Everything posted by ரசோதரன்
-
பிறந்த 4 மாதங்களே ஆன குழந்தை இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்
இன்றைய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என்று சில மாதங்களின் முன் இவர் சொல்லியிருந்தார். வாரத்திற்கு 40 மணித்தியால வேலையிலேயே நாங்கள் உக்கி மக்கிப் போகின்றோம் என்று பலர் எதிர்க் கருத்துகள் சொல்லியிருந்தனர். பேரப் பிள்ளைக்கு சும்மாவே 240 கோடிகளை கொடுத்து விட்டார் என்று இப்பொழுது இவரை வைத்து காமடிகள் வரப் போகின்றன.
-
கனடாவில் கார் களவு.
🤣🤣..... இங்கு கார்களிலிருந்து Catalytic Converterஐ வெட்டி எடுப்பது தான் மிகச் சமீப காலம் வரை பெரிய திருட்டாக இருந்தது. ஒரு பெரிய கும்பல் ஆயிரக்கணக்கான பாகங்களுடன் சமீபத்தில் மாட்டும்பட்டது. ஒரு வார விடுமுறை நாள் அதிகாலை 6 மணி இருக்கும். வீட்டின் முன்னால் யாரோ மோட்டார் சைக்கிள் ஓடுவது போன்ற சத்தம். பக்கத்து வீட்டில் யாரோ விருந்தாளிகள் வந்திருக்கின்றார்கள் போல, ஏதோ காலையிலேயே ஓடுகின்றார்களாக்கும் என்று நினைத்து விட்டு, அப்படியே எட்டிப் பார்க்காமல் இருந்து விட்டோம். சில மணி நேரங்களின் பின்னர் போலீஸ் கார்களின் நீலமும், சிவப்புமான வெளிச்சத்தை பார்த்து, வெளியில் போன பின் தான் தெரிந்தது..........பக்கத்து வீட்டுக்காரர்களின் ஒரு காரின் Catalytic Converterஐ வெட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று. சைலன்சர் குழாயையும் சேர்த்து அரிந்து எடுத்துப் போயிருக்கின்றார்கள்.
-
சிறந்த நடுவர்
அன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்டியர் அதைக் கேட்டு நாளை உடைத்து அனுப்புகிறோம் அவர்கள் உயிர் மட்டும் விடுவோம் இது சத்தியம் என்றார்கள் இன்று முடிக்கப் போகின்றார்கள் சபதத்தை சத்தியமா நடுவருக்கு எந்தச் சங்கதியும் தெரியாது விசிலடித்ததும் விரைந்தது பந்து வந்த பந்தை விட்டிட்டு பந்தோடு வந்தவனின் காலில் ஒரே போடு விழுந்தவன் வலியோடு நடுவே பார்த்தான் நடுவர் வெளியே பார்த்தார் முதல் பந்திலேயே முழுவதும் தெரிந்துவிட்டது நடுவருக்கு முந்தியும் பல தடவைகள் இந்த நடுவர் பின்பக்கம் இருக்கும் கோவிலடியால் ஓடியிருக்கிறார் கறுப்புச் சட்டையுடன் படார் படார் படார் விழுந்து எழும்பி ஓடி விழுந்தனர் சந்தியில் வாய்விட்டவர்கள் ஓடினால் அடி ஒதுங்கினாலும் அடி விசிலை விழுங்கி விட்டார் மெத்தப் படித்த நடுவர் சண்டியர்கள் ஆளடிக்க சவலைகள் பந்தடிக்க பத்து நிமிடம் இன்னும் இருக்க சவலைகள் ஒன்று சண்டியர் பூஜ்யம் சண்டியர்கள் கூடிப்பிரிந்தனர் கிளைமாக்ஸ் ரெடி இப்ப பார்த்து இரண்டு பேர்கள் முட்டுப்பட இதுவரை அடிக்காத விசிலை மறந்து அடித்தார் சிறந்த நடுவர் பொறி பறக்க நாலு சண்டியர்கள் பாய்ந்தனர் நடுவரைச் சுற்றி நடுவர் நாக்குக் குளறி திக்கித் திணற படார் என்று ஒரே அடி இந்த முறை நடுவருக்கு தலையில் அடியோடு கோவிலுக்கு ஓடி கடற்கரைக்கு ஓடி கரையால் ஓடி அன்றும் தப்பினார் சிறந்த நடுவர் உயிரோடு.
-
கனடாவில் கார் களவு.
கனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀 ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀 கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கூட்டணி பேரம் பேசும் பல கட்சிகள், பாமக, தேதிமுக போன்றவை, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு கட்டாயமாக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றன. மக்களவைக்கு மக்கள் வாக்குகள் போட்டு இவர்களை தெரிவு செய்யா விட்டாலும், ராஜ்யசபாவிற்காவது தங்களின் குடும்ப வாரிசுகளையாவது அனுப்பலாம் என்ற எண்ணம் போலும்.
-
பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
நல்லதொரு முயற்சியும், தொடக்கமும்.....👍 மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மட்டும் தங்கியிருக்காமல், பிற நிறுவனங்களின் மென்பொருட்கள் மற்றும் இலவசமாக கிடைக்கும் Open Source மென் பொருட்களையும் மாணவர்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தல் சிறந்தது.
-
வல்வை மண்ணில் பிரித்
அதுவே....👍 இராணுவ முகாமுக்குள் அல்லது போலீஸ் நிலையத்திற்குள் அவர்கள் எதையும் செய்து கொள்ளலாமே தவிர, வல்வையில் வேறு எங்கும் முடியாது.
-
அம்பானியின் வறுமை
'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்பவன். சென்னை நான் பிறந்த ஊரைக் காட்டிலும் எனக்கு எண்ணற்ற சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு நான் சென்னைக்கு அன்றாடம் செய்ய வேண்டியதும், இந்த ஊரோடு கரைந்துபோவதுமே கைம்மாறு. அப்படி இருக்க ஏன் கல்யாணச் சாப்பாட்டை ஓர் இழப்பாக நான் கருத வேண்டும்? இங்கு எனக்குச் சொந்தங்கள் இல்லையா, நண்பர்கள் இல்லையா அல்லது யாரும் விசேஷங்களுக்கு அழைக்கவில்லையா அல்லது சாப்பாட்டில்தான் ஏதும் குறைச்சலா? குறைச்சல் எல்லாம் இல்லை, அதீதம்தான் சென்னையின் பிரச்சினை. இன்று அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுமே இப்படி மாறிவருகின்றன என்று சொல்லலாம். ஊர்ப் பக்கத்தில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் மாலை அல்லது கல்யாணத்தன்று காலை டிபன் மெனு பெரும்பாலும் இப்படி இருக்கும்: அசோகா அல்லது கேசரி, மெதுவடை அல்லது போண்டா, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம் அல்லது பூரி, கூடவே இட்லி, சட்னி, சாம்பார். சாப்பிட்டு முடித்ததும் காபி. மதிய விருந்து: சோறு, சாம்பார், ரசம், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ஒரு வறுவல், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு பச்சடி, தயிர், கூடவே அப்பளம் – வடை – பாயசம். அவரவர் விரும்புவதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்; வேண்டாததை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கேட்டுப் பரிமாறுவார்கள். ஆஹா! எவ்வளவு எளிமையான மெனு என்று சொல்பவர்கள், நான் கூறியிருப்பதே கொஞ்சம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சின்ன வயதில் என் தாத்தாவுடன் வெளியூருக்கு ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். தாத்தாவின் நண்பர் விருந்தில் பண்டங்களை அதகளப்படுத்தி இருந்தார். எனக்கு அந்த வயதில் அது விசேஷமானதாகப் பட்டது. தாத்தா முகம் சரியில்லை. ஊர் திரும்புகையில் கேட்டேன், “தாத்தாவுக்குச் சாப்பாடு பிடிக்கலையோ?” கவனம் களைந்தவராகச் சொன்னார், “அப்படி இல்லப்பா, எலையில பத்து வகை, பதினைஞ்சு வகையினு உணவை வெக்கிறது ஆடம்பரத்தின் பெயரிலான அநாகரிகம். விருந்தாளிகளுக்கு அன்பை உணவா பறிமாறினா சாப்பிடலாம், அவனவன் அகங்காரத்தை ஏன் பரிமாறணும்? விசேஷங்கிறது பல தரப்பு ஆளுங்களும் வர்றது; யாரையும் நம்ம வசதியால சிறுமைப்படுத்திடக் கூடாது!” வயது மெல்ல நகர்ந்தபோது தாத்தா சொன்னது புரியலானது. அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்கள் கோடிக் கணக்கானோர் வாழும் நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைச் செலவிடுவதில் மிக்க பொறுப்புணர்வு வேண்டும். தம்முடைய விருந்தினர்களுக்கு இலையில் ஒருவர் இருபது பதார்த்தங்களை வைக்கிறார் என்றால், அது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான். விருந்தினரின் உணவு விருப்பம், ரசனை, உடல்நிலை என எல்லாமே அங்கு அடிபட்டுவிடுகிறது. விருந்துக்கு அழைத்தவர் எங்கோ தன்னுடைய தாழ்வுணர்வை இதன் மூலம் பூர்த்தியாக்கிக்கொள்ள முற்படுகிறார். சென்னையில் மாதத்துக்குப் பத்துப் பதினைந்து விசேஷங்களுக்கு எனக்கு அழைப்பு வரும். பெருநகர வாழ்வில் வேலை நெருக்கடி காரணமாகக் காலை நிகழ்ச்சிக்குச் செல்வது இன்று பெரும்பாலானோருக்குச் சாத்தியமற்றுவிடுவதால், நெருங்கிய உறவினர்களே அதில் பங்கேற்கிறார்கள்; முந்தைய நாள் அல்லது பிந்தைய நாட்களின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளே ஊருக்கானதாக அமைகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் அப்படித்தான் செல்கிறேன். எந்த விருந்துப் பந்தியிலும் குறைந்தது இருபது இருபத்தைந்து பண்டங்கள் இருக்கும். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், தயிர் சாதம், பாயசம், ஐஸ்க்ரீம், காபி, பீடா… என்ன எழவுடா இது; யாரெல்லாம் வீட்டில் இப்படி டிபன் சோறு எல்லாவற்றையும் வகைதொகை இல்லாமல் கலந்து கட்டிச் சாப்பிடுகிறார்கள்; ஏன் வருகிற விருந்தினர்களை இப்படி வாட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றும். எல்லோருமே எல்லாவற்றையும் பெரிய செலவில்லாமல் எளிமையாகத்தான் செய்தாக வேண்டும் என்று இல்லை. விசேஷ வீட்டுக்காரர்கள் வசதிக்கேற்ப செலவிடுவது அவர் சுற்றத்தாருக்கும் நல்லது, நாட்டுப் பொருளாதாரத்துக்கும் நல்லது. பயனுள்ள வகையில் அதைச் செலவிடலாம். லட்ச ரூபாயில் நூறு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு பதில், சுற்றத்தார் தவிர ஐந்நூறு பேரை அழைத்து அன்னதானம் செய்யலாமே! வசதி இருக்கிறதோ, இல்லையோ; கடன் வாங்கியேனும் பெருஞ்செலவு செய் என்பது இன்று இந்தியாவில் ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்துவருகிறது. அதிலும் விருந்துகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதும், உயர் செலவில் இப்படித் தயாரிக்கப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதும் பாவக் கேடு. பல்லாயிரம் கோடிகள் ஒவ்வோர் ஆண்டும் இப்படி பாழாகின்றன. காந்தியைப் பிற்காலகத்தில் ஆழ ஊன்றி வாசித்தபோது வேறொரு விஷயம் பிடிபட்டது. தன்னுடைய ஆகிருதியை வெளிக்காட்டிக்கொள்ள உணவு, உடை, வாகனம் என்று ஒவ்வோர் அம்சத்திலும் தேவையைத் தாண்டி செலவிடுவோர் அகங்காரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அவர்களிடம் உள்ள மோசமான வறுமையையும் வெளிக்காட்டுகின்றனர். காந்தியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அது ‘ஆன்ம வறுமை’. ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தருமான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியினுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண தடபுடல்களைக் கண்டபோது திகைப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி இந்தியாவின் முக்கியமான நட்சத்திரங்கள் அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுவந்து நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் மணமக்கள் நடனம் ஆடுகையில் துணை நடிகர்கள் போன்று பாலிவுட் பாட்ஷாக்கள் ஷாரூக்கானும், சல்மான் கானும் உடன் ஆடவைக்கப்பட்டது ஒன்று போதாதா இந்நிகழ்வின் பின்னுள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள? இதற்கெல்லாம் செலவு ரூ.1250 கோடி செலவு என்கிறார்கள். மூன்று நாட்களில் பறிமாறப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மட்டும் 2,500 என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆடம்பரம் என்று சிலர் பிரமிக்கலாம்; எவ்வளவு அருவருப்பு என்று சிலர் முகம் சுளிக்கலாம். எனக்கு அம்பானியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமுமாகத்தான் இருந்தது. சுற்றிலும் எவ்வளவு செல்வம் குவிந்திருந்தாலும் சில மனிதர்களிடம் எவ்வளவு பெரிய வறுமை! மனிதர்களின் ஆன்ம வறுமையைச் செல்வத்தைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை! https://www.arunchol.com/samas-article-on-anant-ambani-radhika-merchant-marriage
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
😀😀.... இங்கே பெயர், சொந்த ஊர், வயது இப்படியானவைற்றை சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை....... சுய ஆக்கங்களில், சிறுவனாக 80ம் ஆண்டுகளில் இருந்த போது நடந்த சில விசயங்களை எழுதியிருக்கின்றேன்......🤣 நீங்கள் இங்கே களத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்😀.......ஒரு மாற்றுக் கருத்து.....👍
-
கண்ணுறுவது கண்ணோட்டம்
மிகவும் அருமையான ஒரு கட்டுரை, ஆசானே. எங்களில் பலருக்கு இருக்கும் உளச் சிக்கல்களை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள். சமீபத்தில் 'குருகு' இதழில் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் அவர்களுடனான ஒரு நேர்காணலை வாசித்தேன். அதில் வைணவன் என்பன் யார் என்னும் கேள்விக்கு அவர் ஒரு பதில் சொல்லியிருந்தார். எல்லா நெறிகளும் ஒன்றையே சொல்லுகின்றன என்று தோன்றியது. ஆனால், நெறிப்படி நடப்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கின்றது. **** வைணவன் என்பன் யார்? ‘பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன். ஏனெனில் இந்த உலகமாக இருப்பவனும் அவற்றில் உயிராக இருப்பவனும் பரமாத்மாவே. மரம், புழு, பூச்சி என அனைத்து உயிருக்குள்ளும் அவனே உறைகிறான்..........
-
காதலர், ஆன்மிகவாதி அம்பேத்கர்
அம்பேத்கர் அவர்கள் பற்றி அவரின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதிய நூலில் உள்ள சில விடயங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார் ஷங்கர்ராமசுப்ரமணியன். நல்ல ஒரு கட்டுரை. இது 'அகழ்' இதழில் வந்துள்ளது. கட்டுரையில் உள்ள ஒரு பந்தி: “26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.” *********************** காதலர், ஆன்மிகவாதி அம்பேத்கர் : ஷங்கர்ராமசுப்ரமணியன் நாம் பொதுவில் அறிந்த பாபா சாகேப் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் அரசமைப்பைச் செதுக்கிய முதன்மைச் சிற்பி. இந்தியக் குடியரசின் முதல் சட்ட அமைச்சர். உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு நிராதரவாக நின்றிருந்த மக்களின் மீட்பர். சட்டஞானி. மனிதநேயவாதி. திறன்மிக்க நாடாளுமன்றவாதி. இப்படி பல குணாம்சங்களால் அறியப்படுபவர். சவிதா அம்பேத்கரின் நூலில் அம்பேத்கர் வேறுவிதமாய் வெளிப்படுகிறார். ஐந்து வயதிலேயே தாயை இழந்தவராக. பிறகு பிரியமான அண்ணனையும், தொடர்ந்து முதல் மனைவியையும் தந்தையையும் இழந்தவராக. தனிமையின் மாபெரும் கசப்பும் துயரமும் உடலில் நோய்களாக உருமாறி அலைக்கழித்தவராக. சிறுவயது தொடங்கி, கடைசிவரை தீண்டப்படாதவராக. வரலாற்றுக் கொடூரங்களையும் நோய்களையும் தாங்கிய உடலாக. இப்படி, அம்பேத்கர் வரலாற்று நாயகராக மட்டுமில்லாமல் பிறிதொரு ஆழமான இருப்பாகவும் இந்நூலில் காட்சியளிக்கிறார். சவீதா அம்பேத்கரின் நூலில், காந்தியின் மகாத்மாத்துவத்தையே தார்மீகமாக கேள்விக்கும் சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய, இந்திய வரலாற்றின் மகத்தான அரசியல் ஆளுமையாக அம்பேத்கர் வெளிப்படவில்லை. இளமையிலிருந்து தலித் மக்களுக்கான இயக்கங்களை முன்னெடுத்த செயல்பாட்டாளராகவோ, எழுத்தாளராகவோ, இறப்புக்கு முந்தைய தன் கடைசி இரவு வரை ஜூரவேகத்தில் நூல்களை