Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. லாட்டரி மார்ட்டினின் மருமகன், ஆதவ் அர்ஜூன், தொல். திருமாளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் போன மாதம் இணைந்திருந்தார். அவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளார் பதவி வழங்கப்பட்டதாகவும் செய்திகளில் இருந்தது.
  2. கடந்த வருடம் 'குட் நைட்' என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் வந்திருந்தது. குறட்டை தான் படத்தின் கரு. சில இடங்களில் கொஞ்சம் நகைச்சுவையுடனும் எடுத்திருந்தார்கள். மணிகண்டன், ரமேஷ் திலக் நடித்திருந்தனர். வினாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.
  3. தலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வளையாது என்று இது தான் வடிவு என்றும் அவர் சொன்னார் நாய்க்கு மட்டும் வால் எப்படி சுருண்டே நிற்குதே என்று மெதுவாக ஒரு நாள் இழுத்துப் பார்க்க அது திரும்பிக் கடித்தது வயிற்றில் போட்டார்கள் ஊசிகளை இந்தக் குறையுடனேயே வளர்ந்து இன்னொரு ஊருக்கு போய் வாழ அங்கே ஒரு சலூன் இருக்குது அங்கே சுருட்டி விடுவார்கள் என்று நண்பன் ஒருவன் கூட்டிப் போனான் என்ன எனக்கு வேண்டும் என்று நான் சொல்ல வாயெடுக்க சிகை அலங்காரம் செய்பவர் வாயில் விரலை வைத்தார் அவர் வாயில் தான் நான் ஒன்றும் சொல்லக் கூடாதாம் ஒன்றும் சொல்லாமல் நான் ஏறி இருக்க அவரும் ஒன்றும் சொல்லவில்லை வெட்டிக் கொட்டி ஏதோ தலையில் பூசி முடிந்தது என்று சைகை காட்டினார் இவருக்கு பேச்சு வராதோ அய்யோ பாவம் என்று நான் நினைக்க 'காசு' என்று தெளிவாக கேட்டார் அங்கே கொடுத்த காசில் வெளியே இரண்டு வருடம் வெட்டியிருக்கலாம் முடி சுருளவும் இல்லை வெளியே வந்து கடையின் பெயர் என்னவென்று பார்த்தால் அது ஒரு பிரபல நகைக்கடையின் பெயர் பின்னர் கல்யாணம் காட்சி எல்லாம் வாழைக்காய் பட்டையுடனேயே தலையில் முடி இருக்குதா இல்லையா என்று தெரியாமலும் அதற்கு தேவை ஒன்றும் இல்லாமலும் வாழ்க்கை வைத்திருந்தது சில வருடங்களின் பின் என்னை நகை கடைக்கு முடி வெட்ட கூட்டிப் போன நண்பனை பார்த்தேன் தொப்பி போட்டிருந்தான் கேட்கவும் தயக்கமாக இருந்தது பொறுத்து பொறுத்து இருந்தேன் அவன் கடைசி வரை கழட்டவே இல்லை இப்ப தொப்பி நானும் வாங்க வேண்டும் இந்த தடவை கடையின் பெயர் என்ன என்று பார்த்தே உள்ளுக்குள் காலை வைக்க வேண்டும்.
