Everything posted by பிழம்பு
-
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை!
24 Sep, 2025 | 05:04 PM கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர். 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். அத்துடன் ஓகஸ்ற் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை! | Virakesari.lk
-
மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
24 Sep, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை சந்தித்திருந்தார். இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk
-
மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார். 24 Sep, 2025 | 05:45 PM மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும்,சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார். மன்னார் போராட்டக்களத்தில் இன்று புதன்கிழமை (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும்,அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார். எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை.பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும்,ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும்,எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம். எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல்,தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது. வாழ்வது எமது உரிமை.அதை யாரும் பறிக்க முடியாது.அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும்.மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது. நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது. இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம் அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயல்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது. குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம்.மிகவும் வேதனையான விடையமாக அமைந்துள்ளது. கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத்திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மாவட்டச் செயலகமும்,அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப்போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.மக்களை அழிக்கும்,மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற,இத்தீவை இல்லாது செய்கின்ற செயல்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா?,என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர்களின் செயல்பாடு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது மண்ணையும்,வளங்களையும்,உரிமையையும் பாதுகாக்க எமது போராட்டம் தொடரும்.இனி வரும் நாட்களில் இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதே மிகவும் கவலைக்குரிய விடயம். மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை களை எடுப்போம் என அனைத்து அதிகாரிகளும் தெரிவித் திருந்தனர்.ஆனால் ஜனாதிபதியினுடைய அறிவித்தல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அது ஜனாதிபதியின் முடிவாக இருக்கின்ற நிலையில்,எங்களுடைய முடிவு எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்ற ஒரு முடிவு தான். எனவே இந்த போராட்டக் களத்தில் இருந்து சட்டங்களை மீறாது எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். சட்ட ரீதியாக மூன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.கனிய மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம்.14 காற்றாலை திட்டங்களுக்கு எதிரான இரு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் | Virakesari.lk
-
கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
23 Sep, 2025 | 02:26 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வியெழுப்புகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சிறப்பு மகளிர் சிகிச்சை நிலையமானது பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்றது. இதனை நாங்கள் சென்று பார்த்தோம். அங்கே இலங்கையில் எங்கும் இல்லாத ஸ்கேன் மற்றும் கதிரியக்க இயந்திரங்கள் உள்ள போதும். அவற்றில் சில உபகரணங்கள் காலாவதியாகியுள்ளன. சுகாதார அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. அதன்போது வடமாகாணத்தில் சுழற்சி முறையில் ஆளணிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. சுகாதார அமைச்சர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் அவதானம் செலுத்தி நீண்ட காலமாக இயங்காமல் இருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக இயக்கவும், ஆளணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த பிரச்சினை உண்மையானதே. அங்கே கட்டிடங்கள், உபகரணங்கள் இருந்தாலும் ஆளணி போதுமானதால் இல்லை. இலங்கைக்கு வரும் விசேட வைத்தியர்களை அங்கு அனுப்பினாலும் அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பது தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன. எவ்வாறாயினும் நிறைவுகாண் ஊழியர்களை நாங்கள் பயிற்றுவித்து வருகின்றோம். இதனூடாக அங்கு ஆளணியை பூர்த்தி செய்ய முடியுமென்று நினைக்கின்றேன். கிளிநொச்சி பெரிய வைத்தியசாலை தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அங்குள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார். கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk
-
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்! 23 Sep, 2025 | 03:28 PM தங்காலை, சீனிமோதரவில் நேற்று (22) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சந்தேக நபரான லொரியின் உரிமையாளரை விசாரிக்க கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு அனுமதி அளித்து கல்கிசை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார். சந்தேக நபர் இரத்மலானையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. தங்காலையில் சீனிமோதரயில் உள்ள வீடொன்றிற்கு அருகில், இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில், குறித்த லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லொறியின் உரிமையாளர் என கூறப்படும் சந்தேக நபரை 11 கிராம் மற்றும் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (23) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்! | Virakesari.lk
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 04:12 PM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து - பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 பொதிகளில் 5 கிலோகிராம் 92 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது | Virakesari.lk
-
யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது
23 Sep, 2025 | 04:22 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk
-
யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை
3 Sep, 2025 | 05:20 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடங்கு மாகாண ஆளுநருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இத்திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடுவதாகவும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது கைவிடப்பட்டிருந்த நிலையில் மீளவும் செயற்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான இரண்டாம் கட்ட குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தின் பிரதிநிதிகள், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை | Virakesari.lk
-
பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!
