Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மீது தொடரும் படுகொலைகள் நிறுத்தப்படும் வரை பேச்

Featured Replies

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டு வரும் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே மீளவும் பேச்சுக்கள் நடைபெறும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தாவது:-

சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதில் அரசு சரியான முறையில் செயற்படவில்லை. போக்குவரத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை தற்போதய நிலைமையினால் மிகவும் மோசமடைந்துள்ளது.

தமிழ் மக்கள் மீது ஒட்டுப்படைகளும் சிறிலங்கா படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் பேச்சுக்கள் தடைப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. அதேவேளை ஜெனீவாப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்த அரசு தவறியதால் பேச்சுகள் சீர்குலைந்தன.

அரச கட்டுபாட்டு பகுதியிலுள்ள ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்தாத காரணத்தினால் தான் வெலிக்கந்தை பகுதியிலுள்ள ஆயுதக்குழுவின் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் களைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

18 நாட்களில் 44 அப்பாவிகள் கொலை!

-தாயகன்-

* அச்சத்துடன் வாழும் மக்கள்

குடாநாட்டிலும் வவுனியாவிலும் கடந்த பதினெட்டுத் தினங்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுக்களினாலும் 44 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோயுள்ளனர்.

எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாமென்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் குடாநாடு மற்றும் வவுனியா நகரங்கள் மாலை 5 மணிக்கு முன்பே வெறிச்சோடி மயான பூமியாகி விடுகின்றன.வடக்கில், குடாநாட்டிலும் வவுனியாவிலும் இடம்பெற்று வரும் தொடர் படுகொலைகள், தலை துண்டிப்புகள், வெள்ளை வான் கடத்தல்களினால் தமிழ் மக்கள் கிலி பிடித்த நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும், காணாமல் போவதும் பின்னர் வீதியோரங்களிலும், புதர்களினுள்ளும் தலையில்லாமலும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலுமாக சடலங்களாக மீட்கப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன.

தமிழ் இளைஞர்கள், பிரபல தமிழ் வர்த்தகர்களின் படுகொலைகளுக்கு பின்னால் இராணுவ புலனாய்வுப் பிரிவும் துணை ஆயுதக் குழுக்களும் செயற்படுவது அனைவரும் அறிந்த இரகசியமாக இருக்கின்ற போதும் இவற்றை வெளிச்சம் போட்டுக்காட்ட எவரும் முன்வர முடியாத அபாய நிலையும் உள்ளது.

யாழ். குடாநாட்டிலும் வவுனியாவிலும் கடந்த 18 தினங்களில் 44 படுகொலைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இவற்றில் ஒரு கொலையில் கூட அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவுமில்லை கொலையாளிகள் தொடர்பான ஆதாரங்கள் கிட்டவுமில்லை. விதானையார் வீட்டில் திருடன் ஒளித்திருப்பது போல் கொலையாளிகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதால் கொலைப்பழிகள் அனைத்தும் இனந்தெரியாதோரை சென்றடைகின்றன.கடந்த 18 தினங்களில் மட்டும் யாழ். குடாநாட்டில் 28 படுகொலைகளும் வவுனியாவில் 16 படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. குடாநாட்டில் இடம்பெற்றுள்ள 28 படுகொலைகளில் நான்கை மட்டும் எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. தேசவிரோத மற்றும் கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டதாக ஒரு யுவதி உட்பட நான்கு பேருக்கு தாம் மரண தண்டனை வழங்கியுள்ளதாக எல்லாளன் படை பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இந்நிலையில் மிகுதி 24 படுகொலைகளையும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுக்களுமே செய்துள்ளன என்றே கருதவேண்டியுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மீசாலை புத்தூர் சந்தியில் வைத்து இளம் வர்த்தகரான இராமலிங்கம் சகிலன் (30 வயது) மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இக் கொலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வர்த்தகர் ஒரு சில வருடங்களுக்கு முன்பே லண்டனிலிருந்து திரும்பி வந்து புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்தார். அத்துடன், வாகன சேவைகளையும் வழங்கிவந்தார். இவருடைய வாகனம் இடையிடையே வன்னி சென்று வந்ததே இவரின் படுகொலைக்கு காரணமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக 19 ஆம் திகதி புத்தூர் கிழக்கு ஐயனார் கோவிலடியிலுள்ள இராணுவ முகாமருகே ஐந்து அப்பாவி இளைஞர்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்டோவில் நோயாளியான நண்பனை வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்ட பின்னர் தமது வீடுகளுக்கு திரும்புகையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

