Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளியறையில் பரமசிவன்!

Featured Replies

[size=1]

annadurai_image.jpg_8.jpg[size=4]"மீனாட்சி! எதற்காக இப்படிக் கோபங் கொள்கிறாய்?

காமாட்சி! நான் கொஞ்சுவது உன் காதிலே விழவில்லையா?

நீலாயதாட்சி! நீ இப்படி இருந்தால் என் மனம் நிம்மதியடையுமா?

அகிலாண்டேஸ்வரி! நான் உனக்குத் தவறென்ன செய்தேன்!

அம்பிகே இப்படிப்பார், தியாகவல்லி! திரும்பிப்பார், திரிபுரசுந்தரி........” என்று சரசமாடும் சந்தம் கேட்டது.[/size][/size] [size=1]

[size=4]இது யார், அர்த்தராத்திரியிலே, அனேக ஸ்திரிகளின் பெயரை அழைப்பது என்று பார்த்தேன், ஆலவாயப்பன், சொக்கன், சிவபெருமானிருக்கிறாரே, அவர் தமது தர்மபத்தினியுடன் பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். அவருக்கும் அம்மைக்கும் ஆயிரக் கணக்கிலே நாமதேயம் உண்டல்லவா! ஆலயத்துக்கு ஆலயம், வேறுவேறு பெயரல்லவா! ஆகவேதான் அவர் காமாட்சி! மீனாட்சி! நீலாயதாட்சி! அம்பிகே! திரிபுரசுந்தரி! என்று அனேக விதமான பெயர்கூறி அழைத்தார்.

அம்மையாரோ, வாயை அசைக்கவில்லை” என்று கூறினான் வீரன். [/size][/size] [size=1]

[size=4]”போதுமப்பா உன் புதுப்புரளி நிறுத்து. எனக்கு வேறு வேலை இருக்கிறது. உன் கதையைக் கேட்க நேரமில்லை” என்று நான் சொன்னேன். வீரனா விடுவான்! “என் கதையைக் கேட்க மனமிருக்குமா உனக்கு! நான் என்ன “சர்” பட்டம் பெற்றவனா, மிட்டாமிராசு உடையவனா, பட்டம் தரித்த புலவனா, பாவாணனா புராணிகனா, என்னிடம் உனக்கு அலட்சியந்தான் இருக்கும்.” என்று கோபித்துக் கொண்டான். ”கோபப்படாதே வீரா! நீ சொல்ல விரும்புவதோ ஏதோ ஒரு புதுப்புராணம்! நாட்டிலே, நானாவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பலருடைய அபிப்பிராயங்கள் வெளியிடப்படுகின்றன. சர்க்காரின் போக்கும் அதனைச் சாடுவோரின் போக்கும், காங்கிரசின் நிலையும், லீக்-கின் நிலையும், திராவிடரின் போக்கும், மாணவர் எழுச்சியும் கலை வளர்ச்சியும் ரசிகர்களின் உள்ள நெகிழ்ச்சியுமேனப் பல்வேறு விஷயங்களிருக்க, நீ எதையோ இழுக்கிறாயே” என்று நான் சமாதானங் கூறிவிட்டுச் சாந்தமோ திருப்தியோ அடையாத வீரனுக்கு உண்மை நிகழ்ச்சியை உரைத்தால் உளம் மகிழுமெனக் கருதி, “கேள் வீரா, உண்மையாக நடைபெறும் சம்பவங்களைக் கவனிக்கமாட்டேன்கிறாயே. இத்தாலியிலே போர் நடக்கிறதல்லவா, அங்கே காசினோ என்ற களத்திலே நடந்த ஒரு அற்புதமான வீரசம்பவத்தைக் கேள், தமிழரின் புகழ் கடர்விட்டு விளங்குவதைப் பார். பீரங்கிகள் முழக்கமிடும் களம், துப்பாக்கிக் குண்டுகள் நெங்சைப் பிளக்கும் இடம். மூர்க்கத்தனமாக ஜெர்மனியர் தாக்கும் அந்தப் போர்க்களத்திலே, எதிரிகள் கரங்க வெடிகளை ஆங்காங்கு அமைத்து வைத்திருந்தனர். [/size][/size] [size=1]

