Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுக் குளத்தின் நீர்தட்டுப்பாடும் துலங்கும் மர்மங்களும்: நடராஜா குருபரன்

Featured Replies

நீரிழந்தகுளமும் நிலைமறந்த அதிகாரிகளும். இரணைமடுக் குளத்தின் நீர்தட்டுப்பாடும் துலங்கும் மர்மங்களும்

06 ஆகஸ்ட் 2012

இது ஒரு செய்தி ஆய்வு- நடராஜா குருபரன்

Iranai%20madu%202b_CI.jpg

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் அமைந்திருக்கும் இரணைமடுவும் இரணைமடுக் குளப்பிரதேசமும் வடக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாறியுள்ளன. விடுதலைப்புலிகளின் காலத்திலும் இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதியில் அவர்கள் விமான ஓடுதளமொன்றை அமைத்து அதனை இராணுவக் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகப் பேணியிருந்தனர். இப்பொழுது அந்த இடத்தை இலங்கைப் படையினர் மூன்று மடங்காக விஸ்தரித்துள்ளதை அவதானிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை இலகுவில் எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

இரணை மடு இராணுவ முகாமைச் சூழ சீனாவால் வழங்கப்பட்ட ஐந்து வருடங்களுக்கு பாவிக்கக் கூடிய தற்காலிக அல்லது அரை நிரந்தர வீடுகள் என்று சொல்லப்படும் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டு அவற்றில் படையினரின் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இரணைமடுக்குளம் 36 கன அடி நீரைத் தேக்கக் கூடிய கொள்ளளவு உடையது. விடுதலைப்புலிகள இருந்த காலத்தில் இதில் 34 கன அடி வரை நீர் தேக்கப்படுவது வழமையாக இருந்தது. ஆனால் தற்போது நீர் தேக்கப்படும் அளவு வெளியில் எவருக்கும் தெரியாமல் 28 அடியாகக குறைக்கப்பட்டுள்ளது. இரணைமடுக் குளப்பராமரிப்புடன் தொடர்புடைய பொறியியலாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய படையினர் இதனை இரகசியமாகச் செயற்படுத்தி விட்டனர். ஆனால் இது குறித்து விவசாயிகள் அமைப்புடன் கலந்துரையாடப்படவில்லை. மேலும் நீர்முகாமைத்துவ திட்டமிடல் குழுக்களின் அனுமதியும் பெறப்படாமலேயே குளத்தின் நீர்மட்டத்தை 28 கன அடியாகப் படையினர் குறைத்து விட்டனர். இந்த வகையில் ஒரே இரவில் 6 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு விட்டது.

இதற்கான காரணம் என்னவெனில் 28கன அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால் விமானப் படைத்தளத்தின் தெற்கு கிழக்கு கரைகளில் நீர் தேங்கி ஓடு தளம் பாதிக்கப்படலாம் என இலங்கை இராணுவத்தின் பொறியியற் பிரிவு எச்சரித்திருக்கிறது. இதனாலேயே படைத்தரப்பு நீரை வெளியேற்றச் சொல்லி பொறியியலாளருக்கு உத்தரவிட்டது. நீர்ப்பாசன பொறியிலாளர் இந்த உத்தரவைச் சிரமேற்கொண்டு செயற்படுத்திவிட்டார் ஆனால் நடந்ததை வெளிப்படையாக சொல்லவில்லை சொல்லவும் முடியாது. எனவே அரச நிர்வாக மட்டங்கள் அணைக்கட்டு பலவீனமடைந்து விட்டது எனச் சரடு விடத்தொடங்கியுள்ளன.

Iranai%20madu%203a.jpg

இந்தச் சம்மபவத்திற்குப் பிறகும் மேலதிகமாக 1 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் வெளியேற்றப்பட்டு ஒரு சில நாட்களின் பின் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அங்கு சென்று புதிய தளத்தை திறந்து வைத்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வு செய்தியாளர் குறிப்பிடுகின்றார். வன்னியிலிருந்து விமானம் மூலம் மக்கள் கொழும்புக்கு போகலாம் எனச் சொன்ன காலத்தில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது சனாதிபதித் தேர்தலின் பின்பு ஜனாதிபதியாகப்பதவி ஏற்ற பின் தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தையும் ராஜபக்ஸ இரணைமடுப்பிரதேசத்தில் நடத்தி இருந்ததையும் இங்கு நினைவுகூரலாம்.