வாதரவத்தையை சேர்ந்த ஆட்டோ சாரதிகளான பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் (27 வயது), தங்கராஜா கவீந்திரன் (27 வயது), புகைப்படப் பிடிப்பாளரான மகாதேவன் கிஷோகுமார் (20 வயது) இவர் கொழும்பில் வேலை பார்ப்பவர். சில தினங்களுக்கு முன்பே ஊருக்கு சென்றிருந்தார். யாழ். மாநகரசபை ஊழியரான கந்தசாமி கௌரிபாலன் (32 வயது), மின் உபகரண திருத்துநரான செல்லப்பா கமலநாதன் (25 வயது) ஆகியோரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லையென இராணுவத்தினர் கூறியபோதும் இராணுவமே தமது பிள்ளைகளை படுகொலை செய்ததாக பெற்றோர் கூறியதுடன் அதற்கான ஆதாரங்களும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. இதேபோன்று, 20 ஆம் திகதி சுழிபுரம் கல்லவேம்படிச் சந்தியில் வைத்து தவசி தவச்சந்திரன் (32 வயது) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதால் இவருக்கு தாமே மரண தண்டனை வழங்கியதாக எல்லாளன் டை உரிமை கோரியது. இதற்கடுத்து இருநாட்கள் கழித்து 22 ஆம் திகதி நெல்லியடியில் வைத்து ஆட்டோ சங்கத் தலைவரான சுப்பிரமணியம் வசீகரன் (30 வயது), தனியார் பஸ் நடத்துநரான இரத்தினம் யசிதரன் (24 வயது) ஆகியோர் வெள்ளை வானில் வந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 23 ஆம் திகதி நாவாந்துறை அபூபக்கர் வீதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே தினம் இருபாலைச் சந்தியில் வைத்து கோப்பாய் கட்டைப் பிராயை சேர்ந்த ஆட்டோ சாரதியான குருநாதன் ஜனார்த்தனன் மோட்டார் சைக்கிளில் வந்தோரால் சுடப்பட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை தம்பாட்டியில் வைத்து நாகமுத்து திருச்செல்வம் என்ற 74 வயது முதியவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மறுநாள் 24 ஆம் திகதி சாவகச்சேரி கனகம்புளியடிச் சந்தியில் வைத்து வான் சாரதியான அச்சுவேலி பத்தமேனியை சேர்ந்த மாணிக்கம் ரஜீவன் (30 வயது) என்ற இளைஞர் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பாவியான இந்த இளைஞனை சுட்டுக்கொன்ற இராணுவத்தினர், இவரின் வாகனத்திலிருந்து தம்மீது துவக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதனாலேயே தாம் திருப்பித் தாக்கியபோது இளைஞர் பலியானதாகவும் கூறியதுடன் ஆயுதங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் கதை பரப்பினர். 25 ஆம் திகதி முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்த பாலசிங்கம் பத்திநாதர் (24 வயது) என்ற இளைஞனை மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வீட்டுக்கு வெளியே இழுத்து சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றனர்.