[size=4]thiravida_nadu-11.jpgநேசநாட்டுப் படையினரின் ஒரு பிரிவினர் இந்தச் சுரங்க வெடிகளை அப்புறப்படுத்தும் அபாயகரமான வேலையிலே ஈடுபட்டனர். அச்சமயத்துலே, ஒருநாயக், சுரங்க வெடி ஒன்றின் மீது இடறவே, தீப்பிடித்தது. மறுவிநாடி குண்டு வெடிக்கும். அந்த இராணுவ உத்தியோகஸ்தரின் உடல் சுக்குநூறாகிவிடும். அவரோ அதைத் தெரிந்து கொள்ளவில்லை. மரணம் தன்னைத் தொட்டு இழுப்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. என்ன நடந்தது தெரியுமா! வீரா! பண்டைப் பெருமையுள்ள தமிழ் மகனொருவன், அங்கு இருந்தான்! கண்டான் காட்சியை! மிரண்டானில்லை. நமக்கென்னவென்று சும்மா இருக்கவில்லை. நாயக், விலகு, ஓடு, பிழை, சுரங்கவெடி! என்று கூவிடவுமில்லை. ஒருவிநாடியும் தாமதியாது பாய்ந்தான், குண்டின்மீது! அதனைக் கட்டிப்பிடித்தான், குண்டு வெடித்தது, அவன் உடல் சின்னாபின்னமாயிற்று. உயிரிழக்க இருந்த உத்யோகஸ்தன் தப்பினான். வீரன் மாண்டான், வெற்பென்று ஓங்கிற்று அவன்புகழ். தன்னுயிரைவிட்டேனும் மற்றொருவன் உயிரைக் காப்பாற்றும் தமிழ் பண்பு, ஆபத்து நேரத்திலே அஞ்சாநெஞ்சம் கொள்ளும் ஆண்மை, தமிழருக்கு உண்டு, என்பது காசினோ களத்திலே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தால் உலகுக்கு விளக்கப்பட்டது.[/size][/size] [size=1]

[size=4]வீரத்தியாகம் புரிந்த அவன், எங்கள் ஜில்லாவாசி! அதை எண்ணும்போது, புன்னகையும் கண்ணீரும் கலந்து வருகிறது. செங்கற்பட்டுக்கடுத்த வாலாஜாபாத் என்ற நகருக்குப் பக்கத்திலே உள்ள குக்கிராம வாசி, கடல் கடந்து சென்று, காசினோகளத்திலே தமிழ் மரபினை உலகுக்கு உணர்த்துவித்தான், அவன் பெயர் சுபேதார் சுப்பிரமணியம்.

எதிரியின் படைவரிசைக்குப் பின்புறம், விமானமூலமாகச் சிறுபடையை இறக்கி, எதிரியைத் தாக்கும் புதியதோர் போர்முறையைப் பர்மாப் போரிலே செய்து காட்டிய ஜெனரல் லிங்கேட் என்பவர், விமான விபத்தினால் இறந்து போனார். அவருடைய ஆற்றலையும் ஆண்மையையும், பரிதாபகரகான முடிவையும் உலகம் உரைத்திடுவது போலவே, சுபேதார் சுப்பிரமணியத்தின் வீரத்தியாகத்தைப் பற்றி வியந்துரைக்கிறது. வீரர் கோட்டத்தின் விளக்கு சுடர்விட்டெரிகிறது. இத்தகைய சுடரொளி கண்டு சுதந்திரதேவி, தனக்குரிய கோயில் இதுவே என்று பூரிப்பாளேயோழிய, சுபேதார் சுப்பிரமணியம் போன்ற தியாகிகளைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும், படிப்பதும், கேட்பதும், வீரத்தை, பண்பைத் தமிழரின் பெருமையை ஊட்டுமே! அதைவிடுத்து வீணரைப் பற்றிப் பேசுவானேன். பார்வதியும் பரமசிவனும் பாதிராத்திரி வேளையிலே, என்ன பேசிக்கொண்டால் நமக்கு என்னப்பா!” என்ற நான் கூறினேன். [/size][/size] [size=1]

[size=4]வீரன் சிலவிநாடி ஆழ்ந்த யோசனையிலே இருந்து விட்டு, “பரதா! நீ கூறிய சம்பவம் உண்மையிலேயே தமிழர்கள் யாவரும் பெருமையுடன் உலகை நோக்கி நின்று “உணரப்பா தமிழ் வீரத்தை!” என்றுரைக்கக் கூடிய வீரச்செயலே, அதற்கோர் ஆட்சேயணையுமில்லை. அவைபோன்ற வீரசம்பவங்களைக் கேட்டு நான் பெருமைக் கொள்ளாமலுமிருபதில்லை. கீர்த்துக்கணவாயிலே புகுந்த சுபேதார் சுப்பிரமணியத்தின் புகழ் தமிழகம் எங்கும் தெரியச் செய்வேன் இது உறுதி” என்று கூறினான். நானும் மகிழ்ந்தேன், மேலும் சில கூற எண்ணினேன்.[/size][/size] [size=1]

