Everything posted by பிழம்பு
-
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ள நிலையில். எம்.கே.சிவாஜிலிங்கம் விரைவில் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரியவருகின்றது. 16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார ரீதியாகப் போட்டியிட்ட ஏழு உறுப்பினர்கள் வெற்றி பெற்று தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் தெரிவு செய்யப்பட்ட அப்புலிங்கம் உதயசூரியன் கடந்த மாதம் 27ஆம் திகதி தனது பதவி விலகல் தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் பதவி விலகல் தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அந்த வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும் விரைவில் எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக பதவி ஏற்பார் என்றும் தெரியவருகின்றது. வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி
-
பூநகரியில் விபத்து; 5 வயது சிறுமி பலி!
கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம் கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம் சங்குப்பிட்டிப் பாலமருகே சோகம் சங்குப்பிட்டிப் பாலமருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை நடந்துள்ளது. சுடரொளியன் தனுஷ்கா (வயது - 5) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பூநகரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஒரு மோட்டார்சைக்கிளில் உயிரிழந்த சிறுமியின் தாய், சித்தி மற்றும் இளைஞர் என நால்வர் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகே மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடும் காற்று மற்றும் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது. விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல அந்தவழியால் சென்ற எவரும் உதவவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்செயலாக அந்த வழியால் வந்த யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்ததுடன், அம்புலன்ஸ்களுக்கு அறிவித்துள்ளார். வாகனம் ஒன்றில் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்த நிலையில், சாவகச்சேரியில் இருந்து அம்புலன்ஸ் வந்ததை அடுத்து சிறுமி அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதேவேளை, பூநகரியில் இருந்து வந்த அம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம்
-
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! - இளங்குமரன்
29 Sep, 2025 | 11:01 AM நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் வேலணைக்குச் சென்றே தமக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் மேற்கொண்டு, குறிகாட்டுவானில் இருந்து, வேலணை பகுதிக்கு தரை வழியாக சென்று எரிபொருட்களை கொள்வனவு செய்து, மீண்டும் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லவேண்டிய நிலையிலேயே அப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அங்கு வாழும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு போன்றே ஏனைய கடல் கடந்த தீவுகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தீவுகளில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! - இளங்குமரன் | Virakesari.lk
-
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை!
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது. அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான பக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணியை இன்று முன்னெடுத்தனர். இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர். இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை! | Virakesari.lk
-
2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு
2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. இதுபோன்ற தொடர்ச்சியான நஷ்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2023க்குப் பின்னர் மின்சார சபை இலாபம் ஈட்டும் நிலைக்குச் சென்றது என்பதும் இங்கு தெரியவந்தது. கடந்த காலத்தில் சுமார் 18 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தவேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணிநேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எல்.ரி.எல் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்ட விதம் தெளிவாக இல்லை என்றும், இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும்போது இது மேலும் சிக்கலாக அமையலாம் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எல்.ரி.எல். நிறுவனம் (லங்கா ட்ரான்ஃபோமர் நிறுவனம்), வெஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மற்றும் ஈசொட் (Esot) நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து சிக்கல்கள் இருப்பதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நிறுவனத்தின் பங்குப் பிரிப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனவே, சட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழு தெிவித்தது. அத்துடன் ஒக்டோபர் 24ஆம் திகதி எல்.ரி.எல். நிறுவனத்தை கோப் குழுவிற்கு அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. புத்தளம் அனல் மின் நிலையத் திட்டத்திற்காக ரூ. 