Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மை உடைத்து விடுதலையாவோம்! - அபிஷேகா

Featured Replies

இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது.

கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம் பேசுவதற்கான வலுவை வழங்கியது மட்டுமல்லாமல் ஒரு தனியான நிழல் அரசாங்கத்தையும் கட்டியமைப்பதற்கான தளத்தையும் வழங்கியிருந்தது. அந்த வளர்ச்சியும் வலுவும் எமக்கான போராட்ட நியாயத்தை சர்வதேச அரங்கில் எடுத்து வைத்தது. அதற்கான சாத்தியப்பாடுகளை அக்காலகட்டத்தில் நிறுவ முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்பான சர்வதேசக் கோட்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எமது ஆயுதப்போராட்டத்தை பின்னடைவை நோக்கித் தள்ளிவிட்டது. முடக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் எமது உரிமைக்கான நியாயங்களும் சேர்த்து முடக்கப்பட்டுள்ளன.

ஆயுதப்போராட்டத்தை அடக்குவதில் சிங்களத்துக்குத் துணை நின்ற சர்வதேசம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கான தனது கடப்பாட்டில் இருந்து தவறியுள்ளது. எனவே ஜனநாயக வழியில், சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயங்களை முதன்மை நிகழ்ச்சி நிரலுக்குள் நகர்த்தி எமக்கான தீர்வைப் பெறுவதற்கான முயற்சியை மேலும் வலுவாக முன்னெடுக்கவேண்டிய கடப்பாட்டிற்குள் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த நீண்ட உழைப்பும் அதன் வெற்றியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரிடமும் ஏற்படும் அகப்புரட்சியின் திரட்சியாக வெளிப்படும் சமுதாய மாற்றத்தில்தான் தங்கியுள்ளது.

சர்வதேச அரங்கில் நகரக்கூடியவகையில் எம்மை மீள் கட்டமைத்துக் கொள்வதற்கான அடிப்படை முயற்சிகள் மூன்று வருடங்களைக் கடந்தும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கின்றது. காரணம், முள்ளிவாய்க்காலின் பின்னரான அரசியல் வெற்றிடம், அதாவது ஆயுதப்போராட்டத்தின் இறுதிவரை ஈழத்தமிழரின் உரிமைகள் தொடர்பாகப் பேரம் பேசவும், தீர்மானம் எடுக்கவும், செயற்படுத்தவும் ஈழத்தமிழரின் குரலாக விடுதலைப்புலிகளின் தலைமை இருந்தது. பொறுப்புக்கூறிய தலைமைத்துவத்தின் கீழ், நெறிப்படுத்தப்பட்ட வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயுதப்போராட்டத்தை மையப்படுத்தி தாயகமும் அதற்கான முழு உதவிகளை வழங்கி புலம்பெயர்தேசமும் இணைந்திருந்தன. ஆனால், தலைமைத்துவம் தொடர்பான தற்போதைய நிலையில் கூட்டிணைவான அரசியல் செயற்பாடு என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது.

இத்தகைய இக்கட்டான சூழலை வெல்லவேண்டுமானால், விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தை செம்மையிட்டுப் புதிய வீச்சில் நகர்த்த வேண்டுமானால், அடிக்கட்டுமான செழுமைப்படுத்தல் தேவை. அது, ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும் ஏற்படும் அகப்புரட்சி. ஈழத்தமிழ்ச் சமூகத்திடம் ஏற்படும் உள்ளார்த்தமான புரட்சிகர மாற்றமே விடுதலையைத் தக்கவைப்பதற்கும் அடுத்த கட்டம் நோக்கி முன்நகர்வதற்கும் அடிப்படையானது.

