Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தமிழ்த்தேசியத் தணலை தக்கவைப்பதாக இருக்கவேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தமிழ்த்தேசியத் தணலை தக்கவைப்பதாக இருக்கவேண்டும்![/size]

முத்துக்குமார்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் கூத்துகளுக்காகவே உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டது. சாதாரண நிலைகளிலேயே மக்கள் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவரங்களை கூட்டமைப்பு எட்டிப் பார்ப்பதில்லை. போராட்டங்களை வேறு யாராவது நடாத்தினால்தான் அது பற்றி அது யோசிக்கும். இல்லையேல் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. தேர்தல் வந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? நிலப்பறிப்பு போராட்டம், கைதிகள் விடுதலைக்கான போராட்டம் எல்லாம் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலின்படி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது அதன் முழுக்கவனமும் தேர்தலில் கூத்தாடுவது எப்படி? என்பது தான்.

நிலப்பறிப்புப் போராட்டத்தைக் கூட்டமைப்பு ஆரம்பிக்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே ஆரம்பித்தது. இந்த ஆரம்பம் எங்கே தனது அரசியலுக்கு குழிபறித்து விடுமோ என்று அஞ்சியே அடுத்தநாள் துர்க்கை அம்மன் கோயில் போராட்டத்திற்கு மாவை ஒழுங்கு செய்தார். அதில்  கலந்துகொண்டு திரும்பியவர்கள்மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஒயில் வீசியது கூட்டமைப்பினருக்கு பெரிய பிரச்சாரமாகப் போய்விட்டது. நன்றாகவே புகைப்படங்களுடன் ஜமாய்த்து விட்டார்கள். தொடர்ந்து சிறீதரன் முறிகண்டியில் போராட்டம் நடாத்தினார். 50பேரைக் கூட போராட்டத்திற்கு அழைத்துவர அவரால் முடியவில்லை. வந்தவர்களில் அரைவாசிப்பேர் கூட்டமைப்பில்லாத ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கூட்டமைப்பினரின் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் வந்திருந்தாலே போதும் 500 பேர் தேறியிருப்பார்கள். அவர்கள் பெரியளவிற்கு வரவில்லை. கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் எந்தப் போராட்டத்திலும் காணமுடியவில்லை. வடக்கு – கிழக்கு பிரிக்கப்பட்ட பின் கூட்டமைப்பினரும் கிழக்கிற்கென வேறு அரசியலை நடாத்துகின்றார்களோ தெரியாது.

செல்வம் அடைக்கலநாதனின் மன்னார் போராட்டத்தை கூட்டமைப்பின் போராட்டம் எனக் கூறுவதைவிட கூட்டமைப்பிலுள்ள மாற்றுக்குழுவின் போராட்டம் எனக் கூறுவதே அதிகம் பொருந்தும். இவ்வாறு இடைக்கிடை போராட்டம் நடாத்தித்தான் கூட்டமைப்புக்குள் தமது வலுவினைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் உள்ளனர். தமிழரசுக் கட்சித் தலைமைக்குள்ள பெருங்கவலையும் வவுனியா மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே. யாழ் மாவட்டம் போல கனவான் அரசியல் இவ்விரு மாவட்டங்களிலும் பெரியளவிற்கு எடுபடாது. அங்கு அன்றாடம் மக்களோடு நிற்பவர்களே கவனத்திற்குரியவர்களாக இருப்பார்கள். மன்னார் மாவட்டம் மேலும் ஒரு படிநிலை உயர்ந்தது. அங்கு கத்தோலிக்க ஒழுங்கமைப்பு ஒன்று இருப்பதனால் கூட்டமைப்பின் பம்மாத்துச் செயற்பாடுகள் அங்கு பெரியளவிற்கு எடுபடுவதில்லை.

சிறையில் கொலை செய்யப்பட்ட நிமலரூபன் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு எடுக்கவில்லை. மனோ கணேசன் தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழுவே அதனை சர்வதேசமட்ட கவனத்திற்கு கொண்டு வந்தது. கூட்டமைப்பினர் செய்ததெல்லாம் மனோ கணேசனின் முயற்சிகளில் குளிர்காய்ந்தமைதான். வழக்கு விவகாரங்களில் கூட இவர்கள் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு மற்றவர்களின் கூடாரத்தில் குளிர்காய்வதற்கு கூட்டமைப்பினர் என்றுமே பின்னிற்பதில்லை. அவர்கள் பிரமுகர்களாக இருப்பதால் ஊடகப் பிரசாரமும் நன்றாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுகின்றது. ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்வது இலகுவான ஒன்றல்ல. ஆனால் யாராவது ஒழுங்கு செய்யும்போது குளிர்காய்வது இலகுவானது. இந்தக் குளிர் காய்தல் என்பது கூட்டமைப்பினருக்கு இன்று, நேற்று வந்த ஒன்றல்ல. மரபு வழியாக வந்த ஒன்று. 1970 களில் தழிழ் இளைஞர் பேரவை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய போதும் இவ்வாறு தான் இவர்களது முன்னோர்கள் நடந்துகொண்டார்கள். போராட்டம் ஒன்றையும் அவர்கள் ஒழுங்கு செய்யமாட்டார்கள். சரியாக மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தினை பழரசம் கொடுத்து முடித்து வைப்பதற்கு மட்டும் வருகை தருவார்கள்.

