Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா........... நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.
  2. எங்களில் பலருக்குள்ளும் இதே கேள்வி இருந்து கொண்டேயிருக்கின்றது, கிருபன். பாசம், மனிதாபிமானம், குற்ற உணர்வு, விளம்பரம் என்று, நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல வகையான உந்துதல்கள் இருக்கின்றன. நாங்கள் செய்யும் சில செயல்கள் கூட இதில் எந்த வகை என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பதும் உண்டு என்றே நினைக்கின்றேன். விளம்பர வகை என்று வரும் போது ஒப்பீட்டளவில் கொஞ்சம் இலகுவாக அவற்றை உணர முடிகின்றது, உதாரணம்: சுதா நாராயணமூர்த்தியின் சேவைகள் பற்றி வரும் துணுக்குகள் போன்றவை. மற்றைய வகைகளை பிரித்தறிவது சிரமம் போல. நீண்ட பல வருட செயற்பாடுகளின் பின் இதுவரை இவற்றால் விளைந்த பயன்கள் என்ன என்ற கேள்வி சில சமயங்களில் பலருக்கும் ஒரு அயர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் ஜெயமோகன் அவர்கள் சொல்லியிருப்பது போல சில விடயங்களில் ஒரு சமூகமாக நாங்கள் பயன்களை கணக்குப் போட்டுப் பார்க்கவும் கூடாது என்றே தோன்றுகின்றது.
  3. எங்களின் காலகட்டம் மிக அதிகமாகவே இப்படியான ஒரு சூழலுடனேயே அமைந்துவிட்டது, சுவி ஐயா. சில வேளைகளில் தனிப்பட்ட ரீதியில் நான் களைத்துப் போய் விட்டேன் போல என்ற நினைப்பு கூட எனக்கு வருவதுண்டு..............
  4. இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது.................. https://www.jeyamohan.in/222076/ குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும் November 13, 2025 அன்பின் ஜெ, எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன். நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார். நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார். நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார். இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன. இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது? அன்புடன் ராஜேஷ் பெங்களூர் அன்புள்ள ராஜேஷ், இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம். குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர். குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது. ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும். நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான். பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது. குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார். இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை. பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை? ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை. நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்? “போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன். மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள். அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான். ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை. நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’ ‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும். ஜெ
  5. எழுதுங்கள் அல்வாயன்................ உங்களின் எழுத்துகளை வாசித்து ரசிப்பதற்கு இங்கு பலர், நான் உட்பட, இருக்கின்றார்கள்.................👍. எழுதுவதில் உங்களுக்கு சோம்பேறித்தனமா................ ஊர்ப் புதினம் பகுதிகளில் சில திரிகளில் பிளந்து கட்டுகின்றீர்களே..................🤣. அதே உற்சாகத்துடன் இங்கேயும் எழுதுங்கள்.................🤝.
  6. 🤣................ 'கடவுள் இருக்காரு அல்வாயன்...............', ஆனால் கோயில் மண்டபத்தில் வைத்து எனக்கு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு அவர் என்னோடு இதுவரை அவ்வளவு நெருக்கம் இல்லை போல............ 'மானிடனே, உன்னுள் இருந்து எழுதுவதும் நானே........... அல்வாயனின் உள்ளே இருந்து வாசிப்பதும் நானே..................' என்று இன்று இரவு கனவில் வந்து நிற்கப் போகின்றார்............🤣.
  7. 'Achilles heel' என்று கிரேக்க புராணங்களில் சொல்லப்படுவது போல, மிகவும் பலமான மனிதர்களுக்கும் ஒன்றோ சிலவோ பலவீனங்கள் அமைந்து, அவர்களை அழித்தும் விடுகின்றன, அண்ணா..........
