Everything posted by ரசோதரன்
-
மின் காற்றாலைத் தோட்டம்.
கண்டிப்பாக அடுத்த தடவை போகின்றேன்.
-
மின் காற்றாலைத் தோட்டம்.
👍👍..... லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லாஸ் வேகாஸ் போகும் பாதை நெடுக, நகர எல்லைகளை தாண்டிய பின், இப்படியானவற்றை பார்த்திருக்கின்றேன். மணலும், சிறு கள்ளிச் செடிகளும் நிறைந்த, பகலில் கொதித்து இரவில் உறையும், வெறும் பாலை நிலம். அடுத்த தடவை போகும் பொழுது இறங்கி உள்ளே போய் பார்க்க வேண்டும்.
-
மழைப் பாடல்கள்
இங்கு நேற்று மழை திரும்பவும். கொஞ்சமாகவே பெய்யும் என்றனர், ஆனால் அதிகமாவே கொட்டித் தீர்த்துவிட்டது. பெய்யும் போது கொஞ்சம் அசௌகரியம் தான் என்றாலும், இங்கு மழை பெய்வது மிக நல்லதொரு விஷயம். நேற்று முழுவதும் பெய்த மழைக்காக விளையாட்டு மைதானங்களையும், திடல்களையும் இன்று மூடி விடுவார்கள். அது தான் ஆகப் பெரிய பிரச்சனை.......🤣 நகர நிர்வாகத்தையும் குற்றம் சொல்ல முடியாது. ஆட்கள் அவர்களாகவே போய் வழுக்கி விழுந்து விட்டு, நிர்வாகத்தின் மேல் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடுவது இங்கு சர்வசாதாரணம். ஓடும் வெள்ளம், நிற்கும் வெள்ளம் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஊரில் விளையாடிக் கொண்டு திரிந்த எங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளும், ஒழுங்குகளும் கொஞ்சம் அதிகம் தான்.... 😀
-
மழைப் பாடல்கள்
மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்? காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.
-
எச்சரிக்கை
எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
-
முடிவிலி
🤣🤣..... இங்கு சப்வேயில் சாண்ட்விச் வாங்கப் போனால், உள்ளே என்ன என்ன போட வேண்டும் என்று கேட்பார்கள். எதைப் போடுவது, எதை விடுவது என்று தெரியாது, ஆதலால் எல்லாத்தையும் போடுங்கோ என்று சொல்லி விடுவது வழக்கம். அதே போலவே இந்தப் படம் பார்க்கிற பழக்கமும். எல்லாப் படத்தையும் பார்க்க முயற்சி செய்வது, பிறகு ஏன் தான் இதைப் பார்த்தோமோ என்று என்னை நானே நொந்து கொள்வது.....
-
முடிவிலி
முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
-
இந்தின் இளம்பிறை
ஆசான் அவர்களே, நானும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லுவதையே சொல்ல முயன்றிருக்கின்றேன். அந்தப் புரோகிதர் அவரின் கைத்தொலைபேசியில் பார்த்து, வாசித்து, பொருள் சொன்னவை பலவும் தற்கால நடைமுறையில் இருந்து எங்கோ தள்ளியும், ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுமே இருந்தன. அநதப் புரோகிதர் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்று நான் என் உறவினர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் எல்லோரினதும் நாடிகள் அப்படியே தளர்ந்து போய்விட்டன. இது இன்னொரு பிரச்சனை. பிற்குறிப்பு: நான் இங்கு இணைந்து ஐந்து நாட்களே. ஆனால் உங்களையும், இங்கிருக்கும் பலரையும் பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்கள் எழுத்தினதும், ஆக்கங்களினதும் வாசகன் நான். இப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தது நான் செய்த ஒரு பாக்கியமே. நன்றிகள் ஆசான்.
-
இந்தின் இளம்பிறை
செருப்பு தொலைந்தால் தொலைந்தது தான்...........கன்கூன் கடற்கரை என்றாலும்.........🤣🤣 தேங்காய் உடைப்பதற்கு ஒரு கத்தியையும் கொண்டு போக மறந்து விடாதேங்கோ. இல்லாவிட்டால் கையில் ஒரு கல்லைத் தந்து, தேங்காயை இப்ப உடை என்று சொல்லிவிட போகிறார்கள்.