23 Sep, 2025 | 06:09 PM பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் "திலீபன் வழியில் வருகிறோம்" என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்படுகிறது. இந்த பவனி இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் பருத்தித்துறை நகர்ப் பகுதியை வந்தடைந்துள்ளது. தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக பவனி செல்லும் நிலையில், பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது பருத்தித்துறை நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொழுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது! | Virakesari.lk
-
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம்
Published By: Vishnu 23 Sep, 2025 | 07:03 PM கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம், வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக அமைதி போராட்டம் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர். (படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்) கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம் | Virakesari.lk
-
கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக். விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலின் வேலை என்ன? உடலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம். கல்லீரலை பாதிக்கும் நோய்கள் நம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால் (Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’ (Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன. காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும். கல்லீரல் அழற்சி நோய் பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் இந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது. கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் கொழுப்புநோய் கல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள். போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். கல்லீரல் புற்றுநோய் இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் 15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். வில்சன் நோய் மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும். உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அயர்ன் மெட்டபாலிஸம் சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை எப்போது அவசியம்? பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். `மெல்டு ஸ்கோர்’ ஒரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது. மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். மஞ்சள்காமாலை மஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! ரத்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு. அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும். கல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. மதுப்பழக்கமும் கல்லீரலும்! இயல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம். சோஷியல் டிரிங்கிங் மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். தவிர்க்க வேண்டியவை கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா? கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா? கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள். கீழாநெல்லி வேர் மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா? `மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்! புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும். முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் `எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும். அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’ (Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும். திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’ (Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும். பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் (Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’ (Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்! ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம். - கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan
-
‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் திரைக்கதை. கதை 2008 காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தலைப்புக்கு ஏற்றவகையில் படம் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையிலும் அண்ணன் - தம்பி கதாபாத்திரங்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகார ஒடுக்குமுறையையும், நக்சல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமில்லாமல் காட்டிய இயக்குநர் அதியன் ஆதிரை, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியமைப்புகளுடன் கூடிய உணர்வுபூர்வ சினிமாவை தந்து வெற்றி பெற்றுள்ளார்.முழுக்க சீரியஸ் தன்மை கொண்ட கதைக்களத்தில் லேசாக பிசகினாலும் சலிப்பை தந்துவிடக்கூடிய சூழலில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையிலேயே அமர வைக்கும் திரைக்கதை உத்தியை ஓரளவு சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஜார்க்கண்ட் முகாமில் நடக்கும் பயிற்சி, கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல்லுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் போன்றவை அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடனே நகர்வது சிறப்பான மேக்கிங். குறிப்பாக, சமையலறையில் நடக்கும் சண்டைக் காட்சி தத்ரூபம். பயிற்சி முகாம் கொடூரங்கள் ‘டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டினாலும், அதற்கு சற்றும் குறையாத வகையில் இப்படத்தில் வரும் காட்சிகளும் முகத்தில் அறைகின்றன. சித்ரவதை காட்சிகள் எந்த இடத்திலும் ஆடியன்ஸிடம் வலிந்து திணிக்காமல் வலியை கடத்துகின்றன. படத்தின் மற்றொரு ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்ந்த நடிப்புதான். சில தினங்களுக்கு முன்னால் ஒரு மேடையில் நடிகர் கலையரசன் தனக்கு இடைவேளையிலேயே இறந்து விடும் கதாபாத்திரத்தைத்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பியிருந்தார். அவர் யாரை மனதை வைத்து அப்படி பேசினாரோ அவர்களுக்கான பதிலாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அப்பாவித்தனமும் துணிச்சலும் கொண்ட இளைஞனாக சிறப்பான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார். படம் முழுக்க சீரியஸ் தன்மையுடன் வரும் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பு, டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் உடையது. ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு பேசப்படும் கதாபாத்திரமாக ‘அமிதாப்’ இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என இருமுகம் காட்டி ஸ்கோர் செய்கிறார். பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வனத்தை ரசிக்கவும், சீரியஸ் காட்சிகளில் அதே வனத்தை கண்டு அச்சம் கொள்ளவும் வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக படம் முழுக்க வரும் ஓர் ஒப்பாரி, மனதை அறுக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் கச்சிதம். படத்தின் குறைகள் என்று பார்த்தால், இப்படி ஒரு படத்தில் தினேஷுக்கான அதீத ஹீரோயிச காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை கற்பனை கலந்தும் முடிந்தவரை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் ‘தண்டகாரண்யம்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி? | Thandakaaranyam movie review - hindutamil.in
-
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
Editorial / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 06:44 - 0 - 38 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். Tamilmirror Online || மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! - அமைச்சர் பிமல் கருத்து! இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்று (18) இரவு நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர். மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! - அமைச்சர் பிமல் கருத்து!