  8. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா............. கொஞ்ச நேரம் வெளியில் நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்............... நான் இந்த செட்டை முடித்து விட்டு வருகின்றேன்...........' 'ஏன், உங்களிடம் இன்னொரு நெட் செட் இல்லையா................இரண்டு நெட் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடலாமே............' சிட்டாவிடம் ஏராளமான தலைமைத்துவப் பண்பு இருப்பது அவனை சந்தித்த ஒரு நிமிடத்திலேயே தெரிந்தது. இதோ வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு நான் விளையாட்டைத் தொடர்ந்தேன். சிட்டா ஏழரை மணிக்கு பின்னர் வந்து வெளியில் நின்றவர்கள் ஒவ்வொருவருடனும் கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்தினான் என்றே காதில் விழுந்த அவனுடைய பேச்சுகளில் இருந்து தெரிந்தது. அவன் அநேகமாக தெலுங்கு தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே எனக்குப்பட்டது. தெலுங்கு மக்கள் அவர்களது பெயர்களின் ஒரு பகுதியாக தங்களது சொந்த ஊர்களின் பெயர்களையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. சிட்டா என்பது அவனுடைய ஊரின் பெயரின் ஒரு சுருக்கிய வடிவமாக இருக்கலாம். அவனுடைய நண்பர்கள் அவனை இந்தப் பெயரால் கூப்பிட்டு அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது போல. சிட்டா என்பது சிட்டு என்பது போலவும் அழகாக இருந்தது. தமிழர்களிடமும் இதே வழக்கம் ஓரளவு இருக்கின்றது. எம்ஜிஆரில் இருக்கும் எம் என்பது மருதூர் என்பதையே குறிக்கும். அவர் இலங்கையில் இருக்கும் நாவலப்பிட்டி என்னும் ஊரிலேயே பிறந்திருந்தாலும், கேரளவில் இருக்கும் அவரது பெற்றோர்களின் ஊரான மருதூர் என்பதையே தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்தார். நாவலப்பிட்டி கோபாலன் ராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு இருந்திருந்தால், நடிகர் சிவாஜிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் போட்டியாக வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் அவர்களை இரண்டாம் இடத்தில் தள்ள இன்னொருவர் தான் வந்திருக்கவேண்டும். நாவலப்பிட்டி என்னும் ஊரின் பெயரே கோபாலன் ராமச்சந்திரனை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கும். மிகவும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை அவருடைய சொந்த ஊர், சண்முகவடிவு என்பது அவருடைய தாயாரின் பெயர். ஒருவரின் பெயரில் அவருடைய அன்னையின் பெயரும் சேர்ந்து இருப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இருக்கின்றீர்கள் சிட்டா...................... 'சூப்பராக இருக்கின்றேன்................. ஆமா, நீங்க கன்யாகுமரிப் பக்கமா..............' 'இல்லை சிட்டா, அதுக்கும் கீழே................. யாழ்ப்பாணம்.............' சிட்டா புரியாமல் ஒரு கணம் என்னையே பார்த்தான். நான் ஶ்ரீலங்கா என்றேன். சிட்டா தமிழ் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. மொத்தமாக 18 பேர்கள் அன்று வந்திருந்தார்கள். சரியாக மூன்று அணிகளாக பிரிக்கலாம். ஒரு அணி வெளியில் நிற்க, மற்ற இரண்டு அணிகளும் 21 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகளுக்கு விளையாடலாம். தொடர்ச்சியாக இரண்டு செட்டுகள் விளையாடிய அணி வெளியே வந்து நிற்பார்கள். எங்களிடம் மூன்று நெட் இருக்கின்றன, ஆனால் 18 பேர்கள் இருக்கும் போது இரண்டாவது நெட் போடுவது அவ்வளவு நல்ல ஒரு யோசனை அல்ல என்று சிட்டாவிற்கு எங்களின் அடிப்படை பொறிமுறைகளை விளங்கப்படுத்தினேன். சிட்டா நிறையவே யோசித்தான். சிட்டா ஒரு படு மோசமான