வாசித்த அறிஞராகவோ வெளிப்படவில்லை. சவிதாவின் அம்பேத்கர், சவிதாவின் காதலரே. அம்பேத்கரின் இறுதி ஆண்டுகளில் நீரிழிவு, நரம்பு அழற்சி, வாதம், உயர் ரத்த அழுத்தம் என பல வியாதிகள் இணைந்து அவருடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையில், வாழ்வை நீட்டிப்பதற்காக அல்லாமல் தான் உத்தேசித்த காரியங்களைச் செய்துமுடிப்பதற்காக, அவர் போராடி சாதித்த கடைசி யுத்தமே சவிதா அம்பேத்கரை வென்ற காதல் என்று தோன்றுகிறது. அவர் அதுவரை அடைந்த அறிவு அனைத்தும் சவிதா அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்களில் தோற்பதைப் பார்க்கிறோம். புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய ‘கண்மணி கமலாவுக்கு’ கடிதங்கள் ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட சிறந்த காதல் கடிதங்களைப் படிக்கும்போதும் இந்த இலக்கிய உணர்வைத்தான் அடைவோம் போல. கடிதங்களில் அம்பேத்கரின் மொழி கவித்துவத்தை அடைகிறது; அம்பேத்கரின் மொழி பித்துநிலையில் இருக்கிறது; அம்பேத்கர் அங்கே குழந்தையாகிறார். சவிதாவுக்கு நைட்டித்துணியிலிருந்து கைக்கடிகாரம், நங்கூர டாலர் செயின் என ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி தேர்ந்து அனுப்புகிறார். அம்பேத்கரைப் பார்த்திருக்காவிட்டால் மிகப்பெரிய மருத்துவராகவோ அல்லது எழுத்தாளராகவோ திகழ்ந்திருக்க வாய்ப்பிருந்த சவிதா, அம்பேத்கரின் ஆத்ம சேவகர் ஆகிறார். குழந்தைக்கு சட்டை போட்டுவிடுவது போல தினமும் உடனிருந்து ஆடைகளை அணிவதற்கு உதவி அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தன் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் சவிதா இருக்கவேண்டுமென்று அம்பேத்கர் விரும்புகிறார். ஒன்பது ஆண்டுகள் சவிதா ஒரு நிழலைப் போன்றே அம்பேத்கருடன் இருக்கிறார். பின்னர் அவர் மறைந்த பிறகு 2003 வரை அம்பேத்கர் விட்டுச்சென்ற ஒரு நிழல் என, துயரம், அவமதிப்பு, கௌரவம் எல்லாம் சேர்ந்த தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். காங்கிரஸ் மீது அம்பேத்கர் கடைசிவரை கொண்டிருந்த கசப்பை சவிதாவும் வாழ்க்கையின் கடைசிவரை பகிர்ந்திருக்கிறார். அம்பேத்கரின் மரணத்துக்குப் பிறகு பண்டித நேரு அவருக்கு அரசு மருத்துவ அதிகாரி பதவியை வழங்குவதற்கு முன்வந்தபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவை உறுப்பினராவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கரின் பதிப்பிக்கப்படாத நூல்கள் தொடர்ந்து பதிப்பு காண்பதில் முப்பது ஆண்டுகள் செலவழித்துள்ளார். அம்பேத்கரின் சகியாக, சாரு எனும் செல்ல அழைப்பாக ஆவதற்கு சவிதா அம்பேத்கர் கொடுத்த கொடை என்னவென்று இந்த நூல் நமக்குத் தெரிவிக்கிறது. சவிதா அம்பேத்கரின் ஆளுமையும் இந்நூலில் துலங்குகிறது. அம்பேத்கரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் மரணத்துக்கான காத்திருப்பில், அவர் வாழ்க்கையில் கடைசி ஒன்பது ஆண்டுகளை கூடுதலாகப் பரிசளித்த மருத்துவராகவும் காதலியாகவும் மனைவியாகவும் சவிதா அம்பேத்கர் இருந்துள்ளார். புத்தரின் வாழ்க்கையில் யசோதராவின் பாத்திரம் தான் தன்னுடையது என்று இந்த நூலின் துவக்கத்திலேயே சவிதா கூறுகிறார். தனது பாத்திரம் என்னவென்று மிக மௌனமாக உணர்த்திவிடுகிறார். ‘அத்தஹி அத்தானோ நாதோ’ (ஒருவருக்கான அடைக்கலம் அவருக்குள்ளேயே உள்ளது.) எனில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் என்னுடைய பாத்திரம் ஒருவகையில் யசோதராவைப் போன்றதல்லவா? அம்பேத்கரின் புகழை கடைசிவரை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட பணிகளையே தனது அடைக்கல இல்லமாக, சவிதா உணர்ந்திருக்க வேண்டும். அம்பேத்கரின் மரணத்துக்கு சவிதா காரணமாக இருந்தார் என்று அம்பேத்கருக்கு நெருக்கமான தலித் தலைவர்களே கூறிய அவதூறுகளைத் தாண்டி, அந்த அவதூறுகளுக்கும் மனப்புழுக்கங்களுக்கும் மத்தியில் இப்பணிகளை அவர் செய்து முடித்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து தொல்லியல் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட ஆலயத்தின் கட்டிடப் பகுதிகள் சிதைந்துபோன பௌத்த விகாரையின் பகுதிகள் என்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தவர் சவிதா. பொது வாழ்க்கையிலேயே பல துயரங்களை சவிதா அனுபவித்துள்ளார். அம்பேத்கர் தன் கடைசி இரவு வரை மெய்ப்பு பார்த்த கைப்பிரதியான ‘புத்தமும் தம்மமும்’ நூல் முன்னுரையில் சவிதாவின் தியாகங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த காரணத்தினாலேயே அம்முன்னுரை அம்பேத்கரின் நூல்களைப் பதிப்பித்தவர்களால் பல தசாப்தங்களாக வெளியிடப்படாத துரதிர்ஷ்டம் சவிதாவுக்கு நேர்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பேத்கர் தனது இகத்தையும் அகத்தையும் கடைசி ஆண்டுகளில் செழிக்கச் செய்தவரான காதல் மனைவி சவிதா அம்பேத்கருக்கு ஒரு நூறு வார்த்தைகள் வழியாக நன்றி சொல்லியிருக்கிறார். இதுவே சவிதாவுக்கு வரலாறு கொடுத்த அடையாளமும் அடைக்கலமும். சவிதா அம்பேத்கரின் குடும்பப் பெயர் கபீர் மற்றும் ஷாரதா. அம்பேத்கருக்கு சாரு. அம்பேத்கருக்குப் பின்னால் அவருக்கு அடையாளமாக இருந்த பெயர் சவிதா அம்பேத்கர். 000 இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு முந்தைய ஆண்டு நவம்பர் 25-ம் தேதி அரசமைப்பு அவையில் கீழ்க்கண்ட எச்சரிக்கை வாசகங்களைக் கூறி தனது வரைவை அம்பேத்கர் முன்வைத்திருக்கிறார். “26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.” இது அம்பேத்கர் அடித்த எச்சரிக்கை மணி. சுதந்திர இந்தியா ஜனநாயகமாக, சமூக, பொருளாதார வாழ்க்கையில் கடந்த 80 ஆண்டுகளில் சமத்துவத்தை எட்டுவதில் தோல்வியை அடைந்து தேர்தல் சர்வாதிகாரத்தை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் அம்பேத்கரின் எச்சரிக்கை உண்மையாகிக் கொண்டிருக்கிறது. 000 காந்திக்கும் அம்பேத்கருக்குமான தருணங்கள் இந்த நூலில் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவை. மறுமலர்ச்சியாளர் புலே குறித்த திரைப்பட நிகழ்வு ஒன்றில் அம்பேத்கரோடு ராமசாமி நாயக்கராக பெரியாரும் கலந்துகொள்ளும் ஒரு சம்பவத்தையும் சவிதா நினைவுகூர்கிறார். காந்தியின் சரிதையை எழுதுவதற்கு அம்பேத்கருக்கு திட்டமிருந்திருக்கிறது. அதற்கு தானே சரியான நபர் என்றும் அவர் சவிதாவிடம் பகிர்ந்திருக்கிறார். காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களில், அம்பேத்கருக்கும் சவிதாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது “காந்தி இத்திருமணத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று படேல் சொல்கிறார். அம்பேத்கரும் வருத்தத்தோடு ஆமாம் என்கிறார். காந்தி கொல்லப்பட்டதையடுத்து 1948 பிப்ரவரி 6-ல் அம்பேத்கர், சவிதாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தியின் சடலத்தைப் பார்க்கச் சென்றதைக் குறிப்பிடுகிறார். காந்தியைப் படுகொலை செய்ததைக் கண்டித்து இப்படித் தொடர்கிறார் கடிதத்தை, “நான் எதற்காகவும் திரு. காந்திக்குக் கடன்பட்டிருக்கவில்லை. என்னுடைய ஆன்மிக, தார்மிக, சமூக குண இயல்புக்கு அவர் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை. என்னுடைய இருப்புக்காக நான் கடன்பட்டிருக்கும் ஒரே ஒரு நபர் புத்தர் மட்டும்தான். என் மீது அவருக்கு இருந்த வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை காலையில் பிர்லா இல்லம் சென்றேன். அவருடைய சடலத்தைக் காட்டினார்கள். என்னால் அவருடைய காயங்களைப் பார்க்க முடிந்தது. அவை மிகச்சரியாக இதயத்தில் இருந்தன. அவருடைய சடலத்தைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். என்னால் நடக்க இயலவில்லை என்பதால் இறுதி ஊர்வலத்துடன் கொஞ்ச தூரம்தான் போக முடிந்தது” என்று கூறியபடி எழுதிச் செல்லும்போது “திரு. காந்தி இந்த நாட்டுக்கு ஒரு நேர்மறையான அபாயமாக மாறிவிட்டார். எல்லா சுதந்திரச் சிந்தனைகளையும் அவர் அடக்கிவைத்திருந்தார். திரு. காந்தியின் புகழ்பாடுவதையும் நயம்பாடுவதையும் தவிர, சமூகத்தின் வாழ்க்கையை நிர்வகிக்கும் எந்தவிதமான சமூக அல்லது தார்மிகக் கொள்கையிலும் உடன்படாத சமூகத்திலுள்ள எல்லா மோசமான மற்றும் சுயமோகக் கூறுகளின் கலவையாக அவர் காங்கிரஸை வைத்திருந்தார்” என்று கடுமையாக விமர்சித்தும் செல்கிறார். காந்தியின் மரணம் ஒரு சாகச மனிதனின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என்றும் அவர்களை சுயமாக யோசிக்க வைக்கும் என்றும் அது அவர்களைத் தங்கள் தகுதிகள் மீது நிற்கவைக்கும் என்றும் நம்பிக்கையை வைக்கிறார். அகிம்சையையும் தியாகத்தையும் லட்சணமாக்கி பெரும் மக்கள்திரளை அடிபணிய வைத்த காந்தி போய்விட்டார். அதிகாரம், மயக்கம், படைபலத்தால் மக்களைக் கட்டும் தலைவர்கள் இந்தியாவில் பின்னர் தோன்றிவிட்டார்கள். வாய்ஜாலம், பொய் சாகசங்களால் கட்டப்பட்ட பிம்பங்கள் தலைமைப் பீடங்களைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மக்கள் தன்னிறைவு அடைவார்கள் என்ற அம்பேத்கரின் நம்பிக்கை தோற்ற காலத்தில் இருக்கிறோம். காந்தியின் இதயத்துக்குள் தோட்டாக்கள் போட்ட துளைகளை ஒரு அதலபாதாளத்தை உற்றுநோக்குவது போல அம்பேத்கர் குனிந்து நோக்கிக் கொண்டிருக்கும் சித்திரம், நம்முடைய இந்திய தேசம் இன்று வந்திருக்கும் நிலையின் உருவகமும் கூட. தோட்டா துளைத்த ஓட்டைகளைப் பார்த்துக் கொண்டிருப்பவனும் தன் காலத்தின் மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன். தோட்டாக்கள் துளைத்து சடலமாகப் படுத்திருப்பவனும் மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன். 0000 ராணுவ அதிகாரியான தந்தையின் வலியுறுத்தலால் சிறுவயதிலேயே ராமாயணமும் மகாபாரதமும் அறிமுகமானாலும் அம்பேத்கரை அவை கவரவில்லை. பீஷ்மரும் துரோணரும் கிருஷ்ணரும் ராமரும் கபட வேடதாரிகளாகவே தெரிகிறார்கள். அவர்களது பாத்திரங்கள் தன்னை ஈர்க்கவில்லை என்று வாதாடியிருக்கிறார். தாதா தெலுஸ்கர் வாயிலாக புத்தரின் பக்கம் திரும்பியவர், தம்மம் மீது ஆர்வம் கொள்கிறார். மதமோ, கடவுள் நம்பிக்கையோ பற்றுதலாக இல்லாமல் மனிதர்களால் மீட்சியடைய இயலாது என்று நம்பியிருக்கிறார். சமத்துவத்துக்கும் பகுத்தறிவுப் பார்வைக்கும் சரியான சமயம் என்று பௌத்தத்தையும் சரியான கடவுள் என்றும் புத்தரையும் நம்பியிருக்கிறார். நோயும் மனக்கவலைகளும் உறங்கவிடாமல் ஆக்கிய அவரது கடைசி ஆண்டுகளில் சவிதா அம்பேத்கரை வாசிக்கச் சொல்லி ‘அஷ்வகோஷாவின் புத்தவிதா’வின் கவித்துவமான பகுதிகளைக் கேட்டு அமைதியாகித் தூங்கியிருக்கிறார். அமெரிக்காவுக்குச் சென்று கல்வி கற்றிருந்தாலும், மேற்கத்திய கனவானின் தோற்றத்தைப் பாவித்தாலும், தனது கடைசி காலத்திலும் மருந்தாகக்கூட ஒரு தேக்கரண்டி மதுவை உட்கொள்வதற்கு அவர் மனம் ஒப்புக்கொள்ளாத அளவு ஒழுக்க நடத்தையைக் கொண்டிருந்திருக்கிறார். திருமணத்துக்கு முன்னால் அம்பேத்கருக்கு உதவியாளராக சேவை செய்ய சவிதா முன்வருகையில், தன்னைப் போல் பொதுவாழ்வில் இருப்பவரோடு ஒரு பெண் உடனிருப்பது அவதூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். சவிதா,அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்திலும் ஆண் – பெண் சமத்துவம் குறித்து தனக்கு இருக்கும் நிலைப்பாட்டில் அவர் செயல்பூர்வமாகவும் கொண்டிருக்கும் நம்பிக்கை தெரிகிறது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய இந்தியாவின் தலைமகன்களில் ஒருவராகிய அம்பேத்கரையே 1952-ல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் தோற்கடிக்கிறது. தமது மக்களே தன்னைத் தோற்கடித்தார்கள் என்று விரக்தியுடன் இருந்த அம்பேத்கரை பௌத்தம் சார்ந்த பணிகளும் சவிதாவும் சேர்ந்தே மீட்கிறார்கள். கீதையைப் போல, விவிலியத்தைப் போல பௌத்தத்துக்கு ஒரு பொதுநூல் இல்லாத குறையை உணர்ந்துதான் ‘பௌத்தமும் தம்மமும்’ என்ற நூலையே எழுதத் தொடங்குகிறார். பல நூற்றாண்டுகளாக தங்கள் கடவுளர்களாலும், தாம் அடையாளம் காணும் சமயத்தின் வைதீக விதிகளாலும் நான்கு வர்ணங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட மக்களின், மனித உயிர்கள் என்ற மதிப்புகூட இல்லாமல் விலங்குகளுக்கும் கீழாக நடத்தப்பட்ட தீண்டப்படாத மக்களின் அத்தனை சுமைகளையும் சிலுவையென ஏற்று, முறியத்துடிக்கும் கிறிஸ்துவைப் போல, அம்பேத்கர் பௌத்தத்தில் கடைசி அடைக்கலத்தையும் அமைதியையும் கொள்ளும் சித்திரத்தைக் காணமுடிகிறது. கௌதம புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தின் லும்பினி தொடங்கி அவர் இறந்த இடமான குஷினாரா வரை அம்பேத்கர் பெரும் உடல்நலிவூடாகவே பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். புத்தரின் உடல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட விகாரையின் படிகளில் கனத்த உடலுடன் நடக்க இயலாமல் நான்கு ஆட்கள் தாங்கிப்பிடிக்க நடந்து ஏறி, அங்கிருந்த புத்தரின் சிலையைப் பார்த்து முழங்காலிட்டுக் கொண்டு த்ரிவாரப் பிரார்த்தனையைச் சொல்கிறார். கன்னங்களில் முடிவில்லாத கண்ணீர் வழிந்ததாக சவிதா எழுதுகிறார். எத்தனை நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டதன் கண்ணீர்? எத்தனை நூற்றாண்டுகள் தேடியும் இன்னும் கிடைக்காத விடுதலையின் கண்ணீர்? காலம் காலமாக நடைமுறையாகவும் தர்மமாகவும் இருந்த தீண்டாமைக்கு சட்டரீதியான தடைகொண்டுவந்து சிலுவைப் போரில் வெற்றியடைந்தவன் வடித்த கண்ணீர் அது. சவிதா அம்பேத்கரின் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கரின் ஓவிய ஆளுமையும் தெரிகிறது. புத்தரை திறந்த கண்களுடன் அவர் வரைந்திருக்கும் ஓவியம் இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளது.“புத்தர் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கண்கள் திறந்த நிலையில்தான் சுற்றிவந்தார். திறந்த விழிகளுடன்தான் அவர் உலகின் துயரங்களை அவதானித்தார்” போதனை வழங்கும் புத்தர், திறந்த விழிகளுடன் இருக்கும் புத்தர், இந்திய அம்சங்கள் கொண்ட புத்தர், நடந்து செல்லும் புத்தர் என வெவ்வேறு தோற்றங்களில் அவர் புத்தரை உருவாக்க நினைத்திருக்கிறார். ஆனால் மரணம் அதற்குள் அவரை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. எனினும், இந்திய எதார்த்தம் என்னவென்று கண்திறந்து பார்க்கும் ஒரு புத்தரை நமக்கு வழங்கியிருக்கிறார். புத்தர் எப்போதும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். புனைவு, அ-புனைவு எதுவாக இருப்பினும் மொழிபெயர்ப்புகள் தமிழில் சித்திரவதை அனுபவங்களாக மாறும் பின்னணியில் இந்த நூலுக்கு ஒரு பழைய தொனியைப் பிடித்து அதைக் கச்சிதமாகத் தொடர்ந்து சவீதா அம்பேத்கருக்கு ஒரு சீரான தொனியை அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் த. ராஜன். குறிப்புகள், புகைப்படங்களும் மிகவும் கவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எதிர் வெளியீடு இந்த நூலை பிழைகளின்றி, மதிப்பு துலங்க வெளியிட்டுள்ளது. இறந்துபோவதற்கு முன்னாலும் புத்தம் சரணம் கச்சாமி பாடலையும், கபீரின் ‘சலோ கபீர் தேரா பவசாகர் தேரா’ என்ற பாடலையும் மிகுந்த லயத்துடனும் காதலுடனும் பாடியிருக்கிறார். கடந்து செல்லுங்கள் கபீர், இது உங்களுடைய தற்காலிக உறைவிடம். அம்பேத்கர் கடந்து போக எண்ணியது இன்னும் கோடிக்கணக்கான மக்களால் கடக்க இயலாததாக உள்ளது. https://akazhonline.com/?p=6533