-
இந்தின் இளம்பிறை
இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
-
ஆதி அறிவு
அடுத்த தடவை நீங்கள் இந்தப் பக்கம் வரும் போது, நானும் நீங்களும் அந்தப் புகையிரத நிலையத்திற்கு போகிறோம், ஜேக்கப்பை தேடிப் பிடிக்கிறோம், மிகுதிக் கதையைக் கேட்கிறோம்.......😀😀 ஜேக்கப்பும் அந்தப் பெண்ணும் வீதிகளில் வாழ்பவர்கள் (போன்று தெரிந்தார்கள்). ஹோம்லெஸ் ஆக, துணைகளுடன் வாழ்பவர்களிற்கிடையேயும் சண்டை சச்சரவுகள் மிகச் சாதாரணமாகவே அடிக்கடி வரும். பல தடவைகள் தெருவில் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கிடையேயும் அன்று ஏதோ ஒரு பிணக்கு ஆகியிருக்கவேண்டும். இவை எல்லாமே ஒரு அனுமானம் தான். ஜேக்கப் எங்கேயும் போயிருக்கமாட்டார். அன்றே பிந்திய இரவிலோஅல்லது அடுத்த நாளோ அந்தப் பெண்ணைத் தேடிப் போயிருப்பார். வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம் இது....🤣🤣
-
கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர்
அதுவே தான்.....👍 இங்கு கூட Oregon இலிருந்து California வந்து கொண்டிருந்த ஒருவரை, அதிகமான பனிப்பொழிவால் பிரதான சாலை மூடப்பட்டு விட, கூகிள் திசை திருப்பி சிறு தெருக்களால் இட்டுச் சென்றிருக்கின்றது. போன வழியில் ஒரு இடத்தில் அவரின் காரின் ஒரு பக்கம் அப்படியே பனியில் புதைந்து விட்டது. தொடர்பும் அற்றுவிட்டது. பின்னர் போலீசார் அவரை மீட்டதாக செய்திகளில் காட்டினர். பிரதான சாலையே பனிப்பொழிவால் மூடப்பட்டால், சுற்றி வர இருக்கும் சிறு சாலைகளிலும் பனிப்பொழிவு மிக அதிகமாகவே இருக்கும். சிறு சாலைகளின் பராமரிப்பும் எப்போதும் சிறப்பாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
-
ஆதி அறிவு
இங்கு வீட்டை விட்டு வீதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட் தொற்றுக் காலத்தின் பின் பல மடங்காகிவிட்டது. நீங்களும் இதைப் பார்த்திருப்பீர்கள். தினமும் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். 'ஆதி அறிவு' தொடராது.......😀 நாங்கள் என்ன செய்தாலும், எங்கே செய்தாலும், வீட்டிற்கு அது எப்படியோ தெரிந்து விடுகின்றது. இந்த அறிவு/திறமை பெண்களுக்கு மனிதன் தோன்றிய ஆதி நாட்களில் இருந்தே இருக்கின்றது போல..... 😀
-
காருண்யா
உங்கள் வரவு நல்வரவாகுக. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கடும் வெயில் வெறும் நிலத்தில் பட்டுத் தெறிப்பது போல உங்கள் எழுத்து சுட்டு நிற்கின்றது.
- பெயர் மாற்றங்கள்.
-
ஆதி அறிவு
😀... அதில் வந்து இறங்கிய இருவரை ஏற்றிக் கொண்டு நான் வீடு வந்து விட்டேன். ஆனால், கண்டிப்பாக, ஜேக்கப் அதில் ஏறியிருக்கமாட்டார். அப்படியெல்லாம் விட்டிட்டு ஓடிப் போகும் துணிவு ஜேக்கப்புகளுக்கும், எங்களுக்கும் கிடையாது........... 🤣
-
ஆதி அறிவு
ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
சினிமாவில் போதைப்பொருள் கடத்துவார்கள். ஆனால், போதைப்பொருள் கடத்தி சினிமா எடுப்பது இது தான் முதல் தடவை என்று எங்கோ ஒரு பகிடி இருந்தது.
-
பெயர் மாற்றங்கள்.
அன்பின் நிர்வாகத்தினருக்கு, ரசோ என்னும் என் பெயரை ரசோதரன் என்று மாற்ற முடியுமா? ரசோ என்னும் பெயர் தமிழாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தனர். அதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். மிக்க நன்றிகள்.
-
ஒரு கோப்பை தேநீர்
சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு தனிக் காப்புறுதி பற்களுக்கு புறம்பாக இன்னொன்று மரணக் காப்புறுதி வரை கட்ட வேண்டும் தண்ணீர் காஸ் கரண்ட் இன்டர்நெட் இரண்டு வகை ஃபோன்கள் குப்பை இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள் ஆர்வம் அதிகமானால் நெட்ஃபிளிக்ஸ் பிரைம் ஐபி டிவி பாக்ஸ் கேபிள் சாட்டிலைட் யூடியூப் டிவி ஸ்லிங் இப்படியும் சில செலவுகள் இருக்கும் கோவில்கள் சங்கங்கள் மையங்கள் அமைப்புகள் நிறுவனங்கள் இவையும் கையை எதிர்பார்க்கும் விழாக்கள் கொண்டாட்டங்கள் விருந்தினர்கள் தவிர்க்க முடியாதவை பயணங்கள் கட்டாயப் பயணங்கள் சொந்தங்கள் பொறுப்புகள் கடமைகள் இதில் எதையும் விடவும் முடியாது வழமையான வீட்டுச் செலவுகள் பள்ளிச் செலவுகள் பள்ளிக்கு பின் வரும் செலவுகள் இவை ஒரு தனிக் கணக்கு சாஸ்த்ரிய கலைகள் அரங்கேற்றம் சாமத்திய வீடு என்றால் கட்டுக் கட்டாக வேண்டும் இத்துடன் சேமிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் இவைக்காக கண் முழித்தால் கண் மூடும் வரை ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் வீடு தேடி வந்தால் இருக்க விட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்.
