Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித வேட்டை, தேடப்படும் தீவிரவாதி ஜோசப் கோனி -செண்பகத்தார்

Featured Replies

ஜோசப் கோனி (Joseph Kony) என்பவருக்கு எதிராக 2005ம் ஆண்டு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவர் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்து நெதர்லாந்து, ஹேக் நீதி மன்றத்தில் நிறுத்தும் நோக்கில் தேடுதல் நடத்தப்படுகிறது.

இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம் (Lord’s Resistance Army) என்ற பெயர் பூண்ட உகன்டா நாட்டு கெரில்லா அமைப்பின் தலைவனாக ஜோசப் கோனி இடம்பெறுகிறார். இந்த அமைப்பு எல்ஆர்ஏ (LRA) என்ற மூன்று எழுத்துக்களால் அறியப்படுகிறது.

வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர் எல்ஆர்ஏ அமைப்பை 1987ம் ஆண்டு தோற்றுவித்தார். அதே வருடம் அச்சோலி இனத்தவரான உகன்டா ஜனாதிபதி ஒககெலா (Okella) இப்போதைய உகன்டா ஜனாதிபதி யொவேனி முசவேனியால் (Yoweni Musaweni) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அச்சோலி மக்களின் தேசிய எழுச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திய ஜோசப் கோனிக்கு மிகப் பெரிய மக்கள் ஆதரவு ஆரம்பகாலத்தில் இருந்தது. அச்சோலி மக்கள் எழுச்சியை மிகக் கொடூரமாக நசுக்கிய முசவேனிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட எல் ஆர்ஏ அமைப்பு இன்று திசைமாறி எங்கோ சென்றுவிட்டது.

ஜோசப் கோனி தன்னை ஒரு நல்ல கிறிஸ்தவனாகவும் இறை தூதனாகவும் பிரகடனம் செய்துள்ளார். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு இறையாட்சியை உகன்டாவில் நிறுவ உத்தேசித்தார். பத்துக் கட்டளைகளின் (Ten Commandments) வழிகாட்டலில் ஆட்சி நடத்தப் போவதாகச் சொன்னவர் இன்று அதே கட்டளைகள் அனைத்தையும் மீறி விட்டார்.

எல்ஆர்ஏ இயக்கம் இன்று பாரபட்சமின்றிப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், மனித இறைச்சியை உணவாக்குதல் போன்ற மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இறைவனை மதியாமல் பாபச் செயல்களில் ஈடுபடுவதாக அவர் தனது சொந்த அச்சோலி மக்கள் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இதற்குத் தண்டனையாக ஜோசப் கோனியும் அவருடைய தளபதிகளும் மக்களின் உதடுகள், காதுகள், முக்குகளை வெட்டி நீக்கியுள்ளனர். மக்களுக்கு மேலதிகத் தண்டனையாக அவர்களுடைய இள வயதுப் பிள்ளைகளைக் கடத்திச் சென்றுள்ளனர். அதே சிறுவர்களைக் கொண்டு பெற்றவர்களை வெட்டிக் கொல்ல நிர்ப்பந்தித்துள்ளனர்.

ஜோசப் கோனியின் இராணுவம் பெரும் எண்ணிக்கையில் சிறுவர்களைக் கொண்டுள்ளது. படைச் சிறுவர் எண்ணிக்கை 66,000 என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களிற் பெரும்பாலானோர் தமது பெற்றார்களைக் கொன்றொழித்துள்ளனர். சிறுமிகளை பாலியல் அடிமைகளாக எல்ஆர்ஏ பயன்படுத்துகிறது.

ஜநா உட்பட சர்வதேச சமூகத்தினர் ஆண் இளவயதினரைப் போராளிகளாகவும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாகவும் கோனியின் இயக்கம் பயன்படுத்துவதாக குற்றஞ் சுமத்துகின்றனர். 2001 செப்டம்பர் 11ம் நாள் நடந்த இரட்டைப் கோபுர இடிப்பிற்குப் பிறகு அமெரிக்கா அரசு எல்ஆர் ஏயைப் “பயங்கரவாதக் குழுவாக” (Terrorist Group) அறிவித்துள்ளது.

