Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணை மடுக்குளமும்.. சார்ந்ததன் வண்ணமாய் இருத்தலும்.. :-நடராஜா குருபரன்

Featured Replies

"மக்களின் நலன்களைப் பாதிக்கிற எந்தவிடையத்தையும் எப்படிச் செய்தியாக்குவது அதற்குத் தேவைப்படுகிற மொழி என்ன என்பதில் இருந்து எந்தப் பிரச்சனையின் பின்னாலுமுள்ள அதிகாரங்களின் அசிங்கமான முகங்களை இனம் காணுவது வரை எங்களுக்கு தொழிற் தேர்ச்சி நன்றாகவே உள்ளது.”

அண்மையிற் குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் “ இராணுவ முகாம்களுக்காக இரணைமடுக் குளத்தின் நீர்சேமிப்பை கட்டுப்படுத்தி விவசாயிகளை வதைக்கும் அரசாங்கம்” என்னும் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியைப் பின்னர் பல தமிழ் ஊடகங்கள் எம்மைக் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் மீள் பிரசுரம் செய்திருந்தன. இவ்வாறு அச்செய்தியை பிரசுரித்த அனைத்து ஊடகங்களையும் அறிவற்றவையாகவும் தமிழ்ச் சமூகத்திற்கு அவலத்தை தரப்புறப்பட்டவையாகவும் சித்தரிக்கும் வகையில் திரு கோ. றுசாங்கன் தனது இணையத்தில் பத்தியொன்றை எழுதியிருந்தார். அதனை வாசித்தபோது ஒரு ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாமல் என்னுள் எழுந்தது.

ஒரு பத்திரிகையாளருக்குத் தேவைப்படுகிற அடிப்படையான தகுதிகளில் ஒன்று எழுத்தப்பட்ட பந்தி ஒன்றைச் சரியாக வாசித்து விளங்கிக் கொள்வதாகும்.

ஊடகம் ஒன்றில் வருகிற செய்தியைச் சரியாக வாசித்துப் புரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு ஊடகவியலாளர் என்று பெயரில்லை.

மேலும் எழுதப்பட்ட செய்தியைப் புரிந்து கொண்டாலும் அதனைத் தனக்கு தேவைப்பட்ட மாதிரி மாற்றி வியாக்கியானம் செய்து திசை திருப்புவரும் ஊடகவியலாளரில்லை.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவெனில் அதிகாரங்கள் மாறும் போதெல்லாம் அதற்கேற்ப மாறி அந்த அதிகாரத்தை அண்டி அதனை நியாயப்படுத்தித் தங்கள் பிழைப்பை நடாத்துபவர்கள் தங்களை உண்மையான ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளமுடியாது என்பதுதான்.

வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கும் அதிகாரத்தின் அதிகாரிகள் அவர்களின் எசமானர்கள் அவர்களின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்தும் ஆட்சியின் அரசவை ஊடகவியலாளர்களாக இருப்பவர்கள் யாவரும் ஊடகங்களில் வரும் செய்திகள் தங்களின் நலன்களுக்கு முரணாகாமல் வெளியிடப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறில்லாது அமையும் போது வெளியிடப்படும் செய்திகளைத் திரித்து விட முனைகிறார்கள்.

குறித்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டவர்கள் என்ற வகையில் திரு றுசாங்கன் அவர்களுக்கு “முறையான” பதிலை அளிக்க வேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரணைமடுக் குளம் பற்றியும் அங்குள்ள இராணுவ முகாம்கள் பற்றியும் இரணைமடுக் குளநீரினை நம்பியிருக்கும் விவசாயிகள்படும் அவலம் குறித்தும் எமது இணையத்தில் வெளிவந்த பிரதான செய்தியொன்றைச் சரியாக வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கிக் கொண்ட போதும் தனது எசமானர்களின் திருக்கூத்து வெளிவந்த கடுப்பில் அந்தச் செய்தியைக் குறித்த பத்தியாளர் திரித்து வியாக்கினம் செய்ய முனைந்திருக்கிறார். இதனைக் கிடைக்கப் போகிற இறைச்சித்துண்டுக்கு வாலாட்டுதல் எனலாம்.

