மாதிரியே செய்தனான், பிள்ளை உடனேயே சுகம் ஆயிட்டான், அதுதான் மாமியிட்ட சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தனான். (அமிர்தம் பாரதத்தை முறைக்கிறார்.) அமிர்தம்: அவன் பிள்ளை சுகமாயிட்டான் என்று அப்பவே அவவுக்கு தெரியும். சசி: எப்பவே தெரியும்............. அமிர்தம்: எப்ப தெரிய வேணுமோ அப்பவே தெரியும். உனக்கும் எனக்கும் தான் ஒன்றும் தெரியாது................ அப்படியும் சொல்ல இயலாது.......... எனக்கென்டாலும் கொஞ்சமாவது தெரியுது. லக்ஷனா: என்ன அம்மாச்சி, முந்தி எல்லாம் தெரியும், உங்கள விட்ட ஆளில்ல என்று சொல்லுவீங்கள். இப்ப நல்லா அடக்கி வாசிக்கிறீங்கள்? தட்சணாமூர்த்தி: பிள்ளை, சும்மா சும்மா கேள்வி கேட்காதே. பிரசர் பூதத்தை கிளப்பி விடுவா................. கனகா: பாரதம் மாமி, பிரசருக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியும் தானே. அமிர்தம் மாமிக்கு ஒருக்கால் பார்த்து விடுங்கோவன்................. பாரதம்: அவ படிச்ச டொக்டரிட்ட மட்டும் தான் போவாவாம். நான் பார்க்கக்கூடாதாம். பார்வதி: படிச்ச வந்த டொக்டர் எல்லாம் அம்மாவை பார்த்தால் அடிச்சு பிடிச்சு ஊரை விட்டே ஓடுறாங்கள். தட்சணாமூர்த்தி: ஏன் பிள்ளை பாரதம், உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குது, நீ என்ன படிச்சனி? பாரதம்: எல்லாம் ஒரு அனுபவம் தான், மற்றபடி சாதாரண படிப்புத்தான். தட்சணாமூர்த்தி: என்னுடைய வீட்டுக்காரியும் நிறைய அனுபவம் உள்ளவள்தான், ஆனா ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.................. அமிர்தம்: இங்க ஒன்றும் மிஸ்ஸிங் இல்ல. மனிசருக்கு இருக்கிறது எல்லாம் எனக்கும் இருக்குது................... தட்சணாமூர்த்தி: அப்ப பாரதத்திற்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியுது? அமிர்தம்: ஐயோ, என்னைக் கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு தலயை சுத்திக்கொண்டு வருது........... கண்கூட கொஞ்சமா இருட்டுது.......... யாராவது என்னப் பிடியுங்கோ, நான் விழப்போகிறேன்................... (எல்லோரும் பதறிப் போய் அமிர்தத்தை பிடிக்கிறார்கள்.)
-
மாவளி கண் பார்
புலவரே, நான் தமிழர் இல்லாவிட்டால் வேற என்னவாம்.....................🤣. இதை நான் தான் எழுதினேன்.............. கொழுக்கட்டைகளை அருகில் வைத்துக் கொண்டு ஒரே மூச்சில் எழுதியது இது................. பச்சை தமிழன் ஆக்கும்................🤣.
-
மாவளி கண் பார்
நான் மட்டும் குழம்பவில்லை, ஊர் உலகத்தில் என்னைப் போலவே அண்ணன்மார்களும் இருக்கின்றார்கள் என்று சந்தோசமாக இருக்கின்றது...................😜. சொக்கப்பனை = சொக்கனின் பனை என்கின்றார்கள்............. கொழுக்கட்டை கிடைக்கும் என்றால், பனை பானை சொக்கன் சொர்க்கம் எப்படிச் சொல்லச் சொல்லுகின்றார்களோ அப்படியே சொல்லிவிடுவம்.....................🤣.
