Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கடலும் தமிழர் தாயகமே" - க.வே.பாலகுமாரன்

Featured Replies

"கடலும் தமிழர் தாயகமே" கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணி ஒத்திகை: க.வே.பாலகுமாரன்

தமிழீழத் தமிழர்களின் உயிர் மையமாக திகழும் கடலும் எமது தாயகமே என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணியில் ஒரு ஒத்திகை நடைபெற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

"வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி இரு டோராப் படகுகள் மூழ்கடிப்பு" என்ற பின்னணியோடு உங்களுடன் பேசுகிறேன்.

பெரும் கடற்சமர் ஒன்று நடந்து முடிந்துவிட்டது. இந்த சமருக்கு ஊடாக மிகப் பெரும் அரசியல் செய்திகளையும் இராணுவச் செய்திகளையும் இராஜதந்திர செய்திகளையும் புலிகள் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.

4 ஆண்டுகால சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை எல்லா வழிகளிலும் முடக்க நினைத்த முயற்சிகளை புலிகள் முறியடித்துவிட்டனர் என்பதுதான் இதனது மையமான செய்தி.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இயங்க முடியாவிட்டால்- பயணம் செய்ய முடியாவிட்டால் யாருமே இயங்க முடியாது- பயணம் செய்ய முடியாது என்ற இராணுவச் சமநிலையை புலிகள் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நீண்டகாலத்துக்குப் புலிகளைச் சீண்டி சமாதான விளையாட்டுக்களை விளையாடலாம் என்று நினைத்திருந்தால் அவர்களது எண்ணங்கள் யாவும் மண்ணாகிப் போவது இப்போது கண்கூடாக இருக்கிறது. புலிகளை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதும் புலிகளை எப்போதும் சோதிக்கக் கூடாது என்பதும் வரலாற்றின் இயங்கு பொருள். இதை சிங்களம் உணர்ந்து கொள்ளவும் திருந்துவதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை புலிகள் அளித்திருக்கிறார்கள்.

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நிச்சயமாக சிங்களம் பாரிய ஒரு இழப்பைச் சந்தித்து இருக்க முடியும். அப்படியும் இருந்தும் கூட எங்கள் பெருந்தலைவர் பெருந்தன்மையோடு சிங்களம் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்-

"சிறிலங்கா கடற்படையினரை ஆத்திரமூட்டும் வகையில் கடலில் விடுதலைப் புலிகள் நடமாடுவது யுத்த நிறுத்த மீறலாகும். இலங்கையைச் சுற்றிய கடற்பிரதேசமானது அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். சர்வதேச சட்டவிதிகளின் படி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரால் இது ஏற்கப்பட்டுள்ளது. அரச சார்பற்றோ எவரும் கடல் மற்றும் வான்வழிகளைப் பயன்படுத்த முடியாது. விடுதலைப் புலிகளுக்கு உரிமை இல்லை"

என்று மிகத் தீர்க்கமாக-ஏதோ ஒரு விசாரணையின் முடிவில் கூறுவது போல் எந்த விதமான பொறுமையுமின்றி ஆலோசனையுமின்றி கண்காணிப்புக் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமைதிப் பேச்சு என்பது போர் நிறுத்தம் மட்டுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ளதுதான் தமிழ் மக்களுக்கான ஒட்டுமொத்த தீர்வா?

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் போர் நிறுத்தக் கடதாசியிலே அனைத்து தீர்வுகளும் வைக்கப்பட்டுள்ளதா?

என்ற கேள்விகளை எம்மக்கள் எழுப்ப வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

போர் நிறுத்தம் என்பது முழுமையான தீர்வை நோக்கிய முதலாவது படி என்பதை கண்காணிப்புக் குழுவின் தலைவர் அறிந்திருக்க மாட்டாரா?

போர் நிறுத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு சமாதான காலத்தை நீண்டகாலம் இழுத்தடிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது முட்டாள்தனமானது. இந்த மாயையிலிருந்து கண்காணிப்புக் குழுத் தலைவர் விடுபட வேண்டும்.

