Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவபாலனின் ஊடகப் பயணம் தெரிந்ததும் தெரியாதவையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவபாலனின் ஊடகப் பயணம் தெரிந்ததும் தெரியாதவையும்!

May 18th, 2012 அன்று வெளியிடப்பட்டது -

thavapalan1-100x100.jpg

உலகின் போர்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு அசாத்திய திறமையான பதிவுகள் வெளிவரத் தவறுவதில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் முடிவுக்குகொண்டு வரப்பட்டவுடன் அந்தப் போராட்டத்தின் பின்னான சொல்லப்படாத பல செய்திகள் வரலாற்றில் இருந்து மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் ஏற்பட்டே வருகின்றன. விடுதலைப்போராட்டக்களத்துடன் சேர்ந்து பயணித்து வீழ்ந்த அல்லது காணமல் போன ஊடகர்கள் பட்டியில் முதலில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக தி.தவபாலன் விளங்குகின்றார். தவபாலன் தன்நிலையில் சரியெனப்பட்டதில் தீவிரமாக இருப்பதால் அவரை விமர்சிப்பவர்களும், அவரால் விமர்சிக்கப்பட்டவர்களும் இருக்கலாம்.

அவர்களும் இந்தப் பதிவினையும் விமர்சிக்கலாம். ஆனால் வன்னியில் பணியாற்றிய ஏனைய ஊடகர்களையும் தாண்டி தவபாலன் பற்றிய பதிவினை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளும் அளவிற்கு அவரது சிறப்பு முக்கியம் பெறுகின்றது என்பதை வாசகர்கள் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ‘தவபாலன்’ இறுதியில் தனது பெயரை இறைவன் என்று ஆக்கிக்கொண்டார். இந்தப் பெயருக்கான காரணம்? என்று கேட்டால், ‘இறை’ என்றால் தலைவன் என்று தெரிவிக்கும் அவர். தான் ஒரு நார்த்திகன் என்பதற்கும் அதனைச் சான்றாக்கிக் கூறிக்கொள்வார். அவர் முற்றுமுழுதான நார்த்திகனாகவே விளங்கிவந்தார். எந்தச்சந்தர்ப்பத்திலும் அவர் மதங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லிக்கொள்வதில்லை. இறைவன் என்ற பெயர் மாற்றம் பெற்றர்லும் தவபாலன் என்ற பெயருக்கூடாகவே அவரின் ஊடகப் பணியினைப் பார்ப்பது பொருத்தம் எனலாம்,

தவபாலனின் ஊடகப்பிரவேசம் என்பது 90களின் முற்பகுதியில் நிகழ்ந்தேறியது.. வானொலியின் ஊடகராக அறிமுகாகிய அவர் புலிகளின்குரல் வானொலி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அந்த ஊடகத்திற்குள் உள்வாங்கப்படுகின்றார். நிதர்சனம் என்கின்ற ஒரு ஊடகத்தின் ஒரு பகுதியாகவே தொடக்கத்தில் புலிகளின்குரல் வானொலி செயற்பட்டுவந்திருந்தது. அதன் பின்னான காலப் பகுதிகளில் அது தனியான பாதையினை வகுத்துக்கொண்டு பயணிக்கத் தலைப்படுகின்றது.

தவபாலன் பற்றிய பதிவுகளை மேற்கொள்கின்ற போது தவபாலனின் புகைப்படத்துறைத் திறனை பிரித்து அவரை மதிப்பீடு செய்ய முடியாது. வன்னியில் வாழ்ந்த புகைப்படக் கலைஞர்களில் தி.தவபாலன் முன்னிலையில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக விளங்கினார். வன்னி தொடர்பிலான அவரது பெருமளவு புகைப்படங்கள் இற்றைவரை மிகப்பிரபல்யமாக விளங்குகின்றன.

சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் அவர் பதிவு செய்த முட்கம்பி வேலிக்குப் பின்னான யாழ்.கோட்டையின் தோற்றம் உள்ளடங்கிய புகைப்படம் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று என்று என்பதை உதாணரமாகக் குறிப்பிடமுடியும்.