இப்போ இரணைமடுக் குளத்தில் நீரின் அளவு 7கன அடிக்கு 2 அங்குலம் குறைவாகவே இருக்கிறது. இந்த நீர் குளத்தின் மிகத்தாழ்வான பகுதியில் இருப்பதால் இதனை விவசாய நிலங்களுக்கு வழங்க முடியாது. எஞ்சியுள்ள நீர் அங்கு வாழும் மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கும் கால்நடைகள் அருந்துவதற்கும்தான் பயன்படுத்தப்படுகின்றது.

இரணை மடுக்குளத்தினை நம்பிய விவசாயிகளின் நிலமை குறித்து விவசாயி ஒருவர் பின்வருமாறு கூறுகிறார் “இப்ப கிளிநோச்சியில் கிட்டத்தட்ட வயல்கள் குடலை என்று சொல்லப்படுகின்ற நிலைமைக்கும், பயிர்கள் கருகிப் போகின்ற நிலைமைக்கும் சென்றுவிட்டன. எல்லா வயல்களிலும் குடலை ஏற்பட்டிருக்கிறது. குடலையை நெல்மணிகள் மேற்கொண்டு வளரக்கூடிய பால்வடிக்கின்ற பருவம் என்று சொல்லுவார்கள். அந்த பால்பிடிச்ச பருவத்தோடையே வயல்கள் நீரின்றி வறண்டு போய்விட்டன. அனுமதிக்கப்பட்ட பயிர்செய் நிலங்களில் 80 வீதமான நிலங்கள் இம்முறை அழிந்து போயின. இந்தமுறை சிறுபோகத்திற்கென நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 8600 ஏக்கர் (8000 என்றும் சொல்லப்படுகிறது) அனுமதிக்கப்பட்டது. ஆனால் எங்கட விவசாயிகளும் அரசியல் செல்வாக்குகளோடு நின்றவர்களும் என்ன செய்தார்கள் என்றால் அதிகாரிகளின் விதிகளை மீறி கிட்டத்தட்ட 2000 ஏக்கர் மேலதிகமாக விதைத்திருக்கினம். மேலதிகமாக விதைத்தவர்களில் அரைவாசிக்கு மேலானோர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்களே. தனக்கு பங்கு தரப்படவில்லை எனச் சொல்லிச் செல்வாக்கைப்பாவித்து அரசாங்கத்தரப்பிடம் சென்று அவர்கள் தரும் சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றால் விதிகளை மீறிப் பயிர்செய்ய திட்டக்குழு சீட்டில் உள்ளபடி பங்குகளை வழங்கும். அரசியற் செல்வாக்கென்பதால் திட்டக்குழுப் பொறியிலாளராலும் ஒன்றும் செய்யேலாது. கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். அது தவிர விவசாயப் பொறியிலாளர்கள் உத்தியோகத்தர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆட்களும் கிட்டத்தட்ட 200,அல்லது 300 ஏக்கர்கள் நிலத்தை தமது சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி விதைத்திருக்கினம். ஆக 1000 ஏக்கருக்கும் குறைவான வயல்களிலேயே இந்தக் கள்ள விதைப்பைச் சாதாரண சனம் செய்திருக்கு.

Iranai%20madu%201.jpg

புலிகளின் காலத்துக்கு முன்னரும் புலிகளின் காலத்திலும் அதன் பின்னரும் இந்தக்கள்ள விதைப்பு நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 3000 ஏக்கர்களுக்கு மேலாக கள்ளவிதைப்பு என்று சொல்லப்படுகின்ற விடயம் நடந்தே தீருகின்றது.

ஆனாலும் தேக்கப்படும் நீரின் அளவு 34 ஆக இருப்பதாலும் சரியான நீர்முகாமைத்துவம் செய்யக் கூடிய அனுபவங்களோடும் அறிவோடும் பொறியியலாளர்கள் இருந்ததாலும் கள்ளவிதைப்புக்களும் கூட என்றும் கருகியதில்லை. அவை வெற்றி கொள்ளப்பட்டன.