124.30 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை ஒப்பந்ததாரர் இன்னும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்புடைய ஒப்பந்தத்தின்படி, திட்டம் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் மின்சார சபையிடம் ஒப்படைக்கப்படவிருந்த போதும், அவை இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், பொதுச் சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது மேலும், இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய விதிகளுக்கு முரணாக ரூ.64 மில்லியன் கல்விக் கடன் மற்றும் ரூ.6,618.3 மில்லியன் சொத்துக் கடன்களாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் புலனானது. இந்தக் கடன்கள் பணிப்பாளர் சபை, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டரசிறை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் 2003ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி விதிமுறைகளைத் திருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமல் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 11 மாதங்களாக பதில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றமை குறித்தும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இலங்கை மின்சார சபையில் குறிப்பாக அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக, நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் இல்லாதது வருந்தத்தக்கது என்று குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. பதவியணி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் 2008 ஏப்ரல் 9 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் பட்டியலில் சேர்க்கப்படாத கொடுப்பனவுகளுக்காக 2023ஆம் ஆண்டில் ரூ. 507.47 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள அதிகாரிகளுக்கு தக்கவைப்பு கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது என்றாலும், தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள 517 அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தக்கவைப்பு கொடுப்பனவாக ரூ. 99.85 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரைகளையும் வழங்கியது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சுஜீவ சேனசிங்க, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன், ஜகத் மனுவர்ண, தர்மப்பிரிய விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். 2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு | Virakesari.lk
-
மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா
29 Sep, 2025 | 05:35 PM (எம்.நியூட்டன்) மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது. அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தியிருக்கிற இந்த காட்டு தர்பார் என்பது அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எத்தகைய அணுகுமுறையை கையாளும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம். அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்திருக்கிறது. இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோருகின்றேன். இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை. அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும். முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்கள் கூட உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார். மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா | Virakesari.lk
-
சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா
(எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். திங்கட்கிழமை (29) நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரை காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்ல., ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர். ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். நாமல் தவறிழைத்துள்ளார் எனில் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம். தும்புத்தடி எழுந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நான் தும்புத்தடியாக இருக்கின்றேனா அல்லது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் அவ்வாறு இருக்கின்றார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். ஒன்றில் என்னைக் கைது செய்வர். அல்லது சாமர சம்பத் தசநாயக்கவை கைது செய்வர். நாமிருவரும் இல்லை என்றால் ஆளுங்கட்சிக்கு அரசியலும் இல்லை. பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வியெழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்கு தெரியும். என்னை பைத்தியம் என்று கூறுவதால் எனக்கு கவலையில்லை. ஆனால் நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றார். சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா | Virakesari.lk
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம் வாஷிங்டன்: இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது அமெரிக்க அதிபரின் அடுத்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதல், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அவர் அறிவித்தார். முதலில் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தார். இந்தியா அதை ஏற்காததால், கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்தார். இதனால், இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தீவிரம்: இதற்கிடையே, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர். அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை அமைச்சருடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் திடீரென அறிவித்துள்ளார். அதேநேரம், அந்த மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார். மேலும், சமையலறை உபகரணங்கள், குளியலறை, கழிப்பறை உபகரணங்கள் மீது 30 சதவீத இறக்குமதி வரி, பர்னிச்சர் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பு: ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என தெரிகிறது. அமெரிக்கா உடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்து துறை, ட்ரம்பின் இந்த திடீர் தாக்குதால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், நல்ல செய்தி வரும் என இந்திய வர்த்தகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதித்திருப்பது வர்த்தகர்களிடம் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம் | 100 percent tax on import of Indian medicines - hindutamil.in
-
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