  4. வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினைவுகளாக இன்று மிஞ்சியதே என்று இப்பொழுது ஆறுதலாக இருக்கின்றது. வேலை தான் லட்சணம் என்றாகிவிட்டது. போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று எங்களால் விட்டுவிட்டு ஓடவும் முடியாது. எங்களால் முடிந்தது அப்படி ஓடிப் போய் எழுதும் ஒருவரின் எழுத்துகளை வாசிப்பது மட்டுமே. கீழே இருப்பது லஷ்மி மணிவண்ணனின் கவிதை ஒன்று. மிக அருமையான இன்றைய கவிஞர். ------------------------------------------------------------------------------ எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும் நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் டியூப் லைட் முதுகில் கட்டி தலைகீழாகவும் சைக்கிள் ஓட்டுவேன் விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில் இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு சைக்கிள் ஓட்டுவது எனக்கு தண்ணீரில் நீந்துவது போல முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை மேலுயர்த்தும் போது மேளதாளங்கள் முழங்கட்டும் ஆனால் நீங்கள் வேறென்னவோ கேட்கிறீர்கள் கரகரக்கும் குரலில் தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு பதிலாக அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான் வைத்திருக்கிறேன் https://lakshmimanivannan.blogspot.com/2017/06/blog-post_30.html
  5. கோதாவை கமராவில் எடுத்தது போல இருக்கின்றது.....👍 இலங்கை டெயிலி மிரர் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தனர். ஒருவர் நூலகம் ஒன்றில் கோதாவின் இந்தப் புத்தகத்தை நகைச்சுவை புத்தகங்கள் என்ற பகுதியில் தேடிக் கொண்டிருப்பது போல....😀
  6. இவருக்கு உள்நாட்டில் எதிரிகளும் உயிருடன் இல்லை. வாரிசுகளும் இல்லை. அடுத்த கட்ட தலைவர்களும் இல்லை. இவர் போன பின், ரஷ்யா ஒரு அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கப் போகின்றது என்று நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரையொன்று வந்திருந்தது.
  7. இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என, ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின. இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான். பழைய மன்னராட்சிகள் கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும். அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது. கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்‘ என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். மிகச்சிறந்த உதாரண நிகழ்வு ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான் எழுதிய‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ என்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்) அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது. https://www.jeyamohan.in/197947/
  8. நேற்று ஏதோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இவரைப் பற்றிய செய்தியும், விபரங்களும் வெளியாகி இருந்தது. நம்பவே முடியாத ஒரு வாழ்க்கை. ஒரு மனிதருக்கு இவ்வளவு உறுதி தொடர்ந்தும் இருக்குமா என்றும் வியக்க வைத்தது. அந்தக் கட்டுரையின் கீழ் பலர் அந்நாட்களில் இருந்த போலியோ நோய் தொற்று பற்றி தங்களின் அனுபவங்களை எழுதியிருந்தனர். போலியோ தடுப்பு மருந்து, மற்றும் எல்லா நோய் தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.
  9. ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
  10. நேற்று எடப்பாடியார் தாங்கள் தேதிமுகவுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், பாமகவுடன் பேசவே இல்லை என்றும் சொன்னார். பாமக தான் எந்தப் பக்கம் போவது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை போல. மேலும் எடப்பாடியார் தங்களின் கூட்டணியே மிகப் பலமான கூட்டணி என்றும் சொன்னார், ஏனென்றால் தங்களின் அதிமுக கட்சி கூட்டணி வைத்திருப்பது மக்களுடனேயே என்று ஒரு காரணமும் சொன்னார்!!
  11. P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later. நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀 வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம். சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர் LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். https://www.yahoo.com/entertainment/p-e-teacher-23-felt-201013198.html
  12. 👍.... ஒரு பக்கம் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் உளவுத்துறை என்று பயம் காட்டி ஆள் பிடிக்கின்றார்கள். போன மாதம் தான், சரத்குமார் அவரின் கட்சி 234 தொகுதிகளிலும் முன்னுக்கு நிற்பதாக பேசியிருந்தார். 2026 இல் அவரே முதல்வர் என்றார், சிரிக்காமலேயே.
  13. உங்களின் ஓவியங்கள் (கருத்துகளும்) அருமை....👍👍 DALL - E உபயோகிக்கின்றீர்களா?
  14. மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.
  15. இது புதுசு..........இன்னும் இவர் சொல்லாத எத்தனை திருக்குறள்கள் இருக்குது, அதில் ஏதாவது ஒன்றை எடுத்து விடுவதை விட்டிட்டு, இது என்ன புதுப் பழக்கம். ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.
  16. ட்ரம்ப் அவர்களே, நாட்டில் இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்யா விட்டாலும், குறைந்தபட்சம் உங்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்தால், நீங்கள் கனவில் கூட நினைத்திராத ஒரு வாக்கு உங்களுக்கு கிடைக்கும்.....😀 இங்கு டிக்டொக் ஓடுவதே உங்களின் ரசிகர்களினால் தான்.