அதேவேளை அறிவியலில் ஈடுபாடு கொண்ட அவர் தொல்லியலிலும் மிகத் தெளிவான பார்வையும் அனுபவமும் கொண்டிருந்தார். வன்னியில் அல்லது யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களில் பெருமளவானவை தவபாலனின் புகைப்படக்கருவிக்குள் சிக்கியவை என்பதை துறைசார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தவிடயங்களை வானொலியில் மட்டுமல்லாமல் வன்னியில் இருந்து வெளிவந்த பத்திரிகைகள், புலத்தில் வெளிவந்த சஞ்சிகைகள் போன்றவற்றிலும் பெருமளவில் பதிவு செய்த பெருமை தவபாலனையே சாரும். துருவன், அறிவன், நிலவன், செந்தூரன், திரு, திருநிலவன் போன்ற புனைபெயர்களைப் பயன்படுத்தி தனது பதிவுகளை மேற்கொண்டிருந்தார்.

இலக்கியப் பக்கங்களில் குறிப்பாக சிறுவர் சார்விடயங்களை அதிலும் சித்திரக்கதைகளைத் தேடிப்படிப்பதில் அவற்றினை மொழிபெயர்ப்புச் செய்வதில் அவர் அதிக ஆர்வமாகச் செயற்படுவார்.

18வயது இளைஞனாக வானொலியில் பணி செய்யத்தலைப்பட்ட தவபாலன் இறுதியில் வானொலியின் தாங்கு தளமாக மாற்றம்பெறுகிறார். ஒரு செய்தியாளராக அவருக்கான பணி அமைந்திருந்தாலும் அறிவியல் மீதான அவரது ஈடுபாடு அவரை இரண்டு துறைகளிலும் சமாந்தரமாகப் பயணிக்கவைக்கிறது. புலிகளின்குரல் வானொலியில் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவரே தயாரிக்கின்ற பணி அவரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. ‘அறிவியல் உலகம்’ என்ற நிகழ்ச்சி மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகவும் அதன் ஒரு அங்கமான ‘அ’, ‘மு’ என்ற பகுதி ஜனரஞ்சக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெறுகின்றது. குறித்த நிகழ்சி ஏதாவது ஒரு அறிவியல் சார்ந்த விடயத்தினை இலகு நடையில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் எழுதப்படும், அதேவேளை அதனுள் நகைச்சுவையும் உட்புகுத்தப்படும். புலிகளின்குரல் கேட்கின்ற நேயர்கள் எவரும் அதன் ரசிகர்களாகவே மாறிவிடுவர். தவபாலனின் இலக்கியம் சார்ந்த எழுத்துத்திறன் வெளிப்பாட்டிற்கு குறித்த நிகழ்ச்சினை உதாரணமாகக் கூறலாம்.

அவரின் பிரதான ஊடகப்பணியாக அமைந்த செய்தித்துறையில் தவபாலன் எவ்வாறு செயற்பட்டார் என்பதை நோக்கினால்,

ஏனைய ஊடகங்களைப் பொறுத்த வரையில் செய்தி ஆசியர் தனது கதிரையை மிக இறுக்கமாகப் பற்றிக்கொள்வர். அவர் அந்தக் கதிரையை விட்டு விலகுவவே மிகப் பெரிய சாபமாகவும் எண்ணிவிடுவர்;. ஆனால் தவபாலனைப் பொறுத்தவரையில் செய்தி ஆசிரியர் என்பதற்கு அப்பால் செய்தியாளனாகவே கூடுதல் சந்தர்ப்பங்களை அவர் செலவழிப்பதில் ஆர்வம் காட்டிவந்திருப்பதை வரலாற்று ரீதியாக நோக்கமுடியும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வானொலி வன்னிக்கு இடம்பெயர்ந்ததன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிச்சமர்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் அவற்றில் நேரடிச் செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டமைக்கு உதாரணமாக ஓயாத அலைகள் மூன்று வெற்றிச் சமர்கள் இடம்பெற்ற காலப்பகுதிகளில் அவர் களத்தில் இருந்து சம்பவங்கள் தொடர்பிலான நேரடித்தகவல்களை வானொலி நேயர்களுக்கு வழங்குவதில் ஈடுபட்டிருந்தமை இன்னமும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதேபோல பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெற்ற போது யாழ்ப்பாணத்தில் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வு நிறைவு பெற்றதன் பின்னர் இரண்டாவது பொங்குதமிழ் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றிருந்தது. ஏ – 9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட புதிது என்ற போதிலும் அதனூடாக இரகசியமாகச் சென்று அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