'சமுதாயப் புரட்சியானது, தனி மனிதனிலிருந்து, தனி மனிதனின் உள்ளீட்டான அகவுலகப் புரட்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். தனி மனிதனின் உள்ளீட்டாக புரட்சி நிகழாமல், மனவமைப்பு மாற்றப்படாமல், தனி மனிதனுக்குப் புறம்பாக, வெளியே நிகழும் எவ்வித புதுமையான சமூகப்புரட்சியும் உள்ளடக்கத்தில் உயிரற்றதாகவே இருக்கும். உயிர்த்துடிப்புள்ளதும், காலத்தால் சிதைந்து போகாததுமான ஒரு புதிய சமூக வடிவத்தைக் கட்டி எழுப்புவதாயின் தனி மனிதனின் மனவரங்கில் ஒரு புரட்சி நிகழ்வது அவசியம். இந்த மனப் புரட்சியானது பிரக்ஞையின் அடித்தளத்திலிருந்து வெடித்தெழ வேண்டும்' என ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தை தனது ’விடுதலை’ என்னும் நூலில் தத்துவாசிரியர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

புரட்சிகரமான மாற்றம் என்பது விடுதலைக் கருத்தியல் ரீதியாக ஒவ்வொருவரிடமும் உண்டாகும் தெளிவு, தான் செய்யும் அரசியல் பணி மற்றும் தனிமனித செயற்பாடுகள் தொடர்பில் உள்ள புரிந்துணர்வு, தான் செய்யும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஈழப்போராட்டத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கவேண்டும் என்ற தனிமனித விழிப்புணர்வு. தனது செயற்பாடுகள் போராட்ட நியாயங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்ற மனப்பான்மை. இதன் கூட்டு வடிவமே ஒரு அரசியல், சமூக மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும்.

விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வில் காத்திரமான பங்கை வழங்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதனாக, அவர்களின் மனவுலகில் ஒரு புரட்சி மனப்பான்மையை வளர்த்தெடுக்கவேண்டும். விடுதலை தொடர்பான ஒவ்வொருவரினதும் தூரநோக்குக் கொண்ட பார்வை, உறுதி, கடுமையான உழைப்பு, அரசியல் ரீதியான தெளிவு என்ற மாற்றத்தில்தான் எமக்கான புதிய பாதை தங்கியுள்ளது.

இன்றைக்கு தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பும் அத்துமீறிய குடியேற்றங்களும் தமிழர் தாயகத்தில் உள்ள இனச்செறிவைக் குறைத்துத் தாயக்கோட்பாட்டைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்பது சாதாரணமான புரிதலுக்குரியது. அப்படியாயின் ஒவ்வொரு ஈழத்தமிழனும், இனச்செறிவைப் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் செயற்றிட்டங்களை உணர்ந்து செயற்படுவது மிக அவசியமானது. ஆனால், பல நேரங்களில் சிங்களத்தின் செயற்றிட்டங்களுக்கு வலுச்சேர்க்கக் கூடிய வகையில்தான் அவர்களுடைய செயற்பாடுகள் அமைகின்றன. வடக்கு கிழக்கில் தங்களது காணிகளை வைத்திருப்பவர்கள், எனது தாயகம் இதை சிங்களனிடம் விற்று தாயகச்சிதைவிற்கு வழிகோலக்கூடாது என்ற அடிப்படையுணர்வுகூட இல்லாமல் சிங்கள மக்களிடம் காணிகளை விற்றுவிடுகின்றனர். இவை நீண்ட காலத்தில் எமது தாயகக்கோட்பாட்டை எந்தளவிற்கு பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் நீண்டகாலப்போரில் நாட்டை விட்டு இடம்பெயர்ந்ததாலும் கொல்லப்பட்டதாலும் தாயகத்தில் தமிழர்களின் இனவிகிதம் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. எமது இனவிகிதத்தைக் கூட்டுவதற்கு தாயகத்தின் பிறப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளை பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதைப் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைக்கும் நிறுவனங்கள் பொறுப்பெடுக்குமானால் இனவிகிதத்தை பெருக்குவதற்கான வாய்ப்பை கொடுக்கும்.

இவ்வாறு விடுதலை சார்ந்து ஒவ்வொரு சிறிய விடயத்திலும் கவனஞ்செலுத்தி, தாயக விடுதலைக்கான அடிப்படைகளைப் பாதிக்காதவகையில், அதைப் பலப்படுத்தக்கூடிய வகையில் செயற்பாடுகள் அமையவேண்டும் என்ற மனமாற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகின்றன.