முத்தம் எனும் மாமருந்து! உடலுறவின் மையமே இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டாக்குவதுதான். அந்த மகிழ்ச்சிக்கு வித்தாக அமைபவை முத்தங்களே. கடுமையான சோர்வுடன் இருக்கும் உடலை அடுத்த சில நொடிகளில் உற்சாகமாக மாற்ற முத்தப் பதியங்கள் போதுமானவை. முத்தங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆக்ஸிடோசின் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி மன மகிழ்ச்சியை அதிகரிக்க முத்தங்கள் தூண்டுகோலாக அமையும். உடலுறவின்போது மட்டுமல்லாமல், வாய்ப்பிருக்கும் நேரங்களில் எல்லாம் கணவனும் மனைவியும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டே இருந்தால் எதிர் காலத்தில் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகிறதாம். மிக முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைத்து, ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் தாக்கத்தைக் குறைக்க முத்தங்கள் பெருமளவில் உதவு கின்றன. உடலுறவுக்குத் தயாராகும்போது, `ஃபோர்பிளே' எனப்படும் முன்விளையாட்டு நேரம் மிக மிக முக்கியமானது. அப்போது காம இல்லத்தின் வாசல் கதவுகளைத் திறக்க உதவும் கொத்துச் சாவிதான் முத்தங்கள். ‘இப்போது உடலுறவுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று சமிக்ஞை கொடுப்பது உதடுகள் நடத்தும் முத்த நாட்டியம்தான். தன் இணையின் ஈரம் மிகுந்த உதடுகள் தீண்டியதும், மூளைக்கு சிக்னல் கிடைக்க, வறண்டிருக்கும் உணர்வுகள்கூட ஹார்மோன்களின் உதவியால் நீரூற்றாகப் பிறப்பெடுத்து தாம் பத்யத்தை இனிமையாக்கும். முத்தம் வழியாக ஆனந்தம் பெற, இந்தந்தப் பகுதியில்தான் முத்தமிட வேண்டும் என்றில்லை. அது ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டது. உடலுறவின்போது எந்தெந்தப் பகுதியில் முத்தம் கொடுத்தால் தன் இணைக்குப் பிடிக்கும் என்பதைத் தொடக்கத்திலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது அனுபவத்தின் வழி கற்றுணர வேண்டும். முத்தமிட ஏற்ற உடல் பாகத்தை இணையைக் கேட்காமலே கண்டறிந்து அவரை ஆச்சர்யப்படுத்துவது கூடுதல் இணக்கத்தை உண்டாக்க உதவும். பெரும்பாலானோருக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படும் முத்தத் தீண்டல்கள் பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூச்சம் மிகுந்த பகுதிகளில் வழங்கப்படும் கூச்சம் மிகுந்த முத்தங்கள், புதுமையான அனுபவங்களைப் பரிசளித்து, உடலுறவில் உயரத்தை அடைய உதவியாக இருக்கின்றன. உடலுறவின் உச்சத்தில் இருக்கும்போது இன உறுப்புப் பகுதியில் வழங்கப்படும் முத்தங்கள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும். பல நேரங்களில் மென்மையான முத்தங்கள் பல மாயங்களைச் செய்யும். சில நேரங்களில் ஆக்ரோஷமான முத்தங்கள் வித்தைகளை நிகழ்த்தும். எவ்வகையான முத்தங்களாயினும் இணைக்குப் பிடித்தமான வகையில் முத்தங்களின் அழுத்தத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுப்பது சிறப்பு. முத்தங்களைப் பரிமாற வயது தடையல்ல… முதிய வயதில் வறண்டிருக்கும் ஹார்மோன்களைகூட லேசாகச் சிலுப்பி விடச் செய்யும் சக்தி முத்தங்களுக்கு உண்டு. முதிர்ந்த வயதுடைய கணவன், முதிர்ந்த வயதுடைய தன் மனைவியின் சுருக்கமான தேகத்தில் கொடுக்கும் முத்தம், காமப் பரவசத்தை உண்டாக்காது எனினும், இளம் வயது இல்லற நினைவுகளைத் தூசிதட்டி மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்பச் செய்யும். அவ்வயதில் தேவைப்படுவது அளவுகடந்த மகிழ்ச்சிதானே! முத்தம் இடும் முன்பு கவனிக்க வேண்டியவை… முத்தங்கள் காம உலகத்தில் அத்தியாவசியமானவை என்பதெல்லாம் சரி... அம்முத்தங்களை உணர்வுபூர்வமாகப் பரிசளிக்கும் வாய்ப்பகுதி சுகாதாரமாக இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பல்வேறு காரணங்களால் உண்டாகும் வாய்நாற்ற குறிகுணத்தோடு ஆசையாக முத்தமிட மனைவியின் அருகில் நெருங்கினால், முகச் சுளிப்போடு அவர் விலகிச் செல்லவே வாய்ப்புகள் அதிகம். முத்தத்தின் தனித்துவமே அது கொடுக்கும் சுகந்தம்தான். அந்த வாசனையே காம இச்சையைத் தூண்டக்கூடும். அவ்வகையில் துர்நாற்றம் மிகுந்த முத்த வாசனை எவ்வளவு தான் பரவச நிலையில் இருந்தாலும் அடுத்த நொடியே காம மலை மேலிருந்து தவறி வீழச் செய்யும். முத்தமிடும் தருவாயில்தான் பலருக்கு வாய் நாற்றப் பிரச்னை இருப்பதே தெரிய வருகிறது. உடலுறவுக்கு முன்பு குளித்து உடலைத் தூய்மையாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல இரவு நேரங்களில் பல் துலக்குவதும் அத்தியாவசியம். சொத்தைப் பல் பிரச்னை காரணமாக வாய் நாற்றம் ஏற்படுகிறதா அல்லது வாய்ப் பகுதியில் வேறு ஏதாவது பிரச்னையா என்பதை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். வாய் சுகாதாரம் தவிர்த்து, வயிற்றுப் புண் காரணமாகவும் வாய் நாற்றம் ஏற்படலாம். வேறு சில மருத்துவக் காரணங்களும் இருக்கின்றன. அடிப்படையைக் கண்டறிந்தால் வாய் நாற்றத்தை நிரந்தரமாகத் தவிர்க்கலாம். புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்படியும் சில ஆண்கள்… உடலுறவுக்கு முன்பு புகை பிடித்துவிட்டு, சுகந்தம் தரும் ஸ்பிரேக்களை வாய்ப் பகுதியில் அடித்துகொண்டு உடலுறவு மேற்கொள்ளத் துடிக்கும் ஆண்களுக்கு அது தற்காலிக நிவாரணம் அளிக்கலாமே தவிர, பிரச்னையைச் சரி செய்யாது. மேலும், புகை பிடித்துவிட்டு மனைவிக்கு முத்தமிடும் போது, சிகரெட்டில் இருக்கும் தீமை பயக்கும் வேதிப்பொருள்கள் வாய்வழியே இணைக்குப் பரிசாகக் கிடைக்கும். செகண்டரி ஸ்மோக்கிங்கால் உண்டாகும் பாதிப்புகள் மனைவிக்கு ஏற்படலாம். எப்படி சிலருக்குக் காலையில் புகை பிடித்தால்தான் மலம் வருமோ, அதைப் போல ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் தான் காம இச்சை பிறக்கும் என்ற அளவில் பல ஆண்களின் மனநிலை இருக்கிறது. பழைய திரைப்படங்களில் இந்தக் காட்சியை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். தவறான இந்த போதைப் பழக்கத்திலிருந்து வெளிவருவது இனிமையான இல்லறத்துக்கு உதவும். முத்த இசையை அடிக்கடி ஒலிக்க விட்டுக்கொண்டே இருங்கள்... ‘முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…’ என்று முத்தங்கள் பரிமாறும்போது உண்டாகும் லயத்தை ஒவ்வொரு முறையும் அனுபவியுங்கள். ‘முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்…’ எனும் அதே பாடலுடைய சரணத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்வீர்கள். முத்தங்கள்… பெரும் வரம்! Vikatan Plus - 28 September 2025 - முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம் 4 | sexual guidance series 4 - Vikatan