மக்கள் பிரச்சினை விடயத்தில் கூட்டமைப்பினருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதும், பத்திரிகைகளுக்கு வீராவேச அறிக்கைகளை விடுவதும் தான் கைவந்தகலை. மாவையின் தொடர்ச்சியான வீராவேசமான அறிக்கைகளைப் பார்த்தால் 100 போராட்டங்களுக்கு மேல் இதுவரை நடத்தியிருக்க வேண்டும்.

தற்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பெயரளவில் பதில் சொல்லக்கூடிய பொறுப்பிலிருந்து கூட கூட்டமைப்பு விலகுவதற்கு உதவியுள்ளது. இந்தத் தேர்தலில் கூட தமிழ் மக்களின் இதுவரை கால கொள்கைகளுக்கும் அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பதில் சிறியளவு கூட கூட்டமைப்பு அக்கறை செலுத்தவில்லை.

தமிழ் மக்களின் பிரதான அரசியலும், அமைப்புகளும் மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்தே வந்தன. அதனை வெறுமனவே வீம்புக்காகப் புறக்கணிக்கவில்லை. இதுவரை காலம் பல்வேறு தியாகங்களுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்தேசிய அரசியலுக்கு மாகாண சபைத் தேர்தல்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே புறக்கணிக்கப்பட்டன. தமிழ்த்தேசிய அரசியலைக் கைவிட்ட கூட்டம் மட்டுமே தேர்தல்களில் பங்குபற்றியிருந்தது. அந்தப் பங்குபற்றல் அரசியல் போக்கில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வரதராஜப்பெருமாளின் மாகாணசபையிலும் அது தான் நடந்தது. பிரதான அமைப்பு பங்குபற்றாத போது அரசியலில் தாக்கம் எதுவும் வராது என்பதே உண்மை. ஆனால் பிரதான அமைப்பு தனது அதுவரை கால கொள்கைகளில் இருந்து கீழிறங்கி பங்குபற்றும்போது இதுவரை கால அரசியலும் அழிபட்டுப் போகின்ற அபாயம் இருக்கின்றது. அரசாங்கத்தினதும், வெளியேயுள்ள சர்வதேச சக்திகளினதும் தந்திரோபாயமும் இதுதான். மாகாணசபைகளுடன் தமிழ் அரசியல் அடிபட்டுப்போக வேண்டும் என்பதே அதுவாகும். கூட்டமைப்பு இந்த அழிப்பு நடவடிக்கைகளுக்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கப் போகின்றது.

கிழக்கு மாகாண சபை விடயத்தில் கொள்கை ரீதியாக இரண்டு பிரச்சினைகள் உண்டு. அதில் ஒன்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் மாகாணசபை முறையினையே அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளமையாகும். 13ஆவது திருத்தத்தின்படியே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி மாகாண சபைகளுக்கு எந்தவித சுயாதீனமும் கிடையாது. மத்திய அரசில் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றத்திடமும், நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடமும் உண்டு. இந்த இருதரப்பும் தயவு பண்ணினால் மட்டுமே மாகாணசபைக்கு ஏதாவது கிடைக்கும்.

அதாவது இங்கு அதிகாரப் பரவலாக்கல் இடம்பெற்றுள்ளதே தவிர அதிகாரப் பகிர்வு இடம்பெறவில்லை. இது ஒரு வகையில் மத்தியில் உள்ள அதிகாரங்களை மாவட்ட அரச அதிபர்களுக்கு பரவலாக்குவது போன்றது. அதிகாரப்பகிர்வு என்பது இறைமை அதிகாரத்தை பங்கிடுவதாகும். அதனை ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ள முடியாது. சமஷ்டியாட்சிக் கட்டமைப்புக்குள்தான் மேற்கொள்ளமுடியும். சமஷ்டி ஆட்சிமுறை என்பதே அரசியல் யாப்பின் அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களை மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் பங்கிட்டுக் கொள்வதுதான். மாகாணசபை முறை இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு என்பதில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் கொண்டுவரப்பட்டதே. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் சுயாதீனமான செயற்பாடுகளை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

