Everything posted by பிழம்பு
-
LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
Simrith / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0 - 24 தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். "இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவதாக ஆர்வலர்கள் கூறும் பிரிவுகள் 365 மற்றும் 365A உள்ளிட்ட பிற பாகுபாடான சட்டங்களைத் திருத்துவதற்கும் இது உறுதியளிக்கிறது. 2023 ஆம் ஆண்டில், இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. டோலவத்தே, தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை குற்றமற்றதாக்குவதற்காக ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாணயக்காரவிடம், இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்று கேட்கப்பட்டது. "இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலினம் காரணமாக ஒரு நபர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்பாததால், அது எங்கள் அறிக்கையில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்கள் கொள்கை அப்படியே உள்ளது, ஆனால் இது எப்போது கொண்டு வரப்படும் என்பதற்கான காலக்கெடுவை நாங்கள் வகுக்கவில்லை," என்று அவர் கூறினார். கொள்கை தெளிவாக இருந்தாலும், சட்டமன்ற மாற்றங்களை இயற்றுவதற்கு முன் பொதுமக்களின் எதிர்வினையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாணயக்கார மேலும் கூறினார். "LGBT சமூகத்தினர் என்னுடன் பேசியுள்ளனர், இலங்கை மனித உரிமைகள் ஆணையரும் அப்படித்தான். எங்கள் கொள்கை மாறாமல் உள்ளது என்பதே எனது பதிலாக இருந்தது. இருப்பினும், எந்தவொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து நன்கு அறியப்பட்ட மற்றும் உண்மை நிறைந்த பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். அரசியலில் நேரம் மிக முக்கியமானது என்றும், இது தொடர்பான எந்தவொரு முடிவும் இறுதியில் அமைச்சரவையிடமிருந்து வரும் என்றும் அவர் கூறினார். "அமைச்சரவையே இதற்கான நேரத்தை முடிவு செய்யும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்குள் இது கொண்டு வரப்படும் என்று நான் மட்டும் ஒரு அறிக்கையை வெளியிட முடியாது," என்று நாணயக்கார கூறினார். Tamilmirror Online || LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
-
யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி
21 Oct, 2025 | 12:02 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் சேவைகளை பெற முடியும். தினசரி 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இலகுவாகவும் முறையாகவும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது. எனவே, இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது. மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பதிவாகும் நோயாளர் ஒருவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் மூலம் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும். கடந்த 15 வருடங்களாக, இந்த சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது. இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும் நோயாளர்களுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது! பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 7 சந்தேக நபர்கள் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது! | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
21 Oct, 2025 | 03:16 PM இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன. இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன. குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு! | Virakesari.lk
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'. Bison Review; பைசன் விமர்சனம் தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்! இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது. நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி. சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள். Bison Review; பைசன் விமர்சனம் ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன். தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே. குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். Bison Review; பைசன் விமர்சனம் கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு. சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை. ‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம்.‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது. நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான். பைசன் விமர்சனம்; துரூவ் விக்ரம், அனுபமா, பசுபதி, அமீர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் எப்படி இருக்கு? | Bison Review; How is Bison directed by Mari Selvaraj starring Dhruv Vikram, Anupama and Ameer?
-
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், தனது ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்தார். தொடர்ந்து ஜென் ஸீ தலைமுறையினரின் வரவேற்பை பெற்று வரும் பிரதீப், ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தாரா என்பதை பார்ப்போம். பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார். இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘டியூட்’ படத்தின் திரைக்கதை. முன்பே சொன்னது போல ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து கொடுத்து வருகிறார் பிரதீப். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி, நடிக்கும் படமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த ‘டியூட்’ படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும். படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகளும் அதனூடே டைட்டிலை அறிமுகம் செய்த விதமும் பக்கா தியேட்டர் மெட்டீரியல். அதிலும் மாப்பிள்ளையிடம் பிரதீப், “தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ?” என்று கேட்கும் இடமெல்லாம் அரங்கம் அதிர்கிறது. இதுபோல படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் ஸீ தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் சரத்குமாரிடம் மமிதா பைஜு பேசும் இடம் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு. பல இடங்களில் நகைச்சுவை நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் பெரும் பலமும் அதுதான். பிரதீப் ரங்கநாதனின் மேனரிசத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். அது படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ ‘ரொம்ப நல்லவர்’ என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஹீரோயினும், அவரது காதலரும் பிரதீப் குறித்து பேசுவதாக வரும் காட்சியும், அதை திராவிட் செல்வம் செல்வம் கேட்பதும் 90-களின் டெக்னிக். ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம். இந்த வெகு சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாக சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது இந்த ‘டியூட்’. ‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? | Dude Movie Review - hindutamil.in
-
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் மற்றும் தவெகவினரின் அஜாக்கிரதையாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு, உயிர்பலி நேர்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் பெயரை சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்; அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும்; இந்த விதிகளை மீறிய தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினர் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்; உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தவெக தலைவர் விஜய்-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும், உச்ச நீதின்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் | TVK is not a recognized party Election Commission informs High Court - hindutamil.in
-
இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !
17 Oct, 2025 | 03:22 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் ஹரிணி, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார். இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார். இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் ! | Virakesari.lk
-
அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!
17 Oct, 2025 | 05:02 PM தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்! | Virakesari.lk
-
தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது!
17 Oct, 2025 | 03:34 PM பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். “தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டிருந்தது. அத்துடன் தலைமறைவாக உள்ள “தொட்டலங்க கன்னா” என்பவரை தேடி கண்டுபிடித்து கைதுசெய்து தண்டனைக்குட்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது! | Virakesari.lk
-
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை! சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணமானது 120 நாட்களில் பின்னர் நேற்றையதினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அந்த வானிலேயே தங்கி அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத்தலங்களை அடையாளப்படுத்தி அந்த இடங்களுக்கு அனைவரும் சென்று வரலாம் என்று எண்ணப்பாட்டினை இலங்கை மக்கள் மத்தியில் அல்லாமல் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்துள்ளனர். இலங்கையின் அதிகளவான வருமானம் சுற்றுலா துறையின் மூலமே ஈட்டப்படுகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிப்பதற்காக இளைஞர்கள் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!
-
மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர்
16 Oct, 2025 | 12:20 PM நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் அமைச்சில் (15) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ' மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது. வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர். தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள். கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும்." - என்றார். மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
( இணையத்தள செய்திப் பிரிவு ) இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம் இருந்தது. இப்போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு நேரம் உள்ளது. பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் பல வசதிகள் உள்ளன. எனவே பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஆனால் அரசாங்கம் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார். இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம் | Virakesari.lk
-
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ; குப்பையில் கொட்டப்படும் நிலை
16 Oct, 2025 | 12:31 PM நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது. இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். எனினும் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன. மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ; குப்பையில் கொட்டப்படும் நிலை | Virakesari.lk
-
“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது!
16 Oct, 2025 | 04:28 PM பதுளை - கெப்பெட்டிபொல பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. “கெப்பெட்டிபொல பூதயா” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கெப்பெட்டிபொல, ஹக்கல, பொரகஸ், நுவரெலியா, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது! | Virakesari.lk
-
யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல்
16 Oct, 2025 | 04:55 PM போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன். பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன். பல விடயங்களில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன் என தெரிவித்தார். யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல் | Virakesari.lk
-
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது
16 Oct, 2025 | 05:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி! 16 Oct, 2025 | 05:52 PM நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நேற்று புதன்கிழமை இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி! | Virakesari.lk
-
ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்
இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது. விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது. தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக விலங்கை அகற்றி அப்புறப்படுத்தினர். சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர். Tamilmirror Online || ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்
-
மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!
15 Oct, 2025 | 04:28 PM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk
-
கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது
கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk
-
கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்
கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் 15 Oct, 2025 | 11:59 AM மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் | Virakesari.lk
-
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு!
15 Oct, 2025 | 05:45 PM இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டு பின் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு! | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி. நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி 15 Oct, 2025 | 05:39 PM “நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். “நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன்” எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர். இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
வாத்தியார், யாழ் விதிப்படி மூல இணைப்பை நான் கொடுத்ததில் என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா, பொருள் குற்றமா இல்லை இணைத்தவனின் குற்றமா? யாரங்கே....