-
LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு
26 Sep, 2025 | 05:21 PM நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார். சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார். எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட்டத்தின் திறனை நாங்கள் அங்கீகரிக்கிறோம், என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி அதன் உலகளாவிய சுற்றுலா தடத்தை விரிவுபடுத்தும் இலங்கையின் மூலோபாய நோக்கங்களுடன் ஒத்துப்போவதாக அமைகிறது. பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த திட்டத்தில், பங்குதாரர் ஈடுபாடு, பயிற்சி, விழிப்புணர்வு திட்டங்கள், வேலைவாய்ப்பு; மற்றும் சர்வதேச விளம்பர இணைப்புகள் போன்ற ஆறு விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா நடத்துபவர்கள், ஹோட்டல்கள், பயிற்சி நிறுவனங்கள், வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்பு கொண்டு, DE&I பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள EQUAL GROUND-க்கு இலங்கை சுற்றுலா அதிகாரம் வழங்கியுள்ளது. மேலும், சர்வதேச சுற்றுலா மன்றங்கள், கண்காட்சிகள் மற்றும் டுபுடீவுஐஞ சுற்றுலா வலையமைப்புகளில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து EQUAL GROUND-பங்கேற்பதை இலங்கை சுற்றுலா வரவேற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வெளியுறவு மற்றும் வெளிநாட்டலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரிடம் இந்த திட்டத்தை வழங்க EQUAL GROUND விருப்பம் தெரிவித்ததை கடிதம் மேலும் ஒப்புக்கொண்டது. இந்த ஈடுபாடுகளை எளிதாக்குவதில் இலங்கை சுற்றுலா ஆதரவை உறுதி செய்துள்ளது. இந்த முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக EQUAL GROUND -உடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம், இது இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,என அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு | Virakesari.lk
-
சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
(செ.சுபதர்ஷனி) நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருடனும் மக்களோடு இணைந்து திருடனை பிடிப்பது போல தான் என்.பி.பி அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள பலரின் சொத்து விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்திலிருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்துள்ளனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார். குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் எம்மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பை குற்றம்சாட்டியே கடந்து விட்டனர் மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார். சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
-
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி 26 Sep, 2025 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நிலையியற் கட்டளையின் 27.2 பிரகாரம் அண்மையில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறது. இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களே உள்ளன. இந்த விகாரை அமையப்பெற்றுள்ள காணியானது காணி அமைச்சினால் கைப்பற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை. காணி அரசுடடையாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் பிரசுரிக்கப்படவில்லை. இந்த காணி தொடர்பில் அமைச்சு மட்டத்தில் எவ்வித தீர்வும் எடுக்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குரிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த காணி தமக்குரியது என்று போராடும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். ஜனாதிபதி எம்மை அழைத்து விரிவான கலந்துரையாடியுள்ளோர். யாழ் மாவட்ட சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தையிட்டி பிரச்சினைக்கு ஒரு இடத்தில் மாத்திரம் தீர்வு காண முடியாது. புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றிணைந்தே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி | Virakesari.lk
-
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் மக்களின் காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தங்களுடைய தலைமையில் விவாதிக்கப்பட்ட விடயங்களில் இரண்டு முக்கியமான விடயங்கள் பொதுமக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. முதலாவது பலாலி விமான நிலையம். சர்வதேச விமான நிலையம் என்று தாங்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு இடம்.இரண்டாவது காங்கேசன் துறை இறங்கு துறை. அதை துறைமுகம் என்றும் பொருள் கொள்ளலாம். வடக்கு மாகாணத்தின் இவ்விருத்தியில் எந்த ஒரு நபருக்கும் இல்லாத அக்கறையை இந்த அரசாங்கம் செலுத்துவது கண்டுப்பூரிப்படைந்து தங்கள் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை நினைத்து பூரிப்படையும் பாமர மக்களில் நானும் ஒருவன். ஆனால் வெறும் வாய்ப்பேச்சுகளால் ஒரு வருடத்தை கடந்து விட்ட அரசாங்கத்திடமிருந்து நிலையான அபிவிருத்தி ஒன்றை வடக்கு மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தங்களிடம் கேட்க வேண்டி இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பலாலி உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலைய அபிவிருத்திக்காக தங்களுடைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த பணம் எவ்வளவு? அதில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதற்குரிய ஆதாரங்களை பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்காக சமர்ப்பிக்க முடியுமா? வடக்கின் ஒரே ஒரு பொருளாதார துறைமுகமாக இருக்கும் காங்கேசன் துறை இறங்குதுறைஅபிவிருத்திக்காக தங்களுடைய 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதில் 2025 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு?அதனை ஆதாரங்களுடன் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா? வடக்கு மாகாணத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சிறு சிறு துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அவற்றில் செலவழிக்கப்பட்ட பணம எவ்வளவு? கடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணி தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துக்களுக்கு அமைய, பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நில அளவு எவ்வளவு? பலாலி விமான நிலையத்தில் சட்டரீதியாகஅரசாங்கம் கொண்டிருக்கும் நில அளவு எவ்வளவு? விமான நிலையத்தில் சட்டரீதிய அல்லாத பொது மக்களின் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் காணி நில அளவு எவ்வளவு? பொது மக்களின் காணிகளில் இதுவரை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கம்பன்சேஷன் எத்தனை குடும்பங்களுக்குவழங்கப்பட்டது? எப்போது வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? அதன் மொத்த பெறுமதி எவ்வளவு? பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் இதுவரை அரசாங்கம் விடுவித்திருக்கும் தனியார் நிலப்பரப்பு எவ்வளவு? உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத தனியார் விடுவிக்கப்பட்ட காணிகள் எவ்வளவு? எத்தனை குடும்பங்கள்?, இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த வேறு எந்த எந்த பகுதியில் ஆவது தனியார் காணிகள்விமான நிலைய அல்லது துறைமுக அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டு இதுவரை பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா? அவ்வாறாயின் அவற்றின் விவரங்களை சமர்ப்பிக்க முடியுமா? காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற தங்களுடைய முடிவினை அவதானித்த பின்னர், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாங்கள் வந்தது என்ன காரணம் என்பதை விளக்க முடியுமா? அவ்வாறாயின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பணம், மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்த பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது என்று நீங்கள் கருதினால் பலாலி விமான நிலையத்தினால் பயனடைய போகும் சர்வதேச பயணிகளின் வருடாந்த வரவையும் அனுமானமாக அதனால் ஏற்படப் போகின்ற லாபத்தையும் சொல்ல முடியுமா? பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது அதுவும் மத்தள விமான நிலையம் போன்று சர்வதேச விமானங்களில் வரவுகள் அற்ற ஒரு விமான நிலையமாக மாற்றமடையும் என்ற கருத்து பொதுமக்களிடையே இருப்பதால் விமான நிலையம் அபிவிருத்தி தவிர்ந்த வேறெதுவோ காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகள் தகுந்த பண கொடுக்கல் வாங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா ?இன்றேல் ஏன்? விமான நிலையம் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவதும் காங்கேயன் துறை முகம் அபிவிருத்தி செய்யப்படாததும் இராணுவ அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுகின்ற என்ற பொதுமக்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லை என்றால் ஏன்? என்று கேள்வியெழுப்பினார். காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி | Virakesari.lk
-
பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறிப்பிட்டார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்த பின்னர் மேலதிக கேள்விகளை எழுப்பிய அர்ச்சுனா, சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன்தான். யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிலை பெட்டி அல்ல. நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேணும் பதில் வழங்கப்படவில்லை. வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் காணிகள் பெறப்படுகின்றன. அங்கே மக்கள் காணிகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது. சும்மா ஆட்காட்டுதல், பேய் காட்டுதல் வேலையை யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம். யாழ்ப்பாணம் உங்களின் வெற்றிலைப் பெட்டி இல்லை என்றார். இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கு பதிலளிக்காமல் சபையின் தினப் பணிகளை முன்னெடுத்து அமைச்சின் அறிவித்தலொன்றை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சுனா தொடர்ந்தும் பதில் கூறுங்கள் என்று அமைச்சரை நோக்கி தெரிவித்துக்கொண்டே இருந்தார். இவ்வேளையின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் ஏதோவொன்றை அமைச்சரை நோக்கி கூறினார். அந்த வாட்டுக்கே உங்களையும் அனுப்ப வேண்டி வரலாம் என்று சுஜீவ சேனசிங்கவை நோக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிரித்தவாறு கூறினார். இதேவேளை அர்ச்சுனா தொடர்ந்தும் சபைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைதியான இருக்குமாறு சபாநாயகரும் தொடர்ந்தும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அர்ச்சுனா அமைதியடையாமல் அமைச்சரை பார்த்து ஏதோவொன்றை கூறிக்கொண்டிருந்த போது ''நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன் ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து என்னை பேசுவதற்கு இடமளியுங்கள். இல்லையென்றால் இங்கே இடையூறு ஏற்படுத்துபவரை வெளியே போடுங்கள்'' என்று அமைச்சர் கூறினார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா அவர் பதிலை வழங்கவில்லை. அவர் இப்போது பைத்தியம் என்று கூறுகின்றார். அந்த வசனத்தை நீக்குமாறு கோருகின்றேன். என்றார். இதனை தொடர்ந்தும் அமைச்சர் அர்ச்சுனாவுக்கு பதிலளிக்காது,அமைச்சின் அறிவித்தலை வாசித்து அமர்ந்தார். பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில் | Virakesari.lk
-
ஏன் வெறுக்கப்படுகிறார்கள் இந்தியர்கள்?
அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகமாக நிலவுகிறது. ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்கிற எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கூடுதலாக, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிறவெறி புதிய வீரியத்தோடு பரவத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு ஆற்றிய குடியேறிகளில் கணிசமானவர்கள் இந்தியர்கள். பின் ஏன் இந்த எதிர்ப்பலை? மெல்லிய கோடு: இந்த வன்மம் திடீரென வந்ததல்ல என்பதுதான் நிதர்சனம். 2004இல் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, நியூயார்க் நகரிலிருந்து தங்களுடைய ஊருக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக நண்பரின் மகளும் அவரின் இணையரும் வந்திருந்தார்கள். நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களை இணைக்கும் லிங்கன் கணவாயைக் கடந்து ஓர் இடத்துக்கு வந்தபோது, அங்கிருந்து பல்வேறாகப் பிரிகிற சாலைகளில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எனச் சிறு குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்த வாகன ஓட்டியிடம் விசாரித்தோம். அதற்கு அந்த அமெரிக்கர் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு, “உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்” என அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுக் கண்ணாடியை ஏற்றிவிட்டுப் போய்விட்டார். அதுவரை உற்சாகமாகப் பயணித்த எங்களை அச்சொற்கள் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டன. ஆனால், அதற்குப் பிறகு நாங்கள் யாரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே இல்லை. இது குறித்து நானும் இதற்கு முன் யாரிடமும் பேசியதோ எழுதியதோ இல்லை. ஆனால், அந்த வடு இன்னும் மறையவில்லை. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இத்தகைய சூழல் பற்றி நிறையச் சொல்வார்கள். பெரும்பாலான வெள்ளையர்கள் வெளிப்படையாக நிறவெறியைக் காட்ட மாட்டார்கள். ஆனால், சிறு செயல்கள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். உதாரணமாக, சேவை மையங்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள், சக வெள்ளையினத்தவரிடம் சத்தமாகச் சிரித்து நட்பாகப் பேசுவார்கள். அடுத்து வரும் நம்மிடம் கூடுதலாக ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள். அந்த மெல்லிய இழை போன்ற வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியும். இதன் பின்னே பல நுட்பமான விஷயங்கள் அடங்கியுள்ளன. மூன்று பிரிவினர்: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளில் குடிபெயர்ந்தவர்கள், மூன்று விதமான அலைகளில் சென்றவர்கள். முதல் அலை, 60களிலும் 70களிலும் நிகழ்ந்தது. அப்போது மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்கள் சென்றார்கள், குடியுரிமை பெற்றார்கள். காலப்போக்கில் அந்தப் பண்பாட்டுடன் தங்களை இணைத்துக்கொண்ட அவர்கள், இப்போது அந்த நாடுகளிலேயே மூன்றாவது தலைமுறையினரையும் கண்டுவிட்டார்கள். அவர்களின் வழிவந்த இன்றைய தலைமுறைக்கு இந்தியாவுடன், தமிழ்நாட்டுடன் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. பட்ட மேற்படிப்பு படிக்க 90களில் பல்லாயிரக்கணக்கில் சென்றவர்கள் இரண்டாவது அலையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் பொறியியல், மேலாண்மைத் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்றவர்கள். இவர்கள் படிப்பு முடிந்தவுடன் அங்கேயே கிடைத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு சாதாரண உள்நாட்டுக்காரருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இவர்கள் வாங்கினார்கள். ஒன்றரை மடங்கு நேரம் கூடுதலாக வேலை செய்தார்கள். எளிமையாக வாழ்ந்து, சம்பாதித்த சொற்பப் பணத்தில் மிச்சம்பிடித்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப் பணமே இங்கே ஒரு குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இருந்தது. இந்தியாவில், சொந்த வீடு வாங்குவதற்குப் பலருக்கு வாய்ப்பளித்தது. மூன்றாவது அலை, 2000க்குப் பிறகு கணினித் துறையை மையமாகக் கொண்டு குடியேறியவர்கள். அமெரிக்காவில் தலைமை நிர்வாகம்; இங்கே கிளைகள் அல்லது இங்கே தலைமை; அமெரிக்காவில் கிளைகள் எனப் பற்பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன (இவற்றில் போலிகளும் அடங்கும்) அப்படி வேலைக்குச் சென்றவர்கள் லட்சக்கணக்கானவர்கள். வெறுப்புணர்வின் வேர்கள்: சரி, இந்தியர்கள் மட்டும் ஏன் அதிகம் குறி வைக்கப்படுகிறார்கள்? முதல் இரண்டு அலைகளில் சென்றவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. காரணம், அவர்கள் அந்தப் பண்பாட்டோடு ஒன்றிவிட்டார்கள். தங்களை அந்த நாட்டுக்காரர்களாகவே மாற்றிக்கொண்டனர். திருமணங்கள்கூட மனம் விரும்பியவரோடு சாதி, மதம் கடந்து இயல்பாக நடந்தன. இரண்டாவது அலையில் சென்றவர்கள் அமைதியாக, குறிப்பாக யாரிடமும், சக இந்தியரிடம்கூட நட்பு பாராட்டாமல் விலகியே இருந்தனர். வீடு-அலுவலகம்-வீடு, வார இறுதி நாட்களில் இந்தியாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, எப்போதாவது நண்பர்கள் வீடு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தாய்நாட்டுப் பயணம் என்கிற அளவில் வாழ்க்கையை வகுத்துக்கொண்டார்கள். மூன்றாவது அலையில் சென்றவர்களால்தான் பிரச்சினைகள் தொடங்கின. காரணம், முன்னர் சென்றவர்களைப் போல இவர்களுக்குத் தயக்கமோ, மனத்தடையோ இல்லை. எங்கெங்கு காணினும் நம்மவர்கள் என்கிற அசட்டுத் துணிச்சலும் அலட்சியமும் கூடின. கொத்துக்கொத்தாக ஒரே பகுதியில் குடிபெயர ஆரம்பித்தார்கள். தொடக்கத்தில் எல்லாரும் இந்தியர்கள் என வசித்த நிலை மாறி, என் மொழிக்காரர், சாதிக்காரர் என எல்லைகளைக் குறுக்கிக்கொண்டார்கள். பிறருக்கு வேலை தரும் பொறுப்பில் இருப்பவர்கள், ‘நம் ஆள்’ எனத் தேடிப் பிடித்து வேலைக்குச் சேர்த்தது போன்றவை உள்ளூர் ஆட்களுக்கு அறமற்ற போட்டியை ஏற்படுத்தியது. இது சாதாரணப் பிரச்சினை அல்ல. தவிர, இந்தியர்களின் வசதி வாய்ப்புகள் பெருகப்பெருக, மதப் பண்டிகைகள், சாதிச் சடங்குகளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். பண்டிகைக் காலங்களில் நம் ஊர் போலவே