Everything posted by பிழம்பு
-
நல்லூரில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கை
05 Nov, 2025 | 04:49 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் , பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்தும் கழிவுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களை எச்சரிக்கும் வகையில் அவர்கள் கழிவுகளை வீசி செல்பவர்களின் காட்சிகளின் காணொளிகளின் தரத்தை மிக குறைந்து, அவர்களை ஏனையோர் அடையாளம் காணாத வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவுகளை வீசுவார்கள் இனிவரும் காலங்களிலும், திருந்தாது இவ்வாறு செயற்பட்டால், அக் காணொளிகளை ஏனையோர் அடையாளம் காணும் வகையில், மிக உயர்ந்த (4K) தரத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வீசி சென்றவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூரில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கை | Virakesari.lk
-
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
05 Nov, 2025 | 04:53 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், இச்சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! | Virakesari.lk
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரியின் எண்ணத்துக்கு தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, அச்சுறுத்தி, சகோதரி தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உடன்பிறந்த சகோதரனின் 11வது வயதில், சகோதரி தனது 18 வயதைக் கொண்டிருந்தபோது இந்த முறைகேடான தொடர்பு ஆரம்பித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது 22 வயதான சகோதரி, வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பெண் 2 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்! | Virakesari.lk
-
மன்னாரில் காற்றாலை தொடர்பாக நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம் -
05 Nov, 2025 | 04:56 PM மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை (05) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது போராட்ட களத்தில் இன்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார்.அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர்வரும் காலத்தில் எவ்விதமான காற்றாலை திட்டங்களும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப் படாது என்கின்ற செய்தியை அமைச்சரவை ஊடாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேளைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடையம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.எனவே இப்போராட்டக்கலத்தில் இருந்து நாங்கள் கூறிக்கொள்வது எமது போராட்டம் நின்று விடாது. குறித்த 14 காற்றாலைகளும் அகற்றப்பட்டு,ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டு,அதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதன் மூலமும்,மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு இடம் பெறாது என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்ற போதே இப்போராட்டம் நிறுத்தப்படும். குறித்த போராட்டம் நூறாவது நாளை எட்டுகின்ற போது மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.கிராமங்கள் தோறும் தீப்பந்த போராட்டமும் முன்னெடுக்கப்படும். நாட்டுக்காகவும்,நாட்டு வளத்தை பாது காப்பதும்,மன்னார் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படும். எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.அவரது முடிவு கிடைக்கும் வரை இவ் போராட்ட களத்தில் நாங்கள் காத்திருப்போம். எமது கோரிக்கைகளான மன்னார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 14 காற்றாலைகள் அகற்றப்பட வேண்டும்,ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மன்னார் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபடுவதாக எமக்கு உத்தரவாதம் வழங்கி எழுத்து மூலம் எமக்கு வழங்க வேண்டும், மன்னார் மாவட்டத்தில் எவ்வித கணிய மணல் அகழ்விற்கும் அனுமதி வழங்க கூடாது.ஆகிய மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை தொடர்பாக நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம் - போராட்டக்களத்தில் இருந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவிப்பு | Virakesari.lk
-
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை Editorial / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:46 - 0 - 26 இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது, மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் வலை வீசியபோது நடந்ததாகத் தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று கோரினார். ஒன்றிய அரசு, மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விஜய் மேலும், தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை, மீனவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முடிவாக, இந்தக் கைது சம்பவம், தமிழக மீனவர்களின் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விஜயின் அறிக்கை, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது, கடல் எல்லை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதை உணர்த்துகிறது. Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை
-
செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார். செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
03 Nov, 2025 | 02:46 PM இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர், "செந்தமிழ்ச் சொல்லருவி" சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (03) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து தத்துவ நெறியிலே எமது முன்னோர்கள் யுகங்களை, கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்காக வகுத்தார்கள். இப்போது நடைபெறுவது கலியுகம். தலைமுறைகள் பற்றியும் சொன்னார்கள். 1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள். அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது. இதன்காரணமாக உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, உலகத்திலே மக்கள் தொகை குறைந்து விட்டது என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழுந்தது. அந்த கோஷம் யாழ்ப்பாணத்திலும் ஒலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் மிதமிஞ்சிய அளவில் பிள்ளைகளை பெற்றார்கள். 1945 -1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு வீட்டில் 10,12 பிள்ளைகளை பெற்றார்கள். அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இலங்கையின் குடித்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்தன. ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர் தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள். இங்கே, நாம் இருவர் நமக்கிருவர் என்ற காலம் போய், நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது. குறிப்பாக தமிழர்களின் குடித்தொகை பெருக்கமானது குறைந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் குடித்தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழர்களது குடித்தொகை பெருக்கமானது 11.5 வீதத்திலேயே உள்ளது. தமிழர்களின் குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக உயர்கிறது என்று சொல்கின்ற அளவிற்குகூட இல்லை என்றார். தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு | Virakesari.lk
-
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்
03 Nov, 2025 | 02:59 PM செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் | Virakesari.lk
-
பருத்தித்துறை பகுதியில் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!