  17. 👍👍..... உங்களிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. இந்த வருட கரப்பந்தாட்டப் போட்டிக்கு வந்து விடுங்கள்.......😀
  18. 👍👍....... எங்களூரில் அன்று கப்பலுக்கு போகுதல் என்பது ஒரு உச்சம் மாதிரி. பல உறவினர்கள் கப்பலுக்கு போய் வருவார்கள். இறங்கி வரும் போது அவர்கள் கொடுக்கும் சூயிங்கம் போன்றவற்றுக்காகவே இவர்கள் அடிக்கடி ஏறி இறங்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.......😀 இன்று சில நண்பர்கள் இன்னும் கப்பல் தொழிலில் இருக்கின்றனர். பலர் கப்பல் தொழிலை விட்டு ஊரிலோ அல்லது கொழும்பிலோ அல்லது வேறு நாடுகளிலோ வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். 'வயசாயிடுச்சு கலியப்பெருமாள், முன்ன மாதிரி இல்லை....' என்ற நிலைக்கு நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்....😀 கடலோடிய சோழ வம்சத்தின் பிரதிநிதிகள் நாங்களோ என்று ஒரு நினைப்பு வரும். கேரளா மக்களின் உணவுகளையும், மொழி உச்சரிப்பையும் பார்த்து சேரர்களோடும் ஒரு தொடர்பு இருக்கிறது போலவும் இருக்கும். பாண்டியர்கள் போலவே குலசாமிக்கு சித்திரை திருவிழா இன்னமும் செய்து கொண்டும் இருக்கின்றோம். மூன்றும் கலந்த கலவை நாங்கள்...........🤣🤣
  19. நான்கு வருடங்களின் முன் ஊர் போயிருந்தேன். என்னுடைய சில உறவினர்களின் பிள்ளைகள் இதை எனக்கு நேரடியாகவே சொன்னார்கள்: நாங்கள் வெளிநாடு போகப் போகின்றோம் அல்லது கப்பலுக்கு போகப் போகின்றோம். எவ்வளவு தான் படித்தாலும் என்ன சம்பளம் இங்கு கிடைத்து விடப் போகின்றது என்றனர். கப்பல் வாழ்க்கை கடுமையானது மட்டும் இல்லை, அது நாடாறு மாதம், காடாறு மாத வாழ்க்கை. அதில் உள்ள சிரமங்களையும் விலாவாரியாகச் சொன்னேன். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போகலாம் என்றும் சொன்னேன். ஒவ்வொருவரும் நெருப்பு உண்மையிலேயே சுடும் என்று அவர்களே தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக இருக்கின்றனர்.
  20. நான் இருக்கும் தென் கலிபோர்னியா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் காலநிலை மிதமானது, கொஞ்சம் வறட்சியானது, குளிர் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இங்கு எல்லா விதமான உயிரினங்களும் வருடம் முழுவதும் எங்களுடன் சேர்ந்து வாழும். புதிதாக ஏதும் ஒன்று வந்தால், அதற்கு சைனீஸ் என்ற அடைமொழி கிடைக்கும். ஒரு தடவை நுளம்பு வகை ஒன்று புதிதாக இங்கு வந்தது, அதை 'சைனீஸ் நுளம்பு' என்று இங்கு அழைத்தனர். இது தண்ணீர் இல்லாமலேயே வாழும், முட்டைகள் போடும், குஞ்சுகள் பொரிக்கும்!! கோவிட் வைரஸிற்கு சைனீஸ் வைரஸ் என்று பெயர் சூட்டியது போல.
  21. 🤣🤣..... இப்ப அந்த தொல்லை இல்லை. ஆனால் பழைய கதை ஒன்று இருக்கின்றது. அன்று என்னுடைய துணை வீட்டைக் கொளுத்தாமல் விட்டது தெய்வாதீனம் தான்........😀
  22. நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீழாக எவ்வளவு புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் பூந்தொட்டிகள் தொங்கும் செடிகள் கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் வாசலில் அவசரத்தில் பார்த்தால் அநேக வாசல்களும் அழகே நிதானத்தில் பார்த்தால் பல வாசல்களும் ஒன்றே என்றும் எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் வெகுசில வாசல்கள் பயத்தை தருகின்றன தனித்தவர்களும் துணிந்தவர்களும் அதன் உள்ளே வாழ்கின்றனர் எப்போதும் கரப்பான் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் வேரோடி வெடித்து கவனம் இன்றி கைவிடப்பட்ட சில வாசல்கள் ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது இன்னொன்று அகலிகையுடன் கல்லாகி இன்று வரை உயிர் கொடுக்கப் போகும் ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது வாசல் தாண்டி வீடுகளுக்குள் மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் வாழ்கின்றனர் பிரிகின்றனர் குப்பை ஆகின்றன வீடுகள்.