ஒலிபெருக்கிகள் அதிரும். விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது ‘என் நாடு’, ‘என் அணி’ என்கிற மனப்போக்கு பட்டவர்த்தனமாக இவர்களிடம் வெளிப்பட்டது. அடுத்தவருக்கு இடையூறு ஏற்படாத வரைதான் நம்முடைய சுதந்திரம் என்பதை மறந்துவிட்டார்கள். பொது இடங்களில் உரக்கப் பேசுவதும், குப்பைகளைப் போடுவது, பீடா போட்டுத் துப்புவது என இந்தியத் தன்மைகளையும் இவர்கள் அங்கே இறக்குமதி செய்தனர். அண்மைக் காலங்களில் உலகெங்கும் அழைப்பு மையங்கள் வழியாக, அப்பாவி மக்கள், குறிப்பாக முதியவர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். இதில், இந்தியர்கள்கூட ஏமாந்து பெரும் பணத்தை இழந்து இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், இத்தகைய அழைப்பு மையங்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து செயல்படுபவை. இப்படி இங்கொன்றும் அங்கொன்றும் நடப்பவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் ஊதிப்பெருக்கும்போது, ஒட்டுமொத்தமாகவே நம் நாட்டின் மீது கெட்ட பெயர் ஏற்படுகிறது. எல்லை மீறப்படும்போது ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த உள்ளூர்க்காரர்கள் எரிச்சல் அடைகின்றனர். இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. இனி என்ன? - உலகப் பொருளாதாரம் செழிப்பாக இருக்கும்வரை பெருமளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிரச்சினைகள், இப்போது பூதாகரமாகிவிட்டன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விலையேற்றம் எனப் பல்வேறு காரணிகள் இதில் சுட்டிக்காட்டப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. வரலாற்றில் எப்போதெல்லாம் வறுமை, பசிப் பிணி அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் பிற்போக்குச் சிந்தனைகள் எழுவது வாடிக்கை. வெளிநாடுகளில் திடீரென நாட்டுப்பற்று, மதப்பற்று, நிறப்பற்று வரிசைகட்டி மக்களை ஒரு புள்ளியில் கொண்டுவந்து நிறுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம், குடியேறிகள்தான் என எளிதாக எதிர் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற இது வசதியாக அமைகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்னொரு காரணமும் இருக்கிறது. ரஷ்யா உடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும், அவர்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அப்போதுதான் ரஷ்யப் பொருளாதாரம் சரியும்; உக்ரைனில் போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார். அமெரிக்கா விதித்திருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான அபராத வரி ஒரு பக்கம் நமது பொருளாதாரத்தின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கிறது; இன்னொரு பக்கம், இந்தியக் குடியேறிகளை விரட்டும் நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவை வழிக்குக் கொண்டுவரலாம் என்று அமெரிக்கா கருதுவதாகப் புவிசார் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்கிற அல்லது குறுகிய காலப் பயணிகளாகச் செல்கிற இந்தியர்களுக்கு அமெரிக்கா விதிக்கும் கடும் நிபந்தனைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. வெளிநாடுகளில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறையின் நகர்வுகளைப் பொறுத்தே அதிகாரபூர்வமாக இந்தியர்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். அதேவேளையில், இந்தியர்கள் குறித்த பார்வை மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் சிந்தித்தாக வேண்டும்! - தொடர்புக்கு: olivannang@gmail.com ஏன் வெறுக்கப்படுகிறார்கள் இந்தியர்கள்? | Why are Indians hatered explained - hindutamil.in
-
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை
Published By: Vishnu 25 Sep, 2025 | 06:53 PM யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (25) மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது, நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பது குறித்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலர்; பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும் அதன் இட அமைவு தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தொடர்ந்து இயக்குவதற்கான தேவைபாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.மேலும், இந் நிலையத்தின் செயற்பாடுகளை இந்த மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூகத்துக்கு பயனுள்ள வகையில் இந்நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் , சாவகச்சேரி பிரதேச செயலாளர், கணக்காளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர். மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை | Virakesari.lk
-
விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16314 ரூபா செலவு - நாமல் கருணாரத்ன
25 Sep, 2025 | 05:22 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16314 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47623 குரங்குகள், 26 இலட்சத்து 66630 மர அணில்கள்,42 இலட்சத்து 85745 மயில்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு 2025.03.15 ஆம் திகதியன்று யாழ்மாவட்டத்தில் நெடுந்தீவை தவிர்த்து ஏனைய சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.இந்த கணக்கெடுப்புக்கு 39 இலட்சத்து 16,314 ரூபாய் செலவிடப்பட்டது. இந்த விலங்கு கணக்கெடுப்புக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. விலங்கு கணக்கெடுப்பின் பெறுபேறு கடந்த ஏப்ரல் சகல பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக விவசாயத்துறை அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றது.இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47623 குரங்குகள், 26 இலட்சத்து 66630 மர அணில்கள், 42 இலட்சத்து 85745 மயில்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களில் விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காட்டு விலங்குகளால் பயிர்செய்கைகளுக்கு ஏற்படும் விளைவை மதிப்பிடுவதிலும், விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் காணப்பட்டது.காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் தரவுகள் 50 சதவீதளமவில் உறுதியானதாக அமையாது என்பதை அறிவோம்.இருப்பினும் மிகுதி 50 சதவீதமான தரவுகள் உறுதியானவை. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்து.இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ரீதியில் உரிய நடவடிக்கைகள் விவசாயத்துறை மற்றும் வனவளத்துறை திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16314 ரூபா செலவு - நாமல் கருணாரத்ன | Virakesari.lk