[size=4]anna-n-12.jpgவீரனோ, “என் கதையைக் கேள். பார்வதியிடம் பரமசிவன், இவ்வாறு பேசிடக் கேட்ட நான்......” என்று பழைய பல்லவியைத் தொடங்கினான், ”என்ன வீரா! பார்வதியும் பரமசிவனும் பேசுவதும், நீ பக்கத்திலே இருந்து கேட்பதும், இதுதானே விஷயம்? யார் இதை நம்புவார்கள்” என்று நான் குறுக்கிட்டேன். ஓடிவரும் வெள்ளத்தைத் தடுக்க ஒரு ஜான் கல்லைவைத்தால், வெள்ளம் நின்றுவிடுமா, வீரனா, என் குறுக்குப்பாலத்துக்கு அடங்குபவன், குரலைச்சரிப்படுத்திக் கொண்டு கூரத்தொடங்கினான். கேட்பது தவிர வேறு எனக்கு வழியில்லை! எதற்கும் இன்னொருமுறை முயற்சி செய்து பார்ப்போம் வீரனின் வாயை மூட என்று எண்ணி, ”வீரா! விஷயம் தெரியுமோ! ஜப்பானியர்கள் இம்பால் நகரருகே வந்துவிட்டனர். கோஷிமா என்ற ஊருக்கும் ஆபத்து. யுத்தம் நம்மை நெருங்கி விட்டது” என்று அரம்பித்தேன், வீரனின் கவனத்தைப் பரமசிவன் பார்வதியின் பள்ளியறையிலிருந்து, போர்ரக்களத்துக்கு, இழுத்துச் செல்வோமென்று, அவனோ அதே விஷயமாகத்தான் அவர்களும் பேசிக்கொண்டனர்” என்று என்னிடம் கூறினான்.[/size][/size] [size=1]

[size=4]”விசித்திரமாகத்தான் இருக்கிறது. பரமசிவனும் பார்வதியும், இதைப்பற்றியும் பேசினார்களா? நான் அவர்கள், தங்கள் திருப்பாவையை நாமிருக்கும் திக்குக்கே திருப்பக் காணோமே என்று வியாகூலப்பட்டேன்” என்று நான் பேசினேன், கேலியேலே வீரனுக்கு விருப்பமாயிற்றே என்பதற்காக, “பரதா! கேள் விஷயத்தை, கோபமாக இருந்த பார்வதியின், முகவாய்க் கட்டையைப் பிடித்தார் பரமசிவன், பிறகு ஏதோ செய்தார். கலகலவென அம்மையார் நகைத்திடவே, அப்பா! சிரிப்பு வர இவ்வளவு நேரமாயிற்றா! கோபம் ஒழிந்ததா?” என்று கொஞ்சுமொழி பேசினார், புலித்தோலாடையார்.[/size][/size] [size=1]

[size=4]பூவையாரோ, மீண்டும் முகத்தைப் பழையபடி வைத்துக் கொண்டு, “பெண்கள் கோபித்துக் கொண்டால் ஏதாவது பேசி, எதையாவது செய்து, பெண்களுக்குச் சிரிப்பு மூட்டிவிடுவதும், காரியத்தைச் சாதித்துக் கொள்வதும், ஆண்களின் வழக்கந்தானே, அதற்கு நீர் தானே குரு!” என்று பரமசிவத்தைக் குத்தலாகக் கூறிவிட்டு, “என்ன கோபம்! ஏன் மனஸ்தாபம் என்று கேட்கிறீரே, ஏன் இராதுகோபம்? ஒரு மனைவியின் காதிலே, தனது கணவனைப் பற்றிப் பலபேர் தூஷித்தால், மனைவியின் மனம் புண்படாதா? உமக்கென்ன, உலகத்தார் என்ன வேண்டுமானாலும் உரைக்கட்டும் கவலையில்லை என்று இருக்கிறீர். என்னால் முடியவில்லையே” என்று கூறிவீட்டுக் கண்களைத் துடைத்துக் கொள்ளவே, கபாலி, கண்களை அகலத்திறந்து, “பார்வதி! யார் என்னைப்பற்றி இழித்தும் பழித்தும் பேசினார்கள்? சொல் சீக்கிரம், அவர்களைப் படுசூரணமாக்குகிறேன் என்று வெகுண்டுரைத்தார். [/size][/size] [size=1]