105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! 03 Nov, 2025 | 03:25 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (01) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இரண்டு டிங்கி படகுகளுடன் கைதசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான உத்தரவுடன் இணைக்கப்பட்ட பருத்தித்துறை கடற்படை நிலையம், பருத்தித்துறை காவல்துறையினருடன் இணைந்து, சுப்பர்மடம கடற்கரைப் பகுதி மற்றும் பலாலி முள்ளியவளை பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் கேரள கஞ்சாவை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! | Virakesari.lk
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
03 Nov, 2025 | 05:34 PM சமூக ஊடக செயற்பாட்டாளரும், யூடியூபரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான சாலிய டி.ரணவக்க (Saliya Ranawaka) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றியதாக அவரது I4 பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜீப் வாகனத்தில் பயணம் செய்யும் நேரடி காணொளி வெளியிட்டுள்ளார், அதில் அரசியல் காரணங்களுக்காக தான் கைது செய்யப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'சிங்கள' அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் சாலிய, யூடியூப்பில் சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் என குறிப்பிடப்படுகின்றது. 47 வயதான சாலிய டி. ரணவக்க, 2008 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் லெப்டினன்ட்டாக போர்க்களத்தில் நுழைந்தார், மேலும் தனது 12 ஆண்டு சேவையை முடித்தபோது உளவுத்துறைப் பிரிவில் கப்டனாக இருந்தார். ஈழப் போரின் போது உளவுத்துறை அதிகாரியாக தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பின்னர் அவர் "சிங்கள என்றால் என்ன?" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அரச புலனாய்வுப் பிரிவில் இருந்து ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவில் சேர்ந்த சாலிய ரணவக்க, தனது பன்னிரண்டு ஆண்டு சேவையின் போது பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைப்பாளராகப் பணியாற்றினார். அரச சாரா மட்டத்தில் அரபு வஹாபிசம் குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பித்து வந்த அவர், கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 இல் சிங்கள தேசிய அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் மூலம், பொதுமக்களுக்கு வஹாபிசம் குறித்து கல்வி கற்பிக்கப்பட்டது. குரகல, தெவனகல, முஹுது மகா விஹாரயா மற்றும் ஸ்ரீ பாத போன்ற இடங்களில் போராட்டத் திட்டங்களைத் தொடங்கியவர் அவர்தான். அவர் குவாசி நீதிமன்றங்கள் மற்றும் மதரசா பள்ளிகளுக்கு எதிரான ஒரு எதிர்ப்பாளராக இருந்தார். வஹாபிகளைத் தேடியதற்காக கத்தாரில் முன்னதாக கைது செய்யப்பட்டார். ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜதந்திர தலையீடு காரணமாக 3 நாட்களுக்குள் இலங்கைக்குத் திரும்ப முடிந்தது. அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார், அமெரிக்க குடிமகனாக உள்ளார், மேலும் அவர் சமீபத்தில் கனடாவிற்கு வேலை வழங்குநராக அறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது! | Virakesari.lk
-
“கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர் - இஷாரா செவ்வந்தி
03 Nov, 2025 | 04:27 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலைக்கு பின்னால் 5 பேர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தலைமையில் “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலை திட்டத்திற்கு பின்னால் கெஹெல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்து , தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன், இஷாரா செவ்வந்தியின்ட தாயாரின் இறுதி சடங்கை காணொளி எடுத்து அவருக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk
-
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள நான்கு மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது | Virakesari.lk
-
மட்டக்களப்பில் இரு வேறு பிரதேசங்களில் போதைப்பொருள், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
03 Nov, 2025 | 06:00 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை (2) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். பொலிஸ் குழு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது 34 வயதுடைய பிரபல வர்த்தகரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், அங்கிருந்த பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து, கைது செய்யப்பட்டவரை அழைத்துச்செல்ல விடாமல், பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த நபரை பொலிஸார் மீட்டு அழைத்துச் சென்றனர். அதேவேளை திருப்பெருந்துறை பகுதியிலும் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர். போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் இரு வேறு பிரதேசங்களில் போதைப்பொருள், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது | Virakesari.lk
-
வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
Published By: Vishnu 03 Nov, 2025 | 07:19 PM வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பில பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவர் உயிரிழந்த போது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு | Virakesari.lk
-
இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது
31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk
-
நெடுந்தீவு கடல் பகுதியில் 41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, வியாழக்கிழமை (30) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு பைகளில் 85 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
நானும் தான்!