விளையாட்டுக்காரனாகவே இருந்தான். கரப்பந்தாட்டத்திற்கு தேவையான திறமைகள் எல்லாமுமே அவனுக்கு சராசரிக்கும் குறைவாகவே வாய்த்திருந்தன. ஆனால் மிகவும் நன்றாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அத்துடன் காப்புறுதி மற்றும் வேறு சில சேவைகளும் வழங்கும் ஒரு சிறிய நிறுவனத்தையும் சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தான். அவன் எங்களுடன் கரப்பந்தாட்டம் விளையாட வந்திருக்கின்றானா அல்லது வாடிக்கையாளர்களை சேர்க்க வந்திருக்கின்றானா என்று எவராவது கேட்டால் அது ஒரு நியாயமான கேள்வியே. எப்போதும் எட்டு மணி அல்லது அதற்கும் பிந்தியே வந்தான். அவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு எவரும் விரும்பி முன்வருவதில்லை. ஆனால் அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவரும் வெளிப்படையாக எதிர்ப்பதும் இல்லை. ஒரு நாள் சிட்டா ஏழு மணிக்கே வந்துவிட்டான். அங்கு நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 'நான் இன்றிலிருந்து ஒரு ஸ்பைக்கர் ஆகப் போகின்றேன்........................' 'ஆகலாம் சிட்டா..............' 'நீங்களே அடிப்பதை பார்த்த பின் தான் எனக்கு ஒரு நம்பிக்கை.............. நீங்கள் அடிக்கும் போது நான் அடிக்க முடியாதா.............' உயரத்தையும், வயதையும் குறித்தே அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அன்று நெட் கட்டுவதற்கும், எல்லைகளை போடுவதற்கும் ஓடியாடி உதவிசெய்தான். பின்னர் அடிப்பதற்கு ஆயத்தமாக வந்து நின்றான். 1, 2, 3 என்று மூன்று கால் அடிகள் ஓடி, மூன்றாவதில் பாய்ந்து, நெட்டிற்கு மேலே கையைச் சுற்றி நான் போடும் பந்தை அடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதல் முயற்சியில் பந்து அவன் கையில் படவேயில்லை. பந்து தலையின் பின்புறமாக விழுந்தது. இரண்டாவது முயற்சியில் அவன் பாய்ந்து எழும்பி மீண்டும் கீழே வந்து நின்று கொண்டு, ஒரு ஆளுக்கு அடிப்பது போல பந்தை அடித்தான். அது நெட்டின் கீழால் போனது. 'சிட்டா, நீ மேலேயே பந்தை சந்திக்க வேண்டும்....................' 'இன்னுமொரு தடவை போடுங்கள்................. இந்த தடவை பாருங்கள் என்னுடைய அடியை...............' 'சிட்டா, நீ குடித்திருக்கின்றியா.....................' அவன் கதைக்கும் போது மணம் வந்து கொண்டிருந்தது. 'ஆமாம்............... நான் எப்போதுமே குடித்து விட்டுத் தான் வருவேன்.............. ஏன், இங்கு விளையாடும் போது குடித்திருக்கக் கூடாதா................' 'அப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இங்கு இல்லை.............. ஆனால் உன்னால் சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும்............' எவ்வளவு குடித்திருந்தாலும் தன்னால் எப்போதும் விடயங்களில் கவனமாக இருக்க முடியும் என்று சொன்னான். தினமும் காலையிலேயே ஆரம்பித்து விடுவானாம் என்றான். எப்பொழுதும் காரிலும் இருக்கும் என்றான். இப்பொழுது எனக்கும் தரவா என்றும் கேட்டான். 'தினமுமா..................' 'ஆமாம்..............' 'ஈரல், உடல் பழுதாகிப் போகாதா..................' 'இல்லை........... அதற்கு நான் ஒரு கைமருந்து வைத்திருக்கின்றேன். சில மூலிகைகளை அவித்து, அந்தக் கஷாயத்தை தினமும் படுக்கைக்கு போக முன் குடிப்பேன். அது ஈரலையும், முழு உடலையும் சுத்தப்படுத்திவிடும்..................' இங்கு கோவிட் காலத்தில், வீட்டில் சுத்தமாக்க வைத்திருக்கும் குளோரெக்ஸ், லைசோல் போன்றவற்றில் கொஞ்சத்தை குடித்தால், உள்ளிருக்கும் கோவிட் வைரஸ் அழிந்து விடும் தானே என்று அன்று அதிபராக இருந்தவர் சொல்லியிருந்தார். அவர் தான் இப்போதும் மீண்டும் அமெரிக்காவின் அதிபர். சிட்டா சொன்னது அதை ஞாபகப்படுத்தியது. 