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
😢😢 இதே பல்கலையில் எனது மகனும் சில வருடங்களின் முன்னர் படித்திருந்தார். பாஸ்டன் பெருநகரிற்கு அருகிலேயே இந்தப் பல்கலை இருக்கின்றது. அந்தப் பகுதியில் இப்படி ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பெருநகரம் என்பதனால் திருட்டுகளும் அதிகமாக இருக்கக்கூடும். இந்த மாணவனிடமிருந்து ஏதேனும் திருட முயன்றிருக்கக்கூடும்.....😢
-
புளுகுப் போட்டி
புளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏதும் இல்லாமல், தோன்றுவது என்பது மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. ஆரம்ப நாட்களில் ஆட்களைத் தேடி வந்த போலீஸ்காரர்கள் ஒழுங்கைகளில் கால்களை வைக்காமல், வீடுகளின் சுவர்களில் நடந்து திரிந்தனர். அவர்கள் ஒழுங்கை ஒன்றில் இறங்கினால், அவர்களையும் காணாமல் போனோர் கணக்கில் சேர்க்க வேண்டி வந்தாலும் வந்திருக்கும். அந்தளவு ஒழுங்கைகளும், பின்னல்களும் நிறைந்தது ஊர். ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு சிறிய விளையாட்டுக் கழகம் இருந்தது. பெரிய விளையாட்டு கழகங்கள் அல்லது தாய் விளையாட்டு கழகங்கள் என்றும் இருந்தன. மொத்தத்தில் ஏராளமான கழகங்கள். சிறிய கழகமோ, பெரிய கழகமோ அவர்களின் விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடக்கும். கழக அங்கத்தவர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பொது விளையாட்டுகள் என்று இரண்டு வகையான போட்டிகள் நடைபெறும். பொது விளையாட்டுகள் என்ற வகையில் புளுகுப் போட்டி வரும். யாரும் பங்கு பற்றலாம். மேடையில் ஏறி புளுகித் தள்ளவேண்டும். ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக விடயம் இருக்கவேண்டும். கூட்டம் கைதட்டும். நடுவர்கள் புள்ளிகள் போடுவார்கள். இறுதியில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று அறிவித்து பரிசுகள் வழங்கப்படும். வயதுக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, என் வயதை ஒத்த, அன்று சிறுவன், மேடையில் ஏறி, ஒரு சமயம் தன்னை யாரோ எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தான். தான் மெதுவாக ஒரு யன்னல் கம்பியை உடைக்க ஆரம்பித்தால், அது லட்டால் செய்யப்பட்டிருந்தது என்று தொடர்ந்தான். தான் அதை சாப்பிட்டு விட்டு, உடைப்பதை தொடர்ந்தால், வீடு முழுவதுமே லட்டால் கட்டப்பட்டிருந்தது என்றான். முழு வீட்டையுமே தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னான். அன்றிலிருந்து அவனின் பெயரே மாறிவிட்டது. இதையே தொடர்ந்திருந்தால் சிலரின் இயல்பான திறமைகள் வெளியே வந்து, நன்றாக வளர்ந்தும் இருப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்தக் கலையில் ஒரு அடிப்படைத் திறமை, அறிவு கிடைத்திருக்கும். தொடர்ச்சியாக அடித்து விடுவது என்பது அரசியலிலும், சில சேவை வியாபாரங்களிலும் இருப்பவர்களுக்கு மிகத் தேவையான ஒரு திறமை. ஆந்திரா, தெலுங்கு, கன்னட, மலையாள நண்பர்களிடம் மிக மெதுவாகக் கேட்டுப் பார்த்ததில், திராவிட நாட்டில் இது வேறு எங்குமே காணப்படவில்லை என்றும் தெரிகின்றது. மலையாளிகளிடம் வேறு வேறு விதங்கள் இருக்கின்றன. ஒரு கட்ட சாயா, தட்டையுடன் (பிளேன் டீ, தட்டை வடை) அவர்கள் நாலு மணித்தியாலங்கள் உலக அரசியல் பேசி, இறுதியில் அமெரிக்காவை அரை உயிருடன் அடுத்த நாளுக்காக விட்டு வைப்பார்கள். மலையாளிகளுக்கு உலக அரசியலில் தான் ஆர்வம் அதிகம். மற்றும் அவர்கள் பொதுவாக சிவப்புச் சட்டை, சால்வைக்காரர்கள். இயல்பாக வந்த ஒரு திறமையை மறைப்பதென்பது கடினம். அது தும்மல் போன்று, விக்கல் போன்று எப்பவும், எங்கேயும் கொஞ்சம் அமுங்கியாவது வெளிப்படும். சமூக ஊடகங்களில் இன்று இந்தக் கலை வடிவம் நன்றாகவே வெளிப்படுகின்றது. ஆனால் எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், சாமியார்களும் இன்று தூள் கிளப்புகின்றனர். பத்து பன்னிரண்டு வயதில் விட்டுப் போன புளுகுப் போட்டியை இன்று மீண்டும் அரசியல் மேடைகளில் எங்கும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகள் புளுகுப் போட்டியில் நிகர் இல்லாமல் அசத்துகின்றார்கள், முதலாம் இடம் அவர்களுக்கே.
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!
இரண்டு நாட்கள் விவாதித்தால் என்ன, மூன்று நாட்கள் விவாதித்தால் என்ன, முடிவில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இரண்டு நாட்கள் விவாதித்து முடித்து விட்டு, பிரேரணை தோற்று விட்டது என்று அறிவித்து விட்டு, மூன்றாம் நாள் உருப்படியான ஏதாவது ஒரு வேலை, அப்படி ஒன்று இருந்தால், செய்யலாம்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார். அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது. சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது. மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார். ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள். மகிந்த எச்சரிக்கின்றார். ரணில் எச்சரிக்கின்றார். அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார். ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀
-
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்
கச்சதீவிற்கு வந்து போவதா பிரச்சனை.........இந்திய மீனவர்கள் காரைதீவு (காரைநகர்) வரை வந்து போவது தானே பிரச்சனை. நடுக்கடலில் எல்லை தெரியாது என்பதற்காக, எப்பவுமே எங்களின் கரை மட்டும் வருவீர்களா? இதில் கச்சதீவு எங்களிடம் இருந்தால் என்ன, உங்களிடம் இருந்தால் என்ன.
-
யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்
கடந்த வாரம் வல்வையில் (வல்வெட்டித்துறை) ஒரு வெதுப்பகம் இதே போன்ற சுகாதார சீர்கெட்டுகளால் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது என்று செய்திகளில் இருந்தது. இங்கு நான் இருக்கும் இடத்திற்கு அருகில் லிட்டில் இந்தியா என்று சொல்லப்படும் ஒரு இடம் இருக்கின்றது. இந்தியா உணவகங்களும், கடைத் தொகுதிகளும் நிறைந்த இடம். அடிக்கடி ஏதாவது ஒரு உணவகத்தை அதிகாரிகள் மூடி விடுவார்கள். ஆனால், வேறு ஒரு பெயரில் அது மீண்டும் திறக்கப்படும்........இப்படியே போய்க் கொண்டிருக்கின்றது.
-
குற்றமே தண்டனை
நிச்சயமாக, கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சேகர் போன்றோரும் நல்லாகவே வந்திருப்பார்கள். சேகரை கிணற்றுகுள் தள்ளி விட்டது போல, நாங்கள் பலரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறை நிதானம் இழந்து செய்து விட்டு, அந்தக் குற்ற உணர்வை வாழ்க்கை முழுவதும் உணர்ந்து, குறுகிக் கொண்டேயிருக்கின்றோம். எல்லாவற்றையும் விட பெரிய தண்டனை இது.