[size=4]sivan-11.jpg”நீரே, நேரடியாகப் பாரும் கண்ணால், உமது காதினால் கேளும் உம்மை யாரார் என்னென்ன கூறி நிந்திக்கிறார்கள் என்பதை” என்று கூறிக்காமாட்சி, பரமசிவத்தை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றிடவே, நானுமெல்ல, ஓசைப்படாமல், அவர்கள் கண்களுக்குத் தெரியாமல், மேல்மாடிக்குச் சென்றேன். பொலிவுடன் விளங்கிய பூரணச்சந்திரன், மாசுமருவற்ற வானத்திலே நட்சத்திரங்கள் பலசூழ இருக்கக்கண்ட பரமசிவன். “பிரியே! அதோ பார்! அழகிகள் பலர் புடைசூழ அரசிளங்குமரி உலவுவது போல சந்திரன் காட்சி அளிப்பதை. இந்த நேரத்திலே, நிலவொளியிலே, நீயும், நானும், யாரோ எதற்கோ நித்திப்பதைப்பற்றிப் பேசுவதைவிட.....” என்றுகூறி முடிப்பதற்குள், பார்வதியார், அதோபாரும், என்று ஒருகாட்சியைக் காட்டினார்.

பூலோகத்திலே, நானும் பார்த்தேன். பரமசிவனும் பார்த்தார்.!! பூலோகத்திலே எங்கோ ஓர் இடம் அது. மக்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டும், நீர்புரளும் கண்களும், பதறும் உடலும், திகில் தோய்ந்தமனமும் கொண்டவர்களாய், காடு மலை கடக்கக் கண்டேன். ‘ காமாட்சி! இது என்ன காட்சி” என்று கேட்டார் பரமசிவன்.

“காட்சியைக் கண்டிரா? சரி அவர்கள் பேசுவதைக் கேளும்” என்று அம்மையார் உரைத்தார். கோரமான அக்காட்சியைக் கண்ட, எனக்கு அவர்களின் வார்த்தையும் கேட்டது . ”அட ஆண்டவனே! உனக்குக் கண்ணில்லையா? உன் நெஞ்சம் கல்லா? இப்படி எங்களைத் தவிக்கவிடும் உனக்குத் தயாபரன் என்று பெயரா? உனக்குக் கோயில் கட்டிய கரங்களைக் கொண்டு இன்று என்ன செய்வது என்று தெரியாமல், பிசைந்து கொள்கிறோமே, உனக்குக் கருணையில்லையா? உன் கோயிலை வலம்வந்த கால்கள் இன்று காடுமேடு சுற்றி, உயிர்பிழைக்க ஒரு இடம் கிடைக்காதா என்று ஓடத்தானே பயன்படுகிறது. எங்கள் ஓலம் உன் செவிக்கு எட்டவில்லையா? உனக்குத் திருவிழாக்கள் நடத்திக் கொயில் வெடிச்சத்தைக் கேட்டு ஆனந்தித்த காதுகளிலே பீரங்கி வேட்டுச் சத்தம் விழுந்து துளைக்கிறதே, உமது மனம் இனகாதா? என்று அந்த மக்கள் கதறினர்.

யார் அவர்கள்? ஏன் அப்படி அழுகிறார்கள்? என்று கேட்கத் துடித்தேன். ஆனால் என்னை நானே அடக்கிக் கொண்டேன். நான் பேசினால் நான் இருப்பது தெரிந்துவிடுமே என்ற பயத்தால் நான் கேட்டறிய எண்ணியதை அறிந்தவர் போலப் பார்வதியார் மேலும் பேச ஆரம்பித்தார். ”அந்த இடம் இம்பால் நகரம்! கிராம மக்கள் ஜப்பானியரின் கரத்திலே சிக்கிச் சீரழியக்கூடாது என்பதற்காக, ஊரைவிட்டு, அகதிகளாகி இம்பாலை நோக்கி, இடர்மிகுந்து செல்கின்றனர். கண்ணில்லையா என்று உன்னைக் கேட்கின்றார். அதன் கருக்கம், குருடா நீ என்பது? மனம் இரும்பா என்று கேட்கின்றனர். [/size][/size] [size=1]