'இதையெல்லாம் நீ ஏன் செய்ய வேண்டும், சிட்டா, ஓரளவாகப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே..................' 'இல்லை........... நான் ஒன்றை நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன்.................' 'என்ன அது.....................' 'இது ஒன்றும் கூடாத விடயம் அல்ல................ இதனால் உடலுக்கு ஒரு கேடும் இல்லை...........' 'யாருக்கு நிரூபிக்கின்றாய்..................' 'இந்த உலகத்துக்கு.........................' பலருக்கும் உலகமே ஒரு போட்டியாக அல்லது எதிரியாக தெரிகின்றது போல. இவர்கள் உலகம் என்று சொல்வது ஒரு நாலு மனிதர்களாக இருக்கலாம், நாற்பது மனிதர்களாக கூட இருக்கலாம். யார் என்றாலும் அவர்களுக்கு என்று சொந்த வேலைகளும், சிக்கல்களும் இருக்கும் தானே. யார், எதை நிரூபிக்கின்றார்கள் என்றா சகமனிதர்கள் இங்கே அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தினமும் நியாயப்படுத்த முயல்வது பரிதாபமான ஒரு நிலையே. சிட்டா ஒரு ஸ்பைக்கர் ஆகவில்லை, ஆனால் தினமும் வந்து கொண்டேயிருந்தான். ஒரு நாள் விளையாடி முடிந்த பின் என்னுடன் தனியே கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றான். இனிமேல் விளையாட வரமாட்டேன் என்று சொன்னான். யாராவது அவனை ஏதாவது சொல்லி அல்லது திட்டி விட்டார்களா என்று கேட்டேன். அவனின் நிறுவனம் அவனை அமெரிக்காவின் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு மாற்றுகின்றார்கள் என்று சொன்னான். குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் உடனடியாக தனியே அங்கே போவதாகச் சொன்னான். பின்னர் அந்த வருட பாடசாலை ஆண்டு முடிந்தவுடன் குடும்பமும் அங்கே வந்து விடுவார்கள் என்றான். சில கணங்கள் இறுக்கிப் பிடித்தபடி நின்றான். பின்னர் சடாரென்று ஒன்றுமே சொல்லாமல் அவனுடைய காரை நோக்கி நடந்தான். விளையாட்டுத் திடலில் இருந்த மின் விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தன. கார்களின் தரிப்பிடத்தில் மட்டும் தெரு விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. அவனுடைய காரைத் திறந்த சிட்டா ஒரு கணம் அங்கிருந்து என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் மினுமினுத்தன. பல வருடங்களின் முன் இங்கு மிகப் பிரபலமான ஒரு தொழில்முறை கூடப்பந்தாட்ட வீரர் பார்வையாளர் ஒருவரை அடித்துவிட்டார். அந்தப் பார்வையாளர் தான் வீரரை மிகவும் தகாத வார்த்தைகளாள் சீண்டியிருந்தார். மிகவும் முன்கோபியான அந்த வீரரால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு தொழில்முறை வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவை. அந்த வீரரை ஒரு வருடம் விளையாட்டுகளில் இருந்து இடைநிறுத்தினார்கள். அந்த வருடக் கொடுப்பனவும் இல்லாமல். அது ஒரு 20 அல்லது 30 மில்லியன் டாலர்கள் வரும். அது பெரிய செய்தியானது. அந்த வீரரின் பாடசாலை நாட்களில் அவருடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவரிடம் ஒரு பேட்டி எடுத்தார்கள். அவர் இப்படிச் சொல்லியிருந்தார் - நான் தினமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இந்த வீரன் நேற்றிரவு துப்பாக்கியால் யாரையோ சுட்டான் என்ற செய்தி இருக்கவே கூடாது என்று தினமும் வேண்டிக் கொள்வேன் என்றார். சிட்டா இங்கிருந்து போன பின் அவனுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் போனது. சிட்டாவைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னை வந்தடையவே கூடாது என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன்.