குறிப்பாகப் புலம்பெயர் இளையோருக்கு அரசியல் கருத்தூட்டல் அவசியமானது. விடுதலை அரசியலில் நினைவெழுச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் செய்வது அவசியமாகவிருந்தாலும் அதுமட்டுந்தான் என்ற தன்மையிலிருந்து விடுபட்டு அரசியல் புரட்சிக்கான அடிப்படையான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். ஈழவிடுதலையின் அடைவு எல்லை எது என்ற தெளிவற்ற சூழலில், புதிய தலைமுறைக்கான காத்திரமான அரசியல் தெளிவூட்டலில் ஏற்படும் மாற்றமே ஒரு புரட்சிகர சமுதாயத்தை உருவாக்கும். அதுவே தொடர்ந்து முன்னெடுக்கவேண்டிய அரசியல் செயற்பாட்டிற்கான வலுவான அடித்தளத்தைக் கொடுக்கும் என்பது வெளிப்படை.

இன்றைக்கு புலம்பெயர் தேசத்தில் நடைபெறும் நினைவு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பாளர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. நீண்ட அர்ப்பணிப்புக்களும் உயரிய தியாகங்களையும் தற்கொடைகளையும் தன்னகத்தே கொண்ட இனவிடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்கேற்பு வீதத்தில் மாற்றமேற்பட்டது ஏன்? இதை எப்போது சரிசெய்யப் போகின்றோம். வெறுமனே நிகழ்வுகளில் கூடி விடுதலையைப் பற்றிக் கதைத்துக் கலைந்து செல்லும் சமூகமாக இருக்கப் போகின்றோமா? இதை ஒரு சமூகப்புரட்சியாக, பலமான சமூகமாக போராட்டத்தை முன்னெடுப்பதாக பார்க்கமுடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டிய கட்டத்தில் நாம் நிற்கின்றோம்.

ஆனால், தாயகம் சார்ந்தும், சர்வதேசத்தில் விடுதலைக்கான நியாயப்பாட்டை வலுப்படுத்தல் சார்ந்தும் தற்கால ஜனநாயக அரசியல் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் பரவலாக்கப்பட்ட வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? அதற்குரிய வகையில் சமூகம் சரியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விகளுடன்தான் தொடர்கின்றது.

அத்துடன் ஆரோக்கியமான சமூகமாற்றம் என்பது பல்வகை ஆளுமையான செயற்பாட்டாளர்களை வேண்டி நிற்கும். அந்தவகையில், தனது சமூகத்திலுள்ள ஆளுமைகளை இனங்கண்டு மனிதப் பெறுமான மதிப்பீடு செய்து, எல்லா வளங்களையும் சக்திகளையும் ஒருமுகப்படுத்தி அல்லது தனித்தனியாக இலக்கு நோக்கி செல்வதற்கான மாற்றமும் சிந்தனைச் செழுமையும் ஏற்படவேண்டும். தற்போதைய கட்டத்தில் இவைகள் நடைபெறுகின்றனவா? இவற்றுடன் ஜனநாயகம் பற்றிய புரிதல் அவசியமானது. ஒருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளுதலும் கருத்தைக் கருத்தால் மறுதலித்தலும் அதைச் சொல்வதற்கான உரிமையை அங்கீகரித்தலும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளாகும் தற்போதைய காலகட்டத்தில் இவை நடைபெறுகின்றனவா என்பது விவாதத்திற்குரியதாகவே இருக்கின்றது.

ஆயுதப்போராட்டம் என்ற பலம் இருக்கும்போது இனத்தின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை பாதுகாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சமூகமோ, அரசியலோ, பொருளாதாரமோ என்னவாக இருக்கின்றது, அதை எப்படி ஜனநாயக விழுமியங்களிற்குள்ளால் தக்கவைக்க பரந்துபட்ட அளவில் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம். அதற்காக எப்படி செயற்படப்போகின்றோம். ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளில் இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றதா? என எல்லாம் கவனிக்கப்படவேண்டும்.

