Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முச்சந்தியில் முட்டி நிற்கின்றது இந்திய - சிறிலங்கா உறவு: இந்திய ஊடகம்

Featured Replies

India%20with%20Sri%20Lanka.jpg"ராஜபக்ச தான் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றுவதில் மறுப்புத் தெரிவித்ததானது இந்தியாவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது" என இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இந்தியாவை தளமாகக்கொண்ட Hindustan Times என்னும் தேசிய ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர்களான Sutirtho Patranobis and Pramit Pal Chaudhuri ஆகியோர் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அச்செய்திக் கட்டுரையின் விபரமாவது,

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மே மாதத்தில் இந்தோ – சிறிலங்கா உறவுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகக் காணப்பட்டது. அதாவது தமிழ்ப் புலிகளின் தலைவரான வே. பிரபாகரன் கொல்லப்பட்டு, சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விடயத்தில் இந்தியா மகிழ்வடைந்திருந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் தேவையாக இருந்தது. இதற்கான சகுனமும் நல்வாய்ப்பாக அமைந்திருந்தது. அதாவது சிறிலங்காவில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் புலிகளுக்கு சார்பான கட்சிகள் பெரும் தோல்வியடைந்தன.

இத்துடன் தமிழ்ப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிலைப்பாடானது சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் செல்வாக்குச் செலுத்தியது. இந்தியாவின் கடல்கடந்த இராணுவத் தலையீடு மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை என்பன சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் உதவிய அதேநேரம், இந்த யுத்தத்தில் பெருமளவிலான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

சிறிலங்காவின் அதிகாரபீடத்தை தம் வசம் கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்ந்தும் தொடர்புகள் பேணப்பட்டுள்ளன. இதேபோல் சிறிலங்காவில் உள்ள தமிழ்க் கட்சிகள் குறிப்பாக, தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியும் இந்தியாவின் நகர்வை எதிர்பார்த்தது. சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் இராணுவ உறவுகள் உச்சநிலையில் காணப்பட்டன.

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் கூட வெளிப்படையாக இந்தியாவை எதிர்த்து நிற்கவில்லை. ஜனவரி 2010ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவும், அவரது எதிர்க்கட்சி வேட்பாளாரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இந்தியாவை ஆதரித்திருந்தனர்.

இது நடைபெற்று இரு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது இவை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிலங்காவை எதிர்த்து இந்தியா வாக்களித்திருந்தது. இந்தியாவின் இந்தத் தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச வழங்கத் தவறிய நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது 'மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி அரசியற் தீர்வொன்றை அடைந்து கொள்வதை' வலியுறுத்தி நிற்கின்றது.

இந்தியாவின் இந்தத் தீர்மானமானத்தால் சிங்கள மக்கள் கோபம் கொண்டுள்ளனர். "மனித உரிமைகள் பேரவையில் இந்தியா சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்தமையால், சிறிலங்கா - இந்தியா உறவை மட்டும் இந்தியா நாசம் செய்திருக்கவில்லை. சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மீளிணக்கப்பாட்டு முயற்சிகளும் இந்தியாவின் இந்த முடிவால் நாசம் செய்யப்பட்டுள்ளது" என சிறிலங்கா அதிபரின் கையாளான, அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவானது சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்ததானது இரு செய்திகளைக் கூறிநிற்கின்றது.

முதலாவதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் ஆகக் குறைந்த முன்னேற்ற நகர்வைக் கூட ராஜபக்ச எடுக்க விரும்பாததால் சிறிலங்கா மீதான இந்தியாவின் அதிருப்தி அதிகரித்ததாக மேற்கத்தேய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைக் கூட சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.

"ராஜபக்ச தான் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றுவதில் மறுப்புத் தெரிவித்ததானது இந்தியாவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது" என இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியாகத் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவதாக, சிறிலங்காவை எதிர்த்து இந்தியா வாக்களித்ததன் மூலம் உள்நாட்டில் தமிழ்க் கட்சிகளின் ஆதரவைப் பெற முடியும். இவ்வாக்களிப்பானது, தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இந்திய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அரசியல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளராக இல்லாத போதிலும், தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறை காட்டாது விடில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற முடியாது போகலாம் எனக் கருதுகிறார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டதன் மூலம், வேறெதற்கும் பயப்படத் தேவையில்லை என அதிபர் ராஜபக்ச நம்புகிறார். ராஜபக்ச தனது நாட்டில் நிலவும் இனப்பிரச்சினை தொடர்பாக நீண்ட கருத்துக்களையும் வாக்குறுதிகளையும் வழங்கிய போதிலும், அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளார்.

சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வை வழங்குவது தொடர்பில் சிறிலங்கா ஆட்சியாளர் எந்தவொரு ஈடுபாட்டையும் கொண்டிருக்கவில்லை என தமிழ் கல்விமான்களும் செயற்பாட்டாளர்களும் நம்புகின்றனர். "நாட்டில் பாரிய சில கட்டுமானத் திட்டங்கள், கலாசார பன்மைத்துவம் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் போன்றன மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வந்துவிடும் என ராஜபக்ச நம்புகின்றார். இந்த வழியில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்" என ஆய்வாளரான திசரானி குணசேகர கூறுகின்றார்.

ராஜபக்ச தனது இராணுவத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதானது அவரின் ஆட்சி வலுவைக் காண்பிக்கின்றது. சிறிலங்காவில் 300,000 வரையானவர்கள் இராணுவத்தில் உள்ளனர். இராணுவ மயமாக்கப்பட்ட, மிகப் பிரசித்தி பெற்ற நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும்.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் சுதந்திரமாக அதிகாரம் செலுத்துகின்றனர். புதிய இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரின் கடைகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் அவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளனர். "சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களின் செயற்பாடுகள் இராணுவத்தால் கண்காணிக்கப்படுகின்றன" என அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பிரித்தானிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறிலங்கா மீது இந்தியாவானது என்றுமில்லாதவாறு அழுத்தங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

"சீனா, ஈரான் மற்றும் மியான்மார் ஆகியன சிறிலங்காவின் புதிய நண்பர்களாக உள்ளனர்" என மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்கானது 'தந்திரமான, ஏமாற்றுத்தனமான' செயல் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைப்பாடுகள் மாறுவதற்கான சமிக்கைகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுமின் நிலையத் திட்டத்தை தடைசெய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது. கடந்த பல பத்தாண்டுகளாக சிறிலங்காவும் இந்தியாவும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. ஆனால் ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்காது தட்டிக்கழித்தால் இது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, அரசியல் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.

http://www.puthinappalakai.com/view.php?20120420106034

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.