  9. அண்ணா, நாட்டின் தலைவர்களை மட்டும் அன்றி, மதங்களை, மக்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அவமதிப்பது அல்லது ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், அவை மிக அவசியமும் கூட மனிதர்கள் தொடர்ந்து முன்னே செல்ல, ஆனால் சொல்லும் முறைகளில், பொது வெளிகளில், சில அடிப்படை நாகரிகம் பின்பற்றப்படவேண்டும். மம்தானியின் பேச்சில் இருந்த சவால்களும், சவடால்களும் கண்டிக்கப்படவேண்டியவையே. அதே போன்றே அதிபர் ட்ரம்பின் பேச்சுகளில், செயல்களில் இருக்கும் பல விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. முதலில் இவர் பொய்களை சொல்வதை நிற்பாட்ட வேண்டும். எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த வித பொறுப்புகளும் இல்லாமல் இவர் சொல்லும் விடயங்களும், மனிதர்களை பிளவுபடுத்தும் பேச்சுகளும் ஒரு தலைவருக்கு உரியது மட்டும் இல்லாமல், நீண்ட காலப் போக்கில் மிக ஆபத்தானதும் கூட. அரசியலில் மட்டும் இல்லை, தொழில்துறைகளில், ஆராய்ச்சிகளில், இலக்கிய முயற்சிகளில் கூட, புலம்பெயர்ந்த மக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலேயே சாதிக்க முடிகின்றது. தாயகங்களில் இருக்கும் தான்தோன்றித்தனமான போக்கும், குழு மனப்பான்மையும், மிகப் பரவலான தனிமனித வழிபாடுகளும், அசையா நம்பிக்கைகளும் தாயக மண்ணில் கடக்கவே முடியாத, மீறவே முடியாத கட்டுப்பாடுகளாக இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் நாசா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள். வைத்தியசாலை முழுவதும் இந்திய மருத்துவர்கள். தொழில்நுட்பத்துறையில் மேலிருந்து கீழ் வரையும் அவர்களே. இவர்கள் ஏன் இவ்வளவு பாடுபட்டு அமெரிக்காவை முன்னேற்றுகின்றார்கள்............ இந்தியாவை முன்னேற்றி, அதை 2020 இல் ஒரு வல்லரசாக இவர்களால் மாற்றி இருக்க முடியாதா.......... முடியவே முடியாது என்பதே உண்மை. இந்தியாவில் இருக்கும் சூழல் இவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. இதுவே தான் அரசியலுக்கும், சமூகநீதிப் போராட்டங்களுக்கும். நாங்கள் கூட தாயகத்தில் சொந்த ஊர்களில் இருந்திருந்தால், இங்கே இவ்வளவு சுதந்திரமாக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கமாட்டோம் என்றே நம்புகின்றேன்...........❤️.
  10. 'என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே...............' சின்ன வயதில் தெரிந்து கொண்ட இந்த நையாண்டிப் பாடல் அதன் உட்பொருள் தெரியாமலேயே மனதில் தங்கிவிட்டது. இது அந்நியருக்கு எதிரான ஒரு நையாண்டி என்று அன்று எவரும் சொல்லித்தரவில்லை................
  11. 🤣..................... எவ்வளவைத் தான் வீடு முழுக்க நிரப்பி வைத்திருக்கின்றோம்............... பல பொருட்களை பத்து வருடங்களுக்கும் மேலாக தொட்டுப் பார்ப்பதும் இல்லை.........
  12. எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை இன்னும் இது இருக்குதே என்று நினைவில் உருகி மெல்லிதாக தொட இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன சூட்கேசின் அடுத்த பக்கத்தில் அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால் 'என்னப்பா, அங்கே சத்தம்............ ஏதோ ஓடுதோ.................' 'காலில் தடக்கி ஏதோ சாமான் உருளுது..................' புலியையே முறத்தால் அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள் நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது சிஞ்ஞோரே.
  13. தேர்தல்கள் நடந்த இடங்கள் எல்லாமுமே ஜனநாயக்கட்சி செல்வாக்குள்ள இடங்களே - நியூயோர்க், நியூ ஜெர்சி, வர்ஜினியா, கலிஃபோர்னியா. ஜனநாயக்கட்சி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனநாயக்கட்சி பெற்ற அதிகமான வாக்கு வித்தியாசமே இதை ஒரு கொண்டாடும் வெற்றியாக மாற்றியுள்ளது, கோஷான். அதிபர் ட்ரம்பும், அவரது தீவிர ஆதரவாளர்களும் மம்தானியின் பேச்சை உதாரணமாக காட்டவே போகின்றார்கள். மதம் மட்டும் இல்லை, அவர் ஒரு தீவிர சோஷலிஸ்ட் என்பதும் பிரச்சாரம் ஆக்கப்படப் போகின்றது. ஆனாலும் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுகளும், பொருட்களின் விலைகளும், வேலையில்லாமல் போகின்றவர்களின் எண்ணிக்கையும் குடியரசுக்கட்சிக்கு எதிரான ஒரு பொது மனநிலையை உண்டாக்கியிருக்கின்றது போன்றே தெரிகின்றது.