-
யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு! இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக, தூரசேவை பேருந்து நிலையத்தில் இருந்து இரு பேருந்து சேவைகளையும் இணைந்த சேவை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் கலந்துரையாடல் மூலம் சிறப்புப்பொறிமுறையை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!
-
நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம். அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராங்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் கண்காணிப்பு கமராங்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு கிராம சேவையாளர்களுக்கூடாக அவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது. அதே நேரம் வாகனங்களில் வந்து கழிவுகளை வீசுபவர்களின் வாகன இலக்கங்கள் மோட்டார் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் குறித்த வாகனங்களின் விபரங்கள் பெறப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென ஒரு தனி அலகும் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூப் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது. பொது இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று நல்லூர் பிரதேச சபை பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விட்டபோதும் சிலர் அவற்றினை அலட்சியம் செய்து பொது இங்களில் கழிவுகளை வீசிவிட்டே செல்கின்றனர். அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பினையுணர்ந்த நல்லூர் பிரதேச சபை கழிவு போடும் இடங்களினை அடையாளப்படுத்தல் - கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல் - கண்காணித்தல் - கழிவுகளை வீசுபவர்களை அடையாளப்படுத்தல் - அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுத்தல் என்ற பொறிமுறையினை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இப் பொறிமுறைக்கு எம்மை இட்டுச் சென்றது எம்முடைய சில பொறுப்பற்ற மக்கள் கூட்டத்தினரே. இவ்வாறு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை. எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேலும் விரிபுபடுத்தும். எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார். நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை | Virakesari.lk
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
30 Oct, 2025 | 05:10 PM இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதில் உள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவிமாரு, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கை கடற்கரையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல்கள் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்ட பின், அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மீனவர்கள் வணிகக் கப்பலான MV Graceful Star அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக கடற்படை இலங்கை கடற்படை கப்பலான சிதுரலவை அனுப்பியது. கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல் | Virakesari.lk
-
பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு
30 Oct, 2025 | 05:52 PM ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை நீதிபதிகள் பெயரிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார். விரைவில் அந்தப் பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, வழக்கு டிசம்பர் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். கிரிதலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி உட்பட ஒன்பது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 2010 ஜனவரி 25ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினருடன் சேர்ந்து இரகசியமாக சிறையில் அடைக்கும் நோக்கத்துடன், பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு | Virakesari.lk
-
யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்!
30 Oct, 2025 | 05:07 PM ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றைய தினம் (30) குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், எமது சங்க கட்டடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருடகால ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தகாலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை. வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80 பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபா முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபா வாடகையும் தருவதாகவும் கூறினார்கள். நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழிவிடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கின்றது. எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறு விதமான வேலைகளை செய்கின்றனர். உள்ளே என்ன நடக்கின்றது என்று கூட எமக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருந்தோம். இருப்பினும் அவர்களும் எமக்கு தீர்வு வழங்கவில்லை. குறித்த நிறுவனமானது இதற்கு பின்னரும் வெளியேறாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் எங்களது சங்கத்தின் வளாகத்தில் எங்களது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த செயற்பாட்டையும் நாங்கள் செய்ய முடியும் என்றனர். குறித்த போராட்டம் இடம்பெற்றபோது கட்டடத்தின் உள்ளே இருந்தவர்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்ததை அவதானிக்க முடிந்தது. யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்! | Virakesari.lk
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்
30 Oct, 2025 | 06:01 PM (எம்.மனோசித்ரா) 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பயனுள்ள செயலாக்கத்தை உறுதிப்படுத்த, மாவட்ட வழிகாட்டுதல் குழுக்கள், பிராந்திய வழிகாட்டுதல் குழுக்கள் மற்றும் அடிமட்ட அளவில் பொது பாதுகாப்பு குழுக்கள் உட்படப் பல கட்டங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு இதற்காக நிறுவப்பட்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 உறுப்பு அமைப்புகளைக் கொண்ட 'ஒன்றிணைந்த தேசம்' தேசிய வழிகாட்டுதல் சபை மத்திய செயல்பாட்டு அமைப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு முழுவதும் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேசிய வழிகாட்டுதல் சபை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் சபையின் செயலாளராகப் பணியாற்றுவார். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தலை ஒழிப்பதாகும். இதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, மாகாண சபைகள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக முறைப்படி உறுதிமொழி எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில் | Virakesari.lk