இப்போது புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் 60 வருட 40 வருட விவசாயிகளின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பின்னடிக்கின்றார்கள். உண்மையில் விவசாய அமைப்புக்களின் கூட்டங்கள் நடைபெறுகையில் அதில் பங்கு பற்றி விவசாயிகள் சொன்னவற்றைக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. கிளிநொச்சி மாவட்டத்தில் திட்டக்குழுக்களின் தலைவரும் பயிர்ச் செய்கைக் குழுவினுடைய தலைவருமாக ஒரே ஒரு நீர்ப்பாசனப் பொறியிலாளர்தான் இருக்கின்றார்.

முந்தித் திட்டக்குழுவிற்கு ஒருவரும் பயிர்ச்செய்கைக்குழுவிற்கு இன்னொருவரும் தலைவராக இருப்பார்கள். அப்படி இருக்கும் போது திட்டக்குழுவினுடைய நடவடிக்கைகளுக்கும் பயிர்ச் செய்கைக் குழுக்களின் நடவடிக்கைளுக்கும் இடையே பரஸ்பர அழுத்தங்களும் ஊடாட்டங்களும் இருக்கும். இதனால் தீர்மானங்கள் ஒரு சமநிலையில் எடுக்கப்பட்ட காலம் இருந்தது. இப்ப மேற்குறித்த இரண்டு குழுக்களுக்குமான தலைமைத்துவத்தை அரசாங்கம் தான் நேரடியாகக் கையகப்படுத்திக் கையாள்வதற்காக ஒரே பொறியலாளரிடம் கொடுத்திருப்பதால் இரண்டு முகாமைத்துவத்தையும் ஒரே ஆளே செய்வதால் எதேச்சாதிகாரமான தன்மை ஏற்பட்டு இருக்குது. இதுவும் இந்த முறை விவசாயிகளை பாதித்திருக்கின்றது.

ஆனால் இரணைமடுக் குளத்திற்கு உரிய நீரை முழுமையாக சேகரித்திருந்தால் நிச்சயமாக இந்த அழிவை தடுத்திருக்க முடியும். அந்த 7 அடி நீரும் இரணைமடுக்குளத்தில் தேக்கப்பட்டிருந்தால் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டேயிருக்காது. படையினரின் அழுத்தத்தால் நீரைத் திறந்து விட்டதுதான் மிகப் பெரிய பிரச்சினை. அதனைப் பற்றி இவ்வளவு விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்திலையும் அதனது உண்மைத் தன்மை பற்றி சொல்வதற்கு அரசாங்க அதிகாரிகளோ நீர்ப்பாசன பொறியியலாளர்களோ தயாராக இல்லை. அவர்களால் சொல்லவும் ஏலாது.

இந்த நிலைமைக்கு வறட்சி என்பதனைக் காரணமாகக் காட்ட முடியாது. இதை விடக் கொடுமையான வரட்சியை நாங்கள் கண்டிருக்கிறோம். வரட்சி நிவாரண அரிசி கொடுத்த காலம் கூட கிளிநொச்சியில் இருந்தது. நீர்நிலைகள் வற்றிக் குடங்களோடு மக்கள் நீருக்கு அலைகின்ற நிலைமை பல கிராமங்களில் முன்னர் சில தடவைகள் இருந்தது. அந்தளவு வறட்சி இப்ப இல்லை. பூநகரியில் வரட்சி ஏற்படுவது வழமையான நிலைமை. கிளிநொச்சியில் அந்த நிலைமைகள் இல்லை. இன்றைக்கும் வாய்க்காலில் நீர் ஓடுதுதான். அது வயல்நிலத்திற்குப் போதுமானதாக இல்லையே தவிர நனைக்கிறதுக்குரியதாக இருக்குது.

Iranai%20madu%207a.jpg

இரணைமடுப்பக்கத்தில் எல்லா இடத்திலும் வாட்டர்பம்ப் போட்டிருக்குது. கிளிநொச்சியில் போற வாய்க்கால்கள் நீட்டுக்கும் வாட்டர்பம்ப் போட்டிருக்குது. வாய்க்காலில் வாற நீர் வயலிற்கு ஏறறக்கூடிய அளவிற்கு காணாது என்ற படியால் வாட்டர்பம்ப் போட்டு இறைக்கிறார்கள். பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இறைக்கிறார்கள்.

இரண்டு கிழமைக்கு முன்பாககனகாம்பிகை அம்மன் கோயிலில் நீர் வேணுமென்று ஒரு யாகம் இடம்பெற்றது. அரச அதிகாரிகள், விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகள் எல்லாம் சேர்ந்து நடத்தியது. இது குறித்து கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்களின் தலைவர் சிவப்பிரகாசம் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிட்டு இருந்தார். அதில் அவர் வறட்சி நீங்கி இரணைமடுத் தாய்க்கு மழை பொழிய வேணுமென்பதற்காக அந்த யாகம் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார். அதன் போது ஒருவர் கேட்டார் ஏன் ஐயா இரணைமடுக்குளத்தில் நீர் இல்லை என்று . அதற்கு அவர் சொன்னார். அதற்குரிய காரணங்களை நாங்கள் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றோம் எதிர்காலங்களில் அவை வெளிவரலாம். அதுபற்றி இப்ப கேட்க வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார்.

இது குறித்து என்னுடன் பேசிய இன்னுமொரு விவசாயி சொன்னார் “தம்பி! இங்கு நடப்பவற்றை முகம் காட்டிச் சொல்ல முடியாது. ஆனால் எனது அறிவுக்கு எட்டியவகையில் கிளிநொச்சியில் சிறுபோகத்தில் நீரின்றி விவசாயம் எரிந்தது என்பது இது தான் முதற் தடவை.”

Iranai%20madu%202b.jpg

ஆக விவசாயிகளிடமுள்ள முக்கியமான கேள்விகள் இவைதான்

வரட்சி என்பது ஏற்படும்போது மாவட்டத்தில் உள்ள எல்லா குளங்களுமே பாதிக்கப்படும் அப்போது அதன் கீழான விவசாயமும் பாதிக்கப்படும் ஆனால் மாவட்டத்தில் அவ்வாறு நடக்கவில்லையே புதுமுறிப்பு அக்கராயன் குளங்கள் போதுமான நீரை தற்போதும் கொண்டுள்ளனவே அதன் கீழான விவசாயமும் பாதிக்கப்படவில்லையே.

முக்கியமாக இரணைமடுக் குளத்தினை நம்பி விதைக்கப்பட்ட உருத்திரபுரம் பிரதசத்திற்கு தற்போது புதுமுறிப்பு குளத்திலிருந்து நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

புதுமுறிப்பு குளத்திற்கு உட்பட்ட நிலங்களுங்கு நீர் வழங்கி மேலதிகமாக தற்போது உருத்திரபுரத்திற்கும் வழங்கப்படுவதற்கு தேவையான நீரை அது கொண்டே இருக்கிறது.

இது இவ்வாறிருக்க வரட்சி எப்படித் தனியே இரணைமடு குளத்தினை மட்டும் பாதிக்கும்?

அடுத்து 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் முழுமையாக நீரை தேக்கும் அளவுக்கு பலமாக இருந்த அணைக்கட்டு எப்படி 2012 இல் திடீரெனப் பலவீனமானது?

மற்றயது திட்டமிடப்பட்டதுக்கு மேலதிகமாக கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கள்ளவிதைப்புக்களும் சட்டவிரோத நீரினை பெறுவதும் இடம்பெற்று வருகிறது அப்படியிருக்க இந்த தடவை மாத்திரம் ஏன் அதனை ஒரு முக்கிய காரணமாகக் கூறுகின்றார்கள்?

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மற்றைய எல்லா குளங்களின் கீழான நெற்செய்கையும் பாதிக்கப்படாது இருக்க ஏன் இரணைமடுகுளத்திற்கு மட்டும் இந்த நிலை?

நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட விவசாயிகளின் நியாயமான கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை இந்தப்பிரச்சனையுடன் தொடர்புபட்ட தமது மனச்சாட்சி மனிதாபிமானம் பொறுப்புணர்வு என்பனவற்றை சிலவேளை பயத்தினாலும் பலவேளைகளில் சொந்தப்பிழைப்புக்காகவும் தொலைத்த அனைவரும் குறிப்பாக தமது கடந்த காலங்களை மறந்த அனைத்துப்பிரமுகர்களும் அதிகாரிகளும் தரவேண்டுமென விவசாயிகளின் சார்பில் குளோபல் தமிழ் வேண்டுகிறது. அவ்வாறு அவர்கள் பதில் தந்தால் குளோபல் தமிழ் அதனைத் தொழில் சார் நேர்த்தியுடன் வெளியிடும் என உறுதி கூறுகிறோம்.

www.globaltamilnews.net

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.