இலங்கை என்ற அதிகாரக் கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் தமிழ்மக்கள் தனியான நலன்களைத் தனியாகவும், கூட்டான நலன்களை கூட்டாகவும் மேற்கொள்ளும் நிலை பிறக்கவேண்டும். இங்கு தனியான நலன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. கூட்டான நலன்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. தனியான நலன்கள் பற்றி கூட்டிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதால் கூட்டில் போதிய பங்களிப்பின்றி தனியான நலன்களை ஒருபோதும் பேணமுடியாது. இந்தக் கூட்டினை தமிழ்த்தேசமும், சிங்களத் தேசமும் இணைந்து புதிய இலங்கையை உருவாக்குவதன் மூலமே மட்டுமே மேற்கொள்ளமுடியும். சிங்கள தேசத்தினால் தனித்து ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு உருவாக்கின் அது ஒருபோதும் கூட்டாக இருக்கமுடியாது.

நடைமுறையிலும் இந்த உண்மை தெரிந்தது. வரதராஜப்பெருமாள் மாகாணசபை முறையில் எதுவும் செய்யமுடியாது எனக்கூறி ஈழப்பிரகடனத்தை விடுத்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடினார். பிள்ளையான் ஒரு பியோனை நியமிக்கின்ற அதிகாரம் கூட தனக்கு இல்லை என ஓலமிட்டார். கிழக்கு மாகாண ஆளுனரோ அரசியல் யாப்பு ரீதியாக என்னிடம் அதிகாரம் உள்ளது. நான் எதையும் செய்வேன் என சவால்விட்டார். இங்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் ஆளுநர் மூலமே நிறைவேற்றப்படுகின்றது. கூட்டமைப்பு என்னதான் 13 ஆவது திருத்தத்தையும், மாகாணசபை முறையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியே கூறினாலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மாகாணசபை முறைமைக்குள்  செயற்படத்தயார் எனக் கூறிவிட்டது. தமிழ் சிவில் சமூகத்தவர்களை சந்திக்கின்ற இராஜதந்திரிகள் எல்லாம் அதனை வெளிப்படையாகவே கூறுகின்றனர். இராஜதந்திரிகளைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு கிடைத்துவிட்டது என்பதே கருத்தாக உள்ளது. கூட்டமைப்பின் நோக்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதல்ல. மாறாக அரசியலில் கூத்தடிப்பதே.

இரண்டாவது பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை ஏற்றுக்கொள்வதாகும். தமிழ்மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் பேணுவதற்கு வட-கிழக்கு இணைப்பு மிகவும் அவசியமானதாகும். இந்தக் கூட்டடையாளத்தை இல்லாமல் செய்வதற்காகவே திட்டமிட்டு வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிரதான தமிழ் அமைப்பு பங்குபற்றுவதன் மூலம் பிரிப்பினை நிரந்தரமாக ஏற்றதாகிவிடும். இவ்வாறு ஏற்பது இதுவரை கால இரத்தம் சிந்திய அரசியலை சிதைவுக்குள்ளாக்குவதாக அமையும்.

இந்த இரண்டு கொள்கைப் பிரச்சினைகளும் தமிழர் அரசியலின் உயிர்நாடியாக இருப்பவை. இவற்றைத் தொலைத்து விட்டு தமிழ்த்தேசிய அரசியல் என ஒன்று இருக்கமுடியாது. உண்மையில் ஒரு கொள்கையுள்ள, தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட கட்சியாக கூட்டமைப்பு இருந்திருக்குமானால் தேர்தலை முன்னரைப்போல பகிஷ்கரிப்பதே கூட்டமைப்பின் முடிவாக இருந்திருக்கவேண்டும்.

கடந்த தேர்தலையும் கூட்டமைப்பு இதற்காகத்தான் பகிஷ்கரித்திருந்தது. தமிழ் அரசியலுக்கு எதிரானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு விடுவார்கள் என்ற நிலை கடந்த தேர்தலிலும் இருந்ததுதான். அன்று பகிஷ்கரித்துவிட்டு இன்று கலந்து கொள்ளுதல் அப்பட்டமான கொள்கைத் துரோகம் இல்லையா?

தமிழ் அரசியலுக்கு எதிரானவர்கள் கடந்த தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டதினால் தமிழ் அரசியலுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் அம்பலப்பட்டதுதான் மிச்சம். இந்தத் தடவையும் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் அதுவே நடக்கும். ஆனால் கூட்டமைப்பு பங்குபற்றுவதனால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல.