-
ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்
25 Sep, 2025 | 07:32 PM ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று வியாழக்கிழமை இரவு (25) நடைபெறும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியாழக்கிழமை (25) அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க உள்ளார். இதேவேளை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்க இருக்கிறார். ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார் | Virakesari.lk
-
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு
24 Sep, 2025 | 05:16 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு ' பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளேன்.அந்த அறிக்கையில் இறுதி பந்தியை வாசிக்கிறேன். '1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டத்தின் 308 ஆம் உறுப்புரை மற்றும் சாட்சி தண்டனைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கோ எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள்.இது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார். கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு | Virakesari.lk
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other - Supreme Court - hindutamil.in
-
ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும். டைம் அவுட்டின் படி, இந்த இடங்கள் அவற்றின் பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. Tamilmirror Online || ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை
-
கீரைப்பிடி 200 ரூபா
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் கீரைப்பிடி 200 ரூபா மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. கீரைப்பிடி 200 ரூபா
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
Published By: Vishnu 24 Sep, 2025 | 07:06 AM இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது. ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும். அதற்கமைய புதன்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் மறுநாள் காலை (25) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும். இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார். இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை | Virakesari.lk
-
நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல்
24 Sep, 2025 | 03:14 PM (செ.சுபதர்ஷனி) கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது. இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது. நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார். இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து தெரிவிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உலக அளவில் 2.3 மில்லியன் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் மரணங்களும் சம்பவித்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடாந்தம் மார்பகப்புற்றுநோய் காரணமாக 8000 மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆகையால் அனைவரும் நோய் அவதானம் மற்றும் நோய் நிலையின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக அனைத்து பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படக் கூடிய அவதானம் உள்ளது. எனினும் சில சமயங்களில் ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம். இது பாரதூரமான விடயமாகும். புற்றுநோய் கலங்கள் ஆண்களின் மார்பு பகுதியை நேரடியாக தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். 12 வயதுக்கு முதல் பூப்பெய்தியவர்கள், பிள்ளை பெறாத தாய்மார், உடல் பருமனானவர்கள், புகைத்தல் மற்றும் மது அருந்துவோர் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்றார். நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல் | Virakesari.lk
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்......
24 Sep, 2025 | 03:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை 69 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மேம்படுத்தியுள்ளது. இஞ்சின் கிடைக்காத காரணத்தினால் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த இரண்டு விமானங்கள் இப்போது சேவைக்கு திரும்பியுள்ளன. மூன்றாவது விமானம் அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு திரும்பவுள்ளத. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டில் தனது வலையமைப்பை சீரமைத்தல், டிஜிட்டல் விற்பனை தளங்களை சீரமைத்தல், வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தலில் அதிக கவனம் செலுத்தியது. 2025/26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வருவாய் 10 சதவீதமாக அதிகரித்தது மற்றும் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்வடைந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் சௌகரியத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுது. இந்த முயற்சிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் விமான நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடன் மறுசீரமைப்பு, உலகளாவிய நிலைத்தன்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் எதிர்கால பயணிகளுக்கான தடையற்ற அனுபவங்களை வழங்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் கவனம் செலுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்...... | Virakesari.lk