Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மாவோயிஸ்டுகளாவது ஏன்?

Featured Replies

மக்கள் மாவோயிஸ்டுகளாவது ஏன்?

ஆர்.எஸ். நாராயணன்

வனவளம், காலம் காலமாக வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளின் நில உரிமை ஆகியவற்றைச் சுரண்டிச் சுரங்கங்களாக மாற்றும் கார்ப்பரேட்டு - தொழில் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் படை, மத்திய ரிசர்வ் படை உதவுகின்றன.ஆதிவாசி உரிமைகளுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்கள் அரசுடன் கொள்ளும் உறவுகளில் விரிசல் ஏற்பட்டால் "மாவோயிஸ்டு' முத்திரை குத்தப்படலாம்.வளர்ச்சி என்ற போர்வையில் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஆதிவாசிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பும்போது குத்தப்படும் முத்திரை "மாவோயிஸ்டு'. எதிர்ப்பவர்களைச் சிறையில் அடைத்துவிட்டு ஆதிவாசிப் பெண்களின் கற்பைக் களவாடும்போது காவலர் - ரிசர்வ் போலீஸ் படை மக்கள் எதிரிகளாகின்றனர்.ஆதிவாசிகளின் அனுபவத்தில் உள்ள நிலம் பறிக்கப்படுகிறது. பெண்களின் கற்பு பறிபோகிறது. பலாத்காரத்துக்குப் பதில் வன்முறை நிகழும்போது நீதியும் நியாயங்களும் மறுக்கப்படுகின்றன.ஒருபக்கம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2011-12-ல் உ.பி.யில் கோதுமை விளைந்து கொட்ட இடமில்லை. ஒரே ஆண்டில் உ.பி. மாநிலத்தில் மட்டும் 3.15 கோடி டன் கோதுமை விளைந்துள்ளது. சொந்த உபயோகம், விதை போக 2 கோடி டன்கள் விற்பனைக்குரிய உபரி. கொள்முதல் செய்வதில் குளறுபடிகள், அறுவடையில் சாதனை ஆண்டு.கோதுமைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 1,285. அரசு கொள்முதலில் ஆர்வம் காட்டாத காரணத்தால் கோதுமை விவசாயிகள் கிடைத்த விலைக்கு வெளி அங்காடியில் விற்றனர். ரூ. 600 முதல் ரூ. 700 கிடைத்ததாம். வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.விளைந்தும் விலையில்லாமல் 500-க்கும் மேற்பட்ட கோதுமை விவசாயிகள் உ.பி. மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மற்றவர்களும் நாளை மாவோயிஸ்டுகளாகலாம்.ஆதிவாசிகளின் நில உரிமை அங்கீகரிக்கப்பட்டு பட்டா வழங்க வேண்டுமென்று வன உரிமைச் சட்டம் 2007 கூறியுள்ளதைத் தொடர்ந்து உ.பி.யில் பல லட்சக்கணக்கான ஆதிவாசிகள் நில உரிமையை நிலைநாட்ட விண்ணப்பம், சாட்சியங்கள் வழங்கியும்கூட 80.5 சதவிகிதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதி 19.5 சதவிகிதம் ஏற்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் வனத்துறையால் எதிர்க்கப்படுகிறது.விவசாயியாகப் பிறந்தவன் இன்னல் வந்தால் மடிவானே தவிர, வாளை எடுக்க யோசிக்கலாம். ஆதிவாசிகள் விஷயம் அப்படியல்ல. ஏமாற்றப்பட்டு இருப்பிடத்தையே இழந்துவிட்ட நிலையில் உரிமையை நிலைநாட்ட வாள், வில் அம்புகளுடன் துப்பாக்கியையும் தூக்கிவிட்டான் - இழப்பதற்கு அவனிடம் எதுவுமில்லாத காரணத்தால்.எங்கெல்லாம் காடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் பழைய நக்சல்பாரிகள் புதிய மாவோயிஸ்டுகளாக வளர்ந்துள்ளனர்.கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், அசாம், திரிபுரா நீங்கலாக இதர மாநிலங்களில் - குறிப்பாக உ.பி., பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துள்ளனர்.மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலங்களில் வனக் கொள்ளையர்கள் - பெரும்பாலும் அரசியல்வாதிகள் - அந்தக் குறையை நிரப்பிவிடுவதைத் தமிழ்நாட்டில் கவனித்திருக்கலாம்.அசாம், உத்தரகண்ட் போன்ற வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் வனப் பாதுகாப்புக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்களை அரசுகள் மாவோயிஸ்டுகளாக முத்திரை குத்தும் மரபு உண்டு.உதாரணமாக, பிரம்மபுத்திராவில் 800-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இதனால் ""நர்மதாவைக் காப்பாற்றுங்கள்'' என்று மேதா பட்கர் கூறும் நியாயம் பிரம்மபுத்திராவுக்கும் பொருந்தக்கூடியதால் அசாம் - அருணாசலப் பிரதேசத்தில் ""கிருஷக் முக்தி சங்கிராம்'' தலைவர் அகில் கோகாயை ஒரு "மாவோயிஸ்டு' என அரசு முத்திரை குத்திவிட்டது."விடுதலை பெற்ற இந்தியா' என்றால் ஆதிவாசிகளைப் பொருத்தவரை அது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சத்தீஸ்கரில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ள பி.டி. சர்மா கூறுகிறார். இன்று இவர் ஆதிவாசிகளின் நலனுக்காகப் பாடுபடும் சமூகசேவகராக இயங்கி வருகிறார்.மாவோயிஸ்டுகள் எந்த அதிகாரிகளைக் கடத்திக்கொண்டு சென்றாலும் அவர்களை விடுவிக்க பி.டி. சர்மாதான் சமாதானப்படுத்திப் பேச்சு நடத்தி வெற்றி பெறுவார்.சத்தீஸ்கரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் கடத்தப்பட்டபோது சர்மாதான் பேச்சு நடத்தி விடுவித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றி வந்த பி.டி. சர்மா ஆதிவாசி மக்களின் நலவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அரசு வேலையை ராஜிநாமா செய்தார்.எனினும் நேர்மையான, ஒழுங்கு தவறாத இந்த அதிகாரியை மத்திய அரசு இழக்க விரும்பாமல் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஆதிவாசி மக்கள் துறைக்குரிய கமிஷனராகப் பதவி வழங்கினர். அவர்தான் "பெசா' சட்ட வரைவைச் செய்தார். "பெசா' என்றால் "பஞ்சாயத்து எக்ஸ்டன்ஷன் டு ஷெட்யூல்டு ஏரியா' சட்டமாகும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஐந்தாவது ஷெட்யூலுக்கு உயிரூட்டிய சட்டமாகும். இந்தச் சட்டம் படிக்கப்படாமலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறும் சர்மா, "பெசா'வைப் படித்திருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ஆதிவாசிகளின் உரிமையைப் பற்றிய புரிதல் இருந்திருக்கும் என்கிறார்.இந்தச் சட்டம் ஆதிவாசிகளுக்குரிய இயற்கைவள உரிமையை நிலைநாட்டியிருந்தாலும் வனத்துறையோ, காவல் துறையோ, வருவாய்த் துறையோ அதை அமல்படுத்தாமல் அவர்களைச் சுரண்டுகிறது."லஷ்கர் இ தொய்பா' என்றாலும், "விடுதலைப்புலி'கள் என்றாலும், மாவோயிஸ்டுகள் என்றாலும் வன்முறையாளர் என்று எல்லோரையும் ஒன்றாகவே உள்துறை அமைச்சகம் கருதுகிறது. லஷ்கர் இ தொய்பா, காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று அப்பாவி இந்தியர்களைக் கொல்கிறது. விடுதலைப் புலிகள் தனி ஈழத்துக்குப் போராடுகிறார்கள்.இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, சமவாய்ப்புக்காக அங்கே தனி நாடு வேண்டும் என்று குரல் எழுப்பும்போதும் சரி, பின்னர் ராஜபட்சே அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் புரிந்தபோதும் சரி தமிழ்நாட்டு மக்களை அவை மிகவும் பாதித்துவிட்டது. குடியுரிமை வேறுபட்டாலும் "தமிழன்' என்ற உணர்வு தலைதூக்கி நிற்பது இயல்பே.மாவோயிஸ்டுகளின் இலக்கு மிகவும் வித்தியாசமானது. வனத்துறை - வருவாய்த்துறை - காவல்துறை நிகழ்த்தும் கொடுமைகளை எதிர்க்கும் ஆதிவாசிகளின் ஆயுதப் போராட்டமே "மாவோயிசம்' என்றால் அது மிகையில்லை. சட்டம் இருந்தும் ஓர் இந்தியக் குடிமகனை இந்தியனாக வாழ முடியாமல் அவனுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது என்ன நியாயம் என்று பி.டி. சர்மா கேட்பதில் நியாயம் இல்லையா?ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் சுரங்கங்களைத் தோண்டும் கார்ப்பரேட் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயலாற்ற வேண்டியுள்ளது. சுரங்கம் தோண்ட ஆதிவாசிகளை அப்புறப்படுத்த வேண்டும். சுரங்கம் தோண்டிய முந்நாளிலேயே மாவோயிசம் உருவாகி வளர்ந்துள்ளது.ஏட்டறிவோ எழுத்தறிவோ இல்லாத ஆதிவாசிகளிடம் பட்டா உள்ளதா? சிட்டா உள்ளதா? என்று கேட்டால் "வில் உள்ளது; அம்பு உள்ளது' என்றுதானே பதில் வரும். ஆதிவாசிகளின் அறியாமையைப் பயன்படுத்தி, காலம் காலமாக அவர்கள் அனுபவித்த நிலம், ஆதிவாசிகள் அல்லாதவருக்குப் பட்டாவாகிக் கார்ப்பரேட்டுகளுக்கு நல்ல விலையில் விற்கப்பட்டது போக } எஞ்சியுள்ள இடங்களுக்கு } இப்போது "மாவோயிசம்' என்ற பெயரில் போராட்டம் நிகழ்கிறது.இயற்கையோடு ஒன்றிவாழும் ஆதிவாசிகள் மாற்று இடம் செல்ல மறுக்கின்றனர். ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வாழுமிடச் சட்டமும் உள்ளது. வாழ்வுரிமைச் சட்டமும் உள்ளது. வாழ்வுரிமைச் சட்டத்தின் கீழ் "மூங்கில் உரிமை இருந்தும்' ஆதிவாசிகளை வாழ விடுவதில்லை வனத்துறை.ஆயிரங்கோடி லட்சங்கோடி என்று அரசியல்வாதிகளும் மேல்மட்ட அதிகாரிகளும், தொழிலதிபர்களும் வரி கொடாமலும், "லபக்' செய்தும் தண்டிக்கப்படுவதில்லை.ஆதிவாசிகளின் பொருளாதார உரிமையை விட்டுக் கொடுப்பதால் வனத்துறைக்கு அப்படி என்ன பெரிய இழப்பு ஏற்படப் போகிறது? அமைச்சர்களின் ஊழல் பணத்தோடு ஒப்பிட்டால் இந்த இழப்பு பெரிய விஷயமா என்ன?மாவோயிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நேபாள வழியை மேற்கொள்ளலாம். வனப் பயனாளிகளின் கூட்டமைப்புச் சட்டம் 1993-ல் இயற்றப்பட்டு வனப் பாதுகாப்பு உரிமையை நேபாள அரசு ஆதிவாசிகளுக்கு வழங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸôலும் காவல் துறையினாலும் "வன்முறைக்குப் பதில் வன்முறை' என்ற வழி ஒருபோதும் வெற்றி பெறாது.""கடையனுக்கும் கடைத்தேற்றம்'' என்று காந்தி கூறியதைத் திருத்திக் ""கடையனுக்கு வெளியேற்றமே விடை'' என்பது என்ன நியாயம்?

http://dinamani.com/...ஸ்டுகளாவது ஏன்?

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.