புலிகளின்குரலின் செய்திவீச்சு, நாளிதழ்நாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் புலிகளின்குரல் வானொலியை செவிமடுத்தவர்களில் அவரைத் தெரியாதவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

வன்னியில் இடம்பெற்ற ஒவ்வொரு இடப்பெயர்வுகளில் வானொலி இடம்பெயர்ந்தபோது அவரும் இடம்பெயர்ந்தார், ஆனாலும் அவருடைய ஊடகப் பணியின் வேகத்தில் குறைவிருக்கவில்லை.

இறுதியாக, தவபாலன் பற்றி வெளித்தெரியாத மிக முக்கிய விடயம் ஒன்றினை வெளிப்படுத்துகின்றோம்,

கடந்த இரண்டரை வருடங்களாக – உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் – இலங்கை நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக – தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர் செயற்கைக் கோள் தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக் கூடும் எனவும்இ இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டுஇ தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட ‘புதினம்’ செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.

விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் – சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும்இ சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரது உடலங்களும் நாலா புறமும் சிதறிக் கிடக்கின்றன.

திரும்பிய பக்கம் எல்லாம் பிணக் குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.

இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.

படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் – அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.

அதேபோல – காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு ‘சையனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.

பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயேஇ உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.

இவ்வாறு கூறிய ‘புதினம்’ செய்தியாளர், கடைசியாக – ‘இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு – யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது – மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?’ என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.

2003 ஆம் ஆண்டில் இருந்து ‘புதினம்’ நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து – உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து – ‘புதினம்’ நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக – ‘என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்’ என்று கூறினார்.

அவர் யாரும் அல்ல.. அவர் தி.தவபாலன்..

அந்த வார்த்தைகளுடன் தவபாலனின் ஊடக மொழியும் மௌமானது. தவபாலனுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கான சரியான பதில் யாரிடமும் இல்லை. அவர் இருக்கிறாரா? இல்லையா? போன்ற கேள்விகளை மூன்றாண்டுகளாக கேட்டோம். கால ஓட்டத்தில் வரலாறுகள் புனையப்படலாம். சில விடயங்கள் விடுபடலாம் என்பதால் அந்த ஊடகனின் பணியில் மிகச் சிலவற்றை மட்டும் பதிவாக்கியிருக்கின்றோம்..

பின்குறிப்பு – புதினம் இணையத்தளம் சார்ந்தது

புதினம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் அதன் இறுதிக்காலம் வரை அது சிறப்புறச் செயற்பட்டதற்கு அவரும் அவது வானொலியும் தான் மிக முக்கியபங்கு வகித்தது என்பதை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தன்னிடம் இருந்த செய்மதித் தொலை பேசி மூலம் இறுதி நாட்களில் அவர் செய்திகளை வழங்கிவந்திருக்கின்றார். புதினம் தொடங்கிய நாட்களில் இருந்து அதன் தொடரான வளர்ச்சிப்படிகளில் அதற்கான செய்திகளை, புகைப்படங்களை வளங்கியவர்கள் புலிகளின்குரல் நிறுவனத்தினர்.