26 ஆம் திகதி சாவகச்சேரி நகரை திடீரென சுற்றிவளைத்த படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை சாவகச்சேரி மீன் சந்தைக்கு முன்பாக நிற்பாட்டி வைத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தின் பின் அனைவரையும் போகுமாறு கூறிவிட்டு சாவகச்சேரி மட்டுவில் வடக்கைச் சேர்ந்த மரக் கலை வர்த்தகரான இராசையா ராஜ்மோகன் (25 வயது) என்பவரை அனைவரும் பார்த்திருக்க சுட்டுக் கொன்றனர்.

30 ஆம் திகதி வேலணையில் வைத்து இ.போதினி என்ற 29 வயது யுவதி சுட்டுக் கொல்லப்பட்டார். கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த யுவதிக்கு தாம் மரண தண்டனை வழங்கியதாக எல்லாளன் படை உரிமை கோரியது. இதே தினம் யாழ் நகரில் வைத்து தனியார் பஸ் நடத்துநரான கொழும்புத் துறையை சேர்ந்த மு. பிரகாஷ் (25 வயது) என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தம்மால் மரண தண்டனை வழங்கப்பட்டதாக எல்லாளன் படை உரிமை கோரியது. இதேபோன்று, கென்னடி என்பவரின் கொலைக்கும் எல்லாளன் படை உரிமை கோரியது.

இதேதினம், அல்லைப்பிட்டியில் இராசமணி சங்கரப்பிள்ளை (74 வயது) என்ற முதியவர் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது கணவனை சுட வேண்டாமென தான் கையெடுத்துக் கும்பிட்ட போதும், தன்னை சுட வேண்டாமென தனது கணவன் கெஞ்சி மன்றாடிய போதும் படையினர் ஈவிரக்கமின்றி தனது கண் முன்னாலேயே கணவனை சுட்டுக் கொன்றதாக மனைவி நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

அடுத்ததாக யாழ். நகரிலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தினுள் நுழைந்த துணைக்குழு ஆயுததாரிகள் உதயனின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான பஸ்ரியன் ஜோர்ஜ் மரியதாஸ் மற்றும் விநியோகப் பகுதி ஊழியரான இராஜரத்தினம் ரஞ்சித் ஆகியோரை சுட்டுக்கொன்றதுடன் உதயன் அலுவலகத்திற்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தினர். இச் சம்பவத்தில் மேலும் இரு ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

கடந்த 4 ஆம் திகதி அனைத்திற்கும் உச்சக்கட்டமாக குடாநாட்டில் இராணுவ கொடூரத்தின் வெளிப்பாடாக நெல்லியடியிலுள்ள இராணுவ புலனாய்வுத் துறையின் முகாமருகே வைத்து பருத்தித்துறை துறைமுகத்தில் பணிபுரியும் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 அப்பாவி இளைஞர்கள் கொடூரமாக கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளப்பட்டனர்.

7 அப்பாவி இளைஞர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டு தம்மை தாக்க வந்த 7 புலிகளை சுட்டுக்கொன்றதாக இராணுவ பேச்சாளர் புழுகித்தள்ள பேரினவாத ஊடகங்களும் அதற்கு தீனிபோட்டு தலை, வால் வைத்து செய்திகளை வெளியிட்டன. இவ்வாறு குடாநாட்டில் கடந்த 18 தினங்களில் 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு போட்டியாக வவுனியாவில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவும் துணை ஆயுதக் குழுக்களும் 18 நாட்களில் 15 பேரை படுகொலை செய்தனர். வவுனியாவில் இடம்பெற்ற படுகொலைகள் தமிழர்களை குலைநடுங்க வைக்கும் விதமாகவே மேற்கொள்ளப்பட்டன. வெள்ளை வானில் கடத்தப்பட்டு சில தினங்களின் பின் கொலைசெய்துவிட்டு உடல்களை பொது இடங்களில் வீசுதல், கை,கால், கண்களை கட்டிவிட்டு கட்டுப்போடுதல், தலையை வெட்டி எடுத்துவிட்டு உடலை மட்டும் பொது இடங்களில் வீசுதல், சில வேளைகளில் தலையை மட்டும் பைகளில் போட்டு பொது இடங்களில் வைத்தல் போன்ற கொடூர முறையில் கொலைகள் நடத்தப்பட்டன.