-
குற்றமே தண்டனை
(குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்கு ஒரு தகவலாக மட்டுமே ஒரு இரவில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா மிகுந்த இரக்கமுள்ளவர். ஆனாலும் ஏற்கனவே ஏழு குஞ்சுகளுக்கு தினமும் இரை தேடும் ஒரு தாய்ப்பபறவையின் நிலையிலேயே அம்மா இருந்தார். அம்மாவின் தவிப்புகள் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஐயாவிற்கு எட்டாவது நிரந்தரப் பிள்ளை ஒன்றிற்கான திட்டம் இருந்ததும் அம்மாவிற்கு அப்போது தெரிந்தே இருக்காது. சேகரை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. இது அநியாயம், அக்கிரமம் என்று உடனேயே முடிவெடுத்துவிடாதீர்கள். என்னையே அப்பொழுது தான் பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பித்திருந்தனர், அதுவும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்குப் பயந்து. இரண்டாம் வகுப்பு எனக்கு அரிவரியே, முதலாம் வகுப்பின் பிற்பகுதியில் தான் நானே பாடசாலையை ஆரம்பித்திருந்தேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால், சேகரும் நானும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவோம். சேகர் உடல் மிகவும் உறுதியானவன். வேகமானவனும் கூட. ஒருநாள் ஒரு தென்னந்தோப்பிற்கு எங்களிவரையும் கூட்டிச்சென்றனர். நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள். தென்னை மரங்களில் பாம்பு கீறும் வேலையை எங்களிருவருக்கும் கொடுத்தனர். கறுப்பு மையால் வளைச்சு வளைச்சு தென்னை மரத்தில் பாம்பு கீறவேண்டும். பாம்பின் தலைப்பக்கம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும், வால் பக்கம் மெல்லிதாக இருக்கவேண்டும். தேரையின் கண்ணுக்கு அது பாம்பாகத் தெரிய வேண்டும், அது தான் நிபந்தனை. தேரை தென்னையில் ஏறி, குரும்பைகளை மேய்ந்தால், தேங்காய்கள் ஒல்லித்தேங்காய்கள் ஆகிவிடும் என்பது ஐயாவினதும் அவர்களினதும் நம்பிக்கை. நான் இன்றுவரை இந்த பாம்பு - தேரை - ஒல்லித்தேங்காய் விசயத்தை எங்கும் தேடி உறுதிபபடுத்தவில்லை. பாம்பை விட வேறு ஏதாவது என்னைக் கீறச் சொல்லியிருந்தால், அது அதுவாக வந்தே இருக்காது. சித்திரம் அவ்வளவு மட்டுமட்டு. தேரையைத் தூக்கும் ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கீறி இருந்தால், அங்கிருந்த தேரைகள் நிச்சயமாக என் சித்திரத்தின் மேலால் தென்னைகளில் ஏறி ஒரு உயரத்தில் வாழ்ந்திருக்கும். ஒவ்வொரு பாம்புடனும் A, B, C, D இப்படி ஒரு எழுத்தையும் தென்னையின் மற்ற பக்கத்தில் போடலாமே என்று எனக்கு ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. அப்பொழுது தான் நான் இரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அதை சேகருக்கும் சொன்னேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆங்கில எழுத்துகள் தெரியாது, தமிழ் எழுத்துகளும் தெரியாது. பாம்புகளைக் கீறி முடித்த பின், இருவருமாகச் சேர்ந்து A, B, C, D போடுவதாக முடிவெடுத்தோம். பாம்புகளை கீறிக்கொண்டிருக்கும் போது, சேகர் அடிக்கடி என்னிடம் வந்தான். இடையிடையே சின்னச் சின்ன ஓய்வு எடுப்பது போன்று. ஒவ்வொரு தடவையும் A என்றால் எப்படி இருக்கும், B என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டான். எழுதிக்காட்டினேன். பாவமாக இருந்தது, சேகரையும் எப்படியும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், அம்மாவிடம் மட்டுமே பேசலாம், அம்மாவையே கேட்போம் என்று நினைத்தபடியே என்னுடைய தென்னை மரங்களில் பாம்புகளைக் கீறி முடித்தேன். சேகர் எப்பவோ கீறி முடித்திருக்கவேண்டும். அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்கத்தை நோக்கி நடந்தேன். அவனுடைய தென்னை மரங்களையும், பாம்புகளையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டேன். ஒவ்வொரு பாம்பின் வாலுக்கு கீழும் ஒரு ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது. ஓடி ஓடிப் பார்த்தேன். 26 எழுத்துகளும் 26 பாம்புகளின் வால்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியே முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். எனக்கு தெரிந்த முழு ஆங்கிலத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று. கோபமும் அழுகையும் கரையை உடைக்கக் காத்திருந்தன. வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சேகர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை, நானும் தான். வீட்டிற்கு வந்த பின்னர், இருவரும் குளிப்பதற்காக கிணற்றடிக்குப் போனோம். பெரிய வட்டக் கிணறு. எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் நிற்கும். மாறி மாறித் தண்ணீர் இறைத்துக் குளிப்பது எங்கள் வழக்கம். சேகர் முன்னால் நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் தயங்கி விட்டு, அப்படியே சேகரைப் பிடித்துத் தள்ளி விட்டிட்டேன். 'அய்யோ' என்ற அவனின் குரல் முடிவதற்குள் பெரிய சத்தத்துடன் சேகர் தண்ணீருக்குள் போய்விட்டான். அம்மாவும், வேறு ஆட்களும் ஓடிவந்தனர். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் மிக இலகுவாக கிணற்றுக்குள் காலை கீழே விட்டுப் பாய்ந்து, சேகரை தண்ணீருக்குள் இருந்து தூக்கி எடுத்தார். சேகர் தானே தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவே சொன்னான். எனக்குப் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டே இருந்தான். இரவாகியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே வாய்த்தர்க்கம். அம்மா ஒரே விசயத்தையே ஐயாவிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், சேகருக்கு எதுவும் ஆகியிருந்தால் நாங்கள் இந்த உலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று. நானும் சேகரும் அப்படியே நித்திரை ஆகிவிட்டோம். காலை எழும்பி அவசரம் அவசரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு ஆயத்தமானேன். சேகரும் எழும்பி விட்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பும் போது, வாசலில் நின்று திரும்பிப் பார்த்தேன், சேகர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பில் இதே நினைவு மட்டுமே. சேகர் எப்படியும் வீட்டில் என்னை மாட்டி விட்டுவிடுவான் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து பயத்துடன் வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தேன். சேகரைக் காணவில்லை. அவனை எங்கும் காணவில்லை. மெதுவாக அம்மாவிடம் போய் சேகர் எங்கே என்று கேட்டேன். சேகரைக் கூட்டிக்கொண்டு ஐயா மஸ்கெலியாவிற்கு போயிருப்பதாக அம்மா சொன்னார். மஸ்கெலியாவில் சேகரின் தாய் தந்தை இருப்பதாகவும் அம்மா சொன்னார். சேகர் அழுதுகொண்டே போனதாகவும் அம்மா சொன்னார், சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் ஒரு அழுகை தெரிந்தது. நான் அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். தொண்டை அடைத்த பின், கண்ணீர் ஓட இருந்தேன். மஸ்கெலியாவிலிருந்து ஐயா மட்டும் திரும்பி வந்தார். அதன் பின் சேகர் பற்றி எங்கள் வீட்டில் எவரும் கதைக்கவில்லை. நானும் ஐயாவையோ அம்மாவையோ எதுவும் கேட்டதும் இல்லை.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀
-
என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
நாகர்கோயில் கடலை நாங்கள் ஆண் கடல் என்று சொல்லுவோம். எப்போதும் அலை அடிக்கும் கடல். அப்பவும் நனையவில்லை....🤣
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !
இந்த தேரரையே ஒரு பல்கலைக்கழக வேந்தர் ஆக்கியதும் கோதா என்று தான் ஒரு ஞாபகம். கோதாவின் நிர்வாகத் திறமை அங்கேயே சறுக்கி விட்டுது போல....😀 யாராவது பயத்தில் ஓட ஆரம்பித்தால் எல்லோரும் துரத்துவார்கள், எல்லாம் துரத்தும். ஓடின கோதா அப்படியே எங்காவது போயிருக்கலாம்.
-
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
ஏழு கட்ட தேர்தல், மொத்தம் ஏழு வாரம். தேர்தலே 49 நாட்களா? முந்தாநாள் வரை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று விவாதித்து கொதித்துக் கொண்டிருந்தார்கள்....🤣
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாள். ஏன் ஐன்ஸ்டைன் இன்றும் கொண்டாடப்படுகிறார்? காரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வு இந்த உலகத்தை அறிவியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் பல்வேறு வழிகளில் மாற்றியது. சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு, “நான் யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவன் கிடையாது. நான் அடிச்ச பத்து பேருமே டானுங்கதாண்டா” என்று. இவ்வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஐன்ஸ்டைனுக்குச் சிறப்பாக பொருந்தும். ஏனென்றால் ஐன்ஸ்டீன் ஏதோ ஒரு துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர் அல்ல. அவர் வெளியிட்ட ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் பல புதிய ஆராய்ச்சித் துறைகளை உருவாக்கின. அந்த ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையும் பல்வேறு புதிய கிளை ஆராய்ச்சித் துறைகளை இன்று உருவாக்கியிருக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் ஏற்கெனவே இருந்த அறிவியல் சிந்தனையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் அதுவரை யாருமே யோசிக்காத கோணத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய அறிவியல் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கியது. இந்தச் சிந்தனைப் புரட்சிதான் மனித குலத்துக்கு அவர் வழங்கிய மாபெரும் பங்களிப்பு. இயற்பியலின் அதிசய ஆண்டு 1905 இயற்பியல் வரலாற்றில் 1905ஆம் ஆண்டை ‘அதிசய ஆண்டு’ என்று அழைக்கிறார்கள். இயற்பியல் உலகைப் புரட்டிப்போடக்கூடிய நான்கு மிக முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார் ஐன்ஸ்டைன். இந்தக் கட்டுரைகளை