-
விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம் - ஆளுநர் நம்பிக்கை!
இந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை வடிவமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது. இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும். இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு தொழிற்சாலைகளையும் மீள உருவாக்கி வருகின்றது. எமது மாகாணத்துக்கு தேவையாக உள்ள வேலைவாய்ப்பும், வருமானம் ஈட்டலும் இதனூடாக கிடைக்கப்பெறும். எமது மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதலான அக்கறையுடன் செயற்படுகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் எமது மாகாணத்துக்கு எவ்வாறான உதவிகளைச் செய்யவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்ற அமைச்சர் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளையும் கூறிக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம் - ஆளுநர் நம்பிக்கை!
-
இ.போ.சபைக்கு பேருந்து நிலையமொன்றை அமைத்துத் தருமாறு யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை - அமைச்சர் பிமலிடம் இ.போ.ச. வட பிரதி முகாமையாளர் தெரிவிப்பு
19 Sep, 2025 | 03:12 PM யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்துத் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இ.போ.சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர், எந்த முடிவானாலும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே எடுக்க முடியும் என தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (18) யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றவேண்டுமெனக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை இலங்கையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் நிலையில் யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாமும் தனித்துவமான சேவையை வழங்கி வருகிறோம். நாங்கள் யாரிடமும் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்காத நிலையில் புதிய பேருந்து நிலையம் ஒன்றில் தனியாருடன் இணைந்து நெடுந்தூர போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நாம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய நிலையில் அந்தக் கோரிக்கையை ஏற்க மாட்டோம் என முடிவு எட்டப்பட்டது என்றார். இதன்போது பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ். நகரத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தரிப்பிடத்தை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எனது கோரிக்கையல்ல, அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்றார். மேலும், இதன்போது கருத்து தெரிவித்த துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு போக்குவரத்து துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இளங்குமரன் எம்.பி தலைமையில் இலங்கை போக்குவரத்து சபை யுடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தார். இ.போ.சபைக்கு பேருந்து நிலையமொன்றை அமைத்துத் தருமாறு யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை - அமைச்சர் பிமலிடம் இ.போ.ச. வட பிரதி முகாமையாளர் தெரிவிப்பு | Virakesari.lk
-
முல்லைத்தீவில் எல்லைக்கிராம தமிழ் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு ; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் - ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் தடைகளை உடைத்தெறிந்து விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த எல்லைக்கிராமத் தமிழ் மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ரவிகரன், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக குறித்த எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, உடனடியாக அப்பகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்திவந்த நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் குறித்த குளங்களின் கீழான விவசாய நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் இவ்வாறு வெளியேற்றப்பட்ட குறித்த ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த எல்லைக்கிராம மக்கள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது பூர்வீக வாழிடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட பிறகு அந்த மக்கள் தாம் பூர்வீகமாக நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், சாம்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டபோது தாம் நெற்செய்கைக்குப் பயன்படுத்திவந்த குளங்கள் மற்றும் அக்குளங்களின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டிருந்த தமது பூர்வீக விவசாயக் குளங்களையும், அவற்றின் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்குமாறு கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி தமிழ் மக்கள் மற்றும் ரவிகரன் ஆகியோரால் தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. குறித்த நீர்ப்பாசனக் குளங்களின் கீழான வயல்நிலங்கள் பலவற்றுக்கு தமிழ் மக்களிடம் ஆவணங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த நீர்ப்பாசன வயல்காணிகளை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அப்போதைய அரசால் மகாவலி அதிகார சபையின் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தமது பூர்வீக நீர்ப்பாசனக் குளங்களையும், அவற்றின் கீழான நீர்ப்பாசன வயல் நிலங்களையும் இழந்துள்ள குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதி எல்லைக்கிராமத் தமிழ் மக்கள் மானாவாரி நிலங்களிலேயே தற்போது தமது நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் குறித்த மானாவாரி விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ளும்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றன. தமிழ் மக்களுக்குரிய குறித்த மானாவாரி விவசாயக் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இத்தகைய பல்வேறு இடயூறுகளுக்கு மத்தியிலேயே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் தமது மானவாரி விவசாய நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாரியாமுனை, கன்னாட்டி, எரிஞ்சகாடு, மேல்காட்டுவெளி, கீழ்காட்டுவெளி, பாலங்காடு, நாயடிச்சமுறிப்பு, சூரியனாறு, பூமடுகண்டல், சிவந்தாமுறிப்பு, வெள்ளைக்கல்லடி உள்ளிட்ட தமது பூர்வீக மானாவரி விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் இம்முறையும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்திருந்தனர். இவ்வாறு பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை வனவளத் திணைக்களத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தடுத்துவருவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக கடந்த 29.08.2025 அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அவர்களுடைய விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு வனவளத் திணைக்களம் உள்ளிட்ட எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்தும் வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தமக்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முறையீடு செய்துமிருந்தனர். இந்நிலையில் குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய எல்லைக்கிராம மக்களின் முறைப்பாட்டையடுத்து துரைராசா ரவிகரன் இன்று கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்திற்குச் சென்று, கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தருடன் கலந்துரையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், பிரச்சினைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின் நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின்கீழான நீர்ப்பாசன விவசாய நிலங்களும் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த எல்லைக்கிராமங்களைச்சேர்ந்த எமது தமிழ் மக்கள் மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கையை மாத்திரமே மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் எமது மக்கள் மானாவரி விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்பினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். இதுதொடர்பில் கடந்தமாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. எமது மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாதெனவும் தீர்மானமும் எட்டப்பட்டது. இவ்வாறிருக்கு தொடர்ந்தும் எமது மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறகேளை ஏற்படுத்துவது பொருத்தமான விடயமில்லை. இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தினால் இந்தமக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படும் திணைக்களங்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது. தொடர்ந்தும் எமது மக்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்த தடைகளை உடைத்து எமது மக்கள் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முல்லைத்தீவில் எல்லைக்கிராம தமிழ் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு ; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் - ரவிகரன் | Virakesari.lk
-
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட தகவல்
18 Sep, 2025 | 04:07 PM இணையதளச் செய்திப் பிரிவு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தவறியதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட ஐந்து நாடுகளை அவர் குறிப்பாகக் குறிப்பிட்டு, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட தகவல் | Virakesari.lk
-
ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained
ADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை! ADHD வகைகள் 1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும். 2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள். 3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை எப்படிக் கண்டறிவது? • கவனம் இல்லாமை • நிலையில்லாத மனது • அதிகப்படியான உடல் இயக்கம் • உடல் சோர்வு மற்றும் படப்படப்பு போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும். எந்த வயதில் இது வெளிப்படும்? பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும். ADD - ADHD ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்: ~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது ~ மறதி ~ நேர மேலாண்மை இல்லாமை ~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது ~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும். ADHD-ஐ சரி செய்ய முடியுமா? இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும். ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா? முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும். அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது. இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா? இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்? நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்." விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக! ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan
-
இளவரசர் துட்டகைமுனு குளித்த தண்ணீர் பீலி
கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த கொத்மலை நகரம் அழகான மலைகளால் சூழப்பட்ட மிக பாதுகாப்பான மற்றும் அழகான பகுதி என்பதுடன் அங்கு மெய்யான கிராமவாசிகள் வசிக்கும் பல வரலாற்று கிராமங்கள் உள்ளன. அவ்வாறான அழகான நகரத்தில் அமைந்துள்ள ரணமுனே பீலி,கொத்மலை மாவெல நகரத்தின் அருகில் உள்ள மதிப்புமிக்க தனித்துவமான இடமாகும். இந்த பீலி, துட்டகெமுனு மன்னனின் ஆட்சிக் காலமான கி மு 137 மற்றும் 161 இல் இருந்த ஒரு பீலியாகும். தற்போது கொத்மலை என்பது ஒரு ஊரின் பெயர் என்றாலும், இலங்கை மன்னர் ஆட்சிக் காலத்தில், கொத்மலை பகுதி ஒரு நாடாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இந்த ரணமுனே பீலி அமைக்கப்பட்டுள்ளதுடன் இளவரசர் துட்டகைமுனு 16 ஆண்டுகளாக கொத்மலை, மாவெல பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போது, அவர் இந்த ரணமுனே பீலியில் தான் குளித்துள்ளார் என வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. Tamilmirror Online || இளவரசர் துட்டகைமுனு குளித்த தண்ணீர் பீலி
-
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
-
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
17 Sep, 2025 | 06:17 PM (நா.தனுஜா) இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன. இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும். ஆனால் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வளிக்கப்படாத குற்றங்கள் அதனையொத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் அப்போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. இருப்பினும் அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது. இலங்கையில் இதுவரை ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்துவிட்டு, அதிலிருந்து விலகிச் செயற்பட்டுவந்திருப்பதன் மூலம், எதனைச் செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்துவந்திருக்கின்றன. ஆகையினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையினால் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60 ஆவது கூட்டத்தொடரில் மீளப்புதுப்பிக்கவேண்டும். இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரின்போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினராலும் மிகமோசமான மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தினால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன் குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை 'யுத்த சூனிய வலயங்களாக' அறிவித்தன. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டன. இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன. ஜே.வி.பி எழுச்சி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன. அண்மையில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் 1990 களில் இராணுவக்காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார். தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Virakesari.lk