அமெரிக்கத் திறைசேரித் திணைக்களம் (US Treasury Dept) தனது “விசேடமாகக் கருதும் உலகப் பயங்கரவாதிகள்” (Specially Designated Global Terrorists) பட்டியலில் 2008 ஆகஸ்து 28ம் நாள் ஜோசப் கோனியின் பெயரைப் பதிவு செய்துள்ளது.

நவம்பர் 2008ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க ஆபிரிக்க படைத் தலைமையகத்திற்கு (US Africa Command) உகன்டா அரசுக்கு நிதி உதவி மற்றும் கோனியைக் கைது செய்வதற்கு படைக்கல அனுசரணை (Logistics) வழங்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி அமெரிக்க இராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபடமாட்டாது. ஆனால் பதினேழு அமெரிக்க ஆலோசகர்களும் பகுப்பாய்வாளர்களும் (Advisors, Analysts) உகன்டா இராணுவத்திற்கு உளவுத் தகவல், ஆயுத தளபாடம், எரிபொருள் ஆகியவற்றை வழங்குவார்கள்.

உகன்டா காடுகளுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட கோனியைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. கோனியும் அவருடைய இயக்கமும் ஜந்து ஆபிரிக்க நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர். கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, தெற்கு சூடான், உகன்டா ஆகியவற்றின் அடர் காடுகளில் புகலிடம் தேடியுள்ளார்.

தெற்கு சூடான் விடுதலைப் போர் நடத்தியபோது உகன்டா அரசு அதற்கு உதவி வழங்கியது. இதற்குப் பதிலடியாகச் சூடான் அரசு உகன்டாவுக்கு எதிராகப் போராடிய ஜோசப் கோனிக்கு ஆதரவு வழங்கியது. இதன் மூலம் எல்ஆர்ஏ இயக்கம் ஆரம்ப காலத்தில் வளர்ச்சி அடைய நேர்ந்தது.

ஜோசப் கோனியின் நடவடிக்கைகளால் மேற்கூறிய நாடுகளில் 1986ம் ஆண்டுக்குப் பிறகு இரு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

ஜனாதிபதி ஒபாமா மே 2010ல் எல்ஆர்ஏ ஆயுதம் களைதல் மற்றும் வட உகன்டா மீள்கட்டுமானச் சட்டத்தை (LRA Disarmament and Northern Uganda Recovery Act) நிறைவேற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா 2011 ஒக்ரோபரில் மேலதிக நடிவடிக்கையை இது தொடர்பாக எடுத்துள்ளார். போருக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்ட நூறு அமெரிக்கப் படையாட்களை உகன்டா இராணுவத்திற்கு உதவுமாறு பணித்துள்ளார். இவர்கள் நேரடிப் படை நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் தற்காப்புச் சண்டையில் ஈடுபடுவார்கள் என்று ஒபாமா உத்தரவு தெரிவிக்கிறது.

ஜோசப் கோனிக்கான வேட்டைக்கு மின்னல் இடி முழக்க நடவடிக்கை (Operation Lightning Thunder) என்று பெயரிடப்பட்டுள்ளது. அது மேற்கூறிய ஜந்து நாடுகளையும் உள்ளடக்கியது. இதில் பல்லாயிரம் ஆபிரிக்க ஒன்றியத் துருப்புக்கள், அமெரிக்கர்கள் நூறு பேர் உட்பட ஈடுபடுகின்றனர்.