இதில் மிக அவலமான, அசிங்கமான விடயம் ஒன்றை பகிரங்கமாக வாசகர்களுக்கு குறிப்பிடவிரும்புகின்றோம். புதினத்திற்கு வழங்கிய நேரடித் தகவல் தான் தவபாலன் இறுதியாக ஊடகத்தில் வழங்கிய பதிவாகும். அதனைவிடவும் புலிகளின்குரல் வானொலிக்குச் சொந்தமான பெருமளவான ஒலிப்பதிவு ஆவணங்கள், புகைப்படங்கள் என்பன குறித்த புதினம் இணையத்தள நிர்வாகியிடம் தற்போதும் இருக்கின்றன. இறந்தவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பிலான பதிவுகளை மேற்கொள்வதற்கு குறித்த இணையத்தள நிர்வாகியைத் தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகளாகப் பார்க்கும் அருவருக்கத்தக்க குணம் கொண்ட குறித்த நபர் தனது புதினம் இணையத்தளத்திற்கு பணி செய்ததாகச் சொல்லிப் பலர் பிழைப்பு நடத்துவதாகவும் குற்றம்சாட்ட முற்படுகின்றார். குறித்த நபர் வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தினையும் அவற்றின் மத்தியில் சில ஊடகர்கள் ஆற்றிய ஒப்பிட முடியாத ஊடகப்பணிகளையும் தனது வயிற்றுப்பிழைப்புக்காக பயன்படுத்த முற்படுகின்றாரா? போன்ற கேள்விகளை நாங்கள் அவரிடம் கேட்டு நிற்கின்றோம். குறிப்பாக வன்னியில் புலிகளின்குரல் வானொலியில் இறுதி நாள் வரையில் பணியாற்றி காயம் சுமந்துவந்தவர்கள் ஒருவாறு நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் குறித்த நபரைத் தொடர்பு கொண்டு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டால், நீ இப்ப யாரோட நிக்கிறாய்? என்பது தான் அந்த அருமையான மனிதப்பிறவியின் கேள்வியாக இருப்பதாகத் தெரிகிறது.

தி.தவபாலன் புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் (ஜவான்) உட்பட்டவர்களின் புகைப்படக்கருவிகளுக்குள் அடங்கிய ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் தவபாலனின் ஈழவிசன் என்கின்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அதனையும் குறித்த புதினம் நிர்வாகி முடக்கிவைத்திருப்பதுடன், அவற்றின் எதிர்காலத்தினையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார்.

அதனைவிடவும் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வன்னியில் இறுதிப்போரில் பதிவு செய்யப்பட்ட பெருமளவான காணொளிகள், புகைப்படங்கள் என்பவனவும் புதினம் என்ற இணையத்தள நிர்வாகியே ஏனைய ஊடகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியினைச் செய்திருந்தார். அந்தப் புகைப்படங்களின், காணொளிப் பதிவுகளின் மூலப்பிரதிகளை சர்வதேச ஊடகங்களுக்கு தற்போது கூட வழங்குவதற்கு அவர் தயார் நிலையில் இல்லை.

தன்னை ஒரு நோயாளியாக அறிமுகப்படுத்திக்கொண்ட குறித்த நபர் வன்னி தொடர்பிலான இரத்தச்சகதிகளுக்குள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இருட்டடிப்பு செய்வதன் மூலம் திட்டமிட்டே விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் ஊடுருவியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் தற்போது தலைதூக்கியிருக்கின்றது. (ஊடக தர்மம் கருதி குறித்த நபர் எவ்வாறு வன்னி ஊடகப்பரப்பிற்குள் நுழைந்தார் போன்ற விபரங்களை நாங்கள் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை)

தற்போது கூட புலத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு பிரிவுகளாக செயற்படத் தலைப்பட்டாலும் யாராவது ஒரு தரப்பிடம் இந்த விடயங்களைக் கையளிப்பதன் மூலம் அவற்றிற்கு கொடுக்கப்பட்ட விலைகள், சிந்திய இரத்தங்களுக்கான சிறிய அறுவடையையாவது ஈட்டிக்கொள்ளலாம் என்பதை அவர் புரிந்து கொண்டு மனிதப்பிறவிக்கான சிறு பண்பை என்றாலும் அவர் வெளிப்படுத்தினால், அவருடைய பிணிகளில் சில மாறுதல்கள் ஏற்படலாம் என்று வன்னியில் இரத்தச் சகதிக்குள் நின்று செய்திப்பணி செய்த ஊடகர்கள் அங்கலாய்க்கின்றார்கள்.

நன்றி - சரிதம்.கொம்

http://www.saritham.com/?p=59958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.