  23. சூழல் பிரதான ஒரு காரணம். அன்று நான் பிறந்து வளர்ந்த ஊரிலோ, என் குடும்பத்திலோ கல்வி என்பது என்றும் ஒரு பிரதான விடயமே இல்லை. இன்றும் கூட அப்படித்தான். பணம் வேறு சில வகைகளில் இலகுவாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதே அங்கே இருக்கும் பொதுவான மனநிலை. படிப்பு என்பது மிக நீண்ட காலம் எடுக்கும் ஒரு முயற்சி, அதுவும் பெரும் பயனைக் கொடுக்காது என்றே அவர்களில் பலர் இன்றும் சொல்கின்றனர். இந்த சூழல் அமையும் போது, படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும். அமையும் சந்தர்ப்பங்கள் இன்னொரு பிரதான காரணம். ஆசிரியர்களின் பங்கு பெரியது. எனக்கு உயர்தரத்தில் பாடசாலையில் கிடைத்த நான்கு ஆசிரியர்களுமே நிகரில்லாதாவர்கள் - கணேசலிங்கம் மாஸ்டர், சண்முகசுந்தரம் மாஸ்டர், சூரியநாதன் மாஸ்டர் மற்றும் நடராசா மாஸ்டர். இலங்கையில் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு வகுப்பிற்கும் இப்படி ஒரு ஆசிரியர் குழாம் கிடைத்திருக்கவே மாட்டாது. அவர்களே எங்களை உருவாக்கினர். ஆனால், நுவரெலியாவிலோ அல்லது புத்தளத்தில் கூட அந்நாட்களில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியான ஆசிரியர்கள் அமையவில்லை. யாழ் நகரில் அன்றிருந்த தனியார் கல்வி நிலையங்களும், அங்கு கற்பித்த பெயர் பெற்ற ஆசிரியர்களும் யாழ் மாவட்ட மாணாக்கருக்கு பெரும் கொடையே. மாணவர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி. பெரிய பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே யார் முதலில் வருவது, யார் 100 எடுப்பது, யார் தேசிய மட்டத்தில் பெயர் எடுப்பது என்று போட்டிகள் இருந்தன. இது யாழ், கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற மாவட்டங்களிலேயே அன்று இருந்தது. பெரும்பாலும் மற்ற மாவட்டங்களில் இந்தப் போட்டி இருக்கவில்லை. இதே அனுபவங்களை இன்றும் கூட நாங்கள் பல இடங்களில் பொருத்திப் பார்க்கலாம் என்றே நான் நினைக்கின்றேன்.
  24. நான் சொல்ல வந்தது ஒரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் என்றும், இன்னொரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் அல்ல என்றும் இலகுவாக சொல்லி விட முடியாது என்பதே. பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.
  25. இங்கு சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் பெறுபேறுகள் வருகின்றன என்றே நான் சொல்லியிருந்தேன். கொரிய இன மக்களுக்கு வெள்ளையின அமெரிக்கர்களை விட கல்வி சிறப்பாக வரும் என்று நான் சொல்ல முயலவில்லை. எங்களின் நாட்களில் இருந்து, 90 களில் இருந்து, மொறட்டுவ பல்கலையில் பெரும்பான்மை இன மக்களே சிறந்த பெறுபேறுகளை அதிகமாக பெற்றுக்கொண்டு வருகின்றனர். அந்நாட்களில் மொறட்டுவ பல்கலைக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து நாட்டில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும், யாழ் மாவட்டத்தில் இருந்து போனவர்களால் அங்கு சாதிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு அங்கு அமைந்த/அமையாத சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். மிக்க நன்றி உங்களின் தொடர் உரையாடலுக்கு....👍👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.