-
வல்வை மண்ணில் பிரித்
அருமையான படங்களும், செய்திகளும்......👍👍 நீங்கள் சொல்லியிருப்பது வல்வை வளைவு இல்லை. அது வல்லை வளைவு என்றே நினைக்கின்றேன். வல்லைச் சந்தியும், வல்வைச் சந்தியும் வேறு வேறு. வல்வையில் உதயசூரியன் கடற்கரைக்கு போகும் வழியில், தலைவரின் வீட்டிற்கு அருகாமையில், ஒரு வளைவு கடற்கரையை நோக்கி இருக்கின்றது.
-
தூய அடையாளம்
அப்படித்தான் செய்கின்றார்கள்.......👍 அத்துடன் சில அமெரிக்கர்களின் பூகோள அறிவு கொஞ்சம் விசித்திரமானது. ஒரு நீண்ட நேர இலங்கை, இந்தியா பற்றிய விளக்கத்தின் பின்னும், நீங்கள் கடைசியாக இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று என்னைக் கேட்டவர்களும் உண்டு. சில வருடங்களின் முன், வட கொரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற ஐயம் இருந்தது. இங்கு ஒரு தொலைக்காட்சியில் உலக வரைபடத்தை போட்டு, வட கொரியா எங்கிருக்கின்றது என்று பலரை நேரலையில் கேட்டனர். ஒருவர் சிறிது நேரம் நன்றாக யோசித்து விட்டு, அமெரிக்காவிற்கு மேலே (கனடாவை) தொட்டுக் காட்டினார்...........😀
-
தூய அடையாளம்
சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.....👍 இங்கு (அமெரிக்காவில்) அவர்கள் தமிழில் கதைப்பதை விட, நாங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதே பரவாயில்லாமல் இருக்கிறதே என்று தான் நிலைமை போய்க் கொண்டிருக்கின்றது....😀
-
தூய அடையாளம்
தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்று கணிக்கக்கூடிய வகைகளில் மனிதர்களுக்கு இடையே தனித்துவம் இருந்தது. புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம். இந்தியர்கள் தென்னிந்தியாவா என்று கேட்டனர், தென்னிந்தியர்கள் கேரளாவா என்றனர், இல்லை இல்லை ஶ்ரீ லங்கா என்று என் அடையாளத்தை நிலைநிறுத்தவே நிறைய சக்தி தேவைப்பட்டது. ஒரு தடவை ஒரு பங்களாதேஷ் நண்பரை நீ இந்தியாவா என்று தெருவில் ஒருவர் கேட்க, அவர் மிகவும் கோபப்பட்டு, எகிறிக் குதித்து பனியில் சறுக்கி விழுந்து போனார். அவருக்கு அவரின் அடையாளம் அவ்வளவு அவசியமான ஒன்றானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் எங்களின் தலைமுறைக்கு அடையாளம் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் அங்கிருந்து கொண்டு வந்த அடையாளங்களுடனேயே இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இன்னும் இன்னும் அடையாளத்துடன் அதிகமாக ஒட்டியுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும். இப்படியே எங்களின் வாழ்க்கைகள் முடிந்தும் விடும். ஆனால், பிரச்சனை அடுத்த மற்றும் பின் வரப் போகின்ற தலைமுறைகளுக்கே. இங்கு ஒரு பல்கலையில் இந்த விடயத்தை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் இடையே இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசும் ஒரு பெரும் சமூகமே இங்கிருப்பதால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறைகளில் அடையாளம் என்பது ஒரு சிக்கலான ஒரு விடயமாக இருக்காது என்றே உடனே எண்ணத் தோன்றும். ஆனால், அவர்களின் நிலைமையும் எங்களின் நிலைமையும் ஆச்சரியமாக ஒன்றாகவே இருக்கிறது. அச்சு அசலாக ஒன்றாக இருக்கின்றது. புதிய தலைமுறை ஒரு லத்தீன் அமெரிக்கராக இருக்க வேண்டிய அளவிற்கு லத்தீன் அமெரிக்கராக இல்லை என்று புலம் பெயர்ந்த தலைமுறை குற்றம் சாட்டுகின்றது. புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் இவர்கள் எங்களின் உச்சரிப்பை நக்கலும், நையாண்டியும் செய்கின்றார்கள் என்று முந்தைய தலைமுறையை நோக்கி விரலை நீட்டுகின்றனர். அமெரிக்கர்களோ எங்களின் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர். நாங்கள் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று ஆதங்கப்படுகின்றனர். மொழி விடாது போல.
-
பூச்சியமான நேரம்
நன்றிகள் பெருமாள். நன்றிகள் கந்தையா. இந்த வருட போட்டிகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 ம் திகதிகளில் சாக்ரமெண்டோ நகரில் நடக்க இருக்கின்றது.