Iranai%20madu%20b1.jpg

சரி முதலில் நாங்கள் வெளியிட்ட செய்தியைப் பார்ப்போம்.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வறட்சிகாரணமாகப் பல குளங்களின் நீர்மட்டம் வெகுவாக வற்றிய நிலையில் அக்குளங்களின் கீழான சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மாவட்டத்தின் பல இடங்களில் நீரின்றி அழிவடைந்து வருகின்றது. இந்தநிலையிற் பல விவசாயிகள் வாய்கால்களில் உள்ளநீரினை நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் இறைத்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கையாளர்களே இம்முறை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வழமையாகக்குளத்தில் 32 அடி நீர் சேமிக்கப்படுவது வழக்கம் ஆனால் இம்முறை 28 அடி நீரே சேமிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே முறையான நீர்பாசனம் இன்றிப்பயிர்கள் அழிந்துள்ளதாகப் பல விவசாய அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அத்தோடு இரணைமடுக் குளத்ததின் அருகிற்பல இராணுவ முகாம்கள் காணப்படுவதால் 32 அடிநீர் சேமிக்கப்படும் போது இராணுவமுகாம்கள் பாதிக்கப்படும் என்றகாரணத்தால் 28 அடி நீரேசேமிக்கப்பட்டதாகவும் விவசாய அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன

ஆனால் இதனைமுற்றாக மறுக்கும் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் குளத்தின் அணைக்கட்டு மிகவும் பலவீனமாக இருப்பதன் காரணமாகவே 28 அடி நீரை சேமிக்க வேண்டியநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த காலங்களில் பலமாக இருந்தகுளத்தின் அணைக்கட்டு எவ்வாறு திடிரென பலவீனமாக மாறியது என விவசாய அமைப்புக்களின் கேள்விகளுக்கு இதுவரை பொருத்தமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.'

எமது செய்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பக்க வியாக்கியானத்தையும் அதிகாரிகள் தரப்பு வியாக்கியானத்தையும் உள்ளடக்கியதாகவே வெளிவந்துள்ளதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

இரண்டாவது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பக்கம் நின்று அணைக்கட்டு திடீர் எனப் பலவீனப்பட்டது எவ்வாறென்று கேட்டிருந்தோம்? இராணுவ முகாம்களின் நலன் கருதி விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டதை கேள்விக்கு உளாக்கியிருந்தோம்.

இதனை விளங்குவதற்கு சிகரத்தின் உச்சிக்கெல்லாம் போகத் தேவையில்லை. மக்களின் உண்மையான தேவைகளோடும் அவர்களின் உண்மையான நலன்களோடும் இணைந்திருந்தாலே போதுமானது.

சரி குறித்த பத்தியாளர் என்னகூறுகிறார் எனப்பார்ப்போம்.

“இரணைமடுக் குளத்தில் கிடைப்பனவாக இருக்கக்கூடிய நீருக்கு மேலதிகமாக அனுமதியின்றி விவசாயத்தில் ஈடுபட்டவர்களால் நெற்செய்கை இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்க நம்முடைய பத்திரிகைகள் சில முந்திக் கொண்டு இரணைமடுக் குளநீர் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று செய்தி வெளியிட்டுள்ளன.” என்கிறார்.

நாங்கள் எமது செய்தியில் இரணைமடுக் குளத்தில் வழமையாகச் சேமிக்கப்பட்டிருக்கக் கூடிய நீர் ஏன் சேமிக்கப்படவில்லை என்றே கேட்டிருந்தோம். இரணைமடுக் குளநீர் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று செய்தி வெளியிடவில்லை. (மழை பெய்து வெள்ளமோடிய காலங்களில் 32 அடி நீரை சேமிப்பதற்கு தடையாக இருந்தஎ சமானர்களைக் காட்டிக் கொடுக்க பத்தியாளருக்குத் துணிவில்லை...)

பத்தியில் இன்னு மொரு இடத்தில்

இந்தப்பகுதியில் இராணுவத்தினர் அமைத்துள்ள முகாம் காரணமாகவே குளத்துநீர் வற்றியதாகவும் அதனாலேயே விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் இந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. முகாம் அமைத்ததால் நீர்வற்றியது எப்படி? நீர் வற்றியமைக்கும் இராணுவத்தினருக்கும் என்ன சம்பந்தம் என்ற எந்தவித தர்க்க ரீதியான விளக்கமும் இன்றி நாய்க்கு எங்கு அடித்தாலும் பின்னங் காலைத் தூக்குவது போன்றே இந்தச் செய்திகள் எ ழுதப்பட்டிருந்தன. எனக்கூறுகிறார்.

இதனை உமியை எடுத்து மாத்திரிக்க வெளிக்கிடுவது எனலாம்.

நாயை அடித்தால் அது பின் காலைத்தான் தூக்கும் தூக்கவேண்டும். ஆனால் இறைச்சித்துண்டுக்காக முன் கால்களைத் தூக்கி நின்றால் அடி விழும் போது பின் கால்களைத் தூக்க முடியாது போய்விடும்.

மேலும் பத்தியாளர் பின்வருமாறு கூறுகிறார்.

“இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு அது இராணுவமயப் பட்டிருப்பதும் அங்கே புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு வழிபாடியற்றப்பட்டு வருவதும் அடிக்கடி தமிழர் தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டுக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும்விடயம். முன்னர் புலிகளுடைய காலத்திலும் இரணைமடுக் குளத்தின் ஒருபகுதி முற்றிலுமாக உயர் பாதுகாப்பு வலயமாகபி ரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே”.

புலிகள் இரணைமடுக் குளத்தின் ஒருபகுதியைப் பாதுகாப்பு வலையமாக்கியதைக் கூறுவதன் மூலம் இராணுவம் இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதை நாசூக்காக நியாயப்படுத்த முனையும் தொழிசார் திறனை அறியாதிருக்க நாங்கள் ஒன்றும் நீங்கள் சார்ந்திருக்கும் தோழர்கள் இல்லை.

விடுதலைப் புலிகள் மக்களின் நலன்களில் இருந்து தொழிற்படுமளவுக்கு அரசியல் அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இதனைச் சுட்டிக்காட்ட இலங்கை அரசின் மக்கள் ஒடுக்குமுறை அதிகாரத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அருகதை இல்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே சொல்கிறீகள்.

Iranai%20madu%205.jpg

”சில நெல்வயல்கள் இவ்வாறு நீரின்றி எரிந்து போனதையடுத்து, கடந்தமாத இறுதிப் பகுதியில் நடைபெற்ற அவசர திட்டக்குழுக் கூட்டத்தின்போது, அனுமதியின்றி நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் சிறுபோக உரிமையை அடுத்த மூன்று வருடங்களுக்கு இரத்துச் செய்வது எனவும், இவர்களிடம் ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாப்படி தண்டம் அறவிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.”

பனையால விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி நீங்கள் நடப்பதை வெளிப்படையாகவே சொல்கிறீர்கள். ஒழுங்குகளும் விதிகளும் தண்டனைகளும் எந்த நிர்வாகத்திலும் அவசியமானவை .ஆனால் இவை விவசாயிகளின் நலன்களில் இருந்து சிந்திக்கப்பட வேண்டியவை. அவர்களுடனான உரையாடலின் பின் தீர்மானிக்கப்பட வேண்டியவை.

இன்னுமோரிடத்தில் ஆனால் இந்தப்பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டிருப்பதால் குளம் வற்றியமைக்கும் அவர்களே காரணம் என்று சொல்வதுதான் வேடிக்கையானது. இது எமது அறிவீனத்தையே வெளிக்காட்டுவதாக அமையும். என்கிறார் பத்தியாளர்.

ஒரு உண்மையான மக்கள் இராணுவம் மக்களின் தேவைக்காக நீரைச் சேமித்து வைத்து வழங்கும். தாங்கள் அழிந்தாலும் மக்களைப் பாதுகாப்பதையே மக்கள் இராணுவம் நோக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால் இலங்கை இராணுவம் தனது நலன்களைப் பேணுவதற்காக மக்களை வதைப்பதை ஏன் நீங்கள் மறைக்க முற்படுகிறீர்கள்?

மாவிலாற்றில் புலிகள் போட்ட கணக்கில் பிழையேற்பட்டதாலே முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டதாகப் பத்தியாளர் நுனிப்புல்லும் மேய்கிறார். சமாதானப்பேச்சு வார்த்தைகளைப் புலிகள் சரி அரச தரப்பும் சரி மக்களின் உண்மையான நலன்களைப் பேணும் நோக்குடன் நடாத்தவில்லை என்பது உலகறிந்த விடையம். தங்களைச்சுற்றி பின்னப்பட்ட வலையை அறியாது அதனுள் சிக்கிக் கொண்ட புலிகள் தங்களைப் பலிகொடுத்தனர். அது அவர்கள் தேர்ந்தெடுத்த இயங்கியலின் விதி.. ஆனால் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் அரசியற் கோரிக்கைகள் அநாதரவாகப் போக மாட்டா என்பதும் இயங்கியல் விதி.. ஒரு அரசுக்குள்ள பொறுப்புணர்வையும் நீதியையும் மீறிப் புலிகளையும் மக்களையும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கொன்றொழித்த பிற்போக்கான சிங்களப்பேரின வாதத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை புலிகளைக் காரணம் காட்டிப் நியாயப்படுத்துவது கடைந்தெடுத்த போக்கிலித்தனம்.

சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரேயே சிங்களப் பேரினவாதம் புலிகளை மட்டுமல்ல ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைகளையும் ஒடுக்கும் பாரிய வேலைத்திட்டத்தை சர்வதேசத்தின் உதவியுடன் ஆரம்பித்து விட்டிருந்ததை எந்த நுண்ணுணர்வுள்ள பத்திரிகையாளரும் அறிவார்.