போர் நிறுத்த உடன்பாட்டில்-

எமது தாயகம் பற்றி உள்ளதா?

எமது மக்களினது துன்பங்கள் பற்றி உள்ளதா?

அவை இருந்தால் கூட அவை நிறைவேற்றப்பட்டுள்ளதா?

எங்கள் மக்களினது இயல்பு நிலைக்கு ஏற்ற வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது எவரும் தடையாக இருக்கக் கூடாது.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கையானது தமிழ் மக்களினது வாழ்நிலைக்கு எதிராகச் சொல்லப்பட்ட அறிக்கையாகும்.

இப் போர் நிறுத்த உடன்பாடானது தமிழரது தாயகத்தில் கடலிலும் நிலத்திலும் புலிகள் பெற்றுள்ள பலத்தின் அடிப்படையில்தான் செய்யப்பட்டது.

தரையில் தங்களது நிலைகளைப் புலிகள் வைத்திருப்பது போலவே கடலிலே வைத்திருப்பதை எவராலும் தடுக்க முடியாது. இது கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கலாம்.

போர் நிறுத்த உடன்பாட்டில் இது சொல்லப்படாமல் இருந்தாலும் கூட சமநிலைச் சமன்பாட்டில் இவை அடங்கும் என்பதைத்தான் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் 2003 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். அவர் கூறியதை சிங்களம் அன்று ஏற்க மறுத்தது.

கடலிலே புலிகளின் சமநிலையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது பாரிய மோதல்களுக்கு வழிவகுக்கும். பாரிய நாசத்தை விளைவிக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதை அன்று சிங்களம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நோர்வேக்கு அழுத்தம் கொடுத்து பதவி மாற்றியது. அன்று அவர் அஞ்சியது போலவே கடலிலே பாரிய சமர் ஒன்று வெடித்து சமரானது மற்றொரு போருக்கான முன்னோடி நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.

வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி வேலவன் தெரிவித்த கருத்தை எதிரொலிக்க விரும்புகிறோம்-

"நான்காம் கட்ட ஈழப் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இறுதியாக நடைபெற்ற ஜெனீவா பேச்சுக்களுடன் அது சிறிலங்கா அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அதை உணர்ந்து கொள்ளாமல் சமாதானம் பற்றிய மாயையில் எவரும் வாழமுடியாது. அவ்வாறு வாழ வைத்திருப்பதற்கு உலகில் எவரும் முயற்சிக்கக் கூடாது. நாம் எமது கடந்தகால அனுபவங்களைக் கொண்டு போர் ஒன்று தொடங்கிவிட்டது என்ற செய்திக்காக காத்திருக்கிறோம். ஆனால் தற்போதைய கள யதார்த்தம் அவ்வாறு இல்லை. ஒரு யுத்தமானது பெரும் சமருடன்தான் தொடங்க வேண்டும் என்ற விதிகளும் இல்லை. என்னைப் பொறுத்த வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது ஈழப் போர் முடியும் வரை அப்படியேதான் இருக்கப் போகிறது. அந்த ஒப்பந்தம் இருக்கும்போதே தாக்குதல் நடக்கும். சமர்கள் நடக்கும். இதுதான் நான்காம் கட்ட ஈழப் போர்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு சமர்பிக்க விரும்புகிறோம்.

கள யதார்த்தம் என்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.

"கடலும் எங்கள் தாயகமே" என்ற நிலைப்பாட்டை மிக நீண்டகாலத்துக்கு முன்னரே நமது விடுதலை இயக்கத்தம் எடுத்தமைதான் அதி சிறப்பான மிக முக்கியமானதாகும்.

இந்த உலகம் தொடக்கத்தில் நிலமாகத்தான் இருந்தது. இன்று 71 விழுக்காடு கடற்பரப்பு உலகில் இருக்கிறது.