வெளியிடும்போது அவர் பேராசிரியரோ, பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவரோ அல்ல. சாதாரண காப்புரிமை அலுவலகத்தில் ஒரு மூன்றாம் நிலை காப்புரிமை எழுத்தராக பணிபுரிந்துவந்தார். முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒளியின் மிக முக்கியப் பண்பைப் பற்றியது. இரண்டாவது கட்டுரை அணுக் கோட்பாட்டைப் பற்றியது. மூன்றாவது ஆராய்ச்சிக் கட்டுரை புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு. நான்காவது கோட்பாடு உலகப் புகழ்பெற்ற E=mc2 சமன்பாட்டைப்பற்றியது. இந்த நான்கு கட்டுரைகளும் இருபதாம் நூற்றாண்டு அறிவியலின் திசையை மாற்றி அமைத்தன. ஒளி என்பது அலையா துகளா? முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ‘ஒளி-மின் விளைவு’ பற்றியது. ஒளியானது பருப்பொருளோடு (அணுக்களோடு) மோதும்போது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய கட்டுரை. ஒளியானது உலோக மேற்பரப்பில் படும்போது அம்மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மேற்பரப்பைவிட்டு வெளிவருகின்றன. இதுவே ஒளி மின் விளைவு. மேற்பரப்பில் படும் ஒளியின் நிறத்தை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் ஆற்றல் மாறுவதைக் கண்டறிந்தார்கள், அதேபோல் மேற்பரப்பில் படும் ஒளியின் பொலிவுத்தன்மையை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மாறுவதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்வை அதுவரை இருந்த இயற்பியல் கோட்பாடுகளால் விளக்க முடியாமல் இருந்தது. காரணம், அப்போது வரை ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவில் இருக்கிறது, அலையாகவே பருப்பொருளோடு வினைபுரிகிறது என்று கருதிவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ஒளி என்பது அலைப் பண்பு மட்டுமல்லாமல் துகள் பண்போடும் இருக்கும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். மேலும் ஒளியைத் துகளாக கருதினால் மட்டுமே ஒளி மின் விளைவின் ஆய்வு முடிவுகளை விளக்க முடியும் என்று நிரூபித்தார். ஒளி என்பது சிறு சிறு ஆற்றல் பொட்டலங்களாக இருக்கிறது. இந்த ஆற்றல் பொட்டலங்கள் துகள் போன்று இயங்குகின்றன. இந்த ஆற்றல் பொட்டலங்கள் ‘போட்டான்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டான் துகள்கள் உலோக மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான் துகள்களோடு மோதுகிறது. ஐன்ஸ்டைனுக்கு முன்பு வரை ஒளி அலைகள் எலக்ட்ரான்களோடு மோதுகிறது என்று நினைத்துவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ‘போட்டான் துகளும் எலக்ட்ரான் துகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிகழ்வே ஒளிமின் விளைவு’ என்று விளக்கினார். அதுவரை ஒளி என்பது அலைப் பண்போடு மட்டுமே கொண்டிருக்கும் என்ற சிந்தனையை மாற்றி ஒளி என்பது அலைப் பண்பையும், துகள் பண்பையும் கொண்டிருக்கும் என்கிற புதிய அறிவியல் உண்மையை நிரூபித்தார். இந்த ஆய்வுக் கட்டுரைக்காக ஐன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னாளில் குவாண்டம் இயற்பியல் உருவாக்கத்திற்கு இந்தச் சிந்தனை முக்கிய பங்கு வகித்தது. அணுவும் மூலக்கூறுகளும் நடைமுறை உண்மை ஐன்ஸ்டைனுக்கு முன்பே ‘அணு’ என்ற கருத்தாக்கம் சில அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அப்போது வாழ்ந்த மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களுக்கு ‘அணு’ என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அணு என்ற ஒன்று இருக்கவே முடியாது. அது உண்மையில் சில நிகழ்வுகளை விளக்குவதற்குப் பயன்படும் ஒரு கருத்தாக்கம்தானே தவிர அது உண்மையில் நடைமுறை யதார்த்தம் இல்லை என்று நினைத்துவந்தனர். ஐன்ஸ்டைன் 1905இல் வெளியிட்ட இரண்டாவது கட்டுரை ‘பிரவுனியன் இயக்கக் கோட்பாடு’ ஆகும். இது அணுக்கோட்பாடு பற்றியது. தண்ணீரில் சில மகரந்தத் துகள்களைத் தூவினால் அம்மகரந்தத்துகள்கள் அங்குமிங்கும் தண்ணீருக்குள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்று தாவரவியலாளர் ராபர்ட் பிரவுன் 1827இல் கண்டறிந்தார். அவர் பெயரில் இந்த நிகழ்வு ‘பிரவுனியன் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏன் இந்த மகரந்தத் துகள்கள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்பதற்கான கோட்பாட்டு விளக்கத்தை யாராலும் திருப்திகரமாக தர முடியவில்லை. ஐன்ஸ்டைன் இந்த ஆய்வுக் கட்டுரையில் “தண்ணீர் என்பது எண்ணற்ற அணுக்களால், மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடியாடுகின்றன. இந்த மூலக்கூறுகள் மகரந்தத் துகள்கள் மீது தொடர்ச்சியாக மோதிக்கொண்டே இருப்பதால் மகரந்தத் துகள்களும் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன” என்று கூறினார். அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இம்மகரந்தத் துகள்கள் சராசரியாக எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கும், அதன் மூலம் இந்த தண்ணீர் மூலக்கூறுகள் அளவையும் கோட்பாட்டுரீதியாகக் கணக்கிட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து ஜீன் பெர்ரின் என்பவர் ஆய்வகப் பரிசோதனை மூலம் ஐன்ஸ்டைன் கணக்கிட்டது சரி என்று நிரூபித்தார். இதன் மூலம் ‘அணுக்களும் மூலக்கூறுகளும்’ நடைமுறை உண்மை, அது கருத்தாக்கம் அல்ல என்று நிரூபணம் ஆனது. அதற்காக ஜீன் பெரினுக்கு 1926ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனிச்சார்பியல் கோட்பாடு ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை ‘சார்பியல் கோட்பாடு’ பற்றியது. இதுதான் ஐன்ஸ்டைனை மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது. நியூட்டனின் கோட்பாட்டின்படி காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன்படி “சூரிய குடும்பத்தில் இருக்கும் நமக்கும், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் வேறொரு நட்சத்திரத்துக்கும் ஒரே மாதிரியான காலம்தான். அதேபோல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்பவரின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும், விமானத்தில் செல்லும் பயணியின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும் ஒரே நேரத்தைத்தான் காட்டும்.” ஐன்ஸ்டைன் இந்தக் கருத்தை அடியோடு தகர்த்தார். காலம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றல்ல. அது ஒவ்வொருவரின் இயக்கத்தைச் சார்ந்தது என்று கூறினார். சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பரின் நேரமும், பேருந்தில் பயணிக்கும் ஒரு நபரின் நேரமும் வேறு வேறு என்று சொன்னார். அதாவது, ஒருவரின் பயணிக்கும் வேகம் அதிகமாக அதிகமாக அவரின் காலம் மிக மெதுவாக நகரும் என்றார். இது அக்காலத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் காலமும் (time) வெளியும் (space) தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று சார்ந்தவை. மேலும் காலம் மற்றும் வெளியைக் காலவெளி (space-time) என்றே இணைத்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இவையெல்லாம் மனித குலம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்பிவந்த பொதுச் சிந்தனைக்கு எதிராக இருந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆழமாக நம்பிவந்த பல்வேறு கருத்துகளின், கோட்பாடுகளின் ஆணிவேரை இது அசைப்பதுபோல இருந்தது. இந்தத் தனிச்சார்பியல் கோட்பாட்டின்படி (Special theory of relativity), ஒளி மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் உச்சபட்ச வேகத்தில் பயணிக்க முடியும். அதாவது, வெற்றிடத்தில் விநாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. எந்த ஒரு பருப்பொருளும் இந்த வேகத்தில் பயணிக்க முடியாது. வேகமாக செல்லும் ஒரு பொருளின் நீளம் குறையும். உதாரணத்துக்கு நீங்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறீகள். உங்கள் கையில் ஒரு மீட்டர் அளவுகோல் இருக்கிறது. இப்போது இந்த ஒரு மீட்டர் அளவுகோலைப் புறப்பட இருக்கும் இரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் ஒரு பயணியிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது ரயில் புறப்பட்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அந்த ரயில் பயணியிடம் இருக்கும் அளவுகோலின் நீளம் உங்களைப் பொறுத்து ஒரு மீட்டர் அல்ல. அதற்கும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அந்த ரயில் பயணியைப் பொருத்து அந்த அளவுகோலின் நீளம் ஒரு மீட்டர்தான். அதாவது, நீளம் என்பதும் காலத்தைப் போலவே சார்புத்தன்மை உடையதுதான். உங்கள் பார்வையில் ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகள் இன்னொருவரைப் பொருத்து வெவ்வேறு நேரத்தில் நடக்கும். ஒரே கண இரு நிகழ்வுகள் (simultaneous events) என்பதும் சார்புத்தன்மை உடையதுதான். வேகமாக செல்லும் ஒருவரின் காலம் மெதுவாக ஓடும். இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளில் ஒருவர் பூமியிலும், இன்னொருவர் விண்வெளிக்கும் சென்று சில ஆண்டுகள் பயணித்துச் சென்றுவந்தால் பூமியில் இருக்கும் இரட்டையர் விண்வெளிக்குச் சென்றுவந்த இரட்டையரைவிட வயது அதிகமாகிவிடுவார். காரணம் விண்வெளியில் வேகமாகப் பயணித்தவரின் காலம் மெதுவாக ஓடியதால்தான் அவருக்கு வயது ஆகும் வேகம் பூமியில் இருப்பவரைவிட மெதுவாக இருக்கிறது. வேகமாக செல்லும் பொருளின் நிறை அதிகமாகிறது. மேலே கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் அக்காலத்தில் அனைவருக்குமே அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தன. ஆனால், கடந்த நூறு வருடமாக நடந்த பல்வேறு ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ஐன்ஸ்டீன் கூறியதே சரி என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. நீளம் குறைவதையும், காலம் மெதுவாக ஓடுவதையும், நிறை அதிகமாவதையும் நடைமுறையில் நாம் எங்குமே பார்த்ததில்லை. உண்மையில் இவையெல்லாம் நடக்கிறதா? என்று நமக்கு ஒரு கேள்வி எழலாம். ஆம், நடக்கிறது. பைக்கில் செல்லும் ஒருவரின் காலம் தரையில் நிற்பவரைப் பொருத்து மெதுவாக ஓடுகிறது. அவரின் நீளம் சுருங்குகிறது. நிறை அதிகரிக்கிறது. ஆனால், இவை எதையும் நம்மால் உணர முடியாது. அதாவது, எந்தவொரு கருவியாலும் அளவிட முடியாத அளவுக்கு மிக மிகச் சிறியது. மேற்சொன்ன அனைத்தும் நாம் உணரும் அளவுக்கு, அதாவது அளவிடும்படி நடக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் நாம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும். நடைமுறை உலகில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச அளவு மணிக்கு 600 அல்லது 700 கி.மீ.தான். ஒளியைவிட இந்த வேகம் மிக மிகக் குறைவு என்பதால் நம்மால் இந்தச் சார்பியல் விளைவுகளை உணர முடிவதில்லை. பிறகு எப்படி ஐன்ஸ்டைன் உணர்ந்தார்? முழுக்க முழுக்க கணிதரீதியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் சிந்தனைப் பரிசோதனை (thought experiment) மூலம் வெறும் பேப்பரையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு இக்கோட்பாடுகளை உருவாக்கினார். புகழ்பெற்ற சமன்பாடு உலகம் முழுக்க அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு சமன்பாடு என்றால் இந்த E=mc2 சமன்பாடுதான். இங்கே E என்பது ஒரு பொருளின் மொத்த ஆற்றலைக் குறிக்கும். m- பொருளின் நிறை, c – ஒளியின் வேகம். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலும் நிறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆற்றலின் ஒரு வடிவம்தான் நிறை. நிறையின் ஒரு வடிவம்தான் ஆற்றல் என்ற புதிய சிந்தனையைக் கொண்டுவந்தார். மேலும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும். ஆற்றலை நிறையாக மாற்ற முடியும் என்றும் கூறினார். அணுக்கரு ஆராய்ச்சித் துறைக்கு இந்தச் சமன்பாடுதான் அடிப்படை. நியூட்டன் கோட்பாட்டின்படி ஒரு பொருள் தரையில் ஓய்வு நிலையில் இருந்தால் அதற்கு ஆற்றல் என்பது இல்லை. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தச் சமன்பாட்டின்படி “ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருந்தால்கூட அதற்குள் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்துள்ளது.” இதுவும் ஒரு புரட்சிகரமான சிந்தனை. துரதிருஷ்டவசமாக இந்தச் சமன்பாடுதான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு செய்யவும் பயன்பட்டது. ஐன்ஸ்டைன் இதுகுறித்து மிகவும் வருந்தினார். “ஆட்சியாளர்களின் தவறு என்றாலும் எனது கண்டுபிடிப்பு இந்த அழிவுக்குப் பயன்பட்டதே” என்று மனம் வெறுத்தார். ஹிரோஷிமா, நாகசாகி நிகழ்வுக்குப் பிறகு மிகத் தீவிர அணுகுண்டு எதிர்ப்பாளராக மாறினார். இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை ஐன்ஸ்டைன் வாழ்க்கையில் மணிமகுடமாகத் திகழும் ஒன்று இந்தப் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’. அவரால் 1915ஆம் ஆண்டு இக்கோட்பாடு வெளியிடப்பட்டது. நியூட்டன் கோட்பாட்டின்படி பூமி சூரியனைச் சுற்றிவரக் காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை. நிலா பூமியைச் சுற்றிவரக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. ஆனால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி “ஈர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லை. நிறையானது தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைக்கிறது, காலத்தை மெதுவாக ஓட வைக்கிறது. இது காலவெளி வளைவு (space-time curvature) என்று அழைக்கப்படுகிறது. விசை என்பது வெளியிலிருந்து கொடுக்கப்படுவதல்ல. மாறாக அது காலவெளி வளைவு என்ற இருத்தலியல் பண்பே (existential property)” என நிரூபித்தார். இந்தக் காலவெளி வளைவுதான் நமக்கு ஈர்ப்பு விசைபோல் தோன்றுகிறது. “மனித மூளையில் தோன்றிய ஆகச் சிறந்த அறிவியல் கருத்து இது என்றும் ‘இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை இது’ என்றும் அறிவியல் அறிஞர்கள் புகழ்கின்றனர். எடுத்துக்காட்டாக, சூரியன் தனது நிறையால் தன்னைச் சுற்றியுள்ள வெளியை (space) வளைக்கிறது. காலத்தை மிக மெதுவாக ஓட வைக்கிறது. சூரியனைச் சுற்றி உள்ள இந்த வளைந்த வெளியில் கோள்கள் நீள்வட்டப் பாதையில் செல்கிறது. நாம் பார்க்கும்போது சூரியன் கோள்களின் மீது விசை செலுத்துவதுபோல் தெரிகிறது. இப்படித்தான் ஒவ்வொரு பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னைச் சுற்றி உள்ள காலவெளியை வளைக்கிறது. இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாடு கோள்களின் இயக்கத்தை, விண்மீன்களின் இயக்கத்தை நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டைவிடத் துல்லியமாக விளக்குகிறது. பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி இன்னொரு ஆச்சரியமான கருத்து – ஒளியானது மிக அதிக நிறையுள்ள பொருளின் அருகே செல்லும்போது வளைந்து செல்லும். எடுத்துக்காட்டாக, சூரியனைத் தாண்டி இருக்கும் நட்சத்திரங்களின் ஒளி சூரியனுக்கு அருகில் வளைந்து செல்கிறது. இப்படி வளைந்துவருவதால் நாம் பார்க்கும் நட்சத்திரம் அதன் உண்மையான இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தள்ளி நமக்குத் தெரிகிறது. இதை 1919ஆம் ஆண்டு ஆர்தர் எடிங்க்டன் ஒரு முழு சூரிய கிரகணத்தின் பரிசோதனை வாயிலாக நிரூபித்தார். இந்தப் பரிசோதனைக்கு முன்பு வரை ஐன்ஸ்டைன் அறிவியல் உலகில் மட்டுமே அதிகம் அறியப்பட்டிருந்தார். இந்தப் பரிசோதனையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேசப்படும் மனிதரானார். இந்தக் கோட்பாடுதான் கருந்துளை என்ற ஒன்றைக் கணித்தது. ஈர்ப்பு அலைகள் என்பது இருந்தே ஆக வேண்டும் என்றும் கணித்தார். 2015இல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கண்டுபிடிப்பாளர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாட்டில்தான் தனது ஆராய்ச்சிகளைச் செய்தார். ஒரு ஆச்சரியமான தகவல் இன்று நாம் ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் பொதுச் சார்பியல் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. கடந்த நூறு வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப் பின்பற்றி ஆய்வுசெய்த பலர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் பிற்காலத்தில் ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ (Theory of everything) உருவாக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. அரசியலும் தத்துவமும் ஐன்ஸ்டைனை நாம் கொண்டாடக் காரணம் அவரது அறிவியல் சாதனை மட்டுமல்ல. அவர் மானுடத்தை நேசிக்கும் மனிதராகவும் விளங்கினார் என்பதால்தான். அவர் வாழும்போது உலகில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க் குரல் எழுப்பினார். ஐன்ஸ்டைன் பிறப்பால் யூதராக இருந்ததால் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும்கூட அமெரிக்கர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளைக் கடுமையாக கண்டித்தார். கட்டுரைகள் எழுதினார். நான் ‘கடவுள் நம்பிக்கை இல்லாத, ஆனால் ஆன்மீக உணர்வுள்ள மனிதன்’ என்று அடிக்கடி கூறுவார். முதலாளித்துவம் மனித குலத்துக்குச் செய்யும் தீங்கு குறித்து அதிகம் பேசினார். ‘ஏன் சோசலிஸம் வேண்டும்?’ என்பது அவரது முக்கியமான ஒரு கட்டுரை. உலகெங்கும் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவருக்குக் காந்தியமும் காந்தியையும் மிகப் பிடித்த ஒன்றாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உலக ஒற்றுமைக்கு எவ்வாறு பாடுபட வேண்டும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். ஆயுத ஒழிப்புக்கு முன்வர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் வலியுறுத்தி ‘ஐன்ஸ்டைன் - ரஸ்ஸல் உடன்படிக்கை’ என்ற ஒன்றை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலோடு சேர்ந்து உருவாக்கினார். அவரின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரின் வீடும் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் எதற்கும் அஞ்சாதவராக தொடர்ந்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிவந்தார். இன்று பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் ‘அறிவியல் ஆராய்ச்சி மட்டுமே எனது வேலை. நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை’ என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஐன்ஸ்டைனை நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் 1950க்குப் பிறகு ஐன்ஸ்டைனின் உடல்நலம் குறைந்துகொண்டேவந்தது. 1955 ஏப்ரல் 16ஆம் நாள் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். “நான் எப்போது போக விரும்புகிறேனோ அப்போது போக விரும்புகிறேன். செயற்கைத்தனமாக நீட்டித்துக்கொள்ளும் வாழ்க்கை சுவையில்லாதது. நான் எனது பங்கை இவ்வுலகுக்கு அளித்துவிட்டேன். இது நான் விடைபெறுவதற்கான நேரம். அமைதியாக விடைபெறுகிறேன்” என்று கூறினார். அடுத்த நாள் காலை ஏப்ரல் 17ஆம் நாள் தனது 76வது வயதில் உயிர் நீத்தார். அவரது உடல் மறைந்தாலும் அவரின் அறிவியல் கோட்பாடுகள் மனித குல வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும். ஆம், ஐன்ஸ்டீன் காலம் கடந்து வாழும் மனிதர். காலம் வெளி கடந்து வாழும் மனிதர். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ஐன்ஸ்டைன். https://www.arunchol.com/joseph-prabagar-article-on-albert-einstein
-
விழல்
இந்த மாதிரியே தான் எனக்கு கிடைத்த ஆலோசனையும். என்ன, மெல்லிய கம்பிக்கு பதிலாக கொஞ்சம் மொத்த கம்பி ஒன்றை சூடாக்கி விட்டிட்டேன்....