-
மாவளி கண் பார்
மாவளி கண் பார் -------------------------- சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை. நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து வெடித்து எரிந்ததும், எரி துகள்கள் மின்னி மின்னிப் பறந்ததும், ஒரு சிறுவன் காற்சட்டையுடன் சற்றுத் தள்ளி நின்று ஆவென்று பார்த்ததும், சுற்றியுள்ள இடங்கள் இருட்டாக இருந்ததும், கார்த்திகை மாத ஈரமும் நேற்று நடந்தவை போல நினைவில் இருக்கின்றது. எரிந்தது தென்னை மரம் என்றபடியால் பனை பற்றிய யோசனையே என்றும் மனதில் எழவில்லை. சொக்கப்பனை என்ற சொல்லை முதலில் கண்ட போது அது எழுத்துப்பிழை என்றே நினைத்தேன். மக்கள் என்பதைக் கூட மாக்கள் என்று எழுதினாலும், அது மக்களே என்று அனுசரித்து வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எழுத்துப்பிழைகள் ஒரு குற்றமே கிடையாது, 'விசயம் விளங்குது தானே.....................' என்று எழுத்துப்பிழைகளை ஏற்றுக் கொள்வதும், அமெரிக்க ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றே. விசயம் விளங்குது தானே. நேற்றிரவு கூட பாடசாலையில் தமிழ் படிப்பித்த ஆசிரியர் பற்றி நினைக்க வேண்டியதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவரே தமிழும், சமயமும் படிப்பித்தார். அவர் எதுவுமே படிப்பிக்கவில்லை என்று தான் நேற்றிரவும் நான் முடிவெடுத்து இருந்தேன். பின்னர் அப்படியே நித்திரை ஆகிவிட்டேன். சொக்கப்பனை பற்றி அவர் வகுப்பில் ஒரு மூச்சுக் கூட விட்டதில்லை. ஆனால் மாக்கள் என்ற சொல்லை அவர் வகுப்பில் சில தடவைகள் சொல்லியிருந்தது இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அவருக்கு தமிழ் தெரிந்திருக்கின்றது, ஆனால் வகுப்பில் படிப்பிக்க வேண்டும் என்ற விசயம் விளங்கயிருக்கவில்லை போல. பனை தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்கின்றார்கள். பனை ஒன்றை நடுவில் வைத்து, பனை ஓலைகளால் கூம்பாக மூடி எரிப்பதே சொக்கப்பனை என்ற விளக்கத்தை இணையங்களில் பார்த்தேன். சொக்கனின் பனை சொக்கப்பனை. அந்தக் காலத்தில் விவேகானந்தா சபையினரால் நடத்தப்படும் சமயப் பரீட்சைகளில் இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். நான் ஐம்பது வயதுகள் வரும் வரையும் இப்படி விசயம் விளங்காமல் இருந்திருக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடச் சொத்துகளை எரித்து அழிப்பதற்கு இதை ஒரு வழியாகப் பயன்படுத்தினார்கள் என்கின்றார்கள். சமஸ்கிருத ஆதரவாளர்கள் தமிழை நெருப்பில் தள்ளி விட சொக்கப்பனையை உபயோகித்தார்கள் என்கின்றார்கள். ஆரியம் - திராவிடம் - தேசியம் அந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் கொடுத்த திரிபோசா மா போன்ற ஒன்று. அந்த மா இலவசமாகக் கிடைத்தது, ஆனால் மனிதர்களை உசாராக வைத்திருக்க உதவியது. ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல. சொக்கப்பனையை பிடித்த உடன், மாவளி என்றால் என்ன என்பதே அடுத்த கேள்வியாக எழுந்தது. அடுத்த 50 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதால் மாவளியைத் தேடினேன். வீட்டுக்கு முன்னால் நாலு திசைகளிலும் நாலு தீபச் சுட்டிகளை வைத்து விட்டு, அதை மூன்று தடவைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சுற்றவேண்டும். அப்படிச் சுற்றும் போது, 'மாவளி கண் பார். எங்களை கண் பார். எல்லோரையும் கண் பார்..................' என்று பாட வேண்டும். சங்கீத சாரீரம் இல்லாதவர்கள் வசனமாகக் கூட சொல்லிக் கொள்ளலாம். இது எந்த ஊர் வழக்கம் என்று கேட்காதீர்கள். இது எனக்கு தெரிய வரும்போது நான் குடும்பஸ்தனாகி இருந்தேன். அதுவரை காலமும் இப்படி ஒரு பாடல் இருக்கின்றது என்பதே தெரியாமல் இருந்ததற்கு ஆசிரியரை குறை சொல்வதா, பிறந்த வீட்டைக் குறை சொல்வதா, உற்றார் உறவுகள் நட்புகளை குறை சொல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கின்றது. உங்கள் வீட்டில் இன்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழுக்கட்டை என்ற சொல்லை விட மோதகம் என்னும் சொல் நல்ல ஒரு ஓசையுடன் வருவதால் மோதகம் என்று சொல்லியிருக்கின்றேன். மோதகமா........... அப்படி என்றால் என்ன என்று சிலர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்கள். கேட்டது தமிழ்நாட்டு நண்பர்கள் தான். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் வல்லின கொழுக்கட்டை என்ற சொல்லே கைகொடுத்தது. அவர்களில் ஒருவர் தனியே என்னைக் கூட்டிப் போய், 'அது மோதகம் இல்லை சார்....................... மோதஹம்................' என்று மோதகத்தின் ஓசையை ஒரு மந்திரம் போல ஆக்கினார். திராவிடருக்கு கொழுக்கட்டை, ஆரியருக்கு மோதஹம் என்று நான் நினைவில் வைத்துக்கொண்டேன். மோதகமா, மோதஹமா அல்லது கொழுக்கட்டையா என்னும் பெயர் பெரிய பிரச்சனையே அல்ல. மாவளி பாடி முடிந்து ஒரு ஐந்து நிமிடங்களின் பின் தான் அந்த வஸ்துவை சாப்பிட முடியும் என்பது தான் நடைமுறை. அதனாலேயே வாழ்வில் மாவளி முக்கிய ஒன்றாகிவிட்டது. கொழுக்கட்டையை காக்க வைக்கும் இந்த மாவளி என்ன சாமியாக இருக்கும் என்று தான் முதல் சந்தேகம் வந்தது. பின்னர் தான் இதுவும் பனையின் பொருட்களில் இருந்து செய்யப்படும் ஒன்று என்று தெரிந்தது. மேலே படத்தில் இருப்பது. பனையின் பூக்களை பதமாக எரித்து விறகாக்கி, பச்சை பனை மட்டையை இடையில் மூன்றாகப் பிளந்து, அதற்குள் பூ விறகை வைத்துக் கட்டி, எரித்து, தலைக்கு மேல் வேகமாகச் சுற்றும் ஒரு தமிழர் பாரம்பரியமே விளக்கீடு அன்று மாவளி செய்து சுற்றுதல் என்று தகவல்கள் சொல்கின்றன. தமிழர் சமூகங்களில் மிகப் பழைய காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், முழுக் கல்லை தூக்கு, அரைவட்டக் கல்லை தூக்கு, குஸ்தி போடு என்று எல்லாம் சொல்வார்களாம். இந்த விடயத்துக்காக ஆரியர்கள் வில்லையே வளைத்து இருக்கின்றார்கள். அந்த நாட்களில் எங்கள் முன்னோர்கள் விளக்கீடு அன்று கொழுக்கட்டை வேண்டும் என்றால் மாவளி செய்து, கொழுத்தி, தலைக்கு மேல சுற்று என்றும் சொல்லியிருப்பார்கள் போல. வீரப் பரம்பரை தான், சந்தேகமே இல்லை, ஆனால் மாவளியையே சுற்றிக் கொண்டிருந்திருக்காமால், வெடிமருந்தையும் கண்டு பிடித்திருக்கலாம்.
- Maavali.jpg
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)