சரி, தமிழ் அரசியலுக்கு எதிரானவர்கள் வருவதைத் தடுக்கவேண்டும் என்றால் அதற்கு மாற்று ஏற்பாடு இல்லையா? பொது நபர்களைக் கொண்டு ஒரு சுயேச்சைக் குழுவினை நிறுத்தலாமல்லவா? அவ்வாறு நிறுத்தினால் மாகாணசபை முறையை பிரதான அமைப்பு ஏற்கவில்லை என்பதையும் உறுதி செய்யலாம். தமிழ் அரசியலுக்கு எதிரானவர்கள் வருவதையும் தடுத்து நிறுத்தலாம். தமிழ் மக்களின் ஒருமித்த குரலையும் வெளிக்காட்டலாம். இதற்காகவாவது கூட்டமைப்பு தயாராக இருக்கின்றதா? கூட்டமைப்பு தயாராக இல்லை என்பதே உண்மை. அது மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டு விட்டது. அந்த நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கத் தயாராகிவிட்டது. இதனை கூட்டமைப்பு பகிரங்கமாக மக்களுக்குச் சொல்வதே நேர்மையானது. அதாவது எமது அரசியல் தீர்வு மாகாண சபைகள்தான். நாம் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என பகிரங்கமாகக் கூறுவதே அரசியல் நேர்மையாகும்.

இத்தனைக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மாகாண நிர்வாகம் கூட்டமைப்புக்கு கிடைக்கப் போவதில்லை. எதிர்க்கட்சித் தலைமை ஸ்தானம் மட்டும் தான் கிடைக்கப் போகின்றது. எதிர்க்கட்சி ஸ்தானம் தமிழ் அரசியலைப் பேசுபொருளாக்க மட்டுமே உதவும். சுயேச்சைப் பட்டியல் மூலம் அதனை சிறப்பாகவே செய்யலாம். கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸினை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றது. இழுத்து ஒரு கூட்டு நிர்வாகத்தை நடாத்தலாம் என நினைக்கின்றது. அது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. முஸ்லிம் சமூகம் சலுகைகளைப் பெறுவதற்காகவும், தெற்கிலுள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதையே ஆதரிக்கும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசினைவிட்டு வரப்போவதில்லை. முரண்பாடு முற்றினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிடப் பார்க்கும். இல்லையேல் தனித்துப் போட்டியிடப் பார்க்கும். ஒருபோதும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை. அவ்வாறு போட்டியிடின் முஸ்லிம் மக்களிடம் இருந்து பெரியளவில் அது வாக்குகளைப் பெறப்போவதில்லை.

முஸ்லிம் காங்கிரஸினைத் தனித்துப் போட்டியிட வைத்து தேர்தல் முடிந்தபின் கூட்டாக மாகாண நிர்வாகத்தைப் பொறுப்பேற்கலாம் என கூட்டமைப்பு நினைக்கக் கூடும். அதுவும் வெற்றியளிக்கப் போவதில்லை. சிங்கள மக்களிடமிருந்து முழுமையாக அந்நியப்பட முஸ்லிம் மக்கள் ஒருபோதும் விரும்பப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தின் யதார்த்தம் இரு சமூகங்கள் இணைந்தால் மூன்றாவது சமூகம் அந்நியப்படும் என்பதே. அதற்கு பிரச்சினை இல்லை. அதனைத் தயார்படுத்துவதற்கு முஸ்லிம் அரசியல் சக்திகளுக்கும் விருப்பங்கள் இல்லை. தமிழர்- சிங்களவர் முரண்பாட்டில் நீந்துவதுதான் அவர்களது அரசியல்.

எனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தரப்பு அக்கறையை குவிக்கவேண்டியது தமிழ்த்தேசியத் தணலைத் தொடர்ந்து எவ்வாறு தக்கவைப்பது என்பதற்காக இருக்கவேண்டுமே தவிர சில்லறைப் பிரச்சினைகளிலல்ல.

http://www.pongutham...6c-3bbf1bb26e59

[size=4]இந்த நகர்வு முஸ்லீம் மக்களுக்கு ஒரு மாற்று தெரிவை தந்துள்ளது [/size]

---------------------------------------------------------------------------------------------------

[size=5]த.தே.கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள்[/size]

[size=4]

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததையடுத்து முஸ்லிம் செயற்பாட்டார்கள் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அவர் நேற்று கூறினார்.

'நான் இப்போது கல்முனையில் இருக்கின்றேன். நிச்சயமாக நாம் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவோம்' என அவர் கூறினார்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை த.தே.கூட்டமைப்புகோரும் என அவர் தெரிவித்தார். எமது மக்களின் உரிமைகளுக்கான எமது நீண்டகால கொள்கைகளை அங்கீகரிக்குமாறு நாம் கோருவோம் என அவர் கூறினார்.

2008 ஆம் ஆண்டு த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஈழவேந்தன் விடுமுறை பெறாமல் 3 மாதங்களுக்கு மேல் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்கத் தவறியதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதையடுத்து, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆர்.எம்.இமாமை த.தே.கூட்டமைப்பு நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/44740-2012-07-15-12-21-56.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.