anna-n-3.jpg[size=4]நாதா! இதைப்போல மட்டுமல்ல, வங்காளத்திலே, பட்டினியால் மாண்ட பரிதாபத்துக்குரிய மக்கள். அதைப்போலவே, பழித்துப் பேசினார்கள். பஞ்சம் பிணி மிகுந்த பல்வேறு இடங்களிலே குருடன் ஈரமற்ற நெஞ்சினன், கொடுமை புரிபவன், ஏழைகளை ரட்சிக்காதவன், என்றெல்லாம், கணவனைப் பற்றிப்பிறர் பேசிடக் கேட்டால் மனைவியின் மனம், என்ன பாடுபடும், அதை உத்தேசித்தாவது, நீர், இந்த மக்களுக்கு ஏற்பட்ட அவதியைப் போக்கவேண்டாமா? முடியவில்லையானால், அதையாவது அவர்களிடம் சொல்லிவிட வேண்டாமா? கண்ணெடுத்துப் பாராமலும், காது கொடுத்துக் கேளாமலும், கைலாய வாசமும், கங்கையின் சல்லாபமும் மற்றச் சுகபோகமுமே போதும் என்றிருக்கலாமா?” என்று கேட்டார். [/size][/size] [size=1]

[size=4]அம்மையின் பேச்சு ஜயனுக்குக் கோபமுட்டும் என்று நினைத்தேன். சக்தியின் பேச்சு சிவனுக்குக் கோபமூட்டவில்லை. விஷயத்தைச் சாவதானமாக உலவிக்கொண்டே விளக்கினார். ”பார்வதி! பூலோகத்திற்கு நான் தரவேண்டியது அனைத்தும் தந்தாகிவிட்டது. செய்ய வேண்டியது அனைத்தையும் செய்தாகிவிட்டது. இனி என்னால் ஆவது ஒன்றுமில்லை” என்று கூறினார்.

பார்வதியார் வேகமாக அவர் பின் சென்று, தோளைப்பிடித்துத் குலுக்கி “பேஷ்! செய்ய வேண்டியதெல்லாம் செய்துவிட்டிரா? நன்றாக இருக்கிறது உமது நியாயம்? கேட்பாரில்லாததால், எதை வேண்டுமானால் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற துணிவு பிறந்து விட்டது உமக்கு” என்று கேட்டாள். என் மனதிலே அதேபோது அதே எண்ணந்தான் குதித்தது. [/size][/size] [size=1]

[size=4]சிவபெருமான் ”சிவகாமி! சீற்றத்தை விடு! நான் உலகைப்படைத்தேன்! உயிரைப் படைத்தேன்! உயிர்வாழ வகையும் படைத்தேன்! கவர்ச்சிமிக்க காடுகளைப் படைத்தேன், கனிமரச்சோலைகளைப் படைத்தேன், கானாறுகளைப் உண்டாக்கினேன், காற்றையும் நெருப்பையும் கடமையைச் செய்க என்று ஏவினேன். வற்றாத ஆறுகளையும் வளமுற்ற நிலத்தையும் வழங்கினேன். மக்களின் சுகபோகத்துக்கான் சகல பதார்த்தங்களையும் அளித்தேன். கடலைக் கடக்க கலமும் தந்தேன், கடலிலே முத்துக்களைப் படைத்தேன். அதைக் கணலவன் எடுத்தேகா வண்ணம், சுறாவையும் சுழல் அலையையும் அவைகட்குக் காவலாக்கினேன். தங்கத்தைப் படைத்தேன், அதைத் தாறுமாறாக உபயோகிக்காதிருக்க மறைத்தும் வைத்தேன், இவைகளை அறிய மக்களுக்கு அறிவும் அளித்தேன். வேறு என்ன தரமுடியும்? என்ன இருக்கிறது? இவ்வளவு தந்த எனக்கு அவர்கள் தந்தது என்ன?” என்று கேட்கலனார் பரமசிவன்.

”நாதா! இதென்ன கேள்வி” என்று நாம் யாரும் கேட்க எண்ணுவது போன்றே பார்வதியார் கேட்டார்கள். பரமன், “என்ன தந்தார்கள்?” என்று மீண்டும் கேட்டார், கோபத்துடன், பிறகு இந்த உரையாடல் நடந்தது.[/size][/size] [size=1]

poor-people-India-school-girl.jpg[size=4]”ஏன், அழகான ஆலயங்கள் தரவில்லை?”

”எனக்கா? கோயிலிலே குடிபுகுந்து, கபட நாடகமாடிக் காசு பறிக்கும் கள்ளர்களுக்கா? யாருக்குக் காமாட்சி ஆலயம்? எனக்கா? எனக்குக் குடியிடுக்க இடமா கேட்டேன்? நான் கேட்டது அதுவல்லவே. மக்களின் மனமன்றி எனக்குக் கோயில் வேறு வேண்டுமே?”:

அபிஷேகமும், ஆராதனையும் செய்கின்றனரே உமக்கு”

”எனக்கா?” ஏமாளிகள் காசிலே, பாடுபடாதவன் வாழ நடத்தும் கோமாளிக் கூத்தல்லவா அது?”