ஏப்ரல் -மே 2012ல் ஆபிரிக்க ஒன்றியம் இன்னொரு 5,000 துருப்புக்களை இந்த வேட்டையில் ஈடுபடுத்தியுள்ளது. கடந்த 25 வருடங்களாக உகன்டா அரசு கோனியைத் தேடும் பணியில் தொடர்கிறது. எண்ணிக்கையில் மிகக் குறைந்த போராளிகளை வைத்திருந்தாலும் மிகப் பரந்த தரைப் பரப்பில் காடுகள் ஊடாகச் செயற்படும் கோனியைப் பொறி வைத்துப் பிடிப்பது கடினமாக இருக்கிறது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 2005 ஒக்ரோபர் 06ம் நாள் ஜோசப் கோனி அவருடைய ஜந்து உயர்மட்டத் தளபதிகள் மீது பிடி ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலடியாகக் கொங்கோவின் கரம்பா தேசிய வனத்தில் கோனி தலைமையில் நுளைந்த எல்ஆர்ஏ துருப்புக்கள் பல பொது மக்களை அடித்துக் கொன்றுள்ளனர். பல குடியிருப்புக்களை எரித்து நாசமாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் 2008 நத்தார் தினத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு கோனியின் தரிப்பிடம், நகர்வுகள் பற்றிய தகவல்கள் ஒன்றுமே கிடைக்கவில்லை. அவரைத் தேடும் பணி உடலற்ற ஆவியைத் தேடும் செயல் போல் இருக்கிறது. என்றாலும் மின்னல் இடி முழக்க இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பான கேணல் பலிக்குடெம்பே (Col.Balikuddembe) கோனியைப் பிடிக்க முடியுமென்று உறுதியாக நம்புகிறார்.

“கோனி எப்படித் தப்பித் தலைமறைவானாலும் ஒரு நாள் அகப்பிடத் தான் வேண்டும்” என்கிறார் பலிக்குடெம்பே. அமெரிக்க ஆலோசகர்களின் கண்காணிப்பு விமானங்கள் காடுகளுக்கு மேலால் பறந்து தீவிரவாதிகளின் இருப்பிடங்களைத் தேடுகின்றன. சமையலுக்கு மூட்டும் நெருப்பை அவதானிக்கின்றன.

வேகமாக நகரக்கூடிய சிறு குழுக்கள் கோனியை மடக்கிப் பிடிப்பதற்கு மிகச் சிறந்தவை என்று நம்பும் பலிக்குடெம்பே தனது இராணுவ அணிகளைப் பரவத் தொடங்கியுள்ளார். சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான் மக்கள் படைகளும் இந்தத் தேடுதல் வேட்டையில் பங்கு பற்றுகின்றன. இது வரை பல எல்ஆர்ஏப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் கோனியும் மூத்த தளபதிகளும் உலகின் மிக அடர்த்தியான காடுகள் அடங்கிய மத்திய ஆபிரிக்காவில் பதுங்கியுள்ளனர். சென்ற மாதம் அவர் கைவிட்டுச் சென்ற சில குடிசைகள் படைகள் வசம் வீழ்ந்தன. அவற்றுள் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் ஒரு கணினி, மின்பிறப்பாக்கி, சூரிய மின்சாரம் கிரகிக்கும் தட்டுக்கள், ஒரு துறையா (Thuraya) செய்மதித் தொலைபேசி என்பன இருந்தன. நவீன தொழில் நுட்ப வசதிகள் கோனியிடம் இருப்பதை இவை காட்டுகின்றன.

மத்திய ஆபிரிக்கச் சிறுவர்கள் எதிர் கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து ஜோசப் கோனியின் வடிவத்தில் இடம் பெறுகிறது. பசி, பட்டினி, நோய்கள், கல்வி வசதியின்மை போன்றவற்றுடன் கோனியையும் சேர்க்க வேண்டியுள்ளது. மார்ச்சு 2012ல் ஜேசன் றசல் (Jason Russell) கண்ணுக்குத் தெரியாத சிறுவர்கள் (Invisible Children Inc) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காக ஒரு 30 நிமிட வீடியோ படம் தயாரித்தார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தை 80 மில்லியன் மக்கள் கடந்த இரு மாதங்களில் பார்த்துள்ளனர். அதன் பிறகு ஜோசப் கோனியைப் பிடிக்க வேண்டும், எல்ஆர்ஏயை அழிக்க வேண்டும் என்ற ஆர்வம் உலகெல்லாம் பரவியுள்ளது.

உலகின் மிக மொசமான சட்டத்தின் பிடியில் அகப்படாத பத்து சர்வ தேசக் குற்றவாளிகள் பட்டியலை போர்ப்ஸ் (Forbes) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஜோசப் கோனியின் பெயர் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. கோனி பிடிபட்டால் அது ஆபிரிக்கா அமெரிக்கா கூட்டுப் பணிக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.