இன்றைக்கு சர்வதேசத்தின் பார்வையில் இலங்கைப் பிரச்சனையின் முக்கியத்துவம் பின்னடைந்துள்ளது. சர்வதேசம் சிரியா மீது தங்களது நோக்க அரசியலுக்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அண்மையில் அமெரிக்கா இலங்கைமீதான ஜீ.பி.எஸ் பிளஸ் 2 வரிச்சலுகையை தளர்த்தியுள்ளதும் இலங்கைத்தீவு தொடர்பான விடயத்தினை இந்தியா ஊடாக கையாளும் அனைத்துலகம் தனது வெளியுறவுக் கொள்கைக்கு கிடைக்கும் இலாபப்பங்கை மட்டும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயற்படுகின்றது.

அவ்வாறாயின் மீளவும் ஈழத்தமிழர்களின் விவகாரத்தை முக்கியத்துவமடைய நாம் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம்? இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கான எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பதற்கான மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

சர்வதேசத்தில் ஈழவிடுதலைக்கான நியாயத்தையும் அதற்கான கருத்துப்பலத்தையும் காத்திரமாகச் செய்யும் சமநேரத்தில் முள்ளிவாய்க்காலின் பின்னரான சூழலின் தக்கவைப்பிற்கான ஆரோக்கியமான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தமிழ்ச் சமூகத்தை ஒரு புரட்சி மிக்க சமூகமாக கட்டமைத்து அவர்களின் சிந்தனையில் செயற்பாட்டில் தேசவிடுதலைத் தீயை மேலும் விதைத்து வலிமையாக நிமிர்ந்து நிற்கப்போவது ஒருங்கிணைவிலும் காத்திரமான செயற்பாட்டிலும்தான் தங்கியிருக்கின்றது. ஈழத்து அரசியல் விடுதலை நாற்காலிகளின் கால்களைப்போல அரசியல், சமூகம், பொருளாதாரம், சர்வதேச ஆதரவைப்பெறுதல் போன்ற நான்கு விடயங்களில் தாங்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை சமமாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பது கவனத்திற்குரியது.

எனவே, ஈழவிடுதலை நோக்கிய பயணத்தில் எம்முன்னால் விரிந்திருக்கும் சவால்களைக் கடந்து நகர்வதற்கான மனப்புரட்சி எழவேண்டும். சமுதாயப்புரட்சிக் கருத்தியலானது காலவதியாகாததும் எக்காலத்திலும் எக்கருத்துக்களாலும் எப்படியான அறிவியல் யுகத்திலும் தன்னை இசைவாக்கத்திற்குள்ளாக்க முடியாததுமான தன்மைவாய்ந்தது. கருத்தியல் மாற்றம் என்பது நடத்தை, நம்பிக்கை, தெளிவு, செயற்பாடு போன்ற பல விடயங்களை வெளிக்கொணர்வதில் முதன்மைப் பங்காற்றுகின்றது. சமுதாயப்புரட்சி ஏற்படுமாயின் அந்த சமூகத்தை யாரும் அவரவர் நினைத்த போக்கில் நகர்த்த முடியாது. சமூகவிழிப்புணர்வே தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய போராட்டத்திற்கான அடிப்படை. ஈழவிடுதலையின் தற்போதைய அடைவு மார்க்கத்திற்குரிய வகையில் இயலாமை, நம்பிக்கையின்மை, குழப்பம் போன்றவற்றை சமூகத்திடமிருந்து களைந்து, சமூக விடுதலையை முன்னெடுக்கவேண்டுமாயின் அந்தச் சமூகத்திற்கு தனது விடுதலை தொடர்பான மேலதிகமான ஆழமான அரசியல் கருத்தியல் தெளிவு தேவை. அதுவே சமூகவிடுதலைக்கான சரியான தளத்தை வழங்கும். அந்த விடுதலைக் கருத்தியலே நீண்ட விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும் அடிப்படையானது.

உளப்புரட்சியின் வடிவமாக தோற்றம் பெற்ற எமது ஆயுதப்போராட்டம் எத்தனையோ தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் கொடுத்து வளர்க்கப்பட்டது. பல உயிர்களை விலையாகக் கொடுத்து, குருதிகாயாத தேசமாக இருக்கும் எமது தாயகத்தின் பிறப்பு எம் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது என்ற உண்மையை நாம் புரியும் போது திறக்கும் பாதைதான் ஈழப்போராட்டத்திற்கான அடுத்த கட்டம்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.