”தேரும் திருவிழாவும் ஊருக்கு ஊர் நடத்துகிறார்கள் உன்னைப் பெருமைப்படுத்த”?

”என்னைப் பெருமைப்படுத்தவா, குழலூதுவோனையும், குறுநகை புரிவோனையும், இசைவாணனையும் இன்பவல்லிகளையும் பெருமைப்படுத்தவா.”

”ஏராளமான பணத்தை உனக்கு ஆபரண அலங்காராதிகளுக்குச் செலவிடுகின்றனர்.”

அந்தச் செலவு எனக்காகவா செய்யப்படுகிறது? நான் மண்ணோடு மண்ணாகப் படைத்த பொன்னைக் கண்டா பூரிப்படைவேன். தேவி! பாம்பை அணிபவன் என்று கூறும் அதே பாமரர் பவுன்களைச் செலவிடுவது எனக்காகவென்றா எண்ணுகிறாய், என்று தன்னைக் காட்டிக் கொள்வதன் மூலம் பாமரரை அடிமை கொள்ளலாம் என்று நினைக்கும் காசு படைத்தவனின் கபட நாடகமல்லவா அது”[/size][/size] [size=1]

[size=4]”பாமாலை சூட்டினரே”

”தங்கள் புலமையைக் காட்ட”

”பூமாலை சூட்டுகின்றனரே”

“பூவையருக்குப் பிரியத்துடன் பூஜாரி வழங்க, எனக்கல்ல”

”எதற்கும் நீரே துணை என்று கூறிப் போற்றுகின்றனரே”

”தன்னம்பிக்கையைத் தற்குறிகள் இழந்துவிட்டால், தலையாட்டிப் பொம்மைகளாகிவிடுவர். பிறகு நமது தர்பார் நடத்தச் செளகரியமாக இருக்குமென்று தன்னலக்காரர்கள் புகுத்திய தத்துவமல்லவா அது. அது எப்படி என்னைப் போற்றுவதாகும்?””உன் அடிதொழுதார்க்கு உண்டு சுகம் என்று கூறிப் பூஜிக்கின்றனரே”

”சுயநலக்காரன், ஓய்வுநேரத்தில் சொல்வது அது. கள்ளமறியாச் சிந்தைக்காரன் பிறனுடைய சுயநலத்தால் ஏமாறும் போது பேசும் வாசகம். அது என்னைத் திருப்தி செய்யுமா?”

”நீ கோயில் கொண்டிருக்கும் ஸ்தலங்களுக்கெல்லாம் திரள்திராளகச் செல்கின்றனரே”

”மதியீனர்களின் மனமருள் அது. அதைத் துணைக் கொண்டு மந்தகாச வாழ்வு நடத்துகின்றனர் புரோகித வகுப்பார்”

“அர்ச்சகர்களையும் ஆலயப் பணிபாட்களையும் அமர்த்தியுள்ளனரே”

”அவர்கள் வாழ! என் தேவைக்காக அல்ல!”

”தேவ பூஜைக்கு என, கீதமொழிக் குயில்களையும் ஆடலழகிகளையும், ஆலயங்களிலே நியமித்துள்ளனரே”

”ஆள் சேர்க்க, எனக்குத் தொண்டுபுரிய அல்ல”

”மன்னாதி மன்னர்களையும் மண்டியிடவைக்கும் மகத்துவம் உள்ள மகேஸ்வரன் என்று கூறினரே”

”முடியுடை வேந்தரையே.. மதியுடைக் கயவர் மடக்கியது, அந்த மயக்கமொழி பேசித்தான்.

உரையாடல் முடிந்தது. பார்வதியாருக்குக் கேள்வி வரண்டு விட்டது. [/size][/size] [size=1]

poor-chennai.jpg[size=4]பரமசிவத்துக்கோ பேச்சு நிற்கவில்லை. ”பார்வதி! என்னைக் கல்லாக்கிச் செம்பாக்கினர் கயவர்கள், இவ்வளவு நலன்களைத் தந்த என்னைக் கல்லாக்கினார், செம்பாக்கினார் தகுமா அது? என்னைப் பற்றி அருவருக்கத்தக்க ஆபாசம் நிறைந்த கதைகளைக் காமக்கூத்துகளை எழுதி வைத்தனர்.அறிவுள்ளவரின் சிந்தனை என்னென்ன எண்ணுகிறது தெரியுமா?