  14. இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், ஆளும் குடியரசுக் கட்சிக்கு சார்பானவர்கள் மிக அதிக இடைவெளிகளில் தோற்றுப் போயிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. அந்த இடைவெளியே அதிபர் ட்ரம்பையும், அவருடைய கட்சியினரையும் பதற்றப்படவைக்கின்றது. 'வாக்குச் சீட்டுகளில் என் பெயர் இல்லை. அதனாலேயே தோற்றோம்..................' என்று அதிபர் ட்ரம்ப் காரணம் சொல்வது அவரது சிறுபிள்ளைத்தனமான கூற்றுகளில் ஒன்று. நாட்டின் அதிபராக, குடியரசுக்கட்சியின் முகமாக அவர் எல்லா தேர்தல்களிலும் குடியரசுக்கட்சியின் சார்பாக நிற்கின்றார். அதிபர் ட்ரம்பிற்கு மட்டும் இல்லை, எல்லா நாடுகளிலும், ஆட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களுக்கும் இது பொருந்தும்.
  15. மம்தானியின் முழு உரையும் கீழே இருக்கும் இணைப்பில் இருக்கின்றது. முழு உரையின் சில பகுதிகளை வெட்டி மேலே உள்ளதை உருவாக்கியிருக்கின்றார்கள். மம்தானியின் முழு உரையின் பொருள் வேறு. அவரை நியூயோர்க் மக்கள் தெரிவு செய்ததன் பின்னணியும் அதுவே. அதிபர் ட்ரம்பிற்கும், அவரது கட்சியினரின் அர்த்தமில்லாத நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலையே இன்று இங்கு நிலவுகின்றது. ஏதோ ஒன்று அல்லது சில அடையாளங்களுடன் இந்த வெற்றி மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, இது பெரும்பாலான, வேறு வேறு அடையாளங்கள் கொண்ட மக்களின் இன்றைய அரசுக்கு எதிரான ஒரு தீர்மானம். எந்த ஊடகங்களாலும் திரிபுபடுத்த முடியாத வாக்குமூலம் ஒன்றை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். https://www.theguardian.com/us-news/2025/nov/05/zohran-mamdani-victory-speech-transcript
  16. ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் சொல்வது சரியென்று தெரியவில்லை. இலங்கை தமிழர்களின் சனத்தொகை 11.1 வீதத்திலிருந்து 12.3 வீதமாக அதிகரித்திருக்கின்றது என்றே பகிரப்பட்ட தரவுகளில் இருக்கின்றது. இது இங்கு களத்தில் கூட ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு செய்தி.
  17. பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.
  18. ❤️.................... களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏. போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள். போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.
  19. 🤣............... என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣. அதுவென்றால் உண்மைதான்.................🤣. இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.
  20. 👍............. இப்ப ஞாபகத்தில் வருகின்றது.............. கோஷான் இங்கு களத்தில் ஒரு சிறு போட்டியும் வைத்திருந்தார்............... நான் ஆஸ்திரேலியாவை அன்றும் தெரிவு செய்திருந்தேன்............... என்னுடைய ராசி தான் பொல்லாத ராசி போல இருக்கின்றது, ஆஸ்திரேலியாவையே அடிவாங்க வைக்கின்றது..................🤣.
  21. 🤣............. அப்படி நடந்தால் சந்தோசமே, அண்ணா............. ஆனால் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு கப்பை கண்டாலே வயிற்றைக் கலக்கி, தலையைச் சுற்றி, வாந்தி எடுத்து, மயக்கம் வந்து............ இது எதுவும் அவர்களுக்கு வராவிட்டால், ஒரு மழையாவது வந்து அவர்களின் வெற்றியை தடுத்து விடுமாமே..................😜.
  22. 🤣........... இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றால் 'இந்திய பெண்கள் அணிக்கு வயது போய்விட்டது. இளம் வீராங்கனைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.......' என்று சொல்வார்கள் போல....................🤣. பையன் சார் வேற அங்கே ஒரு 18 வயது வீராங்கனை இருக்கின்றார், இங்கே ஒரு 20 வயது வீராங்கனை இருக்கின்றார் என்று இமயம் முதல் குமரி வரை ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கின்றார்...................😜.
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா! நதியின் ஓட்டத்தில் அதன் மேல் மிதந்து செல்லும் இலை போலவே வாழ்க்கை அதுவாகவே ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது, அப்படியே அது முடியும் என்ற எண்ணம் இருந்தாலும், உங்களின் கவிதையில் இருக்கும் இது போன்ற வரிகள் மனதை துணுக்குற வைக்கின்றது................❤️.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.