கடலும் எங்கள் தாயகம் என்ற விடுதலைப் புலிகளின் புவியியல் ரீதியான பொருத்தமான நிலைப்பாட்டை உலகம் உணர வேண்டும்.

எமது வாழ்வும் இருப்பும் கடலோடு தொடர்புடையது. ஆகையால் கடல் எங்கள் தாயகம் என்ற நிலைப்பாட்டை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

எங்களுடைய நிலப்பரப்பின் 8 ஆயிரம் சதுரகிலோ மீற்றர் பரப்பளவானது சிங்களத்தின் குடியேற்றவாதத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எமது கடற்பரப்பு குறித்து நாம் மிகவும் விழிப்பாக இருப்போம்.

இலங்கையில் மொத்த கடற்பரப்பில் 60 விழுக்காடு- அதாவது ஆயிரம் கிலோ மீற்றர் நீளக் கடற்கரையானது எங்களிடையே உள்ளது. அதைப் பாதுகாப்பதற்காக நாங்கள் மேற்கொள்கிற நடவடிக்கையை எவரும் தடுத்துவிட முடியாது.

கடலோடு எங்கள் வாழ்வு தொடர்புடையது. தமிழீழக் கடற்பரப்பு என்பது மிகப் பெரிய அற்புதமான வளங்களைக் கொண்டது. அதனது வரலாற்று முக்கியத்துவத்தை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றன.

இலங்கைத் தீவிலேயே மன்னாரும் முல்லைத்தீவும்தான் மிகத் திறமான மீன்பிடி மையங்களான உள்ளன. மிக அற்புதமான வளங்களைக் கொண்ட கடல்நீரேரிகள் கொக்கிளாய், நாயாறு என்பவை.

ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீற்றர் கடற்கரையில் மொத்த கடல்நீரேரியில் 65 விழுக்காடு எமக்குரியது.

கண்டல்காடு 64 விழுக்காடு எமக்குரியது.

உவர்சதுப்பு நிலங்களில் 81 விழுக்காடு எமக்குரியது.

மணற்திட்டுக்களில் 60 விழுக்காடு எமக்குரியது.

காடுகளில் 24 விழுக்காடு எமக்குரியது.

இந்த நிலையில் கடல் என்பது தமிழர் தாயகத்தின் மிக முக்கியமான உயிர் மையமாக இருக்கிறது.

ஆகையால்தான் இதனை உறுதிப்படுத்த ஒரு ஒத்திகையை கடலிலே நடத்திக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மிக நீண்டகாலமாக எமது மீனவப் பெருமக்கள்படுகின்ற துன்பங்கள் அளவற்றது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னால் பாதுகாப்பு வலயம் என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்போமேயானால்-

ஏறத்தாழ 4 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் முற்றாகத் தொழில் இழந்துவிட்டனர்.

45-க்கும் மேற்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன.

வலிகாமம் வடக்கில் சேந்தாங்குளத்தில் இருந்து தொண்டமனாறு வரையில் உள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களும் முற்றாக செயலிழந்துவிட்டன. இதனால் மக்கள் மீன்பிடிக்க முடியாது நிலை உள்ளது. ஆதலால் இதை இராணுவ ரீதியாக மட்டுமே சிந்திக்க முடியாது.

மனிதநேயத்துடன் புலிகள் செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகையால் கடலிலே அரச சார்பற்ற எவரும் பயணிக்க முடியாது என்கிற போது எங்கள் மக்கள் எந்த அரசைச் சார்ந்தவர்கள் என்ற கேள்வி எழுகிறது.

எங்கள் மக்கள் என்ன அநாதைகளா? பிறநாட்டவர்களா? அவர்கள் எங்கே வாழ்வது என்ற கேள்விக்கு கண்காணிப்புக் குழு பதில் சொல்ல முடியுமா?

போர் நிறுத்த ஒப்பந்தததை வைத்துக்கொண்டு மட்டுமே இங்கே காலம் தள்ளிவிட முடியாது என்பதைத்தான் தளபதி வேலவனின் கருத்துக்கூடாக நாம் வலியுறுத்தினோம்.