-
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
17 Sep, 2025 | 06:19 PM (இராஜதுரை ஹஷான்) கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.இலஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச நிர்வாகத்தில் ஒருசிலர் பழைய பழக்கத்திலேயே இன்றும் உள்ளார்கள்.பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியதாவது, இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சிடைந்தது. பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் நாடு ஒரு தசாப்த காலத்தை இழக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொருளாதார வீழ்ச்சியினால் பல அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டன.கடவத்த –மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகள் அவ்வாறே இடைநிறுத்தப்பட்டது.இதனால் பல நெருக்கடிகள் சமூக கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் ஏற்பட்டன. கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது சீன முதலீட்டுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.எமது வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவியளிக்க சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.ஆகவே இலங்கை மக்கள் சார்பில் சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டொலர் அலகில் அல்லாமல் யுவான் அலகில் கடன் வழங்கவும், 2.5 -3.5 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் போது பொருளாதார நெருக்கடி எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட சமூகமட்ட பாதிப்புக்கள் இயற்கையாகவே தோற்றம் பெற்றதல்ல, பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகள் உள்ளன.பொருளாதார நெருக்கடியின் உரிமையாளர்களாகவே ஒட்டுமொத்த மக்களும் உள்ளார்கள்.இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன். பொருளாதார மீட்சிக்குரிய சகல திட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.நாட்டில் சட்டவாட்சியை உறுதியாக செயற்படுத்தினால் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தலாம்.நாட்டில் கடந்த காலங்களில் பெரிய மீன்கள் தப்பித்துக் கொள்வதும் நெத்தலி மீன்கள் அகப்பட்டுக்கொள்ளும் சட்டமே இருந்தது.இந்நிலைமை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவுக்கு உயிர்கொடுத்துள்ளோம்.ஆகவே எவரும் எதிர்பார்க்காத இடங்களில் சட்டம் சென்றுள்ளது.சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக இருந்தவர்கள் பலர் இன்று சட்டத்துக்குள் உட்பட்டுள்ளார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களின் செயற்பாடு ஆயுதமேந்திய குழுக்களாகவும்,கறுப்பு இராச்சியமாகவும் காணப்படுகிறது.அதிகாரமிக்க இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் போதைப்பொருட்களை பொலிஸார் விநியோகித்துள்ளார்கள்.பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.இதன் விளைவே இன்று பாரிய நெருக்கடியாக தோற்றம் பெற்றுள்ளது. கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. நாட்டில் புற்றுநோய் போன்று காணப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரியதொரு தடையாக உள்ளது.கடந்த கால ஊழல் மோசடிகள் முறையாக விசாரிக்கப்படுகிறது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகத்தை ஸ்தாபித்துள்ளேன்.இருப்பினும் ஒருசிலர் இன்றும் பழைய பழக்கத்தில் உள்ளார்கள். ஒன்று பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சேவையில் இருந்து விலக வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் அவர்களை பதவி விலக்குவோம்.இலஞ்சம் மற்றும் ஊழல் மோடியற்ற கலாசாரத்தை உருவாக்க அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார். கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி | Virakesari.lk
-
கூடியம் குகைகள் : 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!
கூடியம் குகைகள் ( vikatan ) இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன. கூடியம் குகைகள் உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது. கூடியம் குகைகள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன. கூடியம் குகைகள் பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள். கூடியம் குகைகள் காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள். கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார். கூடியம் குகைகள் "மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன. 'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர். கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன. கூடியம் குகைகள் அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம். அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம். கூடியம் குகைகள் இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா. சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். கூடியம் குகைகள் - மணாச்சியம்மன் மணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார். காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை. கூடியம் குகைகள் "70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு. "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன். இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன. கூடியம் குகைகள் சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...! கூடியம் குகைகள் : ஒரு திக் திக் பயணம்! | Know the history and secrets of the Gudiyam Cave - Vikatan
-
குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு அறுவடை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை விவசாயிகள் படகின்மூலம் ஏற்றிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு