Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை -அ.மார்க்ஸ்

Featured Replies

தமிழக ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை அ.மார்க்ஸ்

165876_368156066590457_438197110_n.jpg

டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், நான், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு இரண்டு நாள் முன்பு (ஆகஸ்ட் 3) சென்று வந்தோம். அவற்றில் ஒன்ரு விழுப்புரம் மாவட்டத்தையும் மற்ற இரண்டும் கடலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவை. நானும் சுகுமாரனும் ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று வருவது இது நான்காவது முறை, சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர்.

புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்கள் இவை. புத்துப்பட்டு முகாமில் 452 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்கள்) உள்ளன. குள்ளஞ்சாவடியில் 125 குடும்பங்கள் (414 பேர்கள்) உள்ளன. குறிஞ்சிப்பாடியில் 167 குடும்பங்கள் (530 பேர்கள்) உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த முகாம்கள் நான்கு. மற்ற இரண்டும் விருதாசலத்திலும் காட்டுமன்னார்குடியிலும் உள்ளன. இவை இரண்டிற்கும் நேற்றும் இன்றும் (ஆகஸ்ட் 4, 5) எங்கள் குழுவைச் சேர்ந்த கடலூர் பாபு சென்று வந்தார். விருதாசலம் முகாமில் 65 குடும்பங்கள் (239 பேர்கள்) உள்ளன. காட்டுமன்னார்குடியில் 74 குடும்பங்கள் (246 பேர்கள்) உள்ளன.

395889_368154886590575_1380882905_n.jpg

தமிழக அளவிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலைமை, இங்குள்ள மக்களின் அவல நிலை ஆகியன குறித்து எங்களின் முந்தைய அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளோம். தி.மு.க, அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முதலியன அதிகரிக்கப்பட்டதன் பின்னணியில் எங்களின் அறிக்கைகளுக்கும் ஒரு பங்குண்டு.

அகதிகள் முகாம் நிலைமைகளைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் குறைந்த பட்சம் மூன்று மட்டங்களில் வைக்கப்பட வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் மற்றும் மாவட்ட அளவில் இக் கோரிக்கைகள் அமைகின்றன. இவை தவிர குறிப்பான அந்த கிராம அளவிலுங் கூட கோரிக்கைகள் உள்ளன. எடுத்துக் காட்டாக தேசிய அளவில் ஒரு அகதிகள் கொள்கையை (National Policy on Refugees) உருவாக்குதல், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை (dual citizenship) வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நாம் மத்திய அரசை நோக்கி வைக்க வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்துதல், இட ஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றிற்கு நாம் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். உதவிகளை வினியோகிப்பதில் உள்ள குறைபாடுகள் முதலானவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகவேண்டும்.

மைய அரசை நோக்கி வைக்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. அகதி உரிமைகளை அங்கீகரிப்பதில் மைய அரசு இம்மியும் முன்னே நகரவில்லை. ஈழ அகதிகளுக்கு மாநில அளவில் அளிக்கும் உதவிகள் முதலானவற்றை முந்திய அரசும் இந்த அரசும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாநில அரசு அளிக்கும் உதவித் தொகையை ஈழ அகதிகளுக்கும் நீட்டித்து ஜெயலலிதா அரசு ஆணை வழங்கியுள்ளது. உயர் கல்வியில் இடஒதுக்கீடு குறித்தும் இப்போது ஒரு ஆணை இடப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.

ஆனால் இவை யாவும் யானைப் பசிக்குச் சோளப் பொறி போடுவது போலத்தான் என்பதை எங்களின் முந்தைய அறிக்கைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்ளலாம். பத்தடிக்குப் பத்தடி (10’*10’) என்கிற அளவில் தார்ப்பாய்க் கூரைகளுடன் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் இன்று தகர அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் காட்சியளிக்கின்றன. வெயில் நேரத்தில் ஐந்து நிமிடங்கள் கூட உள்ளே யாரும் இருக்க இயலாது. அருகில் உள்ள படங்களைப் பார்த்தால் யாரும் இதை விளங்கிக் கொள்ள இயலும்.

100 சதுர அடியில் ஒரு குடும்பம் வசிப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் ஒவ்வொரு குடும்பமும் சொந்தச் செலவில் முன்னே பின்னே சற்று இழுத்துக் கட்டியுள்ளனர். தீ விபத்து, சுனாமி, தாணே புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கூரைகளை இவ்வீடுகள் இழந்தபோது அரசு புதிய கூரைகளை வழங்கியுள்ளது. அரசு கட்டிக் கொடுத்த 100 ச.அடிக்கு மட்டுமே இக் கூரைகள் வழங்கப்பட்டுள்ளன. நீட்டிக் கட்டிய பகுதிகள் கூரை இல்லமலும், அல்லது கீற்றுக்கள், தார்பாலின்கள் ஆகியவற்றாலும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

ஆஃபர் (OFFER), அட்ரா (ADRA), ஜே.ஆர்.எஸ் (JRS) முதலான தொண்டு நிறுவனங்கள் சில முகம்களில் கூரை வேய்வதற்கு உதவியுள்ளன. காட்டுமன்னார்குடியில் மட்டும் தொண்டு நிறுவன உதவிகளுடன் 100ச.அடிக்கு கான்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி முகாமைத் தத்து எடுத்துள்ள ஜூனியர் விகடன் இதழ் குழந்தைகளுக்கான பாலவாடியைக் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தப் போகிறார்களாம். இப்படி பத்திரிகைகள், வங்கிகள், அருகொலுல்ள தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழகத்தில் உள்ள 110 முகாம்களையும் தத்து எடுத்துக் கொண்டால் கூட ஓரளவு நிலைமை சீராகும் எனத் தோன்றியது.

சென்ற முறை நாங்கள் சென்று வந்தபோது பார்த்ததை விட இம்முறை ஓரளவு தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கழிப்பறைகள் பல உடைந்தும் தண்ணீர் இல்லமலும் காட்சி அளிக்கின்றன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் உள்ள பாலவாடியில் இருக்கும் குழந்தைகள் சுற்றியுள்ள திறந்த வெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வசதியும் இல்லை.

குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாயும், அடுத்துள்ள பெரியவர்களுக்குத் தலா 750 ரூபாயும், பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்குத் தலா 400 ரூபாயும் தற்போது வழங்கப்படுகிறது. குள்ளஞ்சாவடி முகாமில் கடந்த சில மாதங்களாக இருபது தேதிக்கு மேல்தான் இந்தத் தொகை வழங்கப் படுகிறதாம். இது குறித்துப் புகார் செய்யப்பட்டபோது போதிய அலுவலர்கள் இல்லாததே தாமதத்திற்குக் காரணம் எனப் பதில் வந்துள்ளது. இப்படியான ஒரு தாமதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் ஏற்படுமா? ஏற்பட்டால் எத்தகைய எதிர்வினைகள் ஏற்படும்? ஆனால் இந்த ஏதிலியர்கள் தமது உரிமைகளுக்காக எந்தத் தீவிர எதிர்வினைகளையும் காட்ட இயலாது. அவர்களால் முடிந்தது நம்மைப் போன்றவர்களிடம் முறையிடுவது மட்டுமே.

குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இன்னொரு பரிதாபமான நிலையையும் கண்டோம்.. முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை முதலானவை கடந்த மூன்று மாதங்களாகக் கொடுக்கப்படவில்லையாம். குள்ளஞ்சாவடி முகாமில் மட்டும் சுமார் 38 பேர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர். “ போய்க் கேட்டால் கந்தோர் கந்தோராக அலைய வைக்கிறார்கள். எங்களைப் போன்ற கிழவிகளுக்குக் கடனும் யாரும் தரமாட்டாங்க. நாங்க எப்டி அய்யா சாப்பிடறது?” என்று புலம்பினார் ஒரு மூதாட்டி.

இந்த முகாம்கள் தொடங்கப்பட்டபோது போடப்பட்ட மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படவே இல்லை. முறையாகக் கம்பம் நட்டு மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு வினியோகிக்கப் படாமல் வெறுமனே ஒயர்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை குரிஞ்சிப்பாடியில் பார்த்தோம். தாணே புயலுக்குப் பின் தார்பாய்களும், கூரைகளும் அகற்றப்பட்டு தகரக் கூரைகள் போடப்பட்டுள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது குரித்த கவலையை மக்கள் வெளிப்படுத்தினர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு முகாமும் ஒரு கிராமம் அளவு மக்கள் தொகையைக் கொண்ட போதிலும் முறையான சாலை வசதிகள் எந்த முகாம்களிலும் கிடையாது. கழிவு நீர் வெளியேறும் வசதியும் கிடையாது. குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி முதலிய முகாம்கள் சரியான களிமண் தரையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் உள்ளே நடக்க இயலாது. அதேபோல பல இடங்களில் முகாம்களை ஒட்டித் தனியார் சாகுபடி நிலங்கள் அமைந்துள்ளன. இது பாதுகாப்பின்மைக்கும் பாம்பு முதலியன வருவதற்கும் காரணமாகினறது. இத்தகைய இடங்களில் அவசியம் காம்பவுண்ட் சுவர்கள் எழுப்பப்பட வேண்டும்..

கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் இருந்த சுடுகாட்டுப் பிரச்சினை குறித்துச் சென்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள அந்த முகாமில் இறக்கும் கிறிஸ்தவர்களைப் புதைக்க அங்குள்ள பாதிரியார் தங்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் இடம் தருகிறாராம். மற்றவர்களைப் புதைக்க குழந்தைகள் பயிலும்

304717_368155223257208_1899992378_a.jpg

பால்வாடிக்கருகில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு மத்தியில் இப்படியான ஒரு சிறு இடத்தை ஒதுக்க நமது அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? சிறிய இடமாகையால் குழி தோண்டும்போது பழைய உடல்களின் சிதைந்த எலும்புகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதைக்க வேண்டியுள்ளதாம்.

முந்தைய அரிக்கைகளில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய பிரச்சினை இன்னும் தொடர்கிறது. முப்பதாண்டுகளாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் சில இப்போது இரண்டு குடும்பங்களாகியுள்ளன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் மட்டும் இவ்வாறு 125 புதிய குடும்பங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்கு வீடுகள் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இந்த தாலுக்காவிலேயே இடம் கிடையாது, நீங்களே ஏதாவது இடம் பார்த்துச் சொல்லுங்கள் என்கிறார்களாம். எத்தனை பொறுப்பற்ற பதில் பாருங்கள். எந்த அடிப்படையில் அவர்கள் புதிய இடத்தைக் கண்டுபிடிக்க இயலும். உரிய ஆவணங்களைக் கையில் வைத்துள்ள வருவாய்த் துறையின் பொறுப்பு அது, நமது கிராமங்களில் இந்த ஏதிலி மக்களுக்கு அளிக்க இடமே இல்லை என்பது எத்தனை பெரிய பொய்?

391448_368155363257194_1176142977_n.jpg

இன்னொரு புதிய பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது. போர் முடிந்ததனால் முகாம்களில் உள்ளவர்கள் திரும்பிப் போக ஐ.நா.அகதிகள் ஆணையம் சில உதவிகளைச் செய்கிறது. விமான டிக்கட், சிறு உதவித் தொகை முதலியவற்றைத் தருகிறார்கள். மிகச் சில குடும்பங்கள் அவ்வாறு போயுள்ளன. இந்த முகாம் வாழ்வைக் காட்டிலும் அங்கே நிலமை மோசம் என்பதால் பெரிய அளவில் யாரும் போவதில்லை. ஒரு சில குடும்பங்களில் குடும்பத் தலைவர் அல்லது யாரேனும் ஒருவர் நிலைமையைப் பார்த்து வருவதற்கோ, விட்டுச் சென்ற வீடு முதலியவற்றின் கதி என்னாயிற்று என்று பார்ப்பதற்கோ நாடு திரும்புகின்றனர். போர்ச் சூழலில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் இவர்கள். திரும்பிச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால். இங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அகதிகள் அட்டையிலிருந்து அவர்களின் பெயரை நீக்குவதை ஒரு விதியாக வைத்துள்ளது இந்திய அரசு. இப்படிச் சென்றவர்கள் வேலை முடிந்த பின்போ, அல்லது அங்கு இருக்க முடியாமலோ, அல்லது இங்கே படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதற்கோ திரும்பி வந்தால் அவர்களுக்கு மீண்டும் அகதி அட்டையில் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் அகதி உரிமைகள், உதவித் தொகைகள் எல்லாம் ரத்தாவதை விடப் பெரிய கொடுமை என்னவென்றால் அவர்களை முகாம்களில் உள்ள அவர்களின் குடும்பத்தோடு வாழ்வதற்கும் நமது ‘கியூ’ பிரிவு போலீசார் அனுமதிப்பதில்லை. குள்ளஞ்சாவடியில் உள்ள இப்படியான குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்கள் பரிதாபகரமாக இது குறித்து முறையிட்டனர்.

526965_368156416590422_1011172374_n.jpg

ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கொஞ்சம் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ‘கியூ’ பிரிவுப் போலீசின் கண்காணிப்பும் கெடுபிடிகளும் கொஞ்சம் குறைந்துள்ளன. போர் முடிந்துள்ளது இதற்கொரு காரணம். ஆனால் அதே காரணத்தை முன்வைத்துச் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமை மட்டும் கலைப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. முகாம்களை விட்டு வெளியே செல்லும்போது அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து விட்டுப் போனால் போதுமாம். ஆனாலும் பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வரும்போது அந்ச்த நாட்களில் யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டாமென ‘கியூ’ பிரிவுப் போலீஸ் வந்து எச்சரித்துச் செல்வது தொடர்கிறது.

562850_368155643257166_507706297_a.jpg

வேறென்ன பிரச்சினை என்று கேட்ட பொழுது குறிஞ்சிப்பாடி முகாம் தலைவர் குணரட்ணம் சிரித்துக் கொண்டே சொன்னார்: “எங்கள் இளைஞர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதானவர்கள் எப்படியோ இந்த வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். குறைந்தபட்சம் குடியுரிமை கூட இல்லாமல் இங்கே வாழ்வதை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். வெளி நாட்டில் மூன்றாண்டுகளில் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா போகலாம் என்கிற ஆசை வார்த்தைகளில் மயங்கி எங்கள் இளைஞர்கள் நிறையப் பணத்தையும் இழந்து பிடிபடவும் செய்கிறார்கள்” என்றார்.

எங்களை மிகவும் உறுத்திய விஷயம் என்னவெனில் நாங்கள் சென்று பார்த்த அத்தனை முகாம்களிலும் அவ்வாளவு பேர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திய அரசு நன்றாக வைத்துள்ளது என்று சொன்னதுதான். ஆனால் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்கவும், பார்க்கப் பார்க்கவும்தான் எத்தனை அவல வாழ்வை அவர்கள் வாழ்கிறார்க்ள் என்பது நமக்குத் தெரிகிறது. முன்னால் இருந்த தார்ப்பாய்க் கூரையை விட தற்போதுள்ள தகரக் கூரையை அவர்கள் பெரிதென நம்பும் மனநிலையில் உள்ளனர். என்ன இருந்தாலும் நாம் அகதிகள். எந்த உரிமையும் இல்லாதவர்கள். நமக்கு இதுவே அதிகம் என்பது போன்ற மன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஒரு வேளை பிரச்சினை இல்லாமலிருந்து நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா என்று கீழ்ப்புத்துப்பட்டு முகாமிலிருந்த வீரேந்திராவைக் கேட்டார் சத்யா. அதற்கான பதில் எதையும் வீரேந்திராவால் முறையாகச் சொல்ல இயலவில்லை. இப்படியான ஒரு hypothetical question ஐ அவர் எதிர் கொள்ளத் தயாராக இல்லாததை நாங்கள் புரிந்து கொண்டோம்.

அகதி வாழ்வை அனுபவிக்கும் அவலம் நேராதிருந்தால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே நாங்கள் நகரத் தொடங்கியபோது, ஒரு பேண் ஓடி வந்து அவசரமாக எங்களை வீட்டுக்குள் அழைத்தார். எட்டிப் பார்த்தோம். கட்டிலில் படுத்த படுக்கையாய் ‘கோமா’ நிலையில் கிடந்தார் ஒருவர். அவர் விஜயசேகரன், 43 வயது. எட்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்றபோது இரு சக்கர வாகனம் ஒன்று மோதித் தலையில் அடிபட்டு வீழ்ந்துள்ளார். கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அவரை மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

ஆஃபர் தொண்டு நிறுவனம் இந்தக் கட்டிலையும் மெத்தையையும் வாங்கித் தந்துள்ளது. அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்குப் போவதில்லை. ஆக இப்போது வீட்டில் இருவருக்கு வேலை இல்லை. 16 வயது மகன் விஜயராஜைக் கூலி வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஸ்வரி. விஜயராஜ் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் கொஞ்சக் காசு + அரசு அக் குடும்பத்துக்கு அளிக்கும் 2500ரூபாய், இதை வைத்துக் கொண்டுதான் ராஜேஸ்வரி, கோமாவில் கிடக்கும் கணவருக்கு வைத்தியம் செய்தாக வேண்டும். கண்களில் நீர் வழிய ஒரு பையிலிருந்த காகிதங்களைக் கொட்டி, உதவிக்காக அவர் யார் யாருக்கோ எழுதிய கடிதங்களை அள்ளி எங்கள் முன் காட்டினார். அகதி வாழ்வின் கொடுமை இதுதான். மோதிவிட்டுப் போனவரிடமும் நீதி கேட்க முடியாது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேன்டும் என வற்புறுத்தவும் முடியாது.

  • தொடங்கியவர்

கோடை விடுமுறை - புலம் பெயர்ந்த எம்மவரின் சுற்றுலாக்களுக்கும்(இலங்கை உட்பட ) ,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கும் எவ்வித குறைகளும் இல்லை .

டொராண்டோவில் ஒவ்வொரு சனி ,ஞாயிறும் ஏதாவது ஒரு கலை நிகழ்வு .அதுவும் பெரும்பாலும் தென்னிந்திய கலைஞர்களை கொண்டுவந்து நடக்கின்றது .நேற்றிரவும் எனது வீட்டிற்கு அருகில் ஐயப்பன் கோவில் நிர்வாகம் கோவிலுக்கு முன் உள்ள திறந்தவெளியில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டுவந்து நிகழ்சிகள் நடாத்தினார்கள் .

இவை எவையும் நடக்க கூடாது என்று நான் சொல்லவில்லை .வருடம் அரைவாசிக்கு மேல் குளிரில் வேலை வேலை என்று அலையும் எம்மவருக்கு இது கட்டாயம் தேவை .

அதே போல் நாட்டிலும் போரால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் எம்மவருக்கும் ஆறுதல்கள் தேவை ,அதை மறுதலிக்கும் புலம் பெயர்ந்தவர்களைத்தான் என்னால் ஏற்க முடியாது .

இவை எல்லாம் இப்படி இருக்க இன்றும் எல்லோராலும் கைவிடப்பட்ட எமது அகதிகள் நிலை பற்றி ஒருவர் கட்டுரை எழுதின்றார் என்றால் அதை பாராட்டுவதை விட்டு அவர் யார் சார்ந்தவர் என்று மூக்கு கண்ணாடி வைத்து பிழை தேடுபவர்களை என்னவென்று சொல்லவது .ஏதோ இவர்கள் இல்லாவிட்டால் தாங்கள் நாடு பிடித்து விடுவார்கள் என்பது மாதிரி .

இதில் மிக பெரிய வேடிக்கை ,எம்மவர் இலங்கை ,இந்தியாவிற்கு சுற்றுலா போகும் எவருமே இந்த அகதிகளை போய் பார்த்ததாக சரித்திரமே இல்லை ,யாழில் வந்து வெட்டி விழுத்தும் வித்துவான்கள் உட்பட .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.