Iranai%20madu%204.jpg

யாருக்கு விடுகிறீர்கள் சரடு!

விடுதலைப் புலிகளின் அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி உங்களின் கோரமுகத்தை மறைக்க வேண்டாம்.

இன்றைக்கு இலங்கையில் குறிப்பாக வடக்குகிழக்கில் குமைந்து கிடந்து தமிழ் மக்களின் தனிப்பட்ட வாழ்வில் இருந்து பொது வாழ்வுவரை ஆக்கிரமித்துத் தாண்டவமாடும் இராணுவத்தை விமர்சிக்க வக்கிலாத நீங்கள் எங்களுக்கு அறிவில்லை என்கிறீர்கள்.

உண்மையிலும் நாங்கள் அறிவீனமாக இருப்பதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வெளிப்படையாக கூறுங்கள்… ஆனால் துரதிஸ்டவசமாக மக்களும் நாங்களும் தெளிந்த அறிவுடனேயே இருக்கிறோம்.

மேலும் 'அந்தந்தப் பிரச்சினைக்கு எது எது காரணமாக இருக்கிறது என்பதைச் சரியாக இனங் கண்டாலே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். அப்படியின்றிப் பார்வைக் கோளாறுடன் பிரச்சினைகளை அணுகினால் தீர்வுகாணக்கூடிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாமல் போவதுடன். அவை தேவையற்று பூதாகரமாக்கப்பட்டு மேலும் பிரச்சினைகள் உருவாகவே வழிவகுக்கும்.' என்கிறார் பத்தியாளர்

அடியடா சக்கை எண்டானாம்… புலிகள் போய்ச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன இதுவரை எத்தனை பிரச்சனைகளை இனம் கண்டிருக்கிறீர்கள்?. அவற்றில் எத்தனை தீர்வு காணப்படக் கூடியவை? அவற்றில் எத்தனைக்கு தீர்வு கண்டிருக்கிறீர்கள்? பிரச்சனைகள் பூதாகாரமாகிவிடும் என்று பயப்படுகிறீர்கள். போகட்டும் விடுங்கள் பிரச்சனைப்பூதம்தானே! முன்பொருமுறை உங்கள் எசமானர்கள் கிளப்பிவிட்ட பூதங்களில் ஒன்றையாவது பிடித்தனீங்களோ?

யாருக்குப் பார்வைக் கோளாறு யாருக்கு மூளைக் கோளாறு என்று மக்களுக்கு தெரியும்.

'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு' என மக்கள் இனிமேல் ஊடகச் செய்திகளை அப்படியே நம்பி விடாமல் உண்மை என்ன என்பதை தீரவிசாரித்து அறிந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அல்லாது போனால் தொழில் முறைத் தேர்ச்சியற்ற வெறும் உணர்ச்சிகளால் நிறைந்த நமது தமிழ் ஊடகச் செய்திகள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அவலங்களையே பரிசளித்துக் கொண்டிருக்கும்.' என்கிறார் பத்தியாளர்.

எங்களுக்கு மெய்யும் தெரியும் அதன் பொருளும் தெரியும் எப்பொருளை எந்தவாய் பேசும் எப்போது பேசும் என்றும் அறியும் கலையும் தெரியும் என்கின்றனர் மக்கள்.

மக்களின் நலன்களைப் பாதிக்கிற எந்தவிடையத்தையும் எப்படிச் செய்தியாக்குவது அதற்குத் தேவைப்படுகிற மொழி என்ன என்பதில் இருந்து எந்தப்பிரச்சனையின் பின்னாலுமுள்ள அதிகாரங்களின் அசிங்கமான முகங்களை இனம் காணுவது வரை எங்களுக்கு தொழிற் தேர்ச்சி நன்றாகவே உள்ளது.

ஆனால் எங்களுக்குத் தொழில் முறைத் தேர்ச்சி இல்லை என்கிறார் பத்தியாளர். எந்தத் தொழிலைச் சொல்கிறார்?

அதிகாரங்கள் போட்ட போடும் பிரத்தியேக விருந்துகளுக்கேற்ப வாலாட்டும் தொழிலைச் சொல்கிறாரா அல்லது அதிகாரங்கள் மாறும் போது அவற்றுக் ஏற்ப குத்துக்கரணம் அடித்து பிழைத்து வாழும் தொழிலைச் சொல்கிறாரா இரண்டிலுமே எங்களுக்கு தேர்ச்சி இல்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் ருசாங்கன்.

இன்னும் ஒரு மணி நேரத்துள் இரணை மடுக்குளம் பற்றிய செய்தி ஆய்வு அண்மையில் எடுத்த படங்களுடன் வெளிவரும்.

குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

globaltamilnews.net

இணைப்பு:http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81170/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.