உலகத்தில் எரிபொருள் அருகி வரும் இந்தக் காலத்தில் புதிய வளங்கள் குறித்து உலகம் மிகவும் கவனமெடுக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி வடிநிலத்தின் தொடர்ச்சியாக எங்கள் பகுதிகளில் பெற்றோலிய படிவுகள் இருப்பது குறித்த ஆய்வுகள் நடைபெறக் கூடிய காலம் உருவாகி உள்ளது. ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன.

வங்காள விரிகுடாவுக்கு கிழக்குக் கரையோரமாக காவிரி வடிநிலமானது பாக்கு நீரிணையுடன் இணைந்ததாக நீள்கிறது. இதனது 65 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்தாலும் கூட 35 விழுக்காடு பெற்றோலியப் படிவுகள் உள்ள பகுதியாக தமிழீழப் பகுதிகள் உள்ளன.

இப்போது இந்த எண்ணெய் வள ஆய்வுக்காக உலகம் முழுவதும் ஆதரவைத் தேடி அலைகிறது சிங்களம். இதிலும் கூட இந்தியா, சீனா, நோர்வே என்று போட்டிகள் நடைபெறுகின்றன.

ஐ.நா.வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 200 மைல் கடல் பொருளாதர வலயம் என்பது ஏறத்தாழ 320 கிலோ மீற்றராகும். அந்தக் கடல்வயலம் கூட எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் நியதி. அதற்காகத்தான் எங்கள் விடுதலைப் போராட்டமே உருவானது.

எமது கடல்வளங்களை யார் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்தையும் அடக்கிக் கொண்டு 4 ஆண்டுகாலம் சமாதான காலத்தை கடைபிடித்தமைக்கு எங்களுக்குக் கிடைத்த பரிசு- கடலிலே நீங்கள் பயணம் செய்யக் கூடாது. முடியாது. உங்களுக்கு உரிமை இல்லை என்பதுதான்.

இந்த அறிவிப்புகள் எவ்வகையில எங்கள் மக்களினது வாழ்நிலையைக் குறித்துச் சொல்வதாக இருக்க முடியும்?

ஆகையால் போர் நிறுத்தம் மிகப் பெரிய கேள்விக்குள்ளாகியிருக்கக் கூடியதை அண்மையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கைக்கூடாக பார்த்திருப்பீர்கள்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள், சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்கா படைகளினது சுதந்திரமான நடமாட்டத்தையும் போக்குவரவுகளையும் அனுமதிக்க முடியாது" என்று தமிழ்ச்செல்வன் தெளிவாகக் கூறியுள்ளார்.

மேலும் சிறிலங்காவின் கடற்கலங்களில் கண்காணிப்புக் குழுவினர் செல்வது போல புலிகளினது படைக்கலங்களிலும் கண்காணிப்புக் குழுவினர் பயணிக்க வேண்டும் என்ற தர்க்கரீதியான வேண்டுகோளையும் அவர் விடுத்திருக்கிறார்.

"கடல் எமது தாயகம்" என்ற கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசிய இனச்சிக்கல் இப்போது கடலில் மையம் கொண்டுள்ளது என்றார் க.வே.பாலகுமாரன்.

நன்றி: புதினம்

அட பாவமே....! அவனுகளே ஓடி ஒழிஞ்சு இந்திய கரைபோய் தப்பி இருக்காங்கள்... அவங்களை வெறுப்பேத்த எண்டே சொல்லி இருக்கார் பாலகுமார் அண்ணா...! சு.ப வேற மிரட்டுறார்.... பாவம் அப்பா இலங்கை நேவி.... :wink: :P

அடிக்கவில்ல பயிற்சியாம்... அப்ப அடிச்சால்...! :lol:

தமிழீழ நிலப்பரப்பிற்குள் தானே தமிழீழக் கடலும் அமைந்திருக்கு என்பது கண்காணிப்புக் குழுவிற்குத் தெரியவில்லைப் போலை கிடக்கு..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.