கடந்த 17 ஆம் திகதி வேட்டைக்குச் சென்ற மூவர் வவுனியா பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். மறுநாள் வவுனியா தவசிக்குளத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.

20 ஆம் திகதி வவுனியா மகா இறம்பைக் குளத் தில் இரு இளைஞர்களின் சடலங்கள் காணப் பட்டன. இவற்றில் வெட்டுக் காயங்களும் சூட்டுக் காயங்களும் காணப்பட்டன. கைகள் கட்டப்பட்டு, முகங்களை கறுப்புத்துணியால் மூடிப் போடப் பட்டிருந்த சடலங்களுக்கருகே `புலிகளுக்கு ஆதர வளிப்போருக்கு இது தான் கதி' என துண்டுப் பிரசுரமொன்றும் காணப்பட்டதுடன் இக் கொலைகளுக்கு தமிழ் தேசியப்படை என்ற பெயரில் உரிமை கோரப்பட்டிருந்தது. இதேதினம் வவுனியா மணிப்புரத்தில் நிஸார் நளின் (30 வயது) என்ற குடும்பஸ்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். 21 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான புதூர் நவ்வியல் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளேமோர் தாக்குதலில் முத்துசாமி கந்தசாமி (40 வயது) என்ற குடும்பஸ்தர் கொல்லப் பட்டார். 22 ஆம் திகதி வவுனியா வேப்பங் குளத்தில் வர்த்தகரான பத்மராஜா (31 வயது) என்பவர் சுடப்பட்டார். 23 ஆம் திகதி வவுனியா விலிருந்து 17 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மறவன் குளம் வீடமைப்புத் திட்டத்தில் இராசநாயகம் ஜெகன் (20 வயது) என்ற இளைஞர் வெள்ளை வானில் வந்தோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோன்று வவுனியா கல்மடு பகுதியில் யுவதியொருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். 26 ஆம் திகதி வவுனியாவில் வைத்து பிரபல வர்த்தகரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகர சபை வேட்பாளருமான செந்தில்நாதன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப் பட்டார். இவர் சுடப்பட்ட பின்னர் தனது உயிருக் காக போராடிய போதும் அங்கிருந்த ஆட்டோக் காரர்கள், வான் சாரதிகள், எவருமே உதவ முன் வரவில்லை. இவருக்கு இன்று உதவினால் இந்நிலைமை தமக்கு நாளைக்கு ஏற்படுமென்ற அச்சத்திலேயே உதவ முடியவில்லையென சிலர் பின்னர் மனம் வருந்தி கூறியுள்ளனர். 30 ஆம் திகதி பழ வியாபாரியான லாசர் தர்மசேகரன் (24 வயது) தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 3 ஆம் திகதி வவுனியா பாவற்குளத்தில் கை, கால், கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவை பின்னர் அடையாளம் காணப்பட்டன. இவர் கள் சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களான பம்பைமடுவை சேர்ந்த ஆட்டோ சாரதியான ஆர். நாகேஸ் (28 வயது), பெரியகோமராசன் குளத்தை சேர்ந்த எஸ். ஜெபநேசன், மடுபாலம் பட்டியை சேர்ந்த ந. சிவ லிங்கம் என உறவினரால் அடையாளம் காட்டப் பட்டது. குடாநாட்டிலும் வவுனியாவிலும் இடம் பெறும் படுகொலைகள் முற்றுமுழுதாகவே இரா ணுவ புலனாய்வுப் பிரிவினாலும் துணை ஆயுதக் குழுக்களினாலுமே திட்டமிட்டு மேற்கொள்ளப் படுகின்றன. குடாநாட்டைப் பொறுத்தவரையில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களும், தமிழின உணர்வாளர்களும் இலக்குவைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர்

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.