அன்பே! நான் பக்தனிடம் சென்று அவன் மனையாட்டியை என் பின்னோடு அனுப்பச் சொன்னேனாம். எழுதலாமா, இது போலக் கதை. எழுதித் தொலைத்தார்களே, அறிவுவளர வளர, இத்தகைய ஆபாசக் கதைகள் வேண்டாமென்று ஒதுக்கி விடவேண்டாமா? நான் மற்றொரு பக்தனிடம் சென்று பிள்ளைக்கறி கேட்டேனாம்.

வேறார் பக்தனின் கண்களைப் பெயர்த்தேனாம். வில்லடி பட்டேனாம், கல்லடி பட்டேனாம், பிரம்பால் அடிபட்டேனாம், பன்றிகளை மந்திரிகளாக்கினேனாம், தாசிவீட்டுக்குத் தூது சென்றவனாம் நான், தேவி! கேள் இந்த அக்ரமத்தை. நான் சுந்தரன் என்ற பக்தனுக்காக தாசி வீட்டுக்குத் தூது சென்றேனாம், எழுதலாமா இதுபோன்ற கதைகளை? என்ன செய்வது, இப்படி என்னை நிந்திருக்கும் கயவர்களை? என் பெயரைக்கூறி மக்களை ஏய்க்கும் புல்லவர்களை”என்று பரமசிவன் கேட்டார்.

“என்ன செய்வதா? ஏன்? இழுத்து வந்து, ஆளுக்கு ஆறாறு மாதம் சுயமரியாதைப் பள்ளியிலே படிக்கச் சொல்வது தானே என்று சொல்லிவிடத்தான் வேண்டும். என்று தோன்றிற்று.

இதற்குள் பார்வதியார், “பிரபோ..! தங்கள் பேச்சைக் கேட்டபிறகு எனக்குப் பித்தம் தெளிந்தது. நீர் என்ன செய்வீர்? மக்கள் தங்களைத் தாங்களே பாழாக்கிக் கொள்கின்றனர், நம்மையும் இழிவாக்கி விட்டனர், மதிவளருவது தவிர அவர்கள் மீள வேறு மார்க்கம் இல்லை” என்று கூறிவிட்டு, நேரமாகிறது, தூக்கமும் வருகிறது” என்றார். அதே சமயத்திலே, “நேரமாகிறது எழுந்திரு என்றுகூறி, என் முதுகைத் தம்பி தட்டக்கண்டு, விழித்தேன், கைலாயத்தில் நடைபெற்ற உரையாடலைப்பற்றி கனவும் கலைந்தது, என்றான் வீரன்.[/size][/size] [size=1]

[size=4]“சரியான கனவுதான் கண்டாய்! இதைப்போய்ப் பெரிய பிரமாதமாகக் கூறிவந்துவிட்டாயே”என்று நான் கேலி செய்தேன்.”பரதா! கூறினது மட்டுமல்ல, இது இந்தக்கிழமை பத்திரிக்கையிலே வெளிவந்தாக வேண்டும்” என்று வற்புறுத்தினான் வீரன்.”உனக்கு வேறு வேலை கிடையாதுபோ! கனவிலே கைலாயம் சென்றானாம், பார்வதி பரமசிவன் பேசினதைக் கேட்டானாம் இதையேல்லாம் பத்திரிக்கையிலே போடுவதா? நல்ல வேலை என்று நான் மறுத்தேன். விட்டானே ஒரு வெடிகுண்டு, வீரன்!”.”அதுசரி, பரதா! நான் கனவு கண்டால், அது கவைக்கு உதவாது என்று கருதுவாய். இதுவே ஒரு ஜயர் கனவாக இருந்தால் அது அருள்மொழியாகிவிடும், பத்திரிகைகளிலே பக்கம் பக்கமாக இடம் பெறும்” என்றார்.[/size][/size] [size=1]

[size=4]”அப்படி ஒரு பத்திரிகையும், யாராரோ ஏதேதோ கனவுகள் கண்டால் வெளியிடாது” என்று நான் பத்திரிகை நடத்தும் முறைபற்றி விளக்கினேன்.[/size][/size] [size=1]

[size=4]poor-india.jpg”உனக்கு மறதி அதிகம்!” என்றான் வீரன்.

எனக்கா? என்று கேட்டேன். ஆமாம் என்று கூறிவிட்டு பலபேருடைய கனவுகள் புராணங்கள் என்ற பெயரிலே இன்றும் நாட்டிலே உலவி மக்களால் நம்ப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. பரதா! நான் அதைக்கூட ஆதாரமாகக் காட்டவில்லை. உன்னுடைய ஒன்றேகாலணா பத்திரிக்கையைத் தள்ளு, பிரம்மஸ்ரீகள் நடத்துகிற, பெரிய மூலதனமுள்ள, வளமான வருவாயுள்ள பத்திரிகையுலே, இதுபோன்ற கனவுகள் வெளியிடப்பட்டு வாசகர்களின் மனதிலே நுழைக்கப்படுவதை நீ அறியாயா?

இரண்டே உதாரணம் கூறுகிறேன் கேள். காந்தியார் பிர்லா கனவிலேதோன்றி பணம் கேட்டாராம். அது பத்திரிக்கையிலே வந்ததப்பா! சாதாரணமானவரல்ல அதற்கு ஆசிரியர், மகாத்மாவின் மகன் இருக்கிறாரே தேவதாசர், நம்ம ஆச்சாரியாரின் மருமகன், அவரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிக்கையிலே “கனவு” வெளிவந்தது. கனவாக மட்டும் இல்லை அது. காசும் கிடைத்தது. அந்தக் கனவு கண்டதும், அந்தக் கோடிஸ்வரர், நிஜமாகவே பணமும் தந்தாராம் காந்தியாருக்கு.

சந்தேகமிருந்தால் இந்திஸ்தான் டைம்ஸ் என்ற டில்லி பத்திரிக்கையைப்பார், ஆங்கிலப் பத்திரிகை, உன் தமிழல்ல! காங்கிரசுக்கு முன்பு பிறந்ததே ஒரு கனபாடி ஏடு, சுதேசமித்திரன், அது சாமான்யமானதாக, நாலு பக்கம் பத்திரிகை, என்றால், அதிலே விளம்பரம் எவ்வளவு தெரியுமா? அப்படிபட்ட பத்திரிகை ஒருவரின் கனவை வெளியிட்டது. சாதாரணமானதல்ல! நான் கைலாயத்தைக் கண்டு, பரமனும் பார்வதியும் பேசியதைக் கேட்டேன் என்றால் நீ சிரிக்கிறாயே! சுதேசிமித்திரன் ஆசிரியருக்கு, இதைபோலச் செய்தி அனுப்பப்ட்டது. அவர் சிரிக்கவில்லை பரதா! உன்போல, இதையெல்லாமா பத்திரிகையிலே வெளியிடுவது என்று பத்திரிகா தர்மமும் பேசவில்லை. அழகாக, அலங்காரமாகப் பிரகரித்திருந்தார்.

என்ன கனவு தெரியுமா? மகாகனம் சீனுவாச சாஸ்திரியாருக்குக் கனவிலே மஹா விஷ்ணு காட்சியளித்தாராம். முதலிலே கொஞ்சம் ஒளி தெரிந்ததாம், பிறகு வரவரஒளி பெரிதாகிக் கொண்டே இருந்ததாம், கடைசியில் சைவ மகாகனத்துக்கு மஹா விஷ்ணு தரிசனம் தந்தாராம். இதைப் பத்திரிகையிலே வெளியிட, மித்ரன் ஆசிரியர், உலகப் பொருளாதாரமென்ன, யுத்தத்தின் போக்கென்ன, நாணயமாற்ற விகித விளக்கமென்ன, நாட்டுப் பொது நிதி விஷயமென்ன, சர்ச்சலின் தவறு, ஸ்டாலினின் கவனக்குறைவி, சீனாவின் சிரத்தை, அமெரிக்கரின் அக்கரை, என்ற இன்னோரன்ன பிறமகத்தான விஷயங்களிலே மனதை இலயிக்கச் செய்யும் ஆசிரியர், மகாவிஷ்ணு மாகாகனம் கனவிலே பிரத்யட்சமானார்” என்ற செய்தியை வெளியிட்டதே. இன்னும் சில கூறட்டுமா” என்று மேலும் பேசத்தயாரானான் வீரன்.

”வேண்டாம்! வேண்டாம் வீரா! உன் கனவு பற்றியே இக்கிழமையே வெளியிடப்போகிறேன்” என்று வீரனிடம் கூறினேன்.

வெளியிட்டுவிட்டேன். என்வேலை முடிந்தது, இனிச் சிந்திப்பது உங்கள வேலை!!

நன்றி:தமிழ்லீடர்,[/size][size=4]அண்ணாவின் கட்டுரைகள்(16.4.44 திராவிட நாடு இதழில் வெளி வந்தது)[/size][/size]

எல்லாம் சரி இந்த சொல்வீரர் தனித்தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ?? பாவம் அப்பாவி மக்கள் !!

இதை நீங்கள் கதைகதையாம் பகுதியிலும் இணைக்கலாம் தமிழீழன